செல்வநாயகம் பதவி துறப்பும் இடைத்தேர்தலும்
புதிய அரசியல் திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிப்பதற்காக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் (1973 இல்) துறந்தார். அரசாங்கத்திடம் தனது கொள்கையை முன்வைத்துப் போட்டியிடும்படி அழைப்பு விடுத்தார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலைப் பிற்போட்டது. காசி ஆனந்தன் அரசுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து தனது மொழிபெயர்ப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனால் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் என்போர் கைது செய்யப்பட்டனர். மே 22 இல் கைது செய்யப்பட்ட பலர் விடுதலை செய்யப்பட்ட போதும், மாணவர் பேரவையைச் சேர்ந்த 42 பேர் விடுதலை செய்யப்படவில்லை.
பௌத்த சிங்களப் பாடசாலைகள் தொடர்பாகச் சட்டத்தை மீறுதல்
புத்தூர், அச்சுவேலி, அல்வாய், கரவெட்டியில் உருவாக்கப்பட்ட பௌத்த – சிங்களப் பாடசாலைகள், தமிழரசுக்கட்சியின் தொடர்ச்சியான எதிர்ப்பினால் தமிழ்ப் பாடசாலைகளாகவே இயங்கின. 1973 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அரசு புத்தூர் பாடசாலைக்கு சிங்களத் தலைமை ஆசிரியரையும் உதவி ஆசிரியரையும் அனுப்பி பாலர் வகுப்பில் தமிழ்ப் பிள்ளைகளுக்கு சிங்களத்தில் கல்வி புகட்ட முயற்சித்தது. தமிழர் கூட்டணி அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு அப்பாடசாலையின் அருகில் சட்டத்தை மீறி 1973 ஏப்ரல் 6 ஆம் திகதி சட்ட மறுப்புப் பாடசாலையைத் திறந்தது.
அதன் பொறுப்பாளர்களாக செல்வநாயகம், மு. சிவசிதம்பரம், வி. தர்மலிங்கம், அ. அமிர்தலிங்கம், புத்தூர் ஆனந்தன் என்போர் நியமிக்கப்பட்டனர். கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கதிரவேலுப்பிள்ளை சட்டவிரோதப் பாடசாலை நிறுவப்பட்டதையும் அதன் பொறுப்பாளர்களது விவரங்களையும் கல்வி அமைச்சுக்கு அறிவித்தார். எனினும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்களப் பாடசாலைகளில் இரண்டு பிள்ளைகள் இருக்க, ஏனைய பிள்ளைகள் அனைவரும் தமிழ்ப் பாடசாலையில் சேர்ந்தனர்.
தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம் (1973 ஜனவரி 28)
1972 இன் பிற்பகுதியில் ‘தமிழ் மாணவர் பேரவை’ முற்றாகவே தலைமறைவு இயக்கமாக மாறிய நிலையில் இருந்தது. தமிழர் கூட்டணியும் போராட்டத்தில் அக்கறை இல்லாமல் இருந்தது. பிரான்சிஸ், பத்மநாபா, வரதராஜப் பெருமாள், புஸ்பராஜா போன்ற இளைஞர்கள் தமிழர் கூட்டணியைத் தீவிரமாகப் போராடும்படி மகஜர் தயாரித்து அ. அமிர்தலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
தமிழர் கூட்டணி மகஜரைப் பெற்றுக் கொண்டாலும், அதில் அக்கறையில்லாமல் இருந்த நிலையில் அரசியல் உணர்வு பெற்ற இளைஞர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் விடுதலையை முன்னெடுக்கக்கூடிய வகையில் ஓர் இளைஞர் இயக்கத்தை உருவாக்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கான முதற்கூட்டம் யாழ் பிரதான வீதியில் உள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் காரியாலயத்தில் 1973 ஜனவரி 15 ஆம் திகதி நடைபெற்றது.
இம்முயற்சி போதியளவு வெற்றி அளிக்காமையினால், இன்னொரு கூட்டம் 1973 ஜனவரி 28 ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பு தோற்றம் பெற்றது. தலைவராகவும் அமைப்பாளராகவும் சி. புஸ்பராஜா தெரிவு செய்யப்பட்டார். நிர்வாகக்குழு அங்கத்தவர்களாக பிரான்சிஸ், பத்மநாபா, இ. தவராசா, அ. வரதராஜப்பெருமாள், எம். போல்பிள்ளை என்போர் செயற்பட்டனர். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அவர்கள் தமது விடுதலைக்குப் போராடுகின்றார்கள் என்ற கோசங்கள் எழுச்சி அடைந்தன. “தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமாயின் தன்னைத்தானே ஆளுதல் வேண்டும்” என்ற குரல் ஓங்கி ஒலித்தது.
தமிழ் இளைஞர் பேரவையின் போராட்டங்கள்
1. குடியரசு தினத்தில் ஹர்த்தால்
தமிழ் இளைஞர் பேரவை தொடங்கியவுடன் இலங்கைக் குடியரசின் முதலாவது ஆண்டு நிறைவு தினமான 1973 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி வடக்கு – கிழக்கெங்கும் ஹர்த்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஹர்த்தால் பெரு வெற்றியைக் கொடுத்தது.
2. மௌன ஊர்வலம்
இரண்டாவது போராட்டமாக மௌன ஊர்வலம் நடாத்தப்பட்டது. அரசுக்கு எதிராக வாய்களையும் கைகளையும் கறுப்புத்துணியால் கட்டி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1973 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி இவ் ஊர்வலம் இடம்பெற்றது. மருதனார்மடம் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் கோட்டை வரை ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. தமிழ் இளைஞர் பேரவையின் சார்பில் சி. புஸ்பராஜா உரை நிகழ்த்தினார். யாழ் மாநகர மேஜர் அல்பிரட் துரையப்பா ஊர்வலத்தைக் குழப்ப முயற்சித்த போதும் அது தோல்வியடைந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், அ. குமரகுரு, வி. தர்மலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். அல்பிரட் துரையப்பாவின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காகவே ஊர்வலத்தில் கலந்து கொள்வதாக அமிர்தலிங்கம் கூநினார்.
3. கறுப்புக் கொடிப் போராட்டம்
1973 ஆம் ஆண்டு தை மாதம் 13 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைக் குழு தமிழ்ப் பிரதேசங்களுக்கு வரும் அமைச்சர்கள் அனைவருக்கும் கறுப்புக் கொடி காட்டி அவர்களின் வருகையைப் பகிஷ்கரிப்பது எனத் தீர்மானித்தது. ஊர்காவற்றுறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ. இரத்தினம், இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முதலாவது கறுப்புக் கொடிப் போராட்டத்தை ஊர்காவற்றுறை தொகுதியிலேயே மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
1973 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி தபால் தந்தி அமைச்சர் செல்லையா குமாரசூரியர், வேலணை மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. கறுப்புக் கொடிப் போராட்டத்திற்காக யாழ் பிரதான வீதியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைச் செயலகத்தில் மக்கள் கூடினர். அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், அ. குமரகுரு, வி. தர்மலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், சேனாதிராஜா, தவராஜா, போல்பிள்ளை, பத்மநாபா, பிரான்சிஸ், வரதராஜப்பெருமாள், சரவணபவானந்தன், போன்றோரும் வருகை தந்தனர். வல்வெட்டித்துறையில் இருந்து இரண்டு தட்டு வானில் வந்தவர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் அனைவரும் கோசங்கள் எழுப்பியடி வேலணைக்குச் சென்றனர். அங்கு பலத்த பொலிஸ் காவல் போடப்பட்டிருந்தது. குமாரசூரியர் வரும் பாதையை நெருங்க முடியாமல் பொலிசார் வளையம் அமைத்துப் பாதுகாப்புக் கொடுத்தனர். இளைஞர்கள் நிகழ்வு நடைபெற இருந்த வேலணை மகாவித்தியாலய மையத்திற்குள் நுழைந்து கறுப்புக்கொடி காட்ட முயற்சித்த போதும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் அதனைத் தடுத்தனர். இந்நிலையில் வேலணை மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இருந்த மைதானத்தில் ஒன்றுகூடி கறுப்புக் கொடி காட்டப்பட்டது. குமாரசூரியர் வந்த போது இருட்டாகி விட்டதால் வாகனங்கள் மூலம் வெளிச்சம் காட்டி கறுப்புக் கொடி காட்டப்பட்டது. எதிர்ப்புகள், கோசங்களும் எழுப்பப்பட்டன.
இரண்டாவது கறுப்புக் கொடிப் போராட்டம் அமைச்சர் குமாரசூரியர் மல்லாகத்திற்கு வந்தபோது இடம்பெற்றது. முதல் நாள் இரவு மல்லாகம் சந்தி எங்கும் அமைச்சருக்கு எதிரான சுலோகங்கள் இளைஞர்களால் எழுதப்பட்டன. அமைச்சர் பங்குபற்றவிருந்த நிகழ்ச்சிக்கான மண்டபமும் பெற்றோல் குண்டு வீச்சினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு அமைச்சர் வருகை தந்த போது எதிர்பார்த்ததை விடப் பெருந்திரளான மக்கள் கறுப்புக்கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மல்லாகம் சந்திக்கு அருகே காங்கேசன்துறை வீதியில் இருந்த பழையகால வீட்டுடன் கூடிய வளவில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு கறுப்புக் கொடியைக் காட்டினர். அமைச்சரின் வாகனம் வந்ததும் இளைஞர்கள் அமைச்சரின் வாகனத்திற்கு குறுக்கே நின்று கறுப்புக் கொடி காட்டினர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் அதில் இணைந்து கொண்டனர். பொலிசார் தடியடிப் பிரயோகம் நடாத்தி மீண்டும் பழைய வளவுக்குள் போராட்டக்காரர்களைத் தள்ளி விட்டனர். சி. புஸ்பராஜா மதில் மேல் ஏறி நின்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி கூறினார். இளைஞர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குமிடையே முரண்பாடு அதிகரித்தது. மூன்றாவது கறுப்புக் கொடிப் போராட்டம் கைதடிக்கு வருகை தந்த சுகாதார அமைச்சருக்கு காட்டப்பட்டது. அமைதியாக நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு அருகில் இருந்த வளவில் நின்று காட்டினர். இதனால் பொலிசாருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
ஐம்பது வரையான இளைஞர்கள் சுகாதார அமைச்சர் நிகழ்வு முடிவடைந்து திரும்பும் போது கைதடி வைத்தியசாலைக்கருகில் அமைச்சரின் வாகனத்திற்குக் குறுக்கே சென்று கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக்கொடி காட்டிய இளைஞர்களில் சி. புஸ்பராஜா, காங்கேசன்துறை கமலநாதன், பத்மநாபா, கிருபாகரன், காரைநகர் செல்வம், பூநகரி மரியதாஸ் ஆகியோரைக் கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர். சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரத்தினம் இளைஞர்களை சொந்தப் பிணையில் விடுவித்தார்.
இளைஞர்களுக்கு எதிராக பொலிசார், பொது இடத்தில் கலவரம் செய்தனர், குழப்பம் விளைவித்தனர் என்கின்ற குற்றங்களைச் சுமத்தி சாவகச்சேரி நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். நீதிமன்றத்தில் சமூகமளித்த அனைத்துச் சட்டத்தரணிகளும் இளைஞர்களுக்காக வாதாட முன்வந்தனர். வி.என். நவரத்தினம், ஆலாலசுந்தரம், அம்பிகைபாகன், அ. குமரகுரு, தம்பிராசா ஆகியோர் இச்சட்டத்தரணிகளுக்குள் அடங்குவர். முதலாம் எதிரியாக சி. புஸ்பராஜாவும், இரண்டாம் எதிரியாக கமலநாதனும், பின்பு ஏனையவர்களும் வரிசையாக நின்றனர்.
நீதிபதி “குற்றவாளியா? சுற்றவாளியா?” எனக் கேட்ட போது இளைஞர்கள் சுற்றவாளி எனப் பதில் அளித்தனர். நீதிபதி யோகநாதன் எச்சரிக்கை செய்து அனைவரையும் விடுதலை செய்தார். இதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சர் பீற்றர் கெனமனுக்கு எதிராகவும், 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீதி அமைச்சர் என்.எம். பெரேராவுக்கு எதிராகவும் கறுப்புக் கொடிப் போராட்டம் இடம்பெற்றது. பரந்தனில் நிதி அமைச்சர் என்.எம். பெரேராவுக்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது, அமிர்தலிங்கம் உட்படப் பலரும் பொலிசாரால் தாக்கப்பட்டதோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐம்பது நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்
1. வடக்கில் போராட்டம்
தமிழ் மாணவர் பேரவையின் தலைமைக் குழுவில் இருந்த சத்தியசீலன் அமைப்பு வேலையின் பொருட்டு மட்டக்களப்பு சென்றபோது 1973 ஆம் ஆண்டு மாசி மாதம் 22 ஆம் திகதி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்த 42 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். முத்துக்குமாரசுவாமி, வண்ணை நித்தியானந்தன், மாவை சேனாதிராஜா, குருகுலசிங்கம், சபாலிங்கம் சூரியகுமாரன், அப்பு போன்றோரும் இதில் அடங்குவர்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ரயில் கடவையுடன் சைக்கிள் கடை வைத்திருந்தவர் தான் அப்பு ஆவார். கடைக்குப் பின்னால் பழைய காலத்து பெரியதொரு வீடு இருந்தது. இச்சைக்கிள் கடையும், வயோதிபப் பெண்ணுக்கு சொந்தமான பழைய வீடும், தமிழ் மாணவர் பேரவையின் செயற்பாட்டு மையமாக இருந்தது. C.T.B. மணியத்தின் வீடு இன்னோர் மையமாக விளங்கியது. கைது செய்யப்பட்ட தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர்.
பஸ்தியாம்பிள்ளை, பேரம்பலம் செல்வநாயகம், பண்டா போன்ற இரகசியப் பொலிசார் சித்திரவதைகளில் ஈடுபட்டனர். வண்ணை நித்தியானந்தன் சிறையில் இருந்து கடிதம் மூலம் தங்களின் விடுதலைக்காகப் போராட்டம் நடாத்தும்படி தமிழ் இளைஞர் பேரவையை வேண்டினார். வரதராஜப் பெருமாள் ஓர் இடத்தில் இரண்டு நாட்கள் வீதம், 100 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த போது ஒரு நாள் மட்டும் ஐம்பது இடங்களில் ஐம்பது நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி முழு ஒத்துழைப்புத் தருவதாகவும் அமிர்தலிங்கம் உறுதியளித்தார். இப்போராட்டம் யாழ்ப்பாணத்தில் தொடங்கி கிழக்கு மாகாணம், மலையகம் என்பவற்றிலும் நடாத்தப்பட்டு, யாழ்ப்பாணத்தில் முடிப்பதாகத் திட்டமிடப்பட்டது. பிரதான கோரிக்கையாக “சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டுவா” என்பதை முன்வைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. துண்டுப்பிரசுரப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
முதல்நாள் உண்ணாவிரதப் போராட்டம் 1973 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள், சிறையில் இருந்த இளைஞர்களின் பெற்றோர், உறவினர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டனர். விடுதலைக் கீதங்களும் பாடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர்களும், தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களும் உரையாற்றினர். முதல் நாள் போராட்டத்தை அ. அமிர்தலிங்கம் பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். இரண்டாம் நாள் போராட்டம் குருநகர் வாசிகசாலை முன்றலில் நடாத்தப்பட்டது. குருநகரைச் சேர்ந்த ரஞ்சித் எட்வின் ராசா, இதயன் போன்றோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
2. கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்
கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதற்காக புஸ்பராஜாவும், பிரான்சிசும் மட்டக்களப்புக்குப் பயணமாகினர். மட்டக்களப்பில் செனட்டர் மாணிக்கத்தின் மகளும் சாம் தம்பிமுத்துவின் துணைவியாரான கலா தம்பிமுத்துவும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கினர். புஸ்பராஜாவும், பிரான்சிசும் தனது வீட்டில் தங்கி நின்று பணிகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளைச் செய்துகொடுத்தனர். கோட்டைக்கல்லாறு நடேசானந்தன் தானாகவே முன்வந்து முழுநேரமாகப் பணியாற்றினார்.
அமிர்தலிங்கமும், மங்கையற்கரசியும் மட்டக்களப்பு வந்து உண்ணாவிரதப் போராட்டங்களில் கலந்துகொண்டனர். புஸ்பராஜாவும், பிரான்சிசும் அறப்போர் வீரர் அரியநாயகம், தம்பிலுவில் சித்தாத்துரை ஐயா ஆகியோரிடம் சென்று ஆசீர்வாதம் பெற்று உண்ணாவிரதப் பணிகளை மேற்கொண்டனர். திருக்கோவில் தவராஜா, பாண்டிருப்பு வேல்முருகு மாஸ்டர், மட்டக்களப்பு சிவஜெயம் (காசி ஆனந்தனின் சகோதரர்) ஆகியோரும் பணிகளில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாநகரசபை முன்றல், செல்வநாயகபுரம், திருக்கோவில், பாண்டிருப்பு எனப் பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
3. மலையகத்தில் உண்ணாவிரதப் போரட்டம்
மட்டக்களப்பிற்கு பத்மநாபாவையும் சரவணபவானந்தனையும் அழைத்து அவர்களிடம் போராட்டப் பணிகளை ஒப்படைத்துவிட்டு புஸ்பராஜாவும் பிரான்சிசும் மலையகத்திற்குப் பயணமாகினர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செல்லச்சாமியைக் கொழும்பில் சந்தித்தனர். அவர் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட பிராமணக் குடும்பம் இருவருக்கும் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்தது.
மலையகச் செயற்பாட்டாளரான கெங்கரத்தினம் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் இருவரையும் அழைத்துச் சென்று ஆர்வமுள்ள இளைஞர்களைச் சந்திக்க வைத்தார். அங்கு வடபகுதி இளைஞர்களும் ஒத்துழைப்புகளை வழங்கினர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் ஐயாத்துரை, சங்கத்தின் முக்கியஸ்தர் பெருமாள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஜேசுதாசுடன் கலந்துரையாடினர். அவர் முழு ஒத்துழைப்புத் தருவதாகக் கூறியதோடு தனது மகளையும் உதவிக்கு அனுப்பினார். ஹற்றன் மாணிக்கப் பிள்ளையார் கோவில், தலவாக்கலை கதிரேசன் கோவில், நாவலப்பிட்டியில் ஒரு முன்றல், டிக்கோயாவில் ஒரு கோவில் என நான்கு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
ஹற்றன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தலவாக்கலை கதிரேசன் கோவில் ஆலயத்தில் உண்ணாவிரதம் இடம்பெற்ற போது அங்கு வந்த தலவாக்கலைப் பொலிஸ் அதிகாரி ஒரு மணித்தியாலத்திற்குள் அனைவரும் கலைந்துவிட வேண்டும் என எச்சரிக்கை செய்தார். பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு மீண்டும் வருகை தந்த பொலிஸ் அதிகாரி ஏன் இன்னமும் கலைந்துபோகவில்லை எனக் கேட்டார். பொலிசார் மிக மோசமாக புஸ்பராஜாவைத் தாக்கினர். புஸ்பராஜா முதலில் பொலிசாரிடம் அடிவாங்கியது இங்கு தான். பின்னர் பல தடவை சிறையில் சித்திரவதைக்குள்ளாகினார். இதனால் உண்ணாவிரப் போராட்டம் குழப்பமடைந்தது. கெஸ்கரத்தினம், கணகோபாலச்சாரியார், புஸ்பராஜா ஆகியோர் இணைந்து மஸ்கெலியா பாராளுமன்ற உறுப்பினர் M.D. சில்வாவிடம் நடந்தவற்றைக் கூறினர். அவர் பொலிஸ் அதிகாரியுடன் பேசியதோடு, தன்னிடம் முறையிட்டவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.
4. இறுதிநாள் போராட்டம்
ஐம்பது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் மீண்டும் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்னால் இடம்பெற்றது. இதில் ஏரும், வாளும் கொண்ட தமிழ் இளைஞர் பேரவையின் கொடியை அறிமுகப்படுத்துவதாக தீர்மானித்தனர். கொடியின் அரைப்பக்கம் மஞ்சளாகவும், அரைப்பக்கம் சிவப்பாகவும், ஏரும் வாளும் கொண்டதாகவும் அமைய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. யாழ் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா இக்கொடிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த பலர் பின்வாங்கினர்.
பிரான்சிஸ், பத்மநாபா, வரதராஜப் பெருமாள் என்போர் கொடி ஏற்றுவதில் உறுதியாக நின்றனர். எனினும் இறுதியில் தமிழ் இளைஞர் பேரவைக்குள் பிளவு ஏற்படக்கூடாது என்பதற்காக அதைத் தவிர்த்தனர். உண்ணாவிரதப் போராட்டப் பந்தலை ரஞ்சித் எட்வின், கிறிஸ்ரியன் இதயன் ஆகியோர் திறம்பட அமைத்தனர்.
ஆயிரக்கணக்கில் மக்களும் போராட்டத்தில் பங்குபற்றினர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் வருகை தந்தனர். பொலிசார் ஏராளமாகக் குவிக்கப்பட்டனர். பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா ஜீப்பில் கால் ஊன்றியபடி எல்லாவற்றையும் கவனித்தபடி நின்றார். ஏரும் வாளுமற்ற, தனிச் சிவப்பும் மஞ்சளும் கொண்ட தமிழ் இளைஞர் பேரவையின் கொடியை அமிர்தலிங்கம் ஏற்றிவைத்தார். இறுதியில் பழரசம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடித்துவைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் 12 ஆவது மாநில மாநாடு (1973, செப். 7,8,9 – மல்லாகம்)
ஏனைய கட்சிகளுடன் தமிழர் கூட்டணியின் ஓர் அங்கமாக த.இ.க. செயற்படுவதை மாநாடு அங்கீகரித்தது. தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படைத் தத்துவத்தின்படி தமது பாரம்பரியமான தாயகத்தில் இலங்கைத் தமிழ் தேசிய இனம் தன்னாட்சி காண்பதே தமிழருக்குள்ள ஒரே வழி எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய இனத்தின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு உலக நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவினையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
முத்திரைச் சட்ட மீறலும், உண்ணா நோன்பும்
ஒரு வருடமாக காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடாத்தத் தவறிய அரசின் செயலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் 1973 ஒக்டோபர் 2 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் நாட்டின் முத்திரைச் சட்டத்தினை மீறி, வெட்டிச் சிதைக்கப்பட்ட முத்திரைகளை ஒட்டி பிரதமருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்களை மக்கள் அனுப்பினர். ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடும் தமிழர் படுகொலையும்
1974 தை முதல் வாரத்தில் நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அரசாங்கம் பல தடைகளைச் செய்ய முயன்றும், யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா பல தடைகளைச் செய்ய முயன்றும், மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டு இறுதி நாளன்று 50,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த வீரசிங்க மண்டபம் முன்றலில் பொலிஸ் அதிபர் சந்திரசேகரா தலைமையில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. மின்சாரம் தாக்கி 9 பேர் பலியாகினர். இதற்கு முன்னர் 7 ஆம் நாள் அலங்கார ஊர்திப் பவனியின் போது பொலிஸாரின் எதிர்ப்பை மீறி சிவகுமாரன் பண்டார வன்னியனாக அலங்கரித்து ஊர்வலமாக வந்தார். சிவகுமாரன் சபதமெடுத்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டார்.

சிவகுமாரனின் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்தல்
தமிழாராய்ச்சி மாநாட்டுக் கொலைகள் சிவகுமாரனையும் அவனது நண்பர்கள் சிலரையும் ஆயுத நடவடிக்கைகளை நோக்கி வெகுவாக ஊக்குவித்தன. பிரான்சிஸ், ஜீவராசா, மகேந்திரன் ஆகியோர் சிவகுமாரனின் நண்பர்களில் முக்கியமானவர்கள்.
துரோகிகளைப் பழிவாங்குதல் என்ற அடிப்படையில் முதலில் குறி வைக்கப்பட்டவர்கள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா, யாழ் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா ஆகியோராவர். சந்திரசேகராவை கொலை செய்யும் முயற்சி நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவிலடியில் வைத்தும், தெல்லிப்பளைச் சந்தியில் வைத்தும், இருமுறை முயற்சிக்கப்பட்டும் தோல்வியில் முடிந்தது. அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்யும் முயற்சியும் பல தடவை முயன்றும் தோல்வியில் முடிவடைந்தது. சிவகுமாரன் படையினரால் பலமாகத் தேடப்பட்டார். ‘அவரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 10,000 ரூபா சன்மானம்’ என அரசு அறிவித்தது.
சிறிதுகாலம் தமிழ்நாட்டில் தங்கியிருப்பது என முடிவு செய்து, கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளையிடம் 500,000 ரூபா பணத்தை சிவகுமாரன் கேட்டபோது அவர் மறுத்தார். சிவகுமாரன் குழுவினர் கோப்பாய் வங்கியைக் கொள்ளையிட முயற்சித்துத் தோல்வியடைந்தனர். சிவகுமாரன் கைது செய்யப்படும் போது சயனைட் அருந்தி 1974 ஜூலை 05 இல் மரணமடைந்தார். சிவகுமாரனின் மரணச்சடங்கில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆயுதப் போராட்டத்தில் முதலாவதாக உயிர் துறந்த போராளியாக சிவகுமாரன் இருந்தார்.
‘தமிழ்ப் புதிய புலிகள்’ தோற்றம்
1974 இன் பிற்பகுதியில் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது. செட்டி எனப்படும் தனபாலசிங்கம், பிரபாகரன் சிவராசா, ரமேஸ் இன்பம், கண்ணாடி பத்மநாதன், பற்குணராசா, கலாபதி, கிருபாகரன் ஆகியோர் அமைப்பின் முக்கிய நபர்களாக இருந்தனர். தெல்லிப்பளைக் கூட்டுறவுச் சங்கத்தில் 97,000 ரூபா கொள்ளை (1974), அல்பிரட் துரையப்பா கொலை (1975 யூலை 27), புத்தூர் வங்கியில் ஏழு லட்சம் ரூபா கொள்ளை (1976 மார்ச் 5) போன்ற நடவடிக்கைகளை புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம் மேற்கொண்டது. ஆரம்பத்தில் தலைவராக இருந்த செட்டி, பின்னர் அரசுக்குத் தகவல் கொடுப்பவராக மாறியதும், பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கண்ணாடி பத்மநாதன் செட்டியால் கொலை செய்யப்பட்டார். பற்குணராசா (சரவணன்) ஈரோஸ் குழுவில் சேர்ந்ததால் பிரபாகரனால் கொலை செய்யப்பட்டார்.
பிரதமரின் யாழ் வருகையும் எதிர்ப்புப் போராட்டமும்
1974 நவம்பரில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைத் திறப்பதற்காக பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முதன்முதலாக யாழப்பாணம் வந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி, அவர் வரும் நாளை பூரண துக்க தினமாக அனுஷ்டித்தது. இதன் அடிப்படையில் குடாநாடு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவதை எதிர்த்து யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் கோவிலில் பெண்கள் உண்ணாவிரதம் இருத்தனர். தமிழ் இளைஞர் பேரவை அ. வரதராஜப் பெருமாள் தலைமையில் திருநெல்வேலி விவசாயப் பாடசாலையிலிருந்து கண்டன ஊர்வலம் நடாத்த முயற்சிக்கப்பட்டது. ஊர்வலம் தொடர்பாக அ. அமிர்தலிங்கத்திற்கும், அ. வரதராஜப் பெருமாளுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் இடம்பெற்றது.
காங்கேசன்துறை இடைத்தேர்தல் (1975)
செல்வநாயகம் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். 1970 தேர்தலை விட 3 மடங்கு வாக்குகளைப் பெற்றார். தமிழ் மக்கள் தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்புணர்வை தேர்தலினூடாக வெளிப்படுத்தினர்.
தமிழ் இளைஞர் பேரவை பிளவுபடுதல்
தமிழ் இளைஞர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி தனித்துவமான அமைப்பாக வளர்வதை தமிழர் கூட்டணியினர் விரும்பவில்லை. இதனால் எப்படியாவது அதனைத் தமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இளைஞர் அமைப்பாக மாற்றுவதற்கு முயன்றனர். இம்முயற்சிக்கு அப்போதிருந்த இளைஞர் பேரவையின் தலைமை ஒத்துவராது போகவே, அதனைப் பிளவுபடுத்தி புதிய தலைமுறையை உருவாக்க முயற்சி செய்தனர். யோகேஸ்வரன் தமது இல்லத்தில் கூட்டம் நடத்தி, தமிழ் இளைஞர் பேரவைக்கு அடுத்த அணி உறுப்பினர்களையும் இணைத்து, 1975 ஜூலையில் புதிய தலைமையைத் தேர்வு செய்தார்.
இப்புதிய தலைமையின்படி காசி ஆனந்தன் இளைஞர் பேரவையின் தலைவராகவும் மாவை சேனாதிராஜா செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். சந்ததியார் இளைஞர் பேரவையின் அமைப்பாளராக்கப்பட்டார். இறைகுமாரன், உமைகுமாரன், உமாமகேஸ்வரன் என்போர் முக்கிய உறுப்பினராக்கப்பட்டனர். முன்னைய தலைமை தாங்கள் தான் உண்மையான இளைஞர் பேரவை என்பதை நிலைநிறுத்த முன்வரவில்லை. அவர்கள், எங்களுக்குப் பெயரல்ல முக்கியம், தமிழ் மக்களின் விடுதலை தான் முக்கியம் என்றும், கூட்டணியின் சூழ்ச்சிக்குப் பலியாகி இளைஞர்களுடன் மோத நாம் விரும்பவில்லை என்றும் கூறி இளைஞர் பேரவையை விட்டு வெளியேறினர். புதிய அமைப்பை உருவாக்க முயற்சி செய்தனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் தோற்றம் பெறல் (1975 யூலை 14)
தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து பிரிந்து சென்ற முன்னைய தலைமையைச் சேர்ந்த தலைவர்கள் புதிய இளைஞர் அமைப்பை உருவாக்குவதற்காக, 1975 யூலை 14 ஆம் திகதியில் ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரியில் ஒன்று கூடினர்.
‘தமிழ் ஈழ விடுதலை இயக்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கினர். முத்துக்குமாரசுவாமி, தங்க மகேந்திரன், சந்திரமோகன், புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், ஆகியோரைக் கொண்ட மத்திய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. கோவை நந்தன், பிரான்சிஸ், மன்னார் கெமிலஸ், கென்ஸ் மோகன், அங்கயற்கண்ணி ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். தமிழ் ஈழமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான இறுதியான தீர்வு என கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டனர்.
1975 யூலை 27 ஆம் திகதி அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டதும், அரசாங்கம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களையும் கைது செய்தது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 15 நாட்களுக்குள்ளேயே யாழ்ப்பாணத்தில் இருந்த மத்திய குழுவைச் சேர்ந்த புஸ்பராஜா, முத்துக்குமாரசுவாமி, வரதராஜப் பெருமாள் என்போர் கைது செய்யப்பட்டனர். தங்க மகேந்திரன் திருகோணமலையிலும் சந்திரமோகன் கொழும்பிலும் இருந்தமையினால் கைது செய்யப்படாமல் தப்பி இருந்தனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வந்து அமைப்பு வேலைகளில் மற்றவர்களையும் இணைத்து ஈடுபட்டனர்.
‘எரிமலை’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு அதில் இலங்கை, தமிழ் ஈழம், சிறிலங்கா என்ற இரு நாடுகளாக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினர். சங்கானை அம்மாவினால் தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது. செயலகம் செயற்படத் தொடங்கி சிறிது காலத்திலேயே செயலகத்தின் பெயர்ப்பலகைகள், தளபாடங்கள், என்பன தமிழர் கூட்டணியினரால் அடித்து நொருக்கப்பட்டது. மத்திய குழு உறுப்பினர்களான தர்மமகேந்திரன் சந்திரமோகன் என்போரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அமைப்பின் அரசியல் ரீதியான செயற்பாட்டின் முக்கிய நபராக தொழிற்பட்ட பிரான்சிஸ் கைது செய்யப்பட்டார்.
அமைப்பு அரசியல் ரீதியான செயற்பாட்டைக் குறைத்து ஆயுத இயக்கத்தைக் கட்டி எழுப்ப முயற்சி செய்தது. அதன் ஒரு கட்டமாக 1976 மே மாதத்தில் புலோலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டது. அமைப்பு தேக்கத்திற்கு உள்ளாகியது. 1977 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அமைப்புகளுக்குள் முரண்பாடு தோன்றியது. ஒருசாரார் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரிக்க முற்பட, மறுசாரார் எதிர்த்தனர்.
தேர்தலில் முத்துக்குமாரசுவாமி, புஸ்பராஜா, கோப்பாய் நந்தன் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகப் பிரசாரம் செய்ததை வரதராஜப்பெருமாள், பிரான்சிஸ் சந்திரமோகன் ஆகியோர் எதிர்த்தனர். தேர்தலின் பின்னர் அமைப்பு முற்றாகவே சிதைவடைந்தது. பின்னர் இப்பெயரை, குட்டிமணி குழுவினர், முத்துக்குமாரசுவாமி அனுமதியுடன் தாங்கள் பயன்படுத்தினர்.
குட்டிமணி குழுவினர்
மாணவர் பேரவை வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட காலத்திலிருந்தே அதில் கடமையாற்றிய சிலர் ஓர் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டனர். குட்டிமணி, தங்கத்துரை, சிறீ. சபாரட்ணம், சின்னச் சோதி, பெரிய சோதி, ஒபரேஜ் தேவன் ஆகியோர் அதில் முக்கிய அங்கத்தவர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் பிரபாகரன் அக்குழுவினரோடு தொடர்புகளை வைத்துக் கொண்டாலும் பின்னர் அதனை முறித்துக்கொண்டு ‘புதிய தமிழ்ப் புலிகள்’ அமைப்பை உருவாக்கினார். 1976 இன் ஆரம்பத்தில் இருந்து தமது வன்முறை நடவடிக்கையை அதிகரித்தார். நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலம் கொலை முயற்சி, சி. வினோதன் கொலை முயற்சி, அருளம்பலத்தின் செயலாளர் தங்கராசா கொலை, சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கெலை என்பவற்றை மேற்கொண்டார்.
‘புதிய தமிழ்ப் புலிகள்’ இயக்கம் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்’ எனப் பெயர் மாற்றம் பெறல்
1976 மே 5 ஆம் திகதி புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தனது பெயரை ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்’ எனப் பெயர் மாற்றம் செய்தது. அமைப்புக்குப் பிரபாகரன், உமாமகேஸ்வரன் உட்பட ஐந்து பேரைக் கொண்ட மத்திய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. உமாமகேஸ்வரன் அமைப்பின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார்.
தமிழர் கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாடும் தமிழ் ஈழக் கோரிக்கையும்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாடு 1976 மே 14 இல் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர் மாற்றம் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைவர்களாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அ. அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ் ஈழத்தை அமைப்பது என்ற தீர்மானம் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. “ஒவ்வொரு நாட்டுக்குமுள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற சோசலிசத் தமிழ் ஈழம் அமைக்கப்படும்” என அத்தீர்மானம் கூறியது.
தமிழ் ஈழம் எனப்படுவது தற்போதைய வடக்கு – கிழக்கு மாகாணத்தையும் புத்தளம் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. தமிழ் ஈழப் பிரதேசத்தில் வாழும் அனைவரும் தமிழ் ஈழத்தின் பிரஜைகளாக அடங்குவர் எனவும், இலங்கையில் எப்பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்களும், இலங்கை மூதாதையர்களைக் கொண்ட உலகில் எப்பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்களும் ஈழத்தின் பிரஜாவுரிமையைக் கோரினால் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் அரசியல் வேறானது எனக்கூறி தொண்டமான் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
‘மனிதன்’ இயக்கம் தோற்றம் பெறல்
1975 இன் நடுப்பகுதியைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களான அருட்திரு. ஜெயசீலன் அடிகள், ஜெயராஜா, விமலதாசன், முன்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இருந்த பால நடராஜ ஐயர், ஜெகநாதன் என்போரிடையே அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை மையப்படுத்திய அமைப்பின் அவசியம் உணரப்பட்டு, ‘மனிதன் இயக்கம்’ தோற்றம் பெற்றது. ‘மனிதன்’ என்ற பெயரில் மாதாந்தப் பத்திரிகை ஒன்றையும் நடாத்த முன்வந்தனர். அதில் தமிழ் ஈழத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.
இவர்கள், தமிழ் ஈழ விடுதலை முன்னணி இயக்கம் முன்வைத்த அரசியலின் தொடர்ச்சியாகச் செயற்பட்டனர். ‘எரிமலை’ பத்திரிகை முன்வைத்த கருத்துகளின் தொடர்ச்சியையே ‘மனிதன்’ பத்திரிகையும் பேணியது. இலங்கைத்தீவு, சிறிலங்கா, தமிழ் ஈழம் என்ற இரு தேசங்களைக் கொண்டது என்ற கருத்து இதனூடாக வளர்ச்சி பெற்றது. பல்கலைக்கழக தமிழ் விழாவில் தமிழ் ஈழத்தின் பொருளாதாரத்தில் தமிழ் ஈழம் தன்னிறைவாக இருக்கலாம் என்பதை நிரூபித்தனர். பொருளாதாரப் பலத்தினை நில வளம், நீர் வளம், பனை வளம், கைத்தொழில் வளம், மனித வளம் எனப் பாகுபடுத்தி விளக்கம் கொடுத்தனர்.
தமிழ் ஈழத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் சிறிலங்காவிலிருந்து வருமாயின் அதனைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனப் பிரசாரம் செய்தனர். தமிழர் விடுதலை இயக்கம் ஆரம்பித்த வகுப்பு வடிவப் பிரசாரத்தை தொடர்ந்து பேணினர்.
தமிழ் ஈழ விடுதலைக் கூட்டணியையும், பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளையும் தேசிய விடுதலைக் கண்ணோட்டத்திலிருந்து விமர்சித்தனர். தேர்தலுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ச்சியாக முன்வைத்தனர். 1977 தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி “தமிழ் ஈழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு” எனக் குறிப்பிட்ட போது, “நெருப்பணைக்க வாக்கெடுப்பா” எனப் பிரசாரம் செய்தனர்.
அகதிகள் குடியேற்றம், பின்தங்கிய மாவட்டங்களில் கல்விப்பணிகள் என்பவற்றை மேற்கொண்டனர். காலப்போக்கில் இதன் போக்கு ஒரு சீர்திருத்தப் போக்காக இருந்தமையால், இதில் இருந்த அரசியல் உணர்வு பெற்றவர்கள் ஈரோஸ் இயக்கத்திலும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலும் இணைந்து கொண்டனர். 1979 இல் மேர்ஜ் இயக்கத்துடன் இணைந்து தொழிற்பட்டனர். 1983 இல் இராணுவத்தினரால் சுடப்பட்டு விமலதாசன் மரணமடைந்ததுடன் ‘மனிதன்’ பத்திரிகை நின்றது. அத்தோடு அமைப்பும் செயலிழந்தது.
‘ஈழப்புரட்சி அமைப்பு’ தோற்றம் பெறல்
1975 இன் பிற்பகுதியில் ‘தமிழ் ஈழ விடுதலை (ஈரோஸ்) இயக்கம்’ சிதைந்து போன காலகட்டத்தில் அதில் இருந்த சிலரிடமும், வெளியே இருந்த சிலரிடமும் புதிய இயக்கம் பற்றிய சிந்தனை வலுப்பெற்றது. இலண்டனில் இருந்து வந்த இரட்ண சபாபதி (பெர்மிங்காம் பல்கலைக்கழகப் பட்டதாரி) இதில் முதன்மையானவராக இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் மேற்கூறிய இளைஞர்களைச் சந்தித்து மார்க்சிய வழிகாட்டலில் இயக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
மலையகத்தையும் இணைத்த ஈழப்புரட்சி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்கும் வரை அதன் அமைப்பாளர்களாக இருப்போம் என்ற வகையிலே ‘ஈழப்புரட்சி அமைப்பாளர்கள்’ என்ற பெயர் இடப்பட்டது. ஏற்கனவே தமிழீழ விடுதலை இயக்கத்தில் செயற்பட்ட பிரான்சிஸ், பாலகுமார், பால நடராஜ ஐயர் ஆகியோர் இதில் இணைந்து கொண்டனர். மலையக மக்களே ஈழத்தின் புரட்சிகரமான வர்க்கம், அவர்களே புரட்சியின் தலைமைச் சக்தி என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் முன்வைத்த அரசியலின் தொடர்ச்சியாக ‘ஈரோஸ்’ இயக்கம் அமைந்தது. வவுனியா கண்ணாட்டியில் அருளரின் பண்ணையில் முகாம் அமைத்து அகதிகள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு, பயிற்சி பெறப்பட்டது.
வெளிநாட்டில் முதல் ஆயுதப் பயிற்சி
ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகரான இரட்ண சபாபதியின் முயற்சியினால், பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஒன்றான ‘அல்பட்டா’வினால் இராணுவப் பயிற்சிக்கு உதவி கிடைத்தது. இதன்படி லெபனானில் பத்மநாபா, சுரேஸ் பிறேமச்சந்திரன், விச்சுவேஸ்வரன் என்போர் பயிற்சி பெற்றனர்.
தொடரும்.



