ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா
ரால்ப் பீரிஸ் அவர்கள் தனக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உபயோகித்து நாட்டின் தேவைகளுக்கேற்ற முறையில் சமூகவியல் பாடநெறி ஒன்றை வகுத்து, அதனைச் செயற்படுத்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கல்வியின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.
ரால்ப் பீரிஸ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் சேர்வதும் பின்னர் அடிக்கடி பதவி விலகுவதுமாக இருந்தார். இது சமூகவியல் கல்வித்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. 1958 செப்டம்பர் மாதம் ரால்ப் பீரிஸ் ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பதவியை ஏற்று இந்தியாவில் பணி செய்வதற்காக தனது இலங்கைப் பல்கலைக்கழகப் பதவியைத் துறந்தார். பின்னர் 1961 இல் இலங்கைக்கு மீண்டும் வந்து சமூகவியல் துறையின் பேராசிரியர் பதவியை (Professor and Chair of Sociology) ஏற்றுக் கொண்டார். பின்னர் அதே ஆண்டில் தமது பதவியில் இருந்து விலகினார். இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட ‘Higher Education Act 1967’ (உயர்கல்விச் சட்டம் 1967) என்ற சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அவர் யுனெஸ்கோவில் ‘பிராந்திய அபிவிருத்தி’ (Regional Development) என்னும் விடயம் குறித்த நிபுணராகக் கடமையாற்றினார். 1972 இல் மீண்டும் சமூகவியல் துறையின் பேராசிரியர் பதவியில் இணைந்துகொண்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகி பாங்கொக் நகரில் அமைந்திருந்த ‘Asian Development Institute’ (ஆசிய அபிவிருத்தி நிறுவனம்) என்ற நிறுவனத்தில் பதவியேற்றுக் கொண்டார். செனவிரத்தின அவர்கள் ரால்ப் பீரிஸ் அவர்களை இலங்கைப் பல்கலைக்கழக முறைமையின் ‘The Most Resigned Person’ என நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார். ரால்ப் பீரிஸ் அவர்களின் புலமைத்துறை வாழ்க்கை ஓரிடத்தில் நிலைத்து நிற்காத, அங்கும் இங்குமாக இடம்மாறும் தன்மையுடையதாக இருந்தது. இதை அவர் தனது வாழ்க்கைச் சரிதக் கட்டுரையிலே குறிப்பிட்டும் இருக்கிறார். இதற்கான காரணம், ஆசியாவில் சமூகவியல், தராண்மை மறுப்பு சூழலில் (Illiberal Asian Environment) புகுத்தப்பட்டது; அச்சூழலுக்கு அவர் தன்னைத் தகவமைத்துக்கொள்ள மறுத்தார் என்று கருதலாம் (பீரிஸ், 1969). ஆயினும் இந்தியா, யப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகள் அந்தச் சூழ்நிலையையும் மீறிச் சமூகவியலில் முன்னேறியுள்ளதைக் காணலாம். இக்கட்டுரையில் நாம் இந்தியாவின் உதாரணம் குறித்துப் பின்னர் கருத்துரைக்கவுள்ளோம்.
ரால்ப் பீரிஸ் அவர்களின் செயல்திட்டங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்த இரண்டாவது விடயம் அவர் கிராமிய ஆய்வுகள் என்ற ஆய்வு அணுகுமுறைக்கு எதிரான மனப்பான்மை கொண்டவராக இருந்தமையாகும். அவரது ‘Anti-village Study’ மனப்பாங்கு காரணமாக அவர் பிறைஸ் றயான் தொடக்கி வைத்த திட்டத்தின் பயனாகத் தொடரப்பட்ட முக்கியமான மானிடவியல் ஆய்வுகளை நிராகரிக்கத் தொடங்கினார். அவரது ‘கிராமிய ஆய்வு எதிர்ப்பு’ மனப்பாங்கு அவரது பிரசித்தி பெற்ற ‘Sinhala Social Organisation: Kandyan Period (1956)’ நூலில் வெளிப்பட்டது. அவர் கண்டிய சமூகத்தை, அந்நூலில் முழுமையுடைய வரலாற்று நோக்கில் (Holistic Historical Approach) அணுக முற்பட்டார். இவற்றைவிட பிறைஸ் றயான் அவர்களோடு பீரிஸ் முரண்பட்டதற்கு இன்னொரு தனிப்பட்ட காரணமும் இருந்தது. 1951 இல் ரால்ப் பீரிஸ் சமூகவியல் துறைக்குள் நுழைவதை பிறைஸ் றயான் விரும்பவில்லை. ‘கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்த தன்னை உதவி விரிவுரையாளராகவே அவர் நியமித்தார்; விரிவுரையாளர் (Lecturer) பதவிக்கு நேரடியாக நியமிக்கவில்லை’ என்ற சந்தேகம் அவர் மனதில் இருந்துள்ளது. அவரது கட்டுரையில் இருந்து ஒரு மேற்கோள் கீழே தரப்பட்டுள்ளது.
“1951 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் தலைவராக இருந்த அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரின் எதிர்ப்புக்கு மத்தியில் நான் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டேன். தரங்கெட்ட கிராமப் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் தனக்கு வரலாற்றில் அல்லது கோட்பாட்டில் (History or Theory) விருப்பம் கிடையாது என எனக்குக் கூறினார். அவரது பிரதான நோக்கம் மாணவர்களைக் கொண்டு தரவுகளைத் திரட்டுவதற்காக (Data Collection) நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதுதான். மாணவர்களுக்கு வினாக்கொத்துகளைக் (Questionnaires) கொடுத்து தரவுகளை அவர் திரட்டுவார். இந்த வகையான அசட்டுத்தனமான அனுபவவாதத்தில் (Naïve Empiricism) சிக்கிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆராய்ச்சிக்காக எனக்கு நிதி உதவிகள் கிடைப்பதும் இல்லை. எனக்கு மட்டுமல்ல குறைவிருத்தி நாடுகளின் பெரும்பான்மையான புலமையாளர்களும் இப்பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். இது பற்றி நான் பிறிதோரிடத்திலும் குறிப்பிட்டுள்ளேன்’ (பீரிஸ், 1988: பக் – 18).
1960 ஆம் ஆண்டில் பீரிஸ் அவர்கள் ‘Ceylon Journal of Historical and Social Studies’ என்ற பருவ இதழில் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தார். இக்கட்டுரையில் அவர் எட்மன்ட் லீச் எழுதிய ‘பூல் எலிய’ (Pul – Eliya) என்ற நூல் பற்றி விமர்சனம் செய்து எழுதினார். ஒரு கிராமத்தில் நடத்திய ஆய்வின் முடிவுகளை முழுச் சமூகத்திற்கும் பொதுமைப்படுத்துதல் (Generalisation) தவறு என்ற வாதத்தை ரால்ப் பீரிஸ் முன்வைத்தார். எழுத்தறிவற்ற சமூகங்களின் (Non – literate Societies) ஆய்வு முடிவுகளை இலங்கை போன்ற எழுத்தறிவு வளர்ச்சி பெற்ற சமூகத்திற்குப் (Literate Society) பிரயோகிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். லீச் அவர்களின் இனவரைவியல் அணுகுமுறை (Ethnographic Approach) முறையியல் குறைபாடு உடையது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரால்ப் பீரிஸ் அவர்களின் விமர்சனத்திற்கு எட்மன்ட் லீச் பதிலிறுக்கும் வகையில் தமது எதிர்வினையைப் பதிவு செய்தார். தனது இனவரைவியல் அணுகுமுறை செறிவானதொரு ஆய்வு முறை (Intensive Research Method) எனவும், கள ஆய்வு மூலம் முதல் நிலைத் தரவுகள் நேரடியாகத் தனது ஆய்வின் போது பெறப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார். வரலாற்று முறை ஆய்வில் (Historical Research) ஆய்வாளர் கள ஆய்வின் போது பெறப்படுவது போன்ற முதல் நிலைத்தரவுகளைப் பெற முடியாது. ஆய்வாளருக்கு இரண்டாம் நிலைத் தரவுகளே (Secondary Data) கிடைக்கின்றன. அவை நம்பத்தகுந்தனவல்ல என லீச் விளக்கம் அளித்தார்.
ரால்ப் பீரிஸ் அவர்களுக்கும் எட்மன்ட் லீச் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இவ்விவாதம் ஓர் உண்மையைத் தெளிவுபடுத்தியது. ஆய்வாளர்கள் குறிப்பிட்டதொரு ஆய்வு முறைதான் சரியானது என்று கூறி அம்முறையிலேயே மிகையான அக்கறையைச் செலுத்துவதை விட்டு, வெவ்வேறு ஆய்வு முறைகளின் குறைநிறைகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பொருத்தமான முறையியலைத் தேர்ந்துகொள்ள வேண்டும். இலங்கைச் சமூகத்தின் சமூக மெய்மையை (Social Reality) நன்கு புரிந்துகொள்வதற்குரிய சிறந்த முறையியலாக ரால்ப் பீரிஸ் அவர்களின் வரலாற்று முறையியல் வகுக்கப்படவில்லை. ஆகையால் கிராமிய ஆய்வுகளின் அனுபவவாத அணுகுமுறை (Empirical Approach) பயனுள்ள மாற்று முறையியலாக அமைந்ததை மறுப்பதற்கு இயலாது.
கணநாத் ஒபயசேகர

இலங்கையின் முதல் தலைமுறைச் சமூகவியலாளர்கள்/ மானிடவியலாளர்கள் வரிசையில் கணநாத் ஒபயசேகர அவர்கள் முக்கியமானதொரு இடத்தைப் பெறுகின்றார். அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக கற்றுப் பட்டம் பெற்றவர். 1955 ஆம் ஆண்டு அவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். 1956 முதல் 1959 வரை அவர் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று மானிடவியலில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 1959 இல் அவர் இலங்கைக்குத் திரும்பி வந்து, சமூகவியல் பிரிவில் உதவி விரிவுரையாளராக இணைந்துகொண்டார். அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் (பேராதனை) சமூகவியல் பிரிவில் சேர்ந்த போது அப்பிரிவு சிறந்த நிலையில் இருந்தது. ரால்ப் பீரிஸ், எஸ்.ஜே. தம்பையா, லக்சிறி ஜயசூரிய ஆகிய மூவர் அங்கே கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரும் புதிதாக கலாநிதிப் பட்டங்களைப் (Ph.D) பெற்ற புலமையாளர்களாக இருந்தனர். அவர்களோடு இணைந்துகொண்ட கணநாத் ஒபயசேகர சமூகவியல் பிரிவை சிறப்புமிக்க நிலைக்கு உயர்த்துவதற்கு உதவினார். குறிப்பாக ஒபயசேகரவும், எஸ்.ஜே. தம்பையாவும் மானிடவியல் கல்வியின் மேம்பாட்டிற்கு அரும்பணியாற்றினர். மாத்தளை மாவட்டத்தின் ‘லக்கல பள்ளேகம’ (Laggala Pallegama) என்னும் ஒதுக்குப்புறமான பிராந்தியத்தில் இனவரைவியல் ஆய்வைக் களப் பணிமூலம் ஆரம்பித்தனர். கணநாத் ஒபயசேகர பட்டதாரி மாணவனாக ஆங்கில இலக்கியத்தைப் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே இலங்கையின் கிராமங்கள் பலவற்றிற்குச் சென்று பத்தினி வழிபாடு பற்றிய தகவல்களைத் திரட்டிய அனுபவம் உடையவர். இக்காரணத்தால் அவர் மானிடவியலில் பின்பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆர்வமுடையவராக இருந்தார். அவரின் இந்த ஆர்வத்தை தூண்டி வளர்த்த ஆங்கிலப் பேராசிரியர் லுடொவைக் (Ludowyk) ஊக்கமும் ஆதரவும் வழங்கினார். 1960 ஆம் ஆண்டு கணநாத் ஒபயசேகர வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிச் சென்று அங்கு 1964 ஆம் ஆண்டு வரை கலாநிதிப்பட்ட ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார். அவர் வாஷிங்டன் செல்வதற்கு முந்திய குறுகிய காலத்திற்குள் சமூகவியல் மாணவர்களுக்கு, தென்னாசியாவின் சமூகவியல் (Sociology of South Asia), சமயத்தின் சமூகவியல் (Sociology of Religion) ஆகிய இரு பாடங்களைக் கற்பித்தார். இவ்விரு பாடங்களின் படிப்பை அவரே தொடக்கி வைத்தார். 1956 இல் அவர் கலாநிதிப் பட்டப் படிப்பை முடித்துத் திரும்பிய போது ‘இலங்கைப் பல்கலைக்கழகம் – பேராதனை’ என்ற பெயர் மாற்றம் பெற்று, பேராதனை வளாகம் தனித்த பல்கலைக்கழகமாக இயங்க ஆரம்பித்திருந்தது. இவர் பணியாற்றிய காலத்தில் இக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான காலிங்க ரியுடர் டி சில்வா, அவரின் மாணவராகக் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். ஒபயசேகரவின் கற்பித்தல் முறையினால் அவரது மாணவர்கள் பெரிதும் கவரப்பட்டனர். அவர் இலங்கைச் சமூகமும் பண்பாடும் குறித்த புதிய பார்வையை வழங்கினார். உலகமட்டத்தில் சமகாலத்தில் நடைபெறும் புதிய ஆய்வுகளையும், விவாதங்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் அடிக்கடி உலகின் பல்வேறு இடங்களுக்கும் ஆய்வுகள் தொடர்பாகப் பிரயாணம் மேற்கொண்டபடி இருந்தார். இதனால், மாணவர்களுக்கு அவரைச் சந்திப்பதே அரிதானதாக இருந்தது. ஆயினும் பேராதனைக்கு திரும்பி வந்து பணியாற்றும் சந்தர்ப்பங்களில் மாணவர்களோடும், பிற ஆய்வாளர்களோடும் நெருக்கமாக உறவாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் மாணவர்களுக்கு மஞ்சள் தாளில் அச்சிட்ட விரிவுரைக் குறிப்புகளை விநியோகிப்பார். இவ்விரிவுரைக் குறிப்புகளால் மாணவர்கள் பெரும் பயன் பெற்றனர்.

கவர்ச்சிமிக்க ஆளுமையையும், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் அறிவாளி என்ற புகழையும் பெற்றிருந்த ஒபயசேகர, சமூகவியல் கல்வியின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகள் போற்றுதற்குரியன. நாட்டார் சமயம், ஆயுர்வேத வைத்தியம், அரசியல் வன்முறை, தேசியவாதம் எனப் பல்வேறு புதிய துறைகளில் ஆய்வுகளை அவர் நிகழ்த்தினார். அவர் ஆய்வு முறையியலில் பண்பியல் ஆய்வினைப் (Qualitative Research) புகுத்தினார். மக்ஸ் வெபர், சிக்மன்ட் பிராய்ட் ஆகியோரின் கோட்பாடுகளையும், அண்மைக்காலத் தோற்றப்பாட்டியல் கோட்பாட்டாளர்களின் (Phenomenological Theorists) கருத்துகளையும் தன் ஆய்வுகளில் பிரயோகித்தார். சமூக யதார்த்தத்தை (Social Reality) சரியாகப் புரிந்துகொள்வதற்கேற்ற கோட்பாட்டு மாதிரிகளை (Theoretical Models) அவர் அறிமுகம் செய்தார். சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற ஆய்வாளர்களாக வெளிநாடுகளில் பணிபுரிந்த இலங்கை ஆய்வாளர்களுள், தமது பணி ஓய்வின் பின்னர் இலங்கைக்குத் திரும்பி வந்து, இலங்கையில் நிரந்தரமாக வாழ்ந்து தம் பணியைத் தொடர்ந்தவர்களில், கணநாத் ஒபயசேகரவும் ஒருவராவார். அவர் சிங்கள சமூகத்தின் சமூக வரலாற்றைக் (Social History) கூறும் ஏட்டுச்சுவடிகளையும் பழைய நூல்களையும் (இவை ‘Kadaim and Vitti Pot’ என்ற சொற்களால் அழைக்கப்படுவன) ஆராய்ந்து ஆய்வுகளை வெளியிட்டார். ஊவா – வெல்லச பகுதிகளின் ‘வேடர் சமூகம்’ (VĀDDA) பற்றியும் முக்கியமான நூல் ஒன்றை இவர் வெளியிட்டார். கணநாத் ஒபயசேகரவின் ஆய்வுகள் சமூகப் பிரச்சினைகள், குறைவிருத்தி, இளைஞர் அமைதியின்மையும் கிளர்ச்சிகளும் ஆகியவற்றுக்கான தீர்வுகள் பற்றியனவாக அமையாமல், சமூக பண்பாட்டு உலகம் (Social and Cultural World) பற்றிய புரிதலை இலக்காகக் கொண்டமைந்தன.

இலங்கையின் முதல் தலைமுறைச் சமூகவியலாளர்களின் வெளியேற்றம்
1950களில் இலங்கையின் சமூகவியலாளர்கள் பலர் மேற்கு நாடுகளை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். இவ்வாறு ஆரம்பித்த சமூகவியலாளர்களின் வெளியேற்றம் (Exodus) தென்னிலங்கையில் 1970களில் ஏற்பட்ட இளைஞர் கிளர்ச்சிகள், அவற்றைத் தொடர்ந்து 1980களில் ஆரம்பித்த யுத்தம் என்பனவற்றால் வேகம் பெற்றது. சமூகவியல் துறையை விட்டு வெளியேறிச் செல்லுதல் 1950 – 1980 காலத்தில் வெளிப்படையாகப் புலப்பட்ட ஒரு விடயமாக இருந்தது. இலங்கையின் முக்கிய சமூகவியலாளர்கள் அனைவருமே நாட்டை விட்டு வெளியேறி, இக்காலத்தில் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பிற இடங்களிலும் பதவிகளைப் பெற்றுக்கொண்டனர். இது ஏன் நிகழ்ந்தது? இதனால் இலங்கையில் சமூகவியல் கல்விக்கு ஏற்பட்ட இழப்பு எத்தகையது என்பது பற்றி முறையாக இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. ரால்ப் பீரிஸ் அவர்கள் தாம் ஏன் வெளியேறினேன் என்பது பற்றி அவரின் நினைவுக் குறிப்புகளாக அமைந்த கட்டுரையில் (1998) குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என்போருக்குக் கிடைக்கும் சம்பளம் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு எனவும், தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடும் போது கூட இலங்கையில் பல்கலைக்கழகப் புலமையாளர்களின் சம்பளம் குறைவு எனவும், தாம் வெளியேறியதற்கு அதுவும் ஒரு காரணம் எனவும் ரால்ப் பீரிஸ் குறிப்பிட்டார். இலங்கையில் சிங்கள, தமிழ் தேசியவாதங்கள் மிகத்தீவிரமாக எழுச்சி பெற்றன; இளைஞர் கிளர்ச்சிகளும் ஏற்பட்டன. பல்கலைக்கழக நிர்வாகம் அரசியல் மயப்படுத்தப்பட்டது. இவையும் விரிவுரையாளர்களதும், பேராசிரியர்களதும் வெளியேற்றத்துக்கு காரணங்களாகும். தம்பையா அவர்கள் 1958 இல் கல்லோயாவில் கலகம் ஏற்பட்ட போது அதில் சிக்கிக் கொண்டார். அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவம், அவரின் மனதில் பெரும் தாக்கத்தை எற்படுத்தியிருந்தது. 1986 இல் பிரச்சினைகள் அதிகரித்த போது தம்பையா நாட்டை விட்டு வெளியேறினார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்தியல் ரீதியான அதிதீவிர மோதல்கள் இடம்பெறும் சூழ்நிலையில் புறநிலையான சமூக ஆய்வுகளைச் செய்வதற்கான அறிவியல் சுதந்திரம் (Intellectual Freedom) இருப்பதில்லை என்பதை சமூகவியலாளர்களின் வெளியேற்றம் எடுத்துக்காட்டியது.
நாட்டை விட்டு வெளியேறிய சமூகவியலாளர்களில் பலர், இலங்கை பற்றிய ஆய்வுகளில் தமக்கிருந்த ஆர்வத்தைத் தொடர்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. அவர்கள் வெளிநாடுகளில் தமக்குக் கிடைத்திருந்த நிதி வளங்களைப் பயன்படுத்தி இலங்கை பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்தனர். இதனை விட வெளிநாடுகளில் இருந்த ஆய்வாளர்களுக்குக் கிடைத்த தாரண்மைவாதச் சூழ்நிலையின் (Liberal Atmosphere) சுதந்திரம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் துணையாக அமைந்தது. உதாரணமாக கணநாத் ஒபயசேகர, ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இலங்கை பற்றிய திருப்பு முனையான ஆய்வுகள் பலவற்றை வெளியிட்டார். 1970கள் தொடக்கம் வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய தேசங்களின் பல்கலைக்கழகங்களில் இலங்கையின் சமூகவியலாளர்களும், வெளிநாட்டு அறிஞர்களும் இணைந்து அரிய பல ஆய்வுத் திட்டங்களைச் செயற்படுத்தி இலங்கை பற்றிய ஏராளமான ஆய்வுகளை வெளியிட்டு வளம் சேர்த்தனர். எலிசபெத் நிசான் அவர்களின் ஆய்வுக் கட்டுரையொன்றில் (1987) இது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. வேறு பல ஆய்வாளர்களும் இது பற்றி எழுதியுள்ளனர்.
இலங்கையின் சமூகவியலாளர்களாலும், வெளிநாட்டு அறிஞர்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட இச்சமூகவியல் அறிவு இலங்கையில் பெரும் தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கையில் பொதுவாக உயர் கல்வியின் தரம் தாழ்ந்து வருவதும், ஆய்வுகளின் தராதரம் வீழ்ச்சியடைவதும் ஒரு காரணம் ஆகும். புதிய தலைமுறைக் கல்வியாளர்கள் பலருக்குப் போதிய ஆங்கிலப் புலமை இன்மையால் அவர்களுக்கு இந்த உயராய்வுகளைப் படித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கவில்லை. சுசந்த குணதிலக போன்ற தீவிர தேசியவாதிகள் மேற்கத்தைய ஆய்வாளர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதிலும், அவ்வாய்வுகளைக் கொச்சைப்படுத்துவதிலும் ஈடுபட்டனர். இதனால் அவ்வாய்வுகள் கவனிக்கப்படாமல் போயின.
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் 1980 இற்கு முற்பட்ட காலத்தில் பயிற்றுவிக்கப்பட்ட சமூகவியலாளர்கள் போதிய எண்ணிக்கையில் இருக்கவில்லை. இதனால், பிறதுறைகளைச் சேர்ந்தோர் பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் சமூகவியல் துறையை நிர்வகித்து, சமூகவியல் பாடநெறிகளை அப்பல்கலைக்கழகங்களில் நடத்துவதற்கு உதவினர். இவர்களுள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் திலக். ஹெட்டி ஆராய்ச்சி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் W.M. சிறிசேன, சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நந்தசேன ரட்ணபால, றுகுணு பல்கலைக்கழகத்தின் M.U.A. De சில்வா ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1969 இல் சமூகவியல் துறை தாபிக்கப்பட்டது. மல்சிறி டயஸ், I.V எதிரிசிங்க ஆகிய இருவரும் இத்துறையைப் பொறுப்பேற்று வழிநடத்தினர். பின்னர் லக்சிறி ஜயசூரிய இத்துறையின் முதலாவது பேராசிரியராக நியமனம் பெற்றார். ‘சமூகக்கொள்கையும் சமூக நலனும்’ (Social Policy and Social Welfare) என்னும் சிறப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான லக்சிறி ஜயசூரிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் வளர்ச்சிக்கு உதவினார். அவர் சில ஆண்டுகள் கழிந்த பின் பதவியில் இருந்து விலகி மேற்கு அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றச் சென்றார். 1977-1978 காலத்தில் ரால்ப் பீரிஸ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பின் உடல்நலக் குறைவு காரணமாக 54 வயதிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் புதிய தலைமுறையைச் சேர்ந்த மூவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையை பலமான அடித்தளத்தில் கட்டமைப்பதற்கு உதவினர். யோ. வீரமுன்ட (Joe Weeramunda) நியுடன் குணசிங்க, I.V எதிரிசிங்க ஆகியோரே அம்மூவராவார். யோ. வீரமுன்ட ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுப் பட்டம் பெற்ற பின்னர், ஐக்கிய அமெரிக்காவிற்குச் சென்று மானிடவியலைக் கற்று அத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுத் திரும்பினார். அவர் 1977 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘சமூகவியலும் சமூக நலனும்’ துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து கொண்டார். நியுடன் குணசிங்க சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவரும் இக்காலத்தில் இலங்கைக்கு திரும்பி வந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அவர் இலங்கையில் சமூகம் பற்றிய பகுப்பாய்வில் மார்க்சிய வரைசட்டத்தைப் (Marxist Framework) புகுத்தினார். இலங்கையில் செயல்வாதமும் வெபரியமும் சார்புடைய வரைசட்டங்கள் (Functionalist and Weberian Frameworks) நன்கு வேரூன்றி இருந்த பின்புலத்தில் நியுடன் குணசிங்கவின் மார்க்சிய ஆய்வுகள் புதிய திருப்பமாக அமைந்தன. அவர் 1970களின் பிற்பகுதியில் சமூகவியல் துறையில் இணைந்து கொண்டார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்தபோது 1988 இல் அவர் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் ஓர் பேரிழப்பாகும். தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பல புலமையாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் யாவரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சமூகவியலையும் மானிடவியலையும் கற்று உயர் பட்டங்களைப் பெற்றவர்களாய் உள்ளனர்.

1980கள் தொடக்கம் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் கல்வி துரிதமாக விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைதல்
1980க்குப் பிந்திய காலத்தில் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் சமூகவியலுக்கும், மானிடவியலுக்குமான கல்வித்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு அவை விரிவாக்கம் பெற்றன. இதனால், பல நன்மைகள் விளைந்தன. பொதுக் கலைப்பட்ட வகுப்பில் சமூகவியலை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்கள், அதனைச் சிறப்புப் பாடமாகக் கற்போர், பின்பட்ட ஆய்வு மாணவர்கள் என மூன்று நிலைகளிலும் மாணவர்கள் தொகை அதிகரித்தது. இப்பாடநெறிகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்னும் மும்மொழிகளிலும் நடத்தப்பட்டன. பின்பட்டப் படிப்பை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்ற விரிவுரையாளர்கள் பலர் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றத் தொடங்கினர். சமூகவியல் கல்வி கிளை பிரிந்து பல்துறை சார்ந்ததாக வளர்ச்சி பெற்றதோடு மாணவர்கள் மத்தியில் விருப்புக்குரிய கற்கைத் துறையாயிற்று. இளைஞர் கிளர்ச்சி, இனக்கலவரங்கள், குற்றச் செயல்கள் அதிகரித்தல், பிறழ்வு நடத்தை ஆகிய சமூகப் பிரச்சினைகள் பற்றிச் சமூகவியல் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் இத்துறை கல்வியால் ஈர்க்கப்பட்டனர். சிறி ஹெட்டிகே (Siri Hettige) 1981 ஆம் ஆண்டில் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பதவி நியமனம் பெற்றார். பின்னர் இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு இடம் மாறினார். சிறி ஹெட்டிகே அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலிலும் மானிடவியலிலும் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர். அதேபோன்று காலிங்க ரியுடர் சில்வா அவர்களும் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மானிடவியல் ஆகிய இருபாடங்களையும் கற்றுக் கலாநிதிப் பட்டம் பெற்றார். அவர் 1982 ஆம் ஆண்டு நாடு திரும்பினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பதவியேற்றார். இவ்விருவரும் குறிப்பிடத்தக்கவொரு மாற்றத்தைத் தொடக்கி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து பலர் இவ்வாறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெற்ற பயிற்சியுடன் நாடு திரும்பி விரிவுரையாளர் பதவிகளை ஏற்றனர்.
1980களில் சமூக ஆராய்ச்சியில் (Social Research) ஈடுபட்ட ஆய்வாளர்களின் கவனம் பழைய மரபுவழிப்பட்ட விடயப் பொருட்களான இரத்த உறவுமுறை (Kinship), சாதி, நில உரிமை, சமயம் ஆகிய விடயங்களை விடுத்துப் புதிய விடயங்களான இனத்துவம் (Ethnicity), பாலினம் (Gender), தேசியவாதம் ஆகியவற்றின் மீது திரும்பியது.
இவ்வாறு சமூகவியல் ஆய்வின் விடயப்பரப்பு விரிவாக்கம் பெற்றதோடு, 1980 இற்குப் பிந்திய காலத்தில் சமூகவியலைப் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களின் தொகையும் அதிகரித்தது.
அட்டவணை 1
இலங்கையின் பல்கலைக்கழகங்களின் சமூகவியல் துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 1987/88 மற்றும் 2021
| பல்கலைக்கழகம் | ஆசிரியர்கள் | விகிதாசார உயர்வு | |
| 1987/88 | 2021 | ||
| கொழும்பு பல்கலைக்கழகம் | 11 | 23 | 109 |
| கிழக்குப் பல்கலைக்கழகம் | N.A | 6 | – |
| யாழ்ப்பாணம் | 2 | 6 | 209 |
| களனி | 2 | 12 | 500 |
| பேராதனை | 13 | 19 | 46 |
| ரஜரட்ட | N.A | 8 | – |
| உருகுணை | 4 | 13 | 225 |
| சப்பிரகமுவ | N.A | 12 | – |
| தென்கிழக்குப் பல்கலைக்கழகம் | N.A | 5 | – |
| சிறி ஜெயவர்த்தனபுர | 7 | 11 | 57 |
| மொத்தம் | 39 | 115 | 195 |
அட்டவணை 2
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சமூகவியலைக் கற்கும் மாணவர்கள் தொகை
| பல்கலைக்கழகம் | பட்டப்படிப்பு (B.A) | பின்பட்டப்படிப்பு | ||
| 1987/88 | 2021 | 1987 | 2021 | |
| கொழும்பு பல்கலைக்கழகம் | 176 | 482 | 15 | 95 |
| கிழக்குப் பல்கலைக்கழகம் | N.A | 816 | N.A | N.A |
| யாழ்ப்பாணம் | 26 | 400 | N.A | 6 |
| களனி | 65 | 587 | N.A | 358 |
| பேராதனை | 750 | 1000 | 24 | 300 |
| ரஜரட்ட | N.A | 945 | N.A | N.A |
| உருகுணை | 169 | 251 | – | – |
| சப்பிரகமுவ | N.A | 140 | N.A | 5 |
| தென்கிழக்குப் பல்கலைக்கழகம் | N.A | 500 | N.A | N.A |
| சிறிஜெயவர்த்தனபுர | 601 | 1134 | 15 | 271 |
| மொத்தம் | 2396 | 5121 | 54 | 1035 |
(N.A – தகவல் இல்லை.)
இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் 1987க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் சமூகவியல்/ மானிடவியல் துறைகளின் ஆசிரியர்கள் தொகையில் 200% அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த அதிகரிப்பு பேராதனையில் 46% ஆகவும், களனிப் பல்கலைக்கழகத்தில் 500% ஆகவும் இடத்திற்கிடம் வேறுபட்டது. 1987/88 காலத்திற்குப்பின் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களான கிழக்குப் பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், சப்பிரகமுவ பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களிலும் சமூகவியல் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்புதிய பல்கலைக்கழகங்களில் சமூகவியலைக் கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை இருந்தபோதும் இப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுச் செயற்பட்டன. பழைய பல்கலைக்கழகங்களான பேராதனை, கொழும்பு, சிறி ஜயவர்த்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் சிலர் இப்புதிய பல்கலைக்கழகங்களின் சமூகவியல் துறைகளில் சேர்ந்து கொண்டனர்.
சமூகவியலை பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் தொகை 1987/88 இல் 2396 ஆக இருந்தது. 2021 இல் இத்தொகை 5121 ஆக அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 1147 வீதமாகும். பேராதனையில் 750 ஆக இருந்த மாணவர் தொகை 1000 ஆகவும் (33% அதிகரிப்பு), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 26 ஆக இருந்த தொகை 400 ஆகவும் (1438% அதிகரிப்பு) உயர்ந்தது. சமூகவியல் பின்பட்டப் படிப்பு மாணவர்களின் தொகையில் இக்காலத்தில் 1817% அதிகரிப்புக் காணப்பட்டது. களனி, பேராதனை, சிறி ஜயவர்த்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கூடியதொகை மாணவர்கள் சமூகவியல் பின்பட்டப் படிப்புக் கல்வியை மேற்கொண்டனர்.
மேலே அட்டவணை 2 இல் தரப்பட்ட மாணவர் தொகை பற்றிய புள்ளிவிவரங்கள் 1987/88க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் சமூகவியலைக் கற்கும் மாணவர்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருந்ததைக் காட்டுகிறது. இக்காலத்தில் பல்கலைக்கழகங்கள் வெளிவாரி பட்டப்படிப்பை நடத்தின. இதனால், சமூகவியலை ஒரு பாடமாக கற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலே தரப்பட்ட புள்ளவிபரங்களில் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.பல்கலைக்கழகங்களில் சமூகவியல் ஆசிரியர்கள் பின்பட்டப் படிப்பை வெளிநாடுகளில் மேற்கொண்டனர். அவர்களுக்குக் கற்பித்தலில் உயர்தரப் பயிற்சியைப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் கல்வியின் தரம் அண்மைக்காலத்தில் உயர்ந்துள்ளது. ஆயினும் உயர்தரமான ஆய்வு வெளியீடு (Research Output) பல்கலைக்கழகங்களில் இடம்பெறவில்லை. 1960களிலும் 1970களிலும் இலங்கையின் சமூகவியலாளர்களின் ஆய்வு வெளியீட்டுடன் இக்கால ஆய்வுகளை ஒப்பிட முடியாது. இதனைப் பிரசுரமாகும் நூல்கள், கட்டுரைகளின் அளவையும் தரத்தையும் கொண்டு மதிப்பிடலாம்.
2000 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் கல்வி இலங்கையின் பல்கலைக்கழகங்களில் உறுதிநிலை பெறுதல்
கடந்த 20 ஆண்டுகாலத்தில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் கல்வி உறுதிநிலையைப் பெற்றது. இதற்குப் பல சாதகமான காரணங்கள் இருந்தன. பல்கலைக்கழகங்களின் சமூகவியல் விரிவுரையாளர்கள் உயர்தரமான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்று பின்பட்டப் படிப்புப் பயிற்சியைப் பெற்றமை முதலாவது காரணமாகும். இரண்டாவதாக புதிய பாடங்களான பெண்ணியம் (Feminism), அரசியல் சமூகவியல் (Political Sociology), இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies), தேசியவாதம் (Nationalism), பிரயோகச் சமூகவியல், ஊடகக் கற்கைகள் (Media Studies), சமூகவேலை (Social Work) ஆகியன கற்பிக்கப்பட்டன. அப்பாடங்கள் கொழும்பு, பேராதனை, களனி ஆகிய பல்கலைக்கழகங்களின் சமூகவியல் கலைத்திட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆயினும் சமூகவியல் மாணவர்களுக்கு சமூகசேவை நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இலங்கையில் அரிதாகவே காணப்படுகிறது. சமாதானமும் முரண்பாடுகளைத் தீர்வு செய்தலும் (Peace and Conflict Resolution Studies) என்னும் புதிய பாடநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையினால் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று விரிவுரையாளர்கள் சுவீடனின் ஹோதன்பார்க் பல்கலைக்கழகத்தில் (Gothenburg University in Sweden) கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்பினர். பேராதனையில் ‘சமாதானமும் முரண்பாடுகளின் தீர்வும்’ என்னும் விரிந்த துறைசார்ந்த புதிய பாடநெறிகள் பட்டப்படிப்பு நிலையிலும், பின் பட்டப்படிப்பு நிலையிலும் கற்பிக்கப்படுகின்றன.
சமூகத்திற்கு சமூகவியல் கல்வியின் பங்களிப்பு
சமூகவியல் கல்வி இலங்கைச் சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் நன்மையளித்துள்ளது.
- இளைஞர் கிளர்ச்சி, இனத்துவ வன்முறை (Ethnic Violence), சமூக அடுக்கமைவு (Social Stratification), பண்பாட்டிலும் சமூகத்திலும் தேசியவாதத்தின் மிகையான ஆதிக்கம் என்பன குறித்துப் பயனுள்ள ஆய்வுகள் வெளியிடப்பட்டன. ஆயினும் சமூகவியல் துறையின் அறிவு உற்பத்தி (Knowledge Production) சீரான நேர்ப்போக்கில் தொடர்ச்சியாகச் சென்றதாகக் கூறமுடியாது. பல குறைபாடுகள் இருந்து வருகின்றன.
- சமூகவியலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பாடமாகக் கற்றவர்கள் பலர் இலங்கையின் நிர்வாக சேவையில் சேர்ந்து பல உயர் பதவிகளைப் பெற்றனர். இவ்வாறு இலங்கை அரச சேவையில் உயர் பதவிகளைப் பெற்ற முதற் தலைமுறையினருள் பிரட்மன் வீரக்கோன், சரத் அமுனுகம, தனேகன் காசிச்செட்டி, P. கபிலதர்ம பத்திரான விமலதர்ம ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களாவர்.
- சமூகவியலைச் சிறப்புப் பாடமாகப் பல்கலைக்கழகங்களில் கற்றவர்களில் பலர் ஆய்வு நிறுவனங்களில் ஆய்வாளர்களாகச் சிறப்புடன் கடமையாற்றுகின்றனர். ஹெக்டர் கொப்பேகமுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவகம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES), வறுமை பற்றிய ஆய்வுக்கான நிறுவகம் (Centre for Poverty Analysis), பெண்கள் ஆய்வு நிறுவகம் (Centre for Women’s Research) என்பன இதற்கு உதாரணங்களாகும்.
- சமூகவியல் பட்டதாரிகளில் பலர் சிவில் சமூக நிறுவனங்களில் உயர்நிலைப் பதவிகளை வகித்து வருவதைக் காண முடிகிறது. ‘Save the Children’, தேசிய சமாதான கவுன்சில், இலங்கை சர்வோதய இயக்கம் என்பன இதற்கு உதாரணங்களாகும்.
அரசியல், தனியார் துறை, சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றில் சமூகவியல் பட்டதாரிகளின் பங்களிப்பு பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை.
ஆய்வுக்கான விடயப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் புதுமையாக்கம் (Thematic Innovation) சமூகவியல் துறையில் இடம்பெறுவது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. 1980 வரையான ஆய்வுகளில் சமூகவியலாளர்கள் இரத்த உறவு முறை (Kinship), நில உரிமை (Land Tenure) போன்ற பிரச்சினைகளிலும், சமயம், சாதி ஆகிய விடயங்களிலும், கவனம் செலுத்தினர். இவ்விடயங்கள் பற்றிய ஆய்வுகள் உலக மட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் எதிரொலியாகவும் அமைந்தன என எலிசெபெத் நிசான் (1987) குறிப்பிட்டுள்ளார். 1980களுக்குப் பிற்பட்ட காலத்தில் ஆய்வாளர்களின் ஆய்வு விடயப்பொருள் (Research Theme) நடைமுறை வாழ்வையும் அரசியலையும் சார்ந்தனவாக அமைந்தன. ஆய்வாளர்கள் பலர் அரசியல் வன்முறை, தேசியவாதம் என்ற இரு விடயங்கள் பற்றிப் பயனுள்ள ஆய்வுகளை வெளியிட்டனர். சசங்க பெரேரா, பிரதீப் ஜெகன்நாதன், யொனதன் ஸ்பென்சர், நியுடன் குணசிங்க, ஜனி டி சில்வா, சரிகா திறனகம ஆகியோர் இவ்விரு விடயங்கள் பற்றி எழுதியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களாவர். பாலினம்சார் பிரச்சினைகள் (Gender Issues) பற்றி மாலதி டி அல்விஸ் சந்தியா ஹேவமன்ன போன்றோர் ஆய்வுகளை வெளியிட்டனர். சமயமும் அரசியலும் பற்றி கணநாத் ஒபயசேகர, எஸ்.ஜே. தம்பையா, றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், டேவிட் ஸ்கொட் (David Scott) பிரேமகுமார டி சில்வா ஆகியோர் எழுதினர். ‘கலையும் காட்சியும்’ (Art and Visuality) போன்ற புதிய விடயங்களை சசங்க பெரேரா போன்ற சிலர் சமூகவியலுக்கு அண்மைக்காலத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
சர்வதேச மட்டத்தில் இலங்கையை மையமாக வைத்துச் செய்யப்பட்ட சமூகவியல் ஆய்வுகளின் அறிவுப் பங்களிப்புப் பற்றி அடுத்து நோக்குவோம். இலங்கை மையச் சமூகவியல் ஒன்று (Sri Lanka Centric Sociology) இலங்கையில் உருவாகியது. இந்த வரலாற்றை நாம் இருகோணங்களில் பார்த்தல் வேண்டும். இலங்கையர்களும், பிற நாட்டவர்களுமான சமூகவியலாளர்கள் சமூகவியல் ஆய்வுகளுக்கான களமாக இலங்கையைத் தேர்ந்து ஆய்வு செய்தனர். அது சர்வதேச நிலைப்பட்ட அறிவு உற்பத்திக்கான பங்களிப்பாக அமைந்தது என்று கூறலாம்.
இலங்கையில் சமூகவியல், மானிடவியல் பற்றிய ஆய்வுகளின் முன்னோடிகள் எனக் கூறத்தக்கவர்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். இக்கட்டுரைகள் காலனி ஆட்சிக்காலத்தில் இலங்கை ஆசிய வேத்தியல் சங்கம் (Royal Asiatic Society) என்ற அமைப்பின் பருவ இதழில் (Journal) பிரசுரிக்கப்பட்டன. இவர்களில் பலர் பயிற்சி பெற்ற சமூகவியலாளர்கள் அல்லர்; இவர்களுக்கு மானிடவியலிலும் பயிற்சி கிடையாது. இவர்கள் இலங்கையின் பண்பாட்டில் அக்கறையுடையவர்களாய் இருந்தனர். பலர் காலனிய அரசாங்க அதிகாரிகளாக இருந்தனர். இவர்களின் ஆய்வுகள் பிராந்திய அளவிலும், உலக அளவிலும் (அதாவது தென்னாசியாவிலும், பிரித்தானியக் காலனிகளை உள்ளடக்கிய மூன்றாம் உலகிலும்) அறிவியலுக்குப் பங்களிப்பாக அமைந்தன. இனவரைவியல் (Ethnography) என்ற வகையில் அமையும் முழுமையான நூலை சாள்ஸ் மற்றும் பிரண்டா செலிக்மான் (Charles and Brenda Seligmann) எழுதினார்கள். இவர்களின் ‘இலங்கையில் வேடர்கள்’ (The Vāddas of Ceylon) என்ற நூல் 1921 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதேவகையில் அமைந்த இனவரைவியல் நூலான ‘Handsome Beggars: The Rodiyas of Ceylon’ என்ற நூலை எம்.டி. ராகவன் என்ற இந்திய அறிஞர் எழுதினார். ராகவனின் ‘ரொடியா’ சாதி பற்றிய இந்த ஆய்வு 1957 இல் பிரசுரமானது. ஜேம்ஸ் பிறோவ் (James Brow) வேடர்கள் பற்றியும் (1978), டெனிஸ் மக்ஜில்வ்றே கிழக்குக் கரையோரத் தமிழர்களும் முஸ்லிம்களும் பற்றியும் (2008), ஸ்ரிறற் (R.L. Stirrat) சிங்களக் கத்தோலிக்கர் பற்றியும் (1992) ஆய்வு நூல்களை வெளியிட்டனர். இவை யாவும் வெளிநாட்டவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகளாகும். இவை போன்ற இனவரைவியல் ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இவை போன்ற ஆய்வுகள் மட்டும் எதிர்காலச் சமூகவியலை சரியான வழித்தடத்தில் நடத்திச் செல்ல முடியாது. ஆகையால் சமூகவியல் ஆய்வுகள் தொடர்பான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு பல்நோக்கு முறையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வழிசெய்யப்பட வேண்டும்.
எதிர்நோக்கும் சவால்கள்
இலங்கையில் சமூகவியல் கல்வியும் ஆராய்ச்சியும் வளர்ச்சியுற்ற வரலாற்றை மேற்குறித்தவாறாக பகுப்பாய்வு செய்யும் கட்டுரையாசிரியர்களான காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா ‘எதிர்நோக்கும் சவால்கள்’ (Challenges Ahead) என்ற உபதலைப்பின் கீழ் சமூகவியல் கல்வியும் ஆய்வும் இன்று எதிர்நோக்கும் சவால்களை மூன்று பக்கங்களில் (பக். 111-113) விரிவாக விளக்கிக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதன் சுருக்கம் கீழே தரப்படுகிறது.
1. சமூகவியலாளர்களின் வெளியேற்றம்
இலங்கையின் முதல் தலைமுறை முன்னோடிகளான சமூகவியலாளர்கள் பலரின் வெளியேற்றத்தின் பயனாக ஏற்பட்ட வெற்றிடம் முழுமையாக இன்றும் நிரப்பப்படவில்லை.
2. நிதிவளப் பற்றாக்குறை
சமூகவியல் ஆய்வுகளுக்கு அரசநிதி உதவி கிடைப்பதில்லை; தனியார் நிதி உதவிகளும் கிடைப்பதில்லை. இதனால் பருவ இதழ்கள் (Journals) தொடர்ச்சியாக வெளியிடப்படுவதில்லை. அறிவுசார் விவாதங்களுக்கான வாய்ப்புகள் இல்லை.
3. சுதேச மொழிகளில் சமூகவியல்
சிங்களம், தமிழ் ஆகிய இரு சுதேச மொழிகளிலும் சமூகவியல் கற்பிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்குப் பதிலாக இச்சுதேச மொழிகளில் சமூகவியல் கற்பிக்கப்படுதல் ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். இதனால், ஆங்கிலம் கற்ற உயர் குழுவின் கல்வியாக இருந்த சமூகவியல் சமூகத்தின் எல்லாத் தரத்தினருக்கும் உரிய விருப்பப் பாடமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய விரிவாக்கத்திற்கு ஏற்ற வகையில் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் தரம் (Quality) உயர்ந்ததா என்பது சிந்திக்க வேண்டிய விடயம். தமது தாய் மொழியான ஒரு மொழியில் மட்டும் (Monolingual) அறிவும் பயிற்சியும் உடையவர்களின் அறிவு உற்பத்தியாக அமையும் சமூகவியலின் மட்டுப்பாடுகள் (Limitations) கவனிப்புக்குரியவை.
4. விரிந்த நோக்கு இன்மை
இலங்கையின் சுதேச மொழிகளில் இடம்பெறும் சமூகவியல் அறிவு உற்பத்தியின் (Knowledge Production) மட்டுப்பாடுகளுக்கு உரிய காரணம் விரிந்த நோக்கு (Broader Perspective) இன்மையாகும். உலகின் சமூகவியல் அறிவுக் களஞ்சியத்தின் தொடர்பு அற்றதாய் உருவாக்கப்படும் அறிவு, குறுகிய பார்வை வீச்சு (Narrow Focus) உடையது. இதனைக் கட்டுரையாளர்கள் ‘An Insular Sociology’ என்ற தொடரால் விளக்குகின்றனர்.
5. பிரசுரத் தொழில் வளர்ச்சிக் குறைவு
‘புலமைசார் நூல்களைப் பிரசுரிக்கும் பிரசுரத் தொழில்’ (Academic Publishing Industry) இலங்கையில் வளர்ச்சி பெறவில்லை. நூல்களைப் பிரசுரிக்கும் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பொதுப்பட எல்லா வகை நூல்களையும் வெளியிடும் (Generalised Publishing) முயற்சியிலேயே கவனம் செலுத்துகின்றன. புலமைசார் நூல்களை வெளியிடும் தொழில் நிறுவனங்கள் இல்லாமையால் சமூகவியல் ஆய்வு நூல்கள் வெளியிடப்படுவதில்லை.
இந்தியாவுடன் ஒப்பீடு
இந்தியாவில் சமூகவியல் கல்வியிலும் ஆய்விலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுடன் இலங்கையின் நிலைமையை ஒப்பிடுதல் பயன் உடையது. இந்தியாவின் சமூகவியல் ஆய்வின் நிலை பற்றி வீணா தாஸ் (Veena Das) அவர்கள் ‘The State of Crisis’ என்ற தலைப்பில் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதினார். இக்கட்டுரையில் வீணாதாஸ் அவர்கள் இந்திய சமூகவியலின் நெருக்கடிகள் பற்றி கூறியவை இலங்கைக்கும் பொருத்தமானவை. ஆயினும் இந்த ஒப்பீட்டைச் செய்யும் போது, இந்தியாவில் சமூகவியல் வரலாற்று ரீதியாக மிகவும் சிறப்பான வளர்ச்சிகளை எய்தியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் சமூகவியல் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அங்கு சமூகவியல் பலமான அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இந்தியச் சமூகவியலினதும் மானிடவியலினதும் வரலாற்றைக் கூறும் சிறந்த நூல்கள் பல உள்ளன. வீணா தாஸ் அவர்களால் பதிப்பிக்கப்பட்டதும் ‘ஒக்ஸ்போர்ட் இந்தியா’ பதிப்பக வெளியீடுமான ‘Oxford India Companion to Sociology and Social Anthropology.’ (2003) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் உள்ள கட்டுரைகள் இந்தியச் சமூகவியலின் வரலாற்றை விளக்கியுரைப்பனவாக உள்ளன. பற்றிசியா உபறோய் (Patricia Uberoi), நந்தினி சுந்தர், சதிஷ் தேஷ்பாண்டே ஆகிய மூவரால் இணைந்து பதிப்பிக்கப்பட்ட ‘Anthropology in The East: Founders of Indian Sociology and Anthropology (2007)’ என்ற தலைப்பிலான தொகுதியும், சுஜாதா பட்டேல் (Sujatha Patel) பதிப்பித்த ‘Doing Sociology in India: Genealogies, Locations, and Practices (2011)’ என்ற தலைப்பிலான நூலும், இந்திய சமூகவியலினதும் மானிடவியலினதும் வளர்ச்சிகளை அறிந்துகொள்வதற்கு உதவுவன. மேற்குறித்த நூல்கள் இந்திய சமூகவியலின் வளர்ச்சிகளை விமர்சன நோக்கில் மதிப்பிடும் முயற்சிகளாகும்.
மேற்குறித்த நூல்கள் வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பே பெட்டீல் (A. Beteille) ‘Six Essays on Indian Sociology’ என்ற நூலை 1982 ஆம் ஆண்டில் எழுதினார். இந்நூலில் பெட்டீல் அவர்கள் இந்திய சூழலில் சமூகவியலுக்கும், சமூக மானிடவியலுக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை எனவும், இரண்டும் ஒரே விடயப் பொருளையே ஆராய்வன எனவும் தனது வாதத்தை முன்வைத்தார். அவரது இந்த வாதத்தை ஆதரிக்கும் முறையில் வேறு இரு ஆய்வுகளை பெட்டீல் அவர்கள் முறையே 2000, 2002 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டார். பெட்டீல் அவர்களின் நூலும் கட்டுரைகளும் தொடர்பாகச் சமூகவியலாளர்களிடையே நடைபெற்ற விவாதம் ஆரோக்கியமானதாக அமைந்தது. இந்த விவாதத்தின் பயனாக இந்தியச் சமூகவியலின் தனித்துவ அடையாளம் நிரூபணம் ஆகியது. இந்தியச் சமூகவியலாளர்களுக்கு இது பெருமிதம் தரும் விடயமாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்தது. இது போன்று இலங்கையின் சமூகவியலின் தனித்துவத்தை அடையாளப்படுத்தவும் அதன் வளர்ச்சியை மதிப்பிடவும் வேண்டிய முயற்சிகள் இலங்கையில் நடைபெறவில்லை. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் சமூகவியலில் முதுகலை, கலாநிதி ஆகிய பின்பட்டப் படிப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்பட்டப் படிப்புக் கல்வியை நிறைவு செய்தவர்கள் தொகை பெருகியிருந்தது. சமூகவியல் நூல்களைப் பிரசுரிக்கும் பிரசுர நிலையங்களும் வளர்ச்சியுற்றிருந்தன. தரமான பல நூல்கள் வெளியிடப்பட்டன. தரமான பருவ இதழ்கள் பலவும் வெளியாயின. ஆகையால் இலங்கைச் சமூகவியலை விட இந்தியச் சமூகவியல் கூடிய அளவு வளர்ச்சி பெற்றிருந்தது.
இந்தியச் சமூகவியலின் சாதனைகள் ஒப்பீட்டளவில் வியப்புக்குரியனவாகும். அங்கு 1980களின் பின்னர் சமூகவியல் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை வீணா தாஸ் அவர்களின் 1993 ஆம் ஆண்டு ஆய்வான ‘State of Crisis’ எடுத்துக்காட்டியது. இந்தியாவின் சமூகவியல் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி வீணா தாஸ் அவர்கள் கூறியிருப்பவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியாவின் சமூகவியலின் நெருக்கடியை அந்நாட்டின் மூன்று நிறுவனக் கட்டமைப்புகளின் பிரச்சினைகள் மூலம் அடையாளம் காண முடியும் எனக் குறிப்பிட்ட வீணா தாஸ், அம்மூன்று நிறுவனங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்.
- பல்கலைக்கழகங்கள்
- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (University Grants Commission)
- இந்தியச் சமூகவியல் சங்கம் (Indian Sociological Society) போன்ற சமூகவியலாளர்களின் அமைப்புகள் (Professional Bodies)
இந்த மூன்று நிறுவனங்களையும் முகாமை செய்வதில் எழுந்த நிர்வாகச் சிக்கல்களும், பிரச்சினைகளும் நீண்டகாலத்தில் இந்தியச் சமூகவியலின் வீழ்ச்சிக்கு வழிகோலின என வீணா தாஸ் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக நிலையில் சமூகவியல் எல்லா இடங்களிலும் பயிலப்படும் ஒரு துறையாக விரிவாக்கம் பெற்றதைக் காணலாம். இவ்வாறு விரிவாக்கம் பெற்ற போது, சமூகவியலைக் கற்பித்தலிலும், ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தியாவில் சமூகவியல் கல்வி, இலங்கையைப் போன்று பட்டப்படிப்பு மட்டத்தில் மட்டும் விரிவாக்கம் பெறுவதாக இருக்கவில்லை. பின்பட்டப் படிப்புக்குரிய கற்கைத் துறையாகவும் சமூகவியல் இந்தியாவில் விரிவாக்கம் பெற்றது. இவ்வாறு சமூகவியலைக் கற்கும் மாணவர் தொகை பெருகுவதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. கோட்பாட்டு அறிவு பெருகுதல் வேண்டும்; அறிவாளிகள் சமூகம் ஒன்று சமூகவியல் கல்வி ஊடாக உருவாக்கப்பட வேண்டும்; பயனுள்ள விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இவை நிகழாதபோது ஒரு கல்வித்துறையில் வளர்ச்சிக்குப் பதில் வீழ்ச்சியே ஏற்படும். இலங்கையில் சமூகவியலாளர்கள் இந்தியாவின் உதாரணத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
இந்தியாவில் சமூகவியல் கல்வி எல்லா மாநிலத்திற்கும் விரிவாக்கம் பெற்ற பொழுது மாநில மொழிகளில் சமூகவியல் கற்பிக்கப்பட்டது. மாநில, பிராந்திய மொழிகளில் சமூகவியலை கற்பிப்பதில் பெரும் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. மாநில மொழிகளில் இப்பாடத்தைக் கற்பிப்பதற்குத் தகுதியுள்ள ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இருக்கவில்லை, தரமான பாடநூல்களும் இருக்கவில்லை. மத்திய பல்கலைக்கழங்களிலும், தெரிவு செய்யப்பட்ட சில மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே சமூகவியல் ஆங்கிலமொழி மூலம் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் மூலம் சமூகவியலைக் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களின் தரம் சுயமொழிக் கல்விப் பல்கலைக்கழகங்களின் கல்வியை விடப் பலமடங்கு மேம்பட்டதாக இருந்தது.
இந்தியாவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நிதிவளத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பலம்வாய்ந்த நிறுவனமாகும். அந்நிறுவனம் நிதிவளங்களை அதிகம் கொண்டுள்ள நிறுவனமாகையால், ஆராய்ச்சிக்காகப் பெருமளவு நிதியைப் பல்கலைக்கழகங்களிற்கு வழங்கும் சக்தியுடையதாக உள்ளது. அத்தோடு பல்கலைக்கழகங்களின் நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக்தியும் இந்தியாவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உள்ளது.
ஆராய்ச்சிக்கான நிதியை ஒதுக்குவதில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு யாந்திரிக முறையிலான முடிவு எடுத்தல் செயல்முறையைக் (Mechanical Decision Making Process) கடைப்பிடிப்பதாக வீணா தாஸ் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களின் துறைகள், அவற்றின் பீடங்கள் (Faculties) என்பவற்றிற்கிடையே தராதர வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நிதி வழங்கும் போது உயர்தரமான பல்கலைக்கழகத்திற்கும், தரத்தில் தாழ்நிலையில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் சமத்துவ அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. இதன் விளைவாக சமூக விஞ்ஞான ஆய்வுகளில் உயர்தரத்தில் உள்ள நிறுவனங்கள் தமது ஆய்வுத்திட்டங்களைச் செயற்படுத்த, போதிய நிதியைப் பெறுவதில்லை. அதேவேளை தரத்தில் குறைந்த பல்கலைக்கழக ஆய்வு நிறுவனங்கள் நாட்டின் தேவைகளுக்குப் பொருத்தமில்லாத ஆய்வுகளில் பணத்தை விரயம் செய்வதற்குப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ‘சமத்துவக் கொள்கை’ இடம் தருகிறது.
ஆகையால் நிறுவனங்களிடையே காணப்படும் ஆற்றல் வேறுபாடு (Variations in Capacity) பற்றி நிதி ஒதுக்கீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டும் என வீண தாஸ் குறிப்பிட்டார். வீணா தாஸ் அவர்கள் 1980களில் இருந்த நிலைமையை அவதானித்து இக்கருத்தினைக் குறிப்பிட்டார். ஆனால், பல பத்தாண்டுகள் கடந்தபின் இன்றும்கூட வீணா தாஸ் குறிப்பிட்ட குறைபாடு தொடர்ந்து இருப்பதைக் காணலாம்.
முடிவுரை
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் கல்வியினதும் ஆராய்ச்சியினதும் நிலைமை பற்றி வரலாற்று நோக்கில் விவரமாகக் கூறிய கட்டுரையாசிரியர்கள் தமது ஆய்வுக் கட்டுரையின் இறுதியில், சமூகவியலின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய முக்கியமான பணிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
1. சமூகவியல் துறைக்கு விரிவுரையாளர்களை நியமிப்பதிலும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் தற்போது கையாளப்படும் விதிமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். உலகில் பிற நாடுகளில் சமூகவியல் கல்விக்கான கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய கூறுகளை உட்சேர்த்துப் பாடநெறிகளின் தரத்தை உலக மட்டத்திற்கு உயர்த்துதல் வேண்டும். விரிவுரையாளர்களுக்கான பயிற்சியிலும் முன்னேற்றம் வேண்டும். இவை திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டியதால் எல்லாப் பல்கலைக்கழகங்களிற்கும் பொதுவான செயற்பாடாக அமைதல் வேண்டும். சமூகவியலை ஒரு பாடமாக இளங்கலைப் பொதுப்பட்ட வகுப்பில் (B.A) படித்தவர்களை சமூகவியல் விரிவுரையாளராகச் சேர்த்துக்கொள்ளப்படும் வழக்கம் இலங்கையின் சில பல்கலைக்கழகங்களில் இருந்து வந்தது. அவ்வழக்கத்தைப் பின்பற்றுவதை உடன் நிறுத்த வேண்டும். சமூகவியல் விரிவுரையாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்றுக்கொண்ட கலாநிதிப் பட்டம் (Ph.D) அமைதல் வேண்டும்.
2. தரமான புலமைசார் பருவ இதழ்களை (Academic Journals) வெளியிடுவதற்கு அரசாங்கம் உதவி வழங்குதல் வேண்டும். தனியார் கம்பனிகளின் ஆதரவை இவற்றின் வெளியீட்டிற்கும் நிதி வழங்கலுக்கும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். புலமைசார் பருவ இதழ்களின் பதிப்பாசிரியர் பதவியில் (Editor) கடமையாற்றக்கூடிய தகுதியுடையவர்களைப் பயிற்றுவித்தல் வேண்டும். பருவ இதழ்கள் உயர்தரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு விவாதத்தின் தரத்தை உயர்த்துதல் வேண்டும். அப்போதுதான் ‘இலங்கையின் சமூகவியல்’ (Sri Lankan Sociology) என்று கூறக்கூடிய சமூகவியல் பிராந்திய மட்டத்தையும் உலக மட்டத்தையும் சென்றடையும். தற்போது பருவ இதழ்களின் வெளியீடு தொடர்பான ஆரோக்கியமான நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. 1960களில் இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் சிங்களத்திலும், தமிழிலும் கலைச்சொற் தொகுதிகளை வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. இக்கலைச் சொற் தொகுதிகள் சமூகவியலைச் சிங்களத்திலும், தமிழிலும் கற்பிப்பதற்கு உதவியாக இருந்தன. கலைச் சொல்லாக்கத் திட்டத்தை மீளவும் ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் துறையும் கலைச்சொல் தொகுதிகளின் வெளியீட்டில், பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் பங்குபற்றுவதற்கு ஊக்குவித்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு நூல்கள் சந்தைத் தேவைகளின் அடிப்படையில் அல்லாது, பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் தேவைகளை நோக்கியதாக அமைதல் வேண்டும்.
4. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ‘பல்கலைக்கழக அச்சகம்’ (University Press) என்ற பெயரிலான பதிப்பகங்கள் செயற்படுதல் அவசியம். கொழும்புப் பல்கலைக்கழகமும், காண்பிய அரங்கக் கலைகளுக்கான பல்கலைக்கழகமும் (University of Visual and Performing Arts) தற்போது தமக்கென ஒரு பதிப்பகத்தை நடத்தி வருகின்றன. இவ்விரு பதிப்பகங்களும் உலக மட்டத்தில் புலமைசார் நூல்களின் பதிப்பும் வெளியீடும் (Global Academic Publishing) தொடர்பான அனுபவமும் அறிவும் மிக்கவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன எனக் கூறுதல் இயலாது. இலங்கையில் புலமைசார் நூல்களின் பதிப்பும் வெளியீடும் அரசினால் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் கட்டி வளர்க்கப்பட வேண்டிய துறையாகும். இதனைப் பலமான ஒரு துறையாக வளர்த்தால், இலங்கையின் சமூகவியல் நூல்கள் உலகச் சந்தையைச் சென்றடையக்கூடியனவாக வளர்ச்சி பெற முடியும்.
5. மருத்துவம், பொறியியல், இயற்கை விஞ்ஞானங்கள், கலைகளும் பண்பாடும் ஆகிய பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு சமூகவியல் அறிவின் உள்ளீடு (Sociological Inputs) அவசியமானது. பல்கலைக்கழகங்களின் சமூகவியல் துறைகள் இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்துதல் வேண்டும். ஆயினும் சமூகவியல் துறைகளின் சுயத்துவத்தை (Autonomy) பாதிக்காத வகையில் இச்செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.
6. இலங்கையில் இன்று இனத்துவ, சமய முரண்பாடுகளால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. சமூகவியல் ஆராய்ச்சியும் சமூகவியலாளர்களின் அறிவுரைகளும் தலையீடும் நாட்டின் பிரச்சினைகள் பற்றிய தெளிவான அறிவை மக்களுக்கு ஊட்டுவதற்கும், மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் உதவக்கூடியன. இனங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை உருவாக்குவதில் சமூகவியலுக்கு பிரதான வகிபாகம் உள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஒலுவில், வவுனியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் சமூகவியல், மானிடவியல் துறைகளை ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கன. புதிய பல்கலைக்கழகங்களிற்கும், நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களிற்கும் இடையில், மாணவர்களிடையே தொடர்பாடலும், பரிமாற்றங்களும் இடம்பெறுவதால் நாட்டில் ஒற்றுமையை வளர்க்க முடியும். பல்கலைக்கழக ஆசிரியர்களிடையிலும் பரிமாற்றங்கள் இடம்பெறுதல் நன்மை பயக்கும்.
7. சமூகவியல் துறை ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி, பகுப்பாய்வு என்பனவற்றிற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளக் கூடிய வகையில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதுதல், பிரசுரித்தல் ஆகியவற்றில் தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தேசிய மட்டத்திலும், உலக மட்டத்திலும் இடம்பெறும் கருத்தரங்குகள், மாநாடுகள் என்பனவற்றில் பங்குபற்றுதல் மூலம் புலமையாளர்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தல் வேண்டும்.



