மலையக வாய்மொழிப் பாடல்களில் கங்காணிமார்களின் இருப்பு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
18 நிமிட வாசிப்பு

மலையக வாய்மொழிப் பாடல்களில் கங்காணிமார்களின் இருப்பு

December 30, 2025 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

இலங்கை மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இம்மக்களின் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பல்வேறு வகையான வரலாற்று ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதேவேளை, இந்தியத் தொழிலாளர்கள் அதிகமாக வறுமை காரணமாகவே இலங்கைக்கு வந்தார்கள் என்ற கருத்தை இன்றைய வரலாற்று ஆய்வுகள் நிராகரிக்கின்றன. பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் உருவான புதிய முதலாளித்துவப் பண்பாடு, தன்னுடைய நாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தியதோடு, உலகில் காணப்படும் அனைத்து வளங்களையும் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயன்றது. இதன் விளைவாக, நாடுகடந்த காலனித்துவ ஆட்சியின் அதிகார வலிமையால் உலகின் பல நாடுகள் பிரித்தானியர்களின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டன. அவ்வாறே இந்தியாவிலும், தனது முழுமையான இராணுவ ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதையும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் விளைவாக, இந்திய மக்கள் தமது பொருளாதாரத்தையும் கலாசாரப் பண்பாட்டையும் பெருமளவில் இழந்தனர். இந்தியாவில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதி ஆதிக்க முறை, உள்நாட்டுச் சிற்றரசர்களுக்கிடையிலான மோதல்கள் ஆகியவை இத்தகைய காலனித்துவ ஆட்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கின என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் விளைவாக, இந்தியாவின் பாரம்பரியக் கைத்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், பொருளாதாரச் சுமைகளால் வேலைவாய்ப்புகளையும் மக்கள் இழந்தனர். உதாரணமாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டை பிரித்தானியர்கள் பெற்றுக்கொண்டு, அதனைத் துணிகளாக நெய்து மீண்டும் அதிக விலைக்கு இந்திய மக்களிடமே விற்பனை செய்தனர். இதனால், பாரம்பரியமாக நூல் நூற்புத் தொழிலில் ஈடுபட்டுவந்த பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்தனர். இதேபோல், நிலவுரிமைச் சட்டங்களை அறிமுகப்படுத்தி அதிக வரிகளை விதித்ததன் காரணமாக விவசாயமும் பெரிதும் பாதிப்படைந்தது. இவ்வாறு பல்வேறு பாரம்பரியத் தொழில்கள் முடக்கப்பட்டதன் விளைவாக, பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வேலைவாய்ப்பைத் தேடி அவர்கள் குடிபெயர்வதற்கு முனைந்தனர். அதேவேளை, 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பஞ்சம், கொலரா போன்ற தொற்றுநோய்கள் இம்மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் இழக்கச் செய்தன. இதன் விளைவாக, பெருந்தொகையான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையை மிகுந்த இலாபகரமாகப் பயன்படுத்திய பிரித்தானியர்கள், தமது காலனித்துவ நாடுகளில் கூலித் தொழிலாளர்களாக இந்தியர்களைக் குடிபெயரச் செய்தனர்.

அதே நேரத்தில், அந்த நாடுகளில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய தொழில்முறைச் செயற்பாடுகளையும் பிரித்தானியர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்தனர். 1815 ஆம் ஆண்டில் இலங்கையையும் அவர்கள் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையில் ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை விரைவாக அடக்குவதற்காக, தீவின் சகல பிரதேசங்களையும் இணைக்கும் புதிய போக்குவரத்துப் பாதைகள், பாலங்கள் மற்றும் புகையிரதச் சேவைகளை ஆரம்பிக்கப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் படை தேவைப்பட்டது. இதற்காக தென் இந்தியாவிலிருந்து பெருந்தொகையான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். இத்தொழிலாளர்கள் பாதைகள் அமைப்பதிலும், புதிய நகரங்களை உருவாக்குவதிலும், நகரச் சுத்திகரிப்பை மேம்படுத்துவதிலும் பயன்படுத்தப்பட்டனர்.

அதேவேளை, இலங்கையின் அரச செலவினத்தைக் குறைத்து அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை, குறுகிய காலத்திலேயே அதிக வருமானத்தைப் பெற்றுக் கொடுத்ததால், அதற்கு நிரந்தரமான தொழிலாளர் தேவை உருவானது. ஆரம்பகாலத்தில் கோப்பிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டபோது, தென் இந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் கோப்பி அறுவடை முடிந்ததும் மீண்டும் தமது ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

கோப்பிக்காலம் நிறைவுக்கு வந்து, தேயிலை உற்பத்தி ஒரு வெற்றிகரமான பயிர்ச்செய்கையாக உருவெடுக்கத் தொடங்கிய பின்னர், இந்தியத் தொழிலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாகத் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தமக்குத் தேவையான தொழிலாளர்களைப் பெறுவதற்காக ‘கண்காணி’ எனப்படும் ஆள் சேர்க்கும் தரகர்களுக்குப் பணம் வழங்கி தொழிலாளர்களைச் சேர்த்துக்கொள்ளும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் ‘ஆள்கட்டும்’ ஒரு புதிய சமூகக் குழு உருவாகியது. இவர்கள் தமது சொந்த ஊர்களில் வாழ்ந்த கடும் வறுமையால் பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம், வறுமை நிலையிலிருந்து மீள்வதற்கான வழியாகக் கடன்கள் மற்றும் சிறு உதவிகளை வழங்கினர். இவ்வுதவிகள் தொழிலாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கின. அந்த நம்பிக்கையின் வாயிலாக, கண்காணிகள் கூறிய பொய் வாக்குறுதிகளை நம்பி, தொழிலாளர்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து, அவர்களினூடாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, பெருந்தோட்டத்துறைத் துரைகளிடம் கூலித் தொழிலாளர்களாக ஒப்படைக்கப்பட்டனர். இச்செயற்பாட்டில், கண்காணிகளின் கட்டுப்பாட்டுக்குள் துரைமார்களும் இருந்தனர். எனவே, சில சந்தர்ப்பங்களில், துரைமார்களை விட அதிக ஆதிக்கம் கொண்டவர்களாக சில தோட்டங்களில் கண்காணிகள் செயற்பட்டனர். கோ. நடேசய்யர் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ என்னும் நாடகத்தில் கங்காணிமார்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“என்ன சொல்ல கங்காணி

எப்போது நீ ஏணி

சொன்னதெல்லாம் விட்டுவிட்டு

செய்யுறாய் கோணி

கவ்வாது வெட்டப் போச்சு

காடு மண்டிப் போச்சு

சவாப்பு சொல்லி சொல்லி வந்த

சங்கதி ஏச்சி..

ஆள் எடுக்கவில்லை

அதனால பெரும் தொல்லை

நாள் எடுக்க ஏ சென்டர் தான்

நாடுவார் இல்லை…..

பத்த நூத்த கொடுக்க

பார்த்து ஆளை எடுக்க

அத்தை இத்தை விடுக்க

உடனே ஆளை எடுக்க ஊருக்கு

ஊருக்குப் போய் ஒழுங்கு செய்வேன்.”

இந்தக் கண்காணிகள் தமிழ்நாட்டில் இருந்த ஜமீன்தார்களுக்கு நிகரான முறையில் தங்களை உருவமைத்துக் கொண்டனர். இவர்களுடைய தோற்றம் வெள்ளைக் கமிசு, கருப்புக் கோட்டு, சரிகைத் தலைப்பாகை, கோட்டின் இடது பக்க மேல் பொக்கட்டின் மேலே தொங்கும் வெள்ளைச் சங்கிலியுடன் கூடிய பொக்கட் உருலோசு ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது. இவையே கண்காணியின் வெளிப்புற உருவ அமைப்பாகக் கருதப்பட்டது. இவர்களுடைய அணிகலன்களாகக் காதில் கடுக்கண் (குண்டலம்), கழுத்தில் தங்க வளையம் (கெவுடு), கையில் பிரம்பு (கொண்ட) ஆகியவை இருந்தன. இத்தகைய தோற்ற மற்றும் உருவ அமைப்புகளை உருவாக்கிக்கொண்ட கண்காணிகள், வெள்ளைக்காரத் துரைமார்களுக்கு நிகராக அடக்குமுறையாளர்களாகவும் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். துரைமார்கள், கண்காணிகளை முழுமையாக நம்பி, தொழிலாளர்களை ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு வேலை வழங்குவது, அவர்களைக் கண்காணிப்பதும் பராமரிப்பதும் ஆகிய அனைத்தையும் கண்காணிகளின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அனுமதித்தனர். இதன் மூலம், பெருந்தோட்டத்துறையின் நாளாந்த நிர்வாகத்தில் கண்காணிகள் மிகுந்த அதிகாரம் பெற்றவர்களாக உருவெடுத்தனர்.

மேலும், ஒவ்வொரு தோட்டமும் ஒரு பெரிய கண்காணியின் மேற்பார்வையிலேயே இயங்கியது. அங்கு நடைபெறும் அனைத்து விடயங்களும் கண்காணியின் பொறுப்பிலேயே இருந்தன. அவரின் சிபாரிசின் பேரில் பல சில்லறைக் கண்காணிகள் செயற்பட்டனர். இச்சில்லறைக் கண்காணிகள் எப்போதும் பெரிய கண்காணியின் விசுவாசிகளாகவே இருந்து வந்தனர்; அவரது அனுதாபம் இன்றி எதையும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர். இதற்கான முக்கிய காரணம், பெரும்பான்மையான தொழிலாளர்கள் இந்தியாவின் ஒரே கிராமத்திலிருந்து ஒருங்கிணைந்த வகையில் பிடுங்கி எடுக்கப்பட்டு, இலங்கையின் மலையகத் தோட்டங்களில் மீள்நடுகை செய்யப்பட்டமை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் விளைவாக, அங்கு நிலவிய சாதி அடக்குமுறையும் கடும் ஏழ்மையும், அவர்களை மீளத் தப்பிக்க முடியாத ஒரு திறந்த வெளிச் சிறைக்குள் அடைப்பதற்குச் சாதகமான சூழலை உருவாக்கின.

இவ்வாறு, தொழிலாளர்களைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்ட கண்காணிகள், அவர்களை அடக்குமுறைகளுக்கும் மறைமுகத் தாக்குதல்களுக்கும் உட்படுத்தி, தொடர்ச்சியாகத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தனர். அதேவேளை, பெருந்தோட்டத் துறையை முழுமையாகக் கட்டியெழுப்புவதில் கண்காணிகள் ஆற்றிய பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. இத்தகைய கண்காணிகளின் செயற்பாடுகள் மலையக வாய்மொழிப் பாடல்களில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன என்பதைக் கீழ்வருமாறு எடுத்துக்காட்டலாம்.

“அஞ்சு மணி ஆச்சு

ஐயா வர நேரமாச்சு

கொஞ்சி விளையாடாதீங்க

கோபக்காரன் கங்காணி”

“எண்ணி எண்ணிக் குழி வெட்டி

இடுப்பு ஒடிஞ்சு நிக்கையில

வெட்டு வெட்டு என்கிறானே

வேலையத்த கங்காணி”

“தோட்டம் பொரளி இல்ல

தொர மேல குத்தம் இல்ல

கங்காணி மாராளே

களப் புரளி ஆகுது ஐயா”

“கண்காணி கோவத்திற்கும்

காட்டுத் தொங்க ஏற்றத்துக்கும்

நம்ம துர கோபத்துக்கும்

நடந்தாலும் குத்தமில்ல”

இந்தப் பாடல்கள், கண்காணிகள் தங்களுடைய சொந்த பந்த–பாச உறவுகளைவிட, தமிழ்நாட்டின் மேட்டுக்குடி அதிகாரத் திமிரையும், அங்கு நிலவிய அடக்குமுறைகளுக்குச் சமமான நடைமுறைகளையும் பின்பற்றி, தமது சொந்தத் தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளைச் செலுத்தியவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. இவ்வாறு, வெள்ளைக்காரத் துரைமார்களிடமிருந்து அதிகளவான இலாபத்தைப் பெறுவதிலேயே அவர்கள் பிரதான கவனம் செலுத்தினர். இதனூடாக, புதிதாக உருவாக்கப்பட்ட பல நகரங்களில் வியாபார ஸ்தாபனங்களைத் தொடங்கி, வியாபாரிகளாக மாறிய கண்காணிகளும் இருந்தனர். இவர்களின் வாரிசுகளே இன்றும் மலையகத்தின் பிரதான நகரங்களில் செல்வச்செழிப்புடன் வாழும் மக்களாகக் காணப்படுகின்றனர். அதேபோல், கல்வித் துறையிலும் பெரிய கண்காணிகளின் பிள்ளைகளே ஆங்கிலப் பாடசாலைகளில் கல்வி கற்று, உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றவர்களாக விளங்கினர்.

இத்தகைய கண்காணிகள், தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மக்களைத் தரகர்களாக அழைத்து வந்த பின்னர், அவர்களின் திருமணம், மரணச் சடங்குகள் போன்ற பல்வேறு எதிர்பாராத செலவுகளுக்காகக் கடன் வழங்கி, அவர்களை நிரந்தரக் கடனாளிகளாகவே வைத்துக் கொண்டனர். தோட்டத் துரைமார்களும் இவ்வகை கடன் நடைமுறைகளை ஊக்குவித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறாமல், தோட்டத்தோடு பிணைக்கப்பட்டவர்களாக வைத்திருக்கவே இத்தகைய யுக்திகள் கையாளப்பட்டன. 1910 ஆம் ஆண்டு வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரடியாகச் சம்பளம் வழங்கப்படவில்லை; கண்காணிகள் மூலமாகவே சம்பளம் வழங்கப்பட்டதாக பி.ஏ. காதர் குறிப்பிடுகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. கண்காணிகளின் சுகபோக வாழ்க்கை, அவர்கள் மாலை நேரங்களில் ஏழைத் தொழிலாளர்களுடன் மேற்கொண்ட அட்டகாசச் செயல்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் ஆகியவை ஆங்காங்கே நாட்டார் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“மன்னிக்கவத்த தோட்டத்திலே

மயிறு வத்தி கங்காணி

உருலோச அடகு வச்சி

உருட்டுறாரே ஜின்னு போத்த”

“செப்பு சில போல பொண்டாட்டிய

சிம்மாசனத்துல வச்சுப்புட்டு

வேலைக்கிறங்கிய

நம்மையா கங்காணிக்கு

ஏழெட்டுப் பேராம் வப்பாட்டி”

அதேவேளை, இத்தகைய அடக்குமுறைகளுக்கெதிராக எதிர்குரல் கொடுக்கவோ, அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசவோ எவ்விதத் துணிச்சலும் இன்றியவர்களாக மலையக மக்கள் நீண்டகாலம் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு கண்காணிகள் பல்வேறு வகையான அடக்குமுறைகளைக் கையாண்ட போதிலும், தோட்டத் துறையில் கலை, இலக்கியம், நாடகம், கூத்து, சமய வழிபாடு போன்ற பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவதற்கு அவர்கள் முன்நின்று உழைத்தனர். அத்தோடு, தென்னிந்தியாவிலிருந்து நாடகக் கலைஞர்களை அழைத்து வந்து நாடக மற்றும் கூத்துக் கலைகளை நடத்துவதற்கும் அவர்கள் முயற்சி மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, திருவிழாக் காலங்களிலும், ஏனைய சமயச் சடங்குகளிலும், கல்யாண வீடுகளிலும் கண்காணிகள் வருகை தரும் வேளைகளில், அவர்களைக் கும்மியடித்து வரவேற்றுப் பாடப்பட்ட பல பாடல்களில், அவர்களின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன.

“சொலு சொலுன்னு மழை பெய்ய

துப்பட்டி தண்ணீர் அலைமோத

சொகுசா வாரா நம்ம ஐயா கங்காணி

தோடு மின்னலை பாருங்கடி”

“கல கலன்னு மழை பெய்ய

கம்பளி தண்ணி அலைமோத

காரியக்காரராம் நம்மையா

கங்காணி..

கடுக்கன் மின்னலை பாருங்கடி”

“சித்திர புத்திர கண்டாங்கியம்

செப்புக் குடத்துல எழுதி இருக்கும்

எடுத்துக் கொடுப்பார் நம்மையா

கங்காணி..

இழுத்து மாறாப்ப மூடுங்கடி”

“சுரை கிடந்தத பாருங்கடி அது

சுத்திப்படந்தத பாருங்கடி

சுரை விதை போல நம்மையா

கங்காணி..

சொல்லு வரிசையைப் பாருங்கடி”

“பாகை படர்ந்ததைப் பாருங்கடி அது

பக்திப்படந்தத பாருங்கடி

பாகை விதை போல நம்மையா

கங்காணி..

பல்லு வரிசையைப் பாருங்கடி”

இந்தப் பாடல்கள், மலையக மக்களின் வாழ்வியலோடு இணைந்து, நாடகம், கூத்து, திருவிழாக்கள், கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் கங்காணிகள் முக்கிய பங்குதாரர்களாகச் செயற்பட்டு, மக்களை வழிநடத்தி வந்ததைப் பிரதிபலிக்கின்றன. அதேவேளை, ஒவ்வொரு தோட்டத்திலும் ஆலயங்களை உருவாக்கி வழிபாட்டிற்கு முக்கியத்துவமும் வழங்கி வந்துள்ளனர். இவர்களின் மறுபக்கங்கள் இன்னும் பேசப்படாதவையாகவே இருந்து வருகின்றன. இவர்கள் சில இடங்களில், பாடசாலைகளையும் அமைத்துள்ளனர்.

பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜி தீவுகள் போன்ற பிரித்தானியக் காலனித்துவ நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கு, அந்த நாடுகளில் வாழ்வாதார உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு அழைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தாலும், இலங்கை அரசாலும் எந்தவிதமான வாழ்வாதார உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. இதனால், இவர்கள் இன்று நிலமற்றவர்களாகவும், மற்ற சமூகங்களோடு ஒப்பிடும்போது பொருளாதார ரீதியிலும், சுகாதார ரீதியிலும், வாழ்விட உரிமை ரீதியிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். கங்காணிகள் அன்றைய காலத்தில், தரகர்களின் பண ஆசை காரணமாக, தமது சொந்த பந்தங்களை மோசமான முறையில் அழைத்து வந்து, எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் அடிமைப்படுத்தப்பட்ட நாட்கூலிகளாக மாற்றியதுதான், இன்றுவரை இவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ என்ற நூலில் பி.ஏ. காதர் கங்காணிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள இந்த வரிகள் மிகவும் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது. “தோட்டத்துரைமாரிடமிருந்து பெரிய கங்காணியே தனது தொழிலாளர் கோஷ்டிக்குரிய சம்பளத்தை வாங்குவார். அப்பொழுது தோட்டத் தொழிலாளர் இடையே 100 வீத கல்வி அறிவின்மை நிலவியது. இவர்களது எழுத்தறிவின்மையைப் பயன்படுத்தி ‘வெள்ளைக் கம்பளி’ வாங்கிய கணக்கு, ‘கருப்புக் கம்பளி’ வாங்கிய கணக்கு என்று கள்ளக்கணக்கு எழுதி சம்பளத் தொகை முழுவதையும் பெரிய கங்காணி அபகரித்துக் கொள்வார். என்றுமே தொழிலாளி அவருடைய கடனிலிருந்து மீள முடியாது.”

பெருந்தோட்ட நிறுவனத்தில் மலையகத் தொழிலாளர்கள், கண்காணிமார்களின் அடக்குமுறைகளுக்கும், மேட்டுக்குடிச் சாதியக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட நிலையில் இருந்தனர். இதனை, நாட்டார் பாடல்கள் வலிமையோடு எடுத்துக்காட்டுகின்றன. இதைப் பற்றிப் பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிடுவார். “மலையக வாய்மொழிப் பாடல்கள், அந்த மக்கள் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர்களது இலட்சியக் கனவுகளாகவும் விளங்குகின்றன.” அதேபோல சோவியத் கால கலை விமர்சகர் ‘வஸ்லி வோர்னாவ்’ “நாட்டார் பாடல்கள் சமூக உணர்வுகளின் சின்னங்களாகக் கருதப்படத்தக்கவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பாலும் அடுப்பினிலே

பாலகனும் தொட்டிலிலே

பாலகனைப் பெத்தெடுத்த

பாண்டியரும் முள்ளுக் குத்த

வேலைக்குப் பிந்தினேனு

விரட்டுறானே கங்காணி”

“கங்காணி ஐயாவே பயப்படாத

கப்பல் கடல் கர வந்து சேரும்

ஆளுங்க அன்பர்க இல்லாட்டி துரை

வட்டிகள் வாசிகள் போட்டெடுப்பார்”

எனவே, மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கைத் திருநாட்டில் குடியேறி, மலையகம் எனும் தாய் நிலத்தை வளம் கொழிக்கும் நிலமாக மாற்றி, இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இன்றுவரை செயற்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் பிரித்தானியரால் எடுக்கப்பட்டிருந்த போதும், இம்முயற்சிகளுக்கு உந்துசக்தியாக இருந்து, அற்ப இலாபத்திற்காக தமது சொந்த மக்களை அந்நியர்களுக்கு விற்ற மிக முக்கியமான பாத்திரமாக கண்காணிகள் இருந்தனர் எனலாம். மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் ஊடாக உலகறியச் செய்த சி.வி. வேலுப்பிள்ளை கூட, பெரிய கண்காணிகள் தமது மக்களுக்குச் செய்த கொடுமைகளை எந்த இடத்திலும் விமர்சிக்கவோ, தொட்டுக்காட்டவோ செய்யவில்லை. இதற்கான காரணமாக, அவர் ஒரு பெரிய கண்காணியின் வாரிசாக இருந்ததையும், அதனால் நேர்ந்திருந்த கட்டுப்பாடுகளையும் குறிப்பிடலாம்.

மலையக மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருந்த இன்னொரு நடைமுறை ‘துண்டு முறை’ ஆகும். ஒரு தொழிலாளி தாம் வேலை செய்த தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென இருந்தாலோ, வேறொரு தோட்டத்திற்கு வேலை தேடிச் செல்ல வேண்டுமென இருந்தாலோ, அல்லது தமது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல நினைத்தாலோ, அந்தத் தோட்டத் துரைமார்களிடமிருந்து தாம் அந்தத் தோட்டத்திற்கு எந்தவிதமான கடனும் பாக்கியில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கடிதம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய கடிதமும், அதனுடன் இணைந்த பற்றுச்சீட்டும் இல்லாமல், எந்தத் தோட்டமும் அந்தத் தொழிலாளியை வேலைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்காது. இந்தப் பற்றுச்சீட்டு என்பது ஒரு தொழிலாளியின் சேவை விவரங்களை உள்ளடக்கிய அதிகாரபூர்வமான ஆவணமாகும். தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது, ‘மண்டபம் கேம்ப்’ எனப்படும் இடத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரமே இந்தப் பற்றுச்சீட்டு ஆகும். இப்பற்றுச்சீட்டு, இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையைப் போலவே, தொழிலாளியின் அடையாளமாகக் கருதப்பட்டது. இந்தப் பற்றுச்சீட்டுத் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதற்காகத் தண்டனையோ, சவுக்கடி போன்ற கடுமையான தண்டனைகளோ வழங்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தொழிலாளிகள் இந்தப் பற்றுச்சீட்டினை உயிர்போல பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அது தொலைந்துவிட்டால், அவர்கள் வீதிகளில் நிற்க வேண்டிய அளவுக்குக் கடுமையான வாழ்க்கைத் துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

பெரிய கண்காணி, அந்தத் தொழிலாளி தமக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் முறையாகச் செலுத்திவிட்டார் எனத் துரைக்கு அறிவுறுத்தல் வழங்கிய பின்னரே, தோட்டத்துரை அந்தத் தொழிலாளிக்குத் துண்டு எழுதிக் கொடுப்பார். பெரிய கண்காணியின் சிபாரிசு இன்றி, ஒரு தொழிலாளி அந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறவோ, அல்லது வேறொரு தோட்டத்தில் பெயர்ப் பதிவு செய்து வேலை செய்யவோ முடியாத அளவிற்கு, இந்தப் பற்றுச்சீட்டுச் சட்டமும், துண்டு முறையும் நடைமுறையில் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தது.

1921 ஆம் ஆண்டு, இந்தச் சட்டம் நீக்கப்பட்டது. இருந்த போதிலும், பல தோட்டங்களில் பற்றுச்சீட்டு மற்றும் துண்டு முறைகள் 1950 வரை நடைமுறையில் இருந்து வந்தன. அதேவேளை, ‘பென்ஸ்’ முறை எனப்படும் இன்னொரு முறையும் பின்பற்றப்பட்டது. பெரிய கண்காணிக்குத் தொழிலாளர்களைத் திரட்டிக் கொடுத்ததற்காக, தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பணம் அறவிடப்பட்டது. இவ்வாறு அறவிடப்பட்ட பணத்தையே ‘பென்ஸ்’ முறை என அழைத்தனர். பெரிய கண்காணிக்கு மேலதிகமாக வழங்கப்படும் பணம் அதிகமாக இருந்ததனால் ‘பெரிய பென்ஸ்’ என்றும், சில்லறைக் கண்காணிக்கு வழங்கப்பட்ட தொகை குறைவாக இருந்ததனால் ‘சின்ன பென்ஸ்’ என்றும் அழைக்கப்பட்டது. பி.ஏ. காதர் இதனை தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

இத்தகைய வெவ்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில், கண்காணிகள் மேற்கொண்ட செயற்பாடுகள் எவ்வளவு வீரியமாக இருந்தது என்பதை மக்களின் வாய்மொழிப்பாடல்கள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

“கங்காணி கங்காணி

கருத்தக் கூட்டுக் கங்காணி

நாலு பேரு வரலன்னா

நக்கிப் போவான் கங்காணி”

“சீனிக்கு காக்கா போட்டு

சீராக வாழலாம்னு

சிரிக்கச் சிரிக்கப் பேசி வந்து

சீரழிக்கும் கங்காணி”

சான்றாதாரங்கள்

  1. காதர் பி.ஏ., (2023). இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள். ஐக்கிய ராஜ்யம்: சமூகம் இயல் பதிப்பகம்.
  2. இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, (2000). மலையகப் பரிசுக் கட்டுரைகள். கொழும்பு: இனி ஆட்ஸ் பிரைவேட் லிமிடெட்.
  3. வாமதேவன் எம்., (2014). மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி. அட்டன்: பாக்கியா பதிப்பகம்.
  4. நடேசய்யர் கோ., (2017). இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம். கொழும்பு: குமரன் அச்சகம்.
  5. சிவலிங்கம் மு., (2007). மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள். ரெக்னோ பிரிண்டர்ஸ்.
  6. சாரல் நாடன், (1993). மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை: சவுத் ஏசியன் பப்ளிகேஷன்ஸ்.
  7. வேலுப்பிள்ளை சி.வி., மலையக மக்கள் பாடல்கள். கலைஞன் பதிப்பகம்.
  8. கந்தையா மு.சி., (2022). சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர். திருப்பூர்: பொன்னுலகம் புத்தக நிலையம்.
  9. காதர் பி.ஏ, இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். இலண்டன்: சமூகம் இயல் பதிப்பகம்.


About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்