இலங்கையை ஆக்கிரமித்த இந்தியாவும் உலகப் பேரரசுகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

இலங்கையை ஆக்கிரமித்த இந்தியாவும் உலகப் பேரரசுகளும்

November 5, 2025 | Ezhuna

இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவு. எனவேதான் அதனைக் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என அழைக்கிறோம். இனப்படுகொலை நடைபெறும் பல்லினங்களைக் கொண்ட ஒரு நாட்டில் அரசற்ற தேசிய இனங்கள் எல்லாம் விடுதலை அடையலாம் என்றில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு, வெற்றி பெறுவதற்கான கடினமான பாதையாவது உண்டு. ஈழத்தமிழர் சார்ந்து காணப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடிவம் மிகவும் வலுவானது. ஈழத்தமிழர் சார்ந்த அகத்தேசிய நிலை, உள்நாட்டு நிலை, அண்டை நாட்டு நிலை, அயல் நாடுகள் மற்றும் உலக நாடுகள் சார்ந்த நிலை, புவியியல் – வரலாற்று நிலை என்பனவற்றால் அது வலுவாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை விருப்பு – வெறுப்பிற்கு அப்பால், துல்லியமாக அளவீடு செய்யும் எத்தனமாக ‘இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் இன்றைய நிலையும்: கோட்பாடு – நடைமுறை – வரலாற்றுப் போக்கு’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைகிறது.

உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கும் விதிவிலக்கானது அல்ல. கி.மு நான்காம் நூற்றாண்டில் முதலாவதாக இந்தியாவில் எழுந்த மௌரியப் பேரரசு அண்டை நாடுகளை நோக்கிப் பரந்து விரிவடையத் தொடங்கியது. மௌரியப் பேரரசு அசோகச் சக்கரவர்த்தியின் தலைமையில் பேரரச தத்துவமாய் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த மதத்தைக் கையில் எடுத்தது. அதன்வழி பௌத்த மத வடிவில் பேரரசர் ஆதிக்கம் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குப் பரவியது.

அதேவேளை, பேரரசுகளின் எழுச்சியையும் வளர்ச்சியையும் தாண்டி, பேரரசுகளை அண்டிய பகுதிகளில், தப்பிப் பிழைத்து வாழும் சிறிய அரசுகளும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தவகையில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஒரு திருப்புமுனையாக, கி.பி. 1648 ஆம் ஆண்டில் கையெழுத்தான வெஸ்ட்ஃபாலியா உடன்படிக்கை (The Treaty of Westphalia) அமைந்தது. இந்தச் சர்வதேச உடன்படிக்கை, ஒரு நாட்டின் இறையாண்மையை மற்றொரு நாடு மதிக்க வேண்டும் என்றும், அரசுகள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காமல், சமாதானமாக வாழ வேண்டும் என்றும், நவீன அரசுகளுக்கிடையேயான உறவுகளுக்கான ஒரு முக்கிய அடிப்படை அரசியல் கோட்பாட்டை வகுத்தது. வரலாற்றில் இது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு இல்லை ஆயினும், பெரிய அரசுகளை அண்டி சிறிய அரசுகள் வாழும் வரலாற்று நடைமுறையும் உண்டு. இது பெரிய –  சிறிய அரசுகளுக்கு இடையே உறவுகளைக் கையாளும் அரசியல் கலையில் தங்கி உள்ளது என்பதும் கண்கூடு. இப்பிரச்சினையைக் கட்டுரையின் இறுதியில் ஆராயலாம்.

மகாவம்ச மனப்பாங்கு 

கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பரவிய அசோகப் பேரரசு தேரவாத (Theravada) மகா சங்கத்தையும் தேரவாத பௌத்த அரசையும் இலங்கையில் ஸ்தாபித்தது. எப்படியோ அசோகப் பேரரசினது பேரரச ஆதிக்கத்திற்கு இலங்கை பணிந்தது. அரசும் மதமும் பேரரச ஆதிக்கத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வரலாற்றாளர்கள் கூறுவது சரியானதே.

கி.மு 2 ஆம் நூற்றாண்டு அளவில் (கி.மு 150 – 100) இந்தியாவில் இன்னொரு பௌத்த பிரிவாக மகாயான பௌத்தம் (Mahayana Buddhism) எழுந்தது. அது தென்னிந்தியாவில் வலுவடைந்து, கி.பி 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னன் மகாசேனன் (Mahasena 277 – 304 AD) காலத்தில் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த துறவியான சங்கமித்தர் தலைமையில் இலங்கைக்குள் நுழைந்தது. அம்மதப் பிரிவு மன்னன் மகாசேனனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரச மதமாய் உருப்பெறத் தொடங்கியது. அக்காலத்தில் இலங்கையில் தேரவாத பௌத்தம் தடை செய்யப்பட்டு அதன் மகாவிகாரையும் மகா சங்கத்தினரும் தாக்கப்பட்டனர்.

இதனால், தேரவாத பௌத்தப் பிரிவுக்கும் மகாயான பௌத்தப் பிரிவுக்கும் இடையே வன்முறை மற்றும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இறுதியாக, மன்னன் மகாசேனன் மீண்டும் தேரவாத பௌத்தத்தைத் தழுவியதும், மகாயானத்தின் தலைமை மதகுரு சங்கமித்தர் படுகொலை செய்யப்பட்டதும், இத்தகைய மதப் பூசல் முடிவுக்கு வந்தது.

இங்கு பௌத்தம், அரசு, அரசியற்கொலை (Assassination) – அதுவும் ஒரு தலைமை பௌத்த துறவி அரசியற்கொலை செய்யப்பட்டமை – என்பன ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றுத் திரட்சியைக் காணலாம்.

கி.பி 433 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலிருந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அறுவர் அநுராதபுர இராச்சியத்தைக் கைப்பற்றி 26 ஆண்டுகள் ஆண்டனர். இக்காலத்தில் பாண்டியர்களால் தேடப்பட்டுவந்த தாதுசேனனை (Dhatusena) பௌத்த மகா விகாரையின் தலைமை மதகுருவும் தாதுசேனனின் மாமனும் ஆகிய மகாநாம தேரர் (Mahanama Thero) பௌத்த துறவியாக மாறுவேடமிட்டுப் பாதுகாத்து வந்தார். இறுதியாக பாண்டியர் ஆட்சியை தாதுசேனன் முடிவுக்குக் கொண்டுவந்து கி.பி 459 ஆம் ஆண்டு அநுராதபுரத்தின் மன்னனாய் முடிசூடிக் கொண்டார்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிற்தான் மேற்படி மகாநாம தேரரினால் கி.பி 5 ஆம் நூற்றாண்டளவில் பௌத்த – அரசியல் – வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் முன்னைய பதிவுகளில் இருந்து திரட்டியும், தொகுத்தும், புனைந்தும் வரையப்பட்டது. அவ்வாறு அவர் எழுதியதற்கும் அப்பால் பிற்காலகட்ட வரலாற்றுச் சூழல்களில் அவ்வப்போது தேவைப்பட்ட இன, மத, அரச நோக்கங்களுக்குப் பொருத்தமாக மகாவம்சத்தில் விஷமத்தமான இடைச் செருகல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நூலில் சொல்லப்படுபவை எவ்வளவு தூரம் சரி – பிழை, நல்லது – கெட்டது, உண்மை – பொய் என்பனவற்றிற்கு அப்பால் அது, அரசியல்ரீதியாக சிங்கள பௌத்தர்களின் மனப்பாங்கையும் அரசியல் போக்கையும் வடிவமைக்கும் ஒரு கருத்தியலாய் நடைமுறை அரசியலில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தியாவில் பேரரசு எழ அது இலங்கைக்குப் பரவியது. இந்தியாவில் தேரவாத பௌத்தம் எழ அது இலங்கைக்குப் பரவியது. இந்தியாவில் மகாயான பௌத்தம் எழ அது இலங்கைக்குள் நுழைந்து சவாலாய் எழுந்தது. இவ்வகையில், இந்தியா தொடர்பாக இலங்கையில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள் வெறுமனே அவ்வப்போதைய காலகட்டங்களுக்குரிய வரலாற்றுத் துடிப்பு நிலையாக (Historical Trend) மட்டுமன்றி அதனையும் உள்ளடக்கிய  நீண்டு நெடிய வரலாற்று வளர்ச்சிப் போக்குக்கு  (Historical Process) உரியதாயும் அமையும் நிலையில் அது இலங்கையின் வரலாற்றியலாயும் (Historiography) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வரலாற்றைப் பார்க்கும் பழக்கப்பட்ட ஒரு பக்கப் பார்வை இயலாய் இது அமைந்துள்ளது. இதனை ‘மகாவம்ச மனப்பாங்கு’ என்று அழைப்பர்.

இனப்படுகொலை வாதம் – யூதர்களை முன்வைத்து ஒரு பார்வை

மனிதகுல வாழ்விலும் வரலாற்றிலும் ஐதீகங்கள் (Myths) நிறையவே உண்டு. வசீகரமான கற்பனை நிறைந்த இத்தகைய ஐதீகங்கள் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. அவை நிகழ்தகவுள்ள ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தோன்றுகின்றன.  உதாரணமாக, யூதர்கள் பின்பற்றும் ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ (The Promised Land – இறைவனால் யூதர்களுக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி) என்ற ஐதீகமானது அராபியர்கள், பாரசீகர்கள், ரோமர்கள் என்போரால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய புவியியல் அமைவிடத்தைக் கொண்டிருந்த பின்னணியில், அதன் அடிப்படையிலான அரசியல் வரலாற்றுப் போக்கும் காணப்பட்ட சூழலில், மேற்படி ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ என்ற ஐதீகக் கோட்பாடு தோன்றியது போலவே, இலங்கையிலும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ‘தம்ம தீப’ – பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கென புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு இலங்கை – என்ற ஐதீகம் இந்தியாவுடன் பின்னிப்பிணைந்துள்ள இலங்கையின் அமைவிடச் சூழலில் தோன்றியது.

யூதர்கள் மீதான ஹிட்லரின் யூத இனப்படுகொலை வாதமும் வெறுமையில் இருந்து உருவாகவில்லை. அதுவும் ஒரு வரலாற்றுச் சூழலில் இருந்து உருவானது. ஹிட்லர் தனது அபகீர்த்திமிக்க ‘Mein Kampf’ என்ற நூலில், ‘Culture Founders (Creators), Culture Bearers (Carriers), Culture Destroyers’ என மனித குலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் யூதர்களை ‘Culture Destroyers’ என வகைப்படுத்தி, மனிதகுல நாகரிகத்தின் அழிவுச்சக்தியாக விவரித்தார்.

கி.மு. முதலாம் நூற்றாண்டில், யூத பூமி ரோமப் பேரரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதைத் தொடர்ந்து யூதர்கள் பெட்டி படுக்கைகளுடன் (ஆயுதம் தாங்காது) அடைக்கலம் தேடி, ஐரோப்பாவின் பல பகுதிகளையும் நோக்கிப் புலம்பெயர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் குடியமரத் தொடங்கினர்.

நிலம் புலமின்றி, அரசியல் அதிகாரம் இன்றி, பெட்டி படுக்கைகளுடன் ஐரோப்பா எங்கும் பரந்து சிதறிய யூதர்கள் ஆங்காங்கே கல்வி, வியாபாரம், வர்த்தகம், பன்றிப் பண்ணைகளை அமைத்தல் போன்றன வாயிலாக தமது அயராத உழைப்பால் அங்கு வாழ்ந்து வந்த சுதேசிகளை விடவும் நன்னிலை அடைந்தனர். இதனால், ஹிட்லருக்கு முன்னைய நூற்றாண்டுகளிலேயே, யூதர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள், பல்வேறு நாடுகளிலும் யூதர்களைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கினர். ஆகையால், ‘படுகொலை செய்யப்பட்டவர்கள்’ என்ற வரலாற்றுப் பிம்பமும் யூதர்கள் மீது உருவானது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிற்தான் ஹிட்லரால் யூதர்கள் மீதான இனப்படுகொலை வாதத்தை கோட்பாட்டு ரீதியில் முன்வைத்து, யூத இன அழிப்பை அரசியல் இராணுவ ரீதியில் கட்டமைப்புச் செய்ய முடிந்தது. பூமியில் உள்ள எந்த ஒரு மனிதக் கூட்டமும் செய்திருக்காத அளவுக்கு யூதர்கள் விஞ்ஞான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் வாயிலாகப் பரந்துபட்ட முழு உலகத்திற்கும் ஒட்டுமொத்த மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி உள்ளார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் மீது ஐரோப்பியர்கள் காழ்ப்புணர்வு கொண்டார்கள் என்பதும் அந்தக் காழ்ப்புணர்வுகள் இனப்படுகொலையைக் கட்டமைக்க ஏதுக்களாக அமைந்தன என்பதும் கவனத்திற்குரியன.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், தத்துவம், அரசியல், புவியியல், வானியல், உளவியல், விவசாயம் ஆகிய தலையாய அனைத்துத் துறைகளிலும் இந்தச் சிறிய இனம் முன்னணிப் பாத்திரம் வைத்துள்ள உண்மையை ஏற்பதற்குப் பதிலாக, யூதர்கள் மீது இனப்படுகொலை  வாதம் அரங்கேற்றப்பட்டது. அதேவேளை, கி.மு 1000 ஆம் ஆண்டுகளிலிருந்து பல்வேறு அரசுகளினாலும் பாதிப்புக்கு உள்ளாகிய வரலாற்றுப் பின்னணியில் இருந்து, “கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், இரத்தத்திற்கு இரத்தம்” என்ற மதக் கோட்பாட்டை யூதர்கள்  வடிவமைத்தனர் என்ற துர்ப்பாக்கியத்தையும் சரிவர எடைபோட வேண்டியது அவசியம்.

எந்த ஓர் இனப்படுகொலை வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அத்தகைய இனப்படுகொலை வாதங்களுக்கான தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்று விதிகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அத்தகைய இனப்படுகொலை வாதங்களை வெற்றிகொள்ளவும் முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். புனித போதனைகளும் தேனிலும் இனிய நல்மனங்களும் சோறு போடாது. இரத்தமும் தசையுமான யதார்த்தமும் அது சார்ந்த நடைமுறையுந்தான் எதற்கும் முத்தாய்ப்பானது.

‘இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே’ (‘Genocide can be compensated only by secession’) என்ற நியமத்தைத்தான் வரலாறு முன்வைத்துள்ளது. இதனைவிட வேறெந்தப் புனித போதனைகளும் அதற்குத் தீர்வாகாது.

இலங்கையில் தொடரும் சிங்கள இனவாத அரசியலின் வரலாற்று அடித்தளம்

பொய் – புளுகு – உருட்டு – பிரட்டு – திரிபு என்பனவற்றிற்கு அப்பால் வரலாற்றை அதன் இயல்பான வளர்ச்சிப் போக்குக்குள்ளால் அடையாளம் காணவும் கணிப்பீடு செய்யவும் வேண்டும். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைவாதச் சித்தாந்தத்திற்கான அடிப்படை ஐதீகமாக விளங்கும் ‘தம்மதீப’ கோட்பாட்டை அதன் வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து அறிவியல் பூர்வமாகச் சரியாக எடைபோட வேண்டும்.

புவிச்சரித இயலின்படி சிறு பாக்குநீரிணையால் இந்தியாவிலிருந்து இலங்கை பிரிக்கப்பட முன்பு இலங்கை தென்னிந்தியாவின் ஒரு தொடர் நிலப்பரப்பாக விளங்கியது. இறுதிப் பனியுகத்தின் பிற்பகுதியில் இலங்கை கடலால் பிரிக்கப்பட்டு ஒரு தீவானது.

தென்னிந்தியாவில் மக்கள் பரம்பல் ஏற்பட்டபோது அதே தொடர் மக்கள் பரம்பல்தான்  இலங்கையிலும் உருவானது. குறிப்பாக, தென் இந்தியாவில் காணப்பட்ட அதே பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் கூட்டங்களே கி.மு 1000 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே  இலங்கையில் வாழ்ந்தனர். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஈழத் தமிழ், சிங்களம் என்ற வேறுபாடுகள் அப்போது இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே பெருங்கடல் பண்பாட்டு மக்கள் கூட்டத்தினரே.

மேலும் குறிப்பாக, பௌத்தம் தோன்று முன்பும், அத்துடன் பின்னாளில் பௌத்தம் இலங்கைக்கு வரமுன்புமான கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்கே கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டும், வடமத்தியில் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டும், தெற்கே திஸ்ஸமகாராமவைத் தலைநகராகக் கொண்டும் அரசுகள் தோற்றம் பெற்றன. இதில் மூன்று அரசுகளும் ஒரே பெருங்கற் பண்பாட்டினத்தவர்கள் மத்தியிலேயே எழுந்தன.

அரசுகளுக்கு ஒரே ஒரு மொழிதான் விளங்கும்; அது அதிகாரம் எனும் மொழி. தாய் – பிள்ளை,  தந்தை – மகன், அண்ணன் – தம்பி, தமிழன் – சிங்களவன், மலையாளம் –  கன்னடம், அரபு – பாரசீகம் என்ற வேறுபாடுகளைக் கடந்து அதிகாரம் அரச வடிவில் பரவும்.

உலகில் தோன்றிய முதலாவது பேரரசு கி.மு 2334 ஆம் ஆண்டு உலகின் முதலாவது சக்கரவர்த்தியான சாகோன் (Sargon) தலைமையில் இன்றைய மத்திய ஈராக்கில் தோன்றிய அக்காட் (Akkad) பேரரசாகும். ஒரு சிறிய அக்காட் நகர அரசு நண்டு கால்களை அகட்டுவது போல அண்டை அயல் அரசுகளை ஆக்கிரமித்தவாறு துருக்கி, சிரியா உட்பட்ட அகன்ற பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியது. அதிகாரத்தின் அதியுயர் சின்னமான நிரந்தர இராணுவத்தை பூமியிலும் வரலாற்றிலும் முதன்முறையாக சாகோன் கட்டமைத்தார்.

அதிகாரத்திற்காகச் சண்டையிடுவது எந்தொதவொரு அரசினதும் இயல்பான இரத்த ஓட்டமாகும். சோழ – சேர – பாண்டியர்களும் அப்படித்தான் சண்டையிட்டார்கள். கோட்டை – சீதாவக்கை – றைகம இராச்சியங்களும் அவற்றின் அரசர்களான உடன்பிறந்த சகோதரர்களும் தம்மிடையே அப்படித்தான் அரச அதிகாரத்திற்காகச் சண்டையிட்டார்கள்.

அதிகாரம் பற்றிய இரத்தமும் தசையுமான ஒரு வரலாற்று உதாரணம் இங்கு கவனத்திற்குரியது. “அதிகாரமே எனது ஆசைநாயகி” (Power is my mistress) என்று கூறினார் நெப்போலியன் (Napoleon). அதே நெப்போலியன் இந்த பூமியில் தனக்கு அதிக அன்புக்குரியவளாகச் சொல்லியது ஜோசபின் (Josephine) எனும் தனது பேரன்புக்குரிய  காதல் மனைவியைத்தான் (Napoleon said it over and over, again and again that the only woman he ever really loved was Josephine). ஆனால், அரசியல் அதிகாரத்தின் பொருட்டு ஆஸ்திரிய இளவரசியான ‘Archduchess Marie – Louise’ என்னும் பெண்ணை நெப்போலியன் மணக்கத் தீர்மானித்ததை ஜோசபின் ஆட்சேபித்த போது, “சிம்மாசனத்தில் அவளும் இதயாசனத்தில் நீயும்” என்று ஜோசபினிடம் நெப்போலியன் கூறிய பதில் வியப்பளிக்கக்கூடியதாய் அமைந்தது.

அரசியல் அதிகாரம் சார்ந்த இத்தகைய வரலாற்றுப் புரிதலின் பின்னணியிற்தான் இந்தியா – இலங்கை – ஈழத் தமிழர் – சிங்களவர் சார்ந்த புவிசார் – அரசியல் போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கி.மு 1000 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதான இறைவனால் ‘வாக்களிக்கப்பட்ட நாடு’ (The Promised Land) என்ற யூதக் கோட்பாடும், கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு –  ‘தம்மதீப’ (Chosen Land) – என்ற கோட்பாடும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. அதாவது, இவை இரண்டும் அவையவை சார்ந்த வகையில் ஒத்த புவியியல் அமைவிட நெருக்கடியில் இருந்து பிறந்தவை.

மேலே குறிப்பிடப்பட்டவாறு கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் படையெடுப்பின் போது கால் நூற்றாண்டு காலம் அநுராதபுர அரசு கைப்பற்றப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர் மகா சங்கத்தின் தலைமை மதகுருவான மகாநாம தேரர். பாண்டியர்களிடமிருந்து அநுராதபுர அரசை மீட்டெடுத்த இவரது மருமகனான மன்னன் தாதுசேனனை தலைமறைவாகப் பேணிப் பாதுகாத்து அநுராதபுர இராச்சியத்தை மீட்க வழிகோலியவரும் இவர் என்ற வகையில், மகாநாம தேரரின் மனதிலும் சிந்தனையிலும் அக்கால அரசியல் சூழலின் தாக்கம் பெரிதும் உறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், இதற்கு முன்னைய நூற்றாண்டில் சோழ நாட்டைச் சேர்ந்த மகாயான பௌத்த துறவியால் அநுராதபுர மன்னன் மகாசேனன் தேரவாதத்தில் இருந்து மகாயானத்துக்கு மதமாற்றப்பட்டு, தேரவாத பௌத்த மகா சங்கம் தடை செய்யப்பட்டு, தேரவாதம் இன்னலுக்கு உள்ளானமையையும் ஒன்று சேர்ந்த ஒரு வரலாற்றுப் பின்னணியில் மகாநாமரின் மனதில் இந்திய – தென்னிந்திய – தமிழின எதிர்ப்பு வாதம் குடிகொள்வது இயல்பானது. இக்காலகட்டப் புவியியல் – அரசியல் – வரலாற்றுச் சூழலில் மகாநாமரால்  தொகுக்கப்பட்ட மகாவம்சம், தமக்கு எதிரான புவிசார் அரசியல் தாக்கத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய வகையிலான கருத்தை அவரது நோக்கு நிலையில் இருந்து இயல்பாகவே கொண்டிருக்க முடிகிறது. 

அதனாற்தான் தீபவம்சம் எனும் நூலில் மிகச் சிறிதளவாக எழுதப்பட்டிருந்த, கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முடியாதிக்கப் போட்டிக்காக நிகழ்ந்த எல்லாளன் –  துட்டகாமினி யுத்தத்தை மகாவம்சத்தில் மகாநாம தேரர் ஒரு காப்பிய வடிவில், அதற்கு இந்திய எதிர்ப்பு – தமிழின அழிப்புப் பரிமாணம் கொடுத்து எழுதியிருக்க முடியும். அல்லது அதனை ஒட்டி இடைச் செருகல்களைச் செய்திருக்க முடியும்.

எல்லாளன் – துட்டகாமினி யுத்தத்தில், இலட்சக்கணக்கானோர் (தமிழர்) மடியும்படி நேரிட்டது தனக்குக் கவலை அளிப்பதாக மன்னன் துட்டகாமினி வருந்துவதாகவும் அப்போது பௌத்த துறவிகளின் குழு ஒன்று அவர் முன் தோன்றி அவரை ஆற்றுப்படுத்தப் பின்வருமாறு கூறுவதாகவும் ஓர் உரையாடல் வருகிறது.

“இந்தச் செய்கையின் காரணமாக நீ சொர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படாது” என்பதுடன், “அவ்வாறு கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோர் (தமிழர்) நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், மிருகங்களை விடவும் உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்” எனவும் கூறுகின்றனர் (மகாவம்சம் – அத்தியாயம் 25 – பத்தி 110). 

இது பிற்காலத்தில் மகாவம்சத்தில் சேர்க்கப்பட்ட ஓர் இடைச்செருகலாக இருக்கலாம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அது உண்மையோ – பொய்யோ, இடைச் செருகலோ – இல்லையோ என்பதற்கு அப்பால், சிங்கள – பௌத்தர்கள் தமது புனித வரலாற்று நூலாக மதிக்கும் மகாவம்சத்தில் இக்கூற்று நூற்றாண்டுகளையும் கடந்து இருப்பதானது, சிங்கள – பௌத்த மக்களின் மனங்களை வடிவமைக்கும் ஒரு கருத்தியலாகவும், இனப் பகைமைக்கு என்றும் தூபமிடவல்ல கருத்தியல் மண்டலத்தை அவ்வப்போதைய அரசியல், மதத் தேவைகளுக்காக உருவகிப்பதற்கேற்ற ஒரு பலம் பொருந்திய ஆயுதமாகவும் பார்க்கப்படுகின்றது.

மேலும், கி.பி 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அநுராதபுர அரசு சோழப் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிலையில், சுமாராக 1500 ஆண்டு காலமாய் தலைநகராய்த் தொடர் வளர்ச்சி அடைந்துவந்த அநுராதபுர தலைநகரம் வேரோடு பிடுங்கப்பட்டு பொலநறுவையில் நாட்டப்பட்டது. அதன் பின்பு இன்றுவரை அத்தலைநகரம் அநுராதபுரம் திரும்பவில்லை.

மேலும், கி.பி 1214 ஆந்திராவில் இருந்து கலிங்கத்து மாகனால் (Magha of the Kalinga’s) பொலநறுவை அரசு கைப்பற்றப்பட்டு 1255 ஆம் ஆண்டுவரை பௌத்த மத நிந்தனையுடன் கூடிய பயங்கர ஆட்சி நிகழ்ந்ததாக வரலாற்றில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மாகனின் படையெடுப்பைத் தொடர்ந்து பொலநறுவையில் இருந்த சிங்கள இராசதானி இலங்கையின் மத்திய மலைப்பகுதி, தென்மேற்குப் பகுதி நோக்கி நகர்ந்து, கண்டி மற்றும் இன்றைய கொழும்புத் தலைநகரை நிலைக்களமாகக் கொண்டு ஸ்தாபிதம் அடைந்தது என்ற வரலாற்றுப் போக்கு சிங்கள மக்களின் மனங்களில் பசுமரத்தாணியாய் வேரூன்றி உள்ளது.

இலங்கைத் தீவின் மீதான கடல்வழி அந்நியப் படையெடுப்புகள்

இலங்கைக்கு வடக்கே இருந்து, பாக்குநீரிணையைக் கடந்து இந்தியாவில் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்த படையெடுப்புகள் போலவே, இந்துமாகடல் தழுவிய வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனா கடல்சார் பேரரசாக எழுச்சி பெற்றபோது, கி.பி 1412 ஆண்டு சீனக் கடற்படைத் தளபதி ஷென்ங் ஹே (Admiral Zheng He) தலைமையில் கொழும்பு இராச்சியம் படையெடுப்புக்கு உள்ளாகி மூன்று ஆண்டுகள் அவரது இராணுவப் பிடியின் கீழ் சின்னாபின்னமாகியது. இதுதான் வரலாற்றில் முதல்முறையாக தெற்காசியக் கடல் வழியே இலங்கைக்கு வந்த முதலாவது படையெடுப்பாகும்.

இதைத் தொடர்ந்து கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பேரரசுகள் உலகளாவிய கடலாதிக்கத்தைப் பெறத் தொடங்கிய பின்னணியில் 1505 ஆண்டு போர்த்துக்கீசரும், 1602 ஆம் ஆண்டு டச்சுக்காரரும் (கைப்பற்றியது 1658 இல்), 1796 ஆம் ஆண்டு பிரித்தானியரும் கடல் வழியே இலங்கையில் கால் பதித்தனர்.

1796 ஆம் ஆண்டு பிரித்தானியர் கடல் வழியே இலங்கையில் கால் பதித்தபோது பிரான்சுச் சக்கரவர்த்தியான நெப்போலியன் கூறிய பின்வரும் கூற்று மிகவும் கவனத்திற்குரியது.

“திருகோணமலையை யார் தன் கையில் வைத்திருக்கிறாரோ அவர் இந்துமாகடலை ஆள்வார்” (He who controls Trincomalee controls the Indian Ocean – Napoleon in 1796).

மேலும், கடல்சார் ஆதிக்கம் பற்றி அமெரிக்கக் கடற்படைத் தளபதியான அல்பிரெட் டயர் மாகன் (Admiral Alfred Thayer Mahan) கூறிய இரண்டு கூற்றுகள் முக்கியமானவை.

“இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியா மீது ஆதிக்கம் செலுத்துவார்” (Whoever controls the Indian Ocean will dominate Asia –  1897).

“கடலை ஆள்பவன் உலகை ஆள்வான்” (Whoever controls the seas, rules the world).

முதலில் இலங்கைக்கு வடக்கே இருந்த பாக்குநீரிணையைத் தாண்டி இந்தியாவில் இருந்து 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இலங்கைக்கு ஏற்பட்ட சவால்களுக்கு அப்பால், 15 ஆம் நூற்றாண்டில் இருந்து கடல் சார்ந்த பேரரசுகளான சீனா, போர்த்துக்கல், டச்சு, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்றவைகளால் கடல்சார் தென்புறத்திலிருந்து இலங்கைக்குச் சவால்கள் உருவாகின. இத்தகைய சவால்கள் அனைத்தும் இலங்கையின் அமைவிடம் சார்ந்தவை.

இலங்கைத் தீவுக்கு வடக்கிலிருந்து பாக்குநீரிணைக்கூடாக இந்திய ஆதிக்கமும், தெற்கே கண்டங்களையும் பெரும் கடல்களையும் கடந்த உலகப் பெரு வல்லரசுகளின் இந்துமாகடல் ஆதிக்கமும், கூடவே இதன்வழி உலகம் தழுவிய அரசியல் ஆதிக்கமும் இணைந்த பெரும் அரச ஆதிக்க வலைக்குள் இலங்கைத் தீவும் அதன் இனப்பிரச்சினையும் சிக்குண்டுள்ளன. இந்தவகையில், ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது சிங்கள பௌத்த அரசுடனும் அதனுடன் தொடர்புள்ள பல்வேறு அரசுகளினது ஆதிக்கங்களுடனும் இணைந்த வகையில் படச்சட்டத்துக்குள் (Frame) கூட்டிக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், இலங்கையின் இனப் பிரச்சினையும் ஈழத் தமிழருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் இலங்கைத் தீவின் எல்லைக்கு உட்பட்ட ஒன்றாக மட்டுமன்றி அது அண்டை நாடு, சீனா, மேற்குலக வல்லரசுகள், இந்நாடுகள் அனைத்தும் சார்ந்த கூட்டாளி நாடுகள் ஆகியவற்றின் நலன்கள் தழுவிய கூரிய கத்தி மாலையாய் ஈழத் தமிழரின் கழுத்தில் இறுக மாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பலம் பொருந்திய பல்பரிமாணக் கத்தி மாலையாய் ஈழத் தமிழரின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை மனம் போன போக்கில் எழுந்தமானமாகக் கையாளாது தெளிந்த அறிவுடனும் அதிக நிதானத்துடனும் கையாள வேண்டும்.

தெற்கே அம்பாந்தோட்டையிலும், தென்மேற்கே கொழும்பிலும் நூற்றாண்டு தழுவிய துறைமுக ஒப்பந்தங்களுக்கு ஊடாகச் சீனா இலங்கையில் கால் பதித்துள்ளது. இது இலங்கைக்குத் தெற்கே ‘Diego Garcia’ எனும் அமெரிக்காவின் மிகப்பெரும் இராணுவத் தலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாய் அமைவதுடன், அது அமெரிக்காவின் இந்துமாகடல் ஆதிக்கத்துக்கும் சவாலாயும் அமைந்துவிடும். கூடவே இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்புக்கும் இருப்பிற்கும் பெரும் சவாலாய் அமைந்துவிடும்.

இந்நிலையில், இந்திய – சீன – அமெரிக்க முக்கோண மையத்துக்குள் இலங்கையும் ஈழத் தமிழர் பிரச்சினையும் ஜீவ மரணப் போராட்டத்திற்குள் சிக்குண்டுவிடும். இதில் முதல் பலியாகக்கூடியது அரசற்ற அப்பாவி ஈழத் தமிழர்தான்.

இதனைத் தொடர் நவீன வரலாற்று வளர்ச்சிக்கூடாகத் தொடர்ந்து நோக்க வேண்டியது அவசியம்.

இலங்கையைத் தனித்தீவு நாடாக்கிய பிரித்தானிய அரசின் உள்நோக்கம்

1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் பிரித்தானியர் கைப்பற்றிய போதிலும் அதனை இந்தியாவுடன் இணைக்காது 1802 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து பரிபாலித்தனர். 1802 ஆம் ஆண்டு பிரான்சுடன் கையெழுத்தான ஏமியன்ஸ் உடன்படிக்கையை (The Treaty of Amiens) தொடர்ந்து இலங்கையைப் பிரித்தானியா தனது முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையை இந்தியாவுடன் இணைக்காது ஒரு தனித் தீவு நாடாகப் பேணவேண்டும் என்பது பிரித்தானியாவின் பிரதான கடல்சார் கொள்கையாகும். அதற்கு ஏற்ப கூடவே இலங்கையை ஓர் ஒற்றையாட்சி நாடாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாய் இருந்தனர். 1802 ஆம் ஆண்டிலேயே ஒற்றை ஆட்சிக்குரிய அரசியல் நிர்வாகக் கட்டமைப்புகளை வகுத்துக்கொண்டனர்.

1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றிய போது கண்டிப் பிரதானிகளின் வற்புறுத்தலுக்கு அமைய எழுதப்பட்ட கண்டி உடன்படிக்கையில் சிங்கள பௌத்தம், அவர்களது பிரதேச சுயாதிபத்தியம் என்பவற்றை மதிப்பதாகப் பிரித்தானியர்கள் கூறியபோதிலும், 1818 ஆம் ஆண்டுக் கண்டிக் கலகத்தின் பின்பு அதனைக் கைநழுவவிட்டனர். 1833 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட கோல்புறூக் – கமரன் (Colebrooke – Cameron) அரசியல் யாப்பு ஏற்பாட்டின் கீழ் கொழும்பை மையமாகக் கொண்ட தெளிவான ஒற்றையாட்சி நாடாக முழு இலங்கையும் ஒரு கோட்டின் கீழ் கட்டமைக்கப்பட்டது.

முழு இலங்கைத் தீவும் ஒரு குடையின் கீழ் ஆளப்பட வேண்டும் என்கின்ற கொள்கை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு ஆட்சியாளர்களிடமும் இருந்தாலும், 1815 ஆம் ஆண்டு பிரித்தானியரால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்படும் வரை ஆள்புல அர்த்தத்தில் அது நடைமுறையில் இருக்கவில்லை. 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் 1818, 1833 என்ற இரு படிமுறைகளைத் தாண்டி ஒரு குடையின் கீழ், அதாவது கோல்புறூக் – கமரன் அரசியல் யாப்போடு முழு அளவில், முழு இலங்கையும் கொழும்பை மையமாகக் கொண்ட ஒற்றை ஆட்சிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பரந்த இந்துமாகடல் நலனோடும் இந்தியாவை ஆள்வதற்கான இராணுவ முகாமாக இலங்கைத் தீவைக் கையாள்வதற்கான நோக்கத்தோடும் ஒற்றை ஆட்சிமுறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கையையே ஐரோப்பியப் பேரரசுகளான போர்த்துக்கல், ஒல்லாந்து, பிரித்தானியாவோடு அமெரிக்கா, சீனா எனப் பல பேரரசுகளும் விரும்பின. அதேவேளை நவீன வரலாற்றில் ஈழத் தமிழருக்குத் தலைமை தாங்கிய பல தமிழ்த் தலைமைகளும் ஒற்றை ஆட்சிமுறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கை அரசையே விரும்பின.

பிரித்தானிய இலங்கையில் பிரித்தானிய அரசின் சேவகர்களாக உருவான ஈழத்தமிழர் தலைமைகள்

நவீன இலங்கையில் ஈழத் தமிழருக்கான முதலாவது தலைமை இராமநாதன் குடும்பத்துடன் ஆரம்பமாகி 100 ஆண்டுகள் நீடித்தன. 1833 ஆம் ஆண்டு ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஈழத் தமிழருக்கான முதலாவது தலைவராகச் சட்ட நிரூபண சபைக்கான உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராய் பிரித்தானிய ஆட்சியால் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமியின் வம்ச வழி வந்தவரான சேர் (Sir) பொன் இராமநாதன் அப்பதவியில் தொடர்ந்தார். 1930 ஆம் ஆண்டு இராமநாதன் காலமாகும் வரை சுமாராக ஒரு நூற்றாண்டு காலமாய் இராமநாதன் வம்சம் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கியது.

பிரித்தானிய எஜமான்களின் விசுவாசம் மிக்க அடிமைச் சேவகர்களாய் விசுவாசம் மிக்க அடிமைச் சேவகனுக்குக் குத்தக்கூடிய ‘Sir’ என்ற அடிமை முத்திரையை நெற்றியில் குத்தியவாறு இந்த வம்சம் தமிழ் மக்களுக்குத் தலைவனாகியது. இந்தியாவில் ‘Sir’ பட்டம் அடிமை முத்திரையாகக் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டும், பலரால் நிராகரிக்கப்பட்டும் வந்த காலகட்டத்தில் இராமநாதன் வம்சம் பெருமையாக இந்த அடிமை முத்திரையைத் தலைமேல் ஏற்றிக்கொண்டது.

இலங்கையில் ஆள்பதிகளாக இருந்த பிரவுன்றிக் (Brownrigg) என்பவரின் அந்தரங்கச் செயலாளராய் (Personal Officer) பதவி வகித்த குமாரசுவாமிப்பிள்ளை அவரைத் தொடர்ந்து ஆள்பதிகளான பக்கெட் (Paget), பான்ஸ் (Barnes) என்போருக்கும் மேற்படி விசுவாசம் மிக்க அதிகாரியாய்ப் பணியாற்றினார். குறிப்பாக, பிரித்தானியரால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்ட காலத்தில் (1815) ஆள்பதி பிரவுன்றிக் அவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக நின்றதுடன், அவருக்கும் கண்டி இராச்சியப் பிரதானிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பாத்திரம் வகித்தார்.

இத்தகைய எஜமானிய விசுவாசத்தோடு மூன்று ஆள்பதிகளுக்குக் கீழ்ச் சேவகராகப் பணியாற்றியதன் பின்னணியில், ஈழத் தமிழரையும் இலங்கைத் தீவையும் பிரித்தானியரிடம் விற்றுப் பிழைப்பதற்கான பரிசாய் பிரித்தானிய எஜமானால் ஈழத் தமிழரின் தலைவராக குமாரசுவாமி நியமிக்கப்பட்டார் என்ற வரலாற்று நடைமுறை உண்மை பெரிதும் கவனத்துக்குரியது.

இந்தவகையில், பிரித்தானியர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இலங்கை, ஒற்றை ஆட்சி முறை என்பனவற்றைத் தோளில் சுமந்தவராய் குமாரசுவாமிப்பிள்ளையும் கூடவே அவரின் வழிவந்த இராமநாதன் வம்சமும் நவீன வரலாற்றில் ஒரு நூற்றாண்டைக் காவிச் சென்றனர். இராமநாதன் வம்சம் ஒருபுறம் பிரித்தானிய எஜமான்களின் அப்பட்டமான சேவகர்களாகவும், கூடவே சிங்கள – பௌத்த கனவான்களின் தோழர்களாகவும் இருந்து, தமிழ் மக்களின் பெயரால் அரசியல் அதிகாரம் பெற்றனர். இராமநாதன் வம்சம் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றியவர்கள் என்று ஒரு பகுதியினர் குறிப்பிடுகின்றனர், ஆயினும் பசுவில் பால் கறக்க மாட்டுக்குப் புல்லுப் போடுவது போன்றதே அது.

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது, ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றை ஆட்சிமுறை என்ற அரசியல் கட்டமைப்புக்கு ஊடாகவே நவீன வரலாற்றில் பிரித்தானியரால் அவர்களது கடல்சார் காலனிய ஆதிக்க நலன்களின் பொருட்டுக் கட்டமைப்புச் செய்யப்பட்டது. அத்தகைய கட்டமைப்பை உருவாக்குவதில் ஈழத் தமிழரின் பெயரால் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் பெரும் பணியாற்றியவர்கள் இராமநாதன் வம்சத்தினர் என்பதையே வரலாற்றன்னை கண்ணீரும் செந்நீரும் சொரியப் பதிந்து வைத்துள்ளாள்.

பிரித்தானிய அரசு சிங்களர் பெரும்பான்மைக்குச் சாதகமாக டொனமூர் யாப்பை கொண்டுவந்த போது, தான் விசுவாசமாய் நம்பி இருந்த தனது வெள்ளை எஜமான்கள் தன்னைக் கைவிட்டதையும், தான் தோள்கொடுத்த சிங்களக் கனவான்கள் கால்களால் உதைத்துவிட்டதையும் எண்ணி நொந்து கொண்ட சேர் பொன். இராமநாதன், தமது வம்சத்தின் அரசியல் தோல்வியைத் தனது அந்திமக்காலத்தில் பின்வருமாறு குற்ற ஒப்புதல் வாக்குமூலமாய்ப் பதிவு செய்தார்.

“டொனமூர் வந்தால், தமிழர்கள் இனி இல்லை (Donoughmore means, Tamils no more).”

1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய ‘தந்தை செல்வா’ என்ற மகுடம் தாங்கிய திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தனது அந்திமக்காலமான 1976 ஆம் ஆண்டு பின்வருமாறு அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தோடு மேற்படி இராமநாதனின் வாக்குமூலம் ஒப்பிடப்படக்கூடியது.

“இனி தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.”

தமது ஆயுட்கால அரசியற் தலைமைத்துவத் தோல்வியைக் கடவுளை முன்னிறுத்தி, கூடவே கடவுளின் தோள்களில் சுமத்திவிடும் ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலமே இதுவாகும்.

இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு இராமநாதனே வழிகாட்டியாய் அமைந்தார். பிற்காலத்தில் தமது பாரிய அரசியல் தோல்விகளுக்கெல்லாம் ஒப்புதல் வாக்குமூலமாய் “சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்” என்று திருவாளர்கள் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் இதுவரை கூறியுள்ளமையும், மேற்படி கூறப்பட்ட அடிப்படையை ஒத்ததே. தமது இயலாமைகளையும் தோல்விகளையும் தவறுகளையும் குற்றங்களையும் பழியாக எதிரிகளின் தலைகளில் போட்டு அல்லது கடவுளின் தோள்களில் சுமத்தித் தம்மை அப்பாவிகளாக உருவகித்துத் தம்மை விடுதலை செய்துவிடுவது தமிழ்த் தலைவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

‘கால் கல்லுடன் மோதிவிட்டது’ என்ற தன்பக்க உண்மைக்குப் புறம்பாக ‘காலில் கல்லடித்துவிட்டது’ என்று கல்லில் மட்டும் பழிபோடுவது போல பொதுவாக தமிழ்த் தலைவர்கள் தமது பிழை, குற்றம், குறை, தவறு, தோல்வி, வீழ்ச்சி என்பனவற்றைப் பிறர்மீது மட்டுமே ஏற்றித் தமக்குத் தாமே வெள்ளை அடித்துத் தப்பித்துக்கொள்வார்கள். இது விடயத்தில் அப்பாவிக் கடவுளையும் முன்னிறுத்திக் குற்றத்தில் கடவுளுக்கும் பங்களித்துத் தம்மைத் தற்காத்துக் கொள்வார்கள்.

தோல்விக்குப் பொறுப்பேற்காத இத்தகைய வரலாற்று வளர்ச்சிப்போக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குச் சேவகம் செய்யவல்ல ஒன்றாகவே அமைந்தது. ஆதலால், தோல்விக்குப் பொறுப்பேற்காத தமிழ்த் தலைவர்களின் அரசியல் கலாசாரமும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அம்சம் என்ற பரிமாணத்தையே பெறுகிறது.

இராமநாதன் வம்சம் தமிழ் மக்களின் பெயரால் அரசியல் அதிகாரத்தைப் பெற்றபோதும், அவர்கள் தமது வெள்ளை எஜமான்களுக்கும் சிங்களக் கனவான்களுக்கும் செய்த சேவகம்தான் பெரிது என்று வரலாறு சொல்கிறது.

வரலாறு என்பது கிரேக்க மூலச் சொல்லான ‘Historia’ என்பதில் இருந்து Histories, History என உருவானது. வரலாறு என்றால் ஒரு கதை அல்ல, நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் செல்லும் ஒரு தொகுப்புமல்ல. அது நடைமுறை பற்றிய ஒரு விசாரணையின் பாலான தீர்ப்பு.

‘Historia’ என்ற கிரேக்க மூலச் சொல்லின் பொருள் ‘Inquiry’ – விசாரணை. இதன் வரைவிலக்கணம் பின்வருமாறு சொல்லப்படுகிறது: “The Greek word historia originally meant inquiry, the act of seeking knowledge, as well as the knowledge that results from inquiry.”

“Historia என்ற கிரேக்க மூலப்பதத்தின் பொருள் விசாரணை. அதாவது அறிவைத் தேடும் செயல்; விசாரணையின் பெறுபேறாய்ப் பெறப்படும் அறிவு.”

நவீன வரலாற்றில் 1930 ஆம் ஆண்டு வரையான இராமநாதன் வம்சத்தின் சுமாராக நூற்றாண்டுகால அரசியல் தலைமைத்துவத்தையும், அதன் பின்னான இற்றை வரையான சுமாராக நூற்றாண்டுகாலத் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தையும் காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, முற்றிலும் அறிவார்ந்த வகையில் விஞ்ஞானபூர்வமான வரலாற்றாய்வுக்கூடாக எடை போடுவதன் மூலமே கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் முழுமையான பரிமாணத்தையும் கற்றுணர்ந்து ஈழத் தமிழரின் எதிர்காலத்திற்கான பாதையையும் பயணத்தையும் வகுக்க முடியும்.



About the Author

மு. திருநாவுக்கரசு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், ஈழத்தின் புகழ்மிக்க அரசியல் ஆய்வாளராக அறியப்பட்டவர். தேசியம், ஜனநாயகம், ஏகாதிபத்தியம் குறித்த விவாதங்களை இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுப்பிவருபவர். இலங்கை இனப்பிரச்சினையின் தோற்றுவாய் குறித்தும், சிங்கள ராஜதந்திரம் குறித்தும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியல், ராஜதந்திர நகர்வுகள் பற்றியும் ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ளவர். ஈழத்து அரசியலை நுணுகிய, விரிந்த தளத்தில் தமிழில் ஆய்வுகளை நடத்தும் போக்கினை நிர்ணயிப்பதில் மு. திருநாவுக்கரசுவின் பங்கு தலையாயது.

இலங்கை அரசியல் யாப்பு 1931-2016, இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள், பூகோளவாதம் புதிய தேசியவாதம் என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்