பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடிகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடிகள்

October 17, 2025 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: சூரியா விக்ரமசிங்க

இந்தக் கட்டுரை, ஏற்கனவே உள்ள சட்டங்களில் காணப்படும் விதிகளைப் போலவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலும் (PTA)1 உள்ளடக்கப்பட்டுள்ள, சில ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டதாக அமைகிறது. பலரும் நினைப்பது போல, இந்த ஒற்றுமைகள், வெறுமனே அவசரகாலச் சட்டங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில் அவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களிலும் கூடக் காணக்கூடியதாக இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும் சட்டவிதிகள், (அவ்வப்போது கொண்டுவரப்பட்ட) அவசரகாலச் சட்டங்கள், 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘குற்றவியல் நீதி ஆணைக்குழுச் சட்டம்’, 1972 ஆம் ஆண்டின் ‘பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம்’, 1978 ஆம் ஆண்டின் ‘தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதையொத்த பிற அமைப்புகளையும் தடை செய்யும் சட்டம்’ ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களைப் பற்றி முதலில் ஒரு சில வார்த்தை சொல்லவேண்டும்:

அவசரகாலச் சட்டங்கள் 19472 ஆம் ஆண்டின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்படுகின்றன. அவை, கோட்பாட்டளவில் ‘தற்காலிகமானவை’ என்ற அடிப்படையில் சாதாரண சட்டமன்ற நடைமுறைகளைத் தவிர்த்து, அரச தலைவரால்3 நிறைவேற்றப்படுகின்ற சட்டங்களாகச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில், அவை பல ஆண்டுகளாக அமுலில் இருந்துவருகின்றன. இந்த அவசரகாலச் சட்ட நடைமுறை, பொதுவாக கைது செய்தல், தடுப்புக்காவலில் வைத்தல், விசாரணை நடைமுறைகள், அத்தியாவசியச் சேவைகள் போன்றவற்றோடு சம்பந்தப்பட்டவை. பிற விடயங்களைக் கையாள்வதற்கான ஒரு தொகுதி மேலதிக விதிமுறைகள், அவ்வப்போது அத்தகைய தேவைகள் உணரப்படும்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதை நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவசரகால விதிமுறைகள் பற்றி எம்மிடமிருக்கும் விவரங்களை ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது; ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் நடந்திருக்கும் மாற்றங்கள் எப்போது நிகழ்ந்தன என்பதைக் கண்டறிவதும் ஒருபோதும் இலகுவானதல்ல. இந்த அறிக்கையில், ‘அவசரகாலச்சட்ட (பல்வகை ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) விதிமுறைகள்’, என்ற தலைப்பில் மார்ச் 19714 இல் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கீழ், ஜூலை 19755 இல் கொண்டுவரப்பட்ட சட்டமே எழுமாற்றான (Random) ஓர் உதாரணமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  
 

1971 ஆம் ஆண்டு நடந்த ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கையாள்வதற்காக 1972 இல் ‘குற்றவியல் நீதி ஆணையங்கள் சட்டம்’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் விதிகள் பணப்பரிமாற்றக் கட்டுப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இதனால் உருவாக்கப்பட்ட ஆணையங்கள் ஆயுள் தண்டனை உட்பட்ட, சிறைத் தண்டனைகளை விதிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருந்தன. இந்தச் சட்டம் எட்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்பதும், நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானத்தின் அடிப்படையில், எளிய பெரும்பான்மையுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் அதை நீடிக்க முடியும் என்பதும் அதில் உள்ளடங்கியிருந்தது. ஆயினும் இது 1977 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின் இல்லாமலாக்கப்பட்டது. 

1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுத் (திருத்தச்) சட்டம் குற்றவாளிகள் தொடர்பான கடுமையான விதிகளையும் கொண்டிருந்தது; ஆயினும், அரசாங்கம் மாறிய பிறகு, 1977 ஆம் ஆண்டு அதுவும் இரத்துச் செய்யப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட சட்டங்கள் 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது இயற்றப்பட்டவை. அடுத்ததாக நடந்தவைகள் ஜூலை 1977 பொதுத் தேர்தலின் விளைவாக பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தின் கைவேலைகள். இது 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும், அதையொத்த பிற அமைப்புகளையும் தடை செய்யும் சட்டம்’. இது பொதுமக்களின் விவாதத்துக்கோ தீர்ப்பிற்கோ வாய்ப்பளிக்கப்படாத ஓர் ‘அவசர’ மசோதாவாக சட்டமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் அதன் செல்லுபடியாகும் தன்மை ஒரு வருடத்திற்கு மட்டுமாகவே இருந்தது. ஆனால் பின்னர் ஒரு திருத்தம் மூலம் அது மற்றொரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) பிரிவு 30 இல், “தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டம்6 இதன் மூலம் இரத்துச் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தாலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பு, பிரிவு 30க்கு ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கை அளித்தது. எனவே விடுதலைப் புலிகள் தொடர்பான சட்டம் அதன் முழுப் போக்கையும் 1980 மே 23 வரை செயற்படுத்தியது, பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. சட்டமன்றச் சட்டங்களின் 1980 (அதிகாரப்பூர்வமற்றது) இன் திருத்தப்பட்ட பதிப்பு, ஒரு நட்சத்திரக் குறியால் குறிக்கப்பட்ட பிரிவு 30 இன் குறிப்பில், அது, “மே 23, 1980 அன்று காலாவதியானது” என்று குறிக்கிறது. ஆனால் இது எப்படி நடந்தது என்பதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள, 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தின் வரிகளைக் கவனமாகப் பார்க்க வேண்டும். அந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 1 இன் முழு வடிவம் பின்வருமாறு உள்ளது:

“இந்தச் சட்டம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் என்று குறிப்பிடப்படலாம். இது, அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்படும் உத்தரவின் மூலம் அறிவிக்கப்படக்கூடிய தேதி, அல்லது தேதிகளில் அதன் அனைத்துமோ, அல்லது அவற்றில் ஏதேனும் விதிகளைக் கொண்டதாகவோ நடைமுறைக்கு வரும்.”

சட்டமன்றச் சட்டங்கள் (திருத்தப்பட்ட) பதிப்பின், 1980 இல் வெளியிடப்பட்ட பதிப்பில் சாய்வு எழுத்துகளில் (‘அதிகாரபூர்வமற்றது’ என்று) உள்ள சொற்கள் விடுபட்டுள்ளன. இது, பாராளுமன்ற உறுதிப்படுத்தலுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட செயன்முறையை இன்னும் பூரணப்படுத்தாத காரணத்தால் ‘அதிகாரபூர்வமற்றது’ என்றாலும் கூட, அரசாங்கத்தால் வெளியிடப்பட்டதென்ற வகையில், இப்போதும் பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்ற ஓர் உறுப்புரையாகும்.

நிறைவேற்று அதிகாரத்தின் தற்றுணிவின் அடிப்படையில் தடுப்புக்காவல் வழங்கப்படல்

இதன்படி, எவராவது ஒரு நபர் ஏதாவதொரு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று சந்தேகிப்பதற்கான ஏதாவது ஒரு காரணம் கிடைக்கும் போது, (பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட) அமைச்சர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 9 ஆவது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அந்தச் சந்தேகநபரை ஒரு தடவையில் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிடுவதற்கான அதிகாரம் கொண்டவராக இருப்பதுடன், இந்தத் தடுப்புக்காவல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாகப் புதுப்பிக்கப்பட்டுப் 18 மாதங்கள் வரை நீடிக்கப்படலாம்.

அவசரகால (நானாவித ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களும்) சட்டப்பிரிவுகளின் 18 ஆவது பிரிவானது, அவசரகாலச் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றுக்கான விதிமுறைகளின்படி பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு, ஒரு நபரைக் கைது செய்து காலவரையின்றி, அதாவது அவசரகாலச்சட்டம் அமுலில் இருக்கும் வரை, தடுப்புக் காவலில் வைத்திருக்க உத்தரவிடுவதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது. இதன் பொருள், அவசரகால நிலை பல ஆண்டுகளாக அமுலில் இருந்தால், அது நடைமுறையில் அக்காலம் வரைக்குமான தடுப்புக்காவலாக அமையும் என்பதுதான். ஒரு நபர் பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பராமரித்தல் அல்லது அத்தியாவசியச் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றிற்கு எந்தவிதத்திலாவது பாதகமான செயலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கோ அல்லது சில குறிப்பிட்ட அவசரகால விதிமுறைகளை மீறுவதைத் தடுப்பதற்கோ, அவ்வாறு செய்வது அவசியம் என்று கருதும் இடத்தில் செயலாளர் தனக்குள்ள இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். 

அவசரகால விதிமுறைகளின் வெவ்வேறு விதிகளின் கீழ், அதாவது விதிமுறைகள் 19, 20 என்பவற்றின் அடிப்படையில், காவல்துறையினருக்கு ஒருவரைக் கைது செய்து பதினைந்து நாட்கள் தடுப்பில் வைத்திருக்க முடியும்; இந்தக் காலகட்டத்தின் முடிவில் அவர் ஒன்றில்  விடுவிக்கப்பட வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், நீதிமன்றத்திற்கு அவரை விடுவிக்கும் அதிகாரம் இல்லை – அது அவரை விளக்க மறியலில் வைத்திருக்க மட்டுமே முடியும். “நீதி அமைச்சின் நிரந்தரச் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டும் உத்தரவின் பேரில் அவர் விடுவிக்கப்படும் வரை” (பிரிவு 20 A) அவர் தொடர்ந்து தடுப்புக்காவற் சிறையிலேயே இருப்பார்.

அவசரகால விதிமுறைகள், அவற்றின் பல்வேறு விதிகளின் மூலம் அப்போதைய நிர்வாகத்தின் விருப்பப்படி, ஒன்றில் பாதுகாப்பு வெளியுறவு அமைச்சின் செயலாளரது விருப்பப்படியோ அல்லது காவல்துறை, நீதித்துறை சார்ந்த அமைச்சின் செயலாளரது விருப்பப்படியோ காலவரையற்ற தடுப்புக்காவலுக்கு வழிவகுத்தது.

குற்றவியல் நீதி ஆணையச் சட்டமானது, குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் தடுப்புக் காவலில்  வைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவென ஓர் ஆணையத்தைக் கொண்டிருப்பதை அனுமதித்தது. ஆயினும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமே, ஏற்கனவே தடுப்புக் காவலில் உள்ள நபர்களை ஆட்சித் தலைமை விரும்பும் வரை அங்கேயே வைத்திருந்து கையாள்வதாகத்தான் இருந்தது. எந்தவொரு நீதிமன்ற உத்தரவு மூலமோ, அல்லது ஆணையத்தின் விசாரணைக்குப் பின்பாகவோ கைதிகள் விடுவிக்கப்படுவது என்ற விடுதலையின் சட்டபூர்வ நடைமுறையைக் கொண்டிருக்கவில்லை, இது நீதி அமைச்சின் நிரந்தரச் செயலாளரின் தற்றுணிவான விருப்பத்தைப் பொறுத்ததாகவே இருந்தது. சட்டத்தின் பிரிவு 14 (2a) பின்வருமாறு அமைந்திருந்தது:

“ஓர் ஆணைக்குழு நிறுவப்பட்டிருக்கும் காலத்தில், ஒரு நீதிபதியின் உத்தரவின் பேரில் எந்தவொரு சிறையிலும் காவலில் வைக்கப்பட்டு, இந்தச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவின் முன் எந்தவொரு விசாரணைக்கும் உட்பட்டதாக இருக்கும் எந்தவொரு குற்றத்திற்கும் சந்தேகிக்கப்படுகின்ற அல்லது குற்றம் சாட்டப்பட்டுள்ள எந்தவொரு நபரும், நீதி அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளரின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்படும் வரை, அத்தகைய காவலில் தொடர்ந்து இருப்பார்.”

1972 ஆம் ஆண்டு, பரிவர்த்தனை (திருத்தச்) சட்டத்தின் பிரிவு 30B (1), ஒரு பிரதி பொலிஸ்மா அதிபரின் (ASP) வேண்டுகோளின் பேரில், நீதிபதியால் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு சட்டரீதியாக வழிவகுத்தது. நடைமுறையில், அத்தகைய கோரிக்கைகள் வேறு வழியின்றி வழங்கப்பட்டு வந்தன. அதில் இருந்த முக்கியத்துவம் என்னவென்றால், தடுப்புக் காவலுக்கான உத்தரவு ஒரு முழு மாதத்திற்குரியதாக (ஆனால் இது “ஒரு மாதத்திற்கு மிகாமல்” என்ற அர்த்தத்தில் அல்ல) இருக்க வேண்டும், அதன் பிறகு மற்றொரு மாதத்திற்குப் புதுப்பிக்கப்படலாம். நடைமுறையில் இது காவல்துறைக்கு இரண்டு மாதங்களுக்குக் காவலில் வைக்க அதிகாரம் அளித்தது, மேலும் மிகவும் விரும்பத்தகாத சூழ்நிலைகளில் (இதை இச்சட்டத்தின் கீழே உள்ள பிரிவு 30B (5) இல் பார்க்கலாம்) மேலும் மூன்று மாதக் காவலை சட்டமா அதிபரின் வேண்டுகோளின் பேரில் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியும்.

விடுதலைப் புலிகள், மற்றும் இது போன்ற பிற அமைப்புகளைத் தடை செய்தலுக்கான சட்டம் பிரிவு 11 இன் கீழ், அமைச்சரின் உத்தரவின் பேரில் கைதிகளை மூன்று மாத காலத்திற்குத் தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தடுப்புக்காலம் ஒரு வருடம் வரை புதுப்பிக்கப்பட்டு நீடிக்கப்படலாம்.

நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படும் தடுப்புக்காவலுக்கான இடங்களும் நிபந்தனைகளும்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9 இன் கீழ் அமைச்சரின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள், “அமைச்சரால் தீர்மானிக்கப்படும் எந்தவொரு இடத்திலும், அவரால் விதிக்கப்படும் நிபந்தனைகளின்  அடிப்படையிலும்” தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) விதிமுறைகளின் 18 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் இவ்வாறுதான் தடுத்து வைக்கப்பட்டனர். அதாவது:

“பொலிஸ் மா அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில், அவரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப (பதிவு 18 (3)).”

அவசரகால விதிமுறைகளின் கீழ், காவல்துறையினரே கைதிகளைத் தடுத்து வைப்பதற்கான இடம், நிபந்தனைகள் இரண்டையும் தீர்மானித்தனர். தடுப்புக்காவல் கைதி ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவருக்கு பகுதி IX (இது ‘சிறைச்சாலை பார்வையாளர்கள் சபை’ சம்பந்தப்பட்டது) தவிர்ந்த, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகள், பார்வையாளர் வருகைகள், கடிதப் போக்குவரத்துக்கான விதிகள், சிறைவிதிகள் அனைத்தும் கூட அவரைக் கட்டுப்படுத்துபவையாக அமையும். ஆயினும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர், கைதி தொடர்பாக, எந்த விதிகளையும் மாற்றவும், அவருக்கான பார்வையாளர் வருகைகள், கடிதப் போக்குவரத்துத் தொடர்பான தனது சொந்த விதிகளை உருவாக்கவும் முடியும்.

அவசரகால விதிமுறைகளின் மற்றொரு பிரிவின் கீழ், அதாவது சரத்து 19 இன் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்தவரை, அவர்கள் “கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து இலங்கையில் அமைந்துள்ள எந்த இடத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்படலாம்” (பதிவு 19 (8) (a)) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய எந்தவொரு நபரும் “காவல்துறைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில், அவர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தடுத்து வைக்கப்பட வேண்டும்” (பதிவு 19 (8) (c)). இந்த நிலை பதினைந்து நாட்கள் நீடிக்கும். அதன் முடிவில், விடுவிக்கப்படாவிட்டால், அந்த நபரை ஒரு மாஜிஸ்திரேட் முன், முன்நிலைப்படுத்த வேண்டும். அவர் அவரை ஒரு சிறையில் அடைப்பார்.

இந்தப் பகுதியில் உள்ள பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு (திருத்த) சட்டவிதிகள் விசித்திரமாக இருந்தன. நாம் ஏற்கனவே பார்த்தது போல, நடைமுறையில் காவல்துறை ஒரு நபரை இரண்டு மாதங்களுக்கு (உச்ச நீதிமன்றத்தால் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முடியும்) காவலில் வைத்திருக்க முடியும். இந்தக் காவல் நீதித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது, இது பொதுவாக சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதைக் குறிக்கும். இந்தச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவை முழுமையாக மேற்கோள் காட்டுவது சிறப்பாக இருக்கும்:

5. இந்தப் பிரிவின் கீழ் சந்தேகிக்கப்படும் நபர், நீதித்துறையின் சட்டபூர்வ காவலில் இருக்கும் காலகட்டத்தில், அத்தகைய நபர் நீதி அமைச்சகத்தின் செயலாளரால் எழுத்துபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் தடுத்து வைக்கப்படுவார். அத்தகைய இடம் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிறைச்சாலையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அத்தகைய நபரைப் பெற்று அவரைக் காவலில் வைத்திருப்பது என்பது, அந்த இடத்திற்குப் பொறுப்பான நபர் அல்லது அதிகாரியின் கடமையாகும். தவிரவும், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட பிற  விதிகளும் அத்தகைய நபருக்குப் பொருந்தும்:

நீதி அமைச்சின் செயலாளர், அவ்வப்போது, ​​அத்தகைய இடத்திற்குப் பொறுப்பான நபர் அல்லது அதிகாரிக்குப் பிறப்பிக்கும் உத்தரவின் மூலம், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் எந்தவொரு பிரிவையும், உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு, அத்தகைய நபருக்கு அவை பொருந்தாது என்று உத்தரவிடலாம்.

6. துணைப்பிரிவு (5) இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு உத்தரவையும் வர்த்தமானியில் வெளியிட வேண்டிய அவசியமில்லை; அத்தகைய உத்தரவு நீதி அமைச்சகத்தின் செயலாளரால் கையொப்பமிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு தடுப்புக்காவலின் இடம் மற்றும் நிபந்தனைகள் நீதி அமைச்சகத்தின் செயலாளரால் தீர்மானிக்கப்பட்டன (இது, பின்னர் பாதுகாப்பு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராலாக மாற்றப்பட்டது). இந்த விதியின் கீழ் தான் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டுச் சந்தேக நபர்கள் பஜெற் வீதியில் (Paget Road) உள்ள ஒரு பங்களாவில் தடுத்து வைக்கப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்; அவர்களுக்கு வாசிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன; அவர்களது ஜன்னல்கள் வெளியே தெரியாதபடி காகிதத்தால் மூடப்பட்டன;  அவர்களது குற்றச் செயல்கள் அந்தக் காலங்களில் ‘விசாரணை செய்யப்பட்டு’ அவர்களின் ‘ஒப்புதல் வாக்குமூலங்கள்’ பெறப்பட்டன.

இந்த ‘விடுதலைப் புலிகளையும் அதுபோன்ற அமைப்புகளையும் தடைசெய்வதற்கான சட்டம்’ கூட, பயங்கரவாதத் தடைச் சட்டத்திலுள்ள விதிமுறையான “அமைச்சரது தற்றுணிவுக்கேற்பத் தீர்மானிக்கப்படும் எந்தவொரு இடத்திலும், எந்தவொரு நிலைமையிலும் ஒரு சந்தேக நபரைத் தடுப்புக்காவலில் வைக்கமுடியும்” என்ற பிரிவை (பிரிவு 11), அப்படியே பின்தொடர்வதாகத் தான் அமைகிறது. 

ஒப்புதல் வாக்குமூலத்தை நிர்வகித்தல்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நம்மத்தியில் இருந்துவந்த ‘சாட்சியக் கட்டளைச் சட்டம்’ (Evidence Ordinance), காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலங்களுக்கும், காவலில் இருந்தபோது அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தது. குறிப்பாக, ஒரு நீதிபதி முன்னிலையில் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டாலன்றி, அத்தகைய வாக்குமூலங்கள் சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலிருந்து நீக்கப்பட்டன. ஆயினும், பயங்கரவாதத் தடைச்சட்டம், அதற்குப் பதிலாக “ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அனுமதிக்கப்பட வேண்டுமானால், அது ஓர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்குக் குறையாத ஒரு பதவியிலுள்ள அதிகாரியின் முன் வாக்குமூலம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையைக் கொண்டுவந்ததன் மூலம், இந்தப் பாதுகாப்பை நீக்கியது. 

அவசரகால (நானாவித ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளின், 60 ஆவது பிரிவிலும் இதே போன்ற ஒரு விதி காணப்படுகிறது.

குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் சட்டமோ, இன்னும் ஒரு படி மேலே சென்றது: அது, சாட்சியக் கட்டளைச் சட்டத்தின் விதிகள் இருந்தபோதிலும், சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில், ஏற்றுக்கொள்ள முடியாத எந்தவொரு ஆதாரத்தையும் ஒப்புக்கொள்வதற்கான வாய்ப்பை, பிரிவு 6 (i) (d), பிரிவு 11 என்பவற்றின் மூலமாக  வழங்கியது. இதன் பின்வந்த பிரிவோ, குறிப்பாக ஒரு சந்தேக நபரால் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தையும் அல்லது குற்றச்சாட்டு அறிக்கையையும் ஒப்புக்கொள்வதற்கு வழங்கியது. “எவரொருவரோ, எந்தவொரு சூழ்நிலையிலோ வழங்கிய” சாட்சியம்: பிரிவு 11 (2) (b).

அந்நிய செலாவணிக் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம், தடுப்புக்காவலில் வழங்கிய அல்லது ASP பதவிக்குக் குறையாத ஒரு போலீஸ் அதிகாரியிடம் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவை என்று குறிப்பிட்டது: பிரிவு 30 G (1).

நீதித்துறையின் காவலில் இருந்து ஒருவரை வெளியே வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை அணுகுவதற்குக் காவல்துறைக்கு உரிமை உண்டு. அத்துடன், விசாரணை நோக்கத்திற்காக அந்த நபரை நியாயமான காலத்துக்கு எந்த இடத்திற்கும் அழைத்துச் செல்லவும், அதற்காக அவரை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் காவல்துறைக்கு உரிமை உண்டு. இதன் பொருள், ஒரு நபர் ஒப்பீட்டளவில் நீதித்துறையின் காவலிலுள்ள ஒப்பீட்டளவிலான பாதுகாப்பிலிருந்து, மீண்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டிலும், அவர்களின் தயவிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதே. இந்த உரிமை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7 (3) (a) மூலமாகக் காவல்துறைக்கு வழங்கப்படுகிறது.

1970களில் இருந்ததைப் போலவே, அவசரகால (இதர ஏற்பாடுகளும் மற்றும் அதிகாரங்களும்) விதிமுறைகளிலும் இதே போன்ற ஒரு விதி காணப்பட்டது. எந்தவொரு அவசரகால ஒழுங்குமுறையின் கீழும், கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர், காவல்துறை அல்லது ஆயுதப்படைகளின் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த ஓர் அதிகாரியாலும் விசாரிக்கப்பட முடியும். தவிரவும், அவர் தனது தடுப்புக்காவலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, ஏழு நாட்கள் வரை அந்த அதிகாரியின் தற்காலிகக் காவலிலும் வைக்கப்படலாம். இதனால் இங்கும் கூட, ஒரு நபர் நீதித்துறையின் காவலில் இருந்து நீக்கப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் காவலிலும், அவர்களின் தயவிலும் இருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

உண்மையில் ஏழு நாள் வரம்பு என்பது எத்தகைய முக்கியத்துவமுமற்றது. ஏனென்றால் நடைமுறையில், இது ஒவ்வொரு ஏழு நாட்களுக்கொருமுறை சிறைவாசலால் ‘உள்ளே’ போய் திரும்பவும் ‘வெளியே’ வருவதாகவே இருக்கிறது. இதனால் ஒரு கைதி வாரக்கணக்கில் இந்தச் சூழ்நிலையில் வைக்கப்படுவார். 1972 ஆம் ஆண்டின் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம் இதேபோன்ற ஒரு விதியைக் கொண்டிருந்தது. சட்டத்தின் கீழ் ஒரு நபர் நீதித்துறையின் காவலில் இருக்கும் காலகட்டத்தில், குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை விசாரிக்கும் எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும், நியாயமான நேரங்களில் அவரை அணுகவும், விசாரணையின் நோக்கங்களுக்காக, அவரை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு சென்று விசாரிக்கவும் முடியுமான வகையில் பிரிவு 30B (4) இருந்தது.

அமைப்புகளைத் தடை செய்தல்

அமைப்புகளைத் தடை செய்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் நோக்கத்துக்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டதிற்கு இருக்கும் சட்டங்களுக்கான சரத்துகளை உருவாக்கும் அதிகாரம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2001 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பாராளுமன்ற ஒப்புதலைப் பெற, அரசாங்கத்திற்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தபோது, ​​அவசரகால நிலை காலாவதியாகுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு இருந்த, சட்ட விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தின் கீழ், அவசரகாலச் சட்டம் நிலவிய காலத்தில் இருந்த பல சட்ட விதிமுறைகள் மீளவும் உருவாக்கப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைமுறையில் இருந்துவந்து பின் காலாவதியான தடை, 1998 ஆம் ஆண்டு தலதாமாளிகைக் குண்டுவெடிப்புக்குப் பிறகு அவசரகாலச் சட்டத்தின் மூலம் மீளக் கொண்டுவரப்பட்டதும் இவற்றில் ஒன்றுதான். இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பின்னர் செப்டம்பர் 2002 இல் இரத்துச் செய்யப்பட்டது.

உண்மையில் இந்த விதிமுறை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் எல்லைகளை மீறிய ஒன்றாகவும், எத்தகைய சட்டரீதியான விளைவுகளையும் தரமுடியாத ஒன்றாகவும் இருக்கக்கூடும். உண்மையைச் சொல்வதானால், அந்த விடயம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருந்தபோதும், அவசரகாலச் சட்டத்தின் 68 ஆவது பிரிவும் அதன் உபபிரிவு 2 ஆன, ‘தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதையொத்த பிற அமைப்புகளையும் தடைசெய்தல்’ ஆகிய இண்டின் மூலமாகவும், அமைப்புகளைத் தடை செய்வதற்கு சட்டத்தில் வழிவகுக்கப்பட்டிருந்தன என்பதைக்  காணமுடியும்.

மரண தண்டனை விலக்கு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள கவனத்துக்குரிய ஒரு நல்ல அம்சம், அதன் கீழ் தண்டனை பெற்ற நபர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக மாட்டார்கள் என்பது. இச்சட்டத்தின் கீழ், தண்டனைச் சட்டத்தின் (Penal Code) அடிப்படையில்  மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக ஒருவருக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்படும். இதே குற்றத்துக்காக, குற்றவியல் நீதி ஆணையச் (Criminal Justice Commision) சட்டத்தின் அடிப்படையில், ஒருவருக்கு “உச்ச நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அல்லது நீதவான் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய மரண தண்டனையைத் தவிர்ந்த, வேறு எந்த ஒரு தண்டனையையும்” விதிப்பதற்குரிய அதிகாரம் பிரிவு 15 (b) மூலம், ஆணையத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது. அரசியல் எதிரிகளைத் தியாகிகளாக மாற்றக்கூடாது என்ற விருப்பத்தால் இது தூண்டப்பட்டிருக்கலாம். நீதியின் சாதாரண தரநிலைகளை மிகவும் நீர்த்துப்போகச் செய்தபின் நடாத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, மக்களைத் தூக்கு மேடைக்கு அனுப்புவது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானது என்பது உணரப்பட்டது.

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு

இக்கட்டுரையை எழுதிய சூரியா விக்கிரமசிங்க,பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், London school of Economics and Political Science கல்லுரியிலும் பட்டம்பெற்ற ஒரு சட்டத்தரணியாவார். சர்வதேச மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்த இவர், சிவில் உரிமைக்கான இயக்கத்தின் ஸ்தாபகரும் (1971), தற்போதைய, நடேசன் சட்டபூர்வ மனித உரிமைகளுக்கான மையத்தின் செயலாளரும் ஆவார்.  

அடிக்குறிப்புகள்

  1. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் எண். 1979.
  2. சுதந்திரத்திற்கு முன்பு இயற்றப்பட்டிருந்த சட்டங்கள், கட்டளைகள் என்று அழைக்கப்பட்டன. சுதந்திர அரசியலமைப்பின் கீழ் அவை விதிகள் என்று அழைக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அவற்றைச் சட்டங்கள் என்று பெயரிட்டது, தற்போதைய (1978) அரசியலமைப்பு அவற்றைச் சட்டங்கள் என்று அழைப்பதற்குத் திரும்பியது. மாறிவரும் சொற்களஞ்சியம் அவை எந்த அரசியலமைப்பின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதைப் பிரதிபலிக்கிறது, ஆனால் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.
  3. முன்னர் கவர்னர் ஜெனரலாக (பிரதமரின் ஆலோசனையின் பேரில்), பின்னர் ஜனாதிபதியாக (பிரதமரின் ஆலோசனையின் பேரில்), அக்டோபர் 1977 இல் நிர்வாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்படும் வரை (1972 அரசியலமைப்பின் 2 ஆவது திருத்தத்தின் மூலம்), ஜனாதிபதி அவற்றை முழுமையாக தனது விருப்பப்படி உருவாக்கியதிலிருந்து.
  4. அவசரகாலச் சட்ட அறிவிப்பு என்பது பொதுவான பயன்பாட்டில் உள்ள சொற்பதமாகும். தொழில்நுட்ப ரீதியாக இதன் பொருள் என்னவென்றால், ஜனாதிபதி பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியை, செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார் என்பதாகும். இது அவருக்கு சாதாரண சட்டமன்ற நடைமுறைகளைத் தவிர்த்து சட்ட வலிமையைக் கொண்ட அவசரகாலச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது.
  5. அவசரகாலச் சட்டத்தின் (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்கு முறைகள் இலக்கம் 7, 1975 ஜூலை, 172/13 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
  6. வர்த்தமானி எண். 46/7/ஜூலை 24, 1979.


About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்