
யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த சுடுமண் தகடு. மாதிரி அச்சில் களி மண்ணினால் செய்து சூளையில் சுடப்பட்ட இந்தச் சுடுமண் தகட்டின் நடுவில் நாட்டார் தாய்த் தெய்வமும், இரு பக்கமும் முழங்காலில் நிற்கும் ஆண், பெண் பக்தர்களும் காணப்படுகின்றனர். Image Source: Department of History, University of Jaffna.
1
அறிமுகம்
உலகில் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் தோற்றமளிப்பதற்கு முன்னர் மக்களிடையே ஆன்ம இயலான அல்லது மனிதர்களுக்கு மேலாக உள்ள தெய்வங்கள் சம்பந்தமான நம்பிக்கைகள், நடைமுறைகள், செயற்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இற்றைக்கு 200,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி மனிதர்களான ஹோமோ நியண்டதலென்ஸிஸ், தொடர்ந்து ஹோமோ சேப்பியன்ஸ் ஆகியோர் கொண்டிருந்த இறந்தவர்களைப் புதைப்பது சம்பந்தமான சடங்குகள், பிற்கால சமயங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.
இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இடைக்கற்காலப் பகுதியில் ஆபிரிக்காவின் கலஹாரி பாலைநிலப் பகுதியில் வேட்டையாடி வாழ்ந்த மக்களிடத்தே மிருகங்களை தெய்வாம்சமாகப் பேணி வணங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இவ்வழக்கம் அவர்களது வேட்டைச் சடங்குகளுடன் (Hunting Rites) தொடர்புடையது. அக்காலத்தைய குகை ஓவியங்கள் காட்டும் செய்திப்படி அவர்கள் வேட்டையாடப் புறப்படும் முன்னர் முதலில் ஒரு கரடியை அம்புகளினால் கொன்றுவிட்டு, களி மண்ணினால் செய்யப்பட்ட ஒரு கரடிப் பொம்மையின் முன்னர் சடங்கு சார்ந்த ஆட்டங்களுடன் அக்கரடியைப் புதைத்துவிட்டு, வேட்டைக்குப் புறப்படுவது வழக்கம். இந்த நடவடிக்கை சிறப்பான வேட்டையைத் தரும் என்பது அவர்களின் நம்பிக்கை (Narr, N.J. 2008).
உலகில் வெவ்வேறு மக்கள் குழுக்களுடன் வெவ்வேறு மிருகங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. நாகபாம்பு நாகர்களுடனும், எருது பண்டைய துருக்கியர் (Nevali Cori), மற்றும் சிந்துவெளி மக்களுடனும், பசுமாடு இந்துக்களுடனும், பூனைகள் – நாய்கள் – நரிகள் – முதலைகள் என்பன புராதன எகிப்தியர்களுடனும் தொடர்பு கொண்டவை. புராதன எகிப்திய அரசர்களைப் புதைத்த புதைகுழிகளில் அவர்களுக்குப் பிரியமான மிருகங்களின் சடலங்களும் பதனீடு செய்யப்பட்டு (Mummified) புதைக்கப்பட்டிருக்கின்றன.
ஆதிகால மனிதன் மண்ணையும், விண்ணையும், ஆதவனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், கோள்களையும், மலையையும், மரத்தையும், ஆற்றையும், குளத்தையும் தெய்வங்களின் அம்சமாகக் கொண்டான். பெருமழையும், புயலும், இடியும், மின்னலும் இத்தெய்வங்களின் சீற்றத்தின் விளைவுகள் எனக் கருதினான். இத்தெய்வங்களின் சீற்றத்தைத் தணித்து அவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு நிவேதனம் படைத்து, பூக்களால் பூசித்து இத்தெய்வங்களை வழிபட்டான்.
தென்னாசியாவில் தமிழர்களுக்குத் தனித்துவமான ஆதவன் வழிபாட்டோடு இணைந்த தைப்பொங்கலும், கோயில்களில் மேற்கொண்ட தலவிருட்சத் தொழுகையும், வயல்களில் அவர்களோடு உழைத்த எருதை கோயில்களில் ‘நந்தியாக்கி’ வணங்கியதும் – இப்புராதன வழிபாட்டு முறைகளின் எச்சங்களே.
மண்ணில் விளைச்சலைத் தந்து உயிர் காக்கும் உணவை அளிக்கும் – உயிர்களுக்கெல்லாம் கருவளம் கொடுத்து இனங்களைப் பெருக்க வைக்கும் – தாய்த் தெய்வமான நில மாதாவை – பார் என்னும் அன்னையை (Mother Goddess/ Earth Goddess) – ‘பார்வதி’ என்று பணிந்து வணங்கினான்.
தனது செம்மையான ஒளியினாலும், செஞ்சுடர் வெப்பத்தினாலும், உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் உய்ய வைக்கும் ஆதவனை – ‘சிவந்தன்’ எனப் போற்றி வணங்கினான்.
உலகனைத்துமுள்ள உயிர்களையெல்லாம் வாழவைக்கும் மாமழை தந்து – பரந்து விரிந்து எல்லையற்றுக் கிடக்கும் நீலமயமான விண்ணகத் தெய்வத்திற்கு ‘விண்ணு’ எனப் பெயரிட்டு வாழ்த்தி வணங்கினான்.
ஆக, இந்த மூன்று முதற் தெய்வங்களின் மூலப் பெயர்களும் திராவிட – தமிழ் மொழிப் பெயர்களே! ‘சிவந்தன்’ (Red God) எனப்பட்ட ஆதவனின் வழிபாடே காலகதியில் ‘சிவன்’ என்கிற தெய்வத்தின் பெயராக அமைந்தது.
இந்த ஆதித் தெய்வங்களை கருத்தில் கொண்டே ‘சிலப்பதிகாரம்’ எழுதிய இளங்கோ அடிகள் “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் – மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்” எனத் தனது ஒப்புயர்வற்ற காப்பியத்தை ஆரம்பித்து வைத்தார்.
இற்றைக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் – இந்திய மண்ணில் ஆரியர்கள் அடியெடுத்து வைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – இத்திராவிட மக்கள் தாய்க் கடவுளையும், திரிசடை அணிந்த சிவனையும், சிவலிங்கங்களையும் உருவமாகச் செய்து வழிபட்டார்கள் என்பதை சிந்துவெளி அகழ்வுகள் – முக்கியமாக மொகஞ்சதாரோ, ஹரப்பா, சன்ஹுதாரோ ஆகிய நகரங்களின் அகழ்வுகளில் கண்டெடுத்த உருவச்சிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலகட்டத்தில் இத்தெய்வங்களின் வழிபாடு இருந்ததே ஒழிய, நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு மதம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ஆனால் பிற்காலத்தில் மதம் என்ற கலாசார ஒழுங்குமுறை (Cultural System) ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இத்தெய்வங்கள் இந்து மதத் தெய்வங்களாக ஆக்கப்பட்டன.
சிந்துவெளி நாகரிகம் அதன் செம்பாங்குக் காலத்தைக் (Classical Period) கடந்து இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் இந்திய உபகண்டத்திற்குள் நுழைந்த இந்தோ – ஆரியர்கள் சிவந்தனை ‘ருத்திரன்’ ஆக்கியும், விண்ணுவை ‘விஷ்ணு’ ஆக்கியும், பார்வதியை ‘மலைமகள்’ ஆக்கியும் புராணங்கள் புனைந்தது வேறு கதை.
உலகில் ஒரு குறிப்பிட்ட இறைவாக்கினரைத் தலைவராகக் கொண்டு குறிப்பிடப்பட்ட தெய்வங்களையும், நடைமுறைகளையும், சடங்குகளையும், விதிகளையும், விதிமுறைகளையும் உள்ளடக்கிய மதம் என்ற பண்பாட்டு ஒழுங்குமுறை புதிய கற்காலத்தில்தான் உருவாகியது என பிரெஞ்சுத் தொல்லியலாளரான ஜாக்குவிஸ் கோவின் (Jacques Cauvin, 2000) கருதுகிறார்.
புதிய கற்காலத்திற்கு முன்னர் தென்னாசியாவில் வழக்கத்திலிருந்த மத சம்பந்தமான நடைமுறைகளை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. ஆன்மவாதம் சார்பான சமய நடைமுறைகள் (Animistic Religious Practices): உயிரில்லாப் பொருட்களிலும், இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கின்ற, ஆவியுலகக் கோட்பாடு சார்ந்த சமய நடைமுறைகள்.
2. மக்கள் மரபுவழி (நாட்டார்) சமய நடைமுறைகள் (Folk Religious Practices): கி.மு. 2800 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், முதிர்ந்த சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இந்த நடைமுறைகள் தனித்துவமான விதிமுறைகளைக் கொண்டிருந்தன.
புதிய கற்காலத்தில் கி.மு. இரண்டாயிரத்தாண்டின் நடுப்பகுதியில் வேறு இரு வகையான சமய வழக்குகள் தென்னாசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டன:
3. தென்னிந்தியாவில் தோற்றம் பெற்ற பெருங்கற் பண்பாட்டுச் சமய வழிபாடு.
4. வட இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேத கால மதச் சடங்குகள்.
மேற்கூறப்பட்ட இந்த நான்கு வகையான வழக்கங்களும், வழிபாடுகளும், நடைமுறைகளும், சடங்குகளும் இணைந்தே பிற்கால இந்துமதம் உதயமானது.
இந்து மதம் என்ற சொற்பதம் 1830 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களால் பிராமணிய (வேத மதம்) மதத்தைக் குறிப்பிடக் கொடுக்கப்பட்ட சொற்பதமாகும் (Encyclopaedia Britannica: Hinduism). அதுவரை காலமும் ‘இந்து’ என்ற சொற்பதம் ‘இந்துஸ்தானத்து’ (இந்திய) மக்களைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டதே ஒழிய அப்பதத்திற்கும் மதத்திற்கும் ஒருவிதமான தொடர்பும் இருக்கவில்லை.
தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டுச் சமய வழிபாட்டு நடைமுறைகளுக்கும், வட இந்திய வேதகால மதச் சடங்குகளுக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்தமையால் சமயச் சிந்தனைகளிலும், நடைமுறைகளிலும் தென்னிந்திய இந்துமதம் வட இந்திய இந்து மதத்தினின்றும் எதிர்முனைப்பட்டு நின்றது (Polarisation of religious ideas and practices). இந்த வேறுபாட்டிற்கான முக்கிய உதாரணங்கள்: தென்னிந்திய மக்கள் பூக்களையும், நீரையும் கொண்டு இறைவனுக்குப் பூசை செய்து வழிபட்ட காலத்தில், வேதகால ஆரியர்கள் ஓம குண்டத்தில் தீயெரித்து சுலோகங்கள் ஓதி யாகம் செய்தார்கள். கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்திய மக்கள் இறந்தவர்களை பெருங்கற் சமாதிகளிலும், பெரிய தாழிகளிலும் புதைத்து வைத்த பொழுதில், வேத கால ஆரியர்கள் சடலங்களை எரித்து வைத்தார்கள்.
ஆதிவாசிகளின் மத நம்பிக்கைகள்
இற்றைக்கு ஏறக்குறைய 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தென்னாசியாவை அடைந்த பழங்குடி மக்கள் ஒஸ்ரலோயிட் இனத்தவர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழி என அழைக்கப்படுகிறது. யக்ஷ – நாக வழிபாடுகள் இப்பழங்குடி மக்களின் மத்தியில் நிலவிய வழிபாட்டு முறைகள் ஆகும். இவ்வழிபாட்டு முறைகள் சமய வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தினை எடுத்துக் காட்டுவதுடன் உலகளாவப் பரவிய வழிபாட்டு முறைகளாகவும் விளங்குகின்றன. பின்னால் வந்த கலாசாரங்கள் இவற்றைத் தம் கலாசாரங்களுடன் இணைத்துக் கொண்டதால் இவ் ஆதி வழிபாட்டின் பல அம்சங்கள் அவற்றுடன் சங்கமித்துவிட்டன. திராவிட ஆரியக் கலாசாரங்கள் இத்தகைய சங்கமிப்பில் முக்கியமானவை ஆகும் (சிற்றம்பலம், சி.க. 1996: 44).
இந்திய, இலங்கை நாடுகளின் ஆதிவாசிகளான ஒஸ்ரலோயிட் மக்களிடம் யக்ஷ – நாக வழிபாடுகள் முக்கிய இடத்தை வகித்தன. இவ்வழிபாட்டில் இயற்கைச் சக்திகளில் – மரங்களில், ஆறுகளில், மலைகளில், குன்றுகளில் தெய்வங்கள் வாழ்கின்றன என்கிற நம்பிக்கை மேலோங்கியிருந்தது.
இந்த ஒஸ்ரலோயிட் மக்கள் குழுக்கள் அவர்கள் மேற்கொண்ட வழிபாட்டுத் தெய்வங்களை காரணமாகக் கொண்டு ‘யக்ஷர்’ (இயக்கர்), ‘நாகர்’ எனப் பேசப்பட்டார்கள். பிற்காலத்தில் சைவர், வைஷ்ணவர் எனப் பேசப்பட்டது போல என ஆனந்தா குமாரசாமி எடுத்துக்காட்டியுள்ளார் (Coomaraswamy, A.K. 1971). இதை உணராத பிற்கால நூல்கள் இவர்களை இரு இனங்களாக எடுத்துப் பேசியிருக்கிறார்கள். இன்னும், இலங்கையின் சில பாளி நூல்கள் நாகர்களை மனித வர்க்கத்தினராகச் சித்தரிக்கவில்லை. மாறாக, இவர்கள் சாதாரணமாகப் பாம்பின் தோற்றத்தினை உடையவர்களாகவும், நிலத்தின் கீழ் வாழும் ‘அமானுஷ்யர்களாகவும்’ (Non-humans) சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் மிகப் பழமையான இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் யக்ஷ – நாக வழிபாட்டு அம்சங்கள் பல காணக்கிடக்கின்றன. நாட்டுப்புற மக்களால் மிகத் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வந்த யக்ஷ தெய்வங்களாக சூலி, சூர்மகள், சூரரமகளிர், வரையரமகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி போன்ற பெயர்கள் கூறப்படுகின்றன.
இம்மக்கள் மேற்கொண்ட தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்த அறிஞர் ஆனந்தா குமாரசாமி, பின் வந்த திராவிட, ஆரிய கலாசாரங்கள் போன்றே இம்மக்களும் தமக்கு எனத் தனியான வழிபாட்டுக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்திருந்தமையை எடுத்துக் காட்டியுள்ளார். இவர்களது வழிபாட்டில் இயற்கைச் சக்திகள் முக்கியத்துவம் பெற்ற அதே சமயத்தில் உருவ வழிபாடும் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது (Coomaraswamy, A.K. 1971). இன்றைய இந்து (சைவ) மதத்தின் அடிநாதமாக விளங்கும் உருவ வழிபாட்டின் ஆரம்ப கர்த்தாக்கள் இந்த ஆதி மனிதர்களே என்பதையும் ஆனந்தா குமாரசாமி எடுத்துக் காட்டியிருக்கிறார் (Coomaraswamy, A.K. 1971).
யக்ஷ வழிபாடு
புராதன இந்தியாவில் – ஆரியரின் வருகைக்கு முன்னர் அங்கே வாழ்ந்திருந்த தஸ்யுக்களால் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டு முறைகளே யக்ஷ – நாக வழிபாடுகள் என்கிறார் வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் பேர்குஸன் (Fergusson, J. 1873: 244). ‘தஸ்யுக்கள்’ என்ற பதம் ஆரியர்களால் ஒரு பகுதி சிந்துவெளி மக்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட பதம் என்பது இரிக் வேதத்திலிருந்து பெறப்படுகிறது.
யக்ஷன் (இயக்கன்), யக்ஷி (இயக்கி) ஆகிய தெய்வங்கள் உறையும் இடங்களாக காடுகள், மலைகள், நீர்நிலைகள், மரங்கள் என்பன கருதப்பட்டன. ஊருக்குப் பொதுவான மரங்களில் இத்தெய்வங்கள் குடிகொண்டிருந்தன என நம்பிய மக்கள் அம்மரங்களை அலங்கரித்து, மாலை அணிவித்து, விளக்குகள் ஏற்றி வணங்கினர், படையல் செய்தனர், பலி கொடுத்தனர். தமது வழிபாட்டையும், நிவேதனப் பொருட்களையும் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக அம்மரங்கள் வினோதமான ஓர் ஒலியை எழுப்புவதாகவும் நம்பினார்கள்.
யக்ஷி வழிபாடே பின்னர் கருவள, வளமை வழிபாட்டிற்கான தாய்த்தெய்வ வழிபாடாக உருவெடுத்தது. இந்து சமயத்தில் செழிப்பைக் குறிக்கும் லக்ஷ்மியின் உருவமும், வழிபாடும் மௌரியர் காலத்தில் பிரபலமாக வழிபடப்பட்ட யக்ஷி உருவம் ஒன்றிலிருந்தே உருவாக்கப்பட்டது (வேதாசலம், வே. 1989).
அதுபோல் யக்ஷி வழிபாட்டு உருவங்களிலிருந்தே சிவனது உருவச் சிலைகள் வடிக்கப்பட்டிருப்பதை பார்க்கும், பட்னா, சாஞ்சி ஆகிய இடங்களிலிருந்த யக்ஷி உருவங்களை ஆராய்ந்த அறிஞர் ஆனந்தா குமாரசாமி அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார். தென்னாசிய மதங்களின் வரலாற்றில் முதன் முதலாகத் தோற்றம் பெற்ற சிலை வடிவங்கள் யக்ஷ தெய்வங்களின் சிலைகளே ஆகும் (Coomaraswamy, A.K. 1971).
யக்ஷ தெய்வங்களின் வதிவிடம் இம்மக்களால் ‘சைத்தியம்’ (கோயில்) என அழைக்கப்பட்டது. இப்பதம் ஒரு ‘ஒஸ்ரிக்’ மொழிப்பதம். இப்பதம் பின்னர் பௌத்த, ஜைன (சமண) இலக்கியங்களிலும், மகாபாரதத்திலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வழிபாட்டுத் தலங்கள் அதிகமாக மரங்களின கீழே நகரங்களிலோ, நகரங்களின் எல்லையிலோ, அல்லது நகருக்கு வெளிப்புறங்களிலோ காணப்பட்டன (சிற்றம்பலம், சி.க. 1996).
யக்ஷ வழிபாட்டிற்குரிய சைத்தியங்களே சங்க இலக்கியங்களில் ‘மன்றம்’ அல்லது ‘பொதியில்’ எனப் பெயர் பெற்றன. இம்மன்றங்களின் கீழே வழிபாட்டிற்காக அமைந்திருந்த கற்சிலைகளுக்கு விளக்கேற்றி, மலர்மாலை சூட்டி வழிபடுவதை பட்டினப்பாலை (246-249) இவ்வாறு உரைக்கிறது:
“கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்”.
இது தமிழகத்தில் அன்று நிலவிய யக்ஷ வழிபாட்டிற்குச் சிறந்த உரைகல்லாக அமைகின்ற அதே நேரத்தில் திராவிட வழிபாட்டுடன் அது சங்கமித்ததையும் எடுத்துக்காட்டி நிற்கிறது (வித்தியானந்தன், சு. 1954).
வரலாற்றுக்கு முற்பட்ட கால யக்ஷ வழிபாடு சங்ககாலம் வரை நீடித்திருந்ததையும் இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது.
பிற்காலத்தில் இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்கள் யக்ஷ, யக்ஷி வழிபாடுகளைத் தமது மதங்களின் துணைத் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டன. இது அவ்வழிபாடுகளைக் கடைப்பிடிக்கும மக்களை தத்தமது மதங்களைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குக் கையாண்ட யுக்தியாக இருக்கலாம்.
நாக வழிபாடு

மரத்தின் கீழ் நாகச் சிலைகள்

இந்துக் கோயில்களில் ‘நாகதம்பிரான்’
தென்னாசியாவில் குறிப்பாக இந்தியா, இலங்கை நாடுகளில் வாழ்ந்த தொல்குடியினரான ஒஸ்திரலோயிட் இன மக்களின் ஒரு பகுதியினரின் பண்டைய வழிபாட்டு நெறியாக விளங்கியது நாக வழிபாடு. இவ்வழிபாட்டை மேற்கொண்ட மக்கள் நாகர் என அடையாளப்படுத்தப்பட்டார்கள். காலப்போக்கில் இந்த வழிபாட்டைக் கடைப்பிடித்த குழுவினரின் குலமரபுச் சின்னமாக (Clan Totem), நாகம் செதுக்கிய உருவங்கள் கம்பங்களாக அவர்களின் குடியமைப்பிடங்களில் நடப்பட்டிருந்தன.
மர வழிபாட்டிற்கும் நாக வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. செழிப்பு, வளம், சந்ததி விருத்தி போன்ற அம்சங்களைப் பிரதிபலிப்பதாக இவை அமைந்தன. மரங்களின் கீழும், பிற இடங்களிலும் நாகங்கள் வாழ்ந்த புற்று மண்ணை நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தும் மரபு அன்று தொட்டு இன்றுவரை சில சமூகங்களில் நிலவி வருகிறது. மலட்டுத்தன்மையைப் போக்குவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வழிபாடு இயற்றப்படுகின்றது (சிற்றம்பலம், சி.க. 1996: 140).
பாம்பின் வடிவங்கள் பொறித்த சிலைகள் மரங்களின் கீழும், ஆற்றோரங்கள், நீர்நிலைகள், கோயில்கள் ஆகிய இடங்களிலும் வைத்து வழிபடப்பட்டன. நீர்நிலைகளில் நீராடி அவற்றின் கரையிலே நாகத்தின் சிலைகளை அமைத்து, தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு அவற்றிற்கு அலங்கரித்து அபிஷேகம் செய்து வழிபடல் மூலம் பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உண்டு. இவ்வாறு அனுஷ்டிக்கும் வழிபாட்டின் மூலம் மகப்பேறு கிடைத்ததும் அதற்கான பிராயச்சித்தமாக ஒரு நாக சிலையை நாகங்கள் காணப்படும் ஆற்றோரங்களிலும், மரங்களின் கீழும் நிறுத்தி வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு நேர்த்திக்கடனுடன் மேற்கொள்ளப்படும் நாகபூசை, அஷ்வமேதம் அல்லது புத்திர காமேஷ் போன்ற யாகங்களுக்குச் சமமானது என்ற நம்பிக்கையும் உண்டு. இவற்றைவிட நேர்த்திக் கடனாக நாகச்சிலைகளை ஆலயங்களுக்கு அளிக்கும் வழக்கமும் காணப்படுகிறது (சிற்றம்பலம், சி.க. 1996: 141).
வட இலங்கையின் நாகர்கள் மற்றைய தமிழ்பேசும் மக்களுடன் கி.பி. இரண்டாம் – மூன்றாம் நூற்றாண்டுகளில் இரண்டறக் கலந்துவிட்டார்கள். அதன் பின்னர் நாகர் எனத் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயக் குழு இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால் அவர்கள் மேற்கொண்ட வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் மரபுவழி நாட்டார் சமய நடைமுறைகளாக இன்றுவரை நிலைபெற்றிருக்கின்றன. கிழக்கு யாழ்ப்பாணத்தில் நாகர்கள் அமைத்த கோயில் இன்றும் ‘நாகர் கோயில்’ என்ற பெயரால் அழைக்கப்படுவதுமல்லாமல், அக்கோயில் இருக்கும் கிராமமும் நாகர்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இன்னும், யாழ்ப்பாணத்திலுள்ள பல கோயில்களில் ‘நாகதம்பிரான்’ என்ற பெயரில் நாகச் சிலைகள் வணங்கப்பட்டு வருகின்றன.

சிவன் கழுத்தில் அணிந்திருக்கும் நாகம் புராதன நாக வழிபாட்டிலிருந்து இந்துமதம் பெற்றுக்கொண்ட சின்னமாகும்.
2
சிந்துவெளிச் சைவ மதத் தெய்வங்களும் – அவற்றை நிகர்த்த பண்டைய யாழ்ப்பாணத் தெய்வங்களும்
இக்காலத்தில் இந்துமதக் கலாசார வரலாறு பற்றிப் பேசுவோர் தமது வரலாற்றை சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் கி.மு. 3800 ஆம் ஆண்டளவில் ஆரம்பமாகி கி.மு. 1500 ஆம் ஆண்டுவரை நீடித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ‘இந்து மதம்’ என்ற பெயரால் ஒரு மதம் இருக்கவில்லை.
அதுவரை காலமும் வேதமதம், வைதீக மதம், பிராமணியம் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மததிற்கு ‘இந்து மதம்’ என்ற பெயர் 1830 ஆம் ஆண்டில் பிரித்தானிய எழுத்தாளர்களால் கொடுக்கப்பட்டது (Hinduism: Encyclopaedia Britannica 1991). 1830 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட எந்த உலக இலக்கியத்திலும் ‘இந்துமதம்’ என்ற பெயரால் ஒரு மதம் குறிப்பிடப்படவில்லை.
‘ஹிந்து’ என்ற சொல் ஒரு பாரஸீக மொழிப் பதம். இச்சொல்லால் பாரஸீகர்கள் இந்திய நாட்டையும், ‘ஹிந்துக்கள்’ என்ற பெயரால் இந்திய மக்களையும் அழைத்தார்கள். கி.மு. 518 ஆம் ஆண்டிற்குரிய ஆக்கிமெனிட் சாம்ராச்சிய மன்னர்களின் பேர்ஸிபொலிஸ் கல்வெட்டில் “ஹிந்து நதிக்கப்பாலுள்ள ஹிந்து – நாடு” என்ற பொறிப்புக் காணப்படுகிறது (Stolper, M.W. 2005: 18-24).
பாரஸீக மொழியிலிருந்து இப்பெரைப் பெற்ற கிரேக்கர்கள் இந்த நாட்டை ‘இந்து – நாடு’ என அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் ‘இந்தியா’ என்ற பெயரைக் கொடுத்தார்கள். வட இந்தியர்கள் தங்கள் நாட்டை பாரத வர்ஷா (பாரத நாடு), ஆரிய வர்த்தா ஆகிய பெயர்களால் அழைத்தார்கள். தமிழர்கள் ‘நாவலந் தீவு’ என்றார்கள். பின்னால் வந்த மொகலாயர்கள் ‘ஹிந்துஸ்தானம்’ என்ற பெயரினால் நாட்டை அழைத்தார்கள்.
1830 ஆம் ஆண்டில் பிரித்தானிய எழுத்தாளர்கள் வேத மதத்திற்கு ‘இந்து மதம்’ என்ற பெயரைக் கொடுத்த வேளையில் அவர்களுக்கு சைவமதம், வேத மதத்தினின்று வேறான ஒரு மதம் என்பது விளங்கவில்லை. இந்துமதம், இந்திய மதம் என்ற வகையில் அப்பெயர் நிலைத்துவிட்டது. காலப்போக்கில் சைவமதம் இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆக்கப்பட்டது.
சிந்துச் சமவெளியில், மொகஞ்சதாரோவில் அகழாய்வுகளை மேற்கொண்ட சேர் ஜோன் மார்ஷல் அங்கே கண்டெடுத்த வழிபாட்டுச் சின்னங்களை இந்துமதச் சின்னங்கள் எனக் குறிப்பிடவில்லை. வெகு தெளிவாக சைவமதச் சின்னங்கள் என்றே கூறிச் சென்றிருக்கிறார்.
சிந்துவெளிச் சமய வழிபாடுகள்
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், முதிர்ந்த சிந்துவெளி நாகரிகத்தில் – பிரித்தானியத் தொல்லியலாளர் சேர் ஜோன் மார்ஷல் மொகஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மூன்று வகையான வழிபாட்டுச் சின்னங்களைக் கண்டெடுத்தார்: 1. தாய்த் தெய்வ வழிபாடு, 2. சிவ வழிபாடு, 3. லிங்க வழிபாடு.
இவற்றைக் கண்டுபிடித்த காலகட்டத்தில் இந்துமதம் என்ற பெயரில் ஒரு மதம் இருக்கவில்லை. ஜோன் மார்ஷல் சிந்துவெளி மதத்தை இவ்வாறு பதிவு செய்திருந்தார்:
“நாங்கள் கண்டுபிடித்த தொல்பொருள் கூறுகளில், அவைற்றால் முடிந்தளவு பொருள் வடிவிலான திண்ணிய வெளிப்பாடுகளில், சிந்து மக்கள் கடைப்பிடித்த மதம் இந்து மதத்தின் நேரியல் முன்னோடி மதமாகும்.”
“There is enough in the fragments we have discovered to demonstrate that so far as it was capable of expression in outward concrete forms, this religion of the Indus people was the linear progenitor of Hinduism”. (Marshall, J. 1931, Vol. I, p. 58).
தாய்த் தெய்வ வழிபாடு
சிந்துவெளியில் மொஹஞ்சதாரோ, ஹரப்பா, மற்றும் பல மையங்களில் கண்டெடுத்த வழிபாட்டுப் பொருட்களில் அதிகமானவை சுடுமண்ணாலான தாய்த்தெய்வ உருவங்கள் ஆகும். இவை வீடுகளில் வைத்து வழிபடுவதற்காகப் பெருந்தொகையாக அச்சில் களிமண் கொண்டு உருவாக்கப்பட்டு, சூளையில் சுடவைத்துக் கெட்டியாக்கப்பட்டவை. சில உருவங்களின் தலையின் இருபக்கமும் இரு குண்டுச் சட்டிகள் காணப்படுவது அவற்றில் எண்ணெய் ஊற்றி திரிவைத்து எரித்து வணங்குவதற்காகும். அச்சட்டிகளில் படிந்திருக்கும் கரியைக் கொண்டு இது ஊகிக்கப்படுகிறது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி மையங்களில் மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் அதிகமாகக் காணப்படும் சிறு சிறு கோயில்கள் பல்வேறு பெயர்களைக் கொண்ட தாய்த்தெய்வத்தின் கோயில்கள் தான். சிந்துவெளியில் அகழ்வுகளை மேற்கொண்ட தொல்லியல் மேதை சேர் ஜோன் மார்ஷலின் கணிப்பு இது:
“For in no country in the world has the worship of the Divine Mother been from time immemorial so deep-rooted and ubiquitous as in India. Her shrines are found in every town and hamlet throughout the length and breadth of the land…. Her representatives are the Grāmadevatās, the village goddesses whose names are legion and whose local attributes may vary, but who are one and all personifications of the same power.” (Marshall, J. 1931, Vol.I, p.51).
“தாய்க் கடவுள் வழிபாடு எண்ணிப்பார்க்க முடியாத தொல்காலத்திலிருந்து இந்தியாவில் ஆழமாக வேர்விட்டு எங்கும் நிறைந்திருப்பது போல, உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது. அத்தெய்வத்தின் கோயில்கள் எல்லா நகரங்களிலும், எல்லாக் கிராமங்களிலும், நாட்டின் நீள அகலமெல்லாம் காணப்படுகிறது. அத்தெய்வத்தின் பிரதிநிதிகள் கிராம தேவதைகள் – அதாவது, கிராமக் கோயில்களில் காணப்படும் தாய்த் தெய்வங்கள். அவற்றின் பெயர்கள் எண்ணிலடங்காதவை. அவற்றின் பண்புக் கூறுகள் மாறுபடலாம், ஆனால் அவை அனைத்தும் அதே சக்தியின் உருவகம்தான்.”

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் தாய்க் கடவுள் உருவம். தலையின் இரு பக்கங்களிலுமிருக்கும் சட்டிகள் தொழுகையின் போது எண்ணெய் ஊற்றி திரி கொளுத்தி எரிப்பதற்காகும்.

யாழ்ப்பாணம் கோட்டை அகழ்வுகளில் கண்ட சுடுமண்ணாலான இத் தாய்த்தெய்வ உருவம் 2011-12 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தில் மாலை அணிந்த இந்த உருவத்தின் இரு பக்கமும் ஆணும் பெண்ணுமான இரு பக்தர்கள் முழங்காலில் நிற்கிறார்கள். 6.6 செ.மீ. அகலமும், 6.3 செ.மீ. உயரமும், 4 செ.மீ கனதியும் கொண்ட இச்சுடுமண் தட்டு அடியில் தட்டையாக, வீடுகளில் வைத்து வணங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது (Thiagarajah, Siva 2022: 42-43). நன்றி: வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கந்தரோடைக் கொற்றவை

கந்தரோடைக் கொற்றவைத் தகடு. நன்றி: ப. புஷ்பரட்ணம்.
கந்தரோடை அகழ்வுகளில் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட செப்புத் தகடு ஒன்றில் ஒரு தட்டையான பீடத்தில் லலிதாசன இருப்பு நிலையில் அமர்ந்திருக்கும் பெண் தெய்வம் தலைவிரி கோலத்தில் காணப்படுகிறார். கையில் தாமரை மலரைப் பிடித்திருக்கும் வலது கரம் தோள் மட்டத்திற்கு உயர்ந்திருக்கிறது. வெட்டப்பட்டிருக்கும் இடது கரம் முழங்காலில் படிந்திருக்கலாம். இடது கால் முழங்காலில் மடிக்கப்பட்டு பீடத்தில் அமர்ந்திருக்க, வலது கால் கீழே தொங்குகிறது.
இந்த உருவம் தாய்த் தெய்வத்தின் இன்னொரு வடிவமான கொற்றவையின் உருவமாகும். தமிழ் இலக்கியங்களில் கொற்றவை ஒரு பழிவாங்கும் தெய்வமாகச் சித்தரிக்கப்படுகிறார். இத்தெய்வத்தை மனதில் கொண்டே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் படைத்திருக்கிறார் என்ற கருத்து உள்ளது. இப்பட்டயத்தின் காலம் கி.மு. 300 ஆண்டாகும்.
கந்தரோடை லக்ஸ்மி பட்டயங்கள்

கந்தரோடை அகழ்வுகளில் கண்ட பல வகையான லக்ஸ்மி பட்டயங்கள். நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
செம்பு, ஈயம், வெண்கலம், நிக்கல், இரும்பு ஆகிய பலவகையான உலோகங்களால் செய்யப்பட நீள்வட்ட அல்லது நீள்சதுர வடிவில் ஒரு பெண் தெய்வத்தின் உருவத்தைக் கொண்ட பட்டயங்கள் கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பட்டயங்களை சிலர் நாணயங்கள் எனவும் கருதுவர். 1920களில் கந்தரோடை அகழ்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் அவற்றில் கண்ட பெண் தெய்வத்தை லக்ஸ்மி என இனம் கண்டு, அவற்றிற்கு ‘லக்ஸ்மி நாணயங்கள்’ எனப் பெயர் சூட்டினார் (Pieris, P. 1922: 11-20). இப்பட்டயங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்குரிய பெருங்கற் பண்பாட்டு கலைப்பொருட்கள் முதல் கி.பி. 500 ஆம் ஆண்டிற்குரிய ரோமாபுரி நாணயங்கள் வரை – கி.மு. 300 ஆம் ஆண்டு முதல் கி.பி. 500 ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. இவை இலங்கை முழுவதிலும் – ஆனைக்கோட்டை, வல்லிபுரம், நல்லூர், மாந்தை, பூநகரி, உடுத்துறை, அநுராதபுரம், அக்குறுகொட, திஸமகாராமை, சிலாபம், புத்தளம், நிந்தவூர் ஆகிய பல மையங்களில் காணப்பட்ட போதிலும், கந்தரோடையிலேயே பெருந்தொகையில் காணப்படுவதினால் இப்பட்டயங்கள் கந்தரோடையில் தயாரிக்கப்பட்டனவாகக் கருதப்படுகின்றன (Pushparatnam, P. 2001, 2002).

கந்தரோடையில் போல் பீரிஸ் கண்டெடுத்த ஒரு லக்ஸ்மி பட்டயம். Courtesy: Paul E.Pieris, 1922.
இப்பட்டயங்களில் காணப்படும் உருவம் பற்றிய விளக்கம் வருமாறு: இந்தப் பட்டயங்களின் முகப்புப் பக்கத்தில் காணப்படும் லக்ஸ்மியின் உருவம் ஒரு மேடையில் நிற்கும் நிலையில் காணப்படுகிறது. இதன் மறுபக்கத்தில் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட ‘சுவாஸ்திகா’ உள்ளது. இந்தப் பெண் தெய்வத்தின் உருவம் லக்ஸ்மியாக இனம் காணப்பட்ட போதிலும் எல்லாப் பட்டயங்களிலும் ஒரே வகையான சிற்பவியல் கூறுகள் இடம்பெற்றிருப்பதாகக் கூற முடியாது. அதிகமான பட்டயங்களில் தாமரை மலரின் மேல் நிற்கும் ஓர் இளம் பெண் ஒரு கரத்திலோ அல்லது இரு கரங்களிலுமோ தண்டுடன் கூடிய தாமரை மலரைப் பிடித்த வண்ணம் நிற்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. சில பட்டயங்களில் கரத்தில் ஒரு திரிசூலத்தையோ அல்லது ஒரு குத்து விளக்கையோ பிடித்திருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பெண்ணின் உருவம் தலையிலிருந்து கால்வரையும், சில சமயங்களில் தலையிலிருந்து இடுப்பு வரையும் காணப்படுகிறது. பெரும்பாலான பட்டயங்களில் உருவம் நிர்வாணமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சில பட்டயங்களில் மெல்லியதான ஓர் அங்கி அணிந்திருப்பதைக் காண முடிகிறது. சில பட்டயங்களில் பெருத்த மார்பகங்களையும் குறுகிய இடுப்பையும் கொண்ட ஓர் இளம் பெண்ணையும், சிலவற்றில் தட்டையான மார்பகங்களையும் சதைக்கொழுப்பான இடுப்பையும் கொண்ட முதியவரான ஒரு பெண்ணையும் காண முடிகிறது. சில பட்டயங்களில் இப்பெண்கள் காதணிகள், கரங்களில் காப்புகள், கால்களில் சதங்கைகள் அணிந்திருக்கிறார்கள்.
சில செப்புப் பட்டயங்களில் ஒரு தாமரை மலரின் மேல் நிற்கும் பெண், கைகளில் தண்டுடன் கூடிய தாமரை மலரை வைத்திருக்கிறார். அவரது தலைக்கு மேலே இரு பக்கமும் இரு யானைகள் தும்பிக்கை வழியாக நீர் அபிஷேகம் செய்கின்றன. இக்காட்சியானது ஸ்ரீ ஸுக்தம் (Sri Suktam) சமஸ்கிருத சுலோகத்தில் வரும் கஜலக்ஸ்மியின் வர்ணனையை நினைவுபடுத்துகிறது. இக்காட்சியைக் காட்டும் கற்சிலைகள் மாமல்லபுரத்திலும், காஞ்சிபுரத்திலும் காணப்படுகின்றன.
மொகஞ்சதாரோ சிவன் உருவம்
1928 ஆம் ஆண்டு மொகஞ்சதாரோ அகழ்வுகளில் ஸ்ரீரைற் கல்லில் செதுக்கப்பட்ட இந்த உருவம் கிடைத்தது. இதைப் பரிசோதித்த ஜோன் மார்ஷல் தனது நூலில் பின்வருமாறு விவரிக்கிறார்: “மூன்று முகங்களைக் கொண்ட இத்தெய்வம் ஒரு பதிவான சிம்மாசனத்தில் யோகாசன நிலையில் கண்கள் மூடிய வண்ணம் அமர்ந்திருக்கிறார். நீண்ட கரங்கள் மடிந்த நிலையிலுள்ள முழங்கால்களில் நிலைபெற்றுள்ளன. கரங்களில் வளையல்களும், மார்பில் முக்கோண வடிவிலான கழுத்தணியும், இடுப்பில் இரட்டை அரைக் கச்சையும் அணிந்துள்ளார். இடுப்பின் கீழ் கால்கள் வெறுமையாகவும், ஊர்த்வமேத்ரம் (நிமிர்ந்த ஆண்குறி) தெரியுமாறும் உள்ளது. தலையணி இரு கொம்புகளுக்கு மேலாக அமைந்து நடுவில் உயர்ந்திருக்கிறது. இத்தெய்வத்தின் வலது பக்கத்தில் ஒரு யானையும், புலியும் – இடது பக்கத்தில் ஒரு எருமையும், காண்டாமிருகமும் – இருக்கையின் கீழ் இரு மான்களும் காணப்படுகின்றன.

மொகஞ்சதாரோவில் ஜோன் மார்ஷல் கண்டெடுத்த சிவன் உருவம்.
இத்தெய்வத்தின் தன்மைகள் தனிப்பட்டவை. மூன்று முகம் கொண்ட இத்தெய்வம் மூவகை அம்சங்களும் கொண்ட ‘மும்முகத்தோன்’ (Tri Muktha) என அழைக்கப்படும் ஆதி சிவனை ஞாபகப்படுத்துகிறது. யோக நிலையில் இருப்பதனால், யோகிகளின் தலைவனாகிய – மகாயோகியான சிவனைக் குறிக்கிறது. சிவன் யோகிகளின் தலைவன் மட்டுமல்ல ‘பசுபதி’ என்னும் பெயரைக் கொண்ட விலங்குகளின் தலைவனுமாவார். தலையில் அணிந்திருக்கும் தலையணி திரிசூலத்தைப் (Trident) பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம் (Marshall, J. 1931, Vol I, pp. 54-55).
யாழ்ப்பாணச் சிவன் உருவம்

யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த செப்புத் தகடு. இதில் கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் உருவமும், அதற்கு முன்னால் காணப்படும் விலங்குகள் போன்ற உருவங்களும், மொகஞ்சதாரோவில் மார்ஷல் கண்டெடுத்த சிவன் உருவத்தை நினைவுபடுத்துகின்றன. நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு செப்புத் தகட்டில் முழங்கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் அமர்ந்த ஓர் உருவம் காணப்படுகிறது. இந்த உருவத்தின் தலையின் மேற்பகுதி வெட்டப்பட்டிருக்கின்றது. இரண்டு கரங்களும் முழங்கையில் மடிக்கப்பட்டு கீழே முழங்கால்களில் தங்கியிருக்கின்றன. இத்தகடு தேய்ந்த நிலையில் இருப்பதால் உருவங்கள் மங்கலாகவே தெரிகின்றன. உட்கார்ந்திருக்கும் உருவத்திற்கு முன்னால் நான்கு விலங்குகளின் தலைகளும் உடலின் முற்பகுதியும் மங்கலாகத் தெரிகின்றன. படத்தின் வலப்பகுதியில் கீழே இருப்பது ஒரு மானின் உருவம் போலத் தெரிகின்றது. இந்தத் தகட்டிலிருக்கும் படம் மொகஞ்சதாரோவில் ஜோன் மார்ஷல் கண்டெடுத்த சிவனின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. இதன் காலம் கி.மு. 300 ஆம் ஆண்டாகக் கணிக்கப்படுகிறது (Pushparatnam, P. 2002:85; Thiagarajah, S. 2016: 230).
திரிசூலப் பட்டயம்

யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்த கி.மு. 300 ஆம் ஆண்டிற்குரிய இப்பட்டயம் ஒரு திரிசூலத்தின் அருகே உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதரைக் காட்டுகிறது. நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தினால் யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 300 ஆம் ஆண்டிற்குரிய ஒரு பட்டயத்தில் (இது ஒரு நாணயமாகவும் இருக்கலாம்), ஒரு தண்டத்தில் மேல் பொருத்தப்பட்ட திரிசூலம் காணப்படுகிறது. இதன் பக்கத்தில் தலையணி தரித்த ஒரு மனிதர் உட்கார்ந்திருக்கிறார். இவர் ஒரு பூசகராகவோ அல்லது பக்தராகவோ இருக்கலாம். தென்னாசியாவில் திரிசூலம் சிவ வணக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது (Thiagarajah, S. 2016: 41).
சுட்ட மண்ணில் திரிசூலம், சிவலிங்கம்

கட்டுக்கரையில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் போது கண்டெடுத்த பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்களினிடையே தாய்த்தெய்வ உருவங்கள், சிவலிங்கம், திரிசூலக் குறி பதித்த பானை ஓடு ஆகியன காணப்படுகின்றன. இதன் சரியான காலம் தெரியாத போதும், இலங்கையில் பெருங்கற் பண்பாடு கி.மு. 1000 ஆம் ஆண்டுக் காலத்திலேயே ஆரம்பமாகியிருக்கிறது. நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் இந்து மதம் ஆரம்பமாகும் முன்னரே இச்சின்னங்கள் அக்கால மக்களின் வழிபாட்டுப் பொருட்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது (புஷ்பரட்ணம், ப. 2017: 35).
சிந்துவெளி லிங்க உருவங்கள்
மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் கற்களினாலான லிங்க உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் அவை இந்தோ – ஆரியர்களின் எதிரிகளான ‘தஸ்யுக்களின்’ வழிபாட்டுப் பொருட்களாக இருந்தன என இருக்கு வேதம் குறிப்பிடுகிறது. இந்த லிங்கங்களை சிந்துவெளி மக்களின் சைவ சமயச் சின்னங்களாக மார்ஷல் குறிப்பிடுகிறார் (Marshall, J. 1931: 59).


மொகஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும் கண்டெடுத்த லிங்க உருவங்கள். நன்றி: Sir John Marshal, 1931: pl. XIV. 2&4.

கலிபங்கனில் கண்டெடுத்த சுடுமண் லிங்க உருவம் நன்றி: Andrew Robinson.
மேலே கூறப்பட்ட சிந்து மக்களின் சமய நம்பிக்கைகளும், அவர்கள் வணங்கிய தெய்வங்களும், பேணிய சடங்குகளும் பிற்காலத்தில் உருவான சைவ, இந்து சமயங்களினுள்ளே விரவிக் கிடக்கின்றன. இதிலிருந்து, இந்து மதம் வேதங்களிலிருந்து மட்டும் உருவான மதம் என்ற கருத்து ஏற்க முடியாததொன்றாகின்றது. புராதன சிந்துவெளி மக்கள் பேணிய மதமும் இந்திய – ஆரியர் கொண்டு வந்த மதக் கருத்துகளும் இணைந்தே பிற்கால இந்து மதம் உருவானது.
சிவனின் உருவம், மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் கண்டெடுத்த சிவலிங்க கல் – உருவங்கள், நீரை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கும் சமயச் சடங்குகள், தாய்த் தெய்வ வழிபாடு – இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு ‘சைவமதம்’ ஆரம்பமான இடம் சிந்து நகரங்கள் அமைந்த இடம் என்ற முடிவிற்கு வருகிறார் மார்ஷல். அவரது நூலில் சமயம் பற்றிய பகுதியில் அவர் கூறுகிறார்:
“Among the many revelations that Mohenjo-daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the Chalcolithic age or perhaps even further still and that it thus takes its place as the most ancient living faith in the world”. − Sir John Marshall: Mohenjo-Daro and the Indus Civilization – 1931: Ch. V: 48-78.
யாழ்ப்பாண லிங்க வழிபாடு
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பண்டைய மக்கள் மத்தியில் லிங்க வழிபாடு காணப்பட்டது. சைவ (இந்து) மதத்தில் இன்றுவரை நிலவி வரும் லிங்க வழிபாட்டை ஆரம்பித்துவைத்த பெருமைக்குரியவர்கள் ஒஸ்திரலோயிட் மக்களே என்கிறார் இந்திய வரலாற்றாசிரியர், கல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரமேஷ் சந்திர மஜும்தார் (Majumdar, R.C. 1951). யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட லிங்க வழிபாடு, புராதன ஒஸ்திரலோயிட் மக்களின் வம்சாவளியினரான நாகர்கள் விட்டுச் சென்ற ஒரு வழிபாட்டுச் சின்னமாக இருக்கலாம். நாகர்கள் மற்றைய தமிழ் பேசும் மக்களுடன் கலந்த பின்னர் அச்சமூகத்தில் இந்த வழிபாடு தொடர்ந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட பழைய சட்டநாதர் கோயிலின் அழிபாடுகளினிடையே காணப்பட்ட ஒரே கல்லினாலான (Monolithic) சேதமடைந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு திரும்பக் கட்டிய ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்தது. அதன் உருவம், செய்திறன் ஆகியவற்றைக் கொண்டு இந்த லிங்கம் வரலாற்றிற்கு முற்பட்ட நாகர் காலத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிவலிங்க வழிபாடு இன்றுவரை நடைபெறுகிறது.

யாழ்ப்பாணம் சட்டநாதர் ஆலயத்தில் காணப்படும் இப்புராதன சிவலிங்கம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட முந்தைய சட்டநாதர் ஆலயத்தின் அழிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு புதிய கோயிலில் வைக்கப்பட்டு இருக்கிறது. படம், நன்றி: கலாநிதி சி.க. சிற்றம்பலம்.
3
நாட்டார் மத வழிபாடுகள்
மரபுவழி நாட்டார் சமய வழிபாடுகளில் யாழ்ப்பாணக் கிராமங்களில் பிரபலமானது அம்மன் வழிபாடாகும். திராவிடக் கிராமிய சம்பிரதாய மரபில் ஆழமாகப் பதிந்த இப்பண்பாடு வேதகால, பிராமணியத் தாக்கங்களுக்குப் பல ஆயிரத்தாண்டுகள் முற்பட்ட வழிபாட்டு முறையாகும். இத் தாய்த்தெய்வ வழிபாடு இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி முதல் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, காளியம்மன், நாகபூஷணி அம்மன் ஆகிய பல்வேறு பெயர்களில் இன்றுவரை புதிய புதிய ஆலயங்கள் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
மாரி அம்மன் வழிபாடு
நாட்டார் வழிபாடுகளில் மிகப் பழமையானது தாய்த்தெய்வ வழிபாடாகும். இது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் பல வகையான வடிவங்கள் ‘அம்மன்’ என்ற உருவத்தில் மரங்களின் கீழும், சிறு கட்டடங்களின் உள்ளேயும் வைத்து வழிபடப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் முக்கியமானது ‘மாரியம்மன்’ ஆகும். இத்தெய்வம் ‘கிராமதேவதை’ என்ற பெயராலும் வணங்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரியமான இத்தெய்வம் யாழ்ப்பாணக் கிராமங்களில் இன்றுவரை பெரிதும் சிறிதுமான கோயில்களில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது. ‘மாரி’ என்ற பெயர் மழையுடனும், ‘அம்மன்’ என்ற பெயர்ப்பகுதி தாயுடனும் தொடர்புடையது. பிற்காலத்தில் இந்த அம்மன் வழிபாடு பார்வதி, காளி, துர்க்கை, திரௌபதை ஆகிய தெய்வங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி கிராமத்திலுள்ள முத்துமாரி அம்மன் கோயிலும், கோயிலுக்குள்ளே ஆதிமூலத்தில் எழுந்தருளியிருக்கும் தாய்த்தெய்வமும்.
கண்ணகி அம்மன் வழிபாடு
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் கண்ணகி அம்மன் தெய்வமாக மக்களால் இன்றுவரை வழிபட்டுவரப்படுகிறார். இவற்றில், கந்தரோடையில் அழிந்துபோய்விட்ட அங்கணாமைக்கடவை அம்மன் கோயில் இலங்கை அரசன் கஜபாகுவினால் கொண்டுவரப்பட்ட கண்ணகி சிலையை வைத்துப் பிரகடனப்படுத்தப்பட்டது என சிங்கள அறிஞர் போல் பீரிஸ் கூறியுள்ளார். அங்கணாமைக்கடவை என்ற பெயர் இன்றுவரை அப்பகுதிக்கு வழக்கில் உள்ளது. ‘அங்கண்’ என்றால் கண்கள் என்று பொருள். ‘அம்மை’ என்றால் தாய் எனப் பொருள்படும். கண்ணகி அம்மன் வழிபாடு பௌத்த மதத்துடனும் (பத்தினி வழிபாடு) தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் கண்ணகி அம்மனாக வழங்கப்பட்டு வரும் கோயில்கள் உள்ளன. வறுத்தலைவிளான் கிராமத்திலுள்ள கண்ணகி அம்மன் கோயில், ஊரெழு கண்ணகி அம்மன் கோயில், வரணியிலுள்ள சித்திவேரம் கண்ணகி அம்மன் கோயில், காரைநகர் மடத்துக்கரை கண்ணகி அம்மன் கோயில் என்பன இவற்றில் முக்கியமானவை. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு வழக்கிழந்து போய்விட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இவ்வழிபாடு இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஊரெழு கண்ணகி அம்மன் கோயில்
ஐயனார் ஆலயங்கள்
யாழ்ப்பாணத்தில் பண்டைய காலம் தொட்டு, நெடுங்காலமாக வழிபட்டு வரும் நாட்டார் தெய்வங்களில் ஐயனாரும் ஒருவராவார். இத்தெய்வம் சமஸ்கிருதத்தில் ‘சாஸ்தா’ என்றும், தமிழில் ‘சாத்தன்’ எனவும் அழைக்கப்படுகிறது. பழந்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சாத்தனுக்கான கோயில்களும், பக்தர்களும் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் (திருமுறை, 4:32:4) சாத்தனை சிவனின் மகன் எனக் குறிப்பிடுகிறார்:
“பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனாய் வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற் றூரனாரே”

அனலைதீவு ஐயனார் கோயில்
இலங்கையில் ஐயனார் கோயில்கள் குளங்கள் அல்லது ஏரிக் கரைகளிலே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நீர் நிலைகளின் பாதுகாவலன் என்ற நம்பிக்கை இவற்றை ஐயனார் வழிபாட்டுடன் தொடர்புபடுத்துகிறது. கிராமங்களிலுள்ள ஐயனார் கோயில்களின் சிலைகளில் மேனிக்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டு வலது கரத்தில் ஒரு தண்டமோ அல்லது வாளோ அல்லது ஒரு சவுக்கோ கொடுக்கப்பட்டிருக்கும். இக்கோயில்களுக்கு அருகில் காணப்படும் சுடுமண்ணினால் செய்யப்பட்ட யானை, குதிரை, நாய் ஆகிய மிருகங்கள் அவருக்கு நிவேதனமாக மக்களால் கொடுக்கப்பட்ட சிலைகளாகும்.
பொதுவாக விவசாய சமூகத்தவரது வழிபாட்டுத் தெய்வமாக அமைந்துள்ள இக்கடவுளின் கோயில் கிராமத்தின் தென்மேற்குத் திசையில் அமைந்திருப்பது வழக்கம். வட யாழ்ப்பாணத்தில் கட்டுவன் என்ற பெயர் கொண்ட பூர்விகக் கிராமத்தில் உள்ள புராதன ஐயனார் கோயில் அந்த ஊரின் தென்மேற்கு மூலையில் ஒரு குளத்தின் அருகே காணப்படுகிறது. அவ்வூரின் மக்களில் பலர் அவரைத் தங்களது குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். இவர், தனது பரிவாரங்களுடனும், பாவாடைராயன், குப்புசாமி ஆகிய உதவியாளர்களுடனும் இரவில் ஊரைக் காவல் புரிகிறார் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
சமஸ்கிருத நூல்களில் ‘சாஸ்தா’ என்ற பெயர் முதலில் புத்த பகவானுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. பின்னர் விஷ்ணு புராணத்தில் ‘சாஸ்தா’ என்ற பெயர் ‘மண்டலத்து அரசன்’ என்ற பொருளில் வழங்கப்பட்டது. பாகவத புராணத்தில் சிவனுக்கும், மோகினி வடிவம் எடுத்த விஷ்ணுவிற்கும் ‘ஹரிஹர புத்ரன்’ என்ற மகன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டளவில் கேரள நாட்டின் மக்கள் மரபுக்கதை ஒன்றில் (Folklore), முற்காலத்தில் பம்பை நதிக்கரையிலிருந்த பண்டலம் நாட்டில் அவனது மாற்றாந்தாயான அரசி அந்நாட்டின் இளவரசனான மணிகண்டனை புலிப்பால் கொண்டுவருமாறு காட்டுக்குள் அனுப்புகிறாள். அவன், காட்டில் அவனை எதிர்த்த மகிஹி என்ற பெண் இராட்சசியைக் கொன்றுவிட்டு, ஒரு புலியில் சவாரி செய்து கொண்டு நாட்டுக்குத் திரும்புகிறான்.
அவனிடம் தெய்வாம்சம் இருப்பதைக் கண்ட அவனது தந்தையான அரசன் மணிகண்டனுக்குக் கோயில் எழுப்புகிறார். பிற்காலத்தில் மணிகண்டன் என்ற இளவரசனுக்கு ‘ஐயப்பன்’ என்ற பெயர் வழங்கப்பட்டு, அவனை ‘ஹரிஹர புத்திரனாக்கி’, ‘சாஸ்தாவாக்கி’ கோயில்கள் அமைக்கப்பட்டன. அந்நாட்டின் பண்டைய ஐயனார் கோயில்கள் ஐயப்பன் கோயில்களாக மாற்றப்பட்டன. இலங்கையிலும் சில பழைய ஐயனார் கோயில்கள் இக்காலத்தில் ஐயப்பன் கோயில்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
வைரவர் கோயில்கள்
யாழ்ப்பாணக் கிராமங்களில் அதிகமாகக் காணப்படும் கிராமியத் தெய்வக் கோயில்கள் வைரவர் கோயில்களாகும். இத்தெய்வத்தின் கோயில்கள் இல்லாத கிராமம் எதுவுமே இல்லை என்று கூறிவிடலாம். வைரவர், கிராமங்களைக் காப்பாற்றும் மிக வலிமைமிக்க தெய்வமாகக் கருதப்படுகிறார். வைரவர் சிவனின் ஆற்றல்மிக்க அச்சமூட்டும் அவதாரமாகும். இந்து மத இதிகாசங்களில் வைரவர் ‘தண்டபாணி’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். வலது கையில் பிடித்த ஒரு தண்டத்தைக் கொண்டு பாவம் செய்தவர்களைத் தண்டித்து விடுவதால் இந்தப் பெயரைப் பெற்றார்.
சிவபுராணத்தில் வைரவரின் தோற்றம் பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டபோது, அதைத் தீர்த்து வைப்பதற்காக சிவன் நீண்டுயர்ந்த ஒளி உமிழும் ஒரு தூணாகக் காட்சியளித்து அதன் அடியையும், முடியையும் அவர்களைக் கண்டறியும்படி போட்டி வைத்தார். பிரம்மா நாணயமற்று ஏமாற்றி தான் ஒளித்தூணின் உச்சியைத் தொட்டு வெற்றிபெற்றுவிட்டதாகக் கூறினார். கோபமடைந்த சிவன் தனது இரு புருவங்களுக்கும் இடையிலிருந்த நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து புறப்பட்ட ஒளியால் வைரவரை உருவாக்கினார். சிவனின் உத்தரவுப்படி வைரவர் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைத் தனது வாளினால் அறுத்தெறிந்தார். விஷ்ணு பிரம்மாவின் சார்பில் கருணை கோரியதைத் தொடர்ந்து சிவன் இருவரையும் மன்னித்தார் (Shastri, J. L. 2000: 57-60).
ஞான வைரவர், கால வைரவர், கபால வைரவர், மகாருத்ர வைரவர், வீரபத்திரர் என்பன இத்தெய்வத்தின் மாற்று வடிவங்கள். நாய் இத்தெய்வத்தின் வாகனமாகும்.

யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் கிராமத்திலுள்ள வைரவர் கோயில்.
மற்றைய கிராமியத் தெய்வங்கள்
யாழ்ப்பாணக் கிராமங்களில் பண்டைய கிராமியத் தெய்வங்களாக பெரிய தம்பிரான், நாகதம்பிரான், காலகண்டன், கொற்றிக் கிழவன், பூதவராயர், முனி, அண்ணமார், சேவுகர், விறுமர், இதும்பன், வல்லியக்கன், காத்தவராயர், கொட்டி, காளி, நீலி, பேச்சி, ஆழ்வாத்தை, மாரி, நாச்சிமார் ஆகிய தெய்வங்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. இவற்றில் நாகதம்பிரான் இக்காலக் கோயில்களில் ஒரு துணைத் தெய்வமாக இருப்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
‘வல்லியக்கன்’ என்ற பெயர் ஓர் யக்ஷத் தெய்வத்தைக் குறிக்கும் பெயர். இத்தெய்வம் யாழ்ப்பாணத்திலுள்ள பறையர் சமூகத்தினரால் வணங்கப்பட்டு வருகிறது (Ragupathy, P. 1987: 217).
‘பெரியதம்பிரான்’, ‘பூதவராயர்’, ‘கொற்றிக்கிழவன்’ என்ற பெயர்கள் சிவனின் மாற்றுப்பெயர்களாகும். இவர்களில் ‘பெரியதம்பிரான்’ வண்ணார் சமூகத்தினரால் வணங்கப்பட்டு வருகிறது (McGilvary, D.B. 1974: 205).
தொடரும்.



