தேசியத் தரு தழைக்க உதவிய உரம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
12 நிமிட வாசிப்பு

தேசியத் தரு தழைக்க உதவிய உரம்

July 3, 2025 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

ஆங்கிலக் கல்வியும் அறிஞர் ஆய்வுகளும்

உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் தென் ஆசியாவின் எதிர்கால அரசியல் அமைப்புகளை உருவாக்க உழைத்த சக்திகள் எழுந்த காலம். இவற்றுள் எவை பெருவெற்றி பெற்று மேலோங்கும் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் நிர்ணயிக்கப்பட்டது.

இப்படியான சக்திகளுள் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது இன – மத அடிப்படையிலான சக்தியாகும். இது ஒரு புறம் இனப்பற்றையும் மறுபுறம் இனவெறுப்பையும் எழுச்சிபெறச் செய்து, பிரித்தானியர் நாட்டைவிட்டுச் சென்றதும் வெடித்துத் தீ கக்கியது. இதைவிட வேறும் பல சக்திகள் தேசியவாதம் என்ற போர்வையால் மூடப்பட்டு உலகப் போர்களுக்கு இடையிலான காலத்தில் செயற்பட்டன.

இவை பற்றிய கதை, இலங்கையின் 20 ஆம் நூற்றாண்டு வரலாறு. இதில் யாழ்ப்பாணம் ஒரு முக்கிய வகிபாகம் பெற்றுள்ளது (முதல் உலகப் போரின் பின் இப்பிரதேச வரலாற்றை வேறாகப் பிரிக்க முடியாது). இந்தச் சிக்கலான கதையை விளங்கிக் கொள்வதற்கு வரலாற்றை ஆழமாகக் கிண்டி இதன் வேர்களைக் காணவேண்டும். இலங்கையில் நடந்த இனப் போராட்டம் என்று சொன்னால் கண்முன் தெரிவது ‘1956’, ‘சிங்களம் மட்டும் சட்டம்’, ‘பண்டாரநாயக்க’ ஆகிய மரங்கள். இவற்றுக்கு இரு மருங்கிலும் பின்புறத்தில் மிக நீண்ட தூரம் வரையும் பல்வேறு மரங்கள் இருக்கின்றன. இந்த மூன்று மரங்கள் மீது கண் விலகாது நின்றால், பரந்த காட்டைக் காணத் தவறிவிடலாம்.

ஐரோப்பியர் இட்ட உரம்

ஐரோப்பியர் வருகையின் விளைவாகவே இன்றைய தென் ஆசியா உருவாகியது. இதை மறுவளமாகக் கூறுவதாயின், ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தென் ஆசியாவுக்கு வந்திராவிட்டால், இன்று நாம் இங்கு காணும் அரசியல் அமைப்புகளும், பண்பாடும், சமூக நிலையும் வேறாக இருந்திருக்கும். இன்று அசைக்க முடியாத வகையில் வேரூன்றி நிற்கும் தேசியவாதம் ஐரோப்பியர் கொடை ஆகும்.

தேசியவாதம் தென் ஆசியாவுக்கு வருமுன், அது ஓங்கி வளர்வதற்குத் தேவைப்பட்ட உரத்தை, உணர்ந்தும் உணராமலும், ஐரோப்பியர் இந்த நிலத்தில் பரவினர். 

முதலாவதாக, தென் ஆசியா எங்கும் பரப்பப்பட்டது ஆங்கில மொழி. அது 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வளர்ந்த அரசியல் சிந்தனைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளவும் அவற்றால் பயனடையவும் உதவியது. தாராளமயக் கருத்துகள் (தாராண்மைவாதம்/ Liberalism) ஐரோப்பாவில் வலுப்பெற, அவற்றை ஆங்கில வெளியீடுகள் மூலம் அறிந்து, கல்விகற்ற தென் ஆசியர் தழுவிக்கொள்ளவும் வழிதிறக்கப்பட்டது. இவ்வாறே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியத் தேசியவாதக் கருத்துகளும் தென் ஆசியாவை வந்தடைந்தன.

இரண்டாவதாக, தாழ்வு மனப்பான்மையால் தவித்துக்கொண்டிருந்த கல்வி கற்ற தென் ஆசியர்களுடைய விழிப்புணர்வை ஊட்டி, அவர்தம் கடந்த காலச் சிறப்புகளைக் காட்டி அவர்கள் பெருமைப்படுவதற்கு வழிகோலும் வகையில் ஐரோப்பிய அறிஞர் குழாம் ஒன்று 19 ஆம் நூற்றாண்டில் ஆய்வுகளை நடத்தியது. பெருமளவுக்கு இக்குழாத்தின் செயற்பாடுகள் காலனியாதிக்க நிர்வாகத்தின் தேவைகளுக்காக நடத்தப்பட்டவை எனினும், அவர்கள் உணராத வகையில், அடக்கி ஆளப்பட்டோரின் எழுச்சிக்கு இவை உதவின. இக்குழாத்தைச் சேர்ந்தோரை ‘கீழைதேசவியல் அறிஞர்கள்’ (Orientalists) என்பர். 

இந்த அறிஞர் குழாத்தில் இரு பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவினர் கோல்கத்தாவை மையமாகக்கொண்டு இயங்கினர் (Calcutta School of Orientalists); இரண்டாவது பிரிவினர் சென்னையை மையமாக வைத்திருந்தனர் (Madras School of Orientalists). கோல்கத்தாவில் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உவில்லியம் ஜோன்ஸ் (William Jones) ஓர் ஆய்வுக் கழகத்தை (Asiatic Society of Bengal) நிறுவி, இந்திய மொழிகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் ஆய்வு செய்பவர்களை ஒன்று கூட்டி, அவர்களுடைய ஆய்வுகளை வெளியிட வசதிசெய்தார்.

தனது ஒப்பீட்டு மொழி ஆய்வுகளின் விளைவாக, ஜோன்ஸ் இந்திய மொழிகள் பற்றிய புரட்சிகரமான ஒரு கருத்தை முன்வைத்தார். சம்ஸ்கிருத மொழிக்கும் கிரேக்கம், லத்தீன் ஆகியவற்றுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை இருப்பதை விளக்கி, இவை ஒரு பொது ஆதி மொழியில் இருந்து வந்தவை எனவும், இவற்றின் வழிவந்த ஐரோப்பிய மொழிகளும் இந்திய மொழிகளும் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்தின் வளர்ச்சியாகவே இன்று இந்து – ஐரோப்பிய மொழிக் குடும்பம் (Indo-European Family of Languages) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மொழி ஆய்வு ஒரு நீண்ட கதை. இதில் ஒரு படலம் இங்கு முக்கியமானது. ஜோன்ஸ் அடையாளம் கண்ட மொழிக் குடும்பத்துக்கு 19 ஆம் நூற்றாண்டில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று ‘ஆரிய மொழிக் குடும்பம்’ என்பது. இதனை மிகவும் பிரபலமாக்கிப் பயன்படுத்தியவர் மாக்ஸ் முய்ல்லர் (Friedrich Max Müller 1823-1900) என்ற ஜெர்மன் மொழியியலாளர் ஆவர். இச்சொற்பிரயோகம் பின்னர் ஜெர்மனியிலும் இலங்கையிலும் அரசியலில் தாக்கத்தை உண்டு பண்ணியது. ஜெர்மன் நாற்ஸிவாதத்தின் (Nazi) ஒரு வேரும், சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் ஒரு வேரும் இங்கு வரை செல்கின்றன.

கோல்கத்தா அறிஞர் பலர் (H.T. Colebrooke, William Carey ஆகியோர்) இந்தியாவின் மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என வாதாட, அதற்கு மாறான ஒரு கருத்துச் சென்னை அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. சென்னையில் இந்திய மொழிகளை இளம் பிரித்தானிய நிர்வாகிகளுக்குக் கற்பிக்கவும் ஆய்வு செய்யவும் 1812 இல் பிரான்ஸிஸ் எலிஸ் (Francis Ellis) என்ற நிர்வாகி College of Fort St. George (தமிழில் இது சென்னைக் கல்விச் சங்கம் என வழங்கியது) என்ற நிறுவனத்தை  St. George கோட்டையில் நிறுவினார். இங்கு நடத்திய ஆய்வுகளின் விளைவாக 1816 இல் ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தும் கோட்பாட்டை அவர் வெளியிட்டார். அது கோல்கத்தா அறிஞர்களின் கருத்தை நிராகரித்தது.

முதல் தடவையாக மொழி அறிஞர் ஒருவர் தமிழும், தெலுங்கும், பிற தென் இந்திய மொழிகளும் தனியான ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை எனத் தெட்டத்தெளிவாக முன்வைத்த கோட்பாடு இதுவாகும். இது தான் எலிஸ் எழுதியது: “தமிழோ தெலுங்கோ அல்லது அவற்றுடன் பிறந்த பிற குழு மொழிகளோ சம்ஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்டவை அல்ல… இவை தனியான ஒரு மொழிக்குடும்பம்” (“…neither the Tamil, the Telugu, nor any of their cognate dialects are derivations from the Sanskrit…they form a distinct family of languages.”).

இதே கோட்பாட்டை 1856 இல் ரொபர்ட் கால்டுவெல் (Robert Caldwell 1814-1891) முன்வைத்து, தென் இந்திய மொழிகளின் குடும்பத்துக்குத் திராவிட மொழிக்குடும்பம் என்ற பெயரைக் கொடுத்தார். எலிஸ் தெரிவித்த முக்கியமான கருத்தை கால்டுவெல் உரிய முறையில் அங்கீகரித்து, அவருக்குச் சேரவேண்டிய புகழைக் கொடுக்கவில்லை என்பதை அண்மைக் காலத்தில் அமெரிக்க அறிஞர் Thomas Trautmann வெளிப்படுத்தியுள்ளார்.

எலிஸ் வெளிப்படுத்திய கோட்பாடு அவர் மட்டும் தனிப்பட ஆய்வு செய்து கண்டறிந்த முடிவு என்று சொல்லமுடியாது. தென் இந்திய மொழிகள் ஒன்றுகொன்று தொடர்புடையவை என்பது இம்மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பாரம்பரிய அறிஞர்கள் ஏற்கெனவே அறிந்திருந்த ஒரு விஷயமாகும். இப்படியான அறிஞர் சிலர் எலிஸ் தொடக்கிய சென்னைக் கல்லூரியில் (சென்னைக் கல்விச் சங்கத்தில்) ஆசிரியர்களாக இருந்தவர்கள் அல்லது அவருக்கு வேறு வகைகளில் பணிபுரிந்தவர்கள். இவர்களுள் இருவர், சங்கரையாவும் பட்டாபிராம சாஸ்திரியும், சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.

தென் இந்தியாவில் செயலாற்றிய எலிஸ், கால்டுவெல் போன்ற கீழைத்தேசவியல் அறிஞர்களுடைய ஆய்வுகள் பிற்காலத்தில் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தின. பின்னர் எழுச்சிபெறும் திராவிடத் தேசியவாதத்தின் ஒரு வேர் கால்டுவெல் ஆய்வு வரை மட்டுமல்ல, அப்பால் எலிஸ் காலம் வரை செல்கின்றது.

மொழிசார் அறிஞர்கள் மட்டுமன்றி, தொல்லியல் ஆய்வாளர்களும், கல்வெட்டியலாளர்களும் 19 ஆம் நூற்றாண்டில் தென் ஆசியாவில் கண்டறிந்தவை, பின் எழும் தேசியவாத இயக்கங்களுக்கு உரம் ஊட்டத் தவறவில்லை.

இந்த அறிஞர்களுள் ஒரு சிலரை இங்கு குறிப்பிடலாம். இவர்களுள் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுபவர் ஜேம்ஸ் பிரின்ஸெப் (James Prinsep 1799-1840) என்ற கல்வெட்டியலாளர். தென் ஆசியாவில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிர்வாகப் பொறுப்பு ஏற்றிருந்த இளம் பிரித்தானியர் பலர் நாட்டின் பல பாகங்களில் காணப்பட்ட நூற்றுக்கணக்கான தொல்காலக் கல்வெட்டுகளைப் படித்துப் பொருள்கூறக் கூடியவர்களைத் தேடியபோது எவருமே இருக்கவில்லை. இப்பின்புலத்தில், பிரின்ஸெப் பெரிதும் முயன்று, பிராமி எழுத்தைப் படிக்கும் முறையைக் கண்டறிந்து, தென் ஆசியாவின் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய அசோக மன்னன் பிரகடனங்களை முழுமையாக வாசித்து அசோகனை உலகறிய வைத்தார். பிராமி எழுத்தைப் படிக்க முடிந்ததும், பிற பிற்காலக் கல்வெட்டுகளையும் வாசிக்க முடிந்தது. இந்திய வரலாற்றுக்கு நம்பகமான ஆதாரங்கள் பெரும் அளவில் கிடைத்தன. இவற்றை வைத்து பிரித்தானிய அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் இந்திய வரலாற்றை நவீன முறையில் எழுதினர். இப்படைப்புகள் தேசியவாத எழுச்சிக்கு வலுவூட்டின.

இலங்கையின் தேசியவாத இயக்கங்களுடன் தொடர்புடைய வகையில், பிரின்ஸெப் பிராமி எழுத்தை வாசிக்க உதவியதையும், இந்தியாவின் முதலாவது தொல்லியல் ஆய்வு இயக்குநராக நியமிக்கப்பட்ட அலெக்ஸாண்டர் கனிங்ஹம் (Alexander Cunningham 1814-1893) நடத்திய தொல்லியல் செயற்பாடுகளையும் குறிப்பிடலாம்.

பிராமி எழுத்தில் எவராலும் படிக்க முடியாத நிலையில் இலங்கையின் பெரும்பாகத்தில் பரவிக்காணப்பட்ட குகைக் கல்வெட்டுகளை வாசிப்பதற்குப் பிரின்ஸெப்பின் சாதனை உதவியது. ஆனால் இவற்றைப் படி எடுத்து வாசிப்பதற்கு இலங்கையில் எவரும் இருக்கவில்லை. ஓர் இளம் ஜெர்மன் மொழியியலாளர், பவுல் கோல்ட்ஷ்மித் (Paul Goldschmidt), 1875 இல் இக்கடமையைச் செய்வதற்கு நியமிக்கப்பட்டார். இவர் பல காட்டுப் பகுதிகளுக்குச் சென்று குகைக் கல்வெட்டுகளைப் படி எடுத்து, படித்து வெளியிடத் தொடங்கினார். ஆனால் 1877 இல் மலேரியா நோயினால் இவர் இறந்தார். அரசாங்கம் இன்னொரு ஜெர்மன் மொழியியலாளரான எட்வர்ட் முய்ல்லர் (Eduard Müller) என்பவரை 1878 இல் நியமித்தது. பிராமிக் குகைக் கல்வெட்டுகளையும் பிற சாசனங்களையும் இவர் வாசித்து வெளியிட்டார்.

இவ்வாறு கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டதன் விளைவாகப் பௌத்தர்களுக்குப் பெருமை கொடுக்கும் பல தகவல்கள் வெளிப்பட்டன. நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் பௌத்தம் பரவி இருந்தமை, பரவலாகப் பிராகிருத மொழி ஒன்று வழக்கில் இருந்தமை, பாளி வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்ட அநுராதபுர மன்னர்கள் கல்வெட்டுகளிலும் காணப்பட்டமை போன்ற விஷயங்கள் பௌத்தர்களுக்குப் பெருமை அளித்தன.

கனிங்ஹம் இந்தியாவில் நடத்திய தொல்லியல்சார் செயற்பாடுகளின் விளைவாகப் பாழடைந்து மறக்கப்பட்டிருந்த தொல்காலப் பௌத்த மையங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை ஸாரநாத், ஸாஞ்சி, பாரூத், புத்தகயா ஆகியவை. பௌத்தர்களுடைய எண்பெரும் யாத்திரைத் தலங்களை (அட்ட-மஹா-டாநாநி) மீண்டும் பௌத்தர்கள் பெறவேண்டும் என அநகாரிக தர்மபால போராடி, புத்தகயாவில் மஹாபோதி சங்கத்தை நிறுவி (1891), அவ்விடத்தை நவீனகாலப் பௌத்தப் பெருமையமாக மாற்றினார். அவர் தொடக்கிய சிங்கள பௌத்தத்தின் ஒரு வேர் கனிங்ஹம் நடத்திய தொல்லியல் ஆய்வுகளுக்குச் செல்கின்றது.

இதே காலத்தில் இலங்கையில் அரசாங்கம் தொல்லியல் தலங்கள் மீது கவனம் செலுத்தவில்லை; மக்களும் (பௌத்தர் உட்பட) ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் போல் அல்லாது, இலங்கையில் பௌத்தம் ஒரு ‘வாழும்’ மதமாக இருந்தபடியாலும், பௌத்தர்கள் அநுராதபுரத்திலும் தென் மாகாணத்திலும் பாழடைந்த நிலையில் இருந்த பிரசித்தி பெற்ற பௌத்த தலங்களுக்குத் தொடர்ந்து யாத்திரை செல்லும் வழக்கம் இருந்த காரணத்தினாலும் அவ்விடங்களின் தொல்லியல் ஆய்வில் ஆர்வம் இருக்கவில்லைப் போலும்.

எனினும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவத்துக்கு எதிரான பௌத்த எழுச்சி தொடங்கியபோது, சில பிரசித்திபெற்ற பௌத்த தூபிகளை மறுசீரமைக்கும் முயற்சியில் பௌத்தப் பிரமுகர் சிலரும், பிற ஆர்வலரும் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அநுராதபுரத்தின் மிகப் பழைய தூபியாகிய தூபாராம மற்றும் தென் மாகாணத்தின் மிகப் பழைய தூபியாகக் கருதப்படும் திஸ்ஸமஹாராம பௌத்தத் தலமும் தொல்லியலாளர் உதவியின்றி மறுசீரமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அநுராதபுரத்தின் மிகப் பிரசித்திபெற்ற தலமாகிய மஹாதூப என்றும், ருவன்வலிஸாய என்றும் பெயர்பெறும் பெருந்தூபியின் மறுசீரமைப்புத் தொடங்கியது. பல ஆண்டுகளின் பின் 1940 இல் இவ் வேலை முற்றுப்பெற்றது. இம் மறுசீரமைப்புகளை சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் வேர் ஒன்று தொட்டது.

இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளும் 19 ஆம் நூற்றாண்டில் கல்விகற்ற தென் ஆசியர்களுடைய விழிப்புணர்ச்சியைத் தூண்டி, பின்னர் எழுந்த தேசியவாத இயக்கங்களுக்குச் சத்துக்கொடுத்தன. கீழைத்தேசவியல் அறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்ஸ்கிருத இலக்கியத்தின் செழிப்பை அறிந்ததும், பல நூல்களைத் தேடிப் பெற்று அச்சிட்டதுடன் முக்கியமான பல நூல்களை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகியவற்றில் மொழிபெயர்த்தனர். இவ்வாறே பௌத்தர்களுடைய பாளி நூல்கள் பலவும் வெளியிடப்பட்டன. தென் இந்தியாவில் இத்தகைய செயற்பாட்டில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட ஏடுகளைத் தேடிப் பெற்றுப் பாதுகாப்பதில் ஈடுபட்டனர்.

சென்னையில் எலிஸ் அமைத்த நிறுவனத்தில் ஏடுகளையும் பிற கையெழுத்துச் சுவடிகளையும் தேடிச் சேகரிப்பது ஒரு வேலைத்திட்டமாக இருந்தது. இதற்குப் பொறுப்பாக இருந்தவர் கோலின் மக்கென்ஸீ (Colin Mackenzie). இவருக்கு உதவியாக மொழித்திறமை பெற்ற (ஆங்கிலத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள்) பல தென் இந்திய அறிஞர்கள் செயலாற்றினர். அழிந்துபோகும் நிலையில் இருந்த பல ஏடுகளை இவர்கள் தேடிச் சேகரித்தமை இன்னொரு நீண்ட கதையாகும். கோலின் மகென்ஸீயின் தலைமையில் பெருந்தொகையான ஏடுகள் சேகரிக்கப்பட்டன. இவை Mackenzie Collection என்ற பெயரால் இன்றும் ஆய்வாளர்களுக்குப் பயன்படுகின்றன.

இச்சேகரிப்பில் அடங்கும் தமிழ் ஏடுகள் சி.வை. தாமோதரம்பிள்ளையும் உ.வே. சாமிநாதையரும் தமிழ் ஏடுகளைத் தேடிப்பெற்று, படித்து, அச்சிட்டு வெளியிடுமுன் பெறப்பட்டவை. இவற்றுள் சிலவற்றைச் சென்னைக் கல்விச் சங்கத்தில் படித்தனர். எலிஸ் திருக்குறளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராய், அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சில பாகங்களை அச்சிடுவதிலும் ஈடுபட்டார்.

இதன்பின் தாமோதரம்பிள்ளையும் (1832-1910), சாமிநாதையரும் (1855-1942) பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் உரைநூல்களையும் நவீன முறைப்படி பதிப்பித்து வெளியிட்டனர். இவர்களுடைய வெளியீடுகள் 1880களிலும், பின்னரும் வந்தன. அப்பொழுது தென் இந்தியாவில் கல்வி கற்ற ஒரு வகுப்பினர் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெருமைப்பட்டனர். ஆனால் அப்பொழுது தேசியவாதக் கருத்துகள் பெரும் அளவில் எழுச்சி பெற்றிருந்தன என்று கூறமுடியாது. சில ஆண்டுகளின் பின் தேசியவாதம் தலைதூக்கியபோது பழந்தமிழ் இலக்கியம் பற்றிய வெளிப்பாடுகள் அதற்கு உரம் ஊட்டின.

இலங்கையிலும் பழைய இலக்கியம் சார்ந்த செயற்பாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்று ஓரளவு பரபரப்பையும் ஏற்படுத்தின. இவை பெரும்பாலும் பாளி இலக்கியம் சார்ந்தவை; பௌத்தத்தையும் இலங்கை வரலாற்றையும் பற்றியவை; கீழைத்தேசவியல் அறிஞர்களுடைய செயல்கள்.

இலங்கையைக் கைப்பற்றிய பின், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரித்தானியர் தங்கள் நிர்வாகத்தைச் சீராக அமைக்கத் தொடங்கியபோது (இந்தியாவில் போல) நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய முயன்றனர். அப்பொழுது ஒரு சில சிங்கள வரலாற்று நூல்கள் இருப்பது பற்றி அவர்கள் அறிந்தனர். அக்கட்டத்தில் முக்கியமான பாளி மஹாவங்ஸ நூல் பற்றிப் பலர் அறிந்திருக்கவில்லை.

இப்பின்புலத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒருவர் முதலில் முக்கியத்துவம் பெறுகின்றார். இவர் பெயர் George Turnour (1799-1843). யாழ்ப்பாணக் கோட்டையில் பிரித்தானியர் ஒருவருக்கும் பிரெஞ்சுப் பெண் ஒருவருக்கும் மகனாகப் பிறந்த இவர், இங்கிலாந்தில் தன் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின், இலங்கை சிவில் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து, உயர் நிர்வாகப் பதவியில் இருந்தபோது சிங்களத்தையும், பாளியையும் கற்றவர். 

இவர் மஹாவங்ஸத்தைப் பற்றிக் கேள்வியுற்று, பெரும் சிரமத்துடன் ஒரு பிரதியை விகாரை ஒன்றில் இருந்து பெற்று, அதனைப் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து, முதல் பாகத்தை 1837 இல் வெளியிட்டார். இதுவே பாளி மஹாவங்ஸத்தின் முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு. இதற்குச் சிறிது முன்பாக (1833 இல்) சிங்களத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட மஹாவங்ஸ லண்டனில் வெளியிடப்பட்டிருந்தது (பாதிரியார் Fox மொழிபெயர்த்து, Edward Upham பதிப்பித்த நூல்).

இவ் வெளியீடுகளுக்குப் பின் ஜெர்மன் அறிஞர் Hermann Oldenberg (1854-1920) இலங்கையின் மிகப்பழைய வரலாற்று நூலாகிய தீபவங்ஸத்தை 1879 இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதன் பின்னர் இன்னொரு ஜெர்மன் அறிஞர் Wilhelm Geiger (1859-1943) மஹாவங்ஸத்தை ஜெர்மன் மொழியில் பெயர்த்து வெளியிட்டார். 

பாளியில் இருந்த வரலாற்று நூல்கள் மட்டுமல்லாது, பிற முக்கிய பௌத்த பாளி நூல்களும் இக்காலகட்டத்தில் வெளியிடப்படத் தொடங்கின. இதற்கு உதவும் வகையில் லண்டனில் 1891 இல், Pali Text Society என்ற சங்கம் அமைக்கப்பட்டது. 

இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வெளியிட்ட பாளி, சிங்கள நூல்களும் அவற்றைப் பற்றி எழுதியவையும் இலங்கைப் பௌத்தர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியும் பெருமையும் தோன்றுவதற்கு உதவின. பௌத்த தேசியவாத எழுச்சிக்கு நிலம் பண்படுத்தப்பட்டது. கொழும்புக்கு வந்து பௌத்தத்தைத் தழுவிய அமெரிக்கராகிய ஹென்றி ஸ்டீல் ஒல்கொற் (Henry Steel Olcott) என்பவரும் ருஷ்யப் பெண்ணாகிய ஹெலெனா பிளவற்ஸ்கி அம்மையாரும் (Madame Helena Blavatsky) 1880 இல் Buddhist Theosophical Society இனை அமைத்ததுடன் பௌத்த எழுச்சி முன்னேறத் தொடங்கியது.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்