ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க
உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள்
கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் பின்வருமாறு.

- உழைப்பு வாடகை (Labour Rent)
- விளைபொருள் வாடகை (Produce Rent)
- அரசுக்கு வழங்கும் சேவை (Service to the State). இது இலவசமாக வழங்கப்படுவது.
- வரிகள் (Taxes – Taxation)
- வட்டி (Usury)
- அடிமை முறை (Slavery)
1. உழைப்பு வாடகை (Labour Rent)
மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகளில் உழைப்பு வாடகை (Labour Rent) பிரதானமான மாதிரியாகும் என நியூட்டன் குணசிங்க குறிப்பிடுகிறார். இம்முறை செயற்படுவதற்கு அடிப்படையாக, குடியானவன் ஒருவன் பயிரிடும் மொத்தக் காணியில் ஒரு பகுதி நிலம் சுயாதீனமான நிலம் (Demesne) ஆக இருக்கும். இச்சுயாதீன நிலம் தவிர்ந்த மிகுதி நெற்காணிகள் முழுமையும் நிலப்பிரபுவின் உடைமையாகக் கருதப்படும். கண்டியில் சுயாதீன நிலம் ‘பங்கு’ (Pangu) என அழைக்கப்படுகிறது. நிலப்பிரபுவின் உடைமையான நிலம் ‘முத்தெட்டுவ’ நிலம் என அழைக்கப்படும். குடியானவன் தனது பங்கு நிலத்தில் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் அறுவடை முழுவதையும் தானே எடுத்துக்கொள்ளலாம். கண்டியின் விவசாயிகள் தமது ‘பங்கு’ நிலத்தில் தமது உடல் உழைப்பையும், குடும்ப உறுப்பினர்களது உடல் உழைப்பையும் பிரயோகித்து உற்பத்தியைச் செய்வர். தன்னுடைய உடைமையாகவிருக்கும் உற்பத்திக் கருவிகளையும் உபயோகித்து அவர்கள் உற்பத்தியைச் செய்வர். ‘பங்கு’ நிலம் தனிப்பட்ட உடைமையான நிலம் (Privately Owned Land) போன்றது. நிலப்பிரபுவின் உடைமையான ‘முத்தெட்டுவ’ நிலத்தை குடியானவன் பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் அறுவடை முழுவதையும் நில உடைமையாளரான நிலப்பிரபுவின் வீட்டிற்கு முழுமையாகச் சேர்ப்பிக்க வேண்டும். இதனைவிட அக்குடியானவன் நிலப்பிரபுவிற்கு சில சேவைக் கடமைகளையும் செய்தல் வேண்டும். இவ்வாறு விளைபொருளாகவும், சேவை (Service) ஆகவும் நிலப்பிரபுவுக்குச் சேரும் உழைப்பு ‘மேன்மிகை உழைப்பு’ (Surplus Labour) ஆகும். சுயாதீனமான ‘பங்கு’ நிலத்தில் பெறப்படும் விளைவு குடியானவனதும் அவனது குடும்பத்தினதும் சீவியத்துக்குத் தேவையான அவசிய உழைப்பு (Necessary Labour) ஆக அமைந்துள்ளதைக் காணலாம். நிலப்பிரபுவிற்கு கிடைக்கும் மேன்மிகை, ‘உழைப்பு’ (Labour) என்ற வடிவத்தில் கொடுக்கப்படுவதால், இது ‘உழைப்பு வாடகை’ (Labour Rent) எனக் குறிப்பிடப்படுகின்றது. அவ்வகையில் நிலமானிய முறையின் நில வாடகை (Rent) என்பதும் மேன்மிகைப் பெறுமதி (Surplus Value) என்பதும் ஒன்றே என்பது வெளிப்படையானது. கண்டி இராச்சிய காலத்தின் மேன்மிகை அறவிடப்படும் மாதிரியில் ‘உழைப்பு வாடகை’ பிரதான மாதிரியாக இருந்தது.
2. விளைபொருள் வாடகை (Produce Rent)
இந்த வாடகை முறை கண்டியில் பரவலாக இருந்து வந்தது. இதனை ‘அன்டே’ (Ande) பயிர்ச்செய்கை முறை எனச் சிங்கள மொழியில் அழைப்பர். ஆங்கிலத்தில் ‘அன்டே’ முறையை ‘Share-Cropping’ எனக் கூறுவர். தமிழர் வாழ் பகுதிகளில் பரந்த அளவில் வழக்கில் இல்லாத இம்முறையை இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக ‘அன்டே’ (Share-Cropping) என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பை ‘பங்காளி முறைப் பயிரிடுகை’ எனக் குறிப்பிடலாம். ‘பங்காளிப் பயிரிடுகை’ முறையில் நிலப்பிரபுவின் காணி, குடியானவனின் சொந்தக் காணி (பங்கு) என்ற பகுப்பு இருக்காது. விதை நெல்லை நிலப்பிரபு குடியானவனுக்கு கொடுப்பார். விதை நெல்லை வட்டியுடன் சேர்த்து நிலப்பிரபுவுக்கு அறுவடையின் போது கொடுக்க வேண்டும். ஏனைய உற்பத்தி வேலைகள் அனைத்தையும் விவசாயக் குடியானவன் தன் உழைப்பு, குடும்ப உழைப்பு என்பனவற்றைச் செலவிட்டு பயிரிடுவான். தன்னிடம் உடைமையாக உள்ள உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி பயிரிடுகையை குடியானவன் செய்வான். இறுதியில் அறுவடையின் போது உற்பத்தி விளைவின் மூன்றில் ஒரு பங்குக்கும் அரைப்பங்கிற்கும் இடைப்பட்ட அளவினை நிலப்பிரபுவிற்கு கொடுக்க வேண்டும். மீதியினை குடியானவன் தனதாக எடுத்துக் கொள்ளலாம். விளைபொருள் வாடகை என்ற முறையில் முழுக் காணியையும் குடியானவன் ‘Share-Cropper’ என்ற முறையில் பயிரிடுவான். பயிரிடுதல் செலவுகளை நிலப்பிரபுவும், குடியானவனும் தமக்கிடையே பங்காளிகளாகப் பகிர்ந்து (Share) கொள்வர்.
‘அன்டே’ முறையில் பல வகைகள் (Variations) உள்ளன. உதாரணமாக ‘ஒற்று அன்டே’ (Otu Ande) முறையில் விதைநெல் உட்பட அனைத்துச் செலவுகளையும் குடியானவனே பொறுப்பேற்றுக் கொள்வான். நிலப்பிரபு உற்பத்தியில் பங்கேற்பதில்லை. அவரின் நிலத்திற்குரிய வாடகை விளைபொருள் வாடகை (Produce Rent) என்ற முறையில் அவருக்குச் சேரும். ‘அன்டே’ முறையில் மூன்றில் ஒரு பங்கு முதல் அரைப் பங்கு வரை உள்ள அளவை நிலப்பிரபு பெற்றுக்கொள்வார்.
3. அரசுக்கு வழங்கும் சேவை (Service to the State)
கண்டி இராச்சியத்தில் அவசரகால நிலை (Emergency) ஏற்பட்டபோது குடியானவர்கள் அரசனிற்கு சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். கண்டி அரசன் அந்நிய ஏகாதிபத்திய அரசுகளின் படையெடுப்புகளின் போது குடியானவர்களின் சேவையைப் பெற்றுக் கொண்டான். அவசரகால நிலையின் போது, தேசம் ஆபத்தை எதிர்நோக்கும். அவ்வேளை, பிரஜைகளுக்குரிய அரசியற் கடமை (Political Obligation) ஆக இச்சேவை கருதப்பட்டது. அரசியல் சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் இந்தச் சேவைகளை குடியானவர்கள் அரசுக்கு வழங்கினர். உதாரணமாக எல்லைப்புறங்களில் காவல் கடமையைச் செய்தல், எதிரி நெருங்கி வரும்போது அவனது படைகளை எதிர்த்துப் போரிடுதல் ஆகியன இச்சேவைகளில் அடங்குவன. இச்சேவை, வரி (Tax) அல்ல. இது காணியொன்றுக்கான வாடகையும் அன்று; இது அரசனிற்கு சேவையாகச் சென்றடையும் குடியானவனின் உழைப்பு. ‘அரசுக்கு வழங்கும் சேவை’ என்ற வகையில் அடங்கும் மேன்மிகையைப் பெறும் முறையாகும்.
4. வரி (Tax – Taxation)
வரிகள் என்ற வகையில் குடியானவர்கள் அரசனிற்கு வரிகளைச் செலுத்தினர். இவ்வரி தானியமாக (நெல்) அரசனின் பண்டசாலைக்கு நேரடியாகக் கொண்டுசென்று கொடுக்கப்பட்டது. இது உழைப்பு வாடகை (Labour Rent) அல்ல; அரசனிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் வரி உற்பத்திப் பொருளான ‘நெல்லை’ பண்டமாகக் கொடுக்கும் இக்கொடுப்பனவை ‘உழைப்பு வாடகை’ (Rent) என்ற பிற வடிவங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்த்தல் வேண்டும்.
5. வட்டி (Usury)
ஒரு குடியானவன் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்கும் போது நிலப்பிரபுவிடம் கடனைப் பெறுவதுண்டு. இவ்வாறு பெறப்பட்ட கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். நிலப்பிரபுக்கள் ஆண்டுக்கு 30 வீதம் முதல் 50 வீதம் வரை வட்டியை அறவிட்டனர். கொடுத்த முதலையும் வட்டியையும் சேர்த்து அறுவடையின் போது நிலப்பிரபுவிற்கு திருப்பிக் கொடுத்தல் வேண்டும். கண்டியில் வாழ்ந்த முஸ்லிம்களில் பலர் வட்டிக்கு பணம் கொடுப்போராக இருந்தனர். இவர்கள் நிலப்பிரபுக்களை விடக் குறைந்த 20 வீத வட்டியை அறவிட்டனர். சுருக்கமாகக் கூறின், குடியானவரிடமிருந்து மேன்மிகையைப் பெறும் இன்னொரு மாதிரியாக வட்டி (Usury) அமைந்தது.
6. அடிமைமுறை (Slavery)
கண்டியின் குடியானவர்களில் பெரும்பான்மையினர் நிலப்பிரபுவின் காணியில் பயிரிடும் உரிமையுடைய விவசாயிகளாக இருந்தார்கள். அவர்கள் நிலப்பிரபுக்கு உழைப்பு வாடகை, விளைபொருள் வாடகை (அன்டே முறை) ஆகிய வகைகளில் மேன்மிகையை வழங்கினர். கண்டியில் சிறிதொகையினரான அடிமைகளும் இருந்தனர். குடியானவர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு உள்ளது. அடிமைகள் எஜமானர்களின் சொந்த உடைமை போன்றவர்கள்; அடிமைகளை எஜமானர்கள் பிறருக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம் அல்லது விற்பனை செய்யலாம்.
அடிமைகளை ஒருவர் மரபுரிமையாக உடைமை கொள்ளலாம் (Inheritance). ஓர் அடிமைப் பெண்ணிற்குப் பிறக்கும் பிள்ளைகள் பிறப்பிலிருந்தே எஜமானனின் அடிமைகளாகக் கருதப்படுவர். எஜமானர்கள் பயிரிடுவதற்குத் தேவையான காணியையும், கால்நடைகளையும் அடிமைகளிடமே கொடுத்து, அவர்களிடமே பராமரிப்பை ஒப்படைப்பது வழக்கம் என றொபர்ட் நொக்ஸ் (நொக்ஸ், 1966:131) குறிப்பிட்டுள்ளார். ஆனால், அடிமைகளுக்கு பயிரிடுதல் உரிமைகள் இல்லை. அடிமைகளுக்கும் கண்டியின் குடியானவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. குடியானவர்களுக்கு காணியைப் பயிரிடும் உரிமைகள் (Cultivation Rights) இருந்தன. அவர்களின் உழைப்பு சக்தி அவர்களின் உடைமையாக இருந்தது. அடிமைகள் அத்தகைய உரிமைகளை உடையவர்கள் அல்லர்.
ஆயினும், கண்டியின் உற்பத்தி முறையில் அடிமை உற்பத்தி முறை முதன்மையான உற்பத்தி முறையாக இருக்கவில்லை (The slave mode of production did not occupy a dominant position in the economy). அடிமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஜோன் டேவியின் மதிப்பின்படி கண்டிப் பகுதியில் 3000 அடிமைகள் இருந்துள்ளனர் (1969:138). 1829 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது கண்டியில் 2,113 அடிமைகள் மட்டுமே காணப்பட்டனர் (Pieris, 1956:190). கண்டியின் சமூக உருவாக்கத்தில் அடிமைமுறை (Slavery) தனித்துவமுடைய உற்பத்தி முறையாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
மேலே விவரித்துக் கூறியபடி, கண்டியில் உழைப்பு மேன்மிகையின் சுரண்டல் (Surplus Extraction) உழைப்பு வாடகை, விளைபொருள் வாடகை, அரசுக்கு வழங்கும் சேவை, வரி, வட்டி, அடிமை உழைப்பு என்னும் ஆறு வழிகளில் பெறப்பட்டதைக் காணலாம். கண்டி இராச்சியத்தின் எல்லைக்குட்பட்ட நிலங்கள் அரசனின் உடைமையாக அல்லது நிலப்பிரபுக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களாக இருந்தன. இக்காரணத்தால் உற்பத்தியின் மேன்மிகையைச் சுரண்டும் (Surplus Extraction) பிரதான முறையாக உழைப்பு வாடகை முறை அமைந்தது (The dominant method of labour extraction was labour rent).
சமூக அடுக்கமைவும் கருத்தியலும் (Social Stratification and Ideology)
கண்டியின் சாதி முறை, சாதி அந்தஸ்தின் படி இருபெரும் பிரிவுகளாகக் கூறுபட்டிருந்தது.
அ. சடங்கியல் நிலையில் உயர்ந்தவர்களான கொவிகம (Goigama) ஒரு பெரும் பிரிவினராவர். கண்டியின் சனத்தொகையில் கொவிகம பெரும்பான்மைச் சாதியாக விளங்கியது.
ஆ. கொவிகம சாதிக்குக் கீழ்ப்பட்டனவாக அந்தஸ்தில் குறைந்த சேவைச் சாதிகள் (Inferior Service Castes) இருந்தன.
உயர்சாதியான கொவிகம சாதிக்குள் பல உட்பிரிவுகள் (Internal Sub-Divisions) இருந்தன. உயர்வு–தாழ்வு அடிப்படையில் இந்த உட்பிரிவுகளின் ஒழுங்கமைப்பு இருந்தது. அவை படித்தர ஒழுங்கமைப்பைக் (Hierarchy) கொண்டிருந்தன. சேவைச்சாதிகளும் படித்தர அமைப்பை உடையனவாய் இருந்தன. சேவைச் சாதிகளின் படித்தர அமைப்பின் நடுப்படிகளில் (Middle of the Ladder) எச்சாதி உயர்ந்தது, எச்சாதி தாழ்ந்தது என்பதை நிர்ணயிப்பதில் தெளிவின்மையும் குழப்பமும் இருந்தன. அகமணம் (Endogamy) என்ற விதியும், தொழில் அடிப்படையிலான சிறப்புத் தேர்ச்சியும் (Occupational Specialisation), சடங்கியல் அந்தஸ்தும் வெவ்வேறு சாதிகளின் படிநிலை வரிசை ஒழுங்கைத் தீர்மானிப்பவையாக இருந்தன. கண்டியில் பிராமணர் சாதி போன்றதொரு சமயச் சடங்குகளைச் செய்யும் சாதி (Priestly Caste) இருக்கவில்லை. வெவ்வேறு சாதிகளிடையே சடங்கியல் ஆசாரப்படியான விலக்கி வைத்தல் (Avoidance) நடைமுறையில் இருந்தது. ஆயினும், கண்டிய சாதிமுறையை முழுமையாகப் பார்க்கும் போது அது ஒப்பீட்டளவில் சமயச்சார்பற்ற தன்மை (Secularisation) உடையதாக இருந்தது.
கொவிகம சாதியின் அதி உயர் படியில் ‘ரதல’ (Radala) என்னும் கொவிகமவின் உட்சாதி (Sub-Caste) விளங்கியது. ‘ரதல’ உட்பிரிவினைச் சேர்ந்த பிரபுக்குடும்பங்கள் பெரும் நில உடைமையாளர்களாக விளங்கினர். அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ரட்டே மஹாத்தயா முதல் கிராமத் தலைமைக்காரர் வரையான அதிகாரப் பதவிகளில் இருந்தனர். அது மட்டுமல்லாமல் கோவில்களினதும், மடாலயங்களின் உயர்நிலையில் இருந்த பௌத்த பிக்குகளும் ‘ரதல’ பிரபுக்குலத்தவர்களாகவே இருந்தனர். கண்டியின் பழைய முடியாட்சி முறைமையின் கீழ் ரட்டே மஹாத்தயா, திசாவ ஆகிய பதவிகளிற்கு ‘ரதல’ பிரபுக்குலத்தினரே நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு வழமை (Custom) ஒரு காரணம். உயர் பிரபுக்குலத்தவர்களைத் தவிர்ந்த பிறர் தமக்கு அதிகாரிகளாக இருந்து கட்டளை இடுவதை கண்டியின் மக்கள் ஏற்கத் தயாராக இருக்கவில்லை என்பது இன்னொரு காரணமாகும் என ஜோன் டேவி குறிப்பிட்டுள்ளார் (Davy, 1969:111).
சாதிப்படிநிலையின் அடித்தளத்தில் ‘ரெடியா’ சாதி என்னும் விளிம்பு நிலைச் சாதி (Outcaste) இருந்தது. தோலினால் செய்யப்படும் பாதணிகள் போன்ற பொருட்களை (Leather Products) உற்பத்தி செய்தலும், பிச்சை எடுத்தலும் இச்சாதியினரின் பிழைப்புக்கான வழிகளாக இருந்தன.
ரதல, ரெடியா என்ற இரு சாதிகளையும் தவிர்ந்த பிற சாதிகளின் ஆட்கள் யாவரும் கண்டியின் உழவுத் தொழிலைச் செய்பவர்களாக, விவசாயக் குடியான்களாக இருந்தனர். சேவைச்சாதிகளைச் சேர்ந்தோர் நிலப்பிரபுக்களின் காணிகளில் உழவுத் தொழிலைச் செய்வதோடு, தத்தம் சாதிகளுக்குரிய சாதிச்சேவைகளையும் செய்து வந்தனர். உதாரணமாக, குயவர் சாதியினர் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதோடு நெற்காணிகளில் பயிரிடுதல் தொழிலையும் செய்தனர். இதேபோன்று உலோகத்தால் கருவிகளை உற்பத்தி செய்யும் கைவினைச் சாதிகளின் ஆட்கள் விவசாயிகளாகவும் இருந்தனர். கொவிகம சாதியினர் (ரதல நீங்கலாக) முழுநேர விவசாய உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களுக்குச் சேவைக் கடமைகள் இருக்கவில்லை. கொவிகம தவிர்ந்த பிற சாதிகள் விவசாயத்தைப் பகுதி நேரத் தொழிலாகச் செய்து வந்தனர்.
கண்டியில் தொழில்வாரியான சாதிப்பகுப்பு காணப்பட்டது. இத்தொழில்வாரியான சாதிமுறையைக் கட்டமைப்பதில் கண்டியின் அரசுக்கு ஒரு வகிபாகம் இருந்தது. கண்டியின் சேவைச் சாதிகளில் சில அரசாங்கப் பகுதி (State Department) என்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ‘பத்தாவலி’ என்ற பதவி நிலையினர் இந்த அரசாங்கப் பகுதிகளின் நிர்வாகிகளாக இருந்தனர். கைவினைஞர் பகுதியின் கீழ் கைவினைஞர்களும் (Craftsmen), மட்பாண்டங்கள் பகுதியின் கீழ் குயவர்களும் நிர்வகிக்கப்பட்டனர். மீன் பிடிப்போரும் முஸ்லிம்களும் போக்குவரத்துச் சேவையை வழங்குபவர்களாக இணைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறே தச்சுத் தொழில் பகுதி (Carpenter Department), நடன இசைக் கலைஞர் பகுதி, பாய்முடைவோர் பகுதி என வெவ்வேறு அரசாங்கப் பகுதிகள் (State Departments) இயங்கின. அம்பட்டர், தையல் வேலை செய்வோர் (Tailors) போன்ற சில சாதிகள் அரசாங்கப் பகுதிகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. ஆயினும், அச்சாதிகளைச் சேர்ந்தோர் தமக்குரிய சேவைக் கடமைகளை அரசாங்கத்திற்குச் செய்து வந்தனர்.
சடங்கியல் நிலையில் கொவிகம சாதி கண்டிய சமூகத்தில் உயர்நிலையில் இருந்தபோதும், பொருளாதார நிலையில் சேவைச்சாதிகளை விட கொவிகம சாதியாட்கள் யாவரும் உயர்நிலையில் இருந்தார்கள் எனக் கருத முடியாது. கொவிகம அல்லாதவர்களும் சில வேளைகளில் அரசாங்கப் பதவிகளுக்கு நியமனம் பெற்றனர். உதாரணமாக, ஹீலன் கமுவே சிந்தார மொஹத்தல என்பவர் திசாவ (மாவட்ட அதிகாரி) என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டு அரண்மனையின் உடையலங்காரப் பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கைவினைச் சாதியைச் (Smith) சேர்ந்தவராவார் (கொட்றிங்டன், 1909). பெரும்பாலான கொவிகம ஆட்கள் பொருளாதார நிலையில் தாழ்நிலையில் இருந்த சேவைச்சாதியினரின் நிலையிலேயே வறியவர்களாய் இருந்தார்கள். கொவிகம சாதியினரும், கொவிகம அல்லாத சாதியினரும் விவசாயக் குடியானவர்கள் என்ற முறையில் நிலப்பிரபுக்களுக்கு உழைப்பு வாடகையை (Labour Rent) அல்லது விளைபொருள் வாடகையை (Produce Rent) செலுத்தி வந்தனர். நில உடைமையாளர்களான அரச அதிகாரிகளின் (State Officials) அதிகாரத்திற்கு இருசாராரும் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர்.
சடங்கியல் அடிப்படையிலான சாதிப் படித்தர அமைப்பு மட்டுமல்லாமல், அரசியல்–பொருளாதார அடுக்கமைவும் (Politico-Economic Stratification) கண்டிய சமூகத்தில் இருந்து வந்தது. சமூகத்தின் அதி உயர் படியில் அரச குடும்பங்கள் (Royal Family) இருந்தன. இவை தென்னிந்திய பூர்விகத்தையுடைய நாயக்க வம்சத்துக் குடும்பங்களாகும். அதற்கு அடுத்ததாக ரதலப் பிரபுக்குலம் இருந்து வந்தது. ரதலக் குடும்பத்தவர்களில் இருந்து அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர். மடாலயங்களின் ‘நாயக்க தேரர்’களான துறவிகளும் ரதல குடும்பங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். கோவில்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகவும் ரதல பிரபுக்குலத்தவர்களே நியமிக்கப்பட்டனர்.
அரச குடும்பம் (Royal Family), ‘ரதல’ உயர்குலம் என்ற இரண்டிற்கும் அடுத்த கீழ்ப்படியில் சிற்றுடமை விவசாயிகள் (Small Holders) இருந்தனர். சிற்றுடமை விவசாயக் குடியான்கள் வகுப்பில் எல்லாச் சாதியினரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அடிநிலையில் இருந்த பல சாதிகளைக் கொண்ட இச்சமூகத்தை கண்டியின் ‘சாதாரண மக்கள்’ (Common People) என்று அழைக்கலாம்.
கண்டியின் ஆளும் குழுவாக (Ruling Class) விளங்கியோர் ‘ரதல’ உயர்குலமே அன்றி, கொவிகம சாதி அன்று. கண்டி இராச்சியத்தின் தொடக்ககாலத்தில் ‘ரதல’ பிரிவினரை ஒருமித்த குழுவாக அடையாளம் காணக்கூடிய நிலை இருக்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் ‘ரதல’ பிரிவினர் தமக்கிடையே மட்டும் விவாகம் செய்து கொள்ளும் சாதி அகமண முறையை (Caste Endogamy) பின்பற்றத் தொடங்கியிருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அண்மித்த காலத்தில் ‘ரதல’ வகுப்பின் பிரதான நில உடைமைக் குடும்பங்கள் ஒரு கூட்டாக இணைவு பெற்றன. அவை மச்சான்–மச்சாள் என்ற ‘Cross Cousin’ விவாக உறவுகளால் பிணைப்புற்றன.
கண்டியின் கடைசி மன்னனின் முதலாவது அதிகாரியாக (Councillor) பிலிமத்தலாவ பதவி வகித்தார். இவர் மரணித்த பின் இவரின் இடத்திற்கு மொல்லிகொட, எகலப்பொல என்போர் நியமிக்கப்பட்டனர். இவர் மூவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களே ஆவர். எகலப்பொல, ரத்வத்த திசாவயின் சகோதரியின் மகனாவார். இவ்வாறாக அதிகாரம், திசாவ ஆகிய உயர்பதவிகளை வகித்தவர்களின் ரதல குடும்பங்கள் ஒன்றோடொன்று பிணைப்புற்றிருந்தன. கண்டியின் சிறு ஆளும் குழுவிடம் (Oligarchy) சொத்துகளும், அரச அதிகாரமும் ஒருங்கே குவிந்திருந்ததைக் காணலாம்.
கண்டியில் சிங்கள பௌத்தம் முதன்மைக் கருத்தியலாக விளங்கியது. இச்சிங்கள பௌத்தம், இந்துமதம், பௌத்தம், மந்திர–தந்திர ஆவி வழிபாடு (Magico-Animism) என்ற மூன்றினதும் கலவையான சமயக் கருத்தியலாகும். கங்கைச் சமவெளியில் பௌத்தம் தோன்றிய போது அதனிடம் காணப்பட்ட கிளர்ச்சிவாதம் (Radicalism) பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரான கண்டியின் சிங்கள–பௌத்தத்தில் இருக்கவில்லை. கண்டி இராச்சியத்தின் பௌத்தம் நிலமானியத்தை நியாயப்படுத்தும் (Justificatory Feudalism) பௌத்தமாக விளங்கியது என்பதை எனது ஆய்வு ஒன்றில் (குணசிங்க, 1972: 50–87) விளக்கிக் கூறியுள்ளேன்.
கண்டியின் சமயக் கருத்தியலின் அடிப்படைக் கருத்தாக ‘கர்மா’ கோட்பாடு விளங்கியது. ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் இப்பிறவியிலோ அல்லது அடுத்த பிறவிகளிலோ பயன் கிடைக்கும். புண்ணியம் செய்பவர்களுக்கு நல்ல பிறப்பும் நன்மையும் கிடைக்கும். புண்ணியம் என்பதை சிங்களத்தில் ‘பின்’ (Pin) என அழைப்பர். பாவம் செய்வோருக்கு இழிந்த பிறப்பும் துன்பமும் மறுபிறவியில் கிடைக்கும். இவை கர்மா கோட்பாட்டின் கருத்தியல் கூறுகளாகும். கண்டியில் அடிநிலையில் உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவமே காரணமாகும். இவ்வாறே ரதல உயர்குடியில் ஒருவர் பிறந்திருக்கிறார் என்றால், அது அவர் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனே அன்றி வேறு ஒன்றும் அல்ல. அவர் செய்த நல்வினையின் பயனே அவருக்குக் கிடைத்த சொத்துகளினதும், அதிகாரத்தினதும் சுகபோகம்.
இக்கர்மா தத்துவத்தை புத்த பிக்குகள் மக்களுக்குப் போதித்து வந்தனர். கர்மாவுக்கு ஜாதகக் கதைகளை உதாரணம் காட்டி விளக்கம் கூறினர். பிக்குகளுக்கு உணவளித்தல், கோவில்களைக் கட்டுதல், கோவில்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்தல் ஆகியன ஒருவர் இவ்வுலக வாழ்க்கையில் செய்ய வேண்டிய நற்செய்கைகளுக்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்டன. கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தல், அவற்றில் திருடுதல் போன்றன மிகப்பெரிய பாவச்செயல்களாகக் கூறப்பட்டன.
லங்காதிலக விகாரைக்கு சேனலங்கா என்ற கவுன்சிலர் 200 அடிமைகளையும், 400 கால்நடைகளையும் தானமாக வழங்கினார். அப்போது அவர் கூறியவை: “இந்த தானத்தை அபகரிப்பவர்களுக்கு எதிர்காலப் புத்தரை கண்ணால் காணும் பாக்கியம் கிடைக்க மாட்டாது. அவர்கள் காகங்களாகவும் நாய்களாகவும் மறுபிறவியில் பிறப்பார்கள். மறு பிறப்புகளில் எப்போதும் பசியோடும் தாகத்தோடும் இழிபிறப்புகளாக, தாழ்ந்த சாதிகளை விடக் கீழானவர்களாக அலைந்து திரிவார்கள். கோவில் வளவில் ஒரு புல்லையோ அல்லது ஒரு விறகுத்தடியையோ அல்லது ஒரு மலரையோ, பழத்தையோ கூடக் களவெடுப்பவர்கள் இராட்சத பிசாசாகப் (பிரேதய) பிறப்பார்கள். இந்த உலக வாழ்விலும் மறுலோகத்திலும் சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக இந்த தானத்திற்குப் பழுதில்லாது நடப்பதற்கு முயற்சிக்க வேண்டும்; வாய்மொழியால் இச்செய்தியைச் சொல்பவரும் சொர்க்கத்தையும் நிர்வாணத்தையும் அடைவார்கள்” என சேனலங்கா வேண்டுதல் செய்திருந்தார் (Lawrie, 1898).
கர்மா என்னும் தத்துவம் சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்தியது. விவசாயக் குடியானவன் ஒருவனுக்கு வறட்சியால் அறுவடை குறைந்து பஞ்சம் ஏற்படுதல், மகன் ஒருவனின் மரணம் போன்ற துன்பங்கள் தீய கர்மாவின் விளைவே என இத்தத்துவம் விளக்கம் கூறியது. குடியானவனிற்கு இவ்வுலக வாழ்வில் உயர்ச்சி பெறும் வாய்ப்பு இல்லை என்றும், மறுபிறப்பிலாவது அவன் நல்வாழ்க்கையை அடைவதற்காக புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் அவனிற்கு அறிவுறுத்துவதாக இப்போதனை அமைந்தது. கர்மா கருத்தியல் குடியானவனின் உணர்வு நிலையை (Consciousness) மறுலோகம் நோக்கிய திசையில் செலுத்துவதாக அமைந்தது.
கண்டியின் சமூக வாழ்க்கையில் சாதி உணர்வும் கருத்தியலும் முக்கிய வகிபங்கைப் பெற்றன. கண்டியின் உற்பத்தி உறவுகளில் குத்தகைக் குடிகள் என்ற வகையில் ஒரே நிலையில் இருந்த குடியான்கள் சாதி அடிப்படையில் வேறுவேறாகப் பிளவுற்றிருந்தனர். இதனால் அவர்களால் ஒன்றுபட்டு தமது பொது நலன்கள் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. சாதிமுறை பழையகால (கங்கைச் சமவெளிக் காலத்தில்) பௌத்தத்தில் இல்லாதது. கண்டியின் சாதிமுறை கர்மா கோட்பாட்டிற்கு வலுச் சேர்த்தது.
கண்டியின் பெரும்பான்மையினரான கொவிகம சாதி மக்களிடம் ‘உயர்வு மனப்பான்மைச் சிக்கல்’ (Superiority Complex) இருந்தது. இதனால் அவர்கள் சமூக மாற்றத்தை விரும்பாதவர்களாகவும், இருக்கும் நிலையை (Status Quo) நீடிக்க வேண்டும் என்ற பிற்போக்குக் கருத்தியலுக்கு ஆதரவு அளிப்பவர்களாகவும் இருந்தனர்.



