சமூகவியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகளில் சடங்குகள் என்பவை வெறும் கலாசார நிகழ்வுகள் மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், அதிகாரப் படிநிலைகள் மற்றும் உறவுமுறை அமைப்புகளைக் கட்டமைக்கும் வலுவான கருவிகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் உயிரியல் மாற்றங்களைச் சமூக அந்தஸ்து மாற்றங்களாக மாற்றியமைக்கும் பூப்புச் சடங்கும், இரு வேறு சமூகக் குழுக்களை இணைக்கும் ஒருமைப்பாட்டு நிகழ்வாக அமையும் திருமணச் சடங்கும் மானிடவியல் ஆய்வாளர்களுக்கு மிகச்சிறந்த ஆய்வுப் புலங்களாக அமைகின்றன. இவை ஒரு தனிமனிதனைப் பழைய நிலையிலிருந்து பிரித்து, ஓர் இடைநிலைக் காலத்திற்குள் தள்ளி, இறுதியாக ஒரு புதிய சமூகப் பொறுப்புடன் மீண்டும் சமூகத்தில் இணைக்கின்றன. இத்தன்மையானது இவ் இரு சடங்கின் முக்கிய கூறாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பூப்புச் சடங்கு மற்றும் திருமணச் சடங்குகள் பற்றிய கோட்பாட்டு ரீதியான பார்வை இங்கு முக்கியமாகின்றது. அந்த வகையில் சடங்குகள் பற்றி ஆய்ந்த பல கோட்பாட்டாளர்களின் கோட்பாட்டு அடிப்படையில் சடங்குகள் எவ்வாறு ஆராயப்பட்டுள்ளன என்பதனை நோக்குவோமாயின், ‘வான் கென்னப்’ மற்றும் ‘விக்டர் டர்னர்’ ஆகியோரின் கோட்பாட்டு அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது. அதில் முதலாவதாக சடங்குகளை ஆய்வு செய்வதற்கான மிக முக்கியமான கோட்பாட்டை ஆர்னால்ட் வான் கென்னப் (Arnold van Gennep) தனது ‘நிலைமாற்றச் சடங்குகள்’ (The Rites of Passage) என்ற நூலில் முன்வைத்தார். மனித வாழ்வின் பிறப்பு, பூப்பு, திருமணம், மற்றும் இறப்பு போன்ற நிலைகள் அனைத்தும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டுள்ளன என்று அவர் கண்டறிந்தார். இக்கோட்பாட்டின்படி, ஒவ்வொரு நிலை மாற்றமும் மூன்று படிநிலைகளைக் கடந்து செல்கின்றன என்று நிறுவினார்: பிரிதல் (Separation), இடைநிலை (Transition/ Liminality), மற்றும் மீண்டும் இணைதல் (Incorporation). இது அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. நிகழ்த்துதல் முறையில் வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை இதுவாகவே அமைந்திருப்பதனைக் காணலாம்.

பிரிதல் நிலையில், தனிநபர் தனது முந்தைய சமூக நிலையிலிருந்து குறியீட்டு ரீதியாக விலக்கப்படுகிறார். பூப்புச் சடங்கின் போது ஒரு சிறுமி தனிமைப்படுத்தப்படுவது இதற்குச் சரியான உதாரணமாகும். இடைநிலை என்பது ஒரு ‘நிழற் காலம்’. இதில் அந்த நபர் பழைய நிலையிலும் இல்லை, புதிய நிலையையும் அடையவில்லை. விக்டர் டர்னர் (Victor Turner) இந்த நிலையை மிக விரிவாக ஆய்வு செய்தார். ‘லிமினாலிட்டி’ நிலையில் இருக்கும் நபர்கள் சமூகத்தின் சாதாரண விதிகளிலிருந்து விலகி இருப்பார்கள்; அவர்களுக்குச் சொத்துகளோ, அந்தஸ்தோ அல்லது தனித்துவமான அடையாளங்களோ இருப்பதில்லை. இறுதியாக, இணைப்பு நிலையில், தனிநபர் புதிய உரிமைகள் மற்றும் கடமைகளுடன் சமூகத்தால் மீண்டும் வரவேற்கப்படுகிறார். திருமணச் சடங்கின் முடிவில் தாலி கட்டப்பட்டு, பெண் கணவன் வீட்டு உறவுகளுடன் இணைக்கப்படுவது இந்த இறுதி நிலையை நிறைவு செய்கிறது. டர்னரின் குறியீட்டு மானிடவியல் அணுகுமுறை, சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்குப் பின்னால் உள்ள பன்மைத்துவமான அவசியங்கள் பற்றியும் வெளிப்படுத்துகிறது. ஒரு சடங்கின் ஒரு பொருள் என்பது ஒரே நேரத்தில் பல கருத்துகளைச் சுருக்கி வழங்கக்கூடியது (Condensation). உதாரணமாக, பூப்புச் சடங்கில் பயன்படுத்தப்படும் ‘மஞ்சள்’ தூய்மையைக் குறிக்கும் ஒரு குறியீடாகவும், அதே வேளையில் கிருமிநாசினியாகவும், திருமணத் தகுதியை அறிவிக்கும் சமிக்ஞையாகவும் செயற்படுகிறது. டர்னர் இப் பொருள்களின் அர்த்தங்களை இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறார்: ஒன்று சித்தாந்த ரீதியானது (Ideological Pole), இது சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் மதிப்புகளைப் பேசுகிறது. மற்றொன்று உணர்வு ரீதியான துருவம் (Sensory Pole), இது மக்களின் விருப்பங்கள் மற்றும் இயற்கையான உணர்வுகளைத் தூண்டுகிறது.
மேலும் எமில் துர்கைமினுடைய நோக்குநிலையைப் பார்க்கும் போது அவர் சடங்குகளைச் சமூகத்தின் ‘கூட்டு மனசாட்சியை’ (Collective Conscience) வலுப்படுத்தும் உத்தியாகக் காண்கிறார். தனிநபர்கள் தங்களுக்குள் இருக்கும் சுயநல உணர்வுகளைக் கடந்து, சமூகத்தின் பொதுவான இலக்குகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளச் சடங்குகள் உதவுகின்றன. துர்கைமின் கருத்துப்படி, மதம் அல்லது சடங்கு என்பது உண்மையில் ‘சமூகமே தன்னைத் தான் வணங்கிக் கொள்ளும் முறை’ ஆகும். பூப்பு மற்றும் திருமணச் சடங்குகளின் போது மக்கள் ஒன்று கூடுவதைத் துர்கைம் ‘கூட்டு உற்சாகம்’ (Collective Effervescence) என்று குறிப்பிடுகிறார். இந்த ஒன்றுகூடலின் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு தனிநபர்களிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, சமூகத்தின் விதிகளை அவர்கள் புனிதமானவையாக ஏற்கச் செய்கிறது. துர்கைம் உலகைப் புனிதமானவை (Sacred) மற்றும் லௌகீகமானவை (Profane) என்று பிரிக்கிறார். பூப்புச் சடங்கில் பயன்படுத்தப்படும் ‘கும்பம்’, ‘அறுகம்புல்’, மற்றும் ‘மஞ்சள் நீர்’ போன்றவை சாதாரண நிலையிலிருந்து மாற்றப்பட்டுப் புனிதமான பொருட்களாக உருமாற்றம் பெறுகின்றன. இதேபோல், திருமணச் சடங்கில் ‘தாலி’ என்பது வெறும் உலோகப் பொருள் அல்ல அது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும், குடும்ப அமைப்பின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் புனிதச் சின்னமாக மாறுகிறது. இந்தச் சடங்குகள் இயந்திரமயமான ஒருமைப்பாட்டை (Mechanical Solidarity) வளர்க்கின்றன, அங்கு மக்கள் பகிரப்பட்ட நம்பிக்கைகள் மூலம் பிணைக்கப்படுகிறார்கள் என்பது துர்கைமின் முக்கிய கருத்தாகும்.
அத்தோடு லெவிஸ்ட்ராஸின் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கும் போது, இவர் திருமணத்தைச் சமூகங்களுக்கு இடையிலான ஒரு ‘பரிமாற்ற’ நிகழ்வாகக் கருதினார். அவரது உறவுமுறை உடன்படிக்கைக் கோட்பாட்டின் (Alliance Theory) படி, திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் அல்லது வம்சங்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தமாகும். இதற்கான அடிப்படைத் தூண்டுதல் தடுக்கப்பட்ட உறவுமுறை (Incest Taboo) ஆகும். ஒரு குழு தனது சொந்தப் பெண்ணை, சகோதரி அல்லது மகள் இவர்களை தனது குடும்பத்திற்குள் மணமுடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம், அப்பெண்ணைப் பிற குழுக்களுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய ‘பெண்களின் பரிமாற்றம்’ சமூகங்களுக்கிடையே பரஸ்பரக் கடப்பாடுகளையும், உறவுப் பிணைப்புகளையும் உருவாக்குகிறது. இந்தியத் தமிழர் உறவுமுறை அமைப்பில், குறிப்பாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த மலையக மக்களிடத்திலும் இதே உறவுமுறைக் கட்டுப்பாடுகளே தொடர்வதையும் காணமுடிகின்றது. ஒருவன் தனது அத்தை மகளையோ அல்லது மாமன் மகளையோ மணப்பது ஒரு சுழற்சி முறையிலான பரிமாற்றத்தை (Generalized Exchange) உறுதி செய்கிறது. இது, இரத்த உறவை விட ‘சம்பந்தி முறை’ என்ற மதிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் இருவேறு பரம்பரைகள் தலைமுறை தலைமுறையாகத் தங்களுக்குள் பிணைப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இவ்வாறான கோட்பாடுகள் பற்றிய தெளிவு என்பது சடங்கின் நிகழ்த்துகையை பிரித்துக் கூறாக ஆராய்வதற்கு உதவுகின்றது.
பூப்புனித நீராட்டு விழாச் சடங்கு
அந்த வகையில் மலையகத்தை நோக்கும் போது, ஒரு பெண் குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைவது ‘பூப்புனித நீராட்டு விழா’ ஆகும். இது ஒரு உயிரியல் மாற்றத்தை மட்டும் குறிக்காமல், அந்தப் பெண் சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் ஒரு புதிய அந்தஸ்தைப் பெறும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. இச்சடங்கு ‘வயசுக்கு வருதல்’, ‘பூப்படைதல்’, ‘மஞ்சள் நீராட்டு விழா’, ‘சமஞ்சித்தல் சடங்கு’ அல்லது ‘பெரிய மனுசியான சடங்கு’ எனப் பல்வேறு பெயர்களில் மலையகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிறது. இக்கட்டுரை, இச்சடங்கின் நிகழ்த்துகை, அதற்குப் பின்னால் உள்ள வரலாற்று அம்சம், மருத்துவ மற்றும் சடங்கு முறைகள் பற்றி ஆராய விழைகின்றது.

பொதுவாக தமிழர் பண்பாட்டில் பெண்மை மற்றும் பூப்படைதல் குறித்த செய்திகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. சங்ககாலத்தில் பெண்ணின் வளர்ச்சி நிலைகள் ஏழு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம் பெண். இதில் ‘மங்கை’ப் பருவம் (பத்து முதல் பதினாறு வயது வரை) என்பது ஒரு பெண் பூப்படைந்து, திருமணத்திற்குத் தகுதியான நிலையை அடைவதைக் குறிக்கிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ‘கற்பு’ மற்றும் ‘களவு’ மணங்கள் குறித்த செய்திகள் இருந்தாலும், திருமணச் சடங்குகள் சமூகத்தில் ‘பொய்யும் வழுவும்’ தோன்றிய பின்னர் பெரியோர்கள் வகுத்ததாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மற்றும் கோவலன் திருமணத்தின் போது, சுமங்கலிப் பெண்கள் முளைப்பாலிகை ஏந்தி, தானியங்களைத் தூவி வாழ்த்தியதாக வரும் செய்தி, தமிழர்களின் இச்சடங்குகள் மிகத் தொன்மையானவை என்பதைக் காட்டுகிறது. சங்ககாலத்தில் ‘சிலம்பு கழி நோன்பு’ என்ற ஒரு சடங்கு வழக்கத்தில் இருந்தது. இது திருமணம் ஆகாத பெண்கள் அணிந்திருந்த சிலம்பைக் கழற்றி வைக்கும் சடங்காகும். இது இன்றைய காலத்துப் பூப்புச் சடங்கினைப் போன்றே ஒரு புனிதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இது அந்தப் பெண் தனது குழந்தைப் பருவத்திலிருந்து, இல்லற வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டதை அடையாளப்படுத்தியது.
இதன் அடிப்படையில் ஒரு பெண் தனது முதல் மாதவிடாயை (Menarche) அடையும் போது, அது அவளது உடல் ரீதியான முதிர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பொதுவாக இந்தப் பருவம் 12 முதல் 14 வயதுக்குள் நிகழ்கிறது. இந்தப் பருவம் எய்தியவுடன், அந்தப் பெண் முதலில் தனது தாய் அல்லது வீட்டில் உள்ள நெருங்கிய பெண் உறவினர்களிடம் இச்செய்தியைத் தெரிவிக்கிறாள். பாரம்பரிய வழக்கப்படி, இந்தத் தருணத்தில் தந்தை மற்றும் சகோதரன் போன்ற நெருங்கிய ஆண் உறவினர்கள் பூப்படைந்த பெண்ணை நேரடியாகப் பார்ப்பதில்லை. சில சமூகங்களில், ஒரு வயது முதிர்ந்த பெண் அல்லது வண்ணாத்தி பெண் வரவழைக்கப்பட்டு, அவரே நிகழ்வை உறுதி செய்கிறார். அவரது உறுதிப்படுத்தலுக்குப் பின்னரே மற்ற உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சமகாலத்தில் தாய் உறுதிசெய்து அறிவிக்கும் வழமை அதிகமாகக் காணப்படுகின்றது.
பூப்படைந்த பெண்ணை முதல் சில நாட்கள் தனிமைப்படுத்துவது மலையகத்தின் தொன்மையான மரபாகும். இது ‘கன்னித் தீட்டு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தனிமைப்படுத்தல் என்பது அந்தப் பெண்ணை ஒதுக்கி வைப்பதற்காக அல்லாமல், அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் சோர்வைப் போக்கி, தேவையான ஓய்வை வழங்குவதற்காகவே திட்டமிடப்பட்டது. பூப்படைந்த பெண்ணிற்கெனத் தனிப்பட்ட தற்காலிக ஒதுக்கிடம் அமைப்பது கட்டாயமான ஒரு சடங்காகும். இதனைப் பெண்ணின் ‘தாய்மாமன்’ (Maternal Uncle) அமைப்பது மரபு. தமிழகத்தில் பச்சைக் கீற்று, தென்னை ஓலை, வேப்பிலை மற்றும் மா இலைகளைக் கொண்டு இந்தக் குடிசை அமைக்கப்படுகிறது. சில பகுதிகளில் இது ‘தடுக்கை’ அல்லது ‘தட்டி’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மலையகப் பகுதிகளில் வாழ்வு லயத்துடன் இணைந்திருப்பதால், இக்குடிசை அமைப்பு பெரும்பாலும் ஒரு லயத்து வீட்டின் ஓர் அறையிலோ அல்லது படுக்கையறையின் ஒரு பகுதியிலோ, சேலைகளை மறைப்புத் திரைகளாகப் பயன்படுத்தி அமைக்கப்படுகிறது.
அறிவித்தல் கிடைத்தவுடனே தாய்மாமன்மார் சில பொருட்களை வாங்கிக்கொண்டு வருவார்கள். அதாவது நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணை, மஞ்சள், உழுந்து, வெற்றிலை – பாக்கு, வாழைப்பழம் போன்றன முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வந்த மாமன்மார் வீட்டுக்கு வெளியில் குலையைச் சொருகுவார்கள். தங்கள் வீட்டில் பெண் வயதுக்கு வந்துவிட்டாள் என்பதால் அநாவசியமாக யாரும் வீட்டினுள் நுழையக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகின்றது. பின்னர் குடிசையமைப்பார்கள். மேற்குறிப்பிட்டது போல லயத்து வீட்டின் வசதிக்கு ஏற்ற வகையில் குடிசை அமைக்கப்படுகின்றது. பின்னர் பெண்ணை வீட்டின் வாசல் அல்லது குளியலறையில் (இது வசதிக்கு ஏற்ற வகையில் செய்யப்படும்) வைத்து மாமிமார் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் வண்ணான் கொண்டுவந்த சேலையை அணிவிப்பார்கள். பெண்ணைப் பதினாறு நாட்களுக்கு அந்தக் குடிசையில் வைத்திருப்பார்கள். அந்தப் பதினாறு நாட்கள் அவர்களைப் பெண்கள் மட்டுமே பார்க்க முடியும். எந்த ஆண்களும் பார்க்கக்கூடாது என்பது விதியாகும். இந்தப் பதினாறு நாட்களும் அப்பெண்ணுக்குச் செய்யப்படும் அனைத்தும் மிகக் கவனமாக நோக்கப்படுகின்றது. இரண்டாவது நாள் மாமா – மாமி போன பிறகு மாமன்மார் கொண்டுவந்த உழுந்தைக் கொண்டு களி கிண்டிக் கொடுப்பார்கள். முதலாவதாக முட்டையும் நல்லெண்ணையும் கொடுத்த பிறகுதான களி சாப்பிடக் கொடுப்பார்கள். இது முக்கியமான ஒரு மருத்துவக் குணமிக்க உணவு முறையாகக் கருதப்படுகின்றது. மூன்றாவது நாள் காலை சாப்பாடு சதாரணமாகக் கொடுக்கப்படும். ஆனால் அசைவம் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் களி என்பது இடைக்கிடையில் கொடுக்கப்படுகின்றது. பின்னர் சாதாரணமாக 16 ஆம் நாள் வரைக்கும் முட்டை மற்றும் நல்லெண்ணை முக்கியமாக வழங்கப்படுகின்றது. அத்தோடு பல்வேறு தின்பண்டங்களும் கொடுக்கப்படுகின்றது. இந்த 16 ஆம் நாளுக்குள் தாய்மாமன் முதலாவது சோறாக்கிப் போட்டதன் பிறகு மற்ற நெருக்கிய உறவுகளும் சோறாக்கிப் போடுவர்.
அடுத்ததாக 16 ஆம் நாள் வீட்டுக்கு அழைக்கும் சடங்கு. வண்ணான் இதில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றார். அவர் இன்றி இச்சடங்குகள் சாத்தியமாகாது எனவும் குறிப்பிடுகின்றனர். 16 ஆம் நாள் அவரை வரவழைத்து அவர் முன்னிற்க இச்சடங்கினை மேற்கொள்ளுகின்றனர். தண்ணீரால் நீராட்டி வெளியில் அப்பெண்ணை அமரவைத்திருப்பர் இந்நீராட்டில் மஞ்சள் என்பது கிருமிநாசினி மற்றும் மங்களத்தின் அடையாளம். சுமங்கலிப் பெண்கள் (மூன்று அல்லது ஐந்து பேர்) சேர்ந்து பூப்படைந்த பெண்ணை ஒரு முக்காலியில் அமரவைத்து நீராட்டுகின்றனர். ஒரு சல்லடையின் வழியாக மஞ்சள் கலந்த நீரை அந்தப் பெண்ணின் தலைக்கு மேல் ஊற்றுவார்கள். இது அவளது உடலில் உள்ள ‘அசுத்தங்களை’ நீக்கி, புனிதத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது. 16 ஆம் நாளுக்கு முதல் வண்ணான் அணிவித்த சேலையில் தான் இந்நீராட்டுச் சடங்கு இடம்பெற்றிருக்கும். ஆகையால், தற்போது அதனை மாற்றி, வண்ணான் கொண்டுவரும் மாத்து உடுப்பு என்று சொல்லப்படுகின்ற மாற்று உடையை அணிவிப்பர். பின்னர் பெண்ணை அவ்விடத்தில் அமரவைத்து விளக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், வட்டமாகச் சுட்டு எடுத்த சிறிய ரொட்டிகள், அரிசிச் சுண்டில் குத்திய வெற்றிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக பெண்ணைச் சுற்றி வைப்பர். ரொட்டிகளை பெண்ணின் தலை மற்றும் தோள், முழங்கால் போன்ற இடங்களில் வைத்துக் குலுக்கி விடுவார்கள். அனைத்தும் கீழே விழுந்தவுடன் மீண்டும் இன்னொரு பெண் அதனைச் செய்வார். இவ்வாறு ஐந்து அல்லது ஏழு பேர் செய்த பிறகு, அந்தப் பெண்ணிற்கு நலங்கு இடப்படுகிறது. மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் என்பன அவளது கன்னங்கள் மற்றும் கைகளில் பூசப்படுகின்றன. இது அவளது மேனி பொலிவு பெறுவதற்காகவும், மங்களகரமான வாழ்வின் தொடக்கத்தைக் குறிக்கவும் செய்யப்படுகிறது. இவற்றை வண்ணானும் செய்வார். இறுதியாக பால்கொடி எனும் கொடியை (பால்கொடி என்பது மலையக வேலிகளில் வளரும் ஒரு விதமான கொடி) வட்ட வடிவமாகச் செய்து, பெண்ணின் தலைவழியாகப் புகுத்தி, உடல் வழியாகக் கொண்டுவந்து, கால்பாதம் வரை கொண்டு வந்து தரையில் போட்டதும், அவள் அதனைத் தாண்டி வெளியேறிய பிறகு, அதனை எடுத்து பெண்ணின் தலையைச் சுற்றி வெளியில் வீசுவார்கள். பின்னர் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துவருவதற்கு முதல் விழாவின் நிறைவில், தீய கண்ணேறுகள் மற்றும் எதிர்மறை சக்திகளைப் போக்க ஆலாத்தி எடுக்கப்படுகிறது. சுண்ணாம்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரை ஒரு தட்டில் வைத்து, அந்தப் பெண்ணின் முன்னே மூன்று முறை சுற்றி வெளியே ஊற்றுவார்கள். இது ஒரு தற்காப்புச் சடங்காகக் கருதப்படுகிறது. அதன் பின்னரே வீட்டிற்குள் அழைத்து வருவார்கள் இவ்வாறு வீட்டுக்கு அழைத்தல் சடங்கு நிறைவு பெறுகின்றது.
அத்தோடு மற்றுமொரு முக்கிய அம்சம் சீர்வரிசை. சீர்வரிசை என்பது வெறும் பரிசுப் பொருட்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றிற்கும் ஓர் உள்ளார்ந்த குறியீட்டுப் பொருள் உண்டு. சீர்த்தட்டுகளின் எண்ணிக்கை எப்போதும் 11, 21, 51 போன்ற ஒற்றைப்படை எண்களிலேயே இருக்கும். இது வசதிக்கு ஏற்றவகையில் கொண்டுவரப்படுகின்றது. ‘பேண்ட்’ அல்லது தவில், நாதஸ்வரம் இசைக்கப்பட்டு மாமன் வீட்டிலிருந்து ஊர்வலமாக இச்சீர்வரிசை கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றது.
கென்னப் மற்றும் டர்னர் ஆகியோரின் கருத்துப்படி, பெண்ணைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திப் பிரித்தல், பின்னர் 16 நாட்கள் நிலைமாறும் தன்மை, 16 ஆம் நாள் செய்யப்படும் சடங்கினால் மீண்டும் சமூகத்தோடு இணைத்துக் கொள்ளும் தன்மை என குடிசை அமைத்தல் சடங்கை கோட்பாட்டு ரீதியில் நோக்கலாம். மேலும் இப்பூப்புச் சடங்கினூடாக சில முக்கிய அம்சங்களை விளங்கிக்கொள்வது அவசியமாகின்றது. சடங்கின் காரண – காரியத் தொடர்பு, சில பொருட்களின் பயன்பாடுகள் பற்றிய நம்பிக்கை, அதன் பொருள் மற்றும் காரணம் இவையனைத்தும் இணைந்ததுதான் சடங்கும் அதன் நிகழ்த்துகையும் ஆகும்.
இதனடிப்படையில், குடிசையமைத்தல்/ தனிமைப்படுத்தல் என்பதனை நோக்கும்போது, பூப்படைந்த பெண்ணிற்கெனத் தனிப்பட்ட தற்காலிக ஒதுக்கிடம் அமைப்பது கட்டாயமான ஒரு சடங்காகும். இது சில பகுதிகளில் ‘தடுக்கை’ அல்லது ‘தட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குடிசையமைத்தலையே மலையக மக்கள் பயன்படுத்துகின்றனர். இக்குடிசையின் முக்கியத்துவம் என்று நோக்கும் போது, பெண்ணுக்கான இயற்கை அரணாக பச்சைக்கீற்று மற்றும் வேப்பிலை ஆகியவை கிருமிநாசினிகளாகச் செயற்படுகின்றன. அத்தோடு மற்றவர்களின் குறுக்கீடு இன்றி பெண் முழுமையான ஓய்வு எடுக்க இது உதவுகிறது. மேலும் தீய சக்திகளிடமிருந்து காக்க வேப்பிலை மற்றும் இரும்புப் பொருட்கள் (கத்தி அல்லது கதிரருவாள்) குடிசையில் வைக்கப்படுகின்றன. இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அந்தப் பெண் பூஜை அறைக்கோ அல்லது சமையலறைக்கோ செல்ல அனுமதி இல்லை. மேலும், செடிகள் அல்லது சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களைத் தொடுவது தவிர்க்கப்படுகிறது. ஏனெனில் அவளது ‘தீட்டு’ அவற்றை வாடச் செய்யும் அல்லது கெட்டுப்போகச் செய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
திருமணச் சடங்கு
மலையக மக்களின் திருமண முறைகள் என்பவை வெறும் சடங்குகளின் தொகுப்பு மட்டுமல்ல, அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகாலப் பண்பாட்டுப் பரிணாமத்தின் சாட்சியங்களாகும். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து புதியதொரு இல்லறத்தைத் தொடங்கும் நிகழ்வானது, சமூக அங்கீகாரம், ஆன்மிக ஆசி மற்றும் குடும்பங்களின் பிணைப்பு எனப் பல அடுக்குகளைக் கொண்டதாக அமைகின்றது. மலையக திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் ஓர் ஆழமான உட்பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. தமிழ் வளர்த்த சங்ககாலம் தொடங்கி இன்றுவரை நிலவி வரும் இந்தச் சடங்குகள், காலமாற்றத்திற்கு ஏற்பவும் இடம்பெயர்ந்து புதிய வாழ்வியல் அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொண்டாலும், அவற்றின் அடிப்படை விழுமியங்கள் மாறாமல் உள்ளன. திருமணம் என்ற சொல் ‘திரு’ மற்றும் ‘மணம்’ என்ற இரு சொற்களின் சேர்க்கையாகும். ‘திரு’ என்பது மேன்மையையும் தெய்வீகத் தன்மையையும் குறிக்கின்றது. ‘மணம்’ என்பது இணைதலைக் குறிக்கின்றது. இது இரு இதயங்களின் இணைவாகவும், சமுதாயத்தில் ஒரு புதிய குடும்பத்தின் உருவாக்கமாகவும் கருதப்படுகிறது. பொதுவாக மலையகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் திருமண மரபுகள், ‘இந்து மரபுகள்’ என அடையாளப்படுத்தப்பட்ட வேதங்கள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், மலையகத்தின் ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கெனத் தனித்துவமான மரபுகளையும் பின்பற்றுகின்றன. திருமணமானது சமூகத்தில் ஏனையோருக்கும் இச்சம்பவத்தைத் தெரிவிப்பதற்கான ஓர் ஊடகமாகவும் செயற்படுகின்றது.

திருமணத்திற்கு முந்தைய ஆயத்தச் சடங்குகள் என்று நோக்கும் போது, மலையகத்தின் திருமண நிகழ்வு என்பது மணநாளோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டமிடலையும் முன்னோடிச் சடங்குகளையும் கொண்டது. இந்தப் பிரிவில் ஜாதகம் பார்த்தல் முதல் பந்தக்கால் நடுவது வரையிலான பல்வேறு நிலைகளை திருமணத்திற்கு முந்தைய சடங்குகளாக நோக்கலாம். முதலில் இரு குடும்பத்தாருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, ஜாதகப் பொருத்தங்கள் ஆராயப்படுகின்றன. நட்சத்திரப் பொருத்தம் என்பது மணமக்களின் குணநலன்கள், ஆரோக்கியம் மற்றும் எதிர்கால ஒற்றுமையை உறுதி செய்யும் ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது. இது மணமக்களின் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான ஒத்திசைவைக் கண்டறியும் ஒரு பாரம்பரியக் கருவியாகும். சில சமூகங்களில், குலதெய்வக் கோயிலில் பூப்போட்டுப் பார்த்தல் அல்லது பல்லி சொல்லும் சகுனம் பார்த்தல் போன்ற நம்பிக்கைகளும் நிலவுகின்றன. காதல் திருமணத்தில் பொருத்தமில்லாமல் இருந்தால் அதற்கு தோசம் கழித்து திருமணம் செய்யும் வழக்கமும் காணப்படுகின்றது. அது பற்றித் தனியாக ஒரு கட்டுரையில் நோக்குவோம்.
ஜாதகம் பொருந்திய பிறகு, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் வீட்டிற்குச் சென்று பெண்ணைப் பார்க்கும் நிகழ்வு நடைபெறுகிறது. பெண்ணைப் பிடித்துவிட்டால், இரு வீட்டாரும் கூடித் திருமணத்தை உறுதி செய்யும் ‘நிச்சயதார்த்தம்’ இடம்பெறுகின்றது. இந்நிச்சயதார்த்தம், பெரும்பாலும் மலையகத்தில் விமரிசையாக இடம்பெறுவது குறைவு என்றாலும், இரு வீட்டாரும் இணைந்து பெண் அல்லது மாப்பிள்ளை வீட்டிலேயே நிச்சயதார்த்தச் சடங்கினைச் செய்துகொள்வார்கள். நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து, வீட்டின் கடவுள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் அனைவரும் அமர்ந்து நிச்சயத் தாம்பூலத்தில் பொருட்கள் அனைத்தையும் சரி பார்ப்பார்கள். குறையும் போது வாதவிவாதம் இருக்கும். சிலவேளைகளில் அது சண்டையிலும் முடியக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு அந்த இடமே கலகலப்பாக இருக்கும். பின்னர் கடவுளுக்கு சாம்பிராணி மற்றும் கற்பூரம் எரித்து, அனைத்திற்கும் தாம்பூலம் காட்டி, நிச்சயிக்கப்பட்ட திகதியை குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திகதியைக் குறித்துக் கொடுத்த குறிப்பிலிருந்து வாசிப்பர். அத்தோடு நிச்சயம் முடிவடையும் சமகாலத்தில் மோதிரம் மாற்றும் முறைமை காணப்படுகின்றது. ஆனால் முன்னர் அவ்வாறான முறைமை இருக்கவில்லை எனப் பலர் குறிப்பிட்டனர்.
அடுத்து முக்கியமான விடயம், பாக்குப்படைத்தல் ஆகும். அதாவது நிச்சயித்த திகதியில் திருமணம் நடைபெறும் என்பதனை பாக்கு வைத்து அனைவருக்கும் அறிவிக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவந்தது. ஆனால் இன்று பத்திரிகை அடித்து திருமணத்திற்கு அழைக்கும் வழக்கம் பெருவாரியாக புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனால் ஆரம்பத்தில், வீட்டில் சைவ உணவுகளைச் சமைத்து அதனைக் கடவுளுக்குப் படைத்து முக்கியமான பெரியவர்களையும் உறவினர்களையும் அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்து திருமணத்திற்கு குடும்பத்தோடு வரவேண்டும் என ‘பாக்கு வைத்தல்’ செய்வார்கள். இதில் பணம்பாக்கு வைத்தல் எனும் முறையும் காணப்படுகின்றது. அதாவது வெற்றிலை பாக்குடன் சேர்த்து, அரிசியும் ஒரு ரூபாவும் அல்லது சில்லறையாக இருக்கும் ஏதாவது நாணயமும் வைக்கப்படுகின்றன. மிக முக்கியமாக, மாமன் போன்ற உறவுகளுக்கு வைப்பார்கள். அவ்வாறு வைத்தால் அவர்கள் சீர் செய்ய வேண்டும் என்பது வழக்கம்.
ஏழு அல்லது ஒன்பது நாளைக்கு முதல் செய்யப்படும் பொன்னுருக்கல் அல்லது தாலிசெய்யக் கொடுக்கும் சடங்கு முக்கியமானது. திருமாங்கல்யம் என்பது ஒரு பெண்ணின் திருமணச் சின்னமாகவும், போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஒரு சுபநாளில் பொற்கொல்லரை அழைத்து, புதிய பொன் கொடுத்துத் தாலி உருக்கப்படுகிறது. இதில் மணப்பெண்ணின் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர். உருக்கப்பட்ட பொன்னைக் கொண்டு தாலி செய்யப்படுகிறது. சில சமூகங்களில், தாலியின் வடிவம் அந்தந்தச் சமூகத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
திருமணத்திற்கு முதல் ‘பரிசம் போடுதல்’ நிகழ்வை நடத்துகின்றனர். இது மலையகத்தில் மிக முக்கியமான சடங்குமுறையாகக் காணப்படுகின்றது. திருமணத்திற்கு முதல் நாள் அல்லது திருமணத்திற்கு முன் உள்ள நல்ல நாளில் பரிசம் போட்டு பெண்ணைத் தாய் வீட்டிலிருந்து அழைத்துவரும் சடங்கினைச் செய்கின்றனர். அப்பெண் தாய் வீட்டின் உரிமையாக இருந்து புகுந்த வீட்டின் உரிமையாக மாறும் ஒரு நிகழ்வாகவே இதனைக் கருதுகின்றனர். மாப்பிள்ளை வீட்டார் ஒற்றை இலக்க அடிப்படையில், அதாவது ஏழு அல்லது ஒன்பது அல்லது பதின்மூன்று, பரிசம் போடச் செல்வார்கள். போகும் போது பரிசத்தட்டு அனைத்தையும் கொண்டு செல்வது அவசியமாகின்றது. முதல் குறிப்பிட்டது போல, பரிசத்தில் வரும் பிரச்சினை சிலவேளை திருமணத்தில் கூட பிரச்சினையை உருவாக்கிவிடும். அந்த வகையில் பரிசத்திற்குச் சென்று அங்கு அனைவரும் கூட்டமாக அமர்ந்துகொள்வார்கள். மாப்பிள்ளை பரிசம் போட அழைத்துச்செல்லப்பட மாட்டார். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பரிசத்தில் கலந்து கொள்கின்றனர். இதில் இரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் மாத்திரமே பேசிக்கொள்வார்கள். அனைவரும் அமர்ந்த பிறகு பரிசத்தட்டுப் பரிசீலிக்கப்படும். அதில் குறிப்பாக பின்வரும் பொருட்கள் அவசியமாகின்றன: அரிசி ஏழு சிண்டு, தேங்காய் ஏழு, வாழைப்பம் ஏழு சீப்பு, கருப்பட்டி ஏழு கட்டு, மஞ்சள் ஏழு துண்டு, வெற்றிலை ஏழு அடுக்கு, கற்கண்டு, பொட்டுக்கடலை, குங்குமம், சந்தனம், மற்றும் பெண்ணுக்குத் தேவையான பொருட்கள், சேலை, ரவிக்கை, பாவாடை, உள்ளாடைகள், வளையல், பொட்டு, சைட்பின்னல், கொண்டைமுடி, பவுடர், கண்ணாடி, சட்டைப்பின், பாய், கம்பளம், செருப்பு (இதனைத் தட்டில் வைக்கக்கூடாது. தனியாக வைக்க வேண்டும்).

அத்தோடு பரிசமணி என்று சொல்லக்கூடிய தாலி மணி அல்லது பரிசச் சங்கிலி, அதுவும் இல்லாவிட்டால் பரிச மோதிரம் வைக்க வேண்டும். இது சமூகங்களின் வேறுபாட்டுக்கிணங்க மாறுபடும். இவற்றோடு சுருக்குப் பையும் 10 ரூபா பணமும் வைக்க வேண்டும். இது பரிசத்தட்டுக் கட்டியிருக்கும் துணியை அவிழ்க்கப் பயன்படுத்தப்படும் சாவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. பரிசத்தின் தட்டைப் பரிசோதிக்கையில், ஒரு பொருள் குறைவாக உள்ளது என்று பெண்வீட்டுப் பெரியவர்கள் கேட்பர். அப்போது, மாப்பிள்ளை வீட்டார் உப்பு எடுத்து வைத்திருக்க வேண்டும். இவ் உப்பினை மாப்பிள்ளை வீட்டிலிருந்து கொண்டுவரக்கூடாது. பெண்வீட்டாருக்குத் தெரியாமல் பெண்வீட்டில் எடுத்து சுற்றிக்கட்டி வைத்திருக்க வேண்டும். சபையில் கேட்கும் போது அதனைக் கொடுக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் குறைந்தாலோ அல்லது கூடினாலோ சபைக்குற்றம் என்று அறிவிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும். இது ஒரு விதமான நாடக நிகழ்வு போலவே காணப்படும்.
மேலும் திருமணத்திற்கு முன்பு, மணமகள் வீட்டார் தங்களின் முன்னோர்களான சுமங்கலிப் பெண்களை (திருமணமாகி வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள்) நினைத்து வழிபாடு செய்கின்றனர். மூத்த சுமங்கலிப் பெண்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது. இதன் மூலம் மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ முன்னோர்களின் ஆசி வேண்டப்படுகிறது. இது ஓர் ஆதரவு அமைப்பை மணமகளுக்கு உருவாக்குவதற்கான சமூகச் சடங்காகவும் அமைகிறது. ஆனாலும் வசதி கருதி பெரும்பாலும் இது செய்யப்படுவது மிக அரிது.
திருமணப் பந்தல் அமைப்பதன் தொடக்கமாக ‘பந்தக்கால்’ அல்லது ‘முகூர்த்தக்கால்’ நடப்படுகிறது. பொதுவாக வேரில்லாமல் துளிர்க்கும் பூவரசம் மரம் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் நுனியில் மாவிலைகள், மஞ்சள் மற்றும் பூக்கள் கட்டப்படுகின்றன. குழியில் வெள்ளி நாணயம், நவதானியம் மற்றும் பூக்கள் போட்டு பால் ஊற்றிப் பந்தக்கால் நடப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களுக்கும் திருமணச் செய்தியைத் தெரிவித்து ஆசி பெறுவதைக் குறிக்கிறது. மூங்கிலைப் போல வம்சம் செழித்து வளர வேண்டும் என்பதும், வாழையடி வாழையாகக் குடும்பம் வளர வேண்டும் என்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
திருமணத்திற்கு முந்தைய நாள் சடங்குகள் என நோக்கும் போது, முந்தைய நாள் மாலை முதல் மணமக்கள் திருமண மனநிலைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றனர்.
காப்புக் கட்டுதல் சடங்கு முக்கியமானது. திருமணச் சடங்குகள் எந்தவித இடையூறும் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக மணமக்களின் மணிக்கட்டில் மஞ்சள் கயிறு (காப்பு) கட்டப்படுகிறது. இது ஒரு தற்காப்பு அரணாகக் கருதப்படுகிறது. திருஷ்டி மற்றும் பேய்களின் சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதும், மணமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கைகளாகும். காப்புக் கட்டிய பிறகு மணமக்கள் ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது ஒரு முக்கியமான விதியாகும்.
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனும் மணமகளும் தனித்தனியாக விரதம் இருக்கின்றனர். மணமகன் தனது பிரம்மச்சாரிய வாழ்க்கையிலிருந்து இல்லற வாழ்க்கைக்கு மாறுவதற்குத் தனது தந்தையிடம் அனுமதி பெறுவார். மேலும், ‘நாந்தி’ எனும் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெறும் சடங்கும் இடம்பெறும். இதில் மணமகன் மற்றும் மணமகள் முன்னோர்களை நினைத்து விரதமிருத்தல் அவசியமாகின்றது. திருமணத்தன்று அதிகாலை முதல் பல்வேறு சடங்குகள் வரிசையாக நடைபெறுகின்றன. இவை மணமக்களின் உடல் மற்றும் மனத் தூய்மையை மையமாகக் கொண்டவை. மணமக்கள் இருவர் இல்லங்களிலும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் பூசிக் குளிப்பர். சுமங்கலிப் பெண்கள் மணமக்களுக்கு நலுங்கு வைத்து, புனித நீரை ஊற்றுகின்றனர். இது உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதோடு, திருமணக் களைப்பை நீக்கி முகத்திற்குப் பொலிவைத் தருகிறது. இது மணமக்களை ஒரு முக்கியமான வாழ்க்கைப் பயணத்திற்குத் தயார் செய்கிறது.
மணப்பெண் திருமணத்திற்குச் சற்று முன்பு அன்னை கௌரியை வழிபடுகிறார். கௌரி தேவி பதிவிரதத் தன்மைக்கும் மாங்கல்யப் பலத்திற்கும் பெயர்பெற்றவர். அவரை வழிபடுவதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான இல்லற வாழ்வு வேண்டப்படுகிறது. அதேபோல், மணமகன் விநாயகப் பெருமானை வழிபட்டுத் திருமணச் சடங்குகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற வேண்டிக்கொள்கிறார்.
மணமகன் மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் நடைபெறும் சடங்குகள் இரு குடும்பங்களின் பிணைப்பை வலுப்படுத்துகின்றன. மணமகன் மேடைக்கு வந்ததும், மணப்பெண்ணின் தந்தை மணமகனின் கால்களைப் பால், சந்தனம் மற்றும் குங்குமத்தால் கழுவுகிறார். இது மணமகனை மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதிச் செய்யப்படும் மரியாதையாகும். பின்னர் மணமகன் மணப்பெண் வீட்டாருக்குப் புத்தாடைகளை வழங்க, மணப்பெண் வீட்டார் மணமகனுக்குப் பட்டு வேட்டி மற்றும் சட்டைகளை வழங்குவார்கள். மணமக்களுக்கு இடையே முதன்முதலில் நடைபெறும் நேரடித் தொடர்பு மாலை மாற்றுதல் ஆகும். மணமக்களின் தோள்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, அவர்களின் ஆற்றல்கள் ஒன்றிணைவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மூன்று முறை மாலைகள் மாற்றிக் கொள்ளப்படும். இது ஒருவரை ஒருவர் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. திருமணத்தின் உச்சக்கட்ட நிகழ்வு தாலி கட்டுதல் ஆகும். இது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது. கெட்டிமேளம் முழங்க, புரோகிதர் மந்திரங்கள் ஓத, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். தாலி என்பது சுமங்கலியின் சின்னமாகவும், மணமக்களின் பிரிக்க முடியாத பிணைப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. முதல் இரு முடிச்சுகளை மணமகனும், மூன்றாவது முடிச்சை மணமகனின் சகோதரியும் (நாத்தனார்) போடுவார்கள். இது மணமகள் அந்தப் புதிய குடும்பத்தின் ஓர் அங்கமாகிவிட்டதைக் குறிக்கிறது. தாலி கட்டியதைத் தொடர்ந்து மணமக்கள் அக்னியைச் சுற்றி ஏழு அடிகள் எடுத்து வைப்பார்கள். ஒவ்வொரு அடியும் ஒரு முக்கியமான வாழ்நாள் உறுதிமொழியை உள்ளடக்கியது. இத்திருமண நடைமுறைகள் பெரும்பாலும் பிராமணமயப்படுத்தப்பட்டதாகவே நடைபெற்றுள்ளமையை பலர் தெரிவித்தலிருந்து அறியமுடிகின்றது.
திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் என நோக்கும் போது, திருமணம் முடிந்தவுடன் மணமகள் தனது புகுந்த வீட்டிற்குச் செல்வதும், அங்கு அவரை வரவேற்கும் முறைகளும் சுவாரஸ்யமானவை. மணமகள் முதன்முதலில் மணமகன் வீட்டிற்குள் நுழையும் நிகழ்வு இது. மணமகனின் தாயார் மணமக்களுக்கு ஆலாத்தி சுற்றி வரவேற்பார். மணமகள் தனது வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். நுழையும் போது அரிசி நிரம்பிய குடத்தைத் தனது காலால் மெதுவாகத் தட்டி உள்ளே தள்ளுவார். இது லக்சுமி கடாட்சம் அந்த வீட்டிற்குள் வருவதைக் குறிக்கிறது. இது ஒரு பொழுதுபோக்குச் சடங்காக இருந்தாலும், மணமக்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையே நெருக்கத்தை உருவாக்க உதவுகிறது. மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் தெளிப்பது, அப்பளத்தை உடைப்பது, தேங்காய் உருட்டுவது போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். இது மணமகளுக்குப் புதிய குடும்பத்தில் உள்ள கூச்சத்தை நீக்க உதவுகிறது. திருமணம் முடிந்த சில நாட்களில் மணமக்கள் மணப்பெண் வீட்டிற்குச் செல்வார்கள். இது ‘மறுவீடு’ என அழைக்கப்படுகிறது. அப்போது மணமகன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைப் பெண் வீட்டார் கொடுத்து அனுப்புவார்கள். முற்காலத்தில் பயணங்களின் போது உணவிற்காகக் ‘கட்டுச்சாதம்’ கட்டித் தரும் வழக்கமும் இருந்தது. இவ்வாறு திருமணச்சடங்கு தலை தீபாவளி, தலைப்பொங்கள் என்று தொடரும். அத்தோடு அதன்பின் வரும் ஒவ்வொரு வருட ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் தாலி பிரித்து மாற்றும் சடங்கும் இடம்பெறும்.
உசாத்துணை நூல்கள்
- இன்பமோகன், வ., 2012. கிழக்கிலங்கைச் சடங்குகள். குமரன் புத்தக இல்லம், சென்னை/ கொழும்பு.
- சிவத்தம்பி, க., 1993. இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம்.
- சிவரத்தினம், சு., 2008. சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம்.
- சோமசுந்தரம், அ., (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.
- தருமராஜன், டி., 2006. சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தமிழ்நாடு, இந்தியா.
- பரமசிவன், தொ., 2019. மஞ்சள் மகிமை. காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- பரமசிவன், தொ., 2024. பண்பாட்டு அசைவுகள். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- பக்தவத்சல பாரதி., 2012. மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு, சென்னை.
- மௌனகுரு, சி., 1988. சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம்.
- வேல்முருகு, ந., 1993. மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.
சஞ்சிகைகள்
- குன்றின் குரல் – ஆண்டு 12, இதழ் 03, ஜூலை – செப்டம்பர் 1993, பக். 19–20
- குன்றின் குரல் – ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி – மார்ச் 1994, பக். 19–20
- நட்புறவுப் பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987, பக். 14–16
- நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993, பக். 25–27
- பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992, பக். 30–56
தொடரும்.



