முதலாம் உலக மகாயுத்தம் தொடங்குவதற்கு ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னரே உளவாளிகள் பற்றிய ஐயமும் அச்சமும் அபரிமிதமாகப் பெருகியுள்ளன. இங்கிலாந்துக்குள் ஜெர்மனிய உளவாளிகள் ஊடுருவி இரகசிய வலையமைப்பைக் கட்டமைத்துள்ளனர், அவர்களினால் பேரனர்த்தம் நிகழப்போகிறது முதலான கருத்துகள் சமூகத்துள் ஆழமாக விதைக்கப்பட்டு, விழிப்புடனிருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. போருக்கான ஆயத்த நடவடிக்கைகளும் எதிர்ப் படைகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற பதட்டமும் உளவுப் பீதியையும் உளவாளிகள் மீதான அச்சத்தையும் எல்லா மட்டங்களிலும் மிகுவித்தன. அவற்றைக் குறிக்கவே ‘உளவுக் காய்ச்சல்’ என்ற தொடரை ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த உளவுக் காய்ச்சலை ஏற்படுத்தியதிலும் மிகுவித்ததிலும் அக்கால ஆங்கில நாவலாசிரியர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர். ஒற்றர்களின் செயற்பாடுகள் பற்றிய கதைகளைத் தேசபக்தியுடன் இணைத்துப் பலரும் நாவலாக்கம் செய்துள்ளனர். அந்நாவல்கள் உளவு அச்சத்தைப் பரவலாக்கம் செய்துள்ளதுடன் உளவுப் பதட்டத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளன. அக்காலத்தில் அவ்வகை எழுத்து முயற்சிகள் மிகுந்த வாசக ஈர்ப்பைப் பெற்றுள்ளன. சான்றாகப் பின்வரும் குறிப்பை எடுத்துக்காட்டலாம்:
“முதலாம் உலகப் போருக்கு முந்தைய தசாப்தத்தில் பிரித்தானிய உளவு திரில்லர் இலக்கிய வகை, எல்லா சமூக வகுப்பினரிடத்திலும் எண்ணிக்கையில் அதிகமானதும் எதிர்பார்ப்புள்ளதுமான வாசகர்களை ஈர்த்த பண்பாட்டு நிகழ்வாக இருந்தது. அதன் ஆசிரியர்களை அக்காலத்தில் பரவலாக நிலவிய பேரரசு வலிமை, தேசிய அதிகாரம், வெளிநாட்டு உளவு நடவடிக்கைகள் ஆகியன பற்றிய அக்கறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேச்சாளர்களாக உயர்த்தியது. 1901 – 1914 இற்கு இடையில் 300 என்பது அச்சில் வெளிவந்த உளவு நாவல்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஆகும்” (Morgan & Johnson, 2010: 01).
வணிக இலாபத்தைக் கருத்தில்கொண்ட எழுத்தாளர்கள், ஒற்றர்கள் பற்றிய கற்பனைக் கதைகளை உண்மைக் கதைகளாக எழுதிக் குவித்துள்ளனர். அந்நாவல்கள் ஜெர்மனிய உளவாளிகள் பற்றிய அச்சத்தைப் பரவலாக்கி, ஜெர்மனியர்களை அபாய சக்தியாக வடிவமைத்தன. “ஜெர்மனியர்கள், யூதர்கள், உளவாளிகள் ஆகியன கிட்டத்தட்ட ஒத்த சொற்களாகுமளவுக்கு” (International Encyclopaedia of the First World War) அக்கால நாவல்கள் ஜெர்மனியர்களதும் யூதர்களதும் ஒற்றுச் செயற்பாடுகளை எடுத்துரைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, வில்லியம் லெ க்யூ (William Le Queux) தன் நாவல்களில், “ஜெர்மன் படையெடுப்புக்கு முன்னதாகப் பணியாளர்கள், எழுத்தாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், வெதுப்பகப் பணியாளர்கள் என மாறுவேடமிட்ட உளவாளிகளின் ரகசிய இராணுவம் எவ்வாறு செயற்பட்டது என்பதை விபரித்துள்ளமையைக்” (French, 1978: 356) குறிப்பிடலாம்.
ஜெர்மனிய உளவு அச்சத்தை ஊதிப்பெருப்பிக்கும் நாவல்கள் அதிகமாக வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் பிரித்தானிய உளவாளிகளின் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நாவல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவ்வாறு வெளிவந்த நாவலொன்றின் தழுவலாகவே நடேசய்யரின் ஒற்றன் அமைந்துள்ளது.

கணக்குப் பதிவு, ஆயில் என்ஜின் முதலான வணிகம், அறிவியல் சார்ந்த செய்திகளைத் தமிழில் வெளிப்படுத்திவந்த நடேசய்யர், ஒற்றன் எனும் துப்பறியும் நாவலை 1915 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். ‘ஒற்றன் or THE SPY’ எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தலைப்பிடப்பட்டுள்ள இந்நாவலை, தஞ்சாவூர் ‘த ஸ்டேண்டர்ட் புக்ஸ்’ (The Standard Books), வெளியிட்டுள்ளது. பிரதியொன்று பத்து சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நூலை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2022 ஆம் ஆண்டு பெ. சரவணகுமார் மறுபதிப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஒற்றன் நாவலின் மறுபதிப்பானது அந்நாவல் குறித்த புதிய வெளிச்சங்களை ஏற்படுத்தியது. மிகமுக்கியமாக நடேசய்யரால் எழுதப்பட்டிருக்கலாம் என இவ்வளவு காலமும் ஊகிக்கப்பட்டுவந்த ஒற்றன் நாவல், நடேசய்யராலேயே எழுதப்பட்டது என்பதும், இந்நாவல் நடேசய்யரின் சொந்தப் படைப்பல்ல, ஆங்கில நாவலொன்றின் தழுவல் என்பதும் இம்மறுபதிப்பினால் நிரூபணமாகியுள்ளன.
ஒற்றன் நாவலின் பிரதி கிடைக்கப்பெறாத காரணத்தினாலும் ஒற்றன் நாவல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற செய்திகளில் அந்நாவல் யாரால் எழுதப்பட்டது என்ற குறிப்பின்மையாலும் அதன் ஆசிரியர் தொடர்பில் உறுதியான முடிவுக்கு வரமுடியாதிருந்தது. அந்நாவல் நடேசய்யருடையதாக இருக்கலாம் என்ற கருத்தை முதன்முதல் வெளிப்படுத்தியவர் சாரல் நாடனாவார். அவர் வர்த்தகமித்திரன் பத்திரிகையில் இடம்பெற்ற புத்தக விளம்பரமொன்று தொடர்பில் கருத்துரைக்கும்போது அதனைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:

“மிக உபயோகமுள்ள தமிழ்ப் புத்தகங்கள் என்று நூலாசிரியர் பெயர் எதுவுமின்றி எட்டுப் புத்தகங்களின் பெயர்கள் குறிப்பிட்டு ஒரு விளம்பரம் வர்த்தக மித்திரனில் (13.06.1918) வெளிவந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள கணக்குப்பதிவு நூல், கணக்குப் பரிசோதனை, ஆயில் என்ஜின், இன்ஷியூரன்ஸ் ஆகிய நான்கும் நடேசய்யரால் எழுதப்பட்டவை என்பதற்கு இன்று ஆதாரம் கிடைத்துள்ளது. ஏனைய இந்தியக் கைத்தொழில் முயற்சி, சிகிச்சார ரத்ந தீபம், மரங்களும் அவைகளின் உபயோகமும், ஒற்றன் (நாவல்) நான்கும் அய்யருடையவையாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமிருக்கிறது. நிச்சயமாகக் கூறுவதற்கில்லை…” (1998: 54,55)
சாரல் நாடன் ஊகத்தினடிப்படையில் முன்வைத்த கருத்தைப் பலரும் ஏற்று, நடேசய்யருடைய நூல்களுள் ஒன்றாக ஒற்றனையும் இணைத்துக்கொண்டனர். ஒற்றன் நாவலின் மூலப்பிரதி கிடைக்கப்பெற்று மறுபதிப்புப் பெற்றதும் சாரல்நாடன் நடேசய்யருடையதாக இருக்கலாம் என ஊகித்த நூல்களுள் ஒன்று நடேசய்யருடையதே என்பது உறுதியானது.
ஒற்றனின் மறுபதிப்பு வெளிவந்ததும் மு. நித்தியானந்தன், ‘நடேசய்யரின் ஒற்றன், Havoc (பேரழிவு) என்ற ஆங்கில நாவலின் அப்பட்டமான தழுவல்’ (2025) என்ற கட்டுரையில் பிலிப்ஸ் ஹொப்பன்ஹெயிமின், ‘ஹெவொக்’ நாவலின் தழுவலாகவே ஒற்றன் அமைந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.
ஒற்றன் நாவல் நடேசய்யரால் எழுதப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்கும், அவருடைய சொந்தப் படைப்பு என்ற கருத்துக்கும் ஒற்றன் குறித்த விளம்பரங்களும் நடேசய்யரின் குறிப்புகளும் காரணமாக அமைந்தன. ஒற்றன் நாவலின் பிரதி கிடைக்கப்பெறாத காலத்தில், வர்த்தக மித்திரனில் வெளிவந்த விளம்பரங்களே ஒற்றன் என்ற நாவல் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தின. தொடர்ச்சியாக பல இதழ்களில் அந்நாவல் குறித்த விளம்பரம் இடம்பெற்றுள்ளது. சான்றாக,
“சமீபத்தில் நடந்த சண்டையில் சர்வியா நாட்டைப் பிடிப்பதற்காக ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் செய்துகொண்ட சூழ்ச்சிகளும் அவற்றைக் கண்டுபிடிப்பதற்காக சர்வியா தேசத்து வேலைக்காரியான ஆன்னி என்னும் பெண்மணியும் இங்கிலாந்து தேசத்து ஒற்றனும் பட்ட பாடுகளும் கடைசியாக இவர்களுடைய சாமர்த்தியத்தால் ஜெர்மனி, ஆஸ்திரிய ஒற்றர்களை எவ்வாறு ஏமாற்றி தங்கள் நாட்டைக் காப்பாற்றினார்கள் என்னும் மிகவும் இனிமையான தமிழ் நடையில் எழுதப்பட்ட தமிழ் நாவல்”
என்ற விளம்பரத்தை எடுத்துக்காட்டலாம். இவ்விளம்பரத்தில் ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் நாவல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்பது குறித்த தகவல்களும் இல்லை. அக்காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் பலவற்றில் நூலாசிரியர் பெயர் அற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. “1909 ஆம் ஆண்டில் ஒரு சஞ்சிகையில் கண்ட விளம்பரத்தில் ஆசிரியர் பெயரில்லாத பன்னிரண்டு நாவல்களின் பெயர்கள் அடங்கியிருந்தன. 1918 இல் இருபத்தியிரண்டு நாவல்களின் பெயர்களை ஒரு விளம்பரத்தில் காணலாம்” (2022: 137) என பெ.கொ. சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் குறிப்பிட்டுள்ளமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.
ஆங்கில நாவல்களைத் தழுவி, தமிழ் நாவல்களைப் படைத்தவர்களுள் பலர் தழுவல் என்பதையோ எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது என்பதையோ குறிப்பிடாது தவிர்த்து வந்துள்ளனர். மறைமலையடிகள்கூட தான் தழுவலாகக் கொண்டுவந்த நாவல்களில் தழுவல் என்று குறிப்பிட்டாலும் மூலநூலையோ, மூல நூலாசிரியரையோ குறிப்பிடவில்லை. அதனால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“நாகநாட்டரசி – குமுதவல்லி ஒரு தழுவல் நூல். மூல நூல் ‘மாண்பு மிக்கது’ என்று அடிகள் தமது முன்னுரையில் இருமுறை குறிப்பிட்டபோதும் அந்நூல் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடாதது ஏனோ தெரியவில்லை. வடமொழியிலிருந்து பெயர்த்தெழுதிய சாகுந்தல நூலில் காளிதாசனைப் பற்றியும் கட்டுரைத் தொகுதியிலே அடிசனைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள ஆசிரியர், ‘மாண்பு மிக்க ஆங்கில நாவலின்’ ஆசிரியர் யார் எனக் குறிப்பிடாதது பல ஐயங்களைத் தோற்றுவிக்கிறது. வேண்டுமென்றே கூறாது விட்டிருக்கலாம். நிச்சயமாகக் கூறுதல் கடினம். மூல நூலின் பெயரைத் தானும் குறிப்பிட்டார் அல்லர். இதன்காரணமாக மாறுபட்ட கருத்துக்களும் எழுந்துள்ளன. மூலக்கதை, ‘The Soldier’s wife’ என்பர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். ‘Laila’ என்று குறிப்பிடுவர் புலவர் அரசு. ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயமாக எமக்குத் தெரிகிறது, மூல நூலாசிரியர் பெயர் ரெய்னால்ட்ஸ்” (2005: 138).
நடேசய்யர் வேண்டுமென்றே கூறாது தவிர்த்தாரா என்பதை உறுதியாகக் கூற முடியாதுள்ளது. ஆனால், அவர் தன்னைப் பற்றி எழுதிய குறிப்புகளிலும், நூல்களின் முன்னட்டையில் தன்னை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டுள்ள செய்திகளிலும் ஒற்றன் நாவலைத் தவிர்த்துள்ளார். சான்றாக, எனது வாழ்க்கையின் நோக்கம் என்ற பகுதியில், “தமிழ்மொழியில் சகல சாஸ்திரங்களும் வெளிவருவதால் தமிழ் பாஷை விருத்தியாவதுடன் தமிழ் மக்களும் முன்னேற்றமடைவர் என்ற பூரண நம்பிக்கை ஏற்பட்ட காரணம் பற்றித் தமிழில் ‘கணக்குப் பதிவு நூல்’, ‘இன்ஷியூரன்ஸ்’, ‘ஆயில் என்ஜின்கள்’, ‘வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகமும்’ என்ற பல புஸ்தகங்களும் எழுதி வெளியிடலானேன். மேற்சொல்லிய புஸ்தகங்களில் பலவும், சென்னை கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டவை. எனினும், தமிழ் மக்களுடைய ஊக்கம் குறைவால் அப்புஸ்தகங்கள், நாவல்கள் போல் விற்று நல்ல ஊதியம் எனக்குக் கொடுத்தனவல்லவேனும், அக்காரியங்களைச் செய்துவருவதில் நான் இதுவரை மனம் தளர்ச்சியடையவில்லை” (தேசபக்தன்: 03.09.1924) எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தான் ஒற்றன் என்ற நாவலை எழுதியமை பற்றி எக்குறிப்பையும் தரவில்லை.
நடேசய்யரின் நூல்களில் அவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளிலும் ஒற்றன் என்ற நாவல் இடம்பெறவில்லை. உதாரணமாக, நீ மயங்குவதேன் நூலில், “கணக்குப் பதிவுநூல், கணக்குப் பரிசோதனை, ஆயில் என்ஜின், இன்ஷியூரன்ஸ் முதலிய நூல்களை இயற்றியவரான திரு.கோ. நடேசய்யர் இயற்றியது” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் என்ற நூலில், “இலங்கை அரசாங்க சபை அங்கத்தினரும் கணக்குப் பதிவு நூல், வியாபாரப் பயிற்சி நூல், அழகிய இலங்கை முதலிய பல நூல்களின் ஆசிரியருமான கோ. நடேசய்யர் இயற்றியது” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. இவற்றை அவதானிக்கும்போது நடேசய்யர் ஒற்றன் என்றொரு நாவலை எழுதியமையைத் திட்டமிட்டே தவிர்த்துள்ளாரா என்ற ஐயமும் எழுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்முதல் நாவல்கள் பெற்றுவந்த முதன்மையினால் ஈர்க்கப்பட்டு நடேசய்யரும் நாவலாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனலாம். எனது வாழ்க்கையின் நோக்கம் என்ற பதிவில் இடம்பெறும் தன்னுடைய நூல்கள், “தமிழ் மக்களுடைய ஊக்கம் குறைவால் நாவல்கள் போல் விற்று நல்ல ஊதியம் தனக்குக் கொடுக்கவில்லை” என்ற மனவருத்தத்துடன் ஒற்றனை இணைத்து நோக்கும்போது அவரின் நாவலாக்கச் செயற்பாட்டின் பின்புலத்தினை உணர்ந்துகொள்ள முடிகிறது. அக்காலத்தில் துப்பறியும் கதைகளும் மர்மக் கதைகளும் விற்பனையில் முன்னிலை வகித்தமையால், நடேசய்யர் முதலாம் உலக யுத்தப் பின்னணியில் ஒற்றர்களின் செயற்பாடுகளைச் சித்திரிக்கும் ‘ஹெவொக்’ நாவலைத் தழுவி ஒற்றனை உருவாக்கியுள்ளார் எனலாம். நடேசய்யர் மட்டுமல்ல அக்காலத்தில் இன்னும் பலரும் சமூகத்தில் நாவல் பெற்ற செல்வாக்கினால் நாவலாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக, மறைமலையடிகள் “சமூகத்திலே முக்கியத்துவம் பெற்று வந்த புனைகதை வகையினைத் தாமும் படைக்கவிரும்பியே” (2005: 135) நாவலாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளமையை க. கைலாசபதி எடுத்துக்காட்டியுள்ளமையைக் குறிப்பிடலாம்.
புதிதாக உதயமாகிய மத்தியதர வர்க்கத்தின் சீர்திருத்த மனோபாவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்த தொடக்ககால நாவல் போக்கானது, 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும்மாற்றத்துக்கு உள்ளானது. துப்பறிதலும் மர்மங்களும் நாவல்களின் பிரதான கருப்பொருள்களாகின. எண்ணிக்கையளவில் நாவல்கள் பெருகின. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகியம்மாள், கே.ஆர். ரங்கராஜு முதலான பலர் இக்காலத்தில் நாவல்களை எழுதிக் குவித்துள்ளனர். அக்கால வாசகர்களிடையே அவர்களது நாவல்களுக்குப் பரவலான அங்கீகாரம் இருந்துள்ளது. க.நா. சுப்ரமண்யத்தின் பின்வரும் குறிப்பு மேற்படி நாவலாசிரியர்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது:
“1921-இல் அப்போது தான் ரங்கராஜுவின் நாவல்கள் வெளிவந்து, தமிழ் வாசகர்களிடையே பரவத்தொடங்கியிருந்தன. அவருடைய கடைசி இரண்டு நாவல்கள் அவ்வருஷத்திற்குப் பின்னர்தான் எழுதப்பட்டன என்று எண்ணுகிறேன். அவ்வருஷம்தான் சுப்ரமணிய பாரதியார் இறந்தார். ஆனால், ஒன்பது வயதுச் சிறுவனான எனக்கு, பாரதியாரைப் பற்றி அப்போது ஒன்றும் தெரியாது. ஆனால், ரங்கராஜுவின் நாவல்களைத் தேடி விரும்பிப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது” (2005: 117, 118).
துப்பறிதலையும் மர்மக்கதைகளையும் நாவலாக்கி, பெரும் வணிக வெற்றியைப் பெற்ற நாவலாசிரியர்கள் பலருக்கு, ஆங்கில நாவல்கள் முதன்மையான மூலமாக விளங்கியுள்ளன. ஆங்கில நாவல்களைத் தழுவி தமிழ் நாவல்களை எழுதும் முயற்சிகளும் ஆங்கில நாவல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் செயற்பாடுகளும் பெருகியுள்ளன. இத்தகைய போக்கு செல்வாக்குப்பெறத் தொடங்கிய காலத்திலேயே நடேசய்யர் ஒற்றன் என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.
நடேசய்யர் ஒற்றனுக்கு எழுதியுள்ள பின்வரும் சிறிய முன்னுரை, நாவலின் பொருண்மையையும் நாவலாக்கத்தின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது:
“இப்பொழுது நடக்கும் மகாயுத்தத்தில் ஒற்றர்கள் எவ்வாறு தங்கள் நாட்டின் நன்மைக்காக வேலை செய்து வருகிறார்கள் என்பதை யாவரும் அறிய விரும்புவார்கள். இவ்விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அநேக புஸ்தகங்களிருக்கின்றன. தமிழில் யாதொன்றுமில்லாததால் நமது தமிழருடைய நன்மையைக் கருதி நாவல் ரூபமாக இப்புஸ்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.”
மேற்படி முன்னுரையில் பின்வரும் மூன்று செய்திகளை நடேசய்யர் பதிவு செய்துள்ளார்:
- முதலாம் உலக மகாயுத்தத்தில் ஒற்றர்கள் எவ்வாறு தங்கள் தங்கள் நாட்டு நன்மைக்காகச் செயற்படுகிறார்கள் என்பதை எல்லோரும் அறிய விரும்புவார்கள்.
- ஒற்றர்களின் செயற்பாடுகள் பற்றி ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
- தமிழில் முதலாம் உலக மகாயுத்த ஒற்றர்கள் பற்றிய நூல்கள் எதுவுமின்மையால் தமிழர்களுடைய நன்மைக்காக நாவல் ரூபத்தில் அதனை வெளியிட்டுள்ளார்.
ஆற்றல்மிக்கப் பத்திரிகையாளனாக விளங்கிய நடேசய்யர், முதலாம் உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே ஏற்பட்ட உளவுக் காய்ச்சல் பற்றி அறியாமலிருக்க வாய்ப்பில்லை. அதனால் அக்காலத்தில் இங்கிலாந்து முதலான நாடுகளில் முதன்மையான பேசுபொருளாக விளங்கிய ஒற்றர்களின் செயற்பாடுகளைத் தமிழரிடத்துக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்நாவலாக்கத்தை மேற்கொண்டுள்ளார் என்பது தெளிவாகின்றது. தமிழ் இலக்கியச் செல்நெறியில் துப்பறியும் மர்ம நாவல்கள் அக்காலத்தில் முன்னிலை பெற்று விளங்கியமை, அப்பொருள் தேர்வில் செல்வாக்கு செலுத்தியுள்ளது எனலாம்.
இரண்டு பாகங்களைக் கொண்டுள்ள ஒற்றன் ஒன்பது அதிகாரங்களைக் கொண்டுள்ளது. முதல் பாகத்தில் வியன்னா நகரம், லண்டனுக்குப் புறப்படல், முக்கூட்டுப் படுகொலை, இராபர்ட்ஸ் மோசம் போனது, ஜோன்ஸ் என்பவரின் அனுபவங்கள் ஆகிய ஐந்து அதிகாரங்கள் உள்ளன. இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயம் முதலாம் பாகத்தின் இறுதி அதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அதற்கு ஜோன்ஸின் அனுபவங்கள் என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் அதிகாரம் இராபர்ட்ஸ் ஜோன்ஸிடம் உண்மையை வெளிப்படுத்தல் என்ற தலைப்பிலும் ஒன்பதாம் அதிகாரம் ஜோன்ஸின் மீட்சி என்ற தலைப்பிலும் அமைந்துள்ளன. எட்டாம் அதிகாரத்திற்குத் தனியான பெயரிடப்படவில்லை.
முதலாம் உலகப்போர் உக்கிரம்பெறத் தொடங்கிய காலத்தில் ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரத்தில் ஜேர்மனிய சக்கரவர்த்தி, ரஷ்ய சக்கரவர்த்தி ஆகியோர் ஆஸ்திரிய சக்கரவர்த்தியைச் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் உரையாடிய விடயங்களைக் கண்டறிய முயலும் உளவுச் செயற்பாடுகளே நாவலின் மைய இழையாகும். மூன்று சக்கரவர்த்திகள் உரையாடும் விடயங்களைக் கண்டறிய ஆங்கிலேய ஒற்றனான இராபர்ட்ஸ் என்பவனும் அமெரிக்கப் பத்திரிகை நிருபனான இராபின்ஸன் என்பவனும் முயற்சிக்கின்றனர். இராபின்ஸனின் சாமர்த்தியத்தால் கைப்பற்றப்படும் அந்த இரகசிய பேச்சுவார்த்தை அடங்கிய கோப்பை, சர்வியா நாட்டைச் சேர்ந்த ஆன்னி என்ற பெண்ணின் துணையுடன் நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் இராபர்ட்ஸ் இங்கிலாந்து நாட்டு முதல் மந்திரியிடம் கையளிப்பதாகக் கதை விரிகிறது. துப்பறியும் கதைகளுக்கு ஏற்றவகையில் எதிர்பாராத திருப்பங்களும் மர்மங்களும் கொண்டதாக நாவல் அமைந்துள்ளது.
எளிமையான தமிழில் நாவல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாத்திர உரையாடல்களும் சம்பவச் சித்திரிப்புகளும் இயல்பான தமிழ்நடையில் அமைந்துள்ளன. நடேசய்யரின் எடுத்துரைப்புக் குறித்த இரா. குறிஞ்சிவேந்தனின் பின்வரும் அவதானிப்பு இவ்விடத்தில் இணைத்து நோக்கத்தக்கது:
“சக்கரவர்த்திகளின் சந்திப்பு நிகழ்ந்த அரண்மனை இருந்த இராஜவீதி, இருபுறமும் ஓங்கி நின்ற மரங்களின் அடர்த்தி, அகன்ற வீதிகளில் தூசு மேலெழும்பாமல் தண்ணீர் தெளிக்கப்பட்ட காட்சி, கான்ஸ்டாண்டி நேபிளில் இருந்து பாரீஸ் சென்ற இரயிலின் உள்முகத்தோற்றம், தொடர்வண்டியில் அமைக்கப்பட்டிருந்த நீளமான பாதை, அவ்வண்டியில் பரிமாறப்பட்ட உணவுவகைகள், விடுதியின் நவநாகரிகத் தோரணை என ஐரோப்பிய நகரங்களை வர்ணித்துச் செல்லும் இலாவகத்தில், வாசிப்பவர்களும் சேர்ந்து பயணப்படுகின்ற வித்தகத்தை நடேசய்யர் செய்துள்ளார்” (2022: 23).
முற்றிலும் மேல்நாட்டுக் களத்தில் – மேல்நாட்டுப் பாத்திரங்களைக் கொண்டமைந்துள்ள இந்நாவலை, “தேச நன்மையையே மேலாகக்கருதி சுயநலத்தைத் துலைத்த இவர்கள் அல்லவோ தேசாபிமானிகள்! ஒரு தேசம் மேன்மையடைய வேண்டுமானால் அத்தேசத்தவர் சுயநலத்தை வெறுத்துப் பொதுநலத்தைக் கருத வேண்டும். இக்குணம் ஒவ்வொரு நாட்டாருக்கும் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தேசபக்தியைக் கலந்து நடேசய்யர் நிறைவு செய்துள்ளார். அக்கால நாவலாசிரியர்கள் பலரும் அவ்வுத்தியைக் கையாண்டுள்ளனர். இத்தேசபக்தி இந்திய விடுதலை தாகத்துக்கும் உரமூட்டுவதாக அமைந்துள்ளது. நடேசய்யரும் அந்நோக்கத்தைக் கருத்தில்கொண்டே அவ்வாறு நிறைவு செய்துள்ளார் எனலாம். ஆனால், நாவலின் கதையும் ஆங்கில ஒற்றர்கள் குறித்த சித்திரிப்பும் ஆங்கிலேய தேசபக்தியை உன்னதப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் பிரித்தானிய சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன. சான்றாக,
“இன்று அரண்மனையில் நடைபெறும் விஷயம் இன்னதென்று தெரியுமா? மூன்று சக்ரவர்த்திகளுஞ் சேர்ந்து சதியாலோசனை செய்கிறார்களென்றால் இங்கிலாந்துக்கு விரோதமாகத் தான் இருக்க வேண்டும். உன் நாட்டார் (இங்கிலாந்து) ஒன்றையும் கவனியாது இவ்வாறு இருத்தல் நலமோ. உங்களாலேயே எங்கள் நாடாகிய சர்வியாபோலுள்ள சிறிய தேசங்கள் சுதந்திரங்கள் பெற்றிருக்கின்றன. இங்கிலாந்திற்கு வரும் கெடுதியெல்லாம் உலகத்திலுள்ள எல்லாச் சிறிய நாடுகளின் சுதந்திரத்திற்கு விளையுங் கெடுதியேயாகும்.”
“நாகரிகத்தையும் சிறிய இராஜ்ஜியங்களுடைய சுதந்திரங்களையும் காப்பாற்றுவதற்காக இங்கிலாந்தும் சண்டையில் தலையிட வேண்டியதாயிற்று. தர்மம் தலைகாக்கும் என்பதுபோல் தர்ம யுத்தத்தில் நேசவல்லரசுகள் தலையிட்டிருக்கிற படியால் ஜெயமடைவார்கள் என்பதில் தடையேயில்லை.”
முதலான விபரிப்புகளை எடுத்துக்காட்டலாம். அக்காலத்தில் இந்திய தேசிய விடுதலையில் முனைப்புடன் ஈடுபட்டவர்கள் இங்கிலாந்துக்கே தம் ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் நேசநாடுகளின் பக்கமே நியாயம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர். பாரதி அவற்றை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். சான்றாக, ‘காமன்வீல்’ என்ற ஆங்கில பத்திரிகையில் ‘இந்தியாவும் போரும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘நேசநாட்டினர் செயல்நோக்கத்திற்கு நாம் ஏன் நட்புப் பாராட்டுகிறோம்?’ என்றொரு உபதலைப்பிட்டுள்ளதுடன் அப்பகுதியில், “…தற்போதைய போரில் நேச நாடுகள் பக்கமே நியாயம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள நாம் எதையுமே கணக்கிட்டுப் பார்ப்பவர்கள். சுதந்திரத்தின்மீது அமைதியான பற்று வைத்திருப்பவர்கள். நாடுகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அணி ‘வலியவர்களே சரியானவர்கள்’ என்ற பைத்தியக்காரச் சித்தாந்தத்தை ஒரேடியாக நொறுக்கும் அணி. சர்வதேச சமன்பாட்டு நிலையை நிரந்தரமாக உறுதிப்படுத்திப் பரஸ்பர மரியாதையை நிறுவும் அணி வெற்றிபெற வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம். இங்கிலாந்துக்கும் அதன் நேச நாடுகளுக்கும் உதவ இதனால்தான் இந்தியா தன் குடிமக்களையும் வளங்களையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளது” (விசுவநாதன், 2019: 517) என்று பதிவு செய்துள்ளார். அவ்வாறே கவர்னர் பெண்ட்லண்டுக்கு ‘தி ஹிந்துவில்’ எழுதிய கடிதத்தில், “சமாதான காலத்தில் நிர்வாகத்தைப் பற்றி நமக்குள் என்ன அபிப்பிராய பேதங்களிருந்தாலும் அந்நியரால் நாம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் வேளையில், நம் உள்விவகாரங்களில் முழு இணக்கத்திற்கான அவசியத்தை வலியுறுத்துவது நமது கடமை என்பதிலும், ஜெர்மனியின் மத்தியகால நுகத்தடியில் நாம் அடிமையுறுவதை இத்தேசத்திலுள்ள எவரும் ஒரு கணமும் பொறுத்திருக்கமாட்டார் என்பதிலும் ஸ்ரீமதி பெஸண்டோடு நாங்கள் ஒத்துப்போகிறோம். விரைவில் கௌரவமான அமைதி – பிரிட்டனுக்கும் அதன் மேலை மட்டுமல்லாது கீழை நேச நாடுகளுக்கும் – திரும்புமாக” (வேங்கடாசலபதி, 2020: 84) என்று குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் நேசநாடுகளின் அணி வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பை தெரிவித்திருந்தாலும் இந்தியாவிற்குள் ஆங்கிலேய ஒற்றர்கள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளைப் பாரதி முதலானவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ‘தி ஹிந்து’ பத்திரிகையூடாக கவர்னருக்குப் பாரதி எழுதிய கடிதங்களில் ஒற்றர்களின் அராஜகங்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக, பின்வரும் பதிவுகளைச் சுட்டிக்காட்டலாம்:
“பிரிட்டிஷ் ஒற்றர்களின் 200 புதிய முகங்களும் அவர்கள் தாராளமாக எடுத்துக்கொண்ட உரிமைகளும் உருவாக்கிய பரபரப்பின் காரணமாக எந்தப் புதுச்சேரி வாசியும் என்னோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள அஞ்சினர். கடைசியில் இவர்கள் தம் கைவரிசையை அதிகமாகக் காட்ட ஆரம்பித்துச் சில பிரெஞ்சு குடிமக்களையும் வேவுபார்த்து அனைவருக்கும் அவர்களது மென்மையான வழிமுறைகள் துலாம்பரமானதும்தான் இந்த நிலைமை முடிவுக்கு வந்தது… (10, பிப்ரவரி, 1914)
“திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள, அரசியல் சம்பந்தமே இல்லாத என் உறவினர்கள் ஆயிரக்கணக்கான அற்ப முறைகளில் தொந்திரவுக்காளாகி வருகிறார்கள்… எழுத்தறிவில்லாத பிராமணப் பெண்களும்கூடப் போலீஸ் கண்காணிப்புக்குள்ளாகும் வேடிக்கையை மட்டும் என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. மனித மூடத்தனத்திற்கு எல்லையும் இல்லை போலும்…
ஒரு நீதிக் குழு மூலமாக ஒற்றர்கள் பற்றிய என் குற்றச்சாட்டுகள்மீது விசாரணை நடத்தப்படுமென மேதகு பெண்ட்லண்டு பிரபு வாக்குறுதி கொடுத்தபொழுது, என் முந்தைய கோரிக்கைக் கடிதங்களை அவர் ஏற்றுக்கொண்டு வெகு சீக்கிரத்தில் மேற்குறித்த நடவடிக்கைகளை வாபஸ் வாங்கிவிடுவார் என்று நம்பியிருந்தேன்…” (2, ஜுலை, 1914).
இவற்றுடன் யுத்தகாலத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைக்கும்போது பாரதியார் கல்வி, காவல்துறை, கைத்தொழில் முதலானவற்றில் கொண்டுவர வேண்டிய சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள கருத்துகள் பின்வருமாறு அமைந்துள்ளன:
“நாட்டில் புலனாய்வுத் துறைப் படையின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருவதன் பிரதிபலன் என்று அரசாங்கம் எதைக் கருதுகிறது? ஒற்றர்களின் எண்ணிக்கையை மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே சென்றால் அவர்கள் எங்கே வேலையைப் பார்க்க முடியும்? யாரோ ஒருசிலர் விஷமம் செய்வதை யாரோ ஒருவர் பார்த்தால் அவர்கள் வேலையற்றுப் போனவர்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். காவல் துறையின் கீழ்மட்டத்தில், புதிய சுதேசியைக் கண்டுபிடித்துவிட்டால், மேலதிகாரிகள் அந்தக் காவலர் தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டதுபோல் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். இதெல்லாம் மனிதனுடைய இயல்பான புனைவுத் திறனின் தவறாகும்” (விசுவநாதன், 2019: 504).
இவை ஆங்கிலேய ஒற்றர்களின் அராஜக நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும் அவ்வொற்றர்கள் குறித்து தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும் துணைசெய்கின்றன. இவ்வாறு ஆங்கிலேய ஒற்றர்கள்மீது அதிருப்தி நிலவிய காலத்தில் நடேசய்யர் ஆங்கிலேய ஒற்றர்களின் தேசப் பற்றையும் ஒப்பற்ற சேவையையும் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்திருப்பது நெருடலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
வங்கப் பிரிவினையை அடுத்துத் தோன்றிய தேச பக்தி எழுச்சியால், சுதேச விடுதலையில் அக்கறைகொண்டுழைத்த நடேசய்யர், தன் ஒற்றன் என்ற நாவலின் மூலம் சுதேச விடுதலை எழுச்சியின் யதார்த்தத்தோடு ஒன்றுகலக்காமல் வெளியில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கான பின்புலத்தினை அறிவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. அக்காலத்தில் முதன்மைபெற்றிருந்த துப்பறியும் நாவலாக்க முயற்சியில் ஆர்வத்தால் ஈடுபட்டுள்ள அவர், முதலாம் உலக மகாயுத்தம் தொடர்பான சமகாலச் செய்தியைப் பேசுகின்ற – யுத்தகாலத்தில் முதன்மைப் பேசுபொருளாக விளங்கிய ஒற்றர்களைப் பற்றிப் பேசுகின்ற நாவலை அவசரமாகத் தழுவலாக்கம் செய்துள்ளார் என எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் அந்நாவல் அவருக்குப் போதிய வரவேற்பையோ வருமானத்தையோ பெற்றுத்தரவில்லை; தமிழ் நாவல் உலகில் அவருக்கெனத் தனியான இடத்தையும் உருவாக்கவில்லை. இவ்வீழ்ச்சிக்கு அன்றைய தமிழக யதார்த்தத்துக்கு மாறாக ஆங்கிலேய ஒற்றர் புகழ் பாடியமை ஒரு பிரதான காரணமெனலாம். இக்காரணிகள் நடேசய்யர் ஒற்றன் எனும் நாவலொன்றைத் தான் எழுதியமை குறித்துப் பதிவு செய்வதைப் பிற்காலத்தில் திட்டமிட்டே தவிர்த்திருக்கலாம் என்ற ஐயத்துக்கு வலுவூட்டுகின்றன.
உசாத்துணை நூற்பட்டியல்
- French, David, (1978) “Spy Fever in Britain 1900 – 1915”, The Historical Journal, Vol.21 – No. 2.
- Moran, R. Christopher & Johnson, Robert, (2010) “In the Service of Empire: Imperialism and the British Spy Thriller 1901 -1914”, Studies in Intelligence, Vol.54 – No. 2.
- Sebastian Bischoff, (2019) “Spy Fever 1914”, International Encyclopedia of the First World War, Ute Daniel, et. al. (Ed.), Berlin: Freie Universitat.
- காவ்யா சண்முகசுந்தரம் (தொ.ஆ.), (2005), இலக்கிய விசாரங்கள் : க.நா.சு. கட்டுரைகள் – I, சென்னை: காவ்யா.
- கைலாசபதி, க., (2005), தமிழ் நாவல் இலக்கியம், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.
- சரவணகுமார், பெ., (ப.ஆ.), (2022), ஒற்றன், மலைவாசம் பதிப்பகம்.
- சாரல்நாடன், (1998), பத்திரிகையாளர் நடேசய்யர், கண்டி: மலையக வெளியீட்டகம்.
- சுந்தரராஜன், பொ.கோ., சிவபாதசுந்தரம், சோ., (2022), தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், சென்னை: பாரி நிலையம்.
- நித்தியானந்தன், மு., (ஜனவரி – 2025). நடேசய்யரின் ஒற்றன் Havoc (பேரழிவு) என்ற ஆங்கில நாவலின் அப்பட்டமான தழுவல், தாய்வீடு.
- விசுவநாதன், சீனி., (2019). பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி – பாகம் 2, சென்னை: அல்லயன்ஸ்.
- வேங்கடாசலபதி, ஆ.இரா., (2020), பாரதி கருவூலம், நாகர்கோவில், காலச்சுவடு.



