கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் - பகுதி 4
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
23 நிமிட வாசிப்பு

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 4

May 19, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

11. அரச ஆட்சி

இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் வேள், வேளு, வேலு முதலான பெயர்கள் நாட்டில் அதிகாரத்திலிருந்த ஒரு சமூகத் தலைவனையோ அல்லது சிற்றரசனையோ குறிப்பிடும் பெயர்களாகும். இது தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே, தமிழகத்தைப் போன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பேராசிரியர் பரணவிதான பதிப்பித்த ‘இலங்கையின் ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுகள்’ என்ற நூலின்படி 21 கல்வெட்டுகளில் வேள் என்ற சொல் காணப்படுகிறது (Paranavitana, S. 1970). பேராசிரியர் வேலுப்பிள்ளை மேலும் ஐந்து கல்வெட்டுகளில் வேள் என்ற பெயர் இருப்பதை அடையாளப்படுத்தி, அப்பெயர்களைப் பேராசிரியர் பரணவிதான தவறாக வாசித்திருப்பதாக எடுத்துக்காட்டியுள்ளார் (Veluppillai, A. 1980: 12).

நாட்டின் அரசனைக் குறிப்பிடும் மற்றொரு சொல் ‘கோ’. இப்பதம் இறைவனையும் குறிக்கும்; நாட்டின் அரசனையும் குறிப்பிடும். இருவரும் வாழும் இல்லங்கள் ‘கோயில்’ என்ற ஒரே சொல்லினால் குறிப்பிடப்படுகின்றன. கந்தரோடையிலும் குடியிருப்புகளின் ஆரம்ப காலங்களில், ஒரு சமூகத் தலைவன் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது இயலாமல் இருந்திருக்கும். நிச்சயமாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் கந்தரோடை நகரமயமாக்கப்பட்ட காலம் முதலாக, பெருங்கடல் வர்த்தகத்தை நிர்வகிக்கவும், மணிக்கற்கள் தொழில், சங்குத் தொழில், இரும்புத் தொழில் போன்ற தொழில்துறைப் பணிகளை ஒழுங்கமைக்கவும், நாணயங்களை வெளியிடவும், நிச்சயமாக ஓர் அரசனும் அவனது நிர்வாகக் குழுவும் (மந்திரிசபை) அங்கே இருந்திருப்பார்கள்.

கந்தரோடையில் சேயோனால் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 200 ஆம் ஆண்டிற்குரிய நாக நாணயம். இதன் முன் பக்கத்தில் ஸ்ரீவஸ்தா சின்னமும், பின் பக்கத்தில் ‘உதிபன்’ என்ற பெயரும் காணப்படுகின்றன. நன்றி: ப. புஷ்பரட்ணம்.

ஆதிகால யாழ்ப்பாண அரச பரம்பரையினரின் பெயர்களை கல்வெட்டுகளிலோ எழுத்துப் பதிவுகளிலோ பதிவு செய்யும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. இத்தகவல்களை மறைமுக ஆதாரங்களைக் கொண்டே நாம் பெற வேண்டியுள்ளது. ஆனைக்கோட்டை மயானபூமி அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 300 ஆம் ஆண்டிற்குரிய ‘கோ வேதன்’ (அரசன் வேதன்) என்ற முத்திரை மோதிரம், கந்தரோடையை ஆண்ட ஓர் அரசனின் முத்திரை மோதிரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. அக்காலத்தில் ஆனைக்கோட்டை, கந்தரோடைக் குடியிருப்பு மக்களின் ஈமப்புதையல் மையமாக இருந்திருக்க வேண்டும். அரச முத்திரை மோதிரம் என்பது கொடுக்கல்–வாங்கல் பொருட்பொதிகளில் பதிக்கப்படும் அரச சின்னமாகும். இப்படியான ஏற்றுமதி–இறக்குமதி நடவடிக்கைகள் ஆனைக்கோட்டையில் நடைபெற்றதாக தொல்லியல் ஆதாரங்கள் இல்லை.

கி.மு. 300 ஆம் ஆண்டிற்குரிய நாக உருவம் பதித்த கந்தரோடை முத்திரை நாணயம் (பேராசிரியர் கிருஷ்ணராசா கண்டெடுத்தது), ஒரு கந்தரோடை அரசன் வெளியிட்ட நாணயமாகும். நாணயவியலாளர் சேயோனால் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட நாணயத்தின் பின்பக்கத்தில் ‘உதிபன்’ என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர், கந்தரோடையிலிருந்து நாட்டை ஆட்சி புரிந்த ஓர் அரசனின் பெயர் என்றே எண்ணத் தோன்றுகிறது. நாணயங்களில் அரசனின் பெயரைப் பொறிக்கும் வழக்கத்தை உரோம நாணயங்களிலிருந்து நம்மவர்கள் கற்றிருக்கலாம்.

நாகபூமி

பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உடுத்துறை நாணயத்தில் ‘நாகபூமி’ என்ற பதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது ‘நாகர்களின் ஆட்சிப் பிரதேசம்’ என்ற கருத்தைத் தருகிறது (புஷ்பரட்ணம், ப. 2017: 61).

நாக நகரம்

இலங்கையின் பண்டைக்காலப் பிராமிக் கல்வெட்டு ஒன்றில் ‘நாகநகரம்’ என்ற எழுத்துப் பதிவு காணப்படுகிறது (Epigraphia Zeylanica II, No. 82). இந்த நாகநகரம் கந்தரோடையைக் குறிப்பதாக பேராசிரியர் வேலுப்பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கல்வெட்டுப் பதிவுகள்

பேராசிரியர் பத்மநாதன், யாழ்ப்பாண அரும்பொருளகத்தில் உள்ள கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட கல்லினாலான பௌத்தப் பண்பாட்டுப் படிமங்களில் பின்வரும் நாகர்களின் பெயர்கள் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார்: வேள் ணாகன், வேள் கண்ணன், மணி ணாகன். இவை கந்தரோடையில் ஆட்சி செய்த நாக அரசர்களின் பெயர்களாக இருக்கலாம் (பத்மநாதன், சி. 2025: 179).

இலக்கிய ஆதாரங்கள்

இலக்கிய ஆதாரங்களை எடுத்துக்கொண்டால் கீழ்க்காணும் செய்திகள் கவனிக்க வேண்டியவை.

1. தமிழ்க் காப்பியமான மணிமேகலை ‘வளைவாணன்’ என்பவன் நாகநாட்டை ஆண்ட அரசன் என்றும், அவனது தேவி ‘வாசமயிலை’ என்றும், மகளின் பெயர் ‘பீலிவளை’ என்றும் கூறுகிறது. 

“நாகநாடு நடுக்கின்று ஆள்பவன்

வாகை வேலோன் வளைவணன் தேவி

வாச மயிலை வயிற்றில் தோன்றிய 

 பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்”

— மணிமேகலை, காதை 24: வரி 54 – 57.

2. கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், முதலாவது குமாரகுப்தன் என்ற களப்பிர அரசனின் ஆட்சிக்காலத்தில், காஞ்சி பௌத்தப் பள்ளியின் தலைமைத் தேரராக இருந்தவர் ஆச்சாரிய புத்தகோச மகாதேரர்.

தமிழ்ப் பௌத்தரான புத்தகோசர், பாளி மொழி பயின்று அம்மொழியில் அபாரமான புலமை பெற்று விளங்கியவர். புத்தரின் வேதமான திரிபிடகத்தைத் துறைதோயக் கற்றவர். திரிபிடகத்தின் 90 சதவீதமான சம்ஹிதைகளுக்குப் பதவுரை, விளக்கவுரை, தத்துவப் பொருளுரை ஆகியவற்றை எழுதிய மாபெரும் வித்தகர். திரிபிடகத்தின் அனைத்து ஏடுகளும் தமிழகத்தில் கிடைக்காதபடியால், புத்தபிரானின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இலங்கையின் அநுராதபுரம் மகாவிகாரைக்கு வந்து, அங்கே தங்கியிருந்து சில உரைநூல்களை எழுதினார்.

அவர் அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த சமயம், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிய ‘சம்மோகவிநோதனி’ என்னும் நூலில் வரும் ஒரு சம்பவத்தின்படி, அக்காலத்தைய அநுராதபுர அரசன் ஒருவன், தனது மகனான இளவரசனை நாகதீவின் அரசனாக்கினான். அந்த அரசன் ‘தீபராஜ’ என்ற விருதைப் பெற்றுக்கொண்டான் (Sammoha-Vinodani 1980).

3. ஆறு முக்கியமான பண்டைய தமிழ் வரலாற்று ஏடுகளான கயிலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம், திரிகோணாசல புராணம், கோணேசர் கல்வெட்டு ஆகியவற்றில் உக்கிரசிங்கன் கதிரமலை (கந்தரோடை) அரசனாகக் கூறப்படுகின்றான். 

இந்த ஏடுகளில், இந்த அரசனின் வரலாறு வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் உக்கிரசிங்கன் கதைகளுக்கும், பாளி மற்றும் சிங்கள நூலாதாரங்களில் காணப்படும் விஜயன் கதைகளுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் இருக்கின்றன. உக்கிரசிங்கன் கதைகளை ஆராய்ந்த பேராசிரியர் இந்திரபாலா, விஜயன் கதையில் வரும் பாத்திரமாகிய சிங்கபாகுதான் தமிழ் நூல்களில் உக்கிரசிங்கனாக மாறியிருக்கிறான் எனச் சுட்டிக்காட்டி, இந்த அரசனின் வரலாறு வெறும் கற்பனைக் கதை என நிராகரித்திருக்கிறார் (இந்திரபாலா, கா. 1972: 8–14).

இக்கதையில் வரும் உக்கிரசிங்கனுக்கு சிங்க முகம் இருப்பதாகவும், அவனுடைய மகனுக்கு சிங்கத்தின் வால் இருப்பதாகவும் கூறப்படும் தகவல்கள் நம்பும்படியாக இல்லை. இதன் காரணமாக, இது முழுக்க ஒரு கற்பனைக் கதை என்றே அவர் கருதுகிறார்.

உக்கிரசிங்கன் வரலாறு, சூளவம்சமும் மகாவம்சமும் கூறும் விஜயனின் கதையோடு குழப்பியடிக்கப்பட்ட கற்பனைக் கதையாக இருப்பது உண்மை. ஆனால், அந்தப் பெயரில் உண்மையில் ஓர் அரசன் இருந்திருப்பானோ என மாவிட்டபுரம் கந்தவேள் ஆலய வரலாறு நம்மை எண்ண வைக்கிறது. மாவிட்டபுரத்தில் காங்கேயனுக்காக ஓர் ஆலயம் அமைக்க இந்த அரசன் ஒப்புக்கொண்டது பற்றி யாழ்ப்பாண வரலாற்று நூல்களில் (கைலாயமாலை 1939; யாழ்ப்பாண வைபவமாலை 1950: 13–14) கூறப்படுகின்றது.

இந்த அரசனின் ஆதரவுடன் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, சாலிவாகன சகாப்தம் 721ஆம் ஆண்டில் (கி.பி. 799), ஆனி மாதம் உத்தரம் நாளில், இக்கோயில் குடமுழுக்குடனும் கொடியேற்றத்துடனும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்ற தகவல், கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் ஏட்டுச் சுவடிகள் மூலம் அறிய முடிகிறது (துரைசாமிக் குருக்கள் 1970).

முதலியார் செ. இராசநாயகம் மேலும் சில தகவல்களைத் தருகிறார். உக்கிரசிங்கன் மாவிட்டபுரத்தில் கந்தவேள் கோட்டத்தைக் கட்டி முடிப்பித்து, இந்தியாவிலிருந்து அக்கோயிலுக்கு வேண்டிய விக்கிரகங்களையும், பூசை செய்ய தில்லைவாழ் அந்தணர் குடியில் பெரியமனதுளார் என்னும் விப்பரனையும் அழைப்பித்து, ஆனி மாதத்து உத்தர நாளில் கொடியேற்ற விழாவையும் செய்வித்தான். பெரியமனதுளாரின் சந்ததியாரே இன்றும் மாவிட்டபுர கந்தவேள் ஆலயத்தின் சொந்தக்காரர்களாகவும் அருச்சகர்களாகவும் இருக்கிறார்கள் (செ. இராசநாயகம் 1933: 28–29). மேலே குறிப்பிட்டுள்ள துரைசாமிக் குருக்கள் இந்த வம்சாவளியில் வந்தவராவார்.

நாணயங்கள்

மேலே கூறப்பட்ட ஆதாரங்களைத் தவிர, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளிலும் அகழ்வாய்வுகளிலும் கலாநிதி புஷ்பரட்ணம் சில புராதன நாணயங்களைக் கண்டெடுத்தார். அச்சமயம் தமிழக அரசுகளுடன் தொடர்பில்லாத சின்னங்களும் இலச்சினைகளும் பதித்த வடஇலங்கை நாணயங்கள் பல அவருக்குக் கிடைத்திருந்தன. பெரும்பாலும் ஆதியில் சதுர வடிவான நாணயங்களே தயாரிக்கப்பட்டன. கி.மு. 200ஆம் ஆண்டுக் காலத்தின் பின்னரே உரோம நாணயங்களின் பாணியில் தமிழகத்திலும் இலங்கையிலும் வட்ட வடிவான நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.

இவற்றில் ஆதியான நாணயங்கள் சதுர வடிவானவை. உருக்கிய செம்பில் உருவாக்கப்பட்ட இந்த நாணயங்கள் 1.8 செ.மீ. நீளமும், 1.6 செ.மீ. அகலமும், 2.8 கிராம் நிறையும் கொண்டவை. இவற்றைக் கதிரைமலை (கந்தரோடை) அரச நாணயங்களாக அவர் இனங்கண்டார். இவற்றில் மூன்று வகையான நாணயங்கள் காணப்பட்டன:

  1. இரு விளக்குகளுக்கிடையே காணப்படும் மீன் உருவம் பதித்த நாணயங்கள். மீன் சின்னம் பாண்டியர்களால் மட்டுமல்லாது வடஇலங்கையின் அரசர்களாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான நாணயங்கள் தமிழ்நாட்டில் காணப்படவில்லை.
  2. நாணயத்தின் முன்பக்கத்தில் எழுந்து நிற்கும் எருதும், பின்பக்கத்தில் யானையின் உருவமும் காணப்படும் நாணயங்கள்.
  3. முன்பக்கத்தில் யானை அல்லது எருதின் உருவமும் (தெளிவில்லை), பின்பக்கத்தில் மீனின் உருவமும் பதிக்கப்பட்ட தேய்ந்த நிலையிலுள்ள நாணயம் (Pushparatnam, 2002: 97–98).

கந்தரோடை (கதிரைமலை) சதுர வடிவான செப்பு நாணயங்கள். நன்றி: ப. புஷ்பரட்ணம்.

இந்த நாணயங்களை முன்னர் ஆராய்ந்த ஹியூபேர்ட் பிடுல்வ் (Biddulph 1966: 32), இவற்றைப் பாண்டிய அரசனான ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வடஇலங்கை வழியாகப் படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றிய சமயம் வெளியிட்ட நாணயங்களாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த அரசன் தனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் வெளியிட்ட நாணயங்கள் எல்லாம் வட்ட வடிவானவை. சங்ககாலத்தின் பின்னர் எந்தத் தமிழக அரசரும் சதுர வடிவான நாணயங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறப்பட்ட அரச நாணயங்களில் பதிவு செய்யப்பட்ட பெயர்களும், உத்தியோகபூர்வ கல் வேலைப்பாடுகளில் பொறிக்கப்பட்ட பெயர்களும், சில இலக்கியச் சான்றுகளும் வட இலங்கையில் கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்தே அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட ஒரு நிர்வாகம் நடைமுறையில் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

12. பரந்த நோக்குடைய மத நடவடிக்கைகள் 

ஒரு நகரத்தின் உருவாக்கத்திற்கு மதங்கள் அவசியமில்லை. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எந்த ஆய்வாளரும் குறிப்பிடவில்லை. ஆனால், ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் மதங்களைப் பேண அனுமதிக்க வேண்டியது உயர்ந்த நாகரிகப் பண்பின் அடையாளமாகும். நாகரிகமடைந்த பல நாடுகளில் இந்த நிலையைக் காணலாம்.

இருபது நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கந்தரோடையில் மக்களால் பல வகையான சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஏற்கனவே இங்கு கூறப்பட்டுள்ளது. தாய்த்தெய்வ வழிபாடு, நாக வழிபாடு, யக்‌ஷ வழிபாடு ஆகிய புராதன வழிபாடுகள்; அம்மன், ஐயனார், வைரவர், பெரியதம்பிரான், பூதவராயர் போன்ற கிராமிய நாட்டார் தெய்வ வழிபாடுகள்; திரிசூலம், சிவலிங்கம், வேல் ஆகிய ஆரம்பகால சைவமதச் சின்னங்களின் வழிபாடு; பௌத்த மத வழிபாடு — இவை அனைத்தும் சமூகத்தின் வெவ்வேறு தரப்பட்ட மக்களால் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

ஒருவர் மீது ஒருவர் வேற்றுமை காட்டாத, மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்கத் தெரிந்த உயர்வான பண்புகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்த ஒரு நகரத்தின் உருவாக்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டது நமது முன்னோர்களின் விசாலமான மனப்பான்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது உண்மையிலேயே நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

பின்னுரை

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் வரலாற்றில், அது பொருளாதார வளம் மிக்க பூமியாக விளங்கிய பொற்காலங்கள் இரண்டு. ஒன்று, அது கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டு ‘நாகநாடாக’ விளங்கிய காலம். அடுத்தது, ஆரியச்சக்கரவர்த்திகளை அரசர்களாகக் கொண்ட ‘யாழ்ப்பாண இராச்சியம்’. இரண்டு காலப்பகுதிகளிலும் அதன் வளத்திற்குக் அடித்தளமாக விளங்கியது பெருங்கடல் வணிகமே ஆகும். நாகநாட்டின் வளத்திற்கு உரோம வர்த்தகம் எவ்வாறு மையக் காரணமாக அமைந்ததோ, அதைப் போல யாழ்ப்பாண இராச்சியத்தின் பொருளாதார வளத்திற்கு மாந்தைத்துறை, யாழ்ப்பாணத்துறை வர்த்தகம் மற்றும் மன்னார்க்குடாவின் முத்துக்குளிப்பு ஆகியனவே முக்கிய காரணங்களாகும்.

பண்டைய நாகநாடு ஆதி வரலாற்றுக் காலத்தில் ஒரு வணிகமயமான மையமாக உருவாகியிருந்தமைக்கு கந்தரோடையிலும் யாழ்ப்பாணக் கோட்டையிலும் கிடைத்த தொல்பொருட்ச் சின்னங்கள் சான்றுகளாகும். ஆதி இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டு மக்கள் ஏற்படுத்திய குடியிருப்புகள் நில வளங்களையும் கடல் வளங்களையும் ஆதாரமாகக் கொண்டவை. அவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் உற்பத்தி முறையினை அவர்களால் உருவாக்க முடிந்தது. பயிர்ச்செய்கை, மந்தை வளர்ப்பு, மீன்பிடித்தல் என்பன அவர்களின் வாழ்வாதார உணவு மூலங்களாக அமைந்தன.

அதே சமயம், அவர்களின் பொருளாதாரப் பெருக்கத்திற்கு அடித்தளம் அமைத்த செயல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் பெரிய அளவிலான உற்பத்திப் பெருக்கமாகும். இப்பொருட்களைக் கொண்டே அவர்களால் பன்னாட்டு வாணிபத்தில் கணிசமான அளவில் பங்குகொள்ள முடிந்தது. அங்கே பலவகையான கல்மணி உற்பத்திச் சாலைகளும் சங்கு ஆபரண உற்பத்திச் சாலைகளும் உருவாகியிருந்தன. அந்த உற்பத்திச் சாலைகளில் பலவகையான பெறுமதிமிக்க, பல்வேறு வண்ணங்களில் அமைந்த மணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. சங்கிலிருந்து செய்யப்பட்ட வளையல்கள், காப்புகள், சங்கவடங்கள், மோதிரங்கள் என்பன பெருமளவில் கப்பலேறின. மூன்றாவது ஏற்றுமதிப் பொருட்களாக ஏலம், கிராம்பு, கறுவா ஆகிய வாசனைத் திரவியங்கள் நாட்டின் பிற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இப்பொருட்களை உரோமப் பேரரசின் துறைமுகங்களுக்கு வணிகர்கள் கொண்டு சென்றனர். உரோமப் பெண்மணிகளிடையே இப்பொருட்களுக்கிருந்த செல்வாக்கினால் உரோமரின் பொற்காசுகள், வெள்ளிக்காசுகள் மற்றும் வேறு உலோகங்களில் வார்க்கப்பட்ட காசுகள் பெருமளவில் கிடைத்தன. நாகநாட்டில் கிடைத்த மதுச்சாடிகளும், அறிற்றைன் மட்கலன்களும், ரெளலெற்ரெட் தட்டுகளும் உரோமரோடு கொண்டிருந்த நீண்டகால வாணிபத்தின் அடையாளங்களாகும்.

இத்துடன், இந்தியாவின் பல பிராந்தியங்களுடனும் ஆதியிலிருந்தே வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. ஆய்வாளர் போல் பீரிஸ், ஒரு மாத காலத்தில் கந்தரோடையிலிருந்து கி.மு. 500–400 ஆம் ஆண்டு காலத்திற்குரிய வடஇந்திய அச்சுக்குத்திய 35 நாணயங்களைப் பெற்றுக்கொண்டது, இந்திய வர்த்தகத்தின் தொன்மையையும் பரவலையும் எடுத்துக்காட்டுகிறது. சூதுபவளம், அகேற், வைடூரியம் (Carnelian, Agate, Lapis-Lazuli) ஆகிய மணிக்கற்களின் மூலப்பொருட்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலப் பகுதிகளிலிருந்து பெறப்பட்டன. தமிழகத்தின் பல பிராந்தியங்களிலிருந்தும் சில மணிக்கற்களின் மூலப்பொருட்கள் பெறப்பட்டன. படியூரிலிருந்து ‘பெரில்’ எனப்படும் மரகதம், சிவன்மலையிலிருந்து ‘சபையர்’ எனப்படும் நீலமணி, ‘அமெதிஸ்ட்’ எனப்படும் ஊதா நிறக்கல் ஆகியவற்றின் மூலப்பாறைகள் பெறப்பட்டு, கந்தரோடையின் உற்பத்திச் சாலைகளில் துளைப்பணங்களின் தொழில்நுட்பம் அறிந்த கலைஞர்களால் செம்மைப்படுத்தப்பட்டு பல வண்ண ஒளி உமிழும் கற்களாகவும், மணிகளாகவும், மணி மாலைகளாகவும் மாற்றப்பட்டன.

ஒரு சிறப்பான ஆட்சியமைப்பும், தூரநோக்குக் கொண்ட தன்னலமற்ற அறிவுஜீவிகளின் நிர்வாகத் திறமையும், ஆற்றல் மிக்க மக்களின் அயராத உழைப்பும் இல்லாமல் இவ்வாறான நாகரிகமடைந்த நாகநாட்டை உருவாக்கியிருக்க முடியாது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் மக்கள் குடியேறி, அதிலிருந்து 500 ஆண்டுகளுக்குள் அந்தக் கிராமம் ஒரு நகரமாக வளர்ந்துவிட்டது என்பதை அறிவியல் ரீதியான தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன.

கந்தரோடை நாகரிகத்தின் சரிவு 

கந்தரோடை நாகரிகத்தின் பொருளாதாரம் முக்கியமாக அதன் பெருங்கடல் வர்த்தகத்திலேயே தங்கியிருந்தது. விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் என்பன மக்களின் உணவுத் தேவைகளுக்குப் போதுமானதாக இருந்ததே ஒழிய, மேலதிக வருமானம் எதையும் அவை வழங்கவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் குறைந்து போன வர்த்தக நடவடிக்கைகள் பொருளாதார நலிவை ஏற்படுத்தின.

1. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அநுராதபுரம் வலுவான ஓர் ஆட்சிபீடமாக உருவாகி, பெருவருவாய் தந்து கொண்டிருந்த மாந்தைத்துறையின் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதுவரை நாகநாட்டு அரசுகளுக்கு அங்கிருந்து கிடைத்த துறைமுக வருவாய் கட்டுப்படுத்தப்பட்டது. 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்பட்ட பின்னரே மன்னார்க் குடாவின் முத்துக்குளிப்பு நடவடிக்கைகள் திரும்பவும் யாழ்ப்பாண அரசை வந்தடைந்தன.

2. உரோமப் பேரரசு கி.பி. 476ஆம் ஆண்டளவில் உருக்குலைந்து போனது. அதன் வீழ்ச்சியோடு பெரும் வருமானம் தந்து கொண்டிருந்த உரோம வர்த்தகம் சடுதியாக நின்றுபோனது. உரோம வர்த்தகத்தின் இழப்போடு, நாகநாடு தனது செல்வத்தைப் பராமரித்த வருமானத்தின் பெரும்பகுதியை இழந்தது.

3. கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து அரேபிய, பாரசீக, சீன வர்த்தகங்கள் நாகநாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருந்தன. இவர்களுடனான வர்த்தகம் யாழ்ப்பாண இராச்சிய காலம் வரை நீடித்தது.

4. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் தலைநகர் கந்தரோடையிலிருந்து கடற்கரைத் துறைநகரமான சிங்கை நகருக்கு மாற்றப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் தலைநகரிலிருந்தே வழிநடத்தப்பட்டன. கந்தரோடை தலைநகர் என்ற பதவியை இழந்து, வர்த்தகத்தின் மூலம் கிடைத்த மேலதிக வருவாயையும் இழந்தது. ஆனால் அதன் குளமும் நெல் விவசாய வளர்ச்சியும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணப் போதுமானதாக இருந்தன. அதன் பின்னர் கந்தரோடை ஒரு கிராமமாகத் தொடர்ந்தது.

பிற்கால வரலாறு:

அரச படையெடுப்புகளும் யாழ்ப்பாணத்தின் மீதான மேலாதிக்கங்களும்

பல்லவர் செல்வாக்கு

அநுராதபுரத்தில் கி.பி. 650 தொடக்கம் கி.பி. 659 வரை ஆண்ட இரண்டாம் கஸ்ஸப மன்னனின் மகனான மானவர்மன், அவனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட அரசு உரிமைக்கான குழப்பங்களின் விளைவாக, அவனுக்கு உயிராபத்து ஏற்பட்டபோது அநுராதபுரத்தை விட்டு வடபகுதிக்கு ஓடி ஒளிந்தான். இப்படியாக உரிமையிழந்த இளவரசர்கள் அநுராதபுரத்தை விட்டு ஓடி ஒளிவது ஒன்றும் புதிய நிகழ்ச்சி அல்ல. அப்படி ஓடும்போது, பெரும்பாலும் இளவரசர்கள் தெற்கு நோக்கி மலைப்பிரதேசத்திற்கோ அல்லது அதற்கு அப்பாலுள்ள ரோஹணத்திற்கோ செல்வதே வழக்கம்.

வழமைக்கு மாறாக, மானவர்மன் வடக்கு நோக்கி ஓடி உத்தரதேசத்தில் அடைக்கலம் புகுந்தான். இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்திருக்க வேண்டும். வடபகுதி அவனுக்குக் கூடுதலான பாதுகாப்பைக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம். ஆனால், அவன் அங்கு தஞ்சமடைந்திருந்ததை அநுராதபுரத்தில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ஹத்ததாட்டா அறிந்து, அவனைக் கைப்பற்ற முயன்றபோது, மானவர்மன் வடபகுதியை விட்டு பல்லவ அரசுக்குச் சென்று பல்லவப் பேரரசனின் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டான் (இந்திரபாலா 2006: 232).

மானவர்மன் பல்லவர் தலைநகராகிய காஞ்சியில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான். அங்கிருந்த காலத்தில், பல்லவர்கள் தங்கள் பகைவர்களாகிய சாளுக்கியர்களுக்கு எதிராக நடத்திய போர்களில், மானவர்மன் முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதிகளில் ஒருவராகப் போர் புரிந்தான். பின்னர், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலத்தில், பல்லவப் படையுடன் வடஇலங்கை வந்து தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு அநுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்றான்.

அக்காலத்தில் பொத்தகுட்டன் என்ற தமிழ்த் தலைவன், அநுராதபுரத்தில் மிகுந்த அரசியல் ஆதிக்கத்துடன் ஹத்ததாட்டா என்பவனை மன்னனாக நியமித்து வலுவாக நிர்வாகம் நடத்திக்கொண்டிருந்தான். மானவர்மன் படை அநுராதபுரத்தை அடைவதற்கு முன், பொத்தகுட்டனும் ஹத்ததாட்டனும் வடக்கு நோக்கிச் சென்று மானவர்மனை எதிர்த்தனர். ஆனால், பல்லவப் படையை இவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. இருவரும் கொல்லப்பட்ட பின்னர், மானவர்மன் 684ஆம் ஆண்டில் அநுராதபுரத்தில் மன்னனாக முடிசூடிக்கொண்டான் (இந்திரபாலா 2006: 233).

பல்லவர் படைகள் வடபகுதியில் வந்திறங்கிய நிகழ்ச்சிகளும், பல்லவர் ஆதரவைப் பெற்ற சிங்கள இளவரசன் ஒருவன் அநுராதபுரத்தில் ஆட்சிபெற்ற நிகழ்ச்சியும் இக்காலத்து வரலாற்றையும் வட இலங்கையின் அரசியல் நிலையையும் விளங்கிக்கொள்வதற்கு முக்கியமானவை. ஆறாம் நூற்றாண்டின் பின்னர் தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசும் பாண்டியப் பேரரசும் எழுச்சிபெற்ற போது, அவற்றிற்கு அண்மையில் இருந்த வட இலங்கை, தெற்கு இலங்கையைக் காட்டிலும் கூடுதலான தமிழ்ச் செல்வாக்கிற்கு இலக்காகியது. பல்லவ அரசில் வளர்ந்த பண்பாடு வடக்கு மற்றும் வடகிழக்கு வழியாக இலங்கையில் பரவியது (இந்திரபாலா 2006: 234).

சோழர் படையெடுப்பு

கி.பி. 993ஆம் ஆண்டில் தமிழகத்திலிருந்து சோழப் பேரரசன் ராஜராஜன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். முதலில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சோழர்கள், அங்கிருந்து அநுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்று போரில் சிங்கள அரசனைத் தோற்கடித்துவிட்டு, பின்னர் பொலநறுவையில் தங்கள் அரசை நிறுவிக்கொண்டார்கள். அவர்கள் வெற்றிகொண்ட பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்தோடு இணைக்கப்பட்டன. சோழர்கள் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டதைக் கொண்டாட சிறப்பான உரக நாணயங்களை வெளியிட்டார்கள். இலங்கையில் சோழரின் ஆட்சி கி.பி. 1077 வரை நீடித்தது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல புதிய சைவக் கோயில்கள் நிறுவப்பட்டன.

கலிங்க மாகன்

கி.பி. 1215இல் கலிங்க தேசத்து அரசன் மாகன், பெருந்தொகையான தென்னிந்தியப் படையினரைத் திரட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி, அங்கிருந்து பொலநறுவையின் மீது படையெடுத்துச் சென்று அரசைக் கைப்பற்றி, அங்கே இருபத்தொரு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என சூளவம்சம் குறிப்பிடுகிறது.

கலிங்க மாகனும் அவனுடைய துணையரசனாகிய ஜெயபாகுவும் பொலநறுவையிலிருந்து ராஜரட்டையை நெடுங்காலம் ஆட்சிசெய்தனர் என சிங்கள வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அவனது ஆட்சிப்பரப்பு யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசம், திருகோணமலை வரை பரவியிருந்தது. கலிங்க மாகனின் வேளக்காரப் படையில் வன்னியர்கள் இருந்தார்கள். மாகன் பொலநறுவையைக் கைப்பற்றிய பின், வன்னிப் பகுதியின் ஆட்சியை வன்னியர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான் என மட்டக்களப்புப் பூர்வசரித்திரம் கூறுகிறது. அதனைத் தொடர்ந்து வன்னிப் பகுதியில் பல சிற்றரசுகள் தோற்றம் பெற்றன. கோகர்ணம், கொட்டியாரம், கந்தளாய், மன்னார், மாதோட்டம், ஊராத்துறை போன்ற இடங்களில் மாகன் படைநிலைகளை அமைத்து, பொலநறுவையிலிருந்து ஆட்சிபுரிந்தான் என சூளவம்சம் கூறுகிறது.

சந்திரபானு

சந்திரபானு என்ற சாவக நாட்டு அரசன், கி.பி. 1247இல் இலங்கையின் தம்பதெனிய சிங்கள அரசின் மீது படையெடுத்து வந்தான். ஆனால், அவனால் வெற்றிகாண முடியவில்லை; தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டான்.

அவன் இரண்டாம் தடவையாக சோழ மற்றும் பாண்டிய நாடுகளிலிருந்து படைகளைச் சேர்த்துக்கொண்டு, வட இலங்கையில் மாகன் ஆட்சிபுரிந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தைக் கைப்பற்றி, அங்கே தனது ஆட்சியை நிலைப்படுத்திக்கொண்டு, தம்பதெனிய அரசனான இரண்டாம் பராக்கிரமபாகுவை (கி.பி. 1236–1270) தாக்கினான். சந்திரபானுவால் மீண்டும் வெற்றிகாண முடியவில்லை. பின்னர் யாழ்ப்பாணம் திரும்பி, சிங்கைநகரிலிருந்து வடஇலங்கைப் பிரதேசங்களை ஆட்சிபுரிந்தான்.

சாவகரின் ஆட்சி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடக்கிலுள்ள வன்னிப் பிரதேசத்திலும், திருகோணமலையிலும் அமைந்திருந்தது என்பதை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திரிசிங்கள கடயம்பொத்’ என்ற நூல் குறிப்பிடுகிறது. சாவகச்சேரி, சாவகக்கோட்டை ஆகிய இடப்பெயர்கள் சாவகர் ஆட்சிக் காலத்தில் தோற்றம் பெற்றன.

பாண்டியப் படையெடுப்புகள்

சந்திரபானுவின் ஆட்சிக்காலத்தில், தமிழகத்திலிருந்து முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1253–1268) படையெடுப்பு வடஇலங்கையின் மீது நடைபெற்றது. அந்தப் போரில் சந்திரபானு தோற்கடிக்கப்பட்டான். அதன் பின்னர் யாழ்ப்பாணச் சாவக அரசு பாண்டியரின் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. சுந்தரபாண்டியனின் மெய்கீர்த்தியில் இடம்பெறும் “துலங்கொழி மணியும், சூழி வேழமும் இலங்கைக் காவலனை இறைகொண்டருளி” என்ற வரிகள் மூலம், பாண்டியர்கள் யானைகளையும் மணிகளையும் திறையாகக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

பின்னர், பாண்டியர்களுக்கு சந்திரபானு திறை செலுத்த மறுத்ததனால், பாண்டிய அரசர்கள் மீண்டும் படையெடுத்து வந்து அவனைத் தோற்கடித்து கொலை செய்தார்கள். சுந்தரபாண்டியனின் துணையரசனாகிய வீரபாண்டியனுடைய பத்தாவது ஆண்டு மெய்கீர்த்தியில் “சோணாடும் ஈழமும் சாவகன் முடித்தலையும் கொண்டருளிய” என்ற வாசகம் வருகிறது. இதன் மூலம், சோழ நாட்டையும் ஈழத்தையும் வென்று கைப்பற்றியதோடு, சாவக அரசனின் முடித்தலையையும் இவன் கவர்ந்தான் என்பதை அறிய முடிகிறது.

அவனது ஆட்சிக்கால பதினோராம் ஆண்டிற்குரிய வீரபாண்டியன் மெய்கீர்த்தி, அவனது ஈழப் படையெடுப்பைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது. குடுமியாமலைச் சாசனத்திலும் வீரபாண்டியனுடைய இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய செய்திகள் வருகின்றன. வீரபாண்டியன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்து, அந்நாட்டு மன்னன் ஒருவனைக் கொன்று, அவனுடைய முடி முதலான அணிகலன்களையும், சிங்காசனம், வெண்கொற்றக்குடை, சாமரம் முதலிய அரச சின்னங்களையும் கவர்ந்தான் என்றும், பின்னர் முன்பு தனக்குப் பகைத்தொழில் புரிந்து, பின்பு பணிந்துவிட்ட சாவகனுடைய மைந்தனுக்கு ஆட்சியுரிமை வழங்கி, வீரக்கழல் அணிவித்து, அவனை ஆனைமேல் ஏற்றி நகரத்திற்குச் செல்லவிட்டான் என்றும் அச்சாசனம் கூறுகிறது.

இம்மெய்கீர்த்தி தரும் செய்திகளின் மூலம், யாழ்ப்பாணத்தில் சாவகர்கள் ஏற்படுத்தியிருந்த இராச்சியத்தை பாண்டியர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள் என அறிந்துகொள்ள முடிகிறது (சிற்றம்பலம், சி.க. 1992: 30–33).

இதன் பின்னர் ஏற்பட்ட பாண்டிய மன்னர்களின் மேலாதிக்க வலிமையும், வடஇலங்கை அரச விவகாரங்களில் அவர்களின் தலையீடும், கி.பி. 1284ஆம் ஆண்டில் ஆரியச் சக்கரவர்த்தி என்பவனின் தலைமையில் நடைபெற்ற இலங்கைப் படையெடுப்பின் பின்விளைவுகளுமே யாழ்ப்பாண இராச்சிய மன்னர்களின் தோற்றத்திற்குக் காரணமாயின.

சாவகர்களின் பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தில் ஆட்சி ஏற்பட்டதற்கு, மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துப் பாண்டியப் படையெடுப்பின் விளைவே காரணமாகும். சூளவம்சம் குறிப்பிடும் பாண்டியப் படைத்தலைவனாகிய ஆரியச் சக்கரவர்த்தியோ, அல்லது அவனது வம்சாவளியிலுள்ள ஒருவனோ, யாழ்ப்பாணத்தில் அரசனாக அதிகாரம் பெற்றான். ‘ஆரியச் சக்கரவர்த்தி’ என்பது யாழ்ப்பாணத்தில் அரசரின் இயற்பெயராக அல்லாது, வம்சப் பெயராகவே வழங்கி வந்தது (சிற்றம்பலம், சி.க. 1992: 30–33).

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்

ABEYARATNE, M. (1996): Multi-dating Studies of Archaeological Sites, Unpublished Ph D. dissertation, Australian National University, Canberra.

ALLCHIN, B. & ALLCHIN, F.R. (1968): The Birth of Indian Civilization Harmondsworth, London.

ALLCHIN, B. and ALLCHIN,R. (1993): The Birth of Indian Civilization, Penguin Books India (P) Ltd., New Delhi, India.

ALLCHIN, F.R. (1990): Patterns of City Formation in Early Historic South Asia, South Asian Studies, 6: 163-173.

ALLCHIN, F.R. (1995): The Archaeology of early Historic South Asia: The Emergence of Cities and States, Cambridge University Press, Cambridge.

BALDEUS, PHLIP (1732): A Description of the Great and Most Famous Isle of Ceylon (Translated from the Dutch Edition, Amsterdam 1672 by Phillipus Baldaeus), London., Reprint  1996, AES, Delhi.

BAUER, ANDREW, M. (2015): Prehistoric Mortuary Practices and The Constitution of Social Relationships: Implications of the First Radiocarbon Dates from Maski, Radiocarbon, Vol. 57, pp 795-806.

BEGLEY, VIMALA (1967): Archaeological Exploration in Northern Ceylon; Expedition Summer 1967: (9)4; Bulletin of the University Museum, University of Pennsylvania, Philadelphia.

BEGLEY, VIMALA (1973): ‘Proto-Historic Material from Sri Lanka and Indian Contacts’ in (Eds.) Kennedy,K.A.R & Possehl, G.L.: Ecological Backgrounds of South Asian Pre-history; Occasional papers and Thesis, Cornell University.

BIDDULPH, C.H. (1966): Coins of Pandyas, Vol. 11 of Numismatic Notes and Monographs, Numismatic Society of India, Banaras Hindu University, Varanasi.

BOPEARACHCHI, O. & WICKRAMASINHA, W. (1999): Ruhuna, An Ancient Civilization Revisited, Nugegoda.

BRITO, C. (1879): The Yalpana-Vaipava-Malai or The History of the Kingdom of Jaffna, Translated from the Tamil, Colombo.

BURKITT, MILES (1932): Archaeological table of Prehistory; Antiquity,    Vol.6(22) CONINGHAM, R.A.E. and ALLCHIN, F.R. (1995): The Rise of Cities in Sri Lanka, in F.R. Allchin (ed.)

The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press, Cambridge.

CONINGHAM, R.A.E. (1999): The British Sri Lanka Excavations at Anuradhapura Salgahawatta, Volume 1: the site, Society for South Asian Studies Monograph 3, BAR international series 824, Oxford: Archaeopress.

CHAKRABARTI,  (1973): Beginnings of Iron and Social Change in India, Indian Studies Past and Present , No.9.

CHILDE, GORDON V. (1947-48): Megaliths; Ancient India No.4, July 1947-  Jan 1948; Archaeological Survey of India.

CULAVAMSA (1953): Edited by Wilhelm Geiger, The Ceylon Govt. Information Dept., Colombo.

DAVIS, CHRISTOPHER; CONINGHAM, ROBIN; GUNAWARDHANA, PRISHANTA; PUSHPARATNAM, PARAMU; SCHMIDT, ARMIN; MANUEL, MARK (2018): “Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of the Indian Ocean Trade” in Essays in Buddhism and Buddhist Monastic Archaeology, Buddha Rashmi Vesak Volume 2018, Sri Lanka Central Cultural Fund.

DERANIYAGALA, P.E.P. (1953): “Ferro-Lithic, an Early Historic Terracotta Stotnary and a Cist from Ceylon” in Spolia Zeylanica, Vol. 27, Part I, pp133-138, Colombo.

DERANIYAGALA, S.U. (1992): Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Sri Lanka Department of archaeological Survey, Colombo.

DERANIYAGALA, S.U. (1996): Pre- and Protohistoric Settlement in Sri Lanka; XIII th Congress Proceedings of the International Union of Prehistoric and Protohistoric Sciences, Forli, Italy., 8-14 Sept. 1996.Vol 5, Section 16, pp 277-285.

DERANIYAGALA, S.U. and ABEYRATNE, M. (2000): ‘Radiocarbon Chronology of Iron Age and Early Historic Anuradhapura, Sri Lanka’ in Taddei and De Marco (2000: 759-791).

DERANIYAGALA, S.U. (2013): General Conclusions in ‘Mantai City by the Sea’ by John Carswell, Siran Deraniyagala and Alan Graham, Linden Soft Verlag, Aichwald, Germany, p.511

ELLAWALLA, H. (1969): Social History of Early Ceylon, Dept. of Cultural Affairs, Colombo. GODAKUMBURA, C.E. (1968): Kantarodai, Journal of the Royal Asiatic society (Ceylon Branch), Vol. XII (New Series), Colombo. Pages 67-85.

GUNAWARDANA, R.A.H.L. (1977): Prelude to the State, An Early Phase in the Evolution of Political Institution in Ancient Sri Lanka; The Sri  Lanka Journal of Humanities, VIII (1&2).

GURURAJA RAO, B.K. (1972): The Megalithic Culture in South India, University of Mysore, Mysore.

HELWING, BARBARA and PERERA, NIMAL (2018): Exploring Ancient Kantarodai, Report on the First Field Season, February 2018.

HELWING, BARBARA and PERERA, NIMAL (2019): Exploring Ancient Kantarodai, Report on the Second Field Season, January – February 2019.

HELWING, BARBARA; PERERA, NIMAL; PUSHPARATNAM, P. et al. (2022): Lifeways of Early Kantarodai, Ancient Lanka Volume 1, Siran Deraniyagala Commemoration Volume.

HARRIS, DAVID RUSSEL  ed. (1996): Origin and Spread of Agriculture  and Pastoralism  in Eurasia; UCL Press, London.

INDRAPALA,  K. (2005): Evolution of an Ethnic Identity; MVPublic. Sydney. JAYAWARDENA, D.E.De.S. (1982): The Geology and Tectonic Setting of the Copper-Iron Ore Prospect at Seruwila, North East Sri Lanka: Journal of National Science Council, Sri Lanka,  10 (1), 1982: 129-142.

JOSHI, M.C. (1973): Concept of Urban Revolution and the Indian Context: Comments on Chakrabarti 1972, Puratattva, 6: 36B.

KEESING, R.M. (1981): Cultural Anthropology: A Contemporary Perspective, New York.

MAHAVAMSA (1950): Edited by Wilhelm Geiger, The Ceylon Govt. Information Dept., Colombo.

MOORTI, U.S. (1994): Megalithic Culture of South India, Ganga Kaveri   Publishing House, Varanasi.

MURPHY, CHARLENE; FULLER, DORIAN Q; BOIVIN, NICOLE et al. (2018): Early Agriculture in Sri Lanka: Archaeobotanical Analysis and Radiocarbon Dates from Early Historic Sites Kirinda and Kantarodai, Archaeological Research in Asia, Dec 2018.

PIERIS, PAUL E. (1917): Nagadipa and Buddhist Remains in  Jaffna, Part I, Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVII, No. 70,  Colombo; (1919): Part II; Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVII, No. 72, Colombo.

PIERIS, PAUL E. (1920): The Kingdom of Jafanapatam (Translated from the Portuguese Archives), The Ceylon Daily News Printers, Colombo.

POSSEHL, G.L.(1990): Scientific Dates for South Asian Archaeology; University of Pennsylvania: University Museum, Asia Section 1., Philadelphia.

POSSEHL, G.L.(1994): Radiometric Dates for South Asian Archaeology; An Occasional publication of the Asia Section; University Museum, University of Pennsylvania, Philadelphia.

PUSHPARATNAM, P. (1993): Poonakari: An Archaeological Survey (in Tamil), University of Jaffna, Thirunelvely.

PUSHPARATNAM, P. (2002): Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Publishers, Jaffna.

PUSHARATNAM. P (2002a): Naka Dynasty as Gleaned from the Archaeological Evidences in Sri Lanka, Science association, Jaffna.

RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna, Mrs Ragupathy, Madras.

RAY, REGINALD A. (1994): Buddhist Saints in India, Delhi.

RASANAYAGAM, C. (1926): Ancient Jaffna, Madras.

REA, ALEXANDER (1915): Catalogue of Prehistoric Antiquities of  Adichanallur and Perumbair, Madras; Govt. Press, Madras.

SAMMOHA- VINODANI ABHIDHAMMA-PITAKE VIBANGATTHAKATHA (1980): Edited by A.P. Buddhadatta Thero, Pali Text Society, London.

SENEVIRATNE, S (1993): The Archaeology of Megalithic Black and Red Ware Complex in Sri Lanka,  Ancient Ceylon 5, Colombo. 

SENEVIRATNE, S. (1994): The Ecology and Archaeology of the Seruwila Copper-Magnetite prospect, Northeast Sri Lanka;  in KENOYER, J.M. (ed.):    Contributions to the Archaeology of South and West Asia; Wisconsin  Archaeological Reports 3, University of Wisconsin, Madison.   

SENEVIRATNE, SUDHARSHAN (2003): The Philosophy and Social Role of Early Buddhism in South India; Vesak Commemoration Lecture, Chennai.  

SENIVIRATNE, S (2006): Reading the Past in a More Inclusive Way (interview); Frontline, Jan 14, 2006, Madras.                                                                    

SINGH, H.N. (1982): History and Archaeology of Black and Red Ware, Sundeep Prakashan, Delhi.

SITRAMPALAM, S.K. (1980 ): The Megalithic Culture of Sri Lanka, Ph.D. Thesis, (Unpublished) Post-Graduate and Research Institute, Deccan College, University of Poona.

THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, Kingston, U.K.

THIAGARAJAH, SIVA (2015): Genetic Origins of the Tamils, Kumaran Book House, Colombo.

VELUPPILLAI, A. (1980): Epigraphical Evidences for Tamil Studies, International Institute of Tamil Studies, Chennai.

VELUPPILLAI, A. (1998): History of Tamil Buddhism in Sri Lanka in Buddhism in Tamil Nadu (Ed. G. John Samuel), Institute of Asian Studies, Chennai.

WEERAKKODY, D.P.M. (1997): Taprobane: Ancient Sri Lanka as known to Greeks and Romans; Brepols Publishers; Turnhout, Belgium.

இந்திரபாலா, கா. (1972): யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், கண்டி.

இந்திரபாலா, கா. (2006): இலங்கையில் தமிழர், குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு.

இரகுபதி, பொ. (1983): பெருங்கற்கால யாழ்ப்பாணம், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை.

இ.ராசநாயகம், முதலியார், செ. (1933): யாழ்ப்பாணச் சரித்திரம், வண்ணார்பண்ணை. யாழ்ப்பாணம்.

கைலாயமாலை (1939): பதிப்பு – சா.வே. ஜம்புலிங்கம்பிள்ளை, சென்னை.

கிரு~;ணராசா, செ. (1998): தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி.

சிற்றம்பலம், சி.க. (1999): பண்டைய தமிழகம், குமரன் புத்தக இல்லம், சென்னை – கொழும்பு.

சிற்றம்பலம், சி.க. (1993): யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி.

செகராச சேகரமாலை (1942): பதிப்பு – இ. ச. இரகுநாதையர், கொக்குவில்.

சேதுப்பிள்ளை, ரா.பி. (1976): தமிழகம் – ஊரும் பேரும், சென்னை.

துரைச்சாமிக் குருக்கள், பிரம்மஸ்ரீ (1970): மாவிட்டபுரக் கந்தன் ஆலயம், வீரகேசரி வாரவெளியீடு, 12 ஜுலை 1970, கொழும்பு.

பத்மநாதன், சி. (2011): யாழ்ப்பாண இராச்சியம் – ஒரு சுருக்க வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.

பத்மநாதன், சி. (2024): ஆதிகால யாழ்ப்பாணம் – ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனங்கள், கொழும்பு தமிழ்ச் சங்கம், கொழும்பு.

புஷ்பரட்ணம், ப. (2017): இலங்கைத் தமிழர் – ஒரு சுருக்க வரலாறு, சுவிற்சர்லாந்து.

மட்டக்களப்பு மான்மியம் (1962): பதிப்பு – F.X.C. நடராசா, கொழும்பு.

வையா (1921): பதிப்பு – சுவாமி ஞானப்பிகாசர், யாழ்ப்பாணம்.

வையாபாடல் (1921): பதிப்பு – J.W.அருட்பிரகாசம், யாழப்பாணம்.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்