நீ மயங்குவதேன்: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
14 நிமிட வாசிப்பு

நீ மயங்குவதேன்: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம்

June 25, 2025 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

“எவன் குற்றமற்றவனாதற்குக் கற்கிறானோ எவன் தூய அகத்தினனாதற்கு முயல்கிறானோ எவன் சாந்தியும் ஞானமும் சான்றாக நோக்குந் தன்மையும் பொருந்திய மனதை அடைவதை இலக்ஷியமாகக் கொண்டிருக்கிறானோ அவன் மனிதர் செய்யக்கூடிய செயல்கள் எல்லாவற்றினும் மேலான செயலைச் செய்து கொண்டிருக்கிறான். அவனது அச்செயலின் பயன் ஒழுங்கும் இன்பமும் அழகும் வாய்ந்த ஒரு வாழ்க்கையாக அவன் பால் அமையும்.” (ஜேம்ஸ் ஆலன்)

அகவிடுதலை இல்லாமல் புறவிடுதலை சாத்தியமில்லை. புறக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெறுதல், அடக்கப்பட்ட வாழ்விலிருந்து வெளியேறுதல், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதல் முதலானவற்றுக்கு அகவிடுதலையே அடிப்படையானதாக விளங்குகிறது. தெளிந்த அறிவும் மனத்திடமும் மானுட வாழ்வு குறித்த விரிந்த தேடலும் அகவிடுதலைக்கு இட்டுச்செல்கின்றன. “மனதிற் சலனமில்லாமல், மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின்மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்” எனப் பாரதி மணக்குள விநாயகரிடம் அகவிடுதலையே வேண்டிநிற்கிறார். அதுவே புறவிடுதலைக்கான ஆத்மபலத்தைத் தரக்கூடியது.

தனிமனித நிலையிலும் சமூக நிலையிலும் வாழ்வை வெற்றிகரமாக்கும் அகத்தூண்டலுக்கும் அதனை நோக்கிய பயணத்துக்கும் தன்நம்பிக்கையும் தெளிவும் விழிப்பும் ஊக்கப்படுத்தலும் உந்துசக்தியாகத் தொழிற்படுகின்றன. அவற்றைச் சமூகத்தில் விதைப்பதை இலக்காகக் கொண்டு சுயமுன்னேற்ற நூல்கள் எழுதப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட இலக்குகளை உருவாக்குதல், இலக்கினை நோக்கித் தொடர்ந்து பயணித்தல், கல்வியில் உயர்தல், தொழிலில் அமர்தல், தன்நம்பிக்கையை வளர்த்தல், சுயமரியாதை உணர்வைத் தூண்டுதல், உடன்படான சிந்தனைகளை ஊட்டுதல், எதையும் எதிர்கொள்ளும் உளவியல் வலுவைக் கட்டியெழுப்புதல், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளத் தூண்டுதல், பின்னடைவிலிருந்து எழுச்சியடைய வழிகாட்டுதல் முதலானவையூடாக அக மற்றும் புறத் தடைகளை வெற்றிகொள்ளவும் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, நம்பிக்கை முதலானவற்றை ஊக்குவித்து மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தவும் சுயமுன்னேற்ற நூல்கள் பங்களித்து வருகின்றன.

தனிமனிதர்களுக்கு மட்டுமன்றி ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமூகத்திற்கும் இச்சுயமுன்னேற்றச் சிந்தனைகள் பெரும்பயனளித்து வருகின்றன. எல்லாவிதத் தடைகளைத் தாண்டி மேலெழுவதற்கும், சமூக விழிப்பைக் கட்டியெழுப்புவதற்கும் ஒடுக்கும் சக்திகளை எதிர்ப்பதற்கும், தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் துணைசெய்யும் அக்கருத்துகள், அடிமை மனப்பாங்கை மாற்றி தன்நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன; புதிய நம்பிக்கையை விதைக்கின்றன. அவ்வகையில் சமூக மாற்றத்துக்கான, மேல்நோக்கிய அசைவுக்கான சக்திமிக்க கருவியாகச் சுயமுன்னேற்றச் சிந்தனைகள் விளங்குகின்றன.

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் வீறார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்த பலரும் சுயமுன்னேற்றக் கருத்துகளை அழுத்தமாக வெளிப்படுத்தி வந்துள்ளதைக் காணமுடிகிறது. சிலர் சுயமுன்னேற்றம் பற்றிய முக்கியமான நூல்களைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்த்தும் உள்ளனர். பாரதியின் எழுத்துகளில் சுயமுன்னேற்றச் சிந்தனைகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. சான்றாக,

“…எவனும் உடம்பை உழைப்பினாலும் அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்டால் மனது உத்ஸாகத்துடனிருக்கும். மனத்தளர்ச்சிக்கு இடம்கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக்கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்…

மனவுறுதி, ஸந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீரவுழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும். உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூறாண்டு வாழலாம்.”

என்ற குறிப்பை எடுத்துக்காட்டலாம். சுயமுன்னேற்ற நூலாக்க வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமையாகக் கொண்டாடப்படும் ஜேம்ஸ் ஆலனின் முக்கியமான நூல்களை வ.உ. சிதம்பரம்பிள்ளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜேம்ஸ் ஆலனின் கருத்துகள் சுயமுன்னேற்றத்துக்கான சிந்தனைகளை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளன. சான்றாக, வ.உ.சி. மொழிபெயர்த்த ‘அகமே புறம்’ என்ற நூலின் ஒரு சிறு பகுதியைச் சுட்டிக்காட்டலாம்:

“ஒரு மனிதன் தனது வாழ்வு முழுதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால் அப்பொழுதே அவனுக்குப் பேரின்பவீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக்கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான். அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கொண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான். அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும். அவன் சிறிது முன்னாகவோ பின்னாகவோ சகல தீமைகளையும் சகல கவலைகளையும் சகல துன்பங்களையும் போக்கிவிடுவான். ஏனெனில் தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவிர்த்தியையும் சுகப் பிராப்தியையும் அடையாமல் இரான்.”

வ.உ.சி. இன் மொழிபெயர்ப்புகள் மூலம் ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் தமிழ்நாட்டில் மிகுந்த பிரபல்யம் பெற்றுள்ளன. அம்மொழிபெயர்ப்புகள் பற்றிய கருத்துகளைப் பலரும் பதிவுசெய்துள்ளனர். ‘மனம்போல் வாழ்வு’ என்ற நூல் குறித்துப் பாரதியார், “…அறிவினிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும் கொண்டு தம் வாழ்நாளைப் பொருளும் பயனும் உடையதாக்கவிரும்பும் தமிழர்களெல்லோரும் இந்தப் புஸ்தகமொன்று வாங்கி எப்போதும் திரும்பத்திரும்பப் படித்துவரவேண்டும்” எனக் கூறியுள்ளார். சூரியோதயம், இந்தியா, விவேகசிந்தாமணி, தென்னிந்தியா மித்திரன், தென்னிந்தியா மெயில், இந்து  முதலான பத்திரிகைகளில் அந்நூலின் முக்கியத்துவம் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேற்படி மொழிபெயர்ப்புகள்வழி சுயமுன்னேற்றம் குறித்த நூல்கள் தமிழ்ச் சூழலில் மிகுந்த கவனத்தைப் பெற்றன. காலனிய காலத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கைநிலைமை அந்நூல்களின் தேவையை மிகுவித்தன. அதனால் பலரும் அத்தகைய நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது கோ. நடேசய்யரும் அம்முயற்சியில் இறங்கியுள்ளார்.

வங்கப்பிரிவினை முயற்சிகளையொட்டி எழுச்சிபெற்ற விடுதலைத்தாகத்தின் குழந்தையாக விளங்கிய நடேசய்யர், இந்திய விடுதலைப் போராட்டத்தின் பங்காளராகத் தொழிற்பட்டுள்ளார். இந்திய அரசியல் நகர்வுகளையும் தமிழ்நாட்டில் இடம்பெற்றுவந்த விடுதலைச் செயற்பாடுகளையும் ஆழமாக அவதானித்து வந்துள்ள அவர், அவற்றையொத்த நடவடிக்கைகளை இலங்கையில் முன்னெடுத்துள்ளார். அவற்றின் ஒரு விளைவாகவே, தமிழ்நாட்டில் முனைப்புபெறத் தொடங்கிய சுயமுன்னேற்ற நூல்களையொத்த நூல்களை வெளியிட்டுள்ளார் எனலாம்.

இதழியலாளன், சமூகச் செயற்பாட்டாளன், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி முதலான பல தளங்களில் இலங்கைவாழ் இந்திய மக்களுடன் ஊடாடி அம்மக்களின் அகமும் புறமும் அறிந்த நடேசய்யர், அவர்களிடத்தும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு இளைஞர்களிடத்தும் விழிப்புணர்வையும் மனோதைரியத்தையும் ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு நீ மயங்குவதேன் (1931), வெற்றியுனதே (1934) ஆகிய அகயெழுச்சி நூல்களை ஆக்கியுள்ளார். இளைஞர்களின் அகயெழுச்சியைத் தூண்டுவதாக அமைந்துள்ள அந்நூல்கள் மிகவும் எளிமையான வகையில் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. வெற்றியடைந்த பெரியோர்கள் பலரின் வாழ்க்கைச் செய்திகளை நூலின் பொருண்மையோடு இணைத்து வெளிப்படுத்தியுள்ள நடேசய்யர், சாதாரண வாழ்க்கைச் சம்பவங்களைச் சான்றாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிகளை விளக்கிக் காட்டியுள்ளார்.

ஹட்டன் சகோதரி பிரஸ்ஸினால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை, சென்னை பி.என்.கே. அச்சகம் 1947 ஆம் ஆண்டு மறுபிரசுரம் செய்துள்ளது. முதற்பதிப்புக்கான அணிந்துரையை திரு. சி. சரவணனார் வழங்கியுள்ளார். அவர் தன் குறிப்பில் இந்நூலின் சிறப்புகளை,

“பாரதப் போரிடை யோதிய கீதையோ?

சீரிய பாரதி கூறிய நூலோ?

தமிழ ருறுதி யமிழ்தக் குறளோ?

எனவெனத் தியங்க, எழுந்தது இன்னூல்”

எனச் செய்யுள் வடிவிலும் “மயக்கத்தாற் சிறைப்பட்டு மாழும் மக்களின் நெஞ்சத்தே புகுந்து அம்மக்களை உலகின் முன்னணிக்கு கொணரும் வீறுடைய இந்நூற்கு அமைந்த கட்டளைகளோ அளப்பெரிய ஆற்றல் வாய்ந்தவை. இக்கட்டளைகள் பரந்தாமன் பார்த்தனுக்கருளிய கீதையிலே தோன்றி, வள்ளுவனார் வழங்கிய திருக்குறட் பரப்பிலே தவழ்ந்து, தமிழ் நாட்டின் வீரத்தெய்வமாகிய பாரதியின் பாக்களுடன் தோழமை பூண்டு, இந்நூல் விடிவினிற் பெயர்ந்து வருதலைச் சிந்தை செய்வார் கண்டு மகிழ்வார்” என வசனத்திலும்  விதந்துரைத்துள்ளார். “பாரதியை இழந்த தமிழ்நாடு இந்நாள் வேண்டி நிற்கும் நூற்கள் எவையோ? அவைகள் இந்நூலின்கண் கட்டளைகளாக உயிர் பெற்றிருத்தலைப் புலவர்கள் கண்டு வாழ்த்துவர்” என நூலின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இக்குறிப்புகள் இந்நூல் குறித்ததாக மட்டுமின்றி நடேசய்யரின் ஆளுமையையும் அவரின் செயற்பாடுகளையும் புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. பாரதியின் செயற்பாடுகளோடு இணைத்து நடேசய்யரின் பங்களிப்புகளை ஆராய்வதற்கான வாயிலை அவை திறந்துள்ளன.

தமிழகத்திலும் இலங்கையிலும் நடேசய்யர் முன்னெடுத்துள்ள இதழியல் செயற்பாடுகளையும் சமூக, அரசியல் செயற்பாடுகளையும் அவதானிக்கும்போது, நடேசய்யருக்குமுன் இதழியல் களத்திலும் சமூக, அரசியல் தளத்திலும் தீவிரமாக இயங்கிய பாரதியின் தாக்கத்துக்கு அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளாகியிருப்பதைக் கண்டுகொள்ளமுடிகின்றது. பாரதி உயிருடன் வாழ்ந்த காலத்தில் தனது இளமைக் காலத்தைத் தமிழகத்தில் கழித்த கோ. நடேசய்யர், அக்காலத்திலேயே காலனித்துவ எதிர்ப்பாளராகவும் பத்திரிகை மற்றும் நூல் வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபடுபவராகவும் விளங்கியுள்ளார். அதனால் தமிழ்நாட்டில் இருக்கும்போதே நடேசய்யர் பாரதியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்திருப்பார் எனலாம்.

நடேசய்யர் தனது பத்திரிகைகளிலும் எழுத்துகளிலும் பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும் பயன்படுத்தி வந்துள்ளதைக் காணமுடிகின்றது. உதாரணமாக, தனது பத்திரிகைகளில் திருக்குறட் பாக்களையும் ஒளவையின் ஆத்திசூடி வரிகளையும் மகுட வாசகங்களாகப் பயன்படுத்திவந்த நடேசய்யர், தேசபக்தனின் மூன்றாவது இதழிலிருந்து (08.09.1924) வலது பக்க மேல் மூலையில்,

“ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மமித் தேசத்தி லெய்தினராயின்

வேதிய ராயினும் ஒன்றே – அன்றி

வேறுகுலத்தின ராயினு மொன்றே”

என்ற பாடலையும் இடது பக்க மேல் மூலையில்,

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே”

என்ற பாடலையும் பிரசுரித்துள்ளதோடு அப்பாடல்களின்கீழ் சி.சு. பாரதி என இரண்டு பக்கங்களிலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேசபக்தன் இரண்டாம் ஆண்டில் காலடி வைத்தபோது, “இராஜீய விஷயங்களிலோ பக்தன் தாய்நாட்டுப் பொதுமக்கள் கழகமான காங்கிரஸ் மகாசபையைப் பின்பற்றி நிற்பவன். சமூகச் சீர்திருத்தத்திலோவெனின் அவனது கொள்கைகள் மிகவும் முற்போக்கானவை. பிறப்பினால் மனித வர்க்கத்துள் ஏற்றத்தாழ்வுகளுளவெனக் கற்பிக்கும் மூடவைதீகர்களுக்குப் பக்தன் வைரி. சமத்துவம், சகோதரத்துவம் என்பதே அவனுடைய மணி மந்திரம். எம்மதத்தினராயினும் எச்சாதியினராயினும் எக்கட்சியினராயினும் யாவரும் பாரதத் தாயின் புதல்வர்களென்றே பக்தன் நினைத்துத் தொண்டியற்றுபவன்” (தேசபக்தன் – 02.09.1925) என்று கூறியுள்ளதோடு ‘ஜாதி மதங்களைப் பாரோம்…’ என்ற பாடலைக் குறிப்பிட்டு அதன்கீழ், “என்ற பாரதியாரின் அரியமொழிகளைத் தன்னிதயத்திறுத்தியுள்ளான்” எனத் தேசபக்தனின் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார், நடேசய்யர். இக்கொள்கைப் பிரகடனம், பாரதியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் பாரதியின் தாக்கத்துக்குத் தேசபக்தன் உட்பட்டிருந்தமையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

நடேசய்யர், நீ மயங்குவதேன் என்ற நூலாக்கத்துக்கான தேவையையும் நோக்கத்தையும் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்:

“தற்காலம் நாட்டில் கொடுக்கப்பட்டுவரும் கல்விமுறையின் காரணமாயும், நாடு அரசியலில் அடிமைப்பட்டிருக்கும் காரணமாயும், நம் நாட்டு வாலிபர்கள், யாதொரு லட்சியமும் இல்லாமல் இன்னது செய்வதென்ற வகையறியாமல் சோம்பேறிகளாய்க் காலங்கழிக்கின்றனர்… உறக்கத்திலிருக்கும் வாலிபர்களைத் தட்டி எழுப்பி, ஊக்கம்பெற்று முன்னேறும்படிச் செய்யவே இச்சிறுநூல் எழுதப்பெற்றது. ‘தன்னைக்கெடுப்பதும் தன் நினைவேயல்லாது வேறில்லை’ என்பதை அவர்களுக்கு வற்புறுத்தித் தங்கள் வருங்கால உயர் அரியவாழ்வு தங்கள் தங்கள் கையிலேயே இருக்கிறதென்பதைக்காட்ட இந்நூல் பயன் பெறுமானால் அதுவே நான் எதிர்பார்க்கும் கைமாறாகும்.”

மேற்படி வரையறையிலும் பாரதியின் தாக்கம் உள்ளுறைந்து இருப்பதைக் காணலாம். ஆங்கிலேயர் வழங்கிய கல்வியின் பிற்போக்குத்தனத்தை, அதன் அரசியலைப் பாரதி பல சந்தர்ப்பங்களில் அம்பலப்படுத்தியுள்ளார். சான்றாக,

“ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுஉறு பெற்றியுந் தேர்கிலார்

பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்”

என்ற வரிகளை எடுத்துக்காட்டலாம். சுதேசிய விடுதலைக்கு, தேசிய உணர்வெழுச்சிக்கு எதிர்திசையிலே பயணித்த ஆங்கிலக் கல்விமுறையை முழுமையாக நிராகரித்த பாரதி, ‘மடமைக் கல்வியில் மண்ணும் பயனில்லை’ என அக்கல்விமுறையின் போதாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

“உனக்கு வயதாகவில்லையா?, உனக்கு வயதாகிவிட்டதா?, பொருளில்லையானா லென், ஊக்கமுடையோன் ஆக்கமுடையான், உண்மை நீங்கத் திண்மை நீங்கும், நில் ஓடாதே, கற்றுக்கொள் – செய் – செய்துபார், இன்றும் இன்னே செய், கெடுவான் கேடு நினைப்பான், அதிருஷ்டம்” எனும் பத்து அத்தியாயங்களில் பத்துக் கட்டளைகளை நீ மயங்குவதேன் எடுத்துரைத்துள்ளது. நூலின் இறுதியில் இப்பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவன் வாழ்வில் எத்தகைய வெற்றி பெறுவான் என்பதை, ‘திரு. இராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற தலைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் தொடக்கத்திலும் இறுதியிலும் இடம்பெறும் குறிப்புகள், திரு. இராமசாமி சேர்வையின் சரிதம் உண்மை நிகழ்வுகளின் பதிவு என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்நூலை திரு. இராமசாமி சேர்வையின் நினைவாக வெளியிடுவதற்கு அவரின் பிள்ளைகள் பொருளுதவி புரிந்தார்கள் என்பதையும் நடேசய்யர் பதிவுசெய்துள்ளார்.

இலக்கியத் தகவல்கள், தொன்மக் குறிப்புகள், உலக நிகழ்வுகள், சமகாலச் செய்திகள், தனிமனித வரலாற்றுச் சம்பவங்கள் முதலான பல்வேறு செய்திகளைச் சான்றாகக் கொண்டு, தான் எடுத்துரைக்க முனைந்த கட்டளைகளை நடேசய்யர் விபரித்துள்ளார். அவர் கையாண்டுள்ள எடுத்துரைப்பு உத்திகள், இலக்கு வாசகர்களிடம் தன் நோக்கங்களைக் கொண்டு சேர்க்கும் வகையிலும் வாசிப்போரின் மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. தொடக்கத்திலேயே வினாக்களை எழுப்பி, அவற்றுக்கான விடைகளை அடுக்கிச் செல்லுதல், அவ்விடைகளில் வரலாற்று நிகழ்வுகள், தனிமனிதர்களின் சாதனைகள், இலக்கியத் தகவல்கள் முதலானவற்றை மேற்கோள் காட்டுதல், எல்லோராலும் சாதிக்க முடியும் – சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்தல் முதலானவாறு விரியும் எடுத்துரைப்புகள், வாசகரை நூலின் பொருண்மையோடு ஒன்றிக்கச் செய்கின்றன. சான்றாக, ‘உனக்கு வயதாகிவிட்டதா’ என்ற அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை எடுத்துக்காட்டலாம்:

“நீ யேன் தயங்குகிறாய்? இதுவரை செய்த காரியங்கள் உனக்குத்தக்க பலன் கொடுக்கவில்லையா? உனது லட்சியம் கைகூடிவரவில்லையா? ஊக்கம் ஏன் குன்றிவிட்டது? நீ ஊக்கமில்லாதவனா? முன்னேறும் வழி உனக்குத் தெரியாதா? காரணந்தான் என்ன?

இனியும் நீ முயலலாம். முன்னேறலாம். முன்னேறுங்காலம் ஓடிப்போய்விடவில்லை. முயற்சி செய். தயங்காதே. எக்காரணம் பற்றியும் உன் முயற்சியைக் கைவிடாதே.

“நான் என்ன சிறுபிள்ளையா? எனக்கு வயதாகவில்லையா? ஆங்காலமெல்லாம் கழித்த பிறகு முயற்சி யென்னவிருக்கிறது? இதுவரை பட்டதெல்லாம் போதும்; படமுடியாது இனித்துயரம் ‘காடு வா வா என வீடு போ போ என்கிறது. நான் முன்னேறியாகவேண்டுவதென்ன’ என்று ஏன் புலம்புகிறாய்?

இளம் வயதில் நீ கஷ்டப்பட்டிருப்பாய். இனியும் கஷ்டப்படுவானேன் என்ற எண்ணம் உனக்கு ஏற்பட்டுவிட்டது போலும்! ஆம்! அது சகஜந்தான், உனக்கு வயதாகிவிட்டது என்கிறாயா? என்னவயதாகிவிட்டது? இது பொருளில்லாத வார்த்தை! எந்தக்காரியத்தை எவ்வயதில் செய்வதென்ற வரையறை ஏற்பட்டிருக்கிறதா? இன்னின்ன வயதில் இன்னின்ன முயற்சிகளைத்தான் செய்யவேண்டும் பிறசெய்யலாகாது என்ற நிர்ணயம் உனக்கு உண்டா?

உன் லட்சியத்தை யடையவோ, அல்லது உன் வாழ்க்கையை விருத்தி செய்யவோ வயது ஓர் எல்லையல்ல. இன்ன வயதிற்குமேல் இதைச்செய்யலாகாது என்று எல்லையிட்டு தடுத்திருப்பவர் ஒருவருமில்லை.”

என வினாக்களை அடுக்கி, அவற்றுக்கான விடைகளையும் சுட்டிச்செல்லும் நடேசய்யர், இந்தியளவிலும் உலகளாவிய நிலையிலும் வயதைப் பொருட்படுத்தாது சாதித்தவர்கள் பற்றிய தகவல்களை எடுத்துக்காட்டி, உயர்வதற்கு – உழைப்பதற்கு வயது ஒரு பொருட்டில்லை என்பதை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். சான்றாக,

“40 வயது வரையில் ஏழைக்குடியானவனாக உழுது கொண்டிருந்த ‘கிராம் வெல்’ என்பவர் யுத்த வீரனாகக் கிளம்பி இங்கிலாந்திற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்க வில்லையா? ‘நான் ஓர் ஏழைக்குடியானவன் நான் உழுது என் குடும்பத்தைக் காப்பாற்றினால் போதும்’ என்று சும்மாவிருக்கவில்லையே! சமூகக்காரியம் வந்ததும் தன் வயதையும் தன் குடும்பத்தையும் அவர் மறந்து வெளிக்கிளம்ப வில்லையா? 45 வயதிற்றானே ‘பிராங்கிளின்’ என்பார் தத்துவ ஆராய்ச்சியில் ஊன்றிக் கவனம் செலுத்தினார். 46வது வயதிற்றானே வாட்டர்லூ சண்டையை ‘வெல்லிங்டன் பிரபுவும்’ டிரபால்கர் சண்டையை ‘நெல்சனும்’ ஜயித்தார்கள். ‘கல்வீனி’ என்பவர் 52 வயதில் மின்சாரசக்தியைக் கட்டிவைக்கும் பாட்டரி என்னும் பெட்டியைக் கண்டு பிடித்தார்.

நமது தாய் நாட்டில் விடுதலைக்காகத் தற்காலம் பாடுபடும் வீரர்களை எடுத்துக்கொள். சிறைசென்றுள்ள ‘அப்பாஸ் தயாப்ஜி’ அவர்கள் வயதென்ன? ‘மகாத்மாவின் வயதையும், அவருடைய சரீரநிலைமையையும் கவனித்திருக்கிறாயா? கனம் படேல் அவர்களுடைய வயதையும் சரீர நிலையையும் நீ அறியாயோ? பெசண்ட் அம்மையாரின் வயதென்ன? தனது கொள்கைகளும் லட்சியங்களும் நிறைவேறும் வண்ணம் பால்யர்களுக்குள்ள ஊக்கத்தைவிட அதிக ஊக்கம் கொண்டு உற்சாகத்துடன் இன்றும் உழைத்து வரவில்லையா?”

என நடேசய்யர் காட்டும் சான்றுகள், தம் வயதை எண்ணி இயங்காமல் இருக்கும் – இயங்கத் தயங்கும் நபர்களைத் தட்டியெழுப்பிச் செயலாற்றத் தூண்டுகின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்த தகவல்கள், உணர்வுபூர்வமாகத் தாக்கம் செலுத்தக்கூடியனவாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நடேசய்யர் தான் எடுத்துரைக்க முனையும் விடயத்துடன் இணைந்த திருக்குறள்களைப் பரவலாக எடுத்தாண்டுள்ளார். அவை நடேசய்யர் வெளிப்படுத்த விழையும் சுயமுன்னேற்றக் கருத்துகளைச் தமிழ்ச் சிந்தனை மரபுடன் இணைத்து வெளிப்படுத்தியுள்ளதுடன் அக்கருத்துகளைத் தமிழரின் வாழ்வியலறமாகக் காண்பதற்கு வழிசமைத்துள்ளன.

நடேசய்யர் இயன்றவரை பேசுவது போல எழுதும் உத்தியை நூல் முழுதும் கையாண்டுள்ளார். அந்த எடுத்துரைப்பு முறை ஒவ்வொரு அத்தியாத்தையும் உரையாடல் போலவும், பிரசங்கம் போலவும் மாற்றியமைத்துள்ளன. சாதாரண உரையாடல்களில் வெளிப்படும் பழமொழிகள், சொலவடைகள் முதலானவற்றை யதார்த்தம் குன்றாமல் பயன்படுத்தியுள்ளார். இந்த உத்திகள் நூலின் செய்திகளை வாசகருக்கு நெருக்கமாக்குகின்றன.

இந்நூலில் நடேசய்யர் முன்வைத்துள்ள சுயமுன்னேற்றம், தனிமனித நிலையில் மட்டுப்பட்டதாக அமையவில்லை. தனிமனித முன்னேற்றத்தைச் சமூக முன்னேற்றத்தின் ஓர் அங்கமாக முன்நிறுத்தியுள்ளதுடன் தனிமனித முன்னேற்றம் என்பதே சமூக முன்னேற்றத்தை அவாவியதாக அமைய வேண்டும் என்பதை எடுத்துரைத்துள்ளது. சுயமுன்னேற்றத்துக்கான ஒவ்வொரு கட்டளையும் சமூக முன்னேற்றத்துடன் இணைத்தே நடேசய்யர் வியாக்கியானம் செய்துள்ளார். சமூக முன்னேற்றத்தை மறுத்த தனிமனித முன்னேற்றம் பொருளற்றது – பயனற்றது என்பது அவரின் நிலைப்பாடாக இருந்துள்ளது. சான்றாக, “சுயநலத்தின் பொருட்டா அல்லது உன் சமூக நலத்தின் பொருட்டா உன் அறிவை உபயோகிக்கப் போகிறாய்? உன்நாடோ அல்லது உனது சமூகமோ விருத்தியடையுமானால் அவற்றினுள் ஒருவனான நீயும் விருத்தியடையமாட்டாயோ! ஆகவே உயிருள்ளளவும், உன்னாலியன்றளவும் உன்கடமையைச் செய்?” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டலாம். இக்குரலின் சாரம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு விதங்களில் ஒலித்துள்ளது.

சுயமுன்னேற்றத்தை வலியுறுத்தும் நூல்களானவை இம்மைப் பயன், மறுமைப்பயன், இம்மை மற்றும் மறுமைப் பயன் ஆகிய மூன்றுவித நோக்கங்களை மைய இழையாகக் கொண்டுள்ளன. இவற்றுள் நடேசய்யர் இம்மை – இவ்வுலக வாழ்வின் முன்னேற்றத்துக்கான சிந்தனைகளையே இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் சமூகநிலைப்பட்ட நோக்கின் பிரதிபலிப்பாக அது அமைந்துள்ளது.

முடிவாக, தொகுத்து நோக்குகின்றபோது, சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடத்தை வரைய முயன்றுள்ள இந்நூல், சுயமுன்னேற்றம் என்பது தனிமனிதரோடு சுருங்கியது இல்லை. அது சமூக முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது என்ற விரிந்த பார்வையை – உயர்ந்த சிந்தனையை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளதுடன் காலனியம் முன்னெடுத்த அடக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்ப்பதற்கும் காலனியம் கட்டியெழுப்பிய அடிமை மனப்பாங்கை அகற்றுவதற்கும் எல்லாவித இக்கட்டுகளையும் தாண்டி, வாழ்வில் உயர்வதற்கும் தேவையான சிந்தனைகளைச் செறிவாக எடுத்துரைத்துள்ளதைக் காணமுடிகிறது. அவை காலனியக் காலத்துக்கு மட்டும் உரியனவாகவன்றி எக்காலத்திற்கும் பொருத்தமானவையாக அமைந்துள்ளன.



About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்