ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன்
அரசுகள் தேசங்களாக (Nation) தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. அரசியல், பண்பாட்டு விருத்தி, நாட்டை புவியியல் ரீதியில் ஒன்றிணைத்தல், பொருளாதார விருத்தி, கல்வி விருத்தி என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்புதல் (Nation Building) என்ற தேவையை நோக்கியனவே. ஒரு தேசியக்கொடி, ஒரு தேசியகீதம், வரலாறு, பள்ளி மாணவர்களுக்கான தேசப்படப் புத்தகங்கள் என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்காகவே நடைபெறுகின்றன. இத்தாலியை ஒன்றிணைத்த பின்னர் அந்த நாட்டு அரசியலாளர் ஒருவர் “இத்தாலியை நாங்கள் உருவாக்கிவிட்டோம். இத்தாலியர்களை உருவாக்குவதுதான் இப்போது நமக்குள்ள பணி” (We have made Italy. Now we have to make Italians) என்று கூறியது கருத்தாழம்மிக்க ஒரு கூற்று என்பதை நாம் கவனித்தல் வேண்டும். அரசுகள் ‘தேசத்தை கட்டி எழுப்புதல்’ பற்றியும் ‘இனங்களை அழித்தல்’ பற்றியுமே பேசுகின்றன. போர், எல்லை விஸ்தரிப்பு, ஆக்கிரமிப்பு, காலனித்துவம், முன்பிருந்த நாட்டை துண்டு போட்டு பிரித்தல் போன்ற பல வழிகளில் புதிய அரசுகள் தோன்றும். இவ்விதம் புதிய அரசுகள் தோன்றும் போது புதிய சொற்கள் உருவாக்கப்படும். தேசிய இனங்களிற்கு புதிய அடையாளங்கள் வழங்கப்படுகின்றன. தேசிய இனங்கள் எப்போதும் அடையாளங்களை கலாசாரம், குடும்பம், மொழி என்பனவற்றின் ஊடாகவே பெறுகின்றன. தேசிய இனங்கள் உக்ரேனியன், ஸ்லோவக், பொஸ்னியன் என்று பல்வேறு பெயர்களை பெறுகின்றன. தேசங்களைக் கட்டியெழுப்பும் போது தேசிய இனங்களின் சொந்த அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இதுதான் சோவியத் ரஷ்யா, செக்கோஸ்லவாக்கியா, யூகோசிலேவியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்தது. இது தொடர்பாக வரலாறு நல்ல படிப்பினைகளை எமக்குச் சொல்கிறது.
புலமைமையாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகிய எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய சொற்களை தேசிய இனங்களுக்கு வழங்குகிறார்கள். புதிய சொற்களை உருவாக்குவதில் அரசுகள் பின்னே நின்று இவர்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றன. இனக்குழுமங்கள் (Ethnic Group), சிறுபான்மையினர் (Minorities), குடியானவர்கள் (Peasants), குலங்கள் (Tribes), மந்தை வளர்ப்போர், விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் இப்படியான புதிய அடையாளங்களை அவர்கள் மேல் சுமத்துகிறார்கள். சில வேளைகளில் குழுக்கள், சனக்கூட்டம், வறியோர் போன்ற பொதுச் சொற்களும் உபயோகப்படுத்தப்படும். இதனால்தான் உலகின் அரசுகள் தேசிய இனங்களின் பெயர்களை திரிபுபடுத்துகின்றன. அவற்றை முகமற்ற, பெயரில்லாத, குறித்த வாழிடத்தைக் கொண்டிராத மக்கள் குழுவாகக் காட்ட முயல்கின்றன. தேசிய இனங்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடப் புறப்பட்டால் கிளர்ச்சியாளர்கள், பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள், அதிருப்தியாளர்கள், பயங்கரவாதிகள், கைக்கூலிகள், கம்யூனிஸ்டுகள் எனப் பல பெயர்களைச் சூட்டி அழைப்பர். அவர்களின் உண்மைப் பெயர்களை அரசுகள் கூறுவதில்லை. தென்சூடான், காஷ்மீர், பர்மா, ஈராக், துருக்கி, அங்கோலா, மேற்கு பப்புவா ஆகிய நாடுகளில் எந்த தேசிய இனங்கள் போராட்டத்தை 1980களிலும் 1990களிலும் தொடங்கின என்பது குழப்பமானதாகவே உள்ளது. காரணம் அரசுகள் உருவாக்கிய சொற்குழப்பமே. உலகின் உள்நாட்டுப் போர்கள், அதனால் ஏற்படும் இடப்பெயர்வுகள், இன அழிப்பு, படுகொலைகள் ஆகிய சொற்களும் ஒரே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு உதவுவதுதான் அந்த நோக்கம். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு பெயர் உண்டு. அவற்றுக்கு ஒரு பிரதேசம், வாழிடம் உண்டு. இச்சொற்கள் இவற்றைக் குறிப்பிடத் தவறுகின்றன. உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
| தேசிய இனத்தின் பெயர் | அரசினால் உபயோகிக்கப்படும் பெயர் |
| ஹரேன் (Karen) | தாய்லாந்து மலைவாழ் இனம் |
| தைகிரியன் (Tigreans) | எதியோப்பியக் குடியானவர்கள் |
| பலஸ்தீனியர் | இஸ்ரேலிய இனக்குழுமம் |
| குர்தியர் (Kurds) | மலைவாழ் துருக்கர் |
| மேற்கு பப்புவா | இரியன் யயா |
இச்சொற்பிரயோகங்கள் தேசிய இனங்களின் வரலாற்றையும் புவியியலையும் திரிபுபடுத்துவதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் 1514 ஆவது தீர்மானப்படி தேசிய இனங்களிற்கு சுயநிர்ணய உரிமை (Self-determination) உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தேசிய இனங்களை ‘A people’ எனக் குறிக்கிறது. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, மனித உரிமை மீறல்கள், சூழல் அழிவு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பிரச்சினைகள் ‘நான்காவது உலகம்’ பற்றியனவே. இந்த மக்களின் வரலாறு, புவியியல், அரசியல் பற்றிய கல்வியே ‘நான்காவது உலகம்’ என அழைக்கப்படும் விடயமாகும். ‘Ethnic’ என்ற சொல் ஆரம்பத்தில் யூத, கிறிஸ்தவ மதத்தைச் சாராத மக்களைக் குறிக்கப் பயன்பட்டது. இன்று வெள்ளையர் அல்லாதவராயும், அரசியல் அதிகாரம் அற்றவர்களாயும் உள்ள பிற இன மக்களை சுட்டுவதாக இச்சொல் பயன்படுகின்றது. தம் சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்கு புகுந்துள்ள மக்கள் குழுக்களைக் குறிப்பிடும் முறையில் Ethnic என்ற சொல் உபயோகிக்கப்படுகின்றது.
| தேசிய இனங்களுக்கும் அரசுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகள் | ||
| தேசிய இனம் | அரசு | |
| 1. வரைவிலக்கணம் | பொதுவான பண்பாட்டைக் கொண்டவர்கள். பிரதேச ரீதியாக ஒரு வாழிடத்தைக் கொண்டவர்கள். அந்த வாழிடம் தாயகமாக இருக்கும். தம்மைப் பிறரில் இருந்து பிரித்தறியும் அடையாளங்களை வகுத்துக் கொண்டவர்கள். | பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட பிரதேசத்தில் அரசியல் சட்ட அதிகாரத்தைக் கொண்டு இயங்குவது. சிவில் நிர்வாகம், இராணுவம் என்ற இரண்டின் மூலம் குறிப்பிட்ட நில எல்லைகளுக்கு உட்பட்ட மக்களை கட்டுப்படுத்துவது; பிரதேச விஸ்தரிப்பு, படையெடுப்பு, போர்கள், ஒப்பந்தங்கள் மூலம் நில எல்லைகளை வரையறுத்துக் கொள்ளும். |
| 2. சொல்லின் மூலமும் பொருளும் | Nation, Nacio என்ற லத்தீன் சொற்களில் இருந்து National என்ற ஆங்கிலச்சொல் உருவானது. தமிழில் ‘தேசிய இனம்’ என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. Race, Ethnic group என்பவற்றில் இருந்து வேறான அர்த்தம் கொண்ட Nation என்ற சொல்லுக்கு ‘தேசிய இனம்’ என்பது பொருத்தமானது. | Status என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது. State. மாக்கியவல்லி இதனை Stato எனக் குறிப்பிட்டார் தமிழில் ‘அரசு’ என்பர். |
| 3. எல்லைகள் | ஒரு தேசிய இனத்தின் எல்லைகள் பண்பாட்டின் அடிப்படையில் வரையறை செய்யப்படும். | ஒரு அரசின் எல்லைகள் அரசியல் இராணுவ அதிகாரத்தால் சட்டவழி வரையறை செய்யப்படும். |
| 4. உள்ளடக்கப்படும் மக்கள் தொகை (Populations) | மக்கள் தொகை முழுமையாக ஒரு தேசிய இனத்தைக் கொண்டிருக்கும். | அரசின் எல்லைக்குள் அடங்கும் மக்கள் தொகை பல தேசிய இனங்களைக் கொண்டிருக்கும். |
| 5. தோற்றம் | வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்றவை. குறிப்பிட்ட ஒரு திகதியில் குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தோற்றம் பெற்றவை எனக் கூற முடியாது. | அரசின் தோற்றத்திற்கான திகதியையும் ஆண்டையும் குறிப்பிட முடியும். |
| 6. அடையாள அங்கீகாரம் | தேசிய இனம் தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும். தனது அடையாளங்களைத் தன் மக்களுக்குப் பண்பாட்டின் ஊடாகப் பரம்பரை பரம்பரையாகக் கடத்தும். | சட்ட ரீதியான அடையாள அங்கீகாரம் உடையது.பள்ளிக் கூடங்கள், ஊடகங்கள் மூலம் அரசின் அடையாளங்கள் பிரசாரப்படுத்தப்படும்; கற்றுக் கொள்ளப்படும். அரசு, அதன் கீழ் உள்ள பிரசைகளைஇலட்சியங்கள் (Ideals), சட்டங்கள் (Laws), பலாத்காரம் (Force) என்பன மூலம்இணைக்கிறது. |
| 7. ஒன்றிணைப்பு | தேசிய இனத்தை அதன் பண்பாடு ஒன்றிணைக்கிறது. | பிரஜைகள் என்ற முறையில் மக்கள் இணைக்கப்படுவர். |
| 8. உறுப்புரிமை | பண்பாடு, இரத்த உறவுமுறை (Kinship) அடிப்படையில் | அரசுக்கு விசுவாசம் செலுத்தும் நாட்டுப்பற்று (Patriotism). |
| 9. கருத்தியல் | தேசியவாதம்; தம் தாயகத்தை பாதுகாத்தல், அதற்கான கருத்தியல். | ஆதிக்கமுடைய தேசிய இனத்தின் இனவாதம். |
| நான்காவது உலகப் பார்வையில் சொற்பொருள் விளக்கம் | |
| சொற்கள், தொடர்கள் | நான்காவது உலகப் பார்வையில் விளக்கம் |
| இனக்குழும் (An Ethnic group) | ஆக்கிரமிப்புக்குள்ளான தாயகத்தில் வாழ்பவர்கள் |
| குறித்த மொழியைப் பேசும் இனக்குழுமம் | மொழி தவிர்ந்த பிற எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்கள் |
| தேசத்தைக் கட்டியெழுப்புதல் | தேசிய இனங்களை அழித்து அரசைப் பலப்படுத்தல் |
| அரசியல் ஒருங்கிணைப்பு (Political Integration) | படைகளை அனுப்பி வாழிடத்தை கைப்பற்றல் |
| குடியான (Peasants) | பெயரில்லா தேசிய இனத்தின் பெயரில்லா மக்கள் |
| பிரிவினைவாதிகள் | அரசுடன் சேர மறுக்கும் தேசிய இனம் |
| தேசிய விடுதலை (National Liberation) | ஐரோப்பியர் அல்லாதோரின் காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெறுதல் |
| தேசிய பாதுகாப்பு | தேசிய இனங்களை அரச இராணுவம் ஆக்கிரமித்தல் |
| தேசிய நலன் | அரசின் நலன் |
ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டிற்குள் புகுந்துள்ள மக்கள் தம் தனித்த அடையாளத்தைப் பேணுபவராயும் அரசியல் அதிகாரம் அற்றவராயும் இருப்பர். ஆனால் திபெத் நாட்டிற்குள்ளே வாழும் திபெத்தியர்களை ‘இனக்குழுமம்’, ‘சிறுபான்மையினர்’ என்ற சொற்களால் குறிப்பிடுவது அம்மக்களின் தேசிய இனம் என்ற உரிமையை மறுப்பதாகவே இருக்கும். ஒரு மக்கள் சமூகம் தன் தாயகத்திற்குள் ஒரு தேசிய இனமாக இருக்கிறது. 1984 ஆம் ஆண்டில் கொலம்பியா நாட்டின் பொகோட்டோ (Bogota) நகரில் சான்டினிஸ்ராக்களின் அரசுப் பிரதிநிதிக்கும் மிஸ்கிட்டோ (Miskito) தேசிய இனத்தின் தலைவர் ரிவேராவிற்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

“உங்களுக்கு நிக்கராவ நாட்டின் இனக்குழுமம் (Ethnic group) என்ற அந்தஸ்தை நாம் தருகிறோம். இதை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று அரசுப் பிரதிநிதி ரிவோராவைப் பார்த்துக் கேட்டார்.
“இனக்குழுமங்கள் உணவகங்களை நடத்துகின்றன. நாம் ஒரு தேசிய இனத்தவர். நாம் ஒரு படையை வைத்துப் போராடுகின்றோம். எங்கள் மக்களுக்குத் தேவை சுயநிர்ணய உரிமைதான்.” என்று பதிலளித்தார் ரிவேரா. தேசிய இனங்களைக் குறிப்பிடுவதற்கு அரசுகள் உபயோகிக்கும் ‘சிறுபான்மையினர்’ என்ற சொல் தேசிய இனம் ஒன்றின் சுதந்திரத்திற்கான வரலாற்றைத் தெரிவிப்பதில்லை. சுய ஆட்சிக்காக அம்மக்கள் செய்த போராட்டங்களைக் குறிப்பிடுவதில்லை. அவர்களின் பிரதேசம், அப்பிரதேசத்தின் வளங்கள், பிரதேசத்தின் விருத்தி பற்றிக் குறிப்பிடுவதில்லை. சிறுபான்மையினரின் நிலம், வளங்கள், சுதந்திரங்கள் எல்லாவற்றையும் அரசுகள் பறித்தெடுத்துக் கொள்கின்றன.

இனக்குழுமம் (Ethnic group), சிறுபான்மையினர் (Minority) ஆகிய இரு பதங்களும் அரசுகளால் உபயோகிக்கப்படுபவை. எந்தவொரு மக்கள் சமூகமும் தம் தாயகம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை இனக்குழுமம் என்றோ சிறுபான்மை என்றோ அழைத்துக்கொள்வதை விரும்புவதில்லை. தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசுகள் தேசிய இனங்களை அழித்தொழிக்கின்றன. இந்த அழித்தொழிப்பின் போது சில சொற்களையும், தொடர்களையும் உபயோகிக்கின்றன. நான்காவது உலக நோக்கில் இச்சொற்களும் தொடர்களும் வேறுபட்ட விளக்கத்தை கொண்டவை. சில உதாரணங்களை ‘நான்காவது உலகப் பார்வையில் சொற்பொருள் விளக்கம்’ என்ற தலைப்பில் மேலே அட்டவணைப்படுத்தியுள்ளோம்.
தேசிய இனங்களின் வகைகள்
அரசியல் விஞ்ஞானத்திலும் அரசியல் புவியியலிலும் அரசுகள் பற்றியே பேசப்படும். தேசிய இனங்களின் வகைகள், அவற்றிற்கிடையான வேறுபாடுகள், அரசாங்க முறைகள், அரசுகளின் புவியியல்சார் பரிமாணம் ஆகிய விடயங்கள் இத்துறைகளில் விரிவாகப் பேசப்படுவதில்லை. இதற்கு மாறாக நான்காவது உலகம் இவ்விடயங்களைப் பற்றியே கவனம் செலுத்துகிறது. தேசிய இனங்கள் என்றால் என்ன? அவை எங்கெங்கே உள்ளன? அவற்றின் அரசியல், புவியியல், அவற்றின் வகைகள் என்பதை பற்றி இத்துறை ஆராய்கிறது. தேசிய இனங்களை பண்பாடு, அரசியல், பொருளியல் முறைமைகளோடு தொடர்புபடுத்தி பல வகைகளாகப் பிரித்து ஆராயலாம். இவை யாவற்றையும் விட தேசிய இனங்களை அரசோடு தொடர்புபடுத்தி வகைப்படுத்தலே முக்கியமானது.
| தேசிய இனங்களை வகைப்படுத்தல் | |
| தேசிய இனங்களின் வகைகள் | தன்மை |
| சுயாதீனமான தேசிய இனங்கள் | நீண்டகாலமாக தமது தனித்துவத்தை நிலைநாட்டி சுயாதீனமாக இருந்துவரும் தேசிய இனங்கள்; ஸ்பெயின் நாட்டின் கற்றலோனியர் இதற்கு உதாரணம். |
| மறுமலர்ச்சியுறும் தேசிய இனங்கள் | வரலாற்றுப் பழைமையுடையவை. மீண்டும் பண்பாட்டு மறுமலர்ச்சியை அரசியல் விழிப்புணர்ச்சியையும் பெற்று முன்னணிக்கு வருபவை. |
| அரசுகளின் மையமாக அமையும் தேசிய இனங்கள் | ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தும், முன்னாள் சோவியத் யூனியனில் ரஷ்ய தேசிய இனமும், இந்தோனேசியாவில் ஜாவாவும் மையமான தேசிய இனங்கள் (Core nations). |
| அங்கீகாரம் பெற்ற தேசிய இனங்கள் | நீண்டகாலம் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்து விடுதலை பெற்றவை. லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, எரிற்றியா என்பன. |
| துண்டாடப்பட்ட தேசிய இனங்கள் | பல அரசுகளின் எல்லைகளுக்குள் பிரிபட்டு போயிருக்கும் தேசிய இனங்கள். 5 நாடுகளுக்கு இடையில் (துருக்கி, ஈராக், சிரியா, ஈரான், ஆர்மினியா) பிரிபட்டுப் போயிருக்கும் குர்திஸ்தான் (Kurdistan) தகுந்த உதாரணம். |
| இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசிய இனங்கள் | தேசிய இனங்கள் பலவற்றின் தாயகப் பகுதிகள் அரசுகளின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு உட்பட்டனவாய் உள்ளன.உ+ம்: மிஸ்கிட்டோ (Miskito) இனத்தவரின் தாயகத்தின் மூன்றில் ஒருபகுதி கொண்டுராஸ் அரசின் ஆதிக்கத்தில் உள்ளது. |
| துண்டிக்கப்பட்ட தேசிய இனங்கள் | ஒரு தேசிய இனம், தான் எந்த அரசோடு இருக்க வேண்டுமோ அதில் இருந்து பிரிக்கப்பட்டுவிட்டதாக உணரும் நிலை (இது அபூர்வமாகத் தோன்றக் கூடியது).உ+ம்: வட அயர்லாந்து, அயர்லாந்தின் பாகமாக இல்லாது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருத்தல். |
| உறங்கும் தேசிய இனங்கள் | நீண்டகாலம் உறங்கிப் போய் இயக்கமின்றி இருப்பவை. அயல் பகுதிகளின் உதாரணங்களைக் கண்டு விழித்தெழும் தேசிய இனங்கள். |
| ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் தேசிய இனங்கள் | (1993 ஏப்ரலில் உள்ள கணக்குப்படி) உலகில் 122 யுத்தங்களில் 80% ஆனவை இவ்வகை யுத்தங்களாக இருந்தன. |
அரசைக் கட்டியெழுப்புதல்
உலகின் பெரும்பாலான அரசுகள் தோன்றுவதற்கு முன்பே தேசிய இனங்கள் இருந்தன. அரசுகள் உருவாக்கத்திற்கு முன்பே தேசிய இனங்கள் உருவாக்கம் பெற்று உலகெங்கும் பரவியிருந்தன. புவிப்பரப்பின் நிலப்பகுதி முழுவதுமே தேசிய இனங்களைக் கொண்டதாக இருந்தது. புதிதாக முளைத்த அரசுகள் இவற்றைத் தம்முள் சேர்த்துக் கொண்டன. இதுவே இன்றைய அரசுகளின் தோற்ற வரலாறு. ஆயிரக்கணக்கான தேசிய இனங்களில் ஒரு சில தேசிய இனங்கள் மட்டும் அதிகாரத்திலும், செல்வத்திலும் பிற தேசிய இனங்களை விட வல்லமை மிக்கனவாய் ஆகின. இந்த வல்லமை மிக்க தேசிய இனங்கள் பிற தேசிய இனங்களை தமக்குள் உட்படுத்திப் பேரரசுகளாயின; காலனிகளை உருவாக்கின. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் புதிய அரசுகளாக உருவாக்கப்பட்டன. அரசைக் கட்டியெழுப்புதல் (State Building) மூன்று உபாயங்கள் மூலம் செயற்படுத்தப்பட்டது.
1. தமது சுதந்திரத்தைக் கைவிடும்படி தேசிய இனங்களை இணங்கச் செய்து அந்நியர் தமது ஆட்சியை விஸ்தரித்தல்.
2. படையெடுப்புகள் மூலம் தேசிய இனங்களின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி கலாசார மாற்றங்கள் மூலம் மக்களை உள்வாங்கிக் கொள்ளுதல். அரசு உருவாக்கித் திணிக்கும் அடையாளங்களையும் பண்பாட்டையும் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து அவர்களை உருமாற்றுதல்.
3. படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் மூலம் இன அழிப்புச் செய்தலும் தேசிய இனங்களை அழித்து நிர்மூலமாக்குதலும்.
இந்த மூன்று வழிகளில் நடைபெறுவதே அரசைக் கட்டி எழுப்புதல் செயல்முறையாகும். வரலாற்றுச் சமூகவியலாளர் சாள்ஸ் ரில்லி (Charles Tilly) என்பவர் இதனைப்பற்றிக் கூறும்போது ”போரின் பயனாக அரசு உருவாகிறது. பின்னர் அரசு போரை உருவாக்குகிறது” என்றார். அரசுகளின் உருவாக்கம் ஒரு தொடர் நிகழ்வு. காலம், இடம் என்ற இருவேறு பரிமாணங்களில் இது நிகழ்கிறது. இது பல கட்டங்களாக நிகழ்கிறது. ஒவ்வொரு அரசுக்கும் தனித்தனியான வித்தியாசமான வரலாறு இருக்கும். ஆகவே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசுகளின் பல்வேறு வளர்ச்சிப்படி நிலைகளின் கலப்பாக உலக அரசுகள் முறைமை இருக்கும். சமகாலத்தில் பல பல படிநிலைகள் ஒருங்கே காணப்படுகின்றன.
இனக்குழுமம், சிறுபான்மையினர், தேசிய இனம்
Nation (தேசிய இனம்) என்ற சொல்லைத் தவிர்த்து வேறு பல சொற்களால் தேசிய இனம் ஒன்றைக் குறிப்பிடுவதையே அரசுகள் விரும்புவதாக நான்காவது உலகம் கோட்பாடு சுட்டிக்காட்டுகிறது. கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், கம்யூனிஸ்டுகள், மலைவாழ் மக்கள், குடியான்கள் (Peasants) எனப் பல சொற்கள் தேசிய இனங்களைச் சுட்டுவதற்கு உபயோகிக்கப்படுகின்றன. இவற்றுள் சிறுபான்மையினர் (Minorities), இனக்குழுமம் (Ethnic Group) என்ற இரு சொற்கள் அரசியல், புவியியல் அரசியல், சர்வதேச விவகாரம் ஆகிய துறைப் பாடநூல்களில் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. இனக்குழும அரசியல் (Politics of Ethnicity), இனக்குழுமம் (Ethnic Group) ஆகிய சொற்கள் இலங்கையில் தமிழிலும் பரவலான சொல்லாடலுக்குள் புகுந்துள்ளது. ஒரு காலத்தில் ‘சிறுபான்மையினர் பிரச்சினை’ என்று பேசவும் எழுதவும் பட்ட விடயம் இனக்குழுமப் பிரச்சினை (Ethnic Problem) எனப்படுகிறது. இந்தச் சொற்பிரயோகத்தை நான்காவது உலகம் கோட்பாடு தவறானது எனக் சுட்டிக்காட்டுகிறது. கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் குடியேறி வாழும் ஆசிய, ஆபிரிக்க, கரிபியன் மக்களை இனங்காண்பதற்கு Ethnic என்ற சொல் பயன்பட்டது. குறிப்பாக வெள்ளையர் அல்லாதவராயும், அரசியல் அதிகாரம் அற்றவர்களாயும், விளிம்பு நிலையினராயும் உள்ளோரை Ethnic Group என்று குறிப்பிட்டனர். திபெத்தியர்கள் பற்றிய உதாரணத்தை நாம் மீண்டும் குறிப்பிடலாம். இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களை திபெத்திய இனக்குழுமத்தினர் என அழைக்க முடியும். ஆனால் திபெத்திற்கு உள்ளே (சீன அரசின் கீழ்) வாழும் திபெத்தியர்கள் ஒரு தேசிய இனம் என்று அழைக்கப்படுவதை விரும்புவார்களே அல்லாமல் தம்மை ஒரு இனக் குழுமம் என்று அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள்.
தேசிய இனங்களும் உயிர்ப்பல்லினத்தன்மையும்
உலகின் 5000 வரையான தேசிய இனங்களுள், மக்கள் சமூகங்கள் (Peoples) என்ற பெருவட்டத்திற்குள் அடங்கும் வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் முதல், சிறியனவும், பெரியனவுமான சுதேசிய மக்களும் (Indigenous Peoples) அடங்குவர். தேசிய இனங்களிற்கு என ஒரு இயற்கைச் சூழல் உரிமையாக இருந்து வந்தது. தேசிய இனத்தின் உரிமையான சூழலை அரசுச் சூழல் அத்துமீறியும் அடாவடித்தனமாகவும் ஆக்கிரமிக்கிறது, அழிக்கிறது என்று நான்காவது உலகம் கோட்பாடு கூறுகிறது. குடியேற்றத்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், அனல்மின் நிலையங்கள், உருக்கு, சிமெந்து ஆலைகள் என்ற வடிவில் அபிவிருத்தி என்ற முகத்துடன் இனத்தின் சூழலும் அரசின் சூழலும் மோதிக் கொள்கின்றன. உயிர்ப்பல்லினத் தன்மையின் அழிவு உண்மையில் தேசிய இனங்களின் வாழிடத்தின் அழிவின் ஒரு வெளிப்பாடே என்று நான்காவது உலகம் பார்வை விளக்குகிறது. பன்மைத் தேசிய இனங்களைக் கொண்ட பெரும் தேசங்கள் 12 இன்று உலகில் உள்ளன. இந்தப் 12 பெருந்தேசங்களுள் (இவற்றை Mega diversity states என்பர்) உலகின் 2,310 தேசிய இனங்கள் உள்ளன. இது மொத்த தேசிய இனங்களில் 46% ஆகும்.
| பெருந்தேசம் (Mega Diversity State) | தேசிய இனங்கள் |
| அவுஸ்திரேலியா | 250 |
| பிரேசில் | 210 |
| சீனா | 150 |
| கொலம்பியா | 60 |
| ஈகுவடோர் | 35 |
| இந்தியா | 380 |
| இந்தோனேசியா | 670 |
| மடகாஸ்கர் | 20 |
| மலேசியா | 20 |
| மெக்சிக்கோ | 240 |
| பெரு | 65 |
| சயர்(Zaire) | 210 |
| மொத்தம் | 2310 |
பர்மா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் தேசிய இனங்களின் ஒடுக்குமுறையில் அரசுகள் கையாண்ட வழிமுறைகள், உலகம் முழுவதுமாக நடைபெற்று வந்திருக்கின்ற தேசிய இனங்களின் ஒடுக்குமுறையின் வரலாறு ஆகியவற்றின் துணையுடன் 12 படிநிலைகளை அடையாளம் காணமுடியும்.
1. அரசு தேசிய இனங்களை ஒடுக்கும் முறையிலான விஸ்தரிப்பை நியாயப்படுத்தும் வரலாற்றுக் காரணங்களையும், புவியியல் காரணங்களையும் கண்டுபிடித்தல்.
2. ஆக்கிரமிக்கும் நிலப்பகுதிகளை இணைப்பதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்கல்.
3. ஆக்கிரமிப்புக்கான நியாயங்களை உருவாக்குதல்.
4. விடுதலை, அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்புச் செய்தல்.
5. தேசிய இனத்தின் சமூக, பொருளாதார, அரசியல், சமய கல்வி நிறுவன அமைப்புகளை அழித்தும், உருமாற்றியும் அரசின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமைத்தல், தேசிய இனத்தின் தலைமைத்துவத்தை அரசுக்குச் சாதகமானதாக மாற்றுதல்.
6. குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி அரசின் பிரசைகளைக் குடியேற்றுதல். சர்வதேச கம்பனிகள் சர்வதேச ஸ்தாபனங்களின் நிதி உதவிகளை இதற்காகப் பெற்றுக்கொள்ளல்.
7. அரசியல் ரீதியான எதிர்ப்புகள் முதற்தடவையாகத் தோன்றும்போது அவற்றை முளையிலேயே கிள்ளிவிடுதலுக்கான பிரசாரம் செய்தல்.
8. ஆயுதமேந்திய போராட்ட முயற்சிகள் முதற்தடவையாகத் தோன்றும்போது அவற்றை முளையிலேயே கிள்ளிவிடுதல்.
9. அரச இராணுவத்திலும், அரச நிர்வாகத்திலும் அரசின் பிரசைகளைக் குவித்தல்.
10. ஆயுதக் கிளர்ச்சி வலுப்பெற்ற இடங்களில் சிவிலியன்களைத் தண்டித்தல், அடக்குதல். ‘அரிசி அல்லது துப்பாக்கி ரவை’ என்ற கொள்கையை அமுல்படுத்தல்.
11. ‘அட்டூழியங்கள்’ நிகழ்கின்றன என்ற கூற்றில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தல்.
12. சிவிலியன்களை இடம்பெயரச் செய்து அரசு அமைத்த முகாம்களில் குவித்தல்.
நான்காவது உலகில் நடைபெறும் யுத்தங்கள்
நான்காவது உலகத்திற்கு எதிராக அரசுகள் நடத்தும் யுத்தங்கள் பற்றிய மதிப்பீட்டின்படி (1993 ஆம் ஆண்டில்) 122 யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவற்றில் 97 யுத்தங்கள் இனங்களுக்கு எதிராக அரசுகளால் நடத்தப்பட்டவை.
உலகில் நடைபெறும் யுத்தங்கள்
- அரசு எதிர் தேசிய இனம் – 97
- அரசு எதிர் இன்னோர் அரசு – 01
- அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சி – 15
- தேசிய இனம் எதிர் இன்னொரு தேசிய இனம் – 06
- தேசிய இனத்திற்குள் இடம்பெறும் யுத்தம் (கிளர்ச்சி) – 03
மொத்தம் – 122
யுத்தங்களின் சராசரி ஆயுள் காலம்
அரசு எதிர் அரசு – 2.8 வருடங்கள்
அரசு எதிர் தேசிய இனம் – 10.2 வருடங்கள்
யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகள் – 3.6 கோடிமக்கள் (அல்லது 36 மில்லியன் மக்கள்)
இக்கட்டுரை பெர்னாட் நைட்ஸ்மன் (Bernard Nietschmann) என்பவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்றைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது. Reordering the World: Geopolitical Perspectives on the 21st Century, Edited by: George J. Demko and William B. Wood, West View Press, 1994, pp.225-242.



