“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.” என பாரதி தனது பாஞ்சாலி சபதம் நவீன காவிய முகவுரையில் குறிப்பிடுகிறார். அதனை வலியுறுத்திய வாய்மொழிப் பாடல்களைப் பாடும் புலவர்கள் காலத்துக்குக் காலம் இருந்து வந்துள்ளார்கள். “இவ் வாய்மொழிப் பாடல்களின் மரபைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தும் போதுதான் அவற்றின் சிறப்பு, வளம், வலு ஆகியன துலங்குவதற்கான வாய்ப்புகளுருவாகும்.” என்பார் பேராசிரியர் செ. யோகராசா.
இருபதுகளின் இறுதியில் தொடங்கிய மீனாட்சியம்மாளின் முழக்கம் இன்றுவரை தொடர்கிறது. இலங்கையின் கவிதைத்துறைக்கு வலிமை சேர்த்த ஆளுமையாகவும், மலையகப் பெண் கவிஞர்களின் முன்னோடியாகவும் அவர் பார்க்கப்படுகிறார். மலையக நாட்டார் பாடல்கள் எழுச்சிமிக்க எண்ணக்கருக்களை தாங்கியுள்ளன; அவை பெரும்பாலும் பெண்களின் குரல்களாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த வழியில் பின்னர் உருவான மலையக வீதிப்பாடல்களும் பெண்களின் குரல்களை வெளிப்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் அத்தகைய பாடல்கள் பிரசுரம் பெற்றிருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. அக்காலச் சூழ்நிலையில் பெண்களுக்குக் கிடைத்திருந்த இந்தக் குறுகிய வாய்ப்பு, அவர்களின் நிலைபற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. எவ்வாறாயினும் முதலாளிகளின் நேரடி அழுத்தங்களுக்குள் வாழ்ந்தவர்கள் என்பதால், பெண்களிடமிருந்துதான் எதிர்ப்புணர்வுகள் முதலில் தோன்றியிருக்க வேண்டும். அந்த உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்கள் அச்சில் வராதது கவனிக்கத்தக்க ஒன்று. இதனிடையே தொழிலாளிகளாக இருந்த எஸ். பெரியக்கா மற்றும் எம்.எஸ். கிருஸ்ணம்மாள் ஆகியோர் இயற்றிய பாடல்கள் கிடைத்திருப்பது சிறப்பு மிக்கதாகும்.
எஸ். பெரியக்கா எனும் வீதிப்பாடல் ஆளுமை
இவர், இராகலை மேல்கணக்கு, ஆள்கரனோயா எனும் முகவரியிட்டு, ‘தொழிலாளியின் துயரம்’ என்ற தனது பாடல் நூலை வெளியிட்டுள்ளார். இப்புத்தகம் முகப்பு பக்கம் உட்பட எட்டுப் பக்கங்களை மாத்திரம் கொண்டமைந்துள்ளது. எஸ். பெரியக்காவின் ஏனைய நூல்களின் பிரசன்னம் குறித்து அறியப்படாமலே இருக்கின்றது. 1967.10.10 இல் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் இழுகலை, அசோகா அச்சகத்தில் அச்சேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிதமிஞ்சிய வேலைவாங்கும் நிலையையும், கடின உழைப்புக்கு மேலாகச் செயற்படும் தொழிலாளர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் முனைப்போடு இவரது பாடல்களின் உள்ளடக்கம் அமையப்பெற்றுள்ளது. கும்மிப் பாட்டு பாடுவதில் கைதேர்ந்தவராக விளங்கும் பெரியக்கா, கும்மிப் பாடலுக்குரிய மெட்டிலும் பாடல்களைப் பாடியுள்ளார். 1964 ஆம் வருடம் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு அமைய எழுபதுகளின் முற்பகுதியில் பலர் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார். இப்புலப்பெயர்வு நிர்ப்பந்தம் குறித்த தாக்கமும் இவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மையாரின் பாடல்கள், அவரது படைப்பாற்றலின் அடையாளமாகவும், சமூக உணர்வின் தெளிவான வெளிப்பாடாகவும் விளங்குகின்றன.
‘பாட்டாளி படும் துயரம்’ எனும் தலைப்பில் விருத்தமாகக் குறிப்பிட்டு பின்வரும் வரிகளின் ஊடாக தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகிறார். விருத்தம் என்பது நான்கு அடிகளைக் கொண்ட ஒரு பாவினமாகும். நான்கு அடிகளிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பாடல் யாப்பிலக்கணம் தொடர்பிலான முரண்பாடு காணப்பட்ட போதிலும், கருத்து நிலையிலும், உணர்வு நிலையிலும் மிகுந்த அவதானத்தைப் பெறுகிறது.
“பாட்டாளி பட்ட ஒரு பாட்டை எல்லாம் ஒரு பாட்டாக
பாடி வைத்தேன் ஒரு ஏட்டினிலே படாத பாடுபட்டு
சிலோனில் வந்து பணம் காசு தேட ஒரு வழியுமில்லை
உண்ணுவதும் உடுத்துவதும் ஒன்றேயன்றி ஒரு பயனும்
அடைந்ததில்லை ஆணும் பெண்ணும் சுக வாழ்வு வாழ்வதினி
எந்த நாளோ சொல்லும் ஐயா பழனிமலை முருகையா நீ”
பாமரத்தனம் இருந்தபோதிலும் பாடல் இலக்கணத்தை அனுசரிக்க வேண்டிய அவசியத்தை உணரும் பாடலாசிரியையினது முனைப்புக் கவனத்திற்குரியதாகும். ‘தெம்மாங்கு மெட்டில்’ அடுத்துவரும் வரிகள் பின்வருமாறு அமைகிறது.
“மலைநாட்டு தமிழாதி வறுமைப்பட்டு வாழுவதை
ஒரு கதை போல சொல்லிடுவேன் பாட்டாளி தோழா
உங்கள் காதாலே கேட்டிடுங்கள் கூட்டாளி தோழா!”
‘தெம்மாங்கு’ என்பது தென்னிந்தியாவில் தோற்றம் பெற்ற கிராமியப் பாடல் மரபாக விளங்குகிறது. அப்பாடல் வடிவத்தின் தாக்கம் தென்னிந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட மலையக மக்களிடத்தேயும் ஆர்ப்பரித்துள்ளது. வயல்வெளிகளில் உழைத்துப் பெற்ற அனுபவத்தின் தாக்கத்தால், புலம்பெயர்ந்து மேற்கொண்ட தொழிலும் அதனைச் சூழ்ந்த சூழல்களும் ஒப்பிடப்பட்டு வெளிப்படும் நாட்டார் பாடல்கள் சிறப்பாகக் கவனத்தை ஈர்க்கின்றன. அவ்வாறான பாடல்களுள்,
“பாதையில வீடிருக்கு பழனி சம்பா சோறிருக்கு
எருமை தயிரிருக்கு ஏன்டி வந்த கண்டி சீமை
ஊரான ஊரிழந்தேன் ஒத்தப் பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியில் பெத்த தாய நானிழந்தேன்
வாட அடிக்குதடி வட காத்து வீசுதடி
செந்நெல் மணக்குதடி நம்ம சேந்து வந்த கப்பலிலே!”
என்ற வரிகள் வயல் சார்ந்த இடத்தோடு கொண்டிருந்த தொடர்பு நிலையை எடுத்துரைக்கின்றன.
தெம்மாங்குப் பாடல் என்பது ‘தேன் பாங்கு’ என்பதில் இருந்து மருவி வந்திருக்கலாம் எனவும் விளக்கம் கூறுவார்கள். தென்னகப் பாடலின் தன்மையைப் பெற்ற பாடல் என்பதோடு, தேனின் இனிமையை ஒத்த பாடல்களாகவும் இவை நோக்கப்படுகின்றன. தென்நாட்டுக் கிராமிய மக்களின் வாழ்வு, விழாக்கள், தொழில்கள் என்பனவற்றோடு தொடர்புபடுவதாக இப்பாடல் வடிவம் கணிக்கப்படுகிறது. வயல்வெளிகளுடன் இணைந்த வாழ்க்கையில் ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர்கள், தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களையும் இன்னல்களையும் பாடல்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டார் பாடல்களை ஒத்த அல்லது அதனை மேற்கோள் காட்டுகின்ற முனைப்போடும் புனையப்பட்ட பாடல்களையும் பெரியக்காவின் பாடலில் காணலாம்.
“தோட்டம் புரளியில்ல தொர மேல குத்தமில்ல
கங்காணி சொன்ன சொல்லு ……”
வீதிப்பாடல்களுக்கே உரிய நிலையிலும் பெரியக்கா தனது பாடல்களைப் பிரயோகிப்பதை அறியலாம்.
“தோட்டம் புரளியில்லை பெரிய துரை மேல குத்தமில்ல
பந்தக்காரன் பேச்சைக் கேட்டு
என் அருமை நண்பர்களே”
மேலும்,
“ஓடி ஓடி நெறை பிடிச்சி ஒரு கூட கொழுந்தெடுத்தேன்
பாவி கணக்கப்புள்ள பத்து றாத்தல் சொல்லுறானே!”
என்ற பாடலின் தழுவலாக, பின்வரும் பாடல் அமைகின்றது.
“கூடை மேல கூட வச்சி கொழுந்தெடுக்க போகையில
விரைவா வரவில்லை என்று என் அருமை நண்பர்களே
பெண்களை விரட்டுறாங்க கங்காணிகள்
என் பொறுமை நண்பர்களே”
‘செக்ரோல்’ என்பது வேலைவிபரத்தைப் பதியும் புத்தகமாகும். ஒருநாள் கூலியை ‘ஒருநாள் பேர்’ என்றும், அரைநாள் சம்பளத்தை ‘அரைப் பேர்’ என்றும் குறிப்பிடும் வழக்கம் மலையகத்தில் காணப்படுகின்றது. பிரித்தானியர் ஆட்சிக்காலம் தொடக்கம் இன்றுவரை இப்பிரயோகங்கள் தனித்துவமாக அணுகப்படுகின்றன. அவ்வாறே வேலைத்தலங்களில் ‘சீக்கில்லாமல் வேலை’ போன்ற தனித்துவச் சொல் வழக்குகளும் காணப்படுகின்றன. அவ்விடயங்களை வலியுறுத்தும் வகையில் பின்வரும் பாடலடிகள் கவனத்தைப் பெறுகின்றன.
“சீக்கில்லாமல் வேலை செய்து செக்ரோலைப் பார்க்கும் போது
நாலு நாள் பேருமில்லை என் அருமை நண்பர்களே
சொன்னால் ஞாயம் கேட்க யாருமில்லை
என் பொறுமை நண்பர்களே!”
என்ற முன்வைப்போடு,
சொந்தமான ஊரிலே போய் இந்தவிதம் நாம்
உழைத்தால் சோறு தின்ன வழியில்லையா
என் அருமை நண்பர்களே
உடுத்த சொகுசான உடுப்பில்லையா என் பொறுமை நண்பர்களே!”
என்ற வினாவைத் தொடுப்பதையும் அறிய முடிகிறது.
பிரித்தானியர்களது பெருந்தோட்டத்துறை அறிமுகத்துக்கு முன்னதாகவே நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்பட்ட செட்டிமார்களின் பிரசன்னம் அமைந்திருந்தது. இலங்கையில் வர்த்தகத்துறை நடவடிக்கைகளில் ஆழத்தடம் பதித்தவர்களாக அவர்கள் விளங்குகிறார்கள். இவர்களது காலத்திலேயே இலங்கையில் பல முருகன் ஆலயங்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செட்டிமார்கள் இலங்கை நாட்டிலும் பல்வேறு மாறுதல்களுக்குக் காரணமாக இருந்துள்ளதுடன், தங்களது பொருள் தேடும் நோக்கத்தையும் திருப்திகரமாக நிறைவு செய்த குழுமமாக விளங்குகிறார்கள். இவ்விடயங்களையும் மேற்கோள் காட்டும் அம்மையாரின் முன்வைப்புச் சிந்திக்கத் தூண்டுகிறது.
“கந்தா முருகா வென்று நாட்டுக் கோட்ட செட்டியார்கள்
காசு பணம் தேடவில்லையா என் அருமை நண்பர்களே
அதை நாம் கண்ணாலே காணவில்லையா
என் பொறுமை நண்பர்களே!”
பெண்கள் குழுவாகச் சேர்ந்து கைகொட்டி விளையாடும் போது பாடும் பாடல்களே கும்மிப் பாடல்களாக அமைகின்றன. இப்பாடல்கள் வெண்பா இனத்தைச் சேர்ந்ததாக விளங்குகின்றன. இயற்கும்மி, ஒயிற்கும்மி, ஓரடிக் கும்மி போன்றன கும்மியின் வகைகளாகும். மலையக மக்களிடத்தே அம்மன் வழிபாடு இரண்டறக் கலந்துள்ள நிலையில் அவ்வழிபாட்டு மரபில் கும்மிப் பாரம்பரியமும் முக்கியத்துவம் பெறுகிறது. அம்மன் வழிபாட்டுடன் தொடர்புபடும் ‘முளைப்பாரி’ அணுகுமுறையோடும் இப்பாடல்கள் இசைக்கப்படுகின்றமை கவனத்திற்குரியதாகும். அவ்வாறே அம்மன் கரகம் பாலித்தல், கரக ஊர்வலம், கரகம் குடிவிடுதல் போன்ற செயற்பாடுகளுடனும் இந்தக் கும்மிப் பாரம்பரியம் கவனத்தை வென்றதாக அமைகிறது. முருகன் வழிபாட்டிலும் இக்கும்மிப் பாரம்பரியம் ‘வள்ளி கும்மி’ என சிறப்பிக்கப்படுகிறது. முருகனின் சிறப்பு, வள்ளியின் வாழ்க்கை வரலாறு, திருமணச் சிறப்பு ஆகியவற்றைக் கும்மியாகப் பாடும் மரபும் கவனத்திற்குரியதாகும். அதன் பின்பற்றுதலில், மலையக மக்களும் வள்ளி கும்மி தொடர்பான அக்கறையைச் செலுத்தி வந்துள்ளார்கள். அதன் ஊடாகவும் கும்மி மீதான பரிச்சயம் மலையக மக்களிடத்தே நிலைபெற்றுள்ளது.
பாரதியின் பாடல்களில் எழுச்சியைத் ஏற்படுத்தும் வகையில் இப்பாடல் முறைமை பரீட்சிக்கப்பட்டுள்ளமையை அறியலாம். சுதந்திர வேட்கையின் ஈடுபாட்டில் விடுதலைக் கோசத்தைப் பரவச் செய்யும் முனைப்பில் முக்கியத்துவம் பெறும் பின்வரும் பாடல் அவதானத்தைப் பெறுகிறது எனலாம்.
“கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைக்கொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் (கும்மி)
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடந்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)”
அழகியல் உணர்வோடு பக்தியைப் பாடுபொருளாகக் கொண்ட சிந்தனையில் கும்மிப் பாரம்பரியம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமுதாய நோக்கத்திற்காக அதனைப் பாரதி பிரயோகித்துள்ளமை முன்மாதிரியாக அமைகிறது. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பின்னாளில் பலர் கும்மியைப் பிரயோகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சமூக எழுச்சிக்கான உத்வேகத்தை ஏற்படுத்தும் முனைப்பில் பல கவிஞர்கள் கும்மி முறைமையைப் பிரயோகித்துள்ளனர். பெண் விடுதலை குறித்த சிந்தனையை மேற்குறித்த பாடல் வரிகள் சித்தரிப்பதையும், உணர்த்துவதையும் காணலாம். கும்மிப் பாரம்பரியம் மீதான அறிதலோடு, மலையக மக்கள் மீதான கரிசனையில் பாடலாசிரியர் பெரியக்கா, மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்கிறார். தனது புலமை மீதான நம்பிக்கை, இறை மீதான நம்மிக்கை, அவைக்கு அடங்கும் முறைமை போன்றவற்றைத் தெளிவுறுத்தும் வகையில் அம்மையாரின் சித்தரிப்பு பின்வருமாறு அமைகின்றது.
“முந்தி முந்தி விநாயகரே கைலை முக்கண்ணனாருடைய தன் மகனே
தொந்தி வயிறுக் கணபதியே ஏழை சொல்வேன் பாட்டாளி பாரதத்தை
பாட்டாளி தோழர்கள் பட்ட பாட்டை கும்மிப் பாட்டாகப் பாடி
முடிப்பதற்கு ஏட்டில் எழுதின பாவினைப் போல என் நாவில் எழுந்திடும் தும்பிக்கையாய்
பாவை எஸ். பெரியக்காள் பாடி வைத்த கும்மிப்பாட்டில்
பிழைகள் இருந்தால் மன்னித்து அருள் செய்ய வேண்டுமப்பா
வாணி வள்ளி தெய்வானை சண்முகனே!”
மலையக மக்களில் பயில்நிலைக்குரிய கூத்துப் பாடல்கள் அமைந்துள்ள மெட்டுகளில் இப்பாடல்களின் சாயல்களும் அமைந்துள்ளன.
மலையக மக்களின் வாழ்க்கையோடு பூசாரிகளுக்கு நெருங்கிய தொடர்புண்டு. பூசாரிமார் பாடும் பாடல்களின் சாயல்களோடும், எஸ். பெரியக்காவின் பாடல்கள் முக்கியம் பெறுகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அம்மையாரின் சித்தரிப்பும் முன்வைப்பும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக அமைந்த வரிகள் பின்வருமாறு.
“கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி நீங்கள் குனிந்து
கும்மியைக் கொட்டுங்கடி உலகம் செழுத்திட ஏழைகள் வாழ்ந்திட
ஒற்றுமையாகவே கொட்டுங்கடி
ஆதி முதலொரு காலத்திலே துரைமார் அட்வான்ஸ் தந்து
ஆளுங்கட்டி வேலை செய்ய இந்தே கூட்டி வந்ததொரு
விபரம் சொல்லுகிறேன் கேளுங்கடி”
எனவும்,
கன்றுகள் போட்டவர் இந்தியர்கள், இங்கே கவ்வாத்து வெட்டியவர்
இந்தியர்கள், மட்டம் ஒடித்தவர் இந்தியர்கள்
வேலை வழக்கம் காட்டியவர் இந்தியர்கள்
கொழுந்தெடுப்பவர் இந்தியர்கள், இங்கே கூலி கொடுப்பவர்கள்
வெள்ளையர்கள், வருந்தி வேலையை செய்து முடித்து
வறுமைப்பட்டோம் தோழர்களே
பச்சைக் கொழுந்தை அரைத்தெடுத்து அதை பன்னிரெண்டு
சாதியாய்ப் பிரித்தெடுத்து குச்சி பொறுக்கிப் பெட்டியில்
அடைத்து இலட்சக்கணக்காய் விற்றிடுவோம்
இப்படி வந்த தமிழாதிக்கு வந்த இக்கட்டைச் சொல்கிறேன்”
எனவும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்க முடிகிறது. எஸ். பெரியக்கா தனது பாடல் வரிகளின் மூலம் மலையக மக்களின் புலப்பெயர்வைச் சுட்டிக்காட்டி அதனைப் பற்றிய அவதானத்தை முன்னிறுத்தியுள்ளார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரான இலங்கைக்கான புலப்பெயர்வையும், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவுகளையும், இராவணன், விபீஷணன் ஆட்சிக்காலங்களோடு இணைத்து, இலங்கையில் தமிழர்களின் பூர்விக நிலையை ஒப்பிட்டுப் பாடும் இவரது தன்மையும் குறிப்பிடத்தக்கதாகும். தொழிலாளர்களின் துயர்நிலையை பல்வேறு சம்பவங்களோடு தொடர்புபடுத்தியும் இவர் பாடல்கள் இயற்றியுள்ளார். மலையகச் சமூக அசைவியக்கத்தில் எஸ். பெரியக்காவின் பாடல் வரிகளும் தாக்கத்தினைச் செலுத்தியுள்ளன. ஒரு தோட்டத் தொழிலாளி, 1964 ஆம் வருட ஒப்பந்தத்தின் மூலம், மீளவும் பூர்விகத் தாயகத்திற்குச் செல்லும் நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்ற விடயத்தோடு தொடர்புடையதாக, எஸ். பெரியக்காவின் உணர்வுகள் மதிப்பிற்குரியதாக விளங்குகின்றன.
எம்.எஸ். கிருஸ்ணம்மா எனும் சமூக ஆளுமை
மீனாட்சியம்மாள் நடேசய்யர், எஸ். பெரியக்கா ஆகிய ஆளுமைகளின் வரிசையிலே எம்.எஸ். கிருஸ்ணம்மாவின் பங்கேற்பும் மிக முக்கியத்துவத்தோடு அணுகப்படுகிறது. இவர் ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், யூரி தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்துள்ளார். தொழிற்சங்கச் செயற்பாட்டாளராகவும் அடையாளம் காணப்படுகிறார். ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் மாதர் சங்கத் தலைவி, மாவட்டத் தலைவி, மாதர் அணி ஆகிய பொறுப்புகளிலும் பங்கேற்றுள்ளார். சிறந்த பாடகியாகவும் திகழ்ந்துள்ளார். மலையகத் தொழிற்சங்க மேடைகளில் பெண்கள் பாடல் பாடும் மரபு மீனாட்சியம்மாள் நடேசய்யரில் இருந்தே தோற்றம் பெறுகிறது. மீனாட்சியம்மாளுக்குப் பின்னர் இவ்வாறு தொழிற்சங்க மேடைகளில் பாடலிசைக்கும் ஒருவராகவே எம்.எஸ். கிருஸ்ணம்மா திகழ்கிறார். கிருஸ்ணம்மாள், தொழிற்சங்க மேடைகளில் பாடிய பாடல்களைத் தொகுதிகளாக்கி வெளியிட்டுள்ளார். இப்பாடல்கள் எத்தனை தொகுதிகளாக்கப்பட்டன என உறுதியாகக் கூற முடியாத நிலை காணப்படுகிறது. இருந்த போதிலும் ‘சிந்தையைக் கவரும் சீர்திருத்தக் கீதம்’ எனும் தொகுப்புக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனூடாக எம்.எஸ். கிருஸ்ணம்மாவின் ஆளுமையையும் உணர்வையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்கேற்பட்டுள்ளது.
இலங்கை இந்தியன் காங்கிரஸ் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறியபோது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைகள் பல பிரிவினைகளுக்குக் காரணமாயின. அதன் பின்னரே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து பிரிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. புதிய தொழிற்சங்கங்களின் தோற்றங்களுக்கு ஏதுவாகக் களங்கள் அமைந்தமையும் கவனத்திற்குரியதாகும். அவ்வாறான சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட ஸ்தாபனமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் திகழ்கிறது. தாம் சார்ந்த தொழிற்சங்கங்கள் மீது அதீத பற்றுடன் தொழிலாளர்கள் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இயக்க உணர்வு என்பது இவர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த விடயமாக அவதானிக்கப்பட்டது. அவ்வாறே எம்.எஸ். கிருஸ்ணம்மாள் இயக்க உணர்வை எடுத்தியம்பும் வகையில் பாடிய பாடலொன்று முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக வீதிப்பாடல் என்பது ஏலவே உள்ள பாடல்களைத் தழுவியதாக இயற்றப்படுகிறது. அக்காலகட்டத்தில் மக்கள் மனங்களில் அபிமானங்களை வென்றெடுத்த சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் பாடலாசிரியர்களின் கருத்துகள் உட்புகுத்தப்படுவதை அவதானிக்கலாம். இங்கு எம்.எஸ். கிருஸ்ணம்மாவும் ‘பூ மாலையில் ஓர் மல்லிகை’ எனும் பாடலின் மெட்டில் பாடலமைத்துள்ளார். கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து எழுதியதும், பாடகர்களான சுசிலா, சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து பாடியதுமான இப்பாடல் மக்கள் மனங்களில் வெகுவான இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது…”
என்ற பாடல் இயக்கம், சமூகம் ஆகிய நோக்கங்களுக்காக வார்த்தைகள் மாற்றிப் புனையப்படுவதைக் காணலாம்.
“இந்த யீழத்தில் எங்கள் ஜ.தொ.கா
ஒன்றாய் வா வா வென்றது
உங்கள் வீடு தேடி தேவை ஏதும்
வேண்டுமா என்றது.
சங்கங்கள் பல தோன்றிய போதும்
ஜ.தொ.கா நம் உரிமையைக் காக்கும்
அன்றும் இன்றும் என்றும் கமழும்
இனிக்கும் மணக்கும் சுவைக்கும்”
இப்பாடல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தோழமையுணர்வையும், தலைவர்களது அர்ப்பணிப்புமிக்க தொண்டுகளையும் எடுத்துரைப்பதாக அமைகிறது. தென்னகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாக்கம் மலையக மக்களிடத்தேயும் ஆட்கொண்டிருந்தது. தி.மு.க வின் எழுச்சிக் கோசங்களால் கவரப்பட்ட தோழர்கள் மலையகத்தையும் புரட்சிப் பாதையில் நகர்த்துவதற்கு முயல்கிறார்கள். அக்கருத்தியலை வலியுறுத்தும் முனைப்பையும் எம்.எஸ். கிருஸ்ணம்மாவின் பாடல் வரிகளில் அவதானிக்கலாம்.
“எத்தனை சங்கங்கள் ஏற்பட்ட போதும்
எங்களின் ஜ.தொ.கா சேவை எப்போதும்
அயராதுழைக்கும் அன்பைப் பெருக்கும்
பூவின் மலர் போல் புதுமையாய் ஜொலிக்கும்”
அம்மையார் தான் எழுதிய பாடலுக்கு உரிமை கோரும் வகையில், பாடலடிகளோடு தனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல்கள்,
“எம்.எஸ். கிருஸ்ணம்மாள் இயற்றிடும் கீதம்
எல்லோர்க்கும் எளிதாய் இயற்றினேன் பாடும்
நன்றாய் யாவரும் இருந்திட வேண்டும்
நான் உங்கள் அருளால் வாழ்ந்திட வேண்டும்”
என்பதாக நிறைவுறுகின்றது. அதன் தொடர்ச்சியாக, ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் வெளியான ‘ராணி மகா ராணி’ எனும் பாடல் மெட்டில், இவரால் உருவாக்கப்பட்ட பாடல் கவனத்தைப் பெறுகிறது. இப்பாடல் உருவான காலத்தில் இருந்து இன்றுவரையில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப்பெற்று, ஜனரஞ்சகமான பாடலாக விளங்குகின்றமை அவதானத்திற்குரியதாகும். “கேளு அண்ணே கேளு, நான் சொல்லுறதைக் கேளு” எனத் தொடங்கும் பாடலில், ஒற்றுமை குறித்துப் பின்வரும் வரிகள் வலியுறுத்துவதை அவதானிக்கலாம்.
“அண்ணன்மாரே தம்பிமாரே சொல்லுவதைக் கேளும்
நாம் ஆளுக்கொரு சங்கத்திலே இருப்பதுவோ தீது
சண்டைகளும் குழப்பங்களும் என்னத்துக்கு வீணா
சகலருமே ஒற்றுமையா இருந்துவிட்டுப் போனா”
எனா வினா தொடுப்பதன் ஊடாக தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பிரயத்தனத்தை கிருஸ்ணம்மா நிகழ்த்துகிறார். கண்ணியமான வாழ்வு குறித்த போதனைகளையும், இயக்க நலன் குறித்த அவதானத்தையும் ஏற்படுத்தும் வகையிலான அம்மையாரின் சித்தரிப்புகள் மனங்கொள்ளத்தக்கவைகளாக அமைகின்றன. போதைப் பழக்கவழக்கங்களைச் கடுமையாகச் சாடும் பாடலாசிரியர், ஒழுக்கத்துடன் வாழ வேண்டிய அவசியத்தைப் போதிக்கும் பணியினையும் ஆற்றுகிறார். சமூகத்திற்கு வழிகாட்டிய முன்னோடிகளைப் பின்பற்றவும் வலியுறுத்துகிறார். எடுத்துக்காட்டாக,
“கடமை மறவாதிருக்க காந்தி சொன்னார் நாம்
கண்ணியமாய் இருக்கும்படி அண்ணா சொன்னார்
கடமைகளும் வேணுங்கோ கண்ணியமும் வேணுங்கோ
கட்டுப்பாடும் வேணுங்கோ
காந்தி மகான் வார்த்தை அண்ணா அவர் வார்த்தை
நேருஜியின் வார்த்தை நினைவிருக்கனும்”
எனும் ‘கல்யாண சாப்பாடு’ என்ற பாடல் மெட்டில் அமைந்துள்ள பாடல் வரிகளைக் குறிப்பிடலாம். அவ்வாறே முருக வழிபாட்டிலும், திருப்புகழ் தொடர்பாகவும் ஈடுபாடுடையவர்கள் என்ற வகையில் பின்வரும் பாடல் மக்கள் மனங்களில் அதீத இடத்தைப் பெற்ற பாடலாக விளங்குகிறது.
“திருப்புகழைப் பாட பாட – வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
நீ கொடுத்த தமிழல்லவா – புகழ எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது”
இப்பாடல் முருகன் மீதான பக்தி உணர்வையும் தமிழ்மொழி மீதான பற்றுதலையும் தூண்டுவதாக அமைகிறது. இப்பாடல் தந்த உந்துதலும், தமிழ்ப்பணியிலும் திராவிடர் சமூகப் பணியிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா மீதான பற்றுதலும் மலையக மக்களிடத்திலே காணப்பட்டன. அண்ணாவின் பிரிவுத் துயரின் பின்னர், திருப்புகழைப் பாட பாட எனும் பாடல் மெட்டில் ‘அண்ணாவைப் பாட பாட நாவினிக்கும்’ எனப் பாடல் புனைந்துள்ளார். அப்பாடலில் அண்ணா மீதான ஏக்கத்தைச் சொல்லும் வரிகளாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.
“வீரமில்லா திராவிடனை விழிக்க வைத்தீரே
விரிவுடனே வார்த்தை பேசப்பழக்கி வைத்தீரே
அகம் கொண்ட ஆரியனை அடக்கி வைத்தீரே
அறிவுமொழிக் கூறிக்கூறி படிக்க வைத்தீரே
அகமகிழும் நேரத்தில் அழுக வைத்தீரே
ஐயனே நீர் எம்மைவிட்டுப் போய் மறைந்தீரே”
தமிழகச் சினிமாவில், சிறுமி மீதான பாச உணர்வை வெளிப்படுத்தும் பாடலாக ‘முத்து நகையே – உனை நான் அறிவேன், என்னை நீ அறிவாய், நம்மை நாமறிவோம்’ என்ற பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடலாக விளங்கியது. தந்தை, மகள், மாமா, மருமகள் ஆகிய உறவுகளுக்கிடையில் ஆதரவைப் பெற்ற பாடலாக இப்பாடல் விளங்கியது. அப்பாடலும் பாடலாசிரியரைக் கவர்ந்த நிலையில் இப்பாடல் மெட்டிலேயே பின்வருமாறு பாடலடிகளை மாற்றீடு செய்கிறார். “தென்னிலங்கையே உனை நான் அறிவேன், பொன் விளைந்திடும் நாடே என்னையறியா, நானே உன்னை அறிவேன்” எனத் தொடர்ந்து,
“ஆதியிலே வந்த நம் பூட்டனையும்
அதற்கடுத்து வந்த பாட்டனையும்
எத்தனையோ நமது இனத்தாரையும்
ஈழத் தேயிலைத் தூரில் புதைத்தோம்”
என அங்கலாய்ப்பதையும் அறிய முடிகிறது.
வேதன உயர்வு என்பது பன்னெடுங்காலமாகவே தோட்டத் தொழிலாளர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்துள்ளது. காலங்காலமாக ஊழிய உயர்வு தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் திருப்தியில்லாத நிலையினையே பெற்றுள்ளது. சமகாலத்திலும் அந்நிலைமையே தொடர்கின்றமை கவனத்திற்குரியதாகும். எம்.எஸ். கிருஸ்ணம்மா காலத்திலும் தான் பெற்ற துயர் அனுபவத்தை பின்வருமாறு கூறி நிற்கிறார்.
“காடு வெட்டி ஓடிக்கொளுத்தி கண்டதெல்லாம் சீர்திருத்தி
சுந்தரமாய் இலங்கைதனை ஜொலிக்க வைத்தான் இந்தியனே
நன்றி செய்த இந்தியனுக்கு நாலு பணம் கூட்டவில்லை
என்ன கேட்டு முதலாளிமார் ஏறெடுத்தும் பார்க்கவில்லை”
பாரதியின் தாக்கம் எம்.எஸ். கிருஸ்ணம்மாவையும் விடுவதாக இல்லை. தென்னாசியாவின் சுதந்திர கோசத்திற்குப் பாரதியின் பாடல்களும் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளன. பாரதியின் பாடல்கள் மாற்றத்தை விரும்பும் அபிமானிகளால் மிகுந்த அவதானத்தைப் பெற்றுள்ளன. பாரதியின் பாடல்களில், குறிப்பாக ‘அச்சமில்லை அச்சமில்லை’ எனும் பாடல், விடிவைத் தேடும் களத்தில் மிகுந்த கவனத்தைக் கொண்டுள்ளது. இங்கும், இப்பாடல் மெட்டில் அம்மையாரால் பாடல் வடிவமைக்கப்படுகிறது. தொழிற்சங்க மேடைகளில் அம்மையாரின குரலில் ஒலிக்கப்பட்டுள்ளது.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சணம் நேர் எங்களை எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமின்றி வாழ்க்கை நாங்கள் செய்வோம் இந்த நாட்டினிலே”
தான் சார்ந்த ஸ்தாபனம் மீதான பற்றுறுதியும் அம்மையாரில் தெரிகிறது. அவ்வாறே தனது அமைப்பின் தலைமைத்துவம் மீதான பக்தியுணர்வையும் அம்மையாரின் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. பிற்போக்குத்தனத்தில் செயற்படும் சங்கங்களின் செயற்பாடுகளைச் சாடும் தன்மையும் கவனத்திற்குரியனவாகும்.
“எங்களின் தலைவர் எம்.பியாக இருக்கிறார்
ஏழைகளின் கஸ்டங்களை எடுத்துமே விளக்கினார்
கோழைகளாய் வாழ செய்தார் கோணல் புத்தி சங்கத்தார்
சோலைகளாய் நிற்க வைப்பார் ஜ.தொ.கா சங்கத்தார்”
“எத்தனை சங்கங்கள் எம்மை எதிர்த்து நின்ற போதிலும்
அத்தனையும் வேரறுத்து ஆள்வோம் இந்நாட்டிலே
எந்தச் சங்கம் ஜ.தொ.காவை எதிர்த்து நின்ற போதிலும்
துட்சமாக மதித்து தொழில் புரிவோம் நாட்டிலே (அச்சமில்லை)”
எம்.எஸ். கிருஸ்ணம்மா, தாம் வாழ்ந்த காலத்தில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு சமூக அவலங்களை தனது பாடல்கள் மூலமாக எடுத்துரைக்க முயன்றுள்ளார். விடிவே அம்மையாரது முழு எண்ணமாகத் திகழ்ந்துள்ளது. இத்தொகுப்பில் மக்கள் மனங்களை வென்ற ‘விவசாயி’, ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க’, ‘கண்ணே பெண்ணே’, ‘ராணி மகா ராணி’ போன்ற பாடல்களின் மெட்டில் அமைந்த படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை சமூக அவலங்களை வெளிப்படுத்துவதோடு, அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் முன்மொழிவுகளையும் தாங்கியுள்ளன. இயக்கம் சார்ந்த உணர்வோடு சமூக அணிதிரட்டும் வேட்கையையும் அம்மையாரின் பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன. மலையக சமூக வரலாற்றிலும் அதன் சமூக அசைவியக்கத்திலும் எம்.எஸ். கிருஸ்ணம்மாவின் பங்கேற்பு தடம் பதித்ததாகவே திகழ்கிறது. அம்மையாரின் தற்துணிவும் செயற்பாட்டுத் திறனும் முன்மாதிரியான அடையாளங்களாகும்.
மீனாட்சியம்மாளைத் தொடர்ந்து கவனத்திற்குரிய பெண் ஆளுமைகளான எஸ். பெரியக்கா, எம்.எஸ். கிருஸ்ணம்மா ஆகியோரின் களப்பணிகளும், கருத்து நிலைகளை வெளிப்படுத்தும் பாடல் முயற்சிகளும் காலத்தால் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அம்மையார்களது தற்துணிவும் முன்நகர்வுகளும் போற்றத்தக்கவைகளாகும்.
உசாத்துணை நூல்கள்
1. பெரியக்கா. எஸ்., (1967), தொழிலாளியின் துயரம், அசோகா அச்சகம்.
2. கிருஸ்ணம்மாள். எம்.எஸ்., சிந்தையைக் கவரும் சீர்திருத்தப் பாடல்கள், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்.
3. முத்துலிங்கம். பெ., (2012), பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், கயல் – கவின் புக்ஸ்.
4. யோகராசா. செ., (2023), ஈழத்து முச்சந்தி இலக்கியம், மகுடம் பப்ளிகேசன்.
5. மெய்யப்பன். ச., (2004), பாரதியார் கவிதைகள், தென்றல் நிலையம்.



