கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
32 நிமிட வாசிப்பு

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 1

May 11, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

ஆதிகால யாழ்ப்பாணத்தின் பெருங்கற் பண்பாட்டு மையங்கள்.

கந்தரோடை நாகரிகம் – கால அட்டவணை

கந்தரோடை, மற்றும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட யாழ்ப்பாண மையங்களின் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும், பென்சில்வேனிய பல்கலைக்கழக கதிரியக்கக் கரிமத் திகதிகளையும் ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கால அட்டவணை (Thiagarajah, S. 2016:64 – 82).  

ஆண்டுகாலம்தொல் பொருட்கள் – மக்கள் வாழ்வியல்
கி.மு.1350 – 500பெருங்கற் பண்பாடுக் குடியிருப்புகள்கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் P-2521, P-2515 திகதி. செம்பு – வெண்கலம் – இரும்புவெண்கல திரிசூலம், வேல், கோலக்குச்சிகள், குளம், நெல் உமி, கால்நடை, நாய் எலும்புகள், குள நீர்ப்பாசன விவசாயம், பானை வனையும் சில்லு.
கி.மு. 500 – 300வரலாற்று உதய காலம்நகரமயமாக்கம், விரிவான குடியேற்றம், சமூக அடுக்கமைவு, கைத்தொழில் சிறப்புத்தேர்ச்சி, பலவகை மட்பாண்டங்கள், மணி-சங்கு தொழிற்சாலைகள், தொலைதூர வர்த்தகம், இந்திய நாட்டு நாணயங்கள், அரசமைப்பு – நாக நகரம், பொருளாதாரக் கட்டமைப்பு.
கி.மு. 300 – 200ஆதி வரலாற்றுக் காலம் 1ஆனைக்கோட்டை – அரச முத்திரை, தமிழ்ப் பிராமி எழுத்துகள், தமிழ்ப் பெயர்கள், உரோம மதுச்சாடிகள், லக்ஷ்மி நாணயங்கள்.
கி.மு. 200 – கி.பி. 300ஆதி வரலாற்றுக் காலம் 2ரௌலெற்ரெட் கலன்கள், உரோம நாணயங்கள், சைவ மத – பௌத்த சமய கருவூலப் பொருட்கள், பௌத்த ஈம ஸ்தூபங்கள்.
கி.பி. 300 – கி.பி. 500ஆதி வரலாற்றுக் காலம் 3பொருளாதாரச் செழிப்பு, உரோம நாணயப் பெருக்கம், மாந்தை முதல் கோணமலை வரை நாக அரசின் பரவல்.
கி.பி. 500 – கி.பி. 800மத்திய காலம்இறுதி நூற்றாண்டில் பொருளாதார மந்தம், தென் இலங்கை – தென் இந்திய அரசியல் கொந்தளிப்புகள் – தமிழகப் படையெடுப்புகளின் எதிர்வினைகள்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவர்கள், பாண்டியர்கள், கலிங்க மாகன், சாவக சந்திரபானு, சோழர்கள் ஆகியோரது படையெடுப்புகள் யாழ்ப்பாணம் வழியாகவே நடைபெற்றன. பல தடவைகள் இந்த நாடு அவர்களின் ஆட்சியதிகாரத்தின் கீழே இருந்தது. 13ஆம் நூற்றாண்டிலிருந்தே ஒரு சுதந்திர தனியரசு மீண்டும் உருவானது. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையோடு அந்தச் சுதந்திரமும் இழந்து போனது.

நாக நாட்டின் ஆதிக் குடியிருப்புகள்

ஆதிகால நாகநாடு அல்லது நாகதீபம் இரு நிலப்பகுதிகளைக் கொண்டிருந்தது: (1) இன்றைய யாழ்ப்பாணத் தீபகற்பமும் அதற்கு மேற்கிலுள்ள தீவகங்களும்; (2) வரலாற்றுக் காலத்தில் முதலில் உத்தரதேசம் எனவும், பின்னர் வன்னி என்றும் அழைக்கப்பட்ட இலங்கையின் வடபகுதிப் பெருநிலமும். இந்நிலப்பகுதி இன்றைய திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தன்னுள் அடக்கியிருந்தது. நாகநாட்டின் ஆதிக் குடியேற்றங்கள் இந்த இரு நிலப்பகுதிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களிலே நிகழ்ந்திருக்கின்றன.

வன்னிப் பகுதியின் கடற்கரையோரங்களில் ஆபிரிக்காவிலிருந்து ஆதிமனிதர்கள் இடம்பெயர்ந்து வந்த காலத்திலேயே குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர்களின் வம்சாவளியினர் உள்நாடு சென்று இந்த வன்னிப் பிரதேசத்தை தங்களது இயற்கையான வாழ்நிலமாகக் கொண்டார்கள். அன்றைய ஆதிகால மக்கள் வேட்டையாடியும், இயற்கை உணவுகளைச் சேகரித்தும், கரையோரங்களில் வாழ்ந்த மக்கள் மீன் பிடித்தும் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.

அதேசமயம், யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் இயற்கை வளம் அன்றைய வேட்டையாடி வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக அமையவில்லை. யாழ்ப்பாண நிலத்தில் இயற்கையான ஆறுகளோ, விலங்குகள் வாழும் காடுகளோ கிடையாது. அப்பிரதேசம் ஆதிகால வேட்டை மக்களின் வாழ்வியலுக்கு ஏற்றதாக அமையவில்லை. தென்னிந்தியாவில் இரும்புக்காலத்தில் ஆரம்பமான விவசாயத்தோடு கூடிய பெருங்கற் பண்பாட்டின் பரவலுடனேயே மனிதக் குடியேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாயின. இப்பண்பாட்டின் பரவலுடனேயே இலங்கைத் தீவெங்கும் விவசாயம் பரவியது. நாகநாட்டின் வன்னிப் பகுதியில் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்த மக்கள் சிறிது சிறிதாக காடுகளை விட்டு வெளிவந்து, நாட்டில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து கொண்டு, இயற்கையான குளங்களிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் நீரைப் பாய்ச்சி, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

வேட்டையாடி – உணவு சேகரித்து வாழ்ந்த மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு ‘நாகரிகமடைந்த’ வரலாற்றுக் காலப்பகுதியில், கந்தரோடை நாகநாட்டின் தலைநகரமாக வளர்ச்சிபெற்றது. அதன் படிநிலை (பரிணாம) வளர்ச்சியை இந்த இயலில் பார்வையிடுவோம்.

உத்தரதேசத்தின் ஆதி மனிதர்கள்

இற்றைக்கு ஒன்றரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரிருந்தே இந்தியாவின் பல பகுதிகளில் மனித இனங்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன. இந்தியாவும் இலங்கையும் பனியுகக் காலங்களில் ஒரே நிலமாக இணைந்திருந்தபடியினால், இந்த மனிதர்கள் அக்காலத்திலேயே இலங்கையையும் வந்தடைந்திருப்பார்கள். எனவே, இலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவைத் தள்ளிவைத்து உரைக்க முடியாது (Deraniyagala, S.U. 1996).

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதிமனிதர்களின் இடப்பெயர்வு இற்றைக்கு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இடம்பெற்றிருக்கலாம். இலங்கை அதன் வடபகுதியூடாகவே இந்தியாவுடன் இணைந்திருந்தபடியினால், அம்மனிதர்களின் இடப்பெயர்வு இலங்கையின் வடபகுதியூடாகவே நிகழ்ந்திருக்க முடியும். அக்கால யாழ்ப்பாணப் பகுதி ஆறுகளற்ற, காடுகளற்ற நிலமாக இருந்தமையால், வேட்டையாடி வாழ்வாதாரம் மேற்கொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்தினூடாகச் சென்று வன்னிப் பகுதிகளில் வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால், ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மனிதர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வன்னிப் பகுதிகளில் — முக்கியமாக இரணைமடு தேரிகளில் கிடைத்த இம்மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் பழமையானவை கி.மு. 125,000 ஆண்டுகளுக்கு உரியன எனத் தேதிக்கணிப்புச் செய்யப்பட்டிருக்கிறது (Abeyaratne, M. 1996; Deraniyagala, S.U. 1992: 686–688).

இந்த முதல் மனிதர்களோடு, கி.மு. 60,000 ஆண்டுக் காலப்பகுதியில் ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்களும் வந்து சேர்ந்தார்கள். இலங்கையில் இவர்களின் படிமுறை மானிட வளர்ச்சியின் நிரலொழுங்கு இது:

முதலாம் நிலை: மத்திய பழங்கற்காலம்

இரண்டாம் நிலை: மேலைப் பழங்கற்காலம்

மூன்றாம் நிலை: இடைக்கற்காலம் – நுண்கற்காலம்

நான்காம் நிலை: ஆதி இரும்புக்கால பெருங்கற் பண்பாடு

இவ்விவரங்கள் ஏற்கனவே பத்தாவது இயலில் கூறப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் ஆதிக் குடியேற்றங்கள்

யாழ்ப்பாண தீபகற்பத்தின் ஆதி இரும்புக்கால பெருங்கற் பண்பாட்டுக் குடியேற்ற மையங்கள். Image Source: Siva Thiagarajah 2016.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி வெளியிட்ட யாழ்ப்பாணத்து ஆதிக்குடியிருப்புகள் (1987) என்னும் நூல், 1. கந்தரோடை, 2. ஆனைக்கோட்டை, 3. காரைநகர் – சந்திராந்தை, 4. வேலணை – சாட்டி, 5. மண்ணித்தலை – கல்முனை ஆகிய இடங்களை யாழ்ப்பாணத்தில் ஆரம்பகால ஆதிக்குடியேற்றங்கள் ஏற்பட்ட இடங்களாகக் காட்டியது. இவற்றோடு 2011-12, 2017-18 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் பேராசிரியர்கள் ரொபின் கொனிங்ஹாம், பரமு புஷ்பரட்ணம் ஆகியோர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில், யாழ்ப்பாணம் கோட்டை அமைந்துள்ள இடம் கி.மு. 1000 ஆண்டுகாலப் பகுதியிலேயே மக்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது தெரிய வந்தது (இயல் – 6 ஐப் பார்க்கவும்).

இந்த ஆறு முதலாம் கட்டக் குடியிருப்புகளைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டக் குடியிருப்புகளாக நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை, திகழி, வேரப்பிட்டி, சந்திராந்தை, வேலணை, சாட்டி, மண்ணித்தலை, திருவடிநிலை, கலையோடை, ஆனைக்கோட்டை, முள்ளி, கந்தரோடை, அரியாலை கிழக்கு, துலுக்கன் கோட்டை, வல்லிபுரம், நாகர்கோயில், தாளையடி – செம்பியன்பற்று, வெற்றிலைக்கேணி ஆகிய இடங்கள் இனங்காணப்படுகின்றன (Ragupathy, P. 1987: 172).

இந்த ஆதிகாலக் குடியேற்ற மையங்கள் அனைத்தும் — கந்தரோடை ஒன்றைத் தவிர — கடற்கரைகளுக்குச் சமீபமாக, யாழ்ப்பாணப் பரவைக்கடல் அல்லது வடகடலுக்கு அண்மையாக அமைந்த மையங்களாகும். உள்நாட்டிலுள்ள கந்தரோடை வழுக்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது. இக்காலத்தில் அது மழை வெள்ளம் பாயும் வாய்க்காலாகச் செயல்பட்ட போதிலும், ஆதிகாலத்தில் அது கந்தரோடையைக் கடலுடன் இணைத்த ஒரு கடற்கால்வாயாக விளங்கியதாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆதி மையங்களின் கடலை அண்டிய இருப்பிடம், அது கடல்வழியாக வந்த ஒரு பண்பாட்டின் உறைவிடம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இங்கு ஏற்கனவே கூறியது போல, தென்னாசிய சூழமைவில் பெருங்கற் பண்பாடு ஒரு தென்னிந்தியப் புலப்பாடு (South Indian Phenomenon) ஆகும். இதை உறுதிப்படுத்தும் ஈம அடக்க நினைவுச் சின்னங்கள் தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

இப்பண்பாட்டின் ஆரம்பகாலம் கர்நாடகத்தில் ஹல்லூர், குமரனஹள்ளி, தடகனஹள்ளி, மாஸ்கி ஆகிய மையங்களின் கி.மு. 1900–1500 ஆண்டுகளுக்குரியது என கதிரியக்கக் கரிம ஆய்வுகள் தெரிவிக்கின்றன (Moorti, U.S. 1994: 123; Possehl, G. 1994; Bauer, A.M. 2015). இங்கே ஆரம்பித்த இப்பண்பாடு தமிழகமெங்கும் பரவி, அங்கிருந்து கடல்வழியாக யாழ்ப்பாண மையங்களை வந்தடைந்திருக்கிறது.

Radiocarbon dates from megalithic burials, Maski, Karnataka – 2015

——————————————————————————————————–

Lab code             Provenance                14C age (BP)             Calibrated date 

——————————————————————————————————–

ISGS A2282        MARP-79-B no. 1        2955 ± 15                 1222–1117 cal BC 

ISGS A2283        MARP-79-B no. 1        3070 ± 20                 1407–1276 cal BC 

ISGS A3229        MARP-79-B no. 6        3040 ± 20                1389–1225 cal BC 

ISGS A3230        MARP-79-B no. 7        3510 ± 20                 1895–1756 cal BC

——————————————————————————————————–

   –  Reproduced from Radiocarbon, Vol. 56, 2015, Page 800, University of Arizona.

இப்பண்பாட்டோடு தொடர்புடைய அம்சங்களாக இரும்பின் பயன்பாடு, குளங்கள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்பட்ட விவசாயம் (வேளாண்மைச் செயற்பாடுகள்), விருத்தியடைந்த நிரந்தரக் குடியிருப்புகள், உட்பக்கம் கறுப்பாகவும் வெளிப்பக்கம் சிவப்பாகவும் இருக்கும் மட்பாண்டங்களை உருவாக்கிய வனைத்தொழில் தொழில்நுட்பம், அம்மட்பாண்டங்களில் பதித்த கீறல் எழுத்துகள் ஆகியவை இடம்பெறுகின்றன. தென்னிந்திய மையங்களின் நகரமயமாக்கம், ஆரம்பகால தமிழக மூவேந்தர்களின் மற்றும் குறுநில மன்னர்களின் தோற்றம், தமிழ் எழுத்தின் ஆக்கம், தமிழ்மொழியினைச் செம்மைப்படுத்தி சங்க இலக்கியங்களைத் தோற்றுவித்தமை யாவும் பெருங்கற் பண்பாட்டின் உச்சக்கட்டச் சாதனைகள் ஆகும் (Ragupathy, P. 1987: 180; Sitrampalam, S.K. 1980; Gururaja Rao, B.K. 1972).

1970 ஆம் ஆண்டில் தொல்லியல் துறைசார் நெறிமுறைகளின் அடிப்படையில் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தினர் கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது, அடிமட்ட மண்படைகளில் கிடைத்த கலவோடுகளும் வேறு பொருட்களும் தென்னிந்தியாவிலிருந்து பரவிய பெருங்கற்காலச் சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டன. அச்சின்னங்களில் பழைமையானவை (P-2515, P-2525) கதிரியக்கக் கரிமத் திகதிக்கணிப்பில் (Radiocarbon dating) கி.மு. 1350, கி.மு. 1200 ஆகிய ஆண்டுக் காலங்களைக் காட்டின. கந்தரோடையில் வாழ்ந்தவர்கள், ஒன்று தென்னிந்தியாவிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும் அல்லது தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டைக் கடைப்பிடித்த கந்தரோடை மக்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது (Begley, V. 1973). இந்த அகழ்வாராய்ச்சிக் குழுவிற்குத் தலைமை தாங்கிய விமலா பெக்லி அம்மையார் ஒரு விவரமான அறிக்கையை எழுதி வழங்கியிருந்தார். அந்த அறிக்கையை இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் இதுவரை வெளியிடவில்லை.

கந்தரோடையின் கதிரியக்கக் கரிம திகதிகள். P-2515, P-2525 இலக்கமிட்ட மட்கல ஓடுகள், கி.மு. 1350 ஆம் ஆண்டு, கி.மு. 1200 ஆம் ஆண்டுக் காலங்களைக் காட்டுகின்றன. Source: Bennet Bronson & Siran Deraniyagala.

கந்தரோடையிலும் அதையடுத்த யாழ்ப்பாண மையங்களிலும் ஆதிகாலப் பெருங்கற்காலக் குடியேற்றங்கள்

கற்காலங்களில் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்த மக்கள் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து, காடுகளும் வனவிலங்குகளும் கொண்ட வன்னிப் பிரதேசங்களில் குடிகொண்டபோது, பெருங்கற்கால மக்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் குடியேறினார்கள்? அவர்கள் சுமந்து வந்த பண்பாட்டிற்கும் தொழில்நுட்பத்திற்கும் இத்தீபகற்பத்தின் இயற்கையமைப்பு சாதகமாக இருந்ததே காரணமெனலாம். வறண்ட காலநிலை, ஆரம்பகாலத்து எளிமையான இரும்புக் கருவிகளினால் இலகுவாக அழிக்கக்கூடிய பற்றைக் காடுகள், சுண்ணாம்புத் தரையில் இயற்கையாகத் தோன்றிய சிறுகுளங்கள், மழைக்காலத்தில் பெருகிவரும் வெள்ள வாய்க்கால்கள், மந்தை மேய்க்கத் தரவை வெளிகள், கடலுணவை ஆபத்தின்றிப் பெற ஆழமற்ற பரவைக்கடல் — இவைகளே பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மனிதனை ஈர்த்த யாழ்ப்பாணத்தின் கவர்ச்சிகள் ஆகும்.

யாழ்ப்பாணத்தின் அறியப்பட்டுள்ள பெருங்கற்காலக் குடியிருப்புகள் யாவும் இத்தகைய சூழலை அண்டியே காணப்படுகின்றன. குறைவான ஆழத்தில் வற்றாத குடிநீர் கிடைப்பதையும் அவர்கள் கருத்திற்கொண்டுள்ளனர். இக்குடியிருப்புகள் தனித்தனி அலகுகளாக இயங்கும் கிராமங்களாக ஆரம்பத்தில் தோன்றியிருக்கலாம். முகிழ்நிலை விவசாயம், பரவைக்கடலில் மீன் பிடித்தல், மந்தை வளர்ப்பு முதலான பன்முகப்பட்ட சீவன முயற்சிகளை உடையவர்களாக இவர்கள் வாழ்ந்துள்ளனர். அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன (இரகுபதி, பொ. 1983: 11).

யாழ்ப்பாணத்தில் பெருங்கற்கால மனிதனை வெகுவாக ஈர்த்த பெரும் மையம் நன்னீர் கொண்ட கந்தரோடைக் குளம் ஆகும். யாழ்ப்பாணத் தீபகற்பம் முழுவதிலும் இயற்கையாக அமைந்த இரு பெரிய குளங்களுள் கந்தரோடைக் குளமும் ஒன்று. பொதுவாக மக்களால் வெட்டப்படும் குளங்கள் வட்ட வடிவமாகவோ, நீள்வட்ட வடிவமாகவோ, சதுரமாகவோ அல்லது நீள்சதுர வடிவிலோ இருக்கும். கந்தரோடைக் குளமோ வயல் காணிகளுக்கு நடுவே இரு நீள்சதுர அலகுகளைக் கொண்டு ‘ட’ வடிவில் அமைந்திருக்கிறது. பின்னால் குடிவந்த மக்கள் இதைப் பெருப்பித்து செம்மைப்படுத்தியிருந்தாலும், அதன் அடிப்படை வடிவம் அது ஆதியில் இயற்கையாக அமைந்த ஒரு நன்னீர்க்குளம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இக்குளத்தைச் சுற்றி ஆதிகால மக்கள் பெருந்தொகையாகக் குடியேறியிருப்பார்கள்.

பெருங்கற்கால யாழ்ப்பாண மையங்களின் அகழ்வாய்வுகளில் பெருந்தொகையான கடலுணவு எச்சங்களும், கால்நடை எலும்புகளும், ஈமப் படையல்களில் காணப்பட்டன. சுறா மற்றும் பிற மீன்களின் முள்ளந்தண்டு எலும்புகள்; நண்டு, கடலாமை போன்றவற்றின் ஓடுகள்; உள்ளிருக்கும் இறைச்சியை எடுப்பதற்காக உடைக்கப்பட்ட சங்குகள்; கூரிய ஆயுதத்தினால் வெட்டப்பட்ட அடையாளமுள்ள கால்நடை எலும்புகள்; விலங்குகளின் பற்கள் மற்றும் வேறு பல உயிரின எச்சங்கள் ஆகியவை மீன் பிடித்தலும் மந்தை வளர்ப்பும் இந்த ஆதிக் குடிகளின் வாழ்க்கையில் வகித்திருந்த முக்கிய பங்கினை விளக்குகின்றன.

இந்த மையங்கள் பயிர்நிலங்களை ஒட்டி அமைந்திருப்பது, பயிர்ச்செய்கை இவர்களது வாழ்வியலில் முக்கிய பங்காக இருந்தமையைக் குறிக்கிறதெனலாம் (இரகுபதி, பொ. 1983: 11).

யாழ்ப்பாண மையங்களின் குடியேற்றப் படிநிலைகள் (Phases of Settlements in Jaffna Sites)

கந்தரோடையில் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் பெறுபேறுகளையும், யாழ்ப்பாண மையங்களில் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளையும் கொண்டு, யாழ்ப்பாண மையங்களின் குடியேற்றக் காலவரிசை முறையை ஆரம்பகாலப் பெருங்கற் பண்பாட்டுக் கட்டம் – வரலாற்று உதய கால கட்டம் – வரலாற்றுக் கால கட்டம் ஆகிய வரன்முறைகளுள் பதிவு செய்ய முடிகிறது. இப்பதிவுகள் கடந்த மூவாயிரம் ஆண்டு காலமாக யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும் அதனை அண்டிய தீவகங்களிலும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தமையையும், நாட்டின் உட்பகுதியில் புதிய குடியிருப்புகள் ஏற்பட்டதையும் காட்டி நிற்கின்றன. இக்குடியேற்றக் கட்டங்களின் வகைப்படுத்தலும் அவற்றின் வாழ்வாதார முறைகள் பற்றிய விளக்கங்களும், மேற்கூறப்பட்ட பென்சில்வேனிய பல்கலைக்கழக அகழ்வாய்வுகளின் முடிவுகளையும் கலாநிதி இரகுபதியின் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டவை (Begley, V. 1973; Ragupathy, P. 1987: 171–176).

குடியேற்றப் படிநிலை 1 – கி.மு. 1200 – கி.மு. 500
ஆரம்பகாலப் பெருங்கற் பண்பாட்டுக் குடியேற்றங்கள்

இந்த ஆரம்பகாலப் பெருங்கற் பண்பாட்டுக் குடியேற்ற மையங்களாக கந்தரோடை, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் கோட்டை, காரைநகர், வேலணை, மண்ணித்தலை ஆகிய ஆறு மையங்கள் இடம்பெறுகின்றன. கிறிஸ்துவிற்கு முற்பட்ட முதலாம் ஆயிரத்தாண்டின் ஆரம்பத்திலேயே கந்தரோடை கணிசமான மக்கள்தொகை கொண்ட குடியேற்றப் பகுதியாகிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.

கி.மு. 800 ஆம் ஆண்டிற்கும் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேலும் பல புதிய குடியிருப்புகள் இணைந்துகொள்கின்றன. கி.மு. 500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கந்தரோடை நகரமயமாக ஆன சமயம், பெருங்கற் பண்பாட்டு வாழ்வியலைக் கடைப்பிடித்த துணைக் கிராம மையங்களாக (Satellite Village Centres) பதினேழு இடங்களும், நகரமாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற இன்றைய யாழ்ப்பாணக் கோட்டை அமைந்துள்ள சிங்கை நகரமும் காணப்பட்டன.

பெருங்கற் பண்பாட்டுக் காலத்தின் கந்தரோடையின் துணைக் கிராமங்கள் அனைத்தும் கடற்கரையை அண்டிய குடியேற்றங்கள் ஆகும்.

1. நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை, 2. திகழி, 3. வேரப்பிட்டி, 4. சந்திராந்தை, 5. வேலணை, 6. சாட்டி, 7. மண்ணித்தலை, 8. யம்புகோவளம் – திருவடிநிலை, 9. கலையோடை, 10. ஆனைக்கோட்டை, 11. சிங்கைநகர் – யாழ்ப்பாணக் கோட்டை (நகரம்) 12. கந்தரோடை, 13. அரியாலை, 14. துலுக்கன் கோட்டை, 15. வல்லிபுரம், 16. நாகர்கோயில், 17. தாளையடி – செம்பியன்பற்று, 18. வெற்றிலைக்கேணி (நன்றி: பொ. இரகுபதி).

மேற்குறிப்பிட்ட மையங்களில் யாழ்ப்பாணக்கோட்டைத் துறைநகர் சர்வதேச வர்த்தக வலைப்பின்னலில் ஒரு கேந்திர மையமாக உருவானது. பூநகரியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள், இக்காலப்பகுதியில் அதுவும் பெருங்கற் பண்பாட்டைப் பேணிய ஒரு குடியேற்ற மையமாக ஆகிவிட்டதை எடுத்துக்காட்டுகின்றன (மேலதிக விவரங்களுக்கு இயல் 5, இயல் 8 ஐப் பார்க்கவும்).

கி.மு. 500ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் யாழ்ப்பாணக் கோட்டைத்துறை சர்வதேச வர்த்தக வலைப்பின்னலில் ஒரு கேந்திர மையமாக உருவாகிவிட்டிருந்ததை உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய தொல்லியலாளர் றொபின் கொனிங்ஹாம் தனது 2017 ஆம் ஆண்டின் அகழ்வாய்வுகளில் எடுத்துக்காட்டியிருந்தார் (Davis, C.E. et al. 2018) (6ஆவது இயலில் பார்க்கவும்).

இந்தக் காலகட்டத்தின் ஒரு முக்கியமான அம்சம், இக்குடியேற்றங்கள் பன்முக வாழ்வாதார முறைகளைக் கடைப்பிடித்த தன்னிறைவான அலகுகளாக இருந்தமையாகும். இவை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடிப்பு ஆகியன இணைந்த வாழ்வாதார முறைகளைக் கொண்டிருந்தன எனலாம். இவ்வாறு உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி மக்கள் வாழ்விலும் செழிப்பை உண்டாக்கியது. இத்தகைய செழிப்பை இக்காலக் குடியிருப்புகளில் கிடைத்துள்ள பல்வகை உலோகங்களினாலான பொருட்கள், மணிகள், சங்குப் பொருட்கள் என்பன எடுத்துக்காட்டுகின்றன.

பண்பாட்டைப் பொறுத்தவரை, ஆதி இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டு அம்சங்களை இம்மக்கள் கடைப்பிடித்தார்கள். இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களில் பெருங்கற்கால முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 1200 – கி.மு. 300), மற்ற வகை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 700 – கி.பி. 300), ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள் (கி.மு. 1200 – கி.மு. 300) ஆகியவை காணப்பட்டன (மேலதிக விவரங்களுக்கு இயல் 4, இயல் 10 ஐப் பார்க்கவும்).

குடியேற்றப் படிநிலை 2 – கி.மு. 500 – கி.பி. 600
கந்தரோடையின் நகரமயமாக்கம் – நாகரிகம் (Urbanisation and Civilization of Kantharodai)

நாகரிகம் என்ற சமூகக் கோட்பாடு நகர உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சிற்றூர்களிலிருந்து மக்கள் நகர்ந்து சென்று சேர்ந்து வாழும் பேரூர் என்பதால் ‘நகரம்’ எனப்பட்டது. ‘இகம்’ என்றால் வாழுமிடம் என்று அர்த்தம். நகர் + இகம் = நாகரிகம் ஆனது. ஆங்கிலத்திலும் ‘Civilization’ என்ற சொல்லின் மூலமான ‘Civis’ என்னும் லத்தின் மொழிச் சொல் ‘நகரவாசி’ என்னும் பொருள் கொண்டது.

இருபதாம் நூற்றாண்டில் பிரித்தானிய தொல்லியல்துறையின் இயக்குநராகப் பணிபுரிந்த பிரபல அவுஸ்திரேலியத் தொல்லியலாளரான பேராசிரியர் கோர்டன் சைல்ட் (Prof. Gordon Childe), அவர் எழுதிய ‘The Urban Revolution’ என்ற நூலில், ஒரு வரலாற்று ஆரம்பகாலக் குடியேற்றம் ‘நகரம்’ என்ற அந்தஸ்தை அடைவதற்கு கீழ்க்காணும் நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார் (Childe, G. 1950: 15–16).

1. நிரந்தரமான குடியிருப்புகள்

2. பொருளாதார தக்கவைப்பு நிலை – விவசாய சுழற்சியை ஒழுங்குபடுத்துதல்

3. உபரி உற்பத்தியை மையப்படுத்துதல்

4. மக்களை ஆளும் வர்க்கத்தின் உருவாக்கம்

5. தொடர்பு வலைப்பின்னல்

6. தொலைதூர வர்த்தகம்

7. வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு

இந்த நிபந்தனைகள் பொதுப்படையாக இல்லாமல் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கொண்டிருக்கின்றன என ஐரோப்பிய, தென்னாசிய தொல்லியலாளர்களாலும், மானிடவியலாளர்களாலும் விமர்சிக்கப்பட்டது (Joshi 1973; Keesing 1981: Connah 1987). பிரித்தானியத் தொல்லியலாளரான ரேமண்ட் ஆல்சின் (Raymond Allchin) மேற்கூறிய நிபந்தனைகளை மறு பரிசீலனை செய்து ‘நகரமயமாக்கல் – நாகரிகமடைதல்’ என்பதற்கு கீழ்க்காணும் அளவுகோல்களை முன்வைத்தார் (Allchin, F.R. 1990: 163-173; Allchin, F.R. 1995: 57).

1. நிரந்தரமான பெரிய குடியேற்றம்

2. திட்டமிட்ட நகர அமைப்பு

3. பொது கட்டடக் கலை

4. சமூகப் படிநிலை அமைப்பு

5. குடியிருப்பைச் சுற்றிவர அமைக்கப்பட்ட பாதுகாப்புகள்

6. மக்கள் உபயோகிக்கக்கூடிய எழுத்து

7. கைவினைச் சிறப்புத் தேர்ச்சி

8. தொலைதூர வர்த்தகம்

9. அதிகரித்து வரும் மக்கள் தொகையை ஆதரிக்கக்கூடிய வாழ்வாதார உத்தி

ஆல்சின் கூறும் அளவுகோல்கள், கந்தரோடை ஒரு நகர மையமாகப் பரிணாமம் பெறுவதற்கான நிபந்தனைகளை — நகரைச் சுற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்புகள் என்ற ஒரேயொரு அம்சத்தைத் தவிர — முழுமையாக நிறைவேற்றுகின்றன. இந்த அம்சங்களை அடுத்துவரும் பகுதியில் விவரமாகப் பார்ப்போம்.

நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தவை நகரங்களாகும். அக்காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடங்களாக இவை அமைந்தன. கி.மு. 500 ஆம் ஆண்டுக் காலத்தில் கந்தரோடையும், அதன் துணை நகரமாகவும் சர்வதேசத் துறையாகவும் அமைந்த யாழ்ப்பாணக் கோட்டை மையமும் (சிங்கை நகர்) நகரங்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தன. கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்தில் வல்லிபுரமும் பூநகரியும் தலைநகரமான கந்தரோடையின் துணை நகரங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. சம்புக் கோவளமும் நாவாந்துறையும் துறைமுகங்களாக ஆகிவிட்டிருந்தன.

கந்தரோடையும் அதைச் சூழ்ந்த நகரங்களும் கிராமங்களும் — அவை யாவும் இணைந்து ‘ஒரு நாகரிகம்’ என்ற கோட்பாட்டை நிறைவு செய்திருக்கும் அம்சங்கள் இவை: (Thiagarajah, S. 2016: 268–325).

1. நிரந்தரக் குடியிருப்புகள்

2. திட்டமிட்ட நகர அமைப்பு

3. வாழ்வாதாரப் பொருளாதாரம்: நெல், சிறு தானியங்கள், மீன் பிடித்தல், மந்தை வளர்ப்பு

4. பட்டினமயமாக்கம்: யம்புத்துறை, நாவாந்துறை, யாழ்ப்பாணத் துறை

5. போக்குவரத்துத் தொடர்புப் பாதைகளும் உள்நாட்டு வர்த்தகமும்  

6. இந்து சமுத்திரப் பெருங்கடல் வர்த்தகம் 

7. கட்டடக் கலையும் சிற்பங்களும்

8. கைவினை – தொழில்நுட்பம் – வனைதல் – சாயம் – மணிகள் – சங்குத் தொழில் – வளையல்கள், மணிமாலைகள் – கோலக்குச்சிகள்

9. உலோகத் தொழில் – இரும்பு – செம்பு – வெண்கலம்

10. தொடர்பு மொழியும் தமிழ் மற்றும் பிராகிருத எழுத்து வடிவங்களும்

11. சமூகத் தலையாரி, வேள், அரசன்: கோவேதன், சடராசன், வளைவாணன்

12. பரந்த நோக்குடைய மத நடவடிக்கைகள் (Cosmopolitan Religious Activity)

யாழ்ப்பாணத்திலிருந்த ஆதிக்குடியிருப்புகள் அனைத்திலும் கந்தரோடையே பரப்பளவிலும் மக்கள் குடியேற்றத் தொகையிலும் பெரியதாகும். இதற்கு அங்கே இயற்கையாக அமைந்திருந்த நன்னீர்க் குளமும் ஒரு காரணமாகும். அம்மக்கள் பேணிய பெருங்கற் பண்பாட்டு வாழ்வியலுக்கேற்ற பொருத்தமான நிலைமைகள் அவ்விடத்தில் காணப்பட்டன. கி.மு. 1200 ஆண்டுக்காலப் பகுதியிலிருந்து படிப்படியாக முன்னேற்றம் கண்ட பெருங்கற்காலக் கிராமமான கந்தரோடை, கி.மு. 500 ஆம் ஆண்டளவில் ஒரு நகரமாக வளர்ச்சியடைந்தது.

உலக வரலாற்றில் ‘நகர உருவாக்கம்’ என்பது வேறுபட்ட காலப்பகுதிகளை உள்ளடக்கிய படிநிலை வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. தொல்பழங்கால நகர உருவாக்கம், பண்டைய நகர உருவாக்கம், மத்தியகால (Medieval) நகர உருவாக்கம், நவீனகால நகர உருவாக்கம் என நான்கு வேறுபட்ட காலங்களுக்குரிய பண்பாட்டு நிலைகளை இங்கே காண்கிறோம்.

தொல்பழங்கால நகர உருவாக்கம் வெண்கலக்கால யுகத்தைச் சேர்ந்தது. இது கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமாகி, கி.மு. 1500 வாக்கில் முடிவு பெறுகிறது. உதாரணமாக சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி நாகரிகங்களைச் சொல்லலாம்.

அடுத்த இரண்டாவது கட்ட நகர உருவாக்கம் ஆதி இரும்புக்காலத்திற்குரியது. இது கி.மு. எட்டாம் நூற்றாண்டுக் காலத்தில் ஆரம்பமாகி, கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வாக்கில் நிறைவு பெறுகிறது. இலங்கையில் கந்தரோடை, அநுராதபுரம், மகாகமம் ஆகிய மையங்களின் நகரமயமாக்கம் இக்காலகட்டத்திற்கு உரியன.

கந்தரோடைக்குளம்

யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய அளவிலான (40 ஏக்கர்) கந்தரோடைக் குளமே, இந்த மையத்தில் ஆதிகாலப் பெருங்கற் பண்பாட்டு மக்கள் பெருமளவில் குடியேறி, கந்தரோடையை வட இலங்கையின் முதல் தலைநகரமாக உருவாக்கியமைக்கான மூலகாரணமாக அமைந்தது. இக்குளத்திலிருந்துதான் பிரமாண்டமான அளவில் நீர்ப்பாசன நெல் விவசாயம் செய்து, கணிசமான மக்கள் தொகையினருக்கு வாழ்வாதாரம் வழங்க முடிந்தது.

மூன்றாம் கட்ட மத்தியகால நகரமயமாக்கம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகி கி.பி. 1600 ஆம் ஆண்டுக்காலம் வரை நீடித்தது. இக்காலப்பகுதியில், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில், ஆரியச்சக்கரவர்த்தி அரச வம்சத்தினரின் கீழ் உருவான ‘யாழ்ப்பாண இராச்சியம்’ சார்ந்த நகரங்களான சிங்கைநகர், நல்லூர் என்பன மத்தியகால (Medieval Period) நகரங்களாகும்.

நான்காம் கட்ட நவீன நகரமயமாக்கம் ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் உருவான கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணப் பட்டணங்களுடன் தொடர்புடையதாகும். இதில் ஒரு காலகட்டத்து நகரமயமாக்கலின் பண்புகளை மற்றொரு காலத்துடன் ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வு காண்பது, வரலாற்று நெறி பேணிய ஒப்பீட்டாய்வாக அமையாது.

1. நிரந்தரமான குடியிருப்புகள் 

கி.மு. 1350–1200 ஆண்டுக் காலப்பகுதியில் கந்தரோடையில் குடியேறிய மக்களின் வம்சாவளியினர் தொடர்ச்சியாக அந்த இடத்தில் இன்றுவரை குடியிருந்து வருகிறார்கள். இக்காலத்தில் மக்கள் கந்தரோடையிலும் அதன் துணைக் கிராமங்களிலும் செறிந்து வாழ்ந்தனர். இக்கிராமங்களில் பல்வேறு தொழில் புரியும் குழுக்களும் வாழ்ந்தன. இவற்றைவிட, தனித்தனித் தொழில்களில் திறமைமிக்க வல்லுநர்கள் சில கிராமங்களில் மட்டும் வாழ்ந்தார்கள். இக்காலக் கிராம மக்களிடையே நெருங்கிய ஒற்றுமையும் கூட்டுறவும் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

குடியிருப்புப் பகுதிகளில் உழவர், வர்த்தகர், கம்மாளர், கலன் செய்வோர், ஈழவர் முதலியோர் வெவ்வேறான பகுதிகளில் வாழ்ந்திருப்பர். இரும்புக்காலச் சமூக அமைப்பில் பல்வகை வினைஞர் கூட்டம் காணப்பட்டதை, இரும்பு, செம்பு, பொன், வெள்ளி ஆகிய உலோகங்களில் வடிக்கப்பட்ட ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களும், பல்வேறு கற்களால் செய்யப்பட்ட மணிமாலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய கைவினைஞர் கூட்டத்தின் எழுச்சியானது இரும்புக்காலப் பல்துறைச் சமூக வளர்ச்சியின் ஓர் உரைகல்லாகும். நிரந்தரமாகத் தங்குதடையின்றி ஊர் மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு கிடைக்கும் உணவு உற்பத்தியில் வேளாண் சமூகத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்க, உணவு உற்பத்தியில் ஈடுபடாத இன்னொரு முழுநேரக் கலைஞர் கூட்டமும் அச்சமூகத்தில் இயங்கிக்கொண்டிருந்த காலம் சமூக வளர்ச்சியின் இன்னொரு பரிமாணம் எனலாம்.

அன்றைய வதிவிடங்கள் வட்டவடிவமான, சதுரவடிவமான அல்லது நீள்வட்ட வடிவமான குடிசைகளாக இருந்தன. இக்குடிசைகள் மண்ணினால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, வெளியே களிமண்ணினால் அல்லது களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்து மெழுகப்பட்டிருக்கும். இக்குடிசைகளின் வாசற்கரைகளும் மேல்கூரைகளும் மரத்தடிகளால் அமைக்கப்பட்டு, மேலே காய்ந்த நாணற்புற்களால் அல்லது இலைதழைகளாலும் மரத்தினாலும் கூரை வேயப்பட்டிருக்கும். இக்குடிசைகளின் தரையில் கற்கள் பரப்பப்பட்டு அவை அடித்து மட்டமாக்கப்பட்ட பின்னர், அவற்றின் மேல் சாம்பலும் களிமண்ணும் கொண்டு மெழுகியிருப்பார்கள். சில சமயம் குடிசை வீட்டினுள்ளும், சில சமயம் வெளியிலும் அடுப்புகள், அம்மி-குழவிகள் காணப்படுகின்றன. இதனால், காலநிலையைப் பொறுத்தே மனிதனின் நடவடிக்கைகள் வீட்டின் உள்ளும் புறமும் அமைந்தன எனலாம். சீரான காலநிலை இருக்கும் போது, பெரும்பாலும் மனிதன் இவ்வீடுகளின் வெளியே தனது பெரும்பொழுதைக் கழித்து, தனது அவசியமான பொருட்களை மட்டும் இவ்வீடுகளிலே சேகரித்து வைத்தான்.

கந்தரோடை அகழ்வுகளில் காணப்பட்ட சதுரக் குழிகளைக் கொண்ட தூண்தாங்குக் கற்கள், அவற்றை நிலத்தில் பதித்து அதனுள் நட்ட சதுரக் கனதியான கம்பங்களின் மேல் வீடுகளையோ கட்டடங்களையோ அமைத்திருக்கலாம் என எண்ணச் செய்கின்றன. காலப்போக்கில் வசதியுள்ளவர்கள் சுண்ணாம்புக் கற்களை நீள்சதுரமாக அறுத்து, அக்கற்களைக் கொண்டு அடிநிலமும் பக்கச்சுவர்களும் கொண்ட சிறுவீடுகளை அமைத்தார்கள். சுட்ட களிமண்ணினால் செய்யப்பட்ட ஓடுகளால் இந்த வீடுகள் வேயப்பட்டிருக்கலாம்.

கி.மு. 500 ஆம் ஆண்டுக் காலத்தைத் தொடர்ந்து தீபகற்பத்தில் சிறிது சிறிதாக கடற்கரையை விட்டு உள்நாட்டுக் குடியிருப்புகள் ஏற்பட்டன. இதுவரை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின்படி, கி.பி. முதல் ஆயிரம் ஆண்டுக்காலம் வரை ஏறக்குறைய 40 குடியிருப்பு மையங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த மையங்கள் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி 1980–1983 ஆண்டுகளுக்கிடையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட மையங்களாகும். தனி ஒருவரின் பிரயாசையால் மாவட்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளில், இன்றைய யாழ்ப்பாணக் கிராமங்களிடையே மறைவாக இருக்கும் இன்னும் எத்தனையோ ஆதிகால மையங்கள் தவறிப்போயிருக்கலாம்.

யாழ்ப்பாணக் குடியேற்ற மையங்கள்: 1. நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை, 2. திகழி, 3. நயினாதீவு, 4. வேரப்பிட்டி, 5. சந்திராந்தை, 6. வேலணை, 7. சாட்டி, 8. அல்லைப்பிட்டி, 9. மண்ணித்தலை, 10. கௌதாரிமுனை 11. திருவடிநிலை 12. சம்புகோவளம் – திசைமழுவை, 13. காட்டுப்புலம், 14. ஆனைவிழுந்தான், 15. கந்தரோடை, 16. கலையோடை, 17. முள்ளி, 18. ஆனைக்கோட்டை, 19. மணியம்தோட்டம், 20. அரியாலை கிழக்கு, 21. நல்லூர், 22. இருபாலை, 23. கோப்பாய், 24. கல்வளை, 25. பங்குனிப்பிட்டி, 26. வேரக்காடு, 27. கச்சாய், 28.A. துலுக்கன் கோட்டை, 28.B. வல்லிபுரம், 29. வலிகந்தி, 30. நாகர்கோயில், 31. கருமணல்கும்பி, 32. தாளையடி, 33. வெற்றிலைக்கேணி, 34. தாத்தங்கோடு, 35. மாந்தாழை, 36. கோயில்வயல், 37. நித்தியவேட்டை, 38. குயவன்பிட்டி, 39. சாலை (படம் நன்றி: பொ. இரகுபதி).

நாளடைவில் வீட்டுச் சுவர்கள் அமைப்பதற்கு காயவைத்த களிமண் கட்டிகளைப் பயன்படுத்தினார்கள். வசதி படைத்தவர்கள் உலையில் காய்ச்சிய செங்கற்களையும் ஓடுகளையும் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். கண்ணாடி ஓடுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கந்தரோடையில் கிடைத்துள்ளன (Godakumbura, C.E. 1968: 73).

கூரைகள் அமைப்பதற்குத் தேவையான மரங்கள் போதிய அளவில் கிடைத்திருக்கும். கூரைகளுக்கு வேண்டிய வளை, தீராந்தி, சலாகை ஆகியவற்றைப் பனைமரத்தை வெட்டிப் பெற்றுக்கொள்வது ஆதிகாலம் முதலாக உள்ள யாழ்ப்பாணத்து வழமையாகும். கதவு, கதவுநிலைகள், தளபாடங்கள் என்பவற்றிற்கு வேப்பமரத்தைப் பயன்படுத்துவர்.

ஆதியில் குடாநாட்டிலும் தீவுப்பற்றிலும் அடர்த்தியான காடுகள் படர்ந்திருந்தன. அவற்றிலே பற்றைச் செடிகளும், சூழலுக்கேற்றவாறு பல பெருமரங்களும் வளர்ந்தன. பனை, வேம்பு, இலுப்பை, புளி, நாவல், மருது, விளாத்தி, ஆல், அரசு என்பன இயல்பாகவே வளரக்கூடியவை. அவற்றுள் பயன்தரு மரங்களான பனை, வேம்பு, இலுப்பை, புளி, நாவல் ஆகியன அழிக்காமல் பாதுகாக்கப்பட்டன. மருது, ஆல், அரசு ஆகிய மரங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டு ஒதுக்குப்புறங்களிலும் பரந்த வெளிகளிலும், மேலும் பாதையோரங்களிலும் நிழல்தரு மரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. வேம்பு, இலுப்பை ஆகிய மரங்களின் விதைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய் விளக்கெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. வீடுகளைச் சுற்றி வளர்க்கப்பட்ட மரங்கள் சூரிய வெப்பத்தைத் தணிப்பதற்குப் பயன்பட்டன. பெரிய மரங்களை வளர்ப்பதன் மூலம் ஓரளவு குளிர்ச்சியான சூழலை ஆதிகால மக்களால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது (பத்மநாதன், சி. 2024: 70, 73).

நீர் ஆதாரங்கள்

வாழ்வதற்கு நீர் ஆதாரமானது. ஆறுகள், சிற்றாறுகள், நன்னீர் ஏரிகள் என்பன எதுவுமே இல்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிணறுகளே வாழ்வாதாரத்திற்கு உதவுவன. கிணறுகள் அமைக்கப்பட்ட இடங்களிலே மக்கள் குடியிருந்தனர். மழைநீரின் ஒரு பகுதி நிலத்திற் செறிந்துவிடும். அந்த நீர் நிலத்தின் அடியில் சுண்ணாம்புப் பாறைகளிலே தேங்கிவிடும். கிணறு, கேணி என்பவற்றை உருவாக்குவதன் மூலம் அந்நீரைப் பெற்றுக்கொள்ள முடியும். துலா மூலம் தண்ணீரை அள்ளுவதற்கு இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பெரும்பாலும் பனையோலைப் பட்டைகளைப் பயன்படுத்தினார்கள் (பத்மநாதன், சி. 2024: 73).

யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய ஆயிரம் குளங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அளவில் சிறிய குளங்கள். கந்தரோடைக் குளமும் நந்தாவில் குளமும் அளவில் சற்று பெரியவை. இந்த இரு குளங்களும் ஆதியான குடியிருப்புகளும் வயல்களும் அமைக்கப்பட்ட பெருங்கற்கால – ஆதி இரும்புக்காலத்திற்கு உரியவை. நிலத்தின் கீழமைந்த சுண்ணாம்புக் கற்பாறைகளின் தரையமிழ்வு (Soil Subsidence) காரணமாக இக்குளங்கள் உருவானவை என்ற விளக்கம் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வயல்வெளிகளின் நடுவே ஒழுங்கான பலகோண வடிவில் அமைந்த கந்தரோடைக் குளம் மனிதக் கரங்களால் பெரிதாக வெட்டப்பட்டது. நந்தாவில் குளம் மழை தேங்கும் பள்ளமான நிலத்தில் நீள்வட்ட வடிவில் காணப்படுகிறது.

2. திட்டமிட்ட நகர அமைப்பு

பெருங்கற் பண்பாட்டுக் குடியிருப்புகளில் நான்கு பிரதான கூறுகள் காணப்படுகின்றன. அவையாவன: மக்கள் குடியிருப்புகள், வயல்கள், குளங்கள், இடுகாடுகள் என்பன ஆகும். கந்தரோடையின் நகர அமைப்பில் இந்நான்கு பெருங்கற் பண்பாட்டு அம்சங்களையும் காணலாம்:

  1. மக்கள் குடியிருக்கும் வீடுகளையும், வளர்ப்பு மிருகங்களையும், வெவ்வேறு தொழில்களைப் புரியும் கைவினைஞர்களையும் கொண்ட வாழ்விடப் பகுதி
  2. நீர்ப்பாசனக் குளம்
  3. நெல்வயல்களைக் கொண்ட பகுதி
  4. இறந்தவர்களை அடக்கம் செய்த இடுகாட்டுப் பகுதி

3.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இன்றைய கந்தரோடை கிராமம் ஒரு பண்டைய நகரமாகும். இது நீள்-இணைவக வடிவம் (Elongated Rhomboid) கொண்டது. இதன் வடபாதி மக்களின் குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியில் மட்பாண்டம் வனைவோர், சாயம் பூசுவோர், உலோகத் தொழில் புரிவோர், கோலக்குச்சிகள் மற்றும் வளையல்கள் செய்வோர், மணிமாலைகள் செய்வோர், சங்குத் தொழில் புரிவோர் ஆகியோரின் இல்லங்களும் தொழிற்பட்டறைகளும் காணப்பட்டன. மேலும், ஆங்காங்கே தொழில்நுட்பக் கைவினைஞர்களும், ஏர் பிடித்து உழவு செய்யும் விவசாயிகளும் வாழ்ந்தார்கள்.

இன்று இக்குடியிருப்புப் பகுதி முழுவதுமே ஒரு தொல்லியல் மேடாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுக்கால மக்களின் குடியேற்றங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்து, சிறிய மூன்று மீற்றர் உயரக் குன்றாகக் காட்சியளிக்கின்றது. இம்மேட்டில் விளாத்தி மரம் காணப்படும் தளத்தில் அகழ்வாய்வுகள் காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கின்றன.

மக்களின் குடியேற்றப் பகுதிக்குத் தென்மேற்காக 40 ஏக்கர் பரப்பளவிலான கந்தரோடைக் குளமும், அதைச் சுற்றி பரந்த நெல்வயல்களும் காணப்படுகின்றன. இந்தக் குளம் ‘ட’ வடிவில் அமைந்திருக்கிறது. நெல்வயல்களோடு காய்கறி விவசாய நிலங்களும் காணப்படுகின்றன.

கிராமத்தின் தென்மேற்காக அமைந்த பனந்தோப்பின் இடையே பௌத்த ஸ்தூபங்கள் காணப்படுகின்றன. இந்த ஸ்தூபங்கள் காணப்படும் இடம் ஆதியில் இறந்த மக்களைப் புதைத்த இடுகாடாக இருந்திருக்க வேண்டும் என கலாநிதி சி.க. சிற்றம்பலம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள் (Sitrampalam, S.K. 1980). பிற்காலத்தில் இறந்த பௌத்த குருமாரின் எலும்புகளையும் சாம்பலையும் பேழைகளில் வைத்துப் புதைத்த பின்னர், அப்புதையல்களின் மேல் வட்டவடிவான அல்லது சதுரவடிவான சிறு நினைவுச்சின்னக் கட்டடங்களைக் கட்டியிருந்தார்கள். சமீப காலங்களில் அழிந்து போன இந்நினைவுச் சின்னங்கள் இருந்த இடங்களின் அடித்தளங்களில் அரசினரால் பௌத்த ஸ்தூபிகள் கட்டப்பட்டன.

2018–2019 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழகத்தின் சார்பில் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட ஜெர்மனிய தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளரான பார்பரா ஹெல்விங் அம்மையார், கந்தரோடையின் திட்டமிட்ட நகர அமைப்பை தனது அகழாய்வு அறிக்கையில் சமர்ப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த கந்தரோடையின் புராதன நகர அமைப்பின் படம் கீழே தரப்படுகிறது (Helwing, B. 2018: 27).

கந்தரோடையின் நகர அமைப்பு. Courtesy: Barbara Helwing



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்