அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 2

May 13, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க

ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம்

யுவான் லின்ஸ் (Juan Linz) என்னும் ஆய்வாளர் எழுதிய ‘The Perils Of Presidentialism’ (ஜனாதிபதி முறையின் ஆபத்துகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஜனாதிபதி முறை தாராண்மை ஜனநாயக விழுமியங்களை அடியழித்து (Undermine), சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

“பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறையையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து பார்த்தால், பாராளுமன்ற முறை ஜனநாயக உறுதிநிலையைப் (Stable Democracy) பேணுவதற்கு உதவக்கூடியது. அது இவ்விடயத்தில் ஜனாதிபதி முறையை விட மேலானது. அரசியல் மட்டத்தில் ஆழமான பிளவுகளை (Deep Cleavages) உடைய தேசங்களுக்கு ஜனாதிபதி முறையை விடப் பாராளுமன்ற முறையே சிறந்தது.”

மேற்குறித்த ஆய்வுக்கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட J.J. லின்ஸ் அவர்களின் இக்கூற்று, இலங்கையின் ஜனாதிபதி முறைக்கும் பொருத்தமானது. 1978 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஜனாதிபதி முறையின் கீழ் இலங்கை சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருப்பதை அவதானிக்கும்போது, தென் அமெரிக்க அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு J.J. லின்ஸ் முன்வைக்கும் கருத்துகள் இலங்கைக்கும் பொருத்தமானவையே என றொகான் எதிரிசிங்க கூறுகிறார். அவர் ஜனாதிபதி முறைமையின் எதிர்மறை விளைவுகளைப் பற்றிக் கூறியிருப்பவற்றை எமது வார்த்தைகளில் சுருக்கமாகக் கீழே தந்துள்ளோம்.

1. தனிநபர் அரசியல்

ஜனாதிபதி முறை தனிநபரை முதன்மைப்படுத்தும் அரசியலை (Personalised Style of Politics) ஊக்குவிப்பதாக உள்ளது. இக்காரணத்தால் கவர்ச்சி ஆளுமையுடைய அரசியல்வாதிகளும் மக்கள்வாத அரசியல்வாதிகளும் (Populist Politicians) ஆட்சியை இலகுவில் பிடித்து விடுகிறார்கள். ஜனாதிபதி முறையின் கீழ் நாடு முழுமையிலும் உள்ள வாக்காளர்களினால் தெரிவு செய்யப்பட்டவராக இருக்கும் ஒரு தலைவர், தேர்தல் முடிந்தபின் அரசியல் யாப்புவாதத்தின் அடிப்படை விதிமுறைகளை (Basic Norms of Constitutionalism) புறந்தள்ளிச் சர்வாதிகாரியாகச் செயற்பட ஆரம்பிக்கிறார். நாடு முழுமையினாலும் (The Whole Country) தெரிவு செய்யப்பட்டவர் என்ற மமதை உணர்வு, தம்மால் எதையும் செய்ய முடியும், எதையும் செய்வதற்குத் தனக்கு அதிகாரம் உள்ளது என்ற பிறழ்வான சிந்தனையை அவர் மனதில் உருவாக்கி விடுகிறது. 1978இற்குப் பிந்திய இலங்கையின் அனுபவம் தனிநபர் அரசியலின் தீய விளைவுகளை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

2. பலமிக்க அரசாங்கம்

ஜனாதிபதி முறை பலமிக்க அரசாங்கத்தை (Strong Government) அமைப்பதற்கு உதவுகிறது. இதனால் பாராளுமன்ற முறையின் விளைவாக ஏற்படும் உறுதியற்ற நிலைக்கு (Instability) மாறாக உறுதியான ஆட்சியை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்து செல்ல முடியும். ஜனாதிபதி முறையில் பாராளுமன்ற முறையின் நெகிழ்ச்சித்தன்மை என்ற பலவீனம் இருப்பதில்லை. அது நெகிழ்வற்ற தன்மை (Rigidity) உடையதாக அமைகிறது. இவை ஜனாதிபதி முறைக்குச் சார்பாக வைக்கப்படும் வாதங்களாகும்.

இலங்கையில் ஜனாதிபதி முறை 1978 இல் நடைமுறைக்கு வந்த காலம் முதல் இன்றுவரை ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொண்டனர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் இவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டன. இலங்கையில் ஊழல், உறவினர்களையும் நண்பர்களையும் அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் அமர்த்துதல், அதிகார துஸ்பிரயோகம் என்பன அண்மைக்காலத்தில் அதிகரித்துச் சென்றதையும் காண்கிறோம். இதனால் நல்லாட்சி (Good Governance) என்ற பேச்சு பொருளற்றதாகிவிட்டதையும் காண முடிகிறது. மக்களிடம் அரசியல் பற்றிய வெறுப்புணர்வு பரவலாக உள்ளது. இலங்கையில் பிரிவினைவாத இயக்கம் வலுப்பெற்ற பின்புலத்தில் அரசை மேலும் வலுவுடையதாக்க வேண்டும்; தேசிய பாதுகாப்புக்கு (National Security) ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற பயப்பீதி உணர்வு அரசாங்கத்தை மேலும் பலப்படுத்த உதவியது. இவை யாவற்றினதும் விளைவாக இலங்கையில் அரசியல் யாப்புவாத அரசு (Constitutional State) என்பதற்குப் பதில் ‘தேசிய பாதுகாப்பு அரசு’ (National Security State) என்னும் சர்வாதிகார அரசு உருவாக்கம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் உறுதிநிலை ஏற்பட்டிருக்கிறதென்றால், அதனை எதிர்மறைத்தன்மையுள்ள உறுதிநிலை அல்லது சர்வாதிகாரம் (Negative Kind of Stability – Authoritarianism) என்று அழைப்பதே பொருத்தமானது எனலாம்.

3. 2001-2003 கால அரசியல்

இலங்கையில் 2001–2003 காலத்தில் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்கவும், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஒருங்கே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தனர். ஜனாதிபதியும் பிரதமரும் தமக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு இணக்கமாகச் செயற்படக்கூடிய ‘உடனுறைக் காலம்’ (Period of Co-habitation) தோன்றிவிட்டதாக 2001 இல் தேர்தல் முடிந்த சூழ்நிலையில் ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், குறுகிய காலத்திற்குள் இது முடிவுக்கு வந்தது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் (Power Sharing) என்பது இக்குறுகிய கால அனுபவத்தில் சாத்தியமற்றதாயிற்று. சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பிரயோகிக்க முடிவு செய்ததும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜனாதிபதி பதவி அளவற்ற அதிகாரங்களையுடைய பதவியாகும். இப்பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் தமது பதவியின் அதிகாரங்களைச் சுவைத்து அனுபவிக்கத் தொடங்கியதும், தமது பதவியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் கொள்வதில்லை. தமக்கு இருக்கும் சிறப்புச் சலுகைகளையும் அதிகாரங்களையும் சிறிதளவும் விட்டுக்கொடுப்பதற்கும் இணங்குவதில்லை. இலங்கையில் 2001–2003 காலத்தின் ‘அதிகாரப் பகிர்வும் உடனுறைதலும்’ என்ற பரிசோதனை தோல்வியடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. பல்லினச் சமூகங்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி முறை ‘கூட்டணி அரசியலுக்கான’ (Coalition Politics) வாய்ப்பை வழங்குகிறது; அது இனங்களுக்கிடையேயான நல்லுறவை வளர்க்க உதவுகிறது என்ற வாதமும், இலங்கையைப் பொறுத்தவரை பொருத்தமற்றதென்பது நிரூபணமாகியுள்ளது.

4. ஜனநாயக நிறுவனங்களை மதிப்பிழக்கச் செய்தல்

சட்டத்தின் ஆட்சி, பாராளுமன்ற ஜனநாயகம், சர்வசன வாக்குரிமை என்பனவற்றுக்கு இலங்கையில் நீண்ட வரலாறு உள்ளது. இத்தகைய ஜனநாயகப் பாரம்பரியமுடைய நாட்டில் 1978 இன் பின்னர் ஜனாதிபதி முறையின் கீழ் ஜனநாயக நிறுவனங்கள் சிதைவடைந்தன. இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்த போது, பிரித்தானிய சாம்ராச்சியத்திற்குள் மிகவும் முன்னேறிய நாடாக இருந்தது. இலங்கையில் ஜனநாயகத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டென்றும் அக்காலத்தில் நம்பப்பட்டது.

1950கள், 1960கள், 1970களில் இலங்கையில் பாராளுமன்ற விவாதங்கள் தரம்மிக்கனவாக இருந்தன. பாராளுமன்றம் அடிப்படையிலான ஜனநாயகத்தின் பயன்மிக்க ஓர் அங்கமாக இருந்து வந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம், பாராளுமன்றம் அதிகாரம் இல்லாத ஒன்றாகவும், நிறைவேற்று ஜனாதிபதி பதவி அதிகாரம் உடைய மையமாகவும் மாற்றப்பட்டது. இவ்வாறான ‘அதிகார இடமாற்றம்’ (Shift of Power) பாராளுமன்றத்தை வினைத்திறன் அற்ற நிறுவனம் என்ற நிலைக்கு மதிப்பிழக்கச் செய்துள்ளது.

இதன் விளைவாக திறமை உள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும், அதன் உறுப்பினராக வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் நிலை ஏற்பட்டது. பாராளுமன்றத்தின் தரம் தாழ்ந்தது மட்டுமல்லாமல், மந்திரிசபை என்ற நிறுவனத்தின் தரமும் தாழ்ந்தது. ஜனாதிபதிகள் தமக்கு நிகரானவர்கள் எவரையும் மந்திரிசபைக்கு நியமிக்க விரும்புவதில்லை. அதாவது ‘Strong Members’ கொண்டதாக மந்திரிசபை இருக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதிகள் அவதானம் செலுத்தினர்.

இதற்கு மாறாக பாராளுமன்ற ஜனநாயக முறையில், பிரதமர் ஒருவர் தமது கட்சிக்குள் இருக்கும் பலமுள்ள ஆளுமைகளைப் புறக்கணித்து விட முடியாது. இதனால் மந்திரிசபை தரம் வாய்ந்ததாக அமைவதற்கு கூடிய வாய்ப்பு உள்ளது. மந்திரிசபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தின் பின் இருக்கைகளில் (Back Bench) இருந்துகொண்டு பிரதமருக்குச் சவாலாக அமைய வாய்ப்பும் உள்ளது.

பாராளுமன்ற மந்திரிசபை முறையில் பிரதமருக்கும் ஏனைய மந்திரிகளுக்கும் இடையே சமத்துவமானவர்கள் (Equals) என்ற அடிப்படையிலான உறவு உள்ளது. இதனால் அவர்கள் விவாதங்களிலும் முடிவுகளை எடுப்பதிலும் பயனுள்ள பங்களிப்பை வழங்க முடியும். ஜனாதிபதி முறையில் இந்த வாய்ப்பு இல்லை. பாராளுமன்ற முறையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படும் போது பலமுள்ள அமைச்சர்கள் மந்திரிசபைக்குள் இணைந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

5. ஜனாதிபதி முறை – இலங்கையின் அனுபவம்

இலங்கையின் ஜனாதிபதிகளுள் பிரேமதாசவும் ராஜபக்சவும் மக்கள் வாதத் தலைவர்களுக்கு (Populist Leaders) உதாரணமாக விளங்கினர். அவர்கள் அடிக்கடி ‘முழு நாட்டு மக்களாலும் தெரிவு செய்யப்பட்டவர்’ என்ற நியாயத்தை கூறியதைக் காணலாம். அரசியல் யாப்புத் தத்துவங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளைகளில், அவ்விருவரும் முழு நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற பேச்சைத் தமது சட்டமுறையற்ற செயற்பாடுகளுக்கான நியாயமாக (Justification) முன்வைத்தனர். ஜனாதிபதி பிரேமதாச, மூத்த அரச அதிகாரிகளையும் அமைச்சுச் செயலாளர்களையும் பார்த்து, “நீங்கள் முதன்மையாக ஜனாதிபதியான எனக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களேயன்றி உங்கள் அமைச்சருக்கு அல்ல” என்று தமது நிறைவேற்று அதிகாரத்தை (Executive Power) குறிப்பிட்டுக் காட்டி நடந்துகொண்டார். அவரது ஆலோசகர்கள் (Presidential Advisors), வெவ்வேறு துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை விடப் பலம் வாய்ந்தவர்களாக இருந்தனர்.

ஜனாதிபதி ராஜபக்ச அரசியல் யாப்பின் 17ஆவது அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதை முழுமையாக நிராகரித்தார். இந்த 17ஆவது அத்தியாயம் ‘நல்லாட்சியை’ (Good Governance) நடைமுறைப்படுத்தும் நோக்குடன் அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளிகளான அமைச்சர்கள், 17ஆவது அத்தியாயத்தைப் புறந்தள்ளியதற்குப் போலியான பல நியாயங்களைக் கூறினர். ஆனால், அரசியல் யாப்பின் 17ஆவது அத்தியாயத்தின் ஏற்பாடுகளை ராஜபக்ச புறந்தள்ளியதற்குரிய காரணம் வெளிப்படையானது. ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு இருந்து வந்த தற்துணிவு அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவும், தாம் விரும்பியபடி பதவிகளுக்கு ஆட்களை நியமித்து சலுகைகளை வேண்டியவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கவும் உள்ள அதிகாரங்களைக் கைவிட அவர் விரும்பவில்லை. “நான்தான் ஜனாதிபதி; நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன்; முக்கியமான நிறுவனங்களுக்கு யார் யாரை நியமிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்” என்பதே அவரது நிலைப்பாடு ஆகும். இலங்கையின் ஜனாதிபதி முறை பிறழ்வுடைய ‘குரூரமான மக்கள் வாதத்தை’ (Crude Populism) வளர்த்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? இந்த வகை மக்கள் வாதம் தாராண்மைவாத ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிடும்.

6. பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்

பிரதமர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியவராக இருக்கிறார். பாராளுமன்றம் அவர் மீது நம்பிக்கை இழக்கும்போது, அவர் பதவியில் இருந்து நீக்கப்படும் ஆபத்து உள்ளது. இவ்வாறான ஆபத்து இருப்பதை பாராளுமன்ற முறையின் பலவீனம் எனக் கருதுவது தவறு. அதுவே பாராளுமன்ற முறையின் பலமுமாகும். அரசாங்கத்தின் தலைவர் ஒருவரை இலகுவில் பதவி நீக்க முடியுமாயின், அது ஜனநாயகம் உயிர்ப்போடு இருப்பதற்கு உதவும்.

அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியை இலகுவில் பதவியில் இருந்து நீக்க முடியாது. இது நிறைவேற்று ஜனாதிபதி மாதிரியின் (Executive Presidential Model) பலவீனமாகும். தேர்தல் முடிந்தபின் ஆட்சியில் அமரும் ஜனாதிபதியைப் பாராளுமன்றத்தால் பதவி நீக்க முடியாது; அவரைத் தெரிவு செய்த மக்கள் 5 ஆண்டுகள் அடுத்த தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் அவரைப் பதவியில் இருந்து அகற்றும் வழிகள் நடைமுறையில் சாத்தியமற்றவை. இங்கு, ஜனாதிபதி ஆர். பிரேமதாசவைப் பதவி நீக்கம் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

1971 ஆம் ஆண்டில் அரசியல் யாப்புப் பேரவையில் ஜே.ஆர். ஜயவர்த்தனவும் ஆர். பிரேமதாசவும் இலங்கைக்கு ஜனாதிபதி முறை வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்தனர். அப்போது ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரான டட்லி சேனநாயக்க இதனை எதிர்த்தார். அக்கருத்தை நிராகரிப்பதற்கு அவர் கூறிய காரணம் பின்வருமாறு:

“ஜனாதிபதி முறை ஐக்கிய அமெரிக்காவில் நல்ல முறையில் இயங்கியதற்கு விசேட வரலாற்றுக் காரணங்கள் இருந்தன. பிரான்சிலும் அம்முறை நன்கு இயங்குவதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருந்தன. ஆனால், இலங்கைக்கு அம்முறை பெருந்தீங்கைத் தருவதாக இருக்கும். அம்முறை ஒரு தலைவரிடம் அதிகாரத்தைக் குவிப்பதற்கு ஏதுவாக அமைந்து, பாராளுமன்றத்தை அதிகாரமற்ற சபையாக மாற்றிவிடும். அம்முறை அரசியல் கட்சிகளின் கட்டமைப்பையும் (Structure of Political Parties) மாற்றிவிடும்.”

டட்லி சேனநாயக்க அவர்களின் மேற்குறித்த எச்சரிக்கை தீர்க்கதரிசனம் போன்றது என றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார். 

1982 இன் சர்வசன வாக்கெடுப்பு

1978இல் ஜனாதிபதி முறை இலங்கையில் நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்தபின், 1982இல் சர்வசன வாக்கெடுப்பு (The Referendum of 1982) நடைபெற்றது. இது மக்களின் இறைமையை அடியழிப்புச் செய்த ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். இந்த விடயம் குறித்து றொகான் எதிரிசிங்க, ‘The Referendum of 1982’ என்ற உபத்தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் எழுதியிருப்பவை, இலங்கையில் ஜனாதிபதி முறையை ஜே.ஆர். ஜெயவர்த்தன புகுத்திய போது, இலங்கையின் அறிவாளிகளான அரசியல் தலைவர்கள் அனைவரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டதை அடிக்கோட்டிட்டுக் காட்டுகின்றன. இந்த எதிர்ப்பு மூன்று தரப்பினரிடமிருந்து வெளிப்பட்டதை றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார்.

அ) இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் அரசியல்வாதிகளிடமிருந்து ஜனாதிபதி முறையின் தீங்குகள் பற்றிய எதிர்ப்பு வெளிப்பட்டது.

ஆ) மத்தி–இடது (Centre Left) எனப்படும் வகையினரான அறிவாளி அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை வெளியிட்டார்கள்.

இ) ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சியில் அமர்ந்து இலங்கையைச் சர்வாதிகாரப் பாதையில் இட்டுச் சென்றபோது, அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக தாராண்மை ஜனநாயகவாதிகளான சிந்தனையாளர்கள் ஒரு தாராண்மை இயக்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த இயக்கத்தை றொகான் எதிரிசிங்க அவர்கள் ‘The Nascent Liberal Movement’ (புதிதாக மேற்கிளம்பிய தாராண்மை இயக்கம்) எனக் கூறுகிறார்.

இம்மூன்று தரப்பினரிடமிருந்தும் வெளிப்பட்ட எதிர்ப்புகள் ஜனாதிபதி முறை பற்றிய தரம் வாய்ந்த விமர்சனங்களாக அமைந்தன. றொகான் எதிரிசிங்க அவர்கள் மேற்கூறிய மூன்று வகையினரில் இறுதியாகக் குறிப்பிட்ட புதிதாக மேற்கிளம்பிய தாராண்மை இயக்கத்தை (The Nascent Liberal Movement) சேர்ந்த சிந்தனையாளர் என்பதைத் தமிழ் வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம்.

அடுத்து, 1982 இன் சர்வசன வாக்கெடுப்பு பற்றி அவர் கூறியிருப்பவற்றை நோக்குவோம்.

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்