கீரிமலையில் தனது முதலாவது மாநாட்டினை விபுலானந்த அடிகள் தலைமையில் ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ எனும் அமைப்பு நடாத்தியதன் முதலாவது நூற்றாண்டாக இவ்வருடம் அமைந்துள்ளது. பெண் விடுதலை, சாதி ஏற்றத்தாழ்வினைத் தகர்த்தல் பூரண சுதந்திரம் எனும் குறிக்கோள்களை அந்த அமைப்பு முன்னிறுத்தி இயங்கத் தொடங்கி இருந்தது. இந்த மாநாடு இடம்பெறுவதற்கு நான்கு ஆண்டுகளின் முன்னர் தனது சிந்தனையையும் செயல்வேகத்தையும் தானியங்கிய தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துவிட்டு மகாகவி பாரதி விடைபெற்றேகி இருந்தார். தமிழகம் அவ்வகையில் வழங்கிய அந்தப் பாரதியத்தைக் கல்விப் புலத்திலே ஆழமாகப் பதியம் செய்யும் முயற்சியைத் தமிழியல் தளத்தில் முதன்முதலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்) தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவி வகித்த விபுலானந்த அடிகள் தொடக்கிவைத்தார்; அவர் தலைமையேற்ற மாநாட்டைத் தொடக்கமாகக் கொண்டு இயங்கிய யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களிடம் பாரதி முன்னிறுத்திய ‘முழுமைப்பட்ட மக்கள் விடுதலைச் சிந்தனை’ அவரூடாக ஆழமாகச் சுவறியிருக்க வாய்ப்புள்ளது!

இந்த மாதத்தில் மற்றொரு முக்கியத்துவமிக்க நினைவுகூரல் கம்போடியாவில் இடம்பெற்றவாறுள்ளது. அதுவும் தமிழர் வரலாற்றுடன் வலுவான தொடர்புடையது. இன்று தனித்தனித் தேசங்களாக உள்ள கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா எனும் பெருநிலப் பரப்பை ஆட்சிபுரிந்து வந்த ஶ்ரீவிஜயப் பேரரசின் மீது இராஜேந்திர சோழன் கடற்படை கொண்டு தாக்குதல் தொடுத்து வெற்றிகொண்டதன் ஆயிரமாம் ஆண்டு நினைவுகூரல் அது. அதனைத் தமிழகத்தில் கொண்டாடுவதை விடுத்துக் கம்போடியாவில் மேற்கொள்வது முரண்நகையாகத் தோன்ற இடமுள்ளது. “இராஜேந்திர சோழ மாமன்னன் மட்டும் எமது நாட்டின் பேரரசனாக இருந்திருப்பின் ஒரு மிலேனியத்துக்குரிய மிகப்பெரும் உலகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் வண்ணம் அவரது படைப்பாற்றலைக் கொண்டாடிக் காட்டியிருப்போம்” என்பதாகச் சோசலிச வியட்னாமைத் தோற்றுவித்த வியட்னாம் கொம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சொல்லியிருப்பதான தகவலொன்று உண்டு. அவ்வாறு சொல்லப்பட்டதா இல்லையா என்பதற்கு அப்பால் அப்பிராந்தியம் அன்றைய தமிழகத்தின் வாயிலாகவே தமது விவசாயக் கட்டமைப்பை விருத்தி செய்யக் கற்றுக்கொண்டதாக வெளிப்படுத்திய ஆய்வுகள் உள்ளன.
தமது மண்ணை வென்றடக்கிய மன்னன் என்ற காரணத்தால் இராஜேந்திர சோழன் குறித்து எல்லை மீறி அவர்கள் கொண்டாடிவிட இயலாது. அவ்வாறெனில் ஆக்கிரமிப்பாளனாக அடையாளப்படுத்துவதனைச் செய்திருக்க வேண்டும்; அதனை விடுத்து மானுடம் போற்ற வேண்டிய ஒரு நாயகனாகக் காட்ட முனைவதனை எப்படிப் புரிந்து கொள்வது? நீர் முகாமைத்துவப் பிரயோகத்தின் ஊடாக விவசாயப் பெருக்கத்துக்கு உரிய தொழில்நுட்ப விருத்தி தொடக்கம் அன்றைய உலகின் அதியுயர் பண்பாடு வரையானவற்றை அறிந்து பயன்படுத்துவதற்கு வழிப்படுத்தியதன் வாயிலாகத் தமது வளர்ச்சியை உந்தித் தள்ளியதான வகிபாகம் காரணமாகவே இராஜேந்திர சோழன் மீது பெரும் மதிப்புணர்வை வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சோழப் பேரரசின் சாதனையாளர்களாகப் போற்றப்பட்ட (இராஜராஜ சோழனை முன்னிறுத்தித் தஞ்சைப் பெருங்கோயிலில் இடம்பெற்ற ஆயிரமாம் ஆண்டு விழா) வேந்தர்களோ நவீன யுகத்தின் மகாகவி பாரதியோ அதே உணர்வுத்வேகத்துடன் இன்று போற்றப்படுவதில்லை. இராஜராஜ சோழன் முடிசூடிய ஆயிரமாம் ஆண்டு நினைவுகூரலை நாற்பது ஆண்டுகளின் முன்னே கோலாகலமாகக் கொண்டாடிய அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் கம்போடியாவைத் தளமாகக் கொள்ளும் வைபவத்தைச் சமாந்தரமாகத் தமிழகத்திலும் முன்னெடுத்திருப்பாரா? இன்று முதலமைச்சராகத் திகழும் அவரது மகனிடம் அவரளவில் இலக்கிய ஈடுபாடும் வரலாற்றுணர்வும் இல்லாதிருக்க வாய்ப்புள்ளதாயினும் நிர்வாகத் திறனில் அவரை விஞ்சும் ஆற்றல் உள்ள காரணத்தாலேயே இந்துத்துவ ஊடுருவலை இயன்றவரை பின்வாங்கச் செய்யும் வல்லமையை வெளிப்படுத்துகிறார். இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இந்து சமயத்தைப் பரப்புரை செய்வதற்கு முற்பட்ட ஆயிரமாம் ஆண்டு என இந்திய ஒன்றிய அரசு தலையை நுழைக்கும் என்பதால் இங்கே பிரமாண்டமான முன்னெடுப்பு நிகழாதிருக்கிறதா? ஏதோவொரு வடிவில் தமிழக அரசும் இதனை நினைவுகூருமாயினும் நாற்பதாண்டுகளின் முன்னர் இருந்த உணர்வுப் பெருக்கு இப்போது வற்றிப் போயுள்ளது என்பது ஓர் புறநிலை நிதர்சனம்!
இந்துத்துவம் அச்சுறுத்தலாகத் துருத்திக்கொண்டு தமிழகத்திலும் ஆழக்கால் பதிக்க முற்பட்டவாறிருக்கிறது. திராவிடர் இயக்கம் தன்னளவிலேயே அதற்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது. அதைவிடவும் 1991 ஆம் ஆண்டில் இந்தியா முழுமையிலும் எழுச்சி பெற்ற அம்பேத்கர் நூற்றாண்டைக் குறிக்கும் நினைவுகூரல் தமிழகத்தில் ஏற்படுத்தி இருந்த வலுவான தாக்கமும் திராவிடர் இயக்கத்துக்குப் புதிய சவாலாக அமைந்தது. திராவிடரியப் பார்வையிலான மறுவாசிப்பு ஏற்கனவே வேறுபட்ட பரிமாணங்களுடன் கடந்த காலத்தை மறுகட்டமைப்புச் செய்திருந்தது. அம்பேத்கரை முன்னிறுத்திய தலித்தியச் சிந்தனையின் எழுச்சி இன்னொரு சமூகத் தளத்தை அரசியலரங்குக்கு அறிமுகப்படுத்திக் கொண்டது. இதன் வெளிப்பாடு திராவிடர் இயக்கத்தின் நோக்குகளில் தாக்கம் விளைப்பனவாய் அமைந்தன.
பிராமண மேலாதிக்கத்தைத் தகர்ப்பதில் 1917 ஆம் ஆண்டு முதல் திராவிடர் உணர்வெழுச்சியானது இயக்க வடிவத்தை மேற்கொள்ளத் தொடங்கி முன்னெடுத்து வந்த செயலொழுங்குகள் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தமிழக அரசைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல சாதனைகளை நிறைவாக்கி வந்துள்ளது. பிராமணரல்லாதார் அரசியல் அமைப்பு ‘நீதிக் கட்சி’ என்ற பெயரில் தோற்றம் பெற்றபோது காங்கிரஸ் கட்சி ஈரோடு நகரசபைத் தலைவராக இயங்கிய ஈ.வெ.ரா. பெரியாரைத் தமிழகத் தலைவராக ஆக்கிக்கொண்டது. இந்திய விடுதலையின் பெயரில் பிராமணத் தேசிய முன்னெடுப்பு இடம்பெறுவதனை மறைக்கும் உத்தியாகத் தன்னைப் பயன்படுத்துவதனை உணர்ந்த பெரியார் 1925 ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்; எந்த அமைப்பின் வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்துவதற்காக மாநிலம் தழுவிய அரசியலுக்கு ராஜாஜியினால் வரவழைக்கப்பட்டவராகப் பெரியார் அமைந்திருந்தாரோ அதே நீதிக் கட்சியுடன் இணைந்து அதனைத் ‘திராவிடர் கழகம்’ என மாற்றி அரசியலுக்கப்பால் பண்பாட்டு இயக்கமாக வளர்த்தெடுத்து வீச்சுடன் பெரியார் முன்னெடுத்த செயல்வேகம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை விளைவித்தது. அந்த வளர்ச்சிக்காகச் சேர்ந்து உழைத்த அண்ணாதுரை, பண்பாட்டு எழுச்சியை அறுவடை செய்ய ஏற்றதான அரசியல் அதிகாரம் அவசியம் என வலியுறுத்தித் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி உருவாக்கிய தி.மு.க. 1967 இல் ஆட்சியதிகாரத்தை வென்றெடுப்பது சாத்தியமாயிற்று. பிராமணியத்துக்கு எதிராகப் பெரியார் 1925 இல் காங்கிரசை நிராகரித்தார் என்றால், அது உதயமான 1885 ஆம் ஆண்டிலேயே ‘காங்கிரசுக்குரியது பிராமணத் தேசியமே’ என்று எதிர் தேசியக்கருத்தை முன்வைத்த அயோத்திதாசர் எத்தகைய வீச்சுடன் செயற்பட்டிருப்பார்? அன்றைய காலம் இயக்க வடிவம் பெறலுக்கு உரிய கட்டத்தை எட்டியிருக்காத போதிலும் கருத்துருவாக்கத் தளத்தில் ‘ஒடுக்கப்பட்டோர் (தலித்) அரசியல்’ தொடக்கச் சிந்தனையை உருவாக்குவதில் அயோத்திதாசர் காத்திரமான பங்களிப்பை நல்கினார். மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் மதமாகத் தமிழின் ‘பூர்வ பௌத்தம்’ விளங்கியதெனக் கூறி அம்பேத்கருக்கு முன்னரே பௌத்தத்தைத் தழுவியும் இருந்தார். அயோத்திதாசர் 1914 இல் இயற்கையுடன் சங்கமித்த போதிலும் அவரால் அமைப்பாக்கப்பட்டு இருந்த தலித் செயற்பாட்டாளர்கள் அரசியல் அக்கறையுடன் தொடர்ந்து இயங்கினர். அத்தகையோரில் பலர் திராவிடர் இயக்கம் வலுப்பெற்ற முப்பதாம் ஆண்டுகளில் இருந்து அதனுடைய எதிர் தேசிய முன்னெடுப்பில் ஒன்றிணைந்தனர்.

அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. இன் ஆட்சி சாத்தியப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவாக முன்னர் 1969 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வெண்மணியில் இடம்பெற்ற வன்கொடுமைக் கொலைக் குற்றத்துக்கு நியாயமான தீர்ப்பை வழங்க இயலாத கையறுநிலை திராவிடர் அரசியல் தலைமைக்கு இருந்தது. அவ்வகையிலான ஒரு குற்றத்தை இழைத்த சூத்திரதாரிகளான பிராமணரல்லாத உயர்சாதி மேலாதிக்கச் சக்தியின் நலனை முதன்மையாகப் பேணும் அரசியல் அமைப்பே திராவிடர் இயக்கம் என்ற நிதர்சனம் சாதியத் தகர்ப்புச் சிந்தனையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த அரசியல் பின்னணி நிலவுகையில், அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தலித் அரசியல் களமாடத் தொடங்கிய சூழல் வந்தபோது பெரியாரும் திராவிடர் இயக்கமும் தலித் மக்களுக்கு எதிரான சக்திகள் எனும் கருத்துநிலை மேலெழத் தொடங்கியது. பிராமணரல்லாதார் நலன் பேணுதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் போதிய அளவுக்கு உள்வாங்கப்படாத போதிலும் எதிரணியென முத்திரை குத்துவது தவறான முடிவென்ற கருத்தைத் தலித் அரசியலைத் தொடக்கி வைத்தவரான அ. மார்க்ஸ் எடுத்துரைத்தார் எனினும் தீவிர தலித்தியவாதச் சிந்தனையாளர்கள் பெரியாரியத்தை எதிர் நிலைப்படுத்தியே இயங்கினர்.
தலித் அரசியல் தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய சமகாலத்தில் (90 ஆம் ஆண்டுகளில்) ஈழத் தமிழ்த் தேசியம் ஏனைய தமிழீழ விடுதலை அமைப்புகளைத் தடைசெய்து விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழீழப் பிரிவினைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் வரலாற்றுக் கட்டம் இலங்கையில் எட்டப்பட்டு இருந்தது. புலிகள் அமைப்பினர் கையேந்தியிருந்த புலிக்கொடி என்பது சோழப் பேரரசின் மேலாதிக்கச் ‘சாதனை’ ஏற்படுத்திய ஆளுமையை மீட்டுருவாக்க வேண்டும் எனும் உணர்வுந்தலின் பாற்பட்டது. அதேவேளை, தொடக்கம் முதல் இன்றுவரை மாவீரர் உணர்வு நிலையைக் கடந்து சோழப் பேரரசின் வரலாற்று வகிபாகம் எத்தகையது எனும் மறுமதிப்பீடுகள் மீது எந்தவொரு கரிசனையையும் அவர்கள் வெளிப்படுத்தியது கிடையாது!
சைவத் தமிழின் மேலாதிக்கத் தத்துவம்
மக்கள் நலன் வென்றெடுக்கப்பட வேண்டும் என இயங்குவதற்கு முன்னுரிமை வழங்குவதாக அல்லாமல் ஏதோவொரு சமூகச் சக்தியின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டாகச் செயலாற்றுவதாகவே எமது ஏடறிந்த வரலாறு அமைந்நிருந்தது. புலிக்கொடி ஏந்திய சோழப் பேரரசு என்பது உலக வரலாற்றில் மிக நீண்ட நெடிய காலப் பரப்புடைய முடிமன்னர் பரம்பரை ஆகும். முற்காலச் சோழர் என்பது கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்று உறையூரைத் தலைநகராகவும் பூம்புகாரைத் துறைமுகப் பட்டினமாகவும் நிர்வகித்து இயங்கியது. அதனுடன் சமகாலத் தமிழகப் பேரரசுகளாக மேலெழுந்த பாண்டியர், சேரர் எனும் மற்றிரு பேரரசுப் பிராந்தியங்களை வெற்றி கொண்டு கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து மிகப்பெரும் பேரரசாக விஸ்தீரணப்பட்ட நிலையில் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலைபெற்ற வரலாற்றைப் பெற்ற வகையிலும் ‘நீண்டகால ஆட்சியுடமை’ கைவரப்பெற்ற பேரரசாக வரலாற்றுப் பதிவைச் சோழப் பேரரசு பெற்றிருந்தது. கிறிஸ்து சகாப்தத்துக்கு முந்திய வீரயுகக் காலச் சகபாடிகளை மட்டுமன்றி அறநெறிக் காலத்தின் பிற்கூறில் எழுச்சியுற்ற தொண்டை மண்டலத்தின் பல்லவப் பேரரசையும் பிற்காலச் சோழர்கள் வெற்றிகொண்டிருந்தனர். பல்லவர்களது எழுச்சியை அடுத்து (ஏறத்தாழச் சமகாலத்தில்) தென்தமிழகத்தில் களப்பிரர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட பாண்டியப் பேரரசையும் பலநூறு சிற்றரசுகளாகச் சிதறுண்டிருந்த தமிழகப் பரப்பில் ஆட்சி புரிந்த களப்பிரர்களையும் தோற்கடித்துப் பிற்காலச் சோழப் பேரரசு எழுச்சி பெற்றிருந்தது. பல்லவர்களும், பாண்டியர்களும் அவர்களது சமகாலத்தின் களப்பிரர்கள் போல வணிகச் சமூக சக்திக்குரிய ஆட்சியை முன்னெடுக்கும் வண்ணம் வணிகக் கருத்தியலுக்குரிய சமண மதத்தவர்களாக இருந்தனர். முன்னதாக வீரயுகத்தில் தோற்றம்பெற்று விருத்தியுறத் தொடங்கிய சேர, சோழ, பாண்டியர்கள் எனும் மூவேந்தர்கள் என்போர் விவசாயச் சமூக சக்தி மேலாதிக்கம் பெறுவதன் காரண காரணிகள் எனும் வகையில் தமிழின் இயற்கை வழிபாட்டுச் சமயத்துடன் வடக்கில் இருந்து வந்த பிராமண மதத்தை இணைத்த வளவழிபாட்டுச் சமயப் பரிணமிப்பை ஆதரித்தனர். இவ்வகையில் நான்கு நூற்றாண்டுகளாக (கி.மு 3 முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரை) நிலைபெற்ற விவசாயத் திணை மேலாதிக்கத்தை கி.பி 2 ஆம் நூற்றாண்டில் முறியடித்து வணிகத் திணை மேலாதிக்கத்துக்கு உரிய அரசியல் முறைமை களப்பிரர் காலம் முழுமையிலும் நிலைபெற இயலுமாக இருந்தது.
வணிகத் திணை மேலாதிக்கத்தை வீழ்த்தும் பக்திப் பேரியக்கம் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வீறுடன் செயற்படத் தொடங்கிய போது ஞானசம்பந்தரால் பாண்டிய மன்னனும் நாவுக்கரசரால் பல்லவ மன்னனும் சமணத்தைக் கைவிட்டுச் சைவ சமயத்தைத் தழுவினர். விவசாயத் திணை மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் புதிய கருத்தியலுடன் பரிணமித்த சைவம் சோழப் பேரரசர் காலத்தில் பெரும் நிலப்பிரபுக்களுக்கானதாக விருத்தி செய்யப்பட்டது. கடல் கடந்து சென்று அங்கு கோலோச்சும் பேரரசுகளைத் தாக்கிப் பணிய வைக்கும் கடற்படையுடன் (கே.ரீ. கணேசலிங்கம், 2017. ‘சீனாவும் இந்து சமுத்திரமும்’, சேமமடு பொத்தகசாலை, கொழும்பு. ப. 16) மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய இராஜேந்திர சோழன் ‘உலகெலாம் ஓதும்’ மதமாகச் சைவத்தை நிலைநிறுத்தியதில் நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பின் உச்சத்தைக் காணலாம். பிந்திய மூலதன மேலாதிக்கம் போல அது இல்லை. தனக்கான பிராந்திய நிலப்பரப்பில் அதிகாரம் செலுத்துவதற்கு அப்பால், வெற்றிகொண்ட பகுதியில் இருந்து திறை வசூலிப்பதாக அன்றி, மூலதனத் திரட்சிக்கான குடியேற்றவாதச் (காலனித்துவச்) செயலொழுங்கு அவசியமில்லை. மேலாதிக்கம் பெற்ற நாட்டில் தமது வணிகர்களுக்குப் பாதுகாப்பான வர்த்தக நடவடிக்கையை உறுதிப்படுத்தலே முதன்மையாக இருந்தது; அதேவேளை அந்த நாடுகளின் நிலப்பிரபுத்துவம் செழிப்புறுவதற்கு சோழப் பேரரசு உந்துசக்தியாக விளங்குவதற்குத் தடை இருக்கவில்லை.
அந்த வரலாற்றுக் கட்டத்தின்போது தமிழக நிலப்பிரபுத்துவச் சமூகச் சக்திகளாக இரு பிரிவினர் உறுதிப்பட்டனர். நிலவுடைமை வாழ்வியலை ஏற்படுத்துவதற்காக மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாகவும் பக்திப் பேரியக்கம் மூலமாகவும் இரண்டாம் பேரரசு விரிவாக்க யுத்தங்கள் மூலமாகவும் போராட்ட முனைப்பை வெளிப்படுத்தி வெள்ளாளர் எனும் தலைமைச் சாதியாக மேலெழுந்தவர்கள் ஒரு தரப்பினர். அவர்களது ஆக்கிரமிப்பில் பெற்ற சொத்துடைமையைக் கருத்தியல் களத்தில் கடவுளை முன்னிறுத்தி நியாயப்படுத்தும் பொருட்டு அவர்களால் தானம் வழங்கி நிலப்பிரபுக்களான பிராமணர்கள் இரண்டாம் தரப்பினர். செட்டிச் சாதி உள்ளிட்ட வணிகத் திணைக்குரிய தரப்பினர் இவ்விரு சாதிகளது மேலாதிக்கத்தை அங்கீகரித்துத் துணைச் சக்தியாக இயங்கி வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் தமிழகத்தில் கோலோச்சி வந்தது. யாழ்ப்பாணம் பதினாறாம் நூற்றாண்டு முதலாகக் காலனித்துவ மயப்பட்டபோது மேன்மைகொள் சைவநீதி நெருக்கடிக்கு உள்ளானது; அதன்போது சிறு சலனத்துக்கு உள்ளாகும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் நிலப்புரபுத்துவச் சாதி என வெள்ளாளர் மட்டும் தான் இருந்தனர்.
தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நிலவுகின்ற இந்தப் பிரதான வேறுபாடு நாவலரை மறுமதிப்பீடு செய்வதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது. சோழப் பேரரசினூடாக கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை ஆளும் முதன்மைச் சாதியென வெள்ளாளர் நிலையூன்றி இருந்த தகைமை அந்தப் பேரரசு தகர்ந்ததோடு கைநழுவிப் போயிற்று. தெலுங்குப் பிரதேசத்துக்கு உரிய விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குத் தமிழகத்தின் பெரும் பகுதி ஆட்படலாயிற்று. அவர்களது ஆளுகைக்குள் தெலுங்கு நிலப்பிரபுக்கள் உருவான போது தமக்கான நிலங்களைக் காடழித்து உருவாக்குவதிலும் அதனை வளமூட்டுவதிலும் ஆட்சியாளரது ஆதரவைக் கூடுதலாகப் பெற்றனர்; வெள்ளாளரது சொத்துக்குப் பங்கமேதும் இல்லை என்ற போதிலும் அரசுக்கு அணுக்கமாவதில் மூன்றாம் தரப்பாயினர். இடையிட்ட தரப்பான தமிழ்ப் பிராமண நிலப்பிரபுக்கள் வெள்ளாளரைக் காட்டிலும் அரசுடன் கூடுதல் நெருக்கத்தை எட்டுவதில் அவர்களிடம் இருந்த ஆன்மிகத் தலைமை வலுமையான கருவியாக அமைந்தது. சோழப் பேரரசிடம் இருந்து தென் தமிழகத்தை மீட்டெடுத்த பாண்டியர்களது ஆட்சியெல்லைக்கு உரிய இராமநாதபுரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கிருந்து வெள்ளாளர்கள் தமக்கான ‘பதினெட்டுச் சாதிகளுடன்’ வெளியேறி யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் குடியேறினர். அவர்கள் மட்டுமே நிலப்பிரபுத்துவச் சாதியாக அமையும்படி அவர்களுக்கான ‘ஆரியச்சக்கரவர்த்தி அரச வம்சம்’ புதிய வகைக் கட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்திக்கொண்டது!
முன்னதாகச் சோழப் பேரரசர் காலத்தில் தமது பொருளியல் மேலாதிக்கத்தை ஏற்புடையதாக்கும் பொருட்டு நிலவுடைமையுடன் ஆன்மிக மேலாண்மையையும் பிராமணர்களுக்கு வழங்கிய தவறான செயலின் வரலாற்றுப் படிப்பினை காரணமாக யாழ்ப்பாணப் புலப்பெயர்வில் பிராமணரைச் சமமான நிலவுடைமையாளர் என ஆக்கிக் கொள்ளாதது மட்டுமன்றி, ஆன்மிகத் தலைமையையும் வழங்காமல், வெறும் கோயில் பூசகர் எனும் தொழிலாளிகளாக மட்டுப்படுத்திக் கொண்டனர். ஆன்மிகத் தளத்தில் தொண்டூழியம் புரியும் பிராமணர்களின் வேத-வேதாந்தத்தைக் காட்டிலும் மேலான தத்துவச் செல்வமான சைவ சித்தாந்தமாக வடிவம்பெறத் தொடங்கிய ஆளுமை வெள்ளாளர்களுக்கு அப்போது இருந்தது; அதனைக் கையேற்றுப் புலப்பெயர்வுக்குத் தலைமையேற்றவர்கள் ஆன்மிகத் தலைமையையும் தமக்கு உரியதாகக் கைவசப்படுத்தினர். இவ்வகையில் வெள்ளாளர்கள் சமூக – பொருளாதார – ஆன்மிக – பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் தனியொரு சாதியாகப் பெற்றிருந்த மேலாதிக்கம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மிகப் பிரதான அம்சம்!
இவ்வகையில் வெள்ளாள மேலாதிக்கம் மதத்தளத்தையும் கையகப்படுத்தி, அதனைக் கடந்து ‘உலகெலாம் ஆளத் தகுதி பெற்றதான’ வீறாப்புடன் மொழிக் காவலர் பாத்திரத்தையும் வகிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். வீரயுகத்தில் பெற்ற முதல் பேரரசு வாய்ப்பைக் களப்பிரர்களிடம் இழந்த போது தெலுங்குப் பிரதேசத்தில் சிற்றரசு ஒன்றை அமைத்திருந்தனர். மீண்டும் சோழ மண்டலத்தைக் கையகப்படுத்த முன்னர் தமிழரல்லாத பல்லவர்களின் படைத் தளபதிகளாக இயங்கி இருந்தனர். சைவப் பாதுகாவலராகத் தம்மைக் கட்டமைப்பதற்கு ஏற்றதாக வணிகச் சாதிக் கருத்தியலின் பௌத்தத்தையோ சமணத்தையோ தழுவவில்லை எனும் புனிதம் சோழர்களுக்கு இருந்தது. அத்தகைய புனிதம் பெற்றிராத பாண்டியர்கள் ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை’ எனும் புனைவை வெளிப்படுத்தலாயினர்.
சமணத்தில் சிலகாலம் வாழ நேர்ந்தமையால் ‘தாழ்வுற்றுப்போன’ குலப்பெருமையைத் ‘தமிழின் தொன்மை பேணிய குடி’ என்பதன் வாயிலாக மீட்டுருவாக்க ஏற்றதான புராணப் புனைவு அவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. தனது முதிர் பருவம் வரை சமணராக வாழ்ந்து சைவத்தைத் தழுவியவரான நாவுக்கரசர் சமணத் துறவிகளின் பள்ளியில் இயங்கிய அனுபவத்துடன், சமண மதம் வருவதற்கு முன்னதாகவே வளமான வாழ்வைப் பெற்றிருந்த தமிழை வளர்த்த பூர்வ குடிகளுடன் சிவனை இணைக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டார். சமணர் வருகைக்கு முன்னரே ஆசீவகச் செயற்பாடு இருந்தமையை அறியும் வாய்ப்பு இருக்கும் வகையில் ஆசீவகப் பள்ளிகள் கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரை இயங்கி வந்தன; அவர்கள் ஆளுமையுடன் இயங்கிய பூர்வப் பள்ளிகளின் ‘சங்கத்தில் சிவன் தலைமை’ இருந்ததான புனைவு நாவுக்கரசரால் தொடக்கப்பட்டு பாண்டியர் பெருமைக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது!
பாண்டியர் நிலப்பரப்பில் இருந்து புலப்பெயர்வடைந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் இங்கிருந்த ஆட்சியாளர்களைத் தோற்கடித்துத் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்த வேண்டியவர்களாக இருந்தனர். அதற்குரிய படைபலத்தை மட்டுமன்றிச் சோழப் பேரரசின் சிவன் – பாண்டியரின் தமிழ் என்பவற்றைக் கையேற்ற ஆன்மப் பலத்தையும் கொண்டவர்களாக வெள்ளாளர்கள் திகழ்ந்தனர். யாழ்ப்பாண இராச்சியத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலையூன்றிய ஆட்சி உரிமையைத் ‘தேச வழமைச் சட்டமாக’ ஐரோப்பியரிடம் காலனிய மயப்பட்ட பின்னரும் பேணும் வாய்ப்பை வெள்ளாளர் பெற்றுக்கொண்டனர். வெள்ளாளர்களின் தலைமையில் தமது காலனிய ஒடுக்குமுறையை இணைத்து முன்னெடுக்கும் கலையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். அதற்கமைவான காலனியக் கருத்தியலைக் கையேற்கும் பொருட்டு மனப்பூர்வமாகவே சைவத்தைக் கைவிடும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட போது நாவலர் எத்தகைய எதிர்வினை புரிந்தார் என்பது கவனிப்புக்குரியது. முன்னதாகச் சட்டப்படி அனைவரும் கிறிஸ்தவர் எனப் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆட்சிபுரிந்த போது, மனதால் சைவராக வாழ்ந்து கொண்டு அரசுப் பதிவுகளில் கிறிஸ்தவர்களாக வாழ முடிந்தது. மதச் சுதந்திரம் என விரும்பிய மதத்தைப் பின்பற்ற அனுமதித்தவாறு கல்வி, வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆன்மிக அடிமைகொள்ளலை மேற்கொண்ட பிரித்தானியரே மிகக் கேடு விளைவிப்போராக உள்ளனர் என்பது நாவலரின் அபிப்பிராயம்; இந்தக் கருத்தை முன்வைத்த நாவலருக்கு வேறு உள்நோக்கம் ஏதும் இருக்க வாய்ப்புள்ளதா?
சுதேச மொழிகளின் எழுச்சி மிலேனியம்
காலனித்துவ ஆட்சியாளர்களில் இறுதியாக இலங்கை முழுமையையும் வென்றடக்கித் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், நேரடியாகத் தன்னுடைய ஆட்சி கைவிட்டுப்போக நேரும் பட்சத்திலும் அபகரிப்பு வாய்ப்பைத் தொடர்வதற்கு ஏற்ற நடைமுறைப் பிரயோகங்களுடன் நிர்வாக முறைமையை வகுத்து இயங்கியவாறு இருந்தது. இந்தியாவை ஒட்ட வறுகிச் சுரண்டுவதே அவர்களுக்கான பிரதான குறிக்கோள்; அதற்கமைவாக இலங்கையைப் பின்தளமாகத் தொடர்ந்து பாவிக்க ஏற்றதாகப் பல சலுகைகளைக் கேட்காமலே வழங்கி வந்ததோடு, சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டு இயங்கும் நாடாக இலங்கையை நிர்வகித்திருந்தது பிரித்தானியக் குடியேற்ற சக்தி. அதன் போது சிங்களத் தரப்புக்கு அதிகளவான அரசியல் வாய்ப்பை வழங்கிய அதேவேளை யாழ்ப்பாணத் தமிழருக்கு மிகக்கூடுதலான கல்வி வாய்ப்பை வழங்கி யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்திருந்த ஊழியர் படையை நாடு பூராவுக்குமான உத்தியோகத்தர்களாக அமர்த்திக் கொண்டனர். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இதன் பேறாக முகிழ்த்த முரண்பாடுகள் முற்றிக் கனிந்து காலனிய சக்திகள் எதிர்பார்த்த நற்பேறினை அவர்களுக்கு வழங்குவதாக அமைந்தது.
சுதந்திர இலங்கையின் ஆட்சியுரிமை ஏற்கனவே வகுக்கப்பட்ட பிரகாரம் சிங்கள மேலாதிக்கத்துக்கு உரியதாக அமைந்திருந்தது; சிங்களப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண ஊழியர்கள் நிறைந்திருப்பதனை மாற்றி அமைப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் உள்ளூர உருவாகி விருத்திபெறத் தொடங்கிய சிங்களப் பேரினவாதத்தை வளமூட்டி வளர்ப்பதற்கே உதவியது. தமது பகுதியில் தம்முடைய நிர்வாக முறைமையைக் கட்டமைக்க அவசியப்பட்ட விடுதலைத் தேசிய நாட்டத்துடன் மேலெழுந்து வந்த தேசிய முதலாளித்துவ அணியாகிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையேற்று இத்தகைய மாற்றத்தை முன்னெடுத்தது. அவர்களிடம் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்று அவசியத்தை மூடிமறைத்தவாறு மட்டுமன்றி, ஏகாதிபத்தியப் பிடிக்குள் இலங்கையைத் தொடர்ந்தும் இறுகப் பிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்த் தேசியம் தான் செயற்படுத்தி வந்த நடைமுறைகளின் நீடிப்பாகத் தெற்காசியப் பிராந்தியம் முழுமைக்குமான நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. சிங்களத் தேசியத்தின் தவறொன்றை ‘இனவாத முனைப்பு’ என முத்திரை குத்திய தமிழ்த் தேசியம் உண்மையான பேரினவாத ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துச் செயற்படுத்தும் அணியாக அமைந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உடனேயே கூட்டமைத்து இயங்கி வந்திருந்தது.
தமிழ்த் தேசியத்தின் இந்தச் செயலொழுங்கை மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் என்றால் தமது பாதிப்புகளுக்கு உரிய மாற்றினைச் சிங்களத் தேசியம் கவனங்கொள்ளவில்லை என்ற அடிப்படை அம்சம் காரணமாகவே என்பதனைப் புரிந்து கொள்வது அவசியம். ஆங்கிலப் பாடசாலைகள் வாயிலாக கற்கும் வாய்ப்பினூடாக இலங்கை பூராகவும் (கடல் கடந்தும் கூட) ஊழியம் புரிந்துவந்த வாழ்முறைக்குப் பங்கம் ஏற்படுகிற போது கல்வியை மூலதனமாக வைத்து இயங்கிய சமூகத்துக்குரிய மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; அதனை மேற்கொள்ளாத சிங்களத் தேசியத்தை தமிழ் மக்களுக்குப் பரம எதிரிகளாகக் கட்டமைக்கும் அரசியல் குறிக்கோளில் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் தொடர்ந்தும் வெற்றி பெற்றுவந்தது. அதனை முறியடிக்கும் விடுதலைத் தேசிய முன்னெடுப்புகள் தமிழரசுக் கட்சியின் தொடக்க வரலாற்றிலும் எண்பதுகளின் முற்கூறில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இளைஞர் இயக்கங்களாலும் (EROS…,) மேற்கொள்ளப்பட்ட போதிலும் மேலாதிக்கத் தமிழ்த் தேசியமே முன்கையெடுத்து இயங்க ஏற்றதான புறச்சூழல் தொடர்ந்து வந்துள்ளது.
தமிழரின் தொன்மைப் பெருமை, உலகாண்ட உன்னத வரலாறு என்பன மக்களைத் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய விடுதலைக்கு விரோதமாக அணிதிரட்டும் கருவிகளாகக் கையாளப்பட்டன. தமிழரின் மேலாதிக்க மனப்பாங்குக்கு மாறாக சிங்களத் தேசியத்துக்கு விடுதலை வரலாற்றைப் பேசும் வாய்ப்பிருந்தது. தனது ஆளுமையை வலியுறுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்களை அணிதிரட்டும் வரலாற்றுக்கடமையை பேசுபொருளாக்கிய போது எல்லாளனால் ‘அபகரிக்கப்பட்டிருந்த’ அநுராதபுர இராச்சியத்தை மீட்டெடுத்த துட்டகைமுனுவைத் ‘தேசிய வீரனாக’க் கட்டமைத்துக் காட்டியது சிங்களத் தேசியம். வரலாற்றுப் பதிவில் ‘சிங்கள வீரனாக’ அல்லாமல் ‘பௌத்தத்தை வளப்படுத்திய’ வீரனாகவே கைமுனு பதிவு பெற்றுள்ளார். அவரை நாயகனாக வைத்துப் பௌத்த வரலாற்றைக் காவியமாக்கியிருந்த மகாவம்சம் சிங்கள மொழி குறித்து எந்தவொரு அக்கறையும் காட்டவில்லை. மட்டுமின்றி, சிங்கள மக்களிடையே நிலவிய நாட்டார் பாடல்களில் எல்லாளன் உன்னதமான ஒரு மன்னனாகவும் அவருடன் தனிப்போர் புரிந்து இராச்சியத்தை மீட்டெடுத்த துட்டகைமுனு பௌத்தத்தை வளப்படுத்தியதன் வாயிலாகத் தன்னை நிலைநிறுத்தியவனாகவுமே பேசப்பட்டுள்ளன. இந்த மாற்றம் நிகழ்ந்து ஐந்து நூற்றாண்டுகளாக மக்கள் மத்தியில் ஊடாடிவந்த அந்த நிகழ்வுகள் குறித்த கதைப் பாடல்களை அழித்து வெளிப்பட்ட மகாவம்சம் பாளிமொழியில் அமைந்த வகையில் சிங்கள (நாட்டார்) இலக்கிய வரலாற்றுக்குத் தீங்கிழைத்துள்ளது எனும் ஆதங்கம் சில சிங்கள வரலாற்றாசிரியர்களிடம் உள்ளது.
சிங்கள மொழிக்குரிய வரலாற்றுப் பதிவு கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதலாக கல்வெட்டு எழுத்துகளின் ஆதாரத்தைக் கொண்டுள்ளது. அதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கலிங்கத்திலிருந்து (பீகாரிலிருந்து) வந்த குடிகள் பாண்டிய அரச குலத்தினருடன் திருமண உறவில் தொடர்பாடிய வரலாற்றுப் பதிவுகளும் பின்னர் இடம்பெற்றுள்ளன. வரலாற்றுணர்வுடன் தேடல்களை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களில் ஆறு மொழிப்பிரிவினர்களின் ஒன்றிணைவினால் சிங்கள மொழியின் உருவாக்கம் ஏற்பட்டதாய் வலியுறுத்தினர். மேற்படி (க.பொ.த உயர்தர A/L வரலாற்றுப் பாட நூல்கள் முதல் தொகுதியில் இதனைக் காண இயலும்) இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள இலக்கிய உருவாக்கம் நாட்டார் இலக்கிய வடிவத்தில் இருந்ததான இந்தக் கருத்தில் இன்றைய சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்க உணர்வுநிலை தொக்கியுள்ளது என்பது இரகசியமானதல்ல.
சிங்களத்தில் மட்டுமன்றி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு நல்கிய தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளிலும் அந்தச்சமகாலத்தில் அந்தந்த மொழிக்குரிய நாட்டார் இலக்கியங்கள் நிலவிவந்துள்ளன. பின்னர் தோற்றம் பெற்று இன்றுவரை நிலைபேறடைந்த செவ்வியல் மொழியாக்கங்களான இலக்கியங்களில் அந்த நாட்டார் பாடல்களின் தாக்கம் தொடர்ந்துள்ளன. இன்று நிலவும் சிங்கள, தெலுங்கு, கன்னட, வங்காள இலக்கியங்கள் அனைத்துமே கி.பி ஏழாம் நூற்றாண்டின் பின்னர் உருவானவை. படித்த உயர் குலாத்தினருக்கும் மதப்பரப்புரையாளர்களுக்கும் அவசியப்பட்ட வடிவம் வேண்டியிருந்த வகையில் பாளிமொழியில் புத்தரைப் பாடிப்பரவினால் போதும் என்றிருந்த சமூகக்கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்து நிலப்பிரபுத்துவச் சமூக நியதி ஏற்பட்ட போது நிலத்தில் பணியாற்றும் பண்ணையடிமைகளும் ஏற்றிப்போற்றும் பரம்பொருளாகப் புத்தர் கொண்டாடப்பட வேண்டி ஏற்பட்ட போது புழங்கு மொழியில் புத்தர் பாடப்படும் அவசியம் ஏற்பட்டது: கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த வரலாற்று அவசியமே புத்தரைப் பாடும் ‘பூஜாவலிய’ எனும் சிங்கள இலக்கிய உருவாக்கத்தைத் தொடக்கி வைத்தது. அதேகாலத்தில் தெலுங்கு இலக்கியம், அடுத்த நூற்றாண்டுகளில் கன்னடம், மலையாளம் எனும் இலக்கியங்கள் உருவானபோது விஷ்ணுவை முழுமுதல் பரம்பொருளாகக் காட்டும் மகாபாரத, இராமாயண இதிகாசங்கள் அந்தந்தப் புழங்கும் மொழிகளில் வெளிப்படலாயின. இரண்டாம் ஆயிரமாம் ஆண்டுகள் (கி.பி 1000 ஆம் ஆண்டு முதலான மிலேனியம்) இத்தகைய ‘சுதேசிய மொழிகளின் ஆயிரமாண்டு’ (Vernacular Millenium) எழுச்சிக் காலமாக இருந்தது (பேரா. லியனகே அமரகீர்த்தி ‘நாங்கள் தேர்ந்தெடுத்த பாதைகளும் சிங்களமொழி – இலக்கியங்களைச் சார்ந்த புலமைத்துவ அறிவியல் வரலாற்றின் பிரதான சந்தர்ப்பங்களும் ஆற்றல்களும்’, தமிழாக்கம்: சாமிநாதன் விமல், அரச இலக்கியக்குழு, லேக் ஹவுஸ் நிறுவனம், 18.10.2025. பக்.25).
மிகச்சிறந்த சமஸ்கிருத மொழிப் புலமையாளர்களில் ஒருவரான ஷெல்டன் பலொக் என்பவரது கருத்தை முன்வைத்து பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி மேலும் கூறுவார்: “இந்த ஆயிரம் வருடகாலப் பிரிவின் தொடக்கம் கி.பி 10 ஆம் நூற்றாண்டளவில் நிகழ்ந்ததாக அவர் காணுகிறார். அவருடைய விவரிப்பின்படி சிங்கள மொழியும் இந்தப் ‘பிராந்திய மொழிகளின் வளர்ச்சி’யின் ஆயிரம் வருடகாலப் பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. அவர் இந்தச் சம்பவத்தின் பல வேறுபட்ட உணர்த்தப்படுதல்களையும் அர்த்தங்களையும் விரிவான ஆய்வுக்குட்படுத்துகிறார். தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ், குஜராத்தி, ஹிந்தி, சிங்களம் போன்ற மொழிகள் பத்தாம் நூற்றாண்டின் பின்பு இலக்கிய மொழிகளாக வளர்ச்சியடையும் போது குறிப்பிட்ட மொழிகளின் இலக்கியக் கோட்பாடு பற்றிய கருத்தியலும் வளர்ச்சியடைந்தது எவ்வாறு என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். குறிப்பிட்ட மொழிகளுக்குள் ஏற்கனவே இலக்கிய மொழியாகிய ஒரு மொழியாக சிங்கள மொழியை அவர் காண்கிறார். எமது பிரதான செவ்வியல் இலக்கிய நூல்களும், கோட்பாட்டு நூல்களும் தோன்றியது 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு என்றதன் காரணமாக அவருடைய ‘சுதேசிய மொழி ஆயிரமாண்டு’ எம்மைப் பொறுத்தவரையிலும் மிகவும் பொருத்தமாக உள்ளது” (மேற்படி, பக். 25-26).
இந்தப் பொதுமைப்படுத்தலுக்குள் தமிழ்மொழி இல்லை என்பதை அறிவோம்; அந்த எல்லைக்கும் முன்னதாக ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னரே (கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முதலாக) எழுத்துப் பயன்பாட்டு விருத்தியுடன் திகழ்ந்த தமிழின் வீரயுக வாய்மொழிப் பாடல்கள் ‘சங்ககாலக் கவிதைகள்’ எனப் பின்னால் தொகுக்கப்பட்டு எழுத்துருப் பெற்றிருந்தமை வரலாற்றுப் பதிவு. அதேவேளை சிவன், விஷ்ணு ஆகிய பரம்பொருள்களை பண்ணையடிமைகளும் பாடிப் பரவும்படியான வேறுபட்ட பண்புக்கூறுகளுடன் கூடிய இலக்கிய வெளிப்பாடு, இதே ‘சுதேசிய மொழி ஆயிரமாண்டு எழுச்சி’ எனும் காலப்பரப்பில் தமிழின் செல்நெறியை மாற்றிப் புனைந்தது எனும் பொருளில், அந்தப் பொதுப்பட்டியலுக்குள் தமிழ் அடங்க நேர்ந்தமை பொருத்தப்பாடுதான்!
மதமும் மொழியும் மக்களை ஒன்றிணைக்கும் கருவிகள்
இனமரபுக் குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கான கடவுளரைத் தத்தமது வாழ்வியலில் இணைந்த தொடர்பாடல்கள் வாயிலாகப் பெற்றிருந்தன. பிரதேசம் ஒன்றுக்குள் பல கடவுளர்கள் அவ்வகையில் கலந்துகொள்ளும் வளர்ச்சியில் எந்தவொரு கடவுளும் மற்றொன்றுக்குப் பணியும் அவசியம் அற்றிருந்தனர். நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலத்தில் இயற்கையைப் பிரிந்த மேலான கடவுளர்கள் பற்றிய சிந்தனை வந்த வரலாற்றுக் கட்டத்திலும் மேலாதிக்கத் தரப்பினர் கடவுள் முழுமுதல் பரம்பொருளாக ஆகிவிடவில்லை. வணிக மேலாதிக்கம் நிதர்சனமான போது பௌத்தமும் சமணமும் வணிகக் கருத்தியல் மேலாதிக்கத்தைப் பரப்புரை செய்கையில் பாளியும் பிராகிருதமும் மதப் பரப்புரை செய்யும் மொழிகளாகத் துலங்க இயலுமாயிருந்ததில் ‘மேன் மக்களின்’ கடவுளராக மட்டுப்பட்டு அந்த மதங்களால் செயற்படும் வரையறை நிலவியதைக் காண்கிறோம். கி.பி 7 ஆம் நூற்றாண்டின் பின்னர் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி முறை வந்த பின்னர் நிலவுடமையாளர்களின் பரம்பொருளை (சிவன், விஷ்ணு, சக்தி, புத்தர்) முழுமுதல் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரே நிலப்பரப்பில் இயங்கும் வாழ்முறை போல அந்தப் பரம்பொருளுக்குப் பணிந்ததாகத் தமது கடவுளரைக் கட்டுப்பட்ட நிலையில் கொண்டாட விதிக்கப்பட்ட அனுமதிக்கு இணங்க நேர்ந்தது.
பழைய இனமரபுக்குழு வழிபாட்டுத் தொடர்சி பேணப்பட்டாலும் கூட ஒரு முழுமுதல் கடவுளுக்குக் கட்டுப்படும் இந்த இணைப்பில் வேறுபட்ட தரப்பாருக்குள் ஒன்றிணைப்புச் சாத்தியப்பட்டது. ஒரே பரம்பொருளுக்கு ஆட்பட்டவர்களாக மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக மதம் இயங்கியுள்ளது. முரண்பட்டு மோதும் வரலாறுகளில் வேறு மதங்கள் இடையே ஏற்பட்டதுண்டு; மோதலின் பின் இருதரப்பம் (ஏற்றத்தாழ்வுடன்) கூடி வாழ நேரும் போது இருமதங்களின் கடவுளர்களைப் பேதமின்றி அரசர்களும் மக்களும் மதித்து வழிபட்ட வரலாறு நீடித்திருந்தது.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சாத்தியப்பட்ட பின்னர் முழுமுதல் கடவுள் இடத்தில் ஒன்றிணைக்கும் பணியை மொழி பெற்றுக்கொண்டது. ஒரே மொழிபேசும் குறித்த பிரதேசம் தேசிய உணர்வுக்கு உரியதாக வேண்டியிருந்த போது மதத்தின் இடத்தை மொழி பிரதியீடு செய்துகொண்டது. வேறுபட்ட வாழ்முறைகளைக் கொண்ட சாதிகள், வர்க்கங்கள் என்ற பேதங்கள் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக இன்று மொழி!
இணைக்கும் கருவிகளாக இயங்கிய மதத்தையும் மொழியையும் காலனித்துவமும் ஏகாதிபத்தியமும் எவ்வாறு கையாண்டன? காலனித்துவ ஊடுருவல் பண்பாட்டு மேலாதிக்கத்துடன் உள்ளூரில் நிலவும் மதங்களைக் கையாண்ட முறைமை எத்தகையது? அதன் பிரித்தாளும் ஆட்சிமுறைமையில் நாவலரின் வகிபாகம் எவ்வாறு இருந்தது? இவை குறித்த மக்களின் கருத்து நிலைகளைக் காலனித்துவம் மாற்றியமைத்தபோது மக்களிடம் வெளிப்பட்ட எதிர்வினை எத்தகையது? நாவலரின் சமகாலப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களின் இயங்குமுறை போலத்தான் நாவலருடைய சைவத்தையும் தமிழரையும் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் அமைந்திருந்தனவா? தொடர்ந்து இவை குறித்து அலசுவோம்.



