இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கம்: பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கம் முதல் 1920 வரையான வரலாறு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கம்: பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கம் முதல் 1920 வரையான வரலாறு

September 30, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: பிரேமசிறி ஹெட்டியாராச்சி

ஆய்வாளர் பிரேமசிறி ஹெட்டியாராச்சி அவர்கள் The Local Government in Sri Lanka: The Historical Background என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ என்னும் நூலின் (2015) முதலாவது அத்தியாயமாக அமையும் (பக். 1-37) இக்கட்டுரை இலங்கையில் அனுராதபுரக் காலத்தின் ‘ஹம்சபா’ (Gamsaba) எனப்படும் கிராமிய உள்ளூராட்சி முறை முதல் 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றமை வரையான உள்ளூராட்சி அரசாங்கத்தின் நீண்ட வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை பின்வருமாறு நான்கு பகுதிகளாகப் பிரித்து நோக்குதல் உள்ளூராட்சி முறையின் படிமுறை வளர்ச்சியை வரலாற்று நோக்கில் புரிந்துகொள்ள உதவுவதாக அமையும்.

1. கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் 1500 வரையான காலம். ஜனநாயகமும், ஜனநாயக ஆட்சிமுறையும் நவீன காலத்துக்குரியது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாயினும், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கிராம மட்ட நிர்வாகத்தில் உள்ளூர் ஜனநாயகம் (Local Democracy) நடைமுறையில் செயற்பட்டது என்பதை வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ‘ஹம்சபா’ பற்றி ஹெட்டியாராச்சி அவர்கள் கூறியிருப்பவை இலங்கையின் உள்ளூராட்சி முறையின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள உதவுகிறது. பக்கம் 1 – 4 வரையுள்ள பகுதியில் இவ்வளர்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.

2. போர்த்துக்கேயரதும் டச்சுக்காரரதும் ஆட்சிக்காலத்தில் ‘ஹம்சபா’ முறையினை தமது வர்த்தக நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்பக் காலனிய ஆட்சியாளர்கள் பயன்படுத்தியது பற்றியும், அக்காலத்தின் (1505-1796) உள்ளூராட்சி முறை பற்றியும் அடுத்துவரும் இரு பக்கங்களில் (பக். 4-5) கட்டுரையாசிரியர் விவரிக்கிறார்.

3. 1796 முதல் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (1796-1920) பிரித்தானியர் ஆட்சியில் உள்ளூராட்சி முறையில் மிக முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக் கமரென் ஆணைக்குழுவின் சிபார்சின் படியான மாற்றங்கள் உள்ளூராட்சி முறையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகும். இதனைத் தொடர்ந்து 1856, 1865, 1871, 1896, 1898 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களின் பயனாக உள்ளூராட்சி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நான்கு வகையான உள்ளூராட்சி அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்தன. நுவரெலிய நகரத்தின் நிர்வாகத்திற்கு விசேட வகையான சபை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. நாடு முழுமைக்குமான 3 முனிசிபல் சபைகள், 360 கிராம சபைகள், பட்டினங்களை நிர்வகிக்கும் 33 சபைகள் என எல்லாமாக 396 உள்ளூராட்சி சபைகள் இயங்கின.

4. 1920 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்ளூராட்சிச் சட்டம், உள்ளூராட்சி நிறுவனங்களில் அரசாங்கம் கூடியளவு பங்கேற்பைச் செய்வதற்கு வழிசமைத்தது. இதன் பின்னர் டொனமூர் ஆணைக்குழுவின் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்பட்ட போது உள்ளூர் நிர்வாகத்திற்கான நிருவாகக் குழு (Executive Committee on Local Government) அமைக்கப்பட்டது. உள்ளூராட்சித் திணைக்களம் என்னும் புதிய திணைக்களம் உருவாக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சுயாதீனமான அமைப்புகளாக இக்காலத்தில் உருவாக்கம் பெற்றன.

மேலே நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கூறப்பட்ட நீண்ட வரலாற்றில் 1796 முதல் 1920 வரையான காலத்தில் இலங்கையில் நவீன உள்ளூராட்சி முறைமை (Modern Local Government System) ஒன்று படிப்படியாக உருவாக்கம் பெற்றது. இந்த வரலாற்றை பிரேமசிறி அவர்கள் நூலின் 6 முதல் 16 வரையான 10 பக்கங்களில் விவரித்துக் கூறியுள்ளார். இத்தமிழ்க் கட்டுரை மேற்படி 10 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளைச் சுருக்கியும் தொகுத்தும் கூறுவதாக அமைந்துள்ளது. 

இலங்கையின் வடக்குக் – கிழக்கு மாகாணங்களிலும், தென்னிலங்கையிலும் உள்ளூராட்சி நிறுவனங்களான பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் என்பன மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நிருவகிக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில் உள்ளூராட்சி அரசாங்கத்தின் வரலாற்றுப் பின்புலத்தை தமிழ் அறிவுலகின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பிரித்தானியர் ஆட்சிக்காலம்

டச்சுக்காரரின் ஆட்சியின் கீழ் இருந்துவந்த இலங்கையின் கரையோர மாகாணங்களின் நிர்வாகம் 1796 ஆம் ஆண்டு பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர் கண்டியின் மாகாணங்களையும் கைப்பற்றி முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். பிரித்தானியருக்கு ஆட்சியதிகாரம் கைமாறிய பின்னரும் இலங்கையில் இருந்து வந்த ‘ஹம்சபா’ எனப்படும் உள்ளூராட்சி அமைப்புகளைத் தொடர்ந்து இயங்குவதற்குப் பிரித்தானியர் அனுமதித்தனர். ஹம்சபாக்கள் இலங்கையின் விவசாயச் சமூகத்தின் கிராமிய வாழ்க்கையின் அனைத்து அலுவல்களையும், நீதி நிர்வாகத்தையும் சுயாதீனமாக் கையாளும் சுதந்திரமான அமைப்புகளாக இயங்கி வந்தன.

1833 ஆம் ஆண்டின் சீர்திருத்தம்

‘ஹம்சபா’ முறைக்குப் புத்துயிர் அளித்து அதனை மறுசீரமைப்பதற்கு கோல்புறூக் ஆணைக்குழு விருப்பம் தெரிவித்தது. ஆயினும் இலங்கையின் நீதி நிர்வாகம் (Judicial Administration) தொடர்பான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்த கமெரன் (Cameron) ஹம்சபாக்களிடம் இருந்து வந்த நீதியதிகாரங்களை அவற்றிடமிருந்து புதிதாகத் தாபிக்கப்பட்ட நீதிமன்றங்களிற்கு மாற்றும் சிபார்சினை முன்மொழிந்தார். பிரித்தானிய அரசினால் கமரெனின் சிபார்சுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாவட்ட நீதிமன்றங்கள் (District Courts) சிவில் வழக்குகளையும், குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் அதிகாரம் உடையனவாகச் செயற்பட்டன. இதனால் உள்ளூர் விடயங்களின் நீதி பரிபாலனம் தொடர்பாக இருந்து வந்த அதிகாரங்களை இழந்த ஹம்சபாக்கள் கிராம மட்டத்தில் தமது செல்வாக்கை இழந்தன. ஹம்சபாக்களிடம் மரபு வழியாக இருந்து வந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டதனால், கிராம மட்டத்தில் இயங்கிவந்த உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்புக் குலைவுற்றது. இதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. 1848 கண்டிக் கலகத்திற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளூர் நிர்வாக முறையின் குலைவு அமைந்தது எனக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

கிராம மட்டத்தின் நீர்பாசன நிர்வாகமும் வீதி அமைப்பு நிர்வாகமும்

1856 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீர்ப்பாசனச்சட்டம் (The Irrigation Ordinance No 9 of 1856) கிராமமட்டத்தில் ‘ஹம்சபா’க்களுக்கு ஒப்பான புதிய நிறுவனக் கட்டமைப்பை அறிமுகம் செய்தது. நீர்பாசன அலுவல்களை நிர்வாகம் செய்வதற்கான இப்புதிய அமைப்பு கிராம மட்ட நிர்வாகத்தை மக்களிடமே மீண்டும் ஒப்படைப்பதற்கான முற்போக்கு நடவடிக்கையாக அமைந்தது. இந்த முற்போக்கான நடைமுறையை அறிமுகம் செய்தவர் அக்காலத்தின் ஆளுநராகவிருந்த சேர் ஹென்றி வாட் (Sir. Henry Ward) ஆவார். இதன்பின்னர் பொதுப்போக்குவரத்து வீதிகள் தொடர்பான சட்டம் 1861 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது (Thoroughfares Ordinance No 10 of 1861). இச்சட்டத்தின்படி ‘வீதிக்குழுக்கள்’ (Road Committees) என்னும் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. வீதிக்குழுக்கள் மாகாண வீதிக்குழுக்கள் (Provincial Road Committees), மாவட்ட வீதி குழுக்கள் என இரு வகையினவாக இருந்தன.  மாவட்ட வீதிக்குழுக்கள், மாகாண வீதிக் குழுக்களின்  மேற்பார்வையில் இயங்கும் அமைப்புகளாக விளங்கின. மாவட்ட வீதிக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய விதிகளை ஆக்கும் அதிகாரம் மாகாண வீதிக்குழுக்களுக்கு இருந்தது. இவ்விரு வீதிக்குழுக்களும் வீதிகளை அமைத்தல், பராமரித்தல், விருந்தினர் விடுதிகளை (Rural Rest Houses) நடத்துதல், படகுச் சேவைகளை (Ferry Services) நடத்துதல் ஆகிய பல கடமைப் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றின. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வீதியமைப்புக்கும், பராமரிப்புக்குமான நிதி ஒதுக்கீடு வீதிகளுக்கு வழங்கப்பட்டது.

வீதிகளின் அமைப்பும் பராமரிப்பும் தொடர்பான வீதிக்குழுக்கள் உள்ளூராட்சி அதிகார சபைகளின் இயல்பை உடையனவாய் விளங்கின. இவ் வீதிக்குழுக்கள் 1951 வரை இயங்கின. 1951 ஆம் ஆண்டின் Roads (Transfer of Control) Act No 11 of 1951 சட்டம் பொதுவேலைத் திணைக்களம் (Public Works Department), உள்ளூராட்சி சபைகள் என்னும் இரு அமைப்புகளையும் வீதிகளின் அமைப்புக்கான அதிகாரம் மிக்க நிறுவனங்களாகச் செயற்பட வழிசமைத்தது.

முனிசிபல் கவுன்சில் சட்டம்

பிரித்தானியர் ஆட்சியின்போது 1865 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 17 ஆம் இலக்க முனிசிபல் சபைச் சட்டம் (Municipal Councils Ordinance No 17 of 1864) வரலாற்றுத் திருப்பமாக அமைந்த சட்டமாகும். ஆளுநர் சேர். ஹெர்குலிஸ் றொபின்சன் (Sir. Hercules Robinson) அவர்கள் முனிசிப்பல் சபைகளை அமைத்து, இலங்கையின் முக்கியமான நகரங்களின் நிர்வாகத்தை அச்சபைகளைக் கொண்டு இயக்க வேண்டிய தேவையை உணர்ந்தார். அவர் மேற்குறித்த சட்ட வரைவைத் தயாரித்து பிரித்தானிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பிவைத்தார். தாம் இலங்கைக்கு வந்துசேர்ந்த போது சில நகரங்களுக்குச் சென்று பார்த்ததாகவும், அவற்றின் சுகாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியிருப்பதைத் தாம் உணர்ந்ததாகவும் பிரித்தானிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் றொபின்சன் குறிப்பிட்டிருந்தார். முனிசிபல் சபைகளை அமைத்து நகரங்களில் கழிவகற்றல் பணிகளை மேற்கொண்டு சுகாதார நிலையை மேம்படுத்தலாம் என்பதை வலியுறுத்தி முனிசிப்பல் சபைச் சட்டத்தின் தேவையை அவர் எடுத்துரைத்தார் (சொக்சி ஆணைக்குழு அறிக்கை, 1955:7). நகரப்பகுதிகளில் வாழ்ந்த சமுதாயங்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய நிர்வாக முறையை முனிசிபல் சபைகளை அமைப்பதன் மூலம் அரசாங்கம் நிறைவேற்றியது. இது ஒரு முக்கியமான சாதனையாகும். 1865 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக கொழும்பு, கண்டி ஆகிய இரு பிரதான நகரங்களும் முனிசிபல் சபைகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாயின. அவ்விரு நகரங்களிலும் உடனடியாக முனிசிபல் சபைகள் தாபிக்கப்பட்டன. ஏனைய நகரங்களிற்கும் பட்டினங்களிற்கும் முனிசிப்பல் சபைகளை இச்சட்டத்தின்படி அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தது. 1866 ஆம் ஆண்டு காலி நகர முனிசிப்பல் சபை தாபிக்கப்பட்டது. முனிசிப்பல் சபைகள் சட்ட ஆளுமையுடைய கூட்டிணைப்பு (Body Corporate) அமைப்புகளாகும். அவற்றுக்கு நிலையான இருப்பும், வழிவழி உரிமையும் (Perpetual Succession) இருந்தது. முனிசிபல் சபைகள் தமக்கென பொது முத்திரையை (Common Seal) உடைய சட்ட ஆளுமை கொண்ட நிறுவனங்களாகும். கொழும்பு முனிசிபல் சபைப் பகுதி  9 வட்டாரங்களாகப் (Wards) பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். 9 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநரால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களையும் சேர்த்து, 14 பேர் கொண்ட அமைப்பாக கொழும்பு முனிசிபல் சபை இயங்கியது. அதன் தவிசாளர் (Chairman) ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டார். கொழும்பு முனிசிப்பல் கவுன்சிலின் தவிசாளராக சிவில் சேவை உத்தியோகத்தர் ஒருவரை நியமித்தல் வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது. அதன் முதலாவது தவிசாளராக மேற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபரான C.P. லேயாட் (C.P. Layard) நியமிக்கப்பட்டார். 

தவிசாளராக நியமனம் பெற்றவருக்கு முனிசிபல் சபையைக் கொண்டு இயக்கும் நிருவாக அதிகாரங்களும், பொறுப்புகளும் (Executive Powers and Responsibilities) இருந்தன.

1865 ஆம் ஆண்டு முனிசிபல் சபைகள் சட்டம் பற்றி சொக்சி ஆணைக்குழு அறிக்கையில் (Choksy Commission Report) பின்வருமாறு கூறப்பட்டது. உள்ளூராட்சி நிர்வாகத்தில் முதன்முதலாக ஜனநாயகத் தத்துவத்தை (Democratic Principle) அறிமுகம் செய்த பெருமை 1865 ஆம் ஆண்டின் முனிசிபல் சபைச் சட்டத்திற்கே உரியது. இச்சட்டம் ரூ.100 பெறுமதிக்குக் குறையாத சொத்தை உடைமையாகக் கொண்டவர்களுக்கும், 21 வயதுக்கு மேற்பட்டவர்களுமான ஆண்களுக்கு முனிசிபல் சபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. முனிசிபல் சபையின் உறுப்பினராகப் போட்டியிடுவதற்கு ஒருவரக்கு ரூ.500 இற்கு மேற்பட்ட சொத்துகள் உடைமையாக இருத்தல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது (சொக்சி ஆணைக்குழு அறிக்கை, 1955: 7).

கொழும்பு முனிசிபல் சபைக்கு பொதுச்சுகாதாரம், போக்குவரத்துக்கான வீதிகள், வீடமைப்பு, குடிநீர் போன்ற பிறசேவைகளை வழங்குதல் என்பனவற்றிற்கான பொறுப்புகள் வழங்கப்பட்டதோடு, அச்சேவைகளை வழங்குவதற்குத் தேவையான நிதியினை வரிவிதிப்பு மூலம் அறவிடும் அதிகாரமும் சட்டப்படி வழங்கப்பட்டது. முனிசிப்பல் சபைச் சட்டத்தில் குறிப்பிடப்படாத  வேறுபல வருமானம் ஈட்டும் வழிகளையும் அரசாங்கம் கொழும்பு முனிசிப்பல் சபைக்கு வழங்கியது. இதனால், அதுவரை அரசாங்கத்திற்குரியதாக இருந்த வருவாய் மூலங்கள் பல கொழும்பு முனிசிபல் சபைக்கு மாற்றப்பட்டது. முனிசிபல் சபைச் சட்டத்தின் படியான வரிவிதிப்பு அதிகாரங்களும், ஏனைய நிதியீட்டும் வழிகளும் கண்டி, காலி ஆகிய முனிசிபல் சபைகளுக்கும் பின்னர் வழங்கப்பட்டது. 

கிராம சமுதாயங்கள் சட்டம் 1871

1871 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க கிராம சமுதாயங்கள் சட்டம் (Village Communities Act No 26 of 1871) என்னும் சட்டம் ஆளுநர் ஹெர்குலிஸ் றொபின்சன் காலத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டம் பழைய ‘ஹம்சபா’ முறையினை மீள் உருவாக்கம் செய்து உள்ளூராட்சி அரசாங்கத்தைக் கிராம மட்டத்தில் உறுதியான அடித்தளத்தில் புனரமைப்பதற்கு உதவியது. இச்சட்டத்திற்கு அமைய அமைக்கப்பட்ட கிராம சபைகள் நீதி பரிபாலனத்திற்குப் பொறுப்பான நிறுவனங்களாக விளங்கின. கிராம மட்டத்தில் சமூகத்தில் எழும் பிணக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் பொறுப்பை முன்னர் ‘ஹம்சபாக்கள்’ கொண்டிருந்தன. பிரித்தானியர் ஆட்சியின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றுகள் இவ்வதிகாரத்தை ‘ஹம்சபாக்களிடமிருந்து’ பறித்தன. 1871 சட்டம் நீதி பரிபாலன அதிகாரத்தை மீண்டும் கிராம மட்ட நிறுவனங்களான கிராம சபைகளிடம் ஒப்படைத்ததன் மூலம் சுயாட்சியை (Self – Governance) கிராம மட்டத்தில் உறுதிசெய்தது. இச்சட்டத்தின்படி கிராம சபைகள் (Village Committees), கிராமிய நீதிமன்றுகள் (Village Tribunals) என இரு நிறுவனங்களும் அரசாங்க அதிபர்களின் கீழ் அவர்களது மேற்பார்வையில் செயற்பட்டன. அக்கால ஆவணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, இவ்விரு நிறுவனங்களும் குறுகிய காலத்திற்குள் சிறப்பாகச் செயற்படத் தொடங்கின; நீதி நிர்வாகத்தில் அரசின் செலவுகளை இவை குறைப்பதற்கு உதவியதோடு கிராம மட்டத்தில் ஜனநாயக சுயாட்சி (Democratic Self – Government) செயற்பட உதவின என்பதை அறிய முடிகிறது.

சிறிய பட்டினங்களின் சுகாதாரப் பரிபாலனம்

1892 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்கச் சட்டமான சிறிய பட்டினங்களின் சுகாதாரப் பரிபாலனச் சட்டம் (Small Towns Sanitary Ordinance No 18 of 1892) 19 ஆம் நூற்றாண்டில் உள்ளூராட்சி அரசாங்கத்தை மேம்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்ட புதுமையான சட்டமாகும். அக்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறிய பட்டினங்கள் பல தோற்றம் பெற்றன. இப்பட்டினங்களின் எல்லைக்குள் செயற்பட்ட கிராம சபைகள் அப்பட்டினங்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல் உடையனவாய் இருக்கவில்லை. கழிவகற்றல், பட்டினத்தின் சுற்றுச்சூழலிலும் வீதிகளிலும் குவியும் குப்பை கூழங்களை அகற்றுதல், சுத்திகரிப்பு வேலைகள், பொது வசதிகளை (Common Amenities) ஏற்படுத்துதல் ஆகிய சேவைகளை வழங்குவதற்கு ஏற்ற நிறுவனங்களாக ‘சுகாதார சபைகள்’ (Sanitary Boards) தாபிக்கப்பட்டன. மாவட்டத்தின் கச்சேரிகளில் பதவிவகித்த உதவி அரசாங்க அதிபர்கள் (Assistant Government Agents) இச்சபைகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். பொதுவேலைப் பகுதி (Public Works Department), சுகாதாரத் திணைக்களம் (Medical Department) ஆகியவற்றின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இச்சபைகளின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவ்வுத்தியோகத்தர்களோடு வேறு சில உறுப்பினர்களும் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனர். ஒரு மாவட்டத்தின் அனைத்துச் சிறு பட்டினங்களினது நிர்வாகமும் உதவி அரசாங்க அதிபர்களின் தலைமையில் இயங்கிய இந்தச் சபைகளினால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. இதனால், நிர்வாக நடவடிக்கைகள் தாமதமாயின. மாவட்டத்தின் கச்சேரியில் இயங்கிய ஒரு சபையினால், மாவட்டத்தின் அனைத்துச் சிறுபட்டினங்களின் நிர்வாகத்தைக் கொண்டியக்குதல் சிக்கலான பணியாக அமைந்தது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ‘உள்ளூர் சபைகள் சட்டம்’ (Local Boards Ordinance) என்னும் சட்டம் 1898 இல் இயற்றப்பட்டது. சுகாதார சபைகளின் (Sanitary Boards) நிர்வாகத்தின் கீழ் அமைந்த சிறு பட்டினங்களை விடப் பெரிய பட்டினங்களின் நிர்வாகம் 1898 ஆம் ஆண்டுச் சட்டப்படி நிறுவப்பட்ட ‘Local Boards’ என்னும் அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டது. ஒவ்வொரு பெரிய பட்டினத்திற்கும் தனியான உள்ளூர் சபை அமைக்கப்பட்டது. நான்கு வகையான உள்ளூராட்சி சபைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகியிருந்தன. 1896 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க நுவரெலிய முன்னேற்றச் சபைச் சட்டம் (Nuwara Eliya Board of Improvement Ordinance) அந்நகரத்தின் பரிபாலனத்திற்காக உருவாக்கப்பட்டது. இச்சபையில் எட்டு உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டனர். மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தலைவராகச் செயற்பட்டார். அவரைவிட வேறு இரண்டு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஐந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் இச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இச்சபையின் தலைவராக அரசாங்க அதிபர் இருந்தபோதும், தலைவரின் அதிகாரங்கள் யாவற்றையும் பிரயோகிக்கவும், சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகச் (Chief Executive Officer) செயற்படவும், உதவி அரசாங்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 396 உள்ளூராட்சிச் சபைகள் இயங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் விவரம் வருமாறு,

  1. முனிசிபல் சபைகள் – 03
  2. சுகாதார சபைகள் (Sanitary Boards) – 19
  3. உள்ளூர் சபைகள் (Local Boards) – 13
  4. கிராமக் குழுக்கள் (Village Committees) – 360
  5. நுவரெலியா முன்னேற்றச் சபை (Nuwaraeliya Board Of Improvement) – 01

மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை விட மாகாண வீதிக்குழுக்கள் (Provincial Road Committees), மாவட்ட வீதிக் குழுக்கள் (District Road Committees) என்பனவும் மாகாண, மாவட்ட மட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. இவை முறையே ‘PRC’, ‘DRC’ என்னும் சுருக்கப் பெயர்களால் அழைக்கப்பட்டன. வீதிக்குழுக்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருந்தனரேனும், அவற்றில் அரசாங்க உத்தியோகத்தர்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடு தழுவிய உள்ளூராட்சி அரசாங்கக் கட்டமைப்பு உருவாக்கம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது. 

இந்த உள்ளூராட்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்துவதற்கான மத்திய நிறுவனம் அல்லது அரசாங்கத் திணைக்களம் இருக்கவில்லை. கிராம சபைகளும், கிராம நீதிமன்றுகளும் அரசாங்க அதிபரின் மேற்பார்வையில் இயங்கின. கிராமத்தின் மக்களைக் கூட்டி, கூட்டம் நடத்தி, சபையின் உத்தியோகத்தர்களைத் (Office Bearers) தெரிவு செய்தல், நியமனங்களைச் செய்தல், நிதியினை ஒதுக்குதல் ஆகிய பணிகளை அரசாங்க அதிபர் செய்துவந்தார். சுகாதார சபைகளையும், உள்ளூர் சபைகளையும் மேற்பார்வை செய்து வழிகாட்டுவதற்கு, மேலான அதிகாரமுடைய நிறுவனம் எதுவும் இருக்கவில்லை. மூன்று முனிசிபல் சபைகளும், நுவரெலியா முன்னேற்றச் சபையும் மட்டும் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கின. உள்ளூராட்சி அரசாங்கக் கட்டமைப்பை மத்திய கட்டுப்பாட்டிற்குள்ளும், அரசாங்கத்தின் மேற்பார்வை, வழிகாட்டல் என்பனவற்றிற்கும் உட்பட்ட அமைப்புகளாக மாற்றும் வகையிலான சீர்திருத்தங்கள் 1920 இற்குப் பிற்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இச்சீர்திருத்தங்கள் பற்றி கட்டுரையின் 13 முதல் 37 வரையான 24 பக்கங்களில் கட்டுரையாசிரியர் விவரித்துக் கூறியுள்ளார்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்