அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தாக்கம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தாக்கம்

December 9, 2025 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: வி.எஸ். கணேசலிங்கம்

சித்திரவதைகளிலிருந்தான விடுதலை, சட்டத்தின் சமமான பாதுகாப்பு, தன்னிச்சையான கைதும் சட்டவிரோத தடுப்புக்காவலும் ஆகியவற்றிலிருந்து விடுதலை, நியாயமான விசாரணைக்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்று கருதப்படுவதன் அவசியம், பேச்சுரிமை, ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான மக்களுக்கிருக்கும் உரிமை என்பவை, நமது 1978 அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட (மக்களது) அடிப்படை உரிமைகளில் அடங்குகின்றன. சட்டப் பிரிவு 13 (1) ஆனது, சட்டத்தால் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையிலன்றி, எந்தவொரு நபரையும் கைது செய்ய முடியாது என்று கூறுகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்ட எந்தவொரு நபருக்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்பட வேண்டும். பிரிவு 13 (2) சட்டத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நடைமுறையின்படி, காவலில் வைக்கப்பட்டுள்ள, தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது ‘தனிப்பட்ட சுதந்திரம்’ பறிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், அருகிலுள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்த நீதிபதியால், சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் உத்தரவின் பேரில் அல்லாமல், எந்த ஒருவரும் காலவரையின்றிக் காவலில் வைக்கப்படவோ, தடுத்து வைக்கப்படவோ அல்லது அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்கும் வகையில் நடத்தப்படவோ கூடாது என்றும் குறிப்பிடப்படுகின்றது. பிரிவு 13 (3), ‘குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபருக்கும், நேரடியாகவோ அல்லது ஒரு வழக்கறிஞர் மூலமாகவோ, ஒரு  தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் நியாயமான விசாரணையின் அடிப்படையில் விசாரிக்கப்படுவதற்கான உரிமை உண்டு’ என்று குறிப்பிடுகிறது. பிரிவு 13 (4), ‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின் அடிப்படையில், தகுதிவாய்ந்த நீதிமன்ற உத்தரவின் பேரால் அன்றி, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனையோ அல்லது சிறைத் தண்டனையோ விதிக்கப்படக் கூடாது’ என்று குறிப்பிடுகிறது. பிரிவு 13 (5), ‘ஒவ்வொரு நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று கருதப்பட வேண்டும்…’ என்றும், பிரிவு 13 (6), ‘எவராவது ஒரு நபர் செய்யும் ஏதாவதொரு செயலோ, அல்லது ஏதாவதொரு செயலைச் செய்யாமல் இருத்தலோ (அத்தகைய செயல் அல்லது தவறு) நிகழ்ந்த காலத்தில், அது ஒரு ‘குற்றமாக’ (வரையறுக்கப்பட்டு) இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், அத்தகைய செயலுக்காகவோ அல்லது தவறிழைப்பிற்காகவோ எந்தவொரு நபரும் அச்செயலுக்கான குற்றவாளியாக நடாத்தப்படக் கூடாது’ என்றும், ‘தவிரவும், அத்தகைய ஏதாவது குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், நடைமுறையில் இருந்த தண்டனையை விடக் கடுமையான தண்டனையையும் அப்படிப்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் விதிக்கக்கூடாது’ என்றும் குறிப்பிடுகிறது.

1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டம், 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றால் திருத்தப்பட்ட, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் மீதான (எதிர்மறையான) தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தச் சட்டம், அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள, தனிநபர்களுக்கான பாதுகாப்பு, அவர்களது சுதந்திரத்திற்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு என்பவற்றை எல்லாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பறித்துள்ளது. இதுதவிர, இலங்கை தானும் ஓர் அங்கமாக இணைந்திருக்கும் ICCPR இன் பல விதிகளையும் மீறுகிறது. அரசியலமைப்பால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு வரம்புகள் காரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, அது மசோதா வடிவத்தில் இருந்தபோதோ, அல்லது அது சட்டமாக மாறிய பிறகோ, அதற்குள்ள (நாட்டின்) ‘அரசியலமைப்புக்கான பொருத்தப்பாடு’ தொடர்பாக சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்துதல் என்பது  சாத்தியமற்றுப் போய்விட்டது. ஆயினும் அது தொடர்பாக, அரசியலமைப்பு ரீதியாக முடிவெடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும், அச்சட்டம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதனால், அதை நீதிமன்றம் ஆராயும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறியதும், எந்தவொரு நீதிமன்றமோ அல்லது தீர்ப்பாயமோ பாராளுமன்றச் சட்டத்தின் செல்லுபடியையோ அல்லது எந்தவொரு காரணத்தையோ விசாரிக்கவோ, அறிவிக்கவோ அல்லது எந்த வகையிலும் கேள்விக்குள்ளாக்கவோ கூடாது என்று கூறும் பிரிவு 80 (3), அதற்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடை செய்கிறது. இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியாக, நீதிபதி சர்வானந்தா இது தொடர்பாக இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்: (நீதிபதி சர்வானந்தா, ‘இலங்கையில் அடிப்படை உரிமைகள்’ பார்க்கவும்) “பிரிவு 80 (3) இயற்றப்பட்ட சட்டத்தை இறுதியுடன் வழங்குகிறது, அதாவது நாடாளுமன்றச் சட்டத்தின் செல்லுபடியை எந்த நீதிமன்றத்திலும் அல்லது தீர்ப்பாயத்திலும் கேள்விக்குள்ளாக்க முடியாது. இந்த அரசியலமைப்புத் திட்டத்தில், மேனகா காந்தியின் A.I.R. (1978) வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் செய்தது போல், சட்டத்தின் நியாயமான செயல்முறை அல்லது சட்டத்தின் நியாயத்தன்மை மற்றும் இயற்கை நீதி பற்றிய கருத்துகளை அறிமுகப்படுத்துவதற்கு இடமில்லை.

அதன் முன்னுரையின்படி, ‘பயங்கரவாதச் செயல்களைக் கையாள்வதற்கான சிறப்புச் சட்டம்’ என்று அழைக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், மற்றைய ஜனநாயக நாடுகளும் இதே நோக்கத்திற்காக இயற்றியுள்ள சிறப்புச் சட்டத்தைப் போன்றே கைது செய்வதற்கும் அதற்கேற்ற பொருத்தமான இடங்களில் தடுத்து வைப்பதற்கும், அமைச்சரால் தீர்மானிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயக்கங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும், அவற்றின் வெளியீடுகளைத் தடை செய்வதற்கும் வேண்டிய புதிய நடைமுறைகளை வழங்குகிறது. புதிய குற்றங்களை வரையறை செய்து உருவாக்குகிறது. தற்போதுள்ள தண்டனைச் சட்டக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கிறது. சில சாட்சியங்களிற்கான சட்டப் பிரிவுகளைப் பொருத்தமற்றவை ஆக்குகிறது. விசாரணையில் காவல்துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை ஒப்புக்கொள்வதற்கும், விசாரணை முடியும் வரை மட்டுமல்ல, மேல்முறையீட்டின் போதும் பிணை வழங்குதலை மறுக்கிறது. தவிரவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கும் அமைச்சருக்கு அதிகாரங்களை வழங்குகிறது. இவையெல்லாம் சாதாரண குற்றவியல் சட்டத்தில் காண முடியாத விதிமுறைகள்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நாட்டின் சட்டமாக மாறியதால், அரசியலமைப்புடன் முரண்பாடு இருந்தபோதிலும் கூட, அதன் கீழ் செய்யப்படும் விஷயங்கள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விதிகளால் விதிக்கப்பட்ட, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி செய்யப்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.

கைது செய்தலும் தடுப்புக்காவலும்

தன்னிச்சையான கைதுகள், சட்டவிரோத தடுப்புக்காவலில் இருந்து விடுபடுவதற்கான உத்தரவாதங்கள் அரசியலமைப்பின் பிரிவு 13 இல் காணப்படுகின்றன:

13 (1) – சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக எந்தவொரு நபரையும் கைதுசெய்யக் கூடாது. கைது செய்யப்பட்ட எந்தவொரு நபருக்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்.

13 (2) – காவலில் வைக்கப்பட்டுள்ள, தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒவ்வொருவரும், சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் அருகிலுள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதி முன் நிறுத்தப்பட வேண்டும். தவிரவும் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி அத்தகைய நீதிபதியின் உத்தரவின் பேரிலும், அதன் அடிப்படையிலும் அல்லாமல், மேலதிகமாகக் காவலில் வைக்கப்படவோ, தடுத்து வைக்கப்படவோ அல்லது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படவோ கூடாது.

இந்த இரண்டு பிரிவுகளின் சாராம்சம் என்னவென்றால், கைது, ‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி’ மட்டுமே இருக்க முடியும். மற்றும், தடுப்புக்காவல் ‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி செய்யப்படும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் உத்தரவின் பேரிலும் குறிப்பிடப்பட்ட  காலப்பகுதியிலும்’ மட்டுமே இருக்க முடியும்.

எங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடைமுறை என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது காவல்துறை உயர் அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட ‘பிடி வராந்தின்’ அதிகாரத்தின் கீழ் மட்டுமே ஒருவரைக் கைது செய்ய முடியும். எடுத்துக்காட்டாக தேடப்படும் நபர் நீதிபதி அல்லது காவல்துறை அதிகாரி முன்னிலையில் ஒரு குற்றத்தைச் செய்தால், ‘அத்தியட்சகர்’ பதவிக்குக் கீழே இல்லாத எந்தவொரு காவல்துறை அதிகாரியும் அல்லது அதற்காக அவரால் எழுத்துபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உதவிப் பொலிஸ் ‘இன்ஸ்பெக்ரர்’ பதவிக்குக் கீழே இல்லாத வேறு எந்தக் காவல்துறை அதிகாரியும், ‘வாரண்ட்’ இல்லாமலும் இன்னொரு துணையுடனோ அல்லது இல்லாமலோ நாட்டின் வேறெந்தச் சட்டத்தையும் மீறி,

1. எந்தவொரு நபரையும் கைது செய்யவும்;

2. எந்த வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்யவும்;

3. எந்தவொரு நபரையும் அல்லது எந்தவொரு வாகனத்தையும், கப்பலையும், ரயில் அல்லது விமானத்தையும் நிறுத்தி சோதனை செய்யவும்; 

4. எந்தவொரு பத்திரத்தையோ, அறிக்கையையோ அவ்வாறான வேறெதையுமோ சோதனை செய்யவும் முடியும்.

இது தவிர ‘எந்தவொரு சட்டவிரோதச் செயலுடனும் தொடர்புடையதாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ அல்லது சட்டவிரோதமானதென நியாயமாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு ஆவணத்தையோ பொருளையோ பறிமுதல் செய்யவும் முடியும்’.

எந்தவொரு இடத்தையும் சோதனையிடவும் அல்லது யாரையாவது கைது செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு புதிய நடைமுறையை இந்தப் பிரிவு வழங்குகிறது. ஒருவரை, எந்தவொரு குற்றத்தையும் செய்ததற்காக அல்ல, மாறாக எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையுடனாவது தொடர்புடையவர், அல்லது அக்கறை கொண்டவர், அல்லது (அச்செயல் தொடர்பாக) சந்தேகிக்கப்படுபவர் எனக் காவல்துறையினர் கருதினால், வாரண்ட் பெறுவதற்கான தேவையைத் தவிர்த்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்வதற்கான அவர்களது அதிகாரம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் அடிப்படை உரிமைகளுக்கான விண்ணப்பங்களில், சந்தேகிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் கைது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டவருக்கு கைதுக்கான காரணங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற எத்தகைய தேவையும்  இல்லை என்பதுதான்.

இந்தப் பிரிவின் விதிகளில்,

(1) இன் படி, பிரிவு 6 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரும் எழுபத்தியிரண்டு மணி நேரத்திற்கு மேற்படாமல் காவலில் வைக்கப்படலாம். மேலும், அத்தகைய நபர் தொடர்பாக பிரிவு 9 இன் கீழ் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், அத்தகைய காலம் முடிவதற்குள் ஒரு ‘மாஜிஸ்திரேட்’ நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ‘அத்தியட்சகர்’ பதவிக்குக் குறையாத ஒரு காவல்துறை அதிகாரியின் எழுத்துபூர்வமான விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய (கைது செய்யப்பட்ட) நபரின் விசாரணை முடியும் வரை அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிடவவும் வேண்டும்:

விசாரணை முடிவதற்குள் அத்தகைய நபரைக் காவலில் இருந்து விடுவிக்க சட்டமா அதிபர் சம்மதித்தால், மாஜிஸ்திரேட் அத்தகைய நபரைக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்.

7 (2) – இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றத்திலும் தொடர்புடைய அல்லது சம்பந்தப்பட்ட அல்லது தொடர்புடையதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும் துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள முறை தவிர்ந்த வேறு எந்த நீதிமன்றத்தில் தோற்றினாலோ அல்லது முன்னிறுத்தப்பட்டாலோ, அத்தகைய நீதிமன்றம் விசாரணை முடியும் வரை, அந்த நபரை தடுப்புக் காவலில் வைத்திருக்க உத்தரவிடும்.

கைது செய்யப்பட்ட நபர்களை 24 மணி நேரத்திற்குள் ஒரு நீதிபதி முன் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சாதாரண சட்டத்தின் கீழ் உள்ள தேவையை மீறி, 72 மணி நேரம் பொலிஸ் காவலில் வைக்க காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம், பிரிவு 13 (2) இனை மீறுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்ட நபருக்கு, நீதித்துறையைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கான அவரது உரிமை மறுக்கப்படுகிறது; நீண்டகாலமாக காவலில் வைக்கப்பட்டதற்கான காரணத்தை வழங்க வேண்டும், அல்லது கைது செய்யப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு கூட்டுக் கைது குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது. இது நடைமுறையில் தொடர்பு கொள்ளப்படாத தடுப்புக்காவல், விசாரணை மற்றும் காணாமல் போதலுக்கு வழிவகுத்தது.

காவல்துறைக் கண்காணிப்பாளரின் விண்ணப்பத்தின் பேரில் 6 (1) இன் கீழ் கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரையும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றத்திலும் தொடர்புடைய அல்லது சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் விசாரணை முடியும் வரை நீதிபதி காவலில் வைக்க வேண்டும் என்ற விதி, சட்டமா அதிபரின் விருப்பத்தை மீறும் நீதிபதியின் தற்றுணிவு அதிகாரத்தை நீக்கியது. நீதித்துறையின் தற்றுணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி காவலில் வைக்க மறுத்ததாக ஒரு வழக்குக்கூட பதிவாகியிருக்கவில்லை. 

(இந்த இடத்தில்) ‘பத்மநாதன் எதிர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் பரணகம பொலிஸ் அதிகாரியும் (OIC) பிறரும் (1999)’ என்ற வழக்கில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிடுவது பொருத்தமானது. 

பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதால், கைதானது இச்சட்டத்தின் 6 (1) இன் கீழ் இருந்தால், அதன் பிரிவு 7 (1) இன் கீழ் 3 நாட்கள் காவலில் வைப்பது பிரிவு 13 (2) இன் மீறலாகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், நீதிபதி மார்க் பெர்னாண்டோ மேலும் கூறுகையில், 7 (1) மற்றும் 7 (2) இன் கீழ் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு நிர்வாகம் அல்லது முகாமைத்துவம் சார்ந்த உத்தரவு அல்ல, அது ஒரு நீதித்துறைச் சட்டம், ஏனெனில் நீதிபதிக்கு தடுப்புக்காவலில் வைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் தற்றுணிவு உண்டு. அவரின் உத்தரவு ஒரு நீதித்துறைச் சட்டம் மட்டுமல்ல, அது அரசியலமைப்பின் 126 ஆவது பிரிவைக் கணக்கெடுப்பதும் இல்லை.

தடுப்புக்காவலும் வரையறைகளும்

பிரிவு 9 (1) இன் கீழ் “எந்தவொரு நபராவது, எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலாவது தொடர்புடையவர் அல்லது அக்கறை கொண்டவர் என்று ஓர் அமைச்சர் நம்புவதற்கு, அல்லது சந்தேகிப்பதற்கான காரணம் இருந்தால், அத்தகைய நபரை முதல் சந்தர்ப்பத்தில் மூன்று மாதங்களுக்கு மேற்படாமல், அமைச்சரால் தீர்மானிக்கப்படும் இடத்தில், அதற்குரிய நிபந்தனைகளின் அடிப்படையில், காவலில் வைக்க அவர் உத்தரவிடலாம். அத்துடன் அத்தகைய எந்தவொரு உத்தரவையும், அவ்வப்போது மூன்று மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்கு நீட்டிக்கலாம். ஆயினும், அத்தகைய தடுப்புக்காவலின் மொத்தக்காலம் பதினெட்டு மாதங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்,”

பிரிவு 11 (1) இன் கீழ் “பிரிவு 9 இன் துணைப் பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் தொடர்புடையவர் அல்லது அக்கறை கொண்டவர் என்று அமைச்சர் நம்புவதற்கு அல்லது சந்தேகிப்பதற்கான காரணம் இருந்தால், அத்தகைய நபரின்  நடமாட்டம், வசிக்கும் இடம், பயண நடவடிக்கை மற்றும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவது என்பவை தொடர்பாக அத்தகைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை விதித்து எழுத்துமூல வடிவில் உத்தரவிடலாம்.”

இந்த இரண்டு பிரிவுகளின் கீழும், எந்தவொரு நபரும் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா அல்லது சம்பந்தப்பட்டாரா என்பதை முடிவு செய்யும் ஒரே நீதிபதி ‘அமைச்சர்’ ஆவார். இது, எந்தவொரு நீதிமன்றத்திலும் (கைது செய்யப்பட்டவரை) முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமின்றி, அமைச்சரால் தீர்மானிக்கப்படுகின்ற இடங்களில் அவரைத் தடுத்து வைக்கும் அதிகாரத்துடன், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கைதிகளின் உரிமைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுடன் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்தது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தடுப்புக்காவல் இடங்கள் காவல் நிலையங்கள், காவல்துறையின் நாசவேலை தடுப்புப் பிரிவுகள், சிறப்புப் படை முகாம்கள் மற்றும் இராணுவ முகாம்கள் என்பவையே. அங்கு சாதாரண மக்களுக்கான விதிகளைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதில்லை. இந்தத் தடுப்புக்காவல் இடங்கள் சித்திரவதைகள், காணாமல் போதல்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றவை.

அமைச்சரால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் காலகட்டத்தில்தான் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக, தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான ‘அடிப்படை உரிமை மீறல்’ தொடர்பான வழக்கு விண்ணப்பங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற கைதுகளை நியாயப்படுத்துவதற்காக ஒரு வழக்கை உருவாக்கும் நோக்குடன் சித்திரவதை செய்வதும் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதும் தடுப்புக்காவலின் நோக்கம் என்பது தெரிய வந்துள்ளது.

இரண்டு, அடிப்படை உரிமைகோரல் வழக்குகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட இரண்டு விண்ணப்பங்களின் பிரமாணப் பத்திரங்களிலிருந்து உதாரணம் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட பகுதிகள் இவை:

1. அடிப்படை உரிமை விண்ணப்ப எண். 156/2001

“காரைதீவு, மேற்குறிப்பிட்ட ‘அதிரடிப்படை’ (STF) முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அந்த முகாமின் பணியாளர்களால் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். நான் கைது செய்யப்பட்ட நாளில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கம்பியால் அடிக்கப்பட்டேன். நான் ஒரு தண்ணீர் தொட்டியில் மூழ்கி மூச்சுத் திணறும்படி செய்யப்பட்டேன். அம்பாறையில் உள்ள ‘நாசவேலை எதிர்ப்புப் பிரிவில்’ (Anti Subversive Unit), நான் ஒரு தடியால் தாக்கப்பட்டு மீண்டும் கம்பிகளால் அடிக்கப்பட்டேன். சில காவல்துறையினர் என் வாயை வலுக்கட்டாயமாகத் திறந்தபோது, மற்றொரு பொலிஸ்காரர் என் வாயில் சிறுநீர் கழித்தார், நான் சிறுநீரைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்.

தாக்குதலாலும் சவுக்கடியாலும் எனது இடது தொடை, முதுகு, இடது கை என்பவற்றில் ஏற்பட்ட காயங்களின் அடையாளங்கள் உள்ளன. எனது இடது கை இடப்பெயர்ச்சி அடைந்துள்ளது, எனக்கு மருந்து தேவை. நான் விடுதலைப் புலிகளின் (LTTE) ஆதரவாளர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இதுதவிர வேறும் சில குற்ற ஆவணங்களில் எனது கையொப்பத்தை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2. அடிப்படை உரிமை  விண்ணப்ப எண். 369/2001

“நான் அம்பாறை சீ.எஸ்.யூவில் (Counter Subversive Unit – பிரிவினைவாத தடுப்புப் பிரிவு)) தடுப்புக் காவலில் இருந்தபோது, அம்பாறை சீ.எஸ்.யூவின் பொலிஸ் கான்ஸ்டபிள் சனூன் (முதல் பிரதிவாதி) மற்றும் பொலிஸ் சார்ஜென்ட் குணவர்தன (இரண்டாவது பிரதிவாதி) ஆகியோரால் சித்திரவதை, கொடூரமான மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சிகிச்சைக்கு ஆளானேன்:

1. என் கைகள் விலங்கிடப்பட்டபடி ஒரு மேஜையில் வைக்கப்பட்டு, என் விரல்கள் மீது ஒரு பொல்லால் அடிக்கப்பட்டது, இதன் விளைவாக என் வலது கையின் 3 ஆவது விரலும் 4 ஆவது விரலும் உடைந்தன;

என் இடது கையின் சிறிய விரல் பின்புறமாக வளைத்து முறிக்கப்பட்டபின் குறட்டால் பிடித்து இழுக்கப்பட்டது;

2. என் வலது காலில் முழங்காலுக்குக் கீழே ஒரு செங்கல்லால் தாக்கியதுடன், மண்வெட்டிப் பிடியால் என் தொடையில் அடிக்கப்பட்டது;

3. என் முதுகில் ஒரு தடியால் அடிக்கப்பட்டேன்; என் தலையைப் பிடித்து சுவரில் மோதியதால் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டது;

மேலே குறிப்பிட்ட சனூன் என்னைப் பின்வரும் முறையில் சித்திரவதை செய்தார்:

4. அவர் என் இடது காலில் உருகும் பொலித்தீனை ஊற்றினார்;

5. என் கன்னத்தில் மீண்டும் மீண்டும் குத்தினார், இதனால் ஏற்பட்ட இரத்தக் கட்டி இன்னமும் அப்படியே உள்ளது. பார்த்தால் தெரியும்;

6. அவர் என் வாயில் கொதிக்கும் நீரை ஊற்றினார்;

7. அவர் என் காதுகளில் ஒரு பென்சிலை வலுக்கட்டாயமாகச் செருகினார்;

8. அவர் ஐ.சி.ஆர்.சி கொடுத்த பதிவு அட்டையை இழுத்து துண்டு துண்டாகக் கிழித்து என் வாயில் செருகி என் வாயில் சிறுநீர் கழித்தார்.”

தடுப்புக்காவல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படுவதன் நோக்கமே, மேலும் தடுப்புக்காவல் அவசியம் தானா இல்லையா என்பதைப் பரிசீலிப்பதற்காவே தான். ஆயினும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல விண்ணப்பங்களிலிருந்து, தடுப்புக்காவல் இயந்திரத்தனமாக நீட்டிக்கப்பட்டது, எந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுக்காகவும் அல்ல என்பது தெரிய வந்தது. தடுப்புக்காவல், வழங்கப்பட்ட உத்தரவின் நகலுடன் சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை.

ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை, அதில் நம்பிக்கை கொண்டிருத்தல், நியாயமான விசாரணைக்கான உத்தரவாதம், குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே என்ற அனுமானம் என்பவை நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. பிரிவு 13 (3), ‘குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் நேரிலோ அல்லது ஒரு வழக்கறிஞரிடமோ, நியாயமான விசாரணையில் விசாரிக்கப்பட உரிமை உண்டு’ என்று கூறுகிறது. பிரிவு 13 (5), ‘ஒவ்வொரு நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று கருதப்படுவார்’ என்று குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பில் ‘நியாயமான விசாரணை’ என்ற சொல் வரையறுக்கப்படவில்லை. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் ‘நியாயமானது’ என்ற கருத்தில் விசாரணைக்கு முந்தைய உரிமைகள், சுதந்திரத்திற்கான உரிமைகள், ஆலோசகர் மற்றும் வெளி உலகத்தை அணுகுதல், தடுப்புக்காவலின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் உரிமைகள், விசாரணையின் போது பாதுகாப்புகள் மற்றும் தடுப்புக்காவலில் மனிதாபிமான நிலைமைகள் மற்றும் சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான உரிமை ஆகியவை அடங்கும். விசாரணை உரிமைகளில் சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் முன் சமத்துவம், குற்றமற்றவர் என்ற அனுமானம், சாட்சியமளிக்கவோ அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ கட்டாயப்படுத்தப்படாத உரிமை, சித்திரவதையின் விளைவாக வெளிப்படும் ஆதாரங்களை விலக்குதல், தேவையற்ற தாமதமின்றி விசாரிக்கப்படும் உரிமை ஆகியவை அடங்கும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் காவல்துறையின் காவலில் இருக்கும்போது காவல்துறையினரால் செய்யப்படும் சித்திரவதையின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றம் சாட்டப்படுகிறார்கள். “சித்திரவதை அல்லது பிற தடைசெய்யப்பட்ட சிகிச்சைகள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள் அல்லது ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று கருதிப் பயன்படுத்துவதை சட்டம் தடை செய்ய வேண்டும்” என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது (குழுவின் பொதுவான கருத்துகள் 20, பத்தி 12). இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 16 (1) இன் கீழ், சாத்தியமானது.

இருந்தபோதும், பயங்கரவாதத் தடைச் சட்டம் அத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது: 

இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரும் ஏதேனுமொரு குற்றம் சாட்டப்பட்டால், வேறு எந்த சட்டத்தின் விதிகள் இருந்தபோதிலும், அத்தகைய நபர் எந்தவொரு நேரத்தில் செய்யும் எந்தவொரு வாக்குமூலமும், 

  1. அது ஒப்புதல் வாக்குமூலத்திற்குச் சமமானதா இல்லையா;
  2. வாய்மொழியாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ செய்யப்பட்டதா;
  3. அத்தகைய நபர் ஒரு காவல் அதிகாரியின் காவலில் அல்லது முன்னிலையில் இருந்தாரா இல்லையா;
  4. விசாரணையின் போது செய்யப்பட்டதா இல்லையா;
  5. அது எந்தவொரு கேள்விக்கும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பதிலளித்ததா அல்லது இல்லையா;

என்பதைப் பொறுத்து, சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் அத்தகைய அறிக்கை பொருத்தமற்றதாக இல்லை என்றால், அத்தகைய அறிக்கை அத்தகைய நபருக்கு எதிராக நிரூபிக்கப்படலாம்:

இருப்பினும், ‘உதவி இன்ஸ்பெக்ரர்’ பதவிக்குக் கீழே உள்ள ஒரு பதவியிலிருக்கும் காவல் அதிகாரிக்கு, அத்தகைய அறிக்கை வழங்கப்பட்டிருந்தால், அத்தகைய அறிக்கை அத்தகைய நபருக்கு எதிராக நிரூபிக்கப்படாது.

விசாரணையில் வழங்கப்படும் மற்ற ஆவண ஆதாரங்கள், காவலில் இருந்தபோது பொலிசாரிடம் அளித்த வாக்குமூலமும், ஒப்புதல் வாக்குமூலமும் மட்டுமே. சாட்சிகளால், வாக்குமூலம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரரும், வாக்குமூலத்தை விளக்கி தட்டச்சு செய்த பொலிஸ் உத்தியோகத்தரும் ஆவர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடைபெறும் கிட்டத்தட்ட அனைத்து விசாரணைகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர் எப்போதும் ஒரு தமிழராக இருப்பார். அவருக்குச் சிங்களத்தைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ தெரியாது. ஆனால் தமிழை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவரது வாக்குமூலம் எப்போதும் சிங்களவராக இருக்கும், தமிழ் தெரியாத, தனக்குக் கீழ் உள்ள ஒரு காவல் கான்ஸ்டபிளின் விளக்கத்தை நம்பியிருக்கும் ஒரு சிங்கள அத்தியட்சகரிடம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அவர் (கான்ஸ்டபிள்) எப்போதும் சிங்களத்தில் தட்டச்சு செய்யும் ஒரு முஸ்லிமாக இருப்பார்.

நீதிமன்றம் 13 (5) இனை மீறும் நியாயமான விசாரணைக்கான உரிமையை மறுக்கும் மற்றொரு தீவிரமான வழக்கை பிரிவு 16 (2) இல் காணலாம்,

“சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் உள்ள துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு அறிக்கையும் பொருத்தமற்றது என்பதை நிரூபிக்கும் சுமை அதைப் பொருத்தமற்றது என்று கூறும் நபரின் மீது இருக்கும்.”

ஒப்புதல் வாக்குமூலம் உட்பட எந்தவொரு அறிக்கையும் தானாக முன்வந்து செய்யப்படவில்லை, எனவே சாட்சியங்களிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையைக் குற்றம் சாட்டப்பட்டவரின் மீது சுமத்துவது, பிரிவுகள் 13 (3) உடனோ (5) உடனோ பொருந்தாது. ஆதாரத்தின் சுமையை, வழக்குத் தொடராமல் குற்றம் சாட்டப்பட்டவரின் மீது வைப்பது, ‘குற்றத்தை ஊகிப்பதற்கு’ச் சமமானது. குறிப்பாக, பாதுகாப்புகள் இல்லாமலும் சித்திரவதை, வேறு மோசமான நடத்தைகள் பற்றிய புகார்களுடன் வாக்குமூலம் பெறப்பட்ட இடத்தில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 16 (2) இலுள்ள பயன்பாடான, ஒருவர் ‘குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே’ என்ற அனுமானத்தையும், அவர் சாட்சியமளிப்பதற்காகக் கட்டாயப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதையும் கடுமையாக மீறுவதாகும்.

இது நீதிமன்றங்களால் செய்யப்படும் நியாயமான விசாரணைக்கான உரிமையை மீண்டும் மறுக்க வழிவகுக்கிறது. ஏனெனில் நீதிமன்றங்கள் அதை முக்கியமானதாகக் கருதுகின்றன. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தானாக முன்வந்து செயற்படவில்லை என்பதை நிரூபிக்கத் தவறியதற்காக, ஒரு சாட்சியமாக அவரது ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் அதன் உள்ளடக்கங்களின் உண்மை குறித்தும் வெறும் அனுமானமே எஞ்சுகிறது. எனவே, அதை மறுக்கும் சந்தேக நபருக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்துகிறது.

சிங்கராசாவுக்கு எதிரான வழக்கில் (CA 208/95), சித்திரவதையின் கீழ் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட ஒரே வாக்குமூலத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது: “(விண்ணப்பதாரர்) தனது சாட்சியத்தின் போது மேற்கூறிய அனுமானத்தை – சாட்சிய நம்பகத்தன்மை மற்றும் வாக்குமூலத்தின் உள்ளடக்கங்களின் உண்மைக்கான உத்தரவாதம் என்பவற்றை – மறுக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அவர் தனது சாட்சியத்தில், குற்றம் சாட்டப்பட்ட சட்டவிரோதச் செயலைச் செய்ய அவர்கள் இணைந்து செயற்பட்ட சதித்திட்டத்தை மறுக்கக்கூடிய உண்மைகளைக் கூறத் தவறிவிட்டார் அல்லது இராணுவ முகாம்களை அவர் ஒருபோதும் தாக்கவில்லை என்று கூறினார். இந்தச் சூழ்நிலைகளில், கற்றறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி, வாக்குமூலத்தின் உள்ளடக்கங்களின் உண்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்து தனது தீர்ப்பில் சரியாகவே இருந்திருக்கிறார்” (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது, நிரூபிக்க வேண்டிய பொறுப்புச் சுமத்தப்பட்டது: 1) ஒப்புதல் வாக்குமூலம் தானாக முன்வந்து செய்யப்படவில்லை என்றும் அது உண்மையல்ல என்றும், 2) கூறப்படும் வாக்குமூலத்தின் வெளிச்சத்தில், சதிக் குற்றத்திற்கு அவர் பொறுப்பல்ல என்றும். குற்றமற்றவர் என்ற அனுமானத்தின் மேலானதான இரட்டை மீறல் இவ்வாறு வெளிப்படுகிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மறுக்கப்பட்டதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவில் (தொடர்பு எண். 1033/2001) புகார் அளித்தார். அது தம்முன்னுள்ள உண்மைகள், நியாயமான விசாரணை, சித்திரவதைகளிலிருந்து விடுபடும் உரிமை என்பவற்றை மீறுவதாகக் கூறி, மறு விசாரணை செய்யுமாறோ அல்லது பிணையுடன் விடுவிக்கும்படியோ பரிந்துரைத்தது.

சித்திரவதை

சந்தேகத்தின் பேரில் கைது செய்து, நாட்கணக்கில் காவலில் வைப்பதற்குக் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களும், அமைச்சரால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் 18 மாதங்கள் வரை காவலில் வைக்க அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரமும், சித்திரவதைகள் நடப்பதற்கு வழிவகுத்தன.

காவலில் இருக்கும்போது காவல்துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தை ஒப்புக்கொள்வது சித்திரவதை நடப்பதை ஊக்குவித்தது. காவல்துறையிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றஞ்சாட்டி தண்டனை பெறவைக்க முடியும் என்பதால், நூற்றுக்கணக்கான வழக்குகள் எந்த உறுதிப்படுத்தும் ஆதாரமும் இல்லாமல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டன. 

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு

திரு. வி.எஸ். கணேசலிங்கம் அவர்கள், இலண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ‘சர்வதேச விவகாரங்கள்’ தொடர்பான முதுகலை டிப்ளோமா பட்டம் பெற்றவரும் ஆவார். ஸ்ட்ராஸ்பேர்க்கில் (பிரான்ஸ்) உள்ள சர்வதேச மனித உரிமைகள் சங்கத்தின் 27 ஆவது ஆய்வு அமர்வுகளில் பங்குபற்றியவர். வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான இவர், கொழும்பு மனித உரிமைகளுக்கான இல்லம் என்ற அரசு சாரா அமைப்பில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்; தற்போது அதன் இயக்குநர்களில் ஒருவரும் ஆவார். உயர் நீதிமன்றத்தில், பல அடிப்படை உரிமைகள் மனுக்களையும், பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Habeas Corpus) ஆட்கொணர்வு மனுக்களையும் வாதிட்டவர். தவிரவும், வேறு ஐந்து  முன்னணி மனிதவுரிமை ஆர்வலர்களுடன் இணைந்து, 1994 இல் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பான வெளியுறவு அமைச்சரின் ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டவர். இதுதவிர, காணாமல் போனோர்கள் குறித்த விசாரணைக்காக 1994 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஜனாதிபதியால் நிறுவப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேந்தவர்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக வெளியேற்றுவதற்கென நிறுவப்பட்ட ‘ஜனாதிபதி ஆணைக்குழு’வின் விசாரணைகளில் முன்னின்று, (பாதிக்கப்பட்டவர்களது) சாட்சியங்களை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும் ஒரு சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டு வந்தவர். இலங்கையில் நிலவிய நிலைமைகளின் கீழ், சர்வதேசத் தரங்களின் அடிப்படையில் செயற்படுவதற்கான வழிகாட்டல்களை வழங்கிய ஒரு மைல்கல் தீர்மானமாக அமைந்த ‘சிங்கராசா வழக்கு’ உட்பட்ட மூன்று தகவல் தொடர்புகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவிற்கு வழங்கிவைக்கும் நடவடிக்கையில் ஒரு முன்னோடியாகவும் அவர் செயற்பட்டு வந்தார்.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்