யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
19 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி

February 3, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

இந்திய விடுதலை இயக்கத்தில் திருப்பம்

ஆங்கிலம் கற்ற இந்திய மத்திய வகுப்பைச் சேர்ந்த தேசியவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர் முன்மாதிரியாகக் காட்டிய அரச யாப்பு முறைப்படியான முயற்சிகள் மூலம் தமக்குக் கூடுதலான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி தென் ஆபிரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு வந்தார். அவர் வருகை விடுதலை இயக்கத்தில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

மத்திய வகுப்பினர் செயற்பாடாக மந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த இந்திய தேசியக் காங்கிரஸின் போக்கு காந்தியின் வருகையால் முற்றாக மாறி, பெருந்திரள் மக்கள் பங்குகொள்ள இடமளித்து, புதிய வடிவத்தைப் பெற்றது. காந்தியின் நடவடிக்கைகளின் விளைவாக விடுதலை இயக்கம் ஒரு பெருந்திரள் மக்கள் இயக்கமாகி (Mass Movement) ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை ஆட்டங்காண வைத்தது.

கதர் இயக்கம்

இந்திய மக்களை எழுச்சிபெற வைப்பதற்கு காந்தி எடுத்துக்கொண்ட அணுகுமுறை காங்கிரஸ் தலைவர்கள் எண்ணியிராத, முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உருவாகியது. மத்திய வகுப்பினருக்குக் கூடுதலான ஆட்சிப்பொறுப்பைப் பெறும் நோக்கைக் கைவிட்டு, ஏழ்மையில் தவிக்கும் எண்ணற்ற இந்திய மக்களுடைய பொருளாதார, சமூக, அரசியல் மேம்பாட்டுக்கான இயக்கமாக விடுதலைப் போராட்டத்தை மாற்றக் காந்தி தீர்மானித்தார். இதைச் சாதிப்பதற்கு, மத்திய வகுப்பினரைப் போன்று உடையாலும் வாழ்க்கை முறையாலும் ‘நான் உங்களில் இருந்து வேறானவன்’ என்று காட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு உபதேசம் செய்யாது, ‘நானும் உங்களில் ஒருவன்’ என்று காட்டி, அவர்களை வழிநடத்திச் செல்ல அவர் எடுத்த தீர்மானம் உலக வரலாற்றில் ஒப்பற்ற ஒரு செயலாகும்.

இத்தீர்மானத்தை எடுத்ததும், காந்தி தெற்கு நோக்கி மதுரைக்கு வந்து, தான் பொதுவாக அணிந்த உடையைக் களைந்து, இந்திய வேளாண் மக்களும் ஏழைத் தொழிலாளிகளும் நாள்தோறும் அணியும் ‘கொடுக்கு’ வேட்டியை அணிந்து, மேலாடை எதுவும் இல்லாது தோள் மீது சால்வையைப் போட்டு, எளிமையான உடையுடன் பெருந்திரள் மக்களை முன்னின்று நடத்திச் செல்லத் தயாரானார்.

ஏழை மக்களை ஒன்றுகூட்டித் தற்சார்பு (Self-reliance) உணர்வை ஊக்குவித்துப் பாரிய ஒரு சமூக – பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணக் காந்தி வகுத்த திட்டம் கதர் இயக்கம் (Khadi Movement) எனப் பெயர் பெறும். இந்தியாவில் நெடுங்காலமாகச் செழித்துவந்த பருத்தி மற்றும் பட்டுப் புடவை உற்பத்தித் தொழிலை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முறியடித்து, இந்தியாவில் விளைந்த பருத்தியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து, அதனைப் புடவையாக்கி, இந்தியாவுக்கு இறக்குமதி செய்து இந்தியருக்கு விற்றுப் பயன்பெற்றது. 

இந்த நிலைமையை மாற்றியமைத்துத் தேசிய எழுச்சியை வளர்த்து மக்களை ஒன்றுகூட்டி வழிநடத்திச் செல்லக் காந்தி வகுத்த திட்டத்தின் விளைவுதான் கதர் இயக்கம். இயந்திரங்களைப் பயன்படுத்தாது, பருத்தியைக் கைநூற்பு மூலம் நூலாக்கி, கைத்தறியைப் பயன்படுத்தி நெசவு செய்து பெறப்படும் துணி கதர் ஆகும். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான துணியை வாங்காது, வீடுகளில் கைத்தறிகொண்டு செய்யப்பட்ட கதர் துணியை அணிய வைப்பதே கதர் இயக்கத்தின் நோக்கம். கதர் இயக்கம் வெற்றிகரமாகப் பரவ, கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களில் கதர் உற்பத்தி செய்யப்பட்டது. பெருந்தொகையான இந்தியர்கள் இறக்குமதி செய்யப்பட்ட துணியை வாங்காது கதர் உடையை அணியத் தொடங்கினர். இங்கிலாந்தில் (லங்கஷய/ Lancashire போன்ற தொழில்மயமான நகர்களில்) உற்பத்தி செய்யப்பட்ட பருத்தித்துணி முன்போல இந்தியாவில் இறக்குமதியாகவில்லை. இந்தியர்களிடையே தேசிய உணர்ச்சி எழுச்சிபெற்றது. ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை ஆயுதமின்றித் தாக்கிய காந்தியின் புகழ் உலகில் பரவியது.

காந்தியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்தல்

இலங்கையில் இளைஞர் மத்தியில் காந்தியின் இயக்கம் செல்வாக்குப் பெற்றது. மத்திய வகுப்பினர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்கத் தயங்கிய வேளையில், இலட்சியத் துடிப்புடன் இளைஞர்கள் காந்தியின் செயல்களால் கவரப்பட்டனர். அத்தகைய ஒரு தலைவர் இலங்கையில் இல்லாத பட்சத்தில், காந்தியை இலங்கைக்கு அழைக்க இளைஞர் விரும்பினர். யாழ்ப்பாணத்தில் உருவாகிய மாணவர் காங்கிரஸ் இளைஞர்கள் இது தொடர்பாகப் பெருமுயற்சி எடுக்கத் தொடங்கினர். தெற்கில், ஏ.ஈ. குணஸிங்ஹ மற்றும் விக்டர் கொறயா போன்ற இளைஞர்களும் காந்தியின் இயக்கத்தால் கவரப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் மாணவர் காங்கிரஸ் இயங்கத் தொடங்கிய காலத்திலேயே காந்தியை அழைக்கவேண்டும் என்ற பெருவிருப்புக் காணப்பட்டது. இம்மாணவர் கழகத்தின் இணைச் செயலாளர்களுள் ஒருவராகவும் யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘London University Intermediate in Arts’ வகுப்பில் படிக்கும் மாணவராகவும் இருந்த எஸ். துரை ராஜ சிங்கம் சென்னையில் காந்தி நிற்பதை அறிந்து, 1925 மார்ச் இறுதியில் சென்னைக்குக் காந்தியின் தரிசனம் (Darshan – இது அவர் பயன்படுத்திய சொல்) பெறச் சென்றார். அவ்வேளை, மாணவர் காங்கிரஸ் சார்பில் காந்தியை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைத்தார். தான் அழைப்பை ஏற்று வருவதாக எந்தவித வாக்குறுதியையும் காந்தி கொடுக்கவில்லை.

ஜனவரி 1927 இல் வேறு நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்ற சென்னைக்குச் சென்ற மாணவர் காங்கிரஸ் உறுப்பினராகிய ஹண்டி பேரின்பநாயகமும் ஏ.எம்.கே. குமாரசுவாமியும் நேரில் காந்தியைச் சந்தித்து அவரை அழைப்பதற்கு விரும்பினர். ஆகவே அவர்கள், ஈ.ஜே. ராஜையா என்ற இன்னொருவருடன், காந்தி தங்கியிருந்த பெங்களூருக்குச் சென்று அவரைச் சந்தித்து, மாணவர் காங்கிரஸ் சார்பில் அவரை யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைத்தனர். 

காந்தியின் தென்னிந்தியப் பயணங்களை ஒழுங்கு செய்யும் பொறுப்பு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் காந்தியுடன் இருந்தபோது தான் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அங்கு சென்றிருந்தனர். இளைஞர்களுடைய வேண்டுகோளைச் செவிமடுத்த காந்தி ஒரு நிபந்தனையை முன்வைத்தார். கதர் இயக்கத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றால் இளைஞர்கள் ஒரு லட்சம் ரூபா கதர் நிதிக்குத் திரட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இளைஞர்கள் இதற்குச் சம்மதித்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய பின் மாணவர் காங்கிரஸின் இணைச் செயலாளர் ஐ.பி. துரைரத்தினம் முறைப்படி ஓர் அழைப்பினை எழுத்து மூலம் காந்திக்கு அனுப்பிவைத்தார். இதற்கு 1927 பெப்ரவரி 3 இல் விடையளித்த காந்தி, இது தொடர்பாக ராஜகோபாலாச்சாரியரே தீர்மானம் எடுப்பார் என எழுதியிருந்தார்.

பின்னர், 1927 ஓகஸ்ட் மாதம் ஜே.வி. செல்லையா (மாணவர் காங்கிரஸின் முதலாவது தலைவர்) பெங்களூருக்குச் சென்று காந்தியைச் சந்தித்தபோது கூட இலங்கைப் பயணம் பற்றிக் காந்தி தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஒரு சில நாட்களின் பின், செப்தெம்பர் முற்பாகத்தில், காந்தி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரச் சம்மதித்துவிட்டார் என்ற செய்தி மாணவர் காங்கிரஸுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆவலுடன் காந்தியின் சம்மதத்தை எதிர்பார்த்திருந்த மாணவர் காங்கிரஸ் உடனே ஒரு வரவேற்புக் குழுவை அமைத்தது. ஹண்டி பேரின்பநாயகமும் எம்.எஸ். இராசரத்தினமும் இணைச் செயலாளர்களாகப் பதவி பெற்றனர். குழுவின் தலைவராகப் பணியாற்றுவதற்கு வைத்திலிங்கம் துரைசுவாமி அழைக்கப்பட்டார். காந்தியின் வருகை தொடர்பான அறிவிப்பு பல செய்தித்தாள்களில் வெளிவந்தது.

காந்தியின் வருகை

தமிழ்நாட்டின் தென்கரைத் துறையாகிய தூத்துக்குடியில் இருந்து காந்தி குழுவினர் 12 ஆம் திகதி இரவு 9:30க்குக் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தனர்.

காந்தியுடன் வந்தவர்கள் அவருடைய மனைவி கஸ்தூர்பா (கஸ்தூரிபாய்), சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), ராஜாஜியின் மகள் லக்‌ஷ்மி, காந்தியின் செயலாளராகிய மஹாதேவ் தேஸாய் ஆகியோராவர்.

காந்தியுடன் விடுதலை இயக்கத்தில் நெருங்கிய முறையில் செயலாற்றிய ராஜாஜி, பின்னர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகவும், இந்தியா சுதந்திரம் பெற்றபின் பிரித்தானியப் பேரரசின் கடைசி ராஜப் பிரதிநிதியாகவும் (Viceroy) ஆளுநர் – தளபதியாகவும் (Governor – General) கடமையாற்றிய ‘Lord Louis Mountbatten’ தன் கடமையை முடித்து நாடு திரும்பியதும், இந்தியாவின் ஆளுநர் – தளபதிப் பதவியைப் பெற்ற முதலாவது (உண்மையில் ஒரேயொரு) இந்தியராகப் புகழ்பெற்றார். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்திய வரலாற்றில் பல வலிமை வாய்ந்த மன்னர்கள் வடக்கின் பெரும்பாகத்தையும் தெற்கின் சில பாகங்களையும் கைப்பற்றித் துணைக்கண்டத்தின் கணிசமான நிலப்பகுதிக்குத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட நிலத்தில் தமிழ்நாடு சேர்ந்திருக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடக்கையும் தெற்கையும் இணைத்த இந்தியாவின் அரசியல் தலைவராக முதல் தடவையாகப் பதவிபெற்றார் என்றால் அந்தப் புகழ் ராஜாஜியைச் சேரும்.

ராஜாஜியின் மகள் லக்‌ஷ்மி விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுக் காந்தியின் மகன் தேவ்தாஸ் காந்தியை மணம் முடித்தார். இவர்களுக்குப் பிறந்த மூத்த மகனுக்கு பேரன்மார் இருவருடைய பெயர்களையும் இணைத்து (ராஜாஜி + மோஹன்தாஸ் காந்தி) ராஜ்மோஹன் எனப் பெயரிட்டதை நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தையார் எனக்குச் சொன்னார். ராஜ்மோஹன் பின்னர் ஒரு பிரபல வரலாற்றாசிரியராகப் புகழ்பெற்றார். இரண்டாவது மகன் ராம்சந்த்ர. மூன்றாவது மகன் கோபால்கிருஷ்ண; இவர் இந்தியாவின் நிர்வாக சேவையில் பணியாற்றியவர், சில ஆண்டுகள் இலங்கையில் இந்தியத் தூதரகத்திலும் பணிபுரிந்தவர்.

தென் இலங்கையில்

இலங்கையின் தென் பாகத்தில் காந்தி இரண்டு வாரங்களாகப் பல இடங்களுக்குச் சென்று, கூட்டங்களில் பேசிப் பெருந்தொகையான பொது மக்களைச் சந்தித்தார். கொழும்பில் மட்டுமல்லாது, தென் மாகாணத்திலும் மலையகத்திலும் பல நகரங்களிலும் ஊர்களிலும் பொதுமக்கள் அவரை வரவேற்று கதர் நிதிக்குப் பணம் கொடுத்தனர். மிகவும் குறிப்பிடத்தக்க பெருங்கூட்டங்களுள் ஒன்று தொழிலாளர் சங்கம் (Ceylon Labour Union) அளித்த வரவேற்பு; இன்னொன்று வித்தியோதயப் பிரிவென நிறுவனத்தில் பௌத்த மஹாசபை (Buddhist Congress) நடத்திய கூட்டம்.

ஏ.ஈ. குணஸிங்ஹ மற்றும் விக்டர் கொறயா ஆகியோர் தலைமையில் தொழிலாளர் சங்கம் கொடுத்த வரவேற்பில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். சங்கத்தின் உறுப்பினர் சீருடை அணிந்து காந்தியை வரவேற்றனர். காந்தியின் பேச்சு தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. 

பௌத்த மஹாசபை அளித்த வரவேற்பில் 500க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார் பங்குபற்றினர். காந்தியின் பேச்சை ஜி.பி. மலலசேகர (பின்னர் பேராசிரியராக விளங்கியவர்) சிங்களத்துக்கு மொழிபெயர்த்தார்.

கொழும்பில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய வரவேற்பு ‘Tamil Union’ நடத்திய நிகழ்வாகும். இதற்குப் பொன்னம்பலம் இராமநாதன் தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாணத்துக்கு இராப்பயணம்

நவம்பர் 25 இல் யாழ்ப்பாணத்துக்குப் புறப்படக் காந்தி தயாரானார். கொழும்புத் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மாலை யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அஞ்சல் வண்டியில் (Night Mail Train) இணைக்கப்பட்ட ‘Saloon Car’ ஒன்றில் காந்தியும் அவர் குழுவினரும் சௌகரியமாகப் பயணம் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தொடர்வண்டி கணேமுல்ல (Ganemulla) நிலையத்துக்கு வந்தபோது, அங்கு காந்தியை வரவேற்க ஒரு கூட்டம் காத்திருந்தது. அவரைக் காண வந்திருந்தவர்களை நோக்கி காந்தி ஆற்றிய உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. வண்டி புறப்படுமுன் கதர் நிதிக்கு ஒரு பணப்பையும் காந்தியிடம் கொடுக்கப்பட்டது.

தொடர்வண்டி நள்ளிரவு வேளையில் அநுராதபுரத்தை அடைந்தது. நிலையத்தில் ஒரு கூட்டம் காந்தியைக் காணக் காத்திருந்தது. கிழக்கு மாகாணத்துக்குக் காந்தி வருகைதர ஒழுங்கு செய்யப்படாததால், திருகோணமலை வாசிகள் சிலர் கதர் நிதிக்குப் பணம் சேர்த்துப் பணப்பையுடன் அநுராதபுரத்துக்கு வந்திருந்தனர். நித்திரையில் இருந்து காந்தி எழுப்பப்பட்டு, வந்தோரைத் தன் வண்டியில் இருந்து சந்தித்து உரையாற்ற நேர்ந்தது. அவருடைய பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் முதல் நாள்

நவம்பர் 26 சனிக்கிழமை விடியற்காலை தொடர்வண்டி பளை நிலையத்துக்கு வந்தபோது முதலாவது யாழ்ப்பாணத்தவர் கூட்டத்தை காந்தி சந்தித்தார். அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி அவர் பேசும்போது இரண்டு முக்கிய வேண்டுகோள்களை விடுத்தார். ஒன்று தீண்டாமை பற்றியது. மற்றது மதுவிலக்குத் தொடர்பானது. சாதிப் பாகுபாடுகளைக் கைவிட்டு, மனிதரை மனிதர் மதித்து நடக்கவேண்டும் என்பது காந்தியின் தலையாய போதனை. மது அருந்துவதை ஒழிக்கவேண்டும் என்று போகும் இடமெல்லாம் அவர் வேண்டிக்கொள்வார். இந்த இரண்டையும் காந்தி யாழ்ப்பாணத்தில் சென்ற இடமெல்லாம் வலியுறுத்தினார்.

தொடர்வண்டி யாழ்ப்பாண நிலையத்தை வந்தடைந்த போது அங்கு பெருந்திரளான மக்கள் காத்திருந்தனர். இந்தக் காட்சியை ‘Hindu Organ’ செய்தித்தாள் இவ்வாறு வர்ணித்துள்ளது: “Long before the time of the arrival of the Colombo Mail train the railway platform, the precincts outside the railway station and the thoroughfares leading to it was one seething mass of humanity” (28 November 1927). 

வண்டியில் இருந்து காந்தி இறங்கியதும், வரவேற்புக் குழுத் தலைவர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவருக்கு மலர்மாலை அணிவித்து, யாழ்ப்பாணத்துக்கு அவரை வரவேற்றார்.

தொடர்வண்டி நிலையத்தில் இருந்து காந்தியும் குழுவினரும் மணிக்கூட்டுக்கோபுர வீதியில் (Clock Tower Road) அவர்கள் தங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ‘தர்மலட்சுமி வாசா’ என்ற இல்லத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர்.

பிற்பகல் 3 மணிக்கு முற்றவெளியில் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. வைத்திலிங்கம் துரைசுவாமி காந்திக்கு மலர்மாலை அணிவித்து, யாழ்ப்பாண மக்கள் சார்பில் வரவேற்புரையை வாசித்து அவரிடம் சமர்ப்பித்தார். பல குழுக்கள் காந்தியிடம் வரவேற்புத் தாள் (Address) கொடுக்கக் காத்திருந்தனர். இவர்களுள் ‘Depressed Class Association’, ‘Depressed Class League’ ஆகியவற்றைச் சேர்ந்தோரும் அடங்குவர். 

காந்தி தன் விடையுரையில் தீண்டாமை மற்றும் மதுவிலக்கு ஆகியவை பற்றி விரிவாகப் பேசி, இலங்கையில் தீண்டாமை இருப்பதையிட்டுத் தான் வியப்படைந்ததாகக் கூறினார். அத்துடன், யாழ்ப்பாணம் முற்றாக மது ஒழிப்பில் வெற்றிபெறும் நிலைக்குக் கிட்டியதாக வந்திருப்பதை அறிந்து மகிழ்வதாகவும் கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபின், துரைசுவாமி தம்பதிகள் ‘வீட்டு உபசாரம்’ (At Home) ஒன்றைத் தங்கள் இல்லத்தில் நடத்தினர். இதற்கு அரசாங்க அதிபர் உட்படப் பல பிரமுகர்கள் அழைக்கப்பட்டனர்.

மாலை 6 மணிக்கு ‘Royal Theatre’ இல் மாணவர் காங்கிரஸின் வரவேற்பு விழா நடைபெற்றது. இதற்கு சுவாமி விபுலானந்தர் தலைமை தாங்கினார். தான் இலங்கைக்கு வருவதற்குத் தாமே காரணம் என மாணவர் சபை இளைஞர்கள் உரிமை கோருவதில் தவறில்லை எனக் காந்தி தன் உரையைத் தொடங்கினார் (“You have taken upon yourselves and very rightly, the credit of bringing me to this fair Island”).

மாணவர்களுடைய முதலாவது குறிக்கோள் தங்கள் ‘தொன்மையான பண்பாட்டின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தல்’ (Revival of their Ancient Culture) எனத் தலைவர் காந்திக்குக் கூறியிருந்தார். இப்பொருளைக் காந்தி குறிப்பாக எடுத்து தன் எண்ணங்களை விளக்கி,  பண்பாட்டு மறுமலர்ச்சி என்ற பெயரால் விளையக்கூடியவை தொடர்பாக எச்சரிக்கையும் விடுத்தார்.

காந்தி கூறியவற்றுள் இவை குறிப்பிடத்தக்கவை: “I am obliged to utter this warning to this Congress of students who are to be the makers of the destinies of this land, because of so many reactionary forces gathering round us not only here, but throughout the world. I see from my own experience in India that many who are professing to revive ancient culture do not hesitate under the name of that revival to revive old superstitions and prejudices… You will not therefore consider that I have given you a laboured statement in warning you against being misled into wrong doing under the name of revival of ancient culture.” (Speech to the Students’ Congress, 26 Nov. 1927, Mahadev Desai, With Gandhiji in Ceylon).

இரண்டாம் நாள் 

நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை காந்திக்கும் அவர் குழுவினர்க்கும் நிகழ்ச்சி நிரம்பிய நாளாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஊர்களுக்குச் சென்று எண்ணற்ற மக்களைக் காந்தி சந்தித்தார். முக்கியமாக, அவர் பல கல்வி நிறுவனங்களுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

காலையில் முதலாவதாக காந்தி குழுவினர் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரிக்குச் சென்றனர். அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம அலுவலகமும் இராமநாதன் மண்டபமும் அமைந்துள்ள நிலத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின் இரண்டு முக்கிய முன்னணிப் போராளிகள் – காந்தியும் ராஜாஜியும் – காலடி வைத்தனர். ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது. கஸ்தூர்பா காந்தியும் ராஜாஜியின் மகள் லக்‌ஷ்மியும் கூடவே இதில் பங்குகொண்டனர்.

கல்லூரி அதிபரும் பொன்னம்பலம் இராமநாதனுடைய மருமகனுமான சு. நடேசபிள்ளை காந்தியை வரவேற்று கல்லூரியின் சார்பில் ஒரு பணப்பையையும் வழங்கினார்.

இதன்பின் காந்தி குழுவினர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, கந்தரோடை இந்து ஆங்கில நிறுவனம் (Hindu English Institute – பின்னர், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி) ஆகிய பாடசாலைகளுக்குச் சென்றனர். ஒவ்வோர் இடத்திலும் பணப்பை வழங்கப்பட்டது.

அடுத்து, சுன்னாகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு காந்தி அடிக்கல் நாட்டினார். அக்கல்லில் ‘காந்தியடிகள் சக 1850’ எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இதன்பின், காந்திக்கு ஒரு பணப்பையும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, சுன்னாகச் சந்தையில் ஒரு வரவேற்பை முடித்துக்கொண்டு காந்தி குழுவினர் பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் நல்லூர் வீரமாகாளியம்மன் கோவில், கோப்பாய், புத்தூர், அச்சுவேலி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, வல்லிபுரக் கோவில் ஆகிய இடங்களில் வரவேற்புக்களில் பங்குகொண்டு பணப்பையும் பெற்று, இவர்கள் சாவகச்சேரிக்குச் சென்றனர். இங்கும் வரவேற்பில் காந்திக்குப் பணப்பை அளிக்கப்பட்டது.

மூன்றாம் நாள்

நவம்பர் 28 திங்கட்கிழமை காந்தியின் மௌனவிரதம். ஞாயிறு இரவு 9:30 தொடக்கம் திங்கள் இரவு 9:30 வரை மௌனம். இது முடிவுற்றதும், சில இளைஞர்கள் (சைவர்களும் கிறிஸ்தவர்களும்) காந்தியின் அடிமுன் உட்கார்ந்து வினாக்களைக் கேட்டு விடைகளைப் பெற்றனர்.

நாலாம் நாள்

நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை, இறுதி நாள். பல பாடசாலைகளுக்குக் காந்தி செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. காலையில் ஏழு முக்கிய கல்லூரிகளுக்குக் காந்தி சென்றார். முதலில் சுண்டிக்குளி ‘St. John’s College’, பின்னர் ‘Chundikuli Girls’ School’, ‘Jaffna Central College’, ‘Vembadi Girls’ School’, ‘Uduvil Girls’ School’, ‘Tellippalai Weaving School’ ஆகியவற்றிலும், இறுதியாக இராமநாதன் கல்லூரியிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்று பணப்பைகள் அளிக்கப்பட்டன. 

இராமநாதன் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி சைவ மங்கையர் சபை கொடுத்த வரவேற்பாகும். இதில் லீலாவதி இராமநாதன் அம்மையார் சிறப்பாகப் பங்குபற்றினார்.

பிற்பகல் நிகழ்ச்சிகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வரவேற்புடன் தொடங்கியது. இதன்பின் காந்தி குழுவினர் ஊர்காவல்துறைக்குச் சென்றனர். அங்கு நடந்த வரவேற்புக்கு வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். அவர்கள் சார்பில் வைத்திலிங்கம் துரைசுவாமி பணப்பை ஒன்றை வழங்கினார்.

அங்கிருந்து திரும்பி வரும்போது, காரைதீவில் சைவ மகாசபை குழுவினரை வரவேற்று பணப்பை ஒன்றை அளித்தது. அங்கிருந்து வரும் வழியில் மூளாய் சித்திவிநாயகர் கோவிலில் இன்னொரு வரவேற்பு. அவ்வேளை மூளாய் – தொல்புரம் மக்கள் பணப்பை ஒன்றை வழங்கினர். அத்துடன், அவ்விரு ஊர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பாடசாலை அமைப்பதற்கு காந்தி அடிக்கல் நாட்டினார்.

பின்னர், சுழிபுரம் – சங்கானை மக்கள் விக்ரோறியாக் கல்லூரியில் வரவேற்பு நிகழ்த்தி பணப்பை ஒன்றும் கொடுத்தனர். இறுதியாக வட்டுக்கோட்டை இந்து – ஆங்கிலப் பாடசாலையில் (தற்போதைய வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி) வரவேற்பும் பணப்பை வழங்கலும் நடைபெற்றது.

இது முடிந்ததும், சங்கானை, மானிப்பாய், ஆனைக்கோட்டை வழியாக (மக்களை வழியில் சந்தித்து) காந்தி குழுவினர் யாழ்ப்பாணம் தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றனர். அங்கு காத்திருந்த மக்களுக்குத் தன் பிரியாவிடை உரையை வழங்கி, 6:15 இற்குப் புறப்பட்ட தொடர்வண்டியில் காந்தி பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் தலைமன்னாரில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு மீண்டும் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு கப்பல் ஏறி இந்தியாவுக்குத் திரும்பினார். அவர் அனுப்பிய செய்தி மீண்டும் ‘மது அருந்துவதை விலக்குங்கள், தீண்டாமையை ஒழியுங்கள்’ என்பவற்றையே வலியுறுத்தியது.

மூன்று நாட்களில் மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்தில் முப்பதுக்கு மேற்பட்ட ஊர்களுக்குச் சென்றார், 14 பிரபல பாடசாலைகளில் உரையாற்றினார். இரண்டு பாடசாலைகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். ஆயிரக்கணக்கான யாழ்ப்பாணத்தவர் அவரைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர். யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வேறொரு வெளிநாட்டுப் பிரமுகருக்கும் இச்சிறப்புக் கிட்டவில்லை எனத் திடமாகக் கூறலாம். கதர் நிதிக்கு ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் கிடைத்தது.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்