மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும் 

February 2, 2026 | Ezhuna

1920களில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் கொழும்பு நகரில் ஓர் உயர்கல்வி நிறுவனம் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலை/ விஞ்ஞானப் பட்டப்படிப்புக்கு வெளிவாரி பரீட்சார்த்திகளான இலங்கை மாணவர்களைத் தயார்ப்படுத்தும் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டது. 1942 இல் இக்கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு தனித்து இயங்க ஆரம்பித்தது. காலப்போக்கில் நாட்டின் பிறபகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பட்டன. இலங்கையில் பல்கலைக்கழக முறை (University System) ஒன்று உருவாகியது. இம்மாற்றங்கள் மேற்குறித்த மூன்று கற்கைத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. ‘இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும்’ என்ற இத்தொடரில் இக்கற்கைத்துறைகளின் வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகள், முக்கிய ஆய்வாளர்களின் நூல்களினதும், ஆய்வுக் கட்டுரைகளினதும் அறிமுகமும் விமர்சனமும், ஆய்வாளர்களின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் (Theoretical Contributions), அவர்களின் புலமைத்துறை வாழ்க்கை வரலாறு, மாணவர் பரம்பரைகளின் உருவாக்கம், அரசியல் – சமூக – பண்பாட்டு உயர்குழக்களின் (Elites) உருவாக்கம் என்பன குறித்த பகுப்பாய்வுகளாக அமையும் கட்டுரைகள் பதிவிடப்படும்

மார்க். பி. விற்றேக்கர் (Mark. P. Whitaker) எனும் மானிடவியலாளர் 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் மண்டூர் என்ற கிராமத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் மண்டூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாகம் தொடர்பாக, அவ்வூரின் வேளாளர்கள், சீர்பாதர் என்னும் இரு சமூகக்குழுக்களுக்கிடையே எழுந்த பிணக்குப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொண்டார். நியுஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 1986 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேடு குறித்த விவரம் பின்வருமாறு: ‘Divinity and Legitimacy in a Temple of Lord Kanthan, A Thesis Presented to Princeton University, New Jersey.’ 

அவரது ஆய்வு ‘மண்டூர் கந்தசுவாமி கோவிலும் சமயக் கருத்தியலும்’ என்னும் விடயம் பற்றியது. ஆயினும், கோவிலின் நிர்வாகம் சார்ந்த பிணக்கு, சமயக் கருத்தியல் என்ற எல்லைகளுக்கு அப்பால், மண்டூர் கிராமம் பற்றியும், அக்கிராமம் அமைந்துள்ள மட்டக்களப்புப் பிராந்தியம் பற்றியதுமான வரலாறு, சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரம், சமூக உறவுகள் ஆகிய விடயங்களைப் பற்றிய விரிவான ஆய்வாக இது அமைந்துள்ளது. மார்க். பி. விற்றேக்கர் அவர்களின் ஆய்வு நூலை ஆதாரமாகக் கொண்டு ‘மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும்’ என்னும் தலைப்பிலான இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பின் விவசாய உற்பத்தி நீர்ப்பாய்ச்சலை ஆதாரமாகக் கொண்ட நெல் வேளாண்மையைப் பிரதானப்படுத்துவது. மட்டக்களப்பைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையைக் கட்டிய போர்த்துக்கேயர் விவசாயத்தில் அக்கறை செலுத்தவில்லை. 1622 இல் அங்கு வந்த டச்சுக்காரரும் விவசாய விருத்தியில் பெரிதாக அக்கறை காட்டாவிடினும், மட்டக்களப்பின் கடலேரியை அடுத்த மேற்கு ஓரத்தில் இருந்த குளங்களின் பராமரிப்பு வேலையை இராஜகாரிய ஊழிய முறையைப் பயன்படுத்திச் செய்வித்தனர். பிரித்தானியர் ஆட்சியின் போது மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த பேர்ச் (Birch) என்பவர் 1850களிலும் 1860களிலும் மட்டக்களப்பின் நீர்ப்பாசனக் குளங்கள், அணைக்கட்டுகள் என்பனவற்றைத் திருத்தி விவசாய விருத்தியை மேற்கொள்வதற்கு ஆலோசித்தார். 1855 – 60 காலத்தில் இலங்கையின் ஆளுநராக இருந்த ஹென்றி வார்ட் என்பவரின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டுவந்த பெருமை பேர்ச்சிற்கு உரியது.

காடுகள் களனிகளாயின

மட்டக்களப்பின் கடந்த பொற்காலம் பற்றியும் ஒரு காலத்தில் மட்டக்களப்பு இலங்கையின் நெற்களஞ்சியமாக (Rice Bowl) இருந்தமை பற்றியும் பேர்ச் கூறியிருப்பவை மிகைப்படுத்தல் என்றே விற்றேக்கர் கருத்துரைக்கின்றார். பண்டைய நீர்ப்பாசனக் குளங்களும் அணைக்கட்டுகளும் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் பரவலாக அழிவடைந்த நிலையில் காணப்பட்டது உண்மையே. ஆயினும், வரலாற்றின் எந்தவொரு கட்டத்திலும் அந்த நீர்ப்பாசன அமைப்புகள் அனைத்தும் ஒரு சேர நன்னிலையில் வைக்கப்பட்டு, இலங்கையின் நெற்களஞ்சியமாக மட்டக்களப்பு இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்பதே விற்றேக்கரது கருத்து. ஆயினும், பேர்ச் கண்ட கனவு ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. 1856 இன் பின்னர் கிழக்குக் கரையோரப் பிராந்தியத்தின் நீர்ப்பாசனக் குளங்கள் பல திருத்தப்பட்டன. அவ்வாண்டு இயற்றப்பட்ட 9 ஆம் இலக்க நீர்ப்பாசனக் கட்டளைச் சட்டம் நீர்ப்பாசன வேலைகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாயிற்று. 1870களில் மட்டக்களப்பில் இருந்து நெல், வடக்கேயுள்ள யாழ்ப்பாணத்திற்கும், ஊவா மாகாணத்தின் பதுளையில் உள்ள தேயிலைத் தோட்டங்களிற்கும் ஏற்றுமதியாயிற்று. சில சமயங்களில் மட்டக்களப்பில் இருந்து இந்தியாவிற்கும் நெல் ஏற்றுமதியாயிற்று. 

‘மட்டக்களப்பு மாவட்டக் கையேடு’ என்னும் நூலின் ஆசிரியர் முதலியார் கனகரத்தினம், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுவரும் நெற்செய்கை முன்னேற்றம் பற்றிச் சில புள்ளிவிவரங்களைத் தந்துள்ளார். 1869 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மக்களின் உணவுத் தேவைக்காக 6,000 புசல் நெல்லும் 43,000 புசல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார். இவ்வாறு நெல்லை இறக்குமதி செய்த நிலை மாறியது. 1916 ஆம் ஆண்டில் 7,195 புசல் நெல் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இத்தொகை பதிவாகிய வெளித்தெரியும் ஏற்றுமதி எனவும், உள்நாட்டுத் தரைவழியாக மேலும் பெருந்தொகை வெளியே அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களில் திவுலான, நவக்கிரி என்ற இரு குளங்களின் புனரமைப்பால் மண்டூர் கிராமம் நன்மை பெற்றது. 1860 ஆம் ஆண்டிற்கும் 1900 ஆண்டிற்கும் இடைப்பட்ட 40 ஆண்டுக்கால எல்லையில் மண்டூரில் 628 ஏக்கர் நீர்ப்பாசனக் காணி விருத்தியாக்கப்பட்டது. இவை தனியார் உடைமைகளாக இன்றும் விளங்குகின்றன. மண்டூரைப் போன்றே படுவான்கரைக் கிராமங்கள் பலவற்றிலும் தனியார் உடைமைகளாக நீர்ப்பாய்ச்சல் காணிகள் உருவாகின. ‘முடிக்குரிய காணி’ (Crowned Land) எனப்பட்ட அரச நிலம் காடுகளாக இருந்தன. இவை களனிகளாயின. இன்று மண்டூரில் வயல்களும் குடியிருப்புகளுமாக உள்ளவற்றில் பெரும்பகுதி ஒரு காலத்தில் காடாக இருந்தது. ஓ கிறெடி (O’ Gready) என்ற அரசாங்க அதிபர் 1866 இல் காணிப்பதிவு வேலைக்காக அங்கு சென்றபோது மண்டூர் கோவிலின் பூசகர், எதிரே இருந்த நிலப்பகுதியைச் சுட்டிக்காட்டி அதனைக் ‘காடு’ எனக் கூறியதாக அரசாங்க அதிபர் பதிவு செய்துள்ளார். 

போடியார்கள்

மண்டூரிலும், படுவான்கரைக் கிராமங்களிலும் விருத்தி செய்யப்பட்ட இந்தக் காணிகளின் உடைமையாளர்கள் யார் என்ற கேள்வி எம் மனதில் இயல்பாக எழுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் வளர்ச்சி பெற்ற இந்த நில உடைமையாளர்களே ‘போடியார்கள்’ என அழைக்கப்பட்டனர். அப்படியானால் 19 ஆம் நூற்றாண்டில்தான் ‘போடியார்கள்’ தோன்றினார்களா என்ற கேள்வி எழுகிறது. வன்னிச் சிற்றரசுகள் (ஏழு) இப்பகுதியை ஆண்டபோது நில உடைமையாளர்களாக இருந்தவர்கள் ‘முக்குவ வன்னிமைகள்’ எனப்பட்டனர். இப்பகுதியின் ஆட்சி உரிமை பெற்றிருந்த இச்சிற்றரசுகள், போடியார்களின் கூட்டிணைவாகவே இருந்தன எனவும், கண்டியில் உள்ள அரசனின் பெயரளவிலான ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள் ‘உள்ளூரில் இறைமையும் சடங்கியல் மேலாண்மையும்’ உடையவர்களாக இருந்தனர் எனவும் கே.எம்.டி. சில்வா என்ற சரித்திர ஆசிரியரை மேற்கோள் காட்டி விற்றேக்கர் கூறுகிறார். 1950களில் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1972 இல் காணி உச்சவரம்புச் சட்டம், மேட்டு நிலக் காணியின் உரிமையை நபர் ஒருவருக்கு 20 ஏக்கராக மட்டுப்படுத்தியது. அக்காலம் வரை போடியார்களின் ஆதிக்கம் இப்பகுதியில் நிலைபெற்றிருந்தது. 

பெரும்பாலான போடியார்களின் பரம்பரை மூலம் முக்குவர், வேளாளர் என்ற இரு சாதிகள் என்பது தெரியவருகிறது. ஆயினும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம் வர்த்தகர்களும் காணிகளைப் பெருமளவில் கொள்வனவு செய்து நில, உடைமையாளர்களாயினர். மட்டக்களப்பின் நில உடைமை முறை மூன்று அடுக்குகளை உடைய சுரண்டல் முறையாக இருந்தமையைக் கனகரத்தின முதலியார் தரும் விவரங்களில் இருந்து அனுமானிக்கலாம். இக்கட்டமைப்பின் உச்சத்தில் இருந்தவர்கள் போடியார்கள். அவர்களுக்குக் கீழே அடுத்த நிலையில் ‘முல்லைக்காரர்’ எனப்படும் மேற்பார்வையாளர்கள் இருந்தனர். இம்மேற்பார்வையாளர்கள் உழைப்பாளர்களான வேலைக்காரர்களைக் கொண்டு உழுதல், விதைத்தல், அறுவடை ஆகிய வேலைகளைச் செய்வித்தனர். இவ்வாறு மூன்று படிநிலைகளைக் கொண்ட உற்பத்தி உறவுகளின் கட்டமைப்பு சிக்கல் வாய்ந்தது. இதன் தொழிற்பாட்டை, இம்முறையின் கீழ் உற்பத்தியின் பங்கீடு எவ்விதம் நடைபெற்றதென்பதைக் கொண்டு விளக்கலாம். 1870க்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, விளைந்த நெல்லின் ½ பங்கைப் போடியாரும், இன்னொரு 1/5 பங்கை முல்லைக்காரனும் பெற்றுக்கொள்ளும் முறை இருந்து வந்தது. விளைச்சலின் 1/5 பங்கு, வயல் வேலைகளில் சம்பந்தப்பட்ட வேலைக்காரர்களுக்கு நெல்லாக அளந்து கொடுக்கப்பட்டது. இதனைவிட விதைப்புக்காகக் கொடுக்கப்பட்ட விதை நெல்லின் 50 வீதத்தை முல்லைக்காரனிடமிருந்தும் மீதி 50 வீதத்தை வேலைக்காரர்களிடமிருந்தும் போடியார்கள் பெற்றுக்கொண்டனர். போடியார் முறை வெறும் ஒப்பந்த முறையாக அன்றி மரபுவழி உரிமைகளும், கடமைகளும் கொண்ட ஆண்டான் – அடிமை முறையாகவும் இருந்தது. போடியாரின் வீட்டு வளவுகளைச் சுத்தப்படுத்தல், வேலியடைத்தல், விளைபொருளை அவரது வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்த்தல் போன்ற பல கடமைகளை வேலைக்காரர்கள் செய்யவேண்டும். வண்ணார், அம்பட்டர், பறையர் போன்ற சாதிகளின் வேலைக்காரர்களுக்கு சடங்கியல் கடப்பாடுகள் இருந்தன. போடியார், புதுவருடம் போன்ற பண்டிகைத் தினங்களின் போது கைவிசேஷம் கொடுப்பார். கைவிசேஷம், கொடுப்போனது உயர்வையும் பெறுவோனது தாழ்நிலையையும் சுட்டி நிற்பது. 1870களின் பின்னர் வயல் நிலங்களின் அளவு அதிகரித்து நில உடைமை முறை வலுப்பெற்ற போது போடியார், முல்லைக்காரன், வேலையாளர் உறவுகள் மேன்மேலும் ‘சுரண்டல்’ தன்மையுடையனவாய் மாறின. இவ்வாறு கூறும்போது 1870க்கு முந்திய போடியார் முறை பலவீனமானது எனப் பொருள்கொள்ள முடியாது என்றும் விற்றேக்கர் கூறுகிறார். 1817 ஆம் ஆண்டளவிலேயே பஸ்குவல் முதலியார் என்ற கிறிஸ்தவப் போடியார் எருமைத்தீவு என்ற முழுத் தீவையுமே தனது உடைமையாக வைத்திருந்தார் என்பதைக் கனகரத்தின முதலியார் குறிப்பிடுகின்றார். 

“ஏறக்குறைய பத்து மைல் சுற்றளவுள்ள பரந்த வயல் நிலம், கடல் ஏரியில் இருந்து சில அடிகள் உயர்ந்த நிலத்தில் வியாபித்திருந்தது” என்று 1921 இல் எழுதிய கையேட்டு நூலில் அவர் எருமைத் தீவு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். படுவான்கரையில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்கக் கிராமமான சொறிக்கல் முனையைத் தாபித்த பெருமையும் பஸ்குவல் முதலியாருக்கு உரியது என்பதை ஊரவர்களின் வாய்மொழியாகவே அறிந்துகொள்ளலாம். சொறிக்கல்முனை மண்டூரில் இருந்து தெற்கே உள்ளது. பஸ்குவல் முதலியார் காலத்துப் போடியார் முறை, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வயல்நிலங்களின் அளவுப் பெருக்கத்தோடு, இறுக்கமான உறவுக் கட்டமைப்பாக நிலைபெற்றதென்றே கருதலாம். 

வளர்ச்சிக் குறைவு

போடியார், முல்லைக்காரன், வேலைக்காரர் என்போரிடையே ஒருவகைப் பங்குடைமையும், அதன் மூலம் கூலி உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் முறையும் 1920கள் அளவில் வளர்ச்சி பெற்றிருந்தன. 

“விதை நெல், உழுதலுக்காகக் கொடுத்த எருமைகளின் வாடகை, அறுவடை, சூடடிப்புச் செலவுகள் என்பனவற்றை 50 வீதம் வட்டியுடன் அறவிட்டுக் கொண்ட நில உடைமையாளர்கள் உற்பத்தியின் மூன்றில் இரண்டு பங்கைத் தமதாக்கிக் கொண்டனர். இது அவர்களுக்கு இலகுவான காரியமாக இருந்தது.” இவ்வாறு அரசாங்க அதிபர் ஒருவர் எழுதியிருப்பதை B.H. பாமர் (B.H. Farmer) மேற்கோள் காட்டியிருப்பதை விற்றேக்கர் குறிப்பிடுகிறார். 

காலம் செல்லச் செல்ல போடியார் முறை வினைத்திறன் அற்ற முறையாகவும் மாறத்தொடங்கியது. 

“மட்டக்களப்பில் உருவாகிய பொருளாதார நிறுவனக் கட்டமைப்புகளின் பயனாக உற்பத்தியின் மேன்மிகையை நிலத்தில் முதலீடு செய்து வயல் நிலங்களைக் கொள்வனவு செய்த நில உடைமையாளர்கள் கைகளில் பேரளவு காணிகள் குவிந்தன. இது விவசாயக் குடியான்களைச் சுரண்டுவதற்கு உதவியது. ஆயினும், முதலாளித்துவ முறையிலான மூலதனத் திரட்சியின் மூலமாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் தூண்டுவதாக இது அமையவில்லை. இதற்கான காரணத்தை ஊகித்தறியும் தேவை உள்ளது. பெருந்தோட்டங்களின் முதலாளிகளுக்கு உதவ விரும்பிய பிரித்தானிய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலிகளை உயரவிடாமல் தடுப்பதற்காக அரிசியின் விலையைக் குறைக்கும் வகையில் அரிசி இறக்குமதியைச் செய்தது. இதனால், நெல் உற்பத்தியில் முதலாளித்துவ முயற்சிகள் ஊக்கப்படுத்தப்படவில்லை. 1920களில் நெல் உற்பத்தியாளர் யாவரும் ஏகோபித்த குரலில் கூறிய முறைப்பாடு நெல் உற்பத்தியால் இலாபம் பெறமுடியவில்லை என்பதே என பிறயன் (Brayne) குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றங்கள் காரணமாக வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி ஏற்பட்டன. இதனால் நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. நீர்ப்பாய்ச்சல் நிர்வாகமும் சீரியதாக இருக்கவில்லை. இக்காரணங்களினால் நெல் விவசாயம் முதலாளித்துவ முறையில் முன்னேற்றமடையவில்லை. உற்பத்தியின் மேன்மிகையைப் பணமாகச் சேகரித்து முடக்குவதற்குப் பதிலாக உற்பத்திக்கான மூலதனத்திலும் அபிவிருத்தியிலும் முதலிடுவதற்குத் தூண்டுதல் இருக்கவில்லை.” உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குக் காரணமான தடைகளை மேற்கூறியவாறு விவரித்திருக்கும் B.H. பாமர், போடியார்களின் மனப்பாங்கினைப் பின்வருமாறு விளக்கிக் கூறினார்:

“முதலாளித்துவ முறையின்படி உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதை விடுத்து உழைப்பைப் பிழிந்தெடுப்பதிலேயே நில உடைமையாளர்கள் நாட்டம் கொண்டனர். அவர்கள் அபகரித்துக்கொண்ட மேன்மிகையினைத் தம்மைச் சமூகப் படிநிலையில் மேலும் உயர்த்திக் கொள்வதற்கான செலவுகளிலும், ஆடம்பர நுகர்வுச் செலவிலும், தம் பிள்ளைகளுக்குச் சீதனத்தையும், வெளிநாட்டுக் கல்வியையும் வழங்கவும் செலவிடலாயினர்.”

வெளிநாட்டுக் கல்வியை வழங்குவதில் மட்டக்களப்புப் போடியார்கள் ஈடுபட்டனர் என்று B.H. பாமர் பதிவு செய்யும் போது, மிகைப்படுத்தல் ஒன்றைச் செய்கின்றார் என்றே கருதலாம். இலங்கையின் பிற பகுதிகளின் உயர் வகுப்பினர் பிறநாட்டுக்குத் தம் பிள்ளைகளை அனுப்பி கல்வி கற்பித்தமை போன்ற ஊக்கம் மட்டக்களப்பின் போடியார்களிடம் இருக்கவில்லை. 

1970களின் நில உடைமைச் சீர்திருத்தங்களின் பின்னர் போடியார் என்ற வகுப்பு மறைந்து விட்டது. விற்றேக்கர், 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த போது போடியார் என்ற சொல்லின் பொருள்கூட படிப்பறிவில்லாத விவசாயி என்பதாக மாறியிருந்தது. உயர் அந்தஸ்தில் இருந்த போடியார் படிப்பறிவில்லாத ஒருவர் என்ற நிலைக்குத் தாழ்ந்த போதும், அடிப்படையான நில உடைமை முறை மாறவில்லை என விற்றேக்கர் கூறுகிறார். 

விற்றேக்கர் கள ஆய்வு செய்த மண்டூர்க் கிராமத்தில் 1978 இல் ‘றெட்பான’ நிறுவனம் ஆய்வு ஒன்றைச் செய்தது. இந்த ஆய்வறிக்கையின்படி மண்டூரில் 3,106 நபர்கள் இருந்தனர். இவர்களில் 145 பேர் 3 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்காணியை உடைமையாகக் கொண்டிருந்தனர். 274 பேர் 3 ஏக்கருக்கும் குறைந்த நெற்காணியின் உடைமையாளராவர். 3 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்காணி உடைமையாளர்களில் 16 நபர்களிடம் மண்டூரின் காணிகள் 50 வீதம் இருந்தன. மண்டூரில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 750 பேர் இருந்தனர். இவர்களில் 608 பேர் தம்மைக் கூலித்தொழிலாளர் என அழைத்தனர். இப்புள்ளிவிவரங்கள் பெரும் நில உடைமையாளர் சிலரிடம் காணி உடைமை குவிந்திருப்பதையும், கிராமத்தின் பெரும்பான்மையினர் கூலி உழைப்பாளர்களாய் இருப்பதையும் காட்டுகிறது.

சுருக்கம்

19 ஆம் நூற்றாண்டில் மட்டக்களப்பில் நீர்ப்பாய்ச்சல் குளங்கள் திருத்தப்பட்டன. நெற்காணியின் பரப்பளவு அதிகரித்தது. உற்பத்தியும் அதிகரித்தது. அரிசிப் பற்றாக்குறை நீங்கி மட்டக்களப்பு நெல்லை ஏற்றுமதி செய்யும் பகுதியாக மாறியது. போடியார் நில உடைமை முறை பலம் பெற்றது. போடியார், முல்லைக்காரன், வேலைக்காரர் என்ற அதிகாரப் படிநிலைக் கட்டமைப்புடைய சுரண்டல் முறையாகப் போடியார் முறை அமைந்தது. சேவைச் சாதிகள் நில உடைமையாளர்களுக்கு சேவைக் கடமைகளை வழங்கின. போடியார் முறை வினைத்திறன் மிக்கதாக இருக்கவில்லை. அது முதலாளித்துவ முறையாக விருத்தியடையவில்லை. போடியார் என்ற சொல் படிப்பறிவற்ற விவசாயி என்ற பொருள் உடையதாகவும் மாறியது. மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறை குறைவிருத்தியின் தன்மையை உடையதாகவே இருந்து வந்தது.  



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்