இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் சமூகமாற்றம்: 1920 – 1990
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் சமூகமாற்றம்: 1920 – 1990

December 17, 2025 | Ezhuna

இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் புதிதாக உட்புகுத்தப்பட்ட பெருந்தோட்டங்களுக்கென உருவாக்கப்பட்ட சமூகமே பெருந்தோட்டச் சமூகமாகும். தென்னிந்தியத் தமிழ்க் கிராமங்களில் இருந்து வருகைதந்த இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகள், தொழிற்சங்கச் செயற்பாடுகள் வழியாக அரசியலில் தமது வல்லமையைக் காட்ட இவர்களுக்கு உதவின. ஆனாலும், இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இவர்களது வாழ்வு இருள்மயமாகியது; குடியுரிமையற்ற நிலையில், இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட தொழிற்சங்கக் கட்டளைச் சட்டத்தின்படி வாழ்வதற்கு இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால், தேசியமட்டத்தில் வளர்ச்சியடைந்து வந்த கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற வசதிகளை பெருந்தோட்டச் சமூகம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மலைக்காடுகளில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களே இலங்கையை ஒரு நவீன பொருளாதாரத்திற்கு இட்டுச் சென்றது. ஆனால், அதற்கான உழைப்பை நல்கிய மக்கள் நாட்டில் வளர்ச்சி அடைந்துள்ள ஏனைய சமூகங்களுக்கு நிகரான வளர்ச்சியை இன்றுவரை பெறவில்லை என்பதே இதிலுள்ள முரண். இது எவ்வாறு நடந்தது? குடியுரிமை இழக்கப்பட்ட போதும், குடியகல்வின் போதும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய சவால்கள் எவை? அவர்களும் இந்த நாட்டில் சமத்துவத்துடன் வாழ்வதற்கு என்னென்ன வழிகள் உள்ளன? என்பன பற்றி அலசுவதாக ‘இலங்கையில் மீள் எழுச்சி பெற்றுவரும் பெருந்தோட்டச் சமூகம்’ எனும் இத்தொடர் அமைகிறது.

*இலங்கையின் பெருந்தோட்டச் சமூகத்தினரை ‘மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்துவதே அவர்களை இந்நாட்டின் இன்னொரு தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிப்பதற்கான பொருத்தமான பதம் என்பது ஏற்கப்பட்டுள்ளது. ஆயினும், இக்கட்டுரையாசிரியரின் கருத்திற்கு இணங்கவும், பன்முக உரையாடலை வளர்த்தெடுக்கும் நோக்கிலும், இத்தொடரில் ‘இலங்கைவாழ் இந்தியத்தமிழர்’ எனும் பதம் உபயோகிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காகக் குடிபெயர்ந்து வந்த தென்னிந்தியத் தமிழர்கள் பல சவால்களை எதிர்நோக்கினர். இலங்கையில் அவர்களது சமூகம் மற்றும் தேசிய அரசியலில் அவர்களின் பங்களிப்பு ஒரு கட்டத்தில் எழுச்சி நிலையில் இருந்துள்ளது. பின்னர் அவர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. அடுத்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய கல்வி வாய்ப்புகள் அவர்களை வளர்ச்சி பெற்றுவரும் ஒரு சமூகமாக மாற்றமடையச் செய்துள்ளது. இந்த மூன்று மாற்றங்களையும்  கால அடிப்படையில் எடுத்து நோக்குவது இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.

சமூக மாற்றம் என்பது ஒரு சமூகம் இருக்கும் அமைப்பில் இருந்து விலகுதல் என்று சமூகவியல் அறிஞர் ‘Judson R Landis’ (1989) கூறுகின்றனர். ஒரு சமூகத்தில் காணப்படும் மரபுசார் ஒழுக்கங்களில் இருந்து விலகி தற்போதைய நவீன ஒழுக்கத்தில் காணப்படும் வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு அத்தகைய மாற்றங்கள் தாம் சுதாகரித்துக்கொண்ட புதிய காலத்திற்கு ஏற்றவாறானது என்று அடையாளப்படுத்துவதும், சமூக மாற்றத்தின் ஓர் அங்கமாக இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்தில் சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு தாம் வாழ்கின்ற சூழலில் ஏற்பட்டுவரும்  அரசியல், தலைமைத்துவம், தொழில், வருமானம் மற்றும் சமூகங்களுடனான ஊடாட்டங்கள், காலநிலை, போக்குவரத்து, கல்வி போன்ற இன்னோரன்ன விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது வரலாறு புகட்டும் உண்மையாகும்.

இயற்கை அனர்த்தங்கள், போர், இன அழிப்பு, மதமாற்றம், சூறையாடல், பிரிவுகள் போன்ற காரணங்களால் ஓர் இனம் இல்லாதொழிக்கப்பட்டதாக வரலாற்றில் அறிய முடியவில்லை. ஜேர்மனியில் வாழ்ந்த யூத இனத்தவர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட ஈவிரக்கமற்ற கொடுமையை உலகம் இலகுவாக மறந்துவிடாது. யூத இனத்தவர்களின் அறிவியல் சாதனைகள் இன்றுவரை உலகின் உச்சாணியைத் தொட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை உலக வரலாறு சான்றுகளுடன் எடுத்துரைத்துக்கொண்டே உள்ளது. இதற்குப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். சுருக்கமாகக் கூறின் சமூகத்தில் வீழ்ச்சிநிலை என்ற சொற்பதத்தை எவரும் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. சமூகம் பல வழிகளில் முன்னேற்றம் காண்பதுதான் இயல்பானதாகும். ஒரு சமூகம் தாம் முன்னேற்றம் அடைகின்றதை மற்றுமொரு சமூத்தில் காணப்படும் முன்னேற்றங்களுடன் ஒப்பிட முடியாது. மானிடப் புவியியலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்த ‘Griffith Taylor’ (1880–1963) எனும் அவுஸ்திரேலியாவின் புவியியல் அறிஞர் தமது ‘நின்று போ நியதிவாதத்தில்’ சுற்றுச்சூழல் என்பது மனிதச் செயற்பாடுகளை வடிவமைக்கும் ஓர் அடிப்படைக் காரணியாகும்; இது குடியேற்றம், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை முறைகளைப் பாதிக்கிறது என்பதை எடுத்துரைத்தார். ஆனால் மனிதக் கண்டுபிடிப்புகளில் சில சுற்றுச்சூழல் வரம்புகளை மாற்றியமைக்கவோ அல்லது கடக்கவோ முடியும் என்பதையும் அவர் அங்கீகரித்தார்.

மனிதனின் முயற்சி சிறிது காலம் பின்னடைந்து காணப்படலாம். இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்குக் குடிபெயர்ந்து, பெருந்தோட்டங்களில் தொழில்புரிய வருகை தந்த தென்னிந்தியத் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கமுடிகின்றது. இம்மக்கள் இலங்கைக்கு வருகை தந்த வரலாற்று நிகழ்வுகள் கணிசமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன (சோ. சந்திரசேகரம், 1994; எல். சாந்திகுமார், 1985; சடகோபன், I.H. Venden Driesen, 1954; K. Jayawardena, 1963; R. Jayaraman, 1964; S.U. Kodikara, 1965; B. Bastiampillai, 1968; Merby Heidren, 1972; Wesumperuma, 1986 etc.). இந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெறுமதிவாய்ந்த விவரங்கள் யாவும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் 1920களின் பின்னர் இலங்கையின் அரசியல், சமூகப் பரப்புகளில் ஏற்பட்ட அசைவியக்கங்களில் ஏற்பட்ட மாற்றம் எவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த இந்தியத்தமிழ் மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை பின்வரும் மூன்று காலவரையறையின் படி எடுத்து நோக்கலாம். 

1920 – 1948: எழுச்சிபெற்ற இந்தியத்தமிழர்கள்

1948 – 1990: இருள் சூழ்ந்த சமூகமாக வாழ்ந்த இந்தியத்தமிழர்கள்

1990 – 2020: மீண்டும் எழுச்சி பெற்றுவரும் சமூகம்

1920 – 1948: எழுச்சிபெற்ற இந்தியத்தமிழர்கள்

இலங்கையில் பெருந்தோட்டச் செய்கைக்கெனக் குடிபெயர்ந்து வந்தவர்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் இங்கேயே குடியிருக்கும் நிர்ப்பந்தம் உருவானது. ஆரம்பத்தில் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழில் என்பது அடர்ந்த காடுகளை அழிக்கும் கடுமையான வேலைகளாகவும், போக்குவரத்துப் பாதைகள் அமைத்தல், வீடுகளை நிர்மாணித்தல் போன்றவையாகவுமே காணப்பட்டன. இதன்போது கணிசமான தொழிலாளர்கள் காட்டு மிருகங்களின் தாக்குதலுக்குப் பலியாகினர். பாம்புகளின் தீண்டுதலால் ஏற்படும் இறப்புகள் சாதாரணமானதாகக் காணப்பட்டன. மலேரியா மற்றும் கொலரா போன்ற நோய்கள் இடம்பெயர்ந்து வந்த தென்னிந்தியத் தமிழர்களின் வாழ்வை சவால்மிக்கதாக மாற்றியமைத்தன. கணிசமானோர் வருகைதந்த குறுகிய காலத்தில் திரும்பிச் சென்றுவிட்டனர். இவ்வாறு திரும்பியவர்கள் பெரும்பாலும் தனியாக இடம்பெயர்ந்து வந்த ஆண் தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடிபெயர்ந்து வந்தவர்களில் ஒரு பகுதியினர் வியாபாரத்திலும் ஈடுபட்டனர். பெரும்பாலும் தெற்கில் உள்ள நகரங்களில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களாகவும், ஆடை அணிகலன் தயாரிப்பவர்களாகவும், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளில் முன்னிலையில் இருந்தவர்களாகவும் காணப்பட்டனர். இவர்களில் சுமார் 15 வீதமானவர்களே அடிக்கடி தமது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று வருபவர்களாக இருந்தனர். 1931 இன் மக்கள்தொகைக் கணிப்பீட்டில் இங்கு குடிபெயர்ந்து வந்த இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கையானது சுமார் 818,500 ஆகவும், இலங்கையின் மக்கள் தொகையில் 15.2 வீதத்தினைக் கொண்ட இரண்டாவது பெரிய இனவாரியான தொகையாகவும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் (S. Nadesan, 1993).

இக்காலப்பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம் என்னவெனில், குடிபெயர்ந்து வந்தவர்களை அடிமைமுறையில் ஒழுங்குபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த ‘துண்டு முறை’ இல்லாது ஒழிக்கப்பட்டதாகும். அத்துடன், வருகை தந்து தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டது (1927). எல்லாவற்றிலும் மேலாக, 1930 இல் கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட போது, இந்நாட்டில் நிரந்தரக் குடிகளாக இருந்த சிங்களவர்களுக்கும், வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட்ட அந்தஸ்து, குடிபெயர்ந்து வந்த இந்தியத் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனூடாக இலங்கையின் அரசியலை நிர்ணயிக்கும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம், இம்மக்களிடம் இந்நாட்டின் மீதான பற்றுதலை உருவாக்கியதுடன், ஜனநாயக மரபுகளின் தாத்பரியத்தை விளக்கிக்கொள்ளவும், இலங்கையின் அரசியலில் பங்குகொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கவும் வழிவகுத்தது. மேலும், ஜனநாயக உரிமைகளை ஏனைய மக்களைப் போல தாமும் அனுபவிக்கலாம் என்ற உயர்ந்த மனப்பான்மையையும் மக்களிடையே வளர்த்தது. மேற்குறிப்பிட்டது போல, வாக்குரிமை பெருந்தோட்டங்களில் குடியேறியவர்களுக்கு மட்டுமன்றி, ஏற்கனவே கொழும்புத் துறைமுகம், புகையிரதச் சேவை போன்ற துறைகளில் தொழில்புரிந்த இந்தியர்களுக்கும் கிடைக்கப்பெற்றது.

இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் இலங்கை இந்திய காங்கிரஸ் (CIC), இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் (1940) ஆகியவை குறிப்பிடத்தக்கவை; இவை பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆக மாறின. இதனுடன், இலங்கை இந்தியர் வர்த்தக சம்மேளனம், இலங்கை நாட்டுக்கோட்டை செட்டியார் சங்கம், தோட்டச் சேவையாளர்கள் சங்கம் (1920) மற்றும் இலங்கைத் தலைமைக் கங்காணிமார்களின் சங்கம் (1921) (இந்தச் சங்கத்தின் தலைமைக் காரியாலயமாகச் செயற்பட்ட கட்டடம், அட்டன் நகரின் நுழைவாயிலான மல்லிகைப்பு நகரில், ரயில்வே பாதையின் மேற்புறத்தில் பலகையினால் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் அதே நிலையில் காணப்படும் வீடாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்) ஆகிய அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. மேலும், கோ. நடேச ஐயரின் தொழிற்சங்கத் தலைமைத்துவம், மகாத்மா காந்தியின் வருகை (1927), ஜவஹர்லால் நேருவின் வருகை ஆகியவை இலங்கையில் இருந்த இந்தியத் தமிழர்களின் கரங்களை மேலும் பலப்படுத்தின.

61 பேர் அங்கம் வகித்த டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரச சபையில் (The State Council), இந்தியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரி. சுந்தரம், அப்போது உருவாக்கப்பட்டிருந்த அட்டன் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார். மேலும், அவர் தொழில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக நியமனம் பெற்றிருந்தமையும் மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. திரு. பெரிய சுந்தரம் அவர்கள் பிற்காலத்தில், சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்ட செனட் சபையின் உதவி ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோல், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையில், தொகுதிவாரியாக தெரிவு செய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் இந்தியத் தமிழர்களாக இருந்தமை, இம்மக்களின் மற்றுமொரு எழுச்சி நிலையாகவே கருதப்பட வேண்டும். இக்காலப்பகுதியில், இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்குச் சவால்விடும் வகையில், இலங்கையில் புதியதொரு சமூகமாக உருவெடுத்த இந்தியத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வளர்ச்சியடைந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவையாவும் இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதன் மறுபக்க விளைவாகவே கருதப்பட வேண்டும். அப்போதைய மக்கள் பிரதிநிதிகள் சபையில், பெருந்தோட்டப் பகுதிகளில் அட்டன், கொட்டகலை, நுவரெலியா, பதுளை, அளுத்நுவர, நாவலப்பிட்டிய, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகியவை தேர்தல் தொகுதிகளாக இருந்தன. இவற்றில் முறையே பெரி. சுந்தரம், கே. குமாரவேல், எஸ். தொண்டமான், எஸ்.வி. சுப்பையா, டி. ராமானுஜம், ஆர். ராஜலிங்கம், ஜி.ஆர். மேத்தா, சி.வி. வேலுப்பிள்ளை ஆகியோர் தெரிவானார்கள். இப்பிரதிநிதிகள் கற்றறிந்தவர்களாகவும், ஆங்கிலத்தில் பேசும் வல்லமை பெற்றவர்களாகவும், இலங்கை–இந்திய அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், தேசிய நலனில் அக்கறை மிக்கவர்களாகவும் காணப்பட்டமையால், இந்தியர்களின் அரசியல் பிரவேசம் என்பது பலமான அடித்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக உணரப்பட்டது.

இக்காலப்பகுதியிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கென அடிப்படை வேதனமும் நிர்ணயிக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டு இந்திய அரசின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்திருந்த ஆர். பத்மநாதனின் ஆலோசனையின் பேரிலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனும் வகைப்பாடுகளின் அடிப்படையிலும், தேயிலை, ரப்பர் பயிர்களின் புவியியல் உயர வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டும், குறைந்தபட்ச நாளாந்த வேதனம் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கையில் பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக 1820களிலேயே தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டிருந்த போதிலும், அன்றிலிருந்து சுமார் நூற்றாண்டுக்கும் மேலாக, 1927 வரையில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனம் நிர்ணயிக்கப்படாமலேயே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும், இந்த எழுச்சி நீடிக்கவில்லை. அக்காலத்தில் இலங்கைவாழ் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் சமூக எழுச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை – இந்தியக் குடியுரிமைச் சட்டமும் இலங்கை – பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டமும் (1949) கொண்டுவரப்பட்டு, அவர்களின் அரசியல் உரிமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதன் விளைவாக, அரசியலிலும் வர்த்தகத் துறையிலும் முன்னணியில் இருந்த பலர் தமது முயற்சிகளைக் கைவிட்டு நாடு திரும்பினர். குடியுரிமை பறிக்கப்பட்டு, அரசியலிலிருந்தும் தமது சமூக அந்தஸ்திலிருந்தும் ஒதுங்கி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியை, இருள் சூழ்ந்த காலமாகவே அவதானிக்க முடிகின்றது.

1948 – 1990: இருள் சூழ்ந்த சமூகமாக வாழ்ந்த இந்தியத்தமிழர்கள்

இலங்கைவாழ் இந்தியத்தமிழர்கள் பின்வரும் மூன்று நிலைகளில், 1949 ஆம் ஆண்டு முதல் சுமார் 1990கள் வரை, இருள் சூழ்ந்த காலப்பகுதியில் வாழ்ந்தனர் என்று வரையறை செய்யலாம். 

  1. 1949 ஆம் ஆண்டில் இவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு இந்நாட்டின் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை.
  2. 1964 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இவர்களிடம் காணப்பட்ட தடுமாற்றமான நிலமை.
  3. வடக்கு – கிழக்கு யுத்தத்தின் காரணமாக ‘தமிழர்’ என்ற காரணத்திற்காக சிங்கள மக்களின் தாக்குதலுக்கும் சந்தேகத்திற்கும் உட்பட்ட மக்களாக வாழத் தள்ளப்பட்டமை.

வாக்குரிமையை மிக உயர்ந்த அளவில் பயன்படுத்தி, தமக்கான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கியிருந்த இந்தியத் தமிழர்களின் அரசியல் பயணத்தை ஒரே இரவில் நிர்மூலமாக்கிய இலங்கை அரசின் தீர்மானத்தை, எந்தவொரு ஜனநாயக அமைப்பும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே கருதும். எனினும், இவர்களின் தொழில்களுக்குப் பாதுகாவலனாக உருவாக்கப்பட்டிருந்த தொழிற்சங்கம், இம்மக்களின் வாழ்விற்குப் பக்கபலமாக இருந்து வந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஒருபுறம், மீண்டும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள, காந்தியின் வழியில் அகிம்சைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

ஆனால், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் பயனற்றுப் போய்விட்டன. ஆட்சியில் பங்குகொள்வதைத் தவிர்த்திருந்த போதிலும், இம்மக்களின் உழைப்பின் மீது சார்ந்திருந்த பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு எவ்விதத்திலும் பாதகமான சூழ்நிலை ஏற்படவில்லை. உதாரணமாக, 1950 இல் 129 மில்லியன் கிலோகிராமாக உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு, 1955 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் முறையே 142 மற்றும் 164 மில்லியன் கிலோகிராமாக அதிகரித்தது. இதுபோலவே, ரப்பர் நிலங்களின் பரப்பளவும் 1950 இல் இருந்த 120,000 ஹெக்டேயர்களிலிருந்து, 1960களில் 130,000 ஹெக்டேயர்களாக அதிகரித்தன.

இந்திய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் அடக்குமுறைகளுக்கும் அமைதியின்மைக்கும் உள்ளாக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களின் நாளாந்த வேலைகளிலும் உற்பத்தி அளவிலும் வீழ்ச்சி ஏற்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை மேற்காட்டிய புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஒருபுறத்தில், தமக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இன்றி தனிமைப்படுத்தப்பட்ட இம்மக்களுக்கு, 1964 ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஒரு தீர்வு காண முயற்சிக்கப்பட்டது. இதன்படி, இந்திய அரசாங்கம் சுமார் 418,000 பேருக்கு இந்தியக்க் குடியுரிமை வழங்கி, அவர்களைத் தாயகத்திற்கு திருப்பி அழைத்துக்கொண்டது. அதேவேளை, இலங்கை அரசும் சுமார் 350,000 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்கியது. இவ்விரு நடவடிக்கைகளின் போது, மேலும் சுமார் 175,000 பேர் நாடற்றவர்களாக உருவாக்கப்பட்டனர். எனினும், இவர்கள் அனைவருக்கும் 2003 ஆம் ஆண்டில் இலங்கைப் பிரஜைகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு, இப்பிரச்சினைக்கு இறுதியாகத் தீர்வு காணப்பட்டது.

1964 ஆண்டு முதல் 1985 வரையிலான காலப்பகுதியில், தாயகம் திரும்புவோர் மற்றும் இலங்கைப் பிரஜைகள் என இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட இந்தியத் தமிழர்கள், பல்வேறு வகைகளில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களாகவே வாழ்ந்து வந்தனர். உதாரணமாக, 1972–1975 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் போது, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்ட போதும், பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை இல்லாத காரணத்தை முன்வைத்து, அவர்களுக்கு நிலங்களோ அல்லது வீட்டுரிமையோ வழங்கப்படவில்லை. இதுமட்டுமன்றி, மகாவலி அபிவிருத்தித் திட்டம், தேசிய மாற்றுப் பயிர்ச்செய்கை அதிகாரசபை, கூட்டுறவு இயக்கங்கள், பல்கலைக்கழக அனுமதிகள், வெளிநாடுகளில் வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள், கடவுச்சீட்டுகள், மேலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது (1974–1976) வழங்கப்பட்ட மானியங்கள் ஆகிய பல்வேறு வாய்ப்புகளும் இம்மக்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. இதன் விளைவாக, அவர்கள் மிக மோசமான சமூக வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படியான இடர்களுக்கிடையே, 1983 இல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்லது இனப்படுகொலை, அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலை ஆகிய காரணங்களால், இம்மக்கள் ஓர் இருள் சூழ்ந்த உலகிலேயே வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

இக்காலத்தில், போக்குவரத்து அல்லது வேறு தொடர்பாடல்களின் போதும், தொழில் செய்யவும், பிற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டது. தமிழர்கள் யாவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து, அதன் பிரதியைத் தம்முடன் எடுத்துச்செல்ல வேண்டியது அவசியமாக இருந்தது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமானதாக ஆக்கப்பட்டது. அக்காலத்தில் மலையகத்தில் வாழ்ந்த பெரும்பாலான தமிழர்களுக்கு, மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலானோர் தாம் வாழும் தோட்டங்களை விட்டு வேறு இடங்களுக்குச் சுதந்திரமாகப் பயணம் செய்ய முடியாத சூழ்நிலையும் உருவாகியது. சுருக்கமாக, வடக்கு – கிழக்கு யுத்தத்தின் ஆரம்பம் முதல் அதன் முடிவு வரை, கடந்த மூன்று தசாப்தகாலமாக, மிகக் குறைந்த அளவிலான அசைவியக்கத்துடனேயே, பெரும்பாலான இந்தியத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.

1990 – 2020: மீண்டும் எழுச்சி பெற்றுவரும் சமூகம்

தோட்ட நிர்வாகத்தின் கீழ் நடாத்தப்பட்ட ஆரம்ப வகுப்புகளும், பெரும்பாலும் ஒரே ஆசிரியரைக் கொண்டு இயங்கிய தோட்டப் பாடசாலைகளும், 1980–1989 காலப்பகுதியில் அரசுப் பாடசாலைகளாகப் பொறுப்பேற்கப்பட்டன. பொறுப்பேற்கப்பட்ட 918 பாடசாலைகளில் சுமார் 400 பாடசாலைகளுக்கு சுவீடன் நாட்டின் அபிவிருத்தி நிதி (SIDA) மூலம் நிதி பெறப்பட்டதுடன், புதிய கட்டடங்களும் நிர்மாணிக்கப்பட்டன. ஏறக்குறைய 1,500 வரையிலான பயிற்றப்பட்ட ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டபோது, மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தோட்டப் பாடசாலைகளின் ஆரம்பக்கல்வி வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டது. இதுவரையிலும், பிள்ளைகளின் கல்வியில் போதுமான கவனத்தினைச் செலுத்தாத பெற்றோர்களிடையே ‘SIDA’ திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சில தோட்டங்களில், பொருத்தமான வயதில் பாடசாலையில் சேரத் தவறிய இளம் பிள்ளைகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாமையால் அனுமதி பெற முடியாத பிள்ளைகளும் பாடசாலைக் கல்விக்கு அனுமதிக்கப்பட்டனர். இளம் வயதில் பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கண்டிக்கப்பட்டனர். இதன் மூலம் பெற்றோர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. இத்தகைய விழிப்புணர்வு ஆரம்பக் கல்வியில் மட்டுமன்றி, இடைநிலைக் கல்வியிலும், பின்னர் உயர் கல்வியிலும் கணிசமான வளர்ச்சியை ஏற்படுத்தியது.

பாடசாலைக் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் 2000 ஆம் ஆண்டளவில் விழிப்புள்ள இளைஞர்களை உருவாக்கியது. இது பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வருடாந்தம் சுமார் 20,000 மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும், இவர்களில் ஏறக்குறைய 5,000 பேர் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவதற்கும் காரணமாகியது. இப்போது, 2020களில், வருடாந்தம் சுமார் 600 பேர் வரை தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுவதும், இது பெரும் எழுச்சி என்பதையே குறிக்கின்றது.

பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றதன் மற்றுமொரு விளைவாக, பாடசாலைகளின் தரங்கள் முன்னேற்றம் கண்டன. தற்போது, 1AB தரமுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி, மலையகத்தில் தேசியமயமாக்கப்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 3,000 ஆக இருந்த நிலையில், இப்போது சுமார் 18,000 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் சுமார் 90% மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதையொட்டி, கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், கலாசார மண்டபங்கள், வெளிவாரியான பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் கல்வி நிலையங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் தோற்றமடைந்தன. 

இதுமட்டுமன்றி, உயர்கல்வி நிலையங்களிலும் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை சற்றே விரிவடையலாயின. இன்று காணப்படும் 18 தேசிய பல்கலைக்கழகங்களில், 25 பேர் வரையிலானோர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று, அரசாங்க நிர்வாகத்துறைகளிலும், கல்வி நிர்வாகத்துறைகளிலும் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னர் கல்விகற்று வெளியேறியவர்களில் கணிசமானோர் வர்த்தகத் துறையிலும் ஈடுபட்டுள்ளனர். இன்று, கொழும்பு நகரில் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, பத்திரிக்கைத்துறை, தனியார் வானொலிகள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், வைத்தியசாலைகள், நடை வியாபாரம், இயந்திரம் பழுதுபார்த்தல், பைகளில் அடைக்கும் வேலைகள் போன்ற பல்வேறு துறைகளில் இம்மக்கள் தொழில்புரிந்து வருவதைக் காணலாம்.

குறிப்பாக, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு நகரங்களில், புதிதாக வளர்ச்சியடைந்த மலையகப் பாடசாலைகளில் இருந்து கல்விகற்று வெளியேறியவர்களில் பலர் வெற்றிகரமான வர்த்தக ஸ்தாபனங்களை நடாத்தி வருகின்றனர். இவர்களும், ஏற்கனவே இந்தியாவில் இருந்து வந்து பரம்பரையாக வியாபாரம் செய்பவர்களும், சரிசமமாகச் செயற்படக்கூடியவர்களாக இருப்பதையும் கவனிக்கலாம். இருப்பினும், பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கும், புதிதாகத் தோட்டங்களில் இருந்து புறப்பட்டு வர்த்தகர்களானவர்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இன்றுவரை கட்டியெழுப்பப்படவில்லை.

முடிவுரை

இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களின் வரலாறு எப்போதுமே சோகமயமானதாக அமைந்திருக்கவில்லை. இவர்களின் வருகை, ஆரம்பகால வாழ்வு பற்றிய ஆழமான பார்வைக்குப் போதுமானளவிலான தகவல்கள் இல்லாத போதும், 1930 டொனமூர் சீர்திருத்தத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றம், இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பல பரிமாணங்களை எடுத்துக்காட்டுகின்றது. 1930 முதல் 1948 வரையிலான காலப்பகுதி இம்மக்கள் எழுச்சி பெற்றிருந்த காலமாக அடையாளப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. எனினும் 1948 முதல் 2009 வரையான சுமார் அரை நூற்றாண்டு வாழ்க்கை மிகவும் சவால் மிகுந்ததாக இருந்துள்ளதை அவதானிக்கலாம். இருப்பினும் கல்வி இவர்களின் கண்களைத் திறந்துவிட்டது. அதனால், புதிய மாற்றங்களுக்கு வழிபிறந்தது. இங்கு எடுத்துக்கூறப்பட்டவை பெரிதும் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்ட பார்வையாகும். இதன் உண்மைத்தன்மை பற்றி ஆழமான ஆய்வினை மேற்கொள்ளல் அவசியமானதாகும்.

முதன்மை மூலங்கள்  

  1. Bastiyampillai, B. (1968). The administration of Sir Henry Ward, Governor of Ceylon 1855–1860. Ceylon Historical Journal, II. Dehiwala.
  2. Jayaraman, R. (1964). Caste and kinship in Ceylon tea estates. The Economic Weekly, 16(8).
  3. Kodikara, S. U. (1965). Indo-Ceylon relations since independence. Colombo.
  4. Marby, H. (1972). Tea in Ceylon and attempt at regional and temporal differentiation of tea growing areas in Ceylon (Vol. 1). Franz Steiner Verlag, GmbH.
  5. Nadesan, S. (1993). History of the upcountry Tamil people. A. Nandalala Publication.
  6. Shanmugartnam, N. (1997). Privatization of tea plantations: The challenges of reforming production relations in Sri Lanka—An institutional historical perspective. SSA, Colombo.
  7. Sinnathamby, M. (1993). The state sector plantations: Recent trends in productivity, employment, and earnings of workers. In Plantation in transition: The changing prospects of Sri Lanka’s tea economy (ARTEP Working Paper). ILO, New Delhi.
  8. Venden Driesen, I. H. (1954). Coffee cultivation in Ceylon. The Ceylon Historical Journal, 3(1).
  9. Wesumperuma, D. (1986). Indian immigrant plantation workers in Sri Lanka. Vidyalankara Press, Kelaniya.



About the Author

ஏ. எஸ். சந்திரபோஸ்

மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழரான ஏ.எஸ். சந்திரபோஸ், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் துறையில் முப்பது வருடங்களாகக் கற்பித்தல் துறையில் கடமையாற்றிய பின்பு, 2022 ஆண்டு முதல் ஓய்வு நிலையில் இருக்கும் பேராசிரியராவார். ஆரம்பக்கல்வியை தோட்டப் பாடசாலையிலும், இரண்டாம் நிலைக்கல்வியை ஹட்டன் ஹலண்ட்ஸ் கல்லூரியிலும் பெற்றுக்கொண்ட இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் B.A (Hons) மற்றும் M.A கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்தார். இந்திய - இலங்கை கலாசார திட்டத்தின்கீழ் புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்று புதுடில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதேசத் திட்டமிடல் துறையில் M.Phil மற்றும் Ph.D ஆகிய கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்து கொண்டார். USA - Wisconsin, Japan, Sweden, Geneva, German, Malaysia, Nepal, India போன்ற நாடுகளில் இடம்பெற்ற சர்வதேசக் கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பெரும்பாலானவை பெருந்தோட்ட மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான கருப்பொருளைக் கொண்டதாகவே காணப்படுகின்றன.

ஏ.எஸ். சந்திரபோஸ், ‘சமூக நல்லிணக்கம்’, ‘பட்டப்பின்படிப்பிற்கான ஆய்வு முறைகள்’ போன்றவற்றையும் ‘New York, Columbia University, Mailman School’ இன் அனுசரனையுடன் ‘Care and Protection of Children’ போன்ற புதிய கற்கைநெறிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஜப்பானின் ‘Kyoto’ மற்றும் ‘Utsunomiya’ பல்கலைக்கழகங்களின் அழைப்பினை ஏற்று பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இலங்கையின் பெருந்தோட்டங்கள் தொடர்பாக இவர் தொடர் விரிவுரைகளை நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்