அறிமுகம்
ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமத்தின் கடவுளர்களினதும் வழிபாட்டு முறைகளினதும் மேற்கிளம்புகையில் அக்குழுமத்தின் பௌதீகச் சூழல், உற்பத்தி முறை, உற்பத்தி உறவு ஆகியனவும் அவற்றினால் கட்டியெழுப்பப்படும் வாழ்க்கை முறையும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கம்பெறும் வழிபாட்டு மரபானது அக – புறக் காரணிகளால் அச்சமூகத்துள் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பு அடைகிறது. அதேவேளை, அச்சமூகம் அக்குறிப்பிட்ட பௌதீகச் சூழலைவிட்டு வெளியேறிய பின்பும் அவ்வழிபாட்டு மரபு அவர்களிடத்துத் தொடர்வதுடன் புதிதாக முகங்கொள்ளும் சமூக, பண்பாட்டு வாழ்முறையோடு பூர்வீகப் பண்பாட்டை இணைவுபடுத்தி, புதிய வழிபாட்டம்சங்களைத் தோற்றுவித்துக் கொள்வதும் நிகழ்கிறது. தமிழ்ச் சமூகக் குழுக்களுக்குள் பிராந்திய மற்றும் உற்பத்திசார் குழுமங்களின் வேறுபாடுகளுக்கு ஏற்பவும் காலத்துக்குக் காலம் ஏற்பட்டுவந்துள்ள வாழ்வியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் கடவுளர் உருவாக்கத்திலும் அக்கடவுளர்களின் வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. குறிப்பாக, ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்கள் இன்னொரு காலத்தில் செல்வாக்கு இழக்க, வேறு கடவுளர்கள் முதன்மை பெறுதல், சில கடவுளர்கள் முற்றிலும் கைவிடப்படுதல், வெவ்வேறு கடவுளர்கள் ஒன்றாக இணைதல், புதிய கடவுளர்கள் உருவாக்கம் பெறுதல், ஒரு குறிப்பிட்ட குழுமத்துக்குரிய கடவுளை வேறொரு குழுமம் தமக்குரிய கடவுளாகக் கொள்ளல் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்துக்குரிய கடவுள் பொதுநிலைக் கடவுளராக மாறுதல், பூர்வீக வழிபாட்டு முறைகள் சிலவற்றைக் கைவிடுதல், கிராமிய வழிபாடுகள் சமஸ்கிருதமயமாதலுக்கு உள்ளாதல், சமஸ்கிருதமயமான வழிபாட்டு முறைகளைத் தமிழ்மயப்படுத்தல் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.
காலனியக் காலத்தில் அறிமுகமான கோப்பி, தேயிலை முதலான பெருந்தோட்ட உற்பத்திமுறையும் அவ்வுற்பத்திமுறையை அடிப்படையாகக் கொண்ட சமூக உருவாக்கமும் தமிழரின் சமய வழிபாட்டு மரபில் புதிய கூறுகளைத் தோற்றுவித்தன. பெருந்தோட்டத் தொழிலை நாடி, சொந்தக் கிராமங்களையும் தொழில்களையும் விட்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற மக்கள், தம் பூர்வீக வழிபாட்டு மரபுகளை வெவ்வேறு அளவுகளில் பின்பற்றியதுடன் அப்பூர்வீக மரபுகளைப் புதிதாகக் குடியேறிய நாட்டினது வாழ்முறையுடன் இணைத்தும் பின்பற்றலாயினர். அதனால் அவர்களின் சமய வழிபாட்டு மரபில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதோடு முற்றிலும் புதிய அம்சங்களும் இணைந்துகொண்டன.
தென்னிந்தியாவின் திருச்சி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வேலூர் போன்ற பகுதிகளின் கிராமப்புறங்களிலிருந்து இலங்கையின் மத்திய பகுதிகளில் குடியேற்றப்பட்ட மலையகத் தமிழர்கள், தமிழ்நாட்டில் தாம் பின்பற்றிய பூர்வீகப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையே இங்கு தொடர்ந்தும் பின்பற்றலாயினர். அப்பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தொடர்ந்தும் பேணுவதற்குரிய சாதகமான சூழ்நிலை இலங்கையில் நிலவியுள்ளது. “பெருந்தோட்ட முறையில் தொழிலாளர்கள் வெளி உலகின் தொடர்பு இல்லாமல் பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார்கள். மொழியால், மதத்தால் வேறுபட்ட சமூகம் ஒன்று அயலில் சூழ இருக்க, அதன் மத்தியில் அந்நியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டார்கள்” (குமாரி ஜெயவர்தன, 2009: 74). அதனால் பண்பாட்டுக் கலப்புக்கான இடைவெளி அற்றிருந்துள்ளது. அத்துடன், தமிழ் நாட்டிலிருந்து கூலி உழைப்பிற்காக அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்ட முறை, குடியிருப்புகளின் அமைவு, பூர்வீக சாதித் தொடர்ச்சி, இறுக்கமான கட்டுப்பாடுகள் கூடிய பெருந்தோட்ட நிர்வாக அமைப்பு, தொழில், தொழிற்சங்கம் தொடர்பான தொழில் ஒழுங்கமைப்பு, அரசியல் தனிமைப்பாடு, மக்களின் சமூக – பொருளாதார நிலைப்பாடு, அடிக்கடி இந்தியாவுக்குச் சென்றுவருவதற்குச் சாதகமாக அமைந்த புவியமைவு போன்றன மலையகத் தமிழரின் பூர்வீகப் பண்பாட்டின் தொடர்ச்சியான நிலைப்புக்குக் காரணங்களாக அமைந்தன (சிவத்தம்பி: 1985).
பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் குடியேறியவர்கள் பெரிதும் இந்துக்களாகவே இருந்த காரணத்தால் இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியங்களே இங்கு பின்பற்றப்பட்டன. தென்னிந்தியப் பூர்வீகத் தொடர்ச்சியும் இலங்கையில் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்க்கை நிலையும் – வாழ்க்கைச் சூழலும் அம்மக்களிடையே மதநம்பிக்கைகளை வலுவாக நிலைபெறச் செய்துள்ளன. பாதுகாப்பற்ற கடல் பயணம், நீண்ட தூர நடைபயணம், வறட்சி, வெப்பம், குளிர் மற்றும் கொலரா, அம்மை முதலான நோய்கள், பெருந்தோட்டங்கள் அமைத்த போது ஏற்பட்ட அனர்த்தங்கள், பெருந்தோட்டங்களுக்குள்ளேயே முடக்கப்பட்ட வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பூர்வீக மதநம்பிக்கைகள் அம்மக்களிடையே அதிக அழுத்தம் பெற்றன. அதனால் “அவர்கள் வந்திறங்கிய துறைமுகங்களிலும், பிரயாணம் செய்யும்போது ஓய்வெடுத்த இடங்களிலும், நிரந்தரமாகத் தங்கிக் குடியிருப்புகள் ஏற்படுத்திய இடங்களிலும் இந்து வழிபாட்டிடங்கள் நிறுவப்பட்டதுடன் பல்வேறு சமூக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மலையகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக வசதிகளில் மத நடவடிக்கைகளுக்கான வசதிகள் முதன்மையான இடத்தை வகித்தன. இதனால் மலையகம் எங்கும் வழிபாட்டிடங்கள் தோன்றலாயின. அத்தோடு மக்கள் தங்கள் நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், விரத நாட்கள், பண்டிகைகள், கூத்துகள், கலைகள், இலக்கியம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டுகள், கிரியைகள் போன்றவற்றைத் தொடர்ந்தும் பேணுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டன” (சிவத்தம்பி, 1993 : 08).
மலையகத் தமிழரின் சமய வழிபாட்டு மரபுகளும் சமூக நடைமுறைகளும் பிரதானமாக இந்துமுறைகளாக அமைந்த பொழுதிலும் அவை இலங்கையின் ஏனைய பிராந்தியங்களில் வாழ்கின்ற சக இந்துக்களுடையதை விட வேறுபாடு கொண்டவையாகவே விளங்குகின்றன. அவர்களது சமய வழிபாட்டு மரபுகளும் சமூக நடைமுறைகளும் தென்னிந்தியாவின் எந்தக் கிராமத்திலிருந்து வந்தார்களோ எந்தச் சாதியைச் சேர்ந்திருந்தார்களோ அதற்கேற்ற முறையிலேயே வேறுபட்டுக் காணப்பட்டன (Velupillai: 1970). அவை கால வேறுபாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு மட்டங்களில் இன்றும் எஞ்சியுள்ளன.
பெருந்தோட்ட உற்பத்திமுறை சார்ந்த தொழில் முறைகள், அத்தொழில்முறை உருவாக்கிய வாழ்க்கை நிலையையும் தொழில்துறைசார்ந்த புதிய கடவுளர்களையும் உருவாக்கியதுடன் அக்கடவுளர்களுக்கான பிரத்தியேக வழிபாட்டு முறைகளையும் கட்டியெழுப்பின. அவை மலையகத் தமிழரின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக விளங்குகின்றன.
இலங்கையில் தேயிலைத் தோட்டங்களின் பரம்பலானது பரந்து விரிந்துள்ளது. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் ஆகியவற்றில் செறிவாகவும் சப்பிரகமுவ மாகாணம், தென்மாகாணம் முதலானவற்றில் குறைவாகவும் தேயிலைத் தோட்டங்கள் காணப்படுகின்றன. இப்பிராந்திய வேறுபாடுகள் அவர்களின் பண்பாட்டு நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதனால் பெருந்தோட்டத் தொழில்துறைசார் தெய்வங்கள் எனப் பொதுவாக அடையாளப்படுத்தப்பட்டாலும் அவ்வழிபாட்டை நிகழ்த்துவதில் – நிகழ்த்தும் நடைமுறைகளில் தோட்டங்களுக்குத் தோட்டம் சிற்சில வேறுபாடுகள் நிலவுகின்றன. இக்கட்டுரைக்கான மூலத்தரவுகள், கண்டி மாவட்டத்தின் ரங்கலை பிராந்தியத்தில் உள்ள தோட்டங்களில் திரட்டப்பட்டவையாகும்.
தேயிலை உற்பத்தியுடன் தொடர்புடைய தெய்வங்கள்
தேயிலைச் செய்கையில் நாற்று நடுதல், கொழுந்து பறித்தல், கவ்வாத்து வெட்டுதல், மட்டம் வெட்டுதல், கொழுந்தினைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லுதல், தொழிற்சாலையில் கொழுந்தினைத் தேயிலைத் தூளாக்குதல் எனும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வொவ்வொரு செயற்பாட்டுக்கும் ஒவ்வொரு கடவுளர் என முறையே தவறணைமுனி, கொழுந்துசாமி, கவ்வாத்துசாமி, மட்டத்துசாமி, கம்பிமுனி, றோதைமுனி ஆகிய தெய்வங்களை வணங்கி வருகின்றனர். இவ்வழிபாடுகள் யாவும் தொழிலின் போது நிகழும் அபாயங்கள், அனர்த்தங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்தல், வளத்தினைப் பெருக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1. தவறணைமுனி
தவறணைமுனி வழிபாடானது, தேயிலைக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. தேயிலைக் கன்றுகள் நாற்றுமேடையிட்டு வளர்க்கப்படும் இடம் ‘தவறணை’ எனப்படுகின்றது. அத்தவறணையில் பணியாற்றும் ஆண் தொழிலாளர்களின் தலைமையில் இவ்வழிபாடு முன்னெடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படும் இவ்வழிபாட்டை, இக்காலத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் எவையும் இல்லை. தவறணையின் தலைமைப் பணியாளர் அல்லது அவர் தலைமையில் ஏனைய தவறணைத் தொழிலாளர்கள் தீர்மானிக்கும் காலத்தில் அப்பூசை வைக்கப்படுகின்றது.
மாலை வேளையில் இப்பூசையை நிகழ்த்துதல் வழமை. சில தோட்டங்களில் காலையில் நிகழ்த்துதலும் உண்டு. பீடங்கள் ஏதுமின்றி நிலத்தில் சிறிய முக்கோண வடிவக் கல்லை நட்டு வழிபடுகின்றனர். மாலை வேளையில் நிகழ்த்தப்படும் வழிபாட்டில் உயிர்ப்பலி (சேவல்) இட்டு, சாராயம், சுருட்டு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேசிக்காய் (எலுமிச்சம் பழம்) என்பன படையலிடப்படுகின்றன. பூசாரி அல்லது தவறணையின் தலைமைப் பணியாளர் பூசையை நிகழ்த்துவார். விளக்கேற்றி, தீப தூபம் காட்டியதும் படையலில் உள்ள தேசிக்காயை நான்காக வெட்டி நாற்திசைக்கும் வீசுவார். பின்னர் மஞ்சள் நீரைச் சேவலின் தலைக்குத் தெளித்து கடவுள்முன் தூக்கிப்பிடித்து, மூன்றுமுறை சாமிக்கு மேலாகச் சுற்றுவார். அதன்பின் சேவலை வெட்டி, அதன் ஈரலைத் தீயில் சுட்டுக் கடவுளுக்குப் படைப்பார். பூசைமுடிய பிரசாதமாக அந்த ஈரல் துண்டு பங்கிட்டு வழங்கப்படும். வெட்டப்பட்ட சேவலை அவ்விடத்திலேயே சமைத்து உண்பர். மிகுதி உணவை வீடுகளுக்கு எடுத்துச்செல்வது இல்லை. ஆண் தொழிலாளர்களும் சிறுவர்களுமே பூசையில் கலந்துகொள்வர். காலை வேளையில் பூசைசெய்யும் போது பலியிடல் இடம்பெறுவதில்லை. சாராயம், சுருட்டு என்பன வைக்கப்படுவதில்லை. சர்க்கரைப் பொங்கல் படையலாக வைக்கப்படுகிறது. அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், பால் என்பன படைக்கப்படுகின்றன. காலையில் இடம்பெறும் பூசையின் போது பெண் தொழிலாளர்கள் கலந்துகொள்ளும் வழமை அரிதாக நிலவுகிறது.
2. கொழுந்துசாமி
தேயிலைக் கொழுந்து செழித்து வளர வேண்டும் என்ற நோக்கில் வளம் வேண்டி, வருட ஆரம்பத்தில் அல்லது வறட்சிக் காலங்களில் கொழுந்துசாமி வழிபடப்படுகின்றது. பெண்களின் தலைமையில் இவ்வழிபாடு இடம்பெறுகிறது. தேயிலைச் செடி ஒன்றுக்கு மாலையிட்டு அதனைக் கடவுளாக உருவகித்து வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டில் பலி இடல் வழக்கில் இல்லை. பொங்கல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பால், பச்சை அரிசி அல்லது துள்ளுமா ஆகியன படைக்கப்படுகின்றன. நீரில் ஊற வைத்த சிவப்புப் பச்சை அரிசியில் சீனி, தேங்காய் ஆகியவற்றைக் கலந்து தருவது பச்சை அரிசியாகும். நீரில் ஊற வைத்த சிவப்புப் பச்சை அரிசியை உரலில் இட்டு இரண்டொன்றாகக் குற்றி, சீனி, தேங்காய் ஆகியவற்றைக் கலந்து தருவது துள்ளுமாவாகும். சிலவேளைகளில் அவித்த கடலையும் படையலிடப்படுகிறது.
3. கவ்வாத்துசாமி
கவ்வாத்துசாமி அல்லது கவ்வாத்துமுனி வழிபாடானது ஆண்டுதோறுமின்றிக் காலத் தேவைக்கேற்ப ஆண்களால் மேற்கொள்ளப்படுகின்றது. கவ்வாத்து வெட்டும் காலப்பகுதியில் மட்டுமே அவ்வழிபாடு மேற்கொள்ளப்படும். ஆனால், ஆண்டுக்கு ஒரு தடவைக்கு மேல் வழிபாட்டினை நிகழ்த்துதல் வழக்கில் இல்லை. கவ்வாத்து வெட்டுதல் என்பது ஒரு தொழில் நிகழ்வாகும். தேயிலையின் விளைச்சலைப் பெருக்கவும் தேயிலைச் செடிகள் பரந்து வளரவும் கொழுந்து பறித்தலை இலகுபடுத்தவும் தேயிலைச் செடிகளின் நுனி, ஆண்களைக் கொண்டு வெட்டுவிக்கப்படும். இந்நிகழ்வு தொடங்கும் காலங்களிலேயே இவ்வழிபாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெறுகின்றது.
கவ்வாத்து வெட்டும்போது தொழிலாளர்களுக்கு எவ்வித அனர்த்தங்களும் ஏற்படக்கூடாது எனக் கவ்வாத்துசாமிக்கு நேர்த்தி வைத்து, கவ்வாத்து வெட்டி முடிந்ததும் அத்தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆடு (சிலவேளைகளில் ஆட்டுடன் சேவல்) பலியிட்டு, சாராயம், சுருட்டு, வெற்றிலை, பாக்கு, பழம், தேசிக்காய் ஆகியவற்றைப் படைத்து, நேர்த்திக்கடனைக் கழிக்கின்றனர். பூசை ஆரம்பித்ததும் தேசிக்காயை வெட்டி நாற்புறமும் வீசுவர். அதன்பின் பலியிடல் இடம்பெறும். பலியிடப்பட்டவை யாவும் அவ்விடத்திலேயே சமைத்து உண்ணப்படும். அவற்றை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதோ பெண்களுக்கு வழங்குவதோ இல்லை. கவ்வாத்து சாமிக்கெனத் தனித்த வழிபாட்டுத் தலங்கள் இல்லை. தேயிலைச் செடிகளுக்கு இடையிலோ மலையடிவாரங்களிலோ நீரூற்று இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆல், அரசு, சவுக்கு போன்ற மரங்களுக்கடியிலோ முக்கோண வடிவிலான கல்லினை வைத்து வழிபடுவதே மரபாக உள்ளது.
4. மட்டத்துசாமி
கவ்வாத்து வெட்டுதல் என்பது போலவே ‘மட்டம் வெட்டுதல்’ என்பதும் ஒரு தொழில் நிகழ்வாகும். தேயிலைச் செடிகளைக் கவ்வாத்து வெட்டியபின் புதிதாகத் துளிர்விடும் தளிர்கள் ஒரே சீராக வளர்வதற்காகப் பெண்களைக் கொண்டு வெட்டுவிக்கப்படும். இதனைத் தொழிலாளர்களின் வழக்கில் ‘மட்டம் வெட்டுதல்’ என்பர். அதற்குப் பயன்படுத்தப்படும் கத்தி, ‘மட்டக்கத்தி’ எனப்படுகிறது. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆயுதங்களால் தமக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாதவாறு பாதுகாப்பு வேண்டி இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். இவ்வழிபாடானது ஆண்டுதோறுமன்றி காலத்தேவையின் பொருட்டே இடம்பெறுகின்றது. கவ்வாத்துமுனியைப் போல இவ்வழிபாட்டையும் வருடத்திற்கு ஒருதடவைக்கு மேல் நிகழ்த்துதல் வழக்கில் இல்லை. இவ்வழிபாட்டில் தேயிலைச் செடியொன்றுக்கு மாலையிட்டு அதனைத் தெய்வமாக உருவகித்துக்கொள்வதோடு பலியிடல் ஏதும் இன்றி பொங்கல், வெற்றிலை, பாக்கு, பால், பழம், பச்சை அரிசி அல்லது துள்ளுமா போன்றன படைக்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவித்த கடலையும் படைக்கப்படுகிறது.
5. கம்பிமுனி
கம்பிமுனி எனும் வழிபாடு, மலையகப் பெருந்தோட்டங்களில் முற்காலத்தில் நிலவியுள்ளது. போக்குவரத்து வசதிகள் விருத்தியடையாத காலங்களில், பறிக்கப்பட்ட கொழுந்தினை மூட்டைகளில் கட்டி, மலையுச்சிகளில் இருந்து பாதை இருக்கின்ற இடத்துக்குக் கம்பிகள் மூலம் அனுப்புவர். மலையுச்சியில் இருந்து கொழுந்து சென்றடைய வேண்டிய இடத்துக்குத் தொடுக்கப்பட்ட கம்பிகள் அதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் பயன்பாடற்ற நிலையில் இன்றும் பல தோட்டங்களில் காணப்படுகின்றன. இந்தக் கொழுந்து மூட்டைகளை அனுப்பும் தொழிலில் ஈடுபட்ட ஆண்களால் அக்கம்பி, தெய்வமாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண்கள் தாம் தெரிவு செய்யும் காலத்தில் சேவல் பலியிட்டு, சாராயம், சுருட்டு, வெற்றிலை, பாக்கு, பழம், தேசிக்காய் முதலானவற்றைப் படைத்து வழிபட்டுள்ளனர். இங்கு படையலிடப்படுபவற்றையும் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதோ பெண்களுக்கு வழங்குவதோ இல்லை. இன்று இக்கம்பிகளின் தேவை அற்றுப்போனதால் இவ்வழிபாடு வழக்கொழிந்து போய்விட்டது.
6. றோதைமுனி
பெருந்தோட்டத் தொழிற்துறைக்கே உரிய வழிபாடுகளில் றோதைமுனி வழிபாடு மிகவும் பிரசித்தமானதாகும். தேயிலைத் தொழிற்சாலையுடன் இணைந்ததாக விளங்குகின்ற இவ்வழிபாடானது, தொழிற்சாலைகளில் இயந்திரங்களுடன் தொழில்புரியும் போது எவ்வித அனர்த்தங்களும் ஏற்படாதிருப்பதற்காக வருடத்திற்கு ஒருமுறை நிகழ்த்தப்படுகின்றது. இவ்வழிபாட்டினை முறையாக நிகழ்த்தாவிடின் றோதைமுனி இரத்தப்பலி – உயிர்ப்பலி எடுத்துவிடுவான் என்ற நம்பிக்கை அத்தொழிலாளர்களிடையே வழக்கில் உண்டு.

ஒவ்வொரு தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலும் றோதைமுனிக்கென வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தலங்கள் பெரியளவிலான கட்டடங்கள் ஏதுமின்றி சிறிய பீடமொன்றுடன் காணப்படுகின்றன. பீடத்தில் சூலம் அல்லது வேல் நடப்பட்டிருக்கும். சில இடங்களிலேயே பீடத்திற்கு மேலே கூரை அமைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலையில் தொழில்புரியும் அனைத்து ஆண்கள் (சாதாரண தொழிலாளி முதல் தோட்டத்தின் பெரிய துரை வரை) உட்பட அத்தொழிற்சாலையுடன் இணைந்த தோட்டங்களில் தொழில்புரியும் ஆண்களும் வழிபாட்டில் கலந்துகொள்வர். பெரும்பாலும் ஆடு (சில இடங்களில் ஆட்டுடன் சேவலும்) பலியிடப்படுகின்றது. சாராயம், சுருட்டு, வெற்றிலை, பாக்கு, பழம், தேசிக்காய் என்பன பிராதான படையல் பொருட்களாக விளங்குகின்றன. படையலிடப்பட்டவை யாவும் அவ்விடத்திலேயே சமைத்து உண்ணப்படும். அவ்வுணவைப் பெண்களுக்கு வழங்குவதோ வீடுகளுக்கு எடுத்துச் செல்வதோ இல்லை.
றோதைமுனி வழிபாட்டின் தோற்றம் பற்றி மலையகத் தமிழரிடையே வாய்மொழி வழக்காக ஒரு கதை கூறப்படுவதுண்டு. தேயிலைத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்ட பொழுது, கொழுந்தினை (தேயிலையை) அரைப்பதற்காகச் சில்லுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. சில்லினையே மலையகத் தமிழ் வழக்கில் றோதை என்கின்றனர். அதனை ஒரு பிசாசு அல்லது ஒரு பெரும் சக்தி இயக்குவதாக நம்பினர். அதனால் றோதையை இயக்குகின்ற சக்தியை றோதைமுனி என வழிபடத் தொடங்கினர் என்ற வாய்மொழி வழக்கு பெரும்பாலான தோட்டங்களில் வழக்கில் உண்டு. றோதைமுனி என்ற பெயருக்கான காரணத்தை அடியொட்டியதாக அமைந்துள்ள இவ்வழக்கானது, இயந்திரத்தின் அமைப்பையும் அதன் இயக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதைக் காணலாம். இவ்வாறு இயந்திரத்திலிருந்து பாதுகாப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற இவ்வழிபாடானது பின்னர் அந்நிலையிலிருந்து மேலும் விரிவடைந்து முழுத் தேயிலைத் தொழிற்சாலையின் காவல் தெய்வ வழிபாடாக நிலைபெற்றுவிட்டது. சில தோட்டங்களில் முழுத் தோட்டத்துக்குமான காவல் தெய்வமாக றோதைமுனி வழிபடப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழில்முறையோடு இணைந்த வகையில் வழிபடப்படுகின்ற தெய்வங்கள் பெரும்பாலும் ‘முனி’ என்ற பின் ஒட்டைப் பெற்ற தெய்வங்களாக விளங்குவதைக் காணலாம். இத்தொழிற்துறைசார் வழிபாடுகள் தவிர காவல் தெய்வங்களாகவும் ‘முனி’ என்ற ஒட்டினைப் பெற்ற தெய்வங்கள் மலையகத் தமிழர்களால் வழிபடப்படுவதோடு தென்னிந்தியாவிலும் ‘முனி’ என்ற ஒட்டினைப் பெற்ற தெய்வ வழிபாடுகள் நிலவுகின்றன. “முனிவு என்றால் சினம், அச்சுறுத்துவது என்று பொருள். நாம் அஞ்சிய வரலாறுதான் இந்த முனிகளின் வரலாறு என்பர்” (சண்முகசுந்தரம், 2009: 611). இதற்கிணங்க, றோதைமுனி வழிபாடு தொழிலாளர் மத்தியில் எழுந்த அச்சத்தினால் தோன்றிய வழிபாடெனலாம். சில்லுடன் கூடிய இயந்திரத்தின் இயக்கம் அச்சமூகத்தவர்களுக்குத் தொடக்க காலத்தே புதிராக விளங்கியுள்ளது. தொழில்நுட்ப தேர்ச்சியற்ற பலர் இயந்திரச் செயற்பாடுகளின் போது காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனவேதான் தமது பூர்வீகப் பண்பாட்டின் இணைப்பினால் அச்சில்லினைத் தெய்வமாக்கியுள்ளனர். அதன் அறுபடாத் தொடர்ச்சியாக அவ்வழிபாடு நிலைபெற்று இற்றைவரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. தேயிலை உற்பத்தியோடு இணைந்த ஏனைய தொழில்துறை வழிபாடுகளில் ‘முனி’ என்ற ஒட்டினைப் பெற்றவையும் அச்சத்தினடிப்படையில் தோன்றிய கடவுளர்களாகவே விளங்குகின்றன.
மேற்கூறிய வழிபாடுகள் தவிர மோட்டுமுனி (மேட்டுமுனி) என்ற வழிபாடும் தொழில்துறையோடு இணைந்த வகையில் முற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செங்குத்தாக அமைந்துள்ள மலையுச்சிகளில் ஏறி தொழில்புரியும் போது சரிந்துவிழல், காற்றினால் வீசி எறியப்படல் போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதுண்டு. அத்தகைய அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே தேயிலைமலை உச்சியில் மோட்டுமுனி வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தொழில்துறைசார் தெய்வ வழிபாடுகள் தொழில் பகுப்பு, ஆண் – பெண் இயல்புகள், அவர்களின் வாழ்வியல் முறை ஆகியவற்றுக்கு ஏற்ப வேறுபட்டு அமைந்துள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. உதாரணமாக, தேயிலை உற்பத்தியில் கொழுந்து பறித்தல், மட்டம் வெட்டுதல் ஆகியன அதிகமாகப் பெண்களால் மேற்கொள்ளப்படும் தொழில்களாகும். அதேபோல் தவறணைத் தொழில், கவ்வாத்து வெட்டுதல், கொழுந்தினைத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுதல், கொழுந்தினைத் தூளாக்குதல் ஆகியன பரவலாக ஆண்களாலே செய்யப்படுகின்றன. அதனால் பெண்கள் செய்யும் தொழிலோடு தொடர்புபட்ட கொழுந்துசாமி, மட்டத்துசாமி ஆகிய வழிபாடுகள் பெண்களின் தலைமையிலும் ஏனைய வழிபாடுகள் ஆண்களின் தலைமையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், பெண்களால் முன்னெடுக்கப்படும் வழிபாடுகள் ஆண்கள் தமது தொழிலின் நிமித்தம் நிகழ்த்தும் வழிபாடுகளிலிருந்து பல்வேறு வகைகளில் வேறுபட்டுள்ளன. கொழுந்துசாமி, மட்டத்துசாமி வழிபாடுகளில் பலியிடலோ மது, சுருட்டு முதலியன படைக்கப்படுவதோ இல்லை. பொங்கல், கடலை, பச்சரிசி அல்லது துள்ளுமா, பால், பழங்கள், வெற்றிலை, பாக்கு முதலியனவே படைக்கப்படுகின்றன. அத்தோடு அவற்றினை ஆண், பெண் இருபாலாரும் உண்பதோடு வீடுகளுக்கும் எடுத்துச் செல்வர். ஆண்களின் வழிபாட்டில் பலியிடல், மது, சுருட்டு போன்றன படைக்கப்படுகின்றன. அங்கு படைக்கப்படும் உணவை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதோ பெண்களுக்கு வழங்குவதோ இல்லை. பலியிடல் இடம்பெறுவதால், அவ்வழமை பின்பற்றப்பட்டு வருகிறது எனலாம்.
மலையகத் தமிழரின் சமூக, பண்பாட்டு வாழ்வில் ‘முனி’ என்ற தெய்வம் பல்வேறு வகைகளிலும் சமய, சமூக முக்கியத்துவம் பெற்ற தெய்வமாக விளங்கியுள்ளது. குலதெய்வம், காவல் தெய்வம், தொழில்துறைசார் தெய்வம் எனத் தனித்தும் குழுவாகவும் வழிபடப்படும் கடவுளாக இந்த முனி என்ற ஒட்டினைப் பெற்ற கடவுளர்கள் விளங்கியுள்ளனர். அதனால் சமூகத்தின் எல்லாத் தளத்திலும் செல்வாக்குப்பெற்ற கடவுளாக, ‘முனி’ என்ற ஒட்டினைப் பெற்ற கடவுளர்கள் விளங்கியுள்ளனர். இந்நிலையாலேயே பெருந்தோட்டத் தமிழரிடையே கிறிஸ்தவ சமயப் பிரசாரத்தை மேற்கொண்டபோது முனியாண்டி வழிபாடு குறித்த எதிர்மாறான விம்பத்தைக் கட்டியெழுப்பி, மக்களிடமிருந்து அவ்வழிபாட்டை அந்நியப்படுத்த முயற்சித்துள்ளனர். உதாரணமாக, 1869ஆம் ஆண்டு, கோப்பித்தோட்டத்தில் கண்டக்டராக இருந்த ஆ. ஜோசப், காலனிய நலனையும் கிறிஸ்தவ மதப்பிரசாரத்தையும் இலக்காகக்கொண்டு எழுதிய கோப்பிக்கிருஷிக் கும்மியில் ‘முணியாண்டி வணக்கம்’ என்ற தலைப்பில் தோட்டங்களில் நிலவிய இந்துசமய வழிபாட்டு மரபுகளைக் கண்டனம் செய்துள்ளார். அதில் அடங்கியுள்ள பாடல்களில் முனியாண்டியை ஏழைக்கூலியாகவும், எவ்வித சக்தியற்றவனுமாகக் கட்டமைத்து, முனியாண்டியைத் தேவனாகக் காண்பது பைத்தியக்காரத்தனம் என்கிறார். எடுத்துக்காட்டாக:
முனியாண்டி தேவனென்றீரி து
முற்றும் பயித்தியந் தானவீ ர்
முனியாண்டியுச்சி மலைதனி ல்
மூடத்தனமாய்ச் செத்தானறிவீ ர்
ஏழைக் கூலிக் காறனவன்பிளை க்
கேகினான் உன் னாஸ்கிரியினுக் கு
ஏழைக்குமரங்கள் மேலே விழுந்தி ட
ஏங்கியலறிச் செத்தானறிவீ ர்
ஏழைக்கூலி முனியாண்டிறந்த து
எத்தனை பரிதாபம து
தாழ்சுர முதல்யாவுமனுப்பிட ச்
சக்தியுண்டோ சொல்லும்மானிட ரே (சரவணன், பிரமிளா: 2024)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சமய வழிபாட்டுச் சுதந்திரத்தை வழங்கிய காலனிய அரசு, அம்மக்களிடம் காணப்பட்ட முனியாண்டி வழிபாட்டை கைவிடச்செய்ய, தோட்டக்கூலிகளைப் போலவே அவர்களின் கடவுளான முனியாண்டியையும் ஏழைக்கூலியாகக் கட்டமைத்து, பிழைப்புக்காக மலையுச்சியில் வேலை செய்தபோது மரம் விழுந்து பரிதாபமாக இறந்தவன் என அக்காலத்தில் இடம்பெற்ற சாதாரண மரணங்களுக்கு இணையாகக் காட்டி, முனியாண்டி சக்தியற்றவன் என்ற கருத்தியலை உருவாக்க முனைந்துள்ளது எனலாம். இருப்பினும், இக்கருத்தியல் தோட்ட மக்களிடையே செல்வாக்குப் பெற்றதாகத் தெரியவில்லை. இன்றுவரை எல்லாத் தோட்டங்களிலும் எஞ்சியுள்ள முனியாண்டிகளே இதற்குச் சிறந்த சான்றாகும். இந்தப் பின்னணியில் நோக்கும்போது மலையகத் தமிழரின் ஆவேசத்தினதும் ஆதிக்க எதிர்ப்பினதும் குறிகாட்டியாகவும் முனியாண்டியைக் கொள்ளலாம்.
முடிவுரை
தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த தமிழர்கள், தம் பூர்வீக வழிபாட்டு மரபுகளைப் புதிதாகத் தோன்றிய பெருந்தோட்டத் தொழில்முறைகளோடு இணைவுபடுத்தியதால் தேயிலை உற்பத்தியோடு இணைந்த வகையில் புதிய கடவுளர்களும் அவர்களுக்கான வழிபாட்டு முறைகளும் தோற்றம்பெற்றுள்ளன. தேயிலைச் செய்கையில் நாற்று நடுதல், கொழுந்து பறித்தல், கவ்வாத்து வெட்டுதல், மட்டம் வெட்டுதல், கொழுந்தினைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லுதல், கொழுந்தினைத் தேயிலைத் தூளாக்குதல் எனும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வொவ்வொரு செயற்பாட்டுக்கும் ஒவ்வொரு கடவுளரை வணங்கி வருவதோடு அக்கடவுளர்களுக்கான பிரத்தியேக வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தோட்டங்களில் தொழில்துறைசார் வழிபாடுகள் பல கைவிடப்பட்டு வருவதைக் காண முடிந்தது. பெருந்தோட்டங்களில் தொழில்செய்வோரின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருதல், தேயிலைக் கன்றுகளை நாற்றுமேடை செய்யும் தவறணைத் தொழில்கள் கைவிடப்பட்டு வருதல், தேயிலை மலைகள் பராமரிப்பற்று காடாதல், தோட்டங்களில் ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவில்களை அமைத்து அந்தணர்களைக் கொணர்ந்து பூசை வழிபாடுகளை மேற்கொள்ளல், தோட்டங்களைவிட்டு நகரங்களையும் கிராமங்களையும் நோக்கிக் குடியேறுகின்றமை அதிகரித்தல் போன்ற பல காரணங்களால் தொழில்துறைசார் வழிபாடுகள் மெல்ல மெல்ல வழக்கிழந்து வருகின்றன. உதாரணமாக, ரங்கலை நிவ்டிவிசன் தோட்டத்தில் முன்னர் இருந்த தவறணை தற்காலத்தில் கைவிடப்பட்டுள்ளது. அதனால் தவறணை முனி வழிபாடு இடம்பெறுவதில்லை. அதனைப் போலவே ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் கவ்வாத்து வெட்டுதல் பரவலாக இடம்பெறாததோடு அவ்வழிபாட்டை இணைந்து மேற்கொள்வதற்கான பெரிய குழுவொன்றும் அற்றுப்போய் உள்ளது. அதனால் கவ்வாத்துசாமி வழிபாடு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு அந்தத் தோட்டத்தில் முத்துமாரி அம்மன் கோவில் ஆகமவிதிக்குட்பட்ட கட்டுமானம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதோடு அந்தணரைக் கொண்டுவந்து பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தோட்டத்தில் பலியிடல் முதலியன மேற்கொள்ளக் கூடாது என்ற கருத்து அந்தணரால் அறிவுறுத்தப்பட்டு வருவதால் பலரும் பலியிடல்களைக் கைவிட்டுள்ளனர். தேயிலைத் தொழில்துறையோடு இணைந்த சில வழிபாடுகள் மேற்கூறியவாறு கைவிடப்படும் நிலை தொடர்ந்தாலும் றோதைமுனி வழிபாடு மாத்திரம் தவறாது இடம்பெற்று வருகிறது. தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாலும் பல தோட்டங்களுக்கு ஒரு தேயிலைத் தொழிற்சாலையே காணப்படுவதால் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் அவ்வழிபாடு நடைமுறையிலுள்ளது எனலாம்.
பெருந்தோட்ட உற்பத்தி முறையின் உருவாக்கத்துடன் மேற்கிளம்பிய மேற்படி தொழில்துறைசார் கடவுளர்கள் பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சி, தொழிலாளர் படையின் சரிவு, மலையகச் சமூக அசைவின் போக்கு முதலான காரணிகளால் தம் இறுதிக் காலத்தினை எட்டி வருகிறார்கள். இன்னும் சில தசாப்தங்களில் அக்கடவுளர்களை வழிபடுவதற்கான தேவை முற்றிலும் அகலக்கூடும். அது தொழில்துறைசார் வழிபாடுகளின் பொது இயல்பாகும்.
உசாத்துணை நூற்பட்டியல்
குமாரி ஜயவர்தன, (2009) இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம், கொழும்பு: குமரன் புத்தக இல்லம்
சரவணன், என். மற்றும் பிரதீபன், பிரமிளா (ப.ஆ.) (2024) கோப்பிக் கிருஷிக் கும்மி, கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
சிவத்தம்பி, கா., (ப.ஆ) (1993) இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும், ஹற்றன்: உதயம் நிறுவன வெளியீடு.
சிவத்தம்பி, கா., (க.ஆ) (1985) “இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைவின் சில அம்சங்கள்”, இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், கொழும்பு: சமூக விஞ்ஞானிகள் சங்கம்.
Velupillai, C.V, (1970) Born to Labour, Colombo: M.D. Gunasena



