2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்மை காரணமாக, உள்ளூர்க் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் உள்ளூர்ச் சூழல், தற்போதுள்ள வரம்புகள் மற்றும் அரசியல் காரணிகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வது தற்போது மிக அவசியமாகின்றது. குறிப்பாக, மாவட்டத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கு, நிலவி வரும் அரசியல் அழுத்தங்களை மாவட்டத்தின் அரசியல்-பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளைச் செய்வது கட்டாயமானது. அதற்கமைய, இவற்றை ஆராயும் வகையில்‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்’ எனும் இக்குறுந்தொடர் வெளியாகின்றது.
மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரைகள்: ஒரு வரைபடம்
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வரலாற்று ரீதியாக மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக கால்நடை மேய்ச்சல் பிராந்தியங்களாகச் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக 1970களின் தொடக்க காலத்திலிருந்து, இப்பகுதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கியமான கால்நடைத் தீவனப் பகுதிகளாக விளங்கி வந்துள்ளன. ஆனால் 2019க்குப் பின்னர், போருக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட மேய்ச்சல் நில மோதல்கள் பல கால்நடைப் பண்ணையாளர்கள் இடம்பெயர வேண்டிய சூழலை உருவாக்கின.
சமீப காலங்களில் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த குடியேறிகள் கால்நடை மேய்ச்சல் புல்வெளிகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக 1,400க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழ்நிலை மாவட்டத்தின் தினசரி பால் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மேய்ச்சல் நிலங்களை இழப்பதற்கு முன்பு, உள்ளூர் பால் பண்ணை விவசாயிகள் மாவட்டத்தின் பால் உற்பத்தித் துறைக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வந்தனர். கட்டாயக் குடியேற்றங்களால் உருவான பிரச்சினைகளைத் தீர்க்க பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய மேய்ச்சல் நிலங்கள் ஏறாவூர்ப்பற்று (செங்கல்லடி) பிரிவுக்குள் அமைந்துள்ளன. குறிப்பாக சித்தாண்டி, இலுப்படிச்சேனை மற்றும் முறக்கொட்டாஞ்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தப் பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 2023ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, 1,072 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பிரச்சினை நிலவும் பகுதிகள் மாவட்டத்தின் வலது கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன; அவை அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்ட எல்லைகளுக்கு மிக அருகில் உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடியிருப்பு பகுதிகளிலிருந்து இவை தொலைவில் இருப்பதால், பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்பகுதிகளில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளது.
பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகி, 2023 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 16 ஆம் தேதி முதல் சித்தாண்டி பிரதான வீதியின் ஓரமாகத் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் 400 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்தது. பின்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அது கைவிடப்படும் நிலை உருவானது. ஆரம்பத்தில் அதிக உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போது மந்தமான நிலையிலுள்ள ஒரு குறியீட்டுப் போராட்டமாகத் தொடர்கிறது.
பண்ணையாளர்களின் பிரச்சினை பொதுமக்களின் கவனத்தையும் கரிசனையையும் பெற்றிருந்தாலும், அதற்கு உறுதியான தீர்வை ஏற்படுத்தும் அளவிற்கு அது இன்னும் பரவலாக முன்னெடுக்கப்படவில்லை. மேய்ச்சல் நிலப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் நீடித்து வருகின்றது. இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பரந்த அளவிலான, ஒருங்கிணைந்த மற்றும் வினைத்திறனான நடவடிக்கைகள் அவசியமானவை என்பதே பலரின் கருத்தாகும்.
அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் இவ்வாறு நீடித்து வரும் நிலையில், கால்நடை விவசாயத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் இன்றுவரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது என்பது ஒரு பாரிய குறைபாடாகக் கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக எத்தனை கால்நடைகள் உள்ளன என்பதற்கான துல்லியமான புள்ளிவிவரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை. பண்ணையாளர்கள் தங்களிடம் உள்ள கால்நடைகளை தமக்குரிய மிருக வைத்தியசாலை எல்லைக்குள் பதிவு செய்வதில் காட்டும் தயக்கமும் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது.
2020 ஆம் ஆண்டு வரை ஏறாவூர்ப்பற்று (செங்கல்லடி) பிரதேசத்தில் சுமார் 130,000 கால்நடைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. சரியான முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டின் மொத்த கால்நடை எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்பதும் வெளிப்படும். அதனுடன், கால்நடை உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் தெளிவாகும்.
2011 ஆம் ஆண்டு நில அளவை மேற்கொள்ளப்பட்டு மேய்ச்சல் தரைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட வர்த்தமானியை இதுவரை வெளியிடாதிருப்பதும், மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20% ஆக இருந்த காட்டுப் பரப்பளவு தற்போது 12%க்கும் குறைவாகத் தாழ்ந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனைக் காரணமாகக் காட்டி மேலும் மேய்ச்சல் தரைக்காக நிலம் ஒதுக்குவதற்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மாவட்டத்தின் காட்டுப் பரப்பளவு இன்னும் குறையக்கூடும் என்ற வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிலைப்பாடே, மேய்ச்சல் நில ஒதுக்கீடு தொடர்பான அந்த வர்த்தமானி இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை ஒதுக்கப்படும் வாய்ப்பு உருவானால், பதிவு செய்யப்பட்டிருக்கும் கால்நடை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. ஆகையால், பண்ணையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவது மிக முக்கியமானதாகும்.
அதுமட்டுமல்லாமல், கால்நடைகளின் சரியான பதிவுகள் இல்லாத காரணத்தால், கால்நடை விவசாயத்தின் மூலம் இலங்கையின் மொத்தக் கால்நடை உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் எந்தளவிற்குப் பங்களிப்புச் செய்கின்றது என்பதும் தெளிவாக வெளிப்படாமல் உள்ளது.
நாட்டின் மொத்தப் பாலுற்பத்தி தேவையில் சுமார் 17% மட்டுமே உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலுற்பத்தி மேலும் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. அது நாட்டின் மொத்தப் பால் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பால்மா உள்ளிட்ட பாலுற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஏற்கனவே பல மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயம் செலவிடப்படுகின்றது. இந்த நிலையில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையால் கால்நடைகளுக்குப் போதிய தீவனம் கிடைக்காமல் உற்பத்தி குறையுமாயின், அதன் பொருளாதார விளைவுகள் மேலும் தீவிரமாகும்.
2022 ஆம் ஆண்டிலிருந்து மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் காரணமாக, 10,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் சேனைப் பயிர்ச் செய்கையாளர்களால் பல்வேறு வழிகளில் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இனமுறுகல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேவேளை, இது நாட்டின் மொத்தப் பால் உற்பத்தியிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால் கால்நடைகளை கிராமங்களுக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலை உருவாகி, அது வயல் செய்கையையும் பாதிக்கும் சூழல் ஏற்படுகின்றது.
இதற்கான ஒரு தீர்வாக மாவட்ட எல்லைகளை தெளிவாக வரையறுத்து, மேய்ச்சல் தரைகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் வரையறுக்க முடியும். இதன் மூலம் தேவையற்ற இனமுறுகல் நிலைகளைத் தவிர்க்க முடியும். அதேவேளை, சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் அவர்களுடைய மாவட்டங்களுக்குள் உரிய இடங்களை ஒதுக்குவதன் மூலம், கால்நடை வளர்ப்பு, நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்படலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த விவசாய நடைமுறைகள் நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.
மொத்தத்தில், நாட்டின் மொத்தக் கால்நடை உற்பத்தியிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை விவசாயம் வழங்கும் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைக்கும் புதிய அரசாங்கம், மேய்ச்சல் தரை தொடர்பாக கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவான தெளிவான கொள்கையை உருவாக்குவது அவசியமாகும். மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, கால்நடை உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக கால்நடைகள் முறையாகப் பதிவு செய்யப்படுதல், உற்பத்தியை மேம்படுத்தத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுதல், பெரிய அளவிலான பாலுற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்படுதல் ஆகியவை அவசியமாகின்றன.
விவசாயத் துறையையும் கொண்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலுற்பத்தியை அதிகரிக்கத் தேவையான வழிமுறைகளை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்து, அதனைச் சம்பந்தப்பட்ட பிராந்திய மற்றும் தேசிய நிறுவனங்களுக்கு பரிந்துரைகளாக வழங்க வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தின் கால்நடை விவசாயத் துறையை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்புகள் உருவாகும்.

மகாவலி ‘System B’ இன் வரைபடம் (Map courtesy: SL Mahaweli Authority)
தொடர் போராட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களும்
மகாவலி ‘B’ வலய அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய குடியேற்ற முன்னெடுப்புகளைத் தடுக்கும் நோக்கில் ஒரு மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒட்டுமொத்த எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்துள்ளது. சிவில் சமூக அமைப்புகளின் ஆதரவுடனும் கால்நடைப் பண்ணையாளர்களின் பங்களிப்புடனும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. போருக்குப் பிந்தைய காலத்தில், இந்தப் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் ‘அபிவிருத்தி’ நடவடிக்கைகளின் சமூக விளைவுகளை வெளிக்கொணரும் முயற்சியாகவும் காணப்படுகிறது.
மேய்ச்சல் நிலங்களைச் சுற்றிய கடந்தகால மோதல்களையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, தொடர்ந்துவரும் இந்தப் பிரச்சினையின் பின்னணியில் இன ஒதுக்கல் சார்ந்த பரிமாணம் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. இன்றைய தொடர் போராட்ட நிலையைக் கவனமாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தால், அதன் பின்னணியில் குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தைக் கொண்ட ஒரு போக்கைத் தெளிவாகக் காண முடிகிறது.
தற்போது வெளிப்படையாகத் தோன்றும் பிரச்சினை மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளை மட்டும் சார்ந்ததல்ல; அதைவிட பரந்த அரசியல் நோக்கத்தைக் கொண்டதாக அது பார்க்கப்படுகிறது. வெளிப்படையாகக் காணப்படும் பிரச்சினைகள், நீண்டகாலமாகச் சேர்ந்து வந்த சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களின் ஆரம்ப வெளிப்பாடாகவும் கருதப்படலாம்.
இலங்கையின் கடந்த பதினைந்து ஆண்டுகளைக் கொண்ட போருக்குப் பிந்தைய காலத்தை, தமிழர்களின் அரசியல் – பொருளாதார நோக்கத்தையும், அவர்களின் உணர்வியலையும், சமூக முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரணிகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத அல்லது கற்றறியாத ஒரு காலமாக விவரிக்கலாம். அதேவேளை, தமிழர்களின் சமூக – பொருளாதார மற்றும் இன அடையாள அரசியலின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளத் தவறிய காலமாகவும் போருக்குப் பிந்தைய காலம் வெளிப்படுகிறது.
போரின் பேரழிவிற்குப் பின்னர், நாடு தழுவிய பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், இலங்கையில் பேரினவாத அரசியல் திடமானதாகவே தொடர்கின்றது. அது மீண்டும் ஒரு வன்முறைமிக்க முரண்பாட்டுச் சூழலை உருவாக்கக்கூடிய சாத்தியத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரையைச் சுற்றி இடம்பெறும் மோதலும், வாழ்வாதார இழப்புகளுக்கு எதிரான தொடர் போராட்டமும், போருக்குப் பிந்தைய காலத்தில் தொடர்ந்துவரும் பேரினவாத அரசியல் சிந்தனையின் வெளிப்பாடாகவும், புதிய முரண்பாட்டு நிலைகளை உருவாக்கக்கூடிய செயல்முறையாகவும் காணப்படுகின்றன.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் ஒரு கருவியாக மகாவலி ‘B’ வலயத்தின் துரிதமான முன்னெடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெற அனுமதிக்கப்படுமானால், மட்டக்களப்பின் தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதோடு, அவர்களின் இன மற்றும் மத அடையாளங்களுடன் தொடர்புடைய நிலப்பரப்பின் மீது புதிய அழுத்தங்களும் உருவாக்கக்கூடும்.
குறிப்பாக ‘வில்வ பொத்தாண’ என்ற பெயரில் ஒரு புதிய நிலப்பகுதி நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படலாம் என்ற அச்சம் சமூகத்தில் நிலவுகிறது. அதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் அரசியல் நோக்கமும் இருக்கலாம் என கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
1979.06.15 அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் எண் 41 இன் படி, ஆரம்பத்தில் பத்து மகாவலித் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மகாவலி அதிகாரசபை அவற்றிற்கான முழுமையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறவில்லை என்ற தகவல்களும் முன்வைக்கப்படுகின்றன. மேலும், அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்ட (Schedule 9, Rule 1, Appendix 2, Item 18) உறுப்புரிமை 2.5 இன் படி, மாகாணங்களுக்கிடையிலான நீர்ப்பாசனத் திட்டங்கள்—மகாவலித் திட்டம் உட்பட—அமைக்கப்படும் இடங்களில் குடியேற்றம் மேற்கொள்ளப்படும் போது அந்தந்தப் பகுதிகளின் சனத்தொகை விகிதாசாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் திட்டமிட்ட வகையில் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
| சனத்தொகை | விகிதாசாரம் | மகாவலித் திட்டம் மூலம் காணி பெற்றவர்கள் % | குடும்பங்கள் |
| சிங்களவர் | 76% | 96.16% | 123,630 |
| வடக்கு – கிழக்குத் தமிழர்கள் | 12% | 1.42% | 1,835 |
| முஸ்லிம்கள் | 8% | 2. 39 % | 3,068 |
(ஆதாரம்: கால்நடைப் பண்ணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை, கிரான் – 2022)
தகவல்களின் படி, யுத்தக் காலத்தில் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்று 2001 ஆம் ஆண்டு அமைச்சரவை எடுத்துக்கொண்ட கொள்கைகளுக்கு மாறாக, மகாவலி அதிகாரசபையும் வனத் திணைக்களமும் இணைந்து மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேவேளை, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் புதிய குடியேற்றங்களை ஊக்குவிக்கும் போக்கும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பக்கச்சார்பற்ற சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற நேர்முக உரையாடல்களிலும் இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2003 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு (1 SLR 74 – தேவனிதன் எதிர் தயானந்த திசாநாயக்க) மீள்குடியேறும் உரிமையைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்புவதைத் தடுக்க முடியாது என்றும், அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையதாகும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியலமைப்பின் 15 (7) ஆம் பிரிவின் அடிப்படை உரிமைச் சட்டத்தின் படி இந்த உரிமையைத் தடுக்க முடியாது என விளக்கப்பட்டுள்ளது. எனினும், அரசுத் திணைக்களங்களும் அதிகாரசபைகளும் இவ்விதிமுறைகளை மீறிச் செயற்படுகின்றன என்பதே மக்களின் போராட்ட நிலைக்குப் பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
மகாவலி ‘B’ வலயத்திற்குள் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான பல காணிகள் உள்ளன. இவை காலங்காலமாக அவர்கள் வாழ்ந்து வந்ததும் தாங்களே வளப்படுத்தியதுமான நிலங்களாகும். ஆனால் அந்த நிலங்களை வளப்படுத்திய மக்களை அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்காமல், பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஏற்கனவே காணிகள் வைத்திருக்கும் சிலருக்கு அரசியல் செல்வாக்கின் மூலம் மகாவலி ‘B’ வலயப் பகுதிகளில் காணிகள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் பல தகவல்கள் மற்றும் ஆதாரங்களும் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், காணி அமைச்சின் 15.06.1995 அன்று வெளியிடப்பட்ட இலக்கம் 10 எனும் சுற்றுநிருபத்தின் படி, 15.06.1995க்குப் பின்னர் அரசுக்குச் சொந்தமான காணிகளை யாரும் அடாத்தாகப் பிடிக்க முடியாது என்ற சட்ட விதிமுறை இருந்தபோதிலும், நடைமுறையில் அதற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது. மகாவலி அதிகாரசபையும் சில அரச அதிகாரிகளும் இதற்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் இன முரண்பாடுகளையும் எதிர்கால மோதல்களையும் உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்குகின்றன என்பது பலரின் கருத்தாகும்.
மகாவலி ‘B’ வலய அபிவிருத்தி முன்னெடுப்பும் அதன் தீர்வு முன்மொழிவும்
மகாவலி ‘B’ வலய அபிவிருத்தி முன்னெடுப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடைப் பொருளாதாரத்தையும் பாரம்பரிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டையும் பாதிக்கும் ஒரு ஆபத்தான முயற்சியாகப் பலரால் பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் சுமார் 300,000 முதல் 500,000 வரையான கால்நடைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்ற நிலையில், அவற்றுக்கு 11,000 முதல் 140,000 ஹெக்டேயர் வரை மேய்ச்சல் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது பரிந்துரைக்கப்படும் நில அளவு 3,025 ஹெக்டேயர் மட்டுமே என்பதால், இது கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் முன்மொழிவாகக் கருதப்படுகிறது.
மகாவலி ‘B’ வலயத் திட்டம் மக்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் அமுலாக்கப்பட்டால், அது கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். பாரம்பரிய திறந்த கால்நடை வளர்ப்பு முறைமைகள் குறுக்கீடு செய்யப்படுவதால், தற்போதைய கால்நடைப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்படும். ஒரு மாட்டுக்கு 20 பேர்ச் காணி வழங்கி, அதிகபட்சமாக 50 மாடுகள் மட்டுமே வளர்க்கலாம் என்ற முன்மொழிவு, கால்நடைத்துறைக்குப் பாதகமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சில பண்ணையாளர்கள் 2000 முதல் 3000 வரை மாடுகளை வைத்திருப்பதுண்டு; அவர்களின் எதிர்கால நிலைமை பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் கால்நடைப் பண்ணையாளர்கள் அச்ச நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பல தலைமுறைகளாக நடைமுறையில் இருந்து வந்த திறந்த மேய்ச்சல் அடிப்படையிலான கால்நடை வளர்ப்பு முறை தற்போது சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது. நிலம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீது அதிகமான அழுத்தம் நிலவுவதாக மக்கள் உணருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் மாற்று வழிமுறைகளை திட்டமிட்ட முறையில், கூட்டுப்பங்காளித்துவ அடிப்படையில் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. கால்நடை மற்றும் பால் உற்பத்திப் பொருளாதாரத்தை புதிதாகக் கட்டமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.
சில பண்ணையாளர்கள் அரசியல் விவகாரங்களில் அக்கறையின்றி, நிலைமையை ஏற்றுக்கொண்டு காலத்தைக் கழிக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் பால் தொழில்துறையில் உள்ள பொருளாதார வாய்ப்புகளை உணர்ந்து, அதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட முனைகின்றனர். குறிப்பாக இந்தியாவின் ‘அமுல்’ போன்ற நிறுவனங்களின் உதவியுடன் பால் பண்ணைகளை நவீனமயமாக்க வேண்டும் என்ற கருத்துகளும் காணப்படுகின்றன. திறந்த கால்நடை வளர்ப்பு முறை பல சிக்கல்களை உருவாக்குவதோடு, அதிக இலாபம் தரும் பால் உற்பத்திக்குத் தேவையான முறை அல்ல என்பதையும் சிலர் அனுபவத்தின் மூலம் உணரத் தொடங்கியுள்ளனர்.
சில குறிப்புகள்
1. மகாவலி ‘B’ வலய அலுவலகம் வலது கரையில் உள்ள வெலிக்கந்தையில் இருந்து செயற்படுகிறது. இந்த ‘B’ திட்டத்தின் நிலப்பரப்பில் சுமார் 90–95% மட்டக்களப்பு மாவட்டத்திலும், 5–10% அம்பாறை மாவட்டத்திலும் அமைந்துள்ளது. எனினும், இத்திட்டத்துடன் தொடர்புடைய பல நடவடிக்கைகள் வெலிக்கந்தையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்ளூர்ச் சமூகங்களுடன் போதிய ஆலோசனை இல்லாமல் கரும்புத் தோட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க சீன நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அறியப்படுகிறது.
2. மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் அடிப்படையில் (CA (writ) 36/ 2021), இலங்கை மகாவலி அபிவிருத்தி சபை 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நில ஆக்கிரமிப்பு விவசாயிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. விவசாயிகள் தற்காலிகமாக அந்த நிலங்களை விட்டு வெளியேறினாலும், பின்னர் பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து மீண்டும் வந்து மட்டக்களப்பிலுள்ள நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலைமை சுமார் 1,500 குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், சுமார் 8,000 ஹெக்டேர் பரப்பளவில் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களையும், 500,000 கால்நடைகளின் உயிர்வாழ்தலையும் அச்சுறுத்துகிறது. காவல்துறை, மகாவலி அபிவிருத்தி சபை, வனத்துறை, வனவிலங்குத் துறை, மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தில் உள்ளோர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சிறப்பான நடவடிக்கை எடுக்காத நிலை காணப்படுகிறது.
3. அதிகாரிகள் செயலற்றிருந்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு (HCB/writ/628/2020) 2022 நவம்பர் மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்தத் தீர்ப்பில், மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால், புதிய உத்தரவு தேவையில்லை என நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
4. அம்பாறை மாவட்டத்தில் மகாவலி ‘B’ வலயத்தின் நிலப்பரப்பு 5–10% மட்டுமே இருந்த போதிலும், மதுரு ஓயா வலது கரைத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையில் (பக். 144) குறிப்பிடப்பட்டுள்ளபடி, திவுலபத்தான பிரதேச செயலாளர் 4,000 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் மட்டக்களப்பில் எந்தவிதமான சாகுபடி அனுமதியும் வழங்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டின் போது மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் காடு அல்லது வனவிலங்குக் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், பாரம்பரியக் கால்நடை வளர்ப்பு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. மேய்ச்சல் நிலங்களுக்கான அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கால்நடை இழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், தெஹியத்தேகண்டிய பகுதியில் விவசாயிகளின் அத்துமீறிய நுழைவு, கால்நடைத் திருட்டு மற்றும் பயிர்ச்சேதம் தொடர்பான சட்டப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
5. எல்லை தாண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிலங்களை நிர்வகிப்பது தொடர்பான அரசியலமைப்பின் குறிப்பிடத்தக்க மீறலும் உள்ளது. இது தற்போதுள்ள மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது (13 ஆவது திருத்தத்தின் இணைப்பு II இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது).
6. தற்போது பல கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கொண்டு நெல் சாகுபடிப் பகுதிகளுக்கு அருகிலுள்ள நிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், கால்நடைகள் நெல் வயல்களில் நுழைந்து சேதம் விளைவிக்கும் அபாயம் ஏற்படும். இது கால்நடை வளர்ப்பை மட்டுமல்லாமல், பரந்த விவசாயத் துறையையும் பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.
கால்நடை வளர்ப்பாளர்களின் கோரிக்கைகள்
மயிலத்தமடு – மாதவணை கால்நடைப் பண்ணையாளர்களின் தொடரும் அறவழிப் போராட்டத்தின் 730 ஆவது நாள் நிறைவு 15.09.2025 அன்று சித்தாண்டி போராட்டப் பந்தலடியில் நடைபெற்றது. எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையிலும், அவர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது ஆண்டிலும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
1. 2022 ஜூலை 21 அன்று வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் (CA (writ) 36/ 2021) படி, மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் இருந்து அனைத்து அத்துமீறிக் குடியேறியவர்களையும் வெளியேற்ற வேண்டும். மகாவலி அதிகாரசபை நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
2. 2011 ஆம் ஆண்டு அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டபடி மேய்ச்சல் நிலங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். 2011 ஜூன் 8 அன்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு மொத்தமாக 28,034 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக முன்வைக்கப்பட்டது. அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 15,035 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்குமாறு நிலம் மற்றும் நில அபிவிருத்தி அமைச்சகத்திற்கு பாராளுமன்றம் அறிவுறுத்தியது.
3. 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகளின்படி காடுகள் இல்லாத நிலங்களை அபிவிருத்திக்காக பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்க வேண்டும். இதற்காக வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை இணைந்து அந்த நிலங்களை அடையாளம் கண்டு பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க முகவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல வன இருப்புகளில் உள்ள சில நிலங்கள் உண்மையில் காடுகளாக இல்லாத பகுதிகளாக உள்ளதால், அவற்றை இந்த ஒழுங்குமுறையின் கீழ் விடுவிக்க முடியும்.
4. அம்பாறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் போன்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் நிலத்தில் பயிரிட அனுமதி வழங்கப்பட வேண்டும். மொத்தமாக 50,000 ஹெக்டேர் நிலம் கோரப்பட்ட நிலையில் தற்போது சுமார் 8,000 ஹெக்டேர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 15,000 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். தீவனப் பயிர்களை வளர்ப்பது கால்நடை வளர்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும். மேலும், கால்நடை விவசாயிகளுக்கு பால் உற்பத்திக் குடியேற்றங்களை உருவாக்க உதவியும் வழங்கப்பட வேண்டும்.
5. மகாவலி ‘B’ திட்டத்திற்கான நிர்வாக அலுவலகம் தற்போது வெலிக்கந்தையில் செயற்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில், குறிப்பாக வலது கரை திட்டப் பகுதிக்குள் அமைத்தால், உள்ளூர் மக்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் சேவைகளை எளிதாகப் பெற முடியும்.
6. இந்தச் சமவெளிப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் தொழிலை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். உதாரணமாக நீர்த் துளைகள் அமைத்தல், தீவன சாகுபடி மேம்படுத்தல், பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் தயாரிப்புகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
7. இந்தப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் நிறுவப்பட வேண்டும். தற்போதைக்கு கால்நடை இழப்புகளுக்கான பாதுகாப்பு இல்லை. 1979 ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக மேய்ச்சல் நிலங்களாக அறிவிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்பிற்கு அரச அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று இன்றும் கால்நடை வளர்ப்பைப் பாதுகாக்கும் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
முடிவு
1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 14,000 முதல் 16,000 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு உள்ளூர் விவசாயிகளின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்டது. நீண்ட காலமாக இந்த நிலங்கள் தமிழ்க் கால்நடை விவசாயிகளின் பாரம்பரிய வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தன. உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட, 2007 ஆம் ஆண்டு வரை தமிழ் விவசாயிகள் இந்த மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 2007க்குப் பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்களக் குடியேறிகள் இந்தப் பகுதிகளுக்குள் நுழைந்து, தமிழ் விவசாயிகளின் கால்நடைகளைக் கைப்பற்றுதல், வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் விவசாயிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதல்களும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து வெறும் நான்கு மாத காலப்பகுதிக்குள் சுமார் 100 பசுக்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில துப்பாக்கியால் சுடப்பட்டன; சிலவற்றின் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டவை காயமடைந்ததாகவும், சுமார் 40 கால்நடைகள் காணாமல் போனதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், மாதவணை மற்றும் வடமுனை – தரவை போன்ற பகுதிகளில் தமிழர்களுக்கு நிலம் வழங்கப்படுவதை மகாவலி அமைச்சகம் தடுக்கும் நிலை காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேவேளை தெற்கிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களக் குடியேறிகள் மகாவலி ‘B’ திட்டப் பகுதிகளுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், குறிப்பாக பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதிகளில் குடியேற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சகமும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒன்றிணைக்கப்பட்டன. அதன் மூலம் மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அம்பாறை ஆகிய எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சில தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இலங்கையின் வறண்ட மண்டலப் பகுதிகளில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல மகாவலி வலயங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் மகாவலி ‘B’ வலயம் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் விவசாயத்தை மேம்படுத்துதல், நீர்மின்சார உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தி புதிய குடியேற்றங்களை உருவாக்குதல் என்பவையாகும்.
முக்கியமாக பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மகாவலி B வலயம் சுமார் 453 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. இது விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கான அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய் வலையமைப்புகளை கொண்டுள்ளது. மண் வளம் குறைவு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தத் திட்டம் தற்போது சுமார் 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் நீர்ப்பாசன வசதிகளை வழங்குகிறது.
சமீபத்திய அபிவிருத்தி முயற்சிகள் மகாவலி B திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் சுமார் 75,000 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியதாகவும், அதில் 27,179 ஹெக்டேர் பாசன நிலம் அடங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 316 தமிழ்க் கால்நடை விவசாயிகள் இரண்டு நிர்வாகப் பிரிவுகளின் கீழ் சுமார் 85,000 கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைப் பண்ணையாளர்களுக்கு மாதவணை, பெரிய மாதவணை மற்றும் மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் மொத்தமாக சுமார் 45,000 ஏக்கர் மேய்ச்சல் நிலம் அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மேய்ச்சல் நிலங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கால்நடைத் தொழில், மில்கோ மற்றும் நெஸ்லே நிறுவனங்களின் பால் சேகரிப்பு மையங்களுக்கு தினமும் சுமார் 15,000 லிட்டர் பால் வழங்கும் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக உள்ளது. இதன் மூலம் 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.
எனினும், இந்த மேய்ச்சல் நிலங்களில் சுமார் 12,000 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் சில இடங்களில் தமிழ் கால்நடை விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்தப் பகுதிகளில் சிங்கள விவசாயிகள் ‘சேனா’ சாகுபடி (Chena Cultivation) மேற்கொள்வதால் இந்த மோதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தமிழ்க் கால்நடை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையும் பாரம்பரியத் தொழிலையும் பாதுகாக்கும் ஒரு கடினமான நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவோ அல்லது விற்கப்பட்டதாகவோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஓர் இராணுவ முகாம் தளபதி நிலத்தில் விவசாயம் செய்கின்றார். குடியேறிகள் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி நிலத்தடி மதுபான உற்பத்தியையும் நடத்தி வந்தனர்.
போருக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 225,000 கால்நடைகள் இருந்ததாகக் கூறப்படுகின்ற நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கை 175,000 ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள பரந்த மேய்ச்சல் நிலங்கள் கால்நடை விவசாயிகளால் ஒரே தொடர்ச்சியான மேய்ச்சல் பிரதேசமாகக் கருதப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் கூறுவதன்படி, சிங்களக் குடியேற்றவாசிகளும் இராணுவத்தினரும் மேய்ச்சல் நிலங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது, திருடப்பட்ட கால்நடைகளை மீட்கத் தடைகள் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் விவசாயிகளை ஆதரிக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் இந்த ஆக்கிரமிப்புகளைத் தடுக்கத் தவறுவதோடு, இலவசமாக வழங்கப்பட வேண்டிய கால்நடை மருத்துவச் சேவைகளுக்கும் சில சமயங்களில் பணம் கோரப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், முந்தைய அரசுகளின் காலத்தில் நிலங்களை இராணுவப் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட சட்டத்தின் 38 (A) பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதன்பேரில் கைப்பற்றப்பட்ட நிலங்களில் மீள்குடியேற்றத்தை அனுமதித்ததும் சட்ட ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதிய அரசாங்கம் திருப்பித் தரப்படும் நிலங்களின் சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்த புதிய வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
அதேபோல், அரசியல்வாதிகள் — குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் — இந்தப் பிரச்சினையை உண்மைத் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகாண சபைகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நில உரிமை மீறல்களை ஆராய்ந்து, அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியமாகின்றன. பரந்த அளவிலான, நிபுணத்துவம் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலே தற்போதைய நிலைமையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் நிலங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றவாசிகள் பெரும் அளவிலான நிலங்களை நிரந்தரமாகக் கோரக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று தமிழ்க் கால்நடை விவசாயிகள் எச்சரிக்கின்றனர். தற்போது பெரியமாதவணைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியான சிங்கள நிர்வாகப் பிரிவை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன என்றும் சில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சுமார் 30,000 ஏக்கர் நிலம் கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டாலும், அரசாங்கத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் காரணமாக அந்த நிலப்பரப்பு காலப்போக்கில் கணிசமாகக் குறைந்துள்ளது.
மேலும், விவசாயிகள் அளிக்கும் புகார்கள் பல சந்தர்ப்பங்களில் நிர்வாக அமைப்புகளால் போதிய கவனத்துடன் பரிசீலிக்கப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. இது நிர்வாக அமைப்புகளில் தமிழர் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்ற உணர்வை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கியுள்ளது. சில தகவல்களின் படி, மட்டக்களப்பில் செயற்படும் சில பௌத்த துறவிகள் குடியேற்றவாசிகளை ஊக்குவித்து தமிழரின் கால்நடைகளைக் கொல்லும் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினை, வெறும் மேய்ச்சல் நிலப் பிரச்சினை அல்லது கால்நடைப் பண்ணையாளர்களின் தனிப்பட்ட சிக்கல் என்ற அளவிற்குள் மட்டும் சுருங்கிப் போகாதது. இது தமிழ் பேசும் மக்களின் நில உரிமை, அரசியல் பொருளாதாரம், இன அடையாளம் மற்றும் சக வாழ்வு அரசியல் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் ஒரு முக்கிய சமூக–பொருளாதாரப் பிரச்சினையாகும். எனவே, தற்போதைய மகாவலி B வலய முன்னெடுப்புகள் முழுமையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். அதனுடன், உள்ளூர்க் கால்நடைப் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நில உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் அவசியமாகும். மேலும், கால்நடைப் பண்ணையாளர்கள், மாவட்ட மட்ட அமைப்புகள் மற்றும் அரசின் அதிகார அமைப்புகள் ஆகியவை இணைந்த ஒரு வலுவான பொது அணியாகச் செயற்பட்டு, நீண்டகாலமாக நீடித்து வரும் இந்நிலைக்குத் தீர்வு காண வேண்டும். இதன் மூலம் வளமான கால்நடைப் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் உருவாக்கப்பட முடியும்.
உசாத்துணை மூலங்கள்
Adoption and Impact of Natural Farming Practices in Batticaloa District. (2020). First Annual Research Session (FARS) – 2020, University of Vavuniya, Sri Lanka.https://www.researchgate.net/publication/379666056_Adoption_and_Impact_of_Natural_Farming_Practices_in_Batticaloa_District
Adoption of Improved Technologies by the Cattle Farmers of Batticaloa District. (2016). AGRIEAST Journal of Agricultural Sciences. https://doi.org/10.4038/agrieast.v9i0.18
Suresh, K., Khanal, U., Wilson, C., Managi, S., Quayle, A., & Santhirakumar, S. (2021). An economic analysis of agricultural adaptation to climate change impacts in Sri Lanka: An endogenous switching regression analysis. Land Use Policy, 109, 105601. https://doi.org/10.1016/j.landusepol.2021.105601
Department of Animal Production and Health. (2023). Annual Report 2023. https://daph.gov.lk/files/uploads/pdf_document/0-1729245237.pdf
Batticaloa Dairy Farmers Face Violence and Threats over Grazing Land. (2023). Groundviews. https://groundviews.org/2023/10/09/batticaloa-dairy-farmers-face-violence-and-threats-over-grazing-land/ ; Interview with Mr. Siyanthar: https://www.youtube.com/watch?v=cNCLz78sceE
Pagthinathan, M., & Sathiyasegar, K. Cattle and Buffalo Farming in Dry Zone of Sri Lanka: A Preliminary Survey. Department of Animal Science. https://www.cabidigitallibrary.org/doi/pdf/10.5555/20153400019
Economics of Climate Change Adaptation and Understanding the Impact of Climate Change on the Agriculture Sector and Optimal Policy Response in Sri Lanka. UNDP. https://www.adaptation-undp.org/sites/default/files/resources/ecca-country-report-sri-lanka.pdf
Hitihamu, S., Jayasinghe, U., & Aiome, G. V. Norica. (2025). Factors Affecting Technical Efficiency of Dairy Production in the Dry Zone of Sri Lanka. Colombo: Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute. (Research Report No. 265). https://www.harti.gov.lk/images/download/reasearch_report/new/R_265.pdf
Migrants, Communal Tensions Leave Batti’s Original Cattle Farmers Ruffled. Daily Mirror. https://www.dailymirror.lk/print/news-features/Migrants-communal-tensions-leave-Battis-original-cattle-farmers-ruffled/131-271457
Munas, M., & Lokuge, G. (2013). A Livelihood and Market Study of Resettled Communities in the Eastern Province: Assessing Conditions in Selected Grama Niladhari Divisions of the Batticaloa and Trincomalee Districts. Colombo: Centre for Poverty Analysis (CEPA). https://www.cepa.lk/wp-content/uploads/2020/08/Market-Study-English-Final.pdf
Srinivasan, M. Our Lands are Under Threat, Say Tamils in Sri Lanka’s Eastern Province. The Hindu. https://www.thehindu.com/news/international/our-lands-are-under-threat-say-tamils-in-sri-lankas-eastern-province/article34346590.ece
Gunasekara, S. (2023). Sri Lanka: Cattle Farmers’ Agitation Continues in Batti. The Morning. https://www.themorning.lk/articles/uJvwQ66Q8pfRzxbVQUcc
Status of Feed Resources for Cattle Rearing in Batticaloa District Representing Urban, Village and Remote Areas. https://dspace.lib.seu.ac.lk/items/4c1bf837-e931-4942-a5da-ed980b494e5a/full
Tamil Dairy Farmers Marginalized by Encroachment Continue Protests. Lanka Leader. https://lankaleader.lk/news/7851-tamil-dairy-farmers-marginalized-by-encroachment-continue-protests
The Anti-Development Machine: Tamil Dairy Farmers’ Protest in Mayilaththamadu–Madhavanai, Batticaloa. (2026). PEARL (People for Equality and Relief in Lanka). https://pearlaction.org/wp-content/uploads/2026/01/PEARL_Sinhalization-as-an-anti-development-machine_CASE-STUDY-1.pdf
Encoded Interview Reports. (2023–2025). Batticaloa District; and reports from the Farmers’ Organizations.



