பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விசத்தை ருசித்தல்! 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
39 நிமிட வாசிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விசத்தை ருசித்தல்! 

December 29, 2025 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: ஜெயத்திலகே டி சில்வா

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்வது என்பது, குறிப்பாக நீங்கள் உங்கள் அறுபதுகளின் இறுதியில் இருந்தாலன்றி, எளிதான ஒன்றல்ல. அதேபோல், கதையில் நிகழ்வுகள் வெளிப்படும் சூழலுக்குப் பழக்கமில்லாத இளம் வாசகருக்கும், ஒருவேளை பயங்கவாதத் தடைச் சட்டம் தொடர்பான கல்வி சார்ந்த ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்கும், வயதானவர்களின் நினைவுகளைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பயங்கரவாதத்  தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற வகையிலான எனது அனுபவத்தைப் பற்றி எழுதும்படி இப்போது நான் கேட்கப்படும் போது எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை இதுதான். எனவே, இங்கே விவரிக்கப்படும் நிகழ்வுகள், அப்போது இருந்த அரசியல் சூழலை நினைவுகூர்ந்து, அன்றைய சூழல் தொடர்பான சில விளக்கங்களுக்கான ஓர் அறிமுகத்தைச் செய்வதன் காரணமாக, ஆரம்பத்தில் (கட்டுரையின் பிரதான போக்கிலிருந்து) சற்று விலகிச் செல்வதை வாசகர்கள் மன்னிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். பாலத்தின் கீழாகப் பெருமளவு நீர் ஓடிக் கடந்துவிட்டாலும், தற்போதைய நிகழ்வுகளுடன் சில சுவாரசியமான ஒற்றுமைகளை வாசகர்களால் காண முடியும்.

சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டத்தைப் பேசுவதற்காக, இலங்கை தேசிய காங்கிரஸ் துரதிர்ஷ்டவசமாக இனரீதியான அடிப்படையில் பிரிந்த 1920களின் முற்பகுதி வரை கூட ஒருவரால் பின்னோக்கிச் செல்ல முடியும். ஆயினும், நான் ‘கறுப்பு ஜூலை 1983’ இலிருந்து தொடங்குகிறேன். அது இலங்கைத் தமிழர்களின் தேசிய அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்திலும், நாட்டில் இனங்களுக்கு இடையேயான உறவுகளின் வரலாற்றிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு. அந்த நேரத்தில், ஆளும் கட்சியின் குண்டர்களால் கொடூரமான தமிழர் எதிர்ப்புப் படுகொலைகள் நடத்தப்பட்டன. பாதுகாப்புப் படைகளது உறுப்பினர்களின் தீவிர ஒத்துழைப்புடன், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதும் ஊனப்படுத்தப்பட்டதும் மட்டுமன்றி, அவர்களது மில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துகளும் அழித்தொழிக்கப்பட்டன. இதன் காரணமாக அண்டை நாடான இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் தமிழர்கள் பெருமளவில் வெளியேறும் சூழலையும் அது உருவாக்கியது. இவ்வாறு, இலங்கையின் தேசியப் பிரச்சினை, ஒரே இரவில் சர்வதேசமயமாக்கப்பட்டது.

தேசிய அளவில், தமிழர் விடுதலைக் கூட்டணி போராட்டத்தில் தனது தலைமைப் பாத்திரத்தை இழந்தது. அந்தப் பாத்திரம், தீவிர போராளி இளைஞர்களிடம் சென்றது. பாராளுமன்றப் போராட்டத்திற்குப் பதிலாக ஆயுதமேந்திய கிளர்ச்சி, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. விரைவில் விடுதலைப் புலிகள் இந்தப் போராளி இயக்கங்களிடையே தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டினர். சில இயக்கங்கள் அழிக்கப்பட்டன, மற்றவை அவர்களை ஏற்றுக்கொண்டன. 1983 – 85  வரையான காலகட்டத்தில், ஆயுத மோதல்கள் அதிகரித்தன. இதன் விளைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தண்டனை விதிகள் வலுப்படுத்தப்பட்டதுடன், அது ஒரு நிரந்தரச் சட்டமாகவும் அப்போது மாற்றப்பட்டது. அதைவிட, அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களையும் விரிவாகப் பயன்படுத்தவும் தொடங்கியது.

இந்த அடக்குமுறைச் சட்டம், தங்கள் சொந்தத் தாயகத்திற்காகப் போராடும் தமிழர்களை மட்டுமல்ல, தெற்கின் ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளையும் கூடப் பாதித்தது. இந்த நேரத்தில், அரசாங்கம் 1982 டிசம்பரில் நடாத்திய சர்ச்சைக்குரிய ‘பொதுசன வாக்கெடுப்பு’ (Referandum) மூலம், 1977 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தின் ஆயுளை அநியாயமாக நீடித்ததுடன்,  அரசியலமைப்பு ரீதியான ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிப் படிப்படியாக முன்னேறவும் தொடங்குகிறது. கருத்து வேறுபாடுகள் இரக்கமின்றி அடக்கப்பட்டன. இதன்போது, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டவிதிகள் என்பவை சிங்கள மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படத் தொடங்கின. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டுப் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் ‘சிங்களப் புலிகள்’  அல்லது ‘சிவப்புப் புலிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டனர்.

உண்மையில், வடக்கிலும் தெற்கிலும் செயற்பட்டு வந்த போராளி இயக்கங்களுக்கு இடையிலான தொடர்புகளை விசாரிக்கக் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. அதற்கு குற்றவியற் தடுப்புப் பிரிவு (Counter Subversive Division – CSD) என்று பெயரிடப்பட்டது. அதன் தலைமையகம் கொழும்பில் உள்ள ‘பஜெற்’ வீதியில் இருந்தது.

ஓர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இதற்குத் தலைமை தாங்கினார். தீவின் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரகசியப் பொலிஸ் அதிகாரிகளுட்பட வேறும் பல அதிகாரிகள் இதில் பணியாற்றினர். அவர்களது விசாரணைகள், குறிப்பாக அவர்களில் பெரும்பாலோருக்கு பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொடுத்தன.

அவர்கள் என்னைத் தேடி வந்தபோது ஓகஸ்ட் 29, 1985 அன்று மாலை 6.25 மணி. முந்திய நாட்களில் நடந்தேறிய சில நிகழ்வுகளின் வளர்ந்துவரும் போக்குக் காரணமாக முன்னெச்சரிக்கை அடைந்திருந்த நான், அவர்களின் வருகைக்காக எனது வீட்டில் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். காலையிலும் கூட நான் இல்லாத  நேரத்தில் சுங்க அதிகாரிகள் என்ற போர்வையில் அவர்கள் வந்திருந்தார்கள். என் குடும்பத்தினரால் எளிதாக அடையாளம் காணக்கூடிய ஒரு மாறுவேடமாக இது இருந்தது. பின்னர் அதிக சலசலப்பு இல்லாமல் நான் என் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு அந்த (சீ.எஸ்.டி) அதிகாரிகளுடன் சென்றேன். அது பற்றிய என் மனைவியின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு, ‘நான் ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைத்துச் செல்லப்படுவதாகவும், விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவேன்’ என்றும் அவர்கள் பதிலளித்திருந்தனர். அந்த விரைவில் என்பது நடக்கக் கிட்டத்தட்ட மூன்று வருடங்களும் மூன்று மாதங்களும் எடுத்தன. அந்த உண்மையை நானும் என் குடும்பத்தினரும் அல்லது என்னைக் கடத்தியவர்களும் அந்த நேரத்தில் ஊகித்திருக்க முடியவில்லை. உண்மையில், கடத்தியவர்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு, நான் வீடு திரும்ப முடியாது என்று என்னிடம் சொன்னார்கள்.

பின்னர்தான், நான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவந்தது. அந்த நேரத்தில் காவல்துறையினர் வழக்கமாகப் பயன்படுத்திய தந்திரம் அதுதான். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக் காவல் உத்தரவு சில நாட்களுக்குப் பிறகு பின்பற்றப்பட்டது.

நான் வெலிக்கடைக்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து கைது செய்த  அதிகாரி தனது பணியின் வெற்றி குறித்து தனது மேலதிகாரிக்குத் தகவல் அளித்து, நான் எங்கு காவலில் வைக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைப் பெற்றார்.

நான் காவலில் வைக்கப்பட்டிருந்த இடம் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம். அவசரகாலச் சட்டத்தின்படி, சந்தேக நபரை, தான் விரும்பும் எந்த இடத்திலும், தான் விரும்பும் எந்த நிபந்தனைகளின் கீழும் தடுத்து வைக்க ஒரு பொலிஸ் (காவல் துறை) அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

செப்டம்பர் 12, 1985 முதல் நான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டேன். தடுப்புக் காவல் உத்தரவில், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத்முதலி விசித்திரமாக, “ஆயுதப் படைகளினதும், காவல்துறை உறுப்பினர்களினதும் மரணத்திற்குக் காரணமாக அமையும் சதிகளைச் செய்தல், அரசாங்கத்தின் சொத்துகளுக்கு தீங்கு விளைவித்தல் அல்லது அதற்குத் தேவையான செயல்களைச் செய்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் நான் ஈடுபடுகின்றேன் அல்லது ஈடுபடுகின்ற நோக்கத்தைக் கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக்கூற்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 9 (1) இன் பயன்பாட்டை நியாயப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டது. அந்தப் பிரிவு இவ்வாறு கூறுகிறது:

“எந்தவொரு நபரும் எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் தொடர்புடையவர் அல்லது அக்கறை கொண்டவர் என்று அமைச்சர் நம்புவதற்கு, அல்லது சந்தேகிப்பதற்குக் காரணம் இருந்தால், அத்தகைய நபரை முதல் முறையாக மூன்று மாதங்களுக்கு மேற்படாமல், அந்த அமைச்சரால் தீர்மானிக்கப்படும் இடத்திலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டும் காவலில் வைப்பதற்கு அமைச்சர் உத்தரவிடலாம் என்பதுடன், அத்தகைய எந்தவொரு உத்தரவையும் அவ்வப்போது மூன்று மாதங்களுக்கு மிகாமல் நீடிக்கலாமாயினும் அத்தகைய தடுப்புக்காவலின் மொத்தக் காலம் பதினெட்டு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.”

அதே சட்டத்தின் பிரிவு 10 இவ்வாறு கூறுகிறது:

“பிரிவு 9 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் இறுதியானவை; அத்துடன் எந்தவொரு நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயத்திலோ, ‘ரிட்மனு’ மூலமோ அல்லது வேறு வகையிலோ மீளப் பெறப்பட முடியாதவை.”

இதனால், பாதிக்கப்பட்டவர் முற்றிலும் பாதுகாப்பற்றவராக மாறுகிறார். ஏனெனில் அவரைக் காவலில் வைத்திருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் அதிகாரிகள் வழங்க வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் சந்தேகங்களை, அவை கற்பனையாக இருந்தாலும் கூட,  மேற்கோள் காட்டலாம். அவசரகால விதிமுறைகளின் கீழும் இது பொருந்தும், குறிப்பாக நீங்கள் விதிமுறை 17 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தால்,

  1. செயலாளர் தனக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அல்லது எவராவதொரு நபர் தொடர்பாக அவரால் கோரப்படும் மேலதிக ஆவணங்கள் குறித்தோ திருப்தி அடைந்தால், அத்தகைய நபர், 

(அ) தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கு அல்லது அத்தியாவசியச் சேவைகளைப் பராமரிப்பதற்குப் பாதகமான எந்தவொரு வகையிலும் செயற்படுவதைத் தடுக்கும் நோக்குடன்; அல்லது, 

(ஆ) ஒழுங்குமுறை 32 இன் பகுதி (2) இன் துணைப் பகுதி (b) இன் எந்தவொரு விதிகளுக்கும் முரணாகச் செயற்படுவதைத் தடுக்கும் நோக்குடன்; அல்லது,

(இ) ஒழுங்குமுறை 25 அல்லது ஒழுங்குமுறை 26 இல்  குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றத்தையும் செய்தல், செய்வதற்கு உதவுதல் அல்லது ஊக்குவித்தல் ஆகியவற்றின் பேரில், அவ்வாறு தடுத்து வைக்கப்படுவது அவசியம் என்று செயலாளர் கருதினால் அவரால் அவற்றுக்கு உத்தரவிட முடியும். அத்துடன், அத்தகைய உத்தரவு அவ்வப்போது மூன்று மாதங்களுக்கு மேற்படாமல் காவலில் வைக்கும் வகையில் நீடிக்கப்படலாம் என்பதுடன், அத்தகைய எந்தவொரு உத்தரவையும் அவ்வப்போது மூன்று மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்கு நீட்டிக்க முடியும். ஆயினும், இந்த ஒழுங்குமுறையின் கீழான ஒரு உத்தரவின் பேரில், ஒரு வருடத்திற்கு மேல் எந்தவொரு நபரும் அவ்வாறு தடுத்து வைக்கப்படக்கூடாது.

ஒரு நபர் தனது தடுப்புக்காவலுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்னர் ஒரு நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கான தகவல்கள், அதற்கான காலம், அல்லது தடுப்புக்காவலை நீடிக்க வேண்டிய காரணத்தை விளக்கும் செயலாளரின் அறிக்கை என்பவற்றுடன் சேர்த்து, அந்த நபரின் தடுப்புக்காவல் காலம் நீட்டிக்கப்படலாம். அத்தகைய நபரின் தடுப்புக்காவல் காலத்தை நீட்டிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நீதிபதி திருப்தி அடைந்தால், அத்தகைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மேலும் ஒரு காலத்திற்கு அந்த நபரைக் காவலில் வைக்கவும் உத்தரவிடலாம். அந்தக் காலம் மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், தவிரவும் அது அவ்வப்போது நீதிபதியால் நீடிக்கப்படலாம்.

பகுதி (1) இன் விதிகளுக்கு இணங்க ஒரு நபர், ஒரு நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டால், செயலாளர் அவர் தொடர்பாகத் தனது அறிக்கையில் முன்வைத்த விவரங்களை நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கையே அதன் உள்ளடக்கங்களுக்கு முதன்மையான சான்றாக இருக்கும். செயலாளர் நீதிபதியின் முன் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்படவோ அல்லது முன்நிலையாகவோ வேண்டியதில்லை.

இந்த ஒழுங்குமுறையின் பகுதி (1) இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதற்கும், அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான எல்லாவகை அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கும், எந்தவொரு பொலிஸ் அதிகாரியோ, அல்லது ஆயுதப்படைகளின் எந்தவொரு உறுப்பினரோ உரிமை பெற்றவர்களாவர்.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்குமாக அடுத்தடுத்து நீடிக்கப்படக் கூடிய தடுப்புக் காவல் உத்தரவு,  அதிகபட்சமாக 18 மாதங்கள் மட்டுமே நீட்டிக்க முடியும் என்பது இந்தச்சட்டத்தின் ஒரு விதியாக இருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை. 18 மாதங்களுக்குப் பிறகும், முடிவில்லாமல் காவலில் வைப்பதை உறுதி செய்யும் அவசரகாலச் சட்ட  விதிமுறைகளின் விதிகளைப் பயன்படுத்தி, குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமலே நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

ஒரு கைதியின் இருப்பிடத்தை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்க அதிகாரிகள் சட்டப்படி கடமைப்பட்டிருந்தாலும், நான் கைது செய்யப்பட்ட மறுநாள் ‘CID’ தலைமையகத்தில் விசாரணைக்குப் பொறுப்பான ‘ASP’ இனை என் மனைவி சந்தித்தபோது, கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர். கைது நடந்ததற்கு அவள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, என்னைக் கைது செய்த அதிகாரியின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்தியிருக்க மாட்டார் என்பதை நன்கு அறிந்திருந்தும், ‘ASP’ அவரது பெயரைக் கூறுமாறு அவளிடம் சவால் விடுத்தார்.

என் மனைவி இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு, சில சோதனைகளுக்குப் பிறகு அதிகாரியை அடையாளம் காட்டியது மட்டுமல்லாமல், அவரது வீட்டிற்குச் சென்று அதிகாரியின் மனைவியிடமிருந்து அனைத்து விவரங்களையும் துணிச்சலுடன் பெற்றுக்கொண்டிருந்தாள். ஆனாலும், நான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அவளுக்குத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். ஐந்து நாட்கள் அவள் என்னைத் தேடி ஒரு தடுப்புக்காவலில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றாள். ஆனால் அவளுடைய தேடல் வெற்றிடமாக இருந்தது. ஒரு சிறிய குற்றத்திற்காக என்னுடன் சிறையில் இருந்த ஒரு நபர் மூலம் என்னுடைய ஒரு நண்பருக்கு ஒரு செய்தியை அனுப்பினேன். அதனால் என் குடும்பத்தினர் என் தடுப்புக்காவல் இடத்தைப் பற்றி அறிந்து கொண்டார்கள்.

இதில் நான் அதிர்ஷ்டசாலி.  ஏனென்றால் பல மாதங்களாக கைது செய்யப்பட்டவர்கள் எங்குள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத குடும்பங்களைச் சேர்ந்த, தடுத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகளை நான் அறிவேன்.

அதிர்ஷ்டவசமாக எனது கைதானது, நாட்டில் கைதுகளும், கடத்தல்களும், காணாமல் போதல்களும் அதிகளவில் பெருகுவதற்குப் பல காலத்திற்கு முன்பே நடந்திருந்தது. உண்மையில் நான் கைது செய்யப்பட்ட காலத்தில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகாலச் சட்ட விதிகள் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இந்தச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் அரை ‘டசின்’ சிங்கள சந்தேக நபர்களில் ஒருவன்தான் நானும். இந்தத் தற்செயலான சம்பவமே, ஒருவேளை என் உயிரைக் காப்பாற்றிய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

நிச்சயமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழோ, அவசரகால விதிமுறைகளின் பிரிவுகளின் கீழோ கைது செய்யப்பட்டவர்கள் மீது நடாத்தப்படும் அணுகுமுறைகள் எல்லாம் மனிதாபிமானம் அற்றவையும், இழிவுபடுத்துபவையும் தான். ஆகக் குறைந்தது, அவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, அதற்கும் மிகக் குறைந்தபட்ச வசதிகளே கிடைக்கின்றன. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சந்தேக நபர்களுக்குச் செய்தித்தாள்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால் தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற கைதிகளுக்கு, மருத்துவ வசதிகள் வழங்குவது போன்றவை அதிகாரிகளது தரப்பின் சில கடமைகளாகக் குறிப்பிட்டிருக்கிறது.

விசாரணையின் முழுச் செயல்முறையும், தகவல்களைச் சேகரிப்பதை மட்டுமல்லாமல், சந்தேக நபரின் சுயவிருப்பத்தை, சுயமரியாதையை, சுயபெருமிதத்தை எல்லாம் உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பாதுகாப்பற்ற, பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்படுகிறார்; சில சமயங்களில் பொது இடங்களிலும் கூட. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உடல்ரீதியான, மனரீதியான சித்திரவதைகளிலிருந்து தப்புவதில்லை. என் விஷயத்தில், உடல்ரீதியான சித்திரவதைகளிலிருந்து நான் தப்பித்தேன் என்றாலும் அவற்றைச் செய்வதற்கான அச்சுறுத்தல்கள் எனக்கு இருந்தன. அதற்குப் பதிலாக, என்னை விசாரித்தவர்கள் தங்களால் இயன்றவரை மனரீதியான சித்திரவதைகளைப் பயன்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் நினைத்ததை விடக் கடுமையான மன அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ளக் கூடியவனாக உருவாக்கப்பட்டவன் நான் என்பதால் அது என்னைப் பாதிக்கவில்லை. ஒருவேளை, உடல்ரீதியான சித்திரவதைக்குள் உட்படுத்தப்பட்டிருந்தால், நான் மிகவும் எளிதாக உடைந்து போயிருப்பேன்.

நான் 310 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் அறை அவ்வளவு நீண்டகாலம் தங்குவதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கவில்லை. அனைத்துக் குற்றவாளிகளும், சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு அல்லது நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுவதற்கு முன்பாக இங்குதான் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த பம்பலப்பிட்டி  பொலிஸ் தடுப்புக் காவல் அறை, துருப்பிடித்த இரும்புக் ‘கேற்’றுடன் கூடிய, சுமார் 3 மீ x 3.5 மீ அளவுள்ள இருண்ட அறையாக இருந்தது. அதற்குச் ‘சீலிங்’ (Ceiling) இருக்கவில்லை.

ஜன்னல்கள் இல்லாத, அதன் கதவிலுள்ள 20 செ.மீ x 10 செ.மீ அளவிலான மூன்று நீள்சதுரத் துளைகள் மட்டுமே காற்றோட்டத்துக்காக இருந்தன. அந்தக் கதவு, நிலையத்தின் ஆயுதங்கள் வைக்கும் களஞ்சிய அறையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறைக்குப் போவதற்கான வாசல் பகுதி போன்ற ஒரு அறை. அங்கு ஒரு தண்ணீர்க் குழாய் இருந்தாலும் அதில் ஒருபோதும் தண்ணீர் வருவதில்லை என்பதால் வரண்டுபோய் இருந்தது. அந்த அறைக்குள் இருந்த நிரந்தரமாக அடைக்கப்பட்ட கழிப்பறையிலிருந்து ஒரு குமட்டல் நாற்றமும் வந்துகொண்டிருந்தது. மனிதச் சிறுநீர், மலம், உமிழ்நீர், சளி போன்றவற்றின் கலவையால் உருவாகும் இந்தத் துர்நாற்றத்தை உண்மையில் விவரிக்கக்கூடிய ஒரு ஒற்றை அச்சிடக்கூடிய வார்த்தை ஏதேனும் இருக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சில காவல்துறை அதிகாரிகளின் மனிதாபிமான சைகை இல்லாவிட்டால், அவர்களின் மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறி, அவ்வப்போது ஒரு ‘டோஸ்’ புதிய காற்றைப் பெற எனக்கு வாய்ப்பளிக்காது இருந்திருந்தால், நான் ஏதாவதொரு விவரிக்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பேன்.

இயற்கையின் அழைப்புகளுக்கு பதிலளிப்பது எப்போதும் ஒரு பிரச்சினையாக இருந்தது. கழிப்பறையில் அடைப்பேற்பட்டிருந்ததால், கட்டடத்திற்கு வெளியே அமைந்துள்ள மற்றொரு அறையைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டியிருந்தது. அதற்கு, நீங்கள் ஒரு பொறுப்பான அதிகாரி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக, நான் மலசல அவஸ்தைகளை அடக்கும் திறனை எனக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காகவே, குறைந்த அளவில் சாப்பிட முடிவு செய்தேன். அப்படி இருந்தும் கூட, அந்த மோசமான சூழ்நிலையில் உணவு உட்கொள்வதும் கூட ஒரு போராட்டமாகவே இருந்தது.

அத்தகைய சூழ்நிலைகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான பேரழிவு வயிற்றுப்போக்கு. எனது சொந்தமான குணப்படுத்தும் முறைக்கு நன்றி: முழுமையான உண்ணாவிரதம். இதற்காக நான் கடமைப்பட்டது: ஒரு பொலிஸ் ‘பொறுப்பதிகாரியான’ பொலிஸ் உத்தியோகத்தரின் உதவிக்கும், ஒரு கனிவுமிக்க மருந்தாளரால் பரிந்துரைக்கப்பட்டு என் மனைவியால் அறைக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சில மருந்துகளுக்கும் தான். அதிகாரபூர்வ வழிகளில் மருத்துவ உதவி பெறத் தவறிய பிறகு, இந்தக் கடத்தல் நடந்தது. எனது தடுப்புக்காவலில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவ உதவி வழங்க எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் அது ‘CID’ இன் கடமை. ஆனால் அவர்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியவில்லை. நான் 10 மாதங்களுக்கும் மேலாக காவல் நிலையத்தில் தங்கியிருந்தபோது, கடுமையான பல் வலியால் பல நாட்கள் அவதிப்பட்ட பிறகு, ஒரு முறை மட்டுமே அதிகாரபூர்வ மருத்துவ உதவியைப் பெற முடிந்தது.

அறையில் உள்ள ‘கொங்கிரீட்’ படுக்கையில் எனக்கு ஏகபோக உரிமை இல்லாததால், எனக்கு தூக்கமும் ஒரு பிரச்சினையாக இருந்தது. இரண்டு பேர் சிரமத்துடன் பகிர்ந்துகொள்ள முடிந்தாலும், அதில் தூங்கும் உரிமையைக் கோரும் மூன்று அல்லது நான்கு பேர் பெரும்பாலும் இருந்தனர். சில நேரங்களில் 8 முதல் 10 பேர் வரை இரவு முழுவதும் அதில் அமர்ந்திருப்பார்கள். அந்த நாட்களில் நான் ஒரு பழைய செய்தித்தாளை அழுக்குத் தரையில் வைத்து அதன் மீது தூங்குவேன். சில நேரங்களில் மற்ற சிறைத் தோழர்களும் அதை ஆக்கிரமித்தனர். நான் நின்று கொண்டே கழித்த பல தூக்கமில்லாத இரவுகள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. தரையிலோ அல்லது ‘கொங்கிரீட்’ படுக்கையிலோ, உங்கள் மனதுக்கு நிறைவாகத் தூங்குவதற்கு ஒரு நாள் கூட இருப்பதில்லை. ஏனென்றால் காவல் நிலையம் நள்ளிரவு வரை சத்தமாக இருக்கும். சில நேரங்களில் சிறையில் இருப்பவர்களில், குறிப்பாக போதைக்கு அடிமையானவர்கள், புலம்பத் தொடங்கி மயக்கத்தில் மூழ்கியவர்கள் மட்டுமே நிம்மதியாக உணர முடியும் என்ற அளவுக்குச் சத்தமாகத் திட்டுவார்கள்.

ஓர் இரவு நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தை நான் இங்கே நினைவு கூர முடியும். ஒரு மனநோயாளி கொண்டுவரப்பட்டு அறைக்குள் தள்ளப்பட்டார். பொலிசார் அப்படியானவர்களை நோயாளிகளாக அல்ல, குற்றவாளிகளாகவே நடத்துகிறார்கள்! ஆக்ரோஷமாக மாறிய இந்த மனநோயாளியால் திடீரென்று என் முகத்தில் அடி விழுந்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பில், பொலிசார் அறைக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான் திறந்திருந்த அறை வாயிலுக்குள் சென்று, வெளியே நின்று, நான் அறைக்குத் திரும்புவதற்கு முன்பு மனநோயாளியை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரினேன். அதற்குப் பதிலாக அவர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்று கடுமையாக அடித்ததால், அந்த ஏழை நபர் சிறையில் மீண்டும் அடைக்கப்படும்போது முற்றாகச் சிதைந்து போயிருந்தார். நான் அறைக்குள் நுழையப் பிடிவாதமாக மறுத்து இரவு முழுவதையும் வெளியே ஒரு வாங்கில் கழித்தேன். அதிகாரிகளிடமிருந்து அவமானப்படுத்தலையும் எரிச்சலையும் பெற்றுக்கொண்டேன்.

இருப்பினும் அவர்கள், என் நிலைக்குப் பொறுப்பான ‘சிஐடி’க்குப் பயந்து, என்னைத் தாக்கித் துன்புறுத்தத் துணியவில்லை. மறுநாள் அதிகாலையில் நோயாளி வெளியேற்றப்பட்டார். நான் அறைக்குத் திரும்பினேன். ஆனால், அதன் பிறகு எனக்கும் அந்தப் பாதுகாவலர்களுக்கும் இடையிலான உறவுகள் முன்னேறியிருந்தன.

காவல் நிலையத்தின் அடக்குமுறைச் சூழலைத் தாங்க முடியாமல், எனது தடுப்புக்காவல் இடத்தை மாற்றக் கோரி விண்ணப்பித்தேன். எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணையில் உள்ள மற்ற சந்தேக நபர்கள் வைக்கப்பட்டிருந்த ‘நியூ மெகசின்’ சிறைச்சாலைக்கு நான் மாற்றப்பட்டேன். நான் இனிமேலும் தனியாக இல்லை என்பதால் அது எனக்கு நிம்மதியாக இருந்தது.

இருப்பினும், அடக்குமுறை வேறு வடிவங்களில் தொடர்ந்தது. குடும்பத்தினரது வருகைகள் வாரத்திற்கு இரண்டு தரம் 15 நிமிடங்களுக்கு மட்டுமே என்று குறைக்கப்பட்டன. அதற்காகவும் பார்வையாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. அதிகாரிகள் இந்தக் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்துவதில் அபத்தமான வரம்புகளைச் செய்கிறார்கள். இதனால் அவை குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட துன்புறுத்தலாக மாறும். குடும்ப உறுப்பினர்கள் கூட கைதியுடனான தங்கள் உறவை உறுதிப்படுத்தும் கடிதத்தை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து பெற வேண்டும். என்னைப் பார்க்க அனுமதி பெற என் மனைவி இரகசியப் பொலிஸ் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், சிறைச்சாலைத் தலைமையகம் என்பவற்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதற்காக மனைவி இரண்டு முழு நாட்களையும் செலவிட வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளுக்கு ஒரு தற்காலிக அனுமதி மட்டுமே கிடைத்தது. வழக்கமான அனுமதியைப் பெற அவள் கிராம சேவகரை நான்கு முறை சந்திக்க வேண்டியிருந்தது. அவள் என் மனைவி என்பதற்கான அனைத்து ஆவண ஆதாரங்களையும் சமர்ப்பித்த பிறகும், சான்றிதழைப் பெற அவள் அந்த மோசடிக்காரனுக்கு இலஞ்சமும் கொடுக்க வேண்டியிருந்தது.

பார்வையாளர்கள், கைதிகளுக்கு எந்த உணவையும் கொண்டு வருவதற்கோ அல்லது கொடுப்பதற்கோ தடை விதிக்கப்பட்டிருந்தது. சிறை அதிகாரியைத் தவிர, கைதி பார்வையாளருடன் உரையாடும்போது, ‘சிஐடி’ அதிகாரி ஒருவர் தொடர்ந்து ஒட்டுக்கேட்டுக் கொண்டிருப்பார். இது மற்றொரு வகையான மிரட்டல்.

அச்சிடப்பட்ட வார்த்தைகள், குறிப்பாக செய்தித்தாள்கள் கைதிகளுக்குத் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகளதும், ‘சிஐடி’யினதும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பழைய செய்தித்தாள்களின் துண்டுகளைக் கூட அறைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதில் சிறை அதிகாரிகள் மிகவும் உறுதியாக இருந்தனர். புத்தகங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு ‘சதி இலக்கியங்களி’ன் மீதான ஒரு பயம் இருக்கிறது. அவர்களுக்கு நூல்கள் எவையானாலும் சரி எல்லாமே சதியாக அல்லது சதித்திட்டமாக மாறக்கூடும். சதித்திட்டம் என வகைப்படுத்தப்பட்டுப் படிக்கத் தடை செய்யப்பட்டவற்றில் ‘குலசேன பொன்சேகா’வின் பரிசு பெற்ற நாவலான ‘பாலம யட்ட’ (பாலத்தின் கீழே), ‘கிராம்சி’யின் ‘சிறைச்சாலைக் குறிப்பேடுகள்’ ஆகியவையும் அடங்கும். இலக்கியம் குறித்த அறியாமை கணிசமாக உள்ள சிறை அதிகாரிகளைப் பற்றி ஒருவர் பரிதாபப்பட வேண்டும். உதாரணமாக, சிறைச்சாலைக் குறிப்பேடுகளில் உள்ள கல்விச் சொற்பொழிவுகள் சதித்திட்டமாகக் கருதப்பட்டாலும், பிரபல குற்றவாளி ‘சார்லஸ் சோப்ராஜ்’ இன் சிறையை உடைப்பது பற்றிய விரிவான விளக்க விவரங்களைக் கொண்ட ‘ரைம்’ இதழ் அறைக்குள் அனுமதிக்கப்பட்டது.

குடும்பத்தினருடனான கடிதப் போக்குவரத்து தடைசெய்யப்படவில்லை என்றாலும், அத்தகைய கடிதப் போக்குவரத்து பல காவலர்கள் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. சிறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ‘CID’ ஆகியோர் அவற்றைத் தணிக்கை செய்து தூக்கி எறிய முடிவு செய்வார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் கிடைக்கக்கூடிய ஒரே தீர்வு, ஆலோசனைக் குழுவிடம் மேல்முறையீடு செய்வது மட்டுமே. அதன் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதியின் பரிந்துரையாளர்கள். கைதிகளை விடுவிக்கவோ அல்லது வேறு எந்த நிவாரணத்தையும் உத்தரவிடவோ அக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. அதனால் பரிந்துரைக்க மட்டுமே முடியும். நிரபராதிகள் என்று கருதப்படும் கைதிகளை விடுவிக்கப் பரிந்துரைத்த வழக்குகளில் கூட, பாதுகாப்பு அமைச்சு அந்தப் பரிந்துரையைப் புறக்கணிக்க முடியும். அவ்வளவு அதிகாரம் இருந்தது அதற்கு!

உண்மையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடும் உள்ளது. எனது குடும்பத்தினர் இந்தத் தீர்வை முயற்சித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. டிசம்பர் 12, 1985 அன்று என் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, எனது தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகும் அதே நாளில், நான் நள்ளிரவில் விடுவிக்கப்படுவேன் என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். ஒரு செய்தித்தாளின் அப்பாவி நிருபர் உண்மையாக அந்தச் செய்தியையும் வெளியிட்டார்.

இருப்பினும், நான் விடுவிக்கப்படவில்லை. இது நீதிமன்றங்களின் மீது கூட அதிகாரிகளால் நடத்தப்படும் அவமதிப்பைக் காட்டுகிறது. இதற்கிடையில், ‘CID’ இன் உயர் அதிகாரி ஒருவர் அன்று என்னிடம், தடுப்புக்காவல் தானாகவே நீட்டிக்கப்படும் என்று கூறினார். உண்மையில், உண்மையான தடுப்புக்காவல் உத்தரவு தடுப்புக்காவலுக்குப் பொறுப்பான அதிகாரியைச் சென்றடையாமலே, சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டனர். ரப்பர் முத்திரையிடப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகள் பொதுவாக அதன் பெறுநர்களை, சந்தேக நபர் உட்பட, சென்றடைவதற்குச் சில சில நாட்கள் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகள் மனுவை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால் அதன் விளைவு குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அதில் உள்ள அதிக செலவுகள் காரணமாக, எனது குடும்பத்தினர் அதை முயற்சிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். தவிர, இன்று இருப்பது போல் அடிப்படை உரிமை வழக்குகள் அப்போது உச்ச நீதிமன்றத்தால் அடிக்கடி ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை. அந்த நேரத்தில், ஏழை மக்கள் தமது வழக்குகளின் அதிகளவான செலவைச் சுமக்க நிதி உதவி செய்யக்கூடிய சிவில் சமூக அமைப்புகளும் இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முழுமையான தன்மை காரணமாக, வரப்போகும் முடிவின் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கறிஞர்கள் என் குடும்பத்தினருக்கு நம்பிக்கையற்ற முயற்சியாகக் கருதக்கூடிய  ஒன்றான அதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் வரை, கைதிகள் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொள்ள வழி இல்லை. இது அவர்கள் எந்த வகையான சட்ட நிவாரணத்தையும் பெற்றுக் கொள்வதைத் தடுக்கிறது. இது அவர்களின் அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற ஒன்று. நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை, அனைத்துச் சந்தேக நபர்களும் சந்தேக நபர்களாகவே இருக்கிறார்கள். இருப்பினும், நடைமுறையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை, அதிகாரிகள் அவர்களைக் குற்றவாளிகளாகவே கருதினர்.

சந்தேக நபர்களை அவதூறு செய்ய வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவது உட்பட பல்வேறு வழிகளையும் அவர்கள் நாடினர். பொதுமக்களின் மனதில் சந்தேக நபர்களைப் பற்றி ஒரு பாதகமான எண்ணத்தை உருவாக்க, ஊடகங்களில் பல புனையப்பட்ட கதைகள் பரப்பப்படுகின்றன. நான் பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் காவலில் இருந்தபோது, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ‘டெய்லி நியூஸ்’, அதிகாரத்தைக் கைப்பற்ற ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’ (SJV) உருவாக்கியதாகக் கூறப்படும் ஒரு விரிவான திட்டத்தை வழங்கும் ஒரு செய்தியைப் பிரதான செய்தியாக வெளியிட்டது. இருப்பினும், அக்கட்சியின் செயலாளரான எனக்கே அது புதுச் செய்தியாகவே இருந்தது! இது ஓர் அற்புதமான திட்டம் என்றாலும் யாரோ ஒருவரின் காட்டுக்கற்பனையின் ஓர் உருவம் மட்டுமே. அதன் ஆசிரியரை ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’வில் சேர அழைக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். சிறைக்குள்ளே அடைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெறுப்புப் பிரசாரத்தை எதிர்க்க எந்த வழியும் இல்லை. ஊடகங்கள் என்பவை ஆட்சியாளர்களால் எதிர்ப்பை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சக்திவாய்ந்த ஒடுக்குமுறைக் கருவிகளேயாகும்.

ஆனால், நான் காவலில் இருந்த நாட்களுடன் ஒப்பிடும்போது, அடக்குமுறை நோக்கங்களுக்காக ஊடகங்களைக் கையாள்வது இன்று மிகவும் நுட்பமானதாகவும், விஷமத்தனமானதாகவும் மாறிவிட்டது.

பெயரளவில் மட்டும் ‘கம்யூனிஸ்ட்’ ஆக இருந்ததற்காக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஏமாற்றமடைந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து, 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு தொடக்க அரசியல் இயக்கமாக ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’ இருந்தது. அது சட்டபூர்வமாகச் செயற்பட்டு வந்ததுடன்  அதன் சொந்த வெளியீடுகளையும் கொண்டிருந்தது. தேசியப் பிரச்சினை குறித்த அதன் கொள்கை, உரிமையை மட்டுமல்ல, ஒன்றுபட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தையும் அங்கீகரித்து, அவர்களுக்குப் பிராந்தியச் சுயாட்சியைக் கோரியது (இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கொள்கை பெரும்பாலான இலங்கையர்களின் கருத்தாக மாறியுள்ளது). தற்செயலாக, ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’வின் வெளியீடான ‘A Democratic Solution to the National Question’ (தேசிய இனப் பிரச்சினைக்கான ஒரு ஜனநாயக பூர்வமான தீர்வு) என்ற புத்தகம் இரகசியப் பொலிசாரால் உற்சாகமாகக் கைப்பற்றப்பட்டு, எமக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில், ஓர் அம்சமாக வைக்கப்பட்டது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா அமைத்த அரசியலமைப்பு, சர்வாதிகாரத்தை எதிர்கொள்வதில் பாரம்பரிய இடதுசாரிகளதும் ‘ஜே.வி.பி’யின் வகுப்புவாத அரசியலினதும் இயலாமை என்பவை ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும், சார்பு முதலாளித்துவ உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் புதிய வழிகளைத் தேடும் பாதையை நோக்கித் தீவிர இளைஞர்களைத் தள்ளியது. அந்த நேரத்தில் ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’வுக்கு இணையாக, இதுபோன்ற இடதுசாரிக் குழுக்களும் அமைப்புகளும் தோன்றின. அத்தகைய ஒரு குழு, ‘ஜே.வி.பி’யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவானது. பின்னர் காவல்துறையால் ‘N-JVP’ என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது 1985 இல் நமது ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’வில்  இணைந்தது.

‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது போலவே, அரசாங்கம் மற்றொரு தொடக்க அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களையும் கைது செய்தது. அத்துடன் அவர்கள் மீது அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அரசாங்கத்தின் அடக்குமுறை இல்லாவிட்டால், இந்தக் குழுவும் ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’ உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கலாம், ஏனெனில் அந்த நேரத்தில் இரு அமைப்புகளுக்கும் இடையே சில சித்தாந்த நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 

ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இலங்கையில் சோசலிசத்தை நிறுவ முடியும் என்று மாத்தறை திஹகொடவில் நடைபெற்ற ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய’வின் மூன்றாவது மாநாட்டின் விவாதங்களே எங்களுக்கு எதிரான சதிக் குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, பாரம்பரிய மார்க்சியத்தில் பாடப்புத்தகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அல்ல, மாறாக வடக்கு – தெற்குப் போராளிகளின் ஒன்றியத்தை நோக்கமாகக் கொண்டு முன்மொழியப்பட்ட தந்திரம் தான். நீண்டகால மூலோபாயம் குறித்த இந்தத் தீர்மானத்தின் மை காய்வதற்கு முன்பே, அரச அதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு, தொடக்கப் புரட்சி இயக்கத்தை மொட்டிலேயே கிள்ளி எறிய முடிவு செய்தனர். ஆனால் அந்த அதிகாரிகள் ஓர் ஈயை நசுக்குவதற்காக ஒரு சுத்தியலைப் பயன்படுத்தினர். தொழிலாளர் வர்க்கமும் இடதுசாரிக் கட்சிகளும் வகுப்புவாதச் சக்திகளுடன் பழகியதாலோ அல்லது தாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயத்தாலோ, அந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடத் தயங்கியதால், அரசாங்கத்தால் ஒப்பீட்டளவில் எளிதாக இதைச் செய்ய முடிந்தது. புகழ்பெற்ற கட்டுரையாளர் தராக்கி கூறியது போல, எஸ்.ஜே.வி  “காலத்தை விட மிகவும் முன்னேறியது” ஆக இருந்தது.

திஹகொட மாநாட்டின் அரசியல் ஆய்வறிக்கை என்பது ஒன்றும் கிளர்ச்சி நடவடிக்கைக்காக வரையப்பட்ட ஒரு திட்டம் அல்ல; அது ஒரு தத்துவார்த்த முன்மொழிவு மட்டுமே. ஒருவர் தனது கற்பனை வளத்தை வானத்தின் உயரத்துக்கு உயர்த்தினால் மட்டுமே அதை ஒரு சதித்திட்டம் என்று குறிப்பிட முடியும்! ஒருவேளை, அந்த நேரத்தில் ஏற்கனவே மக்களுக்கு எதிராக, அல்லது மிகவும் வெளிப்படையாக தமது எதிர்த்தரப்பினர்க்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கியிருந்த அரசாங்கம், அதன் காரணமாக தனக்கு எழுகின்ற ஒரு குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக இவ்வாறு செயற்பட்டிருக்கலாமோ என்னவோ? எது எப்படியிருந்தாலும், அனைத்து ஜனநாயக வழிகளும் மூடப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், மோசடியான ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத் தேர்தல் மோசடித்தனமாக ஒத்தி வைக்கப்படும் போது, பாராளுமன்ற உறுப்பினர்களது தேதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வாங்கி வைத்திருக்கும் போது, நீதித்துறை வெளிப்படையாகத் தாக்கப்படும் போது, என்று இத்தனைக்கும் மேல், ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்ற முடிவுக்கு (மக்கள்) வருவதை, மேலும் (யாராவது) குற்றம் சாட்ட முடியுமா? இவ்வாறான வன்முறை நடவடிக்கைகள் காரணமாக, மக்கள் அத்தகைய ஒரு முடிவுக்கு வருவதற்கான நியாயமான பல்வேறு சம்பவங்கள் வரலாற்றில் இருக்கவே செய்கின்றன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் விதிகள், சட்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. அவர்கள் பெரும்பாலும், சந்தேக நபர்களை ‘பதுகாப்புக்காகத் தடுப்புக் காவலில் வைப்பதில்’, அதற்கான சட்ட வரம்புகளை மீறிச் செயற்படுகின்றனர். புதிய ‘மகசின்’ சிறைச்சாலையில் நான் காவலில் வைக்கப்பட்டு இருந்தபோது, எந்தத் தவறும் செய்யாமலே கைதுசெய்யப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பல கைதிகளைக் கண்டேன். ஒரு சந்தேக நபர், அவரது சகோதரர் தலைமறைவாகி இருந்ததால், அவருக்குப் பதிலாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் (என்ன வகையான ஒரு நீதி!). அவர் 11 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த பின், எத்தகைய குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார். உண்மையில், அவரது சகோதரர், ஏற்கனவே இவர் விடுவிக்கப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருந்தார். இதேபோல், சந்தேகத்திற்குரிய ஒருவர் தலைமறைவாகி இருந்ததால், அவரது பக்கத்து வீட்டுக்கார முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம், சில காலத்திற்கு முன்பு அந்தச் சந்தேக நபரை, இவர் தனது வாகன ஓட்டுநராகப் பணியில் அமர்த்தி வைத்திருந்தது தான். உண்மையில், அவரது ஊழியரின் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் கூட இந்த முதியவருக்குத் தெரிந்திருக்கவில்லை. விசாரணைக்குப் பொறுப்பான ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் தகவலின்படி, பொலிசார் ஒரு பெயரைத் தவறாக எழுதியதால், தவறுதலாகக் கைது செய்யப்பட்டவர் இன்னொருவர். அந்தத் தவறைச் சரிசெய்து அவரை விடுவிக்க காவல்துறைக்கு 9 மாதங்கள் ஆனது. தேடிக்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரை அடையாளங்கண்ட  பொலிஸ் வாகனம், அவரை நோக்கி வந்தபோது, இரண்டு இளைஞர்களுடன் நின்றுகொண்டிருந்த அந்தச் சந்தேக நபர், பாதுகாப்பான இடத்திற்கு ஓடிச் சென்று மறைந்துவிட்டார். எந்தத் தவறும் செய்யாததால், தப்பி ஓட எந்தக் காரணமும் இல்லை என்று, ஓடாமல் அவரது அருகில் நின்ற இரண்டு இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஒரு வழக்கும் இருந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு ‘பரிசுக்குரிய கைதுகளாக’ கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர்! சட்ட அமுலாக்க அதிகாரிகள் சட்டத்தை தமது விருப்பத்துக்கேற்ப விரிவாக்குகின்ற எல்லைகள் இவை.

எங்களை அவ்வளவு காலமும் காவலில் வைத்திருந்த பிறகு, அதிகாரிகள் ஜூன் 3, 1987 அன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நானுட்பட, நாற்பத்து நான்கு பேர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலதிகமாக வேறு சிலர் மீது மேலும் பதின்மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டன. சட்டவிரோத வழிகளில் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தல், கொள்ளைகளில் ஈடுபடுதல், அல்லது கொள்ளைகளுக்கு உதவுதல், அல்லது அந்த நோக்கத்திற்காக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நபர்களுக்குப் பயிற்சி அளித்தல், மக்களை வன்முறைக்குத் தூண்டுதல், சட்டவிரோத வழிகளில் ‘அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தை முன்வைத்ததும், அதற்கான முயற்சிகளை ஆதரித்ததும்’ ஆகியவைதான் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சட்டப் பிரிவு 23 (a), 23 (a) உடன் வாசிக்கப்பட வேண்டிய விதிமுறை 45, சட்டப் பிரிவு  26 (a), 26 (a) உடன் வாசிக்கப்பட வேண்டிய விதிமுறை 45, அவசரகால சட்டப் பிரிவு 48 (2), அதன் சரத்து 3 (a) இன் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (g) உடன் இணைத்து வாசிக்கப்படுகையில் வழங்கப்படக் கூடிய தண்டனைகள் எனக்கு விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான அதிகபட்ச தண்டனைகள் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மட்டுமல்லாமல் அதற்குப் பின்னான எதிர்காலமும் மிகவும் குழப்பமாக இருந்தது. நீண்டகாலச் சட்ட நடவடிக்கைகள் இதற்காகத் தேவைப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசு தரப்பு 44 சாட்சிகளின் பட்டியலைத் தாக்கல் செய்தது. 44 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். எனவே, விசாரணை விரைவாக முடிவடையும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும், தொடக்கத்திலிருந்தே, எங்கள் விடுதலை என்பது நீண்டகால நீதிமன்ற நடைமுறையின் விளைவாகவோ, அல்லது அதிகாரிகளின் மனமாற்றத்தின் விளைவாகவோ நடக்கப் போவதில்லை. மாறாக, சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் வெளியே  நடத்தப்படும் மக்கள் போராட்டங்களின் விளைவாகவே அது நடக்க முடியும் என்று நான் உறுதியாக நம்பினேன். உண்மையில் அதுதான் நடந்தது. சுதந்திரத்திற்கான தமிழ் மக்களின் தீவிரமான போராட்டம் அரசாங்கத்தை ஒரு சமரசத்திற்கு வரக் கட்டாயப்படுத்தியது. ஜூன் 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நாங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. கொழும்பு உயர் நீதிமன்றம் ஏப்ரல் 20, 1988 அன்று, சட்டமா அதிபர் எமக்கெதிராக தாக்கல் செய்த வழக்கை மேற்கொண்டு தொடரப் போவதில்லை (‘Nolle prosequi’) என்ற அறிவிப்பின் அடிப்படையில் எங்களை விடுவித்தது.

அந்த நேரத்தில் நான் 27,000 மணி நேரத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் இருந்திருந்தேன்.  இதை நாட்களிலோ அல்லது மாதங்களிலோ சொல்வது மிகவும் வசதியாக இருக்கும்போது நான் ஏன் மணித்தியாலங்களில் சொல்லுகிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம். அக்காலத்தின் மணித்தியாலங்களுக்கும் எமக்கும் இருந்த தொடர்புதான் அப்படிச் சொல்வதற்கான காரணம். ஒரு கைதி, நேரம் போய்க்கொண்டு இருப்பதை எவ்வாறு உணர்ந்துகொள்ளுவார் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சிறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது நேரம் ஒருபோதும் பறப்பதில்லை. அது வினாடிகளில் அல்லது அதன் பின்னங்களில் நகரும்; அல்லது பின்னங்களின் பின்னங்களில் மிகவும் துல்லியமாக இருக்கும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன காலத்தின் சார்பியல் பற்றிய ஒரு நிகழ்வை நான் உங்களுக்குச் சொல்கிறேன். காலத்தின் சார்பியல் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் ஒருமுறை கூறினார்: “நீங்கள் ஒரு சூடான இரும்பு அடுப்பில் 3 வினாடிகள் அமர்ந்தால், நீங்கள் 3 வருடங்கள் அமர்ந்திருப்பது போல் உணர்கிறீர்கள். நீங்கள் உங்கள் காதலரின் மடியில் 3 வருடங்கள் அமர்ந்திருந்தால், நீங்கள் 3 வினாடிகள் அமர்ந்திருப்பது போல் உணர்கிறீர்கள்.” தடுப்பு என்பது ஒரு சூடான அடுப்பில் அமர்ந்திருப்பது போன்றது. சுதந்திரமாக இருப்பது அற்புதமாக இருந்தது. கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பறவை போல உணர்ந்தேன். ஆனால் சுதந்திரம் என்பது ஓர் ஒப்பீட்டளவிலான கருத்து.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு (CROPP), இனங்களுக்கிடையேயான நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம் (MIRJE) மற்றும் எங்கள் விடுதலைக்காக உறுதியுடன் பிரசாரம் செய்து பேச்சுவார்த்தை நடத்திய பிற சிவில் சமூக அமைப்புகளின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட, எண்ணிக்கையில் சிறிய, ஆனால் செல்வாக்கு மிக்க, அர்ப்பணிப்புள்ள நபர்களின் குழுவிற்கு எனது நன்றியை இங்கே தெரிவிக்கவில்லை என்றால், நான் எனது கடமையிலிருந்து தவறிவிடுவேன். 

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்தவற்றை நினைவு கூர்ந்து, தான் பெற்ற அனுபவங்களைப் பற்றி ஒருவரால் உணர்ச்சிவசப்படாமல் எழுத முடியும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மீதான  உடல்ரீதியான, உளரீதியான தாக்கங்களை அனுபவித்தவர்களால், அவற்றை அப்படியான எழுத்துகளால் வெளிப்படுத்துவது சாத்தியமற்றது. ஏனென்றால், ஒருவருக்குத் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பற்றி உள்ள பதற்றம், சக ஊழியர்களின் தலைவிதி குறித்த அச்சங்கள், தனது மனதைச் சூழ்ந்துள்ள விரக்தியும் இருண்மையும், அடுத்த கணம், அடுத்த நாள் என்ன நடக்குமோ என்பது பற்றிய பயம், அதிர்ச்சி என்று பலவீனப்படுத்தும் காரணிகளின் அனைத்து எல்லைகளையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  மூர்க்கத்தையும் அதன் போது அவர் அனுபவிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு, ஒருவர் அதன் விஷத்தை நேரில் சுவைத்தே ஆக வேண்டும்.

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு

இலங்கைப் பல்கலைக்கழகக் கணிதப் பட்டதாரியான ஜெயத்திலகே டி சில்வா (1938 – 2019), தனது, 4 ஆண்டுகால ஆசிரியர் தொழிலைத் துறந்து, 1965 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உறுப்பினராக இணைந்து செயற்பட்டவர். கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட பெருமளவான வெளியீடுகளின் ஆசிரியராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகவும், அதன் அரசியற் தலைமைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் நீண்டகாலம் இயங்கியவர். பின்னர் தத்துவார்த்த ரீதியான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், அக்கட்சியில் இருந்து விலகிச்சென்று, 1980 இல் ‘சமாஜவாதி ஜனதா வியாபாரய (எஸ்ஜேவி)’ என்ற ஒரு தீவிரவாத அமைப்பை உருவாக்கிச் செயற்பட ஆரம்பித்தார். ஓகஸ்ட் 29, 1985 முதல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் 43 பேருடன் சேர்ந்து ‘அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தமை’ என்ற குற்றச்சாட்டின் கீழ்  கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகச் சிறையிடப்பட்டிருந்தார். 1988 ஏப்ரல் மாதம் வழக்குகள் எதுவுமின்றி சட்டமா அதிபரால்  விடுவிக்கப்பட்ட அவர், பத்திரிகைத் துறையில் நுழைந்து,  ஒரு பத்திரிகையாளராகச் செயற்பட்டு வந்தார். ‘டெய்லி நியூஸ்’, ‘சண்டே ஒப்சேவர்’ ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான அவர் இந்தத் தொகுப்பு நூல் நூல் வெளிவரும் போது, ‘இலங்கை அசோசியேற்றட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்’ உடைய ‘றிசேர்ச் அண்ட் றெயினிங்’ (Research and Training) இன் ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துகள் ஏற்கனவே நூல்களாக வெளிவந்துள்ளன.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்