ஆங்கிலேயர் ஆட்சியின் அந்திப்பொழுது
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

ஆங்கிலேயர் ஆட்சியின் அந்திப்பொழுது

May 6, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

முரண்பாடு முற்றிய முப்பதுகள்

பதினேழாம் நூற்றாண்டில் மெதுவாக எழத் தொடங்கிய ஆங்கிலேயர் காலனியம் 20ஆம் நூற்றாண்டு உதயமாகிய போது உச்சநிலையடைந்த பேரரசாக உருவாகி, உலக ஆதிக்கம் பெற்றது. அப்பொழுது அது ஒருபோதும் அழியாது என்றென்றும் நிலைக்கும் தன்மை உடையது போன்று காணப்பட்டது. எழுச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி என்பவை வரலாற்றின் போக்கு. இதிலிருந்து எந்தப் பேரரசும் தப்பிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயப் பேரரசு 1930களில் தன் வாழ்க்கையின் அந்திப்பொழுதை அடைந்தது. இருபது ஆண்டுகளுக்குள் அது மறைந்துவிட்டது.

இந்த இருபது ஆண்டுகள் ஆசியாவின் நவீன வரலாற்றில் மிக முக்கியமான கட்டம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிய நாடுகளை அடக்கிவைத்திருந்த ஐரோப்பியப் பேரரசுகளாகிய பிரித்தானிய, பிரெஞ்சு, ஒல்லாந்துப் பேரரசுகள் தம் முடிவைக் கண்டன (போர்த்துக்கீசர் பேரரசு இதற்கு முன் வீழ்ந்துவிட்டது).

தென்கிழக்கு ஆசியாவில் ஒரு புதிய, மிகப்பெரிய அரசாக இந்தோனீசியா அமைக்கப்பட்டது (விரைவில் அங்கு இன்னொரு புதிய அரசாக மலேசியா அமைக்கப்படும்). கிழக்கு ஆசியாவில் சீன மக்கள் குடியரசு உருவாகியது.

தென் ஆசியாவிலும் மிக முக்கியமான வளர்ச்சிகள் ஏற்பட்டன. இதில் முதன்மையானது இந்தியா என்ற ஒரு தனி நாடு உருவாகி, அது உலக அரங்கில் ஒரு தனி அரசாகத் தன் இடத்தைப் பெற்றுக்கொண்டமையாகும். இது பலருக்கு இன்று தெரியாது. ஆங்கிலேயர் 17ஆம் நூற்றாண்டில் தென் ஆசியாவுக்கு வந்தபோது இந்தியா என்ற ஒரு தனி நாடு இருக்கவில்லை. அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த இராச்சியங்களை (Kingdoms) ஒவ்வொன்றாக அடக்கி இந்தியப் பேரரசை உருவாக்கினர். ஆங்கிலேயர் இப்பேரரசை இழந்தபோது தோன்றிய இந்தியா ஒரு புதிய நாடு. இதனைப் பின்னர் பார்க்கலாம்.

இதே காலகட்டத்தில்தான் இலங்கையும் ஒரு புதிய நாடாக வடிவம் பெற்றது. இந்த வடிவத்தைக் கொடுப்பதற்கு உதவிய முக்கிய நிகழ்வுகள் 1930களில் இடம்பெற்றன. உடன்பாட்டுக்கு இடமளிக்காத வகையில், மக்களுக்கு வழிகாட்ட முன்வந்த, மத்திய வகுப்பைச் சேர்ந்த, சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் முரண்பாட்டை வளர்த்தனர்.

டொனமோர் யாப்பு

அரசியல் வலுவை நாடிநின்ற மத்திய வகுப்பினரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் 1931இல் புதிய டொனமோர் யாப்பு நாட்டின் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கி, அரசியல் வலுவைப் பெறவிரும்புவோர் இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த பொது மக்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. இலங்கை அரசியலில் இது ஒரு புரட்சிகரமான மாற்றம். மன்னர்கள் ஆணைக்கு அடங்கி வாய் மூடி வாழ்ந்த பொது மக்கள், பின்னர் மன்னர் சார்பில் நிர்வகித்த ஆளுநர்கள் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர். ஆனால் இப்பொழுது தங்களை ஆளப்போகிறவர்கள் யார் என்பதை நிர்ணயிக்க உதவும் வாக்கு இவர்கள் கையில் திணிக்கப்பட்டது.

இப்புதிய சூழ்நிலையில் அரசியல் அதிகாரத்தை வேண்டிநின்ற மத்திய வகுப்பினர் பொது மக்கள் ஆதரவைப் பெறவேண்டி இருந்தது. இதற்கு மதம், மொழி, இனம் ஆகியவை உணர்ச்சியூட்டும் குரலை எழுப்ப உதவின.

இதுவரை வளர்ந்துவந்த மதம்சார் தேசியவாதமும் பண்பாட்டுத் தேசியவாதமும் 1930களில் அரசியல் தேசியவாதத்துடன் சங்கமிப்பதைக் காணலாம். இந்தியத் தேசியவாத இயக்கம் உச்ச கட்டத்தை அடைய, இலங்கையில் இளைஞர் மத்தியில் அதன் தாக்கம் ஏற்பட்டது. ‘ஸ்வராஜ்’ என்ற ஒலி எழுப்பப்பட்டது.

தேசியவாதம் என்ற அரசியல் கருத்துப் பரவலாக மக்கள் மத்தியில் 1930களில் பரவியது. இது தொடர்பாக, ‘Nationalism’ என்ற ஆங்கிலச் சொல் எவ்வாறு தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெவ்வேறு கருத்துகளை மனதில் வளர்க்க வழிவகுத்தன என்பதைக் கவனித்தல் அவசியமாகும்.

சிங்களத்தில் இப்பொழுது Nationalism என்பது ஜாதிகவாதய (ජාතිකවාදය) எனப் பெயர்க்கப்படுகின்றது. முன்னர் ஜாதிவாதய (ජාතිවාදය) என்ற மொழிபெயர்ப்புப் பயன்படுத்தப்பட்டது. இச்சொல் இப்பொழுது இனவாதம் என்ற பொருளில் வழங்குகிறது. இரண்டிலும் ‘ஜாதி’ என்ற அடிச்சொல் இருப்பதைக் காணலாம். இது சம்ஸ்கிருதத்தில் இருந்து வரும் சொல் (जातिः). ‘ஜாதி’ என்பது சிங்களத்தில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் உள்ளது. 

தென் ஆசியாவில் ‘ஜாதி’/ சாதி என்ற சொல் பல்வேறு வகைப்பட்ட பொருளில் வழங்குவதைக் காணலாம். ‘சிங்களச் சாதி’, ‘தமிழ்ச் சாதி’, ‘அவன் ஒரு சாதி மனிதன்’, ‘இந்த நாய் வேறு சாதி’, ‘இது ஒரு சாதிப் புல்’ என்றெல்லாம் பொது மக்கள் பேசுவர். எனினும், பெரும்பாலும் இனத்தை அல்லது சமூகப் பிரிவைக் குறிப்பதற்கே ‘சாதி’ என்ற சொல் பயன்படுகிறது. சிங்களத்தில் அது இனத்தைக் குறிக்கும் வகையில் ‘ஸிங்ஹள ஜாதிய’ என்ற வர்ணிப்பில் வழங்கிவந்துள்ளது.

இச்சொல்லின் பயன்பாடு சிங்களத்தில் இவ்வாறு இருக்க, புதிதாக வந்த ஆங்கிலச் சொல்லாகிய Nationalism என்பதற்கு ‘ஜாதிவாதய’ என்றோ ‘ஜாதிகவாதய’ என்றோ மொழிபெயர்ப்புக் கொடுத்த போது, சிங்களப் பொது மக்கள் மனதில் எந்த ஜாதியை அது குறிப்பதாகத் தோன்றியிருக்கும்? நிச்சயம் சிங்கள ஜாதி என்றே அவர்கள் கருதியிருப்பர். இலங்கையர் என்ற ஒரு சமூகத்தை அது குறிப்பதாக அவர்கள் கருதியிருக்கமாட்டார்கள். மத்திய வகுப்புத் தலைவர்கள் தமக்குள் ‘Ceylonese Nationalism’ என்பது பற்றிப் பேசிக்கொண்டார்களே ஒழிய, பொதுமக்கள் மத்தியில் அப்படி ஒரு கோட்பாட்டை வளர்க்க முயலவில்லை. 

இது ஒரு பாரதூரமான விளைவை நவீன இலங்கை வரலாற்றில் உண்டு பண்ணியது என்பது என்னுடைய கருத்து. சாதிப் பற்று உடையவர்களாகத் தாம் ஒற்றுமைப்பட்டுத் தம் பெருமையைப் பேசுவதுதான் ‘Nationalism’ என்றும், எல்லா இடங்களிலும் போற்றப்படும் இலட்சியம் இது எனவும் சிங்கள மக்கள் எண்ணினர்.

இப்படியான ஒரு கருத்தை இந்தியாவில் வளர்த்திருந்தால் அது ஆபத்தை விளைவித்திருக்கும். இந்தியாவின் மக்கள் அனைவரையும் இந்தியர் என ஒற்றுமைப்படுத்த விரும்பிய தலைவர்கள் ‘Nationalism’ என்பதைப் பெரும்பாலும் நாட்டுடன் தொடர்புபடுத்தினரே ஒழிய இனத்துடன் தொடர்புபடுத்தவில்லை.

இதனால் அது தமிழில் ‘தேசியவாதம்’ ஆகியது. ‘தேஸ (देशः) என்பது நாடு என்று பொருள்படும் சம்ஸ்கிருதச் சொல். பாரதி பாடிய “பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்” என்ற தேசத்துடன் தொடர்புடையது இந்தியத் தேசியவாதம். ஹிந்தி மொழியிலும் ‘Nationalism’ என்பது நாட்டுடன் தொடர்புடையதாக ‘ராஷ் ட் ரவாத் (राष्ट्रवाद – நாடு + வாதம்) ஆகியது. குஜராத்தி, பஞ்சாபி, மராட்டி, ஒரியா மொழிகளிலும் அவ்வாறே. கன்னடத்தில் சிறிது வேறுபட்ட சொல்லாக ‘ராஷ் ட் ரீயதே’ பயன்படுத்தப்படுகின்றது. வங்காளி, தெலுங்கு மொழிகளில் ‘ஜாதீய’ என்ற வேர்ச்சொல் இருக்கின்றது. தமிழிலும் மலையாளத்திலும் ‘தேசிய/ தேசீய’ என்ற பகுதி காணப்படுகின்றது.

ஆங்கிலச் சொல்லாகிய ‘Nation’ லத்தீன் சொல்லாகிய ‘Natio’ (பிறப்பு, இனம், பழங்குடி) என்பதில் இருந்து பெறப்பட்டது. அந்த வகையில் அதுவும் ‘ஜாதி’ என்பதை ஒத்தது. எனினும் லத்தீன் வேர்ச்சொல் மறக்கப்பட்டு, ‘Nation’ என்பது காலப்போக்கில் விரிவான பொருளையுடையதாகியது எனலாம்.

இதுவரை கூறியவற்றை நோக்குமிடத்து, ‘Nationalism’ என்பதைச் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இருவேறுபட்ட வகையில் விளங்கிச் செயல்பட்டனர். சிங்கள மக்களுக்கு அது இனப்பற்று, இனப்பெருமை ஆகிய உணர்வுகளைக் கொடுத்தது. இதனால், அநகாரிக தர்மபால போதித்த மதம், இனம், நாடு (நான் இதை முன்னர் கூறியிருக்கிறேன்) பற்றிய உணர்வுகள் இலகுவில் 1930களில் அரசியல் தேசியவாதத்துடன் சங்கமித்தன.

டொனமோர் சீர்திருத்தங்கள் இலங்கையர் மனதில் ஒரு முக்கியமான நம்பிக்கையை உண்டு பண்ணின. அதுதான் பிரித்தானியர் ஆட்சி நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை என்ற நம்பிக்கை. இது அரசியல் எண்ணங்களைக் கொண்டிருந்த மத்திய வகுப்பினர் மத்தியில் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் ஏற்படுத்தின எனலாம்.

பௌத்த இயக்கத்தின் வளர்ச்சி

அநகாரிக தர்மபால தனது இறுதி ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்து, 1933இல் அங்கு இறந்தார். அவர் வழிவந்த பௌத்த துறவிகள் பலர், சிறப்பாக வித்தியாலங்காரப் பிரிவெனையில் கல்வி கற்றோர், பொதுமக்கள் மத்தியில் 1930களில் செயலாற்றத் தொடங்கினர். பாரம்பரிய முறைப்படி தத்தம் ஊர்களில் விகாரை (பன்ஸல) என்ற சமயத்தலத்தில் இருந்து ஊர் எல்லைக்குள் செயலாற்றிய பௌத்த துறவிகளை வெளியே வரவைத்து, சமூகத்தில் ஒரு புதிய வகிபங்கை ஏற்றுக்கொள்ள அநகாரிக வழிவகுத்தார். சமூக சேவை பிக்குகளுக்கு உரிய ஒரு முக்கிய கடமை என வற்புறுத்தி, இவர் எவ்வாறு பிக்குகளை முன்னொருபோதும் இல்லாத வகையில் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்தி பின்னர் (1950களில்) அரசியலில் பங்குபற்ற வழிவகுத்தார் என்பதைப் பேராசிரியர் எச்.எல். செனெவிரத்ன தனது நூலில் (The Work Of Kings: The New Buddhism In Sri Lanka) விரிவாகக் காட்டியுள்ளார். 

பௌத்த பிக்குகளுடைய செயல்பாடுகள் தேசிய உணர்வை ஊக்குவிக்கவும் உதவின. எனினும் 1940கள் வரை பௌத்த துறவிகள் நேரடியாக அரசியலில் ஈடுபட்டனர் என்று சொல்வதற்கில்லை. இது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

பண்டாரநாயக்க மற்றும் ஜயவர்தன

தேசியவாத உணர்ச்சிகள் வளரத் தொடங்க, அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த சில பிரமுகர்கள் தங்கள் குடும்பங்கள் தழுவியிருந்த கிறிஸ்தவ மதத்தைக் கைவிட்டுப் பௌத்தர்களாகுவதையும் காணலாம். இது தொடர்பாக இருவர் முக்கியமானவர்கள். இருவரும் 1930களில் இருந்து நாட்டின் போக்குக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையோட்டத்தைத் திருப்பிக்கொண்டனர்.

ஒருவர் பண்டாரநாயக்க. தென் இந்தியாவில் இருந்து காலத்துக்குக் காலம் புலம்பெயர்ந்து வந்து குடியேறியோர் எவ்வாறு காலப்போக்கில் இலங்கையராக மாறினர் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இவருடைய குடும்ப வரலாறு. குடும்பப் பதிவேடுகளைப் பேணிவைத்த சில குடும்பங்களுள் ஒன்று பண்டாரநாயக்க குடும்பம்.

இக்குடும்பப் பதிவேடுகளை வைத்து, பேராசிரியர் யஸ்மின் குணரத்ன (பண்டாரநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்) எழுதியுள்ளதை இங்கு சுருக்கிக் கூறுதல் பொருத்தமாகும். நீலப்பெருமாள் என்ற பெயருடன் 15ஆம் நூற்றாண்டில் கண்டி அரசுக்கு வந்த மூதாதையர், சமன் தேவாலயத்தின் உயர் பூசகராகினார். அவருக்கு நாயக பண்டாரம் என்ற விருது வழங்கப்பட்டது. அவ்விருது பின்னர் பண்டாரநாயக்க என மாறியது. குடும்பத்தின் இந்து மதம் பௌத்தமாக மாறியது. பின்னர், 17ஆம் நூற்றாண்டு பதிவேடுகளின்படி, இக்குடும்பம் பௌத்தத்தை விட்டுக் கத்தோலிக்க கிறஸ்தவத்தைத் தழுவியது. பின்னர் பண்டாரநாயக்க குடும்பத்தினர் புரொட்டஸ்தாந்துக் கிறிஸ்தவத்தைத் தழுவினர் (Yasmine Gooneratne, Relative Merits: A Personal Memoir of the Bandaranaike Family of Sri Lanka). S.W.R.D. பண்டாரநாயக்க இம்மதத்தைக் கைவிட்டுப் பௌத்தத்தைத் தழுவினார்.

பண்டாரநாயக்க போல, ஜே.ஆர். ஜயவர்தனவும் ஒரு புலம்பெயர் குடும்பத்தின் வழித்தோன்றல். இவருடைய மூதாதையர் 17ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து வந்து கொழும்புக்கு அருகாமையில் குடியேறியவர். ஒல்லாந்தர் ஆட்சியின்போது அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவர்களாயினர். ஆங்கிலேயர் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி தொடங்கிய போது, இக்குடும்பத்தைச் சேர்ந்த டொன் ஏட்றியன் விஜேஸிங்ஹ ஜயவர்தன என்பவர் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அவருடைய நேர் வழித்தோன்றல்களுள் ஒருவர்தான் ஜே.ஆர். ஜயவர்தன. பிறப்பில் இருந்து கிறிஸ்தவராக வளர்ந்தவர், பின்னர் பௌத்த மதத்தைத் தழுவினார்.

தேசிய உடையும் சிங்களப் பெயர்களும்

தேசிய உணர்வு 1930களில் துரிதமாக எழுச்சி பெற, மதம் தொடர்பான மாற்றங்கள் மட்டுமல்லாது, உடை மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் ஆகியவையும் ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினரிடையே காணப்பட்டது. தங்கள் உடையைத் தேசிய உடையாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகளுள் முக்கியமானவர் ஜே.ஆர். ஜயவர்தன. பண்டாரநாயக்க தேசிய உடையை அணியத் தொடங்கிய போதும் மேலைத்தேச உடையை 1950கள் வரை முற்றாகக் கைவிடவில்லை. ஆங்கிலப் பாடசாலைகளின் சில அதிபர்களும் ஆசிரியர்களும் தேசிய உடையை அணியத் தொடங்கினர்.

இவ்வாறே பெயர் மாற்றமும் தொடங்கியது. சிங்கள மக்களிடையே பெரேரா, த சில்வா, பர்ணாந்து, த அல்விஸ், தியஸ் போன்ற போர்த்துக்கீசப் பெயர்களும் சில ஆங்கிலப் பெயர்களும் செல்வாக்குப் பெற்றிருந்தன. தேசியவாத உணர்ச்சியின் விளைவாகப் பலர் இக்கட்டத்தில் இப்பெயர்களை மாற்றினர். பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகப் பின்னர் சிறப்புப் பெறும் குணபால பியஸேன மலலஸேகர (பழைய பெயர் ஜோர்ஜ் பீரிஸ் மலலஸேகர) மற்றும் எதிரிவீர ஸரச்சந்த்ர (பழைய பெயர் இயுஸ்ரஸ் ரெஜினல்ட் த சில்வா) போன்றோர் இது தொடர்பாக முக்கியமானவர்கள். இசை மற்றும் நடனத் துறைக் கலைஞர்களாகிய சித்திரஸேன ஸுனில் ஸாந்த, அமரதேவ போன்றோர் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

யாழ்ப்பாணத்தில் தேசிய எழுச்சி

சிங்கள சமூகத்தில் இடம்பெற்ற மதம், மொழி, இனம் சார்ந்த வளர்ச்சிகளை ஒத்த வகையில் தமிழர் சமூகத்திலும் 1930களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இவை யாழ்ப்பாணத்தில் அல்ல, தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நிகழ்ந்தவை. இவற்றின் தாக்கம் மறுக்கமுடியாத வகையில் யாழ்ப்பாணத்திலும் ஏற்பட்டது என்பது என்னுடைய கருத்து.

தேசியவாதத்தின் ஒரு பக்கம் அந்நியர் எதிர்ப்பு; மறுபக்கம் தேசிய இனத்தின் பெருமை, பழமை, தனித்துவம் ஆகியவற்றைப் போற்றுதல். இந்த நியதிப்படி பார்க்கும்போது, தென் இந்தியத் தமிழர் சமூகத்தின் மத்திய வகுப்பு ஆங்கிலேயர் ஆட்சியைப் பிற இந்தியருடன் கூடி எதிர்த்தது. ஆனால், மறுபக்கத்தில், இந்தியத் தேசிய இனத்தின் பெருமையையும் பழமையையும் போற்றுவது தொடர்பாக இந்த மத்திய வகுப்பு பிளவுபட்டிருந்தது.

இதற்குக் காரணம் தென் இந்தியத் தமிழர் சமூகம் சாதி அடிப்படையில் பிராமணர்/ பிராமணர் அல்லாதோர் எனப் பிளவுபட்டிருந்தமையாகும். இந்தியத் தேசியவாதிகள் பெருமையுடன் எடுத்துரைத்த சம்ஸ்கிருத மொழியின் தொன்மை, அதன் இலக்கியத்தின் சிறப்பு, வேதங்களின் பழமை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதில் பிராமணர்க்குப் பிரச்சினை இருக்கவில்லை எனலாம். ஆனால் பிராமணர் அல்லாத மத்திய வகுப்பினர் இதை ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது.

தமிழ்நாட்டு நிகழ்வுகளை இங்கு கூறுவது என் நோக்கம் அல்ல. எனினும் இவை யாழ்ப்பாணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், சுருக்கமாக இவை பற்றிச் சொல்வது பொருத்தமாகும். தமிழ்நாட்டில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதத்தையும் மொழியையும் இணைத்த ஓர் இயக்கம் தொடங்கியது எனலாம். இதில் சைவம் தமிழருடைய மதம் என்பது வற்புறுத்தப்பட்டு, தமிழ்மொழி ‘தமிழ்த்தாய்’ என வாழ்த்தப்பட்டு, ‘தமிழ் அணங்கு’ என ஒரு தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டது. விரைவில், சுப்பிரமணிய பாரதியார் ‘தமிழ்த்திருநாடு’ என்ற இடத்தையும் சேர்த்தவுடன், இலங்கையில் போல, மதம் மொழி நாடு ஆகிய மூன்றும் இணைந்த ஒரு தேசியவாதம் வளர்வதற்கு வழி திறக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை (1864 – 1920) சைவ மறுமலர்ச்சி ஒன்று நடைபெறுவதற்கு உதவினார். சைவ சித்தாந்தம் தொடர்பான முக்கிய நூல்கள் சிலவற்றை (சிவஞானபோதம், உண்மை விளக்கம்) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சித்தாந்த தீபிகை என்ற மாத இதழ் ஒன்றை வெளியிட்டும் இவர் சைவ மத எழுச்சிக்கு உதவினார். இவருக்குப் பின் மறைமலை அடிகள் (1876-1950) மதத்தையும் மொழியையும் இணைத்துத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி வைத்தார். வேதாசலம் என்ற தன் இயற்பெயரை மறைமலை என மாற்றியவர் இவர்; ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்’, ‘தமிழர் மதம்’ என்பவற்றை எழுதி மதத்தையும் மொழியையும் இணைத்தவர். பரந்தாம முதலியார் என்பவர் 1926இல் தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி என்ற நூலை எழுதித் தமிழைத் தெய்வமாக உயர்த்தியவர்.

இவர்களை அடுத்து, 1930களில், வி. கல்யாணசுந்தரனார் “நாம் உண்டது தமிழ், உற்றது தமிழ், உயிர்த்தது தமிழ், எல்லாம் தமிழ்” என்றும், சுத்தானந்த பாரதியார் “தலை நிமிர் தமிழா” என்றும் குரல் எழுப்பினர்.

தமிழ்நாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்றே கொள்ளவேண்டும். சைவத்தை வளர்ப்பதற்கும் சைவக் கல்வியை ஊட்டுவதற்கும் பெருமுயற்சிகள் எடுக்கப்பட்டன. சைவப் பாடசாலைகள் பல இடங்களில் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வு கிறிஸ்தவர்களுடைய தமிழ்ப் பாடசாலைகளுக்கு எதிரான இயக்கம் எனவும், இதனால் அமெரிக்க மிஷன் 50 பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் பேராயர் ச. குலேந்திரன் எழுதியுள்ளார்.

தேசிய உணர்வின் விளைவாகத் தெற்கில் நிகழ்ந்தவற்றை ஒத்த வகையில் யாழ்ப்பாணத்திலும் சில வளர்ச்சிகள் காணப்பட்டன. ஒன்று, ஐரோப்பியப் பெயர்களைக் கைவிடும் போக்கு. கிறிஸ்தவர்கள் பலர் தாம் பெற்றிருந்த மேற்கத்தியப் பெயர்களைக் கைவிட்டு அல்லது முதற்பெயராக மாற்றி, தமிழ்ப் பெயர் ஒன்றைப் பிரதம பெயராகத் தரிப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, ஹண்டி பேரின்பநாயகம், லைமன் குலத்துங்கம், லூதர் ஜெயசிங்கம். இதே காலத்தில் பல மத்திய வகுப்பினர் தேசிய உடையை அணியத் தொடங்கினர்.

அக்காலத்தில் மாணவராக இருக்கும் போது தன் பெயரை மாற்றிய ஒருவர் பின்னர் எழுதியது, பெயர் மாற்றங்களைத் தூண்டிய தேசிய உணர்வு எவ்வாறு பாடசாலை மாணவர் மத்தியில் காணப்பட்டது என்பதை அறிய உதவுகின்றது: “With the national feeling breathed into me by the school i decided early to discard my Jewish connection and took over my Tamil name” (Jaffna College Miscellany, 1979). இந்த மாணவர் S.K. Abraham என்ற பெயருடன் பாடசாலையில் 1922இல் சேர்ந்தபின், A.S. Kanagaratnam எனப் பெயரை மாற்றிக்கொண்டவர்.

தெற்கில் நடந்தது போல், யாழ்ப்பாணத்திலும் சில பிரமுகர்கள் தங்கள் கிறிஸ்தவ மதத்தைக் கைவிட்டுச் சைவ மதத்தைத் தழுவினர். மஹாஜனக் கல்லூரியின் முதல் அதிபர் பாவலர் துரையப்பாப்பிள்ளை, சைவக் கல்வி தொடர்பாக முக்கியத்துவம் பெறும் எஸ். ராஜரத்தினம் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இதே காலத்தில் ஹண்டி பேரின்பநாயகமும் கிறிஸ்தவத்தில் இருந்து விலகுவதைக் காணலாம்.

யாழ்ப்பாணத்தில் 1930களில் தேசிய உணர்வு எழுச்சி பெற்றிருந்ததை அக்காலத்தில் மாணவராக இருந்த ஒருவர் இவ்வாறு வர்ணித்துள்ளார்: “இக்காலத்திலே ‘தேசீயக் கிளர்ச்சி, தேசீயக் கிளர்ச்சி’ எனப் பலர் சத்தமிடுகின்றனர்” (குல. சபாநாதன், Jaffna College Miscellany 1935).

இப்பின்புலத்தில், யாழ்ப்பாண இளைஞர்கள் இந்தியத் தேசிய இயக்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டு, இலங்கையர் தேசியவாதத்தைத் தழுவினர்; ‘ஸ்வராஜ்’ எனக் குரல் எழுப்பினர். யாழ்ப்பாண மத்திய வகுப்பினர் வேறொரு திசையில் சென்றனர். இதே காலத்தில் தெற்கில் இன்னொரு புதிய சக்தியாக இடதுசாரிக் கட்சி ஒன்று (லங்கா சமசமாஜக் கட்சி) தோன்றி நாட்டை இன்னொரு திசையில் இழுத்துச்செல்லத் தொடங்கியது. இவை அனைத்தும் 1930களில் இலங்கையின் எதிர்காலப் போக்கினை நிர்ணயித்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.




About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்