பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும்

November 13, 2025 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: சாலிய எதிரிசிங்க

ஒரு முற்குறிப்பு: சென்ற இதழில் வந்த இந்தத் தொடர் தொடர்பான அறிமுகக் குறிப்பில் “இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தால் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது.” என்று குறிப்பிட்டிருந்தோம். இப்போது அந்தச் சட்டத்தை இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கமும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கும், அதன் மக்களது சுதந்திரத்துக்கு எதிரான மட்டுமீறிய போக்குக்கும், உள்நாட்டிலும் சர்வதேசிய ரீதியிலும் எழுந்த கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் அடுத்து, அதற்கு மாற்றாக ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ (2023) என்று ஒரு சட்டப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பிரதி வர்த்தமானியிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருந்ததால் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இன்னமும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று தோன்றியுள்ள போதை வஸ்துகள் தொடர்பான பிரச்சினைகளை ஒட்டி அதே ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ மீண்டும் நடைமுறையில் பயன்படுத்தப்படுவது தொடங்கியுள்ளது. போதைப் பொருள் தொடர்பான நடவடிக்கைகளில், அவற்றை எதிர்கொள்ளுவதற்குப் பொருத்தமானதாக உள்ள சட்டம் அதுவே என்ற நோக்குடன் மீண்டும் பயங்கரவாதச் சட்டத்தின் சில அம்சங்கள் நடைமுறையில் பாவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள், இந்த மொழிபெயர்ப்பை எழுநாவில் ஆரம்பிக்க முடிவு செய்த காலத்தில் இருந்ததை விடவும், இப்போது அதிக முக்கியத்துவம் மிக்கவையாக அமையும் என்று நம்புகிறோம். 

1. அறிமுகம்

பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் (இலக்கம்: 48/1979 – PTA) போலவே, பொதுசன பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும் (இலக்கம்: 25/1947 – PSO), அதன் பெயரிலேயே வெளிப்படையாகத் தெரிவது போல, இலங்கையின் பொதுமக்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குகின்ற ஒரு சட்டமாகும். உண்மையில் இந்தப் பொதுசன பாதுகாப்புக் கட்டளைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட வெகு காலத்துக்கு முன்னர் சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் கொண்டுவரப்பட்டிருந்த ஒரு சட்டமாகும். இந்தச் சிறிய கட்டுரை, (மேற்குறிப்பிட்ட) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பற்றிச் சற்று விரிவாகவும், அதன் கீழ்  கொண்டுவரப்பட்ட சட்ட நடைமுறைகள் தொடர்பான  சரத்துகள் (Regulations) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மீது எவ்வகையான தாக்கங்களைச் செலுத்தக் கூடியவையாக இருந்தன என்ற சந்தர்ப்பங்களையும் கவனத்திற் கொண்டு அதனை ஆய்வுக்குள்ளாக்குகிறது.

இங்கே பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிய ஓர் ஆய்வுக்கான முயற்சி செய்யப்படவில்லை. அந்தச் சட்டத்தின் பகுதிகள் தொடர்பாக இங்கே பேசப்படுவதெல்லாம், இந்தக் கட்டுரையிலுள்ள உள்ளடக்கங்களை ஒரு வாசகர் இலகுவாக உள்வாங்கிக் கொள்வதற்கான வசதியை வழங்குவதற்காக மட்டுமே. அது பற்றிய வேறு பல அம்சங்கள் இந்த நூலின் வேறு இடங்களில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாக, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. இருந்தபோதும், 19821 இல் இந்தத் ‘தற்காலிக’ என்ற சொல் பாராளுமன்றத்தால் நீக்கப்பட்டு அது நாட்டுக்கான ஒரு நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கான நீண்ட தலைப்பு: “எந்தவொரு தனிநபரோ, தனிநபர்களைக் கொண்ட குழுவோ, இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியேயோ மேற்கொள்ளும் பயங்கரவாதச் செயல்களையும், சட்டவிரோதச் செயல்களையும் தடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடாக அமையும் சட்டம்.” என்று கூறுகிறது. இருப்பினும், இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம், ‘பயங்கரவாதம்’ என்று அழைக்கப்படும் ஒரு குற்றத்தைத்  தெளிவாக வரையறுத்திருக்கவில்லை. உண்மையில் அது, குறிப்பிட்ட சில நபர்களால் செய்யயப்படும் கொலை அல்லது கொலை சம்பவிக்கக் கூடிய விதத்திலான செயலைச் செய்தல், பயங்கரவாத அச்சுறுத்தல்களை மேற்கொள்ளல், அரசாங்கச் சொத்துகளைக் கொள்ளையடித்தல், சட்டவிரோதமான துப்பாக்கிகளைச் சேகரித்தல் போன்ற வகையான குற்றங்களைச் செய்யும் செயல்களையே அது ‘பயங்கரவாதம்’ என்று கருதுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளக்கப் பிரிவு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள எந்தவொரு குற்றத்தையும் அது செய்யப்பட்டதாகக் குறிக்கும் போது அதைச் ‘சட்டவிரோத நடவடிக்கை’ என்றே வரையறை செய்கிறது.

‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ சில குற்றங்களை வரையறை செய்வது போல ‘பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம்’ எத்தகைய குற்றங்களையும் வரையறை செய்யவில்லை. அது செய்வதெல்லாம், ஜனாதிபதிக்கு (பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி – 2 இன் விதிகளுக்கமைய) அவரசர காலச் சட்டத்தைச்  சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தவும், அதன் பிறகு வேண்டிய விதிமுறைகளை உருவாக்கவும் வழிவிடுவது மட்டும் தான். அந்த விதிமுறைகளின் அடிப்படையில்  குற்றங்கள் கண்டறியப்படுவதற்கும், தண்டனைகள் வழங்கப்படுவதற்குமான பரிந்துரைகள் வழங்கப்பட முடியுமான நிலை, அவசரகால விதிமுறைகள் ஜனாதிபதியால் இயற்றப்பட்டவுடன் அமலுக்கு வருகின்றன. கூடவே, இதன்மூலம் அரசியலமைப்பின் விதிகள் தவிர்ந்த வேறு எந்தச் சட்டத்தையும் மீறவோ, திருத்தவோ அல்லது இடைநிறுத்தவோ செய்யக்கூடிய அதிகாரம் அவரது (ஜனாதிபதியின்) கைகளுக்கு வருகிறது.

இது தவிர, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி – 3 இல், பொது ஒழுங்கைப் பராமரிப்பதில் காவல் துறைக்கு உதவுவதற்காக, ஜனாதிபதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும், ஆயுதப்படைகளை அழைக்கவுமான விதிகள் உள்ளன. இவை தொடர்பான விடயங்கள் அனைத்தும் இந்த அத்தியாயத்தில் ஓரளவு விரிவாகக் கையாளப்பட்டுள்ளன.

2006 டிசம்பரில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்2 கீழ் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலமாகத்தான் முதன் முதலாக ‘பயங்கரவாதம்’ என்ற ஒரு குற்றமும், ‘ஒரு குறிப்பிட்ட  பயங்கரவாத நடவடிக்கை’ என்ற குற்றமும் நடைமுறைக்கு வருகின்றன. பின்னால் வந்த இந்தக் ‘குற்றம்’, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையில், இதன் ஆசிரியரால் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளிலிருந்து சுருக்கப்பட்ட, சுருக்கப்படாத பகுதிகளையும், ‘அவசரகாலச் சட்டம்’ என்ற தலைப்பிலான, இலங்கை: மனித உரிமைகளின் நிலை – 2006, இலங்கை: மனித உரிமைகளின் நிலை – 2007 ஆகிய (வெளியீடு: ‘Law and Society Trust, 3, Kynsey Terrace, Colombo – 8) பிரசுரங்களிலும் காணலாம்.

2. அவசரகாலச் சட்டங்களின் நோக்கமும், கட்டுப்பாடும், சட்ட அடித்தளமும்

2.1. சட்ட விதிகளைச் செயற்படுத்தலும் அவற்றின் நோக்கமும்  

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும்3 (PSO) அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 765,156 ஆகிய பிரிவுகளும், அவசியமான அவசரகால விதிமுறைகளை  உருவாக்குவதற்கான சட்ட ரீதியான அடிப்படையை அரசாங்கத்துக்கு வழங்குகின்றன.

முதலாவதாக, அவசரகால விதிமுறைகளை உருவாக்குவதற்கு முன்பாக ஜனாதிபதி ஒரு பிரகடனத்தை7 – அதாவது பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டதின் பகுதி II இனைச் செயற்படுத்தப் போவதான பிரகடனத்தை – வர்த்தமானி மூலமாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இந்தப் பகுதிதான் ஜனாதிபதிக்கு அவசரகால விதிமுறைகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை அளிக்கின்றது. இந்த அறிவிப்புச் செய்யப்பட்ட பின்னர் வரும் ஏதாவது ஒரு எதிர்காலத் தேதியில் இச்சட்டத்தின் பகுதி II இனை அவரால் செயற்படுத்த முடியும். ஆயினும், வழமையாக இந்தப் பிரகடனம் செய்யப்பட்ட அதே தேதியிலிருந்து பொதுசன பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அந்தப் பகுதி நடைமுறைக்கு வருவது வழக்கமாக இருந்துவருகிறது.

இந்தப் பிரகடனத்தை அறிவிப்பது என்பது, பொதுவாக ‘அவசரகாலச் சட்டப் பிரகடனம்’ என்று அழைக்கப்படுகிறது.

அவசரகால விதிமுறைகள், ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட8 தருணத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள், அரசியலமைப்பு விதிகள்9 தவிர்ந்த அனைத்துச் சட்டங்களையும் மீறவோ, அல்லது அவற்றைத்  திருத்தவோ வேண்டிய சட்டரீதியான அதிகாரங்களைக் கொண்டவையாக இருந்தன. இருப்பினும்  அரசியலமைப்பு, அவசரகாலச் சட்டத்திற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள சில ஏற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதாவது, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களான, அடிப்படை உரிமைகளாகக் கொள்ளப்படும் சிந்தனைக்கான சுதந்திரம், மத சுதந்திரம்10, ‘சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான கையாளுகைகள்11 அல்லது தண்டனைகள் என்பவற்றிற்கான தடை, நியாயமான விசாரணைக்கான உரிமை12, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின்13 உத்தரவின் பேரிலன்றி மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை மூலம் தண்டனை வழங்குவதைத் தடை செய்தல், நிர்வாக அல்லது நிர்வாக அதிகாரத்தின் நடவடிக்கைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதற்கு எதிரான விசாரணைக்கும் தீர்வுக்குமான உரிமை14 போன்றவை தவிர்ந்த பிற விடயங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

2.2. பிரகடனத்தின் மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாடு

ஒரு பிரகடனத்தை வெளியிடுவதிலும் அதன் கீழ் அவசரகால விதிமுறைகளை உருவாக்குவதிலும், ஜனாதிபதி பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட சட்டமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். இதனால் பிரகடனம், அவசரகால விதிமுறைகளின் உள்ளடக்கம் ஆகிய இரண்டின் மீதும் பாராளுமன்றம் தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன. ஜனாதிபதியால் செய்யப்பட்ட ஒரு பிரகடனம் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். தவிரவும் அந்தப் பிரகடனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், பாராளுமன்றம் கூடாதபடி ஒத்திவைக்கப்பட்டிருந்தால், பிரகடனம் வெளியிடப்பட்ட பத்து நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதி கோரவேண்டும்.

இத்தகைய ஒரு பிரகடனம், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி II இன் விதிகள் நடைமுறைக்கு வந்த 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், ஒரு மாத காலத்திற்கு (ஒவ்வொரு முறையும்) மட்டும் செல்லுபடியாகும். அதன் பிறகு அது காலாவதியாகிவிடும். பிரகடனம் அவ்வாறு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாவிட்டால், அது 14 நாட்களின் முடிவில் காலாவதியாகிவிடும்15 அல்லது அது பாராளுமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டதும் உடனடியாகக் காலாவதியாகும்16.

அவசரகாலச் சட்டப் பிரகடனம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாத போது அல்லது மீளப் பெறப்படும்போது, அந்தப் பிரகடனத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் போதான காலத்திய அவசரகாலச் சட்டவிதிகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியற்றவை ஆகிவிடுகின்றன. ஆயினும் அது தொடர்பாகச் செய்யப்பட்ட ஏதாவது நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்17. தவிரவும் பாராளுமன்றம் அத்தகைய அவசரகால விதிகளை நீக்கவோ அல்லது திருத்தவோ முடியும்18.

ஒரு பிரகடனம் நடைமுறைக்கு வந்த 14 நாட்களுக்குள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாததால் பிரகடனம் காலாவதியானாலோ, அதைத் தொடர்ந்து முப்பது நாட்களுக்குள் பிறப்பிக்கப்பட்ட எந்தப் பிரகடனமும் அது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் வரை நடைமுறைக்கு வராது19. இது, மேற்கொண்டு ஏதாவது பிரகடனங்களை வெளியிடுவதற்கான ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் மீது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்துகிறது.

மேலும், அவசரகால விதியை நாடுவது (அவசரகால ஒழுங்குமுறை உருவாக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கோருவது), பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்குரிய ஜனாதிபதியின் அதிகாரத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்த விஷயம், 2005 இல் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக ‘அவசரகால ஆட்சியைக் கொண்டுவருதலும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடுகளும்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் நடந்த ஒரு நிகழ்வின் பின்னணியில், பின்னர் பரிசீலிக்கப்படும். 

2.3. வெளியொதுக்கும் (தவிர்க்கும்) சரத்துகள்

ஒரு பிரகடனத்தின்20 அல்லது ‘அவசரகால சட்ட ஒழுங்கு முறைகளின்’ செல்லுபடியாகும் தன்மையை நீதிமன்றங்கள் ஆராய்வதைத் தவிர்க்கும் சரத்துகள் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தில்21 இருக்கின்றன. 

பிரகடனம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள (நீதிமன்றத் தலையீட்டை) வெளியொதுக்கும் அல்லது தவிர்க்கும் சரத்துகளின் (Ouster Clauses) செல்லுபடியாகும் தன்மை குறித்து உயர் நீதிமன்றத்திற்கு தீர்ப்பளிப்பதற்கான ஒரு வாய்ப்பும் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அவசரகால விதிமுறைகள் சம்பந்தமான வெளியொதுக்கும் சரத்துத் தொடர்பாக, அவசரகால விதிமுறைகளை ரத்துச் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இருப்பதாக அது தீர்ப்பளித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பல அவசரகால விதிமுறைகளை22 அது ரத்துச் செய்தும் உள்ளது.

அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்திலும் பிரகடனம் தொடர்பான ஒரு வெளியொதுக்கும் சரத்து23 இருக்கிறது. இருப்பினும், சில சூழ்நிலைகளில், மாகாணத்தில் தன் அதிகாரங்களை ஆளுநர் பயன்படுத்துவது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி வழங்குவதற்காகப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பிரகடனத்தை பயன்படுத்தும் இடங்களிலும் இந்த ‘வெளியொதுக்கல்’ பொருந்தும் என்று தோன்றுகிறது.

மாகாண சபைகள் தொடர்பான வழக்கில்24, மனுதாரர்கள் ஒரு குறிப்பிட்ட பிரகடனத்தை, பரந்த அளவிலான விடயப் பரப்புக்கு விசாலிப்பதன் செல்லுபடியாகும் தன்மையை சவாலுக்கு உட்படுத்தினர். ஆயினும் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை மறுபரிசீலனை செய்வதற்கு மறுத்துவிட்டது. இதற்கான காரணமாக அது, வேறு பல காரணங்களுடன், இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் முழுமையான அல்லது ஏற்றுக் கொள்வதற்கேற்ற வாதத்திறமையை அவ்வாதங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

3. ‘அவசரகால ஆட்சி’யை நோக்கித் திரும்பலும், பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும்  ஜனாதிபதியின் அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடுகளும்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு25 அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலம், முன்னர் கருதப்பட்டபடி 2006 இல் அல்ல, 2005 இலேயே முடிவடைகிறது என்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 17, 2005 அன்று நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்26 திரு. மஹிந்த ராஜபக்ச அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் புதிய நிர்வாக ஜனாதிபதியாக 19 நவம்பர் 2005 அன்று பதவியேற்றார்.

2005 ஆம் ஆண்டில், இரண்டு அவசரகால ஆட்சிக் காலங்கள் இருந்தன. அவசரகால ஆட்சியின் இரண்டாவது காலம் ஓகஸ்ட் 13, 2005 ஆம் தேதிய பிரகடனத்துடன் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி புதிய பிரகடனத்துடன் தொடர்ந்தது. 

அதன்படி, நவம்பர் 13, 2005 இலும் ஜனாதிபதி குமாரதுங்கா பிரகடனத்தை மேற்கொண்டார். இந்தத் தேதியில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 22 நவம்பர் 2005 அன்று மீண்டும் கூடுவதாகத் திட்டமிடப்பட்டது. இந்தத் தேதி, பிரகடனம் செய்யப்பட்ட பத்து நாட்களுக்குள் இருந்தது. இருப்பினும், பிரகடனம் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தால், அரசியலமைப்பின் 155 (4) ஆவது பிரிவின்படி, பிரகடனம் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதை அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி செயற்படுத்த வேண்டும்:

“அவ்வாறாக ஒரு (அவசரகாலப்) பிரகடனம் செய்யப்படும் போது, இந்தச் சட்டப் பிரிவின் பிற விதிகளுக்கு உட்பட்டு, அது பிறப்பிக்கப்பட்டதற்கான சந்தர்ப்பம் உடனடியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும், அதன்படி –

(ii) அத்தகைய பிரகடனம், அது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் காலாவதியாகாத ஏதாவது ஒத்திவைப்பு அல்லது முடித்துவைப்பு மூலம் பிரிக்கப்பட்டால், பத்து நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு பிரகடனம் வெளியிடப்படும்.” (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).

எனவே, அவசரகாலப் பிரகடனம் பிறப்பிக்கப்படும் போது, அரசியலமைப்பு விதிகள் அதில் தலையீடு செய்து, பிரகடனம் செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கோருகின்றன என்பதை ஒருவரால் அறியமுடியும். இது, பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு ரீதியான கடமையான, ஒரு பிரகடனத்தினதும் அந்தப் பிரகடனத்தின் கீழ் செய்யப்பட்ட அவசரகால விதிமுறைகளின் உள்ளடக்கத்தினதும் மீதான தனது மேற்பார்வையையும் கட்டுப்பாட்டையும் பயன்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடாகும்27.

இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பு வரம்புகள் இருந்தபோதிலும், ஜனாதிபதி  ராஜபக்ச ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம்28 கூடவேண்டிய தேதியை 2005 நவம்பர் 21 நள்ளிரவு முதல் 2005 நவம்பர் 2529 வரை நீடித்து ஒத்திவைத்தார். இதன் மூலம் பாராளுமன்றம் மேற்குறித்த 10 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என்று ஏற்கனவே நவம்பர் 13, 2005 தேதியில் செய்யப்பட்டிருந்த பிரகடனத்திற்கு முரணாக, அது கூடுவதிலிருந்து தடுத்திருந்தார். இது தொடர்பாக, அவசரகாலப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட காலங்களில், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு, அரசியலமைப்பு ஒரு வரம்பை விதிக்கிறது என்றும், 2005 நவம்பர் 21 முதல் 2005 நவம்பர் 25 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்பால் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறிச் செயற்பட்டார் என்றும் வாதிக்கப்பட்டது.

முந்தைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கத்திற்காகவே இந்தப் பாராளுமன்ற ஒத்திவைப்பு நடவடிக்கை நடந்ததாகப் பரவலாக நம்பப்பட்டது. இப்படியான சூழ்நிலமைகளில், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த, பல சுவாரஷ்யமான கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக ஜனாதிபதி அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறினாரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது (ஆயினும், இந்தப் பிரச்சினைகளை இவ்விடத்தில் ஆராய்வது, இந்த ஆய்வறிக்கையின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால் தவிர்க்கப்படுகிறது).

13 நவம்பர் 2005 அன்று வெளியிடப்பட்ட பிரகடனத்தின் தன்மையைப் பொறுத்தவரை, அது நவம்பர் 25, 200530 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதாலும், அது பிரகடனத்திற்குப் பின்னான 14 நாட்களுக்குள் இருந்தது என்பதாலும், அது ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.


4. அவசரகால விதிமுறைகள்: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் அவற்றின் தாக்கம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த நாட்டின் நிரந்தரச் சட்டமாகும். கூடவே, அதன் கீழ் உருவாக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான கைதுகள், தடுப்புக்காவல்கள், விசாரணைகள், தண்டனைகள் என்பவை தொடர்பாக, அது தன் சொந்த சட்ட ஆட்சியைக் கொண்டுள்ளது.

மறுபுறத்தில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் நிரந்தரத் தன்மையைக் கொண்டவையல்ல. தவிரவும், அவற்றின் காலம் அவசரகாலச் சட்டம் நிலவும் காலத்திற்கு – குறிப்பாக, இந்த விதிமுறைகள் ஜனாதிபதியால் அல்லது பாராளுமன்றத்தால் ஏற்கனவே ரத்துச் செய்யப்பட்டிருந்தால் ஒழிய –  (பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி II அமலில் உள்ள போது) மட்டுமே செல்லுபடியாகுபவை. முன்னர் குறிப்பிட்டது போல, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, அரசியலமைப்பின் விதிகளைத் தவிர்ந்த31 வேறு எந்தச் சட்டத்தின் விதிகளும், மீறுதல், திருத்துதல் அல்லது இடை நிறுத்துதல் போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை. ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளில், உருவாக்கப்பட்ட விதிமுறைகளைப் பொறுத்து தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டபூர்வ ஆற்றலைக் கொண்டுள்ளன. டிசம்பர் 2006 இல், ஜனாதிபதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு அவசரகாலச் சட்டவிதியை உருவாக்கினார். அந்த விடயம் கீழே கவனத்தில் எடுக்கப்படுகிறது.

டிசம்பர் 1, 2006 அன்று விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும்32 செயற்பாட்டாளர்களால் நடாத்தப்பட்ட பாதுகாப்புச் செயலாளர் மீதான படுகொலை முயற்சியைத் தொடர்ந்து, டிசம்பர் 6, 2006 அன்று ஜனாதிபதி அவசரகால (பயங்கரவாதத்துக்கும், குறிப்பிட்ட சில பயங்கரவாத நடவடிக்கைகளுக்குமான தடுப்பும் தடையும் சம்பந்தமான – Prevention and Prohibition) விதிமுறைகளை வெளியிட்டார். இந்த விதிமுறைகள் ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விதிமுறைகள்’ என்று பிரபலமாகக் குறிப்பிடப்பட்டன.

இந்த விதிமுறைகள் பல குற்றங்களை உருவாக்கியதுடன், அதன் விதிமுறை 6, நபர்கள் அல்லது நபர்களின் குழுக்கள் தனித்தனியாகவோ அல்லது பிற நபர்கள் மூலமாகவோ செய்யும் ‘பயங்கரவாதம்’, ‘ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத நடவடிக்கை’ அல்லது ‘எந்தவொரு நபரோ, குழுவோ அல்லது நபர்களது கூட்டிலான குழுக்களால் செய்யப்பட்ட எந்தவொரு பயங்கரவாதச் செயல் அல்லது குறிப்பிட்ட ஒரு பயங்கரவாத நடவடிக்கையை முன்கொண்டு செல்லும் வேறு எந்த நடவடிக்கை’ போன்றவற்றைத் தடைசெய்வதாக அமைந்தது.

ஒழுங்குமுறை 20 ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘குறிப்பிட்ட பயங்கரவாத நடவடிக்கை’ என்ற சொற்களை விளக்கியது. மேலும் ‘குறிப்பிட்ட பயங்கரவாத நடவடிக்கை’ என்பதன் வரையறை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குற்றத்தை (சட்ட இல: 48/1979) உள்ளடக்கியது.

விதிமுறை 7, எந்தவொரு நபரும் கூட்டங்களில் பங்கேற்பதையோ, அல்லது ஒழுங்குமுறை 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை மீறும் வகையில் செயற்படும் எந்தவொரு நபர் அல்லது நபர்களின் குழுக்களையோ, அல்லது அமைப்புகளில் சேருவதையோ அல்லது அடைக்கலம் கொடுப்பதையோ அல்லது ஊக்குவிப்பதையோ அல்லது ஆலோசனை வழங்குவதையோ தடைசெய்தது. இந்த ஒழுங்குமுறை, ஒழுங்குமுறை 6 இனை மீறிய நபர்களுக்கு சட்ட உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதைக் கூடத் தடை செய்வதாகத் தெரிகிறது.

விதிமுறை 8, விதிமுறைகள் 6 மற்றும் 7 இனை மீறும் நபர்கள் அல்லது நபர்களின் குழுக்களுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுவதைத் தடை செய்தது. பரிவர்த்தனைகளில், நன்கொடை அளிப்பதோ விற்றல் வாங்குதல் செய்வதோ, நிதி பெறுதல் மற்றும் பொருள் ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ கடன் வழங்குதல் ஆகியவையும் அடங்குகின்றன. இருப்பினும், இந்த விதிமுறைகளில் ஒரு விதிமுறை, தேசிய அல்லது சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட நபர்கள், தகுதிவாய்ந்த அதிகாரியின் எழுத்துபூர்வ ஒப்புதலுடன் விதிமுறைகள் 6 அல்லது 7 இனை மீறும் நபர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபட அனுமதித்தது. தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் விதிமுறைகள் 6 அல்லது 7 இனை மீறும் நபர்களுக்கு ‘அவசர மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ உதவி’ வழங்க அனுமதிக்கும் மற்றொரு விதிமுறை இருந்தது. வெள்ளம் அல்லது பூகம்பங்கள் போன்ற அனைத்து அவசர மனிதாபிமான உதவிகளுக்கும் இதே போன்ற விதிவிலக்குத் தேவை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

விதிமுறை 6 இனை மீறும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு, தேசிய பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது பாதகமான ஏதாவதொரு தகவலை வழங்குதல் என்பவற்றை விதிமுறை 9 தடை செய்தது. இது கருத்துச் சுதந்திரத்தின் மீது நியாயமற்ற கட்டுப்பாட்டை விதிக்கும் ஆபத்தைக் கொண்ட ஒரு விதியாகும். உதாரணமாக, ஊழலை அம்பலப்படுத்தும் ஊடக அறிக்கைகள், தரமற்ற அல்லது காலாவதியான இராணுவ உபகரணங்களை அதிக விலைகொடுத்து வாங்குதல் போன்ற விடயங்களைக் கேள்விக்குள்ளாக்கல் போன்ற செயற்பாடுகள் கூட இந்தத் தடைக்குள் வரலாம். எந்தவொரு நிகழ்விலும், இந்த விதிமுறை, கருத்துச் சுதந்திரத்தில், குறிப்பாக ஊடகச் செயற்பாட்டில் ‘உறைய வைக்கும்’ விளைவை ஏற்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது.

விதிமுறை 10, விதிமுறை 6  என்பவற்றை மீறுவதற்குக் குறைந்தபட்சம் பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும், விதிமுறைகள் 7, 9 ஆகியவற்றை மீறுவதற்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும், விதிமுறை 8 இனை மீறுவதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக அமைந்திருந்தது

இந்த விதிமுறைகளின் கீழ் சதி செய்தல், சதி முயற்சி செய்தல், அதற்கான திட்டங்களைத் தயாரித்தல், அதற்கு உதவி செய்தல், கூடவே அதற்கு உடந்தையாக இருத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கான தண்டனைகளாக, ஆயுள் தண்டனை (அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளையும் பறிமுதல் செய்தல்) முதல் ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை வரை (மற்றும் அமைச்சர் வர்த்தமானியில் வெளியிட்டவுடன் நடைமுறைக்கு வரவிருக்கும் மற்றொரு குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை) நடைமுறையில் இருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சதி செய்தல், அதற்கு முயற்சி செய்தல், தயாரித்தல் மற்றும் உடந்தையாக இருத்தல் ஆகிய குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இது இருபது ஆண்டுகள் வரை இருக்கலாம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றங்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் போது வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பான வேறுபாடுகளை மேற்கண்ட விதிகளை ஆராயும்போது எளிதாகக் காண முடியும்.

ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி, பயங்கரவாதத் தடைச் சட்டம், தனக்கேயுரிய அதிகாரத்தின் மூலம் உருவாக்கிக்கொண்ட (குற்றச் செயல்களுக்கான) எல்லைகளின் அடிப்படையிலான கைதுகள், தடுப்புக்காவல்கள், விசாரணைகள் அனைத்திலும் அதன் சொந்தச் சட்ட ஆட்சியே நிலவுகிறது.

மறுபுறத்தில், அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படும் போது, அவசரகாலச் சட்டங்களின் அடிப்படையில் உருவாகும் குற்றங்கள் தொடர்பான கைது, தடுப்புக்காவல், விசாரணை என்பவற்றைச் செய்வதற்காக அவை சம்பந்தமான சட்டரீதியான அதிகாரத்தை வழங்கும் அவசரகாலச் சட்டங்களின் தொகுப்பு உருவாக்கப்படுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்தகால அனுபவங்கள், அவசரகாலச் சட்டங்களின் விதிகள், கைதுகள், தடுப்புக் காவல்கள், விசாரணைகள் என்பவை தொடர்பான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  சட்ட ஏற்பாடுகள் பாரிய அளவில்  வேறுபட்டுள்ளன என்பதைக் காட்டுவதாக உள்ளன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள், அவசரகாலச் சட்டத்தின் கீழ் வருகின்ற குற்றங்களாகக் கொண்டுவரப்படும் போது, ஒரு சுவாரசியமான சட்டரீதியான கேள்வி எழுகிறது. அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள், அவசரகாலச் சட்டம் செயற்படும் ஒரு காலகட்டத்தில், இடைநிறுத்தப்படுமா என்பதுதான் அந்தக் கேள்வி. இது அரசியலமைப்பும் சட்டபூர்வ விதிகளும் பின்வருமாறு வழங்கப்படுவதால் ஏற்படுகிறது:

அரசியலமைப்பின் பிரிவு 155 (1) கூறுகிறது: “அரசியலமைப்புத் தொடங்குவதற்கு உடனடியாக முன்னதாகத் திருத்தப்பட்டு நடைமுறையில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகக் கருதப்படும்.”

அரசியலமைப்பின் பிரிவு 155 (2) கூறுகிறது: “பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் அல்லது பொதுப் பாதுகாப்புத் தொடர்பான, தற்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம், அரசியலமைப்பின் விதிகளைத் தவிர வேறு எந்தச் சட்ட விதிகளின் செயற்பாட்டையும் மீறுதல், திருத்துதல் அல்லது இடைநிறுத்துதல் ஆகியவற்றுக்கான, சட்டபூர்வ அதிகாரத்தைக் கொண்ட விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை உள்ளடக்கியதாகும்.”

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 7 கூறுகிறது: “ஓர் அவசரகால ஒழுங்குமுறை, அல்லது அத்தகைய ஒழுங்குமுறையின்படி உருவாக்கப்பட்ட எந்தவொரு உத்தரவு, அல்லது விதி என்பவை, எந்தவொரு சட்டத்திலும் உள்ள முரண்பாடான எதையும் மீறி நடைமுறைக்கு வரும்; மேலும் அத்தகைய எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது அத்தகைய உத்தரவு அல்லது விதிக்கு முரணானதாக இருக்கக்கூடிய எந்தவொரு சட்டத்தின் விதியும், இந்தக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ், அதன் செயற்பாட்டில் அந்த விதி திருத்தப்பட்டிருந்தாலோ, மாற்றியமைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது இடைநிறுத்தப்பட்டிருந்தாலோ, அத்தகைய முரண்பாட்டின் அளவிற்கு, அந்த ஒழுங்குமுறை, உத்தரவு அல்லது விதி நடைமுறையில் இருக்கும் வரை எத்தகைய விளைவையும் ஏற்படுத்தாது.”

டிசம்பர் 6, 2006 இன் பயங்கரவாத எதிர்ப்புத் தீர்மானம் நடைமுறையில் இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் இடைநிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கான பதில், இந்தப் பார்வைகள் எவ்வாறு வியாக்கியானப் படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்ததுதான். துரதிர்ஷ்டவசமாக, இந்த சுவாரஷ்யமான விவாதம், இன்னொரு சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது.

5. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பகுதி III

முன்னர் விளக்கியது போல, பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பிரிவு 5 இன் கீழ் அவசரகால ஒழுங்குமுறையை உருவாக்குவதற்கு, செல்லுபடியாகும் அவசரகாலப் பிரகடனம் இருப்பது ஒரு முன்நிபந்தனையாகும். இந்தப் பிரிவு பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பகுதி II இல் உள்ளது. இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பகுதி III ஆல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், செல்லுபடியாகும் தன்மையுள்ள ஓர் அவசரகாலப் பிரகடனத்தின் இருப்பைச் சார்ந்தவை அல்ல.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பகுதி Ill இன் கீழ் ஜனாதிபதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதாவது பொது ஒழுங்கைப் பராமரிக்கக் காவல்துறைக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகளை அழைப்பது (பிரிவு 12), எந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது (பிரிவு 16), சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான சேவைகளை அத்தியாவசியச் சேவைகளாக அறிவிப்பது (பிரிவு 17) என்பவை.

பிரிவுகள் 12, 16, 17 ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் மற்றும் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குச் (ஒரே நேரத்தில்) செல்லுபடியாகும். இந்த உத்தரவுகளை ஜனாதிபதி எந்த நேரத்திலும் ரத்துச் செய்யவோ அல்லது மேலும் நீடிக்கவோ வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.

இருப்பினும், இந்தப் பிரிவுகளின் (12, 16, 17) கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்படுவதுடன், அந்த உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் கூடாதபடி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தால் அல்லது இடைநிறுத்தப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்.

மேற்கூறிய பிரிவுகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு உத்தரவையும் ரத்துச் செய்ய அல்லது திருத்த பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. முடிவுரை

இந்தச் சிறிய அத்தியாயத்தின் நோக்கம், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் செயற்பாடு மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீது அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பவை குறித்து ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்குவதாகும். இங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் இலங்கையில் நிலவும் ‘பொதுப் பாதுகாப்பின் முக்கிய’த்தைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தைப் பெறுவதற்கு, வாசகருக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு

இந்தக் கட்டுரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சட்ட ரீதியான தன்மைகளைப் பற்றிப் பேசுவதாக அமைகிறது. இக் கட்டுரையை, இந்தத் தொகுப்புக்காக எழுதிய ’சாலிய எதிரிசிங்க’ அவர்கள் ஒரு சட்டத்தரணியாகவும், மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளராகவும் இயங்கி வருபவர். மனித உரிமைகள், மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட சட்டரீதியான சவால்கள் என்பவை தொடர்பாக பல ஆய்வறிக்கைகளையும் இவர் எழுதியுள்ளார்.

அடிக்குறிப்புகள்

  1. Act No.10 of 1982.
  2. The emergency (Prevention and prohibition of Terrorism and specified Terrorist Activities) Regulations No. 07 of 2006.
  3. Public Security Ordinance No. 25 of 1947.
  4. Inter alia, empowers Parliament to confer on the President the power to make emergency regulations.
  5. Keeps in force the Public Security Ordinance No. 25 of 1947 as amended, and provides inter alia, that the power to make emergency regulations under the Public Security Ordinance shall include the power to make regulations having the legal effect of over-riding, amending or suspending the operation of any law except the provisions of the Constitution.
  6. The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka.
  7. Section 2 of the Public Security Ordinance No. 25 of 1947.
  8. Section 11 of the Public Security Ordinance No. 25 of 1947.
  9. See Article 155 (2) of the Constitution.
  10. Article 10 of the Constitution.
  11. Article 11 of the Constitution.
  12. Article 13 (3) of the Constitution.
  13. Article 13 (4) of the Constitution.
  14. Article 17 of the Constitution.
  15. Article 155 (6) of the Constitution.
  16. Article 155 (8) of the Constitution.
  17. Section 4 of the Public Security Ordinance No. 25 of 1947.
  18. Section 5 (3) of the  Public Security Ordinance No. 25 of 1947.
  19. Article 155 (7) of the Constitution.
  20. Section 3 of the Public Security Ordinance No. 25 of 1947.
  21. Section 8 of the Public Security Ordinance No. 25 of 1947.
  22. Joseph Perera Alias Bruten Perera v. The Attorney – General ([1992] 1 Sri L.R 199); Karunathilaka and another v. Dayananda Dissanayake, Commissioner of Elections and others ([1999] 1 Sri L.R. 157); Lilanthi De Silvav. Attorney – General and Others ([2000] 3 Sri L.R. 155); N.W.M Jayantha Wijesekera and others v. Attorney – General and others, S.C. (Fr) Application Nos. 243/06, 244/06, 245/06. S.C. Minutes 16 October 2006.
  23. Article 154J.
  24. Karunathilaka and Another v. Dayananda Dissanayake, Commissioner of Elections and others [1999] 1 Sri L.R. 157.
  25. Ven. Dr. Omalpe Sobhitha Thero Vs Dayananda Dishanayake and Another, S.C. (FR) Application No. 278/ 2005, S.C. Minutes 26th August 2005.
  26. United People’s Freedom Alliance.
  27. See “2.2 Parliamentary Control of Proclamation”
  28. The President’s power to prorogue Parliament is provided in Article 70 (1) of the Constitution, which states: “The President may. from time to time, by Proclamation summon, prorogue and dissolve Parliament”.
  29. Hansard Volume 162 – No. 1 of 25 November 2005: Columns 48 – 165.
  30. Article 155 (2) of the Constitution states; “The power to make emergency regulations under the Public Security Ordinance or the law for the time being in force relating to public security shall include the power to make regulations having the legal effect of over – riding, amending or suspending the operation of the provisions of any law except the provisions of the Constitution”; Section 7 of the PSO states: “An emergency regulation or any order or rule made in pursuance of such a regulation shall have effect notwithstanding anything inconsistent therewith contained in any law; and any provision of a law which may be inconsistent with any such regulation or any such order or rule shall, whether that provision shall or shall not have been amended, modified or suspended in its inconsistency have no effect so long as such regulation, order or rule shall remain in force.”
  31. Liberation Tigers of Tamil Eelam.
  32. Published in the Gazette Extraordinary No. 1474/5 of 6 December 2006.


About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்