ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க
அறிமுகம்
ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க (Rohan Edirisinghe) அவர்கள் ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பை 1972, 1978 ஆகிய இருதடவைகளில் திருத்தம் செய்தபோது, தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கைகளின் (Liberal Democratic Principles) அடிப்படையிலான அரசியல் யாப்புவாதத் தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. இதன் பின்விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கின என்பதை ஆராய்வதாக றொகான் எதிரிசிங்க அவர்களின் இக்கட்டுரை அமைந்துள்ளது. இந்த அறிமுகக் குறிப்புடன் அவரின் கட்டுரைக்குள் செல்வோம்.
1948 இல் இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. அதன் பின்னரான இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றில் அரசியல் யாப்புவாதம் சார்ந்த நெருக்கடி (A Crisis of Constitutionalism) மேற்கிளம்பியது. 1972 ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதனை வரைந்து நடைமுறைப்படுத்தியவர்கள் அரசியல் யாப்புவாதத்தின் அடிப்படைத் தத்துவங்களை முற்றாக உதாசீனம் செய்து புறந்தள்ளி, தாராண்மைவாத ஜனநாயக தத்துவ மரபுகளுக்கு மாறுபட்ட முறையில் செயற்பட்டனர். இதன் விளைவாக அன்று முதல் தொடர்ந்து இலங்கையில் தாராண்மைவாத ஜனநாயக தத்துவ மரபுகளின் அடித்தளத்தை அழிக்கும் வேலை தொடர்கிறது.
இலங்கை பல் இனங்களையும், பல மதப்பிரிவினர்களையும் கொண்ட நாடு. இங்கு எல்லாப் பிரிவினரையும் உள்ளீர்த்துக் கொண்டதும் (Inclusive), எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான அரசியல் யாப்பை உருவாக்கும் தேவை உள்ளது. அரசியல் யாப்புவாதத்தின் அடிப்படைத் தத்துவங்களை அடியழிப்புச் செய்தமையின் தீய விளைவாக இத்தேவையை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் யாப்புவாதம் என்றால் என்ன, அதன் அடிப்படைத் தத்துவங்கள் எவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அ) அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோர் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதாக அரசியல் யாப்பு அமைதல் வேண்டும் என்பதை அரசியல் யாப்புவாதம் வலியுறுத்துகிறது.
ஆ) அரசியல் யாப்பு பெரும்பான்மையின் கொடுங்கோன்மைக்கு எதிரான கட்டுப்பாடுகளை (Counter–Majoritarian Check) விதிப்பதாக அமைகிறது.
இ) அது தனிநபர் சுதந்திரத்தையும் மதிப்பையும் (Freedom and Dignity) பாதுகாப்பது.
ஈ) மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களை வலுவாக்கம் (Empower) செய்கிறது.
உ) அதன்மூலம் அதிகாரத்தைச் செலுத்துவோர் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும், மக்களின் குறைகளுக்கு செவி சாய்ப்பவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஊ) சுதந்திரமான நிறுவனங்கள் (Independent Institutions) நிறுவப்படுவதை அரசியல் யாப்பு உறுதி செய்கிறது. அந்நிறுவனங்கள் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டுக்கும் தலையீட்டுக்கும் உட்படாதவையாக சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் யாப்பு வழிசெய்கிறது. அரசியல் பக்கச்சார்பற்ற முறையில் பொதுமக்கள் நலனை (Public Interest) கருத்தில் கொண்டு சுதந்திரமான முடிவுகளை இந்நிறுவனங்கள் எடுப்பதற்கும் அரசியல் யாப்பு வழிசெய்கிறது.
எ) மேலே குறிப்பிட்டவற்றுக்கு மேலாக, அண்மைக்காலத்தில் ஜனநாயக நாடுகளின் அரசியல் யாப்புகளில் அடிப்படை விழுமியங்களும் தத்துவங்களும் (Basic Values and Principles) சேர்க்கப்படுவதும், இந்த விழுமியங்களுக்கும் தத்துவங்களுக்கும் அமைவாக நாடு ஆளுகை செய்யப்பட வேண்டும் என அரசியல் யாப்புகளில் விதிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
மேலே குறிப்பிட்ட அரசியல் யாப்புத் தத்துவங்கள் இலங்கையின் அரசியல் தலைவர்களாலும், சட்டவாளர் சமூகத்தாலும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களைத் தவிர இவர்களால் இத்தத்துவங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக அரசியல் யாப்புகளை வரையும் போதும், அவற்றை நடைமுறைப்படுத்தும் போதும், அரசியல் யாப்பின் பிரிவுகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் விளக்கமளிக்கும் போதும் இவர்கள் செயற்படும் விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. இப்பின்னணியிலேயே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இலங்கை அரசியல் யாப்பின் ஒரு முக்கிய கூறாக எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்ற பிரச்சினையை நாம் விவாதிக்க முடியும்.
இலங்கை குடியரசு ஆகிய காலகட்டம்
1972 இன் முதலாவது குடியரசு அரசியல் யாப்பும், 1978 இன் இரண்டாவது குடியரசு யாப்பும், அரசியல் யாப்புவாத நோக்கில் பார்க்கும்போது அடிப்படையிலேயே குறைபாடு உடையவை. அவையிரண்டும் முழு அதிகாரத்தையும் ஒரு நிறுவனத்தில் (A Single Institution) குவிக்கும் வகையில் அமைந்தன. நிர்வாகத்துறையின் கருவிகளாகச் செயற்படக் கூடிய அமைப்புகளும், முறைமைகளும் (Structures and Systems) அவ்விரு யாப்புகளாலும் உருவாக்கப்பட்டன. அவை பெரும்பான்மை வாதத்தை (Majoritarianism) இலங்கையின் அரசியல் முறைமையில் ஆழ வேரூன்றச் செய்தன. சோல்பரி அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட சுதந்திரமாக இயங்கக்கூடிய நிறுவனங்களை இந்த அரசியல் யாப்புகள் அடியழித்தன. அடிப்படையான ஜனநாயக விழுமியங்களையும், தத்துவங்களையும் பாதுகாப்பதில் இவை தவறின. இவை அரசியல் கட்சி சார்புடைய (Partisan) அரசியல் யாப்புகளாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் மிக்க அரசாங்கங்களால் இயற்றப்பட்டவை. அரசியலிலும் இனக்குழும அடிப்படையிலும் வேறுபட்ட நிலைப்பாடுடைய பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அத்தரப்பினரின் சம்மதத்தைப் (Consent) பெறுவதற்கு இந்த அரசாங்கங்கள் சிறிதளவும் அக்கறை செலுத்தவில்லை. 1972 அரசியல் யாப்பை வரைந்தவர்கள் சோல்பரி அரசியல் யாப்பைக் கண்டனம் செய்தனர். அதேபோல் 1978 அரசியல் யாப்பை வரைந்தவர்கள் 1972 அரசியல் யாப்பைக் கண்டனம் செய்தனர். ஆனால், இவ்விரு தரப்பினரும் வரைந்து நடைமுறைப்படுத்திய அரசியல் யாப்புகள் இரண்டும் ஒரே ஒரு நிறுவனத்தில் முழு அதிகாரத்தையும் குவித்தல் (Concentration of Power in a Single Institution) என்ற அடிப்படையான தவறைச் செய்தன. இது வேடிக்கையான ஒரு நகைமுரண் ஆகும்.
முதலாவது குடியரசு அரசியல் யாப்பை 1972 இல் நடைமுறைப்படுத்துவதில் பிரதான பங்கு வகித்தவர் அரசியல் யாப்பு அமைச்சரான (Minister of Constitutional Affairs) கொல்வின் ஆர்.டி. சில்வா ஆவார். இவர் ட்ரொட்ஸ்கியிஸ்ட் இடதுசாரி அரசியல்வாதியாகவும் விளங்கினார். இலங்கைக்கு இலங்கையரால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு (Home Grown Constitution) தேவையென்று இவர் வலியுறுத்தினார். ஆனால், இவர் பிரித்தானியாவின் பாராளுமன்ற இறைமை என்ற கோட்பாட்டை (British Doctrine of Parliamentary Sovereignty) அரசியல் யாப்பில் புகுத்தினார். தேசிய அரசுப் பேரவையை (National State Assembly) அதி உயர்ந்த அதிகாரமிக்க சபையாக (The Supreme Instrument of State Power) ஆக்கினார். அந்த தேசிய அரசுப் பேரவையிடம் சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகிய அனைத்து அதிகாரங்களையும் குவித்து, அதனைச் சர்வ அதிகாரங்களும் உடைய சபையாக மாற்றினார். உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பின் மேலாண்மை (Supremacy of the Constitution) என்னும் அரசியல் யாப்புவாதத்தின் அடிப்படைக் கருத்தை வெளிப்படையாகவே தகர்த்தார். தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்களை மீளாய்வு செய்யும் (Judicial Review of Legislation) நீதிமன்ற அதிகாரங்களை அரசியல் யாப்பில் இருந்து நீக்கினார். இதன் மூலம் அவர் பின்வருவனவற்றைச் சாதித்தார்.
அ) அதிகார வேறாக்கம் என்னும் தத்துவத்தை (The Principle of Separation of Powers) நீக்கினார்.
ஆ) நீதித்துறையின் சுதந்திரம் (Independence of the Judiciary) என்ற தத்துவத்தை அடியழிப்புச் (Undermined) செய்தார்.
இ) சுதந்திரமான பொதுச்சேவை (Independent Public Service) ஒன்று இருத்தல் வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் சட்டப்பிரிவுகளை இரத்துச் செய்தார்.
மேற்கூறியவற்றைச் செய்து முடித்த கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள் 1972 அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் (A Bill of Rights) பற்றிய பிரிவொன்றைப் புகுத்தினார். ஆனால், அவ்வுரிமைகளை முழுமையாக நிர்வாகத்துறை புறந்தள்ளக்கூடிய வகையில் அவ்வரசியல் யாப்பிலேயே ‘Limitation Clause’ ஒன்றைப் புகுத்தி, அவற்றை நடைமுறைப் பயன் அற்றதாகவும் ஆக்கினார் (இவ்விடயம் பற்றி விரிவாக ஆராயும் ‘Fundamental Rights and the 1972 Constitution’ (1972 அரசியல் யாப்பும் அடிப்படை உரிமைகளும்) என்ற தலைப்பிலான கட்டுரையை J. விக்கிரமரட்ண (J. Wickremaratne) அவர்கள் எழுதியுள்ளார் (பார்க்க A. Welikala (ed.) (2012)).
அடிப்படை உரிமைகள் பற்றிய எவ்வித அக்கறையும் அரசியல் யாப்பை வரைந்தவர்களிடையே இருக்கவில்லை என்றே கூறலாம். 1972 இற்கு முன்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் புதிய அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானவையாக இருந்தாலும், அச்சட்டங்கள் வலிதுடையன என்னும் ஏற்பாடு அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டது.
இலங்கை குடியரசு ஒற்றையாட்சி அரசாகவும் (Unitary State), பெரும்பான்மையினரின் மொழியான சிங்களத்தையும், சமயத்தையும் பற்றிய ஏற்பாடுகள் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் திருத்தப்பட முடியாதவையாகவும் ஆக்கப்பட்டன. இவை 1972 அரசியல் யாப்பில் புகுத்தப்பட்ட அரசியல் யாப்புவாதத்திற்கு மாறுபட்ட ஏற்பாடுகளாகும். அரசியல் யாப்புவாதத்தின் அடிப்படை விதிகள் (Basic Principles of Constitutionalism) முதலாவது குடியரசு அரசியல் யாப்பின் செயற்பாட்டுக் காலத்தில் மீறப்பட்டன. இந்த அரசியல் யாப்பு ஆட்சியாளர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டதே அன்றி, ஆளப்பட்டோரின் நன்மை நோக்கியதாக இருக்கவில்லை. இம்முதலாவது குடியரசு அரசியல் யாப்பு ஆறு ஆண்டுகள் மட்டுமே செயற்பாட்டில் இருந்தது என்பது இலங்கைக்குக் கிடைத்த நற்பேறாகும்.
1978 இன் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு தொடக்கி வைத்த தவறான வழித்தடத்தையே பின்பற்றியது. முதலாவது குடியரசு சர்வ அதிகாரங்களும் உடையதான தேசிய அரசுப் பேரவையை உருவாக்கியது. அந்த ஒரு நிறுவனத்திடம் முழுமையான அதிகாரங்களும் குவிக்கப்பட்டன. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு நிறைவேற்று ஜனாதிபதியிடம் (Executive President) அதிகாரங்களைக் குவித்தது. இவ்வாறு அதிகாரங்களின் குவிமையம் இரண்டு யாப்புகளிலும் வெவ்வேறாக அமைந்தன. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு முதலாவது குடியரசு யாப்புடன் ஒப்பிடும் போது பின்வரும் விடயங்களில் முன்னேற்றம் உடையதாக இருந்தது.
- தேர்தல் முறைமை (Electoral System)
- நீதித்துறையின் சுதந்திரமும் அதன் அதிகாரங்களும்
- பொதுச்சேவை (Public Service)
- அடிப்படை உரிமைகள்
இவற்றை விட வேறு சில வேறுபாடுகளும் இருந்தன. தேசிய அரசுப் பேரவையை மேலான அதிகாரம் உடைய சபையாகவும், இறைமையின் (Sovereignty) உறைவிடமாகவும் முதலாவது குடியரசு யாப்பு ஆக்கியது. இதனை மாற்றி, இறைமையை மக்களுக்கு உரித்தாக்குவதாக 1978 அரசியல் யாப்பு அமைந்தது. இந்த அரசியல் யாப்பு அதிகார வேறாக்கம் (Separation of Powers) என்னும் தத்துவத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதாகவும் அமைந்தது. அரசியல் யாப்புக்குப் பொதுசன வாக்கெடுப்பு (Referendum) மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற ஏற்பாடு 1978 அரசியல் யாப்பில் செய்யப்பட்டிருந்தது. இவ்வேற்பாடு சட்டவாக்க சபையின் (Legislature) அதிகாரங்களின் மீது மட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், பாராளுமன்றத்திற்குப் பதிலாக மக்களின் இறைமையை (Sovereignty of the People) உறுதிப்படுத்துவதாயும் அமைந்தது.
இரண்டாவது குடியரசு யாப்பும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும்
இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு இரண்டு முக்கிய மாற்றங்களைப் புகுத்தியது. முதலாவதாக வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலான பாராளுமன்ற நிர்வாக முறைக்குப் பதிலாக பகுதியளவிலான ஜனாதிபதி நிர்வாக முறையை (Semi–Presidential Executive) இந்த யாப்பு நடைமுறைப்படுத்தியது. இரண்டாவதாக விகிதாசாரத் தேர்தல் தொகுதி முறையைப் (Proportional Representation) புகுத்தியது. முன்னைய தேர்தல் முறை நீக்கப்பட்டது. இவ்விரு மாற்றங்களும் ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் சாதகமானவையாக இருந்தன.
‘கலப்பு முறை’ (Mixed System) என அழைக்கப்படும் ஜனாதிபதி முறையில் இரு மாதிரிகள் (Models) உள்ளன. ஜனாதிபதி – பிரதமர் என்ற இரு பதவிகளுக்கிடையிலான அதிகாரச் சமநிலையில் (Balance of Power) இம்மாதிரிகளில் வேறுபாடு காணப்படுகிறது.
1. ஜனாதிபதி – பிரதமர் நிர்வாக மாதிரி (President–Prime Ministerial Executive): இம்மாதிரியில் ஜனாதிபதி பிரதமரைவிட அதிக அதிகாரங்களை உடையவராக இருப்பார்.
2. பிரதமர் – ஜனாதிபதி நிர்வாக முறை (Premier–Presidential Executive): இம்முறையில் பிரதமர் ஜனாதிபதியை விட அதிக அதிகாரங்களை உடையவராக இருப்பார்.
1978 அரசியல் யாப்பு முதலாவது வகையைச் சேர்ந்ததாகும். பிரதமரை விட அதிக அதிகாரங்கள் ஜனாதிபதிக்குக் குவிக்கப்பட்டன. பிரதமர் – ஜனாதிபதி முறையில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரங்களில் ஒரு சமநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், ஜே. ஆர். ஜயவர்த்தன அறிமுகம் செய்த ஜனாதிபதி – பிரதமர் முறை ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியின் நிலைக்கு உயர்த்துவதன் மூலம் இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை முழுமையாக (The Total Constitutional Structure) மாற்றுவதற்குப் பயன்பட்டது.
- 1978 இன் அரசியல் யாப்பு பெயரளவிலான அரசுத்தலைவருக்கு (Nominal Head of State) வழங்கக் கூடிய சட்டப் பாதுகாப்புகளை (Legal Immunities) வழங்கியது. அது மட்டுமல்லாமல், அவற்றுக்கும் அப்பால் சென்று அளவுக்கு அதிகமான சட்டப் பாதுகாப்புகளை ஜனாதிபதிக்கு வழங்கியது.
- ஜனாதிபதி யார் யாருக்கு மந்திரிப் பதவியை வழங்க வேண்டும் என்பதை தானே தன்னிச்சையாக முடிவு செய்யும் அதிகாரம் உடையவராக இருந்தார்.
- ஜனாதிபதி மந்திரிசபை பதவிகளுக்கு தம் சுய விருப்பின்படி தன்னை நியமித்துக் கொள்ளலாம்.
- சட்ட ஆக்கச் சபையான (Legislature) பாராளுமன்றத்தை ஜனாதிபதி தம் விருப்பப்படி எந்த நேரமும் கலைத்துவிடும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.
- முக்கியமான அரசாங்கப் பதவிகளுக்கு நபர்களை தன்னிச்சைப்படி நியமனம் செய்வதற்குரிய அதிகாரம் உடையவராக ஜனாதிபதி விளங்கினார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை தம் விருப்பப்படி நியமிக்கும் அதிகாரத்தையும் அவர் கொண்டிருந்தார்.
- அவசரகால நிலையின்போது எந்த அரசாங்கப் பதவிக்கும் ஆட்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 1978 அரசியல் யாப்பு நடைமுறையில் இருந்து வந்த இந்த 30 ஆண்டுகாலம் முழுவதும் இலங்கையில் அவசரகால நிலை நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
- அவசரகால நிலையின் கீழ் ஜனாதிபதி அவசரகால விதிமுறைகளை (Emergency Regulations) பிரகடனம் செய்யலாம். இந்த அவசரகால விதிமுறைகள், சட்டசபையால் சட்டவாக்க அதிகாரத்தை (Legislative Power) பயன்படுத்தி இயற்றிய சட்டங்களை ஒதுக்கிப் பயனற்றதாக்கும் (Override) தன்மையுடையதாக அமையும்.
மேற்குறிப்பிட்டவாறு அளவுக்கு மீறிய அதிகாரங்களை உடைய ஜனாதிபதி முறை இலங்கை அரசியல் யாப்பில் ஆபத்தான பல கூறுகளைப் புகுத்தியுள்ளது. 1978 அரசியல் யாப்பு ‘கலப்பு முறைகளின்’ (Mixed Systems) ஆபத்தான கூறுகளை எடுத்துக்காட்டக் கூடிய உதாரணமாக விளங்குகிறது.
ஐக்கிய அமெரிக்காவின் தூய ஜனாதிபதி (Pure Presidential) முறையின் கீழ் ஜனாதிபதி சட்டசபையில் (Legislature) உறுப்பினராக இல்லாத வெளியாட்களை அமைச்சர்களாக நியமிக்கலாம். அதன் சட்ட ஆக்கத்துறைக்கும், நிர்வாகத்துறைக்கும் இடையே தெளிவான அதிகாரப் பகுப்பு (Separation of Powers) இருப்பதைக் காணலாம். இவ்வாறான தெளிவான அதிகாரப் பகுப்பு, இவ்விரு நிறுவனங்களையும் ஒன்றுக்கொன்று போட்டியாக (Adversarial) செயற்பட வைப்பதால், ஒன்று மற்றொன்றைக் கட்டுப்படுத்தலும் சமன் செய்தலும் (Checks and Balances) என்னும் பொறிமுறை செயற்படும் வாய்ப்பை வழங்குகிறது.
ஆனால் இலங்கையின் ஜனாதிபதி தம் விருப்பத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அமைச்சர்களைத் தெரிவு செய்ய முடியும். இதன் மூலம் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்து தனது விசுவாசிகளாக ஆக்க முடியும். எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குத் தாவச் செய்யவும் முடியும். இதன் மூலம் பாராளுமன்றம் நிர்வாகத்துறையின் மீது கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் செய்யும் அதிகாரத்தைப் பலவீனப்படுத்த முடியும். ஜனாதிபதி ராஜபக்ச இலங்கையில் இதனை கைதேர்ந்த முறையில் செயற்படுத்தியவர். அவர் சட்டசபையான பாராளுமன்றத்தின் உறுப்பினர்களில் பலரை அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், நிர்வாகத்துறையின் உறுப்பினர்களாகவும் செயற்படுவதை உறுதி செய்தார். இவ்வாறாக இலங்கையின் பாராளுமன்றம் செயல்திறன் குறைந்த ஒரு மன்றமாகத் தரம் குறைக்கப்பட்டது.
பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் (Representative Democracy) அடிப்படைகள் சிலவற்றை அடியழிக்கச் செய்வதற்கு ஜனாதிபதி முறை இலங்கையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஜனாதிபதி D.B. விஜயதுங்க செய்த செயலைக் குறிப்பிடலாம். அவர் வழமைக்கு மாறாக, இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக, ஜனாதிபதியான தன்னையே நிதியமைச்சராக நியமித்து, அந்தப் பொறுப்பையும் வகித்தார். இது பாராளுமன்ற முறையின் வரலாற்றில் அதுவரை இடம்பெறாத ஒரு நிகழ்வாகும். நிதி மற்றும் வரிவிதிப்பு (Finance and Taxation) ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்கும் பொறுப்பை உடைய மன்றமாக விளங்குவது பாராளுமன்றமாகும். பாராளுமன்றம் நிதியமைச்சரால் முன்வைக்கப்படும் வரவு–செலவுத்திட்டத்தை பரிசீலித்து, அதைப் பற்றி விவாதிக்கும் போது, உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் நேரடியாக இருந்து பதிலளிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஜனாதிபதி D.B. விஜயதுங்க நிதியமைச்சுப் பதவிக்குத் தன்னை நியமித்துக் கொண்டது, பாராளுமன்றம் நிதியின் மீது வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் மன்றம் என்ற நிலையைப் பலவீனப்படுத்த உதவியது. இலங்கையின் பகுதியளவிலான ஜனாதிபதி முறை (Semi–Presidential System) இதனைச் செய்யும் வாய்ப்பை வழங்கியது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா போன்ற ‘தூய’ ஜனாதிபதி முறையில் (‘Pure’ Presidential System), சட்டவாக்கத்துறை (Legislature) நிதியின் மீது வைத்திருக்கும் கட்டுப்பாட்டை (Control of Finance) இவ்வாறு இல்லாமல் செய்வது சாத்தியமற்றதாக இருந்திருக்கும்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் கீழ் சர்வாதிகாரப் பலம் கொண்ட நிர்வாகத்துறை (Overmighty Executive) உருவாக்கப்பட்டதைக் காணலாம். சர்வ அதிகாரமும் உடைய ஜனாதிபதியான அவர் அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்ட நடைமுறைகள் (Extra–Constitutional) பலவற்றைக் கையாண்டார். அவரின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. அவ்வாறிருந்த போதிலும், பாராளுமன்றத்தின் மீது தனது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்பிய அவர், தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களில் ஒப்பமிட்டுப் பெற்றுத் தம் கையில் வைத்திருந்தார். அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கமின்றி அத்திகதியிடப்படாத கடிதங்களில் ஒப்பமிட்டுக் கொடுத்தனர். இது அவர் கையாண்ட அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்ட (Extra–Constitutional) நடைமுறைக்குச் சிறந்த உதாரணமாகும். இவ்வாறாக அவர் வடிவமைத்த அரசியல் யாப்பும், அவர் காலத்து அரசியலும், அவர் கையாண்ட அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளும் அவருக்கு அளவற்ற அதிகாரங்களை வழங்கின. ‘தூய’ ஜனாதிபதி முறை நாடுகளின் ஜனாதிபதிகளை விட அவரது அதிகாரங்கள் ஒப்பீட்டளவில் அதிகமானவையாக இருந்தன.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இலங்கைக்கு அவசியமா?
இலங்கையின் ஜனாதிபதி முறையை ஆதரிப்போர் முன்வைக்கும் வாதங்களைப் பரிசீலனை செய்து மதிப்பிடுதல் அவசியம். ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் இலங்கையில் ஜனாதிபதி முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை 1966 ஆம் ஆண்டிலேயே முன்வைத்தார். அப்போது அவர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு சிறிதளவேனும் இருக்கவில்லை. 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவரது ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியைத் தழுவியது. அவர் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1970–72 காலத்தின் அரசியல் யாப்பு அவையில் (Constituent Assembly) ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் மீண்டும் ஜனாதிபதி முறை இலங்கைக்குத் தேவை என்ற கருத்தை, ஆர். பிரேமதாசவின் ஆதரவுடன் முன்மொழிந்தார்.
‘The Gaullist System in Asia: The Constitution of Sri Lanka 1978 (1980 London: Macmillan)’ என்ற நூலின் ஆசிரியரான ஏ.ஜே. வில்சன், ஜே.ஆர். ஜயவர்த்தன இலங்கையில் ஜனாதிபதி முறையைப் புகுத்தியதற்கான நியாயப்பாட்டை விளக்கும் இரண்டு வாதங்களை முன்வைத்தார்:
- நாட்டில் உறுதிநிலையைப் பேணுவதன் அவசியம் (The Need for Stability).
- சிறுபான்மையினரை வலுவூட்டுதல், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குதல் (The Empowerment of Minorities).
ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களை வியந்து பாராட்டும் ஒருவராகிய ஏ.ஜே. வில்சன் முன்வைத்த இந்த வாதங்கள் தவறானவை என்பதை 1978க்குப் பிந்திய அரசியல் நிகழ்வுகள் நிரூபித்தன. 1977க்கு முன்னர் இலங்கையில் உறுதிநிலை இருக்கவில்லை என்ற கருத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜே.ஆர். அவர்களின் அரசியல் யாப்பு அறிமுகமாகும் முன்னர் தேர்தல்கள் ஒழுங்காக நடைபெற்றன. ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த போது, வெற்றி பெற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விலகிக் கொண்டன. இவ்வாறான நடைமுறைகளை உறுதிநிலையின்மையின் அடையாளங்களாக எவ்வாறு கருத முடியும்? அமைதியான முறையில் தேர்தல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் சூழ்ச்சி நடவடிக்கைகள், எதிராளிகளின் குடியுரிமைகளைப் பறித்தல், அரசியல் யாப்புக்கு மாறாக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தாது பின்தள்ளுதல், திட்டமிட்ட தேர்தல் முறைகேடுகள், ஜனநாயக நிறுவனங்களை திட்டமிட்டு அடியழித்தல் போன்ற அநீதியான செயல்கள் அனைத்தும் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே இடம்பெற்றன.
1978 அரசியல் யாப்பு சிறுபான்மையினரை வலுவாக்கம் செய்தது என்ற வாதம் முதற் தோற்றத்தில் சரியானது போன்று தெரியலாம். தமிழ் அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி முறை தமக்கு நன்மை பயக்கும் எனத் தொடக்கத்தில் கருதியது உண்மைதான். ஜனாதிபதித் தேர்தல் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நடைபெறும் தேசிய மட்டத் தேர்தல் ஆகும். அத்தகைய தேர்தலில் பெரும்பான்மையின வாக்காளர்களின் ஒவ்வொரு வாக்கும் சமமான மதிப்பு உடையது என்பது உண்மையே. ஆனால், சிறுபான்மையினரின் வாக்கின் சமத்துவம் அந்தத் தேர்தல் முடிந்தவுடனேயே செயல்முறையில் இல்லாமல் போய்விடுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளின் பலத்தோடு தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி, பின்னர் ஒரு சர்வாதிகாரி போன்று நடந்து கொண்டதை கடந்தகால அரசியல் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. சிறுபான்மையினரின் கோரிக்கைகளைப் பொருட்படுத்த வேண்டிய தேவையே ஜனாதிபதிகளுக்கு இல்லாமல் போகிறது.
ஜனாதிபதி ஒருவரைக் கட்டுப்படுத்தக் கூடிய முக்கியமான வழிமுறை, அவரை பாராளுமன்றத்திற்குத் தொடர்ச்சியாக (Continuously) பொறுப்புக்கூற வேண்டியவராக ஆக்குவதுதான் என்பதை சிறுபான்மையினர் விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். பாராளுமன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மன்றமாகும். இதுவே பாராளுமன்ற நிர்வாக முறை (Parliamentary Executive System) ஏன் சிறந்தது, உயர்வானது என்பதற்கான பிரதான நியாயமாகும்.
பாராளுமன்ற நிர்வாக மாதிரியின் பின்வரும் இயல்புகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- அம்மாதிரி நாட்டின் பிரதான நிர்வாக அதிகாரம் உடைய பிரதமர் பாராளுமன்றத்தில் சமூகமாயிருத்தல் வேண்டும் (Physically Present) என்பதை உறுதிசெய்கிறது. பாராளுமன்றமே அரசியல் அதிகாரத்தின் பிரதான உறைவிடம் (Main Locus of Political Power) என்பது பாராளுமன்ற நிர்வாக முறையின் அடிப்படைத் தத்துவமாகும். இலங்கையின் ஜனாதிபதி முறை பாராளுமன்ற அதிகாரத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு (Presidential Secretariat) மாற்றுவதாக அமைந்துள்ளது.
- பாராளுமன்ற நிர்வாக மாதிரி நிர்வாக அதிகாரமுடைய அரசுத்தலைவரை பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராக ஆக்குகிறது. இலங்கையின் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறல் (Accountability) என்னும் கடப்பாட்டுக்கு உட்பட்டவரல்லர். பாராளுமன்றத்தில் சமூகமாயிருந்து, அதன் வழக்காறுகள் (Conventions), விதிகள், நடைமுறைகள் என்பவற்றுக்கு கட்டுப்பட்டவராகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து வரும் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியவராகவும் நிர்வாகி (Executive) இருக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் (Question Time) போது எதிர்க்கட்சியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியவராக இருப்பார்.
மேற்குறித்த இவ்விரு அம்சங்களும் இலங்கையின் ஜனாதிபதி முறையில் இல்லாததால், ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்படுவதைக் காண முடிகிறது.
‘Reforming Sri Lankan Presidentialism: Provenance, Problems and Prospects’ என்ற நூலின் Volume – 2 இல் 28 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ள ‘Constitutionalism and Sri Lanka’s Gaullist Presidential System’ என்ற தலைப்பிலான கட்டுரையின் கருத்துகளைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தொடரும்.



