‘சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சம்ராஜ்யம்’ முதன் முதலில் 1776 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஐம்பது இராச்சியங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து விடுதலை பெற்ற வட – அமெரிக்கப் பிராந்தியத்தில் சிறிய சறுக்கலைச் சந்தித்தது. சுதந்திர வேட்கையுடன் புதிதாக உருவான ‘ஐக்கிய அமெரிக்க இராச்சியங்களின் ஒன்றியம்’ தொடர்ந்தும் முன்னேறி வடக்கு முழுமையையும் பிரித்தானியப் பிடியில் இருந்து விடுவிக்க முற்பட்ட போதிலும் இயலவில்லை; நயாகரா நீர்வீழ்ச்சியின் வடக்கை கனடா எனும் பிரித்தானியக் குடியேற்றப் பகுதியாக அங்கீகரித்துத் தெற்கு நயாகராவைத் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டதுடன் திருப்திகொள்ள வேண்டியிருந்தது.
அந்த முதலடி அப்படியொன்றும் மரணத்தாக்குதல் அல்ல; அப்போதுதான் கிழக்குலகின் மிகப்பெரும் அபகரிப்புச் சுரங்கமாக வரவுள்ள இந்தியாவைப் பிரித்தானியா கையகப்படுத்திக் கொண்டிருந்தது. வட அமெரிக்காவில் ஏற்பட்ட விடுதலைப் போராட்ட உத்வேகம் தென் அமெரிக்காவையும் ஆட்கொண்டதன் பேரில் ஐரோப்பியக் காலனித்துவம் படிப்படியாக அங்கும் முடிவுக்கு வந்தது. உலகின் ஏனைய பிராந்தியங்களிலும் நேரடிக் குடியேற்றவாதத்தை எதிர்ப்பதாகக் காட்டி வந்த ஐக்கிய அமெரிக்கா சுதந்திரம் அடைந்தவாறிருந்த நாடுகள் ஒவ்வொன்றையும் நவ காலனித்துவப் பிடிப்புக்குள் ஆட்படுத்தும் தனது அபகரிப்பு அபிலாசையைப் பூர்த்தி செய்யும் உத்தேசம் கொண்டதாய் இருந்தது. இரண்டு உலக யுத்தங்களால் ஐரோப்பா சின்னாபின்னமாக்கப்பட்டு பலவீனப்பட்ட சூழலில் நேரடிக் குடியேற்றவாத நிலைப்பாட்டைக் கைவிட நேர்ந்தது; தென் அமெரிக்கா மட்டுமன்றி முழு உலக நாடுகளும் நவ காலனித்துவச் செயலொழுங்கின் கீழ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்குரிய வேட்டைக்காடாக ஆக்கப்பட்டது.
அவ்வாறு ஏற்பட்ட அன்றைய ‘புதிய உலக’ ஒழுங்கில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் மீண்டெழ இயலுமாயிருந்த போதிலும் ஐக்கிய அமெரிக்காவின் தலைமைக்குக் கட்டுப்பட்டு இயங்கும் இரண்டாம் தர இறக்கத்தை ஏற்றதாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. முன்னதாகப் பிரித்தானியா உலகின் முதல்நிலை வல்லரசும் அதியுயர் பணக்கார நாடு என்றும் கொடிகட்டிப் பறந்ததாயினும் கூடுதல் கடன்பட்டுக் குறைநிரப்புப் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் வல்லரசாகவே விளங்கியிருந்தது. அவர்களுக்குரிய குறைநிரப்பும் பெட்டகமாகக் காலனிகள் (மிகப் பிரதானமாக இந்தியா) காணப்பட்டன. நவ காலனித்துவ முறைமையில் நேரடிக் காலனித்துவ முறைமையின் அளவுக்கு அபகரிப்பு வாய்ப்பு இல்லையென்றாலும் நேற்றுவரை அந்த உலக ஒழுங்கு ஏற்படுத்தித் தந்த சுரண்டல் வளம் திருப்தி தரக்கூடிய அளவில் இருந்து வந்தது.
இன்று ஏற்பட்டுள்ள புதிய உலக ஒழுங்கு அந்தச் சுரண்டல் வளம் முற்றாகக் கைநழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தை அவர்களுக்கு மூட்டியுள்ளது. முன்னர் காலனித்துவ நாடுகளாக இருந்த சீனா, இந்தியா எனும் உலக சனத்தொகையில் மிக அதிகளவான மக்களைக் கொண்டிருக்கும் முதலிரு நாடுகள் உலகின் முதல் நிலைப் பொருளாதார அந்தஸ்தையே நோக்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும் சீனா பொருளாதார உற்பத்தித் திறனிலும் தொழில்நுட்ப விருத்தியிலும் ஐக்கிய அமெரிக்காவைக் கடந்து ஏற்கனவே முதல் நிலையை எட்டிவிட்டது. இராணுவ வல்லமையிலும் மிக விரைவாக முதல் நிலைக்குரிய இடத்துக்கு வரவுள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஏனைய நாடுகளை அபகரித்த செல்வ வளமும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இருந்த போதிலும் மக்களுக்கான அதியுயுர் வாழ்வாதாரங்களை வழங்கும் முதல் நிலைப் பணம் படைத்த நாடு எனும் இருப்பை விரைவில் எட்டிவிடும் கால எல்லையைச் சீனா அடைந்துள்ளது.
தனது அதியுயர் பீடம் தளர்ந்து போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆகக் கூடுதலான கடன் பளுவுடைய நாடாகவும் ஐக்கிய அமெரிக்காவே துலங்குகிறது. இதுவொன்றும் பாதகமானதல்ல எனத்தக்க வகையில் முன்னர் பிரித்தானியா அவ்வாறுதான் காணப்பட்டது என்று ஆறுதல் கொள்ள இடமுண்டு; அதேயிடத்தில் நேரடிக் காலனித்துவம் ஈடுகட்டும் சக்தியாக அப்போது இருந்தது எனும் போது இன்றைய ஏகாதிபத்தியத்துக்கான குறைபாடு பாரியது. இதனை நிவர்த்திக்கும் முயற்சியில் ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க இறங்கிவிட்டதாகக் கருதுவோர் உள்ளனர். சர்வதேசச் சட்டங்களை உதாசீனம் செய்தவாறு வெனிசுலா ஜனாதிபதியை (அவருடன் இணையரையும் சேர்த்து) ‘கைது செய்து’ தனது நாட்டுக்கு கடத்தி வந்தமையை ஐக்கிய அமெரிக்கா நியாயப்படுத்துவதற்கு ‘வெனிசுலாவை எமது தேச எல்லைக்குள் கொண்டுவந்து உள்ளோம்’ எனச் சொல்ல வேண்டியுள்ளது.
தெற்கே உள்ள மெக்சிக்கோவும் வடக்கேயுள்ள கனடாவும் கூட ஐக்கிய அமெரிக்காவின் விஸ்தரிப்புக்கு ஆட்பட வேண்டும் என்பது அதன் குரலாக ஒலிக்கிறது. இந்த நடவடிக்கையானது நேரடிக் காலனித்துவத்துக்குத் திரும்புதல் எனக் கருத்துரைப்போர் உள்ளனர்; உரிமை கோரப்படும் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவின் எல்லையை விரிவுபடுத்த ஏற்றதான அயல்நாடுகள் என்பது கவனிப்புக்குரியது. தொலைதூர நாடுகளை நவ காலனித்துவச் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் தனது வலிமையைப் பெருக்குவதன் பொருட்டாக அந்த ஏகாதிபத்தியக் கோரிக்கை அமைந்துள்ளது. அந்தந்த நாடுகளின் மக்கள் தாம் இறுதித் தீர்மானத்தை எடுத்துத் தமது இறைமையைத் தக்கவைத்துச் சுதந்திர நாடாக இருப்பதா இல்லையா என்பதை முடிவு செய்தாக வேண்டும்!
ஏகாதிபத்தியத் திணைக்குள் ஓர் ஒப்பந்தம் இருந்தது; வட – தென் அமெரிக்க நாடுகளுக்குள் ஐரோப்பா தலையிடக்கூடாது, ஐரோப்பாவினுள் ஐக்கிய அமெரிக்கா மேலாண்மை செய்யக்கூடாது என்பதாய். அதன் காரணமாக வெனிசுலா விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகள் கண்டிக்காதது மட்டுமன்றிச் சில நாடுகள் வெளிப்படையான ஆதரவையும் தெரிவித்தன. கிறீன்லாந்தைத் தன்னுடன் இணைக்க முயற்சித்த போது ஊடல் ஏற்பட்டுள்ளது என்ற போதிலும் தமது மேலாதிக்கத்தை மீட்டெடுக்க வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் ஐக்கிய அமெரிக்கத் தலைமையில் ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு எதிராகக் களமாடும் விருப்பம் அவர்களை ஆட்கொள்ளாமல் இருக்காது.
மாறியுள்ள இன்றைய புதிய உலக ஒழுங்கு வாயிலாக எழுச்சியடைந்து வரும் திசைமுகப்படலானது ஏகாதிபத்திய யுத்த சன்னதத்தைக் கட்டுக்குள் முடக்குவதற்காக வளர்ந்துள்ளது என நம்ப இடமுள்ளது. இந்த ஜனவரி மாதத்தின் பிற்கூற்றில் ஈரானை நோக்கிப் பாரிய யுத்த முன்னெடுப்பைக் கட்டவிழ்த்து விடும் எத்தனிப்புகளை மேற்கொண்ட போதிலும் அதனைக் கைவிட்டுப் பின்வாங்கும் நெருக்கடியை ஐக்கிய அமெரிக்கா சந்திக்க நேர்ந்துள்ளது. முன்னதாக அரசுக்கு எதிராக மக்களைக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தும் ஏகாதிபத்தியத் திட்டம் ஈரானை ஓரளவு தாக்கிப் பலவீனப்படுத்துவது போன்ற தோற்றம் இருந்தது; ‘போராட்டத்தின்’ பின்புலம் ஏகாதிபத்திய நலன் பேணுதல் என்பதைப் புரிந்துகொண்ட ஈரானிய மக்கள் இஸ்லாமியப் புரட்சி அரசாங்கத்தை ஆதரித்துக் கிளர்ந்தெழுந்து வீதியில் இறங்கிப் போராடிய போது எதிர்ப்புரட்சிக் கும்பல் வாலைச்சுருட்டிக் கொண்டு பின்வாங்கியது. ஈரானைச் சூழவுள்ள மத்திய கிழக்கு நாடுகள் ஐக்கிய அமெரிக்கச் சார்புடன் அதன் இராணுவத்தலங்களைக் கொண்டிருந்த போதிலும் ஈரானுக்கு எதிரான யுத்தத்தை ஆதரிக்க இயலாது என்று ஒருமுகமாகக் கூறியிருந்த காரணமும் இணைந்த வகையில் ஏகாதிபத்திய அகங்காரம் தன்னுடைய கர்ச்சனையைத் தொடர இயலாமல் அடக்க வேண்டியதாயிற்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளாகக் காலனித்துவச் சக்திகளும் ஏகாதிபத்தியமுமே உலக வரலாற்றின் தீர்மானகரமிக்க அம்சம் என்றிருந்த நிலை மாற்றமடைந்து ஒடுக்கப்பட்ட தேசங்கள் வரலாற்றுச் செல்நெறியைத் தீர்மானிக்கும் பண்பு ரீதியில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்ற மக்கள் யுகத்துக்கான உச்சக் கட்டத்தில் இன்றைய உலகு!
உற்பத்தி உறவில் வர்க்கமும் திணையும்
“இதுவரையில் ஏடறிந்த வரலாறுகளனைத்தும் வர்க்கங்கள் இடையேயான போராட்டங்கள் வாயிலாகவே இயங்கி வந்துள்ளன.” எனும் பிரகடனத்தை 1848 ஆம் ஆண்டில் ‘கொம்யூனிஸ்ட் அறிக்கை’ அழுத்தி வலியுறுத்தியிருந்தது. அந்தவகையில் பின்தொடரும் வரலாற்று இயக்கமும் வர்க்கப் போராட்டம் வாயிலாக மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சியர்கள் முடிவு செய்வதனை எவரும் தவறு எனச் சொல்லிவிட இயலாது. தேசிய விடுதலைப் போராட்டம் மூலமாக சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கு முற்பட்ட போது மார்க்சியத்தைக் கால, தேச நிலவரங்களுக்கு அமைய விருத்தி செய்திருந்த லெனினிசத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு வழிகாட்டும் நெறியாகக் கைகொடுத்து உதவியது. அதன் பிரயோகமாக அமைந்த மாஓ சேதுங் சிந்தனையை இன்றைய மக்கள் சீனம் சோசலிசப் பிரயோகத்துக்கும் உரியதாகக் கையாள முற்படுவதனைத் திரிபுவாதம் எனக் கூறுவோர் உள்ளனர். சோசலிச மாற்றியமைத்தலை மக்கள் சீனம் எட்டிய நிலையில் வர்க்கப் போராட்ட அடிப்படையில் மாஓ சேதுங் கலாசாரப் புரட்சியைப் பிரகடனப்படுத்தியதோடு முன்னதாக நடப்பில் இருந்த ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’ என்பதைக் கடந்து ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரப்’ பிரயோகத்துக்குக் கட்சியையும் நாட்டையும் வழிப்படுத்தினார் என்பது வரலாறு.
அத்தகைய பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரப் பிரயோகம் நாட்டின் விருத்திக்கும் அமைதிக்கும் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்திய வரலாற்றுப் படிப்பினையின் பின்னரே சோசலிசக் காலகட்டத்திலும் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை முன்னிறுத்தும் மாஓ சேதுங் சிந்தனையே தொடரப்பட வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் சீனம் ஆட்பட்டது; இன்றைய துரித வளர்ச்சியையும் கண்டு வருகிறது. மாறாக, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார இயங்குமுறையில் இருந்த சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பின்னடைந்து முதலாளித்துவ நாடுகளாகச் சிதைவுக்கு உள்ளாகி இருந்தன.
ஒடுக்கப்பட்ட தேசங்களாக இருந்த சீனாவும் வியட்னாமும் மட்டுமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட வேண்டுமெனும் நிர்ப்பந்தத்துக்கு ஆட்படவில்லை; முதலாளித்துவ விருத்தியுடன் இருந்து நீண்டகாலமாகப் பாட்டாளி வர்க்க அரசியலை முன்னெடுத்த சோசலிச முகாம் முழுமையாக ‘வர்க்கப் போராட்டமே சமூக மாற்றத்துக்கான ஒரே வடிவம்’ என்ற பரீட்சார்த்தத்தில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது ஏன்? வரலாற்று இயங்குமுறையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை இது காட்டுகின்றதா? சோசலிச முகாம் தகர்ந்து காணாமல் போயிருந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஏனைய நாடுகளில் வர்க்கப் போராட்டம் கூர்மை அடைவதாக அல்லாமல் தேசியவாத, மதவாத, பாலின, சாதியவாத அடையாள அரசியல் மேலெழுந்து வர இயலுமானது எதனால்?
இப்போது அடையாள அரசியல் முற்றிலும் தோல்விக்குரியது எனும் உண்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்குள் புத்தகவாத மார்க்சியர்கள் ‘வர்க்கமாக அணி திரள்வோம்’ என்ற மந்திரத்தை மீண்டும் உச்சக் குரலில் ஓங்கி ஒலிக்கின்றனர். இலங்கையில் மாற்றத்தை விரும்பிய மக்கள் ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற இடதுசாரி அமைப்பை அரசாங்கம் அமைக்க வகை செய்துள்ளனர். இந்த அமைப்பும் அதன் தலைமைக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டை ஏற்கவில்லை. அத்துடன் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம், மலையக, மலே, பறங்கியர் ஆகிய சிறுபான்மை இன மக்கள் அனைவருமே ‘இலங்கை தேசிய இனத்தவர்’ என்ற தேய்ந்து போன வாய்ப்பாட்டைக் கூறுகின்றனர்.
பாட்டாளி வர்க்க இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் இருந்து நூறு வருடங்களாக (இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை) சோசலிச சமூக முறைமை ஒன்றை மனுக்குலம் கண்டடைய ஆற்றுப்படுத்தியிருந்தது. அதன் பிரயோக வடிவமாக 1917 ஆம் ஆண்டில் உதயமான சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் வகுத்து வழங்கிய சுயநிர்ணயக் கோட்பாடு 1949 ஆம் ஆண்டில் மக்கள் சீனம் உதயமாவதற்கும், அது காலூன்றி முன்னேறுவதற்கும் மூல காரணியாக அமைந்தது. பின்னரான வரலாற்றில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக எந்தவொரு நாடும் சோசலிசத் திசை மார்க்கத்தை வந்தடையவில்லை; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்னாம், கியூபா, வடகொரியா என்பன விடுதலைத் தேசிய மார்க்கத்தில் சோசலிசம் நோக்கி முன்னேறுவதாக வரலாற்றுச் செல்நெறி அமைவு கொண்டுள்ளமையை எவ்வாறு புரிந்துகொள்வது?
இன்று வரலாற்று உந்துசக்தியாக மேலெழுந்துள்ள இனத்தேசிய, மத அடிப்படை, பாலின, சாதிக் குழுமங்கள் என்பன ‘வர்க்க வாய்ப்பாட்டுக்குள்’ வர மறுப்பது மெய்; அதற்காக அத்தகைய சக்திகளின் இருப்பைக் காண மறுப்பது மட்டுமன்றி நிதர்சனமாக உள்ள அவற்றைப் புறமொதுக்கி ‘வர்க்கங்களாக அணி திரளுங்கள்’ என்று முழக்கமிடுவதால் எதையாவது சாதிக்க முடிந்துள்ளதா? வாராதது போல வந்த ஒரு மாமணியான இலங்கையின் இடதுசாரி அரசாங்கத்துக்குக் குழி பறிக்கும் சறுக்கலாக இனப்பிரச்சினை உள்ளதனைக் கவனங்கொள்ளாது இருக்கலாமா? பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுடன் வர்க்க அணிச் சேர்க்கைக்கு அப்பால் திரட்சியடைந்துள்ள தேசங்கள் என்ற முழுச் சமூக சக்தியை விளக்கம் கொண்ட காரணத்தாலேயே தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான சுயநிர்ணயக் கோட்பாட்டை லெனின் முன்வைத்தார்.
ஏகாதிபத்திய ஒழுங்குமுறைக்கு எதிராகப் போராடிய தேசங்களினுள் பல்வேறு வர்க்கங்களின் ஒன்றிணைவுக்குரிய ‘ஒடுக்கப்பட்ட தேசம்’ என்றிருந்ததைப் போல, சுதந்திரமடைந்த நாடுகளினுள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தனக்கு ஏற்படும் புறக்கணிப்புகள், சுரண்டப்படுவதற்கான வெளிகள் என்பனவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஏற்பாடாக சிறப்பான சுயாட்சி அமைப்பினைக் கோருவதனை இனவாதமாக வரையறுப்பது ‘ஒன்றுபட்ட தேசிய நலன்’ என்பதன் பேரிலான பேரினவாத நடைமுறையன்றி வேறல்ல; இலங்கையின் இன்றைய இடதுசாரி அரசாங்கம் இந்தத் தவறை மேற்கொண்டு வருகிறது.
ஒடுக்கப்படும் ஏனைய இனத்தேசியங்களைச் சேர்ந்த விடுதலைத் தேசிய சக்திகள் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் காலூன்றி நின்றபடி சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்பதற்கு அவகாசமின்றி நாடு எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளின் தீர்வுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கியவாறுள்ளனர். ஏகாதிபத்தியம் ஏற்படுத்தித் தந்த நாடு பூராகவுமான உயர் பதவி வாய்ப்புகளைச் சுதந்திர இலங்கை சிங்களத் தேசிய நலனை முன்னிறுத்திக் கட்டுப்படுத்தியதனால் ஏற்பட்ட பாதிப்பை யாழ்ப்பாண மாவட்டம் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவு தமிழ்த் தேசியர்களுக்கு இருக்கவில்லை; தனியொரு மாவட்டத்தின் பாதிப்பை ஒட்டுமொத்தத் தமிழர் பிரச்சினையெனக் காட்டி மேற்கொண்ட யுத்தம் அனைத்துத் தமிழ் மக்களையும் பாதிக்கும் வகையில் வளர்த்தெடுக்கப்படுவதில் சிங்களப் பேரினவாதத்துக்குப் பெரும் பங்குள்ளது. இறுதி யுத்தத்துக்குரிய 2009 ஆம் ஆண்டின் ஓரிரு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேலான பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது சிங்களப் பேரினவாதம் இழைத்த மன்னிக்க இயலாத போர்க்குற்றமாகும். அந்தக் குற்றத்தில், அவசியமற்ற போர்ச் சூழலை உருவாக்கி மூன்று இலட்சம் மக்களைத் தமது பாதுகாப்புக் கவசமாகக் கையாண்ட தமிழ்த் தேசிய மேலாதிக்கத்துக்கும் பங்குள்ளது. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் ஏகாதிபத்திய நாடுகளுள் கரந்துறைந்த வண்ணம் விடுதலைத் தமிழ்த் தேசிய சக்திகள் தாயக மண்ணில் செயலாற்ற இடமளிக்காத பல இடர்பாடுகளை மேற்கொண்டவாறுள்ளனர்.
விடுதலைத் தமிழ்த் தேசியம் மேலாதிக்கவாதிகளின் நோக்கங்களை முறியடிக்க இயலாது இருப்பதில் உள்ள பிரதான ஒரு தடை, சிங்கள மக்கள் மத்தியில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான ஏற்புக்குரிய பரப்புரை இடம்பெறாது இருப்பதுதான். ஏகாதிபத்திய எதிர்ப்பில் இயங்கும் உற்பத்தி உறவு வர்க்க வடிவம் உடையதல்ல; மேலாதிக்கத் திணையாக ஏகாதிபத்தியம் ஒடுக்கப்படும் தேசம் எனும் முழுச் சமூக சக்தியை (திணையை) அபகரிப்புக்கு உள்ளாக்குவதாகும். இனத்தேசியங்களில் பேரினவாதம், இனத்தேசியங்கள் என்பனவும் வர்க்கமாக அன்றித் திணைகளாக இயங்கும் உற்பத்தி உறவுதான்.
‘கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை மட்டும் முன்வைக்கவில்லை. அது முன்னிறுத்திய அம்சங்கள் அனைத்தையும் புரிதல் கொண்டு பிரயோகிப்பதன் வாயிலாகவே பூரண சமத்துவம் வெற்றி கொள்ளப்படும். வர்க்கப் போராட்டம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணமாகக் கூறும் அறிக்கையின் பிரதான விடயம் உற்பத்தி உறவை மாற்றியமைக்க வேண்டும் எனும் அவசியம் என்பது. உற்பத்திச் சக்திகள் விருத்தியடையும் போது, உடைமையாளர்களுக்கும் உழைப்போர்க்குமான உற்பத்தி உறவு வளர்ச்சியடைகிறது. இதனால், புதிய உற்பத்திச் சக்திகளை அரங்கேற்றும் போது, மாறிய நிலைக்குரிய உற்பத்தி உறவு ஒன்றை ஏற்படுத்த வேண்டியதாகின்றது. உருவான புதிய உற்பத்திச் சக்தி தனக்கான வர்க்க எழுச்சியுடன் பழைய வர்க்க ஒழுங்கமைப்பைத் தகர்த்துப் புதிய சமூக முறைமையை ஏற்படுத்துவதாக வர்க்கப் போராட்டம் அமைகிறது. ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சமூகம் புதிய உற்பத்திச் சக்தியாக விருத்தி பெற்ற மூலதன எழுச்சி வந்தமைந்த போது தகர்க்கப்பட்டு முதலாளித்துவ அமைப்பு உருவானது. முதலாளித்துவம் தனது மூலதனத் தேட்டத்துக்காக எமது தேசங்களை ஆக்கிரமித்த போது ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசங்கள் எனும் புதிய வகை உற்பத்தி உறவு அரங்கேறியது.
வேத மீட்டுருவாக்கம் முதல் இந்து விடுதலை நெறி வரை
நீண்டகாலமாக நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை நிலவிய இந்திய, இலங்கைச் சமூகங்களில் ஒவ்வொரு கிராமங்களும் தமக்குள் ஒடுங்கிப்போன வாழ்முறை நிலவியது. நிலம் பிரதான உற்பத்திக்குரிய வளமாகவும் அதன் விளைச்சலுக்கு அவசியப்பட்ட உற்பத்திக் கருவிகளுக்கான கைத்தொழில் பட்டறைகளைக் கூட ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்கத்தக்க வாய்ப்பும் இருந்தது. பற்றாக்குறைக்குரிய பொருட்களும் ஆடம்பரத் தேவைகளும் சார்ந்த வணிகமும் நிலப்பிரபுத்துவ முறைமைக்குக் கட்டுப்பட்டதாக அமைந்தது. அந்த உற்பத்தி உறவுக்கு ஏற்புடையதாக சாதி முறைமை காணப்பட்டது. சாதிகள் இடையே ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உரிமை மறுப்புகளும் காணப்பட்டதன் காரணமாக அவ்வப்போது முரண்பாடுகளும் போராட்டங்களும் காணப்பட்டன; நிலப்பிரபுத்துவ நலன் பேணும் வகையில் அரசினால் அவை கையாளப்பட்டன.
வட இந்தியாவில் மொகலாயப் பேரரசின் ஆட்சி நிலைபெற்றிருந்த சூழலில் பிரித்தானியாவின் காலனித்துவத்துக்கு ஆட்பட நேர்ந்தது. அரசுக்குரிய மதமாக இஸ்லாம் இருந்ததாயினும் அவர்களது அமைச்சர்களாகப் பிராமணர்கள் இருப்பது வரையிலான இந்து – முஸ்லிம் நல்லுறவு நிலவியது; ஆட்சியாளர்களை முறியடிக்கும் நோக்கில் மத முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் வாய்ப்பும் இருந்த சூழலில் ஆட்சியமைத்த பிரித்தானியக் காலனித்துவம் மத விரோதத்தைக் கூர்மைப்படுத்திப் பிரித்தாளும் ஆட்சியை அரங்கேற்றினர். அதேவேளை கிறிஸ்தவ மத மாற்றத்துக்கான முன்னெடுப்புகளும் முனைப்படலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஐரோப்பியத் தொழிற்புரட்சி ஏற்படுத்திய புதிய வாழ்வியல் விருத்திகளும் அதனுடன் இணைந்த நவீன கல்வி முறையும் கவரும் சக்தியாக ஈர்த்த நிலையில் மதமாற்றத்திலிருந்து தடுக்கும் வகையில் இந்து மதத்தின் முன்னைப் பழம் பெருமையை மீட்டுருவாக்கும் வேலைப் பாணி மேலெழத் தொடங்கியது.
வட இந்தியாவின் மேற்குப் பகுதியில் தயானந்த சரஸ்வதி முன்னெடுத்த ஆரிய சமாஜம் ‘வேத காலத்துக்குத் திரும்புதல்’ என்ற இயக்கத்தை முன்னெடுத்ததில் இந்த மீட்டுருவாக்கம் முழு அளவில் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். கிழக்குப் பகுதியில், குறிப்பாக வங்காளத்தில் முந்திய நூற்றாண்டு வரை பக்தி இயக்க எழுச்சி நிலவிய காரணத்தால் இந்து – இஸ்லாமிய ஒற்றுமை, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வலை, சாதிபேதம் கடவுளின் முன் அர்த்தமற்றது எனும் கருத்து நிலை என்பன காணப்பட்டதன் தொடர்ச்சியாக ஆட்சிக் கல்வியை ஏற்றுக்கொண்டு இந்து மதத்தை நவீனப்படுத்தும் இயக்கங்கள் உருவாக இயலுமாயிற்று. ராஜா ராம் மோகன் ராய் தொடக்கி வைத்த பிரம்ம சமாஜம் சாதியத்துக்கும் பெண் ஒடுக்குமுறைக்கும் எதிரான காத்திரமான தாக்கங்களை விளைவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் விவேகானந்தர் உருவாக்கிய ‘இராமகிருஷ்ண மிஷன்’ எனும் நிறுவனப்பட்ட இயக்க முறைமை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக அமைந்தது. அதுவரை பிராமணர்களுக்கான தத்துவமாக இருந்த அத்வைதத்தை ‘செயல் முறை வேதாந்தம்’ எனப் புதிய தளத்துக்கு மடைமாற்றியதன் வாயிலாக அரசியல் – சமூக – பண்பாட்டு அணிகள் பலவும் எழுச்சியுறுவதற்கு விவேகானந்தர் வழிசமைத்தார். ஆன்ம ஈடேற்றம் தான் அவரது இறுதி இலக்காக இருந்ததாயினும், விடுதலை இந்து நெறியாக மதச் செயற்பாட்டை மடைமாற்றிய இந்த விருத்தி கவனிப்புக்குரியது.
காலனித்துவம் ஏற்படுத்திய தாக்குறவுக்கு எதிராக அங்கே சாதி பேதங்களை மறுப்பதற்கான தொடக்கங்களும் பெண் விடுதலைச் சிந்தனையும் ஏற்பட இயலுமாயிற்று. வேத கால மீட்டுருவாக்கத்தின் பிரதிநிதியாக இருந்த தயானந்த சரஸ்வதி கூட இடையிட்டு வந்த சாதியத்திற்கு எதிரான சில கருத்து நிலைகளுடன் இருந்துள்ளார். அதே நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆறுமுக நாவலர் ‘சாதியின் காவலர்’ எனக் கண்டிக்கப்படும் வகிபாகத்தைக் கொண்டிருந்ததன் காரணம் என்ன? பெண்களுக்கு எதிரான அவரது கருத்து வெளிப்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது?
நாவலரைத் தொடர்ந்த அடுத்த நூற்றாண்டின் இயக்கப் போக்கின் வாயிலாக இதனைப் புரிந்துகொள்ள இயலும். அவரின் கருத்து நிலைகளுக்கு அடித்தளமாக அமைந்த சைவ சித்தாந்தக் கருத்தியல் அவரிடமும், இருபதாம் நூற்றாண்டின் ஆளுமையான வ.உ. சிதம்பரனாரிடமும் எவ்வாறு விளக்கம் பெற்றன என்பதனை ஆய்வு செய்வதன் வாயிலாகப் புரிந்துகொள்வோம்.



