நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்

March 3, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது.

மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் வருகை. மாபெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் வலிய பிரித்தானியப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருந்த காந்தி சிறிய இலங்கைத் தீவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.

காந்தி இலங்கைக்கு வந்தது பிரித்தானியப் பேரரசுக்கு எதிராகத் தேசிய உணர்ச்சியைத் தூண்டுவதற்கல்ல. அவர் தனது கதர் நிதிக்குப் பணம் சேர்க்க வந்தார். எனினும் அவருடைய தேசியப் போராட்டமும் அரசியல் சிந்தனையும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் நன்கறிந்த விஷயங்களாக இருந்தன. ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பைச் சேர்ந்த இலங்கை அரசியல் தலைவர்கள் பேரரசுக்கு விசுவாசமாக இருந்தவர்கள்; காந்தியின் வழியைப் பின்பற்ற அவர்கள் விரும்பவில்லை. எனினும், இவர்களுள் சிலர் காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்புகளில் பங்குகொண்டனர். கொழும்புத் தமிழ் யூனியன் (Tamil Union) கொடுத்த வரவேற்புக்குப் பொன்னம்பலம் இராமநாதன் தலைமை தாங்கினார். பௌத்தர்கள் கொடுத்த வரவேற்பில் டொன் பாரன் ஜயதிலக பங்குபற்றினார்.

காந்தியின் சிந்தனையால் கவரப்பட்டவர்கள் இளைஞர்களே. தெற்கில் ஏ.ஈ. குணஸிங்ஹ, விக்டர் கொறயா போன்றோரும் வடக்கில் யாழ்ப்பாணத்து இளைஞர் காங்கிரஸும் காந்தி வகுத்த ‘பூர்ண ஸ்வராஜ்’ என்ற பேரொலியை எழுப்பினர். மத்திய வகுப்புத் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

1920களின் தொடக்க ஆண்டுகள்

முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் ஒரு புதிய காலகட்டம் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிலும் தொடங்கியது எனலாம். போர் 1918 நவம்பரில் முற்றுப் பெற்றது; போரின் விளைவாக ஏற்பட்ட உடன்படிக்கைகள் 1919 இல் கைச்சாத்திடப்பட்டன.

ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் இருந்த மூன்று முக்கியப் பேரரசுகள் போரின் விளைவாக வீழ்ச்சியுற்றன. இவ்வல்லரசுகளின் கீழ் அடக்கப்பட்டிருந்த இனக்குழுக்களும் பிரதேசக்குழுக்களும் விடுதலை பெற்றதும், ஒரு புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக அமைவது தேசியவாத எழுச்சியும் புதிய தேசங்களின் தோற்றமும் ஆகும்.

இவற்றை விரித்துக் கூறுவது எனது நோக்கம் அல்ல. எனினும், இவை தென் ஆசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தால், சிலவற்றை இலங்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட நேரிடும். சிறப்பாக, ஒரு முக்கிய அரசியல் கோட்பாடு செல்வாக்குப் பெறுவதை முதல் உலகப் போர் முடிவில் இருந்து இன்று வரை காணலாம்.

போர் முடியும் கட்டத்தை அடைந்த நிலையில் போரின் பின் அமைய வேண்டிய அரசியல் ஒழுங்குகளுக்கு அடித்தளமாக இடம்பெறும் ஒரு கோட்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி வூட்ரோ வில்ஸன் (Woodrow Wilson) அழுத்தினார். அது தான் தன்னாட்சி உரிமை (சுய நிர்ணயம்/ Self-determination) என்ற கோட்பாடு. இதன் முக்கிய விளைவாக ஐரோப்பாவில் பல புதிய சுதந்திர அரசுகள் தோன்றின. தேசியவாத உணர்ச்சி வலுப்பெற்றது.

ஐரோப்பாவுக்கு அப்பால் வெள்ளையர் அல்லாத மக்கள் இடங்களிலும் தேசிய உணர்ச்சி தூண்டப்பட்டிருந்தாலும், போரில் வெற்றிபெற்ற வல்லரசுகள் அவ்விடங்களில் தன்னாட்சி உரிமையை வழங்க விரும்பவில்லை. மேற்கு ஆசியாவில் துருக்கியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அரபு நிலங்களைத் தங்கள் பாதுகாப்புக்கு உட்பட்ட அரசுகளாக (Mandated Territories) பிரித்துப் பிரித்தானியாவும் பிரான்ஸும் ஆட்சி செலுத்தின. இதன்படி, ஈராக் (Iraq) மற்றும் பாலஸ்தீனம் (Palestine) என்ற நாடுகள் பிரித்தானியாவின் கீழும், ஸிரியா (Syria) மற்றும் லெபனான் (Lebanon) என்ற நாடுகள் பிரெஞ்சு அரசின் கீழும் வந்தன. 

துருக்கியர் பேரரசின் மையமாக இருந்த துருக்கி நாடு (Turkey/ T¨ürkiye) போரின் பின் தனிநாடாக மாறியதும் அங்கு புரட்சிகரமான தேசியவாத எழுச்சி ஏற்பட்டது. இதை வெற்றிகரமாக முன் நின்று நடத்திய தலைவர் கமல் அட்டாதுர்க் (Kemal Atatürk) என இன்று போற்றப்படும் முஸ்தாபா கெமால் ஆவார். மத்தியகாலப் பண்பாட்டில் மூழ்கிக்கிடந்த துருக்கியர் சமூகமும் நாடும், நவீனமயப்பட்ட ஐரோப்பியப் பண்புகளைக்கொண்ட ஒரு நாடாக மாறியது இவர் தலைமையிலாகும்.

துருக்கியில் 1920களில் தொடங்கிய இப்புரட்சியை ஆசிய சமூகங்கள் ஆர்வமுடன் கவனித்தன என்பதில் ஐயமில்லை. ஐரோப்பியர் பேரரசுவாதம் கொடுத்த சவாலை (Challenge) எப்படி எதிர்நோக்கி ஏற்று நடந்துகொள்வது (Response) என்பது பற்றி இச்சமூகங்களுக்குத் தடுமாற்றம் இருந்தது. இச்சவாலைச் சமாளிப்பதற்குத் துருக்கியை ஓர் ஐரோப்பிய நாடாக மாற்றி ஐரோப்பியருடன் சமத்துவம் கோருவதே சரியான வழி என முஸ்தாபா கெமால் செயற்பட்டார் (ஜப்பானும் முன்னர் இவ்வாறே செயற்பட்டு, ஐரோப்பியப் பேரரசுவாதத்தைப் பின்பற்றிச் சமத்துவத்தைப் பெற்றது).

இலங்கையிலும் 1920களில் ஐரோப்பியப் பேரரசுவாதம் ஒரு திருப்புமுனையை அடைந்தது. ஒருபுறம், பிரித்தானிய அரசாங்கம் அரசியல் சீர்திருத்தங்களைச் செய்யத் தயாராகக் காணப்பட்டது. மறுபுறம், ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்புத் தலைவர்கள் கூடுதலான அரசியல் உரிமைகளைக் கோரத் தொடங்கினர்.

இலங்கையருடைய அரசியல் தலைவர்களாக இருந்த மத்திய வகுப்பினருக்குப் பிரித்தானியப் பேரரசுவாதம் ஒரு சவாலாகக் காணப்பட்டது என்று கூறுவது தவறாகும். இவர்கள் பிரித்தானியர் ஆட்சியில் திருப்தி கண்டவர்கள்; அந்நியர் ஆட்சியால் சமூகத்தில் மேலெழுந்தவர்கள். சில அரசியல் உரிமைகளைப் பெற விரும்பினாலும், பிரித்தானியர் ஆட்சி நீங்கவேண்டும் என இவர்கள் விரும்பவில்லை. பிரித்தானியப் பேரரசு நிலைக்கும் என நம்பினார்கள்; அந்தப் பேரரசில் இணைந்த ஒரு பாகமாக (Integral Part) இலங்கை அமைய வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள்.

இப்படியான ஓர் அமைதியான சூழலில், பிரித்தானிய அரசாங்கம் 1920களில் எடுத்த நடவடிக்கைகள் மத்திய வகுப்பினருக்கு ஏக்கத்தையும் குழப்பத்தையும் விளைவித்தன. கேட்டதை மட்டுமன்றிக் கேட்காததையும் ஆட்சியாளர் கொடுக்கத் தயாராக இருந்தனர். வருவதற்கு இருந்த மாற்றங்களை ஒரு சாரார் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்தனர். இன்னொரு சாரார் அச்சமடைந்து எதிர்க்கத் தொடங்கினர். இலங்கையின் எதிர்கால அரசியல் பின்னர் நாம் காணும் பாதையில் செல்லத் தொடங்கியது 1920களில் ஆகும்.

யாழ்ப்பாணத்தில் 1920கள் வரை அரசியல் செயல்பாடுகள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை எனலாம். அரசியல்வாதிகள் இல்லை, அரசியல் கட்சிகள் இல்லை, தேர்தல்கள் இல்லை. எனினும் தெற்கில் இடம்பெற்ற அரசியல் சீர்திருத்தம் தொடர்பான உரையாடல்கள் வடக்கிலும் விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணியிருக்கும்.

இப்பின்புலத்தில், மத்திய வகுப்பைச் சேர்ந்த சில யாழ்ப்பாண ஆர்வலர்கள் 1906 ஜனவரி 6 இல் மத்திய கல்லூரியில் கூடி ‘Jaffna Association’ (யாழ்ப்பாணக் கழகம்) என்ற ஓர் அரசியல் அமைப்பை நிறுவினர். அன்று 54 பேர் அதன் உறுப்பினராகச் சேர்ந்தனர். கழகத்தின் முதலாவது தலைவராக ஜேம்ஸ் முத்தையா ஹென்ஸ்மன் தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் பாடசாலைக் கல்வியை முடித்தபின் சென்னைக்குச் சென்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாகி, இந்தியக் கல்விச் சேவையில் சேர்ந்து, கும்பகோணம் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்று யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிவந்திருந்தார்.

இக்கழகம் அமைக்கப்பட்ட பின் யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினர் தேசிய அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். இவர்களுடைய செயல்பாடுகள் பற்றி விரிவாக அறிவதற்கு கழக அறிக்கைகளும் ஆவணங்களும் கிடைப்பது அரிது. இக்கழகத்தைத் தொடக்குவதற்கு யார் யார் ஆர்வம் காட்டினர்? சென்னையில் மேற்படிப்பை முடித்துத் தமிழ்நாட்டில் தொழில்புரிந்து ஓய்வு பெற்றபின் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிவந்த ஹென்ஸ்மன் ஏன் கழகத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்? அவர் இந்தியாவில் இருந்து தேசியவாதக் கருத்துகளைக் கொண்டுவந்து மத்திய வகுப்பினரை ஊக்குவித்தாரா? இப்படியான பல வினாக்களுக்கு வருங்கால ஆய்வுகள் விடையளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தெற்கில் இயங்கிக்கொண்டிருந்த சிலாபக் கழகம் (Chilaw Association) அரசியல் சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்த விரும்பி 1909 இல் லண்டனில் காலனி ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சருக்கு ஒரு விண்ணப்பப் பத்திரத்தை (Memorial) இலங்கை ஆளுநர் ஊடாக அனுப்பிவைத்தது. இதை ஒத்த விண்ணப்பங்கள் ‘Ceylon National Association’, ‘Jaffna Association’ ஆகிய கழகங்களாலும் அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டன என அறியமுடிகின்றது. முக்கிய அம்சங்களைப் பொறுத்து இந்த விண்ணப்பங்களில் வேறுபாடு இருக்கவில்லை.

இவற்றில் ஓர் அம்சம் கவனத்துக்குரியது. அதாவது, நாட்டின் சட்டவாக்க சபையின் (Legislative Council) அங்கத்தவர்கள் ஆளுநரால் தெரிவு செய்யப்படாது தேர்தல் மூலம் (Election of Members) தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதாகும். சிலாபக் கழகம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது. யாழ்ப்பாணக் கழகம் இதனை ஆதரித்தது. தேசிய அரசியல் நீரோட்டத்தில் முதல் தடவையாகச் சேர்ந்துகொண்ட யாழ்ப்பாண அரசியல் தலைவர்கள் தெற்கில் இருந்த தலைவர்கள் கோரிய மிக முக்கியமான அம்சமாகிய தேர்தல் முறைக்குச் சம்மதம் தெரிவித்தமைதான் கவனிக்கப்பட வேண்டியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் மக்களாட்சிக் கருத்துகள் பரவத் தொடங்கிய காலமாகும். உலகின் பெரும்பாகம் பேரரசர்களுடைய ஆட்சிக்குள் அகப்பட்டிருந்தது. இதற்கு வெளியே பல நாடுகள் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தன. ஐரோப்பாவின் சில நாடுகளிலும் அமெரிக்காவிலும் மக்கள் ஆட்சி முறை காணப்பட்டது.

இப்பின்புலத்தில் தேசியவாதம், மக்களாட்சி, தாராண்மைவாதம் ஆகியவை தொடர்பான கருத்துகள் உலகில் பரவத் தொடங்கின. ஆங்கிலக் கல்விகற்ற இலங்கையர் மத்தியிலும் இக்கருத்துகள் செல்வாக்குப் பெற்றன. இந்தியாவில் வளர்ந்துகொண்டிருந்த தேசிய இயக்கமும் இலங்கையில் ஓரளவு தாக்கத்தை உண்டுபண்ணியது. இச்சூழலில், ஆங்கிலம் கற்ற யாழ்ப்பாண மத்திய வகுப்பினர் தேசிய அரசியலில் பங்குகொள்ளத் தொடங்கினர். மக்களாட்சிக்கு இன்றியமையாத அம்சமாக விளங்கும் இடம்சார் பிரதிநிதித் தேர்தல் முறையை (Territorial Representation) இவர்கள் ஆதரித்தனர். இதன் மறுபக்கம், இனம்சார் பிரதிநிதித்துவத்தை (Communal Representation) கைவிடுவதாகும்.

தேர்தலும் பெரும்பான்மை – சிறுபான்மைப் பிரிவினையும்

மத்திய வகுப்பினர் வேண்டிநின்ற இடம்சார் தேர்தல்முறைக்கு ஆளுநரும் லண்டனில் காலனி ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். நாட்டின் இனக்குழுக்களைப் பிரித்து வைத்திருப்பது ஆட்சியாளருடைய ‘பிரித்து ஆளும்’ (Divide and Rule) கொள்கைக்குத் தேவைப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். பிரித்தானியர் சிங்கள இனக்குழுவையே கண்டியர் என்றும் கீழ்நாட்டுச் சிங்களவர் (Low-country Sinhalese) என்றும் பிரித்து வைப்பதை விரும்பினர்.

இப்பின்புலத்தில் 1921 இல் சட்டவாக்க சபையின் அமைப்பை மாற்றும் சீர்திருத்தங்கள் அறிமுகமாகின. இவற்றுடன் இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மக்களாட்சிக்கு அடித்தளமாக அமையும் தேர்தல் முறை தொடக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசியல்வாதிகள், வாக்காளர் மத்தியில் காணப்படும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் அழுத்திப் பயன்படுத்துவர். அப்படி இல்லாதவற்றை உண்டுபண்ணுவர். இதனை இக்காலகட்டத்தில் இருந்து இலங்கையில் காணலாம்.

இன்னொரு திருப்பமும் முக்கியமானது. தெற்கின் அரசியல் தலைவர்களுடைய வேண்டுகோள்களுக்குச் சம்மதம் தெரிவித்த யாழ்ப்பாணத்து அரசியல் தலைவர்கள் 1920களில் இருந்து சம்மதியாமை அரசியலில் (Politics of Dissent) ஈடுபடத் தொடங்கினர். இது பின்னர் மாறவே இல்லை.

ஆளுநர் மனிங் (Manning) 1921 இல் அறிமுகப்படுத்திய சீர்திருத்தப்பட்ட சட்டவாக்க சபையில் 14 அரச ஊழியர்களும் (Official Members), 23 அரச ஊழியர் அல்லாதோரும் (Unofficial Members) உறுப்பினராக இருந்தனர். அரச ஊழியர் அல்லாதோருள் 11 உறுப்பினர் இடம்சார் (அதாவது, பிரதேச அடிப்படையிலான) தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுள் ஒருவர் வட மாகாணத்தில் இருந்தும் இன்னொருவர் கீழ் மாகாணத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய ஏழு மாகாணங்களும் ஒன்பது உறுப்பினரைத் தெரிவு செய்தன.

வட மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்றவர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1875 – 1966) ஆவார். இவர் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினருடைய அரசியல் தலைவர்களுள் முக்கியமான ஒருவராகக் காணப்படுவார். கீழ் மாகாணத்தின் உறுப்பினராக E.R. தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டார்.

இவர்களுடன், பிற சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம் ஒருவர், கண்டியர் இருவர், இந்தியத் தமிழர் ஒருவர் ஆகியோர் ஆளுநரால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அரச ஊழியர் அல்லாத 23 உறுப்பினர்களுள், 12 பேர் சிங்களவர் (கண்டியர் உட்பட), 3 பேர் தமிழர் (இந்தியர் உட்பட).

இந்த நிலை 1924 இல் மேலும் மாற்றமடைந்தது. சட்டவாக்க சபை மேலும் சீர்திருத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. இதில் 49 உறுப்பினர் இருந்தனர்; 12 அரச ஊழியர்கள், 37 அரச ஊழியர் அல்லாதோர். இந்த அரச ஊழியர் அல்லாதோருள் மூவர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர் (ஒரு சிங்களவர், ஒரு இலங்கைத் தமிழர், ஒரு பறங்கியர்), 34 பேர் தேர்தல் மூலம் உறுப்பினராகினர் (23 பேர் இடம்சார் தொகுதிகளின் பிரதிநிதிகள் – 16 சிங்களவர், 7 இலங்கைத் தமிழர்; 11 பேர் இனக்குழுத் தேர்தல் மூலம் உறுப்பினராகினர் – 3 ஐரோப்பியர், 2 பறங்கியர், 3 முஸ்லிம்கள், 2 இந்தியர், மேல்மாகாணத்து இலங்கைத் தமிழர் ஒருவர்).

இச்சீர்திருத்தங்கள் இனக்குழு வேறுபாடுகளை அழுத்தியவையாக, மேலும் இவை நிலைப்பதை ஊக்குவிப்பவையாக அமைந்தமை கவனிக்கத்தக்கது. இதற்கு விதிவிலக்காக, கண்டியர் – கீழ்நாட்டுச் சிங்களவர் என்ற வேறுபாடு அழுத்தப்படவில்லை. இது விரைவில் அழிந்துபோவதைப் பின்னர் காணலாம். தம்மை ஒரு பெரும்பான்மைச் சமூகமாகக் கருதிய இலங்கைத் தமிழர் இக்காலகட்டத்தில் தாம் ஒரு சிறுபான்மைச் சமூகம் என்பதை உணரத் தொடங்குவதையும் காணலாம்.

யாழ்ப்பாணத்து அரசியல் தலைவர்கள்

புதிய சட்டவாக்க சபை 1924 இல் அமைக்கப்பட்ட போது வட மாகாணத்தில் இருந்து பின்வருமாறு ஐவர் தேர்தல் மூலம் உறுப்பினராகினர்: வட மாகாணம் வடக்கு – பொன்னம்பலம் இராமநாதன், வ.மா. தெற்கு – ஆறுமுகம் கனகரத்தினம், வ.மா. மேற்கு – வைத்திலிங்கம் துரைசுவாமி, வ.மா. கிழக்கு – தம்பையா முதலியார் சபாரத்தினம், வ.மா. நடுத்தொகுதி (Central) – எஸ். ராஜரத்தினம். 

கீழ் மாகாணத்தில் இருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: திருகோணமலை – எம்.எம். சுப்பிரமணியம், மட்டக்களப்பு – ஈ.ஆர். தம்பிமுத்து. இனக்குழுத் தேர்தல் மூலம் மேல் மாகாணத்து இலங்கைத் தமிழர் பிரதிநிதியாக அருணாசலம் மகாதேவா (பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன்) தெரிவானார். இந்தியத் தமிழர் பிரதிநிதிகளாக கே. நடேச ஐயரும் ஐ.எக்ஸ். பெரைராவும் தெரிவானார்கள்.

இடம்சார் தேர்தல் பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களுக்குச் சாதகமாக அமையும் என்பது 1920களில் வெளிப்பட்டது. இது யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினருடைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவுகளைத் தணிப்பதற்கு யாழ்ப்பாணத்துத் தலைவர்கள் 1920களில் இருந்து பல்வேறு முயற்சிகளை எடுப்பதில் கவனம் செலுத்தினர்.

இலங்கையர் தேசியவாதம்

இவ்வாறு 1920களில் உருவாகிய புதிய அரசியல் சூழ்நிலையில் பொன்னம்பலம் அருணாசலம் விதைத்த இலங்கையர் தேசியவாத விதை துளிர்த்தெழ வாய்ப்பே இருக்கவில்லை. யாழ்ப்பாணத்து அரசியல் தலைவர்கள் அருணாசலத்துக்கு முழுமனதாக ஆதரவு வழங்கத் தயங்கினர். கொழும்பில் இருந்த சிங்களத் தலைவர்கள் பலர் அவருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அருணாசலம் தேசிய காங்கிரஸை விட்டுவிலகினார். இவற்றைப் பின்னர் பார்ப்போம்.

பௌத்த இயக்கமும் மது ஒழிப்பு இயக்கமும்

அநகாரிக தர்மபால தொடக்கிய பௌத்த இயக்கம் 20 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து வலிகுன்றாது வளர்ந்துகொண்டு சென்றது. பௌத்த மதத்தின் மறைந்துபோன (அவர் கற்பனை செய்த) பொற்காலத்தை மீண்டும் மலரச்செய்ய உழைப்பதாகக் கூறிக்கொண்டு தர்மபால ஒரு புதிய பௌத்த அமைப்பை உருவாக்கினார். இதற்கு மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபேஸேகர ‘Protestant Buddhism’ என்ற பெயரைக் கொடுத்தார். இன்னொரு மானிடவியல் அறிஞர், எச்.எல். ஸெனெவிரத்ன இதை ‘Neo-Buddhism’ என்பார்.

இப்புதிய அமைப்பில் பௌத்த பிக்குமார் முன் ஒருபோதும் இல்லாத ஒரு வகிபங்கைச் சமூகத்தில் பெற்றனர். தர்மபாலவின் செயல்பாடுகள் 1920கள் வரை நீடித்தபின் அவர் வழிவந்த (‘Dharmapalite Missionaries’ என ஸெனெவிரத்ன வர்ணிக்கும்) துறவிகள் சிங்கள – பௌத்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர். இவர்களுள் பலர், கலுகொந்தயாவே பஞ்ஞாஸேகர தேரர் தொடக்கம் வல்பொல ராஹுல தேரர் வரை, அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நவீன இலங்கையின் வரலாற்றுப் போக்கினைத் திசைதிருப்ப உதவினர். இதனைப் பின்னர் பார்க்கலாம்.

இதேவேளை, ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினர் வட்டத்துக்கு அப்பால் இருந்த ஊர்ப்புற மக்களை விழிப்படையச் செய்து அரசியல்சார் எதிர்ப்புணர்சிகளைத் தூண்டி, சிங்கள – பௌத்த சமூகத்தை ஒன்றிணைக்க உதவிய ஓர் இயக்கமாக மது ஒழிப்பு இயக்கம் (Temperance Movement) பரவியது. அத்துடன், கொழும்புக்கு வெளியே ஊர்ப்புற அதிகாரம் பெற்றிருந்த கொயிகம (ගොයිගම/ வேளாளர்) சமூகத்தைச் சேர்ந்த பௌத்த மத்திய வகுப்புத் தலைவர்கள், தங்கள் தேசிய இயக்கத்தை மது ஒழிப்பு இயக்கத்துடன் சங்கமிக்க வைத்து உயர்வு பெறவும் உதவினர். ஸேனாநாயக்க குடும்பம் (F.R. ஸேனாநாயக்க, D.S. ஸேனாநாயக்க ஆகியோர்) இவ்வாறே எழுச்சி பெற்றது.

இவை தெற்கில் நடந்துகொண்டிருந்த போது, வடக்கில் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இலங்கையின் அரசியல் போக்கை வேறொரு திசையில் திருப்ப முயன்றனர். இவை 1920களில் நடைபெற்றுக்கொண்டிருக்க, டொனமூர் ஆணையாளர் இலங்கைக்கு வந்தனர். இந்த வரலாற்று வளர்ச்சிகளை அடுத்துப் பார்க்கலாம்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்