யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1

August 9, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

யாபா படுனவில் அரச கட்டிடங்கள்

பல நிரைகளாக அமைந்துள்ளன. இக்

கட்டிடங்களில் பொன்னாலான கொடிகள்

பறக்க விடப்பட்டுள்ளன. அத்துடன் இக்

கட்டிடங்களில் விலை மதிப்பற்ற இரத்தினக்

கற்கள் இழைத்துக் காணப்பட்டமையால்

எங்கும் பிரகாசம் பொருந்தி விளங்குகின்றன.

இவை தரும் ஒளி, இவற்றன் அழகு

குபேரனுடைய அழகாபுரிக்கு இணையானது.”

Kōkila – Sandēsa, P.S. Perera ed. 1906. v. 243.

“மேற்கு – கிழக்கு ஆசிய உலகங்களையும், கிழக்கு ஆபிரிக்காவையும், அரேபியாவையும், மத்தியதரை நாடுகளையும், தென்சீனக் கடற் பகுதியையும் இணைத்த கடல்வழிப் பட்டுப் பாதையின் கேந்திர மையமாக அமைந்தது யாழ்ப்பாணம். சமீபகாலத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகள் – ஆரம்பகாலக் குடியிருப்புக் காலத்திலிருந்து பதினாறாம் நூற்றாண்டின் காலனியாதிக்கத் தொடர்புவரை – சர்வதேச வர்த்தக வலைப்பின்னலில், யாழ்ப்பாணம் அளித்த மகத்தான பங்களிப்பை விளங்கிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை நமக்கு அளித்திருக்கிறது.”

றொபின் கொனிங்ஹாம், UNESCO தொல்லியலாய்வாளர், From Buddha Rashmi Vesak – Volume 2018, Colombo, Sri Lanka.

யாழ்ப்பாணப் பட்டினம்

பண்டைக்கால யாழ்ப்பாணத்தை மணிமேகலை நாகநாடு, மணிபல்லவம், சம்புத்தீவு ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. ‘சம்பு’ என்ற பதம் நாவல் மரத்தையும் குறிக்கும். இனிய கனிகளையுடைய நாவல் மரத்தைப் பெயராகக்கொண்டு சிறப்புற்றிருக்கின்ற இத்தீவிதுவென “தீங்கனி நாவல் ஓங்குமித் தீவு” என மணிமேகலை (காதை 9, வரி 17) கூறுகிறது. சில தமிழ் இலக்கியங்கள் இந்தியத் துணைக்கண்டத்தை ‘நாவலந்தீவு’ எனக் குறிப்பிடுகின்றன.

‘ஜம்புத்வீப’ (Jambudvipa)  என்ற பதம் வடமொழிப் புராணங்களில் அண்டவெளியில் உள்ள ஒரு கற்பனைக் கண்டத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், அசோகச் சக்கரவர்த்தியின் பிராகிருதக் கல்வெட்டு ஒன்றும், மகாவம்சம் நூலும் (Mahavamsa III: 13)  இந்தியா ஒரு தீவாக இல்லாதபோதிலும், இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிப்பிட ‘ஜம்புத்வீப’ என்ற பதத்தை உபயோகித்திருக்கின்றன. 1801 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் வெளியிட்ட சுதந்திர அறிவிப்பும் ‘ஜம்புத்தீவுப் பிரகடனம்’ என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது. இதற்கும் மணிமேகலை குறிப்பிடும் ‘சம்புத்தீவிற்கும்’ ஒரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

பண்டைய யாழ்ப்பாணத்தின் வடக்கேயிருந்த முக்கிய துறைமுகம் ‘சம்புகோவளம்’ என அழைக்கப்பட்டது. கோவளம் என்றால் பெருவழி எனப் பொருள் தரும். பெருங்கடல் வழியாக சம்புத்தீவுக்குப் போகும் துறைமுகப் பெருவழி என்பதைக் காட்டும் காரணப்பெயராகவே ‘சம்புகோவளம்’ என்ற பெயர் அமைந்திருக்கிறது. இதை மகாவம்சம் பாளி மொழியில் ‘யம்புகோள பட்டன’ என அழைக்கிறது (Mahavamsa XI: 23). ‘யம்புகோவளப் பட்டினம்’ என்பதன் பாளி மொழி மாற்றமே இப்பதம்.

‘பட்டினம்’ என்பது கடற்கரையோரமாக அமைந்த வணிக நகரங்களைக் குறிக்கும் ஒரு சொற்பதம். “பட்டினம் என்பது பிற நாடுகளிலிருந்து வரும் பொருட்களைக் காணக்கூடிய ஒரு நகரம். இங்கே எல்லாவகை மக்களும் வாழ்வர். இங்கே கடைகளும், அவைகளில் விலையுயர்ந்த இரத்தினங்கள், தானியங்கள், சிறப்பான துணி வகைகள், வாசனைப் பொருட்கள் போன்ற வணிகப் பொருட்கள் நிரம்பியிருக்கும். இது கடலுக்கு அருகில் அமைந்து, கரையோரமாக விரிந்திருக்கும்” (Dagens, B.  2000: 95; மயூரநாதன், இ. 2025: 35). தமிழில் ‘பண்ணை’ என்ற சொற்பதம் பெருமளவில் பொருட்கள் விற்கும் சந்தையைக் குறிப்பிடவும் உபயோகிக்கப்படுகிறது.

பண்டைக்காலப் பெருங்கடல் பட்டுப்பாதை வர்த்தகத்தில் ஒரு முக்கிய கேந்திர மையமாக இருந்தது அன்று சம்புத்தீவு என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம். ஒன்றில் சம்புத்துறையிலோ அல்லது ‘பண்ணை’ என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத் துறையிலோ இருந்த சர்வதேச வர்த்தக பண்டமாற்று வாணிப நிலையம் ‘சம்புப் பண்ணை’ அல்லது ‘யம்புப் பண்ணை’ (Jambu Mart)  என அழைக்கப்பட்டதாக நம்ப இடமிருக்கிறது. 

மத்திய காலத்தில் (Medieval Period) இந்தியாவின் பல இடங்களிலிருந்தும், அரேபிய, பாரசீக, கீழைத்தேச நாடுகளிலிருந்தும் வியாபாரக் கப்பல்கள் வந்து வர்த்தகம் மேற்கொள்ளும் உலகச் சந்தையாக விளங்கிய யம்புப்பண்ணை, ‘யாப்பண்ணை’யாகி அதுவே இத்தீபகற்பத்தின் பெயராயிற்று என்பதே அறிவியல் ரீதியாக நாம் பெறக்கூடிய அனுமானமாகும். ‘யாப்பண்ணைப் பட்டினமே’ பின்னர் ‘யாழ்ப்பாணப் பட்டினம்’ ஆனது.

யம்புப்பண்ணை −−> யாப்பண்ணை −−> யாப்பாணம் −−> யாழ்ப்பாணம்.

‘யாப்பாணம்’ என்ற பெயர் முதலில் யம்புப்பண்னைக்கு (சம்புப்பண்ணைக்கு) கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது யாழ்ப்பாணப் பண்ணைக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். முதலில் ஒரு நகரத்திற்கு வழங்கப்பட்ட பெயர், அந்நாட்டுக்குரிய பெயராகி, பின்னொரு காலத்தில் அந்த நாட்டின் தலைநகரான மற்றொரு நகரத்திற்கும் கொடுக்கப்பட்டிருக்கலாம். உலகின் பல நகரங்கள் இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன.  

மேற்கூறப்பட்ட விளக்கம் நமக்கு இன்று கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பெறக்கூடிய ஓர் அனுமானமே தவிர (Evidence – based guess) இப்படியாகத்தான் நடந்தது என உறுதியாகக் கூற இயலாது.

ஆனால், யாழ்ப்பாணம் என்ற பெயர் இந்தப் பூமிக்கோ, அல்லது அதன் ஒரு பகுதிக்கோ வழங்கப்பட்டு வந்த பழமையான பெயர் என்பதை மறுக்க முடியாது. சில ஆய்வாளர்கள் கூறுவது போல 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் கொடுக்கப்பட்ட ‘ஜஃனாபட்டவ்’ என்ற பெயரிலிருந்தே ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் ஏற்பட்டது என்பது தவறான கருத்து. ஏற்கனவே இங்கே வழக்கத்திலிருந்த ஒரு பெயர் போர்த்துக்கேய மொழியின் ஒலியமைப்புக்கேற்ப அவர்களால் மாற்றப்பட்டிருக்கிறது.

திருமாணிக்குழிக் கல்வெட்டு

கி.பி. 1370 இல் குமாரகம்பணன் என்னும் விஜயநகர இளவரசன் மதுரைமேல் படையெடுத்து இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு, இழந்த சுதேச ஆட்சியைத் திரும்பவும் பாண்டிய நாட்டில் ஏற்படுத்தினான். முதலாம் தேவராயன் (கி.பி. 1422-1446) காலத்தில் விஜயநகர அரசு பிரம்மாண்டமான பேரரசாகப் பெருவளர்ச்சியடைந்தது. லக்கண தண்டநாயகன் என்பவன் மதுரையில் தேவராயனின் பிரதிநிதியாக ஆட்சிபுரிந்தான் (Nilakanta Sastri 2009: 165, 170).

நாம் இதுவரை அறிந்தவரையில் யாழ்ப்பாணப் பட்டினம் என்ற பெயர் இடம்பெற்ற முதலாவது கல்வெட்டு கி.பி. 1432 ஆம் ஆண்டிற்குரிய, மதுரையை ஆண்ட விஜயநகர இளவரசன் லக்கண தண்டநாயகனின் திருமாணிக்குழிக் கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகத்தில் ஈழத்திலுள்ள இப்பட்டினம் ‘இஆழ்ப்பாணாயந் பட்டினம்’ (யாழ்ப்பாணனாயன் பட்டினம்) எனக் கூறப்படுகிறது (South Indian Inscriptions, Vol. VII, No. 778; இந்திரபாலா, கா. 1972: 15, 23). இக்கல்வெட்டின்படி யாழ்ப்பாணம் ஒரு துறைமுகப் பட்டினம் என்பதும் அறியப்படுகிறது. 

அருணகிரிநாதர் திருப்புகழ்

கி.பி. 1356-1422 ஆண்டுகளுக்கிடையே வாழ்ந்த அருணகிரிநாதரும் அவர் எழுதிய திருப்புகழில் இப்பட்டினத்தை ‘யாழ்ப்பாணனாயன் பட்டினம்’ என்றே குறிப்பிடுகிறார் (திருப்புகழ் – பாடல் 759).

“ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு

 வாய்ப்பாய் வீசும் பொற்பரபை நெடுமதிள்

 யாழ்ப்பாணனாயன் பட்டின மருவிய பெருமாளே”

‘ஏற்பவர்கள் வரும்போது (அவர்களுக்கு) மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித்தரும் (கொடையாளிகள் உள்ள) பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த யாழ்ப்பாணனாயன் பட்டினத்தில் வீற்றிருக்கும் பெருமாளே’ எனப் பொருள் தரும். 

கைலாயமாலை

கைலாயமாலை கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் முத்துராசர் அல்லது முத்துராசக் கவிராசர் என்பவரால் எழுதப்பட்டது. இந்த ஏட்டில் நல்லூரிலிருந்த பண்டைய கைலாயநாதர் கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்த வரலாறும், இக்கோயிலைக் கட்டுவித்த சிங்கை ஆரியன் என்ற அரசன் நல்லூரைத் தலைநகராகக் கட்டுவித்த வரலாறும் கூறப்படுகிறது. கவிதை வடிவில் 310 கண்ணிகளைக் கொண்ட இக்கலிவெண்பாவில் யாழ்ப்பாணத்தின் தோற்றமும், நல்லூர் கந்தசாமி கோயில் புவனேகபாகு என்பவனால் சக ஆண்டு 870 இல் கட்டப்பட்டது என்ற செய்தியும் கூறப்படுகிறது (கைலாயமாலை – 1939 பதிப்பு).

யாழ்ப்பாணம் என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணத்தை கைலாயமாலை பின்வரும் பாடல் வரிகளால் அறியத்தருகிறது. 

“பாவலர்கள் வேந்தன் பகருமிவ் யாழ்ப்பாணன்

காவலன் றன்மீது கவிதை சொல்லி – நாவலர் முன் 

ஆனகவி யாழினை மைவுற வாசித்திடலும்

மானபரன் சிந்தை மகிழ்வாகிச் – சோனைக்

கருமுகில் நேருங் கரன் பரிசிலாக

வருநகர மொன்றை வழங்க – தருநகர

மன்றுமுதல் யாழ்ப்பாண மானபெரும் பெயராய்

நின்ற பதியி னெடுங்காலம் – வென்றிப் 

புவியரசன் போலப் புகழுடன் ஆண்ட

குவிராசன் காலங் கழிய”

-கண்ணிகள் 40-45.

இதை ஆய்வு செய்யுமிடத்து ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரை விளக்குவதற்காக முத்துராசக் கவிராசர் புனைந்த ஒரு கற்பனையாகவே இது காணப்படுகிறது. யாழ்ப்பாணன் என்ற பெயர் கொண்ட ஒரு கவிஞன் அரசன் முன்னினையில் யாழை வாசித்துக் கவிதைபாடி இந்த நகரத்தைப் பரிசிலாகப் பெற்றான் என்றும், அதன் காரணமாக இந்த நகரம் யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது என்றும் இந்த ஏட்டில் கூறப்படுகிறது. இப்பாடலில் இந்த அரசனின் பெயரோ, அல்லது அவன் எந்த நகரிலிருந்து அரசாண்டான் என்ற தகவலோ எதுவும் கூறப்படவில்லை.      

யாழ்ப்பாண வைபவமாலை

யாழ்ப்பாணத்தில் மாதகல் கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனப் புலவர், அவரது காலத்தில் டச்சுக்காரத் (ஒல்லாந்த) தளபதியாகவும், தேசாதிபதியாகவும் இருந்த மகெறல் என்பவரின் ஆலோசனைப்படி இந்த நூலை 1736 ஆம் ஆண்டில் எழுதினார் என அறிய முடிகிறது (யாழ்ப்பாண வைபவமாலை – 1949 பதிப்பு).

இந்த நூலின் முன்னுரையில் இராசமுறை, பரராசசேகரன் உலா, வையாபாடல், கைலாயமாலை ஆகிய நான்கு மூலநூல்களின் துணையோடு இதை எழுதியதாக மயில்வாகனப் புலவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் இராசமுறை, பரராசசேகரன் உலா ஆகிய இரண்டு நூல்களும் இன்று இல்லை. அழிந்துபோய்விட்ட இராசமுறை என்ற ஏடு யாழ்ப்பாணத்து அரசர்களின் பெயர்களையும், சாதனைகளையும் காலவரிசையில் கூறியிருந்த ஏடாகக் கருதப்படுகிறது. 

இந்த நூலின் ஆரம்பப் பகுதிகளிலுள்ள ஐதீகக் கதைகளையும், யாழ்ப்பாணத்திற்கு வெளியே இருந்த தென்இலங்கை அரசுகளைப் பற்றிய இடப்பெயர்களில் இடம்பெறும் தவறுகளையும் நீக்கிவிட்டுப் பார்க்குமிடத்து, இன்றிருக்கும் மூலநூல்களில் யாழ்ப்பாணத்தைத் தொடர்ச்சியாக ஆண்டுவந்த அரசர்களைப் பெயர் வரிசையிலும், அவர்களது சாதனைகளைப் பட்டியலிட்டும் சொல்லும் ஒரே நூல் என்ற வகையிலும் பெருமை பெறுகிறது யாழ்ப்பாண வைபவமாலை.

இந்த ஏட்டில் இடம்பெறும் பல மன்னர்களின் பெயர்கள் அவர்களது பட்டப்பெயர்களே அன்றித் தனிப்பட்ட பெயர்கள் அல்ல. உதாரணமாக ‘செகராசசேகரன்’ என்றால் உலகத்தின் அரசர்களிலெல்லாம் சிறந்தவன் என்றும், ‘பரராசசேகரன்’ என்றால் பரந்த நாடுகளின் அரசர்களிளெல்லாம் மேலானவன் என்றும் பொருள் தரும். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டே இந்த ஏட்டை ஆராய்ந்து அணுகவேண்டும். யாழ்ப்பாணம் என்ற பெயரின் தோற்றம் குறித்து மயில்வாகனப் புலவர் பின்வருமாறு உரைக்கிறார்: (யாழ்ப்பாண வைபவமாலை – 1949 பதிப்பு: பக் 23-24). ஏற்கனவே இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கைலாயமாலையில் கண்ட தகவலுக்கு மேலதிக விபரங்கள் சேர்க்கப்படுகிறது: 

“அக்காலத்தில் சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவிவீரராகவனென்னும் யாழ்ப்பாணன் செங்கட நகரிலிருந்து அரசாட்சி செய்யும் வாலசிங்க மகாராசன் பேரிற் பிரபந்தங்களியற்றி செங்கட நகரிக்குப் போய் ராச சமூகத்தில் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிகச் சந்தோசப்பட்டு இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் நாட்டை அவனுக்குப் பரிசிலாகக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு, இவ்விடத்தில் வந்திருந்து, வடதிசையிலிருந்து சில தமிழ்க் குடிகளை அழைப்பித்துக் குடியேற்றினான்.” 

இக்கதை யாழ்ப்பாணம் என்ற பெயரை விளக்குவதற்காகக் கூறப்பட்ட ஒரு ஐதீகக் கதையே என்றும், இதில் வரலாற்று உண்மை ஏதும் இல்லை என்பதும் வரலாற்று ஆசிரியர்களான பேராசிரியர் கா. இந்திரபாலா (யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்), பேராசிரியர் சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna) ஆகியோர்களின் ஆய்வு முடிபாகும்.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்

1928 ஆம் ஆண்டில் வண. ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண வைபவமாலை பற்றிய தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ என்ற நூலில் எழுதி வெளியிட்டார். யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த காரணத்தை அவரும் இந்நூலில் கூறியிருந்தார்:

“யாழ்ப்பாண அரசர் காலத்தில் வட இலங்கைத் தலைநகர் தமிழ் நூல்களில் யாழ்ப்பாணம் என்றழைக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. அந்நூல்களெல்லாம் சிங்கை நகரையே பெரும்பான்மையாகவும், நல்லூரைச் சிறுபான்மையாகவும் குறிக்கின்றன. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15-ம் நூற்றாண்டின் சிங்கள நூல்களிற்றான் முதன்முதற் காணப்படும். செலலிஹினி சந்தேச (28), கோகில சந்தேச (9) என்னும் இரு தூதுகளிலும் அது யாப்பாபட்டுன எனப் பெயரிடப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணப் பெயர் ‘யாப்பா-நெ’ என்னும் சிங்களப் பெயரீட்டினின்று உண்டானதென்பர் ஆராய்ச்சி வல்லோர். இதுவே எம்மதமுமாம்.”

“யாப்பா (யகபத்) என்னும் சொற்பகுதி ‘நல்ல’ என்னும் பொருளுள்ள ஓர் மொழியாம். ‘நெ’ என்னும் பகுதி ‘ஊர்’ எனப் பொருள்படும். ஆகவே ‘யாப்பா-நெ’ நல்லூர் எனும் தமிழ்ப் பெயருக்குச் சரியான சிங்களமாம். (இது ஸ்ரீ ஏ.எம். குணசேகர முதலியார் எடுத்துக்காட்டியது). எனவே ‘யாப்பா-நெ’, ‘யாப்பா பட்டுன’ என்பவையிரண்டும் நல்லூர், நல்லூர்ப் பட்டணம் எனுந் தமிழ்ப் பெயர்களையே காட்டிநிற்கும். யாப்பா-நெ எனும் பெயர்  யாழ்ப்பாணம் என மருவி வழங்கிய நாட்களிலே நம் புலவர்கள் யாழ்ப்பாணன் கதையை உருப்படுத்திவைக்க, அன்னோரைப் பின்பற்றிய மயில்வாகனப் புலவர் காலவரையறையிகந்து  கவிவீரராகவரெனும் சமீபகாலத்து யாழ்ப்பாணனை பழைய காலத்துக் கற்பனையிலுள்ள யாழ்ப்பாணனோடு சேர்த்து வைபவமாலையிற் புகுத்திவிடுகிறார்” (ஞானப்பிரகாசர் 1928: 17-18). 

குணசேகர முதலியாரின் விளக்கம்

சிங்கள அறிஞரான ஏ.எம். குணசேகர முதலியார் தாம் எழுதிய ‘இலங்கையின் இடப்பெயர் வரலாறு’ (பக். 130) என்னும் நூலில் ‘நல்லூர்’ என்ற வட இலங்கைத் தலைநகரத்தின் பெயரே சிங்களத்தில் ‘யாப்பநெ’ (நல்ல ஊர்) என மொழிபெயர்க்கப்பட்டு அழைக்கப்பட்டதாகவும், ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் ‘யாப்பநெ’ என்ற சிங்களப் பதத்தினின்று பெறப்பட்டதாகவும் முதன்முதலில் எழுதியிருந்தார். கோகில சந்தேஸ, செலலிஹினி சந்தேஸ ஆகிய நூல்களில் இது ‘யாபாபடுன’ எனக் குறிப்பிடப்படுவதாகக் கூறியிருந்தார்.  

‘யாழ்ப்பாணம்’ என ஏற்கனவே அழைக்கப்பட்ட பெயரே சிங்களத்தில் ‘யாப்பநெ’ ஆனது என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கையின் மேல்மாகாணத்தில் பாணந்துறையிலுள்ள ‘நல்லூர்’ என்னும் கிராமம் சிங்கள மொழியில் ‘நல்லூருவ’ என அழைக்கப்படும் பொழுது வட இலங்கையிலுள்ள நல்லூர் மட்டும் ஏன் சிங்களத்தில் மொழிபெயர்ப்புச் (Translation) செய்யப்பட்டது என்ற கேள்விக்கு அவரால் பதிலிறுக்க முடியவில்லை. பொதுவாக இடப்பெயர்களை எவரும் மொழிபெயர்ப்பு மாற்றம் செய்வதில்லை.

பரணவிதான விளக்கம்

பேராசிரியர் பரணவிதான எழுதிய ‘வட இலங்கையின் ஆரிய இராச்சியம்’ என்ற கட்டுரையில் ‘யாபாபடுன’ என்ற பெயரின் தோற்றத்தை ஆழமாக ஆய்வுசெய்திருக்கிறார். வட இலங்கையை ஆண்ட ஆரியசக்கரவர்த்திகளின் நாட்டையோ, தலைநகரத்தைப் பற்றியோ நிக்காய-சங்கிரஹா எதையுமே கூறவில்லை. ‘யாழ்ப்பாணம்’ பற்றிய தகவல் கி.பி. 1450 இற்கும், கி.பி. 1465 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட செலலிஹினி-சந்தேஸ, கிரா-சந்தேஸ, கோகில-சந்தேஸ ஆகிய சிங்களச் செய்யுள் நூல்களிலே காணப்படுகிறது. ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் அவரது சுவீகார மகனான இளவரசன் சப்புமால் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டமை பற்றிய புகழுரை இவற்றில் காணப்படுகிறது. இவை கூறும் சமகாலத் தகவல்கள் (Contemporary Accounts)  ஆரிய-சக்கரவர்த்திகள்  ‘யாபாபடுன’ எனப்பட்ட இன்றைய யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தவர்கள் என அறியத்தருகின்றன. “இலங்கையிலுள்ள எழுத்துப் பதிவுகளில் ‘யாபாபடுன’ என்ற பெயர் இந்த செய்யுட்களிலேயே முதலில் இடம்பெறுகிறது. ‘யாபாபடுன’ என்ற பெயர் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிப்பீடத்தை மட்டுமின்றி, அவர்களின் ஆட்சிப்பரப்பையும் குறிப்பிடுகிறது. இந்தப் பெயர் குறிப்பிடுவது போல இது ஒரு துறைமுக நகரமாகும். இலங்கையின் ஒரு பகுதியை ஆரியச் சக்கரவர்த்தி ஒருவர் ஆட்சி புரிந்தார் என்பதை 1344 இல் இலங்கைக்கு வருகைதந்த இபின் பத்தூதாவும் குறிப்பிட்டிருக்கிறார்” (Paranavitana, S. 1961: 174; Ibn Battuta 1953: 217).

பேராசிரியர் பரணவிதானவின் விளக்கம்: “சந்தேஸ நூல்கள் தரும் தகவல்களின்படி ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசபீடம் இருந்த ‘யாபாபடுன’ கடற்கரையிலிருந்த ஒரு துறைமுக நகரம். அதுவே இன்றைய யாழ்ப்பாணம்’ (Paranavitana 1961: 174). எனவே, ‘யாபாபடுன’ என்ற பெயர் உள்ளூரிலிருக்கும் துறைமுகமல்லாத நல்லூருக்குக் கொடுத்த பெயராக இருக்க முடியாது.”

கோகில சந்தேஸ காட்டும் யாழ்ப்பாணப் பட்டினம்

சப்புமால் குமாரய (செண்பகப் பெருமாள்) என்ற ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகுவின் யாழ்ப்பாணப் படையெடுப்பை ‘குயில்விடு தூதாக’ விவரிக்கும் கோகில சந்தேஸ என்னும் கவிதை நூல் யாழ்ப்பாணத்தை இவ்வாறு விபரிக்கிறது:

“யாபா படுனவில் அரச கட்டிடங்கள்

பல நிரைகளாக அமைந்துள்ளன. இக்

கட்டிடங்களில் பொன்னாலான கொடிகள்

பறக்க விடப்பட்டுள்ளன. அத்துடன் இக்

கட்டிடங்களில் விலை மதிப்பற்ற இரத்தினக்

கற்கள் இழைத்துக் காணப்பட்டமையால்

எங்கும் பிரகாசம் பொருந்தி விளங்குகின்றன. 

இவை தரும் ஒளி, இவற்றன் அழகு 

குபேரனுடைய அழகாபுரிக்கு இணை”

(Kōkila-Sandēsa, P.S. Perera ed. 1906. v. 243).

கோகில சந்தேஸ, செலலிஹினி சந்தேஸ, கிரா சந்தேஸ ஆகிய சிங்களச் செய்யுள் நூல்களில்தான் முதல் தடவையாக யாழ்ப்பாணப் பட்டினம் ‘யாபாபடுன’ என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த சந்தேஸ நூல்களில் சப்புமால் குமாரயவின் யாழ்ப்பாணப் படையெடுப்பே மத்திய நிகழ்வாக அமைந்திருக்கிறது. இந்தப் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு கி.பி. 1450 ஆகும். இந்த மூன்று சந்தேஸ நூல்களும் கி.பி. 1450 இற்கும் – கி.பி. 1465 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என பேராசிரியர் பரணவிதான குறிப்பிடுகிறார் (Paranavitana 1961: 174). இந்த நூல்கள் எழுதப்பட முன்னரே திருமாணிக்குழிக் கல்வெட்டிலும், திருப்புகழிலும் யாழ்ப்பாணம் என்ற பெயர் பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாண அரசும் சிங்கை நகரும்

இலக்கியச் சான்றுகள்

வட இலங்கை இராச்சியத்தின் பெயர் சிங்கை அல்லது சிங்கைநகர் என செகராசசேகரமாலை (செய்யுள் – 36), செகராசசேகரம், தக்ஷிணகைலாசபுராணம் (செய்யுள் – 109) ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் பொதுவாகச் சிங்கை நகரத்தின் ஆட்சியாளர் என்றே வர்ணிக்கப்பட்டனர். சிங்கை ஆரியன், சிங்கை நகராரியன், சிங்கை நாடான், சிங்கையெங்கோமான் எனப் பல விருதுகள் இம்மன்னர்களுக்கு இலக்கியத்திலும், சாசனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் பொதுவாகத் தலைநகரங்களின் பெயர்களே அவற்றின் இராச்சியங்களுக்கும் வழங்கிவந்துள்ளன. இவ்வழக்கத்தை ஒட்டி, சிங்கை என்ற பெயர் வட இலங்கை இராச்சியத்தின் தலைநகருக்கும், இராச்சியத்திற்கும் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆரியச்சக்கரவர்த்திகளின் விருதுகள் இடமளிக்கின்றன. பதினான்காம் நூற்றாண்டில் செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயரைத் தாங்கிய ஆரியச்சக்கரவர்த்தி ஒருவனின் காலத்தில் எழுதப்பட்ட ‘செகராசசேகரம்’ என்ற மருத்துவ நூலிலே ‘செயம்பெறு சிங்கை நாடன் செகராசசேகரன்’ என மன்னன் வர்ணிக்கப்பட்டுள்ளான். ஆகவே, சிங்கை அல்லது சிங்கைநாடு என்ற பெயர் வட இலங்கை இராச்சியத்தின் ஒரு பெயராக வழங்கப்பட்டிருக்க வேண்டும் (இந்திரபாலா, கா. 1972: 62).

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இலக்கியச் சான்றுகளிலும் சாசன ஆதாரங்களிலும்  சிங்கை நகர்,  யாழ்ப்பாணப் பட்டினம் (யாபா படுன), நல்லூர்  ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு “பொது வழக்கிலிருந்த தலைநகரத்தின் பெயர் ‘யாபா படுன’ (தமிழில் யாழ்ப்பாணப் பட்டினம்) என்றும், ‘சிங்கை நகர்’ என்ற பெயர் அரச சபையினராலும், புலவர்களாலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது” என்றும் பரணவிதான விளக்கமளித்துள்ளார் (Paranavitana, S. 1961: 201).  

கொட்டகம கல்வெட்டு

தென்னிலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டகம என்ற இடத்தில் H.C.P. பெல் என்ற ஆங்கிலேயத் தொல்லியலாளரால் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டு யாழ்ப்பாண அரசின் ஆரியச் சக்கரவர்த்தி ஒருவன் தென்னிலங்கை அரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி பெற்றதை எடுத்துரைக்கிறது. தமிழில் எழுதப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டிற்குரியதாகக் கணிக்கப்படுகிறது (Bell, H.C.P. 1904: 85; South Indian Inscriptions, Vol. IV, p. 496).

இக்கல்வெட்டில் காணப்படும் வாசகம் இது:

“சேது

கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் 

பங்கயக் கைமேற்றிலதம் பாரித்தார் – பொங்கொலிநீர்(ச்)

சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்

தங்கள் மடமாதர் தாம்.”

இக்கவிதையின் பொருள்: யாழ்ப்பாண அரசர்கள் சேது காவலர்கள் என அழைக்கப்பட்டமையால் ‘சேது’ என்ற பதம் அவர்களைக் குறிப்பிடுகிறது. அனுரேசர் – சிங்கள அரச தலைநகரான அநுரையில் (அநுராதபுரத்தில் அல்லது சிங்கள அரசர்களின் தலைநகரில்) வாழும் மடமாதர் பொங்குகடல் நீர் ஆர்ப்பரிக்கும் சிங்கை நகரத்து ஆரியனது பிரசைகள் அல்லர். அவர்களின் கண்களிலிருந்து உதிரும் நீர் கூரிய வேல்களைப் போல ஒளிருகிறது. அணிகலன்கள் அணிந்த தாமரை மலர் போன்ற கரங்களால் எள்நீரூற்றினார்கள் (இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்கு). (Rasanayagam, C. 1926: p. 364).

இக்கல்வெட்டுக் கூறும் பாடல் சிங்கை ஆரியனது படைகளோடு போரிட்டு இறந்த போர் வீரர்களுக்குச் செய்யப்பட்ட இறுதி மரியாதையை எடுத்துரைக்கிறது. தென்னிலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டகமவில் இது கண்டெடுக்கப்பட்ட படியினால் அங்கிருந்த ஓர் அரசனோடு சிங்கை நகரத்து ஆரியச்சக்கரவர்த்தி போரிட்டிருக்க வேண்டும். அநுராதபுரத்தில் சிங்கள அரசர்களின் ஆட்சி முடிவுற்ற பின்னரும் தென்னிலங்கையில் வேறு இடங்களிலிருந்த அரசர்களையும்  அநுரையர் என அழைக்கும் வழக்கம் இருந்தது. இதைத்தவிர வேறு எந்தத் தகவலையும் இதிலிருந்து பெறமுடியாமல் உள்ளது.  

பிற ஆதாரங்கள்

பதினைந்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஆட்சிபுரிந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனுடைய (1422-1461) கல்வெட்டுகளிலும் ‘சிங்கையும் அனுரையும்’ (அனுராதபுரம்) என இலங்கை அரசுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சான்றுகளை நோக்குமிடத்து யாழ்ப்பாண வரலாற்றின் முற்பட்ட கட்டத்திலே இராச்சியத்தின் தலைநகர் ‘சிங்கைநகர்’ என்ற இடம் என்பது தெளிவாகின்றது (Annual Report on Epigraphy, Madras 1912, No.4).

யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும். (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107).

இபின் பத்தூதா (கி.பி. 1344)

கி.பி. 1344 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அரேபிய யாத்திரிகரான இபின் பத்தூதா இலங்கை அரசனான ஆரியச் சக்கரவர்த்தியை ‘பத்தல’ என்ற நகரத்தில் சந்தித்ததாகவும், அந்த அரசனிடத்தில் ஏராளமான முத்துகள் இருந்ததாகவும், அந்த அரசனின் உதவியோடு அவனளித்த பல்லக்கில் பாதபங்கய மலைவரையும் பயணம் செய்ததையும் தனது பிரயாண ஏடான ‘ரெஹ்லா’வில் (Rehla) குறிப்பிட்டிருக்கிறார் (Husain, M. 1976: pp 217-224).  ஆரியச் சக்கரவர்த்தி என்ற அரசனின் பெயர் இடம்பெறும் ஆதி இலக்கியப்பதிவு இதுவாகும். ‘பத்தல’ என இபின் பத்தூதா குறிப்பிடும் நகரம், ‘பட்டினம்’ (யாழ்ப்பாணப் பட்டினம்) என்பதன் திரிபே என பரணவிதான கருதியுள்ளார் (Paranavitana, S. 1961: p. 208).

சிங்கை நகர் இருந்த இடம்

யாழ்ப்பாண வரலாற்றாசிரியர்களினிடையே சிங்கைநகர் எங்கே இருந்தது என்பது பற்றி வேறுபட்ட பல கருத்துகள் இருந்தது பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். சிலர் அது வல்லிபுரத்தில் இருந்ததாகவும், சிலர் யாழ்ப்பாண நகரில் இருந்ததாகவும், சிலர் பூநகரியில் இருந்ததாகவும் கூறியிருந்தனர். இன்னும் சிலர் நல்லூர்தான் சிங்கைநகர் என்றும் கூறியிருந்தார்கள்.

கி.பி. 1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாளின் படையெடுப்பைப் பற்றிக் கூறும் சந்தேஸ நூல்கள் யாழ்ப்பாண அரசர்களின் அரசிருக்கை இருந்த இடம் ‘யாபா பட்டுன’ என்றே கூறுகின்றன. அது முன்னர் ‘யாழ்ப்பாணப் பட்டினம்’ எனப்பட்ட இன்றைய யாழ்ப்பாணம் என பரணவிதான எடுத்துக்காட்டியிருந்தார் (Paranavitana, S. 1961: 174). கி.பி. 1450 இல் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்பதை சுவாமி ஞானப்பிரகாசரும் எடுத்துக்கூறியிருந்தார் (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107).

இதிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினம் இருந்த இடத்தில் அமைந்திருந்த அரசிருக்கையே இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் ‘சிங்கைநகர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மாற்றுக்கருத்துக் கூறுபவர்கள் எல்லா இலக்கிய ஆதாரங்களையும் சரிவரப் படித்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சமீபகாலங்களில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் இது ஒரு புராதன துறைமுக நகரம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.  

சப்புமல் குமாரய (செண்பகப் பெருமாள்) கி.பி. 1450-1467

கோகில சந்தேஸ, செலலிஹினி சந்தேஸ (Kokila-sandēsa, ed. 1906; Sǎlalihiņi-sandēsa. ed. 1925) நூல்கள் தரும் தகவலின்படி சப்புமல் குமாரய படையெடுத்து வந்த நாட்களில் இராச மாளிகைகளும், அரச கட்டிடங்களும் வரிசையாக யாபா பட்டுனவில்தான் (யாழ்ப்பாணப் பட்டினத்தில்) காணப்பட்டன. ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசிருக்கை இருந்த இடம் இந்த யாபா பட்டுன  என்றே இச் சந்தேஸ நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. ஆரம்பகால தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் சிங்கைநகர் தலைநகரமாகக் கூறப்பட்டுவதனாலும், சந்தேஸ நூல்களில் யாபாபட்டுன தலைநகரமாகக் கூறப்படுவதனாலும், யாழ்ப்பாணப் பட்டினத் துறைமுக நகரத்தின் மாற்றுப் பெயரே சிங்கைநகர் என அறிய முடிகிறது. சமீபகாலங்களில் இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இதை உறுதியாக நிரூபிக்கின்றன.

யாழ்ப்பாண அரசன் கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்த பின்னர் சப்புமல் குமாரய தனது அரசிருக்கையை நல்லூருக்கு மாற்றிக்கொண்டான் (ஞானப்பிரகாசர் 1928: பக். 106-107). சப்புமல் குமாரய நல்லூரிலிருந்து 17 ஆண்டுகள் அரசாண்ட பின்னர், கி.பி. 1467 இல் கோட்டே அரசுக்குத்  (Kotte Kingdom)  திரும்பி ஆறாவது புவனேகபாகு என்ற பெயரில் அந்த இராச்சியத்தின் அரசபதவியை ஏற்றுக்கொண்டான் (De Silva, K.M. 2005: 118).  1467 இன் பின்னர் நல்லூரில் அரசபதவியை ஏற்றுக்கொண்ட தமிழ் மன்னர்கள் தங்களது அரச பாரம்பரியத்தின் மரபுரிமைத் தொடர்ச்சியாக (Royal Heritage) தங்களை சிங்கை ஆரியர் என அழைத்துக்கொண்டார்கள்.

சப்புமல் குமாரய (செண்பகப் பெருமாள்) நல்லூரிலிருந்து ஆட்சிபுரிந்த காலத்தில் நல்லூர் சந்தசாமி கோயிலைக் கட்டுவித்தான் என அறிய முடிகிறது. இன்றும் கந்தசுவாமிக்குப் பூசை செய்யும்போது கூறப்படும் கட்டியத்தில் அக்கோயிலைக் கட்டுவித்தவர் ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு எனக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணக் கோட்டை

சூளவம்சம் என்னும் பாளி வரலாற்று நூல் கி.பி. பதினொராம் நூற்றாண்டில் பொலநறுவை அரசு மீது படையெடுத்துச் சென்ற தமிழ்ப்படை வீரர்கள் வட இலங்கையில் களி மண்ணினால் வட்டவடிவில் கட்டப்பட்ட கோட்டையில் தங்கியிருந்தார்கள் எனக் கூறுகிறது. இவ்வாதாரம் போர்த்துக்கேயருக்கு முன்னரே வட இலங்கையில் ஒரு கோட்டை இருந்ததை உறுதி செய்கிறது. தமிழ் – சிங்கள இலக்கியங்கள் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த இந்தக் கோட்டை பற்றிக் கூறுகின்றன. போர்த்துக்கேயர்கால ஆவணங்கள் யாழ்ப்பாண இராசதானியின் படை வீரர்களுக்கும் போர்த்துக்கேயப் படைவீரர்களுக்கும் இடையிலான முக்கிய போர்கள் கோட்டைப் பிரதேசத்தை அண்டிய இடங்களில் நடைபெற்றதாகக் கூறுகின்றன. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே தற்போதைய கோட்டை அமைந்திருக்கும் இடத்தில் களிமண் கொண்டு கட்டப்பட்ட கோட்டையொன்று இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. அக்கோட்டை இருந்த இடத்திலேயே 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், பின்னர் வந்த ஒல்லாந்தரும் (டச்சுக்காரர்) தற்போதைய கோட்டையை தமது நாட்டுக் கலை மரபில் கற்களைக் கொண்டு கட்டியிருக்கலாம் எனச் சிந்திக்க இடமுண்டு (புஷ்பரட்ணம், ப. 2023: 17).

போர்த்துக்கேயர் வருகை

1560 ஆம் ஆண்டு செப்டெம்பர் 7 ஆம் திகதி டொம் கொன்ஸரான்ரினோ டி பிரகன்ஸா என்பவன் 1200 போர் வீரர்களுடன் கடல் வழியாக வந்து பண்ணையிலும் (அன்றைய யாழ்ப்பாணத் துறை), கொழும்புத்துறையிலும் நங்கூரமிட்டான். மறுநாள் அவனது படைவீரர்கள் தலைநகரான நல்லூரை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். சங்கிலி மன்னனின் படைத்தலைவன் அவர்களை எதிர்த்துப் போரிட்டான். நல்லூர்ப் படைகள் அதிகமாக இருந்தபோதிலும் துப்பாக்கிகளை எதிர்த்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போர்த்துக்கேயப் படைகள் தலைநகரை அழித்து, அரச மாளிகையிலிருந்த செல்வங்களைக் கொள்ளையடித்தன (Peiris, Vol. I., 1992: 162-174).  

சங்கிலி மன்னன் போர்த்துக்கேயருக்கு துணைநின்றவர்களைக் கொன்றுவிட்டு, போர்த் தந்திர நடவடிக்கைகளுக்கு ஏற்ப கோப்பாய்க்கு பின்வாங்கியிருந்தான். போர்த்துக்கேயர் கோப்பாய்க்கு படைநடத்திச் சென்றபோது அங்கே அவன் இருக்கவில்லை. பச்சிலைப்பள்ளிக்கு இடம் பெயர்ந்திருந்தான். போர்த்துக்கேயர் துப்பாக்கி மருந்துகளும் தீர்ந்து, உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டமையால் கிடைத்த செல்வங்களை அபகரித்துக்கொண்டு திரும்பினார்கள் (De Queyroz 1992: 351-372).   

சங்கிலி மன்னன் 1566 இல் காலமானான். அவனைத் தொடர்ந்து காசி நயினார், பெரியபிள்ளை, அடுத்து சங்கிலியின் மகன் புவிராஜ பண்டாரம் ஆகியோர் பட்டத்து அரசர்களானார்கள். 

போர்த்துக்கேயரின் இரண்டாவது படையெடுப்பு 1591 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி டி மென்டொன்சா என்பவன் தலைமையில் 1400 போர்த்துக்கேய வீரர்களுடனும், 3000 சிங்களக் கூலிப்படைகளுடனும் நடைபெற்றது. நல்லூரில் நடைபெற்ற போரில் யாழ்ப்பாணப் படைகளால் துப்பாக்கிகளை எதிர்த்துப் போரிட முடியவில்லை. அரசன் புவிராஜ பண்டாரம் கைது செய்யப்பட்டு, சிரச்சேதம் செய்யப்பட்டான். போர்த்துக்கேயர், போர்த்துக்கேய அரசனின் மேலாட்சிக்கு உட்பட்ட பிரதிநிதியாக எதிர்மனசிங்கன் என்பவனை நியமித்துவிட்டு, கொள்ளையடித்த செல்வங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு திரும்பினார்கள் (Gunasingam, M. 2008: 139). 

1619 ஆம் ஆண்டில் காப்டன் பிலிப் டி ஒலிவேரா தலைமையில் போர்த்துக்கேயர் மூன்றாவது தடவையாக யாழ்ப்பாணத்தின் மேல் படையெடுத்து வந்தர்கள். வண்ணார்பண்ணையில் எதிர்ப்புத் தோற்கடிக்கப்பட்டது. போர்த்துக்கேயப் படைகள் நல்லூரை முற்றுகையிட்டார்கள். தப்பியோடவிருந்த அரசன் சங்கிலி குமாரனும் அவனது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். சங்கிலிகுமாரன் கோவாவிற்குக் கடத்தப்பட்டு அங்கே சிரச்சேதம் செய்யப்பட்டான் (Pieris, Vol II, 1992: 132-142).

யாழ்ப்பாணத் துறையிலிருந்த (பண்ணை) பண்டகசாலைப் பொருட்கள் சூறையாடப்பட்டன. அவற்றுள் 10,000 மூட்டை அரிசியும், 400 கன்டி புழுங்கல் அரிசியும் அடங்கும் (1 கன்டி – 500 இறாத்தல்). துறைமுகத்திலிருந்த இஸ்லாமிய வர்த்தகர்களுடைய கட்டடங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டன (De Queyroz 1992: 351-372).   

யாழ்ப்பாணத்தில், இன்றைய முத்திரைச் சந்தியருகில் மிகப்பெரிய இந்துக் கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலை போர்த்துக்கேயப் படைகள் தகர்த்தன. கல்லினால் கட்டப்பட்ட கோபுரங்களுடன், சுற்றிவர அரண்களும் கொண்ட இக்கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 

போர்த்துக்கேயர் கோட்டை

1620 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று பிலிப் டி ஒலிவேரா யாழ்ப்பாணப் பட்டினத்தில் ஒரு கற்கோட்டையைக் கட்ட ஆரம்பித்தான். சுண்ணாம்புக் கற்களையும், பவளப் பாறைகளையும் கொண்டு கட்டப்பட்ட இக்கோட்டையில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் மதில் சுவர்களும், உயர்ந்த கோபுரங்களும், கோயில் மண்டபங்களும் உடைக்கப்பட்டு அக்கற்கள் அனைத்தும் இக்கோட்டையைக் கட்ட உபயோகிக்கப்பட்டன. இக்கோட்டையை அவர்கள் ‘போர்த்துக்கேயர் காப்பரண் மாளிகை’ என அழைத்தர்கள். பின்னர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றிய டச்சுக்கார (ஒல்லாந்தர்) அதிகாரி வான் கோயன்ஸ் இக்கோட்டையைப் பற்றி பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்: 

“இந்தக் காப்பரண்மாளிகை இந்தியா முழுவதிலுமே உள்ள மிக உறுதிமிக்க மாளிகைகளில் ஒன்று (அக்காலத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது). சதுர வடிவான இக்கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் அரைவட்ட பிறைநிலா வடிவில் அமைந்த காப்பரண்கள் துருத்திக்கொண்டிருக்கின்றன. பற்றாவியாவில் உள்ள (டச்சுக்கார கிழக்கிந்திய தலைநகரான ஜகார்த்தா) காப்பரணைக் காட்டிலும் இது பெரியது. கடற்கரையில் உள்ள உயர்வான இடத்தில் அமைந்த இந்த காப்பரண் மேல் ஏற இயலாது. நாங்கள் கொழும்பைக் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேய அதிகாரி அந்தோனியோ டி அமிரால் இக்கோட்டைச் சுவர்களை திருத்தியமைத்திருக்கிறார். கோட்டையின் வெளிச் சுவர்கள் 16 அடி அகலமானவை. ஒரு பக்கச் சுவர் கடலைப் பார்த்திருக்கிறது. கோட்டையை முற்றுக்கையிட்டு உள்ளே இருப்பவர்களைப் பட்டினி போடுவதன் மூலமே இதை அடைய முடியும்” (Translated from Dutch to English by Paul. E. Pieris).

1622 இல் இக்கோட்டையைக் கட்டி முடிந்ததும் நல்லூரிலிருந்த தலைநகரம் இக்கோட்டைக்கு மாற்றப்பட்டு, இக்கோட்டை நகரம் ‘யஃவனாபற்றயோ’ (Jafanapatao) என அழைக்கப்பட்டது. இது ‘யாழ்ப்பாணப் பட்டினம்’ என்பதன் திரிபாகும்.      போர்வீரர்கள் கோட்டையினுள்ளே அமர்த்தப்பட்டார்கள். இக்கோட்டைக்குள் அரச அலுவலகங்கள், மாதா கோயில் மற்றம் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன. முத்திரைச் சந்தியில் யமுனா ஏரிக்கருகில் நல்லூர்க் கந்தசாமி கோயில் இருந்த இடத்தில் ஒரு கத்தோலிக்க ஆலயம் கட்டப்பட்டது. 1632 ஆம் ஆண்டளவில் கோட்டைக்குள் இருந்த நகரம் லங்கரோட்டி டி சீக்ஸாஸ் என்பவனால் பூர்த்தியாக்கப்பட்டது (Abeyasinghe T. 1986).

டச்சுக்காரர் காலம் 1658-1795

1658 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி றிக்குளொவ் வான் கோயன்ஸ் என்ற அதிகாரி தலைமையில் டச்சுக்கார வீரர்கள் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகையிட்டார்கள். அக்கோட்டையை ஆராய்ந்த வான் கோயன்ஸ், அதைக் தாக்கி அழிக்க இயலாது என்பதை உணர்ந்து அதை நீண்டகால முற்றுகை செய்ய முடிவெடுத்தான். போர்த்துக்கேயரைப் பணிய வைக்க பட்டினி போடுவதே சிறந்த ஆயுதம் என முடிவெடுத்தான். அந்த முற்றுகை 99 நாட்கள் நீடித்தது. உணவு, குடிநீர், மருந்து எதுவும் கிடைக்காத போர்த்துக்கேய வீரர்கள் 24 ஜூன் 1658 இல் சரணடைந்தர்கள் (De Queyroz, 1992: 996-998).

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டதும் டச்சுக்காரர், போர்த்துக்கேயர் கோட்டையை இன்னும் பெரிதாக அமைக்க முடிவெடுத்தார்கள். சதுர வடிவிலிருந்த கோட்டையை ஐந்து முனைகள் கொண்ட தாரகை வடிவில் 62 ஏக்கர் அளவை உள்ளடக்கிய பரப்பில் திரும்பக் கட்டினார்கள். வெளிச் சுவர்கள் அடியில் 40 அடி அகலத்திலிருந்து ஆரம்பித்து மேலே போகப்போகக் குறுகி 30 அடி உயரத்தில் 20 அடி அகலத்தைக் கொண்டிருந்தது. சுவர் மேலே போகப்போக வெளிப்பக்கமாகச் சரிந்திருந்தது. அதன்காரணமாக சுவரின் அடிவரையும் வெளியே வருபவர்களைப் பார்க்க முடிவது மல்லாமல், அச்சுவரில் ஏறுவதும் இயலாத காரியம். சுவரின் உச்சியில் நான்கு பக்கங்களிலும் பீரங்கித் தளங்களும், காவல் கோபுரங்களும், சுவரின் உள்ளே அமைந்து நிலத்தின் கீழாகச் செல்லும் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன (Nelson, 1984).

போர்த்துக்கேய மற்றும் டச்சுக்கார பதிவேடுகள் அவர்கள் யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களைப் பற்றிப் பதிவு செய்திருக்கின்றன. வேலணை, நயினாதீவு, எழுவைதீவு, அனலை தீவு ஆகிய இடங்களிலிருந்து படகுகளிலும், கப்பல்களிலும் பவளக்கற்கள் (Coral Stones) கொண்டுவரப்பட்டிருக்கின்றன. காங்கேசன்துறையிலிருந்து பண்ணைவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதேச மக்கள் கைத்தாங்கலாக சுண்ணாம்புக் கற்களை கொண்டுவந்திருக்கிறார்கள். பல கிராமங்களில் சுண்ணாம்புச் சூளைகள் அமைக்கப்பட்டு, சுடவைத்த சுண்ணாம்புக்கல் பொடிசெய்யப்பட்டு, கோவாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சர்க்கரையும், சுதேச குளங்களிலிருந்து பெற்ற களிமண்ணும் சுண்ணாம்புக்கல் பொடியுடன் கலந்து மதில் சுவரின் கற்களை இணைக்கும் சாந்துப் பூச்சுகளாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது (Nelson, 1984).

கோட்டைக்குள் 300 தென்னை மரங்கள் நடப்பட்டன. இராணுவ தளபதி, கப்பித்தான், கூப்மன் மற்றும் அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வீடுகள் அமைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் கோட்டைக்கு வெளியே நகரம் விரிவுபடுத்தப்பட்டது. சுற்றுச்சுவர் இல்லாத நகர்ப்பகுதி ‘பெற்றா’ (பேட்டை என்ற தமிழ்ப் பதத்திலிருந்து பெற்றுக்கொண்ட புறநகர்ப் பெயர்) எனப்பட்டது (Indrapala, K. 1998: 80).

குறூஸ் கேர்க் கிறிஸ்தவத் திருக்கோயில் 

1706 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் யாழ்ப்பாணம் கோட்டைக்குள்ளே கட்டப்பட்ட ‘குறூஸ் கேர்க்’ தேவாலயமே இலங்கையில் முதன்முதலாகக் கட்டப்பட்ட புரொட்டஸ்தாந்து ‘சேர்ச்’ என நம்பப்படுகிறது. ‘குறூஸ் கேர்க்’ என்றால் கிரேக்க மொழியில் ‘சிலுவை வடிவான திருக்கோயில்’ எனப் பொருள்படும். இதைக் கட்டுவித்த டச்சுக்காரத் தளபதி அடம் வான்டர் டுயன் என்பவனாவான். இதை அமைத்துக் கொடுத்து கட்டிமுடித்த கட்டடக் கலைஞர் மாட்டினஸ் லூஸேக்கா என்பவராவார். அக்காலத்தில் இது மிகப் புகழ்பெற்று விளங்கிய ஒரு தேவாலயமாகும். (De Silva, R. 1957).

கட்டட அமைப்பு

இத்தேவாலயத்தின் முக்கியத்துவமே இதன் கட்டட அமைப்பு முறைதான். நடுவில் உள்ள ஒரு சதுரமான நடு மண்டபத்திலிருந்து நான்கு திசைகளிலும் ஒரே நீளமான நான்கு பக்க மண்டபங்கள் சிலுவை வடிவில் நீண்டு செல்லும். இதனால்தான் இத்தேவாலயம் ‘குறூஸ் கேர்க்’ (சிலுவை வடிவான) என அழைக்கப்பட்டது. பவளப்பாறைக் கற்களினாலான பக்கச் சுவர்கள் ஐந்து அடி அகலமானவை. தூண்கள், மேல் வளைவுக் கற்கள், வாசல் வளைவு முகடுகள் என்பன இறக்குமதி செய்யப்பட்ட டச்சுக் கற்களினால் செய்யப்பட்டவை. மண்டபங்களின் நிலம் இரண்டு சதுர அடிப் பளிங்குக் கற்கள் பதித்தவை. சாளரங்கள் பலவகையான கண்ணாடித் துண்டுகளால் ஆனவை. இத்தேவாலயத்தில் ஒரே சமயத்தில் 600 பேர்கள் வரை தொழுகையில் ஈடுபட்டிருக்க முடியும் எனக் கூறப்படுகிறது (The Kruys Kerk, 1967), 

பிரித்தானியர் காலம் 1795-1948

1795 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் தலைநகர் அமைத்திருந்த டச்சுக்கார அரசின் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன. தொடர்ந்து அதே ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி பிரித்தானியர்கள் யாழ்ப்பாணத்தை டச்சுக்காரரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார்கள்.

பிரித்தானியர்களின் ஆட்சியின்கீழ் யாழ்ப்பாணம் ஒரு மாகாணத் தலைநகரமாக வளர்ச்சி பெற்றது. அரச அலுவலகங்கள், அரச அதிகாரிகளின் வதிவிடங்கள், இராணுவ வீரர்களின் உறைவிடங்கள், நீதிமன்றங்கள், தபாற் கந்தோர்கள் மற்றும் முக்கிய கட்டடங்கள் அனைத்தும் கோட்டைக்கு வெளியிலேயே நிறுவப்பட்டன. கோட்டையைக் காட்டிலும் வெளி நகரமே முக்கியத்துவம் பெற்று மேலும் மேலும் விஸ்தீரணமடைந்தது. கி.பி. 1800 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண நகரில் அரச உத்தியோகத்தர்களையும், இராணுவ வீரர்களையும் தவிர ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் குடியிருந்தார்கள். பேர்ஸிவல் டைக் என்ற ஆங்கில அதிகாரி பழயை பூங்காவை (Old Park) தனது சொந்தச் செலவில் வாங்கி அதை யாழ்ப்பாண மக்களுக்கான விக்ரோறியா மகாராணியின் கொடை எனப் பிரகடனம் செய்தார். 

புதிய கல்லூரிகள், புதிய தேவாலயங்கள், புதிய வீதிகள், புதிய அரச திணக்களங்கள் என்பன பத்தென்பதாம் நூற்றாண்டின் யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தை மாற்றியமைத்தன. 1816 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண முற்றவெளியிலிருந்த லுத்தேரன் திருக்கோயிலையும், அருகிலிருந்த பெற்றோரற்ற பிள்ளைகளின் வளர்ப்பு நிலையத்தையும் விலைக்கு வாங்கிய பிரித்தானிய மிஷனரிமார் அதற்கு ‘யாழ்ப்பாண வெஸ்லியன் ஆங்கிலக் கல்லூரி’ எனப் பெயரிட்டார்கள். இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரி என்ற பெருமை இதற்கு உண்டு. வண. பிதா. ஜேம்ஸ் லிஞ்ச் இதன் முதலாவது ‘பிரின்ஸிப்பல்’ என்ற பெருமைக்கு உரியவர். இக்கல்லூரியின் பெயர் பின்னர் ‘யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி’ என மாற்றப்பட்டது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் ஒரு வைத்தியசாலை நிறுவப்பட்டது. 1906 இல் இது அரசினால் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரித்தானியர்கள் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் ஒரு மாற்றமும் கொண்டுவரவில்லை. அதற்குள் சிறைச்சாலை மட்டுந்தான் இருந்தது. அரச அலுவலகங்கள் பழைய பூங்கா அருகாமையில் ‘கச்சேரி’ என்ற பெயரில் மக்கள் இலகுவாகச் சென்று வரும் வகையில் இயங்கி வந்தன. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இந்து ஆலயங்களை திருப்பிக்கட்டுவதற்கான அனுமதியை பிரித்தானியர்கள் வழங்கியிருந்தார்கள். யாழ்ப்பாணத்துக் கிராமங்களிலெல்லாம் பெரிதும் சிறிதுமாகப் புதிய புதிய கோயில்கள் கட்டப்பட்டன.

யாழ்ப்பாணத் துறைகளிலிருந்து புகையிலை, வெங்காயம் போன்ற உள்ளூர் விளைபொருட்கள் கொழும்புக்கும், தென்னிந்தியத் துறைமுகங்களுக்கும் ஏற்றுமதியாயின. பிரித்தானியர் ஆட்சியில் கடவுச்சீட்டு (Passport) இல்லாமலேயே மக்கள் இந்தியாவுக்குச் சென்றுவரக்கூடியதாக இருந்தது.

சுயராச்சியமும் பின்விளைவுகளும் கோட்டைத் தொல்லியல் பின்புலமும்

பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுயராச்சியமடைந்த பின்னர் 1948 ஆம் ஆண்டில் 900,000 இந்தியத் தமிழர் பிரஜா உரிமை இழந்ததும், 1952 இல் தமிழர் பாரம்பரியப் பிரதேசங்களில் 250,000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதும், 1956 இல் ‘சிங்களம் மட்டும்’ இந்த நாட்டின் அரசகரும மொழியாக்கப்பட்டதும், 1958 இன் தமிழர் எதிர்ப்பு அராஜகத்தில் 3,000 தமிழர்கள் உயிரிழந்ததும், 10,000 தமிழர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அகதிகளாகக் கடத்தப்பட்டதும், 1974 இல் மாணவர்களின் இலங்கைச் சர்வகலாசாலை அனுமதிக்கு ‘தரப்படுத்தல்’ அறிமுகப்படுத்தப்பட்டதும், 1981 ஆம் ஆண்டு ஜுன் முதலாம் திகதி நள்ளிரவில் தமிழ் மக்களின் அறிவியல் பொக்கிஷமான, தென்னாசியாவின் தலைசிறந்த யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதும் போன்ற தமிழர் ஒடுக்குமுறை விவகாரங்களை இங்கே விவரமாகக் கூறவேண்டியதில்லை. ஆனால் யாழ்ப்பாணக் கோட்டையின் அழிவிற்கான பின்னணிக் காரணிகளை ஆராய்பவர்களுக்கு இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும், அதன் எதிர்விளைவுகளையும் பற்றிய தகவல்களும் வேண்டியிருக்கிறது.

ஜுலை 1984 இற்கும், ஆகஸ்ட் 1987 இற்குமிடையில் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிலைகொண்டிருந்த இலங்கை அரச இராணுவத்தினருக்கும் வெளியிலிருந்து தாக்கிய விடுதலைப்புலி வீரர்களுக்குமிடையிலான தொடர்ந்த போரில் கோட்டைக்குள்ளிருந்த பல கட்டடங்கள் சேதமடைந்தன. 1990 ஆம் ஆண்டில் இந்திய சமாதானப் படையினர் யாழ்ப்பாணக் கோட்டையை இலங்கை அரச இராணுவ வீரர்களிடம் கையளித்துவிட்டு விலகிய பின்னர், ஜுன் 1990 இல் விடுதலைப் புலிகள் மீண்டும் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகையிட்டார்கள். அவர்கள் உபயோகித்த பீரங்கிக் குண்டுகளும், ‘பஸிலன் 2000’ குண்டுகளும் கோட்டைக்குள்ளிருந்த புராதன கட்டடங்களுக்குப் பலத்த சேதத்தை விளைவித்தன. 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி விடுதலைப் புலியினர் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஐந்து ஆண்டுகள் யாழ்ப்பாணக் கோட்டை புலிப்படை வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது பெரியதொரு படையெடுப்பை மேற்கொண்டவேளை, விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் கோட்டையை விட்டுவிட்டு கிளிநொச்சியில் தங்களது புதிய தளத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். (Kunarasa, K. 1995: 78-104).

மே மாதம் 2009 இல் முள்ளிவாய்க்காலில், இலங்கை அரச படைகளின் விடுதலைப் புலிகளுக்கெதிரான வெற்றியைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் டச்சுக்கார அரசு யாழ்ப்பாண டச்சுக் கோட்டையின் புனர்நிர்மாண வேலைகளுக்கான நிதியைத் தந்துதவ முன்வந்தது. இலங்கை அரசின் தொல்லியல் துறையினர் ‘ஸ்ரீலங்கா – நெதர்லாந்து திட்டம்’ என்ற பெயரில் இதை நிறைவேற்றும் பொறுப்பை மேற்கொண்டார்கள்.

புதிய கட்டடங்களுக்கு அத்திவாரம் போடுவதற்கு முன்னர் யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளே சில மேலாய்வுகளையும், அகழ்வாய்வுகளையும் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் இலங்கை அரசின் அனுமதியைக் கேட்டிருந்தார்கள். போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த இடம் ஒரு பிரபல துறைமுகமாக இருந்ததற்கான சான்றுகளைப் பெறக்கூடிய ‘ஆதாரமீட்பு நடவடிக்கையாக’ (Rescue Operation) இது இருக்கும் என விண்ணப்பித்திருந்தார்கள். இலங்கை அரச தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொள்ள அரசு அனுமதித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளமாணித்துறை மாணவர்கள் பேராசிரியர் புஷ்பரட்ணம், உதவி தொல்லியல் ஆணையாளர் கலாநிதி நிமல் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

இந்த முதலாவது ஆய்வுகளில் கண்ட கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் தொடர்ந்தும் இந்த இடத்தில் அறிவியல் ரீதியான ஓர் அகழ்வாய்வை மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தியது. பிரித்தானிய டர்ஹாம் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரும், UNESCO தொல்லியல் நன்னெறிக்கோட்பாட்டின் தலைவருமான றொபின் கொனிங்ஹாம் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்விற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரோடு இலங்கை அரசின் மத்திய கலாசார நிதிக்காப்பாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பட்டதாரி மாணவர்கள், கெலனியா பல்கலைக்கழக மேற்பட்டதாரி நிறுவன மாணவர்கள், பலதரப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், சாதாரண தொழிலாளர் என நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்தார்கள்.  

தொடரும்.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்