இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. மாறாக அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது தொடர்ந்து, நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவாகவே நடக்கிறது. எனவேதான் இனப்படுகொலையைக் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்று அழைக்கிறோம்.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும் பற்றிய ஆழமான பார்வை நமக்கு அவசியமானது. காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டமும் என்றோ ஒருநாள் வெற்றி பெறுவது நிச்சயம். ஆனால் பல்லினங்களைக் கொண்ட ஒரு நாட்டில் அரசற்ற தேசிய இனங்கள் எல்லாம் விடுதலை அடையலாம் என்றில்லை. சிலது வெற்றி பெறலாம், சிலது தோல்வியடையலாம். அவற்றிற்கான அகப்புறச் சூழலைக் கையாள்வதிலேயே இவை அடங்கியுள்ளன. திபெத், காலிஸ்தான் என்பன பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்பைப் பெரிதும் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு, வெற்றி பெறுவதற்கான கடினமான பாதையாவது உண்டு. அதற்கான வாய்ப்புகளை மிக நுணுக்கமாகக் கையாண்டாலே வெற்றி சாத்தியம். ஈழத்தமிழர் சார்ந்து காணப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைச் சூழலில், அதை சரிவரப் புரிந்து, மிகத் துல்லியமாகக் கையாள்வதன் வாயிலாக விடுதலையை அடைய முடியும்.
ஈழத்தமிழர் சார்ந்து காணப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடிவம் மிகவும் வலுவானது. ஈழத்தமிழர் சார்ந்த அகத்தேசிய நிலை, உள்நாட்டு நிலை, அண்டை நாட்டு நிலை, அயல் நாடுகள் மற்றும் உலக நாடுகள் சார்ந்த நிலை மேலும் புவியியல் வரலாற்று நிலை என்பனவற்றால் அது வலுவாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர் சார்ந்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை முறைமையை விருப்பு வெறுப்பிற்கு அப்பால் துல்லியமாக அளவீடு செய்யும் எத்தனமாக இக்கட்டுரை அமைகிறது.
அறிவின்றி அணுவும் அசையா என்ற அறிவியல் யுகத்தில், அறிவின் வழியது விடுதலை என்ற மகுடத்துடன் ஈழத் தமிழருக்கான விடுதலையை வடிவமைக்க வேண்டும். எல்லாவிதமான தூய்மைவாதங்களும், கற்பனாவாதங்களும், கடும்போக்குவாதங்களும் பார்வைக்குக் கவர்ச்சிகரமானவை; பேச இனிமையானவை. ஆனால் அவை நடைமுறையில் எதிரிகளின் சேவகர்களே; ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது’. நடைமுறைக்குப் பொருத்தமான அறிவு எதுவோ அதுவே சரியானது. எல்லாவற்றிற்கும் ஒரு பண்பாட்டுப் பார்வை வேண்டும் என்பது போல, அறிவியலுக்கும் அதுவே பொருத்தமானது. பண்பாடற்ற அறிவும் எதிரியின் ஊன்றுகோல்தான்.
“Strong minds discuss ideas.
Average minds discuss events.
Weak minds discuss people.”
என்ற சாக்ரடீஸின் கூற்றைத் தமிழாக்கம் செய்தால், அது பின்வரும் பொருளைத் தரும்.
“உன்னதமானவன் தத்துவ ஞானத்தைப் பற்றிப் பேசுவான்.
சாமானியன் சம்பவங்களைப் பற்றி பேசுவான்.
அற்பன் அடுத்தவனைப் பற்றி பேசுவான்.”
ஈழத்தில் மலையென உயர்ந்த பெரும் தியாகத்திற்கும், மடுவென வீழ்ந்த பெரும் தோல்விக்கும் இடையே உள்ள இட்டு நிரப்ப முடியாத இடைவெளியில் இனி அடுத்தது என்ன?
மாயாஜாலம் கொண்ட கற்பனைக் கதைகளையும், மந்திரக்கோல் ஏந்தும் அரசியல் வித்தைகளையும், மக்களை ஏமாற்றும் அலாவுதீனின் அற்புத விளக்குக் கதைகளையும் கைவிட்டு, வெற்றிக்கு ஏதுவான அறிவார்ந்த அரசியல் பாதையைக் கண்டறிய வேண்டும். உலகளாவிய அரசியல் நடப்பியலின் பின்புலத்தில் நின்று, ஈழத் தமிழரின் விடுதலைக்கான அணுகுமுறையை நடைமுறைக்குப் பொருத்தமாக வடிவமைக்க வேண்டும்.
“வேட்டையாடும் சிங்கக்கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடையும் போது, தனது வியூகத்தை மூன்றாவது தடவை மாற்றி அமைத்துவிடும்” என்று பிராணிகள் நடத்தையியல் விஞ்ஞானம் கூறகிறது. அரசியலை அதன் இயல்பான உலகளாவிய நடப்பியலுக்கு ஊடாக எடைபோட்டு முன்னெடுக்க வேண்டும்; இரம்மியமான மன விருப்பு – வெறுப்புகளுக்கு ஊடாகவோ, குரோதமான மன உந்துதல்களுக்கு ஊடாகவோ அல்ல.
சூழலைப் புரிந்து, தன்னிலை அறிந்து, மாற்றான் நிலை அறிந்து, பொருத்தமான உடனடி மற்றும் நீண்டகால இலக்குகளைத் தெரிந்து, காணப்படும் சாதக – பாதக வாய்ப்புகளுக்கு ஏற்ப நடைமுறைச் சாத்தியமான பாதைக்கு ஊடாக அரசியலை முன்னெடுக்க வேண்டும். இது முற்றிலும் விஞ்ஞானபூர்வமான, அறிவியல் முறையாக அமைய வேண்டியது அவசியம்.
விடுதலைக்கான புதிய சிந்தனையும் வழியும்
‘ஈழத்தமிழர் வாழவேண்டும் எனில் அவர்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும்.’ தம்மைத் தாமே ஆள்வதற்கான தகுதியைப் பெறுவதற்கு முதலில் அவர்கள் தம்மை ஓர் ஒருங்கிணைந்த சக்தியாக ஆக்கவேண்டும். கூடவே தம்மைச் சூழவுள்ள யதார்த்தத்தை சரிவரக் கையாண்டு நடைமுறைக்குப் பொருத்தமான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான தகுதியையும் அறிவார்ந்த ரீதியில் கொண்டிருக்க வேண்டும்.
‘ஒன்றுக்கு ஆசைப்படும் முன், முதலில் உன்னை அதற்குத் தகுதியாக்கிக்கொள்’ (First deserve then desire) என்ற ஆங்கிலப் பழமொழி கவனத்திற்குரியது. அதாவது புறநிலை உண்மையை அல்லது புறநிலைச் சூழலை (Objective Conditions) அடிப்படையாகக் கொண்டு, கொள்கை – கோட்பாடு – யதார்த்தம் – நடைமுறை – சாத்தியப்படக்கூடிய மேலான நடைமுறை (Policy – Theory – Reality – Practice – Praxis) என்ற படிமுறைச் சிந்தனைமுறைக்கூடாக அரசியல் முன்னெடுப்புகளை அறிவார்ந்து வடிவமைக்க வேண்டும். இதில் கற்பனைக்கு இடமில்லை. இரத்தமும் தசையுமான நடைமுறையை நோக்கி மேற்படி உரியவகையில் அறிவார்ந்த பாதையில் மேற்கொள்ள வேண்டும். இதனை விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை அல்லது அறிவார்ந்த அணுகுமுறை என்று அழைப்பர்.
தமிழ்ச் சிந்தனைப் பாரம்பரியத்தில் திருக்குறள், இத்தகைய அணுகுமுறை பற்றிக் கூறியிருக்கிறது.
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ – 948
என்கிற குறளும், தீர்மானம் எடுத்தல் – செயற்படுதல் தொடர்பாக,
‘அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்’ – 461
என்கிற குறளும் கவனத்துக்குரியன.
எந்த ஒரு செயலையும் செய்யும் போது அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும், தீமைகளையும், விளைவுகளையும் சேர்த்து, ஆய்ந்து, கணக்குப்போட்டுச் செயலில் ஈடுபட வேண்டும். கிரேக்கத் தத்துவ ஞானத்தில் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட ‘Cause and Effect’ என்ற கோட்பாடும் மேலே சொன்ன குறள்களின் கருத்தைப் பிரதிபலிப்பதே.



