ஆங்கில மூலம்: சிறான் இலன்பெரும
காலஞ் சென்ற அறிஞர் எஸ்.பி.டி.டி. சில்வா (1924-2018) ‘The Political Economy of Under Development’ என்ற பெயரில் அரியதொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலைப் பற்றிய விமர்சன அறிமுகம் ஒன்றை சிறான் இலன்பெரும (Shiran Illanperuma) அவர்கள் ‘Polity’ மே – யூன் 2025 இதழில் எழுதினார். ‘The Development of S.B.D. De Silva’s Political Economy’ என்ற தலைப்பில் அமைந்த இக்கட்டுரையின் தழுவலாக்கமாக அமையும் தமிழ்க் கட்டுரை இங்கே தரப்படுகின்றது.
எஸ்.பி.டி.டி. சில்வாவை நேரில் பழகித் தெரிந்தவர்களும், அவரது மேற்படி நூலைப் படித்தவர்களும் ‘அரசியல் பொருளாதாரம்’ (Political Economy) என்ற துறையில் ஆழக் கால்பதித்த அறிஞர்களுள் அவரும் ஒருவர் என்பதை அறிவார்கள். குறைவிருத்தி (Under Development) என்ற விடயம் குறித்த ஆழமான முன்னோடி ஆய்வுகளைச் செய்தவர்களான மூன்றாம் உலக ஆய்வாளர்களில் ஆர்ஜன்டீனாவின் றோல் பிரபிஷ் (Raul Prebisch), எகிப்து நாட்டின் சமீர் அமின் (Samir Amin), பிரேஸில் நாட்டின் மவ்ரோ மரினி (Mauro Marini), இந்தியாவின் அம்யா பக்சி (Amiya Bagchi) ஆகியோர் உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் ஆவர். அத்தகைய அறிஞர் பெருமக்களின் குழாமில் ஒருவராக வைத்து மதிக்கப்பட வேண்டிய ஒருவராக எஸ்.பி.டி.டி. சில்வா விளங்கினார்.
ஆயினும் அத்தகைய மதிப்பும் அங்கீகாரமும் எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்பது துர்ப்பாக்கியமே. எஸ்.பி.டி.டி. சில்வா தமது நீண்ட புலமைத்துறை வாழ்வில் வகித்த பதவிகள், அவர் தொடர்புகொண்டு பணியாற்றிய பல்கலைக்கழகங்கள், உலக நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,
- இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்.
- கொழும்பு, கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனத்தின் (Agrarian Research and Training Institute) பிரதிப் பணிப்பாளர்.
- இலங்கை கைத்தொழில் விஞ்ஞான அமைச்சின் கைத்தொழில் கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சிப் (Industrial Policy and Economic Research) பிரிவின் பணிப்பாளர்.
- ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஆசியா, தூரகிழக்கு ஆசியா நாடுகளிற்கான பொருளாதார ஆணைக்குழுவின் ஆலோசகர் (Consultant).
- பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், பினாங் நகரின் மலேசியப் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia) ஆகியவற்றில் ஆசிரியப் பணி.
(மேற்படி விபரங்கள், உஸ்வத்த ஆராய்ச்சி எழுதிய (2018) ‘SB is No More’ என்ற இரங்கல் கட்டுரையில் இருந்து பெறப்பட்டது.)
மேற்குறித்தவாறு உலகமட்டத்தில் பல நிறுவனங்களோடு தொடர்புகொண்டு புலமைத்துறையில் சிறப்புற்று விளங்கிய இவ் அறிஞரின் ‘அரசியல் பொருளாதாரம்’, ‘குறைவிருத்தி’ ஆகிய விடயங்கள் குறித்த பங்களிப்பு கவனம் பெறாமல் போனமை புதிராகவும், வியப்பைத் தருவதாகவும் உள்ளது. சில்வா அவர்கள் ‘விருத்தியும் குறைவிருத்தியும்’ (Development and Under Development) பற்றித் துணிச்சலான கருத்துகளை முன்வைத்தார்; முக்கிய கோட்பாட்டாளர்கள் சிலரின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தார் என்பதும் அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாகலாம். ஆயினும் அவர் 2018 யூன் 15 ஆம் நாள் காலமாகி ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று புதிய தலைமுறை ஆய்வாளர்களின் கவனம் எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் ஆக்கத்தின் மீது திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில்வா அவர்களின் பெரும் படைப்பான ‘The Political Economy of Under Development’ (குறைவிருத்தியின் அரசியல் பொரளாதாரம்) என்ற நூல் முதலாளித்துவ வளர்ச்சி பற்றி டபிள்யு. ஆர்தர் லூவிஸ் (W. Arthur Lewis), டபிள்யு.டபிள்யு. ரொஸ்ரோவ் (W.W. Rostow) ஆகிய பொருளியலாளர்களின் கருத்துகளைக் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது என்பதோடு, தங்கியிருத்தல் கோட்பாடு (Dependency Theory), சமனற்ற பரிவர்த்தனை (Unequal Exchange) ஆகிய கோட்பாடுகளையும் விமர்சனம் செய்வதாக அமைந்தது (குறிப்பாக சமீர் அமினின் கருத்துகளை சில்வா விமர்சித்தார்). தங்கியிருத்தல் கோட்பாட்டினரின் வாதங்களின்படி குறைவிருத்தியின் பிரதான காரணம் காலனிய ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் உலக முதலாளித்துவ முறையுடன் (The World Capitalist System) பிணைக்கப்பட்டமையும், அந்நிய முதலீடு, தொழில்நுட்பம், சந்தை ஆகிய விடயங்களில் உலக முதலாளித்துவத்தில் தங்கியிருந்தமையுமே என்று கூறப்பட்டது. எஸ்.பி.டி.டி. சில்வா அவர்கள் இந்த வாதத்தின் அனுமானம் தவறானது என நிராகரித்தார். சில்வா அவர்களின் மறுப்புரையினை பின்வரும் மேற்கோள் விளக்குவதாக உள்ளது. “The involvement of underdeveloped countries in the world economy was not significant in itself but only for the impact it had on the internal class structure of these countries, locking into position certain classes which stood in the way of a capitalist transformation. These classes were representatives of merchant capital, landlord and usures capital” (de silva 1982 : 11)
இம்மேற்கோளின் உள்ளடக்கத்தை பின்வருமாறு தமிழாக்கம் செய்துகொள்ளலாம்.
- குறைவிருத்தி நாடுகள் உலகப் பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டன என்பதும், அவ்வாறு உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டதனால் குறைவிருத்தி நாடுகளின் உள்ளக வர்க்கக் கட்டமைப்பில் (Internal Class Structure) ஏற்பட்ட தாக்கம் எத்தகையது என்பதுமே முக்கியமானது.
- குறைவிருத்தி நாடுகளின் வர்க்க கட்டமைப்பில் ஏற்படும் தாக்கத்தினால் சில வர்க்கங்கள் முதலாளித்துவ நிலைமாற்றத்திற்கு (Capitalist Transformation) தடைகளை ஏற்படுத்தும் வகிபாகத்தைப் பெறுகின்றன.
- வர்த்தக முதலாளிகள் வர்க்கம் (Merchant Capitalist Class), நிலப்பிரபுக்கள், வட்டிக்கடை முதலாளிகள் ஆகிய வர்க்கங்களே இவ்வாறு முதலாளித்துவ வளர்ச்சியைத் தடைப்படுத்தும் வர்க்கங்கள் ஆகும்.
சில்வா அவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த வாதம் 20 ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திப் பொருளியல் என்ற துறையில் நடைபெற்ற நவீனமாதல் கோட்பாடு (Modernisation Theory), நிலைமாற்றம் குறித்த விவாதம் (Transition Debate) என்ற இரு விவாதங்களின் பின்புலத்தில் நடைபெற்றது. இவ்விரு விவாதங்களிலும் உலகின் புகழ்பெற்ற பொருளியலாளர்களும் சமூக விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
நவீனமாதல் கோட்பாடு
நவீனமாதல் கோட்பாட்டை தொடக்கி வைத்த பொருளியலாளராக ஆர்தர் லூவிஸ் (Arthur Lewis) அவர்களைக் குறிப்பிடலாம். இவர் இரட்டைப் பொருளாதாரம் (Dual Economy) எனும் எண்ணக்கருத்தை முன்வைத்தார். ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மரபுப் பொருளாதாரத் துறை (Traditional Sector), நவீன பொருளாதார துறை (Modern Sector) என்னும் இரு பிரிவுகள் உள்ளன என்று ஆர்தர் லூவிஸ் குறிப்பிட்டார். இலங்கை போன்ற நாடுகளில் மரபுவழிப் பொருளாதாரம் பிழைப்பூதிய விவசாயமாக (Subsistence Agriculture) இருக்கும் எனவும், இந்நாடுகளின் நகரங்களைச் சார்ந்து இயங்கும் கைத்தொழில் துறையினை நவீனத்துறை எனவும், இத்துறை பிழைப்பூதிய விவசாயத்துறை போன்றல்லாது, நவீனத்துவ பண்புகளைக் கொண்டது எனவும், ‘இரட்டைப் பொருளாதாரம்’ கோட்பாடு விளக்கமளித்தது. மூன்றாம் உலக நாடுகளின் பெருந்தோட்டத் துறையையும் (Plantations Sector) இரட்டைப் பொருளாதாரக் கோட்பாட்டாளர்கள் நவீனத்துறையுடன் சேர்ந்ததாகவே கருதினர். இவ்வாறு மரபுப் பொருளாதாரத் துறை, நவீன பொருளாதாரத் துறை என இருவேறு துறைகளை வகுத்துக்கொண்ட இக்கோட்பாட்டாளர்கள் மரபுப் பொருளாதாரத் துறையில் இருந்து மிகை உழைப்பு (Surplus Labour) நவீனத்துறைக்கு மாற்றப்படும் போது பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் எனக் கூறினர். 1954 ஆர்தர் லூவிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட ‘Economic Development with Unlimited Supplies of Labour’ என்ற தலைப்பிலான நூலில் இக்கருத்து எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ‘இரட்டைப் பொருளாதாரம்’ என்ற கருத்தில் பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்பது ஆரம்பத்திலேயே இருந்து வந்த ஒரு நிலை (Original State) என்ற கருத்து உள்ளடங்கியிருந்ததை அவதானிக்கலாம். வளர்ச்சிக் குறைவு என்பது காலனியத்தாலும் (Colonialism) ஏகாதிபத்தியத்தாலும் ஏற்பட்ட தாக்கங்களால் ஏற்பட்டதல்ல. மூன்றாம் உலக நாடுகளின் ஆரம்பநிலையே வளர்ச்சிக் குறைவுதான் எனவும், காலனியமும் ஏகாதிபத்தியமும் நவீனத்துவத்தை இந்நாடுகளில் புகுத்தின என்பதும் இரட்டைப் பொருளாதாரம் என்பதில் உட்கிடையாக அமைந்திருந்த கருத்தாகும்.
நிலைமாற்றம் குறித்த விவாதம்
20 ஆம் நூற்றாண்டில் சமூக விஞ்ஞானிகள் மத்தியில் நடைபெற்ற இன்னொரு வாதம் நிலைமாற்றம் குறித்த விவாதம் (Transition Debate) என அழைக்கப்படுகிறது. இவ்விவாதம் நவீனமாதல் விவாதம் போன்று பிரபல்யம் பெறவில்லை. ஆயினும் மிக முக்கியமான விவாதமாகும். பிரித்தானிய மார்க்சிஸ்ட் சிந்தனையாளரான மோரிஸ் டொப் (Maurice Dobb) அவர்களுக்கும் அமெரிக்காவின் மார்க்சியச் சிந்தனையாளரான போல் ஸ்வீசி (Paul Sweezy) அவர்களுக்கும் இடையிலான கருத்து மோதலாக இவ்விவாதம் ஆரம்பமானது. பின்னர் போல் ஸ்வீசியின் அணியைச் சேர்ந்த அமெரிக்க மார்க்சிஸ்ட் ஆகிய றொபேர்ட் பிரன்னர் (Robert Brenner) என்பவர் இவ்விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தார். இதனால் இவ்விவாதம் ‘பிரன்னர் விவாதம்’ (Brenner Debate) எனவும் அழைக்கப்படுவதுண்டு. நிலைமாற்றம் குறித்த விவாதத்தின் சிக்கலான விடயப் பொருளை இக்கட்டுரையில் சுருக்கிக் கூறுவது இயலாத காரியம். நிலைமாற்றம் குறித்த விவாதம் பற்றி விரிவாக அறிந்துகொள்வதற்கு ‘Verso’ பதிப்பகத்தின் வெளியீடான ‘The Transition from Feudalism to Capitalism’ (நிலமானியத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கான நிலைமாற்றம்) என்ற நூலைப் படித்தல் வேண்டும். மோரிஸ் டொப், கிறிஸ்தோபர் ஹில், எரிக் ஹொப்ஸ் பாம், ஜோர்ஜ்ஜஸ் லெவெர்பர் (Georges Lefebvre), யோன் மெரிங்டன், குலியானோ புறோகாசி (Giuliano Procacci), போல் ஸ்வீசி, கொஹா சிறோ டாகாகிசி (Kohachiro Takahashi) ஆகிய மார்க்சிஸ்டுகளின் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் பயனுடையதொன்றாகும். மார்க்சிஸ்டுகளிடையே இடம்பெற்ற இவ்விவாதம் நிலமானியத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கான நிலை மாற்றம் பற்றியது என்பதை மேலே குறிப்பிட்டோம். இவ்விடயம் குறித்து இருவேறு நிலைப்பாடுகள் இவ்விவாதத்தில் முன்வைக்கப்பட்டன.
1) ஒரு சாரார் நிலமானியத்தின் அழிவுக்கும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும் ஐரோப்பாவில் தோன்றிய வர்த்தக முதலாளித்துவம் (Commercial Capitalism) முக்கிய இடத்தைப் பெற்றது; வர்த்தக முதலாளித்துவம் காலனிய நாடுகளில் மூலதனத்தை வர்த்தகத்துறையில் முதலிட்டு, ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவ நிலைமாற்றத்திற்கும் நிலமானியத்தின் உடைவுக்கும் வழிவகுத்தது என வாதிட்டனர்.
2) இன்னொரு சாரார் வர்த்தக மூலதனம் (Merchant Capital) முக்கியமானதன்று; ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏற்பட்ட முதலாளித்துவ வர்க்க உறவுகளே (Internal Development of Capitalist Class Relations) தீர்மான சக்தியாக விளங்கியது என வாதிட்டனர். வர்த்தக மூலதனம் இரண்டாம் பட்சமானது என்று வாதிட்டனர். சுருங்கக் கூறின் ‘வர்த்தக மூலதனம்’, ‘முதலாளித்துவ வர்க்க உறவுகள்’ என்ற இரு காரணிகளில் எது கூடிய முக்கியத்துவம் உடையது (The Relative Weight) என்பதே விவாதத்தின் மையமான விடயமாக அமைந்தது.
குறைவிருத்தி
குறைவிருத்தி (Under Development) பற்றிய கோட்பாட்டின் வளர்ச்சிக்கு மேற்குறிப்பிட்ட இரு விவாதங்களும் பெரும் பங்களிப்பை நல்கின. குறைவிருத்தி நாடுகளின் பின்னடைவுக்கான காரணங்கள் யாவை என்ற வினாவிற்கு வெளியகக் காரணிகளை (External Factors) முதன்மைப்படுத்தியவர்களின் கருத்துகள், மூன்றாம் உலக நாடுகளுக்குள் நிலவிய வர்க்கக் கட்டமைப்பு, வர்க்க உறவுகள் (Class Relations) ஆகிய உள்ளகக் காரணிகளை (Internal Factors) முதன்மைப்படுத்தியவர்களின் கருத்துகளோடு முரண்பட்டனவாக இருந்தன. வெளியகக் காரணிகளை முதன்மைப்படுத்தியவர்கள் மூன்றாம் உலக நாடுகளின் குறைவிருத்திக்கான காரணங்களில் பின்வருவன முதன்மையானவை எனக் கூறினர்.
அ) காலனித்துவம் (Colonialism)
ஆ) வர்த்தகம் (Trade)
இ) காலனியவாதிகள் மூன்றாம் உலக நாடுகளில் நடத்திய கொள்ளை (Plunder)
உள்ளக உற்பத்தி உறவுகள் (Internal Production Relations) என்னும் உள்ளகக் காரணியை முதன்மைப்படுத்தியவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் காலனியம் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பொருளியலாளர்களிடையே இடம்பெற்ற இந்த விவாதம் காலனியத்தில் இருந்து ஆசிய, ஆபிரிக்க நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்றுச் சுதந்திர நாடுகளாக இருந்த காலத்தில் நடைபெற்றது. 1950 முதல் 1980 வரையான இக்காலத்தில் மூன்றாம் உலகம், அதன் பொருளாதார விருத்தி என்ற விடயம் சார்ந்த அரசியல் உலக மட்டத்தில் முக்கியம் பெற்றது. இதனால் குறைவிருத்தி பற்றிய விவாதம் 1950 – 1980 கால உலக அரசியல் பின்புலத்தில் (Political Context) நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால் உலக அரசியல் பிரச்சினைகளின் பின்னணியில் மார்க்சிய, இடதுசாரிப் பொருளியல் சிந்தனை வளர்ச்சி பெற்றது என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் நூல்
1982 இல் எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் ‘The Political Economy of Under Development’ என்ற நூல் ரவுட்லெட்ஜ் (Routledge) பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சில்வா அவர்கள் இந்நூலில் றொபேர்ட் பிரன்னர் முன்வைத்த கோட்பாட்டு வாதங்களைத் தழுவி, தங்கியிருத்தல் கோட்பாட்டைப் (Dependency Theory) பற்றிய காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தார். மூன்றாம் உலக நாடுகளின் முதலாளித்துவ மாற்றத்தில் உள்ளக உற்பத்தி உறவுகளே (Internal Production Relations) முக்கிய சக்தியாகச் செயற்படுகின்றன. குறிப்பாக கிராமிய விவசாயத்துறையின் உற்பத்தி உறவுகள் வளர்ச்சிக் குறைவைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றன என அவர் எடுத்துக்காட்டினார். பெரும்பாலான இடதுசாரிப் பொருளியலாளர்கள் அக்காலத்தில் வெளியகக் காரணியாகிய வர்த்தகம், சமத்துவமற்ற பரிவர்த்தனை (Unequal Exchange) என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த தங்கியிருத்தல் கோட்பாட்டின் (Dependency Theory) ஆதரவாளர்களாக இருந்தனர்.

தங்கியிருத்தல் கோட்பாட்டை விமர்சித்தவரான சில்வா பிறரில் இருந்து விலகித் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவராகவே விளங்கினார் எனலாம். தங்கியிருத்தல் கோட்பாட்டை எதிர்த்தவர்கள் ஐரோப்பிய மையவாதிகள் எனவும், காலனியத்தின் தாக்கத்தை அலட்சியம் செய்தவர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டனர். சில்வா தங்கியிருத்தல் கோட்பாட்டை விமர்சித்தார் எனினும் அவர் காலனியத்தின் சுரண்டலையும், முன்னாள் காலனிகளின் வளர்ச்சிக் குறைவிற்கு காலனியத்தின் தாக்கம் ஒரு முக்கிய காரணியாக இருந்ததையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.
எஸ்.பி.டி.டி. சில்வா அவர்களின் ஆய்வு முறையியல் மார்க்சியப் பகுப்பாய்வு வகைமைகளுக்கு (Marxist Analytical Categories) முதன்மை அளிப்பதாக இருந்தது. அவர் பல நாடுகளின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தார். ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ரொடேசியா (சிம்பாவேயின் முன்னாட் பெயர்) ஆகியவற்றின் வரலாற்றை ஆராய்ந்தார்; தோட்டப் பொருளாதாரமுறை புகுத்தப்பட்ட கரிபியன் நாடுகள், கென்யா, மலேசியா என்பனவற்றின் வரலாற்றையும் சில்வா ஆழமாக ஆராய்ந்தார். மேற்படி நாடுகளின் வரலாற்று ஆய்வுகள் மூலம் அவர் வளர்ச்சியிலும், வளர்ச்சிக் குறைவிலும், வெள்ளையர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறிய குடியேறிகளின் காலனிகளுக்கும் (Settler Colonies), இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற குடியேறிகள் இல்லாத காலனிகளுக்கும் (Non – Settler Colonies) அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதை எடுத்துக்காட்டினார்.
குடியேறிகளின் காலனிகள் (Settler Colonies), குடியேறிகள் இல்லாத காலனிகள் என்ற இருவகைகளில், குடியேறிகள் காலனிகளில் சுயாதீனமான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டது. அக்காலனிகளில் குடியேறியவர்கள், அங்கு முன்னர் இருந்த சுதேச மக்களின் உற்பத்தி முறைகளை அழித்து, சுயாதீனமான முதலாளித்துவ வளர்ச்சிக்கு (Autonomous Capitalist Development) அடித்தளமிட்டனர். குடியேறிகள் விரைவிலேயே தமது தாயகத்துடன் இருந்து வந்த வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்து, வர்த்தக மூலதனத்தின் ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி இட்டனர். இதனால் குடியேறிகள் காலனிகளில் உள்ளக மூலதனத் திரட்சி (Internal Capitalist Accumulation) ஏற்பட்டது. ஆனால் குடியேறிகள் இல்லாத காலனிகளில் வர்த்தக மூலதனம் அதன் முகவர்களான வர்த்தகர்கள், நிலப்பிரபுக்கள், வட்டிக்கடை முதலாளிகள் என்போரின் துணையுடன் மேலாதிக்கம் பெற்றிருந்தது. இதனால் வளர்ச்சிக்கான தடைகள் போடப்பட்டன.
குறைவிருத்தி நாடுகளின் வளர்ச்சிக் குறைவின் பிரதான காரணம் அந்நாடுகளில் வர்த்தக மூலதனம் தன்னை கைத்தொழில் மூலதனமாக மாற்றிக்கொள்ள முடியாத நிலை காரணமாகவே (The Non – transformation of Merchant Capital into Industrial Capital) எழுந்தது என சில்வா குறிப்பிட்டார். குறைவிருத்தி நாட்டில் உருவாக்கப்பட்ட உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் அடுத்த உயர்நிலை நோக்கி வளருவதற்குத் தடையாக அமைகின்றன.
எஸ்.பி.டி.டி. சில்வா அவர்கள் கிழக்கு ஆசிய நாடுகளான தைவான், ஹொங்கொங், தென்கொரியா ஆகிய நாடுகளின் வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து ஓர் உண்மையைத் தெளிவுபடுத்தினார். இம்மூன்று நாடுகளும் கெடுபிடி யுத்தம் (Cold War) நிகழ்ந்த சூழ்நிலையில் அதனால் கிடைத்த சாதகமான வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முன்னேறின எனப் பொதுவாக நம்பப்பட்டு வந்தது. கெடுபிடி யுத்தம் என்ற வெளியகக் காரணியை (External Factor) விட வேறு பல காரணிகளும் இருந்தன; இந்நாடுகளின் உள்ளக வர்க்கக் கட்டமைப்பு (Internal Class Structure) எவ்வாறு வளர்ச்சியை வேகப்படுத்த அல்லது தடைப்படுத்த உதவியது என்பது ஆராயப்பட வேண்டும் என சில்வா குறிப்பிட்டார். இம்மூன்று நாடுகளும் ஆசியாவின் முன்னாள் காலனிகள் சிலவற்றுடன் மையம் – சார்பு மண்டலம் உறவை (Centre – Periphery – Relation) ஏற்படுத்திக் கொண்டன. மலேசியாவின் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு (Free Trade Zones) மூலதனத்தை ஏற்றுமதி செய்வனவாக இந்நாடுகள் தமது நிலையை மாற்றிக்கொண்டன என்பதை அவர் எடுத்துக்காட்டினார். இவ்வாறு தங்கியிருத்தல் கோட்பாட்டின் (Dependency Theory) போதாமையை சில்வா தமது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தினார்.
சில்வா அவர்களின் கலாநிதிப்பட்ட ஆய்வு
எஸ்.பி.டி.டி. சில்வா அவர்கள் ‘LSE’ என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ‘லண்டன் பொருளியல் பள்ளியில்’ (The London School of Economics) தமது கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவர் தமது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட விடயப்பொருள் ‘இலங்கையில் முதலீடுகளும் பொருளாதார வளர்ச்சியும்’ (Investment and Economic Growth in Ceylon) என்பதாகும். 1962 ஆம் ஆண்டு அவர் மேற்படி தலைப்பிட்டு எழுதிய ஆய்வேடு ‘LSE’ நூலகத்தில் உள்ளது. இந்த ஆய்வேட்டை அவர் நூலாகப் பிரசுரிக்கவில்லை. இதனால் இந்த ஆய்வேட்டில் அவர் கூறியிருக்கும் கருத்துகள் வெளி உலகுக்குத் தெரியவரவில்லை. 1962 இல் இந்த ஆய்வேட்டை எழுதிச் சமர்ப்பித்த சில்வா அவர்கள் 20 ஆண்டுகள் கடந்தபின் 1982 இல் ‘The Political Economy of Under Development’ என்னும் பெரும் படைப்பை வெளியிட்டார். எஸ்.பி.டி.டி. சில்வா அவர்கள் தமது சமகாலத்தின் பிற அபிவிருத்திச் சிந்தனையாளர்கள் போன்று தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும், நூல்களையும் ஆண்டுதோறும் வெளியிட்டு ‘எழுதிக் குவிப்பதன்’ மூலம் பிரபலத்தைத் தேடியவரல்லர். அவர் மேற்குறித்த பெரும்படைப்பை (1982) மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். ஆகையால் அவரது அறிவு உலக வாழ்க்கை வரலாற்றை (Intellectual History) அறிந்து கொள்வதும், 1982 இல் அவர் வெளியிட்ட நூலின் கருத்துகளின் ஊற்றுகளைக் கண்டறிவதும் பயனுடையது எனலாம். இதைக் கருத்தில் கொண்டு அவரது பிரசுரிக்கப்படாத ஆய்வேடான ‘Investment and Economic Growth in Ceylon’ இல் அவர் கூறியிருக்கும் கருத்துகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. இலங்கையின் பெருந்தோட்டத்துறையை நவீன துறை எனவும், அத்துறையில் இருந்து கிராமிய விவசாயத்திற்குத் தேவையான வளர்ச்சி உந்துதல்கள் கிடைக்குமென்றும், அவ்வளர்ச்சி உந்துதல்களை கிராமிய விவசாயத்துறை உள்ளீர்ப்பதன் மூலம் நவீனமாதல் (Modernisation) ஏற்படும் என இரட்டைப் பொருளாதாரக் கோட்பாட்டின் அனுமானம் அமைந்தது.
2. ஆனால் மேற்குறிப்பிட்டவாறாகக் கிராமிய விவசாயத்துறை வளர்ச்சி உந்துதல்களை உள்ளீர்த்துக் கொள்ளவில்லை. இதற்கான காரணம் கிராமிய விவசாயத்துறையில் உற்பத்தி விளைதிறன் அதிகரிப்புக்கு வேண்டிய நிறுவனக் கட்டமைப்பு மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. கிராமிய விவசாயப் பொருளாதாரத்தின் தேக்க நிலைக்கு இதுவே காரணம் என்பதை சில்வா சுட்டிக்காட்டினார்.
3. ஆர்தர் லூவிஸ் அவர்களின் இரட்டைப் பொருளாதார மாதிரியை (Dual Economy Model) இலங்கைக்குப் பிரயோகித்து தமது சிபார்சுகளை முன்வைத்த பொருளியலாளர்கள், கிராமிய விவசாயத்துறையில் இருந்து வளங்கள் நவீன கைத்தொழில் துறைக்கு மாற்றப்பட வேண்டும் எனக்கூறினர். குறிப்பாக கிராமிய விவசாயத்துறையில் மிகையான உழைப்பு (Surplus Labour) முடக்கப்பட்டுள்ளது எனவும், உழைப்பாளர்களை விளைதிறன் மிக்க நவீன கைத்தொழில் துறைக்கு மாற்ற வேண்டும் எனவும் இப்பொருளியலாளர்கள் கருத்துரைத்தனர். அதாவது கிராமியத்துறையின் மக்கள் தொகையை (Population) நகரப்பகுதிகளுக்கு மாற்றும் நகரமயமாதல் (Urbanisation) கைத்தொழில் வளர்ச்சியின் பயனாக ஏற்படும் என்னும் அனுமானம் இக்கருத்தில் உள்ளடங்கியிருந்தது.
4. இலங்கையின் கிராமிய விவசாயத்துறையின் நிறுவன ஒழுங்கமைப்பு பிறதுறைகளுக்கு உழைப்பு இடம்பெயர்வதற்கு (Mobility of Labour) அனுமதிப்பதில்லை. உழவு, விதைப்பு, களைகட்டல், அறுவடை என்பன நிகழும் மாதங்களில் நிறை வேலையுடைமையும் (Full Employment) அவ்வேலைகள் நடைபெறாத மாதங்களில் குறை வேலையுடைமையும் காணப்படும். இது மரபுவழி விவசாயத்தின் பருவகால இயல்பை (Seasonal Nature of Traditional Agriculture) எடுத்துக்காட்டுவது. இப்பின்புலத்தில் நிறுவன மாற்றத்தின் (Institutional Change) மூலமே வளர்ச்சிக்கான உந்துதல்களை உருவாக்கலாம் என சில்வா குறிப்பிட்டார். வளங்களின் அருமை (Resource Scarcity), போதிய வளங்கள் கிராமிய விவசாயத் துறைக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பன வளர்ச்சிக் குறைவின் முதன்மைக் காரணிகள் அல்ல, கிராமியத்துறையின் சமூகக்கட்டமைப்பே (Social Structure) முதன்மையான காரணி என்ற கருத்தை சில்வா அழுத்திக் கூறினார்.
5. கல்லோயா திட்டம் போன்ற உலர் வலயக் குடியேற்றத் திட்டங்களில் பேரளவு நிதி வளங்கள் முதலிடப்பட்டன. இம்முதலீடுகள் நிறுவன அமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஈரவலய கிராமங்களின் மோசமான இயல்புகள் உலர் வலயக் குடியேற்றங்களில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டன. குடியேறிகளின் காணிகளை குத்தகைக்குப் பெற்று விவசாயம் செய்யும் தலத்திலா நிலப்பிரபுக்கள் (Absentee Landlords), அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்தல், அரிசி வர்த்தகம், முற்பணம் கொடுத்து அறுவடையைப் பெறுதல் போன்ற வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தக முதலாளிகள் ஆகிய இருவகையினர் உலர் வலயக் குடியேற்றங்களின் நெல் விவசாயத்தில் ஆதிக்கம் பெற்றுள்ளனர் என்பதை சில்வா எடுத்துக்காட்டினார். தலத்திலா நிலப்பிரபுக்கள், கடன் கொடுக்கும் வர்த்தகர்கள் (Money Lenders) ஆகியோர் உலர் வலயத்தின் விருத்திக்குத் தடையாக அமையும் வர்க்கப் பிரிவினர் ஆவர் என்பதை சில்வா எடுத்துக்காட்டினார்.
6. விவசாய வர்க்கத்தை கிராமங்களிலிருந்து பெயர்த்தெடுத்து (Uprooting the Peasant) நகரங்களுக்கு இடம்பெயரச் செய்தல் ஆர்தர் லூவிஸ் மாதிரியில் ஒரு கூறாக அமைந்திருந்தது. இது ஐரோப்பிய மாதிரியில் அமைந்த வளர்ச்சி பாதையாகும். சில்வா அவர்கள் இதற்கு மாற்றாக ஜப்பான் நாட்டிலும், சீனாவிலும் பின்பற்றப்படும் வளர்ச்சி மாதிரி இலங்கைக்குப் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் கிராமியத் துறையின் கைத்தொழில்மயமாக்கம் (Rural Industrialisation) அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்; அதன்மூலம் மூலதனம், தொழில்நுட்பம், உள்ளீடுகள் என்பனவற்றை கிராமியத் துறைக்குள் புகுத்துதல் வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மரபுத்துறை – நவீனத்துறை (Tradition – Modernity Duality) என்னும் இரட்டை எதிர்நிலை மாதிரியில் இருந்து வேறுபட்ட மாற்று வழிமுறை பற்றி சில்வா 1962 காலத்திலேயே சிந்தித்துள்ளார்.
குறைவிருத்தி அரசியல் பொருளாதாரத்திற்கு எஸ்.பி.டி.டி. சில்வாவின் பங்களிப்பு
இலங்கையின் பெருந்தோட்டத்துறை உற்பத்திச் சாதனங்களின் புரட்சிகளுக்கான மாற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை. அத்துறையில் கைத்தொழில் மூலதனம் (Industrial Capital) மேலாதிக்கம் பெற்றிருக்கவில்லை. பதிலாக வர்த்தக மூலதனமே (Merchant Capital) ஆட்சி செலுத்தியது. இலங்கையின் வளர்ச்சிக் குறைவுக்கும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் காரணமாகவும் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியைத் தடைப்படுத்துவதுமாகவும் அமைந்த தோட்டத்துறையை நவீனத்துறை (Modern Sector) என்று கூறுவது அடிப்படையிலேயே ஒரு தவறான கருத்தாகும் என்பதை சில்வா தமது நூலில் விளக்கியுள்ளார்.

ஆர்தர் லூவிஸின் இரட்டைப் பொருளாதார மாதிரி பொருத்தமற்றது. மரபுத்துறையில் இருந்தே இலங்கையுடன் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கான வளர்ச்சி உந்துதல்கள் கிளம்ப வேண்டும். இது கிராமிய விவசாயத்துறையில் கைத்தொழில் வளர்ச்சி (Rural Industrialisation) ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். அபிவிருத்தி பற்றிய பிரச்சினை தனித்து பொருளாதாரப் பிரச்சினையன்று, அது முதன்மையாக ஓர் அரசியல் பிரச்சினையாகும். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் எத்தகைய உள்ளக சமூக மாற்றம் தேவை? (What kind of domestic social changes are necessary for development?) என்பதே பிரதான கேள்வி. இது உண்மையில் ஓர் அரசியல் பற்றிய வினாவாகும். எந்த வர்க்கம் அல்லது எவ்வெவ் வர்க்கங்களின் கூட்டணி முதலாளித்துவ முன்தோற்றத்திற்கான மூலதனத் திரட்சியைத் (Capitalist Accumulation) தடுக்கிறது? ஆகிய ஆய்வு வினாக்களை முன்வைக்கும் எஸ்.பி.டி.டி. சில்வா இலங்கையின் வளர்ச்சிக் குறைவுக்கான காரணங்களை உள்ளக வர்க்கக் கட்டமைப்பு என்பதன் அடிப்படையில் விளக்குகிறார். சிறான் இலன்பெரும அவர்கள், எஸ்.பி.டி.டி. சில்வா எழுப்பும் வினாக்கள், 1926 இல் மா ஓ சேதுங் எழுதிய ‘சீனாவின் கிராமிய வர்க்கங்கள் பற்றிய ஆய்வு’ என்னும் நூலில் கூறியிருக்கும் கருத்தொன்றை ஞாபகப்படுத்துவனவாக உள்ளன எனக் குறிப்பிட்டார். மா ஓ சேதுங் முன்வைத்த கருத்து வருமாறு,
“எமது நண்பர்கள் யார்? எமது எதிரிகள் யார்? தற்போது இருந்துவரும் உற்பத்தி உறவுகளின் தேக்கநிலைக்குக் காரணமான தடைகளை உடைத்தெறியக்கூடிய வர்க்கங்கள் எவை? எத்தகைய வர்க்கச் சக்திகள் இத்தடைகளை உடைத்தெறிய வல்லன? இந்த வர்க்கச் சக்திகளை ஒன்றிணைப்பதற்கும், ஐக்கியப்படுத்துவதற்கும் தேவையான அரசியல் வேலைத்திட்டம் எது? இந்த வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கவும் ஆதரவு வழங்கவும் கூடியதான புவியரசியல் இணைப்பு (Geo. Political Alignment) எத்தகையது?”
இலங்கையில் 2015 இல் நல்லாட்சிக்கான அரசாங்கம் பதவிக்கு வந்தது. பின்னர் 2019 இல் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பதவிக்கு வந்தது. அடுத்து தேசிய மக்கள் சக்தி (NPP) அதிகாரத்தைக் கைப்பற்றியது. இம்மாற்றங்கள் பெரிய மாற்றங்கள் போன்ற தோற்றத்தைத் தந்தன. ஆனால் இந்த அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளில் தொடர்ச்சி இன்மையையோ முறிவையோ (Rupture) காணமுடியவில்லை. பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியையே (Continuity) காணமுடிகிறது. காரணம் இவை பிரதிபலிக்கும் வர்க்க நலன்களில் (Class Interest) மாற்றமில்லை. இம்மூன்று அரசாங்கங்களும் வர்த்தக மூலதனத்தின் ஆதிக்கத்தின் (Dominance of Merchant Capital) பக்க விளைவுகளான,
- ஊழல் (Corruption)
- ஊக வாணிபம் (Speculative Trade)
- கைத்தொழிற்துறையின் தேய்வு (De – industrialisation)
- தொழில் திறன் தேய்வு (De – skilling)
ஆகிய குறைகளை நீக்க வேண்டும், ஒழிக்க வேண்டுமென்றே பேசுகின்றன. இவை முன்வைக்கும் நிவாரணங்களான ‘நல்லாட்சி’ (Good Government) அல்லது வெளிநாட்டு முதலீடு (Foreign Investment) என்பனவும், அரசியல் சுலோகங்களும் வர்த்தக மூலதனத்தால் ஆதிக்கம் செய்யப்படும் ஒரு பொருளாதார முறைமையின் உள்ளார்ந்த நெருக்கடியின் எதிர்வினைகளே ஆகும். ஆயினும் மேற்குறித்த ‘நல்லாட்சி’, ‘வெளிநாட்டு முதலீடு’ என்பன இலங்கையின் விருத்திக் குறைவுக்கான தீர்வினை வழங்கப்போவதில்லை. இப்பின்னணியில் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியின் இயல்புகளைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டியாக சில்வா அவர்களின் நூல் அமைந்துள்ளது.
De Silva S.B.D
- Investment and Economic Growth in Ceylon (Un-published Ph.D Thesis) London School of Economics, (1962).
- The Political Economy of Underdevelopment, (1982). London Routledge.



