அறிமுகம்
இலங்கை மலையகத் தமிழர்கள் என்பவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் ஆறு முதல் எட்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாவர்.

18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான இந்திய, சீன, ஆபிரிக்கத் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு சுமார் 40 நாடுகளில் குடியேற்றப்பட்ட மக்களில், இந்தியத் தொழிலாளர்கள், குறிப்பாகத் தென்னிந்தியத் தமிழர்கள், அரைவாசிக்கும் மேற்பட்டோராகக் காணப்பட்டனர்.
இலங்கை, பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மடகஸ்கார், தென்னாபிரிக்கா, பிஜி தீவுகள், பிரிட்டிஸ் கயானா போன்ற குடியேற்ற நாடுகளில் குடியேற்றப்பட்ட பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே தமது நீண்ட நெடிய வரலாறு, பண்பாடு, பாரம்பரியங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை மலையகத் தமிழர்கள்
சுமார் 200 ஆண்டுகள் நீடித்த வரலாற்றில், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மொழியுடன் தொடர்புடைய ஒரு பண்பாட்டுத் தேசியமாக மலையகத் தமிழர்கள் நிலைத்திருக்கின்றனர். உற்பத்தி உறவுகள், நிலவுரிமை மற்றும் வீட்டுரிமை போன்றவை இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதபோதும், நெருக்கமான கலாசாரப் பிணைப்புடைய மொழி, மதம், கலை – இலக்கியப் பண்பாடு ஆகியவை இச்சமூகத்தைப் பிணைக்கின்றன. மேலும், கூத்துகள், ஆடல் – பாடல்கள், கோயில்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில்சார் வாழ்வும் வழிபாடும், மொழிக் கோட்பாடுகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், பழக்கவழக்கங்கள், உணவு, விருந்தோம்பல், ஆடை, ஆபரணங்கள், மணமுறைகள், புனிதம், தீட்டு, துடக்கு போன்ற வாழ்வியல் அம்சங்களும், இன்பம், துன்பம், வாழ்வுக்கான போராட்டம் போன்ற உணர்ச்சிபூர்வமான சவால்களும், குல – கோத்திர மரபுகள், காதல், வீரம், மணமுறிவு, மறுமணம், மண உறவுகள் போன்ற சமூகக் கட்டமைப்புகளும், ஏவல், பில்லி – சூனியம் போன்ற சடங்கியல் நம்பிக்கைகளும், இசைக்கோலங்கள், தாளக்கட்டுக்கள், உடல் மொழியியல் போன்ற கலை வெளிப்பாடுகளும், அமைப்பாக்கச் சிந்தனைகள், புரட்சிகர அணி திரள்வுகள், காட்சிகளைக் கட்டமைத்தல், ஓவியம், சிற்பம், செதுக்கல் கலைகள் போன்ற புதிய உருவாக்கச் செயற்பாடுகளும் சார்ந்து, இந்தச் சமூகம் ஓர் இறுக்கமான பண்பாட்டுத் தேசியமாக உருப்பெற்றுள்ளது.
பண்பாட்டுத் தேசியம் பற்றிய கோட்பாடுகள்
லெனின்
மார்க்சிய – லெனினிசக் கோட்பாடுகளின் அடிப்படையில், தேசம், தேசியம், தேசிய இனப் பிரச்சினை, தேசிய விடுதலை இயக்கம், தேசிய இனம், தேசிய இனக்குழுக்கள், சுயநிர்ணய உரிமை மற்றும் காலனித்துவ நாடுகளின் விடுதலை தொடர்பான பல கருத்தாடல்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. கார்ல் மார்க்ஸ், ஃபிரடரிக் ஏங்கல்ஸ், வி.ஐ. லெனின், ஜோசப் ஸ்டாலின், ரோசா லக்சம்பேர்க், அந்தோனியோ கிராம்சி, அமில்கார் கப்ரால் ஆகிய சிந்தனையாளர்கள் காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் முன்வைத்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் தோன்றிய கைத்தொழில் புரட்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட பண்ட உற்பத்திப் பெருக்கம், சந்தை உருவாக்கம், காலனி ஆதிக்கம் ஆகியவற்றால் உருவான முதலாளித்துவ அரசுகளும் தேசம், தேசிய இனம், தேசிய இனக்குழு சார்ந்த பல்வேறு கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைக் கையாள வேண்டியிருந்தது.
இதன் விளைவாக, இன்றைய உலகில் சுதந்திர அரசுகள், இணைப் பேரரசுகள், கூட்டாட்சி அரசுகள் எனப் பல்வேறுபட்ட ஆட்சி மாதிரிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்றைய உலகில் நிலவுகின்ற சமஷ்டி அரசுகள் தொடர்பான கொள்கைகளை ஆராய்ந்த ரொனால்ட் எல். வாட்ஸ் என்பவர், உலகில் 24 வகையான சமஷ்டி மாதிரிகள் காணப்படுவதாக மதிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மலையகத் தமிழர்கள் அரசியல், வரலாறு, பண்பாடு, மொழி, கலாசாரம், உற்பத்தி உறவுமுறை, உளவியல், பூகோளப் பிராந்தியம் சார்ந்த ஒரு பிரதான தேசிய இனக்குழுவாகக் காணப்படுகின்றனர். இம்மக்கள் தமக்கான குறைந்தபட்ச மற்றும் உயர்ந்தபட்ச அரசியல் அதிகாரம், கலாசாரத் தன்னாட்சி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கான கோட்பாட்டு மற்றும் வரலாற்று ரீதியான நியாயப்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்தக் கோரிக்கைகளுக்கான நியாயப்பாடுகள் எத்தகைய கோட்பாட்டுத் தளத்தில் தோற்றம் பெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, தேசம், தேச உருவாக்கம் தொடர்பான வரலாற்று மற்றும் கோட்பாட்டு வகைப்பட்ட புரிதல் அவசியமாகிறது.
அதன் அடிப்படையில், மலையகத் தமிழர்களின் பண்பாட்டுத் தேசியம் தொடர்பான கருத்தியல் கட்டமைப்பிற்கு, சித்தாந்தத் தேடல்கள், கற்பிதங்கள் மற்றும் அதற்கான சான்றாதாரங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. இவ்வடிப்படையில் நோக்குகையில், சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் நிறுவனரும், உலகில் முதலாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசைத் தோற்றுவித்தவருமான லெனின் அவர்களின் சிந்தனைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒட்டோ பாயர் அவர்கள், “தேசம் என்பது கலாசார அடிப்படையைக் கொண்ட சமுதாயமே” எனக் கருதினார் (லெனின், ‘நூல் திரட்டு’, தொகுதி 41, பக். 24).
இந்தக் கருத்துக்கு மாற்றாக, லெனின் அவர்கள், “தேசம் என்பது வரலாற்றுத் தன்மையானது” என்று வலியுறுத்தினார் (பக். 26).
மேலும், “தேசத்தின் சிறப்பியல்புகள் பிரதேசம், மொழி என்பனவாகும்” என்கிறார் பாயர். “தேசத்தின் மிக முக்கிய சிறப்பியல்பு மொழியாகும்” என்கிறார் கவுட்ஸ்கி (பக். 27). “மொழியானது இலக்கியமாக மாற்றமடைந்ததைத் தொடர்ந்து ஒரு குணவியல்பு ரீதியான மாற்றம் ஏற்பட்டது. வார்த்தையின் முழுப் பொருளில் நிலை கொண்டதாக மொழி மாறியது.” என்கிறார் லெனின் (லெனின், ‘தொகுப்பு நூல்கள்’, தொகுதி 19, பக். 499 – தொகுதி 41, பக். 314).
தேசமானது உறுதி பெறும் வளர்ச்சிக் கட்டத்தில், “ஒரு திட்டவட்டமான பிரதேசத்தில் குடியேற்றம் என்பது அவசியம்” என்று கவுட்ஸ்கி குறிப்பிடுகிறார். மேலும், தேசத்தின் பிரதான அம்சங்களாக அவர் “மொழியும், பிரதேசமும்” இருப்பதாக வலியுறுத்துகிறார்.
“ஒரு தேசம் என்பது சரித்திரபூர்வமாக நிறுவப்பட்ட நிலையான மக்கள் சமுதாயமாகும். ஒரு பொதுவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்க்கை என்பன ஒரு பொதுவான கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும். மனோதத்துவ ரீதியான ஒழுங்கமைப்பின் மீது அது அமைந்துள்ளது.” என்கிறார் லெனின் (பக். 31). மேலும் அவர் மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
முதலாவது, “தேசம் என்பது ஒரு சரித்திரபூர்வமான சமுதாயம்.” இரண்டாவது, “தேசத்தின் சிறப்பியல்புகள் அனைத்தும் சமதையானதல்ல” (பக். 32). மூன்று, “தேசிய மனோதத்துவத்தின் இடம்” (பக். 33).
“ஒரு தேசம் என்பது நிலையான சரித்திரபூர்வமான மக்கள் சமுதாயத்தை உள்ளடக்கியதாகும். சமுதாயத்தின் மொழி, பிரதேசம், கலாசாரம், உணர்வு, மனோதத்துவம் ஆகியவற்றின் இணைப்பு சமுதாய, பொருளாதார வாழ்க்கையின் மீது அடித்தளம் கொண்ட ஒரு சமுதாய வளர்ச்சி வடிவமாகும்” (பக். 36).
“மனித குலத்தின் முன்னேற்றம் என்பது மிக நீண்ட காலமாக தேசத்தின் வாழ்வுடனும் வளர்ச்சியுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. இது, பொருள்வகை உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சமுதாய வடிவத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது.”
ஆஸ்திரிய சோசலிச ஜனநாயகவாதிகளான ஒட்டோ பாயர், அவரது நண்பர் கார்ள் ரென்னர் ஆகியோரும், ருசிய யூதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூந்த் அமைப்பும் இணைந்து, பிராந்திய அடிப்படையிலன்றி கலாசாரத்தின் அடிப்படையில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என வாதிட்டனர். இந்தக் கோரிக்கையின்படி, ஒவ்வொரு சமூகத்தையும் கலாசாரத்தின் அடிப்படையில் இனங்கண்டு, அவற்றிற்கான தனித்தனிப் பாடசாலைகளையும் நிர்வாக அலகுகளையும் அமைக்க வேண்டும் என்ற கருத்து இரண்டாவது அகிலத்தில் முன்வைக்கப்பட்டது. இக்கருத்து தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்துவது, எனவே அது பிற்போக்கானது என லெனின் தலைமையிலான சமூக ஜனநாயகவாதிகள் வாதிட்டனர். அதற்குப் பதிலாக, பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட தன்னாட்சி முறையே வரலாற்று ரீதியானது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தக் கருத்தையே அப்போது மார்க்சியவாதியாக இருந்த கார்ல் கவுட்ஸ்கியும் வலுவாக ஆதரித்தார்.
ஆகவே, ஒரு தேசம் என்ற அடிப்படையில் மலையகத் தமிழர்கள் ஒரு தனித்துவமான அரசியல் சமூகம் என்பதை, லெனின், கார்ல் கவுட்ஸ்கி உள்ளிட்ட மார்க்சியக் கோட்பாட்டாளர்களின் விளக்கங்கள் மூலம், கோட்பாட்டு ரீதியாக நிறுவ முடியும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உற்பத்தி உறவுமுறை, மொழி, கலாசாரம், பூகோளத் தொடர்புடைய வாழ்வாதாரப் பிராந்தியம், சமூக உளவியல், மற்றும் மக்கள் திரட்சி என்ற அடிப்படையில், மலையகத் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனமாவார்கள்.
கூகி வா தியோங்கா
“ஆபிரிக்க சிந்தனை மரபில், ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான சமூக – பண்பாட்டு அடிப்படை உள்ளது. அவைதான் மனநிலை உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.”
“மக்கள் பண்பாடு ஒரு மக்கள் கூட்டத்தின் உலகப் பார்வையை விளக்குவதிலும் விவரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கும். அதன் மூலம் மக்களது கண்ணோட்டம் அமுல்படுத்தப்படுகிறது.”
அந்தோனியோ கிராம்சி
இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மார்க்சிய – லெனினிச அறிஞருமான அந்தோனியோ கிராம்சியின் பண்பாடு தொடர்பான சிந்தனைகள், கோட்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
“பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால உழைப்பும் சிந்தனையும் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்த சிந்தனைக் களஞ்சித்தில் என்றும் அழியாத மதிப்புடைய அம்சங்களும் உள்ளன. அவை ஒருபோதும் அழியா, அவற்றை அழியவிடவும் கூடாது. அவற்றின் மதிப்புப் பற்றிய உணர்வு இல்லாமல் போனது தான் பூர்ஷ்வா ஆட்சி ஏற்படுத்திய சீரழிவின் ஒரு முக்கிய அறிகுறியாகும். பூர்ஷ்வாக்களுக்கு அனைத்துமே வர்த்தகப் பொருளும் போர்க் கருவியும் தான். சமுதாயத்தில் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் வென்றெடுத்த பிறகு, அழிக்கப்பட்ட ஆன்மிகச் செல்வங்களைத் தானும் மனித குலமும் திரும்பப் பெறுவதற்கான போராட்டக் கடமையை மேற்கொள்ள வேண்டும்” (MO. 20) (பக். 278, 279).
மேலும், தேசிய மக்கள் பண்பாட்டை உருவாக்குவதில் மொழியின் பாத்திரம் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“தேசிய மக்கள் பண்பாட்டை உருவாக்குவதில் மொழி முக்கியமான பாத்திரம் வகிக்கிறது; வாழ்வு, வர்த்தகம் மற்றும் படைப்பாக்கச் செயல்கள் தொடர்பான மொழி பொதுமக்களின் தேசிய விருப்பத்தை (National Popular Will) பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.”
மலையகத் தமிழர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மொழியாகிய தமிழைத் தமது அடிநாதமாகக் கொண்டுள்ளனர். இந்த மொழி இம்மக்களின் அனைத்துச் செயற்பாட்டுத் திசைகளுக்கும் (இயங்கு திசைகள்) மூலாதாரமாகத் திகழ்கின்றது. எனவே, ஒரு மொழி வழிப்பட்ட பண்பாடும் மொழிசார் வரலாறும் மலையகத் தமிழர்களை இறுக்கமாகப் பிணைத்து வைக்கும் மிக முக்கியமான பண்பாட்டுக் கூறாக அமைந்துள்ளது.
“நாட்டார் வழக்காற்றை விமர்சன ரீதியாகப் புரிந்துகொண்டு புதிய பண்பாட்டை உருவாக்குதல் வேண்டும்.”
“பொது மொழியில் இலக்கணத்தைக் கற்பித்தல் வேண்டும்.” (SPW. 235/ 238) (பக். 282)
“நாட்டார் வழக்காறு பாமர மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பு ஆகும்.”
“புதிய பண்பாடு, கலை என்பவற்றைப் படைப்பதற்கு தேசிய மக்கள் விருப்பத்தை உருவாக்கும் பொருட்டு கட்சி, கல்வி நிறுவனங்களையும் பத்திரிகைகளையும் நடத்த வேண்டும். நாட்டார் வழக்காற்றை (Folklore) விமர்சன ரீதியாகப் புரிந்துகொண்டு புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கு நாட்டார் வழக்காற்றிலிருந்து தொடங்க வேண்டும். ஜனரஞ்சக இலக்கியங்களைப் புறக்கணிக்காமல் அவற்றைப் படிக்கும் வாகசர்கள் மத்தியில் புதிய பண்பாட்டுக்கான வித்துகளை விதைக்க வேண்டும்.” (பக். 281)
“உலகம் பற்றியும் வாழ்க்கை பற்றியும் வரலாற்றில் பல்வேறு சமயங்களில் நிலவிவந்த பலவிதமான கண்ணோட்டங்களின் எச்சங்களை நாட்டார் வழக்காற்றில் காணலாம்.”
“தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றின் ஒரு சில அம்சங்கள் அவற்றின் சூழலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு நாட்டார் வழக்காற்றுக்குள் புகுந்து விடுகின்றன.”
“நாட்டார் வழக்காறு என்பது பாமர மக்களின் பண்பாட்டு வாழ்வு நிலைமைகளின் பிரதிபலிப்பாகும்.”
“பாமர மக்களிடையே நிலவும் மதம், சடங்குகள் – சம்பிரதாயங்கள் என்ற வடிவத்திலேயே உள்ளது.”
“நாட்டார் வழக்காறு பாமர மக்களுக்கு அறநெறிகளை வகுத்துக் கொடுத்து, அவற்றை மத நம்பிக்கையின் மூலம் உறுதிப்படுத்துகின்றது. இத்தகைய அறநெறிகள் தான் பாமர மக்களைக் கட்டுப்படுத்தி அவர்களை உணர்வு பூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றிச் சிந்திக்கவிடாமல் தடுக்கின்றன.”
“பாட்டாளி வர்க்கம் – அதாவது பாட்டாளி வர்க்கக்கட்சி அறிவாளிகள் – நாட்டார் வழக்காற்றிலுள்ள அம்சங்களை, வெகுஜனங்களின் உலகக் கண்ணோட்டத்தைப் பரிச்சயம் கொள்ள வேண்டும்.”
“இங்கு வாய்மொழி இலக்கியமும் கிராமியக் கலை இலக்கியமுமே இருந்தன. இவற்றிலிருந்து மக்கள் இலக்கியம் வளர வேண்டும்.” (SCW: 102 – 343, 356 – 358, 374- 376)
“ஒரே ஒரு முற்போக்கான திட்டம் மட்டுமே உள்ளது என்பதல்ல. மிக முற்போக்கான திட்டங்களிலும் கூட சில பிற்போக்கான அம்சங்கள் இருக்கும்.” (Rajathurai, S. V., & Geetha, V. (1991). Antonio Gramsci: Life and Thoughts.)
போன்ற மொழி, பண்பாடு, நாட்டார் வழக்காறு, மதம் தொடர்பான அந்தோனியோ கிராம்சியின் விளக்கங்கள் மலையகத் தமிழர்களின் பண்பாட்டுத் தேசியம் பற்றிய கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. இத்தாலிய மரபில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நிலவிய அதே பண்பாட்டுச் சூழ்நிலைகள் மலையகத் தமிழர்கள் தொடர்பிலும் நிலவுவதை அறிய முடியும்.
அமில்கார் கப்ரால்
ஆபிரிக்கச் சிந்தனை மரபைச் சேர்ந்தவரும், கினியோ-பிஸோ மற்றும் கேப் வேர்ட் ஆகிய தீவுகளின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஆபிரிக்கக் கட்சியின் பொதுச் செயலாளருமான அமில்கார் கப்ரால் அவர்களின் தேசிய விடுதலை மற்றும் பண்பாட்டின் பாத்திரம் குறித்த சிந்தனைகள், மலையகத் தமிழரின் பண்பாட்டுத் தேசியத்தின் கட்டமைப்பை வடிவமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
“ஒரு நாட்டு மக்களின் மீது அந்நியன் தனது ஆதிக்கத்தைத் திணிப்பது மிகவும் சுலபமானது என்று வரலாறு நமக்குக் கற்பிக்கின்றது. இங்கு ஆதிக்கத்தின் பொருளாதார அம்சங்கள் எவையாக இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட நாட்டு மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை நிரந்தரமாகவும் திட்டமிட்ட முறையிலும் ஒடுக்குவதன் மூலம் தான் இந்த ஆதிக்கத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும் என்று வரலாறு நமக்குக் கற்பிக்கின்றது. ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கொன்றொழிப்பதன் மூலம் மட்டும்தான் அந்நிய ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட முடியும்.” (பக். 42, 43)
“ஒரு நாட்டு மக்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதற்காக ஆயுதங்களை எடுப்பது என்பது எல்லாவற்றுக்கும் மேலாக அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் வலிமையிழக்கச் செய்வதற்கோ, முடமாக்குவதற்கோ ஆயுதங்களை எடுப்பது போலாகும்.” (பக். 43)
“இது (ஆயுதம் மூலம் ஒடுக்குதல்), பிரச்சினைக்குரிய மக்களின் பண்பாட்டை வன்முறையின் மூலம் மறுக்கும் முயற்சியே தவிர வேறல்ல. போர்த்துக்கல் உள்ளிட்ட பல்வேறு காலனி ஆதிக்க அரசுகளாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கோட்பாடு அடைந்த சரியான தோல்வி, அதன் மனிதாபிமானமற்ற தன்மையின் மிகவும் தெளிவான நிரூபணமாக இருக்கிறது.” (பக். 44)
“கருத்தியல் தளத்திலோ அல்லது இலட்சிய ரீதியான தளத்திலோ அடிமைப்படுத்தப்பட்ட அல்லது அடிமைப்படுத்தப்படப் போகின்ற சமூகத்தின் பொருளாதார மற்றும் வரலாற்று யதார்த்தத்தின் தீவிரமான வெளிப்பாடு தான், அந்நிய ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்தின் ஓர் அடிப்படைக் கூறு என்ற விதத்தில் பண்பாட்டின் மதிப்பு அடங்கியுள்ளது.” (பக். 45)
“மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலும், ஒரு சமூகத்திலுள்ள மனிதர்கள் அல்லது மனிதக் குழுக்களுக்கு இடையிலும், பல்வேறு சமூகங்களுக்கு இடையிலும் நிலவும் உறவுகளின் பரிணாம வளர்ச்சியின் மீது பண்பாடு நேர்மறையான அல்லது எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்துவதால், பண்பாடானது ஒரே சமயத்தில் மக்களின் வரலாற்றின் விளைபொருளாகவும், வரலாற்றைத் தீர்மானிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அந்நிய ஆதிக்கத்திற்கான பல்வேறு முயற்சிகளும், அதே போன்று சில தேசிய விடுதலை இயக்கங்களும் தோல்வியடைந்ததற்கு, இந்த உண்மையைப் புறக்கணித்ததுதான் காரணமாகும்.” (பக். 45)
“உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலைக்கும் இவ்வுற்பத்தி சக்திகளின் சமூக பண்பாட்டு அமைப்பிற்கும் இடையிலான ஆற்றல் வாய்ந்த சமநிலைத் தன்மையை முடிவின்றித் தேடுவதன் விளைவை வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி முறையானது, ஒரு சமூகம் அதன் ஒவ்வொரு பிரிவு உற்பத்தி முறையின் முன்பு அடைந்துள்ள வளர்ச்சியைக் காட்டுகின்றது. அத்துடன், உற்பத்தி முறை, சம்மந்தப்பட்ட சமூகத்தை உருவாக்குகின்ற பல்வேறு அடிப்படைக் கூறுகள் அல்லது குழுக்களுக்கிடையில் நிலவுகின்ற புறவயமாகவோ அல்லது அகவயமாகவோ வெளிப்படுகின்ற பொருளாதார உறவுகளின் வகையைக் காட்டுவதுடன், அதன் மீது தாக்கமும் செலுத்துகின்றது.“ (பக். 46)
“பண்பாடு வெளிப்பாட்டின் கருத்தியல் ரீதியான அல்லது இலட்சிய ரீதியான பண்புகள் எவையாக இருந்தபோதிலும், பண்பாடு மக்களின் வரலாற்றில் இன்றியமையாத ஓர் அடிப்படைக் கூறாகும். ஒரு செடியில் பூ பூப்பதைப் போன்று வரலாற்றில் பண்பாடு உருவாகிறது. அத்துடன், பண்பாடே வரலாறாகவும் இருக்கிறது. எனவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையும் உற்பத்தி முறையும் தன் பண்பாட்டின் பொருளாதார அடித்தளமாக இருக்கின்றன. எந்தச் சூழலில் பண்பாடு வளர்ச்சியடைகின்றதோ, அந்தச் சூழலின் பொருளாதாரம் எனும் வளம் நிறைந்த மண்ணில் தான் பண்பாடு தனது வேர்களைப் பாய்ச்சுகிறது. புற வரலாற்றின் செல்வாக்கிற்குட்பட்டு வழக்கத்தின் உள்ளார்ந்த இயல்பைப் பண்பாடு பிரதிபலிக்கின்றது.” (பக். 46)
“விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றை ஆராயும் போது பொதுவாக விடுதலைப் போராட்டங்களுக்கு முன்பே பண்பாட்டு வெளிப்பாடுகளின் எழுச்சிகள் நடைபெறுகின்றன என்பதையும், ஒடுக்குபவரின் பண்பாட்டை மறுக்கும் செயற்பாடாகவும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் பண்பாட்டு ஆளுமையை உறுதிப்படுத்துவதற்கான வெற்றிகரமான அல்லது தோல்வியடையக்கூடிய முயற்சியாகவும் முற்போக்கான விதத்தில் இவ்வெழுச்சிகள் உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதையும் அறியலாம்.” (பக். 47)
“மக்கள் அந்நிய ஆதிக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையும் இந்த ஆதிக்கத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகக் காரணிகளின் செல்வாக்கும் எப்படிப்பட்டவையாக இருந்தபோதிலும், விடுதலை இயக்கத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகின்ற சமூக உணர்வின் வித்து, பொதுவாகவே பண்பாட்டுக் காரணியில் இருப்பதை நாம் காண முடியும்.” (பக். 47)
“தேசிய உற்பத்தி சக்திகள் முழுமையாக விடுவிக்கப்படும்போது, தேச விடுதலை உறுதி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, விடுதலை பெற்ற மக்கள் தங்களின் வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான உற்பத்தி முறையை சுதந்திரமாகத் தீர்மானிக்கும் திறனைப் பெறுகிறார்கள். இந்தச் சுதந்திரம், அச்சமூகத்திற்கு முன்னேற்றத்தை அடைவதற்கான அனைத்து ஆற்றல்களையும் மீட்டுத் தருவதோடு, அதன் பண்பாட்டு வளர்ச்சிப் போக்கிற்கு புதிய எதிர்கால வாய்ப்புகளைத் தவிர்க்க முடியாத வகையில் வழங்குகிறது.” (பக். 48)
“ஒடுக்குபவரின் பண்பாடும் பிற பண்பாடுகளும் வழங்கிய நேர்மையான பங்களிப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடாமல், தங்களுடைய சொந்தப் பண்பாட்டின் மேல் நோக்கிய பாதைக்குத் திரும்பாவிட்டால், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த பின்பும் ஒரு நாட்டு மக்களால் பண்பாட்டு ரீதியாக விடுதலையடைய முடியாது.” (பக். 48)
“மக்களின் பண்பாட்டின் பிரதிநிதியாகவும் பாதுகாவலனாகவும் விளங்கும் விடுதலை இயக்கம், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் பொருளாதார நிலைமைகள் எப்படிப்பட்டவையாக இருந்தபோதும், பண்பாட்டை உருவாக்குவதும் பேணிப் பாதுகாப்பதும் சமூகம் தான் என்ற உண்மையைக் கண்டிப்பாக நினைவிற் கொள்ள வேண்டும்.” (பக். 49)
“பண்பாடு மக்கட் பண்பைப் பெற்றிருந்த போதிலும், அது சமச்சீரானதல்ல. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அது சமச்சீராக வளர்ச்சியடைவதும் இல்லை” (பக். 49).
“ஒரே சமூக – பொருளாதாரப் பிரிவிற்குட்பட்ட தனிநபர்களின் விடுதலை இயக்கத்தைப் பொறுத்தவரையில் வெவ்வேறு விதமாக நடந்துகொள்வதற்கு பண்பாட்டு வளர்ச்சி நிலையிலுள்ள வேறுபாடுகள் தான் காரணம் என்றும் கூட நாம் ஏற்றுக் கொள்ளலாம். இந்தக் கட்டத்தில் தான் ஒவ்வொரு தனிநபருக்கும் முழுமையான முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பண்பாடு மாறுகிறது.” (பக். 49)
“தன்வயமாக்கப்பட்ட அல்லது அந்நியமாக்கப்பட்ட குழுவின் சமூகச் சலுகைகளை அதிகப்படுத்துவதன் மூலம் பெரும்பாலான காலனியப்படுத்தப்பட்ட அறிவு ஜீவிகளுக்கேயுரிய இந்தச் சூழ்நிலையானது உறுதியானதாக ஆக்கப்படுகிறது.” (பக். 51)
“விடுதலை இயக்கமானது சலுகை பெற்ற வர்க்கங்கள் போராட்டத்திற்கு வழங்கக்கூடிய நேர்மையான பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிடாமல் அரசியல் தளத்தில் வெகுஜனங்களிடம் செயற்படுவதைப் போலவே பண்பாட்டுத் தளத்திலும் தன்னுடைய செயற்பாடுகளை வெகுஜனப் பண்பாட்டின் அடித்தளத்தின் மீதே மேற்கொள்ள வேண்டும்.” (பக். 53)
“மனிதனது பிரக்ஞை குறை வளர்ச்சி அடைந்த நிலையில் தான் இருந்தது. முதிர்ச்சியற்றதாகவும் முன்னோக்கும் தன்மை இல்லாததாகவும் தான் இருந்தது. இது பில்லி சூனியம், மாந்திரீகம், மதம் போன்ற வடிவங்களில் வெளிப்பட்டது. மாந்திரீகமும் மதமும் பிரக்ஞையின் முதற் படிநிலைகள் ஆகும்.”
“கனவுகள், மூடநம்பிக்கைகள், மதம் போன்றன ஒரு நாள் இல்லாமல் போய்விடும் என்று நினைப்பது யதார்த்தமற்றதாகும். இவை அனைத்தும் மானிட இயற்கையின் பகுதியாகும்.”
“மனித இயற்கை, கனவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் மத மதிப்பீடுகளுக்குமான ஒரு வெளியை, அறவியல்பு ஒழுக்கங்கள் என்பதற்கான ஒரு வெளியை நம்மிடம் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட வகையிலான அறம் சார்ந்த வரையறை உருவாகவில்லையாயின் மனித குலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது சாத்தியமற்றதாகிவிடும்.”
“சோசலிசத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி என்பதும் இவ்வகையில் ஏற்பட்ட அறவியல் சார்ந்த நெருக்கடி தான். அறவியல் குறித்த, மதம் குறித்த கேள்விகளை எதிர்கொள்ளாத நெருக்கடிதான் அதனது தோல்விக்கும் அழிவுக்கும் மிகப்பிரதான காரணமாகும்.”
தேசிய விடுதலைப் போராட்டம்:
“சுயநிர்ணய உரிமை — அதாவது பிரிந்து செல்வது, சுதந்திரமான அரசுகளை உருவாக்குவது ஆகியவற்றை நிபந்தனையின்றி அங்கீகரிப்பது — தேசங்கள், இனக்குழுக்கள், மொழிக் குழுக்கள் மற்றும் மனித இனக் கோஷ்டிகளின் முற்போக்குச் சமூக வளர்ச்சி நலன்களுடனும் சோசலிச நலன்களுடனும் இணைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.”
“ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்கள் மக்களின் நலன்களின் பொதுக் கருத்துருவில் தெளிவாக வேறுபடுத்தப்பட வேண்டும்.”
அயர்லாந்தின் போராட்டமும், தேசியமும், சோசலிசமும்:
“சுயநிர்ணயத்தை மறுப்பதன் மூலமும் சிறிய தேசிய இனங்களின் தேசிய இயக்கங்களை அலட்சியப்படுத்துவதன் மூலமும் நாம் எத்தகைய புதை சேற்றில் சிக்கிக் கொள்கிறோம் என்பதை உணராத பல தோழர்கள் இருக்கிறார்கள்.”
“காலனிகளிலும் ஐரோப்பாவிலும் உள்ள சிறிய தேசங்களின் கிளர்ச்சிக் கலகங்கள் இல்லாமல், தனக்கே உரித்தான தற்சார்புகள் அனைத்தும் கொண்ட குட்டிப் பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் புரட்சிகரச் செயற்பாடுகள் இல்லாமல், நிலவுடைமையாளர்கள், திருச்சபை, முடியரசு, தேசிய இன ஒடுக்குமுறைகள் முதலானவற்றுக்கு எதிராக அரசியல் உணர்வு பெறாத பாட்டாளி மக்களும் அரைப் பாட்டாளி மக்களும் நடத்தும் ஓர் இயக்கம் இல்லாமல், சோசலிசப் புரட்சியைச் செய்து முடிக்க முடியும் என நினைப்பது சோசலிசப் புரட்சியை மறுதலிப்பது தான்.”
வரலாறும் பண்பாடும்
மலையகத் தமிழர்கள், தமிழக மக்களின் வழிமரபினர் என்ற வகையில், மனித குல நாகரிகத்தின் தொட்டிலிலிருந்து தோன்றியவர்கள் எனலாம். எத்தியோப்பாவில் கண்டறியப்பட்ட ஆதி மனிதனின் ‘டி.என்.ஏ’ தமிழக விவசாயியுடன் இணங்கிப் போதல், ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சிகள், உலகளாவிய மொழியியல், பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள், கடலியல் ஆய்வாளரான ஒரீகா பாலுவின் கண்டுபிடிப்புகள், தொல்லியலாளர்களான கீழடி S. இராமகிருஷ்ணன், R. பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆய்வுகள், பக்தவத்சல பாரதியின் பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள், கிரேக்க கூர்பிக் கடவுளுக்கும் காமன் கூத்துக்கும் இடையிலான தொடர்புகள், பின்லாந்தின் கலோவலா காவியமும் கம்பராமாயணத்துக்குமான தொடர்புகள், கீழைத்தேய நாடுகளின் இராமாயண ஒப்பீட்டாய்வு, மகாபாரதத்தின் கீழைத்தேயப் பரவல், இந்தோனேசிய மகாபாரதக் கதைகள், பூம்புகார் துறைமுகத் தளத்தின் 15,000 ஆண்டுகாலத் தொன்மை, மதுரை மாநகரத்தின் 700 ஆண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள், மாமல்லபுரச் சிற்பங்கள், சங்க நூல்கள், தொல்காப்பியம், திரிகடுகம், நன்னூல் காட்டும் வாழ்க்கை நெறிகள், இலக்கண இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர்கள் உலகின் ஆதிக்குடிகள் என நிறுவப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தமிழகத்தைப் பூர்வகுடித் தாயகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் நீண்ட, நெடிய வரலாற்றுக்கும், பாரம்பரியங்களுக்கும் உரித்துடையவர்களாவர்.
இலங்கை மலைக்காடுகளும் உற்பத்தி உறவுகளும்
மாத்தறை – உடுகம குன்றுகளில் கோப்பி (Coffee) பயிரிட்டதன் மூலமும், பின்னர் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தேயிலை, தென்னை, மற்றும் இறப்பர் (Rubber) தோட்டங்களை உருவாக்கியதன் மூலமும் தென் மாகாணத்தில் முதன்முதலில் தோட்டப் பொருளாதாரத்தை ஸ்தாபித்தவர்கள் மலையகத் தொழிலாளர்களே. இவர்கள், 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரையிலான இடைப்பட்ட பகுதிகளிலும், 300 மீட்டருக்கும் மேலான மலைப்பகுதிகளிலும் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகியவற்றைப் பயிரிடுவதற்கு ஏதுவாக, அடர்ந்த ஈரவலய மலைக்காடுகளையும், பனி படர்ந்த மலைச் சிகரங்கள் மற்றும் வறள்வலய பற்றைக் காடுகளையும் அழித்து நிலத்தைப் பண்படுத்தினர். இவர்கள், தமது எட்டு தலைமுறைகளின் உழைப்பையும் தியாகத்தையும் ஈந்து, இந்த நாட்டின் பொருளாதாரத்தையும், உற்பத்தியையும், ஏற்றுமதி வருமானத்தையும், அந்நிய செலாவணியையும் உருவாக்கி நிலைநிறுத்திக் கொடுப்பவர்களாக இன்று வரை திகழ்கின்றனர்.
தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றின் உற்பத்தி, பதப்படுத்தல், பண்படுத்தல், பொதியிடல், விநியோகம், நுகர்வுத் தொழிற்பாடுகளின் மூலவிதையாகவும் இயங்கு சக்தியாகவும் தோட்டத் தொழிலாளர்களே காணப்படுகின்றனர்.
மொழி
இலங்கை மலையகத் தமிழர்கள் செம்மொழிச் சிறப்புடைய தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டிருப்பதன் மூலம், ஆழமான வரலாற்றுரீதியான கலாசார அம்சங்களைப் பெற்றுள்ளனர். தாய்மொழி வழிச் சிந்தனை, உணர்திறன், எழுத்து, கலைப்படைப்புகள், இசை, ஓவியம், சிற்பம், ஓசை, ஒலிநயம், குறில், நெடில், உயிர்மெய், பதவியல், எழுத்தியல், எதுகை, மோனை, இலக்கண மரபுகள், பழமொழிகள், மரபுத்தொடர்கள், சங்க இலக்கியப் பனுவல்கள், பெயரடைகள், உரிச்சொற்கள் ஆகியவற்றைக் கொண்ட வளமான இலக்கணக் கட்டமைவுகள் மலையகத் தமிழர்களுக்கு உரித்தானவையாகத் திகழ்கின்றன.
மலையகத் தமிழர்கள், செவ்வியல் மொழியான தமிழையும், பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடைய தனித்துவமான தொழில்சார் மொழியையும், வாழ்வையும், பண்பாட்டையும் உரிமையாகக் கொண்டுள்ளனர். இவர்களின் தொழில்சார் வாழ்வனுபவமே, பல்லாயிரக்கணக்கான தொழிற் பெயர்கள், இடப்பெயர்கள், சினைப் பெயர்கள், ஆகுபெயர்கள், குணப் பெயர்கள், காலப் பெயர்கள், மற்றும் பொருட் பெயர்கள் போன்ற புதிய சொற்களஞ்சியங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
காதல், திருமண உறவுகள்
மலையகத் தமிழரிடையே பண்டையத் தமிழரிடையே காணப்பட்ட குடும்ப அமைப்பும் ஒருதார மணமுறையும் இன்றளவும் நிலவும் சிறப்புக்கூறுகளாகும். சகோதர, சகோதரிகள், அத்துடன் ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட சகோதர, சகோதரிகளிடையே திருமண உறவுகள் பேணப்படுவதில்லை. மேலும், பெற்றோர், பிள்ளைகளிடையே திருமண உறவு பேணப்படுவதில்லை. காதல் மணங்களும் கலப்பு மணங்களும் தற்போது அதிகரித்து வந்த போதிலும், தற்போதும் ஒருதார முறை பின்பற்றப்பட்டு, குழுவுக்குள், சாதிக்குள் இறுக்கமான குடும்ப அமைப்பை மலையகத் தமிழர்கள் பேணி வருகின்றனர்.
மலையகத் தமிழரிடையே ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், தற்கொலைகள் என்பன காணப்படுதல், அவர்களது காதல் உறவு சங்ககால வாழ்க்கை நெறியுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. மலையகமானது சங்க இலக்கியம் குறிப்பிடும் குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்) நிலப்பகுதிகளை ஒத்திருப்பதால், அந்நிலங்களுக்குரிய திணைப் பண்புகள், அதன் நீண்ட நெடிய நீட்சியாக மலையகத் தமிழர்களின் வாழ்விலும் காதல் உறவுகளிலும் நிலவுவதைக் காணலாம்.
தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும்
மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் பெருந்திரளாகச் செறிந்துள்ள தோட்டங்களில், தமது பிரதான தெய்வமாக மாரியம்மனை வழிபடுகின்றனர். மேலும், தோட்டங்களில் முருகன், பிள்ளையார், காளி, மருதைவீரன், மாடசாமி, பிடாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனியான வழிபாட்டு முறைகளைக் காணலாம். இச்சிறு தெய்வ வழிபாடுகளுடன் தொடர்புடைய நேர்த்திக் கடன்கள், படையல், பலி கொடுத்தல், வேள்விச் சடங்கு, காவல் கொடுத்தல் போன்றவையும், திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் முதலியவையும் மலையகத் தமிழர்களின் தெய்வ நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் வெளிப்படுத்துகின்றன.

வாழ்வும் வழிபாடும்
மலையகத் தமிழர்களிடையே, கருத்தரித்தல் முதல் வளைகாப்பு, பிள்ளை பிறப்பு, புண்ணியதானம், காது குத்து, பூப்பெய்தல் சடங்கு, தண்ணீர் ஊற்றல், வீட்டுக்கழைத்தல், மாமன்சீர், மாமன்விருந்து, அத்தைமார், ஆராத்தியெடுத்தல் ஆகியனவும், பெண்பார்த்தல், மணமகள்/ மணமகன் வீட்டார் வருகை, சம்மந்தம் பேசல், பொருத்தம் பார்த்தல், சம்மந்தம் கலத்தல், சம்மந்தி விருந்து, வேட்டி கட்டல், கொடியேற்றல், தோரணம் கட்டல், பந்தல் போடல், தாலி செய்தல்/ வாங்குதல், அழைத்தல், பணம் பாக்கு வைத்தல், நலுங்கு வைத்தல், முளைப்பாரி போடல், பெண்/ மாப்பிள்ளை அழைத்தல், கெட்டி மேளம், விளக்கேற்றல், அரசாணி கம்பம் நடுதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், பிள்ளை வரம் வழங்குதல், மடிப்பிச்சையிடல், மிஞ்சி போடல், பெண்/ மாப்பிள்ளை தோழன்/ தோழி பங்கேற்பு, நெற்றிச்சூடி கட்டல், தாலி கட்டல், மாப்பிள்ளை வாத்தியங்கள் முழங்குதல் போன்ற பண்டைய தமிழகம் முதல் இன்று வரையான தமிழர் வாழ்வியல் கூறுகளும் உறவுமுறைகளும் திருமணச் சடங்கு உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் காணப்படுகின்றன.
பூப்பெய்தல் சடங்கு
மலையகத் தமிழ்க் குடும்பங்களில் இடம்பெறும் பூப்பெய்தல் சடங்குகளில் பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் கூறுகள் நிரம்பியுள்ளன. இச்சடங்குகளில் நீர் வார்த்தல், களி கிண்டுதல், வண்ணான் சடங்கு, அடை சுற்றுதல், ஆலாத்தி எடுத்தல், ஓணான் கொடி சுற்றுதல், மாற்று கட்டுதல், கண்ணாடி பார்த்தல், குங்குமப் பூ வைத்தல், வீட்டுக்கழைத்தல், புண்ணியதானம் செய்தல் ஆகியன முக்கிய இடம்பெறுகின்றன. அத்துடன், மாமன் சோறு மற்றும் ஆட்டுக் கிடாய் விருந்து அளிப்பது போன்றவையும் இச்சடங்கின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றன.
திருமணச் சடங்குகள்
மலையகத் தமிழரின் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணச் சடங்குகளில், நிச்சயத் தாம்பூலம் பரிமாற்றல், பத்திரிகை வைத்தல், பொன்னுருக்கல், தாலி செய்தல், மணமகள் – மணமகன் வருகை, மூர்த்தக்கால் ஊன்றல், ஓமம் வளர்த்தல், கன்னிகாதானம், மாங்கல்யம் கட்டல், தனி வழி போதல் ஆகிய சடங்குகள் இடம்பெறுகின்றன.
மரணச் சடங்குகள்
மலையகத் தமிழரின் ஈமச் சடங்குகளில், உற்றார் வருதல், பாலூற்றல், மாரடித்து அழுதல், கேதம் சொல்லுதல், தேங்காய் உடைத்தல், கோடி போடல், கட்டை மொய் பிடித்தல், சீரெடுத்தல், நீர்மாலை எடுத்தல், அரப்பு வைத்தல், நெய்ப்பந்தம் பிடித்தல், சீதேவி வாங்கல், வாய்க்கரிசி போடல், தாலி அறுத்தல், கொள்ளிக்குடம் எடுத்தல், பங்காளி உரையாடல், விடை கொடுத்தல் போன்ற சடங்குகள் இடம்பெறுகின்றன. அத்துடன், துக்க நிவாரணச் சடங்குகளாக சலிப்புச் சோறாக்கல், மீண்டும் பாலூற்றல், எட்டாம் நாள் காரியம், கருமாதி, அமாவாசை, திதி, திவசம் பிடித்தல் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
ஆடைகள்
மலையகத் தமிழர்களின் ஆடைகள் பாரம்பரிய ஆடைகளாகவோ அல்லது அதற்கு ஒத்திசைவானதாகவோ காணப்படுகின்றன; இதில் ஆண்கள் வேட்டி, சட்டை, சால்வை என்பவற்றையும், பெண்கள் முழு நீளப் புடைவையையும் அணிகின்றனர், மேலும் கட்டிளமைப் பருவப் பெண்கள் பாவாடை – தாவணி அணிகின்றனர்; இந்த ஆடைகள் குடும்பம், சமூக, கலாசார நிகழ்வுகளில் சிறப்பாக அணியப்படுகின்றன. ஆடைகளின் நிறங்களாக, காளியின் உடை நிறமான சிவப்பு, மாரியின் உடை நிறமான பச்சை, மரங்கள் நிறமெனப்படும் மஞ்சள், ஊதா, நீல நிற உடைகள் விரும்பி அணியப்படுகின்றன.
அணிகலன்கள்
மலையகத் தமிழர்களின் அணிகலன்களாக தாலிகள், மணிகள், தோடுகள், மாட்டல்கள், மூக்குத்திகள், நெற்றிச்சூடிகள், சிமிக்கிகள், கம்மல்கள், தொங்கட்டான்கள், சரிகை மினுக்கிகள் என்பன காணப்படுகின்றன.
ஒப்பனைகள்
மலையகப் பெண்களின் பாரம்பரிய ஒப்பனைப் பொருட்களாக மஞ்சள், பயற்றம் மாவு, உழுந்து மாவு, கற்றாளை, கனகாம்பரம், மல்லிகைப்பூ, மருதாணி என்பன காணப்படுகின்றன.
உணவு
மலையகத் தமிழர்களின் உணவாக, நெல்லரிச் சோறு, கோதுமை மா, கடலை, பயறு, பருப்பு என்பன பிரதானமாகவும் வாசனைப் பொருட்களாக பூண்டு, வெங்காயம், இஞ்சி, மஞ்சள், கொள்ளு, எள்ளு, ஏலம், கராம்பு, சோம்பு, மிளகு, வெந்தயம், சீரகம், கடுகு, மல்லி, கறிவேப்பிலை, ரம்பை, கறுவா என்பனவும் காணப்படுகின்றன.
மலையகத் தமிழரின் சமையலில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், கடலை எண்ணெய், இலுப்பெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகளும்; அரிசிக் கொழுக்கட்டை, பயற்றங்கொழுக்கட்டை, உளுந்த வடை, பருப்பு வடை, மா வடை, அதிரசம், கடலைச் சுண்டல், அரிசிப் பலகாரம், குழிப்பணியாரம், அவல், பொங்கல், பாற்சோறு, புளியோதரை, தயிர் சாதம், நெய் சாதம், மோதகம், கஞ்சி, பாயாசம், அப்பளம், சக்கரைப் பொங்கல், சீனிப் பொங்கல், இடியப்பம், இட்டலி, தோசை, பிட்டு, உப்புமா, அராட்டி, மணிப்பிட்டு, உளுந்தங்களி, சோளம் போன்ற திண்பண்டங்களும் காணப்படுகின்றன. தமிழரின் முக்கனிகளான மா, பலா, வாழை என்பனவும், பப்பாளி, கொய்யா என்பனவும் இவர்களது உணவில் இடம்பெறுகின்றன. மேலும், வடை, ரசம், பாயாசம், அப்பளம், மோர், தயிர், நெய் என்பன சிறப்பான விருந்துபசார உணவுகளாகக் காணப்படுகின்றன.
படையல்
மலையகத் தமிழர்களின் படையல் விருந்தில், கடவுளர் மற்றும் இறந்தவர்களுக்கு, தலை வாழையிலையின் மத்தியில் சோறு, பருப்புக்கறி, நெய்யுடன் சுற்றிவர பல்வேறு மரக்கறிகள், வடை, பாயாசம், அப்பளம், சர்க்கரை என்பன படைக்கப்படுகின்றன; நாட்டுப்புறச் சிறு தெய்வங்களுக்கு இறைச்சி, ஆட்டுக்கறி, நாட்டுச் சேவல் கறி, பெட்டைக் கோழிக் கறி, முட்டை என்பனவும் படைக்கப்படுகின்றன. மேலும், மாரியம்மன் திருவிழாவின் இறுதி நாளில் கருவாட்டுக் குழம்பும் கட்டுச் சோறும் சமைக்கப்படுவதோடு, எட்டாம் நாளன்று கோழி, ஆடு என்பன பலியிடப்பட்டுப் படைக்கப்படுகின்றன.
மலையகத் தமிழரின் தெய்வங்களான மாடன், சுடலை மாடன், கருப்பு, சங்கிலிக் கருப்பு, முனி, சடாமுனி, மருதை வீரன், மருதையன், காளி ஆகிய கோவில்களில் ஆடு வெட்டும், சேவல்/ கோழி வெட்டும், வேள்வி என்பனவும் மாமிசப் படையலும் நடைபெறுகின்றன; மந்திர, சூனியச் சடங்குகளின் போதும் பலி கொடுத்தல் மற்றும் மாமிசப் படையல்கள் இடம்பெறுகின்றன.
பேயோட்டல்
மலையகத்தில் ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் என யார் நோய்வாய்ப்பட்டாலும், குறிப்பாக அந்நோய் தீர்க்க முடியாததாகக் காணப்படும் போது, பாரம்பரியப் பேயோட்டும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. பூசாரிமார் வருகை தந்து இரவு நேரத்தில் இச்சடங்கை நிகழ்த்துவர். இதில் குலதெய்வம் உட்படப் பல தெய்வங்களை அழைத்துப் பேயோட்டும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இச்சடங்கின் போது மாடன், மாரி, காளி, பத்திரகாளி, உத்திரகாளி, முனி, சடாமுனி, கருப்புசாமி, மாகாளி, மாகாமுனி, வைரவர் எனப் பல்வேறு நாட்டுப்புறத் தெய்வங்கள் அழைக்கப்பட்டுப் பேயோட்டும் சடங்கு நிகழ்த்தப்படும்.
இச்சடங்கில் உடுக்கடிப் பாடல்கள், பேயோட்டும் பாடல்கள் பாடப்படும் போது சாட்டை கொண்டு பேய் பிடித்தவரை அடித்தல், பேயைக் கட்டுதல், வெட்டுதல், ஓட்டுதல், ஒதுக்குதல் போன்ற செயல்கள் மூலம் பேய்ப் பிணி தீர்க்கப்படுகிறது.
“அந்தி முனி சந்தி முனி ஆகாசமான முனி
சக்தி முனி கருப்பா சந்தியில் வாருமப்பா
ரோத முனி கரப்பா இப்பையே நீ இறங்கி வாருமப்பா
எல்ல முனி கருப்பா இப்பையே நீ வாருமப்பா
அய்யா முனியாண்டி அண்ணாதுரை வாருமப்பா
உனக்கு காவலிட்டேன் உத்தமனார் சந்நிதியில் ஊர காக்க வேணு உடனடியா வாருமப்பா
ஏய் முனிக்கருப்பா நீ வர வேணும் இந்நேரம்
ஏய் ஐந்து பஞ்ச பூதமும் அடக்க நீ வர வேணும்
ஏய் ஐந்து பஞ்ச பூதத்திலும் அமைந்த பொருளாருத்து
உண்மைய நான் உரைக்க முனியய்யா வரவேணும்” போன்ற வகையான பாடல்கள் பூசாரியால் பாடப்படுகின்றன.
சூனியச் சடங்குகள்
ரெஜி டேப்ரே எனும் ஊடகவியலாளர், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின் போது ஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக சூனியச் சடங்குகள் பயன்படுத்தப்பட்டதை எடுத்துக்காட்டுகிறார். எதிரிகளின் மனதைக் கட்டுப்படுத்தவும், அச்சுறுத்தவும், உளவியல் ரீதியாகச் சீர்குலைக்கவும், எதிரிப் பெண்களை வசப்படுத்தவும் பாரம்பரியச் சூனியச் சடங்குகள் உலக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்கிறார். இலங்கை மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடையே, எதிரிகளைப் பழி தீர்க்கவும், காலனித்துவ/ பின்காலனித்துவ அதிகாரத்தை வசப்படுத்தவும், பெண்கள்/ ஆண்களைக் கவரவும், காதலர்களை வசப்படுத்தவும், கல்வி/ முன்னேற்றத்தைத் தடுக்கவும் இச்சூனியச் சடங்குகள் இரகசியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பூசாரிகளால் நிகழ்த்தப்படும் இச்சடங்குகள், எதிரிகளை அச்சுறுத்தி, அடிபணிய வைத்து, உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தி, வசப்படுத்தும்/ கீழ்நிலைப்படுத்தும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தோட்டப் பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பூசாரிகளும் அவர்களின் உதவியாளர்களும் காணப்படுகின்றனர்; இவர்கள் தற்போது தமது சடங்குகளுக்கான கட்டணமாக குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் இலட்சக்கணக்கான ரூபாய்கள் வரை அறவிடுகின்றனர்.
நம்பிக்கைகள்
மலையகத் தமிழரிடையே தவளை கத்தினால் மழை வரும், காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள், நாய் ஊளையிட்டால் மரணம் நிகழும், பூனை கத்தினால் மரணம் நிகழும், கன்னி வாக்கும் காளை வாக்கும் பலிக்கும், கருநாக்குச் சொல் பலிக்கும், பூனை குறுக்கிட்டால் காரியம் கெடும், விதவை, வண்ணான், பரியாரியைக் கண்டால் பயணம் பலிக்காது, கர்ப்பிணி தேர் பார்க்கக் கூடாது, கிரகணம் பீடித்தால் உணவு நஞ்சுறும் போன்ற எண்ணற்ற நம்பிக்கைகள் நிலவி வருகின்றன.
பண்ட பாத்திரங்களும் கருவிகளும்
மலையகத் தமிழரின் பண்ட பாத்திரங்களாக சட்டி, பானை, குவளை, கிண்ணம், தட்டு, செம்புக்குடம், சருவம், இட்டலிப் பானை, குண்டான், அரிசட்டி, வடிசட்டி, கரண்டி, ஆழக்கரண்டி, இடியப்பக் கட்டை, இடியப்பத் தட்டு, தார்க்குச்சி, உரல், உலக்கை, அம்மிக்கல், ஆட்டுக்கல், திருகைக் கல், இடியப்பக் கல், பிட்டுப் பானை, ரொட்டித் தகரம், உணவுக் கிண்ணம், உணவுத் தட்டு, குவளைக் கல் போன்ற மண், வெண்கல, செம்பு, ஈயப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொடரும்.



