அறிமுகம்
பிரதேசக் கூத்து மரபை நாம் வடபிரதேசக் கூத்து மரபு, வன்னிக் கூத்து மரபு, கிழக்குப் பிரதேசக் கூத்து மரபு, வடமேற்குப் பிரதேசக் கூத்து மரபு (மன்னார், சிலாபம்), மத்திய பிரதேசக் கூத்து மரபு என ஐந்து பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். இது புரிந்து கொள்வதற்கான ஒரு பிரிப்பே தவிர வேறொன்றுமில்லை. சிலர் இதனை வேறு விதமாகவும் பிரிப்பர். முதலில் பிரதேசக் கூத்து மரபின் சில தனித்துவங்களைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிப்போம்.
வட பிரதேசக் கூத்து மரபு
யாழ்ப்பாணத்தில் கூத்துகள் என ஆடப்படும் பிரதான கூத்துகள் இவை:
- தென்மோடிக் கூத்துகள்
- வடமோடிக் கூத்துகள்
- காத்தவராயன் கூத்து
- வசந்தன் கூத்து
- நாட்டுக் கூத்து
இந்தக் கூத்துகளில் யாழ்ப்பாண வடமோடிக் கூத்தும், தென்மோடிக் கூத்தும், காத்தவராயன் கூத்தும் அங்கு மிகவும் பிரசித்தமானவை. தென்மோடிக் கூத்து பண்டைய காலத்தில் ஆட்ட வகைகளைக் கொண்டிருந்ததாகவும், கிறிஸ்தவ வருகையின் பின்னர் ஆட்டத்தைக் கைவிட்டு பாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுவது அனைவரும் சொல்லிவரும் ஒரு கருத்தாகும்.
யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவக் கூத்தை ‘ஆடுதல்’ என்று சொல்லமாட்டார்கள்; ‘கூத்துப் பாடுதல்’ என்ற சொல்லிலேயே அவர்கள் அதனை அழைத்ததை நான் அங்கு அவதானித்திருக்கிறேன். இந்தக் கூத்து மரபு கரையோரப் பகுதிகளில் ஒரு காலத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்திருக்கின்றது. மிகப் புகழ் பெற்ற அண்ணாவி மரபொன்றும், அதற்குள் கிறிஸ்தவ அண்ணாவி மரபொன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றன. அதில் இடம்பெறும் பாடல்கள் தனித்துவமானவையாகும்.
யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்தில் ‘கல்வெட்டு’ என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு உள்ளது. அதில், பிறர் மீது கோபம் கொண்ட அரசன் தன் பெருமைகளை உச்சாடனமாகக் கூறிவந்து, திடீரென அதிலிருந்து பாட்டுக்கு மாறுகின்ற ஒரு பாடல் அமைப்புக் காணப்படுகிறது. இந்த அமைப்பின் சாயல் மட்டக்களப்பின் வடமோடிக் கூத்துகளில் இடம்பெறும் ‘கந்தார்த்தம்’ எனும் பாடல் வகையை ஒத்ததாகும். அங்கு விருத்தத்தைச் சொல்லி, அதனை முறித்துப் பாடலாகப் பாடுகின்ற அந்தப் பாடல் வகையை ‘கந்தார்த்தம்’ என்று அழைப்பார்கள். இந்த இரண்டு பாடல் வகைகளையும் இன்று வரை இந்தக் கூத்து மரபுகள் அப்படியே பேணி வைத்திருக்கின்றன. வடமோடிக் கூத்து யாழ்ப்பாணத்தில் இன்னும் ஆடல் மரபை விட்டுவிடவில்லை. இந்த ஆடல் மரபைப் பேணுகின்ற முக்கிய இடமாக வட்டுக்கோட்டை விளங்குகிறது.
வட்டுக்கோட்டை ஆட்டக்கூத்து மரபு
வட்டுக்கோட்டை கூத்து மரபு பற்றிய தில்லை நடேசனின் ஒரு நூல் முக்கியமானதாகும். அது பல தகவல்களை வழங்குவதோடு, குறிப்பாகக் கூத்துப் பற்றிய விரிவான தகவல்களையும் தருகிறது. வடமோடிக் கூத்தும் தென்மோடிக் கூத்தும் ஒரு காலத்தில் வட்டுக்கோட்டையில் பிரபலமாக இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது. தில்லை நடேசன் வட்டுக்கோட்டை அரங்க மரபு பற்றி எழுதிய நூலில் உள்ள தகவல்களின் படி, வட்டுக்கோட்டையில் வடமோடி, தென்மோடி, விலாசக் கூத்துகள் சமதரையான வட்டக் களரியில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன; உயர்த்தப்பட்ட மேடை கூத்துக்கு வழக்கில் இருந்ததில்லை என அவர் குறிப்பிடுகிறார். அங்கு ஆடப்பட்ட 10 தென்மோடி கூத்துகள் பற்றியும், 34 வடமோடிக் கூத்துகள் பற்றியும், 11 விலாசக் கூத்துகள் பற்றியும் தகவல் வழங்கும் அவர், மொத்தமாக 56 கூத்துகள் அங்கு ஆடப்பட்டதாகக் கண்டறிந்துள்ளார். இந்தக் கூத்துகளின் கருப்பொருளை அவர் இதிகாசக் கதைகள், வடநாட்டுப் புராணக் கதைகள், தமிழ்நாட்டுக் கதைகள், ஈழத்துக் கதைகள் – அதாவது ஈழ வரலாற்றுக் கதைகள், கற்பனைக் கதைகள், சமகாலக் கதைகள் என வகைப்படுத்துகின்றார். ஈழத்துக் கதைகள் பற்றிக் கூறும் இடத்தில் அவர் நான்கு கூத்துகளைக் குறிப்பிடுகின்றார்.

- வெடியரசன் நாடகம்
- மீகாமன் நாடகம்
- பூதத்தம்பி நாடகம்
- கண்டி அரசன் நாடகம்
இந்தக் கதைகளில் முக்குவர் குல வரலாறுகள் பதியப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாண வரலாற்றில் எழுதப்படாத ஒரு வரலாற்றுப் பக்கமாக இது அமைந்துள்ளது. அவர் குறிப்பிடும் தென்மோடிக் கூத்துகளில் அலங்காரரூபன் நாடகம், நளச் சக்கரவர்த்தி நாடகம் என்பனவும், வடமோடி நாடகங்களில் தர்மபுத்திரர் நாடகம், இராம நாடகம், வள்ளியம்மன் நாடகம், சிறுத்தொண்ட நாடகம், புலந்திரன் நாடகம், பவளக்கொடி நாடகம், வீரகுமாரன் நாடகம், ஆரவல்லி நாடகம் போன்றனவும் மட்டக்களப்பிலும் அதே பெயர்களில் ஆடப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரண்டு கூத்துப் பிரதிகளும் ஒன்றேதானா என்பது இன்னும் இணைத்து ஆராயப்படவில்லை. வட்டுக்கோட்டை கூத்து மரபை விளக்க வந்த அவர், அங்கு முன்பிருந்த ஏழு வகையான கூத்து மரபுகளையும் குறிப்பிடுகிறார்.
- ஒட்டன் துள்ளல்
- தென்மோடி
- வடமோடி
- விலாசம்
- நொண்டி நாடகம்
- காத்தவராயன் கூத்து
- தாளலய மோடி
ஒட்டன் துள்ளல் கேரளாவின் ஒரு நாடக வடிவமாகும். அதனை, திருத்தமுறாத அடிநிலை மக்கள் ஆடும் கதகளி என்று அழைப்பார்கள். இது ஒருவரே ஆடும் கூத்து. பாடகர் பின்னணியில் பாட, ஆடுபவர் வாயை அசைத்துக்கொண்டோ அல்லது அபிநயம் செய்துகொண்டோ ஆடுவார்.
அங்கு ஆடப்பட்ட நொண்டி நாடகத்தை அவர் தனியாகக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் நொண்டி நாடகம் என ஒரு இலக்கிய வடிவம் உள்ளது; அங்கு அது ஒருவரே கதை கூறி நடிக்கும் நாடகமாகும். ஆனால் ஈழத்தில் அது பலர் பாத்திரம் தாங்கி ஆடும் நாடகமாக இருக்கிறது. மட்டக்களப்பிலும் மன்னாரிலும் கூட இந்த நொண்டி நாடகம் காணப்படுகிறது.
இந்த மூன்று பிரதிகளும் ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டியவை. அதைப் பற்றி ஜான்சன் ராஜ்குமார் ஓரளவு ஆராய்ந்து இருக்கிறார். மூன்று பிரதிகளும் வெவ்வேறு விதமானவையாகும். ஒரு மையக்கரு பல்வேறு வடிவங்களை எடுப்பது நாட்டார் இயலில் சர்வசாதாரணமான ஒன்று. இதனை நாம் ‘இடம்பெயர்ந்த ஐதீகம்’ என்று அழைக்கலாம்.
கூத்து எழுதியோர்
தில்லை நடேசன், வட்டுக்கோட்டையில் தென்மோடி மற்றும் வடமோடிக் கூத்து நிகழ்வதற்கு காரணமாக இருந்தவர் கணபதி ஐயர் எனக் குறிப்பிடுகிறார். வட்டுக்கோட்டையில் உள்ள சங்கரத்தை பத்திரகாளி கோயிலில் நிகழ்த்தப்பட்ட ஒட்டன் துள்ளலைக் கண்ட கணபதி ஐயர், தனது உறவினரால் தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த பிரதியை எழுதி முடித்து, அங்குள்ள கலைஞர்களிடம் வழங்கினார். கணபதி ஐயருக்கு இசைப் பயிற்சியும் தாளப் பயிற்சியும் இருந்ததாகவும், ஆனால் அந்தப் பயிற்சிகளை ஐயர் குலம் சாராத ஒரே ஒரு அண்ணாவியாரே அவருக்குப் பழக்கினார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கோயிலில் சேவை செய்த சாதியினரான தவசிகள் அல்லது பண்டாரிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இதனைப் பழக்கி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார். கணபதி ஐயர் எழுதிய வாளவீமன் நாடகமே வட்டுக்கோட்டையில் ஆடப்பட்ட முதல் நாடகமாகும் என்பது அவரது கூற்றாகும்.
விலாசக் கூத்துகள்
வட்டுக்கோட்டையில் ஆடப்பட்ட விலாசக் கூத்துகள் பற்றி அவர் ஏற்கனவே ஒரு விவரம் வழங்கியிருந்தாலும், இந்த விலாசம் உருவான காலத்தை அவர் 18 ஆம் நூற்றாண்டாகக் குறிப்பிடுகிறார். பிறநாட்டார் கொண்டுவந்த கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்திருந்த மக்கள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பிய காலகட்டத்தில், அதாவது 1814 ஆம் ஆண்டளவில், கிட்டத்தட்ட 350 இந்துக் கோயில்கள் தோன்றியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார். அக்காலத்தில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றதுடன், அதனை ஒட்டி கோயில்கள் கலையரங்குகளாக மாறின என்பதும் அவர் சுட்டிக்காட்டும் முக்கியமான தகவலாகும். இந்துக் கோயில்களில்தான் விலாசக் கூத்துகள் நடத்தப்பட்டன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஈழத்தின் முதல் விலாசக் கூத்தை எழுதியவர் ஆறுமுக நாவலரின் தந்தையரான கந்தப்ப பிள்ளை (1766–1842) எனவும், இவரால் எழுதப்பட்ட முதல் விலாசம் ‘இரத்தினவல்லி விலாசம்’ எனவும் அவர் கூறுகிறார். இது ஏற்கனவே நாடக உலகில் அறியப்பட்ட செய்தியாகும். இதற்கு முன்னர் இவர் ‘இராம விலாசம்’ எழுதியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
‘விலாசம்’ என்று ஒரு கட்டுரையை எழுதிய நான், அதில் கூத்துகள் எவ்வாறு விலாசங்களாக மாற்றப்பட்டன என்பதையும், கூத்துகள் விலாசங்களாக ஆன முறையையும் விரிவாக விளக்கியுள்ளேன். ஆரம்பத்தில் விலாசங்கள் கூத்து மெட்டிலேயே எழுந்தன; ஆனால் பின்னர் கூத்து ஆட்டத்தை விட்டுவிட்டன என்பதே என் கட்டுரையின் சாராம்சமாகும்.
இது தொடர்பாக அவர் ஒரு சுவாரசியமான கதையையும் கூறுகிறார். ஆறுமுக நாவலரின் தந்தையான கந்தப்பபிள்ளை, ஊர் மக்கள் ஆடுவதற்காக ‘இரத்தினவல்லி விலாசம்’ எழுதிய சமயத்தில் அவர் இறந்துவிட்டதாகவும், பாதியில் நிறுத்தப்பட்ட அந்தப் பிரதியை ஆறுமுக நாவலரே பூர்த்தி செய்ததாகவும், ‘பாவலர் சரித்திர தீபகம்’ குறிப்பிடுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் வட்டுக்கோட்டையில் ஒரு கதை நிலவுகிறது; அதனையும் அவர் குறிப்பிடுகிறார். அந்தக் கதையின்படி, ஆறுமுக நாவலர் தனது தந்தையை கூத்து எழுத வேண்டாம் என்று தடுத்ததாகவும், இதனால் மனமுடைந்த கந்தப்பபிள்ளை தனது நண்பரான அராலி முத்துக்குமார் எனும் புலவரிடம் அதனை எழுதி முடிக்கும்படி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அந்தப் பிரதியை முடித்து, பின்னர் மற்றொரு அண்ணாவியாரிடம் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விலாசக் கூத்தைப் பழக்கியவர் பருத்தித்துறையைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை அண்ணாவியார் (1810–1890) எனவும், இவரது சீடரான சின்னக்குட்டி அண்ணாவி (1820–1910) வட்டுக்கோட்டையின் முதல் விலாசக் கூத்து அண்ணாவியாக அறியப்படுகிறார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நிகழ்த்தப்படும் முறை
கூத்து நிகழ்த்தப்படும் முறையினை அவர் இவ்வாறு வரிசைப்படுத்துகிறார்.
- களரியடி அல்லது பிள்ளையார் அடி
- சபைக்கட்டு அல்லது காப்பு விருத்தம்
- கட்டியக்காரன் வரவு
- அரசன் கொலு தேசிய விசாரணை
- நாட்டிய மங்கை ஆடல்
- நாடக முடிவு
- மங்கலப் பாடல்
கூத்துப் பாடிய புலவர்கள்
வட்டுக்கோட்டையில் ஆடப்பட்ட கூத்துகள் மற்றும் அவற்றை எழுதிய புலவர்கள் பற்றிக் கூறும் போது, அவர் 13 புலவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்கள் 1790 தொடக்கம் 1932 வரை வாழ்ந்தவர்கள். இந்தப் புலவர்கள் இணுவில், மானிப்பாய், அராலி, நல்லூர், காரைநகர், வட்டுக்கோட்டை, நவாலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இதனைப் பார்க்கும் பொழுது, பல்வேறுபட்ட சமூகத்தின் மேல்நிலையினராகக் கருதப்பட்ட சாதிகளிலிருந்த படித்தவர்கள் இந்தக் கூத்துகளை எழுத, அதை வட்டுக்கோட்டை கலைஞர்கள் ஆடியிருப்பதாகத் தெரிகிறது.
தாளக்கட்டுகள்
தாளக்கட்டுகளையும் அவர்,
- ஆண்களுக்கான தாளக்கட்டுகள்
- பெண்களுக்கான தாளக்கட்டுகள்
- வீரர்களுக்கான தாளக்கட்டுகள்
என்று மூன்றாகப் பிரிக்கின்றார்.
சில தாளக்கட்டுகளையும் அவர் தந்திருக்கின்றார். ஒற்றைக்கண்ணி, இரட்டைக்கண்ணி, கிறுக்கி, பாஞ்சால பட்டயம், எட்டுப் போடுதல், நாலடி என்பன பற்றிக் கூறுகின்றார்.
வேறு ஆட்டங்களைப் பற்றி கூறும் பொழுது, அவர் பொடி அடி, எட்டடி, அரைவட்டம், துள்ளல், சீரணி, சரிவட்டம், குலுக்கி ஆட்டம், மாறி ஆடல், அரை வட்டம் போன்ற ஆட்டக் கோலங்களைப் பற்றிக் கூறுகிறார். சம்பவங்களுக்கும் ஆட்டத்திற்குமிடையேயுள்ள தொடர்பையும் விளக்குகிறார்.
பா வகைகள்
அதில் பாவிக்கப்படுகின்ற பா வகைகளைப் பற்றிக் கூறும் பொழுது, ஆசிரியப்பா, வெண்பா, கலி வெண்பா, கலித்துறை, கொச்சகம், இன்னிசை, தாழிசை, உலா, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், தாலாட்டு, ஒப்பாரி, அம்பா பாட்டு, கப்பல் பாட்டு, சிந்து, பதம், தரு என்று குறிப்பிடுவதுடன், தருவின் பல்வேறு வகைகளையும் கூறுகிறார். பந்தாட்டத் தரு என்றும் ஒரு தரு வருகிறது. இந்த ஆட்டக்கோலங்களும் தரு வகைகளும் மட்டக்களப்பிலே அப்படியே உள்ளன என்பது ஒரு சுவையான விஷயம். ஆகவே, இந்தத் தமிழர் கூத்து மரபை அறிய வேண்டுமாயின் மட்டக்களப்பு வடமோடி, தென்மோடிக் கூத்துகளையும் வட்டுக்கோட்டையில் ஆடப்பட்ட வடமோடிக் கூத்துகளையும் ஒப்பிடுதல் பயனுள்ளதாகும். வட்டுக்கோட்டையில் அந்த மரபு இப்போது மிகவும் அருகிவிட்டது. மட்டக்களப்பிலும் அருகிவிட்டாலும், சில கிராமங்களில் அது இன்னும் ஆடப்படுகிறது; முக்கியமாக கன்னன்குடாவில் அதை இன்னும் விட்டுவிடவில்லை.
தில்லை நடேசன் அந்த நூலில் வட்டுக்கோட்டையில் கூத்துப் பழகுகின்ற முறையை விவரிப்பது முக்கியமானதாகும். அதாவது,
- அண்ணாவிமார் கூடுவது
- பெரியவர்கள் உதவியுடன் ஒரு கூத்தைத் தெரிவது
- பாத்திரம் கொடுப்பது
- தினக்கூத்து
- கிழமைக் கூத்து
- சலங்கை அணிதல்
- வெள்ளுடுப்பு நிலை
- அரங்கேற்றம்
என அவர் அவற்றை விவரிக்கிறார். இது அப்படியே மட்டக்களப்புக் கூத்துகள் அந்தக் காலத்தில் பழகப்பட்ட தொடர் செயற்பாடுகளுடன் பொருந்தி வருகிறது. இரண்டு சுவையான விஷயங்களை அவர் கூறுகிறார்: ஒன்று, அந்தக் கூத்துகள் அந்த ஊர் சமூகத்தால் மட்டுமே ஆடப்பட்டது; இரண்டு, குடி முறைகளுக்கும் கூத்துக்குமிடையிலான உறவு.
குடி முறையும் கூத்தும்
அந்தச் சமூகத்தில் ஒரு குடி வம்ச வழி இருந்தது. கூத்தின் பாத்திரங்களை இன்ன குடியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றொரு கட்டுப்பாடும் இருந்தது என்று நடேசன் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். உதாரணமாக, சிவலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் தருமருக்கும் அனுமாருக்கும் ஆடலாம். விநாயகர் வம்சம், அதாவது பட்டங்கட்டி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் பீமன், கீசகன், குருக்கேத்திரன் போன்ற பாத்திரங்களுக்கு ஆடலாம். மடையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் அரசிகளுக்கு ஆடலாம். முத்தர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் வேடன், சிவன், விஷ்ணு போன்ற பாத்திரங்களைத் தாங்கலாம். தந்தையர் பகுதி துரியோதனன், நகுலன் ஆகிய பாத்திரங்களைத் தாங்கலாம். அனுமர் – முருகன் வம்சம் துச்சாதனன், கர்ணன் ஆகிய பாத்திரங்களைத் தாங்கலாம்; துரோபதி, பீஷ்மர் போன்ற பாத்திரங்களைத் தாங்கலாம். விநாயகர் வம்சம் சகுனி பாத்திரத்தைத் தாங்கலாம். மாதாஜி வம்சம் விதுரர் பாத்திரம் தாங்கலாம். பிற்காலத்தில் அதிலே பல மாற்றங்கள் நிகழ்ந்தன போலத் தெரிகின்றது.
இது ஒரு சுவையான அம்சமாகும். ஏனென்றால் சமூக அமைப்புக்கும், முக்கியமாக குடி வம்சத்துக்கும், கூத்துக்கும் இடையே இருந்த உறவை இது காட்டுகிறது. ஒருவகையில் சமூக அமைப்பைக் கட்டிகாக்க அல்லது வலியுறுத்தும் ஒரு வடிவமாக வட்டுக்கோட்டையில் கூத்து இருந்திருக்கிறது போலத் தெரிகிறது.
பின்னாளில், வட்டுக்கோட்டையிலே பலர் தோன்றி அந்தக் கூத்தை வளர்த்துள்ளனர். அத்தகைய 41 அண்ணாவிமாரைப் பற்றி அவர் விவரமாகக் கூறுகிறார். இதில் சிலரை நான் அறிவேன். பிற்காலத்தில் அதைக் கட்டிகாத்த முருகவேள், கந்தையா, நாகப்பூ போன்றவர்களை நான் நன்கு அறிவேன். அங்கே பிறந்த நாகமுத்து தணிகாசலம் பிள்ளை, 1960களில் பேராசிரியர் வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தயாரித்த கூத்தான ‘கர்ணன் போரில்’ அர்ச்சுனனுக்கு ஆடியவர். நான் கர்ணனுக்கு ஆடினேன். இருவரும் போர் புரியும் காட்சி அதிலே சிலாகித்துக் கூறப்பட்டது.
கூத்துகளை எழுதியவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஐயர்களாகவும் முதலிமார்களாகவும் இருந்திருக்கிறார்கள். கூத்துகள் பற்றிக் கூறுகின்ற பொழுது, தில்லை நடேசன் மிக சுவையான ஒரு தகவலைத் தருகிறார். பஞ்சமருக்கு, அதாவது சாதியில் குறைந்தவர்களாகக் கருதப்பட்டோருக்கு, கூத்தாட அனுமதி வழங்கப்பட்டபோது, தென்மோடி வடிவமே ஆட அனுமதிக்கப்பட்டது. வடமோடி அல்லது விலாசக் கூத்துகள் அவர்களுக்கு ஆட அனுமதிக்கப்படவில்லை. இக்கட்டுப்பாடுகளை உடைத்து பஞ்சமர்களுக்கு கூத்துப் பழக்க வைத்ததில் வட்டுக்கோட்டை அண்ணாவிமார்களுக்கு மிகுந்த பங்களிப்பு உண்டு என்கிறார்.
இந்த இறுக்கமான பாரம்பரியத்தைக் கொண்ட வட்டுக்கோட்டை கூத்து மரபு, பின்னாளில் 1961 ஆம் ஆண்டில் ‘வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்துக் குழு’ என்ற பெயரில் கூத்துக்குழு அமைப்பாக மாறியது. இதனை முன்நின்று செய்யும் பணியில் முருகவேள் முன்னிலை வகித்தார். இந்தக் கூத்து மரபு அங்கே இப்போது அருகிக் காணப்படுகிறது. சமூகத்தை இணைக்கும் ஒரு வலிமையான சாதனமாகவும், மகிழ்விக்கும் மிக முக்கிய சாதனமாகவும் கூத்து இருந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இராமநாதன் நுண்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரதநாட்டியம் ஈழத்தமிழரின் உயர் ஆடற் கலையாக மேல் எழுந்தது. இந்த மேலெழுகை, கூத்து ஆடலைப் புறந்தள்ளும் போக்கையோ அல்லது கூத்து ஆட்டங்களை கீழ்நோக்கிப் பார்க்கும் போக்கையோ யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தி விட்டது எனலாம். இன்றும் அந்த நிலையே அங்கு நிலவுகின்றது. பேராசிரியர் வித்தியானந்தன் 1980களின் ஆரம்பப் பகுதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக இருந்த காலத்தில், இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் பரத ஆடல் பழகும் மாணவருக்கு ஈழத் தமிழர் கூத்து ஆடலை அறிமுகமாக்க வேண்டும் என எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தமை இங்கு ஞாபகம் வருகின்றது. இன்றும் அதே நிலைதான்.
அடுத்து, தென்மோடிக் கூத்து மரபு யாழ்ப்பாணத்தில் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்போம். ஒரு கூத்து ஆட்ட மரபை இழந்த கதை அது.



