
வட இலங்கையின் சில பெருங்கற் பண்பாட்டு மையங்கள். Image Source: Dr S. Seneviratne, 1984.
1. காரைநகர் 2. ஆனைக்கோட்டை 3. கந்தரோடை. 4. மாந்தை, 5. தெக்கம் 6. பொம்பரிப்பு 7. மாமடுவ 8. அலுத்பொம்புவ 9. கரம்பன்குளம் 10. தெமன்ன-கொடல்ல 11. குருகல்ஹின்ன 12. வடிகவேவா 13. கோக்கபே 14. திவுல்வேவா 15. ரொபீவா 16. மச்சகம 17. அநுராதபுர கெடிகே 18. கதிரவெளி 19. இபன்கட்டுவ
I
ஆதி இரும்புக்காலமும் பெருங்கற்பண்பாடும்
இக்கால விஞ்ஞான அறிவியல் ரீதியான காலக்கணிப்புகளின்படி தமிழ்நாட்டில் சிவகளை போன்ற மையங்களில் கி.மு. 3400 ஆம் ஆண்டளவில் இரும்பின் உபயோகம் ஆரம்பமாகியுள்ளது (ராஜன், கா. 2025). இலங்கையிலும் இரும்பின் உபயோகம் கி.மு. 3380 ஆம் ஆண்டுக்காலத்தில் ஆரம்பமாகியிருக்கிறதாக அறியப்படுகிறது (Deraniyagala, S.U. 2013: 511). இக்காலம் முதல் கல்லாயுதங்களுக்குப் பதிலாக இரும்பினாலான ஆயுதங்களையும், கருவிகளையும் மக்கள் தமது அன்றாட வாழ்வில் பெருமளவு பயன்படுத்தினார்களாகையால் இக்காலம் இரும்புக்காலம் எனப் பெயர் பெற்றது. இக்காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகையால் இதை வரலாற்று உதயகாலம் என்றும் அழைப்பார்கள்.
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஆதி இரும்புக்காலம் பெருங்கற்காலப் பண்பாட்டுக்காலம் எனச் சில ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இப்பண்பாட்டைக் கடைப்பிடித்த ஆதி இரும்புக்கால மக்கள் இறந்தோரை அடக்கம் செய்ய ஈமச் சின்னங்களுக்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தியமை ஆகும். பெருங்கற்களினாலான இச் சமாதிகளுடன் மற்றும் பல வாழ்வியல் அம்சங்கள் பின்னிப்பிணைந்து இருப்பதனால் இது பெருங்கற் பண்பாடு அல்லது பெருங்கற் கலாசாரம் எனப் பெயர் பெற்றது.
இரும்புக்காலம் (Iron Age) என்ற சொற்பதம் உலகம் முழுவதிலும் இரும்பு உபயோகத்திற்கு வந்த ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடுகிறது. இது உபயோகத்திற்கு வந்த எல்லா நாடுகளிலும் பெருங்கற்பண்பாடு நடைமுறையில் இருந்தது எனக் கூற முடியாது. எனவே, பெருங்கற்காலம் என்ற சொற்பதம் இரும்புக்காலத்தின் மாற்றுப்பதமாக இருக்க முடியாது. இது பற்றி பிரித்தானிய தொல்லியலாளர் ஸேர் மோட்டிமர் வீலர் கூறியது இங்கே நினைவுகூரத் தக்கது: “The Megalithic is one of several cultural traits during the Iron Age” (இரும்புக் காலத்தைய பல கலாசார முன்னெடுப்புகளில் பெருங்கற் பண்பாடும் ஒன்றாகும்). தென்னிந்திய – இலங்கையில் காணப்படும் இரும்புக்காலத்தைய பெருங்கற் புதையல்களில் இரும்பு காணப்பட்டாலும், பெருங்கற்களற்ற இரும்புக்கால ஈமப் புதையல்கள் இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகின்றன. இன்னும், இரும்பு இல்லாத வெண்கலக்கால பெருங்கற்புதையல்களும் சில இடங்களில் காணப்படுகின்றன. மேலும், ஈமப்புதையலற்ற விவசாய, மற்றும் சமுதாய மாற்றப் பண்பாட்டுக் கூட்டுகள் இரும்புக்காலத்தில் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன.
தமிழகத்தின் இரும்புக்காலம் நான்கு முக்கியமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. அவையாவன: பெருங்கற்படைச் சமாதிகளில் அல்லது ஈமத்தாழிகளில் நீத்தாரை அடக்கம் செய்தல், இரும்பின் உபயோகம், கறுப்புச் – சிவப்பு மட்பாண்ட உபயோகம், நீர்ப்பாசன வேளாண்மை ஆகியனவாகும். இவை நான்கும் ஒரே சமயத்தில் ஒரு பண்பாட்டுப் பொதியாக (Cultural Package) ஆரம்பித்தனவாகத் தெரியவில்லை. அவற்றின் தோற்றமும் வருகையும் வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆரம்பமான போதிலும் பெரும்பாலான எல்லா மையங்களிலும் ஒரு காலப்பகுதியில் அவை ஒரு பண்பாட்டுத் திரட்டாக நிகழ்ந்திருக்கின்றன.

கதிரியக்கக் காலக்கணிப்புகள் காட்டும் தமிழ்நாட்டின் ஆதி இரும்புக்கால மையங்கள். நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
பெருங்கற் பண்பாடு
இறந்தவர்களை அடக்கஞ் செய்வதற்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்தமையால் இவ்வழக்கம் பெருங்கற் பண்பாடு (Megalithic Culture) எனப் பெயர்பெற்றது. துருக்கியில் நெவாலி கோரி, கொபெக்லிரேபி (Nevali Çori, Göbeklitepe) ஆகிய இடங்களில் காணப்படும் கி.மு. 9,000 – 8400 ஆண்டுகளுக்குரிய ஈமச் சின்னங்களற்ற, வழிபாட்டிற்குரிய கற்காலப் பெருங்கல் நடுகற்கள் மற்றும் கோயில்கள் இப்பண்பாட்டு வகையைச் சேர்ந்தவையல்ல. ‘பெருங்கற் பண்பாடு’ என்ற பதம் மக்களின் வதிவிடங்களுக்கு அப்பால், இடுகாடுகளில் ஈமப் புதையலோடு சம்பந்தப்பட்ட கற்கட்டடங்களை உள்ளடக்கிய பண்பாட்டுத் தொகுதியையே குறிப்பிடுகிறது.
ஆரம்பமும் பரவலும்
இவ்வழக்கம் மத்தியதரை – மேற்கு ஆசிய நாடுகளில் கி.மு. 6,000 – 5,000 ஆண்டுகளில் ஆரம்பமாகி உலகின் பல இடங்களுக்கும் பரவியிருக்கிறது. காலத்திலும் அகன்ற பரப்பிலும் உலகின் பல இடங்களுக்கும் பரவிய பண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். மத்தியதரை நாடுகளிலிருந்து மேற்கு ஐரோப்பாவிற்கும், கிரேக்கத்தினூடாக தெற்கு ஐரோப்பாவிற்கும், உலோகங்களைத் தேடிச்சென்ற வர்த்தகர்களால் இது பரப்பப்பட்டிருக்கிறது. அதன் பரவல் குறுக்கும் நெடுக்குமாக ஐரோப்பிய நாடுகளில் பரவியிருக்கிறது. அந்நாடுகளில் இவ்வழக்கம் ஆரம்பமான காலம் வெண்கலக் காலமாகும். அக்காலத்தில் அந்த நாடுகளில் இரும்பு அறிமுகமாகவில்லை.
இந்தியாவில் இப்பண்பாட்டின் பரவலைப் பற்றி பலவகையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழையுலக ஆபிரிக்க கற்கைக் கூடத்தில் (SOAS) பேராசிரியராகவிருந்த கிறிஸ்தோபர் வொன் பியூரர் ஹெய்மென்டோவ் (Christopher von Fürer-Haimendorf) “இந்தப் பண்பாட்டை இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து கடல் மார்க்கமாகவோ அல்லது கடற்கரை வழியாகவோ இங்கே புலம்பெயர்ந்து வந்த திராவிட மொழிகளைப் பேசும் மக்களாவர்” எனக் கூறிச் சென்றிருக்கிறார். இச் சின்னங்களைத் தமிழகத்தில் அமைத்தோர் காலத்தில் இரும்பு பாவனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்கோ பார்ப்போலா அவரது ‘The South Indian Megaliths’ என்ற நூலில் இப்பண்பாட்டை ஆரியர்களின் விருத்தியாஸ் (Vratyas) என்றொரு குழுவினருடன் தொடர்புபடுத்துகிறார் (Parpola, A. 1973). இக்கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாமைக்கு இரு காரணங்கள் உள்ளன. நவீன காலக்கணிப்புகள் இப்பண்பாட்டின் ஆரம்ப காலத்தை கி.மு. 1900 – 1500 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இக்காலப்பகுதியில் இந்தோ ஆரியர்கள் தென் ஆசிய மண்ணில் அடியெடுத்து வைக்கவில்லை. இரண்டாவது, வட இந்தியாவில் ஒரு சில மையங்களில் மட்டுமே இப்பண்பாடு காணப்படுகிறது. அது ஆதியில் திராவிட மக்கள் வாழ்ந்த இடங்களாக இருக்கலாம். தென்னந்தியாவிலோ இது மிகப்பரவலாக நாடெங்கும் பரந்து காணப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க கோர்ணல் பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் கென்னெத் கென்னடியின் தென்னாசிய பெருங்கற் பண்பாட்டின் ஆய்வு முடிவுகளைப் பதிவு செய்வது முக்கியமாகிறது:
“The focus of this culture lies south of the Vindhyan range, particularly in the watersheds of Godavari and Krishna and along the Eastern and Western Ghats. The island of Sri Lanka is the southernmost extension of this culture. The analysis of the archaeological and the anthropological data from the excavations shows that it was the Neolithic people of Peninsular India, who were associated with the present-day language speakers of the states of Tamil Nadu, Kerala, Andhra and Karnataka who developed this culture” (Kennedy, K.A.R. 1975: 60).
“இப்பண்பாட்டின் குவிமையம் விந்திய மலைக்குத் தெற்கே, முக்கியமாக கோதாவரி – கிருஷ்ணா நதிகளின் ஆற்றுப்படுகை நிலங்களிலும், கிழக்கு – மேற்கு கரையோர மலைத் தொடர்களிலும் அமைந்திருக்கிறது. இந்தப் பண்பாட்டின் தென்திசைப் பரவலின் இறுதி நீட்சி ஸ்ரீலங்கா ஆகும். தொல்லியல் ஆய்வுத் தரவுகளினதும், மானிடவியல் ஆய்வுத் தரவுகளினதும் பகுப்பாய்வு காட்டுவது – இந்தியத் தீபகற்பத்தின் புதிய கற்கால மக்கள், அதாவது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் இன்றைய மொழிகளைப் பேசும் மக்களே இப்பண்பாட்டை உருவாக்கியவர்களாவர்.”
காலக்கணிப்பு
தென்னிந்தியாவில் இப்பண்பாடு ஆரம்பித்த காலம் பற்றி காலத்திற்குக் காலம் வேறுவேறான திகதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கர்நாடகத்தில் பிரம்மகிரியில் அகழாய்வுகளை மேற்கொண்ட சேர் மோட்டிமர் வீலர் இப்பண்பாட்டிற்கு ஒரு தொல்லியல் பின்னணி அமைப்பைக் (Archaeological Setting) கொடுத்திருந்தார். இப்புதையல்களுக்கு கதிரியக்கக் கரிமத் திகதிகள் இல்லாத அக்காலத்தில் இதற்கு கி.மு. 300க்கும் கி.பி 100க்கும் இடைப்பட்ட கால வரையறையைக் கொடுத்திருந்தார் (Wheeler, R.E.M. 1947).
இப்புதையல்களுக்கு முதன்முதலாக கதிரியக்கத் திகதிகளைப் (Radiometric Dates) பெற்றுக்கொண்டபோது இதன் ஆரம்பகாலம் இற்றைக்கு 3200 ஆண்டுகளுக்கு முன்னர் பின்நோக்கிச் சென்றது. வட கர்நாடகத்தில் அகழாய்வுகளை மேற்கொண்ட சுந்தரா இதற்குரிய காலத்தை கி.மு. 1200 ஆகப் பெற்றுக்கொண்டார் (Sundara, A. 1985). பின்னர் இப்பண்பாடு ஆரம்பித்த கர்நாடகத்தின் குமரனகல்லி, தடகனகல்லி ஆகிய மையங்களில் கதிரியக்கத் திகதிகள் கணிக்கப்பட்டபோது இப்பெருங்கல் சின்னங்கள் கி.மு. 1900 – 1500 ஆண்டுகளில் ஆரம்பித்திருப்பதாகவும், அங்கே இரும்பின் உபயோகம் பொ.யு.மு. 1200 – 1000 ஆம் ஆண்டுகளில்தான் நடைமுறைக்கு வந்ததாகவும் அறியப்பட்டது (Moorti, U.S. 1994: 123; Possehl, G. 1994).
பண்பாட்டின் சிறப்பியல்புகளும் தென்னிந்தியப் பரவலும்
இன்றைய கதிரியக்கக்கரிமத் (Radiocarbon) தேதிகள் தரும் காலப்படி இப்பண்பாடு கர்நாடகத்தில் கி.மு. 1900 – 1500 ஆண்டுக்காலத்தில் ஆரம்பித்து தென்னிந்தியாவிற்கும், சில வட இந்திய மையங்களுக்கும் பரவியிருக்கிறது. தென்னிந்தியாவிலிருந்தே இப்பண்பாடு இலங்கைக்குப் பரவியதாகையால், அதன் தென்னிந்தியப் பரவலையும் சிறப்பியல்களையும் பார்ப்பது இன்றியமையாதது.
தமிழகத்தில் பழைய, புதிய கற்காலத்திலிருந்து ஏற்கனவே பழக்கத்திலிருந்து வந்த இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இரும்புக் காலத்திலும் தொடர்ந்தது. ஆனால் சாதாரண மண்குழிப் புதையலுக்குப் பதிலாக பெரிய கற்பலகைகளைப் பயன்படுத்தி வட்ட வடிவம், குத்துக்கல், கற்பதுக்கை, நீள்சதுரக்கல்லறை எனப் பலவகையான கல்லறைகளை உருவாக்குதல் பெருங்கற் பண்பாட்டுக் கூறாக அறியப்படுகிறது. இத்தகைய பெருங்கற்காலச் சின்னங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இதுபோன்ற மற்றொரு ஈமப் புதையல் முறை இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் இட்டுப் புதைப்பதாகும். இப்புதையல்களில் கற்கள் பயன்படுத்தப்பட்டிராத போதிலும் இத்தாழிகள் பெருங்கற் பண்பாட்டிற்கு உரியவை என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் இப்புதையல்களில் காணப்படும் ஈமப்பொருட்களான (Grave Goods) மட்பாண்டங்கள், மணிக்கற்கள், இரும்புப் பொருட்கள் என்பன பெருங்கல் கல்லறைகளில் காணப்படும் அதே பொருட்கள் போன்றே உள்ளன. தமிழகத்தில் பெருங்கற் பண்பாட்டு ஈம நடைமுறைகள் கி.மு. 1200 ஆண்டு முதலாக கி.பி. இரண்டாம் – மூன்றாம் நூற்றாண்டுகள் வரை தொடர்ந்ததாகக் கணிப்பிடப்படுகிறது. பெருங்கற் பண்பாட்டு ஈமப்புதையல் மரபு சில இடங்களில் பிந்திய நூற்றாண்டுகளிலும் தொடர்ந்திருப்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன.
பெருங்கற் பண்பாட்டு ஈமச் சின்னங்கள் பற்றிய ஆய்வில் அக்காலத்தைய மனிதன் வாழ்ந்த குடியிருப்புகள் பற்றிய ஆய்வுகளும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றன. இப்பண்பாட்டின் முக்கிய அம்சங்களாக ஈமச் சின்னங்கள், மக்கள் குடியிருந்த பகுதிகள் மட்டுமன்றி குளங்களும், வயல்களும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இதனால் முன்னைய காலத்தைப் போலன்றி நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்தல் இக்காலத்தில் பரவலாகக் காணப்பட்டது. நீரைத் தேக்கிவைத்து மழை இல்லாத காலத்தில் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குக் குளங்களும் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. கி.மு. 1200 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து நீரில் சிறப்பாக வளரும் நெல் ஒரு பிரதான தானியமாகப் பயிரிடப்பட்டது (சிற்றம்பலம், சி.க. 1999: 90).

தென்னிந்திய – இலங்கை இரும்புக்காலக் குடியிருப்புகள், கறுப்பு – சிவப்பு மட்பாண்டப் பரவல்கள், பெருங்கற் பண்பாட்டு ஈமப் புதையல்கள். Image Source: Allchins B&R.
இவ்வாறு உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி மக்கள் வாழ்விலும் செழிப்பை உண்டு பண்ணியது. இத்தகைய செழிப்பை இக்காலக் குடியிருப்புகளில் கிடைத்துள்ள பல்வகை உலோகப் பொருட்கள், அரிய மணிகள், சங்குகள் என்பன எடுத்துக்காட்டுகின்றன. பல குழுக்களாக மக்கள் வாழ்க்கைமுறை அமைந்ததால் இக் குழுக்களுக்கிடையிலான சண்டைகள் (Tribal Warfare) ஒரு பொது நிகழ்ச்சியாக இக்காலத்தில் காணப்பட்டது. தமிழகத்தில் இவ்வாறு குழுக்களாக வளர்ச்சி பெற்ற சமுதாயம் காலப்போக்கில் பிராந்திய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இப்பிராந்திய அரசுகள் தோன்றுவதற்கான சூழல் தென்னகம் முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்திலேயே இவை முதலில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பல விசேட காரணிகள் இருந்தன. இத்தமிழக அரசுகள் பற்றிய குறிப்பு அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் இவைகள் சேர, சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர அரசுகள் என அழைக்கப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின் பிராந்திய அரசுகளின் எழுச்சிக்கும், வரலாற்றுக் காலத்திலே தமிழகம் துரித வளர்ச்சி காண்பதற்கும் ஆதாரமாய் அமைந்தது இப் பெருங்கற்காலமே. இதனால் இவ்வாறு வரலாற்றுக்கால வளர்ச்சிக்கு – வரலாறு மலருவதற்கு – வழிசமைத்துக் கொடுத்த இக்காலத்தை தொல்லியலாளர் வரலாற்றுதய காலம் (Protohistoric Period) என அழைப்பர். தமிழகத்தில் இது நிலவிய காலத்தை இன்றைய ஆய்வுகளின்படி கி.மு. 1200 ஆம் ஆண்டு தொடக்கம் ஏறக்குறைய கி.மு. 600 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி எனலாம் (சிற்றம்பலம், சி.க. 1999: 90-91).
தமிழகத்தைப் பொறுத்த வரையில் வடக்குத் தமிழகத்தில் இரும்புக்காலம் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வருகிறது. ஆனால் தென் தமிழகத்திலும், இலங்கையிலும் இரும்புக்காலம் நுண்கற்காலத்தைத் தொடர்ந்து வந்திருக்கிறது. தெளிவான தேதிக்கணிப்புகள் கிடைக்காத சென்ற நூற்றாண்டில் இரும்புப் பொருட்கள், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், பெருங்கற்படைச் சின்னங்கள் அனைத்தையும் எல்லா மையங்களிலும் ஒருமித்துக் கண்ட ஆய்வாளர்கள் தமிழகத்தில் ‘இரும்புக்காலம்’ என்பதும் ‘பெருங்கற்காலம்’ என்பதும் ஒன்றுதான் எனக் கூறினார்கள். இக்கருத்துக்கு இன்றைய சில ஆய்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்: ‘பெருங்கற் பண்பாட்டுக் காலம்’ என்பது ஒரு தவறான சொற்பிரயோகம் (Misnomer) என்பது மட்டுமல்லாது பலவகையான, வித்தியாசமான, பண்பாட்டுச் சூழல்களிலும், பாரம்பரியங்களிலும் வழக்கிலிருக்கும் இரும்பின் வேறுபட்ட உபயோகங்கள் அனைத்தையும் ‘பெருங்கற் பண்பாட்டுக் காலம்’ என்ற கட்டத்திற்குள் அடக்க முடியாதென்றும், அப்படி அடக்குவது அபத்தம் என்றும் வாதாடினார்கள். மேலும், ‘தாழிப் புதையல்களை’, ‘பெருங்கற் புதையல்கள்’ என அழைக்க முடியாது என்பதும் சிலரது வாதம்.
நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த வாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்ற நூற்றாண்டில் சேர் மோட்டிமர் வீலர் கூறிச் சென்றது பொருத்தமாக இருக்கும்: “இரும்புக்காலத்தின் பலவகையான பண்பாட்டுக் கூறுகளில் பெருங்கல் பண்பாடும் ஒன்று” (The Megalithic is one of several cultural traits of the Iron Age) என்பது அவரது கருத்து. ‘இரும்புக்காலம்’ புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த ஒரு காலப்பகுதி (Time Period). ‘பெருங்கற் பண்பாடு’ அக்காலப்பகுதியில் தென்னகத்திலும் இலங்கையிலும் இடம்பெற்ற ஒரு ‘பண்பாட்டுத் தொகுதி’ எனக் கொள்வதில் தவறேதும் இல்லை. இன்றைய ஆய்வுகளின்படி தமிழகத்தின் பல மையங்களில் ‘பெருங்கற் பாண்பாட்டின்’ ஆரம்ப காலத்திற்கு முன்னரே இரும்புக்காலம் ஆரம்பமாகிவிட்டது.
தென்னகத்திலும் இலங்கையிலும் இப்புதையல் பண்பாட்டோடு வேறு சில அம்சங்களும் அவசியமான கூட்டாக இணைந்து ஒரு பெருங்கற்காலக் கலாசாரமாக உருவானது. இக்கலாசாரத்தின் சிறப்பியல்புகளாக பின்வரும் ஆறு அம்சங்களும் அமைகின்றன: 1. நீர்ப்பாசனக் குளம் 2. நெல் வயல்கள் 3. குடியிருப்புகள் 4. இறந்தோரை அடக்கம் செய்த பெருங்கற் கல்லறைகள் அல்லது தாழிகள் 5. இரும்பு உபயோகம் 6. மட்கலன்கள் வனையும் சில்லு 7. கறுப்பு – சிவப்பு மட்பாண்ட உபயோகம் 8. மட்கலன்களில் வரையும் எழுத்துக் குறியீடுகள் என்பன. கல்லறைகள் போன்று தாழிப்புதையல்களும் இப்பண்பாட்டின் ஒரு கூட்டு அம்சமாக விளங்குவதனால் அவற்றையும் ‘பெருங்கற் பண்பாடு’ என்ற குடைக்குள் உள்ளடக்குவதில் தவறேதும் இல்லை என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
இவ்வகையான ஈமப்புதையல் முறை இறந்தவர்களைப் பெரிய தாழிகளில் இட்டுப் புதைப்பதாகும். இப்புதையல்களில் கற்கள் பயன்படுத்தப்பட்டிராத போதிலும் இத்தாழிகள் பெருங்கற் பண்பாட்டிற்கு உரியவை என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் இப்புதையல்களில் காணப்படும் ஈமப்பொருட்களான (Grave Goods) மட்பாண்டங்கள், மணிக்கற்கள், இரும்புப் பொருட்கள் என்பன பெருங்கல் கல்லறைகளில் காணப்படும் அதே பொருட்கள் போன்றே உள்ளன. தமிழகத்தில் பெருங்கற்கால ஈம நடைமுறைகள் கி.மு. 1200 ஆண்டு முதலாக கி.பி. இரண்டாம் – மூன்றாம் நூற்றாண்டுகள் வரை தொடர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. பெருங்கற்கால மரபு சில இடங்களில் பிந்திய நூற்றாண்டுகளிலும் தொடர்ந்திருப்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன.
“மூன்றடி ஒன்பது அங்குல உயரமும், மூன்றடி ஆறு அங்குல விட்டமும் கொண்ட பெரிய தாழிகளில் (பானை) உட்கார்ந்த நிலையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன” என்கிறார் ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றங்கரை மேடுகளில் இத்தாழிகளை அகழ்வாய்வு செய்த தொல்லியலாளர் அலெக்ஸாந்தர் ரியா (Alexander Rea, 1915).
பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய சான்றுகள் தென்னாசியாவிலே பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது திராவிட மொழிகள் பேசும் தென்னிந்தியாவிலேதான் செறிந்து காணப்படுவதோடு, சில தனித்துவமான அம்சங்களையும் கொண்டு விளங்குகிறது. இப்பண்பாட்டுக்குரிய ஈமச்சின்னங்களின் வகையாக முதுமக்கள் தாழிகள் (Urn Burials), கல்லறைகள் (Cist Burials), கற்கிடைகள் (Rock-cut Burials) என்பன விளங்குகின்றன. தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சங்ககாலத்தில் புதைகுழியும், தாழி அடக்கமுறையுமே பெருமளவு பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது (சிற்றம்பலம். சி.க. 1999: 50-51).

ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட ஈமப்புதையல் தாழி
தென்னிந்தியாவில் இரும்பின் அறிமுகம், நீர்ப்பாசனத்துடன் கூடிய பயிர்ச்செய்கை, கறுப்பு – சிவப்பு மட்பாண்ட உபயோகம், கட்டமைப்புடைய சமூகத்தோற்றம், அரச அமைப்பு என்பன இப்பண்பாட்டுடன் தோற்றம் பெறுகின்றன. சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் இப்பண்பாட்டின் பின்னணியிலே தோன்றியவையாகும். இத்தகைய ஒரு பண்பாடே கிறிஸ்துவிற்கு முற்பட்ட ஆயிரத்தாண்டு காலப்பகுதியில் இலங்கையிலும் பரவி நீர்ப்பாசன நாகரிகத்தை மையமாகக் கொண்ட நகரங்களும், அரசுகளும் தோற்றம் பெறக் காரணமாக இருந்தன என்பதை இந்நாட்டின் முக்கிய பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இப்பண்பாட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
உணவு உற்பத்திக்காக இரும்புப் பொருட்கள் ஆற்றிய பணி அளப்பரியது. காடுகளை அழித்து நிலத்தை வயல்கள் ஆக்குவதற்கும், வயல்களுக்கு அருகாமையில் குளங்கள் வெட்டுவதற்கும், ஏர் முனைகளை இரும்பு முனைகளாக ஆக்குவதற்கும், அரிவாட்கள், சத்தகங்கள், கத்திகள் போன்ற கருவிகளைச் செய்வதற்கும் எஃகு இன்றியமையாத சாதனமாக ஆனது.
இலங்கையின் பெருநிலப்பகுதியில் இப்பண்பாடு நிலவியதற்கான சான்றுகள் அநுராதபுரம், கதிரவெளி, பொம்பரிப்பு, வவுனியா, திசமஹாரகம, மாந்தை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப் பண்பாட்டோடு கூடிய கறுப்பு – சிவப்பு மட்பாண்டம் இலங்கை முழுவதுமே பரந்து காணப்படுகிறது. தென்னிந்தியாவில் கி.மு. 1500 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற இப்பண்பாடு எவ்வாறு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல்வேறு பண்பாடுகளைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்ததோ, அதே போல இலங்கையிலும் தமிழ், சிங்களப் பண்பாடுகள் தோன்றுவதற்கு இப்பெருங்கற் பண்பாடே காரணமாக இருந்தது என்ற கருத்தை பேராசிரியர் சிற்றம்பலம் முன்வைத்திருக்கிறார் (Sittampalam, S.K. 1980: 384).
பெருங்கற் பண்பாட்டின் பரவல்
ஆதி இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு தென் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் பரவியது. தென் கர்நாடகத்தில் பெங்களூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் பெருந்தொகையான ஆதி இரும்புக்கால சவ அடக்கங்கள் உள்ளன. அவை வெளிப்படுத்தும் பண்பாட்டின் பரம்பலாகவே கிழக்கே தமிழ் நாட்டின் வடபகுதியில் தர்மபுரி மாவட்டத்திலும், வட ஆற்காட்டிலும் உள்ள சவ அடக்கங்களைக் கருத வேண்டும். இவை பொன்னையாறு, பாலாறு, காவேரி நதிகளின் கரையை அடுத்துக் காணப்படுகின்றன. இந்த நதிகள் தென் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே, இந்நதிகள் வழியாகத் தென் கர்நாடகத்திலிருந்து இப்பண்பாடு தமிழ் நாட்டிற்குள் பரவிய முறையை இலகுவில் புரிந்து கொள்ளலாம். வட தமிழ்நாட்டின் வளம் மிகுந்த நிலப்பகுதியிலிருந்து புதிய பண்பாடு நதிகளின் கரை வழியாக தென் தமிழ் நாட்டுக்கும் பரவியது (இந்திரபாலா, கா. 2006: 93).
சுருங்கக்கூறின், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் பெருநதிகள் வழியே புதிய பண்பாடு கர்நாடகத்தின் தென்பகுதியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தமிழ்நாட்டின் பெருநதிகளான காவேரி, பாலாறு, பொன்னையாறு, தாமிரபரணி ஆறு ஆகியவை வளம்படுத்தும் நிலப்பகுதிகளில் இப்புதிய பண்பாடு வேரூன்றியது. இந்நதிகள் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டை வந்தடைகிற உயர் நிலங்களை அடுத்த இடங்களில் இப்புதிய பண்பாட்டுக்குரிய தொல்லியல் சான்றுகள் கூடுதலாகக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள தாழ் நிலங்களில் இப்புதிய பண்பாட்டுக்குரிய சான்றுகள் வளம் நிறைந்த நதிக் கரைகளில் அல்லது நீர்ப்பாசனக் குளங்களுக்கு அருகில் காணப்படுவது கவனிக்கத்தக்கது. தாழி அடக்கங்கள் (Urns) மற்றும் கல்வட்ட அடக்கங்கள் (Stone Circles) ஆகியவை பொதுவாக நெற்பயிர்ச் செய்கைக்கு உகந்த நிலப்பகுதிகளின் அருகாமையில் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர் (Seneviratne, S. 1985: 26-27; இந்திரபாலா, கா. 2006: 93).
ஆதி இரும்புக்கால (பெருங்கல்) பண்பாடு இலங்கைக்குத் தென்தமிழ் நாட்டிலிருந்து வந்தது என்பதில் ஐயமில்லை. மேற்குத்தொடர் மலைப்பகுதியிலிருந்து இப்பண்பாடு வைப்பாறு, வைகை, சிற்றாறு, தாமிரபரணி ஆகிய நதிகளின் ஓரமாக தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கரையை வந்தடைந்தது. வாசுதேவநல்லூர் மற்றும் ஆதிச்சநல்லூர், வைகை நதிச் சமவெளி ஆகிய இடங்களை வந்தடைந்ததும், தொடர்ந்து இலங்கையை நோக்கி இப்பண்பாடு பரவுவது திண்ணமாகியது (இந்திரபாலா, கா. 2006: 93).
ஆதி இரும்புக்காலப் (பெருங்கல்) பண்பாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கரையை, சிறப்பாக தாமிரபரணி, காவேரி, வைகை ஆகிய நதிகளின் கழிமுகங்களை அடைந்ததும் அப்பால் இலங்கைக்குப் பரவுவதற்கான சூழ்நிலை உருவாகியது. தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் ஒருபோதும் இரண்டையும் பிரிக்கும் கடலாக அமையவில்லை – அது இரு நாடுகளையும் இணைக்கும் கடலாகவே இயங்கியது. தமிழ்நாடும் இலங்கையும் ஒரு பொதுப் பண்பாட்டு வலயம் என்பது இக்காலகட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையைப் பேராசிரியர் செனவிரத்ன நன்கு விளக்கிக் காட்டியுள்ளார்: “புவியியல் அமைப்பை நோக்குமிடத்து இரு நிலப்பகுதிகளும் அருகருகே உள்ளமை, இரு பகுதிகளின் சுற்றாடலில் காணப்படும் பொதுப்பண்புகள், இரு பகுதிகளிலும் கிடைத்துள்ள பொதுப்பண்புள்ள சவ அடக்கமுறைகள், பாத்திரங்கள் அமைக்கும் முறைகள், சவ அடக்கங்களில் காணப்படும் ஈமப்படையல் பொருட்கள், எலும்புக் கூறுகள் ஆகியவை தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டுச் சமூகத்திற்கும் இலங்கையின் பெருங்கற் பண்பாட்டுச் சமூகத்திற்கும் இடையில் இருந்த பண்பாட்டு ஒருமைப்பாட்டைக் காட்டுகின்றன. அதுமட்டுமன்றி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு மிகவும் முற்பட்ட ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து, இலங்கைக்கு மக்கள் புலப்பெயர்ச்சி நடைபெற்றமை, புதிய தொழில்நுட்ப–பண்பாட்டுக் கூறுகள் (இரும்பு, மட்பாண்டத் தொழில்முறை, நீர்ப்பாசனம்) அறிமுகப்படுத்தப்பட்டமை மற்றும் நெற்பயிர்ச் செய்கையை அடித்தளமாகக் கொண்ட ஒரு வாழ்க்கைமுறை ஆரம்பிக்கப்பட்டமை ஆகியவற்றை இச்சான்றுகள் வெளிப்படுத்துகின்றன” (இந்திரபாலா, கா. 2006: 97).

தமிழ்நாட்டில் கொடுமணலில் காணப்படும் வட்ட வடிவான பெருங் குத்துக்கல்களின் நடுவே அமைந்துள்ள பெருங்கற் கல்லறை. படமூலம்: கா. ராஜன்

இலங்கையில் இபன்கட்டுவவில் காணப்படும் பெருங்கற்களினாலான ஈமப்புதையல் கல்லறைகள். இப்படியான 21 கல்லறைகள் இந்த ஈமக்காட்டில் காணப்படுகின்றன. Image Source: Allgemeine und Vergleichende Archäologie (German Archaeological Team) 1990.
இலங்கையில் பெருங்கற் பண்பாடு
தொல்லியல் ஆய்வுகள் அதிகம் வளர்ச்சிபெறாத நிலையில் இலங்கையில் நாகரிகம் தோன்றிய காலத்தையும், அதற்கான காரணங்களையும் ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் அதற்குப் பாளி இலக்கியங்களில் வரும் பூர்விகக் குடியேற்றங்கள் பற்றிய கதைகளை அடிப்படை மூலாதாரமாகப் பயன்படுத்தினர். இவ்விலக்கியங்கள் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் வந்து குடியேறிய மக்களுடனேயே இலங்கையில் மனித வரலாறும், நாகரிக வரலாறும் ஆரம்பமானதாகக் கூறுகின்றன. இப்பாளி இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் வரலாற்றை எழுதிய பிரித்தானிய மற்றும் இலங்கையின் ஆரம்பகால வரலாற்றாசிரியர்கள் இலங்கையின் நிலையான குடியேற்றங்கள், குள நீர்ப்பாசன விவசாயம், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன விஜயனின் வருகையுடனே ஏற்பட்டதாக அவர்களது வரலாற்றாய்வு நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் இக்குடியேற்றம் பற்றிய கதையை வட இந்தியாவிலிருந்து ஏற்பட்ட ஆரியரின் குடியேற்றம் (Indo-Aryan Colonizers and Settlers) என எடுத்துக்கொண்ட பிரித்தானிய கொட்றிங்ரன், இலங்கையின் பரணவிதான மற்றும் கே.எம். டிசில்வா போன்ற வரலாற்றாசிரியர்கள் அம்மக்களின் வழிவந்த பிற்காலச் சந்ததியினரே சிங்கள மக்கள் எனவும் விளக்கமளித்துள்ளனர் (Codrington, H.W. 1929; Paranavitana, S. 1961; K.M. de Silva 2005). பாளி இலக்கியங்கள் கூறும் விஜயன் கதையை பண்டைய காலத்தில் வட இந்தியாவிற்கும், இலங்கைக்குமிடையே இருந்து வந்த வர்த்தக உறவுகள் பற்றிய சான்றுகளாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆயினும் அக்கதையை இலங்கையில் வட இந்தியக் குடியேற்றம் ஏற்பட்டதற்குரிய கதையாக எடுத்துக் கொள்வதற்கு நம்பகரமான தொல்பொருள் சான்றுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. அதற்கு மாறாக விஜயன் வருகை நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகப் பெரிய அளவில் தென்னிந்தியாவின் தென்பகுதியிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் புலம்பெயர்ந்து வந்து குடியேறியதற்கான நம்பகரமான தொல்லியல் ஆதாரங்கள் இலங்கையின் பல்வேறு வட்டாரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
கி.மு. 1200 ஆம் காலப்பகுதியிலிருந்து திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்திய மாநிலங்களிலும், இலங்கையிலும் இப்பண்பாட்டின் பல்வேறு அம்சங்களில், குறிப்பாக இம்மக்கள் பயன்படுத்திய கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்கள் (Black and Red Ware), தாழிகள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள் காட்டும் சமய நம்பிக்கைகள் என்பவற்றில் பொதுவான ஒற்றுமைத்தன்மை காணப்படுவதால் இப்பண்பாடு இப்பிராந்தியங்களுக்குரிய தனித்துவமான அம்சமாக நோக்கப்படுகிறது. ஈமச்சின்னங்களை அமைக்கப் பெரிய கற்களைப் பயன்படுத்தியதால் பெருங்கற் பண்பாடு என்ற பெயர் ஏற்பட்டிருந்தாலும், பெருங்கற்கள் இடம்பெறாத இடங்களில், குறிப்பாக தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இப்பண்பாட்டிற்குரிய கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புச் சின்னங்கள் காணப்பட்ட இடங்களை பெருங்கற்கால ஊரிருக்கைப் பகுதி எனவும், இச் சின்னங்களுடன் தாழியடக்கம் (Urn Burial), நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் (Extended Burial) போன்ற ஈமச்சின்னங்கள் காணப்பட்ட இடங்களை ‘பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்’ எனவும் அழைக்கும் மரபு காணப்படுகிறது (புஷ்பரட்ணம், ப. 2017: 12).
இன்று தென்னாசியா, தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகள் பலவற்றின் தொடக்ககாலப் பண்பாடு பற்றிய ஆய்வில் தொல்லியலாய்வாளர்கள் பலரினது கவனத்தை ஈர்த்த அம்சமாகப் பெருங்கற் பண்பாடு திகழ்கிறது. இவ்வாய்வு இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் பற்றிய ஆய்வாக மட்டும் அமையாது, கூடவே அக்காலத்தில் வாழ்ந்த மக்களது பலதரப்பட்ட பண்பாட்டுப் பரிமாணங்கள் பற்றிய ஆய்வாகவும் விளங்குகிறது. இலங்கையிலும், தென்னிந்தியாவின் சில வட்டாரங்களிலும் வரலாற்றுக்காலம் தொடங்குவதற்கு முன்னோடியான நிலையான குடியிருப்புகள், நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களின் பயன்பாடு, மந்தை வளர்ப்பு, சிறு தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற அம்சங்கள் இப்பண்பாட்டுடன் தோன்றி வளர்ந்ததால் இது இந்நாடுகளின் வரலாற்று உதய காலமாகவும் (Proto-Historic Period), உருவாக்க காலமாகவும் (Formative Period) பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைய நாகரிகம், சமூக உருவாக்கம், அரச தோற்றம், நகரமயமாக்கம் பற்றிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியாகப் பெருங்கற்காலப் பண்பாடு நோக்கப்படுகிறது (Sitrampalam, S.K. 1980; Rajan, K. 1994). இதனால் இலங்கையில் ஏற்பட்ட இப்பண்பாட்டு அம்சங்களின் தோற்றத்தையும், பண்பாட்டு மாற்றங்களையும் தென்னிந்தியப் பெருங்கற்பண்பாடு தோன்றி வளர்ந்ததன் பின்னணியில் நோக்குவது பொருத்தமாகும் (புஷ்பரட்ணம், ப. 2017: 12).
இலங்கையில் பெருங்கற் பண்பாட்டு ஈமச்சின்னங்கள்
பெருங்கற் பண்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று அப்பண்பாட்டைப் பேணிய மக்கள் இறந்தவர்களுக்காக அமைத்த ஈமச் சின்னங்களாகும். குறைந்தளவு தொழில்நுட்பத்துடன் அழியக்கூடிய பொருட்களான மரத்தடிகளையும், ஓலைகளையும் பயன்படுத்தி தமது இருப்பிடங்களை உருவாக்கிய இம்மக்கள் இறந்தவர்களுக்கான ஈமச்சின்னங்களை பெரிய கற்களையும், தாழிகளையும் பயன்படுத்தி அதிக தொழில்நுட்பத்துடன் உருவாக்கியமை அவர்களது பண்பாட்டில் ஈமச்சின்னங்கள் அதியுன்னத முக்கியமான நிலையில் இருந்தமையை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஈமச் சின்னங்கள் சில இடங்களில் வெட்டப்பட்ட கற்பலகைகளையும், தட்டையான பாறைகளையும் கொண்டு அமைக்கப்பட்ட போது, வேறு சில இடங்களில் பெரிய தாழிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் கற்களோ, தாழிகளோ பயன்படுத்தாது வெறுமனே நிலத்தில் குழியமைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடுகளுக்கு இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த இடங்களில் காணப்பட்ட பௌதிக வளங்கள் காரணமாக இருப்பினும் அவை குறிப்பிட்ட அளவுகளில், பொதுவான விதிமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருப்பது, பெருங்கற்காலப் பண்பாட்டில் ஈமச்சின்னங்கள் பெறும் முக்கியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஈமப்புதையல் சம்பிரதாயங்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற சமய நம்பிக்கை பெருங்கற்கால மக்களது பண்பாட்டிலே தோன்றிவிட்டதைக் காட்டுகிறது. மேலும் ஈமச் சின்னங்களின் வடிவங்கள், அவற்றில் பின்பற்றப்பட்ட தொழில்நுட்பங்கள், ஈமச் சின்னங்களில் இறந்தவர்களது உடலோடு அடக்கம் செய்யப்பட்ட பலவகையான பாவனைப் பொருட்கள் என்பவற்றை ஆய்வு செய்யும் போது இவ் ஈமச் சின்னங்களை அமைப்பதில் பல கலைஞர்களும், வேறுபட்ட தொழில் பிரிவினரும் பணியாற்றியிருந்தார்கள் என அறிய முடிகிறது. இந்த அம்சங்கள் இலங்கையின் சமூக உருவாக்கம் ஆதி இரும்புக் காலத்தில் பெருங்கற் பண்பாட்டிலேயே தோன்றிவிட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இதுவே இப்பண்பாட்டுடன் ஓர் அரசு உருவாகுவதற்கான காரணங்களாகவும் அமைந்து விடுகிறது (புஷ்பரட்ணம், ப. 2017: 18).
தீபகற்ப இந்தியாவில் அதன் பௌதீகத் தன்மைக்கு ஏற்ப 40க்கும் மேற்பட்ட ஈமச்சின்ன வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் பாறையை அகழ்ந்த குகைக் கல்லறை (Rock Cut Cave Burial), கல்லறை (Cist Burial), கற்பதுக்கை (Dolmen), தொப்பிக்கல் (Hat Stone), குடைக்கல் (Hood Stone), ஈமப்பேழை (Sarcophagus), கல்வட்டம் (Cairn Circle), குத்துக்கல் (Menhir), தாழி அடக்கம் (Urn Burial), குழியடக்கம் (Pit Burial), நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் (Extended Burial) என்பன அதிக அளவில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவ்வகை ஈமச் சின்னங்கள் அனைத்தும் இலங்கையில் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் இலங்கையின் பௌதிகத் தன்மைக்கு ஏற்ப கல்லறை, கல்வட்டம், கற்கிடை, தாழியடக்கம், நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் ஆகிய ஈமச்சின்னங்கள் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வகையான ஈமச் சின்னங்கள் இலங்கைக்கு தென்தமிழகத் தொடர்பால் பரவியிருக்கலாம் என்பதை இரு பிராந்தியங்களின் ஈமச்சின்ன வடிவங்களில் காணப்படும் ஒற்றுமைகள் உறுதிப்படுத்துகின்றன (Seneviratne, S. 1984: 237-307; புஷ்பரட்ணம், ப. 2017: 18).
இலங்கையின் ஈமச்சின்ன வடிவங்கள்
கல்லறை (Cist Burial)
இலங்கையில் காணப்படும் இரும்புக்கால பெருங்கற் பண்பாட்டு ஈமச்சின்னங்களுள் கல்லறைப் புதையல்கள் முக்கியமானதாகும். இவ்வகையான ஈமச் சின்னங்கள் ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழகத்தில் புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் கல்லறைகளை ஒத்திருப்பதால் அங்கிருந்தே வடகிழக்கு இலங்கைக்கு இவ்வகை ஈமச்சின்னங்கள் அமைக்கும் மரபு பரவியதாகக் கருதப்படுகிறது (Seneviratne, S. 1984: 283). பண்டைய சேர நாட்டின் கொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஒரு குழுவினரே கிழக்கிலங்கையில் கதிரவெளியில் காணப்படும் கல்லறைகளுக்கு காரணமானவர்களாகக் கருதப்படுகிறது (Indrapala, K. 1969: 53).
வவுனியாவிலிருந்து வடகிழக்காக வவுனியா – மாமடுவ வீதியில் ஐந்து மைல் தூரத்தில் தேக்குமரக் காடுகளினிடையே இவ்வகையான கல்லறைகள் காணப்படுகின்றன. இப்புதையல்களுக்குக் கிழக்கே கற்பாறைகள் காணப்படுகின்றன. மேலும், இவ்வகையான ஈமச்சின்னங்கள் இலங்கையின் யான்ஓயா கழிமுகப் பிரதேசத்திலும், தமன்ன கொடல்ல, குருகல்வின்ன, வடிகவல, திபுல்வல, ராபாவ, மாமடுவ, மச்சகம, பின்வேவ, இபன்கட்டுவ ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன (Seneviratne, S. 1984: 246-260).


இபன்கட்டுவவில் காணப்படும் கல்லறைகள்.
இவ்வகையான புதையல் பண்பாடு நிலவிய காலகட்டத்தில் தமிழ் இனக் குழுவினர் திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்ததை சேருவில் என்ற இடத்தில் காணப்படும் பிராமிக் கல்வெட்டும் சான்று பகர்கிறது (இந்திரபாலா, கா. 2006: 102). வடகிழக்கு இலங்கையில் நிலவிய கல்லறை ஈமச்சின்ன மரபே இங்குள்ள நதிகள் வழியாக வடமத்திய இலங்கைக்கும் பரவியுள்ளது. கிழக்கிலங்கையில் மிகப்பெரிய கல்லறை ஈமச்சின்னங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கதிரவெளியிலும், குரங்கு படையெடுத்த வேம்பிலும் மற்றும் சேருவில், ஈழத்துறை, ஈச்சலம்பத்தை ஆகிய வட்டாரங்களிலும் காணப்படுகின்றன (இந்திரபாலா, கா. 2006: 103., புஷ்பரட்ணம், ப. 2017: 19).
கற்பதுக்கை (Dolmen)
தோற்ற அமைப்பில் கற்பதுக்கைகள் கல்லறைகளை ஒத்திருந்தாலும், கல்லறைகளில் நான்குபக்கக் கற்பலகைகளின் பெரும்பகுதி நிலத்தில் புதைக்கப்பட்டிருக்க, கற்பதுக்கைகளில் இவை சுவர்கள் போல மேலே எழுந்து அவற்றின் மேல் மூடப்பட்ட கற்பலகையுடன் சேர்ந்து ஒரு கட்டடம் போல காட்சியளிக்கும். இலங்கையில் கதிரவெளி, பதவிகம்பொல ஆகிய இடங்களில் இக் கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. இவ்வகையான கற்பதுக்கைகள் பண்டைய சேர நாடான தற்போதைய கேரள மாநிலத்தில் அதிக அளவில் காணப்படுவதனால் அங்கிருந்தே இப்புதையல் மரபு இலங்கைக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது (Sitrampalam, S.K. 2001: 78).

கேகாலையில் பதவிகம்பொலவில் காணப்படும் கற்பதுக்கை (Dolmen).
கல்வட்டம் – பரல் உயர் பதுக்கை (Cairn circle)
இரும்புக்கால பெருங்கல் ஈமச்சின்னங்களின் இன்னொரு வடிவம் கல்வட்டங்களாகும். தமிழகத்தில் பின்பற்றப்பட்ட ஈமச் சின்னங்களில் இதுவும் ஒருவகையாகும். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப ஆழமாகக் குழியமைத்து அதற்குள் இறந்தவர்களின் உடலை கல்லறையில் புதைத்து, நிவேதனப் பொருட்களை வேறாகத் தாழியிலிட்டு அல்லது அதே கல்லறையிலிட்டுப் புதைத்து அதைச் சுற்றிவர வட்டமாக கற்களை அடுக்குவதன் மூலம் இவ்வகையான ஈமச்சின்னம் உருவாக்கப்படுகிறது. சுற்றிவர அடுக்கப்படும் கற்கள் வட்டவடிவிலான சிறிய கற்களாக இருக்கலாம் அல்லது நெடிதுயர்ந்த பெரும் குத்துக் கற்களாகவும் இருக்கலாம். இப்பெரிய குத்துக்கற்களைக் கொண்ட புதையல் ‘பரல் உயர் பதுக்கை’ என அழைக்கப்படுகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் இப்புதையல்கள் ‘பரல் உயர் பதுக்கை’ (அகநானூறு, 91:10) என அழைக்கப்படுகின்றன.
இலங்கையில் பெரிய குத்துக்கற்களினாலான பரல் உயர் பதுக்கைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஈமப்புதையலைச் சுற்றிவர சிறிய கற்கும்பிகளை வட்டமாக அடுக்கிய கல்வட்டங்கள் மாமடு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சமீபகாலங்களில் பேராசிரியர் புஷ்பரட்ணம் செட்டிகுளம் பிரதேசத்தில் மேற்கொண்ட தொல்லியலாய்வுகளில் கொங்குராயன்மலை என்ற இடத்தில் கல்வட்டம் கொண்ட ஒரு ஈமப் புதையலைக் கண்டுபிடித்திருக்கிறார். இவ்விடத்தில் பத்துக்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளும், கி.மு. இரண்டாம் – கி.பி. நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட புராதனகால குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 2017: 20-21).

செட்டிகுளத்தில் கண்ட கல்வட்டம். நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
குடைக்கல் புதையல் (Umbrella Stone Burial)
ஒரு பெரிய கல்லின் வெளிப்பாகத்தை கவிகைமாட வடிவில் செதுக்கி (Dome Shaped) அதன் உட்பாகத்தில் ஆழமாகக் குழியைக் குடைந்து அதனுள் இறந்தவரது எலும்புகளையும் நிவேதனப் பொருட்களையும் இட்டு அக்கல்லின் மேற்பகுதியிலுள்ள துவாரத்தை குடை வடிவிலான மற்றொரு பெரிய கல்லினால் மூடி அடக்கம் செய்யும் முறை குடைக்கல் ஈம அடக்கமுறை என அழைக்கப்படும். இவ்வகையான அடக்கமுறை தமிழகத்தில் பண்டைய சேர நாட்டில் (இன்றைய கேரளம்) அதிக அளவில் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதிகமான குடைக்கல் புதையல்கள் காணப்படும் இடுகாடு ‘குடைக்கல் பரம்பு’ என அழைக்கப்படுகிறது.

கேரளத்தில் திரிசூர் மாவட்டத்தில் சேரமான்காத் கிராமத்தில் காணப்படும் குடைக்கல் பரம்பு. இவ்விடத்தில் இப்படியான 69 பெருங்கற் புதையல்கள் காணப்படுகின்றன. Image Source: DTPC Thrissur
இலங்கையில் இவ்வகையான ஈமச்சின்ன மரபு பின்பற்றப்பட்டிருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் 2005 ஆம் ஆண்டில் பேராசிரியர் புஷ்பரட்ணம் யாழ்ப்பாணத்தில் வேலணைக் கிராமத்தில் சாட்டி என்ற இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் இவ்வகையான ஈமச்சின்ன மரபு அங்கே இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. வைரமான கற்கள் ஏதும் காணப்படாத இப்பிராந்தியத்தில் இந்த ஈமச்சின்னம் மட்டும் வைரமான கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. இரண்டடி உயரமான வைரமான இக்கல்லின் மேற்பகுதி குடை போன்ற கவிகைமாட வடிவில் செதுக்கப்பட்டு, மேலே துவாரம் அமைக்கப்பட்டு, அதன் உட்பகுதி ஒன்றரை அடி ஆழத்தில் வட்டமாகக் குடையப்பட்டு, அதற்குள் மனித, மற்றும் மிருக எலும்புகளுடன் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது (புஷ்பரட்ணம் 2017: 21).
இதனுள் இருந்த எலும்புகளை ஆய்வு செய்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினர் அதில் கண்ட சிறிய எலும்புகள் இளமையான ஒரு மனிதனுக்கு உரியதெனவும், பெரிய எலும்புகள் ஒரு குதிரைக்கு உரியது எனவும் அடையாளப்படுத்தி உள்ளனர். இந்த ஈமச்சின்னம் காணப்பட்ட குழிக்குள் கழிவிரும்புகளும் (Iron Slags), பல வகையான மட்பாண்ட ஓடுகளும் கிடைத்திருப்பதால் சேர நாட்டை ஒத்த குடைக்கல் ஈமச்சின்ன மரபு சாட்டியிலும் பின்பற்றப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது (புஷ்பரட்ணம், ப. 2017: 22).
கல்லறையினுள் தாழிப்புதையல் (Urn in a Cist Burial)
1972 ஆம் ஆண்டில் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குச் சமீபமாக இருந்த ஒரு மண்மேட்டை அகழ்ந்தபோது பெரிய கல் மேசையினால் மூடப்பட்டு, கற்களினால் சுவரமைக்கப்பட்ட ஒரு புதைகுழியும் அதனுள்ளே எலும்புகளைக் கொண்ட ஒரு தாழியும் (Urn in a Cist) காணப்பட்டது. இப்பெருங்கற் பண்பாட்டுப் புதையலில் கார்ணிலியன் மற்றும் மதிப்புமிக்க கற்கள், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், குடுவைகள், இரும்பு ஆணிகள், நாணயங்கள் என்பன காணப்பட்டன (இந்திரபாலா, கா. 1973).

மேற்காணப்படும் பெருங்கற் புதைகுழி போன்ற ஒரு கல்லறையினுள்ளே 1972 ஆம் ஆண்டில் வல்லிபுரத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
தாழி அடக்கம்
தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டில் பலவகையான ஈமச்சின்ன மரபுகள் பயன்பாட்டில் இருந்தபோதும், சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பேசப்படும் ஈமச் சின்னங்களில் ஒன்று தாழி அடக்கமாகும். தாழியடக்கம் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தின் இறுதியில் இருந்த நிலையைப் பிரதிபலிப்பதாக தொல்லியலாளர் கருதுகின்றனர். இந்த மரபு சங்ககாலத்தில் பரவலாக இருந்ததை அக்காலச் செய்யுட்கள் எடுத்துரைக்கின்றன.
“வியன்மல ரகன் பொழி லீமத்தாழி
யுகலி தாக வனைமோ” – புறநானூறு, 256: 5-6.
“அன்னோற் கவிக்குங் கண்ணகன் தாழி
வுனைதல் வேட்டனை யாயி னெனையதூஉ” – புறநானூறு, 228: 12-13.
இத்தாழிகள் புதைக்கப்பட்ட இடங்கள் ‘காடு’ என வழங்கப்பட்டதை பின்வரும் செய்யுள் எடுத்துரைக்கிறது:
“கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன் காட்டதுவே” – புறநானூறு, 225: 7-8.
இப்புதையல்கள் உயர்குடி மக்கள், சாதாரண மக்கள், ஆண், பெண் எனப் பல்திறத்தாருக்கும் எழுப்பப்பட்டதாக சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பிய போதிலும், அச்சின்னங்கள் அமைக்கப்பட்ட விதத்தினையும், அதனுள்ளே பெரும் படையலாக வைக்கப்பட்ட பொருட்களின் தன்மையினையும், அளவினையும் பார்க்கும்போது அவை பெரும்பாலும் உயர்குடி மக்களுக்கே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
ஈழத்துப் பெருங்கற் பண்பாட்டிலும் தாழியடக்க முறை பின்பற்றப்பட்டதற்கு தெக்கம், கரம்பன்குளம், ஆனைக்கோட்டை, பூநகரி, குஞ்சுப்பரந்தன் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்பண்பாட்டு ஈமத்தாழிகளை, தாழிகளின் பாகங்களை ஆதாரமாகக் குறிப்பிடலாம் (Seneviratne. S. 1984: 246-247; Ragupathy, P. 1987: 121; புஷ்பரட்ணம், ப. 1993: 14-40). தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூரை அடுத்து அதிக அளவில் இரும்புக்கால பெருங்கற் பண்பாட்டுத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாக வடமேற்கு இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பு விளங்குகிறது (புஷ்பரட்ணம், ப. 2017: 23).
இலங்கையின் மேற்குக் கடற்கரைக்குச் சமீபமாக மன்னாரிலிருந்து தெற்கே 89 கி.மீ. தொலைவிலும், புத்தளத்திற்கு வடக்கே 32 கி.மீ. தூரத்திலும் அமைந்திருப்பது பொம்பரிப்பு. இக்காலத்தில் வில்பத்து தேசிய சரணாலய வனத்தினுள் அமைந்திருக்கும் இவ்விடத்தில் மனிதர்கள் வசிப்பதில்லை. ஆனால், கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளாக தாழிப் புதையல்களை புதைக்கும் பெரியதொரு இடுகாடாக – ஈமவயலாக விளங்கியிருக்கிறது பொம்பரிப்பு. 1970 ஆம் ஆண்டில் பொம்பரிப்பில் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட அமெரிக்காவின் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக ஆய்வாளர் திருமதி விமலா பேக்லி, நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடுகாட்டில் 1.5 – 2.0 இடைவெளியில் 8,000 தாழிகளில் 12,000 பேர்வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார் (Begley, V. 1981). 1990 ஆம் ஆண்டில் இந்த இடுகாட்டை மேலாய்வு செய்த சிற்றம்பலம் இந்த இடுகாட்டின் பரப்பளவு நான்கு ஏக்கரைவிட மேலும் மிகப் பெரியதென்று குறிப்பிட்டிருக்கிறார் (Sitrampalam, S.K. 1990: 237-307).

இலங்கையில் பொம்பரிப்பிலிருந்து பெற்றுக்கொண்ட ஈமத்தாழிகள், மட்கலன்கள். Image Source: Colombo Museum.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அகழ்வுகளில் கண்ட புதையுண்டிருக்கும் ஈமத்தாழி. நன்றி: கலாநிதி பொ. இரகுபதி
இத்தாழிகளில் 10,000 முதல் 12,000 மக்கள் வரை அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இத்தாழிகள் பெரும்பாலும் 1 முதல் 1¼ மீற்றர் வரையான உயரமும், 40 – 90 சென்ரிமீற்றர் விட்டமும் உடையன. இவை ஏறத்தாழ 1 – 1½ மீற்றர் ஆழத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன. சிலசமயம் ஒரே தாழியினுள் ஒரு வயதானவரதும், ஒரு சிறு பிள்ளையினதும் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. வயதானவர்கள் உட்கார்ந்த நிலையிலே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். தாழிகளின் அடியிலே இறந்தோர் வாழ்ந்த காலத்தில் உபயோகித்த பொருட்கள், சமயச் சின்னங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன. இத்தாழிகள் அதன் வாய்களுக்குப் பொருந்தக்கூடிய அளவான மூடிகளால் – சட்டி அல்லது கற்களால் மூடப்பட்டிருந்தன (Begley, V. 1981: 53-75).
சில தாழிகளில் பலதரப்பட்ட வயதினை உடைய பலரது எலும்புகள் ஒரே தாழிக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. இந்த அம்சம் ஒரே குடும்ப உறுப்பினர் பலரது எலும்புகளை காலத்திற்குக் காலம் சேர்த்து வைத்து பின்னர் ஒரே காலத்தில் தாழியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் இறந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. தாழிகளின் அடியிலே இறந்தோர் வாழ்ந்த காலத்தில் உபயோகித்த பொருட்கள், சமயச் சின்னங்கள் ஆகியனவும் காணப்பட்டன. பல வடிவங்களில் அமைந்த மட்பாண்டங்கள், சட்டிகளில் படையற் பொருட்களான வெண்கல ஊசிகள், வெண்கலக் காப்புகள், கண்ணாடி மணிகள், பறவை மற்றும் மிருக எலும்புகள் ஆகியனவும் வைக்கப்பட்டிருந்தன. இப்பெரிய தாழிகளைச் சுற்றிவர சிறிய குடங்களில் உணவுப்பொருட்கள், அன்றாடப் பாவனைப் பொருட்கள் என்பன காணப்பட்டன. குடங்கள், சட்டிகள், குவளைகள், தட்டுகள் ஆகிய மட்பாண்டங்கள் பலதரப்பட்ட உருவங்களிலும், பருமன்களிலும் கறுப்பு – சிவப்பு, தனிக்கறுப்பு, தனிச்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்பட்டன (Begley, V. 1981: 53-75).
இத்தாழிகளில் காணப்படும் எலும்புகளை ஆராய்ந்த மானிடவியல் விற்பன்னரான கென்னெத் கென்னடி தென்னிந்தியாவின் பெருங்கற் புதைகுழிகளில் காணப்பட்ட எலும்புகளை இவை ஒத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், இலங்கையில் வாழும் இன்றைய மக்கள் இப்பெருங்கற்கால மக்களின் வம்சாவழிகளே என்பதையும் அறியத்தருகிறார் பேராசிரியர் கென்னடி (Kennedy, K.A.R. 1975: 75-80).
இங்கே காணப்பட்ட தாழியடக்க முறைமை, தாழியின் தோற்ற அமைப்பு, தாழியின் செய்முறை, அலங்காரம், மட்பாண்டக் குறியீடுகள், தாழிகளுடன் காணப்பட்ட கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்கள், ஏனைய படையற் பொருட்கள் என்பன பெருமளவுக்கு தென் தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை, பெருமாள்மலை, போர்க்களம், அமிர்தமங்கலம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழியடக்க முறைகளோடு நெருங்கிய ஒற்றுமை உடையன. விமலா பேக்லி இலங்கையின் வறண்ட வலயப் புவியியல் பண்புகள் தமிழக புவியியல் பண்புகளை ஒத்துக் காணப்பட்டதால் தமிழகப் பெருங்கற்கால மக்கள் தமக்குப் பரிச்சயமான புவியியல் பண்புகளைக் கொண்ட இன்னொரு இடத்திற்கு வந்திருப்பது பொதுவான இயல்பு எனக் கூறியுள்ளார் (Begley, V. 1981: 53-59; புஷ்பரட்ணம், ப. 2017: 24).
தொல்லியலாளர் சுதர்சன் செனிவிரட்ன நாட்டின் உட்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களின் தோற்ற அமைப்பில் காணப்படும் ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி வடமேற்கு இலங்கையில் இருந்தே நாட்டின் உட்பகுதிக்கு இப்பண்பாடு பரவியதென்று கூறியுள்ளார். பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தாழியடக்க ஈமச்சின்ன முறைகள், தாழிகளின் தோற்ற அமைப்பு, கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்கள் என்பன பொம்பரிப்புக்கு நேர் எதிரே தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூர் பெருங்கற்காலப் பண்பாட்டின் ஒரு பிராந்தியம் எனக் கூறக்கூடிய அளவிற்கு ஒற்றுமை உடையன. இச்சான்றுகளின் அடிப்படையில் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு பரவியபோது அதை முதலில் உள்வாங்கிய இடங்களில் ஒன்றாகப் பொம்பரிப்பைக் கருத இடமுண்டு (Seneviratne, S. 1984: 279-291).
நீளக்கிடத்திய அடக்கம் (Extended Burial)
இலங்கையில் பின்பற்றப்பட்ட இலகுவான பெருங்கற்பண்பாட்டு ஈம அடக்கமுறைகளில் ஒன்று நீளக்கிடத்தி அடக்கம் செய்யும் முறையாகும். இது இறந்தவரது உடலை நிலத்தில் நீள்சதுரமாக வெட்டப்பட்ட குழிக்குள் வைத்து அவ்வுடலைச் சுற்றி பலவகையான மட்பாண்டங்களில் படையற் பொருட்களையும், இறந்தவர் உபயோகித்த பல பொருட்களை ஈமப் பொருட்களாகவும் வைத்து மண்ணால் மூடிவிடும் முறையைக் குறிக்கிறது. தென்தமிழகப் பெருங்கற் பண்பாட்டில் மதுரை, இராமநாதபுரம், திருநேல்வேலி ஆகிய இடங்களில் இம்முறை பின்பற்றப்பட்டிருப்பதற்குப் பரவலான சான்றுகள் கிடைத்துள்ளன. இதற்கு மணற்பாங்கான இவ்விடங்களில் ஈமச் சின்னங்களை அமைப்பதற்குரிய கற்கள் காணப்படாமையே முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இவ்வகையான அடக்கங்கள் மணற்பாங்கான வடக்கு, வடமேற்கு இலங்கையிலுள்ள ஆனைக்கோட்டை, காரைநகர், மாதோட்டம் ஆகிய இடங்களில் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம், ப. 2017: 24).

ஆனைக்கோட்டையில் அகழ்ந்து கண்ட நீளக்கிடத்திய அடக்கம். நன்றி: கலாநிதி பொ. இரகுபதி.
இவற்றுள் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் சிறப்பாக நோக்கத்தக்கன. இவ்விடம் யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் நாவாந்துறை கடற்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இத்தொல்லியல் மையத்தைக் கண்டுபிடித்த கலாநிதி இரகுபதி இங்கு இரண்டு மைல் சதுரப்பரப்பில் ஆறு தொல்லியல் மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற் பண்பாட்டு ஈமச்சின்னங்களும் இருக்கலாம் எனக் கூறியுள்ளார். 1980 ஆம் ஆண்டில் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினருடன் இணைந்து மேற்கொண்ட அகழ்வாய்வில் இரு நீளக்கிடத்தி அடக்கம் செய்யப்பட்ட ஈமப்புதையல்கள் (Extended Burials) கண்டுபிடிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பெருங்கற்கால ஈமப்புதையல்கள் என்ற வகையில் இவற்றிற்குத் தனி முக்கியத்துவம் உண்டு. இவ்விரு ஈமச் சின்னங்களும் பத்தடி இடைவெளியில் நான்கடி உயரமான மண்மேட்டின் மூன்றாவது மண்படையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஈமச் சின்னங்களில் மேற்குக் – கிழக்குத் திசையை நோக்கிய வண்ணம் அடக்கம் செய்யப்பட்டிருந்த ஏறத்தாழ 5 அடி நீளமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன (Sitrampalam, S.K. 1983; Ragupathy, P. 1987: 66-67; Thiagarajah, S. 2016: 55-59).
அதில் இரு கைகளும் மடித்து வைத்திருந்த மனித எலும்பைச் சுற்றிவர பல வகைப்பட்ட மட்பாண்டங்களில் நிவேதனப் பொருட்கள் படைக்கப்பட்டிருந்தன. அம்மட்பாண்டங்களில் கறுப்பு – சிவப்பு, தனிக்கறுப்பு, சிவப்பு நிறக் கிண்ணங்கள், வட்டில்கள், பானைகள் என்பன குறிப்பிடத்தக்கன. சில மட்பாண்டங்களில் சுறா மீன் முள்ளுகள், மிருக எலும்புகள், நண்டின் ஓடுகள் என்பனவற்றுடன் சிற்பி, சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. சில மட்பாண்டங்களில் குறியீடுகள் காணப்பட்டன. அத்துடன் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கறுப்பு – சிவப்பு நிற வட்டில் ஒன்றில் பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது (Ragupathy, P. 1987: 115-126; புஷ்பரட்ணம், ப. 2017: 25).
இரண்டாவது ஈமச்சின்னம் சற்றுக் காலத்தால் பிற்பட்டது என்பதை ஈமப் பொருட்களுடன் கண்ட உரோம ரௌலெற்றெட் மட்பாண்டங்கள், இலக்குமி நாணயம் என்பன உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் ஈமச் சின்னத்தின் அமைப்பும், அதனுடன் காணப்பட்ட மட்பாண்டங்களும், படையற் பொருட்களும் முதலாவது ஈமச்சின்னத்தை பெருமளவுக்கு ஒத்த பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்தன (Ragupathy, P. 1987: 115-126; புஷ்பரட்ணம், ப. 2017: 25).
இந்த ஈம அடக்கங்களின் காலத்தை உறுதிப்படுத்தக்கூடிய அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு முறைகள் பயன்படுத்தப்படாவிட்டாலும் இங்கு கிடைத்த காலத்தை வரையறை செய்யக்கூடிய மட்பாண்டக் குறியீடுகள், பிராமி எழுத்துப் பதித்த மட்பாண்ட ஓடுகள், கோ வேதன் என்ற பிராமி எழுத்துப் பொறித்த அரச முத்திரையின் எழுத்து வடிவம் (ஏற்கனவே ஐந்தாவது இயலில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது) என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு இவ் ஈமச் சின்னங்களின் காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கொள்ளலாம்.
குழியடக்கம் (Pit Burial)
இது பெருங்கற்கால மக்களால் பின்பற்றப்பட்ட இன்னொரு வகையான ஈமப்புதையல் வடிவமாகும். இது நிலத்தில் செயற்கையான குழியொன்றை அமைத்து, அதற்குள் இறந்த மனிதனின் உடலை முழுமையாகவோ அல்லது உடலின் முக்கிய பாகங்களையோ குழிக்குள் அல்லது குழிக்குள் வைக்கப்பட்ட மட்பாண்டத்திற்குள் இட்டு, அதன் அருகே வேறு மட்பாண்டங்களில் நிவேதனப் பொருட்களை வைத்து பின்னர் குழியின் வாய்ப்பகுதியை கற்பலகைகள் கொண்டு மூடுவதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

குழியடக்கம்
தீபகற்ப இந்தியாவில் இவ்வகையான குழியடக்கங்கள் தக்கணம், மற்றும் தென்னிந்தியாவில், அதிலும் சிறப்பாகத் தென்தமிழகத்தில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட குழியடக்கம் சில இடங்களில் கற்பதுக்கை ஈமச்சின்னத்துடன் இணைந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனால் ஈழத்தில் பொம்பரிப்பு, மகேவிற்ற ஆகிய இடங்களில் தனித்தும், பின்வேவ, கல்அதற ஆகிய இடங்களில் கல்லறையுடன் இணைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட குழியடக்கம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது (புஷ்பரட்ணம், ப. 2017: 26).
2005 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள வேலணைப் பிரதேசத்தில் சாட்டி என்ற இடத்தில் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது குழியடக்க முறையைச் சார்ந்த ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தத் தொல்லியலாய்வின் போது அப்பிரதேசத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருந்ததற்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் பத்து மண்மேடுகள் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அங்கிருந்த ஈமச்சின்னங்கள் 1 முதல் 2 அடி விட்டமும், ஏறத்தாழ 10 முதல் 12 அடி உயரமும் கொண்ட சிறிய கிணறு வடிவில் அமைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த அம்சம் பெருங்கற்காலப் பண்பாட்டில் பின்பற்றப்பட்ட குழியடக்க ஈமச்சின்னத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இந்த ஈமச்சின்னங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு ஒழுங்கு விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலான சின்னங்களில் காணப்பட்ட மனித எலும்புகளை மூடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வைரமான கற்பலகைகள் பிற இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இப்பலகைகள் பெரும்பாலும் குழிக்குள் இடப்பட்ட எலும்புகளை மூடுவதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சில குழிகளில் மட்பாண்டங்களில் இடப்பட்ட எலும்புகளை மூடுவதற்காகவும் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன (புஷ்பரட்ணம், ப. 2017: 26-27).
ஈம நிவேதனப் பொருட்கள்
இவ் ஈமச் சின்னங்களில் மனித எலும்புகளுடன் சிலவகை மிருகங்கள், பறவைகள், கடல் உயிரினங்கள் என்பவற்றின் எலும்புகளும் இடப்பட்டிருந்தன. மேலும், மனித எலும்பைச் சுற்றி பல அளவிலும், பல வடிவங்களிலும் வைக்கப்பட்டிருந்த மட்பாண்டங்களில் இரும்புக் கருவிகளுடன் பெருமளவிலான கழிவிரும்புகள் (Iron Slags), கல்மணிகள், கைவளையல்கள், தானிய வகைகள், சங்கு, சிற்பி, வேட்டைக் கருவிகள், கூராகத் தீட்டப்பட்ட மான் கொம்புகள், அம்மி, சாணைக் கற்கள், நாளாந்தம் பயன்படுத்திய கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம், ப. 2017: 27). இந்த ஆதி இரும்புக்கால அடக்கமுறைகளும், அவற்றோடு காணப்படும் நிவேதனப் பொருட்களும், முக்கியமாக ஆரம்பகால கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களும், இவற்றின் காலத்தை கி.மு. 1,000 ஆண்டிற்கும் – கிறிஸ்தாப்த காலத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களின் தயாரிப்பு, புதிய வகையான மட்பாண்டங்களின் வருகையைத் தொடர்ந்து, பிரபலமிழந்து நின்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எரியூட்டுதல்
சங்ககாலத்தின் பிற்பகுதியில் பிராமணர்களின் வருகையைத் தொடர்ந்து இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பாண்டியன் நம்பி நெடுஞ்செழியனின் அவையிலிருந்த புலவர் பேரவையில் முறுவலார் தமது புறநானூற்றுப் பாடலில்,
“இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழிப்படுக” – புறநானூறு, 239: 20-21.
எனக் குறிப்பிடுகிறார். இதில் ‘இடுக’ என்பது இறந்தோரை ஓரிடத்தில் அடக்கம் செய்வதையும், ‘சுடுக’ என்பது எரியூட்டுதலையும், ‘படு வழிப்படுக’ என்பது இறந்தோரை நேரடியாக ஈமக்குழியில் படுக்க வைப்பதையும் குறிக்கிறது.
இச்சவ அடக்கமுறைகள் சங்ககாலத்திற்குப் பின்னரும் தொடர்ந்ததற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதனைப் புகார் நகரத்துச் சக்கரவாளக் கோட்டத்தில் நிலவிய பல்வேறு நீத்தார் நினைவுக் கடனைக் கூறும் மணிமேகலை வரிகளில் சாத்தனார் கூறுகிறார்.
“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுவோர்
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்” – மணிமேகலை, 6.111.11. 66-67.
என சுடுவது (Cremation), இறந்தவர்களை ஓரிடத்தில் இட்டு வைப்பது (Post-excarnation Burial), குழியிலிட்டுப் புதைப்பது (Rock Chamber or Cist Burial), தாழிகளில் இட்டு அதன் மேலே மூடி கொண்டு மூடுவது (Urn Burial Capped with Lid) ஆகிய அடக்கமுறைகள் கூறப்படுகின்றன (ராஜன், கா. 2010: 23).
தொடரும்.



