மலையகத்தில் கூட்டுறவு முயற்சிகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

மலையகத்தில் கூட்டுறவு முயற்சிகள்

September 26, 2025 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

இலங்கைத் தேயிலை நாட்டுக்கு ஒரு தனித்துவமான இடத்தையும், மதிப்பையும், குறியீட்டையும் அளித்தது. ஆனால் பெரும்பாலான தேயிலைத் தொழிலாளர்கள் இன்னும் பல தசாப்தங்களாக லயன் காம்பிராக்களில் வசிக்கின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக நல்வாழ்வு ஆகிய துறைகளில் அவர்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பை அனுபவிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் (எண் – 18) இதற்கான முக்கிய தொடக்கமாக அமைந்தது. அப்போது, சுமார் 6.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.2 மில்லியன் இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது; இது தீவின் மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. இந்தச் சட்டம் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார, மத, உயிரியல், தார்மீக மற்றும் உடல் ரீதியான ஒடுக்குமுறைகளை சட்டரீதியாக உறுதிப்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பின் மலையக மக்களின் வாழ்வையும் மன உறுதியையும் திட்டமிட்டு நசுக்கிய சட்டமாக அது அமைந்தது.

இலங்கையின் மலையகப் பகுதி அதன் பொருளாதாரத்தின் மையமாக விளங்கினாலும், பெருந்தோட்டத் துறையின் முதுகெலும்பாக இருந்த மலையக மக்கள் சமூக–பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களாகவே தொடர்ந்தனர். சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டின் முக்கிய வருவாய் மூலமான பெருந்தோட்டப் பொருளாதாரத்தை தாங்கிய இவர்களின் பங்களிப்பு வலுவானது. இருப்பினும், இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நவீன அடிமைகளாக வாழும் சூழலில், அதனை மாற்றக்கூடிய கூட்டுறவுத் துறையின் பங்குபற்றலும் இங்கு குறைவாக உள்ளமை மிகப்பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

சுதந்திரமான கூட்டுறவு வளர்ச்சியின்றி மலையக மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல கட்டமைக்கப்பட்ட காரணங்களின் விளைவு எனலாம். சுரண்டலுக்காக வடிவமைக்கப்பட்ட லயன் வாழ்க்கைமுறை ஒரு திறந்த சிறைபோல், இடைவிடாத உழைப்பை மட்டுமே பெறும் வகையில் உருவாக்கப்பட்டது. கூட்டுறவுகளை உருவாக்கத் தடையாகப் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் வலுவான வலைப்பின்னலும் அவற்றின் அரசியல் பின்னணியும் செயற்பட்டன. அதேபோல், கூட்டுறவுத்துறை சார்ந்த திணைக்களத்தின் குறுகிய அணுகுமுறை, நுண்ணரசியல், மேலும் பெருந்தோட்டக் கம்பெனிகளின் நில உரிமை மீதான கடுமையான போக்குகள் மலையக மக்களின் கூட்டுறவு முன்னேற்றத்தைத் தடுத்த முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. 

இலங்கையின் இன்றைய சமூக–பொருளாதார நெருக்கடிகளின் வேர்கள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மலையகத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் போராட்டங்களோடு இறுகப் பிணைந்துள்ளன. இந்தச் சரிவின் விதை மலையக மக்களைச் சுற்றிய வன்முறை அரசியலின் வெளிப்பாடு ஆகும். இரு நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் இருந்து ஏமாற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட அவர்கள், கோப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தினர்; பிரித்தானியக் காலனித்துவத்தின் கீழ் நாட்டின் நவீன பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினர். ஆனால் சமூகத்தில் அவர்களின் இடம் புறக்கணிக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை, இலவச சுகாதாரம், கல்வி என இலங்கையில் ஜனநாயகமும் சமூக நலன்களும் விரிந்தபோதிலும், மலையகத் தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை தொடர்ந்து நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டது.

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்தைய சமூக–பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத் துறையின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், மலையக மக்கள் அதிலிருந்து திட்டமிட்டவாறு விலக்கப்பட்டனர். காணி உரிமை மறுக்கப்பட்டதும், காணிகளுக்கான விலாசம் இல்லாமையும், பெருந்தோட்ட வரையறைகளும் இவர்களின் கூட்டுறவுகளில் பங்கேற்பைத் தடுத்தன. சுதந்திரத்திற்குப் பிறகு மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதும், தொடர்ந்து சமூக ஒதுக்கலுக்குள்ளாக்கப்பட்டதும் நாட்டின் வரலாற்றில் மீளமுடியாத கறையாகவே உள்ளது.

குடியுரிமைச் சட்டம் இல்லாமல் இருந்திருந்தால், இன்று மலையக மக்களின் தொகை மூன்று மில்லியனாக உயர்ந்திருக்கும்; அவர்களின் சமூக–பொருளாதார நிலைமையும் உயர்ந்திருக்கும்; இன முரண்பாடுகள் இல்லாத சூழலில் இலங்கை, ஆசியாவில் முன்னணியில் விளங்கியிருக்கும்; அரசியல் பொறுப்பின்மையின் அழிவுகளைத் தவிர்த்திருக்கும்; ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கியிருக்கும். ஆனால், பேரினவாதமும் பல்லின மறுப்பும் நாட்டின் வளர்ச்சியைத் தடுத்தன.

மலையகத் தமிழர்களின் காலனித்துவ அனுபவம் கடினமான போராட்ட வாழ்வாகவே இருந்தது. தொழிலாளர் போராட்டங்களும் தொழிற்சங்க முன்னெடுப்புகளும் அவர்களின் அன்றாட வேலை மற்றும் வாழ்வை எதிர்கொள்வதற்கான ஆயுதங்களாக அமைந்தன. முற்போக்குச் சக்திகளின் ஒழுங்கமைப்பில் இந்தப் போராட்டங்கள், பிற உழைக்கும் மக்களுடன் இணைந்த ஒரு வலுவான சக்தியாக மாறியபோதிலும், குடியுரிமையும் வாக்குரிமையும் மறுக்கப்பட்டதால் அவர்களின் முன்னேற்றம் முற்றாகத் தடுக்கப்பட்டது.

குடியுரிமைப் பிரச்சினை பின்னர் மெதுவாகத் தீர்க்கப்பட்டாலும், மலையக மக்கள் இரு நூற்றாண்டுகளுக்கான பொருளாதார வாய்ப்புகளை இழந்தனர். காணியுரிமை, கல்வி, சுகாதாரம், சமூக–பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவை அவர்களுக்கு எட்டாதவையாகவே இருந்தன. இந்த அழுத்தங்களின் கூட்டுத்தொகை, கூட்டுறவின் அடித்தளத்தை உருவாக்கும் எந்த முன்னெடுப்பையும் முற்றாகத் துடைத்தழித்தது.

இலங்கையில் கூட்டுறவு இயக்க வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம் (NICD), 1943 முதல் 2001 வரை கூட்டுறவு மேம்பாட்டுத் துறையின் கீழ் இலங்கை கூட்டுறவுப் பள்ளியாகச் செயற்பட்டது. பின்னர் அதன் விரிவாக்கத்தையும் தன்னாட்சியையும் உறுதிப்படுத்துவதற்காக, சட்டம் எண் 1 இன் கீழ் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனமாக மறுசீரமைக்கப்பட்டது. கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் மகாவலி அணைக்கு அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தாலும், இது மலையக மக்களின் கூட்டுறவுத் தேவைகளைப் முற்றிலும் புறக்கணித்தது. சட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க வழிகள் இருந்தபோதிலும், அதிகார மையநோக்கு அணுகுமுறை மாற்றமின்றி நீடித்தது. இதுவே கூட்டுறவுத் திணைக்களத்தின் நிலைப்பாடாக இருந்தது. அண்மைக்காலத்தில் மலையகப் பெண்கள் ஒன்றிணைந்து கூட்டுறவுச் சங்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்தனர்; வெறும் இரண்டு அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறவே இரண்டு வருடங்கள் ஓடி அலைந்தனர். இதுவே இந்தச் சிக்கலின் தெளிவான சான்று.

வரலாற்றுப் பார்வையில், தோட்ட அமைப்பு பெரும் தனியார் தோட்டங்களின் நலன்களை மட்டுமே காக்கும் வகையில் செயற்பட்டதால், தொழிலாளர் தலைமையிலான சுயாதீன கூட்டுறவுகள் வளர்வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இதற்கிடையில், சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டுறவுகளை உருவாக்க முயற்சி செய்தன. ஆனால் காலப்போக்கில், அவற்றின் செயற்பாடுகளும் முடங்கிப் போயின; தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கரைந்துவிட்டன.

மலையகத்தில் கூட்டுறவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகள் பின்வருமாறு:

  1. பெருந்தோட்டக் கம்பெனிகளின் கட்டுப்பாடு: பெரிய தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் ஆதிக்கம் செலுத்தி, தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தி நிர்வகிக்கின்றன. இதனால் சுயாதீனத் தொழிலாளர் அமைப்புகளுக்கும் கூட்டுறவுகளுக்குமான இடம் ஏற்படவில்லை; மலையக வாழ்விடங்கள் முழுமையாக ஒடுக்கப்பட்ட இடங்களாக மாறின.
  2. சுரண்டல் நிலைமைகள்: குறைந்த ஊதியம், மோசமான வேலை நிபந்தனைகள், வாழ்வாதார நெருக்கடிகள் தொழிலாளர்களை தொழிற்சங்கக் கட்டுப்பாட்டில் சிக்கவைத்தன; கூட்டுறவுகள் மூலம் முன்னேற்றம் தேடுவது சாத்தியமின்றிப் போனது.
  3. வளக் குறைவும் தோட்டக் கட்டுப்பாடும்: தொலைவிலுள்ள தோட்டங்கள், மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் ஆகியவை தொழிலாளர்களின் வளங்களையும் தகவல்களையும் கட்டுப்படுத்தின; அவர்களின் வாழ்க்கை முழுமையாக நிர்வாகக் கட்டுப்பாட்டில் சிக்கியதால், கூட்டுறவு வளர்ச்சி தடைப்பட்டது.
  4. தொழிலாளர் பாதிப்பு: வேலை இழப்பு மற்றும் மேற்பார்வை அழுத்தம் குறித்த பயம், தொழிலாளர்களை நிலைமையைச் சமாளிப்பதிலிருந்து அல்லது கூட்டுறவுகளை அமைப்பதிலிருந்து விலக்குகிறது.
  5. அரசியல்மயமான தொழிலாளர் உறவுகள்: அரசியல் செல்வாக்குகள் தொழிலாளர் இயக்கங்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிர்ணயித்தன; இதனால் சுயாதீனக் கூட்டுறவுகளை உருவாக்குவது மேலும் சிக்கலானதாகியது.

இந்தத் தடைகளுக்கு மத்தியிலும் சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக சில்லறை விற்பனைக் கடைகள் போன்ற சேவைகளை அறிமுகப்படுத்த முயன்றன. இதன் மூலம் கூட்டுறவின் பயன்கள் குறித்த ஒரு வரையறுக்கப்பட்ட விழிப்புணர்வு உருவானது. தேசிய தொழிலாளர் காங்கிரஸ் (NWC) போன்ற அமைப்புகள் கூட தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து இத்தகைய முன்னோடிக் கடைகளை நிறுவின. ஆனால் ஆரம்பத்திலேயே பல சவால்கள் எழுந்ததால், இந்த முயற்சிகள் பெரிதாக வளர முடியாமல் போனது.

இங்கு முக்கிய பிரச்சினை தொழிலாளர்களின் இடப்பெயர்வாகும். இளம் தலைமுறை வாய்ப்புகளைத் தேடி நகர்வதானது, முழுப் பெருந்தோட்டக் களநிலைமையையும் தலைகீழாகப் புரட்டக்கூடியதாக உள்ளது. இதனால் உற்பத்தி குறைவு, வேலைப்பளு அதிகரிப்பு என்பன ஏற்பட்டு, தொழிலாளர்களின் அதிருப்தி படிப்படியாக உயர்கிறது. கூட்டுறவுத் துறை தொழிலாளர்களின் முழுமையான பங்களிப்பை ஊக்குவிக்கக்கூடும்; அதற்காக கூட்டுறவுகளின் நோக்கமும் முன்னெடுப்பும் தெளிவாகக் குறிவைக்கப்பட வேண்டும். ஆனால் இன்று முன்முயற்சிகள் குறைவாகவே உள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதையும், கூட்டுறவுகள் மூலம் சுரண்டலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய முறைமை அவசியமாக உள்ளது. தொழிற்சங்கங்கள் பல இடங்களில் சுரண்டலிற்கு மட்டுமே வழிவகுத்துள்ளன என்று மலையக இளைஞர்கள் கருதுகின்றனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலையக சமூகத்தின் மிக முக்கிய கவலையாக மாறியுள்ளது. தோட்டங்களில் போதுமான வேலை மற்றும் வருமானம் இல்லாத இளம் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் குறைந்த ஊதியம் பெறும் தொழில்கள், சேவைத்துறைகள், வீட்டுப் பணிகள் உட்பட உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற இடங்களிலும் வேலை செய்கின்றனர். அதேசமயம், தோட்டங்களில் அதிக ஊதியம், வீட்டுவசதி, பயிர்ச்செய்கை நிலம் போன்ற சமூக–பொருளாதாரக் கோரிக்கைகள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன; இது தோட்டங்களின் நீண்டகால நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. அரசு மற்றும் தோட்டக் கம்பெனிகள் வழங்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் போலியானவை. உண்மையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால், இடையூறுகள் அதிகரித்து, நாடு பொருளாதார ரீதியாக முடங்கியிருப்பது, தோட்டங்களுக்கு நிதி வழங்குவதையும் கடினமாக்கியுள்ளது. நாட்டின் இன்றைய பொருளாதார மந்தநிலை மலையகச் சமூகத்தை மேலும் சீரழிக்க உள்ளது. மலையகத் தமிழர்களின் துயரங்களை அரசு எவ்வாறு நிவர்த்தி செய்யப்போகிறது என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.

சொந்த வீடுவீட்டு வரிசை அறைகள்/ குடிசைகள்ஒன்றுக்கும் மேற்பட்ட படுக்கை அறைகள்வளாகத்திற்குள் குடிநீர் வசதிவீட்டுக்கு மட்டுமேயான கழிப்பறைபாதுகாப்பான குடிநீர்கல்வித் தகுதி: க.பொ.த (உ/த) தேர்ச்சி மற்றும் அதற்கு மேல்
தேசிய அளவில் 86.1%5.5%79.2%81.2%89.8%88.7%12.0%
நகர மட்டம் 81.2%5.0%78.1%92.0%88.6%98.7%19.7%
கிராம அளவில் 91.5%2.7%81.0%79.6%90.8%89.0%10.9%
பெருந்தோட்ட மட்டம் 8.2%56.9%51.6%67.4%75.9%43.2%2.1%

(மூலம் – ‘தோட்டத் துறையில் வறுமை: அது தலைகீழாக மாறிவிட்டதா?’, கே. ரோமேஷுன் மற்றும் பிரியந்தி பெர்னாண்டோ, 7 மே 2015. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை (2013), வீட்டு வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு – 2012/13 – முதற்கட்ட அறிக்கை, கொழும்பு) 

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகளின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 24.5% பேர் வறுமையில் வாழ்கின்றனர். வறுமை படிப்படியாகக் குறைந்தாலும், 2026 வரை அது 20%க்கும் அதிகமாகவே இருக்கும் என உலக வங்கி கணிக்கிறது. ஜூன் 2025 இல் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், மலையகத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தோட்டப் பகுதிகள் போன்ற GIDA (புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய) பகுதிகளில் வறுமை மிகுந்த பரவலாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வறுமை விகிதங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

இலங்கை மூன்று மத்திய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது: நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் எஸ்டேட் (தோட்ட) பகுதிகள். பொதுவாக, கிராமப்புறப் பகுதிகள் நகர்ப்புறங்களை விட அதிக வறுமையைச் சந்திக்கின்றன. இருப்பினும், கிடைக்கும் தரவுகளின்படி மிகக் கடுமையான வறுமை மலையக மக்கள் மற்றும் அவர்களின் இடம்பெயர்ந்த சந்ததி பெரும்பான்மையாக வசிக்கும் தோட்ட மண்டலங்களிலும், கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதிகளிலும் (குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புல்லுமலை போன்ற இடங்களில்), மேலும் மத்திய, ஊவா, தெற்கு, வடக்கு மற்றும் அவற்றின் எல்லைப் பகுதிகளின் சில குறிப்பிட்ட இடங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இலங்கையில் தலை எண்ணிக்கை வறுமை விகிதம் நகர்ப்புறங்களில் 4.4% ஆகவும், கிராமப்புறங்களில் 16.6% ஆகவும் உள்ளது. ஆனால், மலையக மக்களின் வாழ்விடங்களில் அது 51.3% என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் வறுமை வரலாற்றுப் புறக்கணிப்பும் கட்டாய இடப்பெயர்வும் காரணமாக உருவானது. ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்தியத் தமிழர் சந்ததியினர் இன்றும் குறைந்த ஊதியம், மோசமான வீட்டுவசதி, சுகாதாரமின்மை, வேலைவாய்ப்புக் குறைவு ஆகியவற்றில் சிக்கியுள்ளனர். நுவரெலியாவைச் சேர்ந்த தோட்டச் சமூகங்கள் பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், உணவுப் பொருள் விலை உயர்வு, நலவாரியக் குறைபாடு, உர விநியோகக் குழப்பம் ஆகியவற்றால் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. இதனால் பொருட்களை வாங்கும் சக்தியும் ஊட்டச்சத்து உட்கொள்ளலும் குறைந்து, குழந்தைகளின் ஆரோக்கியம் தீவிரமாகப் பாதிக்கப்படுகிறது.

WFP இன் உதவி, சமூகத் தோட்டக்கலை, உர அணுகல் மேம்பாடு போன்ற முயற்சிகள் நடந்தாலும், உயரும் வறுமையைச் சமாளிக்க அவை போதவில்லை. நீண்டகாலத் தீர்வாக உள்ளூர் உணவு உற்பத்தியைப் பல்வகைப்படுத்தல், நுண்ணூட்டச்சத்து உணவுகளுக்கான அணுகலை விரிவாக்கல், காலநிலை மாற்றம் போன்ற அதிர்ச்சிகளுக்கெதிரான உற்பத்தி மீள்தன்மையை வலுப்படுத்தல் ஆகியவை அவசியம். சமூகக் கூட்டுப் பங்காண்மையின் மூலமே பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். 

குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்பு கடுமையான மாற்று நடவடிக்கைகளை அவசியப்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பதும் மிகவும் கவலைக்குரியது. பல குழந்தைகள் பள்ளியை விட்டு வேலைக்குச் செல்வதால் வறுமைச் சுழற்சி நிலைத்துக்கொண்டே இருக்கிறது; இது அதிக இடைநிறுத்த விகிதங்களையும், அழுத்தங்களையும் உருவாக்குகிறது. தொழிலாளர்கள் பாகுபாடு, வன்முறை, துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். மருத்துவச் சேவைகள் தொலைவில் இருப்பதும், தரமான கல்வி மற்றும் குழந்தைப் பராமரிப்புக்கான அணுகல் குறைவதும் தோட்டக் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. பல குடும்பங்கள் நெரிசலான, ஒரு அறை வீடுகளில், மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றன.

ஒருங்கிணைந்த அணுகுமுறையால் மட்டுமே குடும்ப வருமானம் உயர முடியும்: கல்விச் சீர்திருத்தம், மலிவான குழந்தைப் பராமரிப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக ஆதரவு ஆகியன ஒன்று சேர வேண்டும். கூட்டுறவு முறை பரஸ்பர உரிமை மற்றும் நீடித்த வருமானத்திற்கான சிறந்த தீர்வாக இருக்கும். வடக்கில் சில கிராமங்களில் சமூக ஆர்வலர்கள் சமூக நிலையங்கள், கூட்டுறவுகள் மூலம் நிலம் மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுவதில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மலையக மக்கள் தங்கள் தனிச்சிறப்பையும் அமைப்பாற்றலையும் நிலைநிறுத்துவதில் இன்னும் பின்தங்கியே உள்ளார்கள். குறிப்பாகப் பெண்கள், இரட்டைப் பணிகளால் — வருமானத் தேடலும் குடும்பப் பராமரிப்பும் — சிரமடைகிறார்கள்.

பிந்தைய காலனித்துவ இலங்கை, மிகக் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்கிறது. இந்த அவலத்திலிருந்து மீள, விளிம்புநிலைச் சமூகங்களின் வரலாற்றுச் சவால்களைக் கணக்கில் எடுப்பது தவிர்க்க முடியாததாகின்றது. மலைநாட்டுத் தமிழர்களின் அனுபவம்—ஏற்றத்தாழ்வு, சுரண்டல், சமூகப் புறக்கணிப்பு—இன்றைய தேசிய நெருக்கடியின் மைய அம்சங்களை வெளிப்படுத்துகிறது. நாட்டின் புற எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால்தான், மையமும் தேசமும் நிலையான மாற்றப் பாதையில் செல்ல முடியும்.

கூட்டுறவுத் துறையின் சமூக, பொருளாதாரப் பங்களிப்பு 

மலையகத்தில் கூட்டுறவுகள் பரவலாக வேரூன்றினால், கூட்டுப் பேரம் பேசும் வலு ஊக்குவிக்கப்படும்; அத்தியாவசியச் சேவைகள் மற்றும் சந்தைகளுக்கான அணுகல் எளிதாகும்; சுய-அமைப்புச் சாத்தியமாகும். குறிப்பாகப் பெண்கள் தங்கள் வீட்டுவசதி, கல்வி மற்றும் சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்தும் அதிகாரத்தைப் பெறுவார்கள். மேலும் கூட்டுறவுகள், திட்டமுறையான விரிவாக்கம், வறுமைக் குறைப்பில் கணிசமான பங்களிப்பைச் செய்யும். இதனால் சமூக ஒருங்கிணைப்பு, கூட்டுப்பங்காண்மை மற்றும் இணைந்த உள்ளூர்க் கட்டமைப்பு உருவாகும். சமூகத் தலைமையிலான முயற்சிகள் நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

1. அதிகாரமளித்தல் மற்றும் சுய-அமைப்பு: கூட்டுறவுகள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் தலைமையில் கூட்டு வலிமையை உருவாக்க ஒரு தளத்தை வழங்குகின்றன. இதனால் அவர்கள் சிறந்த ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் சமூக நலன்களைப் பேச்சுவார்த்தை மூலம் எதிர்கொள்ள முடியும். இதன் மூலம் சமூகப் பொருளாதார அழுத்தமும் அதன் பாதிப்புகளும் குறையும். 

2. வளங்களுக்கான அணுகல்: கூட்டுறவு, உறுப்பினர்களுக்கு நிதி, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய ஆதரவு போன்ற முக்கிய சொத்துகள் மற்றும் சேவைகளை அணுக உதவுகின்றன. அவை பெரும்பாலும் இந்த ஓரங்கட்டப்பட்ட பகுதிகளில் நம்பிக்கையை வளர்க்கின்றன. 

3. தரமான வாழ்க்கை நிலைமைகள்: கூட்டுறவு, வீட்டுவசதி முயற்சிகள் வீட்டுத்தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தலாம். இது சுகாதாரம் மற்றும் கண்ணியத்தை அதிகரிக்கும். 

4. சந்தை அணுகல் மற்றும் வருமான வளர்ச்சி: கூட்டுறவுகள், உறுப்பினர்கள் தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான சந்தைகளைக் கண்டறிய உதவுகின்றன; சிறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சிறந்த விலைகளைப் பெறவும் வருவாயை அதிகரிக்கவும் அனுமதிக்கின்றன.

5. திறன்கள் மற்றும் கல்வி: இந்த அமைப்புகள் பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள், திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் மூலம் மனித மூலதன மேம்பாட்டை ஊக்குவிக்கின்றன.

6. இடர் பகிர்வு: அபாயங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், கூட்டுறவு நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பை வழங்குகின்றன. நிதி அல்லது பிற கஷ்டங்களின் போதும் பாதுகாப்பை வழங்குகின்றன.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், மலையகப் பகுதிகளில் கூட்டுறவின் அவசியம் அதிகமாக உள்ளது. சிறு விவசாயிக் கூட்டுறவு நிறுவனங்கள், பெரும்பாலான பெரிய தோட்டங்களைவிட, தொழிலாளர்களை மேம்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகள் போன்ற கூட்டுறவுக் கொள்கைகளுடன் இணைந்த ஆதரவுக் கொள்கைகள் அவற்றின் நிலையான வளர்ச்சிக்கு அவசியம். வெற்றிகரமான கூட்டுறவுகளில் உறுப்பினர் பங்கேற்பும் பகிரப்பட்ட பொறுப்பும் வலுவாக உள்ளது. தோட்டச் சமூகங்களின் தேவைகளில் கவனம் செலுத்தி, சமூக ஈடுபாட்டுடன் வலுவான கொள்கை ஆதரவை இணைத்தால், கூட்டுறவு நிறுவனங்கள் மலையக வறுமை மற்றும் சமூக அசமத்துவத்துக்கு எதிரான மாற்றத்தின் சக்திவாய்ந்த கருவியாக அமைய முடியும்.

மலையக மக்கள் மாற்றத்தைக் கோரினாலும், சமூக – அரசுக் கட்டமைப்புகளும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன ஒதுக்கல் நிலமையும், மாற்றமுடியாத தடைகளாக அமைகின்றன. அவர்கள் தோட்டங்களில் தேயிலை பறிப்பவர்களாகவும், வடக்கில் நீர்வசதி இல்லாத குடியிருப்புகளில் நிலமற்றவர்களாகவும் பேணப்படுகிறார்கள். இளம் பெண்களுக்கு சில தெரிவுகளே உண்டு: சிலர் வடக்கில் ஆடைத் தொழிற்சாலைகளில் சுரண்டப்படுகிறார்கள்; சிலர் கண்ணிவெடி அகற்றும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டுள்ளனர்; சிலர் இராணுவமயமாக்கப்பட்ட பண்ணைகளில் வேலை செய்கின்றனர். இவை நிரந்தரத் தெரிவுகள் அல்ல. அபாயகரமான வேலைவாய்ப்பிலும், நிலம் மற்றும் பிற வளங்களின் பற்றாக்குறையிலும், இந்தப் பெண்கள் பல தசாப்தங்களாக குறைந்த மாத வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நம்பிக்கை தரும் முன்னெடுப்புகள்: பதுளை மாவட்டக் கூட்டுறவுகளின் உருவாக்கம்

1. வானவில் தொழில் முனைவோர் சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம்

2023, 12 ஆம் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் 21 உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய உறுப்பினர்கள் 43 பேர். எல்வட்டன் கிராமமானது பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல பிரதேசத்தில் அமைந்துள்ளது. போகாமடித்த, திக் வெல்ல, அந்துவா வெல ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது. இச்சங்கம் ஊவா மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இக்கிராமம் வளங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இங்கு நீர் வளம், போக்குவரத்து, மருத்துவம், கால்நடை வளர்ப்பிற்கான வளம், சுய தொழில் வளம் போன்ற பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. அத்துடன் தோட்டத் தொழிலாளிகள் கொழுந்து பறித்து, தேயிலை வளத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மூன்று பிரிவுகளிலும் ஆசிரியர்கள், போலிஸ் அதிகாரிகள், தாதியர்கள், தபாற்காரர்கள் போன்ற அரச அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனியார் துறையில் பணியாற்றும் அதிகாரிகளும் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது மாடு, ஆடு, கோழி என்பவற்றை வளர்த்து தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். தையல், இனிப்புப் பண்டங்கள் தயாரித்தல், உணவு பொதி செய்தல், பைகள் தைத்தல் எனப் பல்வேறு சுய தொழில்களையும் செய்து வருகின்றனர். மேலும் தமது அன்றாடச் செலவை மீதப்படுத்தும் வகையில் வீட்டுத் தோட்டச் செய்கையிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்லின மக்களும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலை 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளைக் கொண்டு, 45 மாணவர்களையும், பத்து ஆசிரியர்களையும் உள்ளடக்கிச் செயற்பட்டு வருகின்றது. தற்போது இச்சங்கத்தில் 20 பேர் சுயதொழில் செய்து வருகின்றனர். 

2. சிகரம் தொழில் முனைவோர் சிக்கனக் கடனுதவிச் சங்கம்

டூமோ டிவிசன், மடுல்சீமை, கல்லுள்ள, 18 B கிராம சேவையாளர் பிரிவு; லுணுகலை பிரதேச செயலக எல்லைக்குள்ளும் பதுளை மாவட்டத்திற்கு உள்ளேயும் இருக்கின்றது. ஊவா மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில் இச்சங்கத்தின் பதிவிற்கான அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023, 08 ஆம் மாதம் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிரதான நோக்கங்களாக சேமிப்பை ஊக்குவித்தல், சுயதொழிலை ஊக்குவித்தல் ஆகியன அமைகின்றன. ஆரம்பிக்கும் போது 22 அங்கத்தவர்கள் காணப்பட்டனர். தற்போது 27 அங்கத்தவர்களுடன் இச்சங்கம் சிறப்பாக இயங்கி வருகின்றது. இதில் 12 பேர் சுயதொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, சில்லறைக் கடை, மரக்கறித் தோட்டம் போன்றவற்றைச் செய்கின்றனர். இதனைத் தவிர பிற தொழில்முனைவோரும் இருக்கின்றனர். தோட்டத்தில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. நீர் வளம் பிரதான வளமாகக் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டம் மற்றும் ஆலயங்கள் போன்றவை காணப்படுகின்றன. அவை சமூக ஒருங்கிணைப்பைத் தருகின்றன. கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ள பகுதி, பதுளை நகரத்தில் இருந்து 48 KM தூரத்தில் அமைந்துள்ளது.  இதனைத் தவிர கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களும் இங்கு காணப்படுகின்றனர்.

சங்கத்தின் நோக்கம் எதிர்காலத்தில் சேமிப்பை ஊக்குவித்தலும், சுய தொழிலை வளர்ப்பதும் ஆகும். மேலும், புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரி/ பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களைக் கௌரவிப்பதும் சங்கத்தின் நோக்கத்தில் சேர்க்கப்படுகிறது. பொது நூலகம், பொது நிகழ்வுகளுக்குப் பொருட்கள் வழங்குதல், கோவிலுக்கு மண்டபம் அமைத்தல் போன்ற செயற்பாடுகளும் இதற்கு உட்பட்டவை.

சிகரம் சிக்கனக் கூட்டுறவுச் சங்கம் (31.08.2025 நிலவரம்)

  1. சேமிப்பு: ரூ. 68,600
  2. கடன் பெற்றோர்: 12 பேர்

ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் முறையாகக் கடனை வழங்கி வருகின்றனர். புதிதாக 4 பேர் இணந்துள்ளனர். இன்னும் சுய கைத்தொழில் செய்வதற்கு 4 பேருக்குக் கடன் வழங்கத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

3. அருவி சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம்

ஆரம்பம்: 2023.06.18, தலைவர்: த. புஷ்பலீலா, செயலாளர்: த. கௌரீ, பொருளாளர்: ஆர். சதானந்தன். ஆரம்ப உறுப்பினர் தொகை 18. தற்போதைய உறுப்பினர் தொகை 28. 16 அங்கத்தவர்கள் சுயதொழில் கடன் பெற்று ஆடு வளர்ப்பு ,கோழி வளர்ப்பு, விவசாயம், சம்பல் உற்பத்தி, தையல், சிறுகடை போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர். 1 நபருக்கான மாதாந்தச் சேமிப்பு 200/=, அங்கத்துவம் 500/= ஆகும். எதிர்காலத்தில் சங்கத்திற்கு வருமானம் தரக்கூடிய ‘கேட்டரிங்’ சேவை ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

4. சக்தி தொழில் முனைவோர் சிக்கனக் கடனுதவிச் சங்கம்

உடுவரை கீழ்ப்பிரிவு முகவரியுடன், 73A மற்றும் 73B அப்புவலகும்புர பிரிவுகள் மற்றும் கிரிந்த கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. சங்கத்தின் பிரதேசம் ஹாலிஎல பிரதேச செயலக எல்லைக்குள், பதுளை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது. இந்தச் சங்கம் ஊவா மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது (பதிவு எண்: ஊவா/பது/1070). சங்கம் 2023 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 

சங்கத்தின் பிரதான நோக்கங்கள் சேமிப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிப்பதாகும். தொடக்கத்தில் 20 அங்கத்தவர்கள் இருந்தனர்; தற்போதைய நிலையில் 32 அங்கத்தவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதில் 25 பேர் சுயதொழிலாளர்கள். அவர்கள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, சில்லறைக் கடை, தோட்டம், மரக்கறி விற்பனை, சிற்றுண்டி விற்பனை, மல்லிகைப் பயிர்ச்செய்கை, தையல், ரெசின் ஆர்ட், மிளகாய் தூள் பொதி செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதனுடன், பிற தொழில் முனைவோரும் உள்ளனர்.

தோட்டத்தில் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். நீர் வளம் இங்கு முக்கியமானது. தேயிலைத் தோட்டம், பாடசாலை, தொழிற்சாலை, ஆலயங்கள் போன்றவை காணப்படுகின்றன. இது தவிர, ஊர் பிரதான பாதையை அண்மித்ததாகக் காணப்படுகின்றது. இது எமது சங்கத்தின் சிறப்பம்சமாகும். எதிர்காலத்தில் சிறிய ஆடைத் தொழிலகம் அமைப்பதும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசுகள் வழங்குவதும் எமது நோக்கமாகும்.

பதுளைப் பிராந்தியத்தில், ‘Friendly Ship’ அமைப்பினரால் புதிதாக உருவாக்கப்பட்ட 3 கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான அறிமுக நிகழ்வு 2025 ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடந்தது. நிகழ்வில் நிதி ஆதரவு வழங்கிய இலண்டன் மீட்சி அமைப்பின் தலைவர் கிருபா மற்றும் குழுவினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கூட்டுறவு ஆவணங்களை வழங்கினார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு சிறப்பாகச் செயற்பட்டு வரும் 4 கூட்டுறவுச் சங்கங்களின் முன்னேற்ற அறிக்கைகளை சங்கத் தலைவர்கள் சமர்ப்பித்தனர் (களக் குறிப்பு: 3 ஆகஸ்ட் 2025, நன்றி: எட்வின் விஜயரெட்னா, மீட்சி அமைப்பு).

முடிவு 

மலையகத் தமிழர்களின் பாரம்பரிய பூமியில் தொடரும் சமூக – பொருளாதாரப் பின்னடைவுகள் மலையகத்தின் மீட்சியைத் தடுக்கின்றன. அதன் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத்துறையின் பங்களிப்பே மிக அடிப்படையானது. வடக்கு – கிழக்கு கூட்டுறவு அமைப்புகள் தங்கள் வளங்களையும் அனுபவங்களையும் பகிர்வதன் மூலம், மலையகத்தில் உறுதியான சமூக – பொருளாதார நிலையை உருவாக்க முடியும். கூட்டுறவின் இணைவும் அதன் சமூகக் கூட்டுப் பங்காண்மையும் அதன் மக்களுக்கு  நிமிர்வை அளிக்கும். வடக்கு – கிழக்கு மற்றும் மலையக இணைவும் வலுவானதாக அமைய வேண்டும். 

மீட்சி அமைப்பு, எட்வின் மற்றும் கிருபா, நெதர்லாந்து மனிதநேயச் செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்க முன்னெடுப்புகள் மற்றும் Dr. கௌரி பாலன் மற்றும் அவர்களின் தொடர்பு இணைப்புகள் மலையகக் கூட்டுறவின் துளிர்விற்கு முன்னோடிகளாகும். மலையகத்தில் மாற்றம் வர வேண்டுமானால், மக்களே முன்னிலை வகிக்க வேண்டும். கூட்டுறவுத்துறை அந்த இணைப்பை நிகழ்த்தும் கருவியாக அமையும்.

உசாத்துணைகள்

  1. Dissanayake, Kristýna (2022). Cooperatives or Plantations? Critical Literature Review of Fairtrade Tea Farming in Sri Lanka. Bachelor of Science Thesis, Czech University of Life Sciences, Prague.
    Available at: https://www.researchgate.net/publication/365096919_Cooperatives_or_Plantations_Critical_literature_review_of_Fairtrade_tea_farming_in_Sri_Lanka
  2. Piyumali, K.D. & Balasooriya, V.P.S.S. (n.d.). The Impact of Cooperatives on the Economic and Social Empowerment of Women in Rural Areas of Sri Lanka. National Cooperative Council, Sri Lanka / Department of Sociology, University of Sri Jayewardenepura. Available at: https://sljsd.sljol.info/articles/8/files/67f479a811621.pdf
  3. Kadirgamar, Ahilan (2025, June 24). Disenfranchisement, Landlessness, and Education in the Hill Country. Kuppi Talk. Available at: https://kuppicollective.lk/disenfranchisement-landlessness-and-education-in-the-hill-country/
  4. Kadirgamar, Ahilan (2025, February 4). Education, Emancipation, and the Hill-Country. Network Ideas. Available at: https://www.networkideas.org/2025/02/04/education-emancipation-and-the-hill-country/
  5. Senevirathne, Kalupahana Manula Sandaruwan; Quayle, Annette & West, Andrew (2025, December 15). Accounting for the Stateless: Indian Tamils and the Historical Construction of Racial Inequality in Sri Lanka. Accounting, Auditing & Accountability Journal, 38(9), 133–162. https://doi.org/10.1108/AAAJ-12-2023-6786
  6. Peiris, G.H. (1978). Land Reform and Agrarian Change in Sri Lanka. Modern Asian Studies, 12(4), 611–628. Cambridge University Press. Available at: https://www.jstor.org/stable/312371
  7. IMADR (2016, July 12). Sri Lanka: Discrimination against Tea Plantation Tamils Reported to the UN. The International Movement Against All Forms of Discrimination and Racism. Available at: https://imadr.org/srilanka-discrimination-plantationtamils-cerd/
  8. Izsák-Ndiaye, Rita (2016, October 20). Statement by the United Nations Special Rapporteur on Minority Issues Regarding the Conclusion of Her Official Visit to Sri Lanka (October 10–20, 2016). Office of the High Commissioner for Human Rights. Available at: https://www.ohchr.org/en/2016/10/statement-united-nations-special-rapporteur-minority-issues-rita-izsak-ndiaye-conclusion
  9. Samarasinghe, Vidya & Jayawardena, Dhammika (n.d.). The Role of Co-operatives in Neoliberal Sri Lanka: A Case Study. University of Sri Jayewardenepura. Emails: vidya@sjp.ac.lk, dhammika@sjp.ac.lk
  10. Wijeretne, Edvin (2025). Field Notes: Badulla Coop Exposure. Meedchi Foundation, Batticaloa, Sri Lanka.


About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்