நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் – பகுதி 1

October 3, 2025 | Ezhuna

இலங்கையின் வறண்ட மண்டலமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீர்வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்கான கொள்கைகள் உருவாக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், நிலையான நீர்வள மேலாண்மை சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும் அமையும். இதன் மூலம், வறண்ட மண்டலங்களில் உள்ள நீர்வளங்கள் பாதுகாக்கப்படும். “வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை” எனும் இந்தக் கட்டுரைத் தொடர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆற்றுப்படுகைகளின் நீர்வளங்களின் நிலையை ஆராய்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், அவற்றின் திறம்பட்ட பயன்பாட்டை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதைக்கூறும்.

4.1 நிலத்தடி நீர் மேம்பாட்டு மூலோபாயம்

நிலத்தடி நீர், பொதுவாக ஆழமற்ற நீர்நிலைகளாகக் (Shallow Aquifers) கிடைக்கிறது. இது உள்நாட்டுப் பயன்பாடு, சிறுதொழில் நோக்கிலான பாசனம், தொழிற்துறை மற்றும் பிற தேவைகளுக்காக, வடமாகாணத்திலும் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்கான ஒரு தயாரான மூலத்தை வழங்குவதற்கு மேலதிகமாக, இந்த ஆழமற்ற நீர்நிலைகள், வற்றாத நீரோட்டக் காலங்களில் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு நீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன; இது ஈரநிலங்கள் (Wetlands) மற்றும் இயற்கைத் தாவரங்களுக்கும் ஆதாரமாக அமைகின்றது.

மேற்பரப்பு நீர் வளங்களைப் போலவே, நிலத்தடி நீர் வளங்களின் பயன்பாட்டிற்கும் நுட்பமான மதிப்பீடு, இழுப்பு (Abstraction), பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் என்பன தேவையாகின்றன. செறிவான நகர்ப்புற, தொழிற்துறை, சுற்றுலா மற்றும் பிற வளர்ச்சி நடவடிக்கைகள், இந்த வளத்தின் அதிகப்படியான இழுப்பு மற்றும் பயன்பாட்டிற்கு வழிவகுத்துள்ளன.

தற்போது, குழாய்க் கிணறுகள் (Tube Wells) தோண்டுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது அவற்றின் தாக்கம் மற்றும் நிலத்தடிநீரின் தரம் குறைதல் ஆகியவற்றைக் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கான தேவையான சுற்றுநிருபங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆழமற்ற ‘விவசாயக் கிணறுகள்’ (Agro-wells) கட்டுப்பாடற்ற முறையில் தோண்டப்பட்டதால், சில பகுதிகளில் ஆழமற்ற நிலத்தடி நீரில் அதிகப்படியான இழுப்பும் மிகுதியான பயன்பாடும் ஏற்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கில் இது நேரடியாக, பரவலான பகுதிகளில் நிலத்தடிநீரின் உப்புத்தன்மை (Salinity) அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. குழாய்க் கிணறுகள் தோண்டுவதற்கான கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும், அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலைத்தன்மையான அளவு நீரை மட்டுமே இழுக்க (Abstract) அனுமதி வழங்குவதற்கும், பிராந்திய நீர்வள சபை (Water Resources Board) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என்பது தெளிவாகிறது. இதற்குரிய சுற்றுநிருபம் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

4.1.1 நிலத்தடி நீரின் நிலையான முகாமைத்துவம்

நிலத்தடி நீரைப் பாதுகாப்பான அளவில் இழுத்தெடுத்தல் (Abstraction), நிலையான முறையில் முகாமை செய்தல் ஆகிய கோட்பாடுகள் கடந்த எழுபது ஆண்டுகளாக நன்கு நிலைபெற்றுள்ளன. பிராந்திய நீர்வளச் சபை (Water Resources Board) நிலத்தடி நீர் வளங்களின் நிலையான முகாமைக்கான ஒரு கட்டமைப்பை நிறுவி, மேலும் கடுமையான இணக்கத்தை நடைமுறைப்படுத்த மேலே குறிப்பிட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.

4.2 மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் முகாமைத்துவம், ஒருங்கிணைப்பு

மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமற்ற நிலத்தடி நீர் ஆகியவை நேரடியாக ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், இவை முழுமையாக ஒருங்கிணைந்த முறையில் நிர்வகிக்கப்படும். இதன் நோக்கம், இந்த வளங்களின் நிலையான முகாமைத்துவமேயாகும். மேற்பரப்பு நீரைப் போலவே, நிலத்தடி நீரை இழுத்தெடுப்பதற்கான (Abstracting) ஒவ்வொரு விண்ணப்பமும் அதன் சொந்தத் தகுதிகளின் அடிப்படையில், சமூகங்களின் முன்னுரிமைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மிக முக்கியமாக அந்த நிலத்தடி நீர்நிலை மற்றும் நீர்வளத்தின் நீண்டகால நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியமானது. 

மேலும் நீர்வள சபை, நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் நீர் விநியோக வடிகால் அமைப்புச் சபை உள்ளடங்கலாக, நீர் வளங்கள் சம்பந்தமான ஒரு பிராந்திய நீர் வழங்கல் முகமை (Regional Water Supply Agency – RWSA) உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நீர் வழங்கல் முகமை, நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்த் தரவுத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும். இதற்கான தரவுகள் மாதாந்தம் திருத்தப்படல் வேண்டும். இந்தத் தரவுத்தளத்தில் அத்தகைய வளங்களின் அளவு மற்றும் தரம் குறித்த தகவல்கள் இருக்க வேண்டும். இது பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

4.2.1 நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளங்கள் குறித்த பொது விழிப்புணர்வு

பொதுமக்கள் மேற்பரப்பு மற்றும் ஆழமற்ற நிலத்தடி நீர் வளங்கள் குறித்து முழுமையான புரிதலைப் பெறுவதையும், அவற்றை நிலையான முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உறுதி செய்வதற்காக பிராந்திய நீர் வழங்கல் முகமை (Regional Water Supply Agency – RWSA)  தீவிரமான பொது விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்த வேண்டும்.

4.3 மூலோபாய அணுகுமுறை

4.3.1 யாழ்ப்பாணக் குடாநாடு

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் ஆழமற்ற நிலத்தடி நீரை நிரப்புவது (Recharge) முற்றிலும் சாத்தியமற்றது. ஏனெனில், முழுக் குடாநாடும் கரிமண் பாறை (Karstic) அமைப்பைக் கொண்டது. எந்தவொரு வகையிலும் இந்த ஆழமற்ற கரிமண் பாறை நீர்த்தேக்கங்களை நிரப்ப முயன்றாலும், ஈர்ப்பு விசையின் காரணமாக, அந்த நீர் அனைத்தும் சுற்றியுள்ள கடலுக்குள் கரைசல் கால்வாய்கள் (Solution Canals) மூலம் வடிகின்றது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு கீரிமலைக் கேணியாகும். அங்கு நிலத்தடிநீர் ‘கேணி’க்குள் வெளியேற்றம் அடைந்து கடலுக்குச் செல்கிறது. கரையோரம் முழுவதும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வெளியேற்றப் புள்ளிகள் உள்ளன. அவற்றில் சில வறள் நிலங்களில் தெரியக்கூடியன. பல கடலின் அடியில் வெளியேறுவதால் தெரிவதில்லை. 

4.3.2 வன்னிப் பெருநிலப்பரப்பு மற்றும் கிழக்குப் பிராந்தியம்

வன்னிப் பெருநிலப்பரப்பு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் ஆழமற்ற நிலத்தடி நீரை நிரப்புவது ஒரு சாத்தியமான வாய்ப்பாக இருக்கின்றது. ஏனெனில், அங்குள்ள புவியியல் மற்றும் புவித்தோற்ற அமைப்பு முற்றிலும் வேறுபட்டது; நிரப்பப்படும் நீரைச் சேமிப்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது.

4.4 நிலையான நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் வளங்களின் முகாமைத்துவத்திற்கான முன்மொழிவுகள்

  1. சட்டத்திற்கிணங்க நடவடிக்கை: 1964 ஆம் ஆண்டின் நீர்வளக் குழுச் சட்டம் (எண். 29), பிரிவு 12 (1) இல் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, பாசனம் மற்றும் நீர்வள மேலாண்மை அமைச்சரால், பிரிவு 16 (1) மற்றும் 16 (2) கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, வர்த்தமானி அறிவிப்பு எண். 2010/23 – வியாழன், மார்ச் 16, 2017 மூலம் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் (இணைப்பு 1).
  2. நிலத்தடி நீர்த்தேக்கத்தை நிரப்புதல்: நிலத்தடி நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்கு மேற்பரப்பு நீர்த்தேக்கம் தேவைப்படுகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஈர்ப்புப் பாசனம் என்பவற்றோடு, நிலத்தடி நீரை நிரப்புவதும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புராதன கிராமக் குளங்களை மீட்டெடுப்பதன் நோக்கமாக அமைகின்றது.
  3. குழாய்க் கிணறுகள் மற்றும் முக்குளிப்புப் பம்புகளுக்கு பகுதியான தடை: குழாய்க் கிணறுகள் தோண்டுவதைக் கட்டுப்படுத்தவும், இருக்கும் குழாய்க் கிணறுகளில் முக்குளிப்புப் பம்புகளைப் (Submersible Pumps) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். அதற்குப் பதிலாக, தரை மட்டத்தில் வைத்து ஓர் உறிஞ்சும் குழாய் மூலம் நீர் எடுக்கும் சிறிய பம்புகளை மட்டுமே அனுமதிக்கலாம். இவை தாமாகவே வரையறுக்கப்பட்ட திறன் கொண்டவை என்பதே இதற்குக் காரணம். இவற்றால் தரை மட்டத்திலிருந்து சுமார் 9.5 மீட்டர் (29 அடி) ஆழம் வரை மட்டுமே நீரை உறிஞ்ச முடியும். இதனால், உப்பு நீர் ஊடுருவலை குறைந்த அளவில் பேண முடியும்.
  4. நிலத்தடி நீர் ஆய்வு: வன்னிப் பெருநிலப்பரப்பு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளில் ஒரு விரிவான நிலத்தடி நீர் மாதிரி ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீர் நிரப்புதலுக்கு உகந்த சிறுபாசனத் திட்டங்களை மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களை அடையாளப்படுத்தி, மேற்பரப்பு நீரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, இவ்வாறு சேமிக்கப்படும் நீர் ஆழமற்ற நிலத்தடி நீரை நிரப்புவதற்கு வழி செய்யலாம்.
  5. நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்: உள்நாட்டு மற்றும் தொழிற்துறை நீர்ப் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் இழுப்பைக் குறைக்க வேண்டும். இருக்கும் பாசனத் திட்டங்களின் உறுதியான நீர் தேக்கத்தில் குறைந்தபட்சம் 40% பங்கு தொழிற்துறை மற்றும் உள்நாட்டு நீர்ப் பயன்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். அதாவது எந்த  ஒரு நீர்த்தேக்கத்தில் இருந்தும் விவசாயம் அல்லாத தேவைகளுக்கு 40% நீரை ஒதுக்கி வைத்தல் வேண்டும்.
  6. பிராந்திய நீர் வழங்கல் முகமையின் கடுமையான நடவடிக்கை: அனைத்து வகையான குழாய்க் கிணறுகளிலும் மின்சாரம் அல்லது சுழல் இயக்க முக்குளிப்புப் பம்புகளின் பயன்பாட்டை பிராந்திய நீர் வழங்கல் முகமை கட்டுப்படுத்த வேண்டும். கைப்பம்புகள், வீட்டு உபயோகத்திற்கு அனுமதிக்கப்படும். ஏனெனில் அவை தாமாகவே பயன்பாட்டை வரையறுக்கும்.
  7. நீர்ப் பயன்பாட்டுத் தோட்டங்கள் (Agro-forest): மாகாணத்திலுள்ள ஒவ்வொரு குளங்களின் கீழ்ப்பகுதியிலும், பல்லாண்டுப் பயிர்களைக் (Perennial Crops) கொண்ட வேளாண் காடுகள் (Agro-forest) மற்றும் தனியார் தோட்டங்கள் நிறுவப்பட வேண்டும். இவை, குளத்தின் கீழ்ப்பகுதியில் ஆழமற்ற நீர்நிலைக்குள் நுழையும் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும்.
  8. கட்டுப்படுத்தப்பட்ட பாசனம்: வேளாண் கிணறுகளிலிருந்து (Agro wells) தூக்குப் பாசன வசதிகள் (Lift Irrigation) மிகவும் கவனத்துடன், திட்டமிடப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் நிலத்தடிநீர் வளங்கள் அதிகம் பயன்படுத்தப்படாமல் போகும். பயன்படுத்தப்படும் பம்புகளின் வகை மற்றும் திறன், இடம், நிலத்தின் நிலைமைகள், பயிர்முறை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். பொருளாதாரம், நீடித்துழைக்கும் தன்மை, நிலைத்தன்மை மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றையும் போதுமான கவனிப்புக் கொடுத்துத் தேர்வு செய்ய வேண்டும்.
  9. சிறு விவசாயிகளுக்கான அனுமதி: கைப்பம்புகள் (Hand Pumps), தரை மட்டத்தில் இயங்கும் சிறிய பெட்ரோல் அல்லது டீசல் பம்புகள், துலா (Well Sweeps) ஆகியவை மட்டுமே, ஒரு ஏக்கருக்கும் குறைந்த சிறு விவசாயிகள் மற்றும் தனிப்பட்ட வீடுகளால், ஆழமற்ற நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
  10. மாற்று ஆற்றல் மூலங்கள்: முழு மாகாணத்திலும் உள்ள தேங்காய், முந்திரி மற்றும் சிறு தோட்டங்களுக்குத் தேவையான ஆழமற்ற நிலத்தடி நீரைப் பெற, மாற்று ஆற்றல் மூலங்களான சூரிய–காற்றுச் சக்திப் பம்புகளிற்கு (Solar and Wind Powered Pumps) பிராந்திய நீர் வழங்கல் முகமை மூலம் அனுமதி கிடைக்கப்பெற வேண்டும்.

4.5. யாழ்ப்பாணத்தின் நீர்த் தேவைகளை வட மாகாணத்தில் இருக்கும் நீர்வளங்கள் மூலம் பூர்த்தி செய்வதற்கான புதிய கோட்பாடுகள்/ கொள்கைகளின் அறிமுகம்

4.5.1. யாழ்ப்பாணக் குடாநாட்டின் அடிப்படை விவரங்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர்த் திட்டங்கள்

மக்கள் தொகை

தற்போதைய மக்கள் தொகை சுமார் 625,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 86,000 குடும்பங்கள் விவசாயத் தொழிலிலும், 15,000 குடும்பங்கள் மீன்வளத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளன. சராசரி நில உடைமை அளவு அரை ஏக்கரில் இருந்து கால் ஏக்கர் வரை இருக்கும். மதிப்பீட்டின்படி, விவசாயத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தாம் பணியாற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் அல்லர். கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் சுமார் 28% ஆகவும், நகர்ப்புறங்களில் சுமார் 26% ஆகவும் உள்ளது. யாழ்ப்பாண நகரம் மட்டுமே ஒரு பெரிய நகரமாக உள்ளது.

காலநிலை

இங்கு வெப்பமண்டலப் பருவமழைக் காலநிலை நிலவுகிறது. இப்பிரதேசத்தின் பகுதிகள் அரை வறண்டது முதல், முழு வறண்ட நிலை கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான வடகிழக்குப் பருவமழையே, சராசரியாக ஆண்டுக்கு 1280 மி.மீ என்று கணக்கிடப்படும் மழையின் 90 சதவீதத்தைப் பெறுகிறது. மீதமுள்ள மழை தென்மேற்குப் பருவமழையால் கிடைக்கிறது. நீர்ச் சமநிலைக் கணக்கீடுகள் மாறுபடுகின்றன. பொதுவாக, சுமார் 10 – 15% நீர் சுற்றியுள்ள கடல் மற்றும் சதுப்பு நிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும். 50% வரையான நீர் ஆவியாகி விடுகிறது. சுமார் 30% நீர் ஆழமற்ற நீர்நிலைகளில் (Shallow Aquifers) சேர்கிறது. திறந்த கிணறுகள் மூலம் இந்த நீரை எளிதாக அடைய முடியும். நிலத்தடி நீர் மட்டம் பொதுவாகத் தரை மட்டத்திலிருந்து சராசரியாக 2 – 6 மீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது.

நில அமைப்பும், நில வடிவங்களும்

யாழ்ப்பாணக் குடாநாடு மிகவும் சமதளமான, குறிப்பிடத்தக்க நில வடிவங்கள் இல்லாத பகுதியாகும். இதன் நடு மேற்குப் பகுதிகள் சற்று உயர்ந்துள்ளன. தெல்லிப்பழை அருகே உள்ள மிக உயர்ந்த இடம், கடல் மட்டத்திலிருந்து (MSL) சுமார் 10.5 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ளது. இப்பகுதி நன்கு வடிகால் வசதி கொண்ட மெல்லிய மண்ணின் (சுண்ணாம்பு கலந்த சிவப்பு லேட்டரைட் மண் – Calcic red-latosols) படையால் மூடப்பட்டிருக்கிறது. இந்த மண் காய்கறிச் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. இது முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது; பல குடிமக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்குகிறது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,036 சதுரகிலோமீட்டர்கள் ஆகும். இந்த நிலப்பரப்பிற்குள் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் உவர்ப்பு (Brackish) முதல் உப்பு (Saline) நீரைக் கொண்டவை. இவற்றின் பரப்பளவு சுமார் 118 சதுரகிலோமீட்டர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புவியியல் அமைப்பு

சில மீட்டர்கள் முதல் ஏழு அல்லது எட்டு மீட்டர்கள் வரை மாறுபட்ட ஆழங்களில் மண் அடுக்குகள் காணப்படுகின்றன. இந்த மண் அடுக்குகளுக்கு அடியில் சுண்ணாம்புக்கல் (Limestone) அமைப்புகள் உள்ளன. இவை பெரும்பாலும் புதை படிவங்களைக் கொண்டவை; மயோசின் (Miocene) காலத்தவை. இந்தச் சுண்ணாம்புக்கல் அமைப்புகள் முழுமையாக கரிமண் பாறைத் (Karstic) தன்மை கொண்டவை. இவற்றில் எண்ணற்ற கரைசல் கால்வாய்கள் (Solution Canals), வெடிப்புகள் மற்றும் பிளவுகள், நீர்க் கால்வாய்கள் (Conduits) ஊடுருவி உள்ளன. இவை பல இடங்களில் திறந்து, ஆழமற்ற நிலத்தடி நீரைச் சுற்றியுள்ள கடலில் கலக்கின்றன.

பொருளாதாரத்தின் அடித்தளம்

பயிர்கள், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை அடங்கிய விரிவான விவசாயத்துறை, வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) சுமார் 65% பங்களிக்கிறது. நெல் சாகுபடிக்கு ஏற்றதாக மதிப்பிடப்பட்ட மொத்தம் 12,000 ஹெக்டேர்களில், யாழ்ப்பாணத்தில் சுமார் 8,000 ஹெக்டேர்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 20,000 ஹெக்டேர்கள் உப்புத்தன்மை காரணமாக தரம் குறைந்த நிலங்களாக (Marginal) வகைப்படுத்தப்பட்டுள்ளன. 85% நெல் நிலங்கள் நெல் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய 15% நிலங்களில் காய்கறிகள் மற்றும் பிற வயல் பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. நெல் மகசூல் பெரும்பாலும் ஹெக்டேருக்கு சுமார் 1.5 டன்கள் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் சிறந்த வகைகளையும், நடைமுறைகளையும் பயன்படுத்தி ஹெக்டேருக்கு சுமார் 2.5 டன் வரை பெறுகிறார்கள்.

முக்கிய வணிகப் பயிர்களான மிளகாய், வெங்காயம், புகையிலை (தற்போது இது தடை செய்யப்பட உள்ளது?), உருளைக்கிழங்கு மற்றும் வாழை போன்றவை பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தீபகற்பத்தின் தேவைகளை மட்டுமல்லாது, தேசிய தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. முக்கிய பழவகைப் பயிர்களான மா, திராட்சை மற்றும் பலா ஆகியவை தீபகற்பத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு வகையான காய்கறிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

குடாநாட்டின் நீர்வளங்கள்

யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் வளங்களுக்கான ஒரே ஆதாரம் ஆழமற்ற நிலத்தடிநீர் ஆகும். இது வீடு, வணிக நிறுவனங்கள், பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகள் உட்பட அனைத்தாலும் பயன்படுத்தப்படுகிறது. முழுக் குடாநாட்டிலும் ஆறுகள் போன்ற மேற்பரப்பு நீர்வளங்கள் எதுவும் இல்லை. மதிப்பீட்டின்படி, வடகிழக்குப் பருவமழையில் 10 முதல் 15 சதவீதம் நீர் நிலத்தடிக்குள் ஊடுருவுகிறது.

இந்த ஆழமற்ற நிலத்தடி நீர், நிலத்தடி நீர் மட்டத்தைத் தற்காலிகமாக உயர்த்துகிறது. இந்தப் பருவமழை முடிவடைவதும், நிலையான இழுப்பும் (Abstraction) நீர் மட்டத்தை அடுத்த பருவமழை வரை சில மீட்டர்கள் குறைக்கின்றன. நீரியல் – புவியியலாளர்கள் தனித்தனி ஆழமற்ற நீர்நிலைகளை (Shallow Groundwater Aquifers) அடையாளம் காண முயன்ற போதிலும், உண்மையில் நிலத்தடி நீர் முழுக் குடாநாட்டின் அடியிலும் உள்ள ஓர் ஒற்றை அமைப்பு (Single Body) ஆகும்.

4.5.2 மேற்பரப்பு நீர்நிலைகள் குறித்த சமீபத்திய வரலாற்றுப் பின்னணி

கடந்த அரை நூற்றாண்டு அல்லது அதற்கும் மேலாக, பல்வேறு நபர்கள் குடாநாட்டில் உள்ள சில மேற்பரப்பு நீர்நிலைகளை (கடல் நீர் ஏரிகளை) தொண்டமான் ஆறு, வழுக்கை ஆறு, உப்பாறு என்று அடையாளப்படுத்த முயற்சித்துள்ளனர். இந்த அனைத்துக் கடல்நீர் ஏரிகளும் உவர்நீர் (Brackish) அல்லது கடல் நீரை விட அதிக உப்புத்தன்மை கொண்ட நீரைக் கொண்டுள்ளன. பல நீர்நிலைகள் கடலுடன் இணைந்துள்ளன; கணிசமான அளவில் இறால் மற்றும் நண்டு வளர்ப்பு போன்ற நீர்வளத் தொழில்களின் தளங்களாகவும் செயற்படுகின்றன. மஞ்சள் கழனிகள் (Mangroves) போன்றே, இவை பல வகையான மீன் மற்றும் கடல் உயிரினங்களுக்கு இயற்கையான குஞ்சு பொரிக்கும் இடங்களாகவும் (Natural Nurseries) செயற்படுகின்றன. இந்த நடவடிக்கைகளிலிருந்து பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றன.

இந்த உவர்நீர் அல்லது உப்பு நீர்நிலைகளை நன்னீர் நிலைகளாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளன. இவற்றை நன்னீர் நிலைகளாக மாற்ற முடியாது. ஏனெனில், உப்பையும் உவர்ப்பையும் கடலுக்குள் வெளியேற்றுவதற்குப் போதுமான நன்னீர் ஆதாரங்கள் மழையிலிருந்து கிடைக்கவில்லை. ஒரு சுவாரஸ்யமான, எதிர் – உள்ளுணர்வு (counter-intuitive) உண்மை என்னவென்றால், இந்த ‘ஆறு’களில் உள்ள நீர் பெரும்பாலும் கடல் நீரை விட அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கான காரணம், வறண்ட காலங்களில், இந்தச் சதுப்பு நிலங்களில் உள்ள உப்பு நீருக்கு மழை வடிதல் (Runoff) மூலம் நீர்த்தல் (Dilution) இடம்பெறுவதில்லை. ஆனால் ஆவியாதல் தொடர்கிறது. இது உவர்நீரின் செறிவை கடல் நீரின் அளவிற்கு அல்லது சில நேரங்களில் அதற்கும் மேலும் குவிக்கிறது.

மழை வடிதல் நீரைச் சேகரித்து, கூட்டு மண் நிரப்பப்பட்ட (Compacted Earth Fill) கரைகள் கொண்ட செயற்கை நீர்த்தேக்கங்களில் சேமிக்க முடியும் என்றும் வேறொரு முன்மொழிவில் கூறப்பட்டது. இதுவும், சமீபகாலத்தில் முன்வைக்கப்பட்ட பிற முன்மொழிவுகளும் செயற்படுத்த முடியாதவை; யதார்த்தமற்றவை.

கடந்த ஆண்டுகளில், யாழ்ப்பாணம் தனது தூய்மையான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் திறனைப் பெறுவதற்கு பல்வேறு கருத்துகள் தீவிரமாக முன்மொழியப்பட்டு வந்துள்ளன. இவற்றில் அடங்குவன:

  1. யாழ்ப்பாணத்திற்கான ஆறு (River for Jaffna)
  2. மாற்றி அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான ஆறு (Modified River for Jaffna)
  3. தொண்டைமான் நீர்த்தேக்கம் (களப்புத் திட்டம் – Kalappu Project)
  4. யாழ்ப்பாணக் கால்வாய் (ஆஸ்திரேலியப் பொறியாளர்களிடமிருந்து விவாத நிலைக்கு வந்த கருத்து)

இந்த முன்மொழிவுகள் எதுவும் கருத்தில் கொள்ளத்தக்க அடிப்படை (Merit) கொண்டவை அல்ல. இந்தக் கருத்துகளின் மிக ‘அடிநிலை ஆய்வுகள்’ (Surface – level Examination) கூட, உணர்வுபூர்வமான காரணங்களைத் தவிர, கருத்தில் கொள்ளவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ தகுதியற்றவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

இத்தகைய முன்மொழிவுகள் பல காரணங்களால் நடைமுறைச் சாத்தியமற்றவை. அவற்றில் சில:

  1. நீரின் ஆவியாதல் விகிதம் ஆண்டுக்கு 1.3 – 1.8 மீட்டர் வரை உள்ளது.
  2. மழைநீரைச் சேகரிக்க மற்றும் வடிநீரைக் (Runoff) கால்வாய்கள் மூலம் கடத்துவதற்கு போதுமான சரிவுகள் (Gradients) தேவை. இது தீபகற்பத்தின் இட அமைப்பில் (Topography) இல்லை.
  3. இந்த ‘நன்னீர்’ நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதி, மண்ணுக்குள்ளும் அடியிலும் ஏகமாக வியாபித்துள்ள சுண்ணாம்புக் கல்லுக்குள் கசிவைத் தடுக்க, முழுமையாக அடைக்கப்பட வேண்டும்.

4.5.3 யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்பரப்பு நீர்நிலைகள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீரின் தரம்

மக்கள் தொகை அதிகரிப்பாலும், தொழில்நுட்பம், கட்டட அமைப்புகளின் அதிகரிப்பாலும், கிணற்றில் வாளிகளால் நீர் அள்ளிப் பாவித்தது போய் அதிகூடிய வலுவான மோட்டர்களைப் பாவித்து நிலத்தடி நீரைப் பாவிப்பதாலும், கடல்நீர்த் தடுப்பு முறைகள் ஒழுங்காகப் பராமரிக்கப்படாமையாலும், பாதுகாப்பற்ற மலசலகூட முறைகளால் கழிவுகள் நிலத்தடி நீருடன் சேருவதாலும், தோட்டங்கள் செய்யப் பயன்படுத்தும் செயற்கை உரங்களாலும், எமது நிலத்தடி நீர் பல அமுக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. 

நிலத்தடி நீரில் நைதரசனின் அளவும் கூடிக்கொண்டு வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். முன்பு போல அல்லாமல், நாம் நிலத்தடி நீரை அதிகப்படியான அளவிலும், வேகத்திலும் உறிஞ்சி எடுப்பதால், அதன் இழுப்புத்தரம் ஊறும் வேகத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால், நிலத்துக்கு மிகச் சமீபமாக இருக்கும் கடல்நீர் எமது நிலத்தடி நீருடன் கலக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலத்தடி நீர் இருப்புச் சம்பந்தமான படம் கீழே தரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நிலத்தின் கீழ் கல்சியப் பாறைகளே அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பாறைகளின் மேலேயே பல ஆண்டு காலமாகச் சேமிக்கப்பட்ட மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது வளியில் உள்ள காபனீர் ஒட்சிசனுடன் சேர்ந்து மழைநீர் காபோனக்கமிலமாக மாறுகிறது. இந்தக் காபோனிக்கமிலம் நிலத்தடியில் காணப்படும் கல்சியப் பாறைகளைக் கரைத்து விடுவதாலேயே எமது நீர் கல்சியமுடைய வன்-நீராக இருக்கின்றது. இந்தக் காபோனிக்கமிலம் கல்சியப் பாறைகளை வலுவற்றதாக்குகின்றது; வெடிப்புகளையும், பள்ளங்களையும் கடலுடன் இணைப்பதற்குச் சில குழாய்கள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது சம்பந்தமான விவரங்களைக் கீழே உள்ள படம் விவரிக்கின்றது.

யாழ்ப்பாண நிலத்தின் ‘போரோசிட்டி’ (Porosity) 4.5% முதல் 27% வரை மாறுபடுகிறது; சராசரி 15% ஆக இருக்கின்றது. இதனால் நிலத்தடி நீருக்கும், கடலுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. கடல்நீர் அடர்த்தி அதிகமாக இருப்பதால் மேற்பரப்பில் இருந்து உள்ளே செல்லும் மழைநீர் கடல்நீர் மேல் வில்லை போன்று தேங்கி நிற்கிறது. இச்செயற்பாட்டை கீழே உள்ள படம் விவரிக்கின்றது.

நாம் மோட்டர்களால் நீரை அதிவேகமாக உறிஞ்சி எடுக்கும் போது கடல் நீர் உள்ளே வந்து நிலத்தடி நீரை உப்பாக்குகிறது. பழைய காலங்களில் நாம் உறிஞ்சி எடுக்கும் நீரின் வேகம் குறைவாகவும், எடுக்கப்படும் நீரின் அளவு, இப்போதுள்ளதுடன் ஒப்பிடுகையில் குறைவாகவும் இருந்தது. உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் நீருக்குச் சமனான கடல்நீர் நிலத்தடி நீருக்குள் உட்புகுந்து நன்னீருடன் கலப்பதால் உப்புத்தன்மை அதிகரிக்கிறது. இச்செயற்பாட்டையும் மேலே உள்ள படம் விவரிக்கின்றது. வருடக் கடைசியில் பெறும் மழைநீரை நாம் நீண்டகாலம் சேமித்து வைத்திருக்க முடியாமலும் போகின்றது. வருடத்திற்கு 1200 – 1300 மி.மீ என்ற மழை வீழ்ச்சியை நாம் பெற்றாலும், எங்களால் மழைநீரை நிலத்தின் கீழ் சேமித்து வைக்க முடியதவாறு, எமது நில அமைப்பு அமைந்து இருப்பது எமது துர்ப்பாக்கியமே.

மழைக்காலங்களில் தேவைக்கதிகமான நீரை நாம் பெற்றுக்கொண்டாலும், சேமித்து வைக்கமுடியாத நில அமைப்பின் காரணமாக அதனை எம்மால் சேமிக்க முடியாமல் உள்ளது. நாம் வைத்திருப்பது ‘ஓட்டைப்பானை’ போன்ற நில அமைப்பு. எம் முன்னோர்கள் சேமித்த நீரிலும் பார்க்க, அவர்கள் பாவித்த நீரின் அளவு குறைவாக இருந்தது. நாம் இப்போது பாவித்துக் கொண்டிருப்பது அவர்கள் எமக்காக நிலத்தடியில் சேமித்து வைத்திருந்த நீரே ஆகும். எமது நிலத்தின் அமைப்பு அப்படிப்பட்டதாக இருப்பது எமது துரதிர்ஷ்டம். பெருநிலப்பரப்பில் இருக்கும் வன்னிப் பிரதேசங்கள் அப்படியானதல்ல.

யாழ்ப்பாணக் குடாநாட்டில், தனிப்பட்ட வீடுகள், பண்ணைகள் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டளவில் 28,000க்கும் மேற்பட்ட மேற்பரப்புக் கிணறுகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. எல்லாக் காலத்திலும், அனைத்து நோக்கங்களுக்குமான நீர் விநியோகத்தின் ஒரே ஆதாரம் இந்த மேல்நிலை நீர்நிலைகளே ஆகும்.

இந்தக் குடாநாட்டில் உள்ள ஒவ்வொரு நகர அல்லது கிராம நீர் விநியோகத் திட்டமும் இந்த மேல்நிலை நீரிலிருந்தே நீர் எடுத்து, பொதுநீர்ப் பங்கீட்டுக் குழாய்கள் (Standpipes) மூலம் அதனை விநியோகிக்கின்றது; தனி வீட்டு இணைப்புகளால் அல்ல. யாழ்ப்பாண நகரத்தின் நீர் விநியோகமும் இதே அடிப்படையிலேயே செயற்படுகின்றது. நாளில் இரண்டு முறை இந்தக் குழாய் முறைக்கு நீர் வழங்கப்படுகிறது. மக்கள் தங்கள் பங்கை வாளிகள் அல்லது பிற பாத்திரங்களில் எடுத்துச் சென்று வீட்டினுள் சேமிக்கின்றனர்.

குடாநாட்டின் இந்த மேல்நிலை நீர் மனித நுகர்வுக்கு ஏற்றதாக இல்லை. இந்தக் குழாய்களில் வரும் நீர் எந்தவொரு சுத்திகரிப்பும் இல்லாமல் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர் வழங்கப்படுவதற்கு முன் சுத்திகரிப்பு நடைபெறுகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அக்டோபர் 2002 இல் ஜெர்மன் அரசின் உதவி நிறுவனமான ஜி.டி.இசட் (GTZ) வெளியிட்ட ‘யாழ்ப்பாண மறுகட்டமைப்புத் திட்டம்’ (Jaffna Rehabilitation Project) என்ற தொழில்நுட்ப ஆய்வறிக்கை, இந்த மேல்நிலை நீர் மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என வகைப்படுத்துவதற்கான முக்கிய காரணங்களைப் பின்வருமாறு விவரிக்கிறது:

  1. நூறு சதவீதம் உயிருடன் காணப்படும் ஈ.கோலி (E. Coli) பக்டீரியா மற்றும் ஏற்க முடியாத அளவு நைட்ரைட்டுகள் (Nitrites).
  2. மிகவும் ஏற்க முடியாத அளவு வேளாண் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் (Pesticides).
  3. அதிக அளவு உப்புத்தன்மை (Salinity).

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீரின் நிலை குறித்து ஜி.டி.இசட் அறிக்கை பின்வரும் வருத்தமூட்டும் குறிப்பைத் தருகிறது.

ஈ.கோலி மற்றும் நைட்ரைட்டுகள்

எந்த நீரிலும் நைட்ரைட்டுகள் இருப்பது, கழிவுநீர் மூலம் மாசுபடுவதற்கான தெளிவான அறிகுறியாகும். உயிருடன் காணப்படும் ஈ.கோலி பக்டீரியா இருப்பது, நிலத்தடி நீர் நேரடியாகக் கழிவுநீரால் மாசுபடுகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் குடாநாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு ‘செப்டிக் டேங்’ (Septic Tank) உடைய கழிப்பறை உள்ளது. இவை செப்டிக் டேங்குகள் என்று அழைக்கப்பட்டாலும், இவை வெறும் குழிக் கழிப்பறைகள்தான் (Pit Latrines). இவை பொதுவாக 1.5 முதல் 2 மீட்டர் சதுரப் பரப்பளவில், தரை மட்டத்திலிருந்து சுமார் 3 மீட்டர் ஆழம் வரை ஒரு குழியைத் தோண்டியே உருவாக்கப்படுகின்றன.

குழியின் பக்கச் சுவர்கள் இடிந்து விழாமல் இருக்க சிமெண்ட் – மணல் தொகுதிகளால் (Blocks) சுவர்களைக் கட்டி, சாந்து போட்டு ஒட்டுவது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தக் குழிகளின் அடிப்பகுதி பொதுவாக அடைக்கப்படுவதில்லை (Sealed). பின்னர், யாராவது அல்லது ஏதாவது குழியில் விழாமல் இருக்க, ஒரு மெல்லிய இரும்புக் கம்பி வலுவூட்டப்பட்ட சிமெண்ட் தகடு (Slab) குழியின் மேல் வைக்கப்படுகிறது. இந்தக் குழிகள் பொதுவாகக் கழிப்பறைக்குப் பின்னால் அமைக்கப்பட்டு, கழிப்பறையின் கழிவுக்குழாய் இந்தக் குழியுடன் இணைக்கப்படுகிறது. கழிப்பறை கழுவப்படும் போது, மலக்கழிவுகள் இந்தக் குழியில் சென்று சேர்கின்றன.

இந்தக் கழிப்பறைகளின் உண்மையான ஆபத்து என்னவென்றால், சரியாக நிறுவப்பட்ட செப்டிக் டேங்குகளைப் போல இவை பாதுகாப்பான முறையில் அடைக்கப்படவில்லை என்பதே. மலக்கழிவுகள் மற்றும் கசிவு நீர் (Effluent) ஆகியவை குழியின் அடி அல்லது பக்கங்கள் வழியாக மேல்நிலை நீரோட்டத்தில் கலந்துவிடுகின்றன. மேல்நிலை நீரின் மட்டம் தரை மட்டத்திலிருந்து இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழத்தில் மட்டுமே இருப்பதால், குழியிலுள்ள பொருட்களுக்கும் சுற்றியுள்ள நிலத்தடி நீருக்கும் இடையே நேரடியான தொடர்பு ஏற்படுகிறது.

அதிகபட்சம் 3 மீட்டர் தடிமன் கொண்ட மண்ணின் மெல்லிய அடுக்குகள், பொதுவாக நுண்துளை ஊடுருவும் திறன் (Infiltration Capacity) அதிகமுள்ள மணல் மண்ணால் ஆனவை. இதன் பொருள், மண்ணின் மேற்பரப்பில் ஏற்படும் எந்தவொரு மாசுபாடும் நேரடியாகவும் உடனடியாகவும் நிலத்தடி நீரை அடைகிறது. இந்த மெல்லிய மண் அடுக்குகளுக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கல் (Karstic Limestone) பாறைகளில் ஊடுருவும் திறன் (Permeability) மிக அதிகமாக இருப்பது இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

இந்த உண்மைதான் இங்கு மிகவும் கவலைக்கிடமான விஷயத்தை உருவாக்குகிறது. நிலத்தடி நீர், அதன் மாசுபடுத்தும் சுமையை (Pollutant Loads) தொலைதூரத்திற்கும், பரவலாகவும் எடுத்துச் செல்கிறது. இதனால்தான் ஒவ்வொரு கழிப்பறைக் குழியிலிருந்தும் ஈ.கோலி பக்டீரியாவுடன் மற்ற அனைத்து மாசுபாடுகளும் பரவுகின்றன.

இவ்வாறுதான் நைட்ரைட்டுகளும் ஈ.கோலியும் நிலத்தடி நீரில் கலக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மேல்நிலைக் கிணறுகள் இந்த மாசுபட்ட நீரைத்தான் எடுக்கின்றன என்பது ஒரு வருத்தமான உண்மை. அவர்கள் எடுக்கும் நீர் ஏற்கனவே மலக்கழிவுகள் மற்றும் கழிவுப் பொருட்களால் மாசுபட்டுள்ளது.

இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது. குடாநாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இதை அறியாமலேயே இந்த மாசுபாட்டிற்குப் பங்களிக்கின்றனர். கிணற்று நீரைக் குடிப்பவர்கள், நேரடியான அர்த்தத்தில், தங்கள் சொந்த மற்றும் அண்டை வீட்டாரின் கழிப்பறைக் கழிவுகளைத்தான் குடிக்கிறார்கள் என்று சொல்வது மிகையல்ல.

2001 ஆம் ஆண்டுக் காலத்திலேயே, ‘ஃப்ரீ அமோனியா’ (Free Ammonia) 0.34 mg/l வரையும் நைட்ரைட்டுகள் 0.263 mg/l வரையும் இருந்தன. இவை அனைத்துக் குழிக்கழிப்பறைகள் மற்றும் அமைக்கப்படும் செப்டிக் டேங்குகளில் இருந்து நேரடியாகக் கழிவுநீர் மூலம்  நிலத்தடி நீர் அதிக அளவில் மாசுபடுவதற்கான தெளிவான அறிகுறிகளாகும்.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாடு

பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாடு, நிலத்தடி நீரில் நைட்ரேட்டுகள் (Nitrates), பாஸ்பேட்டுகள் (Phosphates) மற்றும் சல்பேட்டுகள் (Sulphates) ஆகியவற்றின் அளவை அதிகரித்துள்ளது. குருநகரில், குழாய் நீரில் நைட்ரேட்டுகளின் செறிவு 76 mg/l முதல் 149 mg/l வரை காணப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட மூன்று மடங்கு அதிகமானது. சல்பேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகளும் மிக அதிகமாக, ஏற்க முடியாத அளவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1976 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வுகூட, கோண்டவில் மற்றும் திருநெல்வேலியில் நிலத்தடி நீரைப் பகுப்பாய்வு செய்து, முறையே 66.4 mg/l மற்றும் 106.3 mg/l NO3 (நைட்ரேட் சமான) அளவுகளைக் காட்டியது. இவை இரண்டும் 50 mg/l NO3 என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியவை.

1980 ஆம் ஆண்டில், நீர்வளச் சபையானது (Water Resources Board) சோதனை செய்த வேளாண் நிலங்களில் உள்ள 50% கிணறுகளில் நைட்ரேட்டு அளவு 50 mg/l இற்கு மேல் இருப்பதைக் கண்டறிந்தது. அதே நேரத்தில் யாழ்ப்பாண மாநகராட்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட கிணறுகளின் நீரும் சோதிக்கப்பட்டன. கோண்டவில் கிணற்றில் 149 mg/l NO3 செறிவும், திருநெல்வேலிக் கிணற்றில் 141 mg/l NO3 செறிவும் காணப்பட்டன. இவை 50 mg/l என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பை வெகுவாக மீறியவை.

இக்குடாநாட்டின் ஒவ்வொரு வேளாண் பணியிலும் பூச்சிக்கொல்லிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேல்நிலை நீர் மட்டம் தரை மட்டத்திலிருந்து சுமார் 1 முதல் 3 மீட்டர் ஆழத்தில் மட்டுமே இருப்பதால், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் பெரும்பகுதி மண்ணின் மெல்லிய அடுக்கு வழியாகச் சுண்ணாம்புக்கல் நீர்நிலைக்குள் (Aquifer) சென்று மற்றொரு கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றது என்பது தெளிவாகிறது.

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளின் செறிவு பொதுவாக பில்லியனுக்கு சில பகுதிகள் (Parts Per Billion) என அளவிடப்படுகிறது. இந்தச் செறிவு, சல்பேட்டுகள் அல்லது நைட்ரேட்டுகளின் தீங்கு விளைவிக்கும் செறிவை விட ஆயிரம் மடங்கு குறைவான அளவாகும்.

உப்புத்தன்மையின் அளவுகள்

1968 முதல் நடாத்தப்பட்ட பல ஆய்வுகளில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குளோரைடு (Chloride) செறிவு 50 ppm (மில்லியனுக்குப் பகுதிகள்) முதல் 4,000 ppm வரை மாறுபடுகிறது. குளோரைட்டின் அனுமதிக்கப்பட்ட அளவு 250 mg/l ஆகும்; இது 250 ppm இற்குச் சமமானது. ஒப்பீட்டிற்கு, கடல் நீர் பொதுவாக சுமார் 30,000 ppm ஆகும். 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர், மின் கடத்துத்திறன் (Electrical Conductivity) (Siemens/cm) என வெளிப்படுத்தப்படும் உப்புத்தன்மை 0.6 முதல் 1.3 S/cm வரை காணப்பட்டது. இவை மிக அதிகமான மதிப்புகளாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நைட்ரேட் மாசு மற்றும் மின் கடத்துத்திறன் (Electrical Conductivity) சம்மந்தமான பரம்பல் கீழே உள்ள இரு படங்களிலும் தரப்பட்டுள்ளன.

பொதுச் சுகாதாரம் குறித்து கவலைக்கிடமான நிலைமைகள்

இந்த மாசுபாடுகளை ஏற்றுக்கொள்ளத்தக்க அளவுகளுக்குக் கீழே கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு பணி என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். 2002 ஆம் ஆண்டிலேயே, ஜி.டி.இசட் (GTZ) அறிக்கை (யாழ்ப்பாண மறுகட்டமைப்புத் திட்டம் – பக். 13) கூறுகிறது: “உள்ளூர் நிலத்தடி நீரில் இருந்து வரும் குடிநீர், மனித நுகர்வுக்கு ஏற்றது எனக் கருதுவதற்கு முன்பு, அதிநவீன இரசாயனச் சுத்திகரிப்புச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”

600 ppm இற்கும் அதிகமான குளோரைடு உள்ள நிலத்தடி நீரை நுகர்வது, உணவுக்குழல் புற்றுநோயை (Esophageal Cancer) அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிக அளவு நைட்ரேட் (NO3) இருப்பதும் உணவுக்குழல் புற்றுநோயை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. உப்புத்தன்மையை விட நைட்ரேட் உள்ளடக்கமே இதற்கு அதிகம் பொறுப்பாகும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அனைத்து மூலங்களிலிருந்தும் ஏற்படும் மாசுபாட்டின் அளவுகள் தற்போது வரை கணிசமாக அதிகரித்து வருகின்றன. இது யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரின் நிலைமையை மிகவும் கடுமையானதாக மாற்றியுள்ளது. எனவே, பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான மாற்றுத் தீர்வுகள் மேலும் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

தொடரும்.



About the Author

சுப்ரமணியம் சிவகுமார்

கலாநிதி. சுப்ரமணியம் சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் (BSc Eng.) பட்டமும், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ரூர்க்கியில் (IIT Roorkee) நீர்வள மேம்பாட்டுத்துறையில் முதுகலைப் (MSc) பட்டமும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றவர். பின்னர் நோர்வேயின் உயிரியல் - அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (NMBU, Ås), வடகிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்திலும் (Bodø) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகவும், நீர்ப்பாசனப் பொறியாளராகவும் 28 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பல்கலைக்கழகங்களில் மூத்த விரிவுரையாளராகச் செயற்பட்டார். விவசாய அமைச்சகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், வடமாகாண அவசர மீளமைப்புத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரைகளையும், முக்கிய உரைகளையும் (Keynote Speeches) நிகழ்த்தியுள்ள இவர், குறியீட்டு அறிவியல் இதழ்களில் 45க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இதுவரை 7 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 18 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்