லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - அச்சுவேலி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – அச்சுவேலி

August 6, 2025 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அச்சுவேலிக் கோவிற்பற்றில் வடக்குப் புரொவீன் (Wadakoeprowene), தெற்குப் புரொவீன் (Tickoeprowene), நவக்கீரி, பத்தவேனி, கதிரிப்பாய், தம்பாலை, வளலாய் ஆகிய துணைப்பிரிவுகள் உள்ளன (படம்-1). இங்கே அச்சுவேலி என்ற பெயரில் துணைப்பிரிவுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், வடக்குப் புரொவீன், தெற்குப் புரொவீன் ஆகிய பெயர்கள் முறையே அச்சுவேலி வடக்குப் பகுதி, அச்சுவேலி தெற்குப் பகுதி ஆகியவற்றைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. இங்கே புரொவீன் என்பது தமிழ்ச் சொல் அல்லவெனினும், அவற்றின் அமைவிடம் குறித்த அடைமொழிகளை ‘வடக்கு’, ‘தெற்கு’ எனத் தமிழிலேயே பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

எல்லைகள்

அச்சுவேலிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும், கிழக்கு எல்லையில் தொண்டைமானாறு கடல்நீரேரியும், தெற்கே புத்தூர்க் கோவிற்பற்றும், மேற்கே தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும் உள்ளன. இக்கோவிற்பற்றின் எல்லைக்குள் வடக்குப் பகுதியில் பாக்கு நீரிணையை அண்டி மேற்கில் வளலாயும் கிழக்கில் தம்பாலையும் உள்ளன. இவற்றுக்குத் தெற்கே, வடக்கிலிருந்து தெற்காகக் கதிரிப்பாய், பத்தவேனி, வடக்குப் புரொவீன், தெற்குப் புரொவீன் ஆகிய துணைப்பிரிவுகள் வரிசையாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது (படம்-2). இதன்படி இக்கோவிற்பற்றின் எல்லாத் துணைப் பிரிவுகளுமே கடலை அல்லது கடல்நீரேரியை எல்லைகளாகக் கொண்டுள்ளன.

ஒல்லாந்தர் கால அச்சுவேலிக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதி தற்காலத்தில் கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது. உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் இது வலிகாமம் வடக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அடங்குகிறது.

வீதிகள்

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வல்லையூடாகப் பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியும், அச்சுவேலியிலிருந்து வல்லை வரை செல்லும் வீதியும், அச்சுவேலிச் சந்தியிலிருந்து தென்கிழக்காகச் சென்று யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியை ஆவரங்காலில் சந்திக்கும் வீதியும், மயிலிட்டியிலிருந்து அச்சுவேலிக்குச் செல்லும் வீதியும் அச்சுவேலிக் கோவிற்பற்றுக்குள் இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட நான்கு வீதிகளுள் முதல் மூன்றும் தற்கால வீதிகளுடன் பெருமளவுக்குப் பொருந்தி வருகின்றன. சென்ற கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் பிரித்தானியர் காலத்தில் மயிலிட்டிக்கும் அச்சுவேலிக்கும் இடையில் பலாலியில் விமான நிலையம் உருவானதால், மயிலிட்டியையும் அச்சுவேலியையும் இணைத்த வீதியின் தடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். தற்கால வீதி அமைப்பின்படி, மூன்றாவதாகக் குறிப்பிட்ட அச்சுவேலி – ஆவரங்கால் வீதி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியை ஆவரங்காலில் சந்திக்கிறது. ஆவரங்கால் புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் அடங்கிய ஒரு துணைப்பிரிவு. ஆனால், இந்தச் சந்திப்பு அச்சுவேலித் தெற்குப் பிரிவுக்குள் இருப்பதாக நிலப்படம் காட்டுகிறது. இது நிலப்படத்தின் துல்லியக் குறைபாட்டால் பிழையாகக் குறிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. உண்மையில் இச்சந்திப்பைப் புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் காட்டியிருக்க வேண்டும்.

கட்டடங்கள்

இக்கோவிற்பற்றிலும் வழமைபோலத் தேவாலயம், தேவாலய இல்லம் ஆகியவற்றைக் குறித்துக் காட்டியுள்ளனர். இவை தவிர, இரண்டு அம்பலங்களையும் (மடங்கள்) காண முடிகிறது. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

மேற்படி கட்டடங்கள் வடக்குப் புரொவீன் எனக் குறித்துள்ள அச்சுவேலி வடக்குத் துணைப் பிரிவில் உள்ளன. இவை, மயிலிட்டி – அச்சுவேலி வீதி, அச்சுவேலி – வல்லை வீதி, ஆவரங்கால் – அச்சுவேலி வீதி ஆகியவை சந்திக்கும் இடத்துக்கு அண்மையில் அமைந்துள்ளன. போல்தேயஸ் பாதிரியாரின் நூலில் உள்ள விவரங்களின்படி தேவாலயம் 200 பேரைக் கொள்ளத்தக்க கட்டடம் என்றும், முருகைக்கற்களால் கட்டப்பட்டது என்றும் அறியமுடிகிறது.1 இக்கட்டடம் தமது காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது என்று போல்தேயஸ் பாதிரியார் எழுதியிருக்கிறார் (படம்-3). அதனால், இது போர்த்துக்கேயர் காலத்தில் முற்றுப்பெறாத கட்டடமாகவோ மண், ஓலை முதலிய நிரந்தரமற்ற கட்டடப்பொருள்களினால் ஆன கட்டடமாகவோ இருந்திருக்கக்கூடும். போல்தேயஸ் பாதிரியார் 1665 வரையே யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தார் என்பதால் அதற்கு முன்னரே அவர் விவரித்த கட்டடம் முற்றுப்பெற்றிருக்கும் எனலாம். 

அச்சுவேலித் தேவாலயத்தோடு இணைந்த தேவாலய இல்லத்தை நிலப்படம் குறித்துக் காட்டுகின்றபோதும் போல்தேயஸ் பாதிரியாரின் நூலில் தேவாலய இல்லத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. அதே நூலில் உள்ள அச்சுவேலித் தேவாலயத்தைக் காட்டும் படமும் வேறு சில தேவாலயங்களில் இருந்தது போன்ற பெரிய தேவாலய இல்லக் கட்டடத்தைக் காட்டவில்லை.2 தேவாலய இல்லம் போல்தேயஸ் பாதிரியாரின் காலத்தில் சிறிய கட்டடமாக இருந்திருக்கக்கூடும். 

தன்னுடைய வீடும் தோட்டமும் அச்சுவேலியில் இருந்தது பற்றியும் போல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.3 இதிலிருந்து அவர் ஒரு காலத்தில் அச்சுவேலியில் இருந்த சிறிய குருமனையில் வாழ்ந்தது தெரிகிறது. தலைமைத் தேவாலயமும் வசதியான குருமனையும் தெல்லிப்பழையில் இருந்தபோதும், சமய விவகாரங்கள் தொடர்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த போல்தேயஸ் பாதிரியார் அச்சுவேலியில் ஏன் வசித்தார் என்பதோ, எக்காலத்தில் அவர் அங்கே தனது இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்பதோ, எவ்வளவு காலம் அவர் அங்கே வசித்தார் என்பதோ தெளிவாகத் தெரியவில்லை.

ஒல்லாந்தர் காலத் தேவாலயத்தின் அழிபாடு இன்றும் அச்சுவேலியில் உள்ளது. இராச வீதி ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதியைச் சந்திக்கும் இடத்துக்கு அண்மையில் ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம், அச்சுவேலி மத்திய கல்லூரி ஆகியவற்றுக்குப் பின்புறத்தில் இந்த அழிபாடுகளைக் காணமுடிகிறது. தடித்த முருகைக்கற் சுவர்கள், குட்டையான தடித்த உருளைத் தூண்களின் மீது தாங்கப்பட்ட வளைவுகள் போன்ற கட்டடக்கலைக் கூறுகளை இவ்விடத்தில் காணக்கூடியதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டில் தொல்லியல் திணைக்களம், அங்குள்ள தென்னிந்தியத் திருச்சபையின் தேவாலயத்துடன் சேர்த்து இதையும் பாதுகாக்கப்பட்ட தொல்லியற் சின்னமாக அறிவித்தது.4

தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை முதலிய இடங்களில் இருந்த ஒல்லாந்தத் தேவாலயங்களைப் பிரித்தானியர் காலத்தில் பிற கிறித்தவ மதப்பணியாளர்கள் திருத்திப் பயன்படுத்தியதுபோல் அச்சுவேலித் தேவாலயத்தைப் பயன்படுத்தவில்லை. அச்சுவேலியில் மதப்பணி ஆற்றுவதற்கு வந்த அமெரிக்க மிசனைச் சேர்ந்தோர் ஒல்லாந்தத் தேவாலய வளவுக்கு உள்ளேயே, 1887 ஆம் ஆண்டில், புதிதாக ஒரு தேவாலயக் கட்டடத்தை அமைத்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் பழைய ஒல்லாந்தர் காலத் தேவாலயம் திருத்த முடியாத அளவுக்குச் சிதிலமடைந்து இருந்ததால், இவ்வாறு புதிதாக ஒரு கட்டடத்தை அமைத்தனர் எனலாம். இதே வளவுக்குள் 1892 ஆம் ஆண்டில் அவர்கள் அமெரிக்க இலங்கை மிசன் ஆங்கிலப் பாடசாலை என்ற பெயரில் ஆண்கள் பாடசாலை ஒன்றையும் அமைத்தனர்.5 அருகிலேயே பெண்கள் பாடசாலையும் இயங்கியது. 1960களில் இப்பாடசாலைகளை அரசாங்கம் கையேற்ற பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டு அச்சுவேலி மகா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கியது. 2001 ஆம் ஆண்டிலிருந்து இப்பாடசாலை அச்சுவேலி மத்திய கல்லூரி ஆனது.

அம்பலங்கள்

அம்பலம் என்ற சொல், ஊர்மக்கள் கூடும் வெளியிடம், ஊர்ச் சபை, அறிஞர் சபை, கூத்துப் பார்ப்பவர்களுக்கான இருக்கை, கிராமத் தலைவன், பொது மண்டபம், கோவில் எனப் பல வகையாகப் பொருள்படும். லெயுசிக்காமின் நிலப்படத்தில் இச்சொல் மேற்படி பொருள்களில் பயன்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இது வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கான தெருவோர மடத்தைக் குறிக்கவே பயன்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அச்சுவேலிக் கோவிற்பற்று எல்லைக்குள் இரண்டு அம்பலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று அச்சுவேலி வடக்குப் பிரிவுக்குள்ளும் மற்றது அச்சுவேலித் தெற்குப் பிரிவுக்குள்ளும் உள்ளதாக நிலப்படம் காட்டுகிறது. அச்சுவேலித் தெற்கில் குறித்துள்ள அம்பலம், புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் அமைந்திருக்கக்கூடும் என முன்னர் குறிப்பிட்ட சந்தியை அண்டிக் குறிக்கப்பட்டிருப்பதால், இந்த அம்பலமும் அச்சுவேலித் தெற்குக் கோவிற்பற்றுக்குள் அன்றிப் புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் ஆவரங்கால் துணைப்பிரிவில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. 

இரண்டுமே யாழ்ப்பாணத்திலிருந்து வல்லைக்குச் செல்லும் வீதியை அண்டி அமைந்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் முக்கியமான வீதியொன்றை அண்டி அமைந்திருக்கும் இந்த அம்பலங்கள் பயணிகள் இளைப்பாறி அல்லது இரவு தங்கிச் செல்வதற்கானவை என்பதில் ஐயமில்லை. ஒல்லாந்தர் காலத்தில் தொண்டைமானாறு நீரேரிக்குக் குறுக்கே பாலம் இருக்கவில்லை. அதனால், மழைகாலங்களில் வலிகாமத்துக்கும் வடமராட்சிக்கும் இடையில் போக்குவரத்துச் செய்வது கடினமானது. இவ்வாறான நிலைமைகளில் நீரேரியைக் கடப்பதற்கு வாய்ப்பான நேரம் வரும்வரை பயணிகள் காத்திருப்பதற்கு இந்த அம்பலங்கள் உதவியாக இருந்திருக்கும். எல்லாப் பருவ காலங்களிலும் தொண்டைமானாற்றைக் கடந்து பயணம் செய்வதைச் சாத்தியமாக்கிய வல்லைப் பாலம் பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்டது.

குளங்கள்

அச்சுவேலிக் கோவிற்பற்றுக்குள் மொத்தம் 17 குளங்களை நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் மருதங் குளம், இத்திக் குளம், பிரப்பந்தாழ்வு, தண்டிகைச்சாலி ஆகிய நான்கு குளங்கள் அச்சுவேலித் தெற்குப் பிரிவுக்குள் உள்ளன. பரியாரிக் குளம், வண்ணான் குளம் என்னும் இரண்டு குளங்களும், வெறுமனே குளம் எனப் பெயர் குறித்த இரண்டு குளங்களுமாக நான்கு குளங்கள் அச்சுவேலி வடக்குப் பிரிவுக்குள் காணப்படுகின்றன. பத்தவேனிப் பிரிவுக்குள் முதலைக் குளம், திட்டான் குளம் ஆகிய இரண்டு குளங்களும், தம்பாலைப் பிரிவுக்குள் பதிராய்க் குளம், பிரப்பங்குளம் என்னும் இரண்டு குளங்களும் இருக்கின்றன. குனிவாக் குளம், வளலாய்க் குளம், தங்கியாவளைக் குளம், வெட்டுக்குளம், வண்ணான் குளம் ஆகிய ஐந்து குளங்கள் வளலாய்ப் பிரிவுக்குள் உள்ளன. கதிரிப்பாய்ப் பிரிவுக்குள் குளங்கள் எதுவும் குறிக்கப்படவில்லை.

அச்சுவேலித் தெற்குப் பிரிவிலுள்ள மருதங்குளம், பிரப்பந்தாழ்வு ஆகிய குளங்கள் பெயர் மாற்றமின்றி அப்படியே தற்காலப் பதிவுகளிலும் உள்ளன. வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவரைக் கட்டாடி என அழைக்கும் வழக்கம் இருப்பதால் அச்சுவேலி வடக்கிலுள்ள வண்ணான் குளம் என்று பெயர் குறித்துள்ள குளமே தற்காலப் பதிவுகளில் கட்டாடித் தாழ்வுக்குளம் என அழைக்கப்படுவதாகக் கருத இடமுண்டு. வளலாய்ப் பிரிவுக்குள் குறித்துள்ள வெட்டுக்குளம், தங்கியாவளைக் குளம் என்பன அதே பெயர்களிலேயே இன்றும் அழைக்கப்படுவதைத் தற்காலப் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. 

அதேவேளை, வளலாய்க்குளம் என நிலப்படம் குறிக்கும் குளமே தற்காலத்தில் வளலாய்ப் பெரிய குளம் என அழைக்கப்படுகின்றது என்பதில் ஐயமில்லை. அத்துடன், அமைவிடங்களையும் பெயர் ஒலிப்பு ஒற்றுமையையும் கருத்திற் கொள்ளும்போது தற்காலத்தில் கோணாவளைக் குளம் என அழைக்கப்படும் குளத்தையே நிலப்படத்தில் குனிவாக் குளம் எனப் பெயர் குறித்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. கோணாவளை (Konawale) என்பதையே குனிவா (Koeniwa) என நிலப்படத்தில் பிழையாக எழுதியிருப்பதும் சாத்தியம். தற்காலப் பதிவுகளில் இப்பகுதியில் குறித்துள்ள கட்டாலைக் குளம் என்ற பெயர் கட்டாடிக் குளம் என்பதன் திரிபா என்பது ஆய்வுக்குரியது. இது சரியானால், நிலப்படத்தில் வளலாய்ப் பிரிவுக்குள் குறித்துள்ள வண்ணான் குளமும் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும்.

நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இந்துக் கோவில்கள் இல்லை என்பதால், இன்று கோயில்களின் பெயரைத் தழுவி அழைக்கப்படும் குளங்கள் பிற்காலத்திலேயே அப்பெயர்களைப் பெற்றன என்பது தெளிவு. குறிப்பாக, இடைக்காட்டுப் பகுதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிற் குளம், முனியப்பர் கோவிற் குளம் என்பன முன்னர் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கலாம். நிலப்படத்தில் தம்பாலைத் துணைப் பிரிவுக்குள் குறித்துள்ள பிரப்பங் குளம், பதிராய்க் குளம் என்பவையே இப்போது கோவிற் பெயர்களால் அழைக்கப்படுகின்றனவா என்பது ஆய்வுக்குரியது.

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 320.
  2. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 295.
  3. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 322.
  4. “Part I, Section (1) – General, Government Notification” Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka, 2011 December 30, 1090.
  5. கு. சிங்கை ஆரியரத்தினம், “கல்லூரியின் வரலாறு”, யாழ் அச்சுவேலி மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் 1892-1992, அச்சுவேலி மகா வித்தியாலயம், 1999. 6-7.


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்