ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண
உலக நாடுகளின் சமஷ்டி முறைகளில் இந்தியாவின் சமஷ்டி முறை தனித்துவம் மிக்கது. இந்தியாவின் சமஷ்டி முறை அரசியல் யாப்புகளை உருவாக்குதல் (Constitution Making) தொடர்பாகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான முன் உதாரணமாகத் திகழ்வது. சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் கட்டுரையில் ‘Success in India’ என்னும் உப தலைப்பின் கீழ் ஐந்து பக்கங்களில் கூறியிருக்கும் கருத்துகளை தொகுத்தும் சுருக்கியும் கூறுவதாக ‘இந்தியாவின் சமஷ்டி முறை’ என்னும் இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது.
பிரிவினையின் போது இந்தியா
பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் விரிந்த நிலப்பரப்பை இரு தேசங்களாகப் பிரித்து, ‘இந்திய ஒன்றியம்’ (Indian Union) என்னும் புதிய தேசம் உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாகிய இந்திய தேசத்தில் மொழிவழி மாநில அரசு (Linguistic State) என்று கூறத்தக்கதாக ‘ஒடிசா’ (முன்பு ‘ஒரிஸ்ஸா’ என்று அழைக்கப்பட்டது) மட்டுமே இருந்தது. 1936 ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா மாகாணம் உருவாக்கப்பட்டது. அம்மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் ஒரியா மொழியைப் பேசுபவர்களாக இருந்தனர். இதனோடு ஒப்பிடக்கூடிய மொழிசார் ஒருமைத்தன்மையுடைய (Linguistic Homogeneity) மாகாணங்கள் எதுவும் அப்போது இந்தியாவில் இருக்கவில்லை. பிற மாகாணங்கள் யாவும் மொழிப் பண்பாட்டுச் சமூகங்களை எழுந்தமானமாகக் கூறுபோட்டுச் செயற்கையான புவியியல் எல்லைகளுக்குள் அடக்குவனவாக இருந்தன.
இக்காரணத்தால் இந்தியாவின் மொழிச் சமூகங்களின் (Linguistic Communities) நியாயமான கோரிக்கைகள் தொடக்ககாலத்தில் கவனிக்கப்படாமல் போயின. மொழிச் சமூகங்களின் கோரிக்கைகள், அரசியல் யாப்பை வரைவதற்கான சபையின் (Constituent Assembly) கவனத்தைப் பெறவில்லை. அச்சபையின் விவாதங்களின் போது மொழிவழி மாநிலங்களை அமைப்பதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் சில ஆண்டுகள் கழிந்த பின்னர் சுதந்திர இந்தியாவின் மாநிலங்களின் எல்லைகளை மொழியடிப்படையில் மறுவரையறை செய்தல் (Re – demarcation on Linguistic Lines) முதன்மையான தேவை என உணரப்பட்டது.
மொழிவழி மாநிலங்கள்

மாநிலங்களை மொழிப் பண்பாட்டு அடிப்படையில் மீள்வரையறை செய்தல் வேண்டும் என்னும் கோரிக்கைகளை இந்தியா தாராண்மை நோக்குடனும், துணிச்சலோடும் அணுகியது. வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து இக்கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தபோது நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு மொழிவழி மாநிலங்கள் என்ற கருத்தாக்கத்தை முற்றாக நிராகரித்தது. ஆயினும், ஆந்திரப் பிரதேசத்தை தனி அலகாக உருவாக்குவதை, விதிவிலக்கான ஒன்றாக ஏற்றுக்கொண்டது. இதன் பின்னர் ‘மாநில அரசுகளின் மறுசீரமைப்பு ஆணைக்குழு’ (The States Reorganisation Commission) என்னும் பெயரில் ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை 1953 – ஒக்டோபரில் வெளியாயிற்று. அவ்வறிக்கையில் ‘மொழிவழி ஒருமைத்தன்மை’ (Linguistic Homogeneity) என்னும் கருத்து மட்டுமே அரசுகளின் எல்லைகளை மீள்வரையறை செய்வதற்கான அறிவார்ந்த கொள்கையாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டது. ‘அரசுகளின் மறுசீரமைப்புச் சட்டம் 1956’ (The State Reorganisation Act of 1956) என்னும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டமும், இதையடுத்து இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களும் இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தன. மொழிவழி மாநிலங்களை அமைப்பதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் எல்லைக்குள்ளும் இயன்றளவிற்குப் பொதுவான பண்பாட்டு அடையாளமுடைய சமூகங்கள் உள்ளடக்கப்பட்டன. குஜராத்தி மொழி பேசுவோருக்குக் குஜராத்தி மாநிலம்; மராத்தியர்களுக்கு மகராஷ்டிரம்; பஞ்சாபியர்களுக்குப் பஞ்சாப்; தெலுங்கு மொழி பேசுவோர்களுக்கு ஆந்திரப் பிரதேசம்; மலையாள மொழியினருக்குக் கேரளா; கன்னடியர்களுக்கு கர்நாடகம் எனப் பல மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. மொழிவழி மாநிலங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து சென்றது.
தமிழ்நாடு
திருவிதாங்கூர் – கொச்சின், மதராஸ், மைசூர் ஆகிய மூன்று அரசுகளின் எல்லைகளுக்குள் பிளவுபட்டிருந்த தமிழ்பேசும் மக்களை ஒருங்கிணைத்து, தமிழர் பெரும்பான்மையினராகவுள்ள தமிழ்நாடு (Tamil Majority Tamilnadu) என்னும் மாநில அரசு உருவாக்கப்பட்டது. இதனால், தமிழர்கள் தம் பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தும் சுதந்திரமான அரசு ஒன்றை நிறுவிக்கொண்டனர். இந்திய ஒன்றியத்தின் ஓர் அலகாக அமைந்த இம்மாநில அரசுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரிடப்பட்டது. இந்தியத் தலைவர்கள் இவ்வாறான பெயரடையாளங்களைக் கண்டு அச்சம் கொள்ளவில்லை. உண்மையில் தனிநாடாகப் பிரிந்துபோதல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த சி.என். அண்ணாத்துரை விரும்பிய பெயர் எதுவோ, அப்பெயரே மறுசீரமைக்கப்பட்ட இப்புதிய மாநிலத்தின் பெயராயிற்று. அண்ணாத்துரை தனிநாடு கோரிக்கையை கைவிடுவதாகப் பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் குழுமங்களை (Tribes) கொண்ட பிரதேசமாகும். இப்பகுதியிலிருந்து பண்பாட்டு அடிப்படையிலான தனி அலகுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அக்கோரிக்கைகளை ஏற்றுப் புதிய மாநில அரசுகள் உருவாகின.
இந்தியாவின் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் புதிய மாநில அரசுகள்
2000 ஆம் ஆண்டில் சத்திஸ்கார், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் என்னும் புதிய அரசுகள் உருவாகின. இப்புதிய அரசுகள் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் எல்லைகளுக்குள் உள்ளடங்கியிருந்த மக்கள் சமூகங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன. இப்புதிய அரசுகளின் உருவாக்கத்தில் சமூக – பண்பாட்டு அரசியல் கூறுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இவை மொழி அடிப்படையிலான அலகுகள் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சத்திஸ்கார் கனிமவளம் மிக்க பிரதேசமாகும். கனிமவளம் மிக்க இப்பகுதியில் இருந்து மத்திய பிரதேச அரசு பெருமளவு வருமானத்தைப் பெற்றது. ஆனால் இந்த வருமானம் பின்தங்கிய சத்திஸ்கார் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காக நீதியான முறையில் மறுபங்கீடு செய்யப்படவில்லை. சத்திஸ்கார் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் பயனாக சத்திஸ்கார் என்னும் புதிய அரசு உருவானது.
உத்தராஞ்சல் மலைப்பாங்கான ஒரு பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் பண்பாடு தனித்துவமானது. இப்பிரதேசத்தின் சாதிப் பிரிவினைகளும், பொருளாதாரமும் தனித்துவமானவை. உத்தராஞ்சல் என்னும் புதிய மாநிலம் இவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. ஜார்க்கண்ட், பழங்குடி மக்கள் வாழும் பிரதேசமாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்திய காலத்தில் இருந்தே இப்பிரதேசத்தின் பழங்குடிகள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று ஜார்க்கண்ட் தனிமாநில அரசாக விளங்குகிறது.
தெலுங்கானா
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியை தனிமாநிலமாக ஏற்றுக்கொள்வதற்கு 2013 இல் இந்திய அரசு உடன்பட்டது. தெலுங்கானா ஆந்திர மாநிலத்தின் மொத்த சனத்தொகையின் 40% மக்களைக் கொண்டுள்ளது. அம்மாநிலம் ஆந்திர அரசின் திறைசேரிக்கு சனத்தொகை வீதத்தைவிடக் கூடியளவு வருவாயை அனுப்புகிறது. ஆயினும் இப்பகுதியின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனத் தனிநாட்டுக் கோரிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். நீர்வளப்பங்கீடு, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றிலும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தெலுங்கானா தேசியவாதிகள் குறைகூறினர். இந்திய அரசாங்கம் தெலுங்கானாவை தனிமாநிலமாக ஏற்றுக்கொள்ளும் முடிவை வெளியிட்ட போது, ஆந்திராவின் மற்றப்பகுதிகளின் மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
யூனியன் பிரதேசங்கள்

இந்தியாவில் 9 சிறிய சமூகங்களிற்கு ‘யூனியன் பிரதேசங்கள்’ (Union Territories – UT) என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களின் சிறிய சமூகங்கள் இதன்மூலம் அரசு அதிகாரத்தைப் பெற்றுத் தமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசம் என்ற வகை அதிகாரப் பகிர்வுக்குச் சிறந்த உதாரணமாக புதுச்சேரி விளங்குகிறது. புதுச்சேரி முன்னர் பிரான்சு தேசத்தின் காலனியாக இருந்து வந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் நிலத்தொடர்பற்ற பல பகுதிகளை உள்ளடக்கிய அரச அலகாக விளங்குகிறது. இப்பகுதிகளுள் மிகப்பெரியதான புதுச்சேரி அந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகராக உள்ளது. தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதியோடு இணைந்ததாக 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பகுதியாக உள்ளது. புதுச்சேரி வாழ் மக்களைப் போன்றே காரைக்கால் மக்களும் தமிழ் பேசுவோராக உள்ளனர். மாகே (Mahe) என்னும் பகுதி 830 கிலோமீற்றர் தொலைவில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்துடன் நிலத்தொடர்புடைய மாகே மக்கள் மலையாள மொழி பேசுவோராவர். புதுச்சேரிக்கு வடக்கே 830 கிலோமீற்றர் தொலைவில் ஆந்திரா மாநிலத்தின் பகுதியாக விளங்கும் யனம் (Yanam) தெலுங்கு பேசும் மக்களைக் கொண்டுள்ளது. இந்நான்கு பிரதேசங்களும் பிரான்சின் முன்னாள் காலனிகள் என்ற பொது அடையாளத்தை உடையன. வெவ்வேறு பண்பாடுகளைக் கொண்ட இந்நான்கு சமூகங்களும் தமது பொது அடையாளத்தைப் பேணிப் பாதுகாப்பதில் விருப்பம் கொண்டுள்ளன. தமக்கு அயலில் உள்ள தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா ஆகியவற்றுடன் இணைக்கப்படுவதை இம்மக்கள் சமூகங்கள் விரும்பவில்லை. போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் காலனியான கோவா (Goa) சிறியதொரு பகுதியாக விளங்கியபோதும், தனிமாநிலமாக அரசு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. தத்ராவும் நாகர் ஹவேலியும் (Dadra and Nagar Haveli), டாமன் மற்றும் டியு (Daman and Diu) என்பனவும் நிலத்தொடர்பற்ற சிறிய பகுதிகளாகும். இவை யூனியன் பிரதேசங்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இந்தியாவின் பல பகுதிகளிலும் சுயாட்சிக்கான (Autonomy) கோரிக்கைகள் மக்கள் சமூகங்களால் முன்வைக்கப்பட்டன. சில பகுதிகளில் இவை ஆயுதம் ஏந்திய வன்முறைப் போராட்டங்களாகவும் அமைந்தன. கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி (Gorkha National Liberation Front) என்னும் அமைப்பு கோர்க்கா நாடு (Gorkha Land) என்னும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியது. இம்மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 1988 ஆம் ஆண்டு ‘டார்ஜீலிங் கோர்க்கா மலைப்பகுதிக்கான கவுன்சில்’ (Darjeeling Gorkha Hill Council) என்ற அரச நிறுவனம் தாபிக்கப்பட்டு கோர்க்காப் பகுதிக்கு நிர்வாக அதிகாரம் (Gorkha Territorial Administration) வழங்கப்பட்டது. ஆயினும் இந்த நிர்வாக ஒழுங்கில் திருப்தியுறாத ‘கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா’ (Gorkha Janmukti Morcha) என்னும் அமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி 2007 ஆம் ஆண்டு முதல் போராட்டங்களை முன்னெடுத்தது. 2011 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்ற பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புதிய அரசாங்கம் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்புடன் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இவ்வுடன்படிக்கையின்படி கோர்க்கா பகுதியின் கவுன்சிலிற்கு, கூடிய நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அசாம் மாநிலத்தில் ‘போடோ’ இன மக்கள் சமூகம் ‘போடோ நாட்டு அரசு’ (Bodoland State) என்னும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்தியது. 2003 ஆம் ஆண்டில் அசாம் மாநில அரசு, அசாம் மாநிலத்திற்குள் போடோ நாடு பிரதேச கவுன்சில் (Bodoland Territorial Council) என்ற நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி போடோ மக்களின் சுயாட்சிக்கு வழி செய்தது. கோர்க்கா, போடோ ஆகிய இன மக்களிற்கு தனித்த சுயாட்சிக் கவுன்சில்களை அமைத்ததை ஒத்த நிர்வாக ஒழுங்குகள் லடாக், கார்க்கில் ஆகிய பகுதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டன. லடாக், ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். லெக் மாவட்டம் (Leh District) என அழைக்கப்படும் இம்மாவட்டத்தின் லடாக்கியர்கள் பௌத்த சமயத்தவர்கள் ஆவர். இவர்கள் சமயப் பண்பாட்டு அடிப்படைகளில் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளை விட வேறுபாடு உடையவர்களாக இருந்தனர். இவர்களின் கோரிக்கைகளை ஏற்ற இந்திய அரசாங்கமும், ஜம்மு காஷ்மீர் அரசாங்கமும் லடாக் பகுதியில் சுயாட்சி மலைப்பகுதி அபிவிருத்திக் கவுன்சில் (Autonomous Hill Development Council) என்னும் சுயாட்சி அமைப்பை உருவாக்கின. ஜம்மு காஷ்மீரின் கார்க்கில் மாவட்டம் (Kargil District) ஷியா முஸ்லிம்கள் (Shia Muslims) பெரும்பான்மையினராக வாழும் பகுதியாகும். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, லடாக் பகுதிக்கு அமைக்கப்பட்ட கவுன்சில் போன்ற அமைப்பு, கார்க்கில் பகுதிக்கும் அமைக்கப்பட்டது.
அசமத்துவ அதிகாரப் பகிர்வு
இந்தியா போன்ற பெரிய தேசத்தில் பல்வேறு பண்பாட்டு சமூகங்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை எழுகிறது. அசமத்துவ ஒழுங்கமைப்புகளை (Asymmetrical Arrangements) பொருத்தமானதொரு அரசியல் யாப்பு உபாயமாக ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம் என்பன கையாண்டு பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டன. இந்திய அரசியல் யாப்பிலும் அசமத்துவ அதிகாரப் பகிர்வு (Asymmetrical Devolution) என்னும் ஒழுங்கமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசம், அசாம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியன புவியியல் ரீதியில் ஒதுக்குப்புறமான பிரதேசங்களாகும். இவை இந்தியா சுதந்திரம் பெற்ற தொடக்ககாலத்தில் யூனியன் பிரதேசங்களாக இருந்தன. இவை இன்று தனிமாநில அரசுகளாக உருவாக்கம் பெற்றுள்ளன. சிக்கிம் 1974 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு ‘இணைப்பு அரசு’ (Associate State) என்னும் அந்தஸ்துடையதாக விளங்குகிறது. மேற்குறித்த பிரதேசங்கள் யாவும் நூற்றுக்கணக்கான இனக்குழுமங்களைக் (Tribes) கொண்ட இனக்குழுமங்களின் வாழிடங்களாக உள்ளன. நாகாலாந்து மக்கள், பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக உள்ளனர். இனக்குழுமச் சமூகங்களின் வழமைச் சட்டம், சமூக – சமய நடைமுறைகள், சிவில், குற்றவியல் நீதி (Civil and Criminal Justice) நில உடைமை (Land Ownership) ஆகியன தனித்துவமானவை. இவற்றைப் பேணிப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் இந்திய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பிராந்தியங்களிலும் மாநிலங்களிலும் எழும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தாமதம் இன்றித் தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. அந்நாடு சுதந்திரம் அடைந்த வேளையில், இந்தியா என்னும் ஒன்றுபட்ட தேசம் நிலைத்து நிற்க முடியுமா? அல்லது அது உடைவுற்றுப் பல தேசங்களாக உருமாற்றம் பெறப்போகிறதா? என்ற சந்தேகத்தைப் பலர் வெளியிட்டனர். ஆயினும் இந்தியா அரசியல் யாப்புப் புத்தாக்க வழிமுறைகளைக் கையாண்டு வந்துள்ளது; அவற்றால் இந்தியாவிற்குப் பல நன்மைகள் கிடைத்தன. ஆயினும் இந்தியாவினால் தீர்வு செய்யப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உள்ளன.
இத்தமிழ்க் கட்டுரை ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ‘Towards Democratic Governance in Sri Lanka’ என்னும் நூலின் முதலாவது அத்தியாயமான ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் 29 முதல் 33 வரையான ஐந்து பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்தும் சுருக்கியும் கூறும் முறையில் எழுதப்பட்டுள்ளது. மேற்படி நூல் ‘Institute of Constitutional Studies’ என்னும் ஆய்வு நிறுவனத்தால் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.



