தமிழில்: த. சிவதாசன்
யாழ்ப்பாணம் வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (Chamber of Commerce and Industries of Yalpanam – CCIY) 1999 இல் நிறுவப்பட்டது. 16 வருடங்களாக எரிந்துகொண்டிருந்த இலங்கையின் இனப்போர் முடிவுக்கு வருகிறது என்ற நம்பிக்கை குற்றுயிராகவிருந்த காலத்தில் அது முளைத்தது. போராடுபவர்கள் எதிரும் புதிருமாய் ஒரு மேசையில் உட்கார்ந்திருந்தார்கள். அத்தற்காலிக நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு போர் மேலும் 10 வருடங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு 2009 இல் நிறைவுக்கு வந்தது.
போர்க்காலப் பொருளாதாரம் பெரும்பாலும் பாடசாலைகள், தபால் கந்தோர்கள், அரச அதிகாரிகள் போன்றவர்களைக்கொண்ட பொதுத்துறை சார்ந்தும் மண்ணெண்ணை, பால் மா போன்ற அத்தியாவசியப் பண்டங்களை இலாப நோக்குடன் கொண்டுவந்த வர்த்தகர்கள் சார்ந்துமே இருந்தது. இராணுவக் கெடுபிடிகளும் இல்லாது பருவகாலம் ஒத்துழைத்தால் மீனவர்களும், விவசாயிகளும் சிலவேளைகள் இப்பொருளாதாரத்தில் பங்கு கொண்டார்கள். ஆனால் தொழில்துறை (Industrial Sector) தூக்கத்திலேயோ அல்லது மயக்கத்திலேயோதான் இருந்தது.
போர்களும், இடைக்கிடை வந்துபோன (போர்) நிறுத்தங்களும் அவ்வப்போது கொடுத்த தென்பு மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளுக்கு வழிவகுத்தன. இதனால் தொழில்துறையும் உற்பத்தியும் தொடர்ந்தே வாடிப்போயின. சிறிய பாரவண்டிகளிலோ அல்லது சைக்கிள்களின் கூடைகளிலோ விநியோகத்திற்கென ஏற்றப்பட்ட தனியார் மற்றும் தொழில்துறைப் பாவனைக்கெனத் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள் பயனற்றுப் போயின. தனது பூர்வீக விவசாயப் பூமியை மீளுருவாக்க முயற்சித்த எனது நண்பரொருவர் துணிகளில் சுற்றிவைக்கப்பட்ட சில உற்பத்திப் பண்டங்களைக் கண்டெடுத்ததாகக் கூறினார். அவசரம் அவசரமான இடப்பெயர்வுகளின்போது காவிச் செல்ல முடியாது மண்ணிற்குள் புதைத்துவிட்டும்போன பொக்கிஷங்களிவை. ஒருநாள் மீண்டுவரும்போது மீட்டெடுப்போமென்ற அவர்களது நம்பிக்கைக்கான அந்நாள் வரவேயில்லை.
உற்பத்திச்சாலைகள் அழிக்கப்பட்டு அங்கிருந்த இயந்திரங்கள் போர்க்கருவிகளைச் செய்வதற்காய் குடிபெயர்க்கப்பட்டுவிட்டன. வசதிபடைத்த தொழில்துறை ‘முதலாளிகள்’ போரோய்ந்த பின்னர் வருவோமெனத் தாம் சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய தொழிற்சாலைகளை கைவிட்டுப்போயிருந்தனர். பல தசாப்தங்கள் கழிந்த பின்னரும் அவர்கள் மீண்டு வரவேயில்லை. ஒரு தலைமுறையைக் கடந்த, சுமார் 30 வருடப் போர் இவர்களையும் இவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளையும் இதர நகரங்களிலும் இதர நாடுகளிலும் வெற்றிகரமாக வேரூன்றச் செய்துவிட்டது. போர் நிறுத்தப்பட்டு 16 வருடங்கள் கழிந்தும் அவர்கள் விட்டுப்போன, வடக்கெங்கும் சிதறியும் சீரழிந்தும் கிடக்கும் அவர்களது தொழிற்சாலைகள் ஆடு, மாடு, காகம், வெளவால் போன்றவற்றின் நிரந்தரக் குடியிருப்புகளாகிவிட்டன. அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளுடன், அரை மனதோடு உயிர்ப்பிக்க மேற்கொள்ளப்பட்ட வடக்கின் ‘உற்பத்தி ஆன்மா’ எழுந்து நிற்க வலுவில்லாது இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
CCIY இன் நிர்வாகப் பணிப்பாளர் செல்வி கீர்த்திகா சுதர்சன் மற்றும் நிறைவேற்று இயக்குநர் திரு.கே. விக்னேஷ் அவர்களுடனும் இதுபற்றி நான் பேசினேன். 1999 இல் CCIY இனை நிறுவிய ஆரம்பகர்த்தாக்களில் விக்னேஷும் ஒருவர் என்பதோடு அதன் தலைவராகவும் அவர் இருந்தார். 1983 இல் போர் ஆரம்பிப்பதற்கு முன் வடக்கில் 750 இற்கும் மேலான முதல்தர உற்பத்தித் தொழிற்சாலைகள் இருந்தன என்கிறார் விக்னேஷ். இவற்றில் சில, அரசாங்கத்திற்குச் சொந்தமான, காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற பிரமாண்டமானவை. அல்லைப்பிட்டியில் இருந்த அலுமினியம் தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை போன்றவை தனியாருக்குச் சொந்தமான பிரமாண்டமான தொழிற்சாலைகள். யாழ் நகர மையத்தில், ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த சுமார் 40,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்ட லேடன் (Leyden) ஆடைத் தொழிற்சாலை ஒரு தனிக் குடும்பத்திற்குச் சொந்தமானது; நவீன இயந்திரங்களுடனும் நூற்றுக்கணக்கான பணியாளர்களுடனும் இயங்கிய, நாடு தழுவிய ரீதியில் புகழ்பெற்ற, இத்தொழிற்சாலை உள்ளாடைகளை (பனியன்கள் மற்றும் அண்டர்வெயர்கள்) உற்பத்தி செய்தது. லேடன் தொழிற்சாலை இப்போது வெறுமையாக, ஷெல் துளைத்த சுவர்களுடன் எதிர்காலப் பாவனையாளரின் வரவிற்காக ஏங்கியபடி, ஒரு பராமரிப்பாளரின் குடும்பத்திற்கு நிழல் கொடுத்து வருகிறது. லேடன் ஆடைகள் நிறுவனத்தின் நிறுவனரின் மகனும் எனது நண்பருமாகிய ஜூட், இத்தொழிற்சாலையை மீளவும், ஏதோ ஒரு விதத்தில், பயன்படுத்துவதற்கு ஒரு பங்காளியைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

இலங்கை முழுவதும் பிரபலமாக விற்பனையான மட்பாண்டங்களைத் தயாரிக்கும் குடிசைக் கைத்தொழில் வடக்கில் ஒரு காலத்தில் செழிப்புற்றிருந்தது. சிலவிடங்களில் மொத்தக் கிராமங்களே ஒன்றிணைந்து திறந்தவெளித் தொழிற்சாலைகளாகி விதம்விதமான மட்பாண்டங்களைத் தயாரித்து வந்தன. நெசவுத் தொழிற்சாலைகளும், தனியாருக்குச் சொந்தமானதாகவும், கூட்டுறவு அடிப்படையிலும் இயங்கி ஆடைகளை உற்பத்தி செய்து தள்ளின. இப்போதும் பல இயந்திரங்கள் டைனோசர் விலங்குகளின் எலும்புக்கூடுகள் போலக் காட்சியளிக்கின்றன. பல கைத்தறிகள் தம்மை இயக்கியவர்கள் திரும்பி வருவார்களோ என்ற ஏக்கத்தில் நூல்களைத் தாங்கியபடி காத்து நிற்கின்றன.
விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் உள்ளூர்த் தேவைகளைத் தீர்த்தபின்னர் வெளி மாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு உற்பத்திகளைத் தந்துவந்தன. சிங்க இறால்கள், இறால்கள், கடலட்டைகள் போன்றவை கொழும்புக்கு ஏற்றுமதியாகின. 1983 இல் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் வட மாகாணமே அதிகளவு மீன் ஏற்றுமதியைச் செய்துவந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி, 1983 இல் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர், நாட்டின் 40% ஆன கடற்கரைப் பிரதேசத்தைக் கொண்ட வடமாகாணம் கடல் மீன் வர்த்தகத்தின் 40%த்தினை தன்னகப்படுத்தியிருந்தது. மீன்பிடி அமைச்சின் அறிக்கையின்படி 1983 இல், நாட்டின் அதியுச்ச மீன்பிடி யாழ்ப்பாணத்திலிருந்தே வந்தது. 2022 இல் இது 9 ஆவது இடத்திற்குப் போய்விட்டது.
போர்க்காலத்தில் எக்ஸ்போ எயர் (ExpoAir) நாளொன்றுக்கு 5 பறப்புகளைச் செய்து வந்தது என்கிறார் CCIY தலைவர் திரு.கே. வாகீசன். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த எக்ஸ்போ எயரின் பொது முகாமையாளராக இருந்த காரணத்தால் வாகீசனுக்கு இந்நிலைமை நன்றாகத் தெரிந்திருந்தது. கொழும்புக்கும் பலாலி விமான நிலையத்துக்குமிடையான பறப்புக்கான விமான டிக்கட்டின் விலை (One Way) ரூ.10,000. அந்த ‘50 இருக்கை’ விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாடான பொருட்களைத் தமது பொதிகளில் திணித்துக்கொண்டு வருவார்கள். இப்பொதிகளை இறக்கியதும், இன்றுவரை வெற்றிகரமாக இயங்கி வரும் ‘அன்னை சீஃபூட்ஸ்’ (Annai Seafoods) நிறுவனத்தின் ‘உடன் மீன்’களை ஏற்றிக்கொண்டு இவ்விமானங்கள் கொழும்பு திரும்பும் என்கிறார் திரு. வாகீசன். அத்தியாவசியப் பண்டங்களை வடக்கிற்கு ஏற்றி வரும் கப்பல்கள் வெங்காயம், மிளகாய், புகையிலை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பு மற்றும் திருமலைக்குத் திரும்பும்.

2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின், பல மாதங்களுக்கு வடக்கிலிருந்து கொழும்பிற்கு கப்பல்களும் விமானங்களும் அடிக்கடி செல்லும். இடிந்து தூர்ந்துபோன வடக்கின் கோவில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள், கதவுகள், யன்னல் சட்டங்கள், பித்தளை விளக்குகள் போன்ற பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புராதன கலைப்பொருட்களைக் கொழும்பிற்குக் கொண்டு சென்று அதிக விலைகளுக்கு விற்றார்கள். போரின் கொள்ளைகளாக இவை இருந்தாலும், உள்ளூர் திருடர்களால் வேறு தேவைகளுக்காகத் திருடப்பட்டோ அல்லது அதே கட்டடங்களில் இருந்தபடியே காலத்தால் அழிந்து சிதைந்து போவதையும்விட, கொழும்பிலோ அல்லது வேறு நாடுகளிலோ பழமைக்காகப் பாதுகாக்கப்படுவது மேல்.
சிறிய பலசரக்குக் கடைகள் யாழ்ப்பாணத்தில் முழுவதும் மீண்டும் தலைதூக்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவை ஒவ்வொன்றும், பல தலைமுறைகளாக, குடும்பங்களைத் தாங்கி வருபவை. ஓரிரு நாட்களுக்குத் தேவையான பண்டங்களை வாங்கும் நாட்கூலிக்காரருக்கு இது உகந்ததாக இருக்கிறது. சிறிய அளவு, அடிக்கடி வாங்குதல் போன்ற, பரிச்சயமான காரணங்களுக்காக இவ்வாடிக்கையாளர்களுக்கு, தேவைகளேற்படும் போது, கடை முதலாளிகள் கடன் கொடுப்பதும் வழக்கம்.
CCIY இன் தற்போதைய பங்காளிகளும் அங்கத்தவர்களும்
சம்மேளனம் ‘யாழ்ப்பாணத்தைத்’ தன் பெயரில் இணைத்துக்கொண்டிருந்தாலும் அது வடமாகாணம் முழுவதற்குமுரியது. 90%த்திற்கும் மேலான இதன் அங்கத்தவர்கள் தொழில்துறை உரிமையாளர்கள் என்பதோடு கூடவே வடமாகாணத்தின் மிகப்பெரிய வர்த்தகர்கள். CCIY இல் 275 பதியப்பட்ட அங்கத்தவர்கள் இருப்பதோடு 500 இற்கும் மேற்பட்டவர்கள் அதன் தபால் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் உணவுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுபவர்கள். தேசிய மற்றும் சர்வதேசிய அமைப்புகளுடனும் அரசாங்கத் திணைக்களங்களுடனும் இணைந்து CCIY தனது திட்டங்களை நிறைவேற்றுகிறது.
இவற்றில், இலங்கை வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தொழில்துறைகளினதும் கூட்டமைப்பு (Federation of Chambers of Commerce and Industry of Sri Lanka – FCCISL), இலங்கை வர்த்தக சம்மேளனம் (Ceylon Chamber of Commerce – CCC), இலங்கை தேசிய தொழில்துறை சம்மேளனம் (Ceylon National Chamber of Industries – CNCI), சிறீலங்கா தேசிய வர்த்தக சம்மேளனம் (National Chamber of Commerce of Sri Lanka – NCCSL), நுண், சிறு, மத்திம தொழில்துறைகளின் கூட்டமைப்பு (Confederation of Micro, Small, and Medium Industries – COSMI), தேசிய ஏற்றுமதிச் சம்மேளனம் (National Chamber of Exporters – NCE) ஆகியன தேசிய அமைப்புகளாகும்.
அவுஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் (Australian Tamil Chamber of Commerce – ATCC), கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் (Canadian Tamils’ Chamber of Commerce – CTCC), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization – ILO) ஃபிசிகாலிஷ் – டெக்னிஷெ புண்டர்ஸ்டாண்ட்ஸ்டால்ட் (Physikalisch – Technische Bundesanstalt – PTB of Germany) ஆகிய அமைப்புகளுடனும் CCIY அங்கத்துவத்தைப் பேணுகிறது.
அத்தோடு இலங்கை அரசின் அங்கங்களான தேசிய நிறுவன அபிவிருத்தி ஆணயம் (National Enterprise Development Authority – NEDA) தொழில்துறை அபிவிருத்தி சபை (Industrial Development Board – IDB), ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (Export Development Board – EDB) மற்றும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழியங்கும் சிறு நிறுவன அபிவிருத்திப் பிரிவு (Small Enterprises Development Division – SED) ஆகிய அமைப்புகளிலும் CCIY அங்கத்துவத்தைப் பேணுகிறது. மேற்குறிப்பிட்ட அங்கத்துவ அமைப்புகள் வழங்கும் நிதியைக் கொண்டு CCIY சிறு மற்றும் நுண் வியாபார முயற்சிகளுக்குப் பயிற்சிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதன் மூலம் அவற்றை மேம்படுத்தவும் அதன்மூலம் ஒட்டுமொத்த வடக்கின் தொழில்துறைகளை அபிவிருத்தி செய்யவும் உதவுகிறது. தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் (National Chamber of Exporters) புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது உட்படப் பல முயற்சிகளை CCIY மேற்கொண்டுவருகிறது. எமது உற்பத்தியாளர்கள் பலர் ‘நுண்’ வகையைச் சேர்ந்தவர்கள். தாமாக ஏற்றுமதி செய்யும் தரத்தை அடையாதவர்கள். இதனால் அவர்கள் தமது உற்பத்திகளைக் குறைந்த விலைக்கு இடைநிலை வியாபாரிகளுக்கு விற்றுவிட நேரிடுகிறது. இப்படியான ‘நுண்’ உறபத்தியாளர்களை ஒன்றிணைத்து அவர்களது உற்பத்திகளை 20 – 40 அடி கொள்கலன்களில் ஒன்றாக ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை CCIY இப்போது ஆராய்ந்து வருகிறது.
தெற்கத்திய அதிகாரத்துவப் பார்வை (Bureaucratic and Southern View)
வடமாகாண உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல மேற்கு மாகாணம் தவிர்த்து அனைத்து மாகாணங்களும் எதிர்கொள்ளும் வற்றாத பிரச்சினை இது. மாகாண அதிகராத்துவம், மத்திய அரசு மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனங்களிடையே முறையான ஆலோசனைகளும் செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. வடமாகாண தனியார் துறையை இவர்கள் எவருமே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள்.
கொழும்பைப் போலவே வடக்கின் தனியார் துறையும் மிகவும் பலம் வாய்ந்தது. மேற்கூறிய, கொழும்பைத் தளமாகக்கொண்ட நிறுவன அமைப்புகளிடையே பிரதிநிதித்துவத்தைப் பேணுவதால் வடக்கின் தனியார் உற்பத்திப் பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புண்டு. கொழும்பில் தனியார் துறையின் பிரதிநிதிகள் அங்குள்ள அரச மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி/ இறக்குமதி பிரதிநிதிகளுடன் சமூக ஊடாடல்களை மேற்கொள்கிறார்கள். அவர்கள் வாழிடமும் பேசும்மொழியும் ஒன்றாகவிருப்பது வணிக வெற்றிக்குத் துணைபோகிறது.
வடமாகாணம் உட்பட இதர மாகாணங்களின் தனியார் துறையின் பிரசன்னம் கொழும்பில் குறைவு. அவர்களது உண்மையான பலம் அறியப்படாமலிருக்கிறது. கொழும்பு மற்றும் சர்வதேசங்களைத் தளங்களாகக்கொண்ட அமைப்புகள் வடக்கிற்கு வரும்போது காகிதக் குறிப்பெடுப்பில் காட்டும் அக்கறையளவிற்கு பண்டங்களில் அக்கறை காட்டுவதில்லை. நான் கலந்துகொண்ட இப்படியான பல சந்திப்புகளின்போது தமிழ் பேசும் எவரையும் வருபவர்கள் உதவிக்கென அழைத்துவந்ததாகத் தெரியவில்லை; இதனால் உள்ளூரில் அகப்படும் மொழியறியா வல்லுநரிடம் மாட்டுப்பட நேரிடுகிறது.
வடமாகாண தனியார் துறையைத் தலைநகர வணிக நிகழ்வுகளில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்பதே CCIY இன் பிரதான நோக்கம். உதாரணத்திற்கு, வடக்கில் உற்பத்தி வலயங்களை உருவாக்கவேண்டும் என அரசாங்கம் பல வருடங்களாகத் தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறது. புதிய NPP அரசாங்கமும் இதே பேச்சை மீண்டும் ஆரம்பித்திருக்கிறது; இவர்களது பேச்சு ஓரளவு உளத்தூய்மை கொண்டது என நாம் நம்புவோம். இதற்கான வலயங்களைத் தெரிவு செய்வதில் வடமாகாணத்தின் தனியார் துறைக்குப் போதிய பங்களிப்பு இல்லை.
இதில், வடமாகாணத்தில் வதியும் எங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. சந்தர்ப்பத்தை இழப்பதற்கான சந்தர்ப்பத்தை வடமாகாணம் ஒருநாளும் இழந்ததில்லை. மிகவும் வளமான எமது சுற்றுலாத்துறை கவனிப்பாரற்றுச் சீரழிகிறது. யாழ்ப்பாணத்தின் திருவள்ளுவர் கலாசார மையம் கட்டி முடிக்கப்பட்டுப் பல வருடங்களாகியும் எப்போதாவது அரிதாகவே நிகழ்வுகள் நடக்கின்றன. பொதுத்துறை அமைப்புகளுடன் இணைந்து இயங்கும் இம்மையத்தை தனியார் துறையினர் தமது பொழுதுபோக்கின் மையமாக்கி நகர் முழுவதிலும் கலாசார நிகழ்வுகளை நடத்தி மகிழ முடியும். தனியார் மற்றும் பொதுத்துறைகளின் பிடியில் சிக்கியிருக்கும் பல தொழிற்சாலைகள் வெறுமையாகப் பரவிக் கிடக்கின்றன. அரிசி ஆலைகள், பட்டிக் ஆடைத் தொழிற்சாலைகள், பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் எனப்பல தொழிற்சாலைகள் முழுமையை அடைய முடியாமற் தவிக்கின்றன.

1999 இல் CCIY ஆரம்பிக்கப்பட்டது. 2024 இல் அதற்கு 25 வயது; விரைவில் 26 வயதை எய்தப் போகிறது. வடமாகாணத்தின் தனியார் துறைக்கு நிழல்கொடுக்கும் அதைப் பணத்தினால் மட்டுமல்ல திறமை, தொடர்பாடல் போன்றவற்றினால் செழுமைப்படுத்தப்பட்ட, தொடர் முதலீடுகளினால் மட்டுமே தக்கவைக்க முடியும்.
இக்கட்டுரை ஜூலை 24, 2025 அன்று வெளியான லங்கா பிஸினஸ் ஒன்லைன் இணையத்தளத்தில் பிரசுரமானது.



