
மாந்தைத் துறைமுக நகரத்தைச் சுற்றிவர உள்ள இரட்டை மதில் சுவரைக் காட்டும் வான்வெளிப் படம். அடியில் வலது பக்கத்தில் பாலாவி ஏரி காணப்படுகிறது. Image Source: 1980 Aerial Photograph.
மாந்தை (மாதோட்டம்)
இலங்கையிலுள்ள துறைமுக நகரங்களில் மிகப் பழைமையான துறைமுக நகரங்களில் ஒன்று மாந்தை. இலங்கையில் இது ‘மாந்தைத்துறை’ என நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இது மாந்தை, மாதோட்டம், பெருந்துறை ஆகிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் வரும் ‘மாந்தை’ என்ற துறை இந்தத் துறைமுகத்தையா அல்லது தென்னிந்தியாவிலுள்ள வேறு ஒரு துறையையா குறிப்பிடுகின்றது என்ற மயக்கம் இன்னும் உள்ளது. திருவாசகத்தில் குயில் பாட்டில் மாணிக்கவாசகர் கூறும் ‘பெருந்துறை’ இந்த மாந்தைத்துறை ஆகும். இலங்கை மன்னன் இராவணனின் அரசி வண்டோதரியை (மண்டோதரி) பெருந்துறையிலிருந்த சிவன் ஆசீர்வதித்ததாக அவர் கூறியுள்ளார். அப்பர், சுந்தரர் ஆகிய சைவ நாயன்மார்கள் ‘மாதோட்டம்’, ‘கேதீச்சரம்’ (திருக்கேதீஸ்வரம்) ஆகிய பெயர்களால் இத்துறைமுக நகரத்தைக் குறிப்பிடுகிறார்கள். பதினொராம் நூற்றாண்டில் இலங்கை சோழர் ஆட்சியின் கீழிருந்த காலத்தில் இந்தத் துறைமுக நகரம் ‘ராஜராஜபுரம்’ என அழைக்கப்பட்டதை அக்காலத்தைய கல்வெட்டு ஒன்று எடுத்துரைக்கிறது.
மனித நாகரிகம் வளர்ச்சி பெற்ற ஆரம்ப காலங்களில் உலகெங்கும் பெரும்பாலும் துறைமுகங்களே ஒரு நாட்டின் முதல் நகரங்களாக உருவாகின. இந்து சமுத்திரத்தின் மத்தியில், இந்திய உபகண்டத்தின் தென்முனையில், இந்து சமுத்திரத்தின் மேற்கிலும் கிழக்கிலுமிருந்து வரும் கடற்பாதைகள் சங்கமிக்கும் கேந்திர நிலையமாக விளங்கிய மாந்தை இலங்கையின் ஆதித் துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியதில் ஆச்சரியமில்லை. இந்துமாகடலில் கிழக்குலகிற்கும் மேற்குலகிற்கும் இடையே நடைபெற்ற வர்த்தக வலைப்பின்னலின் மையத்தில் அமைந்த மாந்தை அந்த வர்த்தகப் பரிமாற்றத்தின் முக்கியமான நடுவமாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றது. அருவி ஆற்றின் (மல்வத்து ஓயா) கழிமுகத்துறையான மாந்தை, அந்த ஆற்றங்கரையில் தோற்றம் பெற்ற இரும்புக்கால நகரமான அநுராதபுரத்தினதும், அந்த ஆறுபாயும் நாகநாட்டினதும் முக்கியமான வெளிநாட்டு வர்த்தகத் துறையாகவும் விளங்கியது.
இந்துமாகடலின் மத்தியில், இந்திய உபகண்டத்தின் தென் முனையில், இந்துமாகடலிற்கு இருபுறமும் நெடுந்தொலைவிலிருந்த நாடுகளை இணைக்கும் கடற்பாதையின் மையத்திலமைந்த வட இலங்கையின் யம்புகோவளம், யாழ்ப்பாணப் பட்டினம் போன்று மாந்தை ஒரு சர்வதேசப் பண்டப் பெருநிலையமாக – சர்வதேச வாணிப மையமாக விளங்கியது. ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக – கி.மு. 2000 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து (பீனீசிய – கிரேக்க – ரோம – பாரசீக – அரேபிய வர்த்தகம்) கி.பி. 1170 ஆண்டுக்காலம் வரை (அரேபிய – சீன வணிகம்) – சமீப கிழக்கு, தூரகிழக்கு நாடுகளினதும், மேற்கு உலகத்தினதும் வாணிப மையமாகவும், பண்டகசாலைக் களஞ்சியமாகவும் (Emporium and Entrepot) பரிணமித்தது மாந்தை. சீனாவிலிருந்து பட்டுத்துணிகளையும், பீங்கான் பாண்டங்களையும் கொண்டு கிழக்கு ஆபிரிக்கா நோக்கிச் செல்லும் கப்பல்களும், ரோமாபுரியிலிருந்து மதுச்சாடிகளை ஏந்தி வந்து பின் வாசனைத் திரவியங்களை ஏற்றிச் செல்லும் மரக்கலங்களும், அரேபியாவிலிருந்து வந்து கீழைத்தேசப் பாண்டங்களையும் சரக்குகளையும் ஏற்றிச்செல்லும் பாய்க்கப்பல்களும் கடற்பாதையின் மத்தியிலிருந்த மாந்தைத்துறையில் தங்கவும், உணவு குடிநீர் பெறவும், பண்டங்களைப் பரிமாறிப் பெற்றுக்கொள்ளவும் வந்தவண்ணம் இருந்தன.
நெடுங்கடலோடும் சர்வதேச வர்த்தகர்கள் தூர தேசங்களான சீனா, அரேபிய வளைகுடா, செங்கடல், மத்திய தரைக்கடல், கிழக்கு ஆபிரிக்க நாடுகளிடமிருந்தும், மற்றும் இலங்கை – இந்திய உபகண்ட நாடுகளிடமிருந்தும் பொருள், பண்டங்கள் வணிகம் செய்ய வருவது மாந்தையிலிருந்த பண்டகசாலைக் களஞ்சியத்திற்குத்தான். சீனாவிலிருந்து பட்டுத் துணிகளையும், பீங்கான் பாத்திரங்களையும் கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடுகளுக்கென எடுத்துச்செல்லும் கப்பல்களும், மத்திய கிழக்குச் சந்தைகளுக்கு கிழக்குலகின் நறுமணச் சரக்குகளையும் (ஏலம், கறுவா, இஞ்சி, கராம்பு போன்றவை), சீனப் பண்டங்களையும் எடுத்துப்போக வரும் அரேபியக் கப்பல்களும் வந்து தங்கும் துறை மாந்தை (Carswell, J. 2013: 12). அரேபியக் கப்பல்கள் இலங்கைக்கு அப்பால் தூரகிழக்கு நாடுகளுக்குச் சென்றதில்லை. அவைகள் மாந்தையில் தங்கி, பண்டகசாலைக் களஞ்சியத்திலிருந்து வேண்டிய பொருட்களையும், உணவுகளையும், குடிநீரையும் பெற்று, திரும்பிச் செல்வார்கள். அது போன்று சீனாவிலிருந்து வரும் கப்பல்கள் சில கிழக்கு ஆபிரிக்கா வரை சென்றிருக்கின்றனவே ஒழிய, அவை பொதுவாக அரேபியா, பாரசீகம், மத்தியகிழக்கு நாடுகள்வரை செல்வதில்லை. மாந்தையில் தங்கும் அரேபிய வர்த்தகர்களுடன் அவர்களது வணிகம் நடைபெற்றுவிடும்.

பண்டைக்காலக் கடற்பாதை. கிழக்கே சீனாவில் குவாங்சு துறையில் ஆரம்பித்து, தென்சீனக் கடல்வழியாக தென் ஆசியத் துறைகளைத் தொட்டு, வங்காள விரிகுடா வழியாக வட இலங்கையின் துறைகளை அடைந்து, மேற்கு இந்தியக் கரையில் முசிறியை அடைந்து, பின் அரேபியக் கடல் வழியாக மேற்கு ஆசிய, அரேபிய நாடுகளுக்கும், செங்கடல் வழியாக மத்திய தரைக்கடல் நாடுகளையும் உரோமபுரியையும் சென்றடைகிறது. மற்றொரு கிளைப்பாதை இந்துமாகடல் வழியாக மேற்கு ஆபிரிக்க நாடுகளைச் சென்றடைகிறது. மேலே சிவப்பு நிறத்தில் காட்டப்படுவது தரை மார்க்கமான பட்டுப்பாதை.
மேற்கு நாடுகளிலிருந்தும், கிழக்கு நாடுகளிலிருந்தும் கடல் மார்க்கமாகப் பயணம் செய்யும் பாய்க் கப்பல்கள் இலங்கையின் மாந்தை, யாழ்ப்பாணப் பட்டினம் போன்ற துறைகளில் கட்டாயமாகத் தங்க வேண்டியிருப்பதற்கு இந்துமாகடலின் காற்றுவிசை முறைமை (Wind System) முக்கியமான காரணமாகும். இந்துமாகடலில் தென் – மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று (South-west Monsoon) கோடை காலங்களில் தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசியடிக்கும். அந்த மாதங்களில் மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் காற்றின் உதவியோடு சுலபமாக இந்திய – இலங்கைக் கரைகளை வந்தடைந்து கிழக்காசிய நாடுகள்வரை செல்ல முடியும். ஆனால் இக்காற்று மூன்று மாதங்கள் மட்டுமே (மே முதல் ஜூலை வரை) வீசியடிக்கும். வட – கிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று (வாடைக்காற்று) (North-east Monsoon) மாரி காலங்களில் வடகிழக்கிலிருந்து மேற்குத் திசை நோக்கி அடிக்கும். இக்காலத்தில் காற்றின் உதவியோடு பாய்க் கப்பல்கள் சுலபமாக மேற்கு நாடுகளை நோக்கிப் பயணம் செய்யும்.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் காலத்தைக் காட்டும் படம்.
மேற்கு நாடுகளிலிருந்து தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றின் துணையோடு இந்தியா, இலங்கை வரும் உரோம, அரேபிய பாய்க்கப்பல்கள் மேற்கு இந்திய அல்லது கிழக்கிலங்கைத் துறைகளில் காற்றின் அடிதிசை மாறும் வரை ஆறுமாத காலம்வரை தங்கியிருக்க நேரிடலாம். இவ்வாறு தங்குவதற்கு மேற்கு இந்தியத் துறைமுகங்களைக் காட்டிலும் இலங்கைத் துறைமுகங்கள் மிகுந்த பாதுகாப்பானவை.
நீண்டகாலமாக மேற்கு நாடுகளிலிருந்து இலங்கை, கிழக்கிந்தியா நோக்கி வரும் கப்பல்கள் தென்னிந்தியக் கரையோரமாக கன்யாகுமரியைச் சுற்றிவந்து மன்னார்க் குடாவில் நுழைந்து மேற்கிலங்கைக் கடலோரமாக மாந்தையிலும், யாழ்ப்பாணப் பட்டினத்திலுமே தரித்து நின்றன. தென்னிந்தியக் கரைவழியாக கிழக்கு – இந்தியத் துறைகளை சுலபமக அடையக்கூடிய – இராமேஸ்வரத்திற்கும் இந்திய நிலத்திற்கும் இடையிலான பாம்பன் கால்வாய் மணல்படிந்து ஆழம் குறைந்த கடற்பாதையாதலால் இலங்கைக்கரை வழியாகவே கப்பல்கள் மன்னார்க் குடாவிலிருந்து பாக்கு நீரிணையைச் சென்றடைந்தன. தூரகிழக்கு நாடுகளுக்குச் செல்லவேண்டிய கப்பல்கள் இலங்கைக் கரையைக் கடந்து பாக்கு நீரிணையில் நுழைந்தபின் சோழகக் காற்றின் துணையோடு ‘பத்தாம் பாகைக் கடல்வழியில்’ கிழக்கு நோக்கி நேரே பயணித்தன (Thiagarajah, Siva 2016: 152).

இந்திய – இலங்கைக் கரையோரமாகவும், மன்னார்க் குடா வழியாகவும், பாக்கு நீரிணையை அடைந்து பின் பத்தாம் பாகைக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசிய, தூர கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் கடற்பாதையைக் காட்டும் படம். நன்றி: கலாநிதி இரகுபதி.
சீனாவிலிருந்தும், மற்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் வரும் கப்பல்கள் பெரும்பாலும் நேரே மேற்கு நாடுகளைச் சென்றடைவதில்லை. அவை இலங்கை, இந்தியத் துறைகளில் தங்கியிருக்கும்போது, அவர்கள் கொண்டு வரும் பொருட்களை அத்துறைகளில் தங்கியிருக்கும் அரேபிய, பாரசீக வர்த்தகர்கள் பெற்றுக்கொண்டு அரேபிய, மத்தியகிழக்கு நாடுகளின் சந்தைகளில் விலைப்படுத்துவார்கள்.
சமுத்திரப் பண்பாடு
இந்தியக் குடாநாட்டின் நீண்ட கடற்கரை எங்கும் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் மீனவர்கள் உலோகப் பொருட்கள் எதையும் உபயோகிக்காமலேயே நீண்ட படகுகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். நெடிதுயர்ந்த மரங்கள் தேர்ச்சித் திறமையுடன் செப்பமாக உருவரைத் தோற்றமாக வெட்டப்பட்டு, நெருப்பின் உதவியுடன் வளைக்கப்பட்டு, நெருப்பின் உதவியுடன் துளையிடப்பட்டு, மர ஆணிகளால் இணைக்கப்பட்டு, மரச்சட்டங்கள் பொருத்தப்பட்டு, கயிறுகளால் இறுக்கப்பட்டு அமைக்கப்பட்டன. இத்தகைய நீண்ட படகுகள் அவர்களது மூதாதையர்களால் உபயோகிக்கப்பட்டிருக்கலாம். பண்டைய தென்னாசிய மக்கள் கிழக்குலகில் பரவலாக நாடு பெயர்வதற்கான விளக்கம் இதுவாகவே இருக்கும். அவர்களின் கிழக்கு நோக்கிய இடப்பெயர்வு மலேசியா, இந்தோனேசியா, சுண்டா தீவுகள், மெலனேசியா, ஆஸ்திரேலியா, சிலி ஆகிய நாடுகளையும், மேற்கு நோக்கிய பெயர்வு மடகஸ்கார், சொக்கோற்றா, அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியிருக்கிறது (Alain Danielou, 2003: 4).
அதே காலகட்டத்தில், பனியுக காலத்தில், இலங்கை தென்னிந்தியாவின் நில நீட்சியாக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் தென்னிந்தியாவின் அதே மரபியல் இனத்தவர்தாம். அவர்களும் படகுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். காலப்போக்கில் தமிழக மக்கள் பெருங்கலன்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கற்று, நெடுங்கடலோடும் வித்தையை அறிந்திருந்தார்கள். இச்சமுத்திரப் பண்பாட்டின் தொடர்ச்சியை பிற்காலச் சங்ககாலப் பாடல்களில் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை வர்த்தகர்கள் இலங்கையின் இயற்கை வளங்களான மணிக்கற்கள், இரத்தினம், முத்துக்கள், யானைத்தந்தம், கறுவா ஆகிய பொருட்களை முதலில் அண்டை நாடான இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, உலக வர்த்தக சமூகத்துடன் பரிச்சயமாகி, பின்னர் கடல்வழி வர்த்தகக் குழுவின் ஓர் அங்கமாக ஆனார்கள். உலகளாவிய வர்த்தகர்கள் இலங்கை வர்த்தகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இவர்கள் மூலம் தமது நாட்டின் வர்த்தக வளங்களை இலங்கைக்கும், இந்தியாவிற்கும் பரப்பீடு செய்தார்கள் (Thiagarajah, Siva 2016: 156).
நீண்டதூரக் கடல் வர்த்தகத் தங்குதுறை
இலங்கையின் வரலாற்றில் இற்றைக்கு 3,800 ஆண்டுகள் முன்பிருந்தே மாந்தை ஒரு பெருந்துறையாக, தென்னாசியாவில் ஒரு தனித்துவமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இது அத்துறையில் கண்டெடுக்கப்பட்ட செப்புக் கழிவுகளிலிருந்து கணிக்கப்பட்ட திகதி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எகிப்தில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட பிரித்தானிய ஆய்வாளர்களால் இற்றைக்கு 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எகிப்திய அரசனான இரண்டாவது ரமெஸெஸ் (Ramses II) அரசனுடைய ‘மம்மி’யினுள்ளே (இறந்தவர்களைப் புதைக்கமுன் துணியினால் சுற்றிப் பதப்படுத்தும் முறை) கறுப்பு மிளகு (Black Pepper) கண்டெடுக்கப்பட்டது. அக்காலத்தில் எகிப்திற்குச் சமீபமாக கறுப்பு மிளகு காணப்பட்ட இடங்கள் இலங்கையும் தென்னிந்தியாவுந்தான். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த தூரதேசக் கப்பல்கள் பீனீசிய வர்த்தகர்களின் கப்பல்களாகவே இருந்தன. பீனீசியக் கப்பல்கள் ஆபிரிக்காவைச் சுற்றி தென்னாசியா நோக்கி வரும்போது அவர்கள் சந்திக்கும் முதல் துறைமுகம் மாந்தைத் துறை. ரமெஸெஸ் மன்னனின் ‘மம்மியில்’ கண்ட மிளகு மாந்தையிலிருந்து பீனீசிய வர்த்தகர்களால் எடுத்துச் சென்றதாகக் கருதப்படுகிறது (Markoe, G.E. 1951).
2013 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் மேற்கொண்ட அகழ்வுகளில் அகழ்வாராய்ச்சியாளர்கள் இற்றைக்கு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 27 அடைக்கப்பட்ட குடுவைகளைக் (Sealed Flasks) கண்டெடுத்தார்கள். அவற்றில் 10 குடுவைகளில் ‘சின்னமல்டிஹைட்’ (Cinnamaldehyde) என்ற இராசயனப் பொருள் காணப்பட்டது. இப்பொருள் கறுவாவிற்கு அதன் நறுமணச்சுவையைக் கொடுக்கும் இரசாயனப் பொருள். அந்தக் குப்பிகளில் கறுவாவைச் சேகரித்து வைத்ததனால் அப்பொருள் அங்கே காணப்பட்டது. அக்காலத்தில் இஸ்ரேலுக்குச் சமீபமாக கறுவா காணப்பட்ட இடம் இலங்கை. இஸ்ரேலிலிருந்து ஆபிரிக்காவைச் சுற்றி இலங்கை வர 3,000 மைல்கள் (ஏறக்குறைய 5,000 கிலோ மீற்றர்). இந்தக் கண்டுபிடிப்பு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிழக்கிலிருந்து மேற்குலகம் வரை நறுமணப் பொருட்களின் வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது (Live Science, 20 August 2013).
இந்த வர்த்தகம் நடைபெற்ற காலத்தில் அன்றைய வடக்கு இஸ்ரேலின் கரையோரப் பகுதி பீனீசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பீனீசியர்களே உலகின் முதலாவது நீண்டதூர நெடுங்கடல் வர்த்தகர்களாவர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹீரோடோற்றஸ் (Herodotus) பீனீசியர்களின் கடல் வன்மையைப் பாராட்டி, அவர் எழுதுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே பீனீசியர்களின் கப்பல்கள் ஆபிரிக்காவைச் சுற்றி தென்னாசிய நாடுகளுக்குப் பயணம் செய்ததைப் பதிவு செய்திருக்கிறார். பீனீசியர்களால் கொண்டுவரப்பட்ட கறுவா வட இஸ்ரேலியர்களால் செய்யப்பட்ட தடித்த சுவர்களும், ஒடுங்கிய வாயும் கொண்ட குடுவைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது (Live Science, 20 August 2013). இலங்கையை அடைந்த பீனீசியக் கப்பல்கள் மாந்தைத் துறையில் தரித்திருந்திருக்கக்கூடிய சாத்தியம் அதிகம்.

பண்டைக்கால பீனிசிய ஆயுதபாணியான வர்த்தகக் கப்பல். Picture source: Live Science 2013.
தென்னிந்தியக் கரையோரமாக இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் மன்னார் தீவு வரை வரிசையாக ‘இராமர் அணை’ (Adam’s Bridge) என அழைக்கப்படும் கடலடிப் பாறைகளும், சிறுசிறு தீவுக் கூட்டங்களும் காணப்படுகின்றன. இதன் காரணமாக தென்இந்தியக் கரையோரமாகப் பெரிய கப்பல்களைச் செலுத்த இயலாமல் உள்ளது. மணல் படிந்த பாம்பன் கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள் செல்லலாமே ஒழிய பெரிய பாய்க்கப்பல்கள் செல்ல இயலாது. இக்கப்பல்கள் மன்னார்க் குடா (Gulf of Mannar) வழியாக – மன்னார்த் தீவுக்கும் இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும் இடையிலான குடா வழியாக மட்டுமே செல்ல முடிந்தது. இக்குடாப் பாதையில் அமைந்திருந்த பெருந்துறை மாந்தை.
இலங்கையின் தென்பகுதியிலிருந்த வலிமைமிக்க கடல் நீரோட்டங்களும், ஹம்பாந்தோட்டைப் பகுதியிலிருந்த கடற்பாறைகளும், இப்பெரிய பாய்க் கப்பல்கள் இலங்கையின் தென்பகுதியைச் சுற்றி தென்கிழக்காசிய நாடுகளுக்குச் செல்வதற்குத் தடையாக இருந்தன. அடிக்கடி கிழக்கும், மேற்குமாகச் செல்லும் அரேபிய மற்றும் சீனக் கப்பல்களுக்கு மன்னார்க்குடா வழியும், பத்தாம் பாகைக் கடற்பாதையுமே விரும்பத்தக்க, பாதுகாப்பான, நிலைநாட்டப்பட்ட கடற் பாதையாகப் பல நூற்றாண்டுகளாக விளங்கின. அப்பாதையில் மாந்தைத் துறை தங்குமிடமாகவும், தரித்துத் திரும்புமிடமாகவும், கப்பல்களைப் பழுதுபார்த்துத் திருத்துமிடமாகவும், உணவு நீராகாரங்களைச் சேமித்துச் செல்லும் இடமாகவும் இருந்தது. அங்கிருந்த பண்டகச்சேமிப்புக் களஞ்சியம் கிரேக்க யாத்திரிகர் கொஸ்மஸ்ஸினால் ‘மோதுற்றி பண்டகப் பெருநிலையம்’ (Modutti Emporium – மாந்தைக்களஞ்சியம்) எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (Cosmas Indicopleustes).
கி.மு. 1,800 ஆம் ஆண்டுகளில் மாந்தையிலிருந்து செம்பு உலோகம் தென் இந்தியாவிற்கும், பிற இடங்களுக்கும் ஏற்றுமதியாகியிருக்கிறது. மாதோட்டத் துறையில் கண்ட செப்புத் துண்டுகளும், செம்புக் கழிவுகளும் இ.மு. 3,800 ஆண்டுக்காலத்தைக் காட்டிநிற்கின்றன (Deraniyagala, S.U. 1996). இரும்பு கண்டுபிடிப்பதற்கு முன்னர் இந்த உலோகத்தின் ஏற்றுமதி உயர்ந்த வருவாயைக் கொண்டுவந்திருக்கும். அக்காலத்தைய மற்றொரு சிறந்த வருவாய் தந்த ஏற்றுமதி கறுப்பு மிளகு ஆகும். இற்றைக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் பேஹ்ரோ மன்னர்கள் ஆட்சிபுரிந்த எகிப்தை கறுப்பு மிளகு சென்றடைந்திருக்கிறது. அக்காலத்தில் இந்த மிளகு இலங்கையிலிருந்து அல்லது கேரளத்திலிருந்தே சென்றிருக்க முடியும் (Deraniyagala, S.U. 1996). அக்காலத்தில் கேரளத்தில் முசிறி ஒரு துறைமுகமாக இயங்கவில்லை. கறுப்பு மிளகு மாந்தையிலிருந்தே பீனீசிய வர்த்தகர்களால் எகிப்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க முடியும்.
கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட இரண்டாம் ஆயிரத்தாண்டின் பிற்பாதியில் மத்தியதரைக் கடல் வர்த்தகம் இலங்கையின் விளைபொருட்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. தொலைதூர வர்த்தகர்களான பீனீசியர்களின் எழுச்சி, இந்துமாகடலில் மேற்கு ஆசிய வர்த்தகத்தை ஆரம்பித்து வைத்தது. தென்னிந்தியா – இலங்கையின் விளைபொருட்களுக்கும், வாசனைத் திரவியங்களுக்கும் மத்தியதரைக்கடல் நாடுகளில் ஏற்பட்ட பிரபலமான வேண்டுகோள் இப்பகுதியில் கடற்பாதை வலையமைப்பு ஏற்படக் காரணமானது. கடற் கரையோரங்களிலும், பெறுமதியான கனிமங்களும், வளங்களும் காணப்பட்ட இடங்களில் வர்த்தக நிலையங்களும், குடியிருப்புகளும் நிறுவப்பட்டன (Indrapala, K. 2005: 77).
பிறநாட்டவரின் ஆரம்பகால அறிவிப்புகள்
கிறிஸ்தாப்த யுகத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரேலிய அரசனான ஸொலொமன், ஜெருசலத்தில் பிரம்மாண்டமானதொரு கோயில் கட்டுவதற்கான கனிமங்களைத் தேடி தென்னிந்தியாவிற்கும், இலங்கைக்கும் பீனீசிய மாலுமிகள் செலுத்திய கப்பல் கூட்டத்துடன் வந்து தங்கம், அல்கம் மரங்கள், மதிப்புமிக்க மணிக்கற்கள் ஆகியவற்றை ஓபிர் என்ற இடத்திலும், பெருந் தொகையான தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், தோகை மயில் ஆகியவற்றை தர்ஷிஷ் என்ற இடத்திலும் பெற்றுக்கொண்டு திரும்பினான் (The Bible, Kings X, v22).
வரலாற்றாசிரியர் செ. இராசநாயகம் ஓபிர் என்ற இடம் நாகர்கள் வாழ்ந்த நாடான மாந்தை என்றும், தர்ஷிஷ் அந்த நாட்டின் துறைமுகம் எனவும் இனம் காண்கிறார். ‘ஓபிஸ்’ என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் நாக பாம்பைக் குறிக்கும். நாகர்கள் வாழ்ந்த நாடு பைபிளில் ஓபிர் எனக் குறிப்பிடப்படுகிறது என்கிறார் (Rasanayagam, S. 1926: 87-88).
நாம் எதிர்பார்த்த வண்ணம் இலங்கையைப் பற்றிய மிக ஆதியான பதிவுகள் பீனீசியர்களின் எழுத்துகளிலேயே காணப்படுகின்றன. சாஞ்சுநியாத்தன் என்பவர் எழுதிய நூலான ‘பீனீசியர் வரலாறு’ (Phoenician History by Sanchuniathon) என்ற நூல் அழிந்துபோய் விட்டது. ஆனால் கிரேக்க ஆசிரியரான பைபிளொஸ் நகரத்து பைலோ (Philo of Byblos) சாஞ்சுநியாத்தனின் நூலை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அவர் எழுதிய ‘பீனீசியர் வரலாறு’ கிரேக்க மொழிபெயர்ப்பின் பல பகுதிகள் இன்றுவரை கிடைத்திருக்கின்றன. இதை அல்பேர்ட் போம்காட்டன் என்ற இஸ்ரேலிய பார்-இலன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ‘The Phoenician History of Philo of Byblos’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் (Baumgarten, A.I. 1981).
‘பீனீசியர் வரலாறு’ என்ற நூலின்படி நான்கு அரசர்கள் இலங்கைத்தீவை அரசாண்டார்கள். இவர்களில் நான்காவது அரசர் இலங்கையின் வடபகுதியை ஆட்சி செய்தார். “—-the other king rules the region towards the north which produces pearls. He has made a great rampart on the isthmus to control the passage of the barbarians from the opposite coast for they used to make incursions in great numbers.”
“இலங்கையின் வடக்குப் பகுதியான முத்து விளையும் பிராந்தியத்தை மற்றைய அரசன் ஆட்சி செய்கிறார். அப்பிராந்தியத்தின் எதிர்க்கரையிலிருந்து பெருந்தொகையில் வரும் காட்டுமிராண்டிகளைத் தடைசெய்ய அந்த ஜலசந்திக் கரையில் பெரியதொரு கோட்டையை அமைத்திருக்கிறார்.”
இலங்கையின் முத்து விளையும் பிராந்தியத்தில் அக்காலத்திலிருந்த துறைமுக நகரம் மாந்தை மட்டுமே ஆகும்.
நான்கு கிரேக்க நூலாசிரியர்கள் இலங்கையைப் (தப்ரபேன்) பற்றிப் பதிவு செய்திருக்கிறார்கள்: கி.மு. 326 இல் பேரரசன் அலெக்ஸாந்தரின் இராணுவத் தளபதிகளில் ஒருவராக இருந்த ஒன்ஸிகிறிற்றஸ், கி.மு. 302 இல் மௌரிய அரசன் சந்திரகுப்தனின் சபையில் தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ், கி.மு. 276 இல் கிரேக்க வானிலையாளரும் புவியியலாளருமான இராற்றோஸ்தெனிஸ், கி.மு. 130 இல் கிரேக்க வானிலையாளரும் கணிதவியலாளருமாக இருந்த ஹிப்பார்க்கஸ்.

இவர்களின் எழுத்துகளில் மெகஸ்தனிஸ் எழுதிய இன்டிக்கா என்ற நூல் மட்டும்தான் இன்று கிடைக்கிறது. மற்றவர்களின் எழுத்துகளிலிருந்து சில பகுதிகள் ஸ்ராபோ, பிளினி ஆகியவர்களின் எழுத்துகளில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. மெகஸ்தனிஸ் இலங்கை (தப்ரபேன்) இந்தியாவிலிருந்து ஒரு அகலமான ஆற்றினால் பிரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். இலங்கை மக்களை ‘பேலியோகோனொஸ்’ (Paleologos) என்கிறார். இவர்கள் இந்தியர்களைக் காட்டிலும் அதிக அளவு தங்கத்தையும், பெரிய அளவு முத்துகளையும் தயாரிக்கிறார்கள். முத்துகளில் தாம்ரவர்ணிகா (இலங்கை முத்துகள்), பாண்டிய கபாடகா (கொற்கை முத்துகள்) ஆகிய இரு வகைகளுமே மிகச் சிறந்த முத்துகளாகும் (Mccrindle, J.W. 1887; Stoneman, R. 2021).
மூத்த பிளினி என்ற உரோம ஆசிரியர் (கி.பி. 23-79) உரோமாபுரிக்கும் தப்ரபேனுக்குமிடையிலுள்ள உறவுகள் பற்றிக் கூறுகிறார். உரோமர்கள் இலங்கையுடன் நீண்டகால வர்த்தக உறவுகள் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். சக்கரவர்த்தி குளோடியஸ் (கி.பி. 41-54) சபையில் இத்தீவிலிருந்து ராச்சியா என்ற தூதுவர் இருப்பதைக் கூறியுள்ளார். இலங்கை சீனாவுடன் வர்த்தக உறவுகள் கொண்டிருப்பதையும், ராச்சியாவின் தந்தையார் சீனாவிற்குப் பயணம் செய்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் ‘கிரேக்க – உரோமர்களின் வர்த்தக உறவுகள் இலங்கையின் வடக்குத் துறைமுகங்களுக்கும், வடமேற்கிலிருந்த துறைமுகங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது’ என வரலாற்றாசிரியர் சைமன் காசிச்செட்டி குறிப்பிடுகிறார்: “There is no doubt, the commercial intercourse of the Greeks and the Romans with Ceylon was confined to the North and North-western ports” (Casie Chetty, S. 1947-48: 77).
மாதோட்டப் பண்டகப் பெருநிலையம் (Modutti Emporium)
கி.பி. 98-160 ஆம் ஆண்டுக்காலத்தில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த கிரேக்க புவியியலாளர் குளோடியஸ் தொலமி எழுதிய புவியியல் நூல் இலத்தின் மொழியில் ஜோகிரபியா (Geographia) என அழைக்கப்படுகிறது. இது, 1406-1407 ஆம் ஆண்டுக்காலத்தில் இத்தாலியில் புளோரன்ஸ் நகரத்தில் வாழ்ந்த ‘ஜேக்கோபஸ் ஏஞ்சலஸ்’ என்பவரால் இலத்தின் மொழியில் ‘Geographia Claudii Ptolemaei’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொலமியின் மூலநூல் எழுதப்பட்ட பப்பிரஸ் ஓலைகளில் அதிகமானவை இன்று அழிந்துவிட்டபோதிலும் இலத்தின் மொழிபெயர்ப்பு இன்றும் கிடைக்கிறது. ஆனால் மூலநூலில் இருந்த வரைபடங்கள் ஏதும் அதில் இல்லை.
கிரேக்க நூலாசிரியர்கள் இலங்கைத் தீவை ‘தப்ரபேன்’ என அழைத்தார்கள். தொலமி வரைந்த வரைபடத்தில் இலங்கை ‘தப்ரபேன்’ என்றும் அத்தீவின் முந்தைய பெயர் ‘சீமொண்டு’ (Simoundou) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது (Mccrindle, 1877: 101-103). வரலாற்றாசிரியர் முதலியார் இராசநாயகம் இலங்கையின் ஆதிப்பெயரான ‘சீலமண்டலம்’ (ஈழமண்டலம்) என்ற பெயரையே தொலமி ‘சீமொண்டு’ எனப் பதிவிட்டிருப்பதாகக் கருதுகிறார் (Rasanayagam, S. 1926: 60-61).
தொலமியின் வரைபடத்தில் அநுராகிராமம் (அநுராதபுரம்) வடமேற்கிலும், நாகதீப நகரம் வடகிழக்கிலும், மாதோட்டம் (Modutti) நாகதீபத்தின் வடக்கில் இருப்பதாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது (படம் கீழே பார்க்கவும்).
கிரேக்க வர்த்தகரான கொஸ்மஸ் இன்டிகோபிளியுஸ்ரெஸ் (Cosmas Indicopleustes) தப்ரபேனின் வடக்கே இருந்த மாந்தைத் துறைமுகத்தில் ‘மோதுற்றி பண்டகப் பெருநிலையம்’ இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இங்கே உரோமர்கள், அரேபியர்கள், சீனர்கள் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து வர்த்தகம் செய்தனர். இந்த மோதுற்றி பண்டக நிலையம் நீண்டகாலமாக உரோமர்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது. துறைமுகத்திலிருந்த வர்த்தகர்களின் தங்குமனைகளில் உரோம வர்த்தகர்களின் குடியிருப்புப் பகுதிகள் காணப்பட்டன (Huvelin, P-L. 1904: 1733-34; Peck, H.T. 1962: 592).

குளோடியஸ் தொலமி வரைந்த ‘தப்ரபேன்’ (இலங்கை) வரைபடம். மாதோட்டம் (Modutti)வடகிழக்கு மூலையில் நகதீப நகரத்தின் ஒரு பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அனுராதபுரம் ‘Anurogrammum’என்றும் நாகதீபம் ‘Nagadiba Nagram’என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாந்தையில் காணப்படும் பெருக்க மரங்களில் ஒன்று. அரேபியாவின் தேசிய மரமான இம்மரங்களை மாந்தையில் வாழ்ந்த அரேபிய குடியேற்ற வர்த்தகர்கள் நட்டிருக்கிறார்கள்.
கிரேக்க, உரோம வர்த்தகர்களின் குறிப்புகளில் காணப்படும் உலகளாவிய புகழ்பெற்ற மாதோட்டப் பண்டகப் பெருநிலையத்திற்கு கிரேக்க, உரோம, பாரஸீக, அரேபிய, சீன வர்த்தகர்கள் அடிக்கடி வருகை தந்தது மட்டுமல்லாமல் இந்த வர்த்தகர்களும், சில சமயங்களில் அவர்களது குடும்பங்களும் துறைமுகத்திலிருந்த வர்த்தகர்களின் தங்குமனைகளில் வாழ்ந்து வந்தார்கள். அரேபியாவில் காணப்படும் அவர்களின் தேசிய மரமான பெருக்க மரங்கள் (Baobab Tree) இலங்கையில் அவர்கள் வாழ்ந்த இடங்களான மாந்தையிலும், நெடுந்தீவிலும் மட்டுமே காணப்படுகின்றன. பாரஸீகத்தில் சஸானிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், இலங்கையில் பாரசீக வர்த்தகர்களின் குடியேற்றம் (காலனி) ஒன்று மாந்தையில் இருந்ததற்கான பதிவுகள் இருப்பதாக பிரித்தானிய தொல்லியலாளர் டேவிட் வைற்ஹவுஸ் (David Whitehouse, 1973: 29-49) குறிப்பிடுகிறார்.
கி.மு. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை – மன்னார்க் குடாவில் மணல் படிவினால் கடலின் ஆழம் குறைந்து கப்பல்கள் அதனூடாகச் செல்ல இயலாத ஒரு காலகட்டம் வரை – மாந்தை ஒரு பிரபலமான சர்வதேசக் கப்பல் துறையாக விளங்கியது. அதன் பின்னர் பாய்க் கப்பல்கள் இலங்கைத் தீவைச் சுற்றிப் பயணம் செய்தன. அக்காலத்தில் காலித் துறைமுகம் பிரபலமானது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்காசியா செல்லும் நீராவிக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிப் பயணித்தன.
நாகர்களும் மாந்தையும்
கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய இரண்டாம் ஆயிரத்தாண்டு காலத்தில் தென்னிந்திய, மற்றும் இலங்கையின் துறைமுகங்களோடு பீனீசியர்கள் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்த காலத்தில் மாந்தையில் வாழ்ந்து அவ்விடத்தில் ஒரு பெரிய துறைமுகத்தை அமைத்தவர்கள் நாகர்கள் என வரலாற்றாசிரியர் இராசநாயகம் கூறியுள்ளார் (Rasanayagam, S. 1926: Ch. 1). ஆஸ்திரலோயிட் இன மக்களில் ஒரு குழுவினர் நாகபாம்பை வணங்கியடியினால் ‘நாகர்’ எனப் பெயர் பெற்றனர் என்பது அறிஞர் ஆனந்தா குமாரசாமியின் கருத்து. அவர்கள் பேசிய ஆஸ்திரலேசிய மொழிகளில் ஒன்றான முண்டா மொழியில் ‘லங்கா’ என்ற சொற்பதம் நீரினால் சூழப்பட்ட தீவு எனப் பொருள்படும். இலங்கைக்கு ‘லங்கா’ என்ற பெயரைக் கொடுத்தவர்கள் நாகர்களே ஆவர். இலங்கையிலுள்ள பல இடப்பெயர்களின் மூலங்கள் ஆஸ்திரலேசிய மொழிப் பெயர்களாகும். தென்னிந்தியாவிலிருந்து பெருங்கற் பண்பாடு வந்த பின்னர் முண்டா மொழி வட இலங்கையில் தமிழ் மொழியினாலும், வட இந்திய வர்த்தகர்களின் ஆதிக்கம் தென் இலங்கையில் பரவிய பின்னர் பிராகிருத மொழியினாலும் பதிலமர்த்தப்பட்டது (Language Replacement). காலப்போக்கில் வட இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களுடனும், தென்னிலங்கை நாகர்கள் சிங்கள மக்களுடனும் ஒருங்கிணைந்தார்கள்.
இலங்கையின் மிகப்பழமையான சிவன் கோயில்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் நாகர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் ஆதிமூலத்தில் சிவலிங்கமே வைத்து வணங்கப்படுகிறது. இன்றைய இந்து மதத்தின் அடிநாதமாக விளங்கும் இந்த உருவ வழிபாட்டின் ஆரம்ப கர்த்தாக்கள் இந்த ஆதி (ஆஸ்திரலோயிட்) மனிதர்களே என்கிறார் ஆனந்தா குமாரசாமி (Coomaraswamy, A.K. 1971). இந்து மதத்தில் இன்றுவரை நிலவி வரும் லிங்க வழிபாட்டை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர்கள் இந்த ஆதி ஆஸ்திரலோயிட் மக்களே என்கிறார் பிரபல வங்கப் பேராசிரியர் மஜும்தார் (Majumdar, R.C. 1951).

திருக்கேதீஸ்வரம் கோயிலின் இன்றைய தோற்றம். Picture source: mathagal.com
பல நூற்றாண்டுகளாக கொற்கையும் மாந்தையும் உலகப்புகழ் பெற்ற பிரபலமான இரட்டைத் துறைகளாக தமிழகத்திலும், இலங்கையிலும் விளங்கிய காலத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் கோயிலும் மாண்புமிக்க ஒரு நிலையில் இருந்தது. மேகவண்ண அபயனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 303-331) மகாதித்தத்தில் ஓர் அழகிய ஆலயம் இருந்தது என தாதவம்ச என்ற பாளி நூல் கூறுகிறது. கலிங்கத்திலிருந்து பௌத்தமத தந்ததாது இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட சமயம் இங்குள்ள ஓர் அழகிய இந்துக் கோயிலில் ஓர் இரவு தரித்து நின்றதாக இந்நூல் கூறுகிறது (Law, B.C. 1925: 42).
தொல்லியல் ஆய்வுகள்
புராதன மாந்தைத்துறையிருந்த நிலப்பகுதி இன்றைய கடற்கரையிலிருந்து 200-400 மீற்றர் தள்ளி 30 ஹெக்டயர் பரப்பளவிலான, 8.25 மீற்றர் உயரமான மண்மேடாகக் கிடக்கிறது. வரலாற்றுப் புகழ்மிக்க மாந்தைத் துறையைக்கொண்ட இந்த மேடு வடமேற்குக் கடற்கரையில் மன்னார்த் தீவுக்கு நேர் எதிராகக் காணப்படுகிறது. இந்த மேட்டில் 11 மீற்றர் ஆழம்வரை உலக நாடுகளின் கருவூலப் பொருட்கள் காணப்படுகின்றன. இந்த மண்மேட்டின் மத்தியில் திருக்கேதீஸ்வரம் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த மண்மேட்டைச் சுற்றிவர குதிரை லாயம் வடிவிலான சுற்று மதிலும், அதன் இரு பக்கமும் ஆழமாக வெட்டப்பட்ட அரண் அகழ்வுக் கிடங்குகளும் காணப்படுகின்றன. இந்த அரணின் நீளம் 600 மீற்றரும், அகலம் 600 மீற்றரும் ஆகும். இலங்கையின் சில வரலாற்றாசிரியர்கள் இந்த அரண் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குரியது என ஊகித்த போதிலும், அதற்கான ஆதாரம் ஏதும் கிடையாது. மற்றும் சில ஆசிரியர்கள் அது கிறிஸ்தாப்த காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.
மாந்தைத் துறைமுக நகரம் இந்த அரணினால் சூழப்பட்டிருந்தது. இந்த நகரம் இருந்த இடம், மத்திய கிழக்கிற்கும் தூர கிழக்கிற்கும் நடுவிலும் – இந்தியாவின் மேற்குக் கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக்கரைத் துறைமுகங்களுக்கும் இடையிலும் அமைந்திருந்தமையால் – அதன் மைய அமைவு அதன் சர்வதேச வர்த்தகப் பரிணாம வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்தது.
இத்துறைமுக நகரம் இலங்கையின் வறண்ட மண்டலத்தில் அமைந்திருந்தாலும், இலங்கையின் மிகப் பெரிய குளங்களின் ஒன்றான, 7.7 ஹெக்டயர் அளவான கட்டுக்கரைக் குளம் (Giant’s Tank) இதன் சமீபமாக அமைந்திருந்தது. நகரத்தின் தென் பக்கத்தில் அருவி ஆற்றின் (மல்வத்து ஓயா) கழிமுகம் காணப்பட்டது. இவற்றிலிருந்து பெற்ற நீர்வளம் பெரியதொரு குடியிருப்பைப் பேணுவதற்கும், நீர்ப்பாசனப் பயிரீட்டு வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைந்தது.
1950 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பாதுகாப்பாளரக இருந்த (Conservation Assistant) சண்முகநாதனால் இந்த மேடு அகழ்வாய்வு செய்யப்பட்டது. 1980, 1982, 1984 ஆம் ஆண்டுகளில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி ஜோன் காஸ்வெல் (John Carswell) தலைமையில் இந்த மண்மேட்டில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சண்முகநாதனின் அகழ்வுகளில் அரணின் கிழக்கு வாயிலிலிருந்து 40 அடி அகலமான ஒரு புராதன வீதியும், அதற்கு இணையாக ஓடிய ஒரு சிறிய வீதியும் காணப்பட்டன. இவ் வீதிகளின் இரு பக்கங்களிலும் பண்டைய கட்டடங்களின் அழிபாடுகள் காணப்பட்டன. கிழக்கு வாசலிலிருந்து சென்ற வீதி ஒரு பெரிய கட்டடத்தின் அழிபாடுவரை சென்றது. அந்த இடத்தில் கண்டெடுத்த ஒரு தீர்த்தக் கல்லும், இலங்கையில் கண்டெடுத்த மிகப்பெரிய சிவலிங்கமும் அந்த இடத்தில் முன்னர் ஒரு சிவன் கோயில் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியது. இதைத் தவிர மட்பாண்டங்களால் சுற்றிவரப் பொருத்தப்பட்ட ஒரு உறை கிணறும், மற்றும் கற்களால் கரைகட்டிய உறைகிணறுகளும் (Ring wells) காணப்பட்டன (Sanmuganathan, S. 1950).

இவற்றைத் தவிர அவ்விடத்தில் நீள்கிடத்திப் புதைத்த ஒரு புதைகுழியையும், அதனுள் காணப்பட்ட ஒரு முழுநீள எலும்புக்கூட்டையும் அகழ்ந்தெடுத்தார். அதன் தலை மேற்குப் பார்த்தும், பக்கவாட்டில் சரித்தும் புதைக்கப்பட்டிருந்தது. மற்றும், உரோம, பாரஸீக, சீன மட்பாண்டங்களையும் கண்டெடுத்தார் (Sanmuganathan, S. 1950).
இந்த எலும்புக்கூட்டைப் பரிசோதித்த கொழும்பு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சண்முகம், மற்றும் டாக்டர் ஜயவர்த்தன இது ஒரு மத்திய வயதுப் பெண்ணின் எலும்புக்கூடு என்றும், உடற்கூற்று ஆய்வின்படி (Anthropologically) இது தென்னிந்திய வகை மானிட எலும்புகளை ஒத்திருப்பதாகவும் கூறியிருந்தார்கள் (Chanmugam, P.K.; Jayawardhana, F.L.M. 1954: 65-68).
1980, 1982, 1984 ஆம் ஆண்டுகளில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி ஜோன் காஸ்வெல் (John Carswell) தலைமையில் இந்த மண்மேட்டில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது 1980 ஆம் ஆண்டு அகழ்வு அறிக்கையின் சுருக்கம் இது: இம்மண்மேட்டின் மேற்பகுதி உலகின் பல நாடுகளுக்குரிய வரலாற்றுக்காலக் கருவூலப் பொருட்களைக் கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை சீன, அரேபிய, கிரேக்க, ரோம, பாரஸீக நாடுகளுக்குரியனவாகும். அகழ்வுக் கிடங்குகளின் அடிப்பகுதியில் இவ்விடத்தில் இடைக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்பட்டன. குறுணிக்கல் ஆயுதங்கள், மீன்களின் எலும்புகள், கறுப்பு – சிவப்பு மட்பாண்ட ஓடுகள் என்பன கண்டெடுக்கப்பட்டன (Carswell, J. et al. 1980).
அவர்களது 1984 ஆம் ஆண்டின் அகழ்வின் போது இம்மேட்டின் அகழ்வுக் குழியின் அடியில் இடைக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமான நுண்கற் கருவிகள் காணப்பட்டன. அத்துடன் விலங்குகளினதும், மீன்களினதும் எலும்புகளும், முட்களும் காணப்பட்டன. அகழ்வுக் கிடங்குகளின் அடியில் நீர் ஊறிக்கொண்டு வந்தமையால் மேற்கொண்டு அகழ்வுகளைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. மண்மேட்டின் மத்தியில் அகழப்பெற்ற குழியில் நீர்மட்ட மேசையின் கீழேயும் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்டன. தற்போதைய நீர்மட்டத்தின் கீழ் மேலும் இரண்டு மீற்றர் ஆழத்தின் அடியில்தான் கன்னி மண் (Virgin Soil) இருப்பதாகக் கணிக்கப்பட்டது (Carswell & Prickett 1984).
தண்ணீர் மட்டத்திற்கு மேலே அகழ்ந்த பகுதியை அகழ்வாராய்ச்சியாளர்கள் மூன்று காலங்களாகப் பிரித்தார்கள். அவை: ஆதி வரலாற்றுக் காலம், வரலாற்று இடைக்காலம், ஆரம்ப மத்தியகாலம் (Early Medieval) என்பனவாகும். அங்கே கண்டெடுத்த பொருட்களில் முக்கியமானவை: உரோம ரௌலெற்றெட் பாண்டங்கள், விலைமதிப்பற்ற மணிக்கற்கள், உலோகக் கசடுகள், செப்புப் பொருட்கள், யானைத் தந்தம், சங்கு வளையல்கள், மரம் – ஸ்வாஸ்திகா நாணயங்கள், லக்ஷ்மி நாணயங்கள் ஆகியன. இந்த அகழ்வில் கண்ட பொருட்களைக் கொண்டு இவ்விடத்தின் பெருங்கற்காலத்தை காஸ்வெல் கி.மு. 800க்கும் – கி.மு. 400க்கும் இடைப்பட்ட காலமாகக் கணித்தார் (Carswell & Prickett 1984). இங்கே நவீன கதிரியக்கக் காலக் கணிப்புகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

மாந்தை அகழ்வுகளில் கண்ட பாரஸீக மட்பாண்ட ஓடுகள். Courtesy: John Carswell.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள்
வியப்பிற்குரிய பெருவருவாய் தந்த வெளிநாட்டு வர்த்தகத்தைத் தவிர உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளும் முக்கியமானவை. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
விவசாயம்
இந்தப் பிரதேசத்தில் நீர்ப்பாசன விவசாயம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் இலக்கியமான சிறுபாணாற்றுப்படை என்ற நூலில் மாதோட்டம் (மாந்தை) நகரத்தைச் சூழ குளிர்நீர் கொண்ட பல குளங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டுக்கரைக் குளம் இலங்கையின் மிகப் பழமையான குளம் ஆகும். இது இலங்கையின் நாகர்களால் வெட்டுவிக்கப்பட்ட குளம் என வரலாற்றாசிரியர் இராசநாயகம் கருதுகிறார். இந்த ஏரி மிகப் பழமையானது. ஆகையால் இலங்கையின் வரலாற்று நூல்களில் விஜயனின் பின்னர் ஆட்சி செய்த அரசர்கள் கட்டுவித்த குளங்களின் பட்டியலில் இது குறிப்பிடப்படவே இல்லை. அதுமட்டுமல்ல, தொலமியின் தப்ரபேன் வரைபடத்தில் காட்டப்படும் மெகிஸ்பா ஏரி (மகா ஏரி) (Megisba Lake) இந்தக் கட்டுக்கரைக் குளம் எனவும் இராசநாயகம் கருதுகிறார். இந்தப் பிரதேசத்திலுள்ள பல சிறு குளங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கமாக இந்த ஏரி பணியாற்றி வந்திருக்கிறது (Rasanayagam, S. 1926: 106. 132).
கட்டுக்கரைக் குளம் 30,500 ஏக்கர் பரப்பைக் கொண்டது. 2003 ஆம் ஆண்டில் மேற்கொண்ட கணிப்பில் 24,000 ஏக்கர் பரப்பு விவசாய நிலத்திற்கு அது நீர் வழங்குவதாகக் கணிக்கப்பட்டது. 4 மீற்றர் (11.5 அடி) உயரமான இந்த ஏரி, 3 மீற்றர் (10 அடி) உயரமான நீர் மட்டம் வரை கெடுதலின்றி நீரைத் தேக்கி வைக்கும் எனக் கணிக்கப்பட்டது. இதிலிருந்து 24 மைல் நீளம் வரையான வாய்க்கால்கள் மூலம் பல சிறிய குளங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது (Water Resources Board 2009: Water Resources of Ceylon, p. 333).

கட்டுக்கரைக் குளம்
சங்குத் தொழில்
வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்றின் ஆரம்ப காலங்களிலும் சங்குத் தொழில் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது. கடலில் மூழ்கிச் சங்கெடுக்கும் தொழில் மக்கள் குடியேற்றங்கள் ஆரம்பமான காலத்திலிருந்தே ஒரு வர்த்தக நடவடிக்கையாக நடைபெற்றது என்பதை ஆரம்பகாலக் குடியேற்ற மையங்களில் காணப்படும் ஏராளமான சங்குத் துண்டுகள் மூலம் அனுமானிக்க முடிகிறது. சங்குகள் வளையல்கள் மற்றும் ஆபரணங்கள், சிறிய கைவேலைப் பொருட்கள் செய்ய உபயோகப்பட்டது. கோயில்களிலும், விழாக்களிலும் ஊதுவதற்கு முழுச் சங்கும் வேண்டியிருந்தது. இவற்றுள் வலம்புரிச் சங்கு ஓர் அபூர்வமான பொருளாகப் பாதுகாக்கப்பட்டது. வட மேற்கு இலங்கையின் பல கரையோரக் கிராமங்களிலிருந்து சங்குகள் விற்பனைக்காக மாந்தைப் பண்டகச் சந்தைக்கு எடுத்துவரப்பட்டன. கடலில் மூழ்கிச் சங்கெடுப்பதில் கேரளாவிலிருந்து வந்த முக்குவர் என்ற சாதியினர் வல்லவர்களாக விளங்கினார்கள்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருக்கேதீச்சரத் தேவாரப் பதிகங்களில் இங்கே பிரபலமாகவிருந்த சங்குத் தொழில் பற்றிக் கூறியுள்ளார் (பதிகம் 7). இத்தோடு மாதோட்டக் கடலில் வங்கம், வையம் எனப்படும் பெருந்தொகையான நீண்ட படகுகள் காணப்படுவதாகவும் கூறியுள்ளார் (பதிகம் 1-3). திருஞான சம்பந்தர் தனது திருக்கேதீச்சரத் தேவாரத்தில் மாதோட்டத் துறையில் முத்துகள், விலையுயர்ந்த மணிக்கற்கள் என்பனவற்றின் வர்த்தகம் பிரபலமாக நடைபெறுவது பற்றிக் கூறியுள்ளார்.
இடைக்கற்காலத்திலிருந்தே சங்கு மக்கள் மத்தியில் பிரபலமாகவிருந்த ஒரு பொருள் எனக் கூறப்படுகிறது. தென் இந்திய, இலங்கையின் பண்பாட்டுக்கும், சடங்குகளுக்கும் பரிச்சயமானவர்கள் இந்த எளிமையான சங்கு பலவகையான பாரம்பரிய வாழ்க்கைச் செயற்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுவதை அறிவார்கள். மேற்கூறிய தேவைகளைவிட சங்கானது விழாக்கால ஊதுகுழலாக, தெய்வத்திற்குப் படைக்கப்படும் ஒரு பொருளாக, நல்ல சகுனத்தின் அடையாளமாக, உடலில் அணியப்படும் தாயத்தாக உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒருவருக்குத் தீங்கு விளையாது தடுக்கும் ஆற்றல் கொண்ட மங்களகரமான பொருளாக மக்கள் சங்கை நம்பியதால் அதனால் செய்த வளைகாப்புகள், மணிமாலைகள், மோதிரங்கள் என்பவற்றை அணிந்து கொண்டார்கள்.
மன்னார்க் குடாவிலும், பாக்கு நீரிணையிலும் பெருந் தொகையிலான சங்குகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின், மற்றும் கேரளத்தின் கரையோரக் கடல்களில் சங்குச் சிப்பிகள் விளைகின்றன. தொல்லியல் அகழ்வாய்வு சங்கு, முத்துப் போன்று ஆதி இரும்புக்காலப் பண்பாட்டுடன் முக்கியமாகத் தொடர்பு கொண்டதை எடுத்துக்காட்டுகின்றன. வட இந்திய வர்த்தகர்களின் தொலைதூர வர்த்தகம் எழுச்சிபெற்ற காலத்தில் இந்தியக் குடாநாட்டினதும் (இலங்கையினதும்) வர்த்தகம் சங்குகளையும் உள்ளடக்கியிருந்தது (Indrapala, K. 2005: 78-79).
முத்து வர்த்தகம்
இலங்கைத் தீவகம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முத்துகளுக்காகப் புகழ்பெற்ற ஒரு நாடாக விளங்கி வந்திருக்கிறது. இலங்கையின் வடமேற்குக் கரையிலிருந்த பூக்குளம், தமிழகக் கரையிலிருந்த கொற்கை ஆகிய மையங்கள் தொல்லியல் அகழ்வுகளின் போது ஏராளமான சிப்பி ஓடுகளைக் காட்டியுள்ளன. இதிலிருந்து அவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட முத்துகள் அக்காலத்தில் அதிகமாக வேண்டப்பட்ட ஆடம்பரப் பொருள் என்பதை அறியமுடிகிறது. தமிழ், சமஸ்கிருத, கிரேக்க இலக்கிய மூலங்கள் மன்னார்க் குடாவின் முத்துகளின் பெருமை பற்றிப் பேசுகின்றன. கௌடில்யரின் (கி.மு. 375-283) சமஸ்கிருத நூலான ஆட்சித்திறன் – பொருளாதாரக் கொள்கை – இராணுவ மூலோபாயம் ஆகிய பொருளடக்கம் கொண்ட அர்த்தசாஸ்திரம் இந்தியாவின் தலைசிறந்த முத்துகளாக ‘பாண்டிய கபாடக’, ‘தாமிரவர்ணிகா’ என இருவகை முத்துகளைக் குறிப்பிடுகிறது. இலங்கையின் முத்துகள் தாமிரவர்ணிகா எனக் கூறப்படுகிறது. மௌரியப் பேரரசன் சந்திரகுப்தனின் அரசவையில் கிரேக்கப் பிரதிநிதியாக இருந்த மெகஸ்தனிஸ் “தாப்ரபேனின் மக்கள் இந்தியர்களைக் காட்டிலும் தங்கம், முத்து ஆகிய விலையுயர்ந்த பொருட்களைக் கண்டெடுத்து ஏற்றுமதி செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்” என கி.மு. நான்காம் நூற்றாண்டில் பதிவு செய்திருக்கிறார்.
தென் ஆசியாவிலேயே இலங்கையின் மன்னார்க் குடாவில் காணப்படும் கடலடி முத்துமேடுகளில் காணப்படும் முத்துகளே மிகப் பெறுமதியானதும், விலை உயர்ந்ததுமாகும் (Bastianpillai, 2006: 209). மன்னார் வளைகுடாவில் கண்டெடுக்கப்படும் முத்துகள் பற்றி மார்க்கோபோலோவும் கூறியிருக்கிறார். மன்னார்க் குடாவின் கடலின் ஆழம் பத்து அல்லது பன்னிரண்டு கால்கவடு (Paces) ஆழம்தான இருக்கும். கரைகளில் சில சமயம் இரண்டு கால்கவடு ஆழத்திலேயே முத்துகள் கண்டெடுக்கப்படும். இக்குடாவில் முத்துகள் பெருமளவில் கிடைக்கின்றன. கடலடி முத்துப் பாறைகள் மன்னாரிலிருந்து சிலாபம் வரை பரவிக்கிடக்கின்றன (Suraweera, A.V. 1976:221).

மன்னார்க்குடாவில் முத்துக்குளித்தல்
சமஸ்கிருத, தமிழ், கிரேக்க நூல்களில் மன்னார் வளகுடா முத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவற்றில் காணப்படும் பாராட்டுதல்களைக் கொண்டு அக்காலத்தில் மன்னார் வளைகுடாவில் பெறப்பட்ட முத்துகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகவும், பெறுமதிமிக்கவையாகவும் கருதப்பட்டன என்பதை அறியக்கூடியதாக உள்ளது. மேற்காசியாவிலிருந்து வந்த வணிகர்களின் ஆர்வமிக்க கொள்முதலினாலேயே மன்னார்க்கடல் முத்துகளுக்கு இத்தகைய சிறப்புக் கிடைத்திருக்கும். இவ்வணிகர்களுள் பீனீசியர் முக்கியமானவராவர். பண்டைய துறைமுகமாகிய கொற்கையிலும் இத்தகைய முத்தெடுக்கும் செயல்கள் நடைபெற்றது பற்றி சங்க இலக்கியமான அகநானூற்றில் குறிப்புகள் உள்ளன. இவற்றை எல்லாம் நோக்குமிடத்து கி.மு. முதலாம் ஆயிரத்தாண்டின் பிற்பகுதியில் – இற்றைக்கு 2500 ஆண்டுகள் முன் இருந்து இற்றைக்கு 2000 ஆண்டுகள் முன்வரை தூரப்பிரதேசத்து வணிகர் தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியத்திற்கு முத்துகளைப் பெற வந்தனர் என்பதில் ஐயமில்லை (இந்திரபாலா, 2006: 115-116).
மணிக்கற்கள் வணிகம்
ஆதி இரும்புக்காலத்தில் இலங்கையின் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட கனிப் பொருட்களுள் இரத்தின மணிக்கற்கள் அதிகம் வேண்டப்பட்ட பொருளாக முக்கியத்துவம் பெற்றன. ஆதி வரலாற்றுக் காலத்தில் மணிக்கற்கள் ஒரு சிறப்பு வாய்ந்த வர்த்தகப் பொருளாக இருந்ததை அக்கால இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆதி காலத்தில் இலங்கைக்கு இரத்தின தீவு (ரத்னதீப) என்ற பெயர் வழங்கப்பட்டமைக்கு அங்கு பெறப்பட்ட சிறப்பான மணி வகைகள் காரணமாகும். கிரேக்க எழுத்தாளராகிய தொலமியின் காலத்திலிருந்து (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) கிரேக்க – உரோம மூலங்களில் இலங்கையின் சிறப்பு வாய்ந்த மணிகள் முக்கியமான வர்த்தகப் பொருட்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன (இந்திரபாலா, கா. 2006: 117).
இரத்தின மணிக்கற்களைத் தவிர செவ்வந்திக் கல் (Amethyst), நீல மாணிக்கம் (Sapphire), அகேற் மணிக்கல் (Agate), ஜஸ்பார் மணிக்கல் (Jaspar), சூதுபவளம் (Carnelian), பளிங்கு (Quartz), வைடூரியம் (Lapis-lazuli) என்பன இலங்கையின் பிரபலமான மதிப்புமிக்க கற்கள் என கிரேக்க – உரோம மூலங்கள் கூறுவதாக வீரக்கொடி குறிப்பிடுகிறார் (Weerakkody, D.P.M. 1997).
இவ்வகையான விலைமதிப்பற்ற கற்கள் மேற்கிலும், கிழக்கிலும் பிரபலமாக இருந்தபடியினால் அந்நாடுகளின் மங்கையரால் பெரிதும் விரும்பப்பட்டன. அதன் காரணமாக அவை முக்கியமான வர்த்தகப் பொருட்களாக விளங்கின. இம் மணிக்கற்கள் படைவீரர்களைக் கொண்ட சிறப்பான சரக்குக் கப்பல்களில் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. இச்செயற்பாடு கணிசமான வருமானத்தைக் கொடுத்து பண்டைய உலகின் மிகவும் இலாபகரமான வர்த்தகமாக விளங்கியது.
யானைத் தந்தமும் பிற பொருட்களும்
தூரதேசத்து வணிகர்கள் பெற்றுக்கொண்ட பிற பொருட்களுள் யானைத் தந்தமும், மயில் பீலியும் குறிப்பிடத்தக்கவை. மேற்கு ஆசிய வணிகர்கள் இப்பொருட்களைத் தேடி தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியத் துறைமுகங்களுக்கு வந்தனர். கிறிஸ்தவர்களுடைய விவிலிய நூலில் இஸ்ரேலிய மன்னன் ஸொலொமனின் கப்பல்கள் தூரதேசமான அவனுடைய தாயகத்திலிருந்து தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியங்களுக்கு வந்து மேற்கொண்ட வர்த்தகத்தில் யானைத்தந்தம், பொன், வெள்ளி, குரங்கு, மயில் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டதற்கான குறிப்புக் காணப்படுகிறது. இப்பொருட்களுக்கான தமிழ்மொழி அடித்தளம் கொண்ட பெயர்களிலிருந்து அவை தமிழர்களின் துறைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதை அறிய முடிகிறது. அம்மன்னனது கப்பல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஓபிர் (Ophir) என்ற இடத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ‘ஓபிர்’ என்ற இடம் மாதோட்டத்திலிருந்த நாகர்களின் நாடு என வரலாற்றாசிரியர் இராசநாயகம் அபிப்பிராயம் தெரிவிக்கிறார் (Rasanayagam, S. 1928: 87-88). ‘ஓபிஸ்’ (Ophis) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் நாக பாம்பைக் குறிக்கும்.
செம்பு உருக்கும் தொழில்
மாந்தைத் துறையில் காணப்பட்ட கி.மு. 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்புப் பகுதிகளும், செப்புத் துண்டுகளும், செம்புக் கசடுகளும் அக்காலகட்டத்தில் மாந்தையில் செப்பு உலைக்கலன்களில் செப்பு உலோகம் உருக்கி எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது. மாந்தைத் துறைமுகத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு செம்பு ஏற்றுமதியானது என தொல்லியலாளர் சிரான் தெரனியகல கருதுகிறார் (Deraniyagala, S.U. 1996). அக்காலப்பகுதியில் தென்னிந்தியாவில் செம்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இரும்புக் கருவிகள் பாவனைக்கு வந்திருந்தபடியினால் தென்னிந்திய மக்கள் செம்பைத் தேடி அகழ்வுகளில் பெரிதாக ஈடுபடவில்லை. அக்காலப்பகுதியில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திற்குத் தெற்கே செம்பு காணப்பட்ட இடம் இலங்கையின் சேருவில்தான் (Jayawardena, D.E.de S., 1982). தென்னிந்தியாவை செம்பு அக்காலத்தில் மத்தியப் பிரதேசத்திலிருந்தும், இலங்கையிலுமிருந்தே சென்று அடைந்திருக்கிறது. இக்கண்டுபிடிப்பு மாந்தைத் துறையின் அநாதியை மட்டுமின்றி இலங்கையில் இரும்புக்காலத்திற்கு முன்னர் ஒரு வெண்கலக் காலம் இருந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இவ்விடத்தில் காணப்படும் செப்புக் கசடுகளும், எரிந்துபோன நிலக்கரித் துண்டுகளும், செப்பு உலோகக் கனிமமான ‘குப்புறைற்’றிலிருந்து (Cupurite) செம்பு உருக்கி எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. செப்பின் கனிப்பொருளான ‘குப்புறைற்’ அந்த உலோகத்தின் ஆக்சைட் சேர்மானமாகும் (Oxide). இச்செப்புக் கனிமத்தை நிலக்கரியின் உதவி கொண்டு எரிப்பதனால் செப்பு உலோகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் (Godakumbura, C.E. 1968).
செம்பினால் செய்த பொருட்களான வளைகாப்புகள், கழுத்திலணியும் மாலைகள், மோதிரங்கள், உருண்மணிகள், கோலக் குச்சிகள் என்பனவும், செம்பை தகரத்தோடு சேர்த்து உருக்கப்பெற்ற வெண்கல மணிகளும் பொம்பரிப்பு அகழ்வுகளில் கிடைத்திருக்கின்றன (Begley, V. 1981).
கிழக்கு இலங்கையில் திருகோணமலையில் சேருவில் என்ற இடத்தில் செப்புக் கனிமங்கள் நிலத்தின் கீழே கிடைக்கின்றன. அக்காலப்பகுதியில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திற்குத் தெற்கே செம்பு காணப்பட்ட இடம் இலங்கையின் சேருவில்தான். இங்கிருந்து செப்புக் கனிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இலங்கையின் பல மையங்களுக்கும் அனுப்பப்பட்டு, அந்த மையங்களிலே உருக்கி செம்பு உலோகம் எடுக்கப்பட்டது. இந்த உலோகம் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தமையால், மாந்தை போன்ற துறைமுகங்கள் வழியாக இந்த உலோகம் அங்கே ஏற்றுமதி செய்யப்பட்டது (Jayawardena, 1982; Seneviratne, S. 1994).
உருண்மணி செய்தொழில்
மாந்தையில் உருவாக்கப்பட்ட கண்ணாடி உருள் மணிகள் தனித்துவமானவை. அவற்றின் அடிப்படையான நிறங்கள் கறுப்பும் அடர் நீலமுமாகும். அந்த உருண்டை மணிகளில் குறுக்காக வெண்ணிற, சிவப்பு, மஞ்சள் நிறக் கோடுகள் வரையப்பட்டிருக்கும். முதலில் ஒரு செப்புக் கம்பியில் வண்ணமிட்ட கண்ணாடியைக் குழாய்களாக உருக்கி வார்த்து, வெப்பமாக இருக்கும் பொழுதே சமதூரத்தில் உயர்ந்த கோடுகளைக் கொண்ட கற்பாளத்தின் மேலே உருட்டப்பட்டு வெவ்வேறு மணிகளாகப் பிரிக்கப்படும். இவை பின்னர் தனித்தனி மணிகளாக வெட்டிப் பிரிக்கப்பட்டு, அவைகளை மிருதுவாக, வழவழப்பாக்க மீண்டும் சூடாக்கப்படும். மாந்தை அகழ்வுகளில் இப்படியான 30 மணிகளைப் பெற்றுக்கொண்டோம் (Carswell, J. 1984).

உருண்மணிகள்
படிநிலை வளர்ச்சியும் நகரமயமாதலும்
இப்பிராந்தியத்தின் இனமரபுக் குழுக்களிடையே கி.மு. 1200 ஆம் ஆண்டளவில் ஒரு தலைமைத்துவம் கொண்ட பிரதேசம் உருவாகியிருக்கும்; அங்கே ஒரு குடிமரபுத் தலைவனும் (Chiefdom and Chieftain) உருவாகியிருப்பார். இந்தத் தலைவனின் கீழே அப்பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளை ‘பருமகர்கள்’ (Parumakas) நிர்வாகம் செய்திருப்பர். மாந்தையின் நிர்வாகிகளுக்கான முக்கிய வருமானம் வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து அறவிட்ட வரிகளே ஆகும்.
கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட ஆயிரத்தாண்டின் முற்பகுதியிலேயே நெல் விளைவிப்பு இலங்கையின வடமேற்குப் பகுதியில் பரவிவிட்டதை பொம்பரிப்பு அகழ்வாய்வுகள் அறியத்தருகின்றன. பெரும் தாழிகளை உருவாக்கிய களிமண்ணுடன் பதப்படுத்தும் பொருளாகக் கலந்த நெல் உமிகளும், படையற் பொருட்களினிடையே காணப்பட்ட அரிசியும், இரும்பினால் செய்யப்பட்ட ஏர் முனையும், இதை உறுதி செய்கின்றன (Sitrampalam, S.K. 1990: 273).
முடிவுரை
இந்துமாகடலின் வர்த்தக வலைப்பின்னலில், சர்வதேச வர்த்தகப் பாதையின் மத்தியிலிருந்த இலங்கை, ஆதி நாட்களிலிருந்தே போக்குவரத்து வர்த்தகத்தின் மைய நிலையமாக இருந்து வந்திருக்கிறது. அதன் இயற்கை வளங்களான முத்துகள், சங்குகள், இரத்தின மணிக்கற்கள், யானைத்தந்தம், வாசனைச் சரக்குகள் என்பன இலங்கையின் துறையான மாந்தையை ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாக ஆக்கியிருந்தன. அதன் செம்பு ஏற்றுமதி ஒரு மேலதிக பொருளாதாரக் கொடையாகும். மாந்தைத் துறைமுகமும் அதன் குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்த அரணும், இந்துமாகடல் வர்த்தகத்தில் அதை ஒரு முக்கிய நிலையில் அமர்த்தி அதன் செல்வச் செழிப்பிற்கும், மக்களின் வாழ்வு வளத்திற்கும் வழிவகுத்தன.
மாந்தை ஒரு பிரபலமான துறைமுக நகரமாக இருந்த காலத்தில் அதன் வெண்கலக்கால மக்கள் நெடுங்கடல் வர்த்தகர்களுடனும், சர்வதேச யாத்திரிகர்களுடனும், எதிர்க்கரையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த புதிய குடிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இது போன்ற துறைமுக மையங்கள் வழியாகவே ஆதி இரும்புக்காலப் பண்பாடு (பெருங்கற் பண்பாடு) இலங்கையை வந்தடைந்தது. தென் இலங்கையின் ராஞ்சமடமாவில் (Ranchamadama) கண்ட இரும்பு கி.மு. 1380 ஆம் ஆண்டை தேதிக் கணிப்பில் கொடுத்திருக்கிறது (Deraniyagala, S.U. 2003: p. 511). இத்திகதி சரியான கணிப்பாக இருப்பின் கி.மு. பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஆதி இரும்புக்காலம் தென்னிந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்திருக்கிறது. ஆதி இரும்புக்கால அநுராதபுரமும் மாந்தை வழியாகவே அதன் நகரமயமாக்கல் பண்பாட்டைப் பெற்றிருக்கலாம் என்பது வலுவான சாத்தியமாகிறது.
இலங்கையின் புராதனத் துறைமுக நகரமான மாந்தை ஒரு பரந்த அளவிலான செம்மையான அறிவியல் பூர்வமான தொல்லியல் அகழ்வாய்விற்கும், கதிரியக்கத் தேதிக்கணிப்பு ஆய்வுகளுக்கும் (Radiocarbon and Thermoluminescence Dating) உட்படுத்தப்பட வேண்டிய ஒரு நடுவமாகும். இப்படியான ஒரு விஞ்ஞானபூர்வமான அகழ்வை மேற்கொள்ளாவிட்டால் – மாந்தையில் மக்கள் குடியேற்றம் ஆரம்பமான காலம், பெருங்கற் பண்பாடும் வேளாண்மை விவசாயமும் வந்தடைந்த காலம், இரும்பு வந்த காலம், மாந்தைத் துறைமுக நகரைச் சுற்றிவர அரண் அமைத்த காலம் – என்பன போன்ற மாந்தை பற்றிய பலவகையான கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலேயே போய்விடும்.
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
- APTE, H.N. (ed.) (1929): Vayupurana, Poona.
- BASTIAMPILLAI, BERTRAM (2006): Northern Ceylon in the 19th Century, Godage International Publishers, Colombo.
- BAUMGARTEN, ALBERT, I. (1981): The Phoenician History of Philo of Byblos, E.J.Brill & Co., Leiden, Netherlands.
- BEGLEY, V. (1981): Excavations of Iron Age burials at Pomparippu; Ancient Ceylon Vol. 4., Colombo.
- BERTOLACCI, ANTHONY (1817): A View of the Agricultural, Commercial and Financial Interests of Ceylon.
- CARSWELL, J. & PRICKETT, M. (1984): Mantai 1980; Ancient Ceylon 5.
- CARSWELL, JOHN; DERANIYAGALA, SIRAN; GRAHAM, ALAN (2013): Mantai – City by the Sea, Linden Soft Verlag, Aichwald
- CASIE CHETTY, SIMON (1847-1848): History of Jaffna in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, 1848-1847.
- CHANMUGAM, P.K.; JAYAWARDANA, F.L.M. (1954): Skeletal Remains from Tirukketiswaram; Ceylon Journal of Science Vol.V; Part II, Colombo.
- COOMARASWAMY, A.K. (1931): Yaksas, Part I & II, Smithsonian Institute, Washington DC. (1971) Reprint, New Delhi.
- DANIELOU, ALAIN (2003): A Brief History of India; Rochester, Vermont.
- DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective; Dept. of Archaeological Survey, Colombo.
- DERANIYAGALA, S.U. (1996): Pre- and Protohistoric Settlements in Sri Lanka; Proceedings of the International Union of Prehistoric and Protohistoric Sciences, Italy, Sept. 1996.
- GEIGER, WILHELM (ed.) (1950): Mahavamsa, Colombo.
- HUVELIN, PAUL-LOUIS (1904): Mercator, Greek in Daremberg in Dictionnaire des Antiquités Grecques et Romaines, Tome Troisième, Deuxième Partie, (1969 reprint), Graz.
- INDRAPALA,K. (2005): The Evolution of an Ethnic Identity; Sydney.
- JAYAWARDENA, D.E.De.S. (1982): The Geology and Tectonic Setting of the Copper-Iron Ore Prospect at Seruwila, North East Sri Lanka: Journal of National Science Council, Sri Lanka, 10 (1), 1982: 129-142.
- KANGLE, R.P. ed. & tr.(1986): The Kautilya Arthasastra II; Delhi.
- LAW, B.C. (1925) : Dāthavamsa – Translated and Edited by B.C. Law, Motilal Banarsidas, Lahore.
- MALALASEKARA, G.P. (ed.) (1936): Mahavamsa Tika, Vol. II, PTS, London.
- MAHAVAMSA (1950): Translated and Edited by Wilhelm Geiger, Colombo.
- MAJUMDAR, R.C. (ed.) (1951): The Vedic Age, George Allen and Unwin, London.
- MARKOE, GLENN E. (1951): Phoenicians, University of California Press, Berkeley, Los Angeles.
- McCRINDLE, J.W. (1887): Ancient India as described by Megasthenes and Arrian, (Revised and Edited by R.C. Majumdar 1960 reprint), Calcutta.
- PARANAVITANA, S. (1970): Inscriptions of Ceylon, Vol. I, Dept. of Archaeology, Colombo.
- PATHMANATHAN, S. (2006): Hindu Temples of Sri Lanka, Colombo.
- PECK, H.T. (1962): Harper’s Dictionary of Classical Literature and Antiquities, New York.
- RASANAYAGAM, C. (1926); Ancient Jaffna (Reprint – New Delhi 1984).
- SANMUGANATHAN, S. (1950): ‘Excavations at Tirukketisvaram’ in PARANAVITANA, S. (ed.): Report on the archaeological Survey of Ceylon for 1950; Colombo.
- SENEVIRATNE, S. (1994): The Ecology and Archaeology of the Seruwila Copper-Magnetite prospect, Northeast Sri Lanka; in KENOYER, J.M. (ed.): Contributions to the Archaeology of South and West Asia; Wisconsin Archaeological Reports 3, University of Wisconsin, Madison.
- SITRAMPALAM, S.K. (1990): The Urn Burial Site Of Pomparippu – A Study; Ancient Ceylon No.7, Vol.2 ; Colombo.
- STONEMAN, RICHARD (2021): Megasthene’s Indica: A new Translation of the Fragments with Commentary, Routledge, UK.
- SURAVEERA, A.V. (ed.) (1976): Rajavaliya, Educational Publication Department, Colombo.
- THIAGARAJAH, SIVA (2012): Early Siva Temples of Ancient Sri Lanka, Ayothy Library Services, UK.
- THIAGARAJAH, SIVA (2016): Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE – 800 CE., Kumaran Book House, Colombo – Chennai.
- WEERAKKODY, D.P.M. (1997): Taprobane: Ancient Sri Lanka as known to Greeks and Romans; Brepols Publishers; Turnhout, Belgium.
- WHITEHOUSE, DAVID & WILLIAMSON, ANDREW (1973): Sasanian Maritime Trade; IRAN 1973, XI.
- இந்திரபாலா, கா. (2006): இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு. பொ.ஆ.மு. 300 – பொ.ஆ. 1200., குமரன் புத்தக இல்லம், சென்னை – கொழும்பு.



