பால்தேயஸ் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு, இலங்கைத் தமிழர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் இன்னுமொரு தமிழ் வேதத் திருப்புதலுக்கு (மொழிபெயர்ப்பிற்கு) காத்திருக்க வேண்டியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவத் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ்மொழி வடிவம் பெற்றன. இந்த முயற்சிக்கு வழிவகுத்த இரண்டு நபர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்; இருவரும் இந்தியாவில் பிறந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியவர்கள். அவர்களில் ஒருவர் டச்சு – தமிழ்க் கலப்பின சமூகத்தினரான அட்ரியன் டி மேய் (Adrian de Mey). மற்றவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழர், ‘கூழங்கையார்’ என்ற பெயரால் அறியப்பட்டவர்; ஒரு மனக்கசப்பினால் தன் தாயகத்தை விட்டு விலகி யாழ்ப்பாணத் தீபகத்தில் வேரூன்றியவர். மூன்றாவதாகவும் ஓர் ஆளுமையான நபர், தமிழ் வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். டச்சு மதப்பரப்பாளர் ஆல்பிரட் கிராம்மர் (Alfred Crammar) என்பவரே அவர்.
பனையோலைச் சுவடிகளும் மறைந்த மறைநூல்களும் – அட்ரியன் டி மேய்
புதிய ஏற்பாட்டை அட்ரியன் டி மேய் தமிழாக்கினார் என்ற செய்தியை பிலிப் டி மெலோ என்ற தமிழரின் புதிய ஏற்பாட்டுக்கு எழுதப்பட்ட முன்னுரையின் மூலம் தான் அறிகிறோம். சிகிஸ்பெர்டஸ் பிரான்ஸ்வெல்ட் (Sigisbertus Bronsveld) மற்றும் ஜோயாகிம் ஃபைபிராண்ட்ஸ் (Joachim Fybrandsz) என்ற டச்சு உத்தியோகஸ்தர்கள் இந்த துவக்கவுரையை எழுதியிருந்தார்கள். ‘வாசிப்பவனுக்கு முகவுரை’ என்ற கலைநயமற்ற தலைப்பில் எழுதப்பட்ட தொடக்கக் குறிப்பில், பால்தேயஸ், அட்ரியன் டி மேய் மற்றும் சீகன்பால்க் ஆகியோரின் திருப்புதல்களில் காணப்படும் பிழைகளைத் திருத்துமாறு பிலிப் டி மெலோவிடம் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும், கிரேக்க மூலத்துடன் ஒப்பிட்டு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புகள் செம்மையாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிலிப் டி மெலோ என்ற பெயரைப் படித்து ஏதோ அந்நியர் என்று பதட்டப்படாதீர்கள். இவர் பச்சைத் தமிழர். இவர் யார் என்பதையும், இந்த இலங்கைத் தமிழரின் மொழிபெயர்ப்பு பற்றியும் அடுத்த கட்டுரையில் விவரிப்பேன்.
டி மேய் பழவேற்காட்டில் (முன்னாள் புலிகாட்) பிறந்தார். இது சென்னையின் பெருநகரப் பகுதியில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு கடலோர நகரம்; இந்தியாவில் டச்சு அடிமை வர்த்தகத்தின் தலைநகராக இருந்த இடம். இவரின் தாய் உள்நாட்டுக்காரர்; தந்தை டச்சு நாட்டவர். இவரின் பெற்றோரின் பெயர்களைக் கண்டறிய முடியவில்லை. இவருக்கு இருந்த தமிழ் அறிவைப் போல் முன்னொருவருக்கும் இருக்கவில்லை என்று தம் இனத்தவர் பற்றி ‘Journal of the Dutch Burgher Union of Ceylon’ என்ற இதழ் கொஞ்சம் மிகையாகவே புகழ்ந்தது. இவர் ஒரு மதகுருவாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இறையியற் பயிற்சி நிலைய முதல்வராகவும் இருந்தார். இவர் முழுப் புதிய ஏற்பாட்டையும் தமிழில் மொழிபெயர்த்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக்காலத்தைய மதச் சூழ்நிலையில் — குறிப்பாக தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவத்தின் வடிவத்தில் — மீண்டும் ஒரு வேதாகம மொழிபெயர்ப்புத் தேவைப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், டச்சுப் பிரசங்கிகள் இரண்டு வலிமையான எதிரிகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒன்று, அவர்கள் இகழ்ச்சியுடன் ‘மூடநம்பிக்கை’ என அழைத்த இந்து நம்பிக்கைகள் மற்றும் அதன் சடங்குகள்; இரண்டாவது, அவர்கள் தீவிரமாக வெறுத்து ‘பாப்பரசவாதிகள்/ பேப்பிஸ்டுகள்’ (Papists) என அவமதித்த ரோமன் கத்தோலிக்க மதம்.
டச்சுப் பொது ஆணையராக இருந்த ஏ. வான் ரேடே (A. Van Rhede) 1691 இல் யாழ்ப்பாண மாகாணங்களைப் பார்வையிட்ட போது, சில விஷயங்கள் தெளிவாயின. யாழ்ப்பாணம் அந்த நாட்களில் ரோமன் கத்தோலிக்க மதத்தினால் மிகப் பலப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தது. மதமாற்றம் பெற்ற யாழ் வாசிகள் “பாப்பாண்டவர் வழி மூடநம்பிக்கையில் ஆழ்ந்திருந்தனர்”. இந்த ‘மூடநம்பிக்கை’யை போர்த்துக்கீசிய மதப்பரப்பாளர்கள் கொரோமண்டல் கடற்கரைப் பகுதியில் இருந்து பரப்பினார்கள். கத்தோலிக்கக் குருமார்கள் ஏற்படுத்திய குழப்பம் மற்றும் பிளவுகளுக்கு அப்பாற்பட்டு இன்னொன்றையும் வான் ரேடே கவனித்தார். தமிழ்ப்படுத்தப்பட்ட டச்சு மறுமலர்ச்சி சபையின் கல்வினியப் போதனைகளை (Calvinist doctrines) மதமாறிய தமிழர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்தக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்ட போது, குறிப்பாக உள்ளூர் மக்களுடன் மொழிவழியாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்த டச்சு மதப்பரப்பாளர்களுக்கு டி மேயின் முக்கியத்துவம் தெளிவாகப்பட்டது. சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான உள்ளூர்க் குரலாக அவர் மாறினார். மதம் பரப்பும் இடத்துடன் இணைந்திருந்தவர்களை ரோமன் கத்தோலிக்கப் பிரசார இயந்திரம் திறம்படப் பயன்படுத்தியதை ஒல்லாந்துக் குருமார்கள் அறிந்திருந்தார்கள். டி மேய் இந்தியாவின் தமிழ் பேசும் பகுதிகளில் பிறந்து வளர்ந்தபடியால், டச்சு மதப்பரப்பாளர்களை விட அதிக புலமை பெற்றிருந்தார். பாட்டாவியாவில் (இன்றைய ஜகார்த்தா) இலத்தீன் மொழி கற்றதும், ஒல்லாந்து நகரமான யூட்ரெக்டில் இறையில் தேர்ச்சி பெற்றதும் இவருக்கு மேலும் சாதகமாக இருந்தது.
வான் ரேடே, யாழ்ப்பாணத்தில் ஒரு வேதப் பாடசாலையை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராக டி மேயை நியமித்தார். இந்த இறையியல் கல்லூரி 1691 ஆம் ஆண்டு நல்லூரில் நிறுவப்பட்டது. உள்ளூர் ஆசிரியர்களை டச்சு மொழியில் பயிற்றுவிக்கவும், தமிழ்ப் போதகர்களையும், சபை ஊழியர்களையும் உருவாக்கவும் இது நிறுவப்பட்டது. இங்கு கற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலோர் முன்னர் ரோமன் கத்தோலிக்கராக இருந்தவர்கள்; பின்னர் இன்னுமொரு கிறிஸ்தவ சபையுடன் இணைந்தவர்கள்.

அந்தக்காலக் காலனிய மனப்பாங்குக்கு ஏற்ப, தன் பராமரிப்பில் இருந்த மாணவர்களைப் பற்றி, டி மேய் குறைந்த மதிப்பீட்டையே கொண்டிருந்தார். மூன்று வயதுக்குட்பட்ட டச்சுக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட யாக்கோபஸ் போர்ஸ்டியஸின் ஆரம்பக்கல்வி நூலை, இந்த வயதுவந்த தமிழ்ப் பெரியவர்கள் புரிந்துகொண்டதை அவர் ஏதோ ஆச்சரியமாகப் பார்த்தார்.
1692 ஆம் ஆண்டில் அவர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் முழுப் புதிய ஏற்பாட்டையும் திருப்புதல் செய்தாரா, அல்லது லூக்கா எழுதிய ‘தூதர்களின் செயல்கள்’ என்ற பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்தாரா என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. மெலோவின் புதிய ஏற்பாட்டிற்காக பிரான்ஸ்வெல்டும் ஃபைபிராண்ட்ஸும் எழுதிய முன்னுரையில், மெலோ பரிசீலிக்க வேண்டிய திருமறைகளில் ஒன்றாக அட்ரியன் டி மேயின் புதிய ஏற்பாடும் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அச்சிடும் தொழில்நுட்பம் இலங்கையில் தொடங்காதிருந்த காலத்தில், டி மேயின் மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடியாகவே இருந்தது. 1737 ஆம் ஆண்டில் டச்சு ஆளுநராக இருந்த வான் இம்ஹாஃப் அச்சிடும் முறையை அறிமுகப்படுத்தினார்; கிறிஸ்தவத் திருமறை அச்சிடும் பணிக்கான பொறுப்பை அடால்பஸ் கிராம்மருக்கு வழங்கினார். டி மேய் மொழிபெயர்த்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், கிராம்மர் பால்தேயஸின் மத்தேயு நற்செய்தி, டி மேயின் புதிய ஏற்பாடு மற்றும் சீகன்பால்கின் புதிய ஏற்பாடு ஆகியவற்றை அச்சிடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் இந்த வேலையை முடிக்கும் முன் இறந்துவிட்டார். அவரின் இடத்தில் ஜொகன்ஸ் வெட்சீலியஸ் நியமிக்கப்பட்டார். இரண்டு தமிழ்க் கிறிஸ்தவர்களான டி மெலோ மற்றும் சைமன் டி சில்வாவின் உதவியுடன் இந்த வேலையை அவர் முடித்தார் என்று கூறப்படுகிறது. பால்தேயஸும் சீகன்பால்கும் செய்த மொழிபெயர்ப்புகளைப் பற்றி டி மேய் அறிந்திருந்தாரா என்பது தொடர்பாக எந்தத் தெளிவான தகவலும் இல்லை.
வேத வாக்கைத் தமிழாக்கல்: கிராம்மரின் மத்தேயு நற்செய்தி
கிறிஸ்தவத் திருமறையின் முதற்கட்ட அச்சுப் பதிப்பு முழு ஆகமமும் அல்ல, ஒரு நற்செய்தி மட்டும் வெளிவந்தது. இதனைச் செய்தவர் ஏற்கனவே குறிப்பிட்ட அல்பிரட் கிராம்மர். அவர் 1706 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்; டச்சு ஆளுநர்கள் இவரை தமிழை முறையாகக் கற்க உத்தரவிட்டனர். மெலோவின் புதிய ஏற்பாட்டுக்காக பிரான்ஸ்வெல்ட் மற்றும் ஃபைபிராண்ட்ஸ் எழுதிய முன்னுரையில், கிராம்மரின் மொழிபெயர்ப்புப் பணி குறித்து நாம் அறிகிறோம். அந்த முன்னுரையின் படி, அவரை மூன்று தமிழ்க் கிறிஸ்தவத் திருப்புதல்களைப் பரிசீலிக்கச் சொன்னார்கள். அவை: பால்தேயஸின் மத்தேயு சுவிசேஷம், அட்ரியன் டி மேயின் புதிய ஏற்பாடு மற்றும் ‘தரங்கம்பாடியில் தயாரிக்கப்பட்ட புதிய ஏற்பாடு’ எனக் குறிப்பிடப்படும் சீகன்பால்கின் பதிப்பு. இந்த மூன்று திருப்புதல்களையும் கிரேக்க மூலத்துடன் ஒப்பிட்டு ‘சரிக்கட்டவும்’, மேலும் தமிழ்ப்பாஷையின் ‘குணத்திற்கும் பெலனுக்கும்’ ஒத்திருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தப் பணியை, தமிழை நன்கு அறிந்த உள்ளூர்த் தமிழர்களுடன் இணைந்து அவர் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது. கிராம்மரின் தமிழ்ப்படுத்தப்பட்ட மத்தேயு நற்செய்தி, 1791 இல் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அதன் முகப்புப் பக்கத்தில் இருந்த வரிகள்:
“ஆற்ஸ்சிஷிட்ட அப்பொஸதலுவூஞ் சுவிசெஷகனுமாகிய மத்தேவுசு எழுதிவைத்த எங்களுடைய கர்த்னு மிரட்சகருமாகிய ஜெசுகிறிதுஸ்துவுடைய சுத்தமான சுவிசெஷம் ஆதியிலே கிறிக் பாஷையிலெயுள்ளதைத் தமிழ்ப் பாஷையிலே கொண்டுவரபட்டுத் திருச்சபைக் கட்டளைப்படிக்கு திட்டவட்டமாகப் பிளை தொப்பட்டது. கொழும்பில்லே உத்தம் கொம்பஞ்ஙியவின் அச்சுக்கூடத்தில் பதிக்கபட்டது சதஎளசயக அண்டு.”
கிராம்மருக்குக் கொடுக்கப்பட்ட பணிகளில் ஒன்று ஏற்கனவே புழக்கத்திலிருந்த சீகன்பால்கின் தரங்கம்பாடி திருப்புதலைச் செம்மையாக்குதல்.
இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையில் காணப்படும் சொற் தேர்வில் உள்ள வித்தியாசங்களை விளக்குவதற்காக, மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் பிறப்பை அறிந்து கிழக்கிலிருந்து ஞானிகள் வருகை தரும் (மத்தேயு 2:1–4) நிகழ்வை ஓர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்.
இயேசுவைத் தரிசிக்க வந்தவர்களை சீகன்பால்க் ‘சாஸ்திரிகள்’ எனக் குறிப்பிடுகிறார்; கிராம்மர் அவர்களை ‘கல்விமான்கள்’ என அடையாளம் காண்கிறார். சீகன்பால்க் அவர்கள் வந்த திசை ‘கிழக்கு’ என்கிறார்; கிராம்மர் தமிழர் திசையைக் குறிக்கும் சொல்லில் ‘எழுவான்’ என்றார். ஏரோது இந்தச் செய்தியைக் கேட்டதும், ஜெருசலேம் நகர மக்களுடன் தத்தளித்த போது, விசாரிக்க அழைக்கப்பட்டவர்களைக் கிராம்மர் ‘பூசாரிகள்’ என வர்ணிக்கிறார்; சீகன்பால்க் அவர்களை ‘பிராதான குருக்கள்’ என்றும் ‘வேதபாரர்கள்’ என்றும் விவரிக்கிறார். ஜெருசலேம் தத்தளித்தது பற்றி இரு திருப்புதல்களிலும் உண்டு.
கிழக்கிலிருந்து வந்தவர்கள் பற்றி சிறு குறிப்பு: இவர்கள் மன்னர்களும் அல்ல; ஞானிகளும் அல்ல. மத்தேயுவின் விரித்துரைத்தலில் சொல்லப்பட்ட ‘Magi’ என்ற கிரேக்கப் பதம் தெளிவற்ற, இருமையான நிலைப்பாடுடையது. மாஜிகள் முதலில் பாரசீக அரசருக்குச் சேவையாற்றும் ஒரு மதகுரு சமூகமாக இருந்தனர். அவர்களது ஜோதிட அறிவை சில பேரரசர்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டனர். ஆனால் சில யூத மரபுகளில், மாஜிகள் எதிர்மறையாகவே பார்க்கப்பட்டனர். பழைய ஏற்பாடு நூல்கள், நம்பிக்கைக்குரியவர் கடவுளே; நட்சத்திரங்கள் அல்ல என்பதைச் சான்று அளிக்கின்றன.
கிராம்மரின் மொழிபெயர்ப்பின் எழுத்துரு மற்றும் வாக்கிய அமைப்பின் தன்மையை விளக்கும் உதாரணமாக, ‘மத்தேயு 2:1–4’ இல் அவர் செய்த மொழிபெயர்ப்பை அவரின் சொந்த வரிகளிலேயே இங்கே தருகிறேன். கிராம்மர் தனது உரையில் பழைய வகை ‘ளை’ பயன்படுத்தியிருக்கிறார். அது எனக்கு பல முறை தேடியும் கிடைக்காததால், இப்போது இருக்கும் வடிவத்தையே பயன்படுத்தினேன். இதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
1. எரொதெஸ் என்கிற ராசாவின் யூதெயா தெசத்தில்லே பெத்திலெய மென்ற நகரிலே இயேசு நாதர் பிறந்த போது இதொ சில கல்விமான்கள் எழுவான் பிறத்திலே யிருந்து ஜெருசலெமுக்கு வந்து
2. யூதருக்கு ராசாவாகப் பிறந்தவரெங்கே அதெனன்றல் நாங்கள் அவரது நட்சேத்திரத்தைக் அவரை வணங்கத்தக்கதாக வந்தொ மென்று சொன்னார்கள்
3. ஏரெதெஸ் என்ற ராசா இது கெட்டவுடனெ அவனுக்கும் அவனுடனெ ஜெருசலெமுகுந்ததழிப் பாச்சுது
4. அவன் சகல பூசாரிகளையும் ஆகம சாஸ்திரங்களையுங் கூடப்பண்ணிக் கிறிஸ்துநாதர் பிறக்கப் பொகிறதெங்கே யென்று அவர்களிடதில் கேட்டான்.
இவற்றைப் படிக்கும் போது ஒன்று புலனாகிறது. மெய்யெழுத்துகளின் மேல் புள்ளிகளும், உயிர்மெய்யெழுத்துகளுக்கு மேல் கீறுகளும் போடப்பட்டிருகின்றன. இரண்டைக்கொம்பு இன்னும் தோன்றவில்லை.
மத்தேயு நற்செய்தியின் தமிழாக்கம் முடிவடைந்ததும், கிராம்மர் மறைந்தார். ஒல்லாந்தரின் கிறிஸ்தவ வேதத்தின் மொழிபெயர்ப்பு முயற்சியின் அடுத்தகட்டம், ஒரு தமிழறிஞரான பிலிப் டி மெலோவிடம் ஒப்படைக்கப்பட்டது; அவருடைய திருப்புதலை அடுத்த அத்தியாயத்தில் பரிசீலிக்கிறோம்.
தமிழ்க் கவிதை வடிவில் யோசேப்பு
இக்காலகட்டத்தில் தான், கிறிஸ்தவத் திருமறையில் காணப்படும் ஒரு யூத கோத்திரத் தலைவரான யோசேப்பின் கதையை, கூழங்கைத் தம்பிரான் (1699 – 1795) தமிழில் கவிதைநேசமான பாணியில் உருவாக்கினார். ‘கூழங்கை’ என்பது ‘கை ஊனமுற்றவர்’ என்ற பொருளைக் கொண்டது. அவர் யோசேப்பின் கதையை தமிழில் இசைபூர்வமான வடிவத்தில் சொல்லியுள்ளார். இந்தக் கூழங்கைத் தம்பிரான், கிறிஸ்தவத் திருமறையை தமிழில் மொழிபெயர்த்த, போர்த்துக்கேயர் பெயர் கொண்ட பூர்விகத் தமிழர் பிலிப் டி மெலோவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இதனால் கிறிஸ்தவத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டார்.
கூழங்கைத் தம்பிரான், தமிழில் மிகுந்த மதிப்பிற்குரிய அறிஞராகவும், நன்னூல் எனும் தமிழின் பாரம்பரிய இலக்கண நூலுக்கான உரையாசிரியராகவும் அறியப்படுகிறார். சைமன் காசி செட்டி, தனது Tamil Plutarch (தமிழ்ப் பாவலர்கள்) நூலில் அவரைப் பற்றிக் குறிப்பிட்ட போது, ‘தம்பிரான்’ என்ற பட்டத்தைத் தவிர்த்து, வெறும் ‘கூழங்கையார்’ என்றே குறிப்பிடுகிறார். ‘தம்பிரான்’ என்பது சைவ மத மடங்களின் தலைவர்களுக்குக் கீழுள்ள ஒரு மதப்பட்டமாகும். தம்பிரான்கள், சைவ ஆகமங்கள் மற்றும் சைவ மத இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.

இவரின் உண்மையான பெயர் தெரியவில்லை; ஆனால் கங்காசபாபதி யோகி என்ற பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கண நூல்களைத் தொகுத்து வெளியிட்ட ஏ. தாமோதரன், ‘கூழங்கையார்’ என்ற பெயரின் வரலாற்றுச் சரித்திரத்தைக் குறித்து சந்தேகத்துடன் அணுகுகிறார். அவரது ஊகம் என்னவெனில், இது தமிழின் புராணப் புனைவுப் பண்பாட்டில் காணப்படும் பெயரிடும் மரபுக்குள் பொருந்தக்கூடும். அந்த மரபில், தனிப்பட்ட உடல் அம்சங்களை அடையாளமாகக் கொண்ட பெயர்கள் வழக்கமாக இருந்தன — பொற்கைப் பாண்டியன் (தங்கக் கை கொண்ட பாண்டிய மன்னன்), சீத்தலைச் சாத்தனார் (தலையில் சீதலைக் கொண்ட பௌத்த அறிஞர்) போன்றோர். தமிழ் இலக்கியமும் வரலாறும் பல்வேறு காலங்களில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருப்பதால், உண்மை வரலாற்றையும் புனைவுப் பண்பாட்டையும் பிரிப்பது கடினமாகிறது.
இந்த அடிப்படையில், கூழங்கையார் என்பவர் வரலாற்றுச் சான்றுகளுக்குள் மட்டுப்படுத்த முடியாத ஒரு புனைவு ஆளுமையாகவும், தமிழ் நாகரிகம், நெறி மற்றும் அடையாளப் பரிமாற்றங்களுக்கிடையே இடம்பெற்ற இலக்கிய வெளிப்பாடாகவும் பார்க்கப்படலாம்.
பிலிப் டி மெலோவின் தொடர்புகள் மூலம், கூழங்கையார் கிறிஸ்தவத் திருமறையைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றார். டி மெலோவுடன் அவர் அடிக்கடி கலந்துரையாடியதாலேயே இது சாத்தியமானது. பின்னர், வேத மொழிபெயர்ப்பில் டி மெலோவுக்கு உதவியவராகவும் இவர் இருந்தார். டி மெலோவுக்கு உரித்தெனக் கூறப்படும் சில உருவக விளக்கங்கள் கூட இவரால் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட பல நூல்களுக்கு அறிவியல் அடித்தளமும் புலமை சார்ந்த ஆதரவும் வழங்கினார் எனக் கூறப்படுகிறது. The History of the People of God எனும் ஐந்து தொகுதிகளாக வெளிவந்த இஸ்ரவேலின் வரலாறும், கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சியும் பற்றிய நூல், ரோமன் திருச்சபையின் பிரிவான ‘Oratorian’ மதச் சமய ஆசிரியரான Gabriel Pacheco எழுதியது — இது கூழங்கையார் வழிநடத்தலின் கீழ் உருவானது. ஒவ்வொரு தொகுதியும் சுமார் 500 பக்கங்கள் கொண்டது. இந்தச் சிறப்புமிக்க நூலின் பிரதிகள் இன்று மிக அரிதாகவே காணப்படுகின்றன. இது தமிழ் – கிறிஸ்தவ அறிவியல் பரிமாற்றத்தின் ஒரு மறக்க முடியாத சான்றாகும்.
மேலும் முக்கியமாக, அவர் யோசேப்புப் புராணம் என்ற காவியத்தை இயற்றினார். இந்தக் காவியம் ஞாயிறு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மிகப் பரிச்சயமான கதை. யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டாலும், எகிப்தியப் பார்வோனின் வலதுகரமாக உயர்ந்தார். அவரது சொந்தக் குடும்பமே அவருக்கு இழைத்த துரோகம் எவ்வாறு இவனுடைய மீட்சிக்கும் அதிகாரத்துக்கும் வழிவகுத்தது என்பதை, இது ஒரு கதையாக விவரிக்கிறது. இப்போது கிடைக்காத இந்தக் காவியம், கூழங்கையார் கிறிஸ்தவத்தை அறியக் காரணமாக இருந்த இலங்கைத் தமிழ் டச்சு மதகுருவான பிலிப் டி மெலோ என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
யோசேப்புப் புராணம் மொத்தம் 21 படலங்களையும், 1,023 செய்யுட்களையும் கொண்ட ஒரு விரிவான இலக்கியக் கட்டமைப்பாக இருந்தது. ஆனால், முழுமையான கைப்பிரதி காலச்சுழற்சியில் அழிந்துவிட்டது. இந்த நூலை மீட்டெடுத்த சைமன் காசி செட்டி, இரண்டாவது படலமான ஆற்றுப்படலத்தில் (Āṟṟuppaṭalam) இருந்து சில செய்யுட்களையே வழங்குகிறார். இந்த ஆற்றுப்படலம், தமிழின் காவிய மரபில் கம்பராமாயணம் நூலில் வரும் சரயு நதியின் (தமிழில் ‘சரசு’) தேவியாக வணங்கப்படும் பகுதியைப் போலவே அமைந்துள்ளது — பக்தி உணர்வுகளால் நிரம்பிய உருவகங்களும், காட்சிகளும் கொண்ட ஓர் ஆன்மீக நயமிக்க எழுத்தாகும்.
நம்மிடம் இருப்பது கூழங்கையாரின் நான்கு செய்யுட்கள் மட்டுமே என்றாலும், இவை மூன்று முக்கிய காரணங்களுக்காகக் கவனிக்கப்பட வேண்டியவை. இவை பாரம்பரிய யூத வேதாகமப் படிப்பினைகளிலிருந்து மாறுபடுகிறது. யூத வரலாறுகளும் நூல்களும், முக்கியமாக அடிமைப்படுத்தப்பட்ட சரித்திரச் சம்பவங்களின் மீது சார்ந்து, தீர்க்கதரிசிகளின் எழுத்துகளை முன்நிறுத்தும். கூழங்கையாரின் செய்யுள் அப்படியல்ல. இவரின் பாடல்கள் யூத ஞானப் பரம்பரையின் சாயலைக் கொண்டவை. அந்த மரபு, தெய்வீகத்தின் தடயங்களை இயற்கையில் காண்கிறது. மலைகளின் மேன்மையில், மேகங்களின் நகர்வில், வானத்தின் மாறுபாடுகளில் உணர்த்தப்படுகிறது — அங்கு மௌனமான சிகரங்கள் படைப்பின் இரகசியத்தை மறைவாகச் சொல்கின்றன; ஆறுகள், நட்சத்திரங்கள், புயல்கள் ஆகியவை இயற்கையின் தெய்வீகத்தை வெளிப்படுத்தும் புனித வேதங்களாக மாறுகின்றன.
அவர் மேற்கோளாகக் கொண்ட சீயோன் மலை எபிரேய வேதாகமத்தில் கடவுளின் நாமம் மகிமைப்படுத்தப்படும் புனித மலை. அதன் மீது மழை இடையறாது பொழிகிறது; இந்த மழை பூமியை — முக்கியமாக சீயோன் மலையை — மகிழ்ச்சியாலும் வளத்தாலும் நிரப்பும், ஒரு சுத்திகரிக்கும் மற்றும் புதுப்பிக்கும் சக்தியாக மாறுகிறது. மலை உச்சியிலிருந்து வழியும் நீர், புனிதம் சாதாரணமாவதற்கான ஒரு தெய்வீக மாற்றத்தை உருவகப்படுத்துகிறது. மாணிக்கங்கள் வழியாகச் செல்லும் காட்சி, கடவுளின் ஆசீர்வாதங்கள் பூமியெங்கும் பகிரப்பட்டுச் செல்கின்றன என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது. சீயோன் மலை போன்ற புனித இடங்களின் உருவகப் பெருமை, இந்து மரபில் ‘மேரு மலை’ குறித்த வர்ணனைகளை நினைவூட்டுகின்றன.
அதே அளவு முக்கியத்துவம் பெறுவது கூழங்கையாரின் பாடல்கள் வெளிப்படுத்தும் மூன்றாவது குறிப்பாகும். அது பிலிப் டி மெலோ என்ற அவரின் கிறிஸ்தவ ஆசானை நினைவூட்டுவதோடு, கூழங்கையாருக்கும் அவருடக்குமான தனிப்பட்ட தொடர்பையும் பிரதிபலிக்கிறது. டி மெலோ, இயற்கையும் தெய்வீகமும் இடையே ஆழமான ஒற்றுமையை வெளிப்படுத்திய ஞானமிக்க ஆசானாகச் சித்திரிக்கப்படுகிறார்.
ஒரு பாடல், இயற்கையின் சக்திகளான மின்னலையும் மழையையும், இந்த மதிக்கத்தக்க ஆசானின் குணாதிசயங்களுடன் ஒப்பிடுகிறது:
“மேகங்கள் மின்னலால் பிரகாசித்தன; அது, ஞானமிக்க ஆசிரியர் பிலிப் டி மெலோவின் அறிவைப் போலத் தெளிவானது. அவற்றின் இடிமுழக்கம், அவர் வழங்கிய போதனையின் வார்த்தைகளைப் போல ஒலித்தது. அவை பொழிந்த மழை, அவர் மனிதகுலத்திற்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் தாராளமாக வெளிப்படுத்திய கருணையைப் போல இருந்தது. ஞானம், இரக்கம், தாராளம் போன்ற தெய்வீக அல்லது பிரபஞ்ச குணங்கள் இயற்கையிலேயே மட்டும் வெளிப்படுவதல்ல; பிலிப் டி மெலோ போன்ற சிறந்த நபர்களிலும் நிறைவேறுகின்றன. இப்படிப்பட்ட நபர்களின் வழியே, இந்தக் குணங்கள் உலகிற்குள் பாய்ந்து செல்கின்றன.”
கூழங்கையார் எழுதியதில் மிகச் சிறிய பகுதி மட்டுமே எஞ்சியிருந்தாலும், அவை தெய்வீக அல்லது இயற்கை ஆற்றல்களுக்கும் மனித வாழ்வுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய ஆழ்ந்த செய்தியை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக அவை உலகை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
இவரின் பாடல்களில் இயற்கை, தெய்வீகம், பிரபஞ்ச ஒழுங்கு ஆகியவை ஒன்றிணைந்த விதத்தில் வெளிப்படுகின்றன. மேகங்கள், மலைகள், நீர் போன்ற உருவகங்கள், மகாபாரதம், இராமாயணம், சைவ சித்தாந்த இலக்கியங்கள் ஆகியவற்றை நினைவூட்டுகின்றன. இவை தெய்வீக சக்தியின் பரவலையும், தூய்மையையும், அருளையும் குறிக்கின்றன. சைவ மரபின் தாக்கத்தால், பாடல்களில் சிவன் இயற்கையில், மலைகளில், நதிகள், மரங்கள், விலங்குகள் போன்ற தன்மைகளுடன் திகழ்வதாக வர்ணிக்கப்படுகின்றார். G. U. Pope என்பவர், திருவாசகம் எனும் முக்கியமான தமிழ் சைவ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அவர் இந்த இயற்கை உருவகங்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்: “சிவன், வெள்ளி மலை கைலாசத்தில் அமர்ந்திருக்கிறார்; அதன் எண்ணற்ற வெண்மையான உச்சிகள் பலவிதமான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவரது ஜடாமுடியில் கங்கை மற்றும் திங்கள் நிலா வீற்றிருக்கின்றன” என அவர் எழுதுகிறார். இதன் மூலம் மனிதன், இயற்கை, தெய்வம் — மூன்றும் பரஸ்பரம் இணைந்தவை என்பது காட்டப்படுகின்றது; பிரபஞ்ச ஒழுங்கின் அழகு, அர்த்தம் மற்றும் ஆன்மீக இணைப்பு என்பன மீட்டெடுக்கப்படுகின்றன. கூழங்கையாரின் கவிதைப்பணிகள், கிறிஸ்தவ சத்தியத்தை உணர, இந்துப் புராணங்களில் ஒத்துப்போகும் கூறுகளைத் தேடும் ஆரம்ப முயற்சிகளில் ஒன்றாகும்.
சைமன் காசி செட்டிக்கு கூழங்கையார் பற்றி ஒரு வருத்தம் இருந்தது — அவர் வெளிப்படையாகத் தன்னைக் கிறிஸ்தவர் என்று அறிவிக்காதது. கூழங்கையார் அறிவாற்றலால் கிறிஸ்தவத்தை உயர்ந்த மதம் என்று மரியாதை செலுத்தினாரே தவிர, தன் சைவம் தவறானது, பின்னோட்டமானது என்று இழிவுபடுத்தவில்லை. அவர் இறுதி வரை இந்துவாகவே இருந்தார். அந்நிய மதத்தைத் தழுவவில்லை. தனக்குத் தோன்றியபோது, கிறிஸ்தவத்தின் தெய்வீகத் தோற்றத்தை ஆதரித்து திறமையாகவும் தீவிரமாகவும் வாதிடக்கூடிய திறமை அவருக்கிருந்தது. இந்துப் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்யும் அளவுக்கு அவர் வாதங்களை முன்வைத்தார். சில நேரங்களில், தனது நம்பிக்கையை நிரூபிக்க, அவர் மிக எரிச்சலூட்டும் செயல்களிலும் ஈடுபட்டார்.
ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் வண்ணார்பண்ணை சைவக் கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது நிகழ்ந்தது. அந்தக் கோவில், வைத்திலிங்கச் செட்டியார் கட்டி அர்ப்பணித்தது. விழாவைக் கவனித்துக் கொண்டிருந்த கூழங்கையாருக்கு, பூஜை நடத்திக் கொண்டிருந்த பிராமணர் திருநீறு அளித்தார். ஆனால், அவர் அதை நெற்றியில் பூசாமல், தனது செருப்பில் பூசினார். “தூசுடன் தூசே சேரட்டும்” என்றார். அவருடைய கருத்தும் செய்கையும் தெளிவாகவும் கடுமையாகவும் இருந்தது. அவை தெரிவித்த செய்தி: இந்துச் சடங்குகள் தூசுபோல் தாழ்வானவை; அவை அவருடைய பாதத்தில் இருக்கும் செருப்பிற்கே பொருத்தமானவை.
கூழங்கையார் 1795 இல் யாழ்ப்பாணத்தில் இறந்தார்; அடுத்த ஆண்டு ஒல்லாந்தாரின் கீழ் இருந்த வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள் ஆங்கிலேயர் கைக்கு வந்தது. காஞ்சிபுரத்தில் பிறந்த கூழங்கையார் சுண்டுக்குளியில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது மரணமும் அவர் புதைக்கப்பட்ட முறையும் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருந்தன. ஜோசப் ராபர்ட்ஸ், Oriental Illustrations of the Sacred Scriptures எனும் நூலில், கூழங்கையாரின் மரணத்தைப் பற்றிய விவரங்களைச் சுட்டிக்காட்டுகிறார். “மிகுந்த பரிசுத்தம் கொண்ட சில நபர்கள் உப்பில் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்; அவர்கள் மரணத்திற்குப் பிறகும் தவத்தில் இருக்கிறார்கள் என நம்பப்படுகிறது” என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு, யாழ்ப்பாணத்தைத் தன் சொந்த நாடாக ஏற்றுக்கொண்ட கூழங்கைத் தம்பிரான் அந்த மண்ணையே நிரந்திரத் துயிலும் இடமாக ஏற்றுக்கொண்டார்.
இந்த அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முன் இன்னும் ஒருவர் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் ஒரு பெண் மொழிபெயர்ப்பாளர். இறையியல் கோட்பாடுகளையும் வேதாகமப் பகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரேயொரு பெண். அக்காலத்தில் மட்டுமின்றி, இன்றுவரையும் அவரே கிறிஸ்தவ வேதத்தைத் தமிழில் பெயர்த்த ஒரேயொரு பெண் மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார் — அவர், முதற்பெயர் தெரியாத ‘மிஸஸ் ஸ்ரேடர்’ (Mrs. Schrader) என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டார். இவர் வேறு யாரும் அல்ல; பிலிப் டி மெலோவின் பேர்த்தி, ஒரு தமிழர்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய டச்சு பிரெஸ்பிடேரியன் சபையின் உறுப்பினரான இவர், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலும் ஆன்மிக வழிகாட்டுதலும் வழங்கினார். டச்சு மொழியில் இருந்த பல மத நூல்களை தமிழிலும், அக்காலத்தில் தமிழர்களிடையே பேசப்பட்ட போர்த்துக்கீசியிலும் இவர் மொழிபெயர்த்ததாக நம்பப்படுகிறது. அவை அனைத்தும் அவரது கையெழுத்தில், கைப்பிரதியாகவே சுற்றனுப்புச் செய்யப்பட்டதால், இன்றுவரை கிடைக்காமலேயே போய்விட்டன.
அவர் வேதாகமத்தின் முக்கிய பகுதிகளைப் பாடல் வடிவத்தில் எழுதியது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது அவரது இலக்கிய நயமிக்க பாணிப் படைப்புகளுக்கு தனிச்சிறப்பைத் தந்தது. அதுமட்டுமல்ல, தமிழரின் இலக்கிய உணர்வுகளுக்கு இசைவாகவும் அமைந்தது. ஆனால் அச்சில் வராததால், அவரது சாதனைகளை வருங்காலத்தவர்கள் வாசிக்க முடியாமல் போயிற்று. இவரின் இறையியல் சேர்ப்பு ஒரு பெண்ணின் மறக்கப்பட்ட வரலாறு ஆகும்.
அர்த்தம் புரியாத மொழிபெயர்ப்புகள், அக்கறையற்ற பிரசங்கிகள்
டச்சுச் சமயப் பிரசாரக ஆவணங்கள், ஒல்லாந்தார் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த காலத்தில் இன்னும் சில வேதாகமப் பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. 1693 ஆம் ஆண்டில், யாக்கோபு எழுதிய நிருபம், அப்போஸ்தலர் நடபதிகளில் பதினான்காம் அதிகாரம் வரை மொழிபெயர்க்கப்பட்டதாகப் பதிவுகள் உண்டு. இந்த மொழிபெயர்ப்புகள், சிங்களப் பகுதிகளில் பணியாற்றிய மிஷனரியான சைமன் கேட் என்பவரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவை எல்லாம் இன்று நம்மிடம் இல்லை.
நான் இங்கு விவரித்தது எல்லாம் முழுமையான திருப்புதல்கள் இல்லை. என்றாலும், அந்தக் காலத்திலேயே தமிழில் வேதாகமத்தை உருவாக்குவதற்கான முக்கிய பணியில் டி மேய், கிராம்மர், கூழங்கையார், திருமதி ஸ்ரேடர் ஆகியோர் ஈடுபட்டிருந்தார்கள். இவர்கள் பாதை இல்லாத இடத்தில் முதற் பாதையை எடுத்தவர்கள் எனலாம்.
வடக்கு – கிழக்கு மக்கள், போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தர்களும் கொண்டு வந்த இரு வித முரண்பாடான கிறிஸ்தவ வடிவங்களைப் பெரிதாக ஏற்கவில்லை. அவர்களது அனுபவம், இந்த வெளிநாட்டு மதத்திற்கான நேர்மையான பார்வையை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவவில்லை. டச்சு ஆட்சிக்காலத்தில், யாழ்ப்பாணம் கிறிஸ்தவ நாடாகவே மாறியது — ஆனால் இது ஐரோப்பியமயமாக்கப்பட்ட மேற்காசிய மதம் அவர்களின் ஆன்மிகத் தாகத்தைத் தீர்த்ததால் அல்ல; நிர்வாக ஆதரவுடன் கட்டாய மதமாற்றம் நிகழ்ந்ததாலேயே இடம்பெற்றது.
அப்போது, அரசுப் பதவிகளைப் பெற கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், பிள்ளைகள் பெற்றோர்களின் சொத்தை வாரிசாகப் பெற, தேவாலயத் திருமணம் அவசியமாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள உடுவிலில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரி வில்லியம் ஹவுலண்ட் (1817–1892), இந்த நிர்வாக நிபந்தனைகளில் ஒன்று, ஹெல்வெட்டிக் கிறிஸ்தவ ஒப்புதலை (Helvetic Confession of Faith) ஏற்க வேண்டும் என்பதாக இருந்தது எனக் குறிப்பிட்டார். இந்த ஹெல்வெட்டிக் கிறிஸ்தவ ஒப்புதல் என்பது மறுசீரமைக்கப்பட்ட திருச்சபைகளின் (Reformed Churches) பொதுக் கொள்கை அறிக்கை ஆகும். அரசுப் பதவிகளைப் பெறுவதற்குத் தேவையான நிபந்தனையாக, இந்த நம்பிக்கைக் குறிப்பை மாற்றியதால், “தாளில் மட்டும் கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் எண்ணிக்கை பெரிதாக இருந்தது” என அவர் குறிப்பிட்டார்.
வடக்கு – கிழக்கில் கிறிஸ்தவம் பரவத் தவறியதற்கான காரணம், அந்தக் காலத்தில் ஒரு பிரசாரக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியபடி, “தமிழர்களின் இயல்பான விரோதம், அலட்சியம் மற்றும் பிடிவாதம்” அல்ல. உண்மையில், டச்சு மதப்பரப்பாளர்களின் கவனக்குறைவும், தமிழ்மொழியை அறியாததுமே காரணம் — இவை பெரும்பாலும் அவர்களது சோம்பலின் விளைவாகும். போர்த்துக்கீசியர்களைப் போலவே, இந்த ஒல்லாந்தக் குருமார்களிடம் அவர்களின் சீர்திருத்தக் கிறிஸ்துவத்தைப் பரப்பும் ஆர்வமும், இந்துக்களை ஈர்க்கும் அவசரமும் காணப்படவில்லை.
ஞாயிறு வழிபாட்டில் மக்கள் குறைவாகவே கலந்துகொண்டனர். காரணம், டச்சு மதக்கோட்பாடுகள் மிக மோசமான முறையில் தமிழில் கொடுத்த விளக்கம்தான். ஆளுநர்களாக இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கூட்டமைப்பும் மதமாற்றம் செய்வதில் பெரிதாக உதவவில்லை; அவர்களுக்கு இலாபமும் செல்வம் சேர்த்தலும், நாட்டின் மூல வளங்களை வணிகமாக்குதலும் தான் முக்கியமாக இருந்தன. அவர்களுக்கு மதம் பரப்புதல் பின்தள்ளப்பட்ட முக்கியத்துவமாகவே இருந்தது.
1796 இல் ஆங்கிலேயர்கள் தீவைக் கைப்பற்றிய பின், தமிழ்க் கிறிஸ்தவர்கள் தங்கள் மதச்சடங்குகளை சுதந்திரமாகக் கடைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள்மேல் திணிக்கப்பட்ட அந்நிய மதத்தை விட்டு விலகி, பூர்விக மரபுகளுக்கே திரும்பினர். அவர்கள் தேவாலயங்களுக்கு வருவது குறைந்தது; அவை விரைவில் சிதைவுக்குள்ளாயின. இந்துக் கோவில்கள் மீண்டும் எழுப்பப்பட்டன; கிறிஸ்தவத்தின் சுவடுகள் பெரும்பாலும் மறையத் தொடங்கின. ஒருகாலத்தில் கிறிஸ்தவத்திற்குக் கிடைத்த குறுகிய, ஆனால் கேள்விக்கிடமற்ற அந்த உயர்ந்த நிலை மறுபடியும் கிடைக்கவில்லை. ஆறுமுக நாவலரின் எழுச்சி, சைவம் தீபகற்பத்தில் வலுவாக நிலைத்திருப்பதை உறுதிப்படுத்தியது.
உதவிய நூல்கள்
- Howland, William W. 1865. Historical Sketch of the Ceylon Mission. Boston, Mass.: American Board of Commissioners for Foreign Missions.
- Chitty, Simon Casie. 1859. The Tamil Plutarch Containing a Summary Account of the Poets and Poetesses of Southern India and Ceylon. Jaffna: Ripley and Strong Printers.
- Palm, J. D. 1847–1848. “An Account of the Dutch Church in Ceylon, Collected from the Local Records, Deposited in the Wolfendahl Church, Colombo.” The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland, Vol. 1, No. 3, pp. 5–71.
- Sathasivam Pillai, A. Pavalar Chariththira Theepakam or The Galaxy of Tamil Poets, Vol. 2.
- தாமோதரன், அ. 1991. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.



