நகராத தேர்: பனை அபிவிருத்தி சபை 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

நகராத தேர்: பனை அபிவிருத்தி சபை 

August 20, 2025 | Ezhuna

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முக்கிய பொருளாதார வளம், பனை. இதன் முகாமைத்துவப் பொறுப்பை பனை அபிவிருத்தி சபையும் அதனுடன் இணைந்த பனை ஆராய்ச்சி நிறுவனமும் வகிக்கின்றன. பனை வடக்கு – கிழக்கின் இயற்கைத் தாயக வளமாகச் செறிவுடன் காணப்படுகிறது. அது வெறும் மரமல்ல, தமிழர் அடையாளத்துக்கும், வாழ்வாதாரத்துக்குமான பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், பனை அபிவிருத்தி சபை மத்திய அரசின் கீழ் செயற்படுவதால் வடக்கு – கிழக்கின் பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மாகாணங்களுக்கு அதிகாரப் பங்கீடு வாக்குறுதி அளிக்கப்பட்டபோதும், பனை அபிவிருத்தி போன்ற முக்கிய துறைகள் இன்னும் மத்தியப்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழர் வாழ்வாதார வளங்களின் மீதான அரசியல் கட்டுப்பாடாகவும், பனை அபிவிருத்தி தொடர்ந்தும் சிக்கலுக்குள்ளாவதற்குமான காரணமாகவும் திகழ்கிறது. பனை அபிவிருத்தி சபை இன்றும் ஒரு நகர மறுக்கும் தேராக நிலைகொண்டமைக்கான காரணங்களில் ஒன்று இந்தப் பனைசார் பொருளாதார அரசியல் எனலாம். 

இலங்கையில் அரசுப் பொது நிறுவனங்கள் மீதான அதிகரிக்கும் சமூக அக்கறை, அவற்றின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகும். சமூக, பொருளாதார, கலாசார ஒதுக்குதல் மற்றும் அதிகார வர்க்கத்தின் பாகுபாடே இந்த நிலைக்குக் காரணமாகும். நல்லிணக்கத்தை வளர்க்கவும், வளங்களை நியாயமாகப் பகிரவும், சேவையைப் பயனுள்ளதாக வழங்கவும் பொது நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அவை அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கி சமூக ஒற்றுமையையும் ஜனநாயக ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்த வேண்டும்.

பொது நிறுவனங்கள் உட்கட்டமைப்பு, சந்தை ஒழுங்குபடுத்தல், சமூகப் பாதுகாப்பு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க வேண்டும். குடிமக்களின் தேவைகளுக்குப் பொறுப்புக்கூறி, நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும். சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையுடன் கூட்டாண்மை செய்து புதுமையை ஊக்குவித்து, நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை முன்னேற்ற வேண்டும். சேவை வழங்கலில் புதுமை, அதிகாரிகளின் திறன் மேம்பாடு, நல்லிணக்கம், மோதலின் காரணங்களை தீர்க்கும் திட்டம் ஆகியவையும் அவசியம்.

இலங்கை நாடாளுமன்றச் சட்டங்களால் உருவான பொது நிறுவனங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், அவை மக்களின் கடும் கண்காணிப்பு மற்றும் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. வரிப்பணத்தில் இயங்கும் இந்நிறுவனங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதபோது சுமையாகக் கருதப்படுகின்றன. சேவைகள் மற்றும் வாய்ப்புகளுக்கான சமமான அணுகலை உறுதி செய்யாத நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன.

பொது நிறுவனங்கள் மீதான அக்கறை மற்றும் அவதானமே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை உறுதிப்படுத்தும். சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், அவை கடந்த காலத்திலிருந்து மாறி புதிய நிலையை எட்ட வேண்டும். இந்நிறுவனங்கள் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்களின் பார்வையைத் தவிர்க்க இயலாது. எனவே, எப்போதும் விழிப்புடன் இருந்து பொறுப்புகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.

அரசுப் பொது நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்தி, பொதுமக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, திறந்த மற்றும் பொறுப்பான ஆட்சி நடைமுறையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டதே இலங்கை நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் (Sectoral Oversight Committees in Sri Lanka) ஆகும். இவை அனைத்துப் பொது நிறுவனங்களையும் கண்காணித்து, குறைகளைத் தீர்த்து, செயற்திறனைத் தடுக்கும் காரணிகளை நீக்கி, சிறந்த நிர்வாகம் மற்றும் உற்பத்திக்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அரச நிதியில் இயங்கும் நிறுவனங்களுக்கு, தெளிவான தேசிய கொள்கையை திறம்படச் செயற்படுத்தும் முறையை உறுதி செய்வதும் அவற்றின் பொறுப்பு ஆகும். பனை அபிவிருத்தி சபையின் முழுமையான இயக்கத்தையும் இக்குழுக்கள் மேற்பார்வை செய்கின்றன. ஆனால், கடந்த பத்து ஆண்டுகாலக் கணக்காய்வு அறிக்கைகள், சபை வங்குரோத்து நிலையில் உள்ளதைக் காட்டுகின்றன. போருக்குப் பிந்தைய அழுத்தங்கள் இருந்தபோதும், 2019க்குப் பிந்தைய பதினைந்து ஆண்டுகளில் சபை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை என்பதை நிகழ்ச்சி நிரல் மற்றும் நிதி அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

பனை அபிவிருத்தி சபை (Palmyra Development Board – PDB) 

பனை அபிவிருத்தி சபை (Palmyra Development Board – PDB) என்பது பனை சார்ந்த பொருளாதார, கலாசார தொழில்துறையை மேம்படுத்த இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். தற்போது தேக்கநிலையில் உள்ள பனைத் துறையைச் செயற்திறன் கொண்ட முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காலனிய காலத்தில் ஒல்லாந்தர்கள் பனையைக் கட்டடத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, வரியும் விதித்தனர். முன்னோர்கள் பனையிலிருந்து நூற்றுக்கணக்கான பயன்களைக் கண்டறிந்தனர்; சோமசுந்தரப் புலவர் “எட்டுநூறு வகைப் பயன் நற்பயனிக்கின்ற இன்பப்பனை” எனப் புகழ்ந்தார். கம்போடியா பனையைத் தேசிய மரமாக அங்கீகரித்துள்ளது. வடக்கு மாகாண சபையின் சின்னமாகவும் பனை உள்ளது.

பனைமரம் தமிழர் வாழ் பிராந்தியங்களின் சமூக – பொருளாதாரக் கட்டமைப்பில் அத்தியாவசியமான ஒன்று. அது வாழ்வாதாரத்தை ஆதரித்து, பொருளாதார வாய்ப்புகளை வழங்கி, கலாசாரப் பாரம்பரியத்தைப் பேணுகிறது. மரத்தின் பல்வேறு பகுதிகள் பல தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்கிறது. பனைத் தொழில் கிராமப்புறங்களில் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது; பாளை தட்டுபவர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இதில் பங்கேற்கின்றனர். மதிப்புக் கூட்டல் முறைகள் மூலம் வெல்லம், பனம் பானம் போன்ற பொருட்கள் அதிக சந்தைப் பெறுமதியைப் பெறுகின்றன. இதனால் வறுமை குறைந்து, பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுகிறது. சுற்றுலாத் துறையும் பனையை விரும்புகிறது; பனை சார்ந்த உணவுகள் மற்றும் தயாரிப்புகள் பயணிகளை ஈர்க்கின்றன. ‘வாழ்க்கை மரம்’ எனப்படும் பனை உள்ளூர் மரபுகளுடன் இணைந்து சமூகப் பங்கேற்பையும் உரிமை உணர்வையும் ஊக்குவிக்கிறது. பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அதன் தயாரிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுற்றுச்சூழல் ரீதியாக பனைமரம் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு வாழ்விடமளிக்கிறது. வலுவான வேர் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, மண் அரிப்பைக் கட்டுப்படுத்த, காற்றுத் தடையாகச் செயற்படுகிறது. கடுமையான காலநிலையிலிருந்து சூழலைக் காக்கிறது. பழம், சாறு, நார், மரம், இலை போன்ற பல்வேறு வளங்களை வழங்கி உணவு, கட்டடம், கைவினை உள்ளிட்ட துறைகளை ஆதரிக்கிறது. பனை மீள்தன்மை, நிலைத்தன்மை, வள மேலாண்மையின் சின்னமாகவும் பாரம்பரிய விவசாய – சுற்றுச்சூழல் அமைப்புகளின் மூலக்கல்லாகவும் திகழ்கிறது.

பனைசார் நிறுவனக் கட்டமைப்பு 

நிலையான வளர்ச்சிக்கு வலுவான துறைசார் நிறுவனச் செயற்திறன் அத்தியாவசியம். இந்நிறுவனங்கள் நீண்டகால பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய கொள்கைச் செயற்படுத்தல், வள முகாமைத்துவம், ஒத்துழைப்பு ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பை வழங்குகின்றன. சட்ட அடிப்படையிலான துறைசார் நிறுவனங்களே கொள்கைகள், ஒழுங்குமுறைகள், சுற்றுச்சூழல் விதிகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பொருளாதார விரிவாக்க நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்க முடியும். பனை அபிவிருத்தி சபை, பனை வளங்களைத் தரநிலைப்படுத்தி ஆரோக்கியமான சூழல் மற்றும் நிலையான வள மேலாண்மையை உறுதி செய்யும் முக்கிய அமைப்பு ஆகும். பொது நிதி, சொத்துகள், இயற்கை வளங்களை நியாயமாகப் பயன்படுத்தி, வெளிப்படையான அபிவிருத்தி முன்னெடுப்புகளை மேற்கொள்ள அதன் தலைமைத்துவம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். பனைசார் அரச, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நிலையான அபிவிருத்தி  நடைமுறைகளைப் பின்பற்றவும், பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் மற்றும் நீர் வளங்களின் பொறுப்பான பயன்பாட்டை உறுதி செய்யவும் முடியும். சட்டரீதியாக கூட்டு ஒத்துழைப்பு மூலம் செய்யவேண்டிய பல கடமைகளை ஒருங்கிணைப்பதில் பனை அபிவிருத்தி சபையின் வகிபாகம் முக்கியமானதாகும். 

ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பு ஆகியன நீடித்த அபிவிருத்தியின் உயிர் நாடிகள் ஆகும். பனை வள வளர்ச்சிக்கு அரசு, வணிகம், சிவில் சமூகம், உள்ளூர் சமூகங்கள், கூட்டுறவு போன்ற பங்குதாரர்களிடையே இணக்கம் அவசியம். பனை அபிவிருத்தி சபை, ஆலோசனை, உரையாடல், பங்கேற்புத் தளங்களை வழங்கி, அனைத்துப் பங்குதாரர்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்குப் பதிலளிக்கும் வளர்ச்சி முயற்சிகளை உறுதி செய்கிறது. திறன்மிக்க நிறுவனம் குடிமக்கள், முதலீட்டாளர்கள், பிற பங்குதாரர்களிடையே நம்பிக்கை, பொறுப்புணர்வை வளர்க்கிறது; இது முதலீட்டை ஈர்க்க, சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க, நீண்டகால வெற்றியை உறுதி செய்ய உதவுகிறது. பொது நிதியில் வெளிப்படைத்தன்மையும், சுயாதீன மேற்பார்வை அமைப்புகளும், நிறுவனங்களை அவற்றின் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்கின்றன.

தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை ஊக்குவித்தல் என்பதை பனைசார் துறையில் காண்பது அரிதாகவுள்ளது. சிறப்பாகச் செயற்படும் நிறுவனங்கள், நிலையான வளர்ச்சிக்கான தொலைநோக்கு மற்றும் உத்திகளை உருவாக்க, சிறப்பாகப் பங்களிக்க முடியும். தெளிவான இலக்குகளை அமைத்தல், விரிவான திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அந்த இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவையும் இவற்றில் அடங்கும். உதாரணமாக, பனை அபிவிருத்தி சபை பிராந்திய உத்திகளை உருவாக்க முடியும்; அதன்மூலம் நிலையான மாற்றத்தை உணரவைக்க முடியும். 

வலுவான நிறுவனச் செயற்திறன் நல்லாட்சிக்கு ஆதாரமானது. பயனுள்ள கொள்கைச் செயற்படுத்தல், பொறுப்பான வள மேலாண்மை, பங்குதாரர் ஒத்துழைப்பு மற்றும் மூலோபாயத் திட்டமிடல் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம், நிறுவனங்கள் சமமான, வளமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. பனைசார் அபிவிருத்தியில் பனை அபிவிருத்தி சபையின் வலுவான நிறுவனச் செயற்திறன் தான் நிறுவன நல்லாட்சிக்கும் அதன் செய்திறனுக்கும் வலுவான அடிப்படையாக அமையும். 

பனைத் துறையில் தனிநபர் – சமூக உறவு மிக மதிப்புமிக்கது. இந்தியா, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பனைப் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகின்றது. பனை மரத்திலிருந்து உணவு, சாறு, இலை, பழம், கிழங்கு, தண்டு போன்ற மூலப்பொருட்கள் உலகச் சந்தையில் மதிப்பைப் பெற்றுள்ளன. இலங்கையின் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மோதல்கள் பனைத் தொழிலைப் பாதித்தாலும், அது தற்போது மீண்டு வருகிறது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கப் பல முன்னெடுப்புகள் செய்யப்படும் போதிலும், பனைப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய பங்களிப்பை மட்டுமே வழங்கி வருகின்றது.

பனை அபிவிருத்தி சபைக்கான அமைச்சக நிகழ்ச்சித்திட்ட வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் அளவுநிலையை ஒப்பிடும் போது, பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். உதாரணமாக 2025 இற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையின்படி பார்க்கையில் பனை அபிவிருத்தின் தேக்க நிலையை நன்கு உணரமுடியும்.     

பணவீக்க நிலைக்கு முந்திய கால அளவின்படி, செயற்பாட்டு மூலதனத்தின் அளவு, வெறும் 95.43 மில்லியன் ரூபாய்களே. வெறும் சம்பள மற்றும் இதர கொடுப்பனவுகளுக்கே இடர்படும் நிலையில், இது அபிவிருத்தியின் வெளிப்பாட்டைக் கொண்டுவரமுடியாத  நிலையில் இருப்பதைக் காணலாம். 

நிதி ஒதுக்கம் தொகை பணவீக்க நிலைக்கு முந்தைய பெறுமதி 
மூலதன செலவுக்கான மதிப்பீடு – 2025 (ரூ. மில்லியன்)9230.66
செயற்பாட்டு மூலதனம் – 2025  (ரூ. மில்லியன்)286.3195.43
உண்மையில் ஒதுக்கப்பட்ட தொகை நிதி ஒதுக்கம் – 2024விடுவிப்பு செலவு – 2024 (ரூ. மில்லியன்)
மூலதனச் செலவுக்கான மதிப்பீடு – 2024 (ரூ. மில்லியன்)24.0023.11
செயற்பாட்டு மூலதனச் செலவு – 2024  (ரூ. மில்லியன்)145.00255.21

2024  ஆண்டுக்கான நிர்வாகச் செலவுகள் ஒதுக்கப்பட்ட நிதி அளவைவிடக் கணிசமாக அதிகரித்த நிலையைக் காண முடிகின்றது. உண்மையில் ஒதுக்கப்பட்ட நிதி 169 ரூ. மில்லியன் (மூலதன மற்றும் தொழிற்படு நிர்வாகச் செலவுகள்). ஆண்டுக்கான மொத்தச் செலவு 278.32 ரூ. மில்லியன். 85% செலவுகள் சம்பளக் கொடுப்பனவுக்கு மட்டும் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் சபைக்குரிய நிதி ஒதுக்கம், நிர்வாகச் செலவுக்கு மட்டும்  கட்டுப்பட்டமையால், அபிவிருத்தியின் வாசனையைக்கூட உணராத நிலைதான் தற்போதைய சபையின் வருடாந்தப் போக்காக உள்ளது.

பனைசார் உற்பத்தி 2023 அடையப்பட்டது2024 இலக்கு 2024 அடையப்பட்டதுஅவதானம் 
வெல்லம் மெட்ரிக் டன்6178582023 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தியில் 74%  குறிப்பிடத்தக்க குறைப்பு.
பனங்கள்ளு (லிட்டர்)10,584,53411,000,00010,592,000உற்பத்தி இலக்கு அடையப்பட்டது; நெருங்கிவிட்டது.
பனங்களி 27,39465,00046,834குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.
 பனங் கிழங்கு (மெட்ரிக் டன்)403420336இதன் பொருளாதார மதிப்பு 100 மில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும், மேலும் அதன் மதிப்பு SLR இல் சுமார் 500 மில்லியனாக இருக்கும்.
நார் (மெட்ரிக் டன்)605545இதன் பொருளாதார மதிப்பு 1 பில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும், மேலும் இந்தத் தொழில் மேம்படுத்தப்பட்டால் அதன் மதிப்பு LKR இல் சுமார் 50 பில்லியனாக இருக்கும்.
கைவினைப் பொருட்கள் (ரூ. மில்லியன்)515549.5உலகளாவிய போட்டித்தன்மைக்கு ஏற்ப உற்பத்தி புதுமைப்படுத்தப்பட்டால் அதற்கு 200 மில்லியன் தேவைகள் உள்ளன. 
பனாட்டு (மெட்ரிக் டன்)7116.8இதன் பொருளாதார மதிப்புத் தோராயமாக LKR 500 மில்லியன் ஆகும்; குறிப்பாக உற்பத்தி மதிப்புச் சேர்ப்பதில் கவனம் செலுத்தினால்.
பனஞ் சாராயப் போத்தல் 281,894450,00026,000
பனை மரக் கட்டடப் பொருட்கள்  8,06410,0005,748

மூலம்: முன்னேற்ற அறிக்கை – 2024, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகம், பெருந்தோட்டத் துறை, பக்கம் 83. https://parliament.lk/files/pdf/budget/2025/progress-reports/pr-20250314-en.pdf

உற்பத்திச் சவால்கள், சமூகப் பாதிப்புகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்

2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான பனை உற்பத்தி அளவுகள் குறைந்த நிலையைக் காட்டுகின்றன. பனை வெல்லம் திட்டமிட்ட அளவைவிடக் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, 2024க்கான பனங்கிழங்கு உற்பத்தி 336 மெட்ரிக் டன்; இது திட்டமிட்ட அளவை அடையாத நிலையைப் பிரதிபலிக்கிறது. சரியான திட்டமிடல் மூலம் பனங்கிழங்கு உற்பத்திப் பொருளாதார மதிப்பை 100 மில்லியன் டன் வரை கொண்டு சென்று, சுமார் 500 LKR மில்லியன் மதிப்பை உருவாக்க முடியும். பனை அபிவிருத்தி சபையின் வருடாந்திர நிர்வாக நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முனைப்புகள் குறைவாக இருப்பதே, உற்பத்திக் குறைவுக்கும் நிறுவனச் சரிவுக்கும் முக்கிய காரணமாகும்.

பனைசார் கள்ளு உற்பத்தியில் முழுமையாக ஈடுபடும் சமூகங்களின் சமூக, பொருளாதர நிலை பின்னடைவில் நடைபோடுகின்றது. கள்ளு உற்பத்தியில் கணிசமான வருமானம் இருக்கின்றது என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், உற்பத்தியை மேற்கொள்ளும் சமூகங்கள் மிகவும் பின்னடைவை எதிர்கொள்வதன் காரணங்கள் யாவை? கள் விற்பனை மூலம் தங்கள் வருமானத்தை ஈட்டும் குடும்பங்கள் தங்கள் குடும்பச் செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் இடர்படுகின்றன. இளைய தலைமுறையினர் கள் இறக்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். இது இந்தப் பாரம்பரியத் தொழிலின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. கூடுதலாக, கலால் துறையால் அனுமதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் கள்ளைக் கொண்டு செல்லும்போது, உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் இடையிலான தூரம் ஒரு சவாலாக உள்ளது. இதன் விளைவாக, உச்ச பருவங்களில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான கள் அடிக்கடி வீணாக்கப்படுகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் மரங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. இது, வருமானத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் நிலையை உருவாக்குகின்றது. 

தற்போது, சில கூட்டுறவு நிறுவனங்கள் பருவகாலம் இல்லாத காலத்தில் போத்தல் கள்ளை விற்பனைக்கு உற்பத்தி செய்கின்றன. மேலும், பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்களிடம் அவ்வாறு செய்வதற்குத் தேவையான பதப்படுத்தும் வசதிகள் இல்லை. சில கூட்டுறவு நிறுவனங்கள், பனை அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள வடிகட்டுதல் நிலையங்களுக்கு உபரியை அனுப்பின. ஆனால், வடிகட்டுதல் அமைப்புகளிடம் கூட அனைத்து உபரி உற்பத்தியையும் செயலாக்கும் திறன் இல்லை. சாராய நுகர்வு அதிகரிப்பு, கள் நுகர்வை  கணிசமாகக் குறைத்துள்ளது. பனை மரங்களில் ஏறிக் கள் சேகரிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், பதப்படுத்தும் முறையைச் செயற்படுத்துதல் மற்றும் பதிவு செய்யப்பட்ட கள்ளை உற்பத்தி செய்வதற்கான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுவுதல் ஆகியவை இன்று அவசியமாக உள்ளது. சுற்றுலாத் துறையைக் கவருவதில் கள் முக்கிய இடம் வகித்தாலும், கிடைப்பது அரிதாக உள்ளது.

பனைத் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையங்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியன. புளித்த கள்ளுக்குப் பதிலாக இனிப்புக் கள் உற்பத்தி, பானம் மற்றும் வெல்லம் தயாரிக்கும் முயற்சிகள் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், கூட்டுறவில் ஒருமைப்பாடு காணப்படுவதில்லை. பனை – தென்னைக் கூட்டுறவு அமைப்புகள் தனித்துவிடப்பட்டு, ஒருங்கிணைந்து செயற்பட முடியாது உள்ளமை, இரண்டினதும் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

அரை வறண்ட மண்டல வளங்களில் பனை மரத்தின் பழங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை அதிக நீர், சர்க்கரை, வைட்டமின் சி, புரோவிடமின் ஏ, தாதுக்கள் மற்றும் நார் நிறைந்தவை. குறுகிய பழ வாழ்நாள் மற்றும் கூழ் பிரித்தெடுப்பில் சிரமம் காரணமாக சத்து இழப்புகள் ஏற்பட்டாலும், பனம் பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்த இயற்கைத் தயாரிப்புகளுக்கான பெரும் வாய்ப்பைக் கொண்டவை. பனம் பழத்தை, கூழ், உணவுப் பரவி (Food Spread) மற்றும் டொஃபி தயாரிப்பில் பயன்படுத்தலாம்; இவை சுவையிலும், வணிக ரீதியிலும் மதிப்புடையவை. பனங்கூழ்ப் பரவியை அறை வெப்பநிலையிலும் குளிர்சாதனப் பெட்டியிலும் 9 – 12 மாதங்கள் வரை பாதுகாப்பாகச் சேமிக்கலாம். 

சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி, பனையை ஒரு குறிப்பிடத்தக்க தொழில்துறை வளமாக அங்கீகரித்துள்ளது. கோடெக்ஸ் (Codex) தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் குறைந்த கிளைசெமிக் (Glycemic) பனைச் சர்க்கரை, நீரிழிவு நோயாளிகளுக்கான சிற்றுண்டிகள் மற்றும் சாக்லேட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஃப்ளாஷ் – பேஸ்டுரைஸ் (Flash-pasteurized/ HPP) செய்யப்பட்ட நீரா (Neera) 60 நாட்கள் ஆயுளை (Shelf Life) நீட்டிக்கிறது; இது செயற்பாட்டுச் சோடாக்கள் மற்றும் டானிக் வினிகர்களுக்கு (Tonic Vinegars) ஏற்றதாக அமைகிறது. ஸ்ப்ரே செய்யப்பட்ட உலர்ந்த கிழங்கு (Spray-dried Tuber) மற்றும் ஹஸ்டோரியம் (Haustorium) மாவுகள், பேக்கரிப் பொருட்கள் மற்றும் அதிக நார்ச்சத்துக் கொண்ட நூடுல்ஸ் போன்றவற்றிற்குப் பயன்படும். பனை நார் (Palmyrah Coir), பயோ-காம்போசிட் பனல்கள் (Bio-composite Panels) மற்றும் இரண்டாம் தலைமுறை பையோ எத்தனால் (2G Bio-ethanol) தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு கிலோ வெல்லத்தின் உற்பத்திச் செலவு ரூ. 2,200 ஆகும்; அதன் விற்பனை விலை ரூ. 2,960 ஆகும். வெல்லம் உற்பத்தி செய்யும் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ. 86,729 ஆகும். பொதுவாக, வெல்ல உற்பத்தியை ஒரு குடிசைத் தொழிலாகவே கருதலாம். ஆனால், இதனைப் பரந்தளவில் முன்னெடுப்பதில் பல சவால்கள் உள்ளன. முதலில், திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இல்லாமை முக்கிய குறைபாடாகும். காற்று வீசும் காலங்களில் நொதித்தலைத் தடுக்க சுண்ணாம்பு தடவுவதில் வரம்புகள், பாரம்பரிய முறைகளை மீறிச் செயற்பட விரும்பாமை, அதிக உற்பத்திச் செலவுகள் ஆகியவை வெல்லத்தை சர்வதேச சந்தைகளில் போட்டியிட முடியாமல் செய்கின்றன. கூடுதலாக, சிலர் தயாரிக்கும் தரமற்ற வெல்லம், உண்மையான வெல்ல உற்பத்தியாளர்களின் நற்பெயருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தச் சவால்களை எதிர்கொள்ள, உண்மையான பனை வெல்லம் மற்றும் அதன் ஊட்டச்சத்து நன்மைகளை எடுத்துக்காட்டும் விளம்பர மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் அவசியம். அதோடு, வலுவான தரக் கட்டுப்பாட்டு முறையைச் செயற்படுத்தி, நவீன செயலாக்கத் தொழில்நுட்பங்களை உள்ளிட்டு, உலகளாவிய போட்டிக்குத் தயாரான உற்பத்தி நிலைக்கு வெல்லத்தைக் கொண்டுவர வேண்டும்.

பனை ஓலை அடிப்படையிலான உற்பத்தி, வடக்கு மாகாணத்தில் மற்றொரு வருமானம் ஈட்டும் செயலாகும். முதிர்ச்சியடையாத ஓலைகள், வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கிட்டத்தட்ட இதன் அனைத்து உற்பத்தியாளர்களும் (98%) பெண்களே ஆவர். இதுவொரு பெரிய வளமான வருமான வழி; ஆனால், இதற்குரிய உரிய வழிமுறைகள் இல்லை. பனை ஓலை அடிப்படையிலான பொருட்களின் விற்பனையை அதிகரிக்க, சந்தைப்படுத்தல் உத்திகளை உருவாக்குதல், அவற்றைக் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் வழங்குதல் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புபடுத்தல் ஆகிய முயற்சிகள் தேவை.

சந்தைப்படுத்தல் சவால்களைத் தாண்டி, மதிப்புக் கூட்டப்பட்ட பனங்கிழங்குத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப மேம்பாடுகள் அவசியமாக உள்ளன. பனைத் தொழில் கிராமப்புற சமூகங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் திறன் கொண்டது. இதனைச் சாதிக்க, தொழில்நுட்ப மேம்பாடு, மதிப்புக் கூட்டல், மேம்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் வழிகள், பயனுள்ள வள மேலாண்மை முறைகள் போன்ற பல்வேறு அணுகுமுறைகளில், பனை அபிவிருத்தி சபையின் முழுமையான பங்களிப்பு அவசியம்.

தொழில்நுட்ப நவீனமயம் எந்தத் தொழிற்துறையின் செயற்திறனையும் உயர்த்தி, சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு நேரடிப் பங்களிப்பை வழங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் முன்னேற்றம் வேலைவாய்ப்பு, வருமானம், நுகர்வுப் பழக்கங்கள், வாழ்க்கைத் தரம், சமூக நிலை ஆகியவற்றை மாற்றி, அந்தத் துறையுடன் தொடர்புடைய சமூகத்தின் அணுகுமுறை மற்றும் பணி நெறிமுறைகளிலும் முன்னேற்றத்தை உருவாக்குகிறது. இது பனைத் தொழிலுக்கும் பொருத்தமாகும்.

அருகிச் செல்லும் பனை மரங்கள்

நடப்பட்ட பனங் கொட்டைகள்
202020212022
461,958500,400284,390

நடப்பட்ட பனங் கொட்டைகள் மீதான அறிக்கைகள், வருடாந்த வீழ்ச்சி நிலையையே காட்டுகின்றன. அவற்றின் முளைப்பு வீதம் (30%) குறைவாகவே காணப்படுகின்றது. கம்போடியாவில் அவற்றின் முளைப்பு வீதம் 95% ஆகும். முறையான பராமரிப்பும், நவீன தொழில்நுட்ப அக்கறையும், சமூகப் பங்களிப்பும் கம்போடியாவின் பனைசார் முன்னெடுப்புக்கு உரமாக உள்ளன. பாடசாலை மாணவர்கள் முக்கிய பங்கு கொள்ளும் வகையிலான சமூக அணிதிரட்டல், கம்போடியாவின் பனை வள வளர்ச்சிக்கு முக்கிய வகிபாகம் அளிக்கின்றது. அடிநிலை மட்டத்தில் சமூகப் பங்களிப்பு இடம்பெறும் போது பனை வளம் உயிர் கொள்கின்றது. 

தறிக்கப்பட்ட பனை மரங்கள்
20232024
79855271

வருடாந்தம் பாதிக்கப்படும் பனைகளின் அளவு, விரைவில் பனை தனது உற்பத்தி வளத்தை இழக்கக்கூடிய அபாயத்தைக் காட்டுகிறது. போலியான சமூக அக்கறை காரணமாக பனை புறக்கணிக்கப்படுகின்றது; தென்னை பெறும் அங்கீகாரம் பனைக்கு மறுக்கப்படுகின்றது. கைவிடப்படும் பனைகள், ஒரு சமூகமே அதனைக் கைவிடுவதைப் பிரதிபலிக்கின்றன. பனை அபிவிருத்தி சபையின் அடிப்படை நோக்கம் பனையின் அழிவைத் தடுத்து, அதன் வளத்தைப் பாதுகாப்பதாகும். உண்மையில் பனை அழிவு, அதிகாரபூர்வத் தரவுகளைவிட பல மடங்கு அதிகமாகவே உள்ளது.

மாவட்டம் வாரியாக (2007 இன் மதிப்பீட்டின்படி) இலங்கையில் 11.12 மில்லியன் பனை மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3.5 மில்லியன் மரங்கள் உள்ளன. அதிக தொகை கொண்ட பிற மாவட்டங்களில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகியவை முக்கியமானவை. ஆனால், பனை அபிவிருத்தி சபையின் அண்மைய தரவுகள், யாழ்ப்பாணத்தில் அண்ணளவாக 1.5 மில்லியன் பனை மரங்களே உள்ளதாகக் கூறுகின்றன (Palmyrah Statistics – 2017 – GPS Method – Jaffna District). நிதிச் சிக்கல்கள் காரணமாக வடமராட்சி கிழக்குப் பிரிவின் தரவுகளை இதில் உள்ளடக்க முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது. எனினும், தோராயமாகக் கணிக்கும்போது, 2.3 மில்லியன் வரையிலேயே இங்கு பனையின் தொகை காணப்படலாம் என ஊகிக்கலாம். இதன்மூலம், 2007 முதல் 2017 வரையான காலப்பகுதியில் கணிசமானளவு பனை மரங்களின் இழப்பு நடந்துள்ளது எனவும் அனுமானிக்கலாம். இந்த இழப்பு, எமது முக்கிய பொருளாதார மூலத்தின் பெரும் இழப்புமாகும்.

முடிவு 

கடந்த காலத்தில் பனைக்கான அக்கறையைப் பிரதிபலித்தவர் மில்க் வைட் கனகராஜா ஐயா. தனிநபர் முயற்சியாக மேற்கொண்ட அவரது சமூகப்பணி அளப்பரியது; பனையின் சமூக மதிப்பை தனியார் துறையில் உயர்த்தியவர், அவர். அன்றைய தலைமுறை பனையின் உயர்வை சமூக உயர்வாக மாற்றியது. ஆனால் இன்று அந்த உற்சாகம் இல்லை.

சமூக, பொருளாதாரக் கட்டுமானத்தில் நிறுவனங்களின் வகிபாகம் பற்றிய தெளிவின்மை பொருளாதாரக் கட்டமைப்புச் செல்நெறியை முடக்கிவிடக்கூடியது. நிறுவனங்கள் அரசியல் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அவசியமானவை. நிறுவனங்கள் மீதான அக்கறையும் நேர்மையான விமரிசனப் பார்வையும் பல வழிகளைத் திறக்கக்கூடியவை. பனை அபிவிருத்தி சபை இதற்குச் சிறந்த உதாரணம். 

பனை அபிவிருத்தி சபை ஓர் அரச நிறுவனத்துக்கு மேலானது; ஒரு தேசியத்தின் பலமான சக்தி; பலம் பொருந்திய வாய்ப்புகளின் இருப்பிடம்; உணரப்படாத பலம்; மதிக்கப்பட வேண்டிய சமூக நிறுவனம். ஒரு தேர்; ஆனால், நகர மறுக்கும் தேர்.       



About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்