யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிக்குடியேற்றங்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிக்குடியேற்றங்கள்

October 10, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

இந்தத் தொடரில் ஆய்வு செய்யப்படும் யாழ்ப்பாணப் பகுதி தொல்லியல் மையங்கள்:   

1. கந்தரோடை 2. ஆனைக்கோட்டை 3. யாழ்ப்பாணம் கோட்டை 4. வல்லிபுரம் 5. பூநகரி 6. காரைநகர் 7. வேலணை: அல்லைப்பிட்டி – சாட்டி 9. புங்குடுதீவு 10. நயினாதீவு 11. நெடுந்தீவு

யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிகாலக் குடியிருப்புகள் அமைந்த நிலங்களை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

I. யாழ்ப்பாணத்திற்கு மேற்கே பாக்கு நீரிணையிலுள்ள சிறிய தீவுகள்.

II. யாழ்ப்பாணக் கடலேரிக்குத் தெற்கே இலங்கையின் பெருநிலத்திலுள்ள பூநகரி.

I

சிறிய தீவுகளில் ஆதிக்குடியேற்றங்கள்

காரைநகர்

யாழ்ப்பாணத் தீபகத்திற்கு மேற்கே பாக்கு நீரிணையில் உள்ள தீவுகளில் மிகவும் வடக்கு நோக்கி அமைந்திருப்பது காரைநகர். முற்காலத்தில் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. இத்தீவின் கிழக்கு, தெற்குக் கரைகள் யாழ்ப்பாணக் கடல்நீரேரியின் நுழைவாயிலைக் கட்டுப்படுத்தியும், மேற்குக் கரையோரம் பாக்கு நீரிணையை நோக்கியும் காணப்படுகின்றன. கிறிஸ்தாப்த காலத்திற்குரிய ஜாதகக் கதைகள் இத்தீவை காரதீப எனவும், இத்தீவிற்கும் காவிரிப்பட்டினத்திற்கும், வங்காளத்திலிருந்த தாம்ரலிப்திக்கும் இடையே இருந்த கடல் தொடர்புகளைப் பற்றியும் பேசுகின்றன. காரைநகரின் களபூமிப் பகுதியில் அமைந்த சந்திராந்தை, பெருங்கற் பண்பாட்டுப் புதையல்களைக் கொண்ட ஒரு தொல்லியல் மையமாகும். 

சந்திராந்தை பெருங்கற் பண்பாட்டு மையம்

தொல்லியல் அகழ்வாய்வுகள் – 1981

சந்திராந்தை பெருங்கற் பண்பாட்டு மையம் காரைநகர் தீவில் களபூமி என்னும் பகுதியில் உள்ளது. சந்திராந்தையில் இன்றைய சுந்தரமூர்த்தி வித்தியாலயம் எனப்படும் சிறுவர் பாடசாலைக்குச் சமீபமாக பெருங்கற்காலப் புதையல்களைக் கொண்ட மையம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. நெல் வயல்களை அடுத்து மேடாக உள்ள இந்நிலம் முன்னர் அமெரிக்க மிஷனரிமார்களின் சொத்தாக இருந்து, பின்னர் ஐந்து பங்காகப் பிரிக்கப்பட்டு தனியார் நில உடைமையாளர்களுக்கு விற்கப்பட்டது. இவர்கள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டிய பொழுதில் அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் வெளிவந்ததாக ஊர்ப் பேச்சுகள் வெளிவந்திருந்தன.

1980 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கலாநிதி இரகுபதியினதும் அவரது சகாக்களினதும் தலைமையில் இவ்விடத்தில் மேலாய்வுகளை மேற்கொண்ட பொழுதில் திரு. கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் டிராக்டர் மண்ணை அகழ்ந்த குழிகளில் பலதரப்பட்ட ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்ட ஓடுகள் காணப்பட்டன. இவ்விடத்திலுள்ள தொல்பொருள் சான்றுகள் முற்றாக அழிக்கப்படும் முன்னர் இங்கே ஒரு தொல்லியல் மீட்பாய்வு (Rescue Operation) மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது (Ragupathy, P. 1987: 43-44, 128).

இது விரைவாகச் செய்து முடிக்க வேண்டிய ஒரு செயற்பாடாக இருந்தமையால் குழிகள் அவசரமாகத் தோண்டப்பட்டன. பேராசிரியர் இந்திரபாலாவின் வழிநடத்தலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறைக் குழுவினர் ஜனவரி 1981 இல் முதலாவது (A) குழியையும், ஒக்ரோபர் 1981 இல் இரண்டாவது (B) குழியையும் அகழ்ந்தார்கள்.

முதலாவது குழி 

இங்கே அகழ்வாய்வு செய்யப்பட்ட முதலாவது குழி (Trench A) 10 × 10 அடி சதுரத்தில் திரு. கந்தசாமியின் காணியின் வடமேற்கு மூலையிலிருந்த உயர்ந்த மேட்டில் அகழப்பெற்றது. மேட்டின் உச்சிப் பகுதியிலிருந்து 5 அடிக்கும் கீழே, அருகிலிருந்த நெல் வயல்களுக்கு 3 அடிக்கு மேலே அகழ்வுக்குழி ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே இவ்விடத்தில் மண் அகழப்பெற்ற ஒரு மீட்பாய்வு அகழ்வாக இது இருந்தமையால் இதில் காணும் மண் மட்டங்களை சரியான அடுக்கமைவுப் படுகை எனக் கூற இயலாது.

மேலிருந்து கீழாக மூன்று நில அடுக்குகள் இனம் காணப்பட்டன. மேலிருந்த முதலாவது அடுக்கில் மண் ஐதாகவும், மென்மையான மண்ணிறத்திலும் இருந்தது. இந்த அடுக்கில் ஒரு தனியான மண்டை ஓடு, மற்றைய தொடர் எலும்புகள் சிலவற்றோடு கண்டெடுக்கப்பட்டது. இரண்டாவது அடுக்கு இரண்டடி ஆழம்வரை சென்றது. இந்த அடுக்கில் எலும்புப் பகுதிகளும், ஈமப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. அடுத்து வந்த மூன்றாவது அடுக்கு அடியிலிருந்த சுண்ணாம்புக்கல் மட்டம் வரை சென்றது.

ஈமப் புதையல்

முதலாவது குழியில் இரண்டு மண் அடுக்குகளில் இரு எலும்புப் பகுதிகள் காணப்பட்டன. இரண்டாவது அடுக்கில் காணப்பட்ட எலும்புகள் முற்றாக அழுகிய நிலையில் இருந்தமையால் அவற்றின் மிகுதிப் பகுதிகள் (Residues) மட்டுமே காணப்பட்டன. இவற்றோடு மட்பாண்டங்களும், ஈமப் படையற் பொருட்களும் காணப்பட்டன. ஈம வழிபாட்டு படையற் பொருட்கள் ஆனைக்கோட்டை அகழ்வுகளில் கண்டது போல மீன் எலும்புகள், நண்டு ஓடுகள், சிப்பிகள், பலவகை மிருக எலும்புகள், கால்நடைகளின் பற்கள் என்பனவாகும். இவை மட்பாண்டங்களினுள்ளே வைத்துப் புதைக்கப்பட்டிருந்தன. இந்த மட்பாண்டங்கள் கிண்ணங்கள், வட்டில்கள், பானைகள் ஆகியனவாகும். இவற்றோடு ஒரு நுண்கற் சீவலும் காணப்பட்டது (Ragupathy, P. 1987: 128-132).

இரண்டாவது குழி

1981 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் அகழப்பெற்ற இரண்டாவது ஆய்வுக் குழி திரு. கந்தசாமியின் காணியில் தென் பக்கத்தில் அங்கிருந்த வீட்டிற்கும் எல்லை வேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தது. இங்கிருந்த நிலம் கடைசித் தொற்றுநோய் பரவற்கால புதையற்களால் போலும் கிளறப்பட்டிருந்தது. இவ்விடத்தில் 10 × 10 அடிச் சதுரக் குழி தோண்டப்பட்டது. இக்குழியில் எட்டு முழுமையான எலும்புக்கூடுகளும், ஏனைய எலும்புகளின் பகுதிகளும் ஓர் ஒழுங்கில்லாமல் தாறுமாறாகப் புதைக்கப்பட்டிருந்தன. இதில் கலைக்கப்பட்ட மண் அடுக்குகளில் ஆரம்பகால கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், மற்றும் ஆரம்பகால மட்கலன்கள், கல்மணிகள் என்பன காணப்பட்டன (Ragupathy, 1987: 128-132).

கண்டுபிடிப்புகள்

இரண்டாவது குழியில் கண்டெடுக்கப்பட்ட ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆறு ஆதிகால மையங்களில் கண்டெடுத்த மட்பாண்டங்கள் போன்றவையாகும். ஆனாலும் இந்த மட்பாண்டங்கள்கள் கந்தரோடை, ஆனைக்கோட்டை மட்கலன்களைப் போல மிருதுவாக, வழவழப்பாக இல்லை; சற்றுக் கரடுமுரடாகவே உள்ளன.

முதலாவது குழியிற் கண்ட மட்பாண்ட ஓடுகளில் மூன்றில் எழுத்து வடிவங்கள் காணப்பட்டன. ஒன்றில் ‘ம’ எனும் பிராமி எழுத்து வடிவமும் மற்றதில் இரட்டைச் சூல வடிவமும், மூன்றாவதில் அடைப்புக் குறிக்குள் கோட்டு வடிவமான மீன் சின்னமும் காணப்படுகின்றன. 

இத்தொல்லியலகத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் மிகச் சரியான காலத்தை நவீன கதிரியக்கச் சாதனங்களின் துணையின்றிக் கண்டுபிடிப்பது கடினமான காரியம். ஆனாலும் இதில் கண்டெடுக்கப்பட்ட கரடுமுரடான ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்ட ஓடுகளும், ஈமப் படையலாக வைக்கப்பட்டிருந்த நுண்கற் சீவலும் இவற்றின் காலத்தை கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்கின்றன. இவ்விடத்திலுள்ள மண்மேட்டில் மேற்கொள்ளப்படும் முறையான தொல்லியல் அகழ்வாய்வும், அறிவியல் ரீதியிலான கதிரியக்கத் தேதிக் கணிப்புகளுமே இம்மையத்தில் ஆதிக்குடியேற்றங்கள் பற்றிய சரியான தகவல்களைத் தரும் (Ragupathy, P. 1987: 130).

ஊர்காவற்துறை – வேலணை

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மேற்கே, காரைநகருக்குத் தெற்கே அமைந்தீருக்கும் தீவு ஊர்காவற்துறை (Kayts). இத்தீவு வேலணைத்தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இத்தீவில் வேலணை, அல்லைப்பிட்டி, மண்கும்பான், சரவணை, புளியங்கூடல், சுருவில், நாரந்தனை, கரம்பொன் ஆகிய கிராமங்கள் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அருகாமையில் அமைந்த தீவகங்களில் ஆரம்பகால மக்கள் குடியேற்றங்கள் ஏற்பட்ட இடங்களில் இது முக்கியமானதொன்றாகும். இது மிகப் பரந்த விவசாய நிலங்களையும், புல் நிறைந்த மேய்ச்சல் நிலங்களையும், ஆண்டு தோறும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கும் நன்னீர் வளங்களையும், கடல்நீரேரியில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் வாய்ப்பு வளங்களையும், கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டு நடத்தும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது.

இந்தத் தீவின் வடமுனையிலிருந்த ஊர்காவற்துறைத் துறைமுகம் யாழ்ப்பாணக் கடலேரிக்கும் மற்றைய தீவுகளுக்கும் செல்லும் கடல்வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவதாகவும், போர்த்திற நடவடிக்கைகளுக்குப் பயன்படக்கூடிய கேந்திர மையத்தில் அமைந்திருப்பதாகவும் மத்திய காலப் பதிவேடுகளும், கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன (Ragupathy, P. 1987: 26; Indrapala, K. 1969; Pieris, P.E. 1920). 

ஊர்காவற்துறைக்கு வடக்கே ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையே அமைந்த சிறிய தீவில் 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக் குடாவின் கடல்வழி நுழைவாயிலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு கோட்டையை அமைத்து அங்கே தங்கள் போர் வீரர்களைத் தங்க வைத்தார்கள். அதற்கு ‘அரச கோட்டை’ (Fort Royal) எனப் பெயரிட்டார்கள். 1658 இல் இக்கோட்டையை போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய டச்சுக்காரர், இதைத் திருத்தியமைத்து, கோட்டை வாசல்வரை செல்லக்கூடிய கடல்வழியையும் அமைத்து, அதற்கு ‘அம்மன்னீஸ் கோட்டை’ (Fort Hammenhiel) எனப் பெயரிட்டார்கள். அங்கே ஓர் இராணுவப் பிரிவையும் நிறுத்தியிருந்தார்கள். இக்கோட்டையை டச்சுக்காரரரிடமிருந்து கைப்பற்றிய பிரித்தானியர்கள் இதை முதலில் ஓர் உச்சவரம்புப் பாதுகாப்புச் சிறைச்சாலையாகவும், பின்னர் ஒரு தொற்றுநோய் மருத்துவ நிலையமாகவும் உபயோகித்தார்கள். இக்கோட்டை டச்சுக்காரர் கொடுத்த பெயரினாலேயே இன்றுவரை அழக்கப்பட்டு வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் முதலில் ஒரு சிறைச்சாலையாக உபயோகப்படுத்தப்பட்ட இக்கோட்டை சமீபகாலங்களில் இலங்கை கடற்படையினரால் ஒரு சுற்றுலாப் பயணிகளின் விடுதிமனையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

வேலணைச் சந்திக்கு வடகிழக்கே பரந்திருக்கும் வயல்களுக்கிடையே காணப்படும் கும்புருப்பிட்டி, சோழவத்தை, நித்தில், ஆவராந்துலா என்பன தொல்லியல் மையங்களாகும். இவற்றுள் கும்புருப்பிட்டி 10 – 15 ஏக்கரில் பரந்திருக்கும் மேட்டு நிலம். இங்குள்ள ஒரு மேட்டில் காணப்படும் வெட்டப்பட்ட சுண்ணாம்புக்கல் தகடுகளும், பவளப்பாறைக் கற்களும் (Coral Stones) இவ்விடத்தில் ஒரு தாதுகோபம் இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இவ்விடத்தில் காணப்படும் பல வகையான மட்பாண்டங்களும் மற்றும் தொல்பொருட்களும் இந்த மையத்தின் முக்கியத்தைக் காட்டி நிற்கின்றன (Ragupathy, P. 1987: 25).

சாட்டி

வேலணைக் கடற்கரையில் அல்லைப்பிட்டியிலிருந்து மண்கும்பான்வரை நீண்டு கிடக்கும் மணல் பரப்பு 6 கி.மீ. தூரத்திற்கு நீண்டு செல்கிறது. அல்லைப்பிட்டியிலுள்ள சாட்டி முற்காலத்தில் ஒரு துறைமுகமாக இருந்ததை அங்கே கண்டெடுத்த ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்ட ஓடுகள், ஆரம்பகால சிவப்பு மட்கல ஓடுகள், உரோம ரௌலெற்றெட் மட்கல ஓடுகள் என்பன காட்டி நிற்கின்றன. இவற்றைத் தவிர இரும்புத் தண்டுகள், இரும்புக் கசடுகள், கருங்கல் தேய்கற்கள், பள்ளமிட்ட ஓடுகள் என்பன கண்டெடுக்கப்பட்டன (Ragupathy, P. 1987: 25).

அல்லைப்பிட்டி அகழ்வுகள் – 1977

1977 ஆம் ஆண்டில் வீடு கட்டும் ஒப்பந்தக்காரர்கள் அல்லைப்பிட்டி கடற்கரையில் மணலை அகழ்ந்தெடுத்த சமயம் பலவகையான சீனப் பீங்கான்களை வெளிக்கொணர்ந்தார்கள். இதைத் தொடர்ந்து அச்சமயம் இலங்கை வந்திருந்த சிக்காகோ பல்கலைக்கழகப் பேராசிரியரும், இலண்டன் (SOAS) பல்கலைக்கழக இணைப் பேராசிரியருமான ஜோன் காஸ்வெல் தலைமையில், இலங்கைத் தொல்லியல் துறையினரின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பேராசிரியர் காஸ்வெல் தனது அகழ்வாய்வை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:

“அவ்விடத்தில் பெருந்தொகையான சீன சிங் – பாய் வட்டில்களும், மற்றைய வகைப் பீங்கான்களும் வெளிக்கொணரப்பட்டன. இக்கண்டுபிடிப்பு ஊரில் விரைவாகப் பரவியதனால் மக்கள் அவ்விடத்தில் கூட ஆரம்பித்தார்கள். நாங்கள் அதிகாலையில் அங்கே சென்றபோது மணல் அகழ்ந்தெடுக்க வந்தவர்கள் ஏற்கனவே மணற்கும்பிகளுக்கூடாக மேலோட்டமாக ஒரு நீண்ட குழியை வெட்டியிருந்தார்கள். அங்கே கண்டெடுத்த பீங்கான் துண்டுகளை அவர்கள் வெளியே போட்டிருந்தார்கள். இவ்விடத்தில் மீதமிருந்த மட்பாண்டங்களை பாதுகாத்து வெளிக்கொணர ஒரு மீட்பகழ்வாய்வு (Rescue Dig) செய்ய வேண்டியிருந்தது.” (Carswell, J. 1978: 37).  

“முதலில் வெட்டப்பட்டிருந்த குழியில் நேர் செங்கோடாகச் சுத்தப்படுத்தி, அங்கே காணப்பட்ட கலத்துண்டுகளைச் சேகரித்தோம். அந்த அடுக்கு எவ்வாறு அங்கே கலன்கள் பரவியிருந்தது என்பதைக் காட்டியது. சமீபத்தில் பெய்த மழையினால் பல பீங்கான் துண்டுகள் குழியின் அடியில் சேர்ந்திருந்தன. சுத்தப்படுத்தப்பட்ட குழியின் பக்கச் சுவரிலிருந்து அந்த கலன்கள் சுத்தமான மணலில் கைவிடப்பட்டிருப்பதையும், அதற்கு மேலாக ஓர் அடுக்கு சுத்தமான மணல் இருப்பதையும், மேலே கருமை பிடித்த மணலில் மேலே வளர்ந்திருந்த செடிகளின் வேர்களையும் காண முடிந்தது.” 

“இந்த மணல் படுகை அடுக்கமைவை உறுதிப்படுத்திய பின்னர் மணல் மேல் மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் ஆழத்தில் கலன்களின் அடுக்குத்தளம் வரை சுத்தப்படுத்தினோம். பீங்கான் கலன்கள் 5 மீட்டர் விட்டம் கொண்ட, சுமாராக வட்ட வடிவில் புதைந்திருந்தன. இந்தப் புதையலில் அரைவாசிக்கு மேல் மணல் அகழ்வோரால் குழப்பப்பட்டிருந்தது”

“மீதமிருந்த கலத்துண்டுகள் இது கைவிடப்பட்ட ஒரு கலக்குவியல் அல்ல என்பதைக் காட்டின. ஒரு பீங்கான் கலனின் உடைந்த துண்டுகள் நீண்ட தூரத்திற்குப் பரவிக் கிடப்பது இத்துண்டுகள் புதைக்கப்பட முன்னர் குழப்பியிருப்பதைக் காட்டியது. இதை விட்டுச் சென்றவர்கள் இவற்றை முதலில் துருவித் தேடிய பின்னர் புதைத்திருப்பதாகப் பட்டது. எனது எண்ணத்தில் உதித்த சம்பவம் இது: ஒரு சீன மட்பாண்டக் கப்பல், சரக்குப் பெட்டியை கரைக்குக் கொண்டு வந்தவர்கள், அவற்றில் பல பழுதடைந்திருப்பதைக் கண்டு அவற்றை அலசி அவற்றில் முழுமையானவற்றை எடுத்துக்கொண்டு மிகுதித் துண்டுகளை இங்கே சுத்தமான மணலில் புதைத்திருக்கிறார்கள்.” (Carswell, J. 1978: 39).

இப்பீங்கான் துண்டுகள் அனைத்தும் யாழ்ப்பாணம் கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் சுத்திகரிக்கப்பட்டு, அடுத்த இரு வாரங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கட்டடக்கலை மாணவர்கள் நால்வரின் உதவியோடு, அதிக பிரயாசையின் பேரில் ஒன்றுசேர்க்கப்பட்டு, வச்சிரப்பசை கொண்டு ஒட்டப்பெற்றன. மொத்தத்தில் 443 பீங்கான் கலன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுள் பலவகையான உருவ அமைப்புகள் கொண்ட கிண்ணங்கள், கோப்பைகள், குடங்கள், சாடிகள் என்பன காணப்பட்டன. இவற்றுள் இள மஞ்சள்நிற பளிங்கியற்பொருள் பூசப்பட்ட வெண்கலன்கள், வெண்ணிற சிங் – பாய் சீனப் பீங்கான்கள், மஞ்சள் நிறக் கெண்டிகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. இப்பாண்டங்கள் அனைத்தும் கி.பி. 1100 ஆம் ஆண்டிற்குரிய சீனாவின் வடக்கு – சுங் காலத்தவையாகும் (Northern Sung Period)  (Carswell, J. 1978:39-41). 

அடுத்து வரும் பக்கங்களில் அல்லைப்பிட்டியில் கண்டெடுத்த பீங்கான்களின் படங்களைக் காணலாம்.  

அல்லைப்பிட்டிப் பீங்கான்கள்

(a). ஒரு கிண்ணத்தின் அடித்தட்டு. மெல்லிய மஞ்சள் நிறப் பளிங்கு மெருகு (Glaze). உள்ளே பூக்களின் கோட்டு வரைவுகள்.

(b). சரிவான பக்கங்களைக் கொண்ட கிண்ணம். வட்டவடிவான அடிக்கால். பக்கங்கள்  உள்வளைந்த கோடுகளையும், உள்ளே பூக்களின் உருவரையும் கொண்டவை. 

(c). சரிவான பக்கங்களைக் கொண்ட கிண்ணம். தடித்த மேல் விளிம்பைக் கொண்டது. உள்ளே சுற்றிவர இலைகளைக் கொண்ட பதிக்கப்பட்ட வார்ப்பு. வெளிப்பக்கம் செங்கோட்டில் பதிக்கப்பட்ட நீள்சதுரக் கூறுகள்.

                                                                                                                          Image Source: John Carswell.  

(a). வெளிப்புறம் வளைந்த விளிம்பைக் கொண்ட பாலேட்டு நிற (Cream Coloured) பீங்கான் கிண்ணம். அடிப்பகுதி உயர்ந்த கால்களைக் கொண்டது.

(b). வெளிப்புறம் வளைந்த விளிம்பு கொண்ட பீங்கான் கிண்ணம். மெல்லிய பச்சைநிற பளிங்கு மெருகு (Glaze). உள்ளே இரு பொது மையம் கொண்ட வளையங்கள் (Concentric Rings) காணப்பட்டன. வெளிப்பக்கம் வாழை இலை போன்ற பதிவுகள்.

(c). வெளிப்புறம் வளைந்த விளிம்பு கொண்ட பீங்கான் கிண்ணம். உள்பக்கம் மெல்லிய இலைகளின் பதிப்பு. நடுவில் ஒரு பூ.  

                                                                                            Image Source: John Carswell.

(a). வளைந்து வளைந்து செல்லும் அணிவகையுள்ள விளிம்பைக் கொண்ட கிண்ணம். கடினமான மென் – மண்ணிறப் பளிங்கு மெருகு கொண்ட கிண்ணம். அடியில் காலுள்ளது.

(b). வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட குவளை. சாம்பல் நிறப் பளிங்கு மெருகிட்ட வெண்ணிறப் பாண்டம். அடியில் உயர்ந்த கால் கொண்டது.

(c).  பலவகைப் பாண்டங்களின் பகுதிகள்.

  1. பெரிய சாம்பல் நிறச் சாடியின் கழுத்துப் பகுதி.

  2. சாம்பல் நிறச் சாடியின் கழுத்துப் பகுதி.

  3.சாம்பல் நிறச்சாடியின் கைப்பிடி கொண்ட தோள் பகுதி காணப்படுகிறது. 

  4. சாம்பல் நிறச் சாடியின் கழுத்துப் பகுதி. இரு கைப்பிடிகள் கொண்டது.

  5. சாம்பல் நிறமான கடினமான சாடியின் கழுத்துப்பகுதி.

  6. உருண்ட விளிம்பு கொண்ட கடினமான சாம்பல் நிறச் சாடியின் கழுத்துப் பகுதி.

 7. உருண்ட விளிம்பு கொண்ட சாம்பல் நிறமான, மஞ்சள் பளிங்கு மெருகிட்ட சாடியின் கழுத்துத் துண்டு.      

                                                                                            Image Source: John Carswell.

புங்குடுதீவு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குப் பக்கத்தில் வேலணைக்குச் சற்று அப்பால், பல கிராமங்களைக் கொண்டது புங்குடுதீவு. யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இத்தீவு கடலினூடாகச் செல்லும் வீதியினால் இணைக்கப்பட்டிருக்கிறது. மகாவம்சத்தில் இது புவங்குதீப என்றும், 12 ஆம் நூற்றாண்டின் சிங்கள மன்னன் நிசங்கமல்லனின் இராமேஸ்வரம் கல்வெட்டில் புவங்குதிவெய்ன எனவும் கூறப்பட்டிருக்கிறது.

புங்குடுதீவின் கிழக்குக் கரையிலுள்ள திகழி என்ற பகுதி இத்தீவின் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதியாகும். இதைக் கவனிக்குமிடத்து இக்குடியேற்றங்கள் கந்தரோடையை மையமாகக் கொண்ட யாழ்ப்பாணக் குடாவிலிருந்து இடம்பெயர்ந்ததாகக் கருத இடமிருக்கிறது. திகழியில் காணப்படும் ஆரம்பகாலக் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் 5 – 10 ஏக்கர் அளவிற்குப் பரந்திருப்பது இங்கே கணிசமான அளவு மக்கள் குடியேற்றம் இடம்பெற்றிருப்பதைக் காட்டி நிற்கிறது. இத்தீவிலுள்ள பெரியகுளம், மற்றும் திகழிக்குளம் என்பன இங்கே பெரிய அளவில் நெற்பயிர் செய்வதற்கு ஏதுவாக இருந்திருக்கின்றன (Ragupathy, P. 1987: 23-24; Thiagarajah, S. 2016: 134).

பாளி நூலான மகாவம்சம் இப் பியங்குதீபம் புத்த பிக்குகளைக் கொண்டிருந்த ஒரு பிரசித்திபெற்ற பௌத்த மையம் எனப் பதிவு செய்திருக்கிறது. இங்குள்ள ஒரு மக்கள் மரபுக் கோயிலின் (Folk Temple) முன்பக்கத்தில், சடங்கு முறையாகத் தேங்காய் உடைக்கும் கல்லாக புத்தரின் உருவக்கற்சிலையின் மேலுடற்பகுதி உபயோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது (Ragupathy, P. 1987: 23-24).

நயினாதீவு

நயினாதீவு என்னும் இத்தீவின் பெயர் முற்காலத்தில் இத்தீவில் வாழ்ந்த நயினார் அல்லது நாக இன மக்களைக் குறிப்பிடுவதாகும். முதலாம் நூற்றாண்டின் கிரேக்க நிலப்படதாரியான குளோடியஸ் தொலமி தனது வரைபடத்தில் தப்ரொபான தீவின் வடபகுதியை நாகதீப எனவும், அப்பெரிய தீவின் சமீபத்தில் உள்ள சிறிய தீவை நாகதீப (Nagadiba) என்ற பெயராலும் குறிப்பிடுகிறார். இச்சிறிய தீவு நயினாதீவைக் குறிப்பதாகக் கருத இடமிருக்கிறது. இத்தீவானது புராதன தாய்த் தெய்வமான நாகபூசணி அம்மன் கோயிலையும், பௌத்த ஆலயமான நாக விகாரையையும் கொண்டிருக்கிறது. 

சில நூல்களும், சில எழுத்தாளர்களும், வலைத்தளக் கட்டுரைகளும் குறிப்பிடுவது போல நயினாதீவு மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவமோ அல்லது மகாவம்சம் குறிப்பிடும் நாகதீபமோ அல்ல. மணிமேகலைக் காப்பியம் பண்டைய யாழ்ப்பாண அரசை நாகநாடு எனக் குறிப்பிடுகிறது. மணிபல்லவம் என்ற தீவின் பெயர் நயினாதீவைக் குறிப்பிடுவதாக இருந்தால், நாகநாடு மணிபல்லவத்தின் கிழக்கே கடலுக்கு அப்பாலுள்ள நாகநாடு என இக்காப்பியம் குறிப்பிட்டிருக்கும். ஆனால் மணிமேகலையோ நாகநாடு மணிபல்லவத் தீவின் ஒரு நிலப்பகுதி என்றே கூறுகிறது. மணிமேகலையில் வரும் “மணிபல்லவத்தின் கீழ்நில மருங்கின் நாகநாடாளும்” (மணிமேகலை, viii: 54) என்ற அடிகள் கவனிக்கப்பட வேண்டியவை. ‘மணிபல்லவம்’ என்பது இங்கே யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் குறிப்பிடுகிறது. மணிபல்லவத்திற்கும் நாகநாட்டிற்குமிடையே உள்ள தொடர்பு மணிமேகலையில் இந்த ஓர் இடத்தில் மட்டுந்தான் கூறப்படுகிறது. இதை ஆராய்ந்த வரலாற்றாசிரியரான சுவாமி ஞானப்பிரகாசர் மணிபல்லவம், நாகநாடு இரண்டும் நாகதீபம் எனப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறித்தன எனப் பதிவு செய்திருக்கிறார் (ஞானப்பிரகாசர், 1928: 23-36).

மகாவம்சம் ‘நாகதீப’ என்ற பெயரால் இலங்கையின் வடபகுதி முழுவதையும் குறிப்பிடுகிறது. மேலும், வல்லிபுரப் பொற்சாசனமும் ‘நகதிவ’ என யாழ்ப்பாணத் தீபகற்பத்தைக் குறிப்பிடுகிறது. ‘யம்புகோளப் பட்டின’ இங்கிருந்த முக்கியமான பெரிய வர்த்தகக் கப்பல் துறை என்பதையும், வல்லிபுரத்தில் ‘பல்லவத்துறை’ என்ற பெயரில் ஒரு துறைமுகம் இருந்ததையும் மகாவம்சம் குறிப்பிடுகிறது (Mahavamsa, XIX: 23, 69: XXVI: 42-44). இப்படியான பெரிய வர்த்தகக் கப்பல் துறை ஏதும் நயினாதீவில் கிடையாது.

(இவ்விவரங்கள் ஏற்கனவே ‘வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும்’ என்ற பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது). 

நெடுந்தீவு

யாழ்பாணக் குடாநாட்டின் மேற்குத் தொலைக்கோடியில் உள்ள தீவான நெடுந்தீவு (Delft) தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் யாழ்ப்பாணத் தீவகற்பத்திற்கும் நடுவே அமைந்திருக்கும் தீவு. தமிழ்நாட்டிலிருந்து வடஇலங்கை நோக்கி வரும் கப்பல்கள் ஊர்காவற்துறையை அடையும் முன்னர் நெடுந்தீவைக் கடந்து வரவேண்டும். இதை மனதில் கொண்டு டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) நெடுந்தீவில் ஒரு பெரிய கடற்கோட்டையை அமைத்திருந்தர்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தின் பின்னர் கவனிப்பாரற்ற நிலையில் அது அழிவடைந்துவிட்டது. இத்தீவின் மேற்குக் கரையோரமாகக் காணப்படும் கட்டட இடிபாடுகள் கொண்ட தொல்லியல் மையம் வெடியரசன் கோட்டை என அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணக் கிராமிய வரலாற்றுக் கதைகளில் வெடியரசன் வியப்பார்வமளிக்கிற ஒரு கதாநாயகன் ஆவார்.

இன்றைக்கு வெடியரசன் கோட்டை எனக் கூறப்படும் திடல் பவளப்பாறைக் கற்களால் (கோறல் கற்கள்) வட்டவடிவில் அமைக்கப்பட்ட பௌத்த ஸ்தூபத்தின் அடித்தளமாகும். அதன் மேல் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினர் மூன்று சிறிய ஸ்தூபங்களை அமைத்துள்ளனர். இத்திடல் அமைந்திருக்கும் கடற்கரை இன்றைக்கும் ‘பெரியதுறை’ என அழைக்கப்படுவதனால், முற்காலத்தில் இது முக்கியமான ஒரு வர்த்தகத் துறையாக இருந்திருக்க வேண்டும். பண்டைய வர்த்தகர்கள் ஆதரவளித்த ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக இவ்விடம் விளங்கியிருக்கலாம்.

இவ்விடத்தில் கண்டெடுத்த மட்பாண்டங்களை ஆய்வு செய்ததில் அவற்றினிடையே ஆரம்பகால கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், உரோம ரௌலெற்றெட் மட்பாண்டங்கள், பிற்காலத்தைய பள்ள விளிம்பு கொண்ட கலன்கள் என்பன காணப்பட்டன. இவற்றிலிருந்து கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட காலங்களிலிருந்து இவ்விடத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் குடியேற்றங்கள், பிற்கால யாழ்ப்பாண இராச்சிய காலங்கள் வரை நீடித்ததை அறிய முடிகிறது. இவற்றோடு பலவகையான செப்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், இரும்புக் கசடுகள், கற்குழவிகள், வரிப்பள்ளமிட்ட ஓடுகள், 20 மாலை மணிகள், சூதுபவள (கார்னிலியன்) உருண்மணிகள், தேய்வடைந்த செப்பு நாணயங்கள், ஸ்ரீமத் சாகஸமல்ல என்னும் பெயர் பொறித்த ஒரு செப்பு நாணயம் ஆகியன கண்டெடுக்கப்பட்டன (Ragupathy, P. 1987: 17-21).    

II

பூநகரித் தொல்லியலாய்வு

இலங்கையின் பெருநிலப்பரப்பின் வடபகுதியில் யாழ்ப்பாணக் கடலேரிக்கருகில் அமைந்த புராதன நகரம் பூநகரி. பூநகர் என்ற ஆதிப்பெயரே காலப்போக்கில் பூநகரி என மருவியுள்ளது. வரன்முறையான மரபில் ஆதியிலிருந்தே பூநகரி யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. பெருநிலப்பரப்பின் வடமுனையில் உள்ள ஒரு நில நீட்சியின் கடற்கரையில், போர்த்திற நடவடிக்கைகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு மையத்திலிருந்த இப்பட்டினத்துறை யாழ்ப்பாணத்தின் பண்டைய முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று.  

தொல்லியல் ரீதியாக பூநகரி வட இலங்கையின் இரணைமடு தேரிமணற் தொடர் வலயத்தில் அமைந்திருக்கும் ஒரு நிலமாகும். இந்தச் செம்மணல் வலயம் இலங்கையின் வடகிழக்கே கடற்கரைக்குச் சமீபமாக முல்லைத்தீவில் ஆரம்பித்து இரணைமடு, பூநகரி உள்ளிட்ட வடபகுதி வழியாகச் சென்று, வடமேற்குக் கரைவழியாகத் தொடர்ந்து குதிரைமலை வரை செல்கிறது.

இந்தத் தேரிமணற் தொடர் வலயத்தில் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் ஆதிகால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்த வலயத்தில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட இலங்கையின் தலையாய தொல்லியலாளர் அமரர் சிரான் தெரணியகல இந்த வலயத்திற்கு இரணைமடு தேரிமணற் தொடர் வலயம் எனப் பெயர் சூட்டியிருக்கிறார் (Deraniyagala, S.U. 1992). இது பற்றி பின்னர் ஓர் இயலில் விரிவாகப் பேசப்படும்.

1982 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், இலங்கைத் தொல்பொருள் துறையும் இணைந்து மேற்கொண்ட மேலாய்வில் பூநகரியின் வடக்கு முனைவரை நுண்கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. பூநகரியின் மேற்கிலுள்ள மணற்திட்டியான மண்ணித்தலையில் கலாநிதி இரகுபதியும் அவரது சகாக்களும் பல நுண்கல் ஆயுதங்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் குவாட்ஸ் கற்களினாலும், சில சேட் கற்களினாலுமான இக்கல்லாயுதங்கள் கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்டன (Ragupathy, P. 1987: 179). இலங்கையில் நுண்கற் கருவிகளின் ஆரம்பகாலம் கி.மு. 33,000 ஆண்டாகக் கணிக்கப் பெற்றிருக்கிறது (Deraniyagala, S.U. 1992: 695-70). இக்காலத்தையக் கற்கருவிகளை உபயோகித்த மக்கள் பூநகரியில் கல்முனை, வெட்டுக்காடு, மண்ணித்தலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.  

பெருங்கற் பண்பாட்டுத் தொல்பொருட் சான்றுகள்

இரும்புக் காலத்தைய பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்கள் இப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் 1989 – 90 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளராக இருந்த (பிந்நாள் பேராசிரியர்) கலாநிதி பரமு புஷ்பரட்ணம் அவர்கள் பூநகரிப் பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளில் பெறப்பட்ட தொல்பொருட்கள் காட்டிய சான்றுகளாகும். இவை 1993 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘பூநகரி – தொல்பொருளாய்வு’ என்னும் நூலில் கூறப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையில் இனிக் கூறப்படும் தகவல்கள் பரமு புஷ்பரட்ணத்தின் இந்த ஆய்வின் பெறுபேறுகளாகும். 

பூநகரிப் பிராந்தியத்தில் மண்ணித்தலை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் மேற்கொண்ட மேலாய்வுகளில் ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வகையான மட்பாண்டங்கள் கி.மு. 1500 ஆண்டிற்கும் – கி.மு. 300 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டவை ஆகும். இதிலிருந்து கி.மு. ஆயிரத்தாண்டு காலத்திலேயே இப்பெருங்கற் பண்பாட்டுப் பாத்திரங்களை உபயோகித்த மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏற்கனவே இப்பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்களின் வம்சாவழியினரே பிற்காலத்தில் பெருங்கற் பண்பாட்டு அம்சங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறியத்தருகிறது (புஷ்பரட்ணம் 1993: 16).

வெட்டுக்காடு, மண்ணித்தலை ஆகிய இடங்களில் கறுப்பு – சிவப்பு மட்பாண்ட ஓடுகள் நிலத்தின் மேல் மட்டங்களிலேயே பெருவாரியாகக் காணப்பட்டன. மண்ணித்தலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் குழுவினர் பல வகையான கறுப்பு மட்பாண்டங்கள், சிவப்புநிற மற்றும் சாம்பல்நிற மட்பாண்ட ஓடுகளைக் கண்டெடுத்தார்கள். இவற்றில் முக்கியமான அம்சம் அந்த ஓடுகளில் காணப்பட்ட கீறல் எழுத்துகளும், தமிழ்ப்பிராமி எழுத்துகளுமாகும். 

மற்றைய தொல்பொருட்களில் சுடுமண் பொம்மைகளில் கண்ட தாய்த் தெய்வ உருவங்கள், சூளையிற் சுடப்பட்ட களிமண் விளக்குகள், இரும்பு ஆணிகள், இரும்பினால் செய்யப்பட்ட தூண்டில் முட்கள், பலதரப்பட்ட உருண்மணிகள், உருண்மணிக் கழுத்து மாலைகள், கை வளையல்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் மண்ணித்தலையிலும், வெட்டுக்காட்டிலும் கண்டெடுக்கப்பட்ட இலை வடிவான இரும்பு வேல்கள் முக்கியமானதொரு கண்டுபிடிப்பு. இம்மாதிரியான வேல் வடிவங்கள் புராதன ‘பெருங்கற் பண்பாட்டு மதச் சின்னங்கள்’ (Symbols of a Megalithic Religion) என வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது (Nilakanta Sastri, K.A. 1958: 55). 

பூநகரிப் பகுதியில் மண்ணித்தலை, வெட்டுக்காடு, பல்லவராயன் ஆகிய இடங்களில் களி மண்ணினால் செய்யப்பட்டு சூளையிற் சுடப்பட்ட லிங்க உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உருவங்கள் அநுராதபுரம், பொம்பரிப்பு, இரணைமடு, மாமடுவ, சிகிரியா, அம்பாறை ஆகிய இடங்களில் கண்ட சூளையிற் சுட்ட உருவங்களுடன் (Deraniyagala, P.E.P. 1953: 133-138) ஒப்பிடத்தக்கவை.

ஈமப் புதையல்கள்

இவ்விடங்களிலுள்ள நிலம் பெரும்பாலும் மணல் வகையானபடியினால், இறந்தோரை தாழிகளில் வைத்தே அடக்கம் செய்தார்கள். இவ்வகையான அடக்கங்கள் குன்றுகளில் அல்லது சிறிய ஏரிகளுக்கு அருகாமையில் தியாகம், குதிரைகட்டின தீவு, பல்லவராயன் ஆகிய இடங்களில் காணப்பட்டன. குழப்பப்பட்ட சில புதைகுழிகளில் பெரிய தாழிகளும், அவற்றிற்கு அருகில் சிறிய குடங்களில் உருண்மணிகளும், சுடுமண் உருவங்களும், வளையல்களும் ஈமப் படையற் பொருட்களாகக் காணப்பட்டன. நாட்டின் பௌதிகச் சூழலுக்கு ஏற்ப தாழிகளோடு குழிப் புதையல்களும் காணப்பட்டன. தென்னிந்தியாவில் இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த இடங்களில் வதிவிடம், இடுகாடு, குளம், வயற்பரப்பு ஆகிய நான்கும் முக்கிய அம்சங்களாக விளங்கியது போன்றே பூநகரிப் பகுதிகளிலும் இப்பண்பாட்டு அம்சங்களைக் காணக்கூடியதாக இருந்தது. 

ஈழவூரில் ஒரு கிணறு தோண்டிய சமயம் நீளக் கிடத்தி அடக்கம் செய்யப்பட்ட ஓர் எலும்புக்கூடு கிடைக்கப்பெற்றது. அதனோடு, கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், கை வளையல்கள், உருண்மணிகள், இரும்பு ஆணிகள் என்பனவும் காணப்பட்டன. இது ஓர் ஈமப்புதையல் மையமாக இருந்தமையால் கிணறு தோண்டுவது அத்துடன் நிறுத்தப்பட்டது (புஷ்பரட்ணம், ப. 1993: 20-35).

தமிழ்ப் பிராமி எழுத்து வடிவங்கள்

ஒரு காலத்தில் இந்தியாவிலுள்ள பிராமி எழுத்து வடிவங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னன் ஆட்சியின் பின்னரே பரவலாக உபயோகப்படுத்தப்பட்டன என்ற கருத்து நிலவி வந்தது. பிராகிருத மொழியில் பதிவு செய்யப்பட்ட அசோக மன்னனின் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளே இந்தியாவின் மிகப் பழமையான எழுத்துப் பதிவுகள் எனவும் கருதப்பட்டது. இதன் காரணமாக இவ்வெழுத்துகள் ‘அசோகப்பிராமி’ என அழைக்கப்பட்டன.

இவற்றையொத்த எழுத்து வடிவங்கள் பண்டைய தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இவற்றிலுள்ள ‘இ’, ‘ம’, ‘ற’, ‘ன’, ‘ள’, ‘ழ’ ஆகிய தமிழ்ப் பிராமி எழுத்துகள் அசோகப்பிராமியில் கிடையாது. அப்படியிருந்தும் ஐராவதம் மகாதேவன் போன்ற கல்வெட்டியலாளர்கள் தமிழ்ப்பிராமி எழுத்துகள் அசோகப்பிராமியிலிருந்தே தோற்றம் பெற்றதாகக் கூறினார்கள் (Mahadevan, I. 2003: 173). 

சமீபகாலங்களில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய தொல்லியல் மையங்களில் கண்ட தமிழ்ப் பிராமி எழுத்துகளின் காலத்தை கதிரியக்கக் கரிம ஆய்வுகள் கி.மு. 600 ஆம் ஆண்டிற்கு எடுத்துச் செல்கின்றன. அவ்வாறே அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் ஆகிய மையங்களில் கண்ட தமிழ் எழுத்துகள் கி.மு. 500 ஆம் ஆண்டிற்கு உரியவையாகக் காணப்படுகிறது (இரா. சிவானந்தம் 2019: 08). இலங்கையில் அநுராதபுரத்தில் தொல்லியலாளர் தெரணியகல கண்டெடுத்த ‘தயா குடெ’ என்னும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் கொண்ட மட்பாண்ட ஓடு கி.மு. 700 – 500 ஆண்டுகாலத்தைக் காட்டியிருக்கிறது (Deraniyagala, S.U. 1992).

இத்தகைய பின்னணியிற்தான் பூநகரிப் பிராந்தியத்தின் மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய் ஆகிய இடங்களில் பேராசிரியர் புஷ்பரட்ணம் கண்டெடுத்த மட்பாண்டப் பிராமி வடிவங்களை ஆராயவேண்டியுள்ளது. இந்த இயலில் பிராமித் தமிழ் எழுத்துகளைக் கொண்ட மூன்று பூநகரி மட்பாண்ட ஓடுகள் மட்டுமே இங்கே எடுத்துரைக்கப்படுகின்றன. 

பரமன்கிராயில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மட்பாண்ட ஓட்டில் தமிழ்ப் பிராமி எழுத்தில் ‘லோமா’ என்ற எழுத்துப் பதிப்பு காணப்பட்டது. இது அதிலிருந்த வாசகத்தின் ஒரு பகுதியேயாகும். அதன் இரு பக்கங்களிலுமிருந்த உடைந்த பகுதிகளில் இந்த வாசகம் தொடர்ந்திருக்கும். அப்பகுதிகள் கிடைக்கவில்லை. 

மண்ணித்தலையில் கிடைத்த ஒரு மட்பாண்ட ஓட்டில் ‘ஈழ’ என எழுத்துப் பதிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி வரி காணப்பட்டது. இக்கலவோடுகள் இவ்விடத்தில் தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்களாகும். அக்காலத்தில் இலங்கையில் தயாரிக்கப்படும் பொருட்கனை பெரிய தாழிகளில் அடக்கியே கப்பல்களில் எற்றுமதி செய்வார்கள். இப்படியான தாழிகள் (குடங்கள்) களி மண்ணில் வனையும் போதே தயாராகும். ஈழநாட்டின் பழைய பெயரான ‘ஈழம்’ அத்தாழிகளில் எழுதப்பட்டு சூளையில் சுடப்படும். இந்த மட்பாண்டத் துண்டில் காணப்படும் எழுத்து அவ்வாறாகப் பதிவு செய்யப்பட்ட எழுத்தாக இருக்கலாம்.

இங்கே கூறப்படும் மூன்றாவது மட்பாண்ட ஓடு ஒரு முக்கியமான ஓடாகும். பரமன்கிராயில் கிடைத்த இந்தச் சாசனம் பூநகரிப் பிராந்திய வரலாற்றாய்வில் முக்கியமானதொரு சான்றாதாரமாகக் கொள்ளத்தக்கது. இதன் முதல் இரு எழுத்துகளையும் தெளிவாக ‘வேளா’ என வாசிக்க முடிகிறது. இதன் சாசனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வாசித்த ஐராவதம் மகாதேவன் மூன்றாவது எழுத்தான தமிழுக்குரிய ‘ன’ எழுத்து தலைகீழாகப் பதியப்பட்டிருப்பதாகக் கூறி, இச்சாசனத்தை ‘வேளான்’ என வாசித்திருக்கிறார் (மகாதேவன், ஐ. 1990).

இச்சாசனத்தில் இடம்பெறும் வேளான் என்ற பதம் வேள், வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களைக் குறிப்பிடும் பதமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டுப் பிராமிச் சாசனங்களில் வேள் என வரும் பெயர்களை வாசித்த அறிஞர் பலரும் அப்பெயர்கள் சங்க காலத்திலே சிறப்புற்றிருந்த வேள், வேளிர் எனப்பட்ட குறுநில மன்னர்களையே குறிப்பனவென்பர். இலங்கையிலும் வேள் அல்லது வேளிர் என்ற பெயர் கொண்ட பிராமிச் சாசனங்களை, சங்ககாலத்தைப் போல இலங்கையிலும் வேளிர் என்ற சிற்றரசர்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்களாகக் கொள்ள முடியும். (Sitrampalam, S.K. 1980: 360-377).

இச்சாசனம் பற்றி தமிழ்நாட்டுச் சாசனவியலாளரான ஐராவதம் மகாதேவன் 01-07-1990 தேதியிட்ட தினமணி பத்திரிகையில் வெளியிட்ட கருத்து வருமாறு: 

“தமிழ் மொழியிலும் தமிழ்ப் பிராமி எழுத்துகளிலும் ஆன இச்சாசனம் கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததென்று எழுத்தமைதியில் இருந்து கூற முடியும். வேளான் என்ற பெயர் சங்ககால வேள், வேளிர் ஆகிய குறுநில மன்னர்களையும், பிற்காலச் சோழர் காலத்தைய (மூவேந்தர்) வேளன் என்ற பெயர்களையும் ஒத்திருப்பதால், இலங்கை யாழ்ப்பாணப் பகுதியில் சங்ககாலத்திலேயே தமிழ் வேளிர் அல்லது வேளார் குடியிருந்தனர் எனக் கொள்ளலாம்” (மகாதேவன், ஐ. 1990).

இப்பகுதியில் ஏற்கனவே எடுத்துக்கூறியது போல, தமிழ்நாட்டில் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பையும், எழுத்தமைதியையும் கொண்டு ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் கண்டெடுத்த தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கி.மு. 300 ஆம் நூற்றாண்டிற்கு உரியவையாக முதலில் கணிக்கப்பட்டன. ஆனால் அறிவியல் ரீதியான கதிரியக்கக் காலக் கணிப்புகள் இச்சாசனங்களின் காலத்தை கி.மு. 600 – 500 ஆம் ஆண்டுக் காலத்திற்கு எடுத்துச் செல்கின்றன. பூநகரிச் சாசனங்களும் இவ்வகையான கதிரியக்கக் காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தப்படும் போது, கி.மு. 300 ஆம் ஆண்டிற்கும் முற்பட்ட காலங்களைத் தரலாம். இச்சந்தர்ப்பத்தில் அநுராதபுரத்தில் கண்டெடுத்த தமிழ்ப் பிராமிச் சாசனம் கி.மு. 700 – 500 ஆண்டைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

வெளிநாட்டுத் தொடர்புகள்

இந்துமா கடலில் மேற்குலகங்களுக்கும், கிழக்குலகங்களுக்கும் இடையே அமைந்த இலங்கையின் நிலையமும், இங்கிருந்த வணிகப் பொருட்களின் சிறப்புமே இந்தியாவிலிருந்தும், தொலைவிலிருந்த பிற நாடுகளிலிருந்தும் வணிகர்களை நெடுங்காலமாக இலங்கைக்கு வரவைத்தன. இத்தொடர்புகளினால் இலங்கையின் பொருளியல் நிலை சிறப்படைந்ததுமல்லாமல் பிற நாடுகளின் பண்பாட்டு அம்சங்களும் இலங்கையில் பரவ வழியமைந்தன. இந்த வர்த்தக வலைப்பின்னலில் வட இலங்கையின் முக்கிய துறைமுகங்களான யம்புகோவளம், பண்ணைத்துறை (யாழ்ப்பாணப் பட்டினம்), மாந்தை ஆகிய பெருந்துறைகளும், பூநகரி, நாவாந்துறை ஆகிய மற்றைய துறைகளும் பெரும் பங்கெடுத்துக்கொண்டதை இன்றைய தொல்பொருளாய்வுகளும் அவற்றிலிருந்து பெறும் தொல்பொருட் சான்றுகளும் எடுத்துரைக்கின்றன. 

இலங்கையின் பெருநிலப்பகுதியில் அமைந்த மாந்தைத் துறைமுகம் ஊடாக வர்த்தகமும், மக்கள் புலப்பெயர்ச்சியும், பண்பாடும், அரசியற் படையெடுப்புகளும் நடந்ததற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இதனால் இதற்கு வடக்கே அமைந்த பூநகரியும் இச்செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கும் எனக் கருத இடமிருக்கிறது. இதனை இங்கு கிடைத்த இந்திய, கிரேக்க, உரோம, அரேபிய, சீன நாடுகளுக்குரிய தொல்பொருட் சான்றுகள் உறுதி செய்கின்றன. இச்சான்றுகள் இங்கு நிலவிய நாகரிகத்தின் கால அளவை வரையறை செய்ய உதவுவதுடன் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டின் பின்னணியில் தோற்றம் பெற்ற நகரமயமாக்கத்தில் இவ்வெளிநாட்டு வர்த்தகம் ஏற்படுத்திய இயக்க விளைவையும், செல்வாக்கையும் அறிய உதவுகின்றன (புஷ்பரட்ணம், 1993: 47).

இந்திய வர்த்தகம்

பூநகரியின் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு ஆரம்பமாவதற்கு முன்னரே அதனுடைய வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருக்க வேண்டும். இப்பண்பாட்டு அம்சங்கள் கி.மு. 1300 ஆம் ஆண்டுக்காலத்தில் கந்தரோடையில் ஆரம்பமான பெருங்கற் பண்பாட்டின் உள்நாட்டுப் பரவலுடனோ அல்லது தென்னிந்தியாவினுடனான வர்த்தகத் தொடர்புகளினூடாகவோ அல்லது இருவழியாகவோ பூநகரியை அடைந்திருக்கலாம்.

இற்றைக்கு கி.மு. 1000 இற்கும், கி.மு. 500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் புழக்கத்திலிருந்த ‘புராணாஸ்’ எனப் பிராகிருதத்தில் அழைக்கப்பட்ட வடஇந்திய முத்திரை நாணயங்கள் (Punch-marked Coins) பூநகரி அகழ்வுகளில் கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவை வெள்ளியிலும், செம்பிலும், வெள்ளி முலாம் பூசப்பட்ட செம்பிலும் கிடைத்திருக்கின்றன. 

இம்மாதிரியான அச்சுக்குத்திய நாகர்களின் முத்திரை நாணயங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் கந்தரோடையில் தயாரிக்கப்பட்டிருந்தமை முன்னர் கூறப்பட்டிருந்தது.

லக்ஷ்மி நாணயங்கள்

ஏற்கனவே கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்டு தொல்லியலாய்வாளர் போல் பீரிஸ் அவர்களால் ‘லக்ஷ்மி’ நாணயங்கள் எனப் பெயர் கொடுக்கப்பட்ட வகை நாணயங்கள் மண்ணித்தலை, வெட்டுக்காடு ஆகிய இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாணயங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டு காலம்வரை புழக்கத்திலிருந்தபடியினால் அக்காலகட்டத்தில் இப்பகுதிகளிலும் இந்த நாணயங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.

கிரேக்க – உரோம வர்த்தகம்

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் ஆரம்பமான இலங்கையுடனான கிரேக்க வர்த்தகத்தின் தொடர்ச்சியாக உரோம வர்த்தகம் நடைபெற்றது. ஆரம்பகால இலங்கை வர்த்தகம் நேரடியாக உரோமருடன் ஏற்படாது தென்னிந்திய வணிகர்களூடாக நடைபெற்றது என்ற கருத்து ஏற்புடையதாக இல்லை. 1996 ஆம் ஆண்டில் அநுராதபுரத்தில் கண்டெடுத்த அம்போரா சாடிகளையும், ஆதிகால ரௌலெற்றெட் மண்பாண்டங்களையும் காலக்கணிப்பிற்கு உட்படுத்திய ஆய்வாளர்கள் அவை கி.மு. 500 ஆம் ஆண்டளவில் கிரேக்க மாலுமிகளால் கொண்டுவரப்பட்டவை எனக் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல, அநுராதபுரத்தில் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் அதுபோன்ற மாதிரி (Duplicate) ரௌலெற்றெட் மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்கள் (Krishnan & Coningham 1997: 9-25). தமிழக ஆய்வுகளில் கி.மு. 300க்கும் முற்பட்ட கிரேக்க – உரோம வர்த்தகத்திற்கான சான்றுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இலங்கையுடனான கிரேக்க வர்த்தகம் தமிழக வணிகர்களூடாக அல்லாது, நேரடியாகவே நடைபெற்றிருக்கலாம். மேலும், கந்தரோடையில் இருமாத காலத்தில் மேற்கொண்ட மேலாய்வில் மட்டும் 150 உரேம நாணயங்களை போல் பீரிஸ் பெற்றிருக்கிறார் (Pieris, P.E. 1919: 46). உரோமாபுரியுடனான நேரடி வர்த்தகம் இல்லாமல் இவ்வளவு பெருந்தொகையான நாணயங்கள் நிலத்தின் மேலாய்வுகளில் கிடைக்க நியாயம் இல்லை. 

பூநகரியில் உரோம வர்த்தகத் தொடர்புகள் இருந்ததை உறுதிப்படுத்தும் ரௌலெற்றெட் மட்பாண்டங்கள் (Rouletted Ware), அரிற்றைன் மட்கலன்கள் (Arretine Ware), அம்போரா சாடி (Amphora Jar) ஆகிய மட்பாண்டங்களும், உரோம நாணயங்களும் கிடைத்திருக்கின்றன. இவற்றில் சில மண்ணித்தலை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் பெருங்கற்கால மட்பாண்டங்களுடன் கலந்து காணப்பட்டன (புஷ்பரட்ணம், ப. 1993: 49-50). 

இவற்றில் ரௌலெற்றெட் மட்பாண்டங்கள் மிகவும் மிருதுவான, தூய்மையான களி மண்ணினால் வனையப்பட்டு, உட்புறத்தில் சுற்றிவர நேர்த்தியாகப் பதியப்பட்ட ‘ரௌலெற்’ கோலங்களைக் கொண்டவை. இத்தகைய கலன்களின் உட்பக்கம் பளபளப்பான கறுப்பு நிறமாகவும், வெளிப்பக்கம் மினுமினுக்கும் குங்குமப்பூ நிறமாகவும் காணப்படும். இவ்வகைக் கலன்கள் கிண்ணங்களாகவும் தட்டுகளாகவும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இவ்வகையான கலன்கள் உரோமானிய வணிகர்களால் கொண்டுவரப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் இதுமாதிரியான கலன்கள் தமிழகத்தில் அரிக்கமேட்டிலும், இலங்கையில் அநுராதபுரத்திலும் உற்பத்தி செய்யப்பட்டதாக விமலா பெக்லி, றொபின் கொனிங்ஹாம் ஆகிய தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உரோமாபுரியில் அறிற்ரியம் (Arretium) என்ற இடத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட பளபளப்பான சிவப்பு நிற மட்பாண்டங்கள் இவை. இம்மட்பாண்டத் துண்டுகள் பூநகரியில் மண்ணித்தலை, வெட்டுக்காடு ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 1993: 50).  

கிரேக்க – உரோம வர்த்தகத்தில் மதுபானம் மற்றும் எண்ணெய் ஆகிய திரவப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும், வர்த்தகம் அல்லது போக்குவரத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் ஒருவகைச் சாடிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை ‘அம்போரா’ சாடிகள் என அழைப்பார்கள். இவை மிருதுவான களி மண்ணினால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்தைக் கொண்டவையாக உள்ளன. இவற்றில் இரு வகையான சாடிகள் தயாரிக்கப்பட்டன. ஒரு வகையான சாடிகள் அகலமான கழுத்தும், வளைவான அடிப்பகுதியும், அடியில் நிலத்தில் வைப்பதற்கேற்ப ஒரு வளையமும் கொண்டவை. மற்றொரு வகையான சாடி ஒடுங்கிய கழுத்தும், கைப்பிடியும், கப்பலில் மரச் சட்டங்களுக்கிடையே பொருத்தி வைப்பதற்கேற்ப கூர்மையான அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். பூநகரியில் பள்ளிக்குடாவில் ஒன்றரை அடி உயரமான முழுமையான, அடிப்பக்கம் வளைந்த வகையான சாடி கிடைத்திருக்கிறது.

உரோம நாணயங்கள்

மேற்கூறப்பட்ட மட்கலன்கள் காணப்பட்ட இடங்களிலும், பூநகரிப் பிராந்தியத்தின் வேறு சில இடங்களிலும் உரோமப் பேரரசு கால நாணயங்கள் சில கண்டெடுக்கப்பட்டன. கந்தரோடையில் கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கும் – கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. பூநகரிப் பகுதியில் செம்பினால் செய்யப்பட்ட வட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சிலவற்றின் முன்பக்கத்தில் உரோமப் பேரரசின் கிரீடம் தரித்த அரசரின் தலையும், பின் பக்கத்தில் இரு போர் வீரர்களினதும், ஒரு சிலுவையின் உருவமும் உள்ளன. ஒரு நாணயத்தில் காணப்படும் அரசனின் கிரீடம் தரித்த தலையையும், அருகே காணப்படும் பெயரையும் கொண்டு அது ஓகஸ்தஸ் சீசர் என அடையாளம் காண முடிகிறது (புஷ்பரட்ணம், ப. 1993: 51).

அரேபிய – சீன வர்த்தகம்

வட இலங்கையில் உரோமப் பேரரசுடனான வர்த்தகத்தைத் தொடர்ந்து அரேபிய, பாரசீக, சீன வர்த்தக நடவடிக்கைகள் யாழ்ப்பாணக் கோட்டை, கந்தரோடை ஆகிய இடங்களில் தொடர்ந்ததை அவ்விடங்களில் கிடைத்த அந்நாடுகளின் மட்பாண்டங்கள், நாணயங்கள் என்பனவற்றின் மூலமாக அறிய முடிகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

அவ்வாறே மாந்தையும், அதற்கு வடக்கிலமைந்த பூநகரியும் உரோம வர்த்தகத்தைத் தொடர்ந்து அரேபிய, சீன நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்கான சான்றுகளை இவ்விடங்களில் காணப்படும் மட்பாண்டங்களைக் கொண்டு அறிய முடிகிறது. அரேபிய மற்றும் சீன மட்பாண்டங்கள் கல்முனை, வெட்டுக்காடு ஆகிய இடங்களிலிருந்து கிடைத்திருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 1993: 52).

தமிழகத் தொடர்புகள்

தமிழகத்தில் பல்லவ, பாண்டிய அரசுகள் எழுச்சி பெற்ற ஆரம்ப கி.பி. நூற்றாண்டுகளில் அவர்களின் செல்வாக்கு பூநகரி வரை நீடித்தமைக்கு சில சான்றுகள் காணப்படுகின்றன. பூநகரியிலுள்ள காஞ்சிப் புலவு, காஞ்சி மீனாட்சி, பல்லவக் குளம் போன்ற இடப்பெயர்களை நோக்குமிடத்து அவை பல்லவத் தொடர்பினால் ஏற்பட்டவை எனக் கருத இடமுண்டு. கல்முனை, வெட்டுக்காடு, ஈழவூர் ஆகிய இடங்களில் கிடைத்த பாண்டிய நாணயங்களின் பயன்பாடு 10 ஆம் நூற்றாண்டுடன் மறைந்து போகிறது.

இலங்கையில் சோழராட்சி ஆரம்பிக்க முன்னரே சோழப் பேரரசுடனான பூநகரி வர்த்தகம் நடைபெற்றிருக்கும். இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் தலைநகராகப் பொலநறுவை இருந்த போதிலும் அவர்களது நடவடிக்கைகள் வடஇலங்கை முழுவதிலும் பரவியிருந்தது. மண்ணித்தலை, வெட்டுக்காடு, ஈழவூர் ஆகிய இடங்களில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் கால நாணயங்கள் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம், ப. 1993: 64).

(இந்த இயலில் இடம்பெறும் அவர்களது மூல உரைகளையும், படங்களையும் உபயோகிப்பதற்கு 2015 ஆம் ஆண்டில் எனக்கு வரையறைக்கு உட்படுத்தப்படாத அநுமதி  (Unrestricted Permission) வழங்கிய பேராசிரியர்கள் ஜோன் காஸ்வெல், பொன்னம்பலம் இரகுபதி, பரமு புஷ்பரட்ணம் ஆகிய கற்கைநெறி பேணிய தொல்லியல் ஆய்வாளர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் உரியது.)

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்

  1. CARSWELL, JOHN (1978): China and Islam: A Survey of the Coast of India and Ceylon, Transactions of the Oriental Ceramic Society, Vol. 42, 1977-1978.
  2. CODRINGTON, H.W. (1924): Ceylon Coins and Currency, Colombo.
  3. DERANIYAGALA, P.E.P. (1953): “Ferro-Lithic, an Early Historic Terracotta Stotnary and a Cist from Ceylon” in Spolia Zeylanica, Vol. 27, Part I, pp 133-138, Colombo.
  4. DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Dept. of Archaeology, Colombo. pp 686-688.
  5. DERANIYAGALA, S.U. (1996): Pre- and Protohistoric Settlement in Sri Lanka; Proceedings of the XIII Congress, International Union of Prehistoric and Protohistoric Sciences, Forli, Italy, 8-14 September 1996.
  6. INDRAPALA, K. (1969): “Nayinātīvu inscription of Parākramabāhu” in Tamil Inscriptions of the Jaffna District.
  7. KRISHNAN, K. & CONONGHAM, R.A.E. (1997): “Microstructural Analysis of Samples of Rouletted Ware and Associated Pottery from Anuradhapura, Sri Lanka” in E.R. Allchin & B. Allchin (eds.) South Asian Archaeology, vol. 2., Oxford and IBH, New Delhi.
  8. MAHADEVAN, IRAVATHAM (2003): Early Tamil Epigraphy, From the Earliest times to the sixth century A.D., Harvard University, Cambridge, MA., USA.
  9. MAHAVAMSA (1993 reprint): Ed. & Translated by Wilhelm Geiger, Asian Educational Services, New Delhi & Madras.
  10. NILAKANTA SASTRI (1958): History of South India, Oxford University Press.
  11. PIERIS, P.E. (1919): ‘Nagadipa and Buddhist Remains in Jaffna’, Part II, Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVIII, No. 72., Colombo.
  12. PIERIS, P.E. (1920): The Kingdom of Jaffnapatam 1645, Ceylon Daily News  Printers, Colombo.
  13. RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna: An Archaeological Survey, Madras.
  14. SITRAMPALAM, S.K. ((1990): The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph.D. Thesis, University of Poona, Poona.
  15. THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Kingston, UK.
  16. THIAGARAJAH, SIVA (2016): Kantarodai Civilization of Ancient Jaffna, Kumaran Book House, Colombo.
  17. இரா. சிவானந்தம் (பதிப்பாசிரியர்) (2019): கீழடி: வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், தமிழ்நாடு அரசு, சென்னை.
  18. ஞானப்பிரகாசர், சுவாமி (1928): யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி.
  19. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி – தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
  20. மகாதேவன், ஐராவதம் (1990): தமிழ் பிராமி சாசனங்கள், தினமணி, 01-07-1990, சென்னை.
  21. மணிமேகலை (பதிப்பு): சாமிநாதையர். உ.வே. (1968): ஆறாம் பதிப்பு, அறம் பதிப்பகம், சென்னை.


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்