18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவக் கால அடிமைக் குடியேற்றங்களும் மலையகத் தமிழர்களும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
11 நிமிட வாசிப்பு

18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவக் கால அடிமைக் குடியேற்றங்களும் மலையகத் தமிழர்களும்

January 28, 2026 | Ezhuna

மலையகத் தமிழர்களின் புதிய வரலாற்றை இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்ப எழுத வேண்டிய தேவை இன்றியமையாதது ஆகும். இவர்களின் 200 ஆண்டுகால வாழ்வு, இலங்கையின் பெருந்தோட்டங்களில் ஒரு வரலாற்று விபத்தாக நிகழ்ந்திருந்தாலும், இவர்களுக்கென்று ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்த நெடும்பயணத்தில், இவர்கள் நூற்றுக்கணக்கான வன்முறைகளுக்கும், குடியுரிமை பறிப்பு, நிலவுரிமை பறிப்பு உள்ளிட்ட பாகுபாடுகளுக்கும் ஆளாகினர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களால் இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் இலங்கையின் ஏனைய சமூகங்களால் அடிமைக் குடிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆயினும், இத்தகைய அவலங்களுக்கு மத்தியிலும், இந்த மக்கள் தமது தனித்துவமான மொழி, பண்பாடு, உற்பத்தி முறை, கூட்டு உளவியல் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில், இந்நூற்றாண்டின் கண்ணோட்டத்தில், அவர்களது தனித்துவமான இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அவர்களுக்கான ஒரு புதிய அரசியல் – பண்பாட்டு அடையாளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு ‘மலையகத் தமிழர்களின் அரசியலும் பண்பாடும்’ எனும் இத்தொடர் எழுதப்படுகின்றது

இந்தியாவும் காலனித்துவமும்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக இந்தியாவைக் கபளிகரம் செய்தது. கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் இந்தியாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 1858 ஆம் ஆண்டு இந்தியா, பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடாக மாறியது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.

1707 இல் மொகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, நிலவி வந்த பாரம்பரிய சமூகக் கட்டமைப்பும், உருவாகி வந்த நிர்வாக முறைகளும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையினால் கடுமையான சீர்குலைவுக்குள்ளாகின. பிரித்தானியாவின் மிதமிஞ்சிய பருத்தி உற்பத்திகளுக்கு இந்தியா பிரம்மாண்டமான சந்தையாக மாறியது. பதிலாக இந்தியாவிலிருந்து வாசனைத் திரவியங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர்.

மெட்ராஸ் பிரசிடன்சி எனும் திராவிடர்கள், தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் 1818 ஆம் ஆண்டு சமீன்தாரி, ரயத்துவாரி முறைகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியக் கிராமப்புற விவசாயிகள் வரலாற்றில் என்றும் இல்லாத வரிச்சுமைகளுக்கு ஆளானார்கள். இவ்வரிகளை வசூலிப்பதற்கு தாசில்தார்களை நியமித்தனர். இவர்கள் கடுமையான வரி வசூலிப்பு முறைகளைக் கையாண்டனர். மழை பெய்யாத போது விவசாயிகளால் வரி செலுத்த முடியாமல் போனது. இவ்வரி உண்மை உற்பத்தியில் 1/6 அல்லது 1/3 பங்காக இருந்தது.

இந்தப் பின்னணியில் வரிக்கொடுமையும் கடும் வறட்சியும், விவசாயத்தின் வீழ்ச்சியும், கிராமப்புற வறுமையும் பஞ்சம் – பட்டினிக் கொடுமைகளைக் கொண்டுவந்தது. இந்நிலையில் இந்திய நாட்டின் விவசாயம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. வணிக முதலாளித்துவத்திற்கு தேவையான மனித உழைப்புக்கான சந்தை எழுச்சியுற்றது.

இந்நிலையில், பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்துச் சுதேசிய விவசாய முறைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தை நம்பியிருந்த 20 மில்லியன் மக்கள் மரணிக்க நேர்ந்தது. 1877 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் காலத்தில், 1876–1878 வரை, வளம் செழித்த மெட்ராஸ் பிரதேசத்தின் 200,000 சதுர மைல் பரப்பளவு பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட துன்பியலில் 4,000,000 மக்கள் மரணித்தார்கள்.

நிலமற்ற விவசாயிகள் வறட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இதற்கு வறட்சி மட்டும் காரணமல்ல; மாறாக கொடூரமான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் காரணமாகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக இலட்சோப இலட்சம் விவசாயிகள் தொழிலாளர்களாகப் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இலங்கையில் காலனித்துவம் 

இதே காலப்பகுதியில் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயக் கப்பல் படைத் தளபதி லோரன்ஸ் த அல்மெய்தா காலி துறைமுகத்தை வந்தடைந்ததோடு இலங்கையின் கரையோரங்கள் படிப்படியாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் வசமாகின. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் வாசனைத் திரவியங்கள், யானைத் தந்தங்கள், இரத்தினக் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதிலும் மதம் பரப்புவதிலும் குறியாக இருந்தனர். எனினும் 1796 ஆம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றியதோடு நாட்டின் தலையெழுத்து அடியோடு மாறத் தொடங்கியது. முதலில் இலங்கையின் கரையோரங்கள் மெட்ராஸ் பிரிட்டிஷ் உடன் இணைக்கப்பட்டன. 1798–1805 வரை இலங்கையின் முதலாவது ஆளுநராக பிரட்ரிக் நோர்த் பிரித்தானியக் காலனிய அரசால் நியமிக்கப்பட்டார். 1802 ஆம் ஆண்டு றொபர்ட் பிரவுண்றிக் ஆளுநரானார். 1815 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தின் கடைசி அரசான கண்டியரசு நாயக்க வம்ச தமிழ் மன்னனான ‘கண்ணுசாமி’ எனும் இயற்பெயருடைய கீர்த்தி ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், கண்டிய சிங்களப் பிரதானிகளின் சூழ்ச்சியின் காரணமாக பிரித்தானியர் வசமாகின்றார். இவரை தமிழகத்திற்கு நாடு கடத்திய பிரித்தானியர், கண்டியப் பிரதானிகளுடனான ஒப்பந்தம் மூலம் இலங்கை முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வருகின்றனர். றொபர்ட் பிரவுண்றிக் இராணுவத் தேவைக்காக கொழும்பு – கண்டி வீதியை அமைக்கின்றார்.

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒல்லாந்த ஆளுநர் ரைலோஃப் வான் கொயன்ஸ் (Rycklof van Goens) காலத்தில் தென்பகுதி விவசாயத்திற்காகத் தமிழ்நாட்டிலிருந்து பத்தாயிரம் பேர் அழைத்துவரப்பட்டனர். இத்தகைய குடியேற்றப் பின்னணிகள் ஏற்கனவே இருந்தபோதிலும், இன்றைய மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான வரலாறு என்பது பிரித்தானியர் காலத்திலேயே முறைப்படி ஆரம்பமானது. குறிப்பாக, ஆளுநர் சேர் எட்வர்ட் பான்ஸ் காலத்தில் கண்டி – பேராதனையின் ‘சிங்கபிட்டிய’ பகுதியில் பரிச்சார்த்தமாகக் கோப்பிச் செய்கை தொடங்கப்பட்ட நிலையில், 1823 ஆம் ஆண்டில் அவரால் குடியேற்றப்பட்ட 14 தமிழ்த் தொழிலாளர்களிடமிருந்தே இன்றைய மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தொடங்குகிறது.

இலங்கையில் கோப்பிச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், 1845–1850 வரையான காலப்பகுதியில் குடியேற்ற நாட்டுச் செயலாளராக இருந்த சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் என்பவர், 1825 ஆம் ஆண்டு மட்டும் பிரித்தானியாவின் இறக்குமதி வரியில் அரைப்பங்கு கோப்பி இறக்குமதியில் கிடைத்ததாகவும், மூன்றாண்டுக் காலப்பகுதியில் கோப்பி நுகர்வானது இருமடங்காக அதிகரித்ததாகவும், மேற்கிந்தியா, இந்தியா, இலங்கைக் கோப்பிக்கு பாரிய கேள்வி ஏற்பட்டதாகவும், நல்ல விலை கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தொழிலாளர் புலம்பெயர்வுக்கு தமிழகத்தில் – அன்றைய மெட்ராஸ் பிரசிடன்சியில் நிலவிய பின்வரும் சூழல்களே காரணங்களாக அமைந்தன. 

01. புவியியல் அமைவிடமும் தடையற்ற இந்தியப் பயண வசதிகளும். 

02. தமிழகத்திலும் இலங்கையிலும் நிலவிய இயற்கைக் காலநிலை.

03. அடிக்கடி ஏற்பட்ட வறட்சியும் உணவுப்பஞ்சமும்.

04. தென்னாசியாவில் நிலவிய வறுமை.

05. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சாதியினர் புலம்பெயர்ந்தனர்.

06. தமிழ் சமுகத்தின் சமூக – பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரித்தானியராட்சிக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர்.

இதேவேளை இலங்கையின் கிராமப்புறங்களில் பஞ்சம், வறுமை, வறட்சி என்பன நிலவிய போதும், சிங்களக் கிராமிய விவசாயிகள் பெருந்தோட்டத் துறையில் அரையடிமைச் சேவகம் செய்ய முன்வரவில்லை எனக் கூறப்படுகின்றது. ஆயினும், நவீன அடிமைத்துவத்தின் ஒரு வடிவமாக சிங்களத் தொழிலாளர்களும் தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் சார்ந்த சிறுதோட்ட விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுதேசிய கிராமப்புறச் சிங்களவர்கள் தமக்குத் தேவையான நிலப்பிரபுத்துவ, சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டமையும் அவர்களது வரையறுக்கப்பட்ட தேவைகளும் அவர்கள் தோட்டத்துறையில் வேலையில் ஈடுபடாமைக்கு காரணமாகியிருக்கக் கூடும்.

பர்மிய, சீன, தென்னாபிரிக்கத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் செலவு அதிகம் என்பதாலும், தமிழகத் தொழிலாளர்களைக் குறைந்த செலவில் கொண்டுவர முடியும் என்பதனாலும் தமிழ்த் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டதாக பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்மக்கள் 200 ஆண்டுகளாக பெரும்பான்மைச் சமூகத்திலிருந்தும் பூர்விகத் தமிழர்களிடமிருந்தும் வேறுபட்ட ஒரு சமூகமாக, உழைப்பினர் படையாக, பண்பாட்டுக் குழுமமாக, தேசிய இனமாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளில், வரையறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுடன், வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் காணி, வீட்டுரிமையற்ற மக்களினமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1824 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் கம்பளைக்கு அருகில் உள்ள ‘சிங்கபிட்டிய’ எனும் இடத்தில் நோக் பேர்ட் என்பவர் முதலாவது கோப்பித் தோட்டத்தை ஆரம்பித்தார். ஆளுநரான சேர் எட்வர்ட் பான்ஸ், பேராதனைத் தாவரவியல் பூங்காவிற்கு அருகில் ‘இராஜா தோட்டம்’ என்ற கோப்பித் தோட்டத்தை 1825 ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் கோப்பிக்கான ஏற்றுமதி வரியையும், 1827 ஆம் ஆண்டு கோப்பித் தோட்டங்களுக்கான காணி வரியையும் ஒழித்தார்.

இதேவேளை 1833 ஆம் ஆண்டு பிரித்தானியர் காலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. 1835 ஆம் ஆண்டு இலங்கைக் கோப்பி இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் கோப்பி உற்பத்திக்கான சாதகமான சூழல் தோன்றியது. இதன் விளைவாக 1834 ஆம் ஆண்டு 49 ஏக்கராக இருந்த கோப்பி பயிர்ச்செய்கை 1840 ஆம் ஆண்டு 40,000 ஏக்கராக அதிகரித்தது.

அட்டவணை 1: கோப்பிச் செய்கைக்கான காணி விற்பணை

ஆண்டுஏக்கர்

1834

49
18373,661
183810,401
18393,579
184042,841
184278,685
184248,533
184358,336
184420,415
184519,062

அட்டவணை 2: கோப்பி பயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பு

ஆண்டுபரப்பு (ஏக்கர்)

1845

25,198
184750,071
184860,000
1871196,000
1878178,000
1881256,000

அட்டவணை 3: கேப்பிக்கால இந்தியத் தொழிலாளர் வருகை

ஆண்டுஎண்

1827

10,000
183012,000
184746,140
184832,172
184923,869
185039,422
186188,328
186742,779

ஆரம்பகாலத்தில், 1823–1897 வரை, தமிழகக் கிராமங்களில் இருந்து கால்நடையாகவே இராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த தொழிலாளர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் சிறு படகுகளில் தலைமன்னார் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டனர். தலைமன்னாரிலிருந்து அடர்ந்த காடுகளூடே மாத்தளை வரை கால்நடையாகவே பல நாட்கள் நடந்து வந்தனர். தமிழகக் கிராமங்களில் நிலவிய வறுமை, பஞ்சம், வறட்சி, கந்துவட்டி, வரிச்சுமை, சாதி ஒடுக்குமுறை என்பனவற்றால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை ஏழை விவசாயக் கூலிகளை பல்வேறு பசப்பு வார்த்தைகள் கூறியும், சிறுதொகை முற்பணமாகக் கொடுத்தும் ஏமாற்றி அழைத்துவந்த கங்காணியர் இடைநடுவிலும் வழிநெடுகிலும் புரிந்த வன்முறைகள் சொல்லில் அடங்காதவை.

தலைமன்னார் முதல் மலையகம் வரையான 400–500 மைல் கால்நடைப் பயணம் அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. காட்டாறுகளைக் கடக்க வேண்டும், காடு ‑ மலைகளைக் கடக்க வேண்டும், கொடிய வனவிலங்குகளுக்கும் பாம்புக் கடிக்கும் இலக்காக வேண்டும். பயணத்தின் வழிநெடுகிலும் பரவிய கொள்ளை நோய்கள், வாட்டிய பட்டினி மற்றும் கங்காணிகளின் வன்கொடுமைகள் ஆகிய அனைத்தையும் அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. தோட்டங்களுக்கு வரும் கூலித் தொழிலாளர்கள் கங்காணி முறை, துண்டு முறை போன்றவற்றால் காலம் பூராகவும் பராரியாக, கடனாளியாக, கொத்தடிமையாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இரக்கமற்ற வெள்ளை இனத் தோட்ட உரிமையாளர்களின் சாட்டையடிகளையும், பூட்ஸ் கால்களால் மிதிபடும் வன்முறையையும், மரணத்தை விளைவிக்கும் கொடிய தாக்குதல்களையும் எதிர்கொள்வது தொழிலாளர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது

அடிமை முறை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதன் எச்சங்களாக இன்றும் நீடித்து வரும் அரையடிமைத்தனமும், கட்டுண்ட தொழிலாளர் முறையும் இலங்கை – இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு மாறாத வரலாற்று வன்கொடுமையாகத் தொடர்வது பெரும் சோகமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தலைமுறை ரீதியான பதிவுகளின்படி, இலங்கையில் புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்ட பின்னரும்கூட, பயணக் கட்டணத்தைச் செலுத்த இயலாமையாலும் அல்லது அற்பமான ஊதியத்தைச் சேமிக்கும் நோக்கிலும் தொழிலாளர்கள் தலைமன்னார் முதல் கண்டி வரையிலான நீண்ட பாதையைக் கால்நடையாகவே கடந்ததாக அறியப்படுகிறது. தேயிலை உற்பத்தி செழித்தோங்கிய 1908 ஆம் ஆண்டில்கூட, ஒரு ஆணுக்கு 33 பென்ஸ் மற்றும் ஒரு பெண்ணுக்கு 25 பென்ஸ் என்பதே ஒரு நாளுக்கான அதிகபட்ச ஊதியமாக வழங்கப்பட்டது. இந்தச் சொற்ப ஊதியமும் அரிசிச் செலவிற்காகவும், கங்காணிகளிடம் பெற்ற கடனுக்காகவும் கழிக்கப்பட்டது. தொழிலாளர்களின் கைகளில் எவ்வித மீதமுமின்றிய நிலையில், அவர்கள் மீண்டும் வறுமைச் சுழலுக்குள்ளேயே தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் 1870 ஆம் ஆண்டளவில் இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் 70,000 தொழிலாளர்கள் கொலராவாலும், மலேரியாவாலும் மரணித்தனர். கோப்பிக் காலத்தின் அஸ்தமனம் மற்றும் தேயிலை யுகத்தின் மலர்ச்சிக்கிடையில் சுமார் 300,000 தொழிலாளர்கள் காணாமல் போனதாக அறியப்படுகிறது. இவர்கள் யார் என்றோ, என்னவானார்கள் என்றோ இன்றுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு இன்றைய இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆரம்பகால வரலாறு 1823-1867 வரை ஓர் இருண்ட யுகத்தில் நகர்ந்தது.



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்