பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
40 நிமிட வாசிப்பு

பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 2

February 12, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

3

புராதன வழிபாட்டுச் சின்னங்களும் சில பண்டைய கோயில்களும்

வேல் வழிபாடு

யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில், பெருங்கற்காலக் கலைப் பொருட்களுடன் வெண்கலத்தினாலான வேல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. வேல் வழிபாடு முருகக் கடவுளுடன், அவரது முக்கிய ஆயுதமாகக் கருதப்பட்ட போதிலும் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தில் முருக வழிபாடு யாழ்ப்பாணத்தில் இருந்ததா? என்பதை நிச்சயமாகக்கூற முடியவில்லை.

கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த வெண்கல வேல். நன்றி: ப. புஷ்பரட்ணம்.

சந்திரகுப்த விக்கிரமாதித்ய மன்னனின் (கி.பி. 375–413) அவைப் புலவனான மகாகவி காளிதாசனின் குமாரசம்பவத்தில் ஸ்கந்தன் கரத்தில் வேலுடன் வர்ணிக்கப்படுகிறார். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்கந்தபுராணத்தில் கையில் வேலுடன் ஸ்கந்தன் காட்சி தருகிறார். அப்புராணத்தைத் தழுவி காஞ்சிபுரத்து குமரக்கோட்டத்தில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் கையில் வேலுடன் வள்ளி–தேவயானி சமேதராய் மயிலின் மேல் அமர்ந்த கந்தன் காட்சி தருகிறார்.

ஆனாலும், கந்தனை வேலோடு இணைத்த பெருமைக்குரியவர்கள் இவர்கள் அல்ல. தமிழகத்தில் வாழ்ந்த ஆதிக் குடிமக்கள் பேணி வணங்கிய கந்தசாமி (‘கந்த’ என்றால் ஒஸ்ரிக் மற்றும் முண்டா மொழிகளில் ‘மலை’ என்று அர்த்தம். கந்தசாமி என்றால் மலைச்சாமி) கையில் வேலுடன் காட்சிப்படுத்தப்படுகிறார். தமிழகத்தின் ஆதிக் குடிமக்கள் வணங்கிய தெய்வங்களுள் கந்தசாமி எனப்படும் கந்தனும் ஒருவர்.

தமிழில் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை பண்டைக்காலத் தமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருக வழிபாட்டைப் பற்றிக் கூறும் முதல் நூல். அந்த முருகன் கையிலிருந்த ஆயுதம் வேல்தான். பின்னால் வந்த கச்சியப்பர் செய்ததெல்லாம் வட இந்திய ஸ்கந்தனையும் தமிழரின் தெய்வமான முருகனையும் ஒன்றாக இணைத்து நமக்கு ‘கந்தன்’ ஆக்கித் தந்ததுதான். ஆனாலும், கந்தபுராணம் சிறப்பான ஒரு சமய இலக்கியம் என்பதனை மறுக்க முடியாது.

திரிசூல வழிபாடு 

பெருங்கற் புதையல்களில் கண்ட திரிசூலம், வேல்.       

திரிசூலம் பிடித்த கிரேக்கத் தெய்வம் பொஸிடொன்.

திரிசூலம் பிடித்த சிவன்

இந்துமதம் என்றொரு சமயம் ஆரம்பிப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே உலகின் பல பகுதிகளில் திரிசூலத்தை ஒரு வழிபாட்டுப் பொருளாக பல சமூகங்கள் ஏற்றுக்கொண்டிருந்தன. கி.மு. 1200 ஆம் ஆண்டுகளுக்குரிய தென்னிந்திய, இலங்கையின் பெருங்கற் பண்பாட்டுப் புதைகுழிகளில் இரும்பு, செம்பு ஆகிய உலோகங்களாலான திரிசூலம், வேல் ஆகிய வழிபாட்டுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் சிவனின் ஆயுதமான திரிசூலம் ஓர் ஆற்றல் மிக்க, பெருஞ் செல்வாக்குடைய சமயச் சின்னமாக விளங்குகிறது. அவரது முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றை கையில் பிடித்த திரிசூலத்தின் மும்முனைகளும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

கிரேக்க இலக்கியங்களில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கையில் திரிசூலம் பிடித்த ஒலிம்பியக் கடவுளான பொஸிடொன் குறிப்பிடப்படுகிறார். கையில் திரிசூலம் பிடித்தவண்ணம் எருது வாகனத்தில் எழுந்தருளி வரும் பொஸிடொன் கடவுளுக்கும் சிவனுக்குமிடையிலுள்ள ஒற்றுமை நம்மை வியப்படைய வைக்கிறது. கிரேக்கரின் ஸீயுஸ் கடவுளும் திரிசூலம் பிடித்திருக்கிறார். ஸீயுஸ், யூரோப்பா என்ற பீனீசிய இளவரசியைக் கடத்துவதற்காக எருது உருவம் எடுத்த ஐதீகக் கதை கிரேக்க இலக்கியங்களில் இடம்பெறுகிறது.

பண்டைய அரேபியாவில் ஓமான் நாட்டில் காணப்படும் குகை ஓவியங்களில் பாறையில் பொறிக்கப்பட்ட திரிசூலங்கள் வணக்கத்திற்குரிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன (Overlaet, B. et al., 2024: 126–135).

இந்து மதத்தில் பெண் தெய்வங்களான துர்க்கை, காளி இருவரும் கைகளில் திரிசூலம் ஏந்தி வருகிறார்கள். துர்க்காதேவி திரிசூலம் ஏந்தி சிங்க வாகனத்தில் வருகிறார். இதுபோலவே பண்டைய சுமேரியப் பெண் தெய்வமான இஷ்தார் கையில் வேலுடன் சிங்க வாகனத்தில் ஏறி வருவது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலுள்ள பல சிறிய கிராமியக் கோயில்களில் இரும்பினால் செய்யப்பட்ட திரிசூலம் ஒன்றுதான் தெய்வமாக வணங்கப்படுகிறது. சில ஊர்களில் திரிசூலம் ஆலமரத்தின் கீழ் வைத்து வணங்கப்படுகிறது. குளிக்கும் கேணிகளுக்கு அருகாமையில் காவல் தெய்வச் சின்னமாகவும் இவை நடப்பட்டிருக்கும். பண்டைய சமுதாயங்களில் சிவலிங்க வழிபாடு போன்று திரிசூல வழிபாடும் சிவ வழிபாட்டிற்கான சின்னமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதியில் ஒரு கிராமியச் சின்னமாக வழிபட்டு வந்த திரிசூலமே பின்னர் பெருங்கற் பண்பாட்டு நிவேதனப் பொருளாக வைக்கப்பட்டது என்பது சில தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

நந்தி – எருது வழிபாடு

உலகில் மத்திய தரைக்கடல், ஐரோப்பிய, மேற்காசிய, தெற்காசிய நாடுகளில் பல சமூகங்களில் காளை ஒரு வழிபாட்டுப் பிராணியாகக் கருதப்பட்டு வந்துள்ளது. துருக்கியில் பண்டைய அனடோலியாவில் ‘கேட்டல்ஹோயக்’ (Çatalhöyük) என்ற இடத்தில் கி.மு. 7000 ஆண்டுகளுக்குரிய காளைகளின் வண்ண ஓவியங்கள் அன்றைய கோயில் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களைத் தவிர காளைகளின் கபால எலும்புகளும் காளைகளின் தலைச் சிலைகளும் சுவர்களில் மாட்டி வைக்கப்பட்டுள்ளன. சில ஓவியங்களில் தாய்க் கடவுளிலிருந்து காளை மாடு பிறந்ததாகக் காட்டப்படுவது தாய்க் கடவுள் வழிபாட்டிற்கும் காளைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

மேற்காசியாவில் சுமேரிய, இலமைற் நாகரிகங்களில் எருது கடவுளின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டுள்ளது. சுமேரியத் தெய்வங்களான என்லில், என்கி என்போர் கவிதைகளில் ‘புனித எருதுகளாக’ வருணிக்கப்படுகிறார்கள். அவர்களின் அரச முத்திரைகளில் தெய்வங்களோடு காளைகளும் காணப்படுகின்றன.

சிந்துவெளி அகழ்வுகளில் கி.மு. 3000 ஆண்டுகளுக்குரிய ஏரி கொண்ட எருதுகளின் முத்திரைகளும் சுடுமண் உருவங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்துமதப் புராணங்களில் சிவனின் வாகனமாக எருதைக் குறிப்பிடுவது இப்பண்பு சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்து உதயமானதாகக் கருத இடமுள்ளது. பின்னர் வந்த இந்தோ – ஆரியர்கள் பசுவைத் தெய்வ அம்சமாகக் கருதினார்களே ஒழிய எருதை அல்ல.

தமிழகத்தில் உழவர் திருநாளாகிய தைப்பொங்கலைக் கொண்டாடிய மக்கள் ஆண்டு முழுவதும் வயலிலும் வீட்டிலும் உழைத்த எருதுகளுக்கு ‘மாட்டுப் பொங்கல்’ வைத்துக் கொண்டாடினார்கள்.

நீண்டகாலமாக யாழ்ப்பாண நகரங்களில் இருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் தாங்கள் வெளியிட்ட நாணயங்களில் தங்களது அரசின் சின்னமாக எருதின் உருவங்களை வெளியிட்டார்கள். ஆரம்பகால சதுர வடிவ நாணயங்களில் எழுந்து நிற்கும் எருதையும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பின்னர் வெளிவந்த வட்ட வடிவ நாணயங்களில் படுத்திருக்கும் காளையையும் காணலாம். யாழ்ப்பாண இராச்சியத்தின் அதிகாரபூர்வமான நந்திக் கொடியில் படுத்திருக்கும் காளையின் உருவம் பதியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உடுத்துறை என்ற கிராமத்தில் கிணறு தோண்டிய போது நிலத்திலிருந்து நான்கு அடி ஆழத்தில் கண்டெடுத்த நந்தியின் பளிங்குக் கற்சிலை. நன்றி: கலாநிதி பரமு புஷ்பரட்ணம். 

யாழ்ப்பாண அரசின் அதிகாரபூர்வச் சின்னமான நந்திக் கொடி

கந்தரோடை வெண்கலத் தெய்வ உருவங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா கந்தரோடையில் மேற்கோண்ட அகழ்வுகளில் மூன்று முற்கால வெண்கலத் தெய்வ உருவங்களையும், ஒரு பித்தளை உருவத்தையும் கண்டெடுத்தார். அவை: விநாயகரின் இரு வெண்கல உருவங்கள், ஹனுமானின் ஒரு வெண்கல உருவம், பாலகிருஷ்ணனின் ஒரு பித்தளை உருவம். இவற்றைப் பற்றி விவரமாக அவரது ‘இலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள்’ என்ற நூலில் கூறியிருக்கிறார் (கிருஷ்ணராசா, செ. 2008: 55-67). 

பெருங்கற்காலச் சின்னங்களினிடையே கண்டெடுத்த விநாயகரின் உருவம் முற்கால வெண்கலத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த உருவத்தில் விநாயகரின் முகம், இரு காதுகள் நீண்ட துதிக்கை ஆகிய உறுப்புகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. உடலின் மிகுதிப்பகுதி கிடைக்கவில்லை. இது விநாயகக் கடவுளின் ஆரம்பகாலச் சிலையாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது விநாயகர் உருவம் வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்த கற்பொக்கணை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. வழுக்கை ஆறு ஆதியில் கந்தரோடையிலிருந்து மேற்குக் கடலுக்குச் சிறு படகுகள் சென்றுவந்த நீர்வழியாகக் கருதப்படுகிறது. 9 செ.மீ. உயரமும் 5 செ.மீ. அகலமும் கொண்ட இவ்விநாயகரின் வெண்கல உருவம் ஒரு சதுரமான பீடத்தின் மேலுள்ள தாமரைப் பீடத்தின் மேல் நிற்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் உருவ அமைப்பு, அணிகலன்கள், இரட்டைப் பீடம் என்பன இவற்றை இந்தியச் சிற்பங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. இது யாழ்ப்பாண வெண்கலக் கொல்லர்களின் தனித்துவமான கைவினைத்திறனைக் காட்டி நிற்கிறது (கிருஷ்ணராசா, 2008: 59).

இராமரின் தூதுவனான ஹனுமான் பறப்பது போன்ற நிலையிலுள்ள வெண்கலச் சிற்பம் 6 செ.மீ. விட்டம் கொண்ட வட்ட வடிவான ஒரு சட்டகத்தினுள் காணப்படுகிறது. கைகளை விரித்தவண்ணம் தனது இடப்பக்கத்தை நோக்கிப் பறப்பது போல சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அணிந்திருக்கும் உடை, அணிகலன்கள், சிற்பத்தின் தோற்றம் என்பன கி.பி. மூன்றாம் – ஐந்தாம் நூற்றாண்டுகளின் ஆந்திரக் கலை மரபை நினைவுபடுத்துகின்றன (கிருஷ்ணராசா, 2008: 62).

கற்பொக்கணை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு செப்பு உருவம் கிருஷ்ண பகவானின் இளவயதுத் தோற்றமான பாலகிருஷ்ணனின் உருவமாகும். தவழும் குழந்தையான கிருஷ்ணர் இடது கரத்தை நிலத்தில் ஊன்றி எழுந்து நிற்க முயற்சிப்பது போல உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது தலையில் கரண்ட வளையங்களைக் கொண்ட உயரமான தலைமுடி காணப்படுகிறது. காதுகளில் காதணிகளும், கழுத்தில் மூன்று சங்கிலிகளும் அணிந்துள்ளார். இடுப்பில் அரைஞாணும், கரங்களில் காப்புகளும், கால்களில் கால் சிலம்புகளும் காணப்படுகின்றன. இந்த உருவச் சிலை கி.பி. 10 – 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகக் கணிக்கப்படுகிறது (கிருஷ்ணராசா, 2008: 63–64).

இச்சிலைகள் யாவும் இன்று யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

படங்கள் நன்றி: கலாநிதி செ. கிருஷ்ணராசா.

கீரிமலைச் சிவன் கோயில்

கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோயிலின் இன்றைய தோற்றம்.

யாழ்ப்பாணத்தின் வடகரையில் காங்கேசன்துறைக்கு அடுத்து மேற்குப் பக்கமாகக் காணப்படும் கிராமம் கீரிமலை. கீரிமலை என்ற பெயர் அந்தக் கிராமத்திற்கும் அங்கே கடற்கரையோரமாகக் காணப்படும் புனித நீரூற்றுக்கும் வழங்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் ‘கீரிமலை’ என்ற பெயர் இந்த நீரூற்று இருக்கும் இடத்திற்கு அரை மைல் கிழக்கே கடலுக்குள் துருத்திக்கொண்டிருக்கும் சுண்ணாம்புக் கற்பாறைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சமஸ்கிருதத்தில் இது நகுலகிரி என அழைக்கப்பட்டது. இந்தப் பாறையின் ‘கீரிமலை’ என்ற பெயரே பின்னாளில் இக்கிராமத்தின் பெயராகவும் ஆனது.

கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்பாறை கடலுக்குள் நீண்ட தூரம் வரை துருத்திக்கொண்டிருந்ததாகவும், இப்பாறையின் உச்சியில் வட்ட வடிவக் கோபுரத்துடன் திருத்தாம்பலேஸ்வரர் சிவன் கோயில் இருந்ததாகவும், காலப்போக்கில் கடல் அரிப்பினால் இந்தப் பாறையும் அதன் மேலிருந்த கோயிலும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் மரபுவழிக் கதைகள் உள்ளன. இப்பாறைக்கு எதிரே கடலின் அடியில் வெகுதூரம் பரவிக் கிடக்கும் பாறைக்கற்கள் இந்த ஐதீகத்திற்கு வலுச்சேர்க்கின்றன (Thiagarajah, S., 2012: 12).

கடலுக்குள் துருத்திக்கொண்டிருக்கும் கீரிமலைப் பாறையின் உடைந்த பகுதி.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பாசுபத சைவத்தை ஆரம்பித்து வைத்தவர் புனித லிகுலீசர். லிங்க புராணத்தில் (அத்தியாயம் 23) சிவன் தனது 28 ஆவது பிறப்பில் ‘நகுலீசர்’ என்ற பெயர் கொண்ட ஒரு துறவியாகப் பிறந்தார் எனக் கூறப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் லிகுலீசரின் பாசுபத சைவ ஆதரவாளர்கள் அழிந்துபோன திருத்தாம்பலேஸ்வரம் கோயிலைத் திரும்பவும் கட்டியெழுப்பியபோது, சிவனின் மாற்றுப் பெயரான நகுலீசரை நினைவுபடுத்தி இந்த ஆலயத்திற்கு நகுலேஸ்வரம் எனப் பெயரிட்டதாக ஐதீகக் கதை உள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கதிரமலையிலிருந்து (கந்தரோடை) ஆட்சி புரிந்த உக்கிரசிங்கன் என்ற அரசன் இக்கோயிலைத் திருப்பிக் கட்டியதாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண வைபவமாலை, தக்ஷிண கைலாசபுராணம் ஆகிய நூல்களில் இக்கோயில் பற்றிய தகவல்கள் காணக்கிடக்கின்றன. இக்காலத்தில் இக்கோயில் கீரிமலைச் சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்தும் பக்தர்களும், யாத்திரிகர்களும், பார்வையாளர்களும் திருவிழாக் காலங்களிலும், முக்கியமான மத சம்பந்தமான சமயங்களிலும், சாதாரண நாட்களிலும் இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணமே இருக்கிறார்கள். இறந்தவர்களுக்கான சபிண்டீகரண கிரியைகள் செய்வதற்கு உகந்த இடமாக கீரிமலை விளங்குகிறது. இங்கு புனிதத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் அஸ்திசஞ்சாயனம் கதிர்காமம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களில் மேற்கொள்ளப்படும் பூசைகளுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது (Celliah, Y., 2006). ஆடி அமாவாசை தினங்களில் யாழ்ப்பாண நாட்டின் ஆண்களில் பெரும்பாலானோர் தங்களின் முன்னோர்களுக்கான சடங்குகளை மேற்கொண்டு புனித நீராடுவதற்காக இந்தத் தலத்திற்கு வருவார்கள்.

கி.பி. 1621 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இந்த மண்ணின் இந்து ஆலயங்களின் அரும்பொருள் செல்வங்களை அபகரித்துக்கொண்டு அவற்றை முறையாக இடித்துத் தள்ளினர். நகுலேஸ்வரம் ஆலயத்தை நோக்கி போர்த்துக்கேய இராணுவத்தினர் வருகிறார்கள் என்பதை அறிந்த கோயில் தலைமைப் பூசகரான பரசுபாணி ஐயர், கோயிலின் ஆதிமூலத்தில் இருந்த தங்கத்தினாலான சிவ, பார்வதி விக்கிரகங்களையும் கோயில் ஆபரணங்களையும் ஒரு வேட்டியினுள் சுற்றி மடித்து, அதைக் கோயில் கிணற்றினுள் போட்டுவிட்டு, அதற்கும் மேலே பல அடுக்குகள் கடற்கரை மணலைப் போட்டுவிட்டு, தலைமறைவாக மறைந்துவிட்டார். போர்த்துக்கேய அதிகாரிகள் பல ஆண்டுகளாகத் தேடியும் ஆலயத்தின் ஆபரணங்களையோ பரசுபாணி ஐயரையோ கண்டுபிடிக்க முடியவில்லை (Muthuthambipillai, A., 1915: p. 76).

இலங்கையில் டச்சுக்காரரின் (ஒல்லாந்தரின்) ஆட்சியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிரித்தானியர், போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களைத் திரும்பவும் கட்டி, மக்களின் கிராமியக் கோயில் வழிபாடுகளைத் தொடர்வதற்கு அனுமதி அளித்தார்கள். இலங்கையில் இந்துமதம் மற்றும் தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இயக்குநராக இருந்த ஆறுமுக நாவலரும் அவரது சகாக்களும் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால், பல பயனாளிகளினதும் கொடையாளர்களினதும் பண உதவியோடு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, 1882 ஆம் ஆண்டு ஆனி மாதம் கும்பாபிஷேக விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி மாலை நான்கு மணியளவில் பல நூறு பக்தர்கள் கூடியிருந்து அங்கே திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், இந்த ஆலயம் இலங்கை விமானப் படையின் கொடுமையான வான் தாக்குதலுக்கு உள்ளானது. வானத்திலிருந்து அடுக்கடுக்காகப் போடப்பட்ட மூன்று பெரிய குண்டுகள் கோயிலின் கோபுரம், விமானம், பிரகாரம் ஆகியவற்றை வெடித்துச் சிதறச் செய்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலத்திலேயே உயிரிழந்தார்கள்; மேலும் பலர் அங்கவீனர்களாக ஆனார்கள் (Neminathan, M., 2004).

கடந்த பல ஆண்டுகளாக இக்கோயிலின் பெருமை பாடும் தலபுராணங்களும் வரலாற்று நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை: மாதகல் ஏரம்ப ஐயர் (1847–1914) எழுதிய நகுலேசர் புராணம், நீர்வேலி எஸ். சிவப்பிரகாசம் எழுதிய நகுலேஸ்வர மான்மியம், சுன்னாகம் குமாரசாமிப் புலவர் எழுதிய நகுலேசர் ஊஞ்சல், கட்டுவனூர் மயில்வாகனப் புலவர் (1875–1919) எழுதிய நகுலேசுவரர் வினோத விசித்திர கவிப்பூங்கொத்து, கட்டுவனூர் பண்டிதர் நமசிவாய தேசிகர் எழுதிய நகுலேசர் திருவந்தாதி என்பனவாகும்.

சமீபகாலங்களில் வெளிநாடுகளில் வாழும் பல நல்லுள்ளங்களின் உதவியோடு வரலாற்றுப் பெருமை வாய்ந்த இக்கோயில் மீண்டும் புனருத்தாரணம் பெற்றுள்ளது.

முருக வழிபாடு

வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலிருந்தே தமிழ் மக்களுக்கு மிகப் பிடித்தமான, பிரபலமான தெய்வமாக விளங்கியவர் முருகக் கடவுள். இன்றுவரை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழும் பெரும்பாலான தமிழர்களின் சமயக் கோட்பாடுகளிலும் பாரம்பரியச் சிந்தனைகளிலும் நடைமுறையிலும் முருக வழிபாடு ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இத்தெய்வத்திற்கு கந்தசுவாமி, சுப்பிரமணியர், கார்த்திகேயர், குமாரசுவாமி, ஆறுமுக சுவாமி, சண்முகன், வேலாயுதன் ஆகிய மாற்றுப்பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்களில் ‘கந்த’ என்றால் புராதன ஒஸ்திரலோயிட் மக்கள் பேசிய ஒஸ்ரிக் மற்றும் முண்டா மொழிகளில் ‘மலை’ என்று அர்த்தம். அந்த மொழிகளில் ‘கந்தசுவாமி’ என்றால் மலைத் தெய்வம் என்று பொருள்படும்.

புராணங்களிலும் உருவச் சிலைகளிலும் சித்திரங்களிலும் இளமையான, வனப்புமிக்க, அழகான, ஞானம் மிகுந்த தெய்வமாக இவர் சித்தரிக்கப்படுகிறார். தமிழ் மொழியில் ‘முருகு’ என்றால் எல்லையற்ற அழகு என அர்த்தம். கலை வடிவங்களிலும் இலக்கியங்களிலும் முருகன் அதீத அழகனாகவே வர்ணிக்கப்படுகிறார்.

வடமொழிப் புராணங்களிலும் காளிதாசனின் குமாரசம்பவம் காவியத்திலும் ‘ஸ்கந்தன்’ சிவன்–உமா தம்பதிகளின் மகனாகக் கூறப்படுகிறார். இந்திரனின் மகளான தேவசேனையும் குறவர்களின் மகளான வள்ளியும் அவரது மனைவியர்கள். மயிலும் யானையும் அவரது வாகனங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

தமிழ் மக்களின் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பாதுகாவல் தெய்வம் முருகன்; தமிழ் மொழியினதும் தமிழர் பண்பாட்டினதும் புரவலர் முருகன். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பல கோயில்களில் பல வழிகளில் பல வகைகளில் முருக வழிபாடு அன்புடனும் பக்தியுடனும் பரவசத்துடனும் நடைபெற்று வருகிறது (Pathmanathan, S., 2006: 338).

முருக வழிபாடு பல வகையான பாரம்பரியங்களை உள்ளடக்கியுள்ளது. சேர் பொன்னம்பலம் அருணாசலம் அப்பாரம்பரியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்:

‘அவ்வழிபாட்டு முறைகளில் பூர்வீக நிலையிலிருந்து முன்னேற்றமடைந்த உயர்தர நிலைகள்வரை காண முடிகிறது. அர்ச்சகர்கள் விரிவான சடங்குகளுடனும் பூசைகளுடனும் வழிபடுவார்கள்; பக்தர்கள் பக்திப் பாடல்களுடனும் திருப்புகழ் பாடியும் தொழுவார்கள்; வேடர்கள் பழங்குடி நடனமாடி அவரை வரவழைப்பார்கள்; புலையர்கள் ஊனும் இரத்தமும் நிவேதனமாக அளிப்பார்கள்; ஞானிகள் அமைதியான தவத்தில் உயர்வான பரம்பொருள் சுப்பிரமண்யராக அவரை வணங்குவார்கள். மனிதர்களிடத்தில் கொண்ட அன்பினால் இளமையும் ஞானமும் கொண்ட கடவுளாகக் காட்சி தருவார்; கொடுமையான அசுரரை அழிக்க போர்க்கோலம் கொண்ட வீரனாகப் புறப்படுவார்; அவரது பக்தர்களுக்காக என்றும் எப்போதும் வற்றாத மென்மையான அழகனாகச் சேவை புரிவார்’ (Arunachalam, P., 1937: 110, 132).

மாவிட்டபுரம் கந்தன் ஆலயம்

யாழ்ப்பாண வரலாற்று ஏடான யாழ்பாண வைபவ மாலையில் பின்வரும் கதை கூறப்படுகிறது:

சோழ ஆளுநரான திசையுக்கிர சோழனுக்கு மாருதப்புரவல்லி என்ற பெயர் கொண்ட ஒரு மகள் இருந்தாள். அவளுக்கிருந்த மாற்ற முடியாத ஒரு நோய் காரணமாக அவளது உடல் வெகுவாக மெலிந்து போயிருந்தது. முகம் விகாரமடைந்திருந்தது. தனது நோயை வைத்தியர்களால் மாற்ற முடியாது என உணர்ந்த இளவரசி காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டு பல தலங்களுக்குத் தீர்த்தயாத்திரை செய்தாள். அவளது யாத்திரையின்போது சாந்தலிங்கன் என்ற சந்நியாசியைச் சந்தித்தாள். அவர் கூறினார்: “உனது நோயை எந்த வைத்தியராலும் தீர்க்க முடியாது. இலங்கையின் வடமுனையில் கடற்கரை ஓரமாகக் கீரிமலை என்றொரு குன்றும், அருகில் சுத்தநீர் குமிழும் ஒரு புனிதத் தீர்த்தமும் உள்ளது. நீராடுவதற்கான புனிதத் தலம் அது.”

இதைக் கேட்டறிந்த மாருதப்புரவல்லி தனது பரிவாரங்களோடும் போர் வீரர்களோடும் புறப்பட்டுக் கீரிமலைக்கு அருகாமையிலிருந்த ஒரு துறையில் வந்திறங்கினாள். அவள் தனது பரிவாரங்களோடு ‘வளவர்கோன் பள்ளம்’ என்ற இடத்தில் பாளையமிட்டுத் தங்கியிருந்தாள். அங்கிருந்து புறப்பட்டுக் கீரிமலையில் நகுலமுனி என்ற முனிவரைச் சந்தித்தாள். அவர் தனது முகமும் ஒருகாலத்தில் விகாரமாக இருந்ததாகவும், கீரிமலைப் புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் அந்த விகாரம் நீங்கியதாகவும் கூறினார். இதைக் கேட்ட இளவரசி தானும் அந்தப் புனிதத் தீர்த்தத்தில் தினமும் நீராடி நகுலேஸ்வரக் கடவுளை வணங்கி வந்தாள். அவ்வாறு வணங்கிவந்த நாள்களில் அவளது உடல் நோய் தீர்ந்து, குதிரை முகம் போல இருந்த அவளது முகவிகாரம் மாறி அழகான முகத்தையும் பெற்றுக்கொண்டாள். இந்தக் காலத்தில் நகுலேஸ்வரம் சிவனைத் தரிசிக்க வந்த கதிரமலை அரசன் உக்கிரசிங்கன், மாருதப்புரவல்லியை அக்கோயிலில் சந்தித்து அவள் மேல் காதல் கொண்டு அவளை மணம் செய்து கொண்டான். அவளது வேண்டுகோளின் பேரில் மாவிட்டபுரத்தில் கந்தன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாவிட்டபுரம் கந்தன் ஆலயக் கோபுரத்தின் இன்றைய தோற்றம்.

இக்கதையில் ஐந்து பாரம்பரியச் சம்பவங்கள் கூறப்படுகின்றன: நகுலமுனியின் கதை, மாருதப்புரவல்லியின் கதை, உக்கிரசிங்கன் வரலாறு, வளவர்கோன் பள்ளம் என்ற பெயர், மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் கட்டப்பட்ட வரலாறு. இதில் வரலாற்றோடு ஐதீகக் கதைகளும் இணைத்துக் கூறப்படுகின்றன.

திசையுக்கிர சோழன் என்ற பெயரில் ஒரு சோழ மன்னன் இருந்ததாக வரலாறு இல்லை. அதுபோன்று நகுலமுனியின் கதை, மாருதப்புரவல்லியின் கதை என்பன ஐதீக, புராணக் கதைகளே. இக்கோயில் கட்டப்பட்ட பல நூற்றாண்டுகளின் பின்னர் எழுதப்பட்ட யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் ஐதீகக் கதைகளையும் வரலாற்றோடு இணைத்துக் கூறியுள்ளன. ஆனால் கந்தரோடை (கதிரமலை) அரசன் உக்கிரசிங்கன் சோழ அரசனின் உதவியுடன் மாவிட்டபுரம் கந்தசாமிக் கோயிலைக் கட்டுவித்தான் என்பதைக் கோயிலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தலவரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. மேலும், வளவர்கோன் பள்ளம் என்ற பகுதி இன்னும் மாவிட்டபுரத்தில் காணப்படுகிறது. சோழ அரசின் கீழை நாடுகள் இப்பெயரால் அழைக்கப்பட்டிருந்தன. சோழ அரசுக்கும் இந்தக் கோயிலுக்கும் இருந்த தொடர்பை இப்பெயரும் வலியுறுத்துகிறது (கைலாய மாலை, 1939; யாழ்ப்பாண வைபவ மாலை, 1950: 13–14; துரைச்சாமிக் குருக்கள், 1970; Pathmanathan, S., 1990: 63–64).

மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தின் வெளி மண்டபம். இங்கிருக்கும் செதுக்கப்பட்ட கருங்கல் தூண்கள் ஆதியான கோயிலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன.

கோயிலின் உள்மண்டபத்தின் இன்றைய தோற்றம். Photo Courtesy: Menaka Aravinda & Danith Wickramasinghe (Serendib 2012).

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் கட்டப்பட்ட வரலாறு கோயிலில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தல ஏடுகளிலும் காணப்படுகிறது. பத்து ஆண்டு காலமாக கட்டடக்காரர்கள், கல் கொத்தனார்கள், ஸ்தபதிகள் இக்கோயிலைக் கட்டுவதற்காக நாளும் பொழுதும் பணி புரிந்தார்கள். இந்தக் கோயில் விக்கிரகங்கள் சோழ நாட்டிலிருந்து சோழ அரசனால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விக்கிரகங்கள் வந்திறங்கிய ‘காயாத்துறை’ (புத்தகயாவுக்கு பௌத்த யாத்திரிகர்கள் கப்பலேறிச் சென்ற துறை) அன்றிலிருந்து ‘காங்கேயன் துறை’ (காங்கேயன் – கந்தன் – விக்கிரகங்கள் வந்திறங்கிய துறை) எனப் பெயர் பெற்றது. சிதம்பரத்திலிருந்து தில்லை மூவாயிரவரில் ஒருவரான பெரியமனதுளார் என்ற பெயர் கொண்ட பிராமணர் இக்கோயிலின் தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார். கோயில் பதிவேடுகளின்படி சாலிவாகன சகாப்தம் 721 இல் (கி.பி. 799) ஆனி மாத உத்தரம் நாளில் கொடியேற்றத்துடன் இக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது (பிரம்மஸ்ரீ துரைச்சாமிக் குருக்கள், 1970).

இந்த ஆலயம் கட்டி முடித்த ஆண்டில் உக்கிரசிங்க மன்னன் தனது நாட்டின் தலைநகரை கந்தரோடையிலிருந்து (கதிரமலை) ‘செங்கடக நகர்’ அல்லது ‘உக்கிரசிங்க நகர்’ என மாற்றிக்கொண்டான் (யாழ்ப்பாண வைபவமாலை, 1950: 13; கைலாயமாலை, 1939; Brito, C, 1879: 9–12).

கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இந்த ஆலயத்தை அடைந்த போது, கோயிலின் விக்கிரகங்களும் ஆபரணங்களும் மறைக்கப்பட்டு, கோயில் பாவனையின்றி பாழடைய விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை அறிய முடியவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோயில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. இந்து ஆலயக் கட்டடக்கலை அமைப்பின்படி ஸ்தூபி அமைக்கப்பட்டு, கருவறையில் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி–தேவயானி சமேதராக அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் அமர்த்தப்பட்டார் (இது பழைய கோயிலின் கருவறை விக்கிரகங்கள் என அறிய முடிகிறது). சம்பிரதாயப்படி ஆதிமூலத்தைச் சுற்றி மூன்று வீதிகள் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் பிரம்மாண்டமான உயர்ந்த கோபுரமும் அக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் ஆனி மாதத் திருவிழா இரண்டு வாரங்கள் தொடர்கிறது. கோயில் வெளிவீதியைச் சுற்றி ஐந்து தேர்கள் பவனி வருவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு. ஒரு பனையளவு உயர்ந்த சப்பரம் மின்சார விளக்குகளால் சோடிக்கப்பட்டு பவனி வருவது மற்றொரு சிறப்புக்கூறு. தீர்த்தத் திருவிழாவின் போது மாவிட்டபுரம் கந்தன் ஆலய விக்கிரகங்கள் ஊர்வலமாகக் கீரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தீர்த்தத் திருவிழா கீரிமலைக் கடற்கரையில் நடைபெறும். இந்த வைபவம் மாவைக் கந்தனுக்கும் கீரிமலை நகுலேஸ்வரருக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளாக கீரிமலைச் சிவன் கோயிலும் மாவிட்டபுரம் கந்தன் ஆலயமும் சேர்ந்து ஆகம ரீதியான சைவமும் கிராமிய வழிபாட்டு வழக்கங்களும் இணைந்த யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான ஒரு பாரம்பரியச் சைவமதப் பண்பாட்டை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும் (Thiagarajah, Siva, 2012: 15).

நல்லூர் கந்தன் ஆலயம்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கோயில்களில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முக்கியத்துவமிக்கதொரு ஆலயமாக விளங்குகிறது. தினமும் இக்கோயிலில் நடைபெறும் பூசைகளில் பங்கேற்கும் மக்களின் திரளுக்கு இணையாக இத்தீவில் வேறு எந்தக் கோயிலும் காணப்படுவதில்லை எனக் கூறலாம். திருவிழாக் காலங்களில் — குறிப்பாகத் தேர்த் திருவிழாவின் போது — யாழ்ப்பாண நகரமே அங்கு திரண்டு, பிறநிலங்களிலிருந்தும் பிறநாடுகளிலிருந்தும் வருகை தரும் மக்களோடு கூடியிருக்கும் எனலாம். இங்கு நடைபெறும் அன்றாடப் பூசைகள் யாழ்ப்பாணச் சைவத்தின் அடிப்படையான பண்புகளை பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.

யாழ்ப்பாண மரபுக்கதைகளின்படி ஆரம்பகால நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை புவனேகபாகு என்பவன் கட்டுவித்தான் என அறியப்படுகிறது. யாழ்ப்பாண வரலாற்று நூல்களில் ஒன்றான கைலாயமாலையில் பின்வரும் தகவல் காணப்படுகிறது: “சகா சகாப்த ஆண்டு 870 இல், மார்பில் பூமாலை அணிந்த புவனேகபாகு யாழ்ப்பாண நகரத்தையும் கட்டுவித்து, நல்லூரில் கந்தவேள் வசிக்கும் கோயிலையும் கட்டுவித்தான்” (கைலாயமாலை, பக். 23).

அதே நூலில், புவனேகபாகு என்பவன் சிங்கை ஆரியன் எனப்படும் ஆரியசக்கரவர்த்தி அரசவம்சத்தின் முதலாவது அரசனால் நல்லூர் நகருக்கு மந்திரியாக நியமிக்கப்பட்டவன் எனக் கூறப்படுகிறது (கைலாயமாலை, பக். 12). சகா சகாப்த ஆண்டு 870 என்பது கி.பி. 946 ஆம் ஆண்டைக் குறிக்கிறது. எனினும், அந்த ஆண்டில் நல்லூர் ஒரு நகரமாகவோ அல்லது யாழ்ப்பாணத்தின் தலைநகரமாகவோ இருந்ததற்கான உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

நல்லூர்க் கந்சுவாமி கோயிலில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் பூசையின் போது கட்டியம் கூறுவது வழக்கம். இந்தக் கட்டியம் இவ்வாறு கூறுகிறது:

“ஸ்ரீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்பிரமண்ய பாதாரவிந்த ஜனதிரூதஸோதஸ மஹாதான – சூரியவம்சோத்பவ ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு”

இந்த ஆலயத்தைக் கட்டி மகாதானம் செய்தவர் சூரிய வம்சத்தில் வந்துதித்த ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு ஆவார். ‘ஸ்ரீ சங்கபோதி’ என்பது ஓர் அரசப் பட்டப்பெயராகும். 15–16 ஆம் நூற்றாண்டுகளில் கோட்டை அரசின் சிங்கள மன்னர்கள் அரசகட்டிலேறிய போது ‘சூரிய வம்சத்திலுதித்த ஸ்ரீ சங்கபோதி’ என அழைக்கப்பட்டனர். ‘சூரிய வம்சோத்பவ ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என்ற பெயர் அந்த அரசனின் அரசவழித் தொடர்பைத் தெளிவுபடுத்துகிறது.

கோட்டை அரசன் நான்காம் புவனேகபாகுவின் (கி.பி. 1412–1467) சுவீகாரப் புத்திரனான சப்புமால் குமாரய (செண்பகப் பெருமாள்), யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்து அங்கு ஆட்சிபுரிந்த கனகசூரிய சிங்கை ஆரியனைத் தோற்கடித்து, கி.பி. 1450 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசனானான். அதுவரை யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த சிங்கைநகரை விடுத்து, நல்லூரில் புதிய தலைநகரை நிறுவினான். அவனே நல்லூர் கந்தன் ஆலயத்தை நிறுவியவனாகக் கருதப்படுகிறான். இந்த மண்ணில் தனது அரசதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, அப்பகுதியில் பரவலாக நிலைத்திருந்த சைவமதத்தைப் பேணிப் பாதுகாப்பது அவனுக்குத் தேவையான ஒன்றாக இருந்தது. அந்த அரசியல் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே நல்லூர் கந்தன் ஆலயத்தின் நிறுவல் அமைகிறது எனக் கொள்ளலாம்.

நல்லூர்க் கந்தசாமி கோயிலின் இன்றைய தோற்றம்.

1467 ஆம் ஆண்டில் கோட்டை அரசன் இறந்ததும் புவனேகபாகு, கோட்டைக்குத் திரும்பிச் சென்று அங்கே கோட்டை அரசின் அரச பதவியை ஏற்று முடிசூடிக் கொண்டான். அரச சிம்மாசனம் எறியதும் சப்புமால் என்ற பெயரை விடுத்து ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு என்ற சிம்மாசனப் பெயரை ஏற்றுக்கொண்டான். கோட்டை அரச மன்னர்கள் தங்களை சூரிய வம்சத்தினர் என அழைத்தார்கள். நல்லூக் கந்தசுவாமி கோயில் கட்டியம் அந்தக் கோயிலைக் கட்டுவித்த அரசனை கோட்டை அரசின் சிம்மாசனப் பெயரான ‘ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என்றே குறிப்பிடுகிறது. 

கி.பி. 1450 ஆம் ஆண்டிலிருந்து 1467 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சப்புமால் குமாரயா எனப்படும் ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு, சிங்கை நகரிலிருந்த அரச மாளிகைகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்த காரணத்தால், நல்லூரிலிருந்த பண்டாரவளவு மற்றும் சங்கிலித் தோப்பு (பிற்காலப் பெயர்) ஆகிய இடங்களில் புதிய அரண்மனைகள் மற்றும் அரச மாளிகைகளை அமைத்தான். அவை அமைந்திருந்த இடங்களுக்கு அருகாமையில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆலயம் கட்டப்பட்டது. அந்த இடம் இன்றைய முத்திரைச் சந்தியில் கிறிஸ்தவத் தேவாலயம் அமைந்துள்ள பகுதியாகக் கருதப்படுகிறது. அங்குள்ள ஜமுனா ஏரி, பழைய கந்தசுவாமி கோயிலின் கேணியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

புவனேகபாகுவால் கட்டப்பட்ட இந்த ஆலயம், அவன் யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டைக்குத் திரும்பிய பின்னரும், 1467 இல் தங்கள் இராச்சியத்தை மீட்ட யாழ்ப்பாண அரசர்களால் கி.பி. 1619 இல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் வரையிலும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்தது.

ஆரம்பகால நல்லூர்க் கந்தன் கோயில் தென்னிந்தியக் கோயில்களுக்கு இணையாக “யாழ்ப்பாணத்திலே மிகப் பெரிய கோயிலாக இருந்தது” என குவேரோஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார். இக்கோயிலைச் சுற்றி உயர்ந்த நெடுமதில்கள் அமைக்கப்பட்டிருந்தன. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் நெடிதுயர்ந்த மதில்களுடன் அமைந்திருந்ததனால், பின்னர் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த பிலிப் ஒலிவேரா என்ற போர்த்துக்கேயத் தளபதி ஒரு கட்டத்தில் தனது வீரர்களுடன் இக்கோயிலினுள் புகுந்து, அதை ஒரு கோட்டையாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது (Queiroz, F. de, 1930).

1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி நல்லூரைத் தனது உறைவிடமாக்கிக் கொண்ட பிலிப் டி ஒலிவேரா, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி, அக்கோயில் இருந்த இடம் அடையாளம் காணப்படாதபடி அதன் அத்திவாரங்களையும் கிளறுவித்தான் என இராசநாயகம் குறிப்பிடுகிறார் (இராசநாயகம், செ., 1933: 130). போர்த்துக்கேயர் சைவ ஆலயங்களைப் பாழாக்கி அழித்த பின்னர், அவை இருந்த இடங்களிலேயே தங்கள் தேவாலயங்களை அமைத்தனர். நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் ஒரு கத்தோலிக்கத் தேவாலயம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அந்தத் தேவாலயம் களிமண்ணாலும் பனை ஓலைகளாலும் அமைக்கப்பட்டிருந்ததாக டச்சுப் பாதிரியாரான பிலிப் பால்தேயஸ் பதிவு செய்கிறார் (Baldaeus, P., 1672; மறுபதிப்பு 1998).

போர்த்துக்கேயரைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை ஆண்ட டச்சுக்காரர் (ஒல்லாந்தர்), தங்கள் ஆட்சியின் பிற்காலத்தில் சமய விடயங்களில் கடைப்பிடித்திருந்த கடுமையைத் தளர்த்தினர். இதன் விளைவாக சைவ சமயத்தினரைச் சேர்ந்தோர் தமது ஆசாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் பயமின்றி மேற்கொள்ளத் தொடங்கினர். இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகர்களாக இருந்த பிராமணர்களின் சந்ததியில் வந்த கிருஷ்ணையர் சுப்பையர் என்பவர், 1734 ஆம் ஆண்டு பழைய நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இருந்த இடத்திற்கு அருகில் ஒரு மடாலயம் அமைத்து, வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டைத் தொடர்ந்து நடத்தினார் என ‘யாழ்ப்பாண வைபவம்’ குறிப்பிடுகிறது (பாலசுப்பிரமணிய சர்மா, 1927). எனினும், இப்போது உள்ள கந்தசுவாமி கோயிலும் அந்த மடாலயமும் நேரடித் தொடர்புடையவை என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை.

இப்பொழுது உள்ள நல்லூர்க் கந்தசுவாமி கோயில், பழைய கோயில் இருந்த இடத்திலிருந்து தூரத்தில் அமைந்துள்ள ‘குருக்கள் வளவு’ எனப்படும் இடத்தில் காணப்படுகிறது. 1734 ஆம் ஆண்டு டச்சு ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக (Chief Headman) இருந்த இரகுநாத மாப்பாண முதலியார் என்பவரால் கல்லாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சைவசமயக் கோயில்களின் இடாப்பிலிருந்தும், 1869 ஆம் ஆண்டு முதல் 1896 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண அரசாங்க அதிபராகப் பணியாற்றிய சேர் துவைனம் அவர்களின் குறிப்புகளிலிருந்தும் அறியப்படுகிறது (குலசபாநாதன், 1971).

நல்லூர்க் கந்தசாமி கோயிலின் உள்மண்டபத்தில் முருகக் கடவுள் தனது சகோதரனான விநாயகர், மற்றும் வள்ளி-தேவயானி சமேதராய் எழுந்தருளி வரும் காட்சி.

நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா காணவந்த – அலை அலையாகத் திரளும் பக்தர் கூட்டம். Image Source: Hindu Pad. 

“ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் சிறாப்பராகக் கடமை பார்த்து வந்த இரகுநாத மாப்பாண முதலியார், தமது பதவியால் பெற்றிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார்” என குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகிறார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் ஆண்டு விழாக்களில் பாடப்படும் கட்டியத்தில், புவனேகபாகுவிற்கு அடுத்ததாக இக்கால நிறுவனராக இரகுநாத மாப்பாணர் கௌரவிக்கப்படுகிறார். இவ்விடத்தில் ஆறுமுக நாவலரின் பதிவும் கவனிக்கத்தக்கது: “இக்கோயிலின் விழாக்காலங்களில், இதன் ஆணையாளர்கள் மூல ஆலயத்தை நிறுவிய புவனேகபாகுவையும், இன்றைய ஆலயத்தை நிறுவிய இரகுநாத மாப்பாணரையும் அந்த வரிசையில் நினைவுகூருகிறார்கள்” (ஆறுமுக நாவலர், 1875).

இரகுநாத மாப்பாணர் கட்டுவித்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில், அவரது சந்ததியினருக்குரிய தனியார் சொத்தாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்குப் பக்தர்களிடமிருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் கணிசமான வருவாய் கிடைத்தபோதிலும், அதன் கட்டடங்களும் சொத்துகளும் தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. கோயிலின் மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் இரகுநாத மாப்பாணரின் மற்றும் அவரது மனைவியாரின் உருவப்படங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பதினெட்டாம் நூற்றாண்டில் இரகுநாத மாப்பாணரால் கருங்கல், சுட்ட செங்கற்கள் மற்றும் காரைச்சாந்து கொண்டு கட்டப்பட்ட சிறிய கோயில், காலப்போக்கில் பல்வேறு கட்டடக்கலைப் பாணிகள் இணைந்த பெருமைக்குரிய அமைப்பாக வளர்ந்துள்ளது. கடந்த இருநூற்று ஐம்பது ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல்கள், விரிவாக்கங்கள் மற்றும் அலங்காரச் சேர்த்தல்களின் மொத்தச் சேர்க்கையே இன்று நாம் காணும் கந்தன் ஆலயம் ஆகும். இதன் கட்டட அமைப்பு, ஒரு மாபெரும் இந்துக் கோயிலுக்கான ஒருங்கிணைந்த வடிவமைப்பாகவோ அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கட்டடக்கலை வளாகமாகவோ அமையவில்லை எனப் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகிறார் (Pathmanathan, S., 2006: 357–358).

நல்லூர்க் கந்தசாமி கோயிலின் கட்டட அமைப்பு, இந்துக் கோயில்களின் சம்பிரதாய கட்டமைப்புக்கு முழுமையாக ஒத்ததாக அமைக்கப்படவில்லை. ஓர் இந்துக் கோயிலின் கட்டடக் கலையில் மையக் கூறாகக் கருதப்படுவது அதன் ஸ்தூபி ஆகும். ஆனால் நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்கு ஸ்தூபி இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், கருவறையில் முருகக் கடவுளின் உருவப் பிரதிநிதித்துவம் (Iconographic Representation) காணப்படவில்லை. அங்கு முருகனின் உருவத்திற்குப் பதிலாக ஒரு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதனுடன், வேலின் இருபுறங்களிலும் முருகனின் சக்திகளாகக் கருதப்படும் வள்ளி மற்றும் தேவயானி ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இந்து சம்பிரதாயக் கோயில் வடிவமைப்பில் முன்னோடியற்றதும் அரிதானதுமாகக் கருதப்படுகிறது (Pathmanathan, S., 2006: 358).

இக்கோயிலின் இவ்வகை ஆலய விதிகளுக்கமையாத, சமயச் சம்பிரதாயங்களுக்கு மாறான வடிவமைப்பு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆறுமுக நாவலர், இக்கோயிலின் கட்டட அமைப்பையும் படிமவியல் திட்டத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

1875 ஆம் ஆண்டில் மக்களுக்காக எழுதி வெளியிட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் என்ற தலைப்பிட்ட சிற்றேட்டில் ஆறுமுக நாவலர் இவ்வாறு கூறியிருந்தார்:

“நல்லூரிலுள்ள கந்தசுவாமி கோயிலை யாழ்ப்பாணத்திலுள்ள மிக முக்கியமான கோயிலாகக் கருதி அங்கே வழிபாடுகளை மேற்கொள்ளுகிறீர்கள். உங்களுடைய செல்வத்தின் ஒரு பகுதியையும் அங்கே செலவிடுகிறீர்கள். அந்தக் கோயிலும், அங்கே நடத்தப்படும் சடங்குகளும், சிவாகமங்களுக்கும் குமாரதந்திரங்களுக்கும் எதிரான மொத்த மீறல்களாகும். இந்த மீறல்கள் மற்றையக் கோயில்களிலும் பின்பற்ற வேண்டிய மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்துக் கோயில்களின் அமைப்பில் ஸ்தூலலிங்கம், சூக்குமலிங்கம், பத்திரலிங்கம் ஆகிய அம்சங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். கோயிலின் ஸ்தூபி ஸ்தூலலிங்கம். சூக்குமலிங்கம் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தெய்வத்தின் விக்கிரகம். பத்திரலிங்கம் கோயிலிலுள்ள பலிபீடம்.

நல்லூர்க் கந்தசாமி கோயிலில் ‘ஸ்தூபி’ கிடையாது…. மூலமூர்த்தியை விக்கிரகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு கட்டடம் புனிதத்தலமாக இருக்க முடியாது….

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் இப்போது உள்ள மூலமூர்த்தி திருக்கோயிற் புனிதப்பணிக்கென குடமுழுக்குச் செய்யப்பட்டு நிரந்தரமாக நிலைநிறுத்திய ஓர் உருவம் அல்ல. அங்கிருக்கும் வெள்ளியினால் செய்யப்பட்ட வேல் அதன் ஆசனத்திலிருந்து அபிஷேகங்களுக்காகவும், மற்றைய நோக்கங்களுக்காகவும் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை மூலமூர்த்தியாகக் கொள்ள முடியுமா?

இந்தக் கோயிலின் பெயர் கந்தசுவாமி கோயில். இங்கே கர்ப்பக்கிரகத்தில் கந்தசுவாமியார் தெய்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறாரா? இல்லை. இங்கே வேலாயுதம்தான் காணப்படுகிறது. வேலாயுதம் கந்தசுவாமியின் ஓர் உருவமா? அல்ல. அது அவருக்குச் சேவை செய்யும் ஒரு கருவி மட்டும்தான்.”

இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுமுக நாவலர், ஆலயக் கட்டடக்கலை விதிகளுக்கும் விக்கிரக அமைப்பு ஆகம விதிகளுக்கும் அமையாது நல்லூர்க் கந்தசாமி கோயில் உருவாக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்காட்டிய விதிமுறைகளை மறுத்து இதுவரை எவரும் கருத்துத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. கோயிலின் இந்த நிலைமை அதன் நிர்வாகிகளுக்கும் நல்லூர்க் கந்தன் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பக்தர்களுக்கும் மிகுந்த சங்கடத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை (ஆறுமுக நாவலர், 1875, மறுபதிப்பு 1954; Pathmanathan, S., 2006: 358–359).

கி.பி. 1734 இல் இரகுநாத மாப்பாணர் இந்தக் கோயிலைச் சிறியதாகக் கட்டியபோது, டச்சுக்காரரின் நிர்வாகத்தின் கீழ் இதை இந்துக் கோயில்களின் ஆகம விதிகளுக்கமைய கட்டியிருக்க வேண்டும் என எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், இக்கோயிலின் பெருமையும் புகழும் பெருகி, வருவாயும் பெரிதாகியிருக்கும் இக்காலத்தில், ஆறுமுக நாவலர் எடுத்துக்காட்டிய தவறுகளைத் திருத்தி, இக்கோயிலை இந்துக் கோயில்களின் கட்டட விதிகளுக்கும் விக்கிரகங்களை ஆகம விதிகளுக்கும் அமைய புனரமைப்புச் செய்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

உசாத்துணை நூல்கள்

  1. ARUNACHALAM, PONNAMBALAM (1937): Studies and Translations, Colombo Apothecaries Co., Ltd., Colombo.
  2. BALDAEUS, PHILIP (1672): Description of the Most Famous Isle of Ceylon, Amsterdam, (Reprint 1998): Asian Educational Services, New Delhi – Madras.
  3. BOPEARACHCHI, O. (1998): Archaeological Evidence on Changing Patterns of International Trade Relation of Ancient Sri Lanka in Bopearachchi, O. & Weerakkody, D.P.M. (Eds.): Circulation of Foreign Coins in the Indian Ocean, New Delhi.
  4. BOPEARACHCHI, O. & WICKRAMASINGHE, W. (1999): Ruhuna – An Ancient Civilization Revisited – Numismatic and Archaeological Evidence on Inland and Maritime trade, Nugegoda, Sri Lanka.
  5. CAUVIN, JACQUES & WATKINS, TREVOR (2000): The Birth of the Gods and the Origins of Agriculture, Cambridge University Press.
  6. CODRINGTON, H.W. (1924): Ceylon Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A, No. 3, Colombo.
  7. COOMARASWAMY, A.K. (1931): Yakkas, Parts I & II, Smithsonian Institute, Washington, D.C.; Reprint 1971, New Delhi.
  8. DONIGER, WENDY  (2009): The Hindus an alternative history, Oxford University Press.
  9. FERGUSSON, JAMES (1873): Tree and Serpent Worship or Illustrations of Mythology and Art in India, India Museum, London.
  10. KRISHNARAJAH, S. (1983): Coins Obtained in Jaffna (in Tamil), Cintanai 1: 71-84.
  11. KRISHNARAJAH, S. (2008): The Hindu Bronze Images in Sri Lanka, (in Tamil)  Kumaran Book House, Colombo.
  12. KUNARASA, KANDIAH (2001): Yalpāna Vaipava Mālai: A Retelling, Kamalam Pathippakam, Jaffna.
  13. MAJUMDAR, R.C. (1951): The History and Culture of the Indian People, Vol. 01: The Vedic Age, George Allen & Unwin, London.
  14. McGILVARY, DENNIS, B. (1974): Tamils and Moors: Caste and Matriclan Structure in Sri Lanka, University of Chicago.
  15. NAGASWAMY, R. (1995): Tamil Coins, Madras.
  16. NARR, KARL J. (2008): ‘Prehistoric Religion’, Britannica online Encyclopedia, 2008.
  17. OVERLAET, B. et al (2024): A note on the trident mark, Stone worship and Cult practices in Southeast Arabia, Arabian Archaeology and Epigraphy, Vol. 35, Issue 1.
  18. PARANAVITANA, S. (1970): Inscriptions of Ceylon, Vol. I, Early Brahmi Inscriptions, Colombo.
  19. PATHMANATHAN, S. (2006): Hindu Temples of Sri Lanka, Kumaran Book House, Colombo – Chennai.
  20. PIERIS, PAUL. E. (1919): Nagadipa and Buddhist Remains in Jaffna, Part I, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Colombo.
  21. PUSHPARATNAM, P. (2001): Ancient Coins of Ceylon Tamils (in Tamil), Jaffna.
  22. PUSHPARATNAM, P. (2002): Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Pathippakam, Jaffna.
  23. PUSHPARATNAM, P. (2002a): Ancient Religion and Culture of Eelam Tamils, An Archaeological Perspective in Tamil, Kumaran Book House, Colombo & Chennai.
  24. RAGUPATHY, PONNAMPALAM (1987): Early Settlements in Jaffna, Thillimalar Ragupathy, Madras.
  25. SEYON, K.N.V. (1998): Some Old Coins of Early Ceylon, Nawala, Sri Lanka.
  26. SHASTRI, J.L. (2000): The Siva Purana : Ancient Indian tradition and Mythology, Volume 1, Motilal Banarsidass, New Delhi.
  27. SIVASAMY, V. (1974): The Coins of Jaffna (in Tamil), Tellippalai.
  28. STOLPER, MATTHEW W. (2005): Achämenid Languages and Inscriptions in: John E. Curtis, Nigel Tallis: Forgotten Empire – The World of Ancient Persia, University of California Press, Los Angeles.
  29. THIAGARAJAH, SIVA (2012): Early Siva Temples of Ancient Sri Lanka, Aalayam Publishers, Colombo.
  30. THIAGARAJAH, SIVA (2019): The Tamils of Lanka – A Timeless Heritage, Tamil Information Centre, UK.
  31. THIAGARAJAH, SIVA (2022): Archaeological Excavations at the Jaffna Fort, Kumaran Book House, Colombo.
  32. ஆறுமுக நாவலர் (1875): நல்லூர்க் கந்தசுவாமி கோயில். வண்ணார்பண்ணை. மறுபதிப்பு இடம் பெறுவது: ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு, தொகுப்பு: தி. கைலாசபிள்ளை, மூன்றாம் பதிப்பு, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை.
  33. இராசநாயகம், செ. (1933): யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம். குல. சபாநாதன் (1971): நல்லூர்க் கந்தசுவாமி, நல்லூர் தேவஸ்தான வெளியீடு, யாழ்ப்பாணம்.
  34. கைலாயமாலை (1939) சி.வி. ஜம்புலிங்கம் பதிப்பு, சென்னை. சிற்றம்பலம், சி.க. (1996): ஈழத்து இந்து சமய வரலாறு, திருநெல்வேலி.
  35. துரைச்சாமிக் குருக்கள், பிரம்மஸ்ரீ (1970): மாவிட்டபுரக் கந்தன் ஆலயம், வீரகேசரி வாரவெளியீடு, 12 ஜுலை 1970, கொழும்பு.
  36. வித்தியானந்தன், க. (1954): தமிழர் சால்பு, பேராதனை. வேதாசலம், வே. (1989): இயக்கி வழிபாடு, மதுரை.
  37. புஷ்பரட்ணம், ப. (2017): இலங்கைத் தமிழர் – ஒரு சுருக்க வரலாறு, சுவிற்சர்லாந்து.


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்