யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
30 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 2

August 25, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

யாழ்ப்பாணக் கோட்டைத் தொல்லியல் ஆய்வுகள்

யாழ்ப்பாணக் கோட்டை மேலாய்வுகள் 2011-12

2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அழிவடைந்த யாழ்ப்பாணக் கோட்டையை மீள்புனரமைப்புச் செய்துவரும் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 62 ஏக்கர் பரப்பில் அமைந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் மேலாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுள் அழிவடைந்த கிறிஸ்தவத் தேவாலயம், இராணி மாளிகை, ஆயுதக் களஞ்சியங்கள், பீரங்கித் தளங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், காவல் மையங்கள் என்பன அமைந்துள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகளில் யாழ்ப்பாணத்திற்குப் போர்த்துக்கேயரின் வருகைக்கு முற்பட்ட வரலாற்றை வெளிப்படுத்திக் காட்டும் பல தொல்பொருட் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமாக ஆதிகால, இடைக்கால, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு மட்பாண்டங்கள், சுடுமண்ணினாலான இந்துச் சிற்பங்கள், கருங்கல் மற்றும் சுண்ணாம்புக் கல்லிலாலான இந்த ஆலயங்களின் அழிபாடுகள் மற்றும் கலைவடிவங்கள், சமயச் சின்னங்கள், கல்வெட்டுகள் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வாதாரங்கள் போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே தற்போதைய கோட்டைப் பிரதேசமும், அதன் சுற்றாடலும் புராதன குடியிருப்பு மையங்களாகவும், இந்து சமுத்திர கடல்சார் வாணிபத்தில் மேற்காசிய, தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான வாணிப மையமாகவும் இருந்துள்ளதை உறுதி செய்கின்றன (புஷ்பரட்ணம், ப. 2023).

யாழ்ப்பாணக் கோட்டை: முதலாம் கட்ட அகழ்வாய்வுகள் 2011-12

அகழ்வாய்வு – 1

முதலாவது அகழ்வாய்வுக்குழி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது. கோட்டை வாசல் ஆரம்பிக்கும் இடத்திற்கும் கடற்கரைப் பக்கமாக உள்ள வீதிக்கும் இடையே 10×6 அடி நீள அகலத்தில் தோண்டப்பட்டது. 2.5 அடி ஆழம் வரை அகழ்ந்தபோது கடல் நீர் உள்ளே கசிந்துவர ஆரம்பித்தது. இந்தக் குழியில் மூன்று கலாசார மண் அடுக்குகளை அடையாளம் காண முடிந்தது. இந்த மூன்று அடுக்குகளிலும் பல்வேறு வடிவங்களில் அமைந்த பலதரப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. மூன்றாவது மேல் அடுக்கில் பெருமளவு பளிங்குபோல பளபளப்பானதும், பளபளப்பற்றதுமான சீன மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றோடு மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. இச் சீன மட்பாண்டங்களின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாதலால் இவை போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வருவதற்கு 300 ஆண்டுகள் முன்னரே இந்த இடத்தை வந்தடைந்திருக்க வேண்டும். இந்தக் குழியை இயற்கை மண் மட்டம்வரை அகழ்ந்திட முடியாமையால், தொன்மையான சான்றுகளை வெளிக்கொணர முடியவில்லை (புஷ்பரட்ணம், 2021).

அகழ்வாய்வு – 2

இரண்டாவது அகழ்வாய்வு கோட்டையின் உட்பகுதியில் தொல்லியல் திணைக்கள உதவி ஆணையாளர் கலாநிதி நிமல் பெரேரா தலைமையில் நடைபெற்றது. ஆயுதக் களஞ்சிய அறைக்கு முன்னால் 6×6 அடி சதுர அடியில், இயற்கை மண்ணை அடையும் வரை அகழ்வு நடாத்தப்பட்டது. இந்தக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தொல்கலைப் பொருட்கள் அனைத்தும் கொழும்பு தொல்லியல் திணைக்களத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த அகழ்வின் அகழ்வாய்வறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

அகழ்வாய்வு – 3

மூன்றாவது அகழ்வாய்வுக் குழி ஐரோப்பியப் படைவீரர்கள் தங்கியிருந்த இராணுவக் குடியமைப்புக் கட்டடத்திற்கு முன்னால் நடாத்தப்பட்டது. இந்த அகழ்வு முன்கூட்டியே திட்டமிட்டதல்ல. இவ்விடத்தில் பிற தேவைக்காக 6×6 அடி நீள அகலத்தில் 7 அடி ஆழம் வரை குழி தோண்டியபோது வெளிவந்த அரிய தொல்லியல் கலைப்பொருட்கள் பின்னர் அவ்விடத்தில் தொல்லியல் அகழாய்வை மேற்கொள்ளக் காரணமாக அமைந்தன. ஆரம்ப அகழ்வு, இயந்திரத்தைக் கொண்டு நடத்தியபடியினால் கலாசார அடுக்குகள் குழம்பிய நிலையில் இருந்த போதிலும் நான்கு கலாசார அடுக்குகள் இனம் காணப்பட்டன.

குழியின் அடிப்பாகத்தில் கண்ட பலதரப்பட்ட ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், மற்ற வகை கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், ஆதி இரும்புக் காலத்தைய சிவப்பு மட்பாண்டங்கள் என்பன அநுராதபுரம், கந்தரோடை ஆகிய இடங்களை நிகர்த்த ஆதிக்குடியிருப்புகள் இந்த இடத்தில் இருந்ததை உறுதி செய்தன. அதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கில் கி.மு. மூன்றாம், இரண்டாம் நூற்றாண்டிற்குரிய உரோம ‘ரௌலெற்றெட்’ மட்பாண்டங்களும், ‘அம்போரா’ சாடிகளும் காணப்பட்டன. அடுத்து கி.பி. முதலாம், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளுக்குரிய உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாவது அடுக்கில் பலவகையான இஸ்லாமிய, சீன பளபளப்பான கலன்கள், பீங்கான்கள், சீன, இஸ்லாமிய நாணயங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன. நான்காவது அடுக்கில் யாழ்ப்பாண இராசதானிக்குரிய நாணயங்கள், ஐரோப்பிய நாணயங்கள், கட்டடங்களின் இடிபாடுகள் என்பன காணப்பட்டன (புஷ்பரட்ணம், ப. 2021: 13).

இந்த அகழ்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்கள் பற்றி பின்னர் விரிவாகப் பேசப்படும்.

யாழ்ப்பாணக் கோட்டை: இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் 2017-18

பிரித்தானிய டர்ஹாம் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரும், UNESCO தொல்லியல் நன்னெறிக் கோட்பாட்டின் தலைவருமான றொபின் கொனிங்ஹாம் யாழ்ப்பாணக் கோட்டை இரண்டாம் கட்ட அகழ்விற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரோடு இணைந்து இலங்கை அரசின் மத்திய கலாசார நிதிக்காப்பாளர் தரப்பில் பேராசிரியர் பிரிந்தா குணவர்த்தனா குழுவினர், பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் இணைந்து இந்த அகழ்வாய்வில் பங்கெடுத்துக் கொண்டார்கள். 

மனிதனில்லாத வானூர்தி வாகன மதிப்பீடு (Unmanned Aerial Vehicle Survey)

வானூர்தி வாகனத்தின் மூலம் எடுத்த படங்கள் வழியாக கோட்டை மதில்கள், மதிலினுள் அமைந்த உயர் மேடைகள் (Ramparts), அகழிகள், கோட்டையினுள் நிற்கும் கட்டடங்கள், கோட்டையைச் சுற்றிவர உள்ள சுற்றாடல்கள் ஆகியவற்றைக் கணிப்பிட முடிந்தது. கோட்டையின் வட மேற்கில் முந்தைய போர்த்துக்கேய கோட்டையின் மூன்று அரைவட்ட காவல் அரண்களைக் (Bastions) காண முடிந்தது. இக்காவல் அரண்கள் டச்சுக் கோட்டையுடன் கூட்டிணைக்கப்பட்டிருந்தது. இந்த வானூர்தி வாகனப் படங்களின் மதிப்பீடு, கோட்டையின் முழு வரைவையும், தற்போது நிற்கும் கட்டடங்கள், அதில் இருக்கும் சரியான இடத்தையும், கீழே தெரியும் தொல்லியல் உருவங்களுக்கும் அவற்றிற்கான தொடர்பையும் எடுத்துக்காட்டின (Davis, C.E. et al. 2017).

நிலத்தைத் துளைத்தெடுக்கும் ரேடர் மதிப்பீடு (Ground Penetrating Radar Survey)

நிலத்திற்குக் கீழே ரேடார் கருவி மூலம் எடுத்த படங்கள், அங்கிருக்கும் கட்டடங்களின் பரவலையும், அவை காணப்படும் ஆழத்தையும் கணிப்பிட உதவின. போர்த்துக்கேயர் கட்டிய மாதா கோயில், அதற்கும் முற்பட்ட பண்டகசாலை மற்றும் கட்டடங்களின் இடிபாடுகள் என்பன காணப்பட்டன. இவை நிலத்திற்குக் கீழிருக்கும் மரபுரிமை (Subsurface heritage) ஆதலால், இவற்றைப் பாதுகாக்கவேண்டியது முக்கியம் என உணரப்பட்டது. யாழ்ப்பாணக் கோட்டையின் வரைநிலையிடத்தின் தொல்லியல் ரீதியிலான படிநிலை வளர்ச்சியை (Archaeological sequence) விஞ்ஞான முறையில் காலக்கணிப்புச் செய்வதற்கு இந்த மதிப்பீடு உதவியிருக்கிறது (Davis, C.E. et al. 2017).

அகழ்வாய்வுகள்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்த மையத்தின் மனிதக் குடியிருப்புகளின் வரலாற்றையும், இதன் படிமுறை வளர்ச்சி சார்ந்த நிரலொழுங்கையும் (Developmental sequence) விளங்கிக் கொள்ளும் வகையிலே அகழ்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. ரேடர் மதிப்பீட்டைக் கொண்டு கோட்டைக்குள் மூன்று புள்ளிகள் உயிர்மைய இடங்களாகத் தெரிவு செய்யப்பட்டன. இக்குழிகள் அடுக்கியற் படிவாக்கக் கூறுகளாக, அவற்றின் தொன்மையும், காலவரன்முறை வளர்ச்சியும், இந்து சமுத்திர வர்த்தக வலைப்பின்னலில் இந்த மையத்தின் பங்கு விளங்குமாறும் அகழ்வுசெய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியல்பூர்வமாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதனால் இங்கு கிடைத்த தொல்பொருட் சின்னங்களின் காலம், அவை தோற்றம் பெற்ற இடம், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான கணிப்பீடுகள் என்பன நம்பகத்தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன  (Davis, C.E. et al. 2017, 2018, 2019).

பழைய சிறைச்சாலைக் குழி ஆய்வுக்குழி 1

பழைய சிறைச்சாலை இருந்த இடத்தில் 2.5 × 2.0 மீட்டர் அளவில் இயற்கை மண்படை வரை தோண்டப்பட்ட குழியில் ஒன்பது வேறுபட்ட கலாசார மண்படை அடுக்குகள் இனம் காணப்பட்டன. அடியிலிருந்த இயற்கை மண் மட்டத்திலிருந்து மேல்நோக்கிய அடுக்கில், முதலில் அடியிலிருந்த இயற்கை மண்ணுடன் கலந்த ஆரம்பகால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் (Black and Red ware), அடுத்து பின்பெருங்கற்காலத்திற்குரிய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் காணப்பட்டன. பின்பெருங்கற்காலத்தைய அடுக்கில் வட இந்திய சாம்பல்நிற மட்பாண்டங்கள் (Grey Ware) காணப்பட்டன. அடுத்து வட இந்திய பளபளத்த கறுப்பு மட்பாண்டங்கள் (Northern Black Polished Ware), ரௌலெற்றெட் மட்கலன்கள், அரிக்கமேடு வகை மட்பாண்டங்கள், ரோமாபுரி அரிற்றைன் வகை மட்பாண்டங்கள் (Arretine Ware), பளபளத்த சிவப்பு மட்பாண்டங்கள், சஸானிய இஸ்லாமிய கலன்கள், டற்சுன் சாடிகள், யூ-நீல கலன்கள் (Yue Green Ware), சீனப் பீங்கான்கள் மற்றும் மேல் மட்டங்களில் ஐரோப்பிய கலன்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன (Davis, C.E. et al. 2018, 2019).

ராணி மாளிகை அகழ்வாய்வு – ஆய்வுக்குழி 2

ராணிமாளிகையின் முற்றத்தில் 4.30 × 6.0 மீட்டர் அளவினதான குழி வெட்டப்பட்டது. இந்தக் குழியில் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டிற்குரிய கலன்களும், மட்பாண்டங்களும் காணப்பட்டன. இக்குழியினில் ஒரு மூலையில் தோண்டப்பட்ட உபகுழியில், ஐரோப்பியர் கால மட்பாண்டங்கள், பல கலாசார அடுக்குகளில் காணப்பட்டன (Davis, C.E. et al. 2018, 2019).

குறூஸ் கேர்க் தேவாலயம் இருந்த இடத்தில் வட கிழக்குப் பகுதியில் 5×5 மீட்டர் அளவில் ஆறு சதுர வலைச்சட்ட நிலம் அளந்து குறிக்கப்பட்டது. சற்று தள்ளி இதே அளவினதான வலைச்சட்டம் பலகைகள் கொண்டு அமைக்கப்பட்டது. அகழ்வு செய்தபோது பெறப்பட்ட ஓடுகள், செங்கட்டிகள், கண்ணாடித் துண்டுகள், கலைப்பொருட்கள் என்பன அவை கண்டெடுக்கப்பட்ட சதுரங்களில், அவற்றை ஒத்த பலகைச் சதுரங்களில் வைக்கப்பட்டன. திரும்பவும் புனர் நிர்மாணிக்க நேரிட்டால், அப்பொருட்களைக் கண்ட இடத்தை இலகுவாக இனம் காண முடியும் என்பதற்காக இம்முறை கையாளப்பட்டது (Davis, et al. 2017, 2018, 2019).

கோட்டைச் சுவர் மேடை அகழ்வாய்வு ஆய்வுக்குழி 4

கோட்டைச் சுவர் மேற்குப்பக்க மேடையில் இருந்த குப்பைகளையும், சிதைகூழங்களையும் நீக்கிய பின்னர் மேடையின் உள்முகத்தருகில் 2×1 மீட்டர் அளவான குழி வெட்டப்பட்டது. மேடைச் சுவரின் அடிப்பாகம் கோறல் கற்களும், சுண்ணாம்புக் கற்களும் கொண்டு சுண்ணப் பசையால் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் கீழே அகழ்ந்து செல்ல, பொழியப்பட்ட சுண்ணாம்புக்கற்களினால் அடித்தள மேடை அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது கோட்டை அமைப்பின், முற்பட்ட ஒரு பகுதியாக இருந்திருக்கும் (Davis, et al. 2017, 2018, 2019).

தொல்லியலாய்வுகளில் கண்ட தொல்பொருட்கள்

யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த பொருட்களைத் தவிர, மேலாய்வுகளிலும் பல முக்கியமான கருவூலப் பொருட்களும், புறப்பொருட்களும் பெறப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அகழ்வாய்வுப் பொருட்கள், கதிரியக்கக்கரிம வயதுக்கணிப்பு (Radiocarbon dating) மற்றும் வெப்பேற்றுக் கதிரொளிவீச்சு காலக்கணிப்புகளுக்காக (Thermoluminescence dating) பிரித்தானியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

அகழ்வுகளில் அதிகமாகக் காணப்பட்ட, இலகுவாகத் தேதி கணிப்பிடக்கூடிய பொருட்கள் மட்பாண்டங்களாகும். பேராசிரியர் றொபின் கொனிங்ஹாம் தனது குழுவினர் அகழ்வுகளில் கண்டெடுத்த மட்பாண்டங்கள் மற்றும் பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் குழுவினர் வெளிக்கொணர்ந்த மட்பாண்டங்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றின் காலங்களை வார்க்கோட்டு விவர விளக்கப்படமாகத் (Bar-code Chart) தயாரித்தார். இதில் 25 வகையான மட்பாண்டங்கள் அவற்றின் கால வரிசையில் பதிவு செய்யப்பட்டன.

இந்த மட்பாண்டங்களில் மிகப் பழமையானவை அடியில் கண்ட இயற்கை மண்ணுடன் கலந்து காணப்பட்ட பெருங்கற் பண்பாட்டு கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களாகும். இவற்றின் ஆரம்ப காலத்தை கி.மு. 700 ஆம் ஆண்டு என முதலில் கணிப்பிட்ட கொனிங்ஹாம் அதை மறுபரிசீலனை செய்து அதை கி.மு. சுமார் 1000 ஆண்டாகக் கணிப்பிட்டார். இதன் பிரகாரம் கி.மு. ஆயிரம் ஆண்டளவில் இப்பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புகள் ஆரம்பமாகியிருக்கிறது. பெருங்கற் பண்பாட்டின் ஓர் அங்கமான கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களையும், அவைகளை உருவாக்கும் தொழில் திறனையும், முதன் முதலாக தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த மக்கள் மூலமாக, அல்லது கந்தரோடையிலிருந்து கசிந்து வந்த பண்பாட்டு வழியாக இப்பிரதேச மக்கள் பெற்றிருக்க வேண்டும். இதைத் தொடர்ந்த இந்திய, கிரேக்க – உரோம, பாரசீக, இஸ்லாமிய, கிழக்காசிய தொல்பொருட்கள் ஐரோப்பியரின் வருகைக்காலம் வரை இப்பிரதேசம் தொடர்ச்சியாகக் குடியிருப்பில் இருந்ததை எடுத்துக்காட்டியது (Davis, Coningham et al. 2018).

வட இந்திய சாம்பல் நிற மட்கலன்களும், வட இந்திய பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்களும் (North Indian Grey Ware and Northern Black Polished Ware) கி.மு. 500 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட ஆழ்கடல் வர்த்தக நடவடிக்கைகளை எடுத்துக்காட்டின. ரௌலெற்றெட் மட்பாண்டங்களும், அம்போரா சாடிகளும் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 200 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டகால உரோம நெடுங்கடல் வர்த்தக நடவடிக்கைகளை எடுத்துரைத்தன. ஒம்பொலஸ் மட்கலன்களும் அதே காலத்தைய கிரேக்க – உரோம வர்த்தகத்தை எடுத்துக்காட்டியது. தமிழகத்தின் சிவப்பு வர்ணம் பூசிய வெண்பாண்டம், பளபளப்பான சிவப்பு நிறம் கொண்ட மற்றும் சஸானிய – இஸ்லாமிய மட்பாண்டங்கள் மேற்காசிய நாடுகளுடனான (பாரஸீகம், ஈரான், ஈராக்) வர்த்தகத் தொடர்பை எடுத்துக்காட்டியது. யூ-பச்சை கலன்கள், டூஸன் கற்கலன்கள், மிங் பீங்கான்கள் என்பன கி.பி. 700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1600 ஆம் ஆண்டு வரையிலான சீன வர்த்தகத்தைக் காண்பித்தது (Davis, Coningham et al. 2018).

கோட்டைப் பிரதேச பூர்வீகக் குடியிருப்புகள்

கோட்டைப் பிரதேசத்தினுள் இதுவரை நடைபெற்ற அகழ்வுகளிலிருந்து பெற்றுக்கொண்ட தொல்பொருட்களில் காணப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களை உபயோகித்த, பெருங்கற் பண்பாட்டைப் பேணிய, ஆதி இரும்புக்கால மக்கள் கோட்டைப் பிரதேசத்தில் கி.மு. 1000 ஆண்டுகாலத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பேராசிரியர் புஷ்பரட்ணம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி யாழ்ப்பாணக் கோட்டைக்கு மிகக் கிட்டிய தொலைவில் கிழக்கே அரியாலை, பூம்புகார், தென்கிழக்கே மண்ணித்தலை, கல்முனை, தெற்கே சாட்டி, மேற்கே ஆனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் பெருங்கற் பண்பாட்டைப் பேணிய யாழ்ப்பாணத்தின் தொடக்ககால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம், ப. 2021). அன்றைய யாழ்ப்பாணப் பட்டினமான கோட்டைப் பிரதேசத்திலும் வாழ்ந்தவர்கள், அதே பெருங்கற் பண்பாட்டைப் பேணிய, அதே இனப்பிரிவைச் (Ethnic group) சேர்ந்த மக்கள் எனக் கொள்ளலாம்.

1970 ஆம் ஆண்டில் கந்தரோடையில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தினர் மேற்கோண்ட அகழ்வாய்வுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கருவூலப் பொருட்களின் கதிரியக்கக் கரிம தேதிக் கணிப்புகளின்படி கி.மு. 1350 ஆம் ஆண்டுக் காலத்திலேயே பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்களின் குடியிருப்புகள் கந்தரோடைப் பகுதியில் ஆரம்பமாகியிருப்பதை ஏற்கனவே இத் தொடரின் நான்காம் இயலில் பார்த்தோம். இந்த ஆய்வுக்குழுவிற்குத் தலைமை தாங்கிய விமலா பெக்லி கந்தரோடைப் பண்பாடு தமிழகத்தின் இரும்புக்காலப் பெருங்கற்பண்பாட்டுடன் கொண்டிருந்த நெருங்கிய ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி, கந்தரோடையில் வாழ்ந்த மக்கள் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம், அல்லது கந்தரோடையில் ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தமிழகத்துடன் நெருங்கிய கலாசாரத் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார் (Begley, V. 1973).

யாழ்ப்பாணத்தின் கோட்டைப் பிரதேசத்திலும், அதன் அயல் பகுதிகளான அரியாலை, பூம்புகார், மண்ணித்தலை, கல்முனை, சாட்டி, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் வாழ்ந்த மக்களும் விமலா பெக்லியின் கருத்துப்படி தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம், அல்லது அவ்விடங்களில் ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்த இரும்புக்கால பெருங்கற் பண்பாட்டு அம்சங்களைக் கடைப்பிடித்திருக்கலாம். கந்தரோடையின் பெருங்கற் பண்பாட்டின் ஆரம்பகாலம் கி.மு. 1350 ஆம் ஆண்டாகவும், யாழ்ப்பாணக் கோட்டை மக்களின் பெருங்கற்பண்பாட்டுக் காலம் ஏறக்குறைய கி.மு. 1000 ஆம் ஆண்டாகவும் இருப்பதனால் இந்த 350 ஆண்டுகால இடைவெளியில் மக்கள் கந்தரோடையிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்திருக்கலாம். மேலும், யாழ்ப்பாணப் பட்டினமே கந்தரோடையின் முக்கியமான வர்த்தகத் துறையாக விளங்கி வந்திருப்பதை இனிவரும் சான்றுகள் எடுத்துக்காட்டும்.   

புராதன யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் (யாழ்ப்பாணப் பட்டினம்) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கிலே நகரமயமாக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் நெல் விவசாயம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் காணப்படாமையால், இந்த மக்களுக்கான உணவு அருகிலிருக்கும் ஆனைக்கோட்டையிலிருந்தோ, அல்லது அரியாலையிலிருந்தோ கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

இந்து மாகடல் வர்த்தக வலைப்பின்னல்

வட இந்திய வர்த்தகம்: கி.மு.1000 – கி.மு.100

யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்ட வட இந்திய சாம்பல்நிற மட்கலன்களும், வட இந்திய பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்களும் கி.மு. முதலாம் ஆயிரத்தாண்டில் நிலவிய வட இந்திய வர்த்தகத்தின் சான்றாக அமைகிறது. வட இந்திய நிறமடித்த சாம்பல் மட்பாண்டங்கள் (Painted Grey Ware) கி.மு. 1200 ஆம் ஆண்டளவில் ஆரம்பமாகி கி.மு. 600 ஆம் ஆண்டுவரை தயாரிப்பில் இருந்திருக்கின்றன. கி.மு. 600 ஆண்டுக் காலகட்டத்தில் சாம்பல் மட்பாண்டங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்கள் (Northern Black Polished Ware) தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன (Adams, D.Q.1997: 310).

யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்த வட இந்திய பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்களுக்கு கி.மு. 500 முதல் கி.மு. 100 ஆண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபகால அகழ்வாய்வுகளும் காலக்கணிப்புகளும் அதன் தயாரிப்புக் காலத்தை மிகவும் முன்னால் தள்ளி வைத்திருக்கின்றன. பீகாரில் நாளந்தாவில் உள்ள யுயாஃபர்டியில் (Juafardih) கண்டெடுத்த வட இந்திய பளபளப்பான கறுப்பு மட்பாண்டத்தின் கதிரியக்கக் கரிமத் தகதி கி.மு. 1200 ஆம் ஆண்டாகும். அதுபோன்று அயோத்தியில் அகழ்ந்தெடுத்த பளபளப்பான கறுப்பு மட்பாண்டம் கதிரியக்கக் கரிமத் திகதி கி.மு. 1200-1000 ஆண்டைக் கொடுத்திருக்கிறது (Singh, Shankar 2017). யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்த பளபளப்பான கறுப்பு மட்பாண்டத் துண்டுகளும் கதிரியக்க ஆய்வில் இத்தகைய பூர்வீகத் திகதிகளைத் தரலாம்.

1919 ஆம் ஆண்டில் கந்தரோடையில் ஆய்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் 35 வட இந்திய முத்திரை நாணயங்களைப் (அச்சுக்குத்திய நாணயங்கள்) பெற்றுக்கொண்டார். இவை கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்குரிய நாணயங்கள் என தனது தொல்லியல் அறிக்கையில் குறிப்பிடுகிறார் (Pieris, P. 1919: 46-47).  கி.மு. 500 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே வட இந்திய – யாழ்ப்பாண வர்த்தகம் நடைபெற்று வந்தமைக்கு இந்த நாணயங்களும் ஒரு முக்கியமான ஆதாரங்களாகும். 

தென்னிந்திய வர்த்தகம் மற்றும் தொடர்புகள்: கி.மு.1350 – கி.பி.1070 

யாழ்ப்பாணத்துடனான வட இந்திய வர்த்தகம் ஆரம்பமாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே தென்னிந்தியாவுடனான வர்த்தக, பண்பாட்டு உறவுகள் ஆரம்பமாகியிருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான பெருங்கற்காலப் பண்பாடு தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகவே இங்கே வந்தடைந்திருக்கிறது. கந்தரோடையில் இப்பண்பாட்டின் ஆரம்பகாலம் கி.மு. 1350 ஆண்டுக் காலமாக கதிரியக்ககரிம ஆய்வுகள் காட்டுகிறபடியினால் கி.மு. இரண்டாயிரத்தாண்டின் மத்தியிலிருந்தே யாழ்ப்பாண – தென்னிந்திய கடல்சார் தொடர்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களைத் தவிர, அக்காலத்தைய தொடர்புகளுக்கான மற்றைய ஆதாரங்கள் அருகியே காணப்படுகின்றன. கந்தரோடையில் புராதன வட இந்திய, தமிழக நாணயங்கள் காணப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்பாட்டிலிருந்த சிவப்பு வர்ணம் பூசப்பட்ட வெள்ளைக் கலன்கள் (White slipped with red paint) கி.பி. 600க்கும் – 1100க்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்க உரியவை. யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்ட சோழர்கால மட்பாண்டங்களும், யாழ்ப்பாணக் கோட்டையினுள் ஒரு தூணில் காணப்படும் சோழர்கால தமிழ்க் கல்வெட்டும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. சோழர்களின் இலங்கைப் படையெடுப்பு கி.பி. 944 ஆம் ஆண்டில் நடைபெற்றது. கி.பி. 981 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணம் அவர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக பாராந்தகச் சோழ மன்னன் ஒரு நாணயத்தையே வெளியிட்டிருந்தான் (புஷ்பரட்ணம், ப. 2021).

இதைத் தொடர்ந்து கி.பி. 1003 ஆம் ஆண்டில் சோழர்களின் மற்றொரு படையெடுப்பு நடைபெற்றது. சோழப் படைகள் யாழ்ப்பாணத்திலிருந்து பொலன்நறுவைக்கு படை நடத்திச் சென்றன. பொலன்நறுவையைக் கைப்பற்றிய சோழர்கள் அதற்கு ஜனநாதபுரம் எனப் பெயரிட்டார்கள். கி.பி. 1017 இல் பாண்டிய மன்னனிடமிருந்து ஐந்தாம் மகிந்தன் கைப்பற்றிய மணிமுடியையும், அரசுரிமைச் சின்னங்களையும் மீட்டெடுத்தார்கள். மகிந்தன் ரோஹணைக்கு இடம் பெயர்ந்து சென்றான். சோழர் ஆட்சி கி.பி. 1070 வரை நீடித்தது. 

யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்த அயல்நாட்டு நாணயங்களில் சோழ நாணயங்களே எண்ணிக்கையில் அதிகமாகும். சோழ நாணயங்களுடன் சோழரைத் தொடர்ந்து வந்த சேர, பாண்டிய நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு களஆய்விலும், அகழ்வாய்விலும் கண்டெடுக்கப்பட்ட சோழர்கால மட்பாண்டங்கள் தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களில் கிடைத்த சோழர்கால மட்பாண்டங்களை நினைவுபடுத்துவதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் கூறியுள்ளார் (புஷ்பரட்ணம், ப. 2023: 40).

சோழர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருந்த காலத்தில் பல கோயில் கல்வெட்டு வாசகங்களை விட்டுச்சென்றிருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன. குவேரோஸ் பாதிரியாரின் பதிவுகளின்படி 500க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையினுள் காணப்படும் ஒரு இந்து ஆலய கற்தூணில் ஒரு சோழர்காலக் கல்வெட்டுக் காணப்படுகிறது.

உரோமாபுரி வர்த்தகம்: கி.மு.300 – கி.பி.450

பண்டைக்கால யாழ்ப்பாணம் மேற்கொண்ட அதிமிக வருவாய்கொண்ட வர்த்தகம், கி.மு. 300 ஆம் ஆண்டிற்கும், கி.பி. 450 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் உரோமாபுரியுடன் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகளாகும். கடல்வழிப் பட்டுப்பாதையில் யாழ்ப்பாணத்தின் அமைவிடமும், இங்கு இயற்கையாகக் கிடைத்த வணிகப் பொருட்களும், புராதன காலம் தொட்டு அயல்நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டிற்குரிய பெரிப்பிளஸ் என்னும் நூலில் உரோம வணிகர்கள் இலங்கைக்கு வராமலே தென்னிந்தியத் துறைமுகங்களிலிருந்து இலங்கைப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், கி.மு. 300 ஆம் ஆண்டிற்குரிய உரோம ‘ரௌலெற்றெட்’ மட்பாண்டங்களும், ‘அம்போரா’ சாடிகளும், ‘அரிற்றைன்’ மட்கலன்களும் சிறிய அகழ்வுக் குழிகளிலிருந்தே கணிசமான அளவில் கந்தரோடையிலும், யாழ்ப்பாணத் துறையிலும் (யாழ்ப்பாணக் கோட்டை), குறைந்த அளவில் பூநகரியிலும் காணப்படுவது உரோமாபுரிக்கும், யாழ்ப்பாணத் துறைகளுக்கும் கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்தே நேரடியான வணிக உறவு இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. 

கி.மு. 1000 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்தே பீனீசியர்கள் ஏலம், கறுவா ஆகிய வாசனைப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மத்தியதரை, இஸ்ரேல் கரையோரப் பகுதிகளிலிருந்து (பண்டைய பீனீசியா) அவர்களின் கப்பல்களில் ஆபிரிக்காவைச் சுற்றி 3,000 மைல்கள் பிரயாணம் செய்து இலங்கை, தென்னிந்தியத் துறைகளை வந்தடைந்திருக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியலாளர்கள் 3,000 ஆண்டுகள் வயதான 27 மட்கலச் சாடிகளைக் கண்டெடுத்தார்கள். அவற்றில் 10 சாடிகளில் கறுவாநீர் (Cinnamaldehyde) காணப்பட்டது. இஸ்ரேலுக்குச் சமீபமாக கறுவா கிடைப்பது இலங்கையில்தான் (Live Science, 20 august 2013).

பீனீசியர்களைத் தொடர்ந்து கிரேக்கர்களும், பின்னர் உரோமர்களும் செங்கடல் வழியாக வந்து பின்னர் அரேபியக் கடலோரமாக இந்திய, இலங்கைத் துறைகளுக்கு வந்து போனார்கள். இலங்கையிலிருந்து கிடைக்கும் ஏலம், கறுவா, மிளகு ஆகிய வாசனைப் பொருட்களுக்கும், இரத்தினம், யானை, யானைத் தந்தம் ஆகிய பொருட்களுக்கும் உரோமாபுரியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. அதற்குப் பதிலாக உணவுப் பொருட்கள், பலதரப்பட்ட மட்பாண்டங்கள், மது வகைகள், தங்கம் மற்றும் உலோகப் பொருட்கள் என்பன இறக்குமதியாயின. முதலாம் நூற்றாண்டில் ஹிப்பலஸ் பருவக்காற்றின் உதவியைக் கொண்டு செங்கடல் வாயிலிருந்து தமிழகத்தை அடையும் நேர்வழியைக் கண்டுபிடித்த பின்னர் உரோம வர்த்தகம் பன்மடங்காகப் பெருகியது. 

‘ரௌலெற்ரெட்’ மட்பாண்டம்

ஒரு வகையான உலோகத் தோற்றத்துடன் அடிப்புறம் தட்டையாகவும், உள்பக்கத்தில் பளபளப்பான கறுப்பு நிறத்துடனும், உள்ளே சுற்றிவர வரிசையாக வளையங்களாக வரும் அழகணிகளாலும் பதிவு செய்யப்பட்ட ‘ரௌலெற்ரெட்’ மட்பாண்டங்கள் கி.மு. முதலாம் ஆயிரத்தாண்டின் பிற்பாதியின் இந்திய உபகண்ட கிரேக்க – உரோம வர்த்தகத்தின் தனித்துவமான புனித அடையாளமாகும் (Iconic marker of Greco-Roman trade). 

ஆரம்பகால கிரேக்க கால ‘ரௌலெற்ரெட்’ மட்பாண்டங்கள் கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலத்திலிருந்தும், அதேவகையான உரோம மட்பாண்டங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. 1945 ஆம் ஆண்டில் அரிக்கமேடு ஆய்வுகளில் இவற்றைக்கண்ட மோட்டிமர் வீலர் இவை கிரேக்க – உரோம தயாரிப்புகள் என இனம் கண்டு இவற்றில் கண்ட ‘ரௌலெற்’ கோலங்களைக் கொண்டு இவற்றிற்கு ‘ரௌலெற்ரெட்’ மட்பாண்டங்கள் எனப் பெயரிட்டார் (Wheeler et al. 1946).

அரிக்கமேட்டில் இப்பாண்டங்களை மீளாய்வு செய்த விமலா பெக்லி, இவை எல்லாமே உரோமாபுரியிலிருந்து வரவில்லை என்றும், இவற்றில் சில அரிக்கமேட்டிலேயே ‘மத்தியதரைக் கலைப்பண்பில்’ உருவாக்கப்பட்டு விநியோகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார் (Begley, V. 1988, 1996).   

ஒம்பலஸ் கலன்கள்  (Omphalos Ware)

உரோம ஒம்பலஸ் மட்கலன்கள் மண்ணிறச் சிவப்பிலும், கறுப்பு நிறத்திலும் வழுவழுப்பான தொட்டுணர்வு கொண்ட தட்டையான கலன்கள். இந்த மட்பாண்டங்கள் உரோமாபுரியில் கோல் (Gaul) என்ற இடத்தில் பெருந்தொகையில் தயாரிக்கப்பட்டு உரோம சாம்ராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. உரோம இராணுவ வீரர்கள் தங்கள் உணவுகளை இந்த ஒம்பலஸ் தட்டுகளிலேயே அருந்தினார்கள். யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுத்த ஒம்பலஸ் கலன்கள் கி.மு. 200 ஆம் ஆண்டிற்கும் – கி.பி.100 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டனவாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

அறிற்றைன் கலன்கள் (Arretine Ware)

அறிற்றைன் கலன்கள் சிவப்பு நிறம் பூசப்பட்ட உரோம மட்கலன்கள். இவ்வகையான மட்கலன்களின் தயாரிப்பு அறிற்றியம் எனப்பட்ட உரோம நகரில் ஆரம்பிக்கப்பட்டபடியினால் இவை அறிற்றைன் கலன்கள் என அழைக்கப்படுகின்றன. இக்கலன்களின் தயாரிப்பு கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்த அறிற்றைன் கல ஓடுகள் கி.மு. 100 ஆம் ஆண்டுக்கும் – கி.பி. 100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.

அம்போரா சாடிகள்

அம்போரா சாடிகள் கி.மு. ஆயிரத்தாண்டின் ஆரம்பத்திலிருந்தே கிரேக்க வர்த்தகர்களால் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறன. இந்தச் சாடிகள் எண்ணெய்த் திரவங்களை, முக்கியமாக திராட்சை மதுவை, அனுப்புவதற்கு, முதலில் கிரேக்கர்களாலும், பின்னர் உரோமர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது ‘செரமிக்’ எனப்படும் மெழுகு வகை மட்பாண்டத்தினால் செய்யப்பட்டது. இதில் இரு வகையான சாடிகள் உள்ளன. கழுத்து நீண்ட அம்போரா சாடி (Neck Amphora) அதன் பெயருக்கேற்ப நீண்ட கழுத்தையும், கழுத்தின் கீழ்ப்பகுதி உடலுடன் தொடுக்கும் இடத்தில் ஒரு கோணத்தையும், அடிப்பகுதி கூராகவும் அமைந்திருக்கும். இம்மாதிரியான சாடிகள் கப்பல்களிலுள்ள பலகைச் சதுரங்களுக்கிடையே அடிப்பகுதிகளை வைத்து அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்டவை. சாதாரண வகை அம்போரா சாடிகள் சிறிய கழுத்தையும், முட்டை வடிவான உடற்பகுதியையும் கொண்டவை.  யாழ்ப்பாண அகழ்வுகளில் இந்த இரு வகையான அம்போரா சாடிகளின் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. எதிர்பாராதவிதமாக பல அம்போரா சாடிகள் சிறிய உடைவுகளோடு முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன (Thiagarajah, S. 2022: 33). இவற்றின் காலத்தை கி.மு. 300 ஆம் ஆண்டிற்கும் – கி.பி. 100 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டனவாக பேராசிரியர் கொனிங்ஹாம் கணித்திருக்கிறார்.

உரோம நாணயங்கள்

யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் அகழப்பெற்ற மூன்று முக்கியமான ஆய்வுக்குழிகளிலிருந்தும் உரோம நாணயங்கள் பெறப்பெற்றிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணக் கோட்டை, பூநகரி ஆகிய மையங்களிலிருந்து கி.மு. 100 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 450 வரையிலான தங்க, வெள்ளி, வெண்கல, செப்பு உரோம நாணயங்கள், பல வகையான உரோம ரௌலெற்றெட் மட்கலன்கள், அம்போரா சாடிகள், அறிற்றைன் கலன்களுடன் பெறப்பட்டிருக்கின்றன. 

கந்தரோடை ஓர் உள்நாட்டு மையமாக இருந்த போதிலும் அங்கே அகழ்வாய்வு செய்யும் அனைவருமே சிறிய குழிகளிலிருந்தே கணிசமான அளவு உரோம நாணயங்களைப் பெற்றுச் செல்கிறார்கள். 1919 ஆம் ஆண்டில் ஒரு மாத மேலாய்வில் மட்டும் 150 உரோம நாணயங்களை பெற்றதாக போல் பீரில் தனது தொல்லியல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் (Pieris, P.E. 1919: p. 57). இதிலிருந்து யாழ்ப்பாண – உரோம வர்த்தகத்தின் அனுகூலத்தையும், ஆதாயத்தையும், ஆக்கவளச் செழிப்பையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்படும் உரோம நாணயங்களில் மிக அதிகமானவை பெரிய கொன்ஸ்ரன்ரைன் (கி.பி. 306-337), இரண்டாம் வலென்ரைன் (கி.பி. 371-392), ஆர்க்கேடியஸ் (கி.பி. 394-408), இரண்டாம் தியொடோசியஸ் (கி.பி. 401-450) ஆகிய உரோம அரசர்கள் வெளியிட்ட நாணயங்களாகும் (Thiagarajah, S. 2016: 204-206).

சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வரணி என்ற உள்நாட்டுக் கிராமத்தில் ஏதோ தேவைக்காக நிலத்தை அகழ நேரிட்டபோது ஒரு மட்பானையில் சேமக்குவையாக தங்க, வெள்ளி உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயங்களின் உலோகப் பெறுமதிக்காக அவை சேகரிக்கப்பட்டிருக்கின்றன (Krishnarajah, S. 1983). 2011 ஆம் ஆண்டில் இலங்கை அரச தொல்லியல் துறையினர் யாழ்ப்பாணக் கோட்டையில் செய்த அகழ்வாய்வில் ஒரு உரோம நாணய சேமக்குவையைக் கண்டெடுத்து, அது கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அகழ்வாய்வு அறிக்கை இதுவரை வெளியிடப்படாதபடியினால் இது பற்றிய மேலதிக விவரமேதும் தெரியவில்லை. 

பாரஸீக வர்த்தகம்: கி.மு.200 – கி.பி.1000

பாரஸீகத்திலிருந்த (பண்டைய ஈரான்) சஸானியன் அரசகுலத்தினர் கி.பி. 224 ஆம் ஆண்டிலிருந்து, கி.பி. 651 ஆம் ஆண்டுக்காலம் வரை – அரேபியர்கள் படையெடுத்து வந்து கி.பி. 637-651 ஆண்டுகளில் அந்த அரச குலத்தினரை அழித்தொழிக்கும் வரை சஸானியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் தெற்கு ஈரானில் தயாரிக்கப்பட்டு எற்றுமதியான பளபளப்பான மட்பாண்டங்கள் ‘சஸானிய-இஸ்லாமிய’ கலன்கள் என அழைக்கப்படுகின்றன.  இவற்றில் பளபளப்பான நீலநிற சாடிகள் (Glazed ceramic jars) மத்தியகிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளிலும், யப்பானிலும் பிரபலமாக இருந்தது. மேற்காசிய வர்த்தகத்தில் யப்பான் ஒரு முக்கிய பங்காளியாக இருந்ததை இது எடுத்துக்காட்டுகிறது (Thiagarajah, S. 2022: 39). யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த ‘சஸானிய-இஸ்லாமிய’ கலன்கள் கி.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 800 ஆம் ஆண்டுவரை கணிப்பிடப்படுகிறது. 

பாரஸீக கதிரொளிக் கலன்கள் (Lustre Ware) புது உலோகப் பளிங்கியல் மெருகு தரக்கூடிய பீங்கான் வகைக் கலன்கள். இவை முதலில் மொசப்பத்தெமிய நாடுகளில் ஆரம்பமாகி பின்னர் ஈரானில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் இவை கி.பி. 800 – கி.பி. 1000 ஆண்டுக் காலத்திற்குக் கணிப்பிடப்படுகின்றன.  

அரேபிய வர்த்தகம்: கி.பி. 400 – கி.பி. 1200

யாழ்ப்பாணத் துறையுடனான அரேபிய வர்த்தகம் கி.பி. 400 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1200 ஆம் ஆண்டுக்காலம் வரை நீடித்திருக்கிறது. முகம்மது நபியின் மறைவிற்குப் பின்னர் (கி.பி. 632), அரேபியாவில் நான்கு இஸ்லாமிய அரசியல் பணிமனைகள் (Caliphates) பதவி வகித்திருக்கின்றன. அவற்றுள் உம்மாயாத் இஸ்லாமிய அரசியல் துறை இரண்டாவதாகும். இக்காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மங்கல் மஞ்சள் கலன்கள் (Buff Ware) பிரபலமான அரேபிய மட்கலன்களாகும். யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்ட மங்கல் மஞ்சள் கலன்கள் கி.பி. 400 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 1000 ஆண்டிற்கும் இடைப்பட்டனவாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன.

தகரப் பளிங்கு மட்பாண்டம் (Tin-Glazed Pottery) என்பது ஈயம் பூசப்பட்டு மினுமினுக்க வைத்த மட்பாண்டம். இதில் சேர்க்கப்பட்ட தகர ஒக்ஸைட் (Tin oxide) இதற்கு மினுமினுப்பான வெண்ணிறத்தைக் கொடுக்கிறது. இந்த வெண்ணிறப் பின்னணியில் பல வர்ண அலங்காரங்கள் பூசப்படுகின்றன. யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் இப்பாண்டத்தின் ஒரு துண்டு மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் காலம் கி.பி. 800-1000 ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர அகழ்வுகளில் கண்டெடுத்த மத்திய காலத்திற்குரிய இஸ்லாமிய நாணயங்களும் மத்திய காலத்தில் தென்னாசிய நாடுகளில் பிரபலமாக இருந்த அரேபிய வர்த்தகத்தை உறுதி செய்கின்றன.

சீன வர்த்தகம்: கி.பி.800 – கி.பி.1600

யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்குமிடையிலான வர்த்தகம் கி.பி. 800 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1600 ஆம் ஆண்டுவரை நடைபெற்றிருப்பதாக அகழ்வுகளில் கிடைத்த சான்றாதாரங்கள் அறியத் தருகின்றன. அகழ்வுகளில் கண்ட முக்கியமாக மட்பாண்டங்களும், பீங்கான்களும் இவை.

1. சாங்ஷா வர்ணம் பூசிய கற்கலன்கள்

சாங்ஷா என்பது பண்டைய சீனாவில் வர்ணம் பூசப்பட்ட கற்கலன்கள் தயாரிப்பதற்குப் புகழ் பெற்ற நகரம். தாங் அரச வம்ச காலத்தில் (T’ang dynasty) இம்மாதிரியான கலன்கள் பிரபலமாக இருந்தன (Medley, M. 1981).  யாழ்ப்பாண அகழ்வில் கண்ட இம்மாதிரியான கற்கலன்களின் கலவோடுகள் கி.பி. 800-1000 ஆண்டுகளுக்கு உரியவையாகும்.

2. ஸிங் டிங் வெண் கலன்கள்

தாங் அரச வம்ச காலத்தில் சீனாவில் ஹேபீ என்ற மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வெண்கலன்கள், கண்ணாடி போன்ற பளிங்குப் பூச்சுக்கொண்ட வெண்ணிற மட்பாண்டங்கள். மிக அதிகமான வெப்பத்தில் சூளையில் சுடப்பட்ட இக்கலன்கள் பீங்கான்கள் போன்று காட்சி தரும். ஸோங் அரச வம்ச ((Song dynasty)  காலத்தில் இக்கலன்கள் மிகப் பிரபலமாக இருந்தன (Medley, M. 1981). யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்ட இக்கலவோடுகள் கி.பி. 800-1000 ஆண்டுகளுக்கு உரியதாகக் கணிக்கப்படுகிறது. 

3. யூ-பச்சைக் கலன்கள் 

யூ-பச்சைக் கலன்கள்  (Yue Green ware) ‘செலாடன்’ மெருகெற்றப்பட்ட சீனக் கற்கலங்களாகும் (Celadon glazed stoneware). இவை ‘சீனப்பச்சைப் பீங்கான்’ என இக்காலத்தைய சில எழுத்தாளர்களால் வர்ணிக்கப்பட்ட போதிலும், இந்தக் கலன்கள் பீங்கான் (Porcelain) அல்ல. உயர்தர சீன மட்பாண்டங்களில் (Chinese ceramics) இவை மிகவும் பிரபலமானதும், வெற்றி கண்டதும், செல்வாக்குமிக்கதும் ஆகும் (Medley, M. 1981). யாழ்ப்பாண  யூ-பச்சைக் கலன்கள் கி.பி. 800-1000 ஆண்டுகளுக்கு உரியவை எனக் கணிக்கப்படுகிறது. 

4. பச்சைநிறம் சிதறடித்த வெண் பீங்கான் 

உட்பக்கம் பச்சைநிறம் சிதறலாக அடிக்கப்பட்டது போலத் தோன்றும் இவ்வெண் சீனப் பீங்கான் (Green-splashed White Ware) மத்திய காலத்தில் பிரபலமாக இருந்த சீனக்கலன். யாழ்ப்பாண அகழ்வில் கண்ட கலவோடு கி.பி. 800-1600 ஆண்டுக் காலத்திற்கு உரியது. 

5. சீன மிங் பீங்கான்

சீனாவின் ‘மிங்’ அரச பரம்பரை (கி.பி. 1388-1644) காலத்தைய உயர்தர சீன மட்பாண்டம். நீல நிறத்திலும், வெண் நிறத்திலும் தயாரிக்கப்பட்ட பீங்கான் வகைப் பாண்டம். இவற்றைப் பிரதி செய்து யப்பான், பிரித்தானிய நாடுகள் இம்மாதிரி கலன்களைத் தயாரித்தன. யாழ்ப்பாண மிங் பீங்கான் கி.பி. 1300-1600 ஆண்டுக் காலங்களுக்கு உரியதாகக் கணிக்கப்பெற்றிருக்கிறது.

சீன நாணயங்கள்

பண்டைய சீன நாணயங்கள் செம்பு, வெண்கலம், பித்தளை ஆகிய சாதாரண உலோகங்களிலும், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிக்க உலோகங்களிலும் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் ஒரு நூல் கயிற்றில் கோர்த்து வைப்பதற்கு வசதியாக நடுவில் சதுர வடிவானதொரு துளையிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கி.மு. 201-206 ஆண்டுக் காலத்தில் சீனா முழுவதையும் முதன்முதலில் ஒன்றாக இணைத்து ஒரே நாடாக ஆட்சிபுரிய ஆரம்பித்த குவின் அரச பரம்பரையினர், நாடு முழுவதற்கும் தர அளவுப்படுத்தப்பட்ட, வட்ட வடிவான நாணயங்களை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின்னர் வந்த அரசர்கள் வெவ்வேறு உலோக வகைகளினாலான வட்ட வடிவ நாணயங்களைத் தொடர்ந்து உபயோகித்தார்கள். யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்த சீன நாணயங்கள் கி.பி. 800 ஆம் ஆண்டிற்கும், கி.பி. 1600 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவையாகும்.

சமயம் சார்ந்த தொல்பொருட்கள்

யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகளும், அகழ்வாய்வுகளும் அப்பிரதேசத்தில் வாழ்ந்த பண்டைய மக்கள் பேணிய சமயம் சார்ந்த நெறிகளை அறியத் தருகின்றன. கந்தரோடை அகழ்வுகளில் வெவ்வேறு வகைச் சமயநெறிகளைக் கொண்ட ஒரு கலப்பான சமூகத்தினர் கடைப்பிடித்த சைவ, பௌத்த சமய நெறிகளைப் போல அல்லாது ஐரோப்பிய படையெடுப்புக்கு முன்னர், யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதி மக்கள் பாரம்பரிய நாட்டார் தெய்வங்களையும், இந்துமத தெய்வ வழிபாடுகளையும்,  சம்பிரதாயங்களையும் தழுவி வந்திருப்பதைக் காண முடிகிறது. இதுவரை மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பௌத்த மத சின்னங்கள் எதுவும் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. 

யாழ்ப்பாணக் கோட்டைத் தாய்த்தெய்வம்

யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த சுடுமண் சிற்பப் பட்டயம், நடுவில் நாட்டுத் தெய்வமான (Folk deity) ஒரு பெண் தெய்வத்தையும் – தாய்த்தெய்வம் – இரு பக்கமும் முழங்காலில் நிற்கும் ஆணும், பெண்ணுமான தம்பதியினரையும் காட்டுகிறது. இந்தப் பட்டயம் ஒரு உரு அச்சில் (Mould) செய்யப்பட்டிருக்கிறது. களி மண்ணைக் கொண்டு உரு அச்சில் செய்யப்பட்டு, பின்னர் சூளையில் சுடவைத்துக் கெட்டியாக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரிச் செய்யப்பட்ட பல சுடுமண் பட்டயங்கள் வீடுகளில் வைத்து வணங்கப்பட்டிருக்கலாம். 

நடுவிலிருக்கும் பெண்தெய்வம் கழுத்தில் மாலையணிந்திருக்கிறது. இரு புறமும் முழங்காலில் நிற்கும் ஆண்-பெண் உருவங்கள், அத்தெய்வத்தின் வழிபாட்டாளர்களாக – பக்தர்களாக இருக்கலாம். இந்தப் பட்டயம் மேலிருந்து கீழாக 6.3 செ.மீ. உயரமும், கிடைநிலையில் 6.6 செ.மீ அகலமும் கொண்டது. 

பட்டயத்தின் அடிப்பகுதி தட்டையாக உள்ளது; அரைவட்டமாக வளைந்த ஒரு மேலுறையினுள் உருவங்கள் காணப்படுகின்றன. வட்டவடிவான, அமைப்பற்ற முகங்கள் தென் ஆசிய நாட்டார் சமயக் கலை வடிவங்களை நினைவுபடுத்துகின்றன. அடியிலிருக்கும் வரிப்பள்ளம் இந்தப் பட்டயம் கீழே ஒரு சட்டத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினரின் பாதுகாப்பிலிருந்த இத் தாய்த்தெய்வப் பட்டயம் இலங்கைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் பெறப்பட்டதாக அறியப்படுகிறது.

யாழ்ப்பாணக் கோட்டை முருகனின் வேல்

யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் பேராசிரியர் புஷ்பரட்ணத்தின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் வெளிக்கொணரப்பட்ட ஒரு வெண்கல வேல் அவ்விடத்தில் முருக வழிபாடு பரவியிருந்ததை எடுத்துரைக்கும் முக்கியமான ஒரு சின்னம். இந்துமத உருவ வழிபாட்டியலில் (Hindu iconography), வேலின் வழிபாடு முருகனின் வழிபாட்டிற்குச் சமதையானது. இந்த வேலின் அமைப்பும், வேலைத்திறனும், பிந்திய – மத்தியகாலத்திற்கு (Late-medieval period) உரியதாகக் கொள்ளப்படுகின்றன. 

இந்துக் கோயில்களின் அழிபாடுகள் 

யாழ்ப்பாணக் கோட்டையினுள் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் இந்துக் கோயில்களின் செதுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் மற்றும் கருங்கல் தூண்களையும், தெய்வச் சிலைகள் வைப்பதற்கான பீடங்களையும் எடுத்துக்காட்டின. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை அழித்த போர்த்துக்கேயர் அங்கிருந்த தூண்களையும், செதுக்கப்பட்ட கற்களையும் எடுத்துவந்து கோட்டைக்குள் தங்களது மாதா கோயிலைக் கட்ட உபயோகித்திருக்கிறார்கள்.  

நகரமயமாக்கம்

இந்தியத் துணைக்கண்டத்தில் நகரமயமாக்கமும், அதற்கான வரலாற்றுப் பின்னணியும் சமீபகால அகழ்வாய்வுகளின் பின்னர் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை வட இந்தியாவின் நகரமயமாக்கம் கி.மு. 500 எனவும், தமிழகத்தில் இதன் தோற்றகாலம் கி.மு. 300 ஆண்டுக்காலம் எனவும் கூறப்பட்டது. ஆனால் சமீப காலத்தைய ஆதிச்ச நல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், மயிலாடும்பாறை, கீழடி, சிவகளை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும், அவற்றின் அறிவியல் ரீதியான காலக் கணிப்புகளும், தமிழக மையங்களின் நகரமயமாக்க காலத்தையும் கி.மு. 500 ஆம் ஆண்டு காலத்திற்கு எடுத்துச் செல்கின்றன. வரலாற்றுக் காலம் என்பது வாசிக்கக்கூடிய எழுத்துகளுடன் ஆரம்பமாகிறது. அதன் அடிப்படையில் வட இந்தியாவில் வாசிக்கக்கூடிய பிராகிருத மொழி எழுத்து வடிவங்கள் கி.மு. 300 ஆண்டு காலத்தில்தான் ஆரம்பமாகின்றன. அதற்கு முற்பட்ட எழுத்துகள் பிராகிருதத்திலேயோ, சமஸ்கிருதத்திலேயோ கிடையாது. தமிழகத்தின் பல மையங்களில் கி.மு. 600-500 ஆம் ஆண்டுக்காலங்களில் வாசிக்கக்கூடிய தமிழ்ப்பிராமி எழுத்துகள் உபயோகத்திற்கு வந்துவிட்டன. இலங்கையில் அநுராதபுரத்தில் கி.மு. 700-500 ஆம் ஆண்டிற்குரிய தமிழ் எழுத்துப் பதித்த கலவோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் சில மையங்களின் விவசாய நடவடிக்கைகள் கி.மு. 3000 ஆண்டுக் காலத்தில் ஆரம்பமாகி, கி.மு. 2500 ஆம் ஆண்டுக் காலத்தில் பல மையங்களில் பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக இரும்பின் உபயோகம் பரவலாக உபயோகத்திற்கு வந்தது தமிழகத்தில்தான். சமீபகால அகழாய்வுகள் இரும்பின் தயாரிப்பும், உபயோகமும் சிவகளையில் கி.மு. 3300 ஆண்டுக் காலத்திலேயும், ஆதிச்சநல்லூரில் கி.மு. 2800 ஆண்டுக் காலத்திலேயும் ஆரம்பித்துவிட்டதை எடுத்துக்காட்டுகின்றன (ராஜன், கா., சிவானந்தம், இரா. 2025). இரும்பின் பயன்பாடு தன்னிறைவு பெற்ற வேளாண்மை உற்பத்தியை மிகை உற்பத்திப் பொருளாக மாற்றியதன் விளைவாக சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும், தொடர்ந்த சமுதாய வளர்ச்சிக்கும், நகரமயமாக்கலுக்கும் வழியமைத்தது.  

கி.மு. 1500 ஆம் ஆண்டுக்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் ஆரம்பமாகி, தமிழ்நாட்டில் பெருகிப் பரவிய பெருங்கற்காலப் பண்பாடு கி.மு. 1350 ஆம் ஆண்டுக் காலத்தில் கந்தரோடையை வந்தடைந்துவிட்டதை கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்புகள் காட்டுவது ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கந்தரோடையின் நகரமயமாக்கம் கி.மு. 500 ஆம் ஆண்டுக் காலத்தில் நடைபெற்றிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேச அகழ்வாய்வுகளில் கிடைத்த பண்டைய நாணயங்களும், பலவகையான மட்பாண்டங்களும் கி.மு. 1000 ஆண்டுக்காலத்திலிருந்தே தமிழகத்துடனான தொடர்புகளுக்கும் (கறுப்பு-சிவப்பு மட்பாண்டம்), உள்நாட்டு வர்த்தகங்களுக்கும், கி.மு. 500 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து வட இந்தியாவுடனும், அதைத் தொடர்ந்து உரோம, அரேபிய, பாரஸீக, சீன நாடுகளுடன் நெடுங்கடல் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்திருப்பதற்குச் சான்றாக அமைகின்றன. கந்தரோடை நகர நாகரிகத்தின் முக்கிய துறைமுக நகரமாக இயங்கி வந்திருப்பது யாழ்ப்பாணப் பட்டினம். இன்று கிடைக்கும் ஆதாரங்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே கந்தரோடையைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பட்டினமும் நகரமயமாக்கப்பட்டுவிட்டதை எடுத்துக்காட்டுகின்றன.

முடிவாக….

சமீபகால யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளும், அங்கே கண்டெடுத்த தொல்பொருட்களும், அவற்றின் அறிவியல் ரீதியான பகுப்பாய்வுகளும் கீழ்க்காணும் உண்மைகளை நிறுவியிருக்கின்றன.

1. பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்களின் குடியிருப்புகள் இந்த நிலப்பகுதியில் கி.மு.1000 ஆண்டுக் காலத்திலிருந்து நிகழ்ந்திருக்கிறது.

2. இந்தப் பகுதி கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலத்தில் நகரமயமாக்கப்பட்டு, அக்காலத்திலிருந்து அடுத்த 2000 ஆண்டுகளாக ஒரு துறைமுக நகரமாகச் செயற்பட்டு வந்திருக்கிறது.

3. கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலத்திலிருந்து இது ஒரு வர்த்தக மையமாக – வர்த்தகப் பண்ணையாக, முதலில் உள்ளூர் மற்றும் இந்திய நகரங்களுடனும், அடுத்து கிரேக்க – உரோமப் பேரரசுகளுடனும், அரேபிய, பாரசீக, சீன அரசுகளுடனும், தூர கிழக்கு நாடுகளுடனும் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. 

4. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டின் ஐரோப்பியப் படையெடுப்பு வரை யாழ்ப்பாணப் பட்டினம் ஒரு முக்கியத்துவம்மிக்க துறைமுக நகரமாக இயங்கி வந்திருக்கிறது.   

2017-18 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளின் முடிவில், 28 ஜுலை 2018 ஆம் திகதியன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பத்திரிகை நிருபர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், இந்த அகழ்வாய்விற்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் றொபின் கொனிங்ஹாம் கூறிய வார்த்தைகள் இவை (தமிழாக்கம் செய்யப்பட்டது): “யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றை ஒருநாள் பொழுதைக்கொண்டு கூறவேண்டுமானால், காலனியாதிக்க காலம் நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் முன்னர்தான் ஆரம்பமாகிறது. அதற்கு முற்பட்ட நேரங்கள் அனைத்தும் காலானித் தொடர்பிற்கு முற்பட்ட யாழ்ப்பாண வரலாற்றுக் காலமாகும். யாழ்ப்பாணக் கோட்டை (அதிருக்கும் பிரதேசம்) இந்து மாகடல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காலத்தை இனங்கண்டு கொள்ளும் வரலாற்று நடுவம். முக்கியமாகக் குறிப்பிடத்தக்க வகையில், யாழ்ப்பாணம் இந்தோ – உரோம வர்த்தகத்தின் மையத்திலிருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதி முக்கியமாக கி.மு. 200 ஆம் ஆண்டிற்கும் – கி.பி.200 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்துசமுத்திர வர்த்தகத்தின் நடுமையம் யாழ்ப்பாணம் ஆகும்.”

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்

  1. Abeyasinghe, Tikiri (1986): Jaffna Under the Portuguese, Lake House Investments, Colombo.
  2. Adams, Douglas Q. (1997): Encyclopaedia of Indo-European Culture, Taylor & Francis, London.
  3. Begley, Vimala (1973): ‘Proto-Historic Material from Sri Lanka and Indian Contacts’ in Kennedy, K.A.R. & Possehl, G.L. (Eds.): Ecological Backgrounds of South Asian Prehistory, Occasional Papers and Thesis, Cornell University.
  4. Begley, Vimala (1983): ‘Arikamedu Reconsidered’, American Journal of Archaeology, 87: 461-481.
  5. Begley, Vimala (1988): ‘Rouletted Ware at Arikamedu: A New Approach’, American Journal of Archaeology, 92: 427-440.
  6. Bell, H.C.P. (1904): Report on the Kegalle District of the Province of Sabragamuwa, Ceylon Sessional Papers, Colombo: George J.A. Skeen, Government Printer.
  7. Dagens, Bruno (Ed. & Trsl.) (2000): Myanmatham, Motilal Banarsidass, New Delhi.
  8. Davis, C.E., Coningham, R.A.E., Gunawardhana, P., Pushparatnam, P., Schmidt, A., Manuel, M. (2017): Report of the First Season of Field Activities at Jaffna Fort: 25th June-20th July 2017, Report for Central Cultural Fund, Govt. of Sri Lanka.
  9. Davis, Christopher; Coningham, Robin; Gunawardhana, Prishanta; Pushparatnam, Paramu; Schmidt, Armin; Manuel, Mark (2018): ‘Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of the Indian Ocean Trade’ in Essays in Buddhism and Buddhist Monastic Archaeology, Buddha Rashmi Vesak Volume 2018, Sri Lanka Central Cultural Fund.
  10. Davis, C.E., Coningham, R.A.E., Gunawardhana, P., Pushparatnam, P., Schmidt, A. & Manuel, M.J. (2019): ‘The Antiquity of Jaffna Fort: New Evidence from Post-disaster Archaeological Investigations in Northern Sri Lanka’, Antiquity, 93 (368).
  11. De Silva, K.M. (2005): A History of Sri Lanka, Vijitha Yapa Publications (Sri Lanka Edition), New Delhi.
  12. De Silva, R. (1957): ‘The Kruys Church in Jaffna’ in Historic Buildings of the Dutch Reformed Church, Colombo.
  13. De Queyroz, Fernao (1992): The Temporal and Spiritual Conquest of Ceylon, Vol. I, Book 1-2; Vol. II, Book 3-4; Vol. III, Book 5-6, Asian Educational Services, New Delhi.
  14. Girā-Sandēsa (1924): Edited by T. Sugatapala, Alutgama.
  15. Gunasingam, Murugar (2008): Tamils in Sri Lanka, MV Publications, Sydney.
  16. Husain, Mahdi: The Rehla of Ibn Battuta (Transl. Mahdi Husain), Oriental Institute, Baroda.
  17. Indrapala, K. (1998): ‘A Brief History of the City of Jaffna’ in North-East Sri Lanka – A Compendium, North-East Provincial Council, Sri Lanka.
  18. Kõkila-Sandēsa (1906): Edited by P.S. Perera, Colombo.
  19. Kruys Kerk, The (1967): The Kruys Kerk of Jaffnapatam, Christian Union, Jaffna.
  20. Kunarasa, K. (1995): A History of Jaffna Fort, Kamalam Pathippakam, Jaffna.
  21. Mahavamsa (1912, Reprint 1993): Transl. Wilhelm Geiger, Asian Educational Services, New Delhi.
  22. Medley, Margaret (1981): T’ang Pottery and Porcelain, Faber & Faber, London.
  23. Nelson, W.A. (1984): The Dutch Forts of Sri Lanka: The Military Monuments of Ceylon, Canongate Books, Edinburgh.
  24. Nilakanta Sastri, K.A. (2009): The Illustrated History of South India, Oxford University Press.
  25. Paranavitana, S. (1961): ‘The Arya Kingdom in North Ceylon’, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Vol. VII, Part 2 (New Series), Colombo.
  26. Pieris, P.E. (1919): Nagadipa and Buddhist Remains in Jaffna, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Vol. XXVII, No. 72, Part II, Colombo.
  27. Pieris, Paul E. (1992): Ceylon: The Portuguese Era, Vol. I, Tissa Prakasakayo Ltd., Dehiwala.
  28. Pieris, Paul E. (1992): Ceylon: The Portuguese Era, Vol. II, Tissa Prakasakayo Ltd., Dehiwala.
  29. Pushparatnam, P. (2020): Origin of Jaffna Town as Revealed in the Archaeological Studies at Jaffna Fort, University of Jaffna Pamphlet.
  30. Rasanayagam, C. (1926): Ancient Jaffna, Madras.
  31. Rehla of Ibn Batuta (1976): Translation and Commentary by Mahdi Hussain, Oriental Institute, Baroda.
  32. SǍlalihiņi-Sandēsa (1924): Edited by Sri Dharmarama Nayaka-Sthavira, Colombo.
  33. Singh, Shanker; Anand, Dr. (2017): ‘The Chronology of Northern Black Polished Ware: Recent Perspectives’, International Journal of Scientific Research in Science, Engineering and Technology, 3: 1488-1492.
  34. Tewari, Rakesh (2006): ‘Excavation at Juafardih, Nalanda District (Bihar)’ in Indian Archaeology, 2006-07 – A Review, Archaeological Survey of India, New Delhi.
  35. Thiagarajah, Siva (2022): Archaeological Excavations at the Jaffna Fort, Kumaran Book House, Colombo – Chennai.
  36. Wheeler, R.E.M., Ghosh, A., Deva, K. (1946): Arikamedu: An Indo-Roman Trading Station on the East Coast of India, Ancient India, 2: 17-124.
  37. இந்திரபாலா, கா. (1972): யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழக வெளியீடு,  கண்டி.
  38. கைலாயமாலை (1939): சா.வே. ஜம்புலிங்கம் பதிப்பு, சென்னை
  39. ஞானப்பிரகாசர், சுவாமி (1928): யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி.
  40. திருப்புகழ் (1935 பதிப்பு): சைவசித்தாந்த சமாஜம், சென்னை.
  41. புஷ்பரட்ணம், ப. (2021): கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை, சேர்.பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணம்.
  42. புஷ்பரட்ணம், ப. (2023): யாழ்ப்பாண நகரம் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்யும் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்வு, எழுநா சஞ்சிகை, ஜுலை 2023.
  43. மணிமேகலை (1965): உ.வே. சாமிநாதையர் பதிப்பு, அறம் பதிப்பகம், சென்னை.
  44. மயூரநாதன், இ. (2025): யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு, குமரன் புத்தக இல்லம், எழுநா-ஆதிரை வெளியீடு, கொழும்பு. 
  45. யாழ்ப்பாண வைபவமாலை (1949): குல சபாநாதன் பதிப்பு, சுன்னாகம்.
  46. யாழ்ப்பாண வைபவமாலை (1953): குல சபாநாதன் பதிப்பு, கொழும்பு.
  47. ராஜன், கா., சிவானந்தம், இரா. (2025): இரும்பின் தொன்மை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.

  



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்