அதிகாரம்: ஓர் அரசியல் மெய்யியல் விளக்கம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

அதிகாரம்: ஓர் அரசியல் மெய்யியல் விளக்கம் 

March 18, 2026 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட

அதிகாரம்

அதிகாரம் (Power) என்னும் கருத்தாக்கம் அரசியல் கோட்பாடுகள் பற்றிய ஆய்வில் முதன்மையான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் முதல் 19 ஆம் நூற்றாண்டினரான கார்ல் மார்க்ஸ், 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களான மக்ஸ் வெபர், றொபர்ட் டால் (Robert Dahl), ஹன்னா அரன்ட் (Hannah Arendt) வரை பலர் அதிகாரம் பற்றிய ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ளனர். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்கள் ‘அதிகாரம்’ என்னும் கருத்தாக்கம் பற்றி ‘Politics as a Relation of Power’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘Politics and Political Science – A Contemporary Introduction’ (2018) என்னும் நூலின் 5 ஆவது அத்தியாயமாக (பக். 57–68) இக்கட்டுரை அமைந்துள்ளது. அரசியல் மெய்யியல் (Political Philosophy) நோக்கில் அதிகாரம் பற்றி ஆராயும் இத்தமிழ்க் கட்டுரை மேற்படி அத்தியாயத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. ஜயதேவ உயன்கொட அவர்களின் கருத்துகள் இக்கட்டுரையில் எளிமைப்படுத்தப்பட்ட வடிவத்தில் தரப்பட்டுள்ளன.

அதிகாரம் (Power) பற்றிய வரைவிலக்கணம்

அரசியல் (Politics), அதிகாரம் (Power) என்னும் இரு கருத்தாக்கங்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவையாக உள்ளன. அரசியல் விஞ்ஞானம் என்னும் கற்கைத் துறையை அதிகாரம் பற்றி ஆய்வு செய்வது (The Study of Power) எனச் சிலர் வரையறை செய்துள்ளனர்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என்னும் மெய்யியலாளர் 1938 ஆம் ஆண்டில் ‘Power: A New Social Analysis’ என்னும் நூலை எழுதினார். அந்நூலில் அவர் அதிகாரம் (Power) என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு வரைவிலக்கணத்தைக் கூறினார்: “பௌதிகவியல் சக்தி (Energy) எவ்வாறு அடிப்படையான கருத்தாக்கமாக உள்ளதோ, அதனைப் போன்றே சமூக விஞ்ஞானங்களில் அதிகாரம் அடிப்படையான கருத்தாக்கமாக (Fundamental Concept) உள்ளது” (Russell, 1955:4). அதிகாரத்தை அடிப்படையான கருத்தாக்கமாகக் கூறும் ரஸ்ஸல், மனித இயல்பைப் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகவும் அதிகாரம் என்ற கருத்தாக்கம் விளங்குகிறது என்றும் கூறினார். அதிகாரம் அரசியலின் அடிப்படையான கருத்தினம் (Power is the fundamental theme in politics) என்னும் எடுகோளை முன்வைத்து நாம் இவ்வுரையாடலைத் தொடர்வோம்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் மேற்குறித்த நூலில் ‘அரசியல் என்பது அதிகாரத்திற்கான போராட்டம்’ (Politics is a struggle for power) என்றும் குறிப்பிடுகிறார். அவரின் இக்கூற்று சாதாரணமாக மக்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதோடு ஒத்துப்போவதாக இருக்கிறது. அரசியல்வாதிகள் அதிகாரத்தின் மீது அளவற்ற பேராசை கொண்டு அலைவதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். ‘அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு அளவில்லா விருப்பம் கொண்டவர்கள்’ (Politicians’ Love for Power) என்று அவர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்.

அதிகாரம் என்பது அரசியலின் மையக்கருத்து (Central Theme in Politics) என்பதை அரசியல் சிந்தனை வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம். இது 16 ஆம் நூற்றாண்டு முதல் மெய்யியலாளர்களால் ஆராயப்பட்டு வந்த கருத்தாக உள்ளது. மாக்கியவலி, ஹொப்ஸ், கார்ல் மார்க்ஸ் ஆகிய அரசியல் மெய்யியலாளர்களும் (Political Philosophers), இக்கால அரசியல் விஞ்ஞானிகளும் அரசியல் விஞ்ஞான ஆய்வில் அதிகாரம் என்பதை முதன்மைப்படுத்தியுள்ளனர். அரசியல் விஞ்ஞானம் அரசியலில் அதிகாரத்தினை முதன்மைப்படுத்துகிறது. இக்காரணத்தினாலேயே அரசியல் விஞ்ஞானம் இன்று தனித்தொரு கற்கைப் புலமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

அரசியல் கோட்பாடு, அதிகாரம் என்பதை பிறரது செயற்பாடுகளையும், பிறர் எடுக்கும் முடிவுகளையும் தீர்மானிப்பதற்கு ஒருவரிடம் இருக்கும் ஆற்றல் என வரையறை செய்கிறது. எமது நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஓர் உதாரணத்தைக் கூறி இதனை விளக்கலாம். தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கட்டுப்படுத்துவதையும், அவர்களைத் தம் சொற்படி ஒழுக வைப்பதையும் நாம் காண்கிறோம் அல்லவா? இது போன்றதுதான் அரசியல் அதிகாரம் என்பதை அரசியல் கோட்பாடு விளக்கிக் கூறுகிறது. மனித உறவுகளின் ஒரு கூறாகவே அதிகாரம் பார்க்கப்படுகிறது.

றொபர்ட் டால் வரைவிலக்கணம்

அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான றொபர்ட் டால் (Robert Dahl) அதிகாரம் என்பதை வரையறை செய்து விளக்கம் கூறிய முன்னோடியாவார். 1957 ஆம் ஆண்டில் அவர் பிரசுரித்த ‘அதிகாரம் என்னும் கருத்தாக்கம்’ (The Concept of Power) எனும் கட்டுரை அரசியல் கோட்பாட்டு வரலாற்றில் முக்கியமான ஓர் ஆக்கமாகும். அக்கட்டுரையில் அவர் அதிகாரம் என்பதைப் பற்றிய விரிவான விளக்கத்தை கூறினார். அவர் அதிகாரம் என்பதைப் பின்வருமாறு வரையறை செய்தார்: “A என்பவர் B மீது அதிகாரம் உடையவராக இருக்கிறார் என்று கூறும்போது, B சாதாரணமாகச் செய்ய முன்வராத ஒரு செயலை அவரைக் கொண்டு செய்விக்கும் ஆற்றலை A பெற்றிருக்கிறார் என்று பொருள்படும். இதனையே அதிகாரம் என்று கூறுவர்.” (A has power over B to the extent that he can get B to do something that B would not otherwise do – Dahl, 1957, 202–03).

றொபர்ட் டால் நடத்தைவாதம் (Behaviouralism) என்னும் அரசியல் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவர். நடத்தைவாதியான அவர் அனுபவத்தின் அடிப்படையில் வலிதுடைய, உறுதிப்படுத்தக்கூடிய (Empirically Valid and Provable) ஆதாரங்களின் அடிப்படையில் அரசியல் கருத்தாக்கங்களை வடிவமைக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர். அவரின் அதிகாரம் பற்றிய வரைவிலக்கணம் நடத்தைவாத அணுகுமுறையின் அளவுக்கோல்களுக்குப் பொருந்துவதாக அமைந்தது. றொபர்ட் டால் அவர்களின் வரைவிலக்கணம் அரசியல் கோட்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

டால் அவர்களின் வரைவிலக்கணம் நடத்தைவாத அரசியல் கோட்பாட்டாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நடத்தைவாதிகள் அல்லாத அரசியல் விஞ்ஞானிகள் (Non-behavioural Political Scientists) அவரது கருத்தை ஏற்காமல், அதனை விமர்சனம் செய்தனர்; அவரது வரைவிலக்கணத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்டினர். பிறர் மீது செல்வாக்குச் செலுத்துதல் அதிகாரத்தின் ஒரு கூறு மட்டுமே; அதிகாரத்தில் வேறு பல கூறுகளும் உள்ளடங்கியுள்ளன என்று கூறப்பட்டது.

அதிகாரத்தின் பிற பரிமாணங்களை எடுத்துக் கூறியவர்களுள் ஸ்டீவன் லூக்ஸ் (Steven Lukes) முக்கியமான அரசியல் சிந்தனையாளர் ஆவார். அவர் ‘Power: A Radical View’ என்னும் நூலை 1974 இல் வெளியிட்டார். இந்நூலின் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு ஏற்ப, இந்நூல் ‘அதிகாரம் பற்றிய புரட்சிகரமான நோக்கை’ முன்வைத்தது. ரொபர்ட் டால் கருத்தை விமர்சனம் செய்த ஸ்டீவன் லூக்ஸ், அதிகாரம் மூன்று பரிமாணங்களைக் (Three Dimensions of Power) கொண்டது எனக் குறிப்பிட்டார். அவையாவன:

  1. முடிவுகள் மீது செல்வாக்குச் செலுத்துவதான ஆற்றல் (The Capacity to Influence Decisions).
  2. அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தீர்மானிப்பதில் செலுத்தக்கூடிய செல்வாக்கும் ஆற்றலும் (Capacity to Influence Political Agendas).
  3. பிற மனிதர்களின் சிந்தனையையும் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையிலான செல்வாக்கைச் செலுத்தும் ஆற்றல் (The Capacity to Influence the Thinking and Action of Other People)

மேலே குறிப்பிட்டவற்றுள் மூன்றாவதான ‘பிற மனிதர்களின் சிந்தனையையும் செயல்களையும்’ கட்டுப்படுத்தும் ஆற்றல் என்னும் கூறு ஸ்டீவன் லூக்ஸ் கூறிய நவீனமான கருத்தாகும். இந்த மூன்றாவது கூறு மிகவும் முக்கியமானது. சமூகத்தில் அதிகாரம் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை இதன் மூலம் பெற முடிகிறது.

பிற மனிதர்களின் சிந்தனையையும் செயல்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பயன்படுத்தி, அதிகாரத்தில் உள்ளவர்கள், பிற மனிதர்கள் சாதாரணமாகச் செய்ய முன்வராதவற்றை அவர்களைக் கொண்டு செய்விக்கும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், மக்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்வதை விருப்பத்தோடு ஏற்றுச் செயற்படுபவர்களாகவும், தம்மை அதிகாரத்திற்குப் பணிந்து நடப்பவர்களாகவும் மாற்றிக் கொள்வதையும் காண்கிறோம். அவர்கள் இவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தீர்மானங்களை (Choices) (ஆட்டுமந்தைகள் போல்) ஏற்றுச் செயற்படுவதையும், தமது உண்மையான தேவைகள், நலன்கள் எவை என்பதைச் சிந்திப்பதையே மறந்தவர்களாகச் செயற்படுவதையும் காண்கிறோம்.

லூக்ஸ் அவர்கள் குறிப்பிட்ட அதிகாரத்தின் மூன்றாவது கூறு, மார்க்சிய அதிகாரக் கருத்துடன் ஒற்றுமையுடையதாகக் காணப்படுகிறது. மார்க்சியக் கோட்பாட்டின்படி, சமூகத்தில் ஆளும் வகுப்பின் (Ruling Class) கருத்தியல் மேலாதிக்கம் காரணமாக, ஆளும் வர்க்கத்திற்குக் கீழ்ப்பட்ட சமூக வர்க்கங்கள் (Subordinate Social Classes) தமது சொந்த நலன்கள் எவை என்பதையே உணராத அடிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது விளக்கப்படுகிறது. லூக்ஸ் அதிகாரம் பற்றிய இம்மூன்றாவது கூறினை ‘மேலாதிக்கம்’ (Domination) எனக் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் கோட்பாடு அதிகாரம் என்பதில் உள்ளடங்கியுள்ள வேறு இரண்டு கூறுகளையும் எடுத்துக்காட்டி, அவை இரண்டுக்கும் இடையிலான நுண்ணிய வேறுபாடுகளையும் விளக்கிக் கூறியுள்ளது. இவற்றுள் முதலாவது கூறு ஆங்கிலத்தில் ‘Power Over’ என்ற வினைத்தொடராலும், இரண்டாவது கூறு ‘Power To’ என்ற வினைத்தொடராலும் அழைக்கப்படுகின்றன (வினைத்தொடர் என்பது Phrasal Verbs என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்).

நாம் மேலே கூறிய உதாரணமான பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் அதிகாரத்தை ‘Power Over’ என்று கூறலாம். அதாவது ‘பிள்ளைகள் மீது’ பெற்றோரால் மேலாதிக்கம் செலுத்த முடிகிறது. கம்பனி ஒன்றின் பணிப்பாளர்கள் தொழிலாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும், ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்து கட்டுப்படுத்துவதும் இவ்வகை மேலாதிக்கத்திற்கு உதாரணங்களாகும்.

மக்கள் பிறரது அதிகாரத்திற்குப் பணிந்துபோவதும், அடங்கி ஒடுங்கி நடப்பதும் யதார்த்த உலகில் நாம் காணும் விடயம்தான். ஆயினும், அதே மக்கள் அதிகாரத்தை எதிர்த்து நிற்பதையும், அதனை நிராகரிப்பதையும் கூடக் காண்கிறோம். இவ்வாறு பிறரின் மேலாதிக்கத்தை எதிர்த்தல் (Resistance Against Power) மக்களின் ‘Power To’ அதிகாரமாகும். மக்கள் அதிகார எதிர்ப்பை மௌனமாகவும் அமைதியாகவும் கூட வெளிப்படுத்தலாம். மாறாக, அது வெளிப்படையாகவும் நேரடியான கிளர்ந்தெழுதலின் ஆதாரமாகவும் அமைவதுண்டு. ‘புரட்சி’ (Revolution) பற்றிய மார்க்சியக் கோட்பாடு மக்களின் ‘Power To’ என்னும் அதிகாரத்தை விளக்கும் கோட்பாடாகும். உலகின் புரட்சிகர அரசியல் சமூக மாற்றங்கள் யாவும் அதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் போது தோன்றின என்பதை வரலாறு உணர்த்துகிறது.

தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம், அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது என மார்க்சிஸ்டுகள் விளக்கம் கூறுவர். மார்க்ஸிசக் கோட்பாட்டின் அதிகாரத்தினை எதிர்த்து நிற்கும் கூறினை பின்வருமாறு விளக்கலாம்:

  1. எதிர்த்து நிற்கும் அதிகாரம் (Power to Resist)
  2. கிளர்ந்தெழும் அதிகாரம் (Power to Revolt)
  3. மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் (Power to Change)

ஆகிய மூன்று அதிகாரங்களையும் தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தனதாக்கிக் கொள்கிறது.

‘Power To’ என்ற வினைத்தொடர் குறிப்பிடும் அதிகாரத்தின் வேறு சில கூறுகளையும் விளக்கும் அதிகாரம் குறித்த கோட்பாடுகளும் (Theories of Power) உள்ளன.

அதிகாரம் பற்றிய அடிப்படைக் கூறுகளை இதுவரை எடுத்துக் கூறினோம். அடுத்து ஆங்கில வினைத்தொடர்களான ‘Power Over’ – பிறர் மேல் செலுத்தும் அதிகாரம், ‘Power To’ – அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் அதிகாரம் என்பன குறித்த வேறுபட்ட நுட்பவிவரங்களை நோக்குவோம்.

பிறர் மேல் அதிகாரத்தைச் செலுத்துதல்

பிறர் மேல் அதிகாரத்தைச் செலுத்துதல் (Power Over) என்பதன் அறவியல் (Ethics) மூலங்களையும், அதிகாரம் செலுத்துவோர் அதிகாரத்தை ஓர் அரசியல் உரிமையாக (Political Right) எவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்பதையும் மக்ஸ் வெபர் (Max Weber) என்னும் சமூகவியலாளர் ஆராய்ந்து கூறியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளரான மக்ஸ் வெபர் ‘சட்டரீதியான அதிகாரம்’ (Legitimate Power) என்னும் எண்ணக்கருவை அறிமுகம் செய்தார். இச்சட்டரீதியான அதிகாரத்தை அவர் ‘அதிகாரத்துவம்’ (Authority) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

1922 இல் மக்ஸ் வெபர் எழுதிய ‘Economy and Society’ (பொருளாதாரமும் சமூகமும்) என்னும் நூலில் ‘அதிகாரத்துவம்’ பற்றிய கோட்பாட்டை அவர் விளக்கிக் கூறினார். மக்கள் எந்தக் காரணத்திற்காக அதிகாரத்தை ஏற்று அதற்குப் பணிந்து நடக்கிறார்கள்? தம் மீது அதிகாரம் செலுத்துவது சட்டரீதியானது (Legitimate) எனவும், அது ஓர் உரிமை எனவும் ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? என்னும் அடிப்படையான கேள்விகளை மக்ஸ் வெபர் எழுப்புகிறார்.

வெபருடைய ஆய்வு ‘அதிகாரம்’ என்ற கருத்தின் முக்கியமான கூறொன்றை விளக்குவதாக இருந்தது. அதிகாரம் செயற்படுத்தப்படும் போது, அவ்வதிகாரத்தில் ‘அதிகாரத்துவம்’ (Authority) என்ற பண்பும் சேர்ந்து கொள்கிறது. மக்கள், குறித்த அதிகாரம் சட்டபூர்வமானது (Legitimate) என நம்புவதால், அதிகாரம் ‘அதிகாரத்துவம்’ என்ற பண்பைப் பெறுகிறது என மக்ஸ் வெபர் கூறுகிறார்.

‘சட்டரீதியான அதிகாரம்’ (Legitimate Power), ‘சட்டரீதியானது’ (Legitimacy) போன்ற சொற்கள் அதிகாரத்திற்கு இருவகைப் பொருள் உள்ளதை உணர்த்துகின்றன:

  1. அதிகாரம் சட்டமுறையானது (Power is legal).
  2. அதிகாரம் அறம் சார்ந்தது; சரியானது (Power is morally right).

மக்கள் அதிகாரம் சட்டரீதியானது எனவும், அது அறம் சார்ந்தது என்றும் நம்பும்போது, அதனை ஏற்றுக் கொள்கிறார்கள்; அதிகாரத்திற்குப் பணிந்து நடக்கின்றனர்; அதிகாரத்தால் தாம் மேலாதிக்கம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறார்கள் (Accept, obey and allow themselves to be dominated by power). இவ்வாறு அதிகாரம் ‘அதிகாரத்துவம்’ (Authority) என்ற பண்பையும் பெற்றுக் கொள்கிறது.

வெபர் அதிகாரத்துவத்தின் மூலங்களை மூன்றாக வகுத்துக் கூறியுள்ளார்:

  1. மரபுவழி அதிகாரத்துவம் (Traditional Authority)
  2. கவர்ச்சி அதிகாரத்துவம் (Charismatic Authority)
  3. பகுத்தறிவுசார் – சட்டரீதியான அதிகாரத்துவம் (Rational–legal Authority)

இவற்றுள் முதலாவது வகை அதிகாரத்துவம் மரபுவழியாலும் வழக்கங்களின் மூலமும் பெறப்படுகிறது. நவீனத்திற்கு முற்பட்ட காலச் சமூகங்களின் (Pre-modern Societies) மரபுவழி வழக்கங்கள் அதிகாரத்துவத்தின் மூலங்களாக அமைந்தன. அச்சமூகங்களில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்தோருக்கு மரபும் வழக்கமும் (Tradition and Custom) அதிகாரத்திற்கு உதவின. அவர்களுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு விசேட திறன்கள் (Skills or Talent) எவையும் தேவையாக இருக்கவில்லை.

இரண்டாவது வகையான கவர்ச்சி அதிகாரத்துவம் (Charismatic Authority) சில மனிதர்களிடம் உள்ள ‘கவர்ச்சி’ (Charisma) என்ற விசேட பண்பின் காரணமாக உருவாகிறது. இக்கவர்ச்சி தனிநபர்களிடம் அமைந்துள்ள மந்திர-தந்திர சக்தியாகவும் (Magical Power) கருதப்படுவதுண்டு. பெருமனிதர்களான சமயத் தலைவர்கள் பலர் இத்தகைய கவர்ச்சி ஆளுமையுடையவர்களாக இருந்துள்ளனர். புத்தர், யேசு, முகம்மது நபிகள் நாயகம் ஆகியோர் இத்தகைய சமயத் தலைவர்களாவர்.

தற்கால வரலாற்றில் மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், மா ஓ சேதுங், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் கவர்ச்சி ஆளுமை மிக்க தலைவர்களாக விளங்கினர். மேற்குறித்த தலைவர்களைப் பின்பற்றி நடப்பதற்கு பெருந்திரளான மக்கள் முன்வந்தனர். அவர்களிடம் காணப்பட்ட விசேடமான கவர்ச்சிப் பண்புதான், சாதாரண மனிதர்களில் இருந்து வேறுபட்ட உயர்நிலைக்கு அவர்களை உயர்த்தியது எனலாம்.

தோமஸ் ஹொப்ஸ் எழுதிய ‘லெவியாதன்’ என்னும் நூல்

தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hobbes) என்னும் ஆங்கிலேயர் 1651 ஆம் ஆண்டு ‘லெவியாதன்’ (Leviathan) என்னும் நூலினை எழுதி வெளியிட்டார். அரசியல் மெய்யியல் (Political Philosophy) பற்றிய மிக முக்கியமான நூல்களில் ஒன்றாக ஹொப்ஸ் எழுதிய லெவியாதன் கருதப்படுகிறது. ஒரு சமூகத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வேண்டுமானால் அதிகாரத்துவம் மிக்க அரசியல் நிறுவன அமைப்புத் தேவை என்பதை வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஹொப்ஸின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு (Social Contract Theory) அரசு என்ற நிறுவனம் எவ்வாறு தோன்றியது? எந்தச் சூழ்நிலையில் தோன்றியது? என்ற கேள்விகளுக்கு விடை கூறுகிறது. அராஜகம் (Anarchy) தலைவிரித்தாடிய சூழலில் மக்கள் பொதுவான அதிகாரம் உடைய அரசை (State) நிறுவினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட அரசின் தலைவனாகத் தெரிவு செய்யப்பட்டவரிடம் மக்கள் தமது இயற்கை உரிமையான சுதந்திரத்தை (Freedom) ஒப்படைத்தனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்தார். தனிப்பட்ட பாதுகாப்பை (Personal Security) உறுதிசெய்து கொள்வதற்காக மக்கள் தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தனர். அரசின் அதிகாரம் சட்டமுறையானதாகவும், உரிமையானதாகவும் (State Power as Legitimate and Right) மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நவீனத்துக்கு முற்பட்ட கால அரசுகள் யாவும் சர்வாதிகார அரசுகளாகவும், ஜனநாயகத்திற்கு முற்பட்ட அரசியல் முறைமைகளைக் கொண்டனவாகவும் (Pre-democratic Political Systems) விளங்கின. ஹொப்ஸின் அரசுக் கோட்பாடு இத்தகைய அரசு முறைகளைப் புரிந்துகொள்ள உதவும் தத்துவமாக அமைந்துள்ளது. 

ஹொப்ஸின் அரசியல் அதிகாரம் பற்றிய விளக்கம், செவ்வியல் லிபரல் அரசியல் கோட்பாட்டினால் (Classical Liberal Political Philosophy) விமர்சிக்கப்பட்டது. லிபரலிசம் (தாராண்மைவாதம்) என்னும் கோட்பாடு ஐரோப்பாவின் முடியாட்சி அரசுகளின் சர்வாதிகாரத்திற்கு (Autocratic Power) எதிராகத் தோன்றியது. லிபரலிசம் தனிமனித விடுதலையை வலியுறுத்தியது. பொருளாதார முயற்சிகளில் தனிநபர்கள் ஈடுபடுவதற்குச் சுதந்திரம் வேண்டும்; அரசு அதிகாரம் மூலம் தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதையே இது வலியுறுத்தியது.

செவ்வியல் லிபரல் அரசியல் சிந்தனையாளர்களான ஜோன் லொக், ஜோன் ஸ்டுவார்ட் மில், மொன்டஸ்கியு ஆகியோர் ஐரோப்பிய முடியாட்சி அரசுகள் தனிநபர் சுதந்திரத்தைத் தடைசெய்யும் வகையில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்தனர். அரசியல் அதிகாரம் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கக் கூடாது என்றும், பிரஜைகளின் உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் இச்சிந்தனையாளர்கள் கருத்துரைத்தனர். அவர்களின் எழுத்துகளின் மூலம் பின்வரும் ஜனநாயக அரசியல் எண்ணக்கருக்களை உள்ளடக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

  1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)
  2. சட்டத்தின் ஆட்சி (Rule of Law)
  3. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை உடைய அரசாங்கம் (Limited Government)
  4. ஜனநாயகப் பொறுப்புக் கூறல் (Democratic Accountability)
  5. சுதந்திரமுடைய நீதித்துறை (Independent Judiciary)
  6. அதிகார வேறாக்கம் (Separation of Powers)

அதிகாரம் என்பதைப் பிறர் மேல் செலுத்தும் ஆதிக்கம் (Power Over) எனக் கூறும் தத்துவத்திற்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கியதாக லிபரல் அரசியல் மெய்யியல் வளர்ச்சியுற்றதைக் காணலாம்.

மார்க்சிய அரசுக் கோட்பாடு

அரசின் அதிகாரத்திற்கு எதிர்ப்பை வெளியிடுதல், அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுதல், மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புரட்சிக் கோட்பாடாக மார்க்சியம் விளங்குகிறது. இக்கோட்பாடு அதிகாரத்தின் ‘Power To’ என்ற பண்பிற்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது. மார்க்சியம் மட்டுமல்லாது, வேறு சமகால அரசியல் நோக்கு முறைகளிலும் அதிகாரத்திற்கு எதிர்ப்பு என்ற விடயம் அழுத்தம் பெறுகிறது. மார்க்சியம் ஒரு வர்க்கம் பிற வர்க்கங்கள் மீது செலுத்தும் அதிகாரத்தை (Power Over) ‘வர்க்க அதிகாரம்’ (Class Power) என வரையறை செய்கிறது. சொத்துடைய சமூக வர்க்கங்கள் பிற சமூக வர்க்கங்கள் மீது வர்க்க மேலாதிக்கத்தைச் (Class Domination) செலுத்துகின்றன; அம்மேலாதிக்கம் அவற்றின் சுரண்டலுக்கும், கீழ்ப்பட்ட சமூக வர்க்கங்களை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பொப் ஜெசொப் (Bob Jessop) என்னும் தற்கால மார்க்சிஸ்ட் எழுத்தாளரின் ‘The Capitalist State’ (2012) என்னும் நூலில், ‘சமூகத்தின் அதிகார உறவுகள் தனிநபர் உறவுகளை (Individual Relations) மட்டும் குறிக்கவில்லை; அவை சமூக அமைப்பின் (Social Structure) அடிப்படையில் அமைந்த வர்க்க உறவுகள் (Class Relations) ஆகும்’ என விளக்கம் தரப்பட்டுள்ளது.

சமூகத்தில் வர்க்க அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அதன் மூலங்கள் எவை? வர்க்க அதிகாரம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? ஆகியவற்றை ஆராய்வதை மார்க்சியம் முதன்மைப்படுத்துகிறது. அத்தோடு அதிகாரத்தின் மேலாதிக்கம் செய்தல் (Power Over) என்ற கூறில் மட்டுமல்லாது, அதிகாரத்தை எதிர்த்து நிற்றலும், மாற்றங்களை அதிகாரத்தின் மூலம் செயற்படுத்தலும் ஆகிய கூறுகளிலும் (‘Power To’ என்ற கூறு) மார்க்சியம் கவனம் செலுத்துகிறது.

வர்க்க மேலாதிக்கம் சமூகத்தில் முரண்பாடுகளைத் (Contradictions) தோற்றுவிக்கிறது; முரண்பாடுகள் அதிகரிக்கும் போது சமூகத்தில் உறுதிநிலை குலைகிறது. வர்க்க மேலாதிக்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. இக்காரணத்தால் வர்க்க மேலாதிக்கம் நிரந்தரமானதல்ல. வர்க்க மேலாதிக்கத்திற்கு எதிரான அதிகாரத்தை (Counter Power) கொண்ட அமைப்புகளின் செயற்பாடுகள் வலுவடைகின்றன. புரட்சி (Revolution) என்பது இருந்து வரும் சமூக உறவுகளை மாற்றி அமைக்கும் செயல்முறை என மார்க்சியம் விளக்குகிறது.

சுருங்கக் கூறினால் மார்க்சியத்தின் புரட்சி பற்றிய கோட்பாடு, மேலாதிக்கம் உடைய சமூகக் குழுக்கள் பிற சமூகக் குழுக்கள் மீது எவ்வாறு அதிகாரம் செலுத்துகின்றன (Power Over) என்ற விடயத்தை முதலில் விளக்கிக் கூறுகிறது. பின்னர், மேலாதிக்கமுடைய சமூகக் குழுக்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதிலும் புதிய வர்க்க உறவுகளையும் சமூக உறவுகளையும் உருவாக்குவதிலும் அதிகாரத்தின் ‘Power To’ என்ற கூறு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.

புரட்சி என்ற செயல்முறையின் ஊடாகக் கீழ்ப்பட்ட நிலையில் இருந்த சமூகக் குழுக்கள் தமது மக்களை அணிதிரட்டி ஒழுங்கமைத்தல், அரசு அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடருதல், நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றின் மூலம், தம்மை ஒடுக்கப்படுவோர் என்ற நிலையிலிருந்து தமக்குக் கிடைத்த புதிய அதிகாரத்தின் முகவர்களாக (Agents of New Power) செயற்படும் நிலைக்குத் தம்மை உயர்த்திக் கொள்கின்றன என்பதை மார்க்சியம் எடுத்துக்காட்டுகிறது.

இக்காரணங்களால், அதிகாரம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு சமூகவிடுதலை (Social Emancipation) பற்றிய கோட்பாடாக விளங்குகிறது என்பதை உயன்கொட அவர்கள் எடுத்துக் காட்டுகிறார் (பக். 6).

ஹன்னா அரன்ட் அவர்களின் அதிகாரம் பற்றிய கோட்பாடு

சமகால அரசியல் கோட்பாடுகளில் ஹன்னா அரன்ட் (Hannah Arendt) என்னும் பெண்மணியின் அதிகாரம் பற்றிய கோட்பாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. ஹன்னா அரன்ட் ஜெர்மனி தேசத்தில் பிறந்தவர். அவர் பிறப்பால் யூதராவார். 1930களில் ஜெர்மனியின் ஆட்சியை நாஜிகள் கைப்பற்றினர். 

ஹன்னா அரன்ட் அவர்களின் எழுத்துகள் விடுதலை, புரட்சி, அரசியல் செயற்பாடு (Political Action), அரசியல் அதிகாரம் ஆகிய கருத்தாக்கங்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வுகளாக அமைந்தன. அதிகாரத்தின் ‘Power To’ என்ற கூறிற்கு, அதாவது புரட்சிகர மாற்றங்களை உருவாக்கும் அதிகாரத்தின் ஆற்றலுக்கு, ஹன்னா அரன்ட் முதன்மையளித்தார். அந்தக் கூறை முதன்மைப்படுத்திய அதிகாரக் கோட்பாட்டை அவர் கட்டமைத்தார். அவர் ஐரோப்பியச் செவ்வியல் கோட்பாட்டில் அரசியல் அதிகாரம் பற்றிக் கூறப்பட்டவற்றை முற்றாக நிராகரித்தார். மேலாதிக்கக் குழுக்கள் பிற சமூகக் குழுக்கள் மீது செலுத்தும் அதிகாரம், அதாவது ‘Power Over’, ஒடுக்கப்பட்ட குழுக்களை ஆற்றலற்றவர்களாக்கும் (Disabling Force) சக்தியாகும் என அவர் எடுத்துக் காட்டினார். இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்டவர்களை ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கும் (Enabling Force) சக்தி, சமூக உறவுகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் ‘Power To’ என்ற கூறுதான் என அவர் குறிப்பிட்டார்.

ஹன்னா அரன்ட் அவர்கள் அதிகாரம் பற்றிய புதிய கோட்பாட்டை வடிவமைத்தார். அவர் ‘அதிகாரம்’ என்பதில் உட்பொதிந்துள்ள பலம் (Strength), சக்தி (Force), வன்முறை (Violence) என்பவற்றை நீக்கிவிட வேண்டும் என்று குறிப்பிட்டார். பலம், சக்தி, வன்முறை என்பவை மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகக் பயன்படுத்தப்படும் கருவிகள் என அவர் விளக்கினார். அதிகாரம் பற்றிய ஹன்னா அரன்ட் அவர்களின் கோட்பாடு பின்வரும் நூல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது:

  1. On the Human Condition (1958), Chicago: University of Chicago Press
  2. On Revolution (1963), New York: Penguin
  3. The Origins of Totalitarianism (1951), New York: Harcourt, Brace & Jovanovich
  4. Crisis of the Republic (1972)

அதிகாரம் என்பது தனிநபர் ஒருவர் தனது உடைமையாக வைத்திருக்கக் கூடிய ஒரு பொருள் அன்று; அல்லது தனிநபர்கள் பலரின் ஒன்றிணைவால் எழும் கூட்டுப் பலம் என்று கூட அதனை வரையறை செய்ய முடியாது.

தனிநபர்கள் ஒன்றிணைந்து கூட்டாகச் செயற்படும் போது அதிகாரம் தோன்றுகிறது. தனிமனிதர்களிடம் ஒரு சக்தி (Force) இருப்பது உண்மைதான். தனிமனிதர்களின் அச்சக்தியை ஒன்றுசேர்த்தால் வரும் கூட்டுத்தொகையான ‘சக்தி’ என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் இந்தக் கூட்டுச்சக்தியை விட பலம் வாய்ந்த கூட்டுப்பலம் (Collective Strength), மனிதர்கள் கூட்டாகச் செயற்படும் போது (Acting in Concert) உருவாகிறது. இந்தக் கூட்டுப்பலம் தமது ஒன்றிணைந்த செயற்பாடுகளால் உருவாக்கப்படுவது என்பதைக் கண்டு மனிதர்கள் வியப்படைகிறார்கள். மனிதர்களின் இக்கூட்டுப்பலம் வன்முறை ஆயுதங்கள் (Weapons of Violence) மூலம் அடையப்படுவதில்லை; அவ்வாயுதங்களுக்கான தேவையும் இல்லை. காந்தி கூறிய சாத்வீக நடவடிக்கை (Practice Of Non-violence) என்பதையே ஹன்னா அரன்ட் மக்களின் கூட்டுப் பலமாக விளக்கம் தருகிறார். சாத்வீக முறையிலான எதிர்ப்பு, ஒத்துழையாமை ஆகியவற்றின் மூலம் மனிதர்களால் அரசியலில் அசாதாரண சாதனைகளை நிகழ்த்த முடியும்.

மனிதர்கள் கூட்டாகச் செயற்படுதல் (Acting in Concert) என்னும் ஹன்னா அரன்ட் அவர்களின் கருத்து அதிகாரம் பற்றிய புதிய விளக்கமாகும். அவரது அதிகாரம் பற்றிய இந்தப் புதிய விளக்கம், ஐரோப்பாவில் 1930களில் தோன்றிய இரண்டு வரலாற்றுப் போக்குகளின் பின்னணியில் உருவானது. ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் பாசிசம் (Fascism) ஒடுக்குமுறை ஆட்சியாக அமைந்தது. இதேபோல் சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலினிசம் (Stalinism) மக்களை ஒடுக்கும் ஆட்சிமுறையாகச் செயற்பட்டது. இவ்விரு நாடுகளிலும் அரசியல் அதிகாரம் (Political Power) மனித உரிமைகளைப் பறிக்கும் மேலாதிக்கமாகவும் ஒடுக்குமுறையாகவும் வடிவம் பெற்றது.

மேற்கண்ட அனுபவங்களின் பின்புலத்திலேயே ஹன்னா அரன்ட், அதிகாரம் மக்களின் விடுதலைக்கான பலத்தைத் தருவது; அது ஆயுதபலத்தாலோ வன்முறையாலோ பெறப்படும் பலம் அன்று என்ற கருத்தை விளக்கினார். ஹன்னா அரன்ட் போலவே, இந்தியரான மகாத்மா காந்தியும் அதிகாரம் பற்றிய தமது கோட்பாட்டை வன்முறையற்ற பலம் என்ற அடிப்படையில் வடிவமைத்தார். அவர் கூறிய சாத்வீக எதிர்ப்பு, நடைமுறை அரசியலில் அதிகாரத்தை மேலாதிக்கத்திற்கான கருவியாகப் பயன்படுத்துவதை எதிர்க்கும் கோட்பாடாகும். காந்தியின் அதிகாரமும் அரசியலும் (Power and Politics) குறித்த கோட்பாடு மேற்குநாட்டு அரசியல் மெய்யியல் கருத்துகளில் இருந்து பெறப்பட்டது அல்ல; அவரது கருத்துகளின் மூலமாக, இந்தியச் செவ்வியல் சமய மரபுகளான இந்து, பௌத்த, சமண மரபுகள் அமைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

இக்கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். 

  1. அதிகாரம் என்பது பிறரது முடிவுகளையும் செயல்களையும் (Decisions and Actions) தீர்மானிப்பதற்குரிய ஆற்றல் என அரசியல் கோட்பாடு வரையறை செய்கிறது. இது அதிகாரம் குறித்த பொதுவான கருத்தாகும்.
  2. மேற்படி கருத்தை நடத்தைவாத அரசியல் விஞ்ஞான (Behavioural Political Science) நோக்கில் றொபர்ட் டால் விளக்கினார். ‘A என்பவர் B மீது அதிகாரம் உடையவராக இருக்கிறார் என்று கூறும்போது, B சாதாரணமாகச் செய்ய முன்வராத செயலை அவரைக் கொண்டு செய்விக்கும் ஆற்றலை A பெற்றிருக்கிறார் என்று பொருள்படும்; இதனையே அதிகாரம் என்று கூறுவர்’ என்பது றொபர்ட் டால் முன்வைத்த வரைவிலக்கணமாகும். இது ஆங்கிலத்தில் ‘Power Over’ எனக் குறிக்கப்படும் அதிகாரத்தைச் சுட்டுகிறது எனலாம்.
  3. அரசியல் கோட்பாட்டில் ‘Power To’ என்னும் அதிகாரத்தின் பிறிதொரு கூறும் முதன்மைப்படுத்திப் பேசப்படுகிறது.
  4. மக்கள் எக்காரணத்திற்காக அதிகாரத்திற்குப் பணிந்து போகின்றனர்? ஏன் அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்றனர்? என்ற வேறொரு கோணத்தில் மக்ஸ் வெபர் (Max Weber) என்னும் சமூகவியலாளர் ஆய்வு செய்தார். அவர் ‘சட்டரீதியானது’ (Legitimacy) என்ற அம்சம் அதிகாரத்திற்கான ஏற்புடைமையை வழங்குகிறது எனவும், மக்கள் அதிகாரத்திற்குப் பணிந்து போவதற்கு இதுவே காரணம் எனவும் குறிப்பிட்டார். மக்ஸ் வெபர் ‘அதிகாரத்துவம்’ (Authority) என்ற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தார்.
  5. அதிகாரம் என்பது ‘மேலாதிக்கம் செலுத்துதல்’ (Power Over) என்பதில் இருந்து வேறுபட்ட ‘Power To’ என்னும் புரட்சி நோக்கிலான விளக்கம் ஆகும். இது அதிகாரத்தை எதிர்த்து நிற்றல் (Resistance to Power) என்ற அம்சத்திற்கு முதன்மை அளிக்கிறது. கார்ல் மார்க்ஸ், மகாத்மா காந்தி, ஹன்னா அரன்ட் ஆகிய மூவரும் இந்த அம்சத்திற்கு முதன்மையளிக்கும் மூன்று வெவ்வேறு கோட்பாடுகளை முன்வைத்தனர்.

மீளாய்வு வினாக்கள்

கட்டுரையின் இறுதியில் மீளாய்வு வினாக்கள் (Review Questions) சிலவற்றைப் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்கள் தந்துள்ளார். அரசியல் அதிகாரம் பற்றிய கோட்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு உதவக்கூடிய இவ்வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

  1. அரசியல் கோட்பாடு ‘அதிகாரம்’ (Power) என்னும் கருத்தாக்கத்தை எவ்வாறு வரையறை செய்கிறது என்பதைச் சுருக்கமாகக் கூறுக.
  2. ஸ்டீவன் லூக்ஸின் (Steven Lukes) அதிகாரம் குறித்த கோட்பாடு யாது? விளக்கிக் கூறுக (What is Steven Lukes’ theory of power).
  3. ‘Power Over’, ‘Power To’ என்ற ஆங்கில வினைத்தொடர்கள் அதிகாரம் என்பதை எவ்வாறு வரையறை செய்துள்ளன (Define ‘Power Over and ‘Power To’)?
  4. மக்கள் அதிகாரத்திற்கு ஏன் பணிந்து போகின்றனர் என்பதற்கு மக்ஸ் வெபர் (Max Weber) கூறும் விளக்கம் யாது?
  5. மக்ஸ் வெபர் குறிப்பிடும் மூவகை ‘அதிகாரத்துவம்’ (Authority) யாவை? அவை ஒவ்வொன்றுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்கிக் கூறுக.
  6. ‘Power To’ என்றால் என்ன? அது எங்கனம் ‘Power Over’ இல் இருந்து வேறுபடுகிறது (What is ‘Power To’? How does it differ from ‘Power Over’)?
  7. ‘Power To’ என்னும் அதிகாரத்தின் புரட்சிகர அம்சத்திற்கு முதன்மை அளிக்கும் கோட்பாடுகள் இரண்டினை விவரித்துக் கூறுக.
  8. மகாத்மா காந்தியின் அதிகாரம் பற்றிய கருத்தாக்கத்தை விளக்குக.

இத்தமிழ்க் கட்டுரை ஜயதேவ உயன்கொட அவர்களின் ‘Political and Political Science: A Contemporary Introduction என்னும் நூலின் (பக். 57–68) ‘Politics as a Relation of Power’ என்ற தலைப்பிலான கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. அதிகாரம் பற்றிய அரசியல் மெய்யியல் ஆய்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது. 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்