“சமூகத்திடமிருந்து ஒருவர் பண்பாட்டைக் கற்கும் போது தன் சுய படைப்புத் திறன் மூலம் அறியாமல், கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக, முறைசார் – முறைசாராக் கல்விகள் மூலமாகவே அறிகிறார்” என்று பண்பாட்டின் தொடர்ச்சி பற்றி ராபர்ட் ஹெலூவி கூறுகின்றார்.

ஒரு சமூகத்தின் அல்லது குழுமத்தின் தனித்துவத்தை அடையாளங்களினூடாக இனங்காண்பதிலும், அவற்றின் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதிலும் பண்பாட்டம்சங்கள் பெறுமானமுடையவையாகக் காணப்படுகின்றன. பண்பாட்டம்சங்கள் சமூகத்தின் ஒவ்வோர் துணுக்குகளிலும் அல்லது அதைவிட நுணுக்கமாக சமூகத்தின் முழு அம்சங்களிலும் பரவிக் காணப்படுகின்றது எனக் கூறலாம்.
இவற்றில் காலநிலை, குடியிருப்புப் பகுதிகள், நம்பிக்கைகள், அருகிலுள்ள இனக்குழுமங்கள் எனப் பல காரணிகளின் செல்வாக்குக் காணப்படுகின்றன. பண்பாட்டம்சங்கள் மாற்றமடையக் கூடியனவாகவும் காணப்படுகின்றன. அவ்விருத்திகள் சில சந்தர்ப்பங்களில் பண்பாட்டு மீள் திரும்பல்களாக அல்லது புதிய பண்பாட்டு வடிவங்களாக மாற்றம் பெறுவனவாகவும் காணப்படுகின்றன.
கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதாரம், விவசாயம், கலைகள், சடங்குகள், அடிப்படைத் தேவைகளை அடைந்து கொள்ளும் வழிமுறைகள், அன்றாட நடவடிக்கைகள் என்பவற்றில் ஒத்ததும் வித்தியாசமுடையதுமான பல பண்பாட்டம்சங்கள் காணப்படுகின்றன. இவ்வாறே விவசாயத்திலும் ஆழ்கடல் மீன்பிடியிலும் பேர்பெற்று விளங்கும் கிழக்கிலங்கை மக்களின் கட்டடக்கலைப் பண்பாடும் அவர்களுக்குரிய சிறப்பம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. ‘பரண்’ அன்றைய மக்களின் கட்டடக்கலைப் பண்பாட்டுப் பிரதிபலிப்பின் ஒரு முக்கிய வடிவமாகும்.
விவசாயம் செய்யத் தொடங்கியதன் பின்னரே நாடோடி வாழ்க்கை முறையில் இருந்து மனிதன் நிலையான இருப்பிடத்தின் அடிப்படைத் தேவையை உணர்ந்தான் என்ற கருத்தின்படி, அன்றைய காலத்தில் நிலையான இருப்பிடத்தின் தேவையை உருவாக்கிய காரணிகளுள் ஒன்றாக விவசாயம் காணப்படுகின்றது. அதற்கு முன்னர் மனிதன் தற்காலிகமாக பல இயற்கையான இருப்பிடங்களைப் பயன்படுத்தி வந்துள்ளான். உதாரணமாக குகைகள், மரங்கள், வனாந்தரங்களில் தமக்கு வசதிப்பட்ட இடங்களில் வசித்து வந்தான். மனிதனுக்கு உசிதமான சீதோஷ்ண நிலை அவனது ஓய்வுக்கு அவசியப்படுகின்றது. இதனால் புறச் சீதோஷ்ண மாற்றங்களின் தாக்கம் குறைவாக இருக்கும் வண்ணம் தமது வசிப்பிடங்களை அமைக்க வேண்டிய அவசியம் இருந்தது.
பரண்
‘பரண்’ எனப்படுவது விவசாயிகள், காவற்காரர்களின் பயன்பாட்டிற்காக வயற்பகுதிகள், தோப்புகள் மற்றும் சேனைகளில் தற்காலிகமாக அமைக்கப்படும் ஓர் எளிய வதிவிடக் கட்டமைப்பாகும். போகத்திற்குப் போகம் அல்லது வருடத்துக்கொருமுறை பரண் மீளமைக்கப்படும். ஆனால் சில வயல்களில் ‘புரை’களும் அமைக்கப்படும். இவை பரணைவிட அதிக காலம் நிரந்தரமாகப் பயன்படுத்தப்படும் வகையில் மிக உறுதியாகவும், பரணைவிடச் சிறப்பான வசதிகளுடனும் அமைக்கப்படும்.
பிரதேச வழக்கில் ‘பறண்’, ‘பரன்’ என பலவாறு உச்சரிக்கப்படும் இத்தற்காலிக வதிவிடத்தின் தூய மொழி வடிவம் ‘பரண்’ என்பதாகும். தமிழ் அகராதிகளில் காவல் மேடை, பொருட்களை வைக்கும் மேல்தட்டு என்று பரணிற்குப் பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ‘Eco Friendly Architecture’ என மொழிபெயர்க்கப்படுகின்றது.
இயற்கையாகக் கிடைக்கும் தடிகள், கிளைகள், கொடிகள், ஓலை, தாள் (இலுக்கு, வைக்கோல் என்பவற்றின் இலை) போன்றவற்றைக் கொண்டு பரண்கள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் உருக்கு ஆணிகள், நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களின் பயன்பாடும் மிக அரிதாகவே காணப்படுவதால், இது சூழல் நேயமானதாகக் காணப்படுகின்றது இதனை அன்றையகால ‘சூழல்நேயக் கட்டடக்கலை’க்கான (Eco Friendly Architecture) ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்;.

பரண்களின் அவசியம்
குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து மிகத்தொலைவில் தமது விவசாய நிலங்களைக் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்களின் விவசாயப் பகுதிகளைக் கண்காணிக்க அடிக்கடி வயலுக்குச் சென்று வரவேண்டிய தேவை இருந்தது. அதேவேளை வெட்டையான வயல்வெளியில் ஓய்வெடுக்கவும் குறித்த விவசாயப் பகுதிகளிலேயே எளியதொரு தற்காலிக வதிவிட அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்பொருட்டு அமைக்கப்பட்ட இருப்பிட அமைப்புகளில் ஒன்றே பரண் ஆகும். பாரம்பரிய விவசாய மரபுகளின் எச்சங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலையாகவே பரண் கட்டுதலைக் குறிப்பிடலாம்.
விவசாயிகளிற்குச் சாதாரணமானதாக இருந்தாலும் ஒரு மானிடவியலாளரையோ அல்லது நாட்டுப்புறவியல் ஆய்வாளரையோ பொறுத்தவரை பரண் பற்றிய அறிதல், குறித்த மக்களின் பண்பாட்டினைக் கற்பதில் பலவழிகளிலும் உதவுகின்றது.
விவசாய வயல்களில் வனவிலங்குகளின் தொந்தரவுகள் அதிகமாகக் காணப்பட்டன. அத்துடன் நீர்ப்பாய்ச்சல் முறைகளை அடிக்கடி சீர்செய்ய வேண்டிய தேவைகளும் காணப்பட்டன. எனவே விவசாய நிலங்களிலேயே பரண்களை அமைத்து விவசாயிகள் அதில் தங்கி கொண்டனர். இவ்வாறு பரண்கள் அமைக்கப்பட்டமையினால் தாம் தங்கியிருக்கும் வேளைகளில் வெய்யில், மழை, குளிர் ஆகிய காலநிலைக் காரணிகளிலிருந்தும், வனவிலங்குகள், பறவைகளிலிருந்தும் தமக்கும், தம் உடைமைகளுக்கும் பாதுகாப்புப் பெறப்பட்டது.
விவசாய நிலங்களில் உடல் வருத்தி உழைத்துக் களைக்கும் விவசாயிகளிற்கு ஓய்வெடுப்பதற்கும், குறிப்பாக இரவுவேளையில் பாதுகாப்பாய்த் தங்கியிருந்து பயிர்ச்செய்கை நிலங்களைக் கண்காணிப்பதற்கும், விவசாயிகளின் பாவனைப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தவும் பரண்கள் பயன்பட்டன. சிலபோது அடுக்களை வசதிகளுடனும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
பொதுவாக அனைத்துக் காவல்மேடை அமைப்புகளும் ‘பரண்’ (Hut) என அழைக்கப்பட்டாலும், இவற்றின் சட்டக அமைப்பைக் (Frame Structure) கொண்டு இவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
- குருவிப்பரண் (பரண்)
- சிறாம்பி (காவற்பரண்)4
- ஏணிப்பரண்
- ஒளிப்பரண் (மரப்பரண்)
இவைதவிர மேலும் சில சிறு அமைப்புகளும் காவல்களில் பயன்பட்டுள்ளன. அவை பரண் என்று அழைக்கப்படுவதில்லை. விவசாய நிலங்களில் பயன்படும் பரண்கள் தவிர காவல்காக்கும் (கண்காணிப்பு) நோக்கத்தை மட்டும் கொண்டு சில முக்கியஸ்தலங்களில் உயரமான பரண்கள் அமைக்கப்படுகின்றன. இவை அமைப்பில் ஏணிப்பரணை ஒத்ததாகக் காணப்பட்டாலும் உயரம், மேடை அமைப்பு, தளத்தின் அமைப்பு போன்ற அம்சங்களில் வேறுபட்டவை.
விவசாயப் பண்பாடு காணப்படும் ஏனைய நாடுகளிலும் பரண் காணப்பட்டாலும் பிரதேசத்திற்குப் பிரதேசம் அமைப்பிலும் மற்றும் மூலப்பொருட்கள், உத்திகள் என்பவற்றிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வித்தியாசமான அமைப்பில் பரண்கள் அமைக்கப்படுகின்றன.
குருவிப்பரண், சிறாம்பி என்பவை நில மட்டத்திலிருந்து ஒரே உயரத்தில் இருக்கை அமைப்பைக் கொண்டவை. ஆனால் ஏணிப்பரண், ஒளிப்பரண் என்பவை குருவிப்பரணைவிட மிக உயரமாகக் காணப்படும்.

வயலில் பரண் அமைக்கப்படும் இடம் ‘தாராப்புட்டி’5 அல்லது ‘பரண்புட்டி’6 அல்லது ‘புரையடிப்புட்டி’ எனப்படும். இது பொதுவாக சூட்டுக் களவெட்டிக்கு7 அருகிற் காணப்படும்.
வயல்வரப்பினது உயரமட்டத்தில் அல்லது அதைவிட சிறிது உயரமாக தாராப்புட்டி அமைக்கப்படும். அல்லது இயற்கையாக அவ்வாறு உயரமாக காணப்படும் இடங்கள் பரண் அமைக்கப் பயன்படும். இது பார்ப்பதற்கு மண்மேடை போன்று காணப்படும். வயற்களத்தில் சேற்று விதைப்பு முடிந்ததும் இரவிலே தாராக்கள் வந்து, நெல்லை வடித்து உண்ணும். எனவே இந்தப் பறவைகளிலிருந்து முளைத் தானியத்தைப் பாதுகாப்பதற்காக காவலிருக்கும் இடம் என்பதனால், தாராப்புட்டி என்று அழைக்கப்படுகின்றது. பரண் அமைத்தல் ‘கட்டுதல்’8 எனப்படும்.
பரண் அமைக்கத் தேவையான பொருட்கள் வயலையண்டிய சூழலிலிருந்தே பொதுவாகப் பெறப்படுகின்றன.
1. கம்புகள்9: உருளையான சீரான கோல்கள் அல்லது தடிகள் கம்புகள் எனப்படும். இவை பட்டை நீக்கப்பட்டு உலர்த்தப்பட்டவையாக இருக்கும். சிலவேளைகளில் உலர்த்தப்படாமலேயே பயன்படும். இதற்காக காசான், குதிரைக்காசான் போன்ற மரங்களில் இருந்து தடிகள் பெறப்படும். தற்போது கிளிசரிடியா போன்ற தாவரங்கள் அவற்றின் நேர்த்தி, விரைவான வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொண்டு பெருமளவில் பயன்படுகின்றன.

2. கயிறு அல்லது கொடிகள்: இதற்காக உறுதியான கொடித் தாவரங்கள் அல்லது தும்புக் கயிறு பயன்படும். ஆரம்பகாலங்களில் நவ்வாக்கொடி, தெகிழங்கொடி, பாற்கொடி, கச்சக்கொடி போன்ற கொடிகள் பயன்பட்டுள்ளன. இவை மூன்று நான்கு வருடங்களுக்கும் உறுதியாக நிலைக்கக்கூடியதாகவுள்ளவை என அனுபவமுள்ளவர்கள், விவசாயிகளிடமிருந்து அறிய முடிகின்றது (இக்கொடிகள் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டுவதற்கும், வீடுகளில் கூரை வேய்ந்து வரிச்சல் வரி கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன). இன்று தும்புக் கயிறுகள் பயன்படுகின்றன.
3. வேய் பொருட்கள்: கூரையை அடைப்பதற்கு பயன்படும் பொருட்கள் வேய் பொருட்கள் எனப்படும். இதற்காகத் தென்னோலையால் இழைக்கப்பட்ட கிடுகு, வைக்கோல், இலுக்கு போன்றவை பயன்படுகின்றன.
இங்கு பயன்படும் கம்புகள் பயன்படுத்தப்படும் தேவைக்கேற்ப பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இச்சொல் வழக்குகளின் பரந்ததன்மை, மொழியியல் என்பவை மக்களின் நுட்பத்தினைத் தெளிவுபடுத்தும் சுவாரசியமான விடயங்களாகும்.
பொதுவாக நிலைக்குத்தாக நடப்படும் கம்புகள் கால்கள் என்றும் கிடையாக உள்ளவைகள் வளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- அருகுக்கால்: பரணின் நிலைக்குத்தான கால்களில் இருபக்க ஓரங்களிலும் நடப்படுவது. அருகுப் (ஓரம்) பகுதிகளில் நடப்படுவதால் அருகுக்கால் எனப்படுகின்றது.
- மோட்டுக்கால்10: அருகுக்காலைவிட உயர்ந்ததும் அருகுக்கால்களிற்கு இடையில் நடப்படுவதுமாகும். இதுவே இங்கு உயரமான காலாகும். மோடு எனப்படுவது கூரை அல்லது முகடு; உயரமான இடத்தைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
- அருகுவளை: பக்க அருகுக்கால்களின் உச்சி முனைகளை ஒன்றாக இணைத்துக் கட்டப்படுவது.
- மோட்டுவளை: மோட்டுக்கால்களை இணைத்துக் கட்டப்படும் கம்பு.
- பூட்டுக்கம்பு: அருகுவளையுடன் மோட்டு வளையை இணைத்து அந்தங்களினூடாக இணைத்துக் கட்டப்படும் கம்பு. இவை பூட்டு எனப்படும் பிணைச்சற் கம்புகளாக கட்டப்பட்ட பின்னரே கூரையில் இணைக்கப்படும்.
- பூட்டு11: இரு பூட்டுக் கம்புகளைப் பிணைத்து உருவாக்கும் தலைகீழ் ‘V’ வடிவ அமைப்பு.
- கலிங்கா12: பூட்டுகளை இணைத்து வளைகளிற்குச் சமாந்தரமாகக் கட்டப்படும் கம்பு. கிடுகுகள் இதன்மீதே வைத்துக் கட்டப்படும்.
- உலாத்தை13: முன், பின் அருகுக்கால்களை அப்பக்க மோட்டுக்கால்களுடன் இணைத்துக் கட்டப் பயன்படுவது. இது ‘உத்தரம்’ எனப்படும். இது கூரையின் சாய்கோணம் மாறாதிருக்கவும், மேலதிக உறுதிக்காகவும் வைத்துக் கட்டப்படுகின்றது.
- ஊசிக்கால்14: தட்டி அமைப்பிற்காகப் பயன்படும் கிளையுள்ள ‘Y’ வடிவ குறுந்தடிகள் ஆகும். இவை தராசுகளின் மத்தியிலுள்ள அமைப்பைப் போல் காணப்படுவதால் ஊசிக்கம்புகள் எனப்படுகின்றன.
- வரிச்சற்கம்பு15: தட்டி அமைக்கும் போது சம இடைவெளியில் பரவிக் கட்டப்படும் ஒரே தடிப்பமுள்ள உருளையான தடிகள் ஆகும். இதற்காக நாணல் அல்லது பிரம்பு என்பவற்றையும் வசதிக்கேற்ப குறுந்தடிகள் என்பவற்றையும் பயன்படுத்துவதுண்டு.
1. குருவிப்பரண் (பரண்)
தாராப்புட்டியில் ஏழடி இடைவெளியில16 ஒன்பது குழிகள் தோண்டப்படும். இதில் இரு ஓரப்பக்கமும் உள்ள ஆறு குழிகளிலும் ஆறடி உயரமாவது17 நிலத்திற்கு மேலுள்ள வண்ணம் அருகுக்கால்கள் நிலைக்குத்தாக நாட்டப்படும். பின்னர் நடுக்குழி தவிர்த்து ஏனைய இரு குழிகளிலும் அருகுவளையைவிட ஒன்றரை முழ உயரமுடைய18 மோட்டுக்கால்கள் நாட்டப்படும்.
அருகுக்கால்களின் அந்தங்களை இணைக்கும் வண்ணம் இருபக்கமும் தனித்தனியாக அருகுவளைகள் கட்டப்படும். மோட்டுக்கால்களை இணைத்து மோட்டுவளை கட்டப்படும்.
பூட்டுக்கம்புகளை இவ்விரண்டாக ஓர் அந்தத்தில் பிணைச்சலிட்டு ஆறு அல்லது ஏழு பூட்டுகள் தயார் செய்யப்படும். இதில் ‘பிணைச்சல்’19 மோட்டுவளையில் வரும் வண்ணம் மோட்டுவளையும், இரு அருகுவளைகளும் இணைத்துக் கட்டப்படும். இவற்றின் மீது பூட்டுக்கம்புகளிற்குச் செங்குத்தாகவும் வளைகளிற்குச் சமாந்தரமாகவும் அமையும் வண்ணம் தலா இரண்டு வீதம் ‘கலிங்கா’ இரு பக்கமும் கட்டப்படும்.

முன், பின் பக்கங்களில் உலாத்தை கட்டப்படும். அதன்பின்னர் கலிங்காவின் மீது கீழிருந்து மேலாக கிடுகு அல்லது வேய் பொருட்களைக் கொண்டு கூரை வேயப்படும். கூரையின் மீது கம்புகள் அல்லது, கயிறு கொண்டு ‘அமுக்கம்’20 கட்டப்படும். இது பலத்த காற்றிலிருந்து கூரையை உறுதியாகப் பாதுகாக்க உதவும்.
தட்டி அமைத்தல்
தாராப்புட்டியில் கிண்டப்பட்ட நடுக்குழி உட்பட பின்பக்கம் ஆறு குழிகள் தோண்டப்பட்டு ஏறத்தாள மூன்று அடி உயரமான ஆறு ஊசிக்கால்கள் நிலைக்குத்தாக நடப்படும். இவற்றின் பிளவுகளினூடாக கம்புகளை இணைத்துச் சட்டகம் அமைக்கப்பட்டு அதன்மீது வரிச்சற் கம்புகளைப் பரவி சம இடைவெளியில் வரிந்து கட்டப்படும். இது இருக்கையாகவும், படுக்கையாகவும் பயன்படும்.
பரணைச் சுற்றிவர நான்கு அடி உயரத்தில் கிடுகு வரிசை ஒன்று கட்டப்படும் இது சட்டக்கிடுகு அல்லது தொப்பிக் கிடுகு எனப்படும். இது பரணிற்கூடான காற்றோட்டம், வெய்யில் என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.
விசேட அமைப்புகள்
காகக்கூடு: பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து உணவு மற்றும் தமது பாவனைப் பொருட்களைப் பாதுகாக்க உலாத்தையிலிருந்து உட்பக்கமாக உயரத்தில் சிறுதட்டி அமைக்கப்பட்டுக் கிடுகினால் மறைத்து இறாக்கை வடிவில் செய்யப்படும் அமைப்பு.
சுடுவான்21: பரணில் அமைக்கப்படும் அடுப்பு மூட்டும் இடம் சுடுவான் என வழங்கப்படுகின்றது. அகராதிகளில் மரக்கலத்திலுள்ள சமையலறை எனக் குறிப்பிடப்படுகின்றது.
தீ மூட்டத் தீப்பெட்டிகள் போன்றவை அறிமுகமாவதற்கு முன்னர், வயல்களில் வசிப்போருக்கு விறகுகளில் தொடர்ந்து தீயை அணையாமல் பேண வேண்டியிருந்தது. இதனால் சுடுவான் என்றும் தணலுடன் வெப்பமாகப் பேணப்பட்டது.
சமையல் முடிந்ததும் தண்ணீர் வெதுப்பவும், இரவுவேளைகளில் நுளம்புகளைத் துரத்துவதற்குப் புகைமூட்டவும் பயன்பட்ட அதேவேளை, சுடுவானின் எரிந்து கொண்டிருக்கும் விறகுகள் குளிரான இரவுகளில் வெதுவெதுப்பான சூழலையும் பரணினுள் ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கின்றன.
யானை போன்ற காட்டு விலங்குகளின் சஞ்சாரம் விவசாய நிலங்களில் நிலவும் போது அவற்றைத் துரத்துவதற்கான உபாயமாகத் தீப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறான நிலமைகளில் உடனடியாக தீப்பந்தங்களைப் பெற சுடுவான் போன்ற அமைப்புகள் பெரிதும் உதவக்கூடியதாய் இருக்கின்றன.
2. சிறாம்பி (காவற்பரண்)
சிறாம்பி எனப்படுவது அமைப்பில் சற்று மாறுபட்ட குருவிப் பரணாகும். இதில் அருகுப்பக்கமே முகப்பாக இருக்கும். இரண்டு மோட்டுக்கால்களுடன் மூன்று அருகுக்கால்கள் இருக்கும். முன்பக்க அருகுக்கால்கள் காணப்படாது. அத்துடன் பின்பக்கக்கூரை, முன்பக்கக்கூரையை விட மூன்று மடங்கு பெரிதாகக் காணப்படும். பொதுவாக இது கண்காணிப்புத் தேவை ஓரளவு குறைந்த விவசாயப் பரப்புகளில் காணப்பட்டது.
3. ஏணிப்பரண்
இது குருவிப்பரணின் அமைப்பை உயரமாகக் கட்டுவதாகும். இங்கு அருகுக்கால், மோட்டுக்கால்கள் மிக உயரமாகக் காணப்படும். பரணில் ஏற ஏணி கட்டப்படும். ஏணிகளின் குறுக்குக் கம்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு இதனை வகைப்படுத்தலாம். 4 ஏணி முதல் 7 ஏணி22 வரை பரண்கள் உள்ளன. இதிலிருந்து மிகத் தொலைதூரம் வரை வயலைக் கண்காணிக்கலாம். பெருவயல் நிலப்பரப்புக்குச் சொந்தமானவர்கள் முழுவயலையும் கண்காணிக்க இவ்வகைப் பரண்களை அமைத்துக் கொள்கின்றனர். சனத்தொகைப் பெருக்கத்தினால் காணிகள் துண்டாடப்படுவதால் இவற்றின் தேவை குறைவடைந்துள்ளது.
4. ஒளிப்பரண் (மரப்பரண்)23
அருகுக்கால், மோட்டுக்கால் இல்லாமல் மரத்தின் மீது தட்டி, கூரை என்பன அமைக்கப்பட்டுக் கட்டப்படுவதாகும். காட்டு விலங்குகளின் ஆபத்திலிருந்து மறைந்திருக்கப் பயன்படுகின்றது. ஒளித்திருத்தலிற்குப் (மறைந்திருத்தல்) பயன்படுவதால் ‘ஒளிப்பரண்’ என அழைக்கப்படுகின்றது. பெருமளவில் சேனைகளிலேயே அமைக்கப்படும். மரங்கள் உள்ள வயல்வெளிகளிலும் அமைக்கப்படுகின்றது.
வாய்வழியே பேணப்பட்டு வரும் இலக்கிய வடிவங்களில் கிராமியக்கவிகள் முக்கியத்துவம் உடையவையாகும். இக்கவிகள் கிராமியச் சூழலின் பிரதிபிம்பங்களாக உள்ளன. உண்மையிலேயே பண்பாட்டியல் சார்ந்த, கடந்தகாலங்களின் அறியப்படாத பல அரிய விடயங்களைக் கிராமியக்கவிகளில் காணக்கூடிதாய் இருக்கின்றது.
வயற்களத்திலே விவசாயிகள் சூட்டுக்காவல், உப்பட்டிக்காவல், தாராக்காவல், வேலிக்காவல், குருவி துரத்துதல், யானைக்காவல் என காவல்காக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. இதன்போது காவற்காரர்கள் பொழுதுபோக்குவதற்குக் கவி பாடுவது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் இது வாதுக்கவியாக (ஏட்டிக்குப் போட்டியாகப் பாடுதல்) அமைவதும் உண்டு. இவர்களின் இக்கவிகள்தான் கவல் காப்பதன் நோக்கம், காவல் வேளைகளின் சிரமங்கள், காவலின் போதான உணவுப் வழக்கம், பிரிவு, தனிமை என்பவற்றை தத்ரூபமாக நாலடிகளுக்குள் பொதிந்து வைத்துள்ளன.
இவர்கள் நெடுந்தெலைவில் பலநாட்களாகக் காவலிருக்கும் போது உணவுக்காக அருகிலுள்ள ஆறு, ஓடை மற்றும் குளங்களிலிருந்து மீன்களையும், பொன்னான், திராய், வள்ளல் மற்றும் அயலில் கிடைக்கும் பலவகையான பச்சைக் கீரை வகைகளையும் சமைத்து உண்பார்கள்.
காவற்காரர்கள் வயலுக்குத் தங்குவதற்குச் செல்லும் போது அரிசி, கருவாடு, உப்பு, மற்றும் அவசியப்பட்ட உலர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இவற்றைப் பரணில் அமைக்கப்பட்டுள்ள காகக்கூட்டினுள் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.
பொழுதுகள் (கிராமியப் பேச்சுவழக்கில் சூரியன், வெளிச்சம், வேளைகள் என்பவற்றைக் குறிக்க, பொழுது எனப் பயன்படுத்துவதுண்டு), பட்சி பறத்தல், கூரணல் (கூரை நிழல்), நட்சத்திரங்கள், காற்று என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் காலநேரங்களை அறிய கிராம மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இவைகளும் அவர்களின் பாடல்களில் தொனிப்பதுண்டு.
காவல்பரண் கவி24
ஆலையடி வரவ
அதற்கடுத்த நீள்வரவ
கதிர் விளைஞ்சு நெல்விளைவு
காவலுக்கு போய்வாறன்
ஆத்தியடி வரவ
அதற்கடுத்த நல்வரவ
காவலுக்கு போகாட்டி
கதிர்களவு போகுமல்லோ
காவல் பரணிலே – நான்
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணாண மச்சி வந்து
காலூண்டக் கனவு கண்டேன்
ராவு நடுச்சாமம்
நானுறங்கும் வேளையிலே
ஆரோடு மச்சான் நீ
வாதுகவி பாடவந்தாய்
காவல் பறண் கட்டி
கடும் வேல நான் பாக்க
ஊருதின்னி பண்டி வந்து
வேலியால புகுந்ததுகா.
சம்புக் களப்பில் நாங்க
தளச்ச வள்ளல் பிடிச்சிவந்து – நாங்க
கறியாக்கி திண்டு
களை தீர்த்தோம் போடியாரே
கொழியல் அரிசியும்
குலமுறிஞ்ச தேங்காயும்
உழுத்த கருவாடும்
உண்ண ஒண்ணா போடியாரே
உண்ணுறது சம்பா
உடுக்கிறது கிளிஞ்ச உடை
படுக்கிறது பரவு கம்பு – எங்கட
பரிதாபத்த ஆரறிவார்
குஞ்சு மீன் தீயல்
குறட்டை மீன் புளியாணம்
கண்டுவந்தேன் பெண்ணே
காவலுக்கு நான் போறதில்ல
இன்றைய நிலை
பரண்களை இன்று ஆங்காங்கே வயல்களில் காணக்கூடியதாயிருப்பினும், இவற்றில் அத்தனை அம்சங்களையும் காணக்கூடியதாக உள்ளவை குறைவடைந்துள்ளன. அத்துடன் பரண் கட்டும்கலை இன்று அருகிக்கொண்டு வருகின்றது. மற்றும் வயற்பகுதிகளில் கற்கட்டடங்கள் அரும்பத் தொடங்கியுள்ளன. இன்றைய நவீன போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப யுக்திகளின் முன்னேற்றத்தால், பரண்கள் அருகி வந்தாலும், அவை எம் வயலரண்களில் இன்றும் வாழும் எம் பண்பாட்டின் சுவடுகளாகும்.
குறிப்புகள்
- மௌனகுரு. சி, (2005), தமிழர் வரலாறும் பண்பாடும், ப. 11.
- சுப்பிமணியன். ச.வே, மெய்யப்பன் தமிழ் அகராதி, ப. 859.
- மேலுள்ளது, ப. 791, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப. 681.
- சுப்பிமணியன், ச.வே, மெய்யப்பன் தமிழ் அகராதி – சிறப்புடைக்கிளவி – சிறுதனம்.
- தாராப்புட்டி: சேற்று விதைப்பு முடிந்ததும் இரவிலே தாராக்கள் வந்து வயலில் நெல்லை வடித்து உண்ணாமலிருக்க காவலிருக்கும் இடம் என்பதனால் தாராப்புட்டி என்று அழைக்கப்படுகின்றது.
- புட்டி: திடமான தரைப்பரப்பை அல்லது மேட்டுப் பகுதியைக் குறிக்கம் வார்த்தை.
- களவெட்டி: வயல்களில் சூடு வைக்கப்படும் இடம்.
- கட்டுதல்: அமைத்தல், சரி செய்தல், உருவாக்குதல் எனும் பொருள்களைத் தருகின்றது.
- கம்பு: தடி என்பதைக் குறிக்கும் வார்த்தை.
- மோடு: முகடு அல்லது மேடான இடம்.
- பூட்டு: பிணைக்கப்பட்ட இரு பூட்டுக்கம்புகள்.
- கலிங்கா: நீர் வழிந்தோடுவதற்குக் கூரைகளில் கிடுகு வேய்வதற்காகக் கட்டப்படும் கம்பு.
- உலாத்தை: உத்தரம் நெத்திமுட்டு எனப்படும் அருகுக்கால், மோட்டுக்கால் என்பவற்றை இணைத்துக் கட்டப்படுவது.
- ஊசிக்கால்: ‘Y’ வடியில் உள்ள சிறுதடிகள். இவை தாங்கும் ஆதாரத்திற்காக தட்டிகளில் கால்களாகப் பயன்படுகின்றன.
- வரிச்சல்: நிரையாக நெருக்கமாக அடுக்கப்பட்ட கம்புகள்.
- ஏழடி இடைவெளி: ஒரு சாதாரண மனிதன் தனது கால்களை நேராக நீட்டி உறங்கத் தேவையான இடைவெளி.
- ஆறடி உயரம்: சாதாரண மனிதன் பரணில் நுழையும்போது தலை தட்டுப்படாமல் இருப்பதற்காக.
- அருகுக்கால்களை விட ஒன்றரை அடி உயரக்கால்: மழைநீர் சீராக வடிந்து ஓடுவதற்காகத் தேவையான சரிவை ஏற்படுத்தவே இவ்வாறு அமைக்கப்படுகின்றது.
- பிணைச்சல்: பூட்டுக்கம்புகள் பிணைக்கப்பட்ட அந்தம்.
- அமுக்கம்: வீசும் காற்றின் அமுக்க வித்தியாசத்தினால் கூரைகள் பறந்துவிடாமல், கூரைகளிற்கு உறுதியை வழங்கும் அமைப்பு.
- சுடுவான்: மரக்கலத்திலுள்ள அடுப்பு.
- ஏணி: ஏறி இறங்கிவரப் பயன்படும் கிடைக்கம்புகளின் எண்ணிக்கையைக் கொண்டே ஏணிப்பரண்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
- ஒளிப்பரண்: ஒளிந்திருத்தல் எனும் பொருளைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.
- இளையதம்பி பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், (1979).
தகவல் மூலங்கள்
- இளையதம்பி பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், (1979).
- சுப்பிமணியன். ச.வே, மெய்யப்பன் தமிழ் அகராதி.
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
- மௌனகுரு. சி, தமிழர் வரலாறும் பண்பாடும், (2005).
- தமிழர் பண்பாட்டில் இருப்பிட வகை.
- நேர்காணல்: காஸீம் பாவா இஸ்மாலெப்பை (வயது 83).
- நேர்காணல்: ஆதம்பாவா முஹம்மது இப்றாஹீம் (வயது 55).



